வியாழன், 6 ஏப்ரல், 2017

Palm Sunday 2 (A) பரிசுத்த வாரம், குருத்தோலை ஞாயிறு (அ) 09,04,2017 (2).



பரிசுத்த வாரம், குருத்தோலை ஞாயிறு ()
09,04,2017

முதல் வாசகம்: எசாயா 50,4-7
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 21
இரண்டாம் வாசகம்: பிலிப்பியர் 2,6-11
நற்செய்தி: மத்தேயு 26,14-27,66


குருத்தோலை ஞாயிறு:
மத்தேயு 26,14-27,66
காட்டிக்கொடுக்க யூதாசு உடன்படுதல்
(மாற் 14:10 - 11; லூக் 22:3 - 6)


இந்த ஆண்டின் குருத்தோலை ஞாயிறு, ஆண்டவரின் பாடுகளின் வரலாறு மத்தேயுவின் நற்செய்திப்படி எடுக்கப்பட்டுள்ளது. மத்தேயு நற்செய்தியின் சிறப்பம்சங்கள் மற்றும் விசேட நோக்கங்கள் 
இந்த பாடுகளின் வரலாற்றை அழகுபடுத்துகின்றன. மத்தேயுவின் நோக்கத்தின் படி, இயேசு புதிய மோசே, அவர்தான் மெசியா அத்தோடு அவர்தான் தாவிதின் உண்மையான வாரிசு. அத்தோடு கடவுள், ஆபிராகமிற்கு வாக்களித்தவை இயேசுவில்தான் நிறைவு பெறுகிறது. மத்தேயு நற்செய்தியில் காணப்படும் சில முக்கியமான காட்சிகள்.

. யூத தலைமைகள் இயேசுவை கொலை செய்ய திட்டமிடுகிறது (26,1-5). இதற்கு தலைமைக் குருக்களும், மக்களின் மூப்பர்களும் காரணமாகிறார்கள்

. பெத்தானியாவில் இயேசுவை பெண்னொருவர் எண்ணெய்யால் கழுவுகிறார், இந்த பெண் பாவியான பெண்ணல்ல (26,6-13)

. யூதாசு இஸ்கரியோத்து இயேசுவை காட்டிக்கொடுக்கத் திட்டமிடுகிறார் (26,14-16).

. சீடர்கள் பாஸ்கா விழாவிற்கு ஆயத்தம் செய்கிறார்கள் (26,17-20).  

. இயேசு பேதுருவின் மறுதலிப்பை முன்னுரைக்கிறார் (26,30-35)

. இயேசு கெத்சமெனியில் செபிக்கிறார் (26,36-46)

. யூதாசின் வருகையும் இயேசுவின் கைதும் (26,47-56).

. இயேசு கைபாசினால் விசாரணைக்கு உட்படுகிறார் (26,57-68)

. பேதுரு இயேசுவை மறுதலிக்கிறார் (26,69-75).

. இயேசு தீர்ப்பிடப்பட்டு பிலாத்துவிடம் கொண்டுசெல்லப்படுகிறார் (27,1-2)

௰௧. யூதாசின் மரணம் (27,3-10).

௰௨. இயேசு பிலாத்துவினால் விசாரிக்கப்படுகிறார் (27,11-23).

௰௩. இயேசு தண்டனை கொடுக்கப்பட்டு தண்டிக்கப்படுகிறார் (27,24-31).

௰௪. இயேசு சிலுவையில் அறையப்படுகிறார் (27,32-37) 

௰௫. இயேசுவின் மரணத்தின் தாக்கம் (27,51-56)

௰௬. இயேசுவின் அடக்கமும் யூதர்களின் கவலையும் (27,57-66).  

மத்தேயு நற்செய்திப்படி இயேசுவின் பாடுகளின் சுருக்கம்:

. இயேசுவின் நிலை
இயேசு பலமாக துன்புறுத்தப்படுகிறார், இயேசு தாவீதின் மகன் என காட்டப்படுகிறார், மோசேயைப்போல 
இயேசு நேரிய ஆசிரியராக தன் மக்களுக்கும் சீடர்களுக்கும் பிரமாணிக்கமாயிருக்கிறார், இயேசுவை தன் மகனென கடவுள் அடையாளங்கள் வழியாக காட்டுகிறார்

. பாடுகளின் வரலாற்றில் வரும் பாத்திரங்கள்:
கயபாவும் பிலாத்துவும் - அதிகாரத்தை பற்றியே எண்ணுபவர்கள்
யூதாசும் பேதுருவும் - காட்டிக்கொடுப்பவரும் மறுதலிப்பவரும், இரண்டு பேரும் வேதனையடைகின்றனர்
மற்றைய ஆண் சீடர்கள் - பெரிதாக காட்டப்படவில்லை, தப்பி ஓடுகின்றனர்
மகதலா மரியாவும், மற்றைய பெண் சீடர்களும் - பிரமாணிக்மாயிருக்கின்றனர், ஓடாதவர்கள்
அரிமத்தியா யோசேப்பு - திடமுள்ள சீடர், நற்செயல் செய்கிறார்


. மத்தேயு மாற்கு நற்செய்தியில் இல்லாமல் மற்றைய நற்செய்திகளில் இருப்பவை

.. லூக்காவில்
இறுதி இராவுணவில் இயேசு நீண்ட உரையாற்றுகிறார், இயேசு யூத தலைமைச் சங்கத்தினால் விசாரிக்கப்படுகிறார், இயேசு ஏரோதுவினால் விசாரிக்கப்படுகிறார், பிலாத்து இயேசு குற்றமற்றவர் என வாதாடுகிறான், இயேசு தன் கல்வாரிப் பயணத்தில் பெண்களோடு பேசுகிறார், இயேசு தன்னை சிலுவையில் அறைகிறவர்களை மன்னிக்கிறார், மனந்திருப்பிய கள்வனோடு இயேசு பேசுகிறார்

.. யோவானில் மட்டும்
இறுதி இராவுணவில் இயேசு நீண்ட உரையாற்றுகிறார், இயேசு தன் சீடர்களின் பாதங்களை கழுவுகிறார், இயேசு தந்தையை நோக்கி நீண்ட செபம் செய்கிறார், பிலாத்து இயேசு குற்றமற்றவர் என வாதாடுகிறான் அத்தோடு இயேசு பிலாத்துவினால் நீண்ட நேரம் விசாரிக்கப்படுகிறார், இயேசு சிலுவையிலே முக்கியமான வார்த்தைகளை உதிர்க்கிறார், இறப்பின் பின்னர் அவரது விலா குத்தப்படுகிறது ஆனால் எலும்புகள் தாக்கப்படவில்லை.

விளக்கவுரை:
கடவுள்கெதிராக மனிதரின் சதி: (வவ 1-5)

மத்தேயு நற்செய்தியின் 25ம் அதிகாரத்தின் இறுதி பகுதியில் இயேசு இறுதித் தீர்ப்பைப் பற்றி பேசுகிறார் அதன் பின்னரே தன்னுடைய முடிவு நாட்களைப் பற்றி பேசுகிறார். இயேசு தான் ஒரு உண்மையான யூதன் என்பதை பல வேளைகளில் காட்டியுள்ளார். மத்தேயு நற்செய்தியில் இது மிகவும் முக்கியமான ஒரு நோக்கம். இந்த வரிகளில் அவர் பாஸ்கா விழாவைப்பற்றி நன்கு அறிந்திருக்கிறார் அத்தோடு அதனை கொண்டாட விருப்பமாக இருந்தார் என்பதை மத்தேயு காட்டுகிறார். பாஸ்கா (πάσχα), இஸ்ராயேல் மக்களுக்கு தங்களது விடுதலைப் பயண அனுபவத்ததை அத்தோடு கடவுளின் ஆசீரை நினைவுபதும் ஒரு முக்கியமான விழா. இதனை அவர்கள் ஒவ்வொரு வருடமும் கொண்டாடினார்கள். இது நிசான் மாதத்தின் (சித்திரை-எப்ரல்) 14ம் நாள் தொடக்கம் 20ம் நாள்வரை நீண்டு செல்லும். மத்தேயு இந்த பாஸ்காவிற்கும் இயேசுவின் பாடுகளுக்கும் தொடர்பை உண்டாக்க நினைக்கிறார் என்பது புலப்படுகிறது
தொடக்கத்திலிருந்தே இயேசுவை தொலைக்க சூழ்ச்சியாக முயன்றவர்களில் தலைமைக் குருக்கள், மூப்பர்கள் மற்றும் மறைநூல் அறிஞர்கள் முக்கியமானவர்கள் என மத்தேயு காட்டுகிறார். இப்போது இந்த குழுவுடன் கயபா இணைகிறார், இவர் இந்த காலத்தில் தலைமைக் குருவாக இருந்தவர். இவர்கள் 
இயேசுவை தொலைக்க நினைத்தாலும், மக்களின் கலகத்திற்கு அஞ்சுகிறார்கள். உரோமையர்கள், மக்கள் கலகம் செய்தால் கடுமையான இராணுவ நடவடிக்கையை எடுத்தார்கள். இதனை இவர்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள்

தூய தலையில் எண்ணெய் அபிசேகம்: (வவ.6-12)

மாற்குவும் யோவானும் இந்த நிகழ்வை வித்தியாசமாகக் காட்டுகின்றனர். இந்த நிகழ்வு பெத்தானியாவில் நடைபெறுகிறது. இந்த பெத்தானியாவில்தான் மரியா, மார்த்தா மற்றும் இலாசர் வாழ்ந்து வந்தனர் (யோவான் 12,3). பெத்தானியாவில் தொழுநோயாளர் சீமோன் வீட்டில் ஆண்டவர் இருக்கிறார், ஆக மத்தேயுவின் ஆண்டவர் நோயாளிகளின் ஆண்டவர். இங்கே பெண்ணொருவர் இயேசுவின் பாதங்களுக்கு விலையுயர்ந்த நறுமண தைலம் பூசுகிறார் (ἀλάβαστρον μύρου). இந்த நறுமண தைலம் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மிக விலையுயாந்த பொருள். இங்கே இயேசுவின் தலையில் எண்ணெய் தடவுகிறார், இதற்கு கிரேக்க விவிலியம் திருமுழுக்கு என்ற சொல்லை பாவிக்கின்றது (βαρυτίμου καὶ κατέχεεν ἐπὶ  τῆς κεφαλῆς). மத்தேயு இதனை அடையாளமாக பார்க்கிறார். இந்த பெண் யார் என்று தெரியவில்லை. இலாசரின் சகோதரி மரியாவாக இருக்கலாம். சீடர்கள் பணத்தின் பொறுமையை உணர்ந்து கோபமடைகின்றனர். ஏழைகளை முன்நிறுத்துவதாக நடிக்கின்றனர். இந்த சீடர்கள் யார் என்று தெரியவில்லை. வேறு நற்செய்தியில் இதனை சொல்பவர் யூதாசு இஸ்கரியோத்து. ஆனால் இயேசு இந்த பெண்ணின் செயலை அன்பின் செயல் அடையாளமாக மெச்சுகிறார் (அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்). ஆண்டவர், ஏழ்மை தவிர்க்க முடியாத ஒரு கொடுமை அது தொடர்ந்து இருக்கப்போகிறது அதாவது மனிதர் ஏழ்மைக்கு எதிராக உண்மையாக முயற்ச்சி செய்ய மாட்டார்கள், ஏழ்மையும் வறுமையும் உலகம் முடியும் வரை இருக்கும். (ஈழ நாட்டிலும் வறுமையையும் ஏழ்மையையும் யுத்தத்தின் விளைவு என்றவர்கள் இன்று புது வியாக்கியானம் செய்கிறார்கள், இவை சுயநலவாதிகளின் மூலதனம்). ஆண்டவர், தான் உடலோடு மனிதர் சாயலில் தொடர்ந்து இருக்கப்போதில்லை என்கிறார். இயேசு ஏழைகளை மட்டம்தட்டுகிறார் என எடுக்கமுடியாது, அத்தோடு இந்த பெண்ணின் செயலை தன் அடக்கத்தோடு ஒப்பிடுகிறார். அதேவேளை இந்த பெண்ணின் செயல் ஒரு நற்செய்தியாக நினைவுகூறப்படும் எண்கிறார், நாமும் இந்த பெண்ணை இன்று 2017இல் நினைவுகூறுகின்றோம் (ἐν ὅλῳ τῷ κόσμῳ λαληθήσεται καὶ ὃ ἐποίησεν αὕτη εἰς μνημόσυνον αὐτῆς.).

காட்டிக்கொடுக்கும் அசுத்தமான நட்பு (வவ.14-16). 

யூதாசு பன்னிருவருள் ஒருவர் என்பதை மத்தேயுவும் காட்டுகிறார் (εἷς τῶν δώδεκα ὁ λεγόμενος Ἰούδας  Ἰσκαριώτης). இவர்தான் மத்தேயுவில் தலைமைக்குருவிடம் வந்து காட்டிக்கொடுத்தலை முன்னெடுக்கிறார். அதற்கான விலையையும் பேசுகிறார். யூதாசு ஏன் இதனை செய்தார் என்பதற்கு பல விரிவுரைகளை இரண்டாயிரம் ஆண்டுகளாக இறையியலாளர்கள் தருகின்றனர். ஆண்டவருக்கும், நண்பருக்கும், முப்பது வெள்ளிக்காசுகள் என பேரம் பேசப்படுகிறது (τριάκοντα  ἀργύρια). இந்த பணம் அக்காலத்தில் தொலைந்த அடிமைக்காக அவர் முதாளிக்கு வழங்கப்பட்ட தொகை (காண்க வி. 21,32, ஒப்பிடுக செக் 30,11). யூதாசின் செயல் ஒருநேர செயல் அல்ல, அவர் அதற்காக பல வாய்ப்புக்களை தேடினார் என மத்தேயு காட்டுகிறார். முன்வரியில் வந்த பெண்ணின் அன்புடன் ஒப்பிடுகையில் யூதாசின் அசுத்தமான நட்பு புலப்படுகிறது

உண்மையான பாஸ்கா ஆயத்தம் (வவ.17-18)

பாஸ்காவையும் யூதர்களையும் பிரிக்க முடியாது, நமக்கு தைப்பொங்கல்; போல. பாஸ்கா விழாவை πάσχα எங்கே கொண்டாட வேண்டும் என்று சீடர்கள் இயேசுவின் மனநிலையை அறிந்து கேட்கிறார்கள். ஏனெனில் இந்த விழாக்காலத்தில் எருசலேம் மக்கள் கூட்டத்தால் நிறைந்து வழியும். இதனால் அவர்கள் முன்கூட்டியே ஆயத்தம் செய்ய விழைகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்ட இந்த பாஸ்கா யூதர்களுக்கு அவர்களின் எகிப்திய விடுதலையை நினைவூட்டியது. அவர்கள் குடும்பமாக மாலைவேளையில் செம்மறி ஆட்டுக்குட்டியை அடித்து இறைச்சியை வாட்டி உண்டார்கள் (காண்க வி. 12). குடும்பமாக 
இதனை செய்தார்கள். இப்போது இந்த புதிய குடுபம், இயேசுவும் அவர் சீடர்களும் அந்த பாரம்பரியத்தை செய்ய முன்வருகிறார்கள். அத்தோடு அவர்கள் புளியாத அப்பத்தையும், கசப்புக் கீரையையும் உண்டார்கள். புளியாத அப்பம் அவசரத்தையும், கசப்புக் கீரை எகிப்பதிய துன்பத்தையும் நினைவூட்டின. (1995 யாழ், 2007 மட்டக்களப்பு, 2009 வன்னி போன்ற ஈழ நாட்டின் அவல இடப்பெயர்வுகள் பத்து வருடங்களுக்குள்ளேயே மறந்து விடுமே என்ற அச்சம் உண்டாகின்றது). யூதர்கள் தங்கள் நினைவுகளில் கவனமாக இருந்தார்கள்
இயேசுவும் அதே மனநிலையை கொண்டிருந்தார், பெயர் தெரியாத நண்பரிடம் சீடர்களை அனுப்புகிறார். ஏன் மத்தேயு இந்த நண்பரை 'இன்னார்' (τὸν δεῖνα) என சொல்கிறார் என்பது புலப்படவில்லை

வெளிப்படும் சூழ்ச்சி (வவ.20-25)

அனதை;தும் ஒருநாள் வெளிப்படும் என்பது இங்கே புலப்படுகிறது. சீடர்களுடன் விருந்துண்ண ஆயத்தமான இயேசு இங்கே பன்னிருவருடன் காட்டப்படுகிறார். பன்னிருவர்தான் சீடர்களா அல்லது சீடர்கள் வெளியில் இருந்தார்களா என்பது தெளிவில்லை. ஆண்டவர் பன்னிருவருள் ஒருவன்தான் காட்டிக்கொடுப்பவன் என்கிறார். எதிரி வெளியில் இல்லை வீட்டில். 'அது நானோ' (μήτι ἐγώ εἰμι) என்ற சீடர்களின் கேள்வி நம் உள்ளத்தையும் தைக்கிறது. அவன் பாத்திரத்தில் உண்பவன் தான் என்ற பதில் மீண்டும் நம்மையும் சுடுகிறது (ὁ ἐμβάψας  μετ᾿ ἐμοῦ). மறைநூல் நிறைவேறுகிறது என்பது மத்தேயுவின் மிக முக்கியமான சிந்தனை இருப்பினும் காட்டிக்கொடுக்கிறவருக்கு என்றுமே கேடு. காட்டிக்கொடுத்தல் மானிட கலாச்சாரத்தில் சாபம். யூதாசின் கேள்விக்கு நேர்முகமாக பதில் கிடைக்கிறது. நீயே சொல்லிவிட்டாய்;' (σὺ εἶπας) என்கிறார் ஆண்டவர்

பாஸ்காவிற்கே பாஸ்கா (வவ.26-30)

இதுதான் யூதரான இயேசு கொண்டாடிய இறுதியான பாஸ்கா, கிறிஸ்தவர்களுக்கு முதலான பாஸ்கா. நாம் ஒவ்வொரு நாளும் திருப்பலியில் செய்யும் செயல்கள் மற்றும் வசீகர செபங்கள் இந்த வரிகளின் நினைவுகளாகும். 'இதைப் பெற்று உண்ணுங்கள்; இது எனது உடல்' (λάβετε φάγετε τοῦτό ἐστιν τὸ σῶμά μου.) மற்றும் 'இதில் உள்ளதை அனைவரும் பருகுங்கள்; ஏனெனில் இது எனது உடன்படிக்கையின் இரத்தம்  பலருடைய பாவ மன்னிப்புக்காகச் சிந்தப்படும் இரத்தம்' (πίετε ἐξ αὐτοῦ πάντες τοῦτο γάρ ἐστιν τὸ αἷμά μου  τῆς  διαθήκης τὸ περὶ πολλῶν ἐκχυννόμενον εἰς ἄφεσιν ἁμαρτιῶν.) போன்ற வரிகள் இயேசுவுடைய சொந்த வரிகள். யூதர்கள் ஒவ்வொரு உணவிற்கும் முன் நன்றிசெபத்தை சொல்வார்கள் அதனை பர்கோத் ברכת (ஆசிமொழிகள்) என அழைக்கின்றோம். அதனைத்தான் இயேசுவும் செய்கிறார். இந்த பாஸ்கா புதிய பாஸ்கா இனி இது மீள செய்யப்படாது ஏனெனில் இந்த பாஸ்கா நினைவு மட்டுமல்ல முடியாத பலி. புகழ்பாடல்கள் அநேகமாக திருப்பாடல்களாக இருக்கலாம் பின்னர் இவர்கள் ஒலிவ மலைக்கு செல்கிறார்கள். இது எருசலேமிற்கு மிக அருகில் உள்ளது

தளபதி பின் முதுகு காட்டுவார் (வவ.31-35). 

பேதுரு இயேசுவின் தலைமை திருத்தூதர், தலைமைச் சீடர் என்ற உணர்வு நற்செய்திகளை உன்னிப்பாக வாசித்தால் புலப்படும். கடவுளுக்கு மோசேயைப்போல, மோசேக்கு யோசுவாவைப்போல 
இயேசுவிற்கு பேதுரு. மத்தேயு நற்செய்தியில் பேதுரு ஒரு முக்கியமான பாத்திரம். இயேசு பேதுருவின் மறுதலிப்பை உணர்த்துகிறார். வழமைபோல மத்தேயு, செக்கரியா 13,7 என்ற இறைவாக்கு இயேசுவில் நிறைவேறுகிறதை காட்டுகிறார். மறுதலிப்பும் விட்டுவிட்டு ஓடலும் முடிவல்ல பணிதொடங்கிய கலிலேயாவிலே உயிர்ப்பின் பின் புதுப் பணி தொடங்கும் என்கிறார் ஆண்டவர். பேதுருவின் சுய தைரியம் இங்கேயும் புலப்படுகிறது. தான் மற்றவர்கள் போல் அல்ல என்கிறார். ஆனால் அவர் மூன்றுமுறை தன்னை மறுதலிப்பார் என்கிறார் ஆண்டவர். அதன்பின்தான் சேவல் கூவ விடியல் வரும் என்றும் சொல்கிறார் இயேசு. இருப்பினும் பேதுரு வழமைபோல இயேசுவிற்கே அறிவுரை சொல்கிறார், அவரைப்போல மற்றவர்களும் பதில் சொல்கின்றனர். இந்த வரிகளின் மூலம், சீடர்கள் இயேசுவின் ஆபத்தை உணர்ந்து கொள்ளவில்லை என்பது புலப்படுத்தப்படுகிறது. இருப்பினும் மத்தேயு பேதுருவையோ மற்றைய சீடர்களையோ, யூதாசு இஸ்கரியோத்தைப் போல எதிர்மறையாக வர்ணிக்கவில்லை மாறாக அவர்களின் மனித பலவீனத்தைக் காட்டுகிறார்

இறைவனுக்கே தனிமையும் கலக்கமும் (வவ.36-46). 

கெத்சமனி Γεθσημανί என்னும் தோட்டம், ஒலிவ மலையில் அடையாளப்படுத்தப்படுகிறது ஆனால் இதன் சரியான இடத்தை நற்செய்தியாளர்கள் காட்டவில்லை. இதன் அரேமேயிக்க அர்த்தமாக எண்ணெய் ஆலை என்பதைக் காணலாம். எண்ணெய் ஆலைகளும், ஒலிவ தோட்டங்களும் இந்த இடத்தில் பிரசித்தமாக இருந்தன. யோவானும் லூக்காவும் இந்த இடத்திற்கு வேறு அடையாள பெயர்களைக் கொடு;கின்றனர். இயேசு கெத்சமெனியில் இருந்தது, ஆதாம் ஏதேனில் இருந்ததை நினைவூட்டுகிறது. அங்கே ஆதாம் கீழ்படியாமல் பாவம் செய்ய இங்கே ஆண்டவர் கீழ்படிவில் இறைசித்தம் ஏற்கிறார். இயேசு இங்கே செய்த செபம் இறையியில் சிந்தனைகளில் மிக முக்கியமானது
இயேசு இந்த இடத்திற்கு வந்தது தன்னை தேடுபவர்களிடமிருந்து தப்பிக்க அல்ல மாறாக செபிக்க என்பதை முதல் வரி காட்டுகிறது. மற்றவர்களை வெளியில் விட்டு தன் மும்மூர்த்திகளை உடன் அழைக்கிறார் அவர்கள் பேதுரு, யாக்கோபு மற்றும் யோவான். இவர்கள் அதிகமான முக்கிய வேளைகளில் 
இயேசுவோடு இருக்கிறார்கள். இது இவர்களின் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது. ஆண்டவர் துயரமும் மனக்கலக்கமும் அடைந்தார் என்பது (λυπεῖσθαι καὶ ἀδημονεῖν), அவரின் மனித இயல்பைக் காட்டுகின்றன. அந்த துன்பத்தை தன் சீடர்களோடு பகிர்ந்துகொள்ள முயன்றாலும் அவர்களை விட்டு தூர சென்று முகம்குப்புற விழுகிறார். இதன் மூலம், இயேசு தன்னுடைய துன்பங்களை சீடர்கள்மேல் திணிக்க விரும்பாமல் இருந்தார் என்பதும் புலப்படுகிறது. இயேசு தன் தந்தையிடம் சொல்லும் வார்த்தைகள் 'என் தந்தையே, முடிந்தால் இத்துன்பக் கிண்ணம் என்னை விட்டு அகலட்டும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல, உம் விருப்பப் படியே நிகழட்டும்' (πάτερ  °μου εἰ δυνατόν ἐστιν παρελθάτω ἀπ᾿ ἐμοῦ τὸ ποτήριον τοῦτο·   πλὴν οὐχ ὡς ἐγὼ θέλω ἀλλ᾿ ὡς σύ. ), அவருடைய வேதனையின் உச்சத்தைக் காட்டுகின்றன. சீடர்கள் இயேசுவின் துயரின் ஆழத்தை புரியாமல் உண்ட களைப்பில் உறங்குகின்றார்கள். இவர்களின் மனத்திற்கும் உடலிற்கும் வேறுபாடு உள்ளதையும் இயேசு அறிந்திருக்கிறார். இவர்களால் ஒருமணி நேரம் கூட (μίαν ὥραν) விழித்திருக்க முடியாமல் இருப்பது இயேசுவிற்கு சலனத்தை ஏற்படுத்துகிறது. சோதனைக்கு உட்படாதிருக்க ஒரே வழி செபிப்பது என்பதையும் இயேசு கற்றுத்தருகிறார்.
துன்பக்கிண்ணத்தை குடித்தல் என்பது ஒரு அடையாள மொழி. இந்த துன்பக் கிண்ணத்தை குடித்துத்தான் வெற்றி கொள்ள முடியும் என்று இயேசு செபிப்பது, மத்தேயுவின் வாசகர்களுக்கு ஒரு செய்தியை முன்வைக்கிறது. அதாவது இயேசுவை பின்பற்றுவதால் வருகின்ற துன்பங்கள் அதனை சந்தித்தபின்தான் இல்லாமல் போகும் என்பது அந்த செய்தி. அத்தோடு இயேசு ஆண்டவரின் திருவுளத்தை நிறைவேற்றுவதில்தான் கருத்தாய் இருக்கிறார். இயேசு இரண்டாம் முறையாகவும், சீடர்கள் தூக்க மயக்கத்தில் இருப்பதைக் காண்கிறார். தூக்க மயக்கத்தில் இருப்பவர் ஒருவரினால் மற்றவரின் உணர்வுகளையோ அல்லது பேச்சுகளையோ புரிந்துகொள்ள முடியாது. (நம்முடைய 9 வீதியில் அதிகமான விபத்துக்கள் இந்த தூக்க மயக்கத்தால் நிகழ்வதைப்போல). ஆனால் இயேசு இவர்களின் நிலையை புரிந்துகௌ;கிறார் மீண்டும் செபிக்கிறார். கடவுளாக இயேசுவிற்கு இந்த கிண்ணம் அகலாது என்று தெரிந்திருக்கும் ஆனால் மனிதராக இந்த துன்பக் கிண்ணத்தை நினைத்து பயப்படுகிறார். இயேசு மூன்று முறை இறைவனிடம் வேண்டினார் (ἐκ τρίτου) என்று மத்தேயு காட்டி, உண்மையாகவே அவர் மனிதராக வேதனையுற்றார் என இயேசுவின் மானிட இயல்பை காட்டுகிறார் மத்தேயு
இறுதியாக தன்னுடைய நேரம் வந்துவிட்டது என்று இயேசு உணர்ந்து தன் சீடர்களை எழுப்பிவிடுகிறார். இயேசுவினுடைய வார்த்தைகளும் அவரின் செயற்பாடுகளும், அவர் மனித நட்புக்காக ஏங்கினார் என்பதைக் காட்டுகின்றன. மானிட மகன் பாவிகளின் கைகளில் ஒப்புவிக்கப்படபோகிறார் என்று சொல்லி தன்னை கைது செய்கிறவர்கள் பாவம் செய்கிறார்கள் என்பதையும் உணர்த்துகிறார். அதேவேளை தன்னை காட்டிக்கொடுக்கிறவன் தனது சீடத்துவத்தை இழந்துவிட்டான் என்பதையும் காட்டுகிறார். யூதாசின் பெயரை சொல்லாமல் அவரை 'காட்டிக்கொடுக்கிறவன்' (ὁ παραδιδούς) என சொல்வதன் மூலம், இது தெரிகிறது

நட்பின் துரோகம் (வவ. 47-56). 
மத்தேயு நற்செய்தியில் இயேசுவிற்கு எதிரான கூட்டமான குருக்கள் மூப்பர்களோடு யூதாசும் 
இணைந்து கொள்கிறார். இவர்களோடு மாக்கள் கூட்டம் தடிகளோடும் வாள்களோடும் வருகின்றது. இயேசுவை வரவேற்ற மக்கள் கூட்டம் இப்போது மாக்களாக மாறியிருக்கிறது. அன்பு, உணர்வற்ற மக்கள் கலகக் கூட்டமாக மாறுகிறது. (நம் சந்திகளில் வாள்களோடு இன்று அலைந்து திரியம் கூட்டத்தைப் போல). இவர்கள் சாதாரண மக்களா அல்லது யூத தலைமையினால் ஏவப்பட்டவர்களா என்பதிலும் சந்தேகம் உள்ளது. இவர்கள் சாதாரண மக்களல்ல மாறாக தலைமைச் சங்கத்தால் ஏவப்பட்ட அல்லது அவர்களுக்கு பணி செய்யும் நாட்கூலி காவல்வீரர்கள் என சிலர் வாதிடுகின்றனர். யூதர்கள் அன்பையும் சகோதரத்துவத்தையும் காட்ட முத்தமிட்டார்கள். இங்கே யூதாசு தன் ஆண்டவரை வாழ்க என்று சொல்லி அன்பின் அடையாளத்தில் துரோக முத்தமிடுகிறார் (χαῖρε ῥαββί καὶ κατεφίλησεν αὐτόν). ஆண்டவரை வாழ்க என்று சொல்லி அவரை வீழ்த்த முயல்கிறார், அன்பு முத்தம் என்று சொல்லி காட்டிக்கொடுக்கிறார்
இங்கே அடையாளங்களின் முரண்பாடுகளை அழகாகக் காட்டுகிறார் மத்தேயு. (காதல், அன்பு, சகோதரத்துவம், தாய்-தந்தைத்துவத்தின் அடையாளமான முத்தம் இன்று விபச்சாரம், காமம் மற்றும் சினிமாவின் அடையாளமாக போனதைப்போல). யூதாசு தன்னுடைய நிலையை இழந்தாலும், இன்னமும்
இயேசு அவருக்கு தோழமையின் இடத்தையே கொடுக்கிறார். கிரேக்க விவிலியம் யூதாசை 'தோழா' என்றழைக்கிறது, இதற்கான சொல் ἑταῖρος எடாய்ரொஸ் (நண்பன், தோழன், சகபாடி) என்பதாகும். இயேசுவை கூட்டம் கைதுசெய்த வேளை இயேசுவோடு இருந்த ஒருவர் தலைமைக் குருவின் பணியாளரின் காதைத் தாக்குகிறார். யோவான் நற்செய்தியில் இந்த தாக்குகின்ற நபர் பேதுரு. இதனை சகிக்காத இயேசு வன்முறையை நிராகரிக்கிறார். யூத போராளிகள் உரோமையர்களை தாக்கினர், ஆனால் இயேசு தன்னை யூத போராளிகளின் வழிமுறையிலிருந்து வேறுபடுத்துகிறார். வன்முறை வெற்றிதராது மாறாக இன்னொரு வன்முறையை பெற்றெடுக்கும் என்கிறார். அத்தோடு தான் விரும்பினால் 12 படைப்பிரிவை தந்தையிடம்இருந்து பெறமுடியும் என்கிறார். ஒரு படைப்பிரிவு (λεγιών லெகியோன்) 6100 காலாட் படையினரையும் 726 குதிரைப் படைவீரரையும் கொண்டிருக்கும். இப்படியாக 12 படையை தன்னால் பெறமுடியும் என்பதன் மூலம், தான் சாதாரண தலைவர் இல்லை என்பதையும், அத்தோடு அனைத்தும் தனது கட்டுப்பாட்டிலே உள்ளதாகவும், அதேவேளை தன்னுடைய கைது, தனக்கு தெரிந்தே நடைபெறுகிறது என்பதையும் கூறுகிறார். மீண்டுமாக மறைநூல் நிறைவேண்டியதன் தேவையை மத்தேயு நினைவுபடுத்துகின்றார். இயேசுவை பிடிக்க வந்த கூட்டத்தினரின் மனச்சாட்சியை வினவுகிறார். ஆண்டவரை கள்வருக்கு ஒப்பிட்டு பார்க்கும் இந்த கூட்டத்தினரை இயேசு அவர்களின் இதயத்தில் கேள்விகேட்கிறார். இது ஒருபுறமிருக்க இன்னொருபுறம் அவர் சீடர்கள் அனைவரும் தப்பி ஓடிவிடுகின்றனர். இறைவாக்கு நிறைவேறுகிறது.  

கடவுளை தீர்ப்பிடும் கடவுளுக்கான சபை (வவ.57-68). 

மத்தேயு கயபாவை தலைமைக்குரு என்கிறார் (Καϊάφαν τὸν ἀρχιερέα), மற்றைய நற்செய்திகளில் அன்னாவும் கயபாவும் தலைமைக் குருக்களாக காட்டப்படுகின்றனர். தலைமைக்குருக்கள் மக்கபேயர்கள் அல்லது ஹஸ்மோனியர்களின் வழிவந்த சதுசேயர்கள். இவர்கள் யூத தலைமைச் சங்கமான சென்ஹெட்ரினை (συνέδριον தலைமை சங்கம்) ஆட்சி செய்தார்கள். யோசேபுசின் கருத்துப்படி
இயேசுவினுடைய காலத்தில் கயபாவே தலைமைக் குருவாக இருந்திருக்கவேண்டும். அனைவரும் ஓடினார்கள் என்று சொன்ன மத்தேயு, பேதுரு இயேசுவை பின்தொடர்ந்தார் என்றும் சொல்கிறார். மத்தேயு ஒரு திருத்தூதர் என்றால் இவரும் இயேசுவை பின்தொடர்ந்திருப்பார். பேதுரு தலைமைக் குருவின் வீட்டினுள் சென்று அவர் காவலரோடு அமர்கிறார். இதிலிருந்து அங்கு பெரும் கலகக் கூட்டம் கூடியிருந்தது தெரிகிறது, இதனால்தான் இவர்கள் பேதுருவை அடையாளம் காண தவறுகின்றனர். இயேசுவிற்கு மரண தண்டனை (θανατώσωσιν) கொடுக்க வழிதேடுகின்றனர். தலைமைச் சங்கத்தினால் ஒருவருக்கு மரணதண்டனை கொடுக்க முடியாது அதனை உரோமைய ஆளுனரே கொடுக்க வேண்டும். லூக்கா இந்த விசாரணையை நீளமாகக் காட்டுவார். மத்தேயு சுருக்கமாக காட்டுகிறார். பலர் இயேசுவிற்கு எதிராக சாட்சி சொல்ல முன்வந்தும் அவை பிழைத்துவிட இறுதியாக இருவர் முன்வருகின்றனர். யூத சட்டப்படி கடைசி இரண்டு பேரின் சாட்சியாவது தவறில்லாமல் இருக்க வேண்டும். இவர்கள் கோவிலை இடிப்பதைப் பற்றி இயேசு பேசியதாக பொய்சாட்சி சொல்கின்றனர். மெசியா வந்து கோவிலை கட்டுவார் என்ற நம்பிக்கை யூதர்களிடையே இருந்தது. ஆக இவர் கோவிலை இடிப்பார் என்று சொல்லி அவரை மெசியாவாக இருக்க முடியாது என்கின்றனர் போல. தலைமைக் குரு பலவிதமான உள்நோக்கங்களைக் கொண்டு இயேசுவை விசாரிக்கிறார். இயேசு கடவுளின் மகனாகிய மெசியாவா என்று வினவுகிறார், இதுதான் மத்தேயு நற்செய்தியின் நோக்கமும் சுருக்கமும் கூட. இறுதியாக இயேசு அதனை தன் வாயினால் கூறுகிறார். அதாவது இயேசுதான் மெசியா, அவர் தந்தையின் வலப்புறம் உள்ளார் அத்தோடு அவர் மேகங்கள் மீது சீக்கிரம் வருவார் என்கிறார்
இயேசு உண்மையைக்கூற அதனை தேவநித்தனை எனக் கூறி தன் ஆடைகளை கிழிக்கிறார் தலைமைக்குரு. இது அவர் உண்மையான அறிவை பெற்றிருக்கவில்லை என்பதைக் காட்டுகிறது. ஆடைகளை கிழித்து இஸ்ராயேல் குருக்கள் தங்கள் வேதனையை காட்டுவதை விவிலியம் காட்டுகிறது. ஆனால் இங்கே உண்மைக்கு குருத்துவத்தின் ஆடைகள் கிழிக்கப்படுகின்றன இதனால் இந்த குருத்துவம் உண்மையில்லாமல் ஆகிறது. சாட்சியம் தேடியவர்களுக்கு இயேசுவே சாட்சியமாக அவர்கள் அனைவரும் அவரை கொலை செய்ய ஒன்றாக சேருகின்றார்கள் அத்தோடு சாட்சியம் இல்லாமலே அவரை தண்டிக்க முன்வருகிறார்கள். இயேசுவின் உடலிற்கு பெருத்த துன்பத்தை விளைவிக்கிறார்கள். முகத்தில் துப்புதல், முகத்தில் அடித்தல் மற்றும்  ஏளனப்டுத்தல் போன்றவற்றை, போரில் பிடிபட்ட அந்நிய அரசர்களுக்கு செய்தார்கள், இதனை இங்கே இயேசுவிற்கு செய்வதன் வாயிலாக அவரின் முக்கியத்துவத்தை மறைமுகமாக ஏற்றுக்கொள்கிறார்கள். இறுதியாக இயேசுவை இறைவாக்கினராகிய மெசியாவே! என்று சொல்லி அவமானப்படுத்துவதன் வாயிலாக, இவர்களுக்கு இவர்தான் இறைவாக்கினர் அத்தோடு மெசியா என்பதும் தெரிந்திருக்கிறது. கிரேக்க விவிலியம் இந்த வரியை, 'எமக்கு இறைவாக்குரை மெசியாவே!' என்று கொண்டுள்ளது (προφήτευσον ἡμῖν χριστέ)

தளபதியின் மறுதலிப்பு (வவ.69-75)

பேதுரு தன்னை மறுதலிப்பார் என்பதை ஏற்கனவே பேதுருவிற்கே வெளிப்படுத்தியிருந்தார் இயேசு. அந்த இறைவாக்கு இப்போது நிறைவாகிறது. பணிப்பெண் பேதுருவை வினவுகிறார். அக்காலத்தில் வழமையாக ஆண்களை பெண்கள் வினவுவதில்லை. இந்த பெண் வினவுவதன் வாயிலாக இங்கே ஏதோ வித்தியாசமாக நடக்கிறது என்பது புலப்படுகிறது. இயேசு கலிலேயராக அறியப்பட்டிருந்தார் அத்தோடு எருசலேம் வாசிகளுக்கு கலிலேயர் மீது ஒரு நக்கல் இருந்தது என்பதும் புலப்படுகிறது. பேதுரு அனைவர் முன்னிலையிலும் முதலாவது முறை மறுதலிக்கிறார். பின்னர் இரண்டாவது பெண் நாசரேத்து இயேசுவோடு பேதுருவை இணைக்கப் பார்க்கிறார். இங்கேயும் ஒரு பெண்ணே விசாரிக்கிறார். இயேசு நாசரேத்தை சேர்ந்தவர் என்பதும் இந்த பெண்களுக்கு நன்கு தெரிந்திருக்கிறது. இந்த முறை பேதுரு இயேசுவை 'இந்த மனிதன்' (ὅτι οὐκ οἶδα τὸν ἄνθρωπον) என்று ஆண்டவரை மனிதராக்கி மீண்டும் மறுதலிக்கிறார்
இது இரண்டாவது மறுதலிப்பு. இறுதியாக அங்கு நின்றவர்கள் பேதுருவை அவரது உச்சரிப்பைக் கொண்டு 
இவர் கலிலேயராகத்தான் இருக்க வேண்டும் என்கின்றனர். இந்த முறை பேதுரு இயேசுவை மனிதராக்கி பின்னர் அவரை மறுதலிக்கவும் சபிக்கவும் தொடங்கினார் என மத்தேயு காட்டுகிறார். இந்த மறுதலிப்பும் சபித்தலும் அக்காலத்தில் ஆரம்ப கால கிறிஸ்தவர்கள் யூத-உரோமைய கலாபனையின் போது இயேசுவை மறுதலித்ததையும் சபித்ததையும் நினைவூட்டுகிறது. பேதுரு மூன்றாம் முறை மறுதலிக்கிறார். அதாவது முழுமையாக மறுதலிக்கிறார், எனவே சேவல் கூவிற்று, அதாவது அடுத்த நாள் விடிந்தது. சேவலின் சத்தம் ஏற்கனவே இயேசு பேதுருவிற்கு சொன்னதை நினைவூட்டுகிறது, இதனால் மனம் நொந்து அழுகிறார். மத்தேயு, பேதுரு வெளியே சென்றார் அதாவது இனி அவர் யூதர்கள் மற்றும் தலைமைக் குருக்களின் கூட்டத்தோடு இல்லை என்பதைக் காட்டுகிறார். கிரேக்க விவிலியம், பேதுரு மனம் நொந்து குமுறி அழுதார் என்று காட்டுகிறது (ἐξελθὼν ἔξω ἔκλαυσεν πικρῶς). தன் பாவத்தையும் பலவீனத்தையும் ஏற்றுக்கொள்வதும், பாவ சூழ்நிலையிலிருந்து வெளியே வருவதும் ஒரு தலைவனின் அழகிய பண்புகள்

அரசர் அந்நியரால் விசாரிக்கப்படுகிறார் (27,1-2)

மறுநாள் காலை இயேசு உரோமைய யூதேயாவின் ஆளுனரான பிலாத்திடம் கையளிக்கப்படுகிறார். தலைமைக் குருக்கள், மக்களின் மூப்பர்கள் இயேசுவை விசாரிப்பதிலும் பார்க்க அவரை கொலை செய்வதில் கருத்தாய் இருப்பதை மத்தேயு மீண்டும் மீண்டும் காட்டுகிறார். போந்தியு பிலாத்து (Πωντιος  Πιλᾶτος பொன்டியோஸ் பிலாடோஸ்) அன்றைய நாளில் இருந்து உரோமைய பேரரசின் மாகாண பதிலாளி. ஐந்து வருடங்களாக இந்த வேலையை செய்து வந்தான், தன்னுடைய அலுவலகம் செசாரியாவில் இருந்தாலும், பாஸ்கா விழாவில் கலவரம் நடப்பதை எதிர்பார்த்து எருசலேமில் இருந்தான். இவனுடைய பொறுப்பில் 500-1000 படைவீரர்கள் இருந்தனர். வரலாறு இவனை பலவீனமான அதிகாரியாகவே காட்டுகிறது. உரோமையருக்கும் யூதருக்கும் சிக்கல் வராமல் இருக்க பல முயற்சிகளை செய்தான், அத்தோடு கிறிஸ்தவர்களை பிலாத்து துன்புறுத்தினான் என்று சொல்வதற்கில்லை. பிலாத்து உரோமைய சீசரை நினைத்து மிகவும் பயமுடையவனாக இருந்த படியால் அவருக்கு எதிராக பாலஸ்தீனாவிலே நடக்கும் கலகங்களை அடக்குவதில் இரக்கமற்றவனாய் இருந்தான். சொந்த வாழ்க்கையிலும் பிலாத்து நேர்மையற்ற அத்தோடு இலஞ்சம் வாங்கும் ஆசைபிடித்தவனாய் இன்னொரு வரலாறு சொல்கிறது. பிலாத்துவின் சேவையில் திருப்திகாணாத உரோமை, பின்நாட்களில் அவனை மீள அழைத்துக் கொண்டதாகவும், அவன் அங்கே இறந்ததாகவும் பாரம்பரியம் கூறுகின்றது. மத்தேயுவை
போலல்லாது லூக்கா பிலாத்துவை சற்று நேர்முகமாக காட்ட முயற்சிப்பார். மத்தேயு, இயேசுவிற்கு பிலாத்து என்ன தண்டனை கொடுத்தான் என தெளிவாகக் காட்டவில்லை, ஆனால் மற்றைய நற்செய்திகளின் படி, யூதர்கள் இயேசுவின் மேல் சீசருக்கு எதிரான கலகத்தை முன்வைத்து மரண தண்டனையை பெற்றுக்கொடுத்தார்கள் என்கின்றனர். பிலாத்து ஒரு அந்நிய உரோமையன், வழமையாக யூத சகோதர்கள் வேற்றினத்தவரால் விசாரிக்கப்படக்கூடாது என்கிறது இஸ்ரேலிய பாரம்பரியம், ஆனால் தங்கள் தேவைகளுக்காக எதையும் விற்க தயாராக இருக்கிறார்கள் இந்த மக்களின் தலைவர்கள். இறுதியாக தங்கள் மெசியாவாகிய கடவுளையே நம்பிக்கை இல்லாதவர்களிடம் விற்றுவிட்டார்கள். (திருச்சைபயில் எழும் உள்வட்ட பிரச்சனைகளை தீர்க்க திருச்சபையை பற்றி தலைகால் புரியாத சிவில் மற்றும் வேற்று மதத்தினரிடம் சுயநலத்திற்காக நீதி கேட்டு இயேசுவை அசிங்கப்படுத்துவது போல). 

நட்பின் தண்டனை (வவ.3-10)

பிலாத்துவின் விசாரனையில் இருந்து காட்சியை மாற்றுகிறார் மத்தேயு. இயேசுவிற்கு கொடுக்கப்பட்ட தண்டனைகளும், அவருடைய முக பாவனையும் அத்தோடு தன்னுடைய மனசாட்சியும் யூதாசை உறுத்தவே அவர் மனமாறுகிறார். தன் காசுகளை திருப்பிக் கொடுக்க முன்வருகிறார் ஆனால் உண்மையான கொலையாளிகள் அதனை ஏற்காது விடுகின்றனர். ஏன் யூதாசு மனம் வருந்தினார், இயேசுவை இவர்கள் கொலை செய்வார்கள் என்று இவர் எண்ணவில்லையா? போன்ற கேள்விகள் எழுகின்றன. யூதாசு வெள்ளிக் காசுகளை எறிய அதனை ஏற்க மறுக்கின்றனர் தலைவர்கள். அத்தோடு அதனை அவர்கள் தூய்மையற்ற இரத்தத்திற்கான விலையென ஏற்றுக்கொள்கின்றனர் (ἐπεὶ τιμὴ αἵματός ἐστιν), இதனால் அதனை கோவில் காணிக்கையாக்கவில்லை. காணிக்கையில் கவனமாக இருக்கும் இவர்கள் கடவுளை மறந்துவிட்டார்கள். இந்த காசைக் கொண்டு இவர்கள் வெளியூர்க்காரர்களை புதைக்க நிலம் வாங்குகின்றனர் (ἀγρὸν τοῦ κεραμέως εἰς ταφὴν τοῖς ξένοις.), கிரேக்க விவிலியம் இதனை 'குயவனின் நிலம்' என்கிறதுஆக இந்த காசு பெறுமதியாக இருந்திருக்க வேண்டும், இவர்கள் வெளியாட்களையும் மனதில் கொள்கின்றனர், இந்த காசு இரத்தம் படிந்தது என்பதையும் தெரிந்திருக்கின்றனர் ஆனால் இந்த காசு கடவுளை கொலை செய்துவிட்டது என்பதை மறந்தார்கள்.
மத்தேயு இந்த நிகழ்வுகள் அனைத்தையும் எரேமியாவின் இறைவாக்கு ஒளியில் விளக்க முயல்கிறார். எரேமியாவின் இறைவாக்கு இங்கே நிறைவேறுகிறது என வாசகர்களுக்கு காட்ட விளைகிறார் (ஒப்பிடுக எரேமியா 19,1-13). இந்த இறைவாக்கு கின்னோம் பள்ளத்தாக்குடன் சம்பந்தப்பட்டிருக்கிறது. மத்தேயுவின் வரிகள் எரேமியாவைவிட செக்கரியாவின் வரிகளையே மிகவும் ஒத்திருக்கிறது (செக்கரியா 11,12-13). 

உரோமை இஸ்ராயேலை விசாரிக்கிறது (வவ.11-14)

பிலாத்துவின் வரிகள் மத்தேயுவின் நோக்கத்தைக் காட்டுகின்றன. மத்தேயு நற்செய்திப்படி இயேசுதான் உண்மையான அரசர். அதனை பிலாத்து கேள்வியாக கேட்கிறான், ஆனால் அதுதான் விடை என்பது வாசகர்களுக்கு புரியவேண்டும் என மத்தேயு நினைக்கிறார். 'அவ்வாறு நீர் சொல்கிறீர்' (σὺ λέγεις.) என்ற இயேசுவின் பதில் நேர்முகமான பதில். பிலாத்துவிற்கு பதிலளித்தவர் யூத தலைவர்களுக்கு மௌனத்தை கொடுக்கிறார் இதன் அர்த்தம் அவர்கள் பிலாத்தைவிட பொல்லாதவர்கள் என்பதாக இருக்கலாம். அவர்கள் கடவுளின் பதிலுக்கு தகுதியில்லாதவர்கள். கேள்விக்கு பதிலளித்த இயேசு குற்றச்சாட்டுகளுக்கு பதில்தராதது பிலாத்துவை வியப்புறவைக்கிறது. இந்த வியப்புறவைத்தல் (θαυμάζω) மத்தேயு நற்செய்தியில் ஒரு முக்கியமான சொல். இது பல இடங்களில் கடவுளின் செயலைக் குறிக்கிறது. பிலாத்து தான் ஒரு உரோமைய அதிகாரி அத்தோடு குற்றம் சுமத்துகிறவர்கள் பாலஸ்தீன அதிகாரிகள் 
இருப்பினும் இந்த மனிதர் இந்த இரண்டு நாடுகளையும் தன்னுடை மௌனத்தால் வெற்றிகொள்கிறாரே என்று வியந்திருக்கலாம்

உயிருக்கு மரண தண்டனை (வவ.15-26)

இயேசுவிற்கு மரண தண்டனை பெற்றுக்கொடுப்பதே யூத தலைமைத்துவத்தின் நோக்கமாக 
இருக்கிறது. பாஸ்கா விழாவில் கலகத்தை அடக்கவும், உரோமைய அரசிற்கு இரக்க குணம் உள்ளது என காட்டவும் சில கைதிகளை விடுதலைசெய்வார்கள். (இன்று சிறைச்சாலைகளில் சில கைதிகள் முக்கியமான விழாக்களின் போது விடுதலை பெறுவதைப் போல்). இந்த மரபு பாஸ்கா விழாவில் இருந்ததற்கான சான்றுகள் விவிலியத்தைவிட வேறு சான்றுகளில் இல்லை. இந்த வேளையில் பரபா என்னும் கைதியை சந்திக்கு அழைக்கிறார் மத்தேயு. இந்த பரபா உரோமையருக்கு எதிரான புரட்சியில் கைது செய்யப்பட்வர். இவரை உரோமையர்கள் கொலைகாரன் என்றார்கள், ஆனால் யூதருக்கு இவர் விடுதலைவீரர். இந்த பரபாவின் பெயரை சில முக்கியமில்லாத ஆனால் பழமையான பாடங்கள் 'இயேசு பரபா' (Ἰησοῦν τὸν Βαραββᾶν) என்றழைக்கிறது. இது எழுத்துப்பிழை என்று பலர் ஏற்றுக்கொள்கின்றனர். பிலாத்து இந்த பரபாவையா அல்லது கிறிஸ்துவாகிய இயேசுவையா (Ιησοῦν τὸν λεγόμενον χριστόν; ) விடுதலை செய்ய வேண்டும் என மக்களைக் கேட்கிறான். மத்தேயு, பிலாத்துவிற்கு யூத தலைவர்களின் சதி தெரிந்திருந்தது என்று சொல்கிறார். இதே வேளையில் பிலாத்து தன் மனைவியாலும் எச்சரிக்கப்படுகிறார். அவர் கனவில் கண்டது உண்மையாக இருக்கும். ஏனெனில் கனவு மத்தேயு நற்செய்திப்படி கடவுளின் வெளிப்பாட்டு ஊடகங்களில் ஒன்று. யூத தலைமையின் தூண்டலால் மக்கள் கூட்டம் இயேசுவையல்ல, பரபாவை விடுதலை செய்யக்கேட்கிறது. இந்த மக்கள் கூட்டம் இயேசுவை எருசலேமிற்குள் வரவேற்ற மக்கள் கூட்டமாக இருக்கவாய்பில்லை. இவர்கள் பரபாவின் ஆதரவாளர்களாக இருக்கலாம், ஏனெனில் புரட்சியாளர்கள் அக்காலத்தில் வீரர்களாக கருதப்பட்டார்கள் அல்லது இந்த கூட்டம் யூத தலைமையால் உருவாக்கப்பட்டதாக இருக்கலாம். அதேவேளை இந்த கூட்டம் இயேசுவிற்கு சிலுவை மரணம் (σταυρωθήτω) கேட்கிறது. யூத தலைமையின் விருப்பம் மக்கள் கூட்டத்தின் வாயிலாக முன்வைக்கப்படுகிறது
உரோமைய வழக்கப்படி ஒரு காரியத்தில் தனக்கு பங்கில்லையென்றால் கைகளை கழுவிவிடுவது ஒரு அடையாளம். அதனையே பிலாத்து செய்கிறான். இவன் நோக்கம், இயேசுவின் தண்டனையில் தனக்கு பங்கில்லை என காட்டுவதும், அதேவேளை கலகத்திற்கும் தான் காரணமாக இருக்கக்கூடாது என்பதும் ஆகும். மத்தேயுவின் நோக்கப்படி இந்த அந்நியன் அல்ல மாறாக இயேசுவின் மரணத்திற்கு யூத தலைமையே காரணம் என்பதை காட்ட்படுகிறது. 'இந்த இரத்தப்பழியில் என்க்கு பங்கில்லை நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்' (ἀθῷός εἰμι ἀπὸ τοῦ αἵματος  τούτου· ὑμεῖς ὄψεσθε.) என்பது இந்த சிந்தனையை வலுப்படுத்துகிறது. மத்தேயு பாவிக்கும் இந்த வரிகள் மிகவும் கடுமையானவை. பரபா விடுதலையாக ஆண்டவர் மரணிக்க கையளிக்கப்படுகிறார். மெசியாவையே தண்டிக்க அவர் மக்கள் தமது அறியாமையால் உந்தப்படுகிறார்கள். மத்தேயு உரோமையரின் பங்கை குறைத்தாலும், வரலாற்றில் உரோமையர் கலகத்தை அடக்க தாங்கள் பிடித்த நாட்டு தலைவர்கள், வீரர்களுக்கு கடுமையான மற்றும் அநாகரிகமான பல தண்டனைகளை கொடுத்ததை வரலாறு காட்டுகின்றது

எதிரி படைகளின் பிடியில் மண்ணின் அரசர் (வவ.27-31)

பிலாத்து கைகழுவினாலும், அவன் தண்டனையை உரோமைய இராணுவமே மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. படைவீரர்கள் இயேசுவிற்கு செய்யும் சித்திரவதைகள் சாதாரணமாக உரோமைய இராணுவம் தாங்கள் பிடிக்கும் அரசர்களுக்கு செய்தவை. இந்த வரிகளின்; மூலம் ஆண்டவரின் கொலையில் உரோமையருக்கும் முக்கியமான பங்கு இருந்தது என்பதையும், அவர்கள் யூதர்களின் அரசரை கொலை செய்வததை விரும்பினார்கள் என்பதும் புலப்படுகிறது. இயேசுவின் சித்திரவதையில் அனைத்து படைகளும் பங்கெடுத்தன என்பதை மத்தேயு காட்டுகிறார் (ὅλην τὴν σπεῖραν). இயேசுவின் ஆடைகள் கழையப்படுகின்றன. இயேசு கலிலேயராக சாதாரண ஆடையத்தான் உடுத்தியிருந்தார் ஆனால் அவர் ஆடைகள் என்பது அவருடைய மெசியாத்துவத்தைக் குறிக்கலாம். அதனைத்தான் இவர்கள் கழைய முயல்கிறார்கள். பின்னர் கருஞ்சிவப்பு தளர் அங்கியை (χλαμύδα κοκκίνην) உடுத்துகிறார்கள். இது உலக அரசர்களின் ஆடையைக் குறிக்கிறது. தலையில் வைக்கப்படும் முள்முடி மற்றம் கையில் உள்ள தடிக் கோல் என்பவை இயேசுவின் மாட்சியை கேவலப்படுத்துகின்றன. 'யூதரின் அரசரே வாழ்க' (χαῖρε  βασιλεῦ τῶν Ἰουδαίων) என்று உரோமை இஸ்ராயேலை அசிங்கப்படுத்துகிறது. (வாழ்க என்று சொல்லி 'சாவுடா' என்பது அக்காலத்திலே மனிதரின் கோர முகத்தை காட்டியிருக்கிறது). இறுதியாக அவரை சிலுவையில் அறைய இழுத்துச் செல்கிறார்கள் (ἀπήγαγον αὐτὸν εἰς τὸ σταυρῶσαι.). ஆக இவர்களின் நோக்கம் ஒன்றாகவே இருக்கிறது. தனது சொந்த மக்களால் அசிங்கப்பட்ட மெசியா அந்நியர்களாலும் அசிங்கப்படுகிறார்

சிலுவை மாட்சி பெறுகிறது (வவ.32-44)

மத்தேயு, இயேசுவின் சிலுவை அறைதல் காட்சியை விளக்கியிருக்கும் விதம், இவர் பல தரவுகளைக் தன்னகத்தே கொண்டிருந்தார் என்பதைக் காட்டுகிறது. சீரேன் ஊர் சீமோன் இயேசுவின் சிலுவையை சுமக்கிறார். இவர் விரும்பி சுமந்தது போல தெரியவில்லை. உரோமையர்கள் தங்கள் பளுவை சுமக்க சாமானிய மக்களை கட்டாயப்படுத்தினர். இதன் காரணத்தினாலும், இயேசு சிலுவையில் அறையப்படும் முன் இறந்துவிடக்கூடாது என்பதாலும் சீமோனை கட்டாயப்படுத்துகின்றனர். கொல்கொதா என்னும் இடத்திற்கு வருகின்றனர். இந்த இடத்தில் அக்காலத்தில் மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டது. இது பழைய எருசலேமிற்கு மிக அருகில் இருந்தது. இந்த இடத்தில்தான் கல்லறை பேராலயம் இன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது. உரோமைய படைவீரர்கள் குடிக்கும் மலிவான இரசத்தை மெசியாவுக்கு கொடுப்பதும் இன்னொரு தண்டனை. அதனை இயேசு ஏற்கவில்லை. சிலுவையில் இயேசுவை அறைந்து அவர் ஆடைகளை பகிர்ந்துகொள்கின்றனர். சிலுவைத்தண்டனை உரோமையர் அல்லாத மற்றும் உரோமைய அரசிற்கு எதிரானவர்களுக்கு வழங்கப்பட்டது. கைதிகளின் உடைமைகளை சீட்டுப்போட்டு வீரர்கள் பங்கிடுவது வழமை (இராணுவம் நமது வடக்கு கிழக்கை கொள்ளையிட்டதுபோல). ஆண்டவரின் தலைக்கு மேல் அவர் குற்றப்பத்திரிகை வைக்கப்பட்டுள்ளது அது இவர் யூதரின் அரசரான இயேசு என்று வாசித்தது. (οὗτός ἐστιν Ἰησοῦς ὁ βασιλεὺς τῶν Ἰουδαίων). இயேசு கள்வர்களின் நடுவில் தொங்குகிறார். மாண்புமிகு மெசியா தாவீதின் வாரிசு சிலுவையில் அதுவும் குற்றவாளிகளின் நடுவில் தொங்குகிறார்
கோவிலை இடித்து கட்டுகிறவர் என்பது இயேசுவின் மேல் சுமத்தப்பட்ட ஒரு குற்றச்சாட்டு அத்தோடு அவரை இவர்கள் இறைமகன் என ஏற்றக்கொள்ள மறுத்தனர். இந்த இரண்டு குற்றச்சாட்டுக்களையும் வைத்து இப்போது அவ்வழி சென்றவர்கள் இயேசுவை ஏளனம் செய்கிறார்கள். இவர்களோடு தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள், மூப்பர்களும் ஏளனம் செய்கிறார்கள். பிறரை விடுவித்த இஸ்ராயேலின் அரசன் சிலுவையில் இருந்து இறங்கட்டும் பின்னர் நாம் நம்புவோம் என்பது அவர்களின் நக்கல், ஆனால் இதற்குள் மத்தேயுவின் நற்செய்தி அடங்கியுள்ளது. இயேசுவை ஏளனம் செய்தவர்கள் இறுதியாக கடவுளையும் ஏளனம் செய்கிறார்கள். இவர்களின் ஏளனம் திருப்பாடல் 22 நினைவுபடுத்துகின்றது. கள்வர்களும் இயேசுவை இகழ்ந்தார்கள். மத்தேயுவில் நல்ல கள்வனைக் காணவில்லை. இந்த கள்வர்களை விடுதலை வீரர்கள் என்றும் சில பாரம்பரியங்கள் கருதுகின்றன

உயிர் மரணிக்கிறது-மரணிக்கும் கடவுள் (வவ.45-56)

இயேசுவின் மரணம் நான்கு நற்செய்தியிலும் முக்கியமான படிப்பினையைக் காட்டுகிறது. ஆதாமின் வழியாக மனித இனத்திற்கு உயிர் கொடுத்த உயிர் மூச்சு அடங்குவதாக காட்டுகிறது. இயேசு நண்பகலில் இருந்து மாலை 3மணி வரை தொங்குகிறார். இந்த நேரத்தில் இருள் காண்படுவது சந்திர கிரகணமாக இருக்க முடியாது ஆனால் இந்த இருள் கடவுளின் துன்பத்தைக் காட்டுகிறது. இயேசு முதல் தடவையாக கடவுளை அப்பா என கூப்பிடாமல் கடவுள் என்கிறார். அரமேயிக்க மொழியில் தன் வேதனையைக் காட்டுகிறார் (ηλι ηλι  λεμα σαβαχθανι;). இது திருப்பாடல் 22,1 நினைவுபடுத்தும்
இதனை புரியாதவர்கள் இந்த சொல்லுடன் எலியாவை தொடர்பு படுத்துகின்றனர். மீண்டும் இரக்கம் காட்ட முனைவது போல திராட்சை இரசம் கொடுக்கப்பட, ஆனால் இயேசு அதனை பெறாமல் உயிர் விடுகிறார். உயிர் உயிரை விட்டது. கத்தி உயிரை விட்டார் என்பதன் வாயிலாக இயேசு உண்மையாகவே உயிர் விட்டார் என்பது புலப்படுகிறது. 51வது வரி காட்டும் நிகழ்வுகள் இயேசு கடவுள் என்பதை காட்டுகின்றன. திருக்கோவில் திரைச்சீலை கிழிதல், நில நடுக்கம், பறைகள் பிளத்தல், கல்லறைகள் திறத்தல், உடல்களின் உயிர்ப்பு போன்றவை அடையாளமான நிகழ்வுகள். இந்த உயிர்தவர்கள் பின்னர் எருசலேம் சென்றார்கள் என்றும் மத்தேயு சொல்கிறார். இவை இறுதி நாட்களின் நிகழ்வுகளை காட்டுகின்றன. இயேசுவின் மரணத்தோடு இறுதிக்காலம் தொடங்கிவிட்டது என்பது போல இருக்கிறது. இதனைக் கண்ட நூற்றுவத் தலைவரும் அவர் வீரர்களும் விசுவாசப் பிரமாணம் செய்கின்றனர். இவர் உண்மையாகவே இறைமகன் (ἀληθῶς  θεοῦ υἱὸς ἦν οὗτος.) என்பதுதான் மத்தேயுவின் விசுவாசப் பிரமாணம், இதனை உரோமையர்களே செய்கிறார்கள். ஆண்கள் சீடர்கள் ஓடினாலும் இயேசுவின் பெண் சீடர்கள் ஓடவில்லை தொலைவிலாவது இயேசுவை பின்பற்றுகிறார்கள், அவர்களில் மகதலா மரியா, யாக்கோபு மற்றும் யோசேப்பின் தாய் மரியா, செபதேயுவின் மனைவி போன்றோர் அடங்குவர். இவ்வாறு மத்தேயு பெண்களுக்கு உயர்ந்த இடத்தைக் கொடுக்கிறார். இது ஆரம்ப கால திருச்சபையில் பெண்களின் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது

கீழுலகில் கடவுள் (வவ.57-61)

கல்லறைகள் யூதர்களுக்கு தீட்டான இடம், இங்கே தூயவர் அடக்கப்படுகிறார். அரிமத்தியா யோசேப்பை செல்வர் எனவும் இயேசுவின் சீடர் எனவும் மத்தேயு காட்டுகிறார். வழமையாக மரியாதையான அடக்கம் சிலுவையில் அறையப்பட்டவர்க்கு கொடுக்கப்படுவதில்லை. இருப்பினும் பிலாத்து அரிமத்தியாவிற்கு இயேசுவின் உடலைக் கொடுக்கிறான். யூத முறைப்படி இயேசுவின் உடல் சுத்தப்படுகிறது. அத்தோடு அவர் புதிய கல்லறையில் அடக்கப்படுகிறார். இந்த இடத்தில் பணக்கார யூதர்கள் கல்லறைக் குகைகளை தமக்கென்று கொண்டிருந்தனர். இதிலிருந்தே இவர் பணக்காரர் என்பது புலப்படுகிறது. கல்லறைகளில் உடல்களை வைத்து அது எடுக்கப்படாமல் இருக்க பெரும் கற்களை வாயிலில் வைத்தனர். அதே வேளை இயேசுவின் பெண் சீடர்களான மகதலா மரியா மற்றும் வேறு மரியா வெளியில் இருக்கின்றனர். இங்கேயும் பெண்களின் முக்கியத்துவம் காட்டப்படுகிறது. அதாவது இயேசுவின் உடல் உண்மையாக அடக்கப்பட்டது என சொல்கிறார் மத்தேயு. இயேசுவின் தாயை பற்றி மத்தேயு சொல்லாமல் விடுகிறார்

ஆணவத்தின் பலவீனம் (வவ.62-66)

இயேசுவிற்கு தாங்கள் விரும்பிய அனைத்தையும் செய்தும் யூத தலைமை பயம் கொள்கிறது. ஏன் இந்த பயம். பிற்காலத்தில், இயேசுவுடைய உடல் திருடப்பட்டது என்ற வாதத்தை சிலர் பரப்பினர், இந்த குற்றச்சாட்டை மறுக்க இந்த வரிகளை மத்;தேயு பாவிக்கிறார். யூத தலைமை பிலாத்துவிடம் சென்று அவனை 'ஆண்டவரே' என்று சொல்லி (κύριε), இயேசுவை எத்தன் என்று சொல்கிறார்கள் (ἐκεῖνος ὁ πλάνος). இந்த வரிகளின் மூலமாக யூத தலைமையின் மீதான மத்தேயுவின் கோபம் நன்கு தெரிகிறது. யூத தலைமை இயேசுவின் உயிர்ப்பு வார்த்தைகளை நினைத்து பயம் கொள்கிறது. மூன்றாம் நாள் என்பதும் ஒரு அடையாள இலக்கம். இவர்கள் இயேசுவின் சீடர்கள் அவர் உடலைத் திருடி பின்னர் அவர் உயிர் பெற்றார் என்பார்கள் என அச்சம் கொள்கின்றனர். இதற்கான வாய்;ப்பு இருந்திருக்காது. ஏனெனில் அவர் உயிரோடு 
இருந்த போதே அவரைப் பிரிந்து ஓடியவர்கள் இறந்த அவர் உடலை எடுக்க துணியமாட்டார்கள். இவர்களின் கோரிக்கையை பிலாத்து நிராகரிக்க, யூத தலைவர்கள் தங்கள் வீரர்களைக் கொண்டே கல்லறையை கருத்தாய் காவல்; செய்து முத்திரையும் இடுகிறது. அதாவது அவர்கள் இயேசுவின் உடல் திருடப்படாததற்கு சாட்சிகள். இவ்வாறு பின்நாளில் வந்த திருட்டு குற்றச்சாட்டு போலியானது என்கிறார் மத்தேயு

இயேசுவின் பாடுகள், மரணம் மற்றும் அடக்கம் 
இந்த துன்புறும் ஆண்டவரின் அன்பின் அடையாளம்.
இதன் ஆழத்தை எத்தனை யுகங்கள் கடந்தாலும் புரிந்து கொள்ள முடியாது
இந்த மெசியா துன்புற்று இறந்து அடக்கம் செய்யப்படும் மெசியா,
ஆனால் இது அவர் முடிவல்ல, தொடக்கம்

அன்பு ஆண்டவரே உமது தியாகங்களை 
புரிய நல்ல உள்ளத்தை தாரும். ஆமென்.

மி. ஜெகன்குமார் அமதி
கற்கிடந்த குளம், மன்னார்,
தூய சூசையப்பர் ஆலயம், மகாஞானொடுக்கம்,
வியாழன், 6 ஏப்ரல், 2017

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆண்டின் பொதுக்காலம் முப்பத்திநான்காம் வாரம் கிறிஸ்து அரசர் பெருவிழா:  Our Lord Jesus Christ, King of the Universe 24.11.2024

ஆண்டின் பொதுக்காலம் முப்பத்திநான்காம் வாரம்   கிறிஸ்து அரசர் பெருவிழா :  Our Lord Jesus Christ, King of the Universe 24.11.2024 இய...