பாஸ்காக் காலம் இரண்டாம் ஞாயிறு
19,04,2020
M. Jegankumar Coonghe OMI,
‘Sangamam,’
Kopay South, Jaffna,
Sri Lanka.
Tuesday, April 14, 2020
முதல் வாசகம்: திருத்தூதர் பணிகள்: 2,42-47
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 118
இரண்டாம் வாசகம்: 1பேதுரு 1,3-9
நற்செய்தி: யோவான் 20,19-31
திருத்தூதர் பணிகள்: 2,42-47
நம்பிக்கை கொண்டோரின் வாழ்க்கைமுறை
42அவர்கள், திருத்தூதர் கற்பித்தவற்றிலும் நட்புறவிலும் அப்பம் பிடுவதலும்
இறைவேண்டலிலும் உறுதியாய் நிலைத்திருந்தார்கள். மக்கள் அனைவரிடமும் அச்சம் நிலவியது. 43திருத்தூதர் வழியாகப் பல அருஞ்செயல்களும் அடையாளங்களும் நிகழ்ந்தன. 44நம்பிக்கைக் கொண்டோர் அனைவரும் ஒன்றாயிருந்தனர்; எல்லா உடைமைகளையும் பொதுவாய் வைத்திருந்தனர். 45நிலபுலன்களும் பிற உடைமைகளும் உடையோர் அவற்றை விற்று, அனைவருக்கும் அவரவர் தேவைகளுக்கேற்ப பகிர்ந்தளித்தனர். 46ஒவ்வொரு நாளும் அவர்கள் ஒரே மனத்தோடு கோவிலில் தவறாது கூடிவந்தார்கள்; பேறுவகையோடும் எளிய உள்ளத்தோடும் வீடுகள் தோறும் அப்பத்தைப்பிட்டு, உணவைப் பகிர்ந்து உண்டு வந்தார்கள். 47அவர்கள் கடவுளைப் போற்றி வந்தார்கள்; எல்லா மக்களுடைய நல்லெண்ணத்தையும் பெற்றிருந்தார்கள்; ஆண்டவரும் தாம் மீட்டுக் கொண்டவர்களை நாள்தோறும் அவர்களோடு சேர்த்துக் கொண்டேயிருந்தார்.
ஆரம்ப கால திருச்சபையின் வாழ்க்கைமுறை மிகவும் பிரசித்தி பெற்றதாய் விளங்கியது எனலாம். இவர்களின் வித்தியாசமான வாழ்க்கைமுறை மற்றைய மக்களை வியப்பூட்டியது. எப்படி ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கைமுறை பல ஆயிரம் மக்களைக் கவர்ந்தது, யார் இவர், சீசரை விட இவர் பலமானவரா, சீசர் கொடுக்க முடியாத அமைதியை இந்த சாதாரண கலிலேய யூதனால் கொடுக்க முடியுமா என்பது பலருடைய கேள்விகள். அத்தோடு ஏன் மக்கள் மெது மெதுவாக இந்த புதிய மார்க்கத்தை நோக்கி செல்கின்றனர் என்ற கேள்வி பலரை சிந்திக்க வைத்தது. கிரேக்க-உரோமைய அரசியல், கலாச்சார, சமய மற்றும் சமூக பார்வையில் இந்த வாழ்க்கை முறை நிச்சயமாக வித்தியாசமானதாக இருந்திருக்க வேண்டும்.
வ.42: இந்த வசனம் திருத்தூதர்களின் மறைபரப்பு பணியை வரைவிலக்கணம் செய்கிறது. திருத்தூதர்கள் எதனை கற்பித்தார்கள் (τῇ διδαχῇ τῶν ἀποστόλων tê didachê tôn hapostolôn - The Teachings of the Apostles) என்பதற்க்கு அவர்கள் நற்செய்தியை அறிவித்தார்கள் எனலாம். இயேசு யார் என்பதையும் அவருடைய பாடுகள், மரணம், உயிர்ப்பு போன்றவை இந்த நற்செய்தியின் சாரம்சமாக இருந்தது. இரண்டாவதாக அவர்கள் நட்புறவில் ஈடுபட்டார்கள் (τῇ κοινωνίᾳ, tê koinônia). இந்த நட்புறவு என்பது பகிர்தல், உடனிருப்பு, அன்பு, கூட்டுவேலைகள் போன்றவற்றை குறிக்கும். மூன்றாவதாக அவர்கள் அப்பம் பிடுவதில் கருத்தாய் இருந்தார்கள். இதனை நற்கருணை அல்லது திருப்பலியின் ஆரம்பகால வழிபாடு என்று எடுக்கலாம் (τῇ κλάσει τοῦ ἄρτου tê klasei tou hartoû). இது ஆண்டவர் தன்னுடைய இறுதி இராவுணவில் செய்ததை
இவர்களுக்கு நினைவூட்டி ஞாபகப்படுத்தியது. இந்த அப்பம் பிடுதல் பல வளர்ச்சிப்படிகளைக் கண்டது, பின்னால் அகாப்பே என்ற உணவுப் பகிர்வும் இந்த அப்பம் பிடுதலுடன் சேர்ந்து அனுசரிக்கப்பட்டது என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அத்தோடு அவர்கள் செபத்திலும் உறுதியாய் இருந்தார்கள் (καὶ ταῖς προσευχαῖς kai tais proseuchais). எந்த வகையான செபத்தை இவர்கள் கையாண்டார்கள் என்பது இந்த இடத்தில் தெளிவாக இல்லை ஆனால் திருப்பாடல்கள் மற்றும் இறைவாக்குகள் அடங்கிய ஒருவகையான யூத செப முறையை இவர்கள் செபித்திருப்பார்கள். இவர்கள் இதில் உறுதியாக இருந்தார்கள் என்பதே இந்த ஆசிரியரின் முக்கியமான செய்தி என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். தமிழ் விவிலியம் இந்த வசனத்தில், மக்கள் மத்தியில் அச்சம் நிலவியது என்பதையும் சேர்த்துக்கொள்கிறது (ἐγίνετο δὲ πάσῃ ψυχῇ φόβος egineto de pasê pseuchê fobos). இந்த அச்சத்தை பயம் என்று எடுப்பதை விட மரியாதை என்றும் எடுக்கலாம்.
வ.43: திருத்தூதர்கள் பல அரும் அடையாளங்களைச் செய்தார்கள், இந்த அரும் அடையாளங்கள்தான் இவர்கள்மேல் மற்றவர்களுக்கு பயம் கலந்த மரியாதையை உருவாக்கியது.
இவர்களுடைய இந்த அரும் அடையாளங்கள் இவர்களின் புதிய மார்கத்தைப் பற்றிய தேடலை வேகப்படுத்தியிருக்கும். அரும் அடையாளங்கள் அக்காலத்திலிருந்து இன்றுவரை ஆண்டவரின் பிரசன்னத்தை நமக்கு நினைவூட்டுகிறது. இது நம்பிக்கை வளர்ப்பதற்கான ஆரம்ப படியாகவும் அமைகிறது.
வ.44: இந்த வரி ஆரம்ப காலதிருச்சபையின் முக்கியமான வாழ்க்கை அடையாளம் ஒன்றைக் காட்டுகிறது. இவர்கள் உடைமைகள் அனைத்தையும் ஒன்றாக வைத்திருந்தார்கள் அத்தோடு அவர்கள் ஒன்றாயும் இருந்தார்கள் (πιστεύοντες ἦσαν ἐπὶ τὸ αὐτὸ καὶ εἶχον ἅπαντα κοινὰ). நவீன காலத்து மார்கிச, லெனினிய மற்றும் சீன பொதுவுடமைவாதம் (கொமியுனிசம் Communism) போன்றவை இந்த வாழ்க்கை முறையை பின்புலமாகவே கொண்டுள்ளது. இவர்கள் இதனை செய்ததன் மூலமாக, திருத்தூதர்களின் போதனைகள், ஆரம்ப கால யூத, உரோமைய-கிரேக்க கிறிஸ்தவர்களின் அவசர உலகில் மாற்றத்தை உண்டுபண்ணி, அவர்களை முழுமையாக
இயேசுவை நோக்கி திருப்பியது எனலாம்.
வ.45: பகிர்தல் ஆரம்ப கால திருச்சபையின் முக்கியமான இன்னொரு பண்பாக இருந்திருக்கிறது (ἐπίπρασκον καὶ διεμέριζον). பொருளுடையவர்கள் தங்களது உடைமைகளை விற்றதன் பின்னர் அவற்றை பகிர்ந்தளித்திருக்கின்றனர். எதனை பகிர்ந்தளித்தனர், விற்ற பணத்தையா அல்லது உடைமைகளையா என்ற கேள்வி எழுகிறது. இந்த காலம் திருச்சபையின் பொற்காலம் ஆனால் இந்த காலம் மிகவும் குறுகிய காலத்திற்கே நீடித்தது. இவர்களுக்கு தங்களுடைய பொருட்கள் மற்றும் சொத்துக்ளை விட இயேசுவும் அவர் அனுபவும் தேவையாகவும் பெறுமதியாகவும் இருந்த படியால் தங்கள் சொத்துக்களை இவர்கள் ஒரு பொருட்டாக கருதவில்லை.
வ.46: இந்த காலத்தில் இவர்கள் இன்னமும் எருசலேம் கோவிலில்தான் கூடிவந்தார்கள். அவர்கள் இன்னமும் வெளிவாரியான யூத கலாபனையை சந்திக்கவில்லை அத்தோடு ஆலயத்திலிருந்தும் விரட்டப்படவில்லை என எடுக்கலாம். இதனால்தான் அவர்கள் ஆலயத்தில் கூடிவருகின்றனர். இவர்கள் ஒரே உள்ளத்தோடு ஆலயத்தில் கூடினார்கள் என்று விவிலியம் காட்டுகிறது
(τε προσκαρτεροῦντες ὁμοθυμαδὸν ἐν τῷ ἱερῷ). இவர்கள் ஆலயத்தின் வெளிமுற்றத்திலே கூடிவந்திருப்பார்கள், அப்போதுதான் யூதரல்லாத கிறிஸ்தவர்களுக்கு அது வசதியாக இருந்திருக்கும். அத்தோடு இவர்கள் இல்லம்தோறும் அப்பத்தை பிட்டுவந்திருக்கிறார்கள் (κλῶντές τε κατ᾿ οἶκον ἄρτον). இது ஆரம்ப கால நற்கருணைப் பகிர்வைக் காட்டுகிறது, அதுவும் வீடுகளில் கொண்டாடப்பட்ட பகிர்வைக் காட்டுகிறது. அத்தோடு இவர்கள் உணவை மகிழ்வாகவும் (ἐν ἀγαλλιάσει), ஒரே மனத்தோடும் உண்டுவந்திருக்கிறார்கள் (ἀφελότητι καρδίας). இது ஆகாப்பே உணர்வுப் பகிர்வைக் குறிக்கலாம். நற்கருணை மற்றும் வார்த்தை வழிபாடு பின்னர் முக்கியம் பெற அத்தோடு அங்கத்தவர்களின் எண்ணிக்கை வளரவும், இந்த அகாப்பே உணவுப் பகிர்வு இல்லாமல் போயிருக்கலாம்.
வ.47: இந்த குழந்தைப் பருவ திருச்சபையைப் பற்றி மக்கள் என்ன நினைத்தார்கள் என்பதை இந்த வரி காட்டிநிற்கின்றது. இவர்கள் கடவுளை போற்றி வந்திருக்கிறார்கள். இந்த கடவுளும் யூதர்களின் கடவுளும் ஒன்றாக இருந்த படியால் இவர்கள் மக்களின் நல்லெண்ணத்தை பெற்றிருக்கவேண்டும். இந்த காலத்தில்தான் திருச்சபையின் அங்கத்தவர்களின் எண்ணிக்கை வேகமான வளர்ந்தது எனலாம். இதற்கு காரணமாக ஆண்டவரைக் காட்டுகிறார் ஆசிரியர்
(ὁ δὲ κύριος προσετίθει). இதிலிருந்து, மக்கள் கிறிஸ்தவர்களாக சேர்ந்ததற்கு காரணம், திருத்தூதர்களுடைய வெறும் அதிசயங்களோ அல்லது கதாநாயகர்கள் வழிபாடோ அல்ல, மாறாக கடவுளுடைய திட்டம் என்பது புலப்படுகிறது.
திருப்பாடல்: 118
நன்றிப் புகழ் மாலை
1ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.
2'என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு' என் இஸ்ரயேல் மக்கள் சாற்றுவார்களாக!
3'என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு' என ஆரோனின் குடும்பத்தார் சாற்றுவார்களாக!
4'என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு' என ஆண்டவருக்கு அஞ்சுவோர் அனைவரும் சாற்றுவார்களாக!
5நெருக்கடியான வேளையில் நான் ஆண்டவரை நோக்கி மன்றாடினேன்; ஆண்டவரும் எனக்குச் செவி கொடுத்து என்னை விடுவித்தார்.
6ஆண்டவர் என் பக்கம் இருக்க நான் ஏன் அஞ்ச வேண்டும்? மனிதர் எனக்கு எதிராக என்ன செய்ய முடியும்?
7எனக்குத் துணை செய்யும் ஆண்டவர் என் பக்கம் உள்ளார்; என்னை வெறுப்போர்க்கு நேர்வதைக் கண்ணாரக் காண்பேன்.
8மனிதர்மீது நம்பிக்கை வைப்பதைவிட ஆண்டவரிடம் தஞ்சம் புகுவதே நலம்!
9உயர்குடியினர் மீது நம்பிக்கை வைப்பதைவிட, ஆண்டவரிடம் அடைக்கலம் புகுவதே நலம்!
10வேற்றினத்தார் அனைவரும் என்னைச் சூழ்ந்து கொண்டனர்; ஆண்டவர் பெயரால் அவர்களை அழித்துவிட்டேன்.
11எப்பக்கமும் அவர்கள் என்னைச் சுற்றி வளைத்துக்கொண்டனர்; ஆண்டவர் பெயரால் அவர்களை அழித்து விட்டேன்.
12தேனீக்களைப்போல் அவர்கள் என்னைச் சூழ்ந்து கொண்டனர்; நெருப்பிலிட்ட முட்களைப்போல் அவர்கள் சாம்பலாயினர்; ஆண்டவரின் பெயரால் அவர்களை அழித்துவிட்டேன்.
13அவர்கள் என்னை வலுவுடன் தள்ளி வீழ்த்த முயன்றனர்; ஆனால், ஆண்டவர் எனக்குத் துணை நின்றார்.
14ஆண்டவரே என் ஆற்றல்; என் பாடல்; என் மீட்பும் அவரே.
15நீதிமான்களின் கூடாரங்களில் வெற்றியின் மகிழ்ச்சிக்குரல் ஒலிக்கின்றது; ஆண்டவரது வலக்கை வலிமையாய்ச் செயலாற்றியுள்ளது.
16ஆண்டவரது வலக்கை உயர்ந்தோங்கி உள்ளது; ஆண்டவரது வலக்கை வலிமையாய்ச் செயலாற்றியுள்ளது.
17நான் இறந்தொழியேன்; உயிர் வாழ்வேன்; ஆண்டவரின் செயல்களை விரித்துரைப்பேன்;
18கண்டித்தார், ஆண்டவர் என்னைக் கண்டித்தார்; ஆனால் சாவுக்கு என்னைக் கையளிக்கவில்லை.
19நீதிமான்கள் செல்லும் வாயில்களை எனக்குத் திறந்து விடுங்கள்; அவற்றினுள் நுழைந்து நான் ஆண்டவருக்கு நன்றி செலுத்துவேன்.
20ஆண்டவரது வாயில் இதுவே! இது வழியாய் நீதிமான்களே நுழைவர்.
21என் மன்றாட்டை நீர் கேட்டதால், எனக்கு நீர் வெற்றி அளித்ததால், உமக்கு நான் நன்றி செலுத்துகின்றேன்.
22கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று!
23ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது! நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று!
24ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம்.
25ஆண்டவரே! மீட்டருளும்! ஆண்டவரே! வெற்றிதாரும்!
26ஆண்டவரின் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர்! ஆண்டவரது இல்லத்தினின்று உங்களுக்கு ஆசி கூறுகிறோம்.
27ஆண்டவரே இறைவன்; அவர் நம்மீது ஒளிர்ந்துள்ளார்; கிளைகளைக் கையிலேந்தி விழாவினைத் தொடங்குங்கள்; பீடத்தின் கொம்புகள்வரை பவனியாகச் செல்லுங்கள்.
28என் இறைவன் நீரே! உமக்கு நான் நன்றி செலுத்துகின்றேன்; என் கடவுளே! உம்மைப் புகழ்ந்தேத்துகின்றேன்.
29ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; ஏனெனில், அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.
இந்த திருப்பாடலை இவ்வாறு பிரிக்கலாம்:
அ). வவ.1-4: ஒரு குழு புகழ்ச்சிக்கான அழைப்பு.
இந்த வரிகள் ஊடாக ஆசிரியர் மக்களை புகழ்சிக்கு அழைக்கிறார். முதலில் மக்களையும் பின்னர் குருக்களையும் அழைப்பது, கடவுளை புகழ்வது அனைவரின் கடமையென அழகாகவும் ஆழமாகவும் காட்டுகிறார். ஆண்டவரின் பேரன்பு என்பது உண்மையில் எபிரேயத்தில் ஆண்டவரின் இரக்கத்தையே குறிக்கிறது (חַסְדּוֹ ,חֶסֶד ஹெசட்- இரக்கம்). ஆண்டவருக்கு அஞ்சுவோர் என்று எபிரேய கோட்பாடுகளை பின்பற்றுவோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
வ.1: ஆண்டவர் நல்லவர், அவரது இரக்கம் என்றென்றும் உள்ளது என்பது ஒரு ஆழமான எபிரேய நம்பிக்கை (לְעוֹלָם חַסְדּֽוֹ׃ லா'ஓலாம் ஹஸ்தோ). ஆண்டவருடைய நன்மைத்தனத்திற்கு முன்னால் மற்றவர்களுடைய நன்மைத்தனங்கள் வெறுமையானவை என்பதை இந்த வரி காட்டுகிறது.
வ.2: இந்த என்றென்றும் உள்ள நன்மைத்தனத்தை இஸ்ராயேல் மக்கள் சாற்றக் கேட்கப்படுகிறார்கள். இதுதான் இஸ்ராயேல் மக்களுடைய படைப்பின் நோக்கம். இதனை ஆசிரியர் ஒரு கட்டளை போல கொடுக்கிறார் (יֹאמַר־נָא יִשְׂרָאֵל யோ'மர்-நா' யிஸ்ரா'ஏல்- செல்வார்களாக - இஸ்ராயேலர்).
வ.3: இஸ்ராயேலருக்கு பொதுவாக கொடுக்கப்பட்ட கட்டளை இப்போது ஆரோன் குடும்பத்தாருக்கு கொடுக்கப்படுகிறது, அதாவாது ஆண்டவரின் குருக்களுக்கு கொடுக்கப்படுகிறது. குருக்கள் ஆண்டவரின் புகழைச் சாற்றுவதை தங்களது தலையாய கடைமையாக செய்ய வேண்டும் என்ற செய்தி வலியுறுத்தப்படுகிறது (יֹאמְרוּ־נָא בֵית־אַהֲרֹן யோ'ம்ரூ-நா' வெத்-'அஹரோன்- ஆரோனின் குடும்பத்தார் சாற்றவார்களாக).
வ.4: இறுதியான இந்த நம்பிக்கையை அனைத்து ஆண்டவருக்கும் அஞ்சுவோரையும் சாற்றக் கேட்கிறார் ஆசிரியர். இப்படியாக அனைத்து மக்களும் உள்வாங்கப்பட்டிருக்கிறார்கள் எனலாம். அதேவேளை இங்கே பாவிக்கப்பட்டிருக்கின்ற சொற்பிரயோகங்கள் இஸ்ராயேல் மக்களுக்கான ஒத்த கருத்துச் சொற்கள் எனவும் சிலரால் நோக்கப்படுகின்றன (יִרְאֵי יְהוָה யிர்'எ அதோனாய்- ஆண்டவருக்கு அஞ்சுவோர்).
ஆ). வவ.5-13: அரசரின் சாட்சியம்.
இங்கே இன்னொரு புதிய குரல் ஒலிக்கிறது அது அரசரின் குரல். அரசர் தன்னுடைய
இராணுவ துன்பங்களின் போது, எவ்வாறு கடவுள் கைகொடுத்தார் என்பதை சாட்சிசொல்கிறார்.
இதனை மக்கள் தங்களுக்கும் படிப்பினையாக எடுக்க வேண்டுமென்பதே அரசரின் விருப்பம். மனிதர் மீது நம்பிக்கை வைப்பதைவிட ஆண்டவர் மீது நம்பிக்கை வைப்பதே மேல் என்று அரசர் தன்னுடைய நேச படைகளைவிட ஆண்டவர் தரும் பாதுகாப்பே உன்னதமானது என்கிறார்.
வ.5: தான் ஒரு நெருக்கடியான வேளையில் ஆண்டவரை நம்பியதாகவும், ஆண்டவர் அதனைக் கேட்டதாகவும் சொல்கிறார். இந்த வரியுடன் காட்சி மாறுகிறது, இங்கே பேசுகிறவர் அரசராக மாறுகிறார். ஆசிரியர் அரசர் போல பேசுகிறார், அல்லது அரசரை பேசவைக்கிறார் எனலாம். பின்வரும் வரிகள் அவை அரசர்க்குரியவை என்பதை என்பதைக் காட்டுகின்றன.
வ.6: ஆண்டவர் என் பக்கம் இருக்க நான் ஏன் அஞ்சவேண்டும் (יְהוָה לִי לֹא אִירָא
அதோநாய் லி லோ' 'இரா') என்ற ஆழமான நம்பிக்கை, வரியாக தரப்படுகிறது. இந்த வரி தாவீதின் காட்சியை நினைவுபடுத்துவது போல உள்ளது. ஆண்டவர் தன் பக்கம் உள்ளதால் யாருக்கும் அஞ்ச வேண்டிய தேவை தனக்கு இல்லை என்பதை ஆசிரியர் காட்டுகிறார்.
வ.7: தன்னுடைய ஆண்டவருக்கு புதுப்பெயர் ஒன்றை வைக்கிறார். ஆண்டவரை தனக்கு துணைசெய்யும் ஆண்டவர் என்கிறார் (יְהוָה לִי בְּעֹזְרָי அதோனாய் லி பெ'ட்ஸ்ராய்- கடவுள் எனக்கு என் உதவியாக).
வ.8: மனிதர் மீது நம்பிக்கை வைப்பதைவிட ஆண்டவர் மீது நம்பிக்கை வைத்தல் நலம் என்கிறார் ஆசிரியர். இதுவும் தாவீதின் அனுபவத்தை ஒத்திருக்கிறது எனலாம். நம்பிக்கை வைத்தலை, அடைக்கலம் புகுதல் என்ற வார்த்தையில் காட்டுகிறார் ஆசிரியர் (לַחֲסוֹת லாஹசோத்- அடைக்கலம் புக).
வ.9: உயர்குடி மக்களிடம் நம்பிக்கை வைத்தல் ஒரு சாதாரண வழக்கமாக இருந்திருக்கிறது. உயர்குடி மக்களுக்கு எபிரேய மூல விவிலியம் நெதிவிம் (בִּנְדִיבִים׃ பின்திவிம்- உயர்குடிமக்களில்) எனக்காட்டுகிறது. இவர்கள் அரச மைந்தர்களாக இருக்கவேண்டிய தேவையில்லை.
வவ.10-11: வேற்றினத்தார்களை ஆண்டவர் பெயரால் அழித்ததாக ஆசிரியர் காட்டுகிறார். ஆண்டவர் பெயரால் எப்படி போர் செய்ய முடியும். இங்கே இவர் வேற்றினத்தார் என்று சொல்பவர்களை சூழலியலில் இவருடைய சொந்த எதிரிகளாகவே பார்க்க வேண்டும். இவர்களை எபிரேய விவிலியம் גּוֹיִם (கோயிம்- வேற்று நாட்டு மக்கள்) என்று காட்டுகிறது. இவர்கள் பல திசைகளில் ஆசிரியரை சூழ்ந்துகொண்டார்கள் என்று சொல்லப்படுகிறார்கள். இது போரில் எதிரிகள் அரசரை சூழ்ந்து தாக்குவதற்கு சமன்.
வ.12: இந்த எதிரிகளுடைய படைகள் பெரிதாக இருந்திருக்க வேண்டும் அல்லது, அவர்களின் தாக்குதல்கள் துல்லியமாக இருந்திருக்க வேண்டும். இதனால்தான் தன் எதிரிகளை தேனீக்களுக்கு ஒப்பிடுகிறார் ஆசிரியர் (דְבוֹרִ֗ים தெவோரிம்- தேனீக்கள்). எதிரிகள்
தேனீக்களை போல சுறுசுறுப்பாக இருந்தாலும், தான் அவர்களை நெருப்பைப் போல் சுட்டெரிப்பேன் என்கிறார். முட்கள், நெருப்பில் விரைவாக சாம்பலாகும், இதனைப்போலவே ஆண்டவரின் துணையால் எதிரிகள், முட்களைப்போல அழிக்கப்படுவார்கள் என்கிறார் ஆசிரியர்.
வ.13: ஆண்டவரின் துணையை இன்னொருமுறை காட்டுகிறார். ஏதிரிகளின் தள்ளுதல் பலமாக இருந்தாலும், ஆண்டவரின் துணை அதனைவிட பலமாக இருக்கிறது என்பது சொல்லப்படுகிறது.
இ). வ.14-19: புதுப்பிக்கப்பட்ட அரச சாட்சியம்.
வ.14: ஆண்டவரே என் ஆற்றலும் பாடலும் என்று மொழி பெயர்க்ப்பட்டுள்ளது. பாடல், என்பதை பலம் என்றும் மொழிபெயர்கலாம் (זִמְרָה ட்சிம்ராஹ்- இசை, பாடல், பலம்). ஆண்டவர் தன்னை கண்டித்தார் என்று சொல்லி கடவுளின் கண்டிக்கும் உரிமையை ஏற்றுக்கொள்கிறார் அரசர்.
வ.15: நீதிமான்களின் கூடாரங்களில் வெற்றியின் மகிழ்ச்சிக் குரல் ஒலிக்கிறது என்கிறார் (קוֹל רִנָּה கோல் ரின்னாஹ்- மகிழ்ச்சிக் குரல்), இதனை அவர் ஆண்டவரின் வலக்கரத்தின் பலம் என்று காட்டுகிறார் (אָהֳלֵי צַדִּיקִים 'அஹாலே ட்சதிகிம்- நீதிமான்களின் கூடாரங்கள்).
வ.16: விவிலியத்தில் மிக முக்கியமான ஒரு அடையாளம். இது பலம், உரிமை, வாரிசு போன்ற பல அர்த்தங்களைக் கொடுக்கிறது. அதிகமானவர்கள் வலக்கை பழக்கமுடையவர்களாக இருந்ததால் வலக்கை பலத்தின் அடையாளமாக பார்க்கப்பட்டது (יָמִין யாமின்-வலக்கை). இடக்கை பழக்கம் அதிகமான வேளையில் நல்ல அடையாளமாக பார்க்கப்படவில்லை. இருப்பினும் இதற்கும் விதிவிலக்கு இருந்தது. இஸ்ராயேலின் நீதிமான்களில் ஒருவர் இடக்கை பழக்கமுடையவராக இருந்தார், அதனை கடவுள் நல்ல விதமான பாவித்தார் என்று நீதிமொழிகள் புத்தகம் காட்டுகிறது (காண்க நீதி.3,12-30: אֵהוּד בֶּן־גֵּרָא 'எஹுத் பென்-கெரா').
வ.17: ஆண்டவர் வலப்பக்கத்தில் இருப்பதனால் தனக்கு அழிவில்லை என்கிறார். தான்
இறக்கமாட்டேன் என்கிறார். அத்தோடு இவர் இறக்காமல் இருப்பதன் நோக்கம், ஆண்டவரின் செயல்களை எடுத்துரைப்பதே என்கிறார் (לֹא אָמוּת லோ' 'ஆமுத்- இறவேன்: וַאֲסַפֵּ֗ר வா'அசாபெர்- எடுத்துரைப்பேன்).
வ.18: ஆண்டவர் இவரை கண்டித்ததையும் மறைக்காமல் தன் பாடலில் காட்டுகிறார். ஆண்டவரின் கண்டிப்பிற்கு காரணம் இருக்கிறது என்பதும், இந்த கண்டிப்பால் தான் அழியவில்லை என்பதையும் நேர்மையாக அறிக்கையிடுகிறார்.
வ.19: தான் பாவியாக இருந்தாலும், ஆண்டவரின் கண்டிப்பை சந்தித்தாலும், தன்னை நீதிமான் என்று காட்டுகிறார். இதனால் நீதிமான்கள் செல்லும் வாயில்களில் தானும் செல்ல முடியும் என்பது இவர் நம்பிக்கை. இந்த வாயில்களில் தான் நுழைவது, ஆண்டவருக்கு நன்றி செலுத்தவாகும் என்பதையும் அறிக்கையிடுகிறார் (שַׁעֲרֵי־צֶדֶק ஷ'அரெ-ட்சாதெக்- நீதியின் வாயில்கள்).
உ). வவ.20-28: ஓரு நன்றி வழிபாடு.
இந்த வரிகள் பாடலாக மட்டுமன்றி நன்றி வழிபாடாகவும் உருவகப் படுத்தப்பட்டுள்ளது. இது ஆண்டவரின் வாயில் இவ்வழியாக நீதிமான்கள் நுழைவர் என்பது இந்த வழிபாட்டைக் குறிக்கிறது. 22வது வசனத்தை புதிய ஏற்பாட்டு ஆசிரியர்கள் அதிகமாக இயேசுவிற்கு பாவிக்கின்றனர்- கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்து. 26வது வசனம், ஆண்டவரின் பெயரால் வருகிறவர் ஆசிர்வாதங்களைக் கொண்டுவருகிறார் என்பது, பின்நாளில் குறிப்பிட்ட நபர்களை குறித்து வாசிக்கப்பட்டது, நமக்கு இது இயேசுவைக் குறிக்கிறது. 27வது வசனம், கிளைகளை கையிலேந்தி ஆண்டவரை புகழக் கேட்கிறது, இது ஒருவகை ஆர்ப்பரிப்பைக் குறிக்கலாம். இயேசு எருசலேமுள் நுழைந்தபோது இவ்வகையான ஒரு செயலை கூட்டம் செய்தமை நினைவுக்கு வரலாம்.
வ.20: இந்த வாயில் அதிகமாக எருசலேமின் நுழைவாயில்களில் ஒன்றாக இருந்திருக்க வேண்டும். இங்கே நீதிமான்கள் (צַדִּיקִ֗ים ட்சாதிக்கிம்) என்பவர்கள், ஆண்டவரின் மக்கள் அனைவரையும் குறிக்கலாம். ஆண்டவரின் மக்கள் நீதிமான்களாக வாழ அழைக்கப்பட்டவர்கள் என்பது இங்கணம் சொல்லப்படுகிறது.
வ.21: கடவுளிக்கு நன்றி செலுத்தவே இவர் எருசலேமிற்குள் நுழைகிறார் போல. ஆண்டவர் இவருக்கு செவிசாய்த்ததை, அவர் தன் வேண்டுதல் கேட்கப்பட்டதற்கு ஒப்பிடுகிறார்.
வ.22: கட்டுவோர் புறக்கணித்த கல் முலைக்கல் ஆகிற்று என்ற தமிழ் மொழி பெயர்ப்பு, எபிரேய விவிலியத்தில் (אֶבֶן מָאֲסוּ הַבּוֹנִ֑ים הָיְתָ֗ה לְרֹאשׁ פִּנָּה׃ 'எவென் மா'அசூ ஹபோனிம், ஹாய்தாஹ் லெரோ'ஷ் பின்னாஹ்) என்று உள்ளது. இது ஒரு பழிமொழியாக இருந்திருக்க வேண்டும். இதற்கான சரியான காரணம் சரியாக தெரியவில்லை. பல அர்த்தங்கள் இந்த 'மூலைக்கல்லுக்கு' கொடுக்கப்படுகிறது. சிலர் இதனை 'தலைக்கல்' என்கின்றனர். சாதாரணமாக மூலைக்கற்கள் அல்லது தலைக்கற்கள் நிலத்தினுள் மறைந்துவிடும், இருப்பினும் இவை முக்கியமான கற்களாக இருக்கின்றன. இந்த கற்களின் உறுதியில்தான் கட்டடம் நிலைத்துநிற்கிறது. இதனைவிட வேறு பல அர்த்தங்களும் இந்த கல்லுக்கு கொடுக்கப்படுகிறது. சிலர் சுவரில் இருக்கும் பெயரைக்கொண்ட கல்லை இந்தக் கல்லாக பார்க்கின்றனர், இன்னும் சிலர், இதனை அழகாக செதுக்கப்பட்டு, உயரத்தில் இருக்கும்,
இணைக்கும் கல்லாகவும் இதனை பார்க்கின்றனர். எது எப்படியாயினும் இது, முக்கியமான கல் என்பது மட்டும் மிக தெளிவாக தெரிகிறது.
புதிய ஏற்பாட்டு ஆசிரியர் இந்த 'மூலைக்கல்' அடையாளத்தை இயேசுவிற்கு பாவிக்கின்றனர் (காண்க லூக் 20,17: தி.பணி 4,11: 1பேதுரு 2,7). முதல் ஏற்பாட்டில் பல இடங்களில் இந்த உதாரணம் காணக்கிடைக்கிறது (எசாயா 8,14: 28,16-7). அனைத்து இடங்களிலும் இது ஆண்டவரின் அதிசயமாகவே பார்க்கப்படுகிறது.
வ.23: சாதாரண கல் முலைக்கல் ஆவது நிச்சயமாக மனிதர்களின் கண்களுக்கு வியப்பே,
இதனைத்தான் இந்த வரி காட்டி அதனை ஆண்டவரின் அதிசயமாக பார்க்கிறது.
வ.24: இந்த பாடல் ஒரு முக்கியமான விழா அல்லது வரலாற்று நிகழ்வு நாளில் பாடப்பட்டிருக்க வேண்டும். இந்த வரியின் வார்த்தைகள் அதனை குறிப்பது போல உள்ளது. இந்த குறிப்பிட்ட நாளை ஆண்டவரின் வெற்றியின் நாள் என்கிறார் ஆசிரியர் அத்தோடு, அந்த நாளில் ஆர்ப்பரிக்கவும் அகமகிழவும் கேட்கிறார் (נָגִילָה וְנִשְׂמְחָה நாகிலாஹ் வெநிஷ்மெஹாஹ்- நாம் மகிழ்வோம், நாம் களிப்படைவோம்).
வ.25: இந்த வரி இன்னொரு வேண்டுதல் போல காட்டப்படுகிறது. இதனை பாடலுக்கான பதிலுரையாகவும் எடுக்கலாம். ஆண்டவரே மீட்டருளும் மற்றும் ஆண்டவரே வெற்றிதாரும் என்ற வரிகள் ஒரே அர்த்தத்தையும் கொடுக்கலாம். போரில் பாவிக்கப்படக்கூடிய வார்த்தைகள் போலவும் இவை உள்ளன. הוֹשִׁיעָה נָּא ஹோஷி'ஆஹ் நா' - மீட்டருளும், הַצְלִיחָה נָּא ஹட்சிஹாஹ் நா'- வெற்றி தாரும்.
வ.26: இந்த வரி இன்னொருவர் சொல்வதைப்போல உள்ளது. அனேகமாக இந்த வரியை குருக்கள் அல்லது இந்த குறிப்பிட்ட நிகழ்வில் அரசரை போற்றுகிறவர்கள் சொல்லியிருக்கலாம். இந்த பாடல் பலர் படிக்கும் பாடல் என்பதை இந்த வரியும் நன்றாக காட்டுகிறது.
ஆண்டவர் பெயரால் வருகிறவர் ஆசி பெற்றவர் (בָּרוּךְ הַבָּא בְּשֵׁם יְהוָה பாரூக் ஹபா' பெஷெம் அதேனாய்) என்பது, இந்த பாடலின் கதாநாயகரைக் குறிக்கலாம். பிற்காலத்தில் இந்த பகுதி, புதிய ஏற்பாட்டுக் காலத்தில் இயேசு ஆண்டவருக்கு கொடுக்கப்பட்டது. இந்த வரியின் இறுதிப் பகுதி மக்களுக்கு கொடுக்கப்படும் ஆசீர் போல வார்த்தைப் படுத்தப்பட்டுள்ளது (בֵּרַכְנוּכֶם מִבֵּית יְהוָה׃
பெராக்னூகெம் மிபெத் அதேனாய் - கடவுளின் இல்லத்திலிருந்து உங்களை ஆசீக்கின்றோம்).
வ.27: அனைத்து திருப்பாடல்களினதும் முதன்மையான கதாநாயகர் இறைவன் என்பது இங்கே நன்றாக புலப்படுகிறது. ஆண்டவரே இறைவன் என்பது இஸ்ராயேலரின் முதன்மையான விசுவாச பிரகடணம் (אֵל ׀ יְהוָה֮ 'ஏல் அதேனாய்- ஆண்டவரே இறைவன்). அதோனாய் அல்லது யாவே என்பது, இஸ்ராயேலர் கடவுளை குறிக்க பயன்படுத்திய தனித்துவப் பெயர்ச்சொல். யாவே என்பது அதி பரிசுத்தமான சொல்லாக இருப்பதனால், அதனை எழுதியவர், வாசிக்கும் போது 'அதோனாய்;' என்றனர். பெயரும் ஆளும் எபிரேயர்களுக்கு ஒரே அர்த்தத்தைக் கொடுத்ததும் இதற்கான காரணமாக இருந்திருக்கலாம்.
ஆண்டவரை ஒளியாக கருதுவதால், அவரை ஒளிர்ந்தார் என்கிறார் ஆசிரியர். கிளைகளை கையிலேந்து விழாவை தொடங்கக் கேட்கிறார் ஆசிரியர். முதல் ஏற்பாட்டுக் காலத்தில், இஸ்ராயேல் நாட்டில் ஒலிவ இலைகள் வெற்றியைக் குறிக்க பயன்பட்டன. கிரேக்க நாட்டில் வேறு கிளைகள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். இலைகளைப் போலவே மாட்டுக்கொம்புகளும் வெற்றிப் பவனிக்கு பாவிக்கப்ட்டன. இந்த கொம்புகளுக்குள் நறுமண தைலங்களும் இடப்பட்டன. பிற்கால பந்தங்கள் மற்றும் எக்காள வாத்தியங்கள் போன்றவை இந்த கொம்பிலிருந்து வந்தவையே.
வ.28: மீண்டும் ஒருமுறை நம்பிக்கை சொல்லப்படுகிறது. இதுதான் திருப்பாடல்களின் நோக்கம். ஆசிரியர் கடவுளை தன் இறைவன் என்கிறார் (אֵלִי אַתָּה 'எலி 'அத்தாஹ் - என் இறைவன் நீரே).
இந்த இறைவனுக்கு அவர் நன்றியும் செலுத்தி, அவரை புகழ்ந்துரைக்கவும் செய்கிறார் (אוֹדֶךָּ 'ஓதெஹா நன்றி சொல்வேன், אֲרוֹמְמֶךָּ 'அரோம்மெகா- புகழ்ந்தேற்றுவேன்).
ஊ). வ.29: குழு புகழ்ச்சிக்கான இறுதி அழைப்பு.
இங்கே குருவின் குரல் மீண்டும் ஒலிக்கிறது. அரசரைப் போல மக்கள் கூட்டம் அனைவரையும் நன்றி செலுத்தி ஆண்டவரைப் புகழக் கேட்கிறார். ஆண்டவர் நல்லவர் மற்றும் என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு என்பது, அதிகமாக பாவிக்கப்படும் விவிலிய வரி
(ט֑וֹב כִּ֖י לְעוֹלָ֣ם חַסְדּֽוֹ தோவ் கி லெ'ஓலாம் ஹஸ்தோ- நல்லவர், அதாவது அவரது பேரன்பு என்றும் உள்ளது).
1பேதுரு 1,3-9
3நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் கடவுளும் தந்தையுமானவர் போற்றி! அவர் தம் பேரிரக்கத்தின்படி, இறந்த இயேசு கிறிஸ்துவை உயிர்த்தெழச் செய்து நமக்குப் புதுப்பிறப்பு அளித்துள்ளார். இவ்வாறு குன்றா எதிர்நோக்குடன் நாம் வாழ்கிறோம். 4அழியாத, மாசற்ற, ஒழியாத உரிமைப் பேறும் உங்களுக்கென விண்ணுலகில் வைக்கப்பட்டுள்ளது. 5நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கையின் வழியாய் மீட்புக்காகக் கடவுளுடைய வல்லமையால் பாதுகாக்கப்பட்டு வருகிறீர்கள். இம்மீட்பு இறுதிக் காலத்தில் வெளிப்பட ஆயத்தமாய் உள்ளது. 6இப்போது சிறிது காலம் நீங்கள் பல்வகைச் சோதனைகளால் துயருற வேண்டியிருப்பினும், அந்நாளிலே பேருவகை கொள்வீர்கள். 7அழியக்கூடிய பொன் நெருப்பினால் புடமிடப்படுகிறது. அதைவிட விலையுயர்ந்த உங்கள் நம்பிக்கையும் மெய்ப்பிக்கப்படவே துயருறுகிறீர்கள். இயேசு கிறிஸ்து வெளிப்படும்போது அந்நம்பிக்கை உங்களுக்குப் புகழும் மாண்பும் பெருமையும் தருவதாய் விளங்கும். 8நீங்கள் அவரைப் பார்த்ததில்லை; எனினும் அவர்மீது அன்பு செலுத்துகிறீர்கள். இப்பொழுதும் நீங்கள் அவரைக் கண்டதில்லை; எனினும் நம்பிக்கை கொண்டு சொல்லொண்ணா, ஒப்பற்ற மகிழ்ச்சியடைந்து பேருவகை கொள்கிறீர்கள். 9இவ்வாறு உங்கள் நம்பிக்கையின் குறிக்கோளான ஆன்ம மீட்பையும் பெறுகிறீர்கள்.
புதிய ஏற்பாட்டு திருமுகங்களில் எந்த ஒரு திருமுகவும் 1பேதுருவைப் போல இயேசுவின் உணர்வுகளையும், எண்ணங்களை அதிகமாக தாங்கி வரவில்லை. இதனை தூய பேதுருதான் எழுதினார் என்பதற்கு பல சான்றுகள் உள்ளன என்பது ஆய்வாளர்களின் கருத்து (காண்க 1பேதுரு 1,1: 5,1.12-13. இவர் இதனை பபிலோனியாவில் இருந்து எழுதினார் போல காட்டப்படுகிறது. இந்த 'பபிலோனியா' (Βαβυλών) என்பது பாரசீக பபிலோனியாவையா அல்லது எகிப்திலிருந்த ஒரு நகரத்தையா அல்லது இது உரோமையையா குறிக்கிறது என்பதிலும் பல சந்தேகங்கள் உள்ளன. இது உரோமையாக இருப்பதற்கான வாய்ப்புக்ள் அதிகமாகவே உள்ளன. இங்கேதான் பேதுரு தன்னுடைய கடைசி காலத்தை செலவழித்திருப்பார் அத்தோடு இங்கேதான் இக்காலத்தில் கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்பட்டார்கள். இ;ந்த திருமடல், துன்புற்று வேதனையடைந்து விசுவாசத்தை இழக்கும் தருவாயில் இருந்த கிறிஸ்தவர்களுக்கு ஆன்ம மருந்தாக வருகிறது.
வ.3-5: முதல் மூன்று வரிகளில், பவுலின் திருமுக சாயலை ஒத்து முன்னுரை எழுதிய பேதுரு இந்த வரிகளில் பதினொரு காரணங்களை முன்வைத்து நாம் ஏன் கடவுளை புகழ வேண்டும் என விளக்குகிறார்.
1. அவர் நம் ஆண்டவர் இயேசுவின் தந்தை (πατὴρ τοῦ κυρίου ἡμῶν Ἰησοῦ Χριστοῦ).
2. அவர் நமக்கு புதுப்பிறப்பு அளித்துள்ளார் (ἀναγεννήσας).
3. அவருடைய பேரிரக்கத்தினால் இப்படிச் செய்துள்ளார் (αὐτοῦ ἔλεος).
4. இதனால் விளைவது உயிருள்ள எதிர்நோக்கு (εἰς ἐλπίδα ζῶσαν).
5. இதற்கான அடையாளம் இயேசுவின் உயிர்ப்பு (δι᾿ ἀναστάσεως Ἰησοῦ Χριστοῦ).
6. இந்த உயிர்ப்பின் எழுவாய்ப் பொருள், உரிமைப்பேறு (εἰς κληρονομίαν).
7. இந்த உரிமைப்பேறு அழிக்கப்படவோ அசிங்கப்படுத்தப்படவோ முடியாதது (ἄφθαρτον καὶ ⸂ἀμίαντον καὶ ἀμάραντον⸃ τετηρημένην).
8. அது நமக்காக பரதலோகத்தில் பாதுகாக்கப்படுகிறது (ἐν οὐρανοῖς εἰς ὑμᾶς).
9. இந்த உரிமைப்பேறுக்காக நாம் கடவுளால் பாதுகாக்கப்படுகிறோம் (τοὺς ἐν δυνάμει °θεοῦ φρουρουμένους).
10. நம்பிக்கைதான் இந்த பாதுகாப்பின் ஆயுதம் (διὰ πίστεως).
11. இதனால் நாம் கடவுளின் வாக்குறுதிகளை இறுக்கமாக பிடிக்கிறோம் அத்தோடு இறுதிநாளில் நாம் மீட்பை கண்டடைவோம் (εἰς σωτηρίαν ἑτοίμην ἀποκαλυφθῆναι ἐν καιρῷ ἐσχάτῳ).
வ.6: இந்த வாய்ப்புக்களையும் இறுதி மீட்பையும் பெற தற்காலத்தில் சிறிது துன்புறவேண்டும் என எச்சரிக்காமல், துன்புறுகிறவர்களுக்கு ஆறுதல் தருகிறார் முதலாவது திருத்தந்தை. துன்பம் சிறிது காலம்தான் ஆனால் இறுதியில் நாம் சந்திக்க இருப்பது பேருவகை என்கிறார் (ἀγαλλιᾶσθε). துன்பம் கடவுள் நம்பிக்கையை அழிக்கக்கூடிய முக்கியமான சூத்திரதாரி என்பதால் அதனை தன்னுடைய கரிசனையில் எடுக்கிறார்.
வ.7: ஏன் நாம் துன்புறவேண்டும் என்பதை அனைவருக்கும் தெரிந்த உருவகமான பொன் நெருப்பினால் புடமிடப்படுகிறது என்பதை காட்டுகிறார் (διὰ πυρὸς δὲ δοκιμαζομένου). துன்பம் முடிவல்ல மாறாக அது ஒரு வாய்ப்பு என்பதைக் காட்டுகிறார் பேதுரு. நெருப்பினால் புடமிடப்படும் பொன் அக்காலத்திலும் விலையுயர்ந்ததாகவே இருந்தது ஆனால் அது அழியக்கூடியது. நம்பிக்கை பொன்னைவிட விலையுயர்ந்தது (πίστεως πολυτιμότερον χρυσίου τοῦ ἀπολλυμένου), அது பொன்னைப்போல அழியாதது. இந்த நம்பிக்கையின் அழியாத்தன்மை இயேசு வெளிப்படும் நாளில், அதனைக் கொண்டிருப்போருக்கு புகழும் மாண்பையுபும் மற்றும் பெருமையையும் (δόξαν καὶ τιμὴν) தரும் என்கிறார் (இன்று கிறிஸ்துவை பின்பற்றுகிறவர்களுக்கு கிறிஸ்துவா அலலது பொன்னா விலையுயர்நதது என்பதில பல சந்தேகங்கள் இருக்கின்றன, அதனால்தான் மர சிலுவையைவிட பொன் சிலுவையை அதிகமானனோர் விரும்புகின்றனர்.). அந்த உரோமைய காலத்திலும் பொன் நெருப்பினால் புடமிடப்பட்டிருக்கிறது என்ற ஒரு செய்தியையும் இந்த வரியில் நாம் கண்டுகொள்ளலாம்.
வ.8: இந்த கடிதத்தின் பெறுனர்கள் இரண்டாம் தலைமுறை கிறிஸ்தவர்கள். அவர்கள் திருத்தூதர்களை சந்தித்தார்களா என்பது தெரியாது ஆனால் நிச்சயமாக அவர்கள் இயேசுவை மனிதராக சந்திக்கவில்லை. இந்த சூழ்நிலையில் தெரியாத ஒருவருக்காக துன்புறுவது அவ்வளவு இலகுவான காரியமல்ல, இருப்பினும் இவரை இவர்கள் அனுபவத்தில் சந்திக்க முடியும் அந்த அனுபவம் மற்றும் உணர்வுகள் பலமான ஒரு சக்தி என்பதை பேதுரு நினைத்துப்பார்க்கிறார். இவர்கள் இயேசுவை பார்க்கவில்லை ஆனால் அன்பு செய்கிறார்கள் (ὃν οὐκ ἰδόντες ἀγαπᾶτε), காணவில்லை இருப்பினும் நம்பிக்கை கொள்கின்றனர் (εἰς ὃν ἄρτι μὴ ὁρῶντες πιστεύοντες δὲ) என்று அழகான கிரேக்க வார்த்தைகளில் கவிசெய்கிறார். இவர்கள் சந்திக்கின்ற துன்பத்திலும் மகிழ்சியை முக்கியமான பெயர்உரிச்சொற்களில் அழகாக காட்டுகிறார். இந்த பேருவகையை ஒப்பற்ற மகிழ்ச்சிப் பேருவகை என்கிறார்.
வ.9: நமது நம்பிக்கையின் குறிக்கோளை நினைவுபடுத்துகிறார். நம்பிக்கையின் குறிக்கோள் ஆன்மாவின் மீட்பு என்பது ஆரம்ப கால திருச்சபையின் ஒரே படிப்பினையாக இருந்தது (σωτηρίαν ψυχῶν.). ஆரம்ப கால படிப்பினைகளை ஒட்டி, ஆண்டவரின் வருகையும் இறுதி நாளும் மிக அருகில் இருந்தது என்பதை இந்த கடிதமும் காட்டி நிற்பதை அவதானிக்கலாம்.
யோவான் 20,19-31
19அன்று வாரத்தின் முதல் நாள். அது மாலை வேளை. யூதர்களுக்கு அஞ்சிச் சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடிவைத்திருந்தார்கள். அப்போது இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று, 'உங்களுக்கு அமைதி உரித்தாகுக!' என்று வாழ்த்தினார்.
20இவ்வாறு சொல்லிய பின் அவர் தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டினார். ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள்.
21இயேசு மீண்டும் அவர்களை நோக்கி, 'உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன்' என்றார். 22இதைச் சொன்ன பின் அவர் அவர்கள்மேல் ஊதி, 'தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள். 23எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா' என்றார். 24பன்னிருவருள் ஒருவரான திதிம் என்னும் தோமா, இயேசு வந்தபோது அவர்களோடு இல்லை. 25மற்றச் சீடர்கள் அவரிடம், 'ஆண்டவரைக் கண்டோம்' என்றார்கள். தோமா அவர்களிடம், 'அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கையை இட்டாலன்றி நான் நம்பமாட்டேன்' என்றார்.
26எட்டு நாள்களுக்குப்பின் அவருடைய சீடர்கள் மீண்டும் உள்ளே கூடியிருந்தார்கள். அன்று தோமாவும் அவர்களோடு இருந்தார். கதவுகள் பூட்டப்பட்டிருந்தும் இயேசு உள்ளே வந்து அவர்கள் நடுவில் நின்று, 'உங்களுக்கு அமைதி உரித்தாகுக!' என்று வாழ்த்தினார்.
27பின்னர் அவர் தோமாவிடம், 'இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கைகொள்' என்றார்.
28தோமா அவரைப் பார்த்து, 'நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!' என்றார்.
29இயேசு அவரிடம், 'நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்' என்றார். 30வேறு பல அரும் அடையாளங்களையும் இயேசு தம் சீடர்கள் முன்னிலையில் செய்தார். அவையெல்லாம் இந்நூலில் எழுதப்படவில்லை. 31இயேசுவே இறைமகனாகிய மெசியா என நீங்கள் நம்புவதற்காகவும், நம்பி அவர் பெயரால் வாழ்வு பெறுவதற்காகவுமே இந்நூலில் உள்ளவை எழுதப்பெற்றுள்ளன.
இந்தப் பகுதியில் பயத்திலிருந்து நம்பிக்கை மற்றும் மகிழ்ச்சிக்கான ஒரு மாற்றத்தை சீடர்கள் பெற்றதை அவதானிக்கலாம். இந்த பகுதிக்கு முன்னர் இயேசு ஏற்கனவே மகதலா மரியாவிற்க்கு தோன்றியிருந்தார் அத்தோடு தனது திருத்தூதர்களுக்கும் தனது உயிர்ப்பைப் பற்றி அறிவிக்க சொல்லியருந்தார். மரியா ஆண்டவரின் உயிர்ப்பை விட அவர் தன்னை சந்தித்ததையே பற்றி மகிழ்ந்திருந்தார். எனவே யோவான் இங்கே இன்னொரு முக்கியமான செய்தியை பதிவு செய்கிறார்.
வ.19: மாலை நேரம் கதவுகள் மூடியிருப்பது சீடர்களின் பய உணர்வையும் மனச் சிக்கல்ளையும் அழகாக படம்பிடிக்கிறது. ஆண்டவர் இவர்களின் நடுவில் நிற்பதும், அமைதி உண்டாகுக என்று சொல்வதும், கிறிஸ்தவர்களுக்கு முக்கியமான செய்தி. யோவானின் வாசகர்களுக்கும் இது முக்கியமாக தேவைப்பட்டது. அமைதியை தரக்கூடியது ஆண்டவரின் பிரசன்னம் மட்டுமே, அத்தோடு கதவுகள் மூடியிருந்தாலும், மாலையானாலும், ஆண்டவரின் சக்தியை தடுக்க முடியாது என்கிறார்.
வவ.20-21: ஆண்டவர் தனது உடலை காட்டுவதன் மூலமாக தான் ஒரு மாய ஆவி இல்லை என்பதையும், இது ஒரு வகை மனம் சம்பந்தமான அனுபவம் இல்லை என்பதையும் வாசகர்கள் புரிந்துகொள்வர். இங்கே இயேசுவின் அதே பணி, மாற்றங்கள் இன்றி திருத்தூதர்கள் வாயிலாக மீண்டும் தொடர்வதைக் காட்டுகிறது. இது ஏற்கனவே ஆண்டவர் தான் வாழ்ந்தபோது சொன்ன வார்த்தைகளை நிறைவுசெய்கிறது (காண்: 14,27: 16,33). இரண்டு முறை அமைதி தருவதாகச் சொல்வது, அக்காலத்தில் கிறிஸ்தவர்களுக்கு அமைதி எவ்வளவு தேவையாக இருந்தது என்பதை கோடிடுகிறது.
வவ.22-23: இங்கே பல செய்திகள் பறிமாறப்படுகின்றன. உண்மையில் திருத்தூதர்கள் ஆவியை நிறைவாக ஆண்டவரின் விண்ணேற்றத்தின் பின்னரே பெற்றுக்கொண்டனர், இந்தப் பகுதி திருத்தூதர்களின் பாவங்கள் மன்னிக்கப்படுதலை காட்டுகிறது என எடுக்கலாம். அத்தோடு தொடக்கநூலில் ஆண்டவர் மனிதனை படைத்து தனது ஆவியை ஊதியே உயிரைக் கொடுத்தார், இங்கே தனது ஆவியை ஊதி மீண்டும் புது பிறப்பு கொடுக்கிறார், என எடுக்கலாம். பாவங்களை மன்னித்து, ஒப்புரவு அருட்சாதனம் ஏற்றபடுத்தப்பட்ட நிகழ்வாகவும் ஆய்வாளர்கள் இந்நிகழ்வைக் காண்கின்றனர்.
வவ.24-25: தோமாவின் பேச்சும் அவரது செயல்களும் ஆரம்ப கால திருச்சபையின் விசுவாச பிரழ்வுகளைக் காட்டுகிறது. தோமா ஆண்டவரின் உயிர்ப்பை நம்பவில்லை என்பதைவிட ஆண்டவரின் தரிசனத்தை நம்பவில்லை என்றே தோன்றுகிறது. தோமா மற்றவர்களைவிட விசுவாசத்தில் குறைந்தவர் என்று சொல்வது யோவானின் செய்தியல்ல. இவருடைய பெயர் அரமெயிக்க மொழியில் இருவர் என்ற அர்தத்தைக் கொடுக்கிறது. தோமாதான் ஆண்டவருடன் இறக்கவும் முதன் முதலில் ஆயத்தமாக இருந்தவர் (11,16). அதே வேளை தன்னுடைய வினாக்களை அஞ்சாது ஆண்டவரிடம் கேட்கவும் தயாராக இருந்தவர் (14,5). தோமா நம்பிக்கையின்மையின் அடையாளம் என்பதைவிட ஆரம்பகால திருச்சபையின் மனித முகம் என்றே எடுக்கவேண்டும். ஆண்டவரின் காயங்கள், அவரின் சிலுவை மரணத்தை மீண்டும் நினைவூட்டுகின்றன.
வவ.26-27: எட்டு நாட்கள் என்பது கிரேக்கர்களின் ஒரு வார அளவைக் குறிக்கும். கதவுகள் மூடியிருந்ததும், இயேசு உள்ளே வந்ததும், சீடர்கள் இன்னும் பயத்திலே இருந்ததையும் குறிக்கிறது. ஆண்டவர் இரண்டு முறை அவர்களுக்கு அமைதி கொடுத்தும் அவர்கள் பயத்திலே இருக்கிறார்கள். ஆக மற்ற சீடர்களுக்கும் தோமாவிற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. ஆண்டவர் தோமாவிற்கு சொல்லும் செய்தி அவருக்கு மட்டுமல்ல அனைவருக்கும் உரியது, அது, அச்சம் விலக்கி நம்பிக்கை கொள்ளுங்கள் என்பதாகும். யோவான் நற்செய்தியின் நோக்கமும் இதுவே.
வ.28: கிறிஸ்தவ நாகரீகத்தினதும், விசுவாசத்தினதும் முக்கியமான கோட்பாடு இது. இயேசுதான் ஆண்டவர், அவரேதான் கடவுள் (ὁ κύριός μου καὶ ὁ θεός μου - ho kurios mou kai ho theos mou- என் ஆண்டவரே மற்றும் என் கடவுளே!)
வவ.29-31: யோவான் இவ்வாறு தன் நற்செய்தியின் நோக்கத்தை உறுதிப்படுத்துகிறார். இயேசுவைக் காணாமல் அவரை நம்புதலே இரண்டாம் தலைமுறை கிறிஸ்தவர்களின் விசுவாச வாழ்க்கைக்கு தேவையாக இருந்தது. யோவான், இயேசுவின் அனைத்து செய்ற்பாடுகளையும் நற்செய்தி உள்வாங்கவில்லை என்பதை ஏற்றுக்கொள்கிறார். இங்கணம், நற்செய்திகள் சில குறிப்பிட்ட தேவைகளுக்காவே எழுதப்பட்டது என்பது புலனாகிறது. நற்செய்திகள் உண்மையில் இயேசுவின் அனைத்து வாழ்க்கை நிகழ்வுகளையும் உள்ளடக்கவில்லை என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும். இயேசு நற்செய்திகளால் மட்டும், உள்ளவாங்கப்படகூடிய இறைவன் அல்ல அவரைக் கொள்ள இந்த உலகத்தின் புத்தகங்கள் போதாது.
நம்பிக்கை என்பது ஒரு கொடை,
அது அறிவிலும் புரிதலிலும் மட்டும் தங்கியிருக்க முடியாது.
நம்பிக்கைக்கு அடித்தளம் தாழ்ச்சியும் நன்றியுணர்வுமாகும் என்பதே நற்செய்தியாளர்களின் படிப்பினைகள்.
ஆண்டவரே எங்கள் நம்பிக்கையை உறுதிப்படுத்தும்,
நம்பிக்கை மூலமாக எங்கள் வாழ்வை ஆழப்படுத்தும். ஆமென்.
கொரோனா வைரசின் தீவரமான தாக்கத்தால், அழிந்துகொண்டிருக்கும்
நம்பிக்கையை பலப்படுத்தி,
அதனால் கொரோனா என்னும் கொடிய நோயை வெற்றி கொள்ள உதவி செய்யும்.
மரணித்த அனைத்து மருத்துவ போராளிகளுக்கும் சமர்ப்பணம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக