வியாழன், 6 ஏப்ரல், 2017

Palm Sunday (A): பரிசுத்த வாரம், குருத்தோலை ஞாயிறு (அ) 09,04,2017



பரிசுத்த வாரம், குருத்தோலை ஞாயிறு ()
09,04,2017

முதல் வாசகம்: எசாயா 50,4-7
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 21
இரண்டாம் வாசகம்: பிலிப்பியர் 2,6-11
நற்செய்தி: மத்தேயு 26,14-27,66

குருத்தோலை ஞாயிறு:
இன்றோடு தவக்காலம் முடிவடைகிறது அத்தோடு பரிசுத்த வாரம் ஆரம்பமாகின்றது. இன்றைய நாள், அன்று இயேசு மகிமையுடன் எருசலேம் நகரினுள் நுழைந்ததை நினைவூட்டுகின்றது. இயேசு எருசலேமில் நுழைந்த போது அவரைச் சுற்றியிருந்தவர்களும், அவரோடு வந்தவர்களும் ஆர்பரித்து ஆரவாரம் செய்தார்கள். தங்களுடைய கைகளில் ஒலிவ இலைகளை தாங்கி இருந்தார்கள். ஒலிவ இலைகள், மாட்சியையும் வெற்றியையும் குறிக்கின்ற அடையாளங்கள். சாதாரணமாக போரில் வெற்றி பெற்று வருகின்ற அரசர்கள், படைவீரர்கள் மற்றும் தலைவர்களுக்கு இவ்வாறு ஒலிவ இலைகள் கொடுக்கப்பட்டு வரவேற்கப்பட்டார்கள். இயேசுவை வரவேற்றவர்கள் தங்கள் போர்வைகளை பாதையின் மேல் போட்டு இயேசுவிற்கு செங்கம்பழ வரவேற்பு கொடுக்கிறார்கள். இயேசு கழுதைக் குட்டியின் மீது வருகிறார். இவையனைத்தும் அடையாள மொழிகள். இயேசு, போர்த் தலைவர்களைப் போல் வெண் புரவியில் அல்லாமல், சாதுவான கழுதைக் குட்டியின் மீது அமர்ந்து வருவது அவரது அரசின் வித்தியாசமான கொள்கையைக் காட்டுகிறது

எசாயா 50,4-7
4நலிந்தவனை நல்வாக்கால் ஊக்குவிக்கும் அறிவை நான் பெற்றிட, ஆண்டவராகிய என் தலைவர், கற்றோனின் நாவை எனக்கு அளித்துள்ளார்; காலைதோறும் அவர் என்னைத் தட்டி எழுப்புகின்றார்; கற்போர் கேட்பது போல் நானும் செவிகொடுக்கச் செய்கின்றார். 5ஆண்டவராகிய என் தலைவர் என் செவியைத் திறந்துள்ளார்; நான் கிளர்ந்தெழவில்லை; விலகிச் செல்லவுமில்லை. 6அடிப்போர்க்கு என் முதுகையும், தாடியைப் பிடுங்குவோர்க்கு என் தாடையையும் ஒப்புவித்தேன். நிந்தனை செய்வோர்க்கும் காறி உமிழ்வோர்க்கும் என் முகத்தை மறைக்கவில்லை. 7ஆண்டவராகிய என் தலைவர் துணை நிற்கின்றார்; நான் அவமானம் அடையேன்; என் முகத்தைக் கற்பாறை ஆக்கிக் கொண்டேன்; இழிநிலையை நான் அடைவதில்லை என்றறிவேன்.

எசாயா புத்தகத்தின் 49-50 வது அதிகாரம், மீட்பின் விடியல் என்ற பகுதியாக பெயரிடப்பட்டுள்ளது. கடவுளின் ஊழியர், எருசலேமின் மீட்பு, கடவுளின் ஊழியருடைய பாடல், முடிவுறாத அருள் போன்ற மிக அழகான பகுதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இன்றைய பகுதி கடவுளின் ஊழியருடைய மூன்றாவது பாடல் என அறியப்படுகிறது. இந்தப் பாடலின் கதாநாயகர் யார் என்பதில் பல கேள்விகளும் பதில்களும் உள்ளன. சிலர் இவரை பாரசீக மன்னரான சைரசாகவும், அல்லது இறைவாக்கினர் எசாயாவாகவும், அல்லது மெசியாவாகிய மீட்பராகவும் காண்கின்றனர். இன்றைய பகுதி இரண்டாவது எசாயா புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. எசாயா முழு புத்தகத்தையும், நாம் எசாயா என்கின்ற ஒரு ஆசிரியருக்கு கொடுத்தாலும், இந்த புத்தகத்தை பல ஆசிரியர்கள் எழுதியிருக்க வேண்டும் என்றே தோன்றுகின்றது
இந்த இரண்டாவது எசாயா புத்தகம், பல வழிகளில் தனித்துவமாக உள்ளது. இதனை எசாயாவின் மாணவர் ஒருவர், அடிமைத்தன வாழ்விலிருந்துகொண்டு, அல்லது அதற்கு சற்று காலத்திற்குப் பினனர் எழுதியிருக்க வேண்டும் என்றே தெரிகிறது

.4: ஊழியருடைய முக்கியமான ஒரு தகமை இங்கே பாடப்படுகிறது. கடவுளின் சேவகர், தன் மக்களின் பிரச்சனைகளையும், உணர்வுகளையும் கேட்கக்கூடியவராக இருக்க வேண்டும். கேட்டல் ஒருவகை, அதிலும் கற்போர் கேட்கும் விதம் இன்னொரு விதம், அதனை இந்த ஆசிரியர் நன்கு அறிந்திருக்கிறார்
அத்தோடு அவர் தன்னுடைய நல்வாக்கால் நலிந்தவர்களை தூக்கிவிட தெரிந்தவராக இருக்க வேண்டும். எபிரேய விவிலியம் 'தன்னுடைய நாவின் வாக்கால்' என்று சொல்கிறது

.5: இந்த வரி ஆண்டவரின் ஊழியரின் கீழ்ப்படிவைக் காட்டுகிறது. ஆண்டவர் தன் காதுகளை திறந்துள்ளதாகச் சொல்கிறார் (אֲדֹנָ֤י יְהוִה֙ פָּתַֽח־לִ֣י אֹ֔זֶן), இதன் வாயிலாக காதுகள் செவிப்புலனோடு இருந்தாலும் அனைவரும் அனைத்தையும் கேட்பதில்லை என்பது புலப்படுகிறது. இங்கே காதுகளை திறப்பவர் கடவுளாக இருப்பதனால் அனைத்தும் கேட்க்கப்படுகிறது. கிளர்ச்சி செய்தலும், திரும்பிச் செல்லுதலும் கீழ்படிதலுக்கு எதிரானவை, அதனைத்தான் ஆசிரியர் மீள வலியுறுத்துகிறார். கேட்டல் என்பது கீழ்படிவோடு சம்மந்தப்பட்டது. ஆக கேட்டல், கிளர்ந்தெழாமை, திரும்பிச் செல்லாமை போன்றவை நல்லதோர் தலைவனின் பண்பாகின்றன.

.6: அக்கால வன்முறை சமுதாயத்தின் இகழ்ச்சிகள் இந்த வரியில் காட்டப்படுகின்றன. கிறிஸ்தவ விவிலிய ஆய்வாளர்கள் இந்த தண்டனை விளக்கத்தை, ஆண்டவர் இயேசுவின் பாடுகளோடு ஒப்பிட்டுப் பார்க்கின்றனர். ஒரு அரசர் தன் தாடியையோ, தன் உடலையோ, தன்னை சித்திரவதை செய்வோருக்கு கொடுப்பதில்லை, அப்படி செய்தால் அவர் மாண்புள்ள தலைவராக இருக்க முடியாது, ஆனால் இந்த தலைவர் இந்த சித்திரவதைகளை ஆண்டவருக்காக ஏற்றுக்கொள்கின்றார். முகத்தை திறந்து வைத்தல் மற்றும் எச்சில்களை ஏற்றுக்கொள்தலும் போன்றவை அக்கால அரசர்களால் நினைத்தும் பார்க்க முடியாதவை, அதனையும் இந்த ஊழியர் ஏற்றுக்கொள்கிறார் (פָּנַי֙ לֹ֣א הִסְתַּ֔רְתִּי מִכְּלִמּ֖וֹת וָרֹֽק). இங்கே இவர் சந்திக்கின்ற தண்டனைகளும், ஆண்டவர் இயேசுவின் பாடுகளோடு சம்மந்தப்படுத்திப் பார்க்கப்படுகின்றன

.7: இந்த ஊழியத் தலைவர் எப்படி இந்த அவமானங்களைத் தாங்க வல்லமை பெறுகிறார் என்பதற்கு விடை இந்த வரியில் காட்டப்படுகிறது. ஆண்டவர் தனக்கு உதவிசெய்கிறார்| என்கிறது எபிரேய விவிலியம் (וַאדֹנָי יְהוִה֙ יַֽעֲזָר־לִ֔י). இந்த வரியில் அவருடைய ஆழமான விசுவாசமும் தெரிகிறது. முகத்தை கற்பாறை ஆக்கிக் கொள்ளல் என்பது, உணர்வுகளை அடக்கிக்கொள்வதற்கு சமனாகும், (פָנַי כַּֽחַלָּמִ֔ישׁ) இதன் மூலம் ஒருவர் தன்னுடைய அசைவுகளை தானே தீர்மானிக்கும் அதிகாரத்தை பெறுகிறார் என்று சொல்லலாம்

திருப்பாடல் 22
துயர்மிகு புலம்பல்
(பாடகர் தலைவர்க்கு: 'காலைப் பெண்மான்' என்ற மெட்டு; தாவீதின் புகழ்ப்பா)

1என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்? என்னைக் காப்பாற்றாமலும், நான் தேம்பிச் சொல்வதைக் கேளாமலும் ஏன் வெகு தொலையில் இருக்கின்றீர்
2என் கடவுளே, நான் பகலில் மன்றாடுகின்றேன்; நீர் பதில் அளிப்பதில்லை, இரவிலும் மன்றாடுகின்றேன்; எனக்கு அமைதி கிடைப்பதில்லை
3நீரோ தூயவராய் விளங்குகின்றீர்; இஸ்ரயேலின் புகழ்ச்சிக்கு உரியவராய் வீற்றிருக்கின்றீர்
4எங்கள் மூதாதையர் உம்மில் நம்பிக்கை வைத்தனர்; அவர்கள் நம்பியதால் நீர் அவர்களை விடுவித்தீர். 5உம்மை அவர்கள் வேண்டினார்கள்; விடுவிக்கப்பட்டார்கள்; உம்மை அவர்கள் நம்பினார்கள்; ஏமாற்றமடையவில்லை
6நானோ ஒரு புழு, மனிதனில்லை; மானிடரின் நிந்தைக்கு ஆளானேன்; மக்களின் இகழ்ச்சிக்கு உள்ளானேன். 7என்னைப் பார்ப்போர் எல்லாரும் ஏளனம் செய்கின்றனர்; உதட்டைப் பிதுக்கித் தலையசைத்து, 8'ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்தானே! அவர் இவனை மீட்கட்டும்; தாம் அன்பு கூர்ந்த இவனை அவர் விடுவிக்கட்டும்' என்கின்றனர்
9என்னைக் கருப்பையினின்று வெளிக்கொணர்ந்தவர் நீNர் என் தாயிடம் பால்குடிக்கையிலேயே என்னைப் பாதுகாத்தவரும் நீரே
10கருப்பையிலிருந்தே உம்மைச் சார்ந்திருந்தேன்; நான் என் தாயின் வயிற்றில் இருந்தது முதல் என் இறைவன் நீரே
11என்னைவிட்டுத் தொலையில் போய்விடாதேயும்; ஏனெனில், ஆபத்து நெருங்கிவிட்டது; மேலும், உதவி செய்வார் யாருமில்லை
12காளைகள் பல என்னைச் சூழ்ந்து கொண்டுள்ளன் பாசானின் கொழுத்த எருதுகள் என்னை வளைத்துக் கொண்டன
13அவர்கள் என்னை விழுங்கத் தங்கள் வாயை அகலத் திறக்கின்றார்கள்; இரை தேடிச் சீறி முழங்கும் சிங்கம்போல் பாய்கின்றார்கள்
14நான் கொட்டப்பட்ட நீர்போல் ஆனேன்; என் எலும்புகள் எல்லாம் கழன்று போயின் என் இதயம் மெழுகுபோல் ஆயிற்று; என் உள்ளுறுப்புகளின் நடுவே உருகிப் போயிற்று
15என் வலிமை ஓடுபோலக் காய்ந்தது; என் நாவு மேலண்ணத்தோடு ஒட்டிக்கொண்டது; என்னைச் சாவின் புழுதியிலே போட்டுவிட்டீர்
16தீமை செய்வோரின் கூட்டம் என்னை வளைத்துக் கொண்டது; நாய்கள் என அவர்கள் என்னைச் சூழ்ந்து கொண்டார்கள்; என் கைகளையும், கால்களையும் துளைத்தார்கள்
17என் எலும்புகளை எல்லாம் நான் எண்ணிவிடலாம்; அவர்கள் என்னை முறைத்துப் பார்க்கின்றார்கள்
18என் ஆடைகளைத் தங்களிடையே பங்கிட்டுக் கொள்கின்றனர்; என் உடையின்மேல் சீட்டுப் போடுகின்றனர். 19நீரோ ஆண்டவரே! என்னை விட்டுத் தொலைவில் போய்விடாதேயும்; என் வலிமையே! எனக்குத் துணை செய்ய விரைந்து வாரும்
20வாளுக்கு இரையாகாதபடி என் உயிரைக் காத்தருளும்; இந்த நாய்களின் வெறியினின்று என் ஆருயிரைக் காப்பாற்றும்
21இந்தச் சிங்கங்களின் வாயிலிருந்து என்னைக் காப்பாற்றும்; காட்டெருமைகளின் கொம்புகளில் சிக்கியுள்ள என்னைக் காத்தருளும்.
புகழ்ச்சிப் பாடல்

22உமது பெயரை என் சகோதரருக்கு அறிவிப்பேன்; சபை நடுவே உம்மைப் புகழ்ந்து பாடுவேன். 23ஆண்டவருக்கு அஞ்சுவோNர் அவரைப் புகழுங்கள்; யாக்கோபின் மரபினரே, அனைவரும் அவரை மாட்சிமைப்படுத்துங்கள்; இஸ்ரயேல் மரபினரே, அனைவரும் அவரைப் பணியுங்கள்
24ஏனெனில், எளியோரின் சிறுமையை அவர் அற்பமாக எண்ணவில்லை; அதைக் கவனியாமல் இருந்துவிடவில்லை; தமது முகத்தை அவர்களுக்கு மறைக்கவுமில்லை; தம்மை நோக்கி அவர்கள் மன்றாடுகையில் அவர்களுக்குச் செவிசாய்த்தார்
25மாபெரும் சபையில் நான் செலுத்தும் புகழ் உம்மிடமிருந்து எழுவதாக! உமக்கு அஞ்சுவோர் முன்னிலையில் என் பொருத்தனைகளைச் செலுத்துவேன்
26எளியோர் உணவு உண்டு நிறைவு பெறுவர்; ஆண்டவரை நாடுவோர் அவரைப் புகழ்வராக! அவர்கள் இதயம் என்றென்றும் வாழ்வதாக
27பூவுலகின் கடையெல்லைவரை உள்ளோர் அனைவரும் இதை உணர்ந்து ஆண்டவர் பக்கம் திரும்புவர்; பிற இனத்துக் குடும்பத்தார் அனைவரும் அவர் முன்னிலையில் விழுந்து பணிவர்
28ஏனெனில் அரசு ஆண்டவருடையது; பிற இனத்தார்மீதும் அவர் ஆட்சி புரிகின்றார்
29மண்ணின் செல்வர் யாவரும் அவரைப் பணிவர்; புழுதிக்குள் இறங்குவோர் யாவரும் தம் உயிரைக் காத்துக்கொள்ளாதோரும் அவரை வணங்குவர்
30வருங்காலத் தலைமுறையினர் அவரைத் தொழுவர்; இனிவரும் தலைமுறையினருக்கு ஆண்டவரைப்பற்றி அறிவிக்கப்படும்
31அவர்கள் வந்து, அவரது நீதியை அறிவிப்பர்; இனி பிறக்கப்போகும் மக்களுக்கு 'இதை அவரே செய்தார்' என்பர்.

32 வரிகளைக் கொண்ட (முன்னுரை அடங்கலாக) இந்த திருப்பாடல் ஒரு தனி மனித புலம்பல் பாடலாக பார்க்கப்படுகிறது. எபிரேய விவிலியத்தில் இதனுடைய முதலாவது வரி, இப்பாடலின் முன்னுரை போல காணப்படுகிறது. 'பாடகர் தலைவர்க்கு காலைநேர பெண்மான் போல' (לַמְנַצֵּחַ עַל־אַיֶּ֥לֶת) என்னும் வரி இந்தப்பாடலின் மெட்டைக் குறிக்கிறது என்கின்றனர் ஆய்வாளர்கள். அத்தோடு இது தாவீதின் பாடல் அல்லது தாவீதுக்கான பாடல் என்றும் முன்னுரைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பாடலை இரண்டு பிரிவுகளாக பிரித்து, முதலாவது புலம்பல் பாடலாகவும் (வவ2-22), இரண்டாவது புகழ்ச்சிப் பாடலாகவும் (வவ.23-32) நோக்கலாம். இதன் முன்னுரை பிற்கால இணைப்பாகக்கூட இருக்கலாம். பல கிறிஸ்தவ ஆசிரியர்கள் இந்தப் பாடலை இயேசுவின் பாடுகளின் அழுகையோடு ஒப்பிட்டு பார்க்கின்றனர்

.1: ஆசிரியர் கடவுள் தன்னை கைவிட்டுவிட்டதாக பாடலை தொடங்குகின்றார். இது புலம்பல் பாடலுக்கான ஒரு அடையாளம். இதன் எபிரேய வரிகள் (אֵלִ֣י אֵלִי לָמָה עֲזַבְתָּנִי) எலி எலி லமாஹ் அட்வெதானி, இயேசு சிலுவையின் கூறிய வார்த்தைகளை நினைவூட்டுகின்றன (ஏலி ஏலி லமாஹ் சபத்தானி) - என் இறைவா என் இறைவா ஏன் என்னை கைவிட்டீர். இயேசு ஒருவேளை இந்த திருப்பாடலை இறுதியாக நினைத்திருப்பார் என எண்ணத்தோன்றுகிறது

.2: ஆசிரியரின் ஏமாற்றத்தை இந்த வரி காட்டுகின்றது. பகலிலும் இரவிலும் தன்னுடைய செபம் கேட்கப்படுவதில்லை, அதாவது தன்னுடைய செபம் என்றுமே கேட்கப்படுவதில்லை என்ற வாதத்தை முன்வைக்கிறார் ஆசிரியர்

.3: புலம்பலும், ஏமாற்றமும் முதல் வரிகளில் சொல்லப்பட்டாலும், கடவுள் ஏமாற்றாதவர், நம்பிக்கைக்குரியவர் என்ற வாதத்தை இந்த வரி முன்வைக்கிறது

வவ.4-5: இந்த வரிகளில், ஆசிரியர் தன் மூதாதையர்களின் நம்பிக்கையை நினைத்துப் பார்க்கின்றார். முதாதையர்களின் நம்பிக்கை, வேண்டுதல் மற்றும் மன்றாட்டுக்கள் அவர்களின் நம்பிக்கை வாயிலாக நல்ல பலனைத் தந்தது. இந்த ஆசிரியர் தன்னுடைய மன்றாட்டு கேட்கப்படவில்லை என்றாலும், தன் மூதாதையரின் மன்றாட்டு கேட்க்கப்பட்டது என்று சொல்லி, பிழை தன்னுடைய பக்கமே இருக்கிறது என்கிறார். எபிரேய திருப்பாடல் இலக்கியத்தில் புலம்பல் இருந்தாலும், அங்கும் நம்பிக்கை இருக்கிறது என்பதை இந்த வரிகள் காட்டுகின்றன

வவ. 6-8: இந்த வரிகள் ஆசிரியரின் துன்பங்களை காட்டுகின்றன. இவர் தன்னை ஒரு புழுவிற்கு ஒப்பிடுகிறார் (אָנֹכִי תוֹלַעַת). புழு உயிரினங்களுள் மிக அர்ப்பமான பிராணி, அவ்வாறு தன்னிலையும் மற்றவர்களால் மாற்றப்பட்டுள்ளது என்கின்றார் போல. பார்க்கிறவர்கள் ஏளனம் செய்கிறார்கள் என்கின்றார் (כָּל־רֹ֭אַי יַלְעִ֣גוּ לִ֑י). மற்றவர்களின் துன்பத்தில் இன்பம் காணுவதும், மற்றவர்கள் துன்பத்தில் வெற்றி காண்பதும் ஒருவகையான மனநோய் என்பதை நவீன அறிவியல் ஏற்றுக்கொள்கிறது, ஆனால் இந்த நோய் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே மக்களை தாக்கியிருக்கிறது என்பது இந்த வரியில் நன்கு தெரிகிறது. உதட்டை பிதுக்குதல் மற்றும் தலையை அசைத்தல் போன்றவை இப்படியான ஏளனக் குறிகள். அத்தோடு இவர்கள் ஆண்டவரையும் விட்டுவிடவில்லை அவரையும் கிண்டல் செய்கிறார்கள் என்கின்றார். ஆண்டவரிடம் நம்பிக்கை வைத்தால் அவர் விடுவிப்பார் என்ற விசுவாசமும் இங்கு தெரிகிறது

வவ.9-11: இந்த வரிகள் ஆசிரியரின் தனிப்பட்ட விசுவாச அறிக்கை போல வருகிறது. கருப்பையிலிருந்து ஒருவரின் அழைப்பு தொடங்குகிறது என்பது விவிலியம் காட்டும் உண்மைகளில் ஒன்று, அதனை இந்த ஆசிரியர் நமக்கு நினைவூட்டுகின்றார் (כִּי־אַתָּה גֹחִי מִבָּטֶן). இதற்கு இணையாக தாயின் மடியிலிருந்தே தான் காக்கப்பட்டதாக ஒத்த வசனங்கள் அமைக்கப்பட்டுள்ளன (מַבְטִיחִי עַל־שְׁדֵי אִמִּי). 10வது வரி இதே அர்த்தத்தை வேறு சொற்களில் மீள பாடுகின்றது. 11வது வரி ஒரு வேண்டுதலாக அமைந்து, அதன் மூலம் தன்னுடைய பயத்தை வெளிகாட்டுகிறார் ஆசிரியர்

வவ.12-13: இந்த வரிகளில் ஆசிரியர் தன் எதிரிகளை விலங்குகளுடன் ஒப்பிடுகிறார். எருதுகள் சாதுவானதானாலும், பலமானவை அத்தோடு அவை சிங்கங்களையும் தாக்கக்கூடியவை. இந்த எருதுகளுக்கு தன் எதிரிகளை ஒப்பிடுகிறார் (פָּרִים பாரிம்). இந்த எருதுகளை திருப்பி பாசானின் காளைகள் என அர்த்தப்படுத்துகிறார் (אַבִּירֵ֖י בָשָׁן). யோர்தான் நதிக்கு கிழக்கிலே யார்முக் நதியின் வழியிலே காணப்படும் இந்த பாசான் பகுதி கானான் தேசத்தின் மிக வளமான பகுதி, இங்கே மேய்சலில் ஈடுபடும் மாடுகளும் பசுக்களும் கொழுத்து பருத்திருந்தன. இந்த உருவகத்தை முதல் ஏற்பாட்டு இறைவாக்கினர்கள் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கும் புறவினத்தவர்களுக்கும் பாவித்தனர். இந்த திருப்பாடல் ஆசிரியரும் அதனையே இங்கே செய்கிறார். சிங்கங்கள் இஸ்ராயேல் நாட்டில் பிற்காலத்தில் இல்லாமல் போயினும், அவை முற்காலத்தில் அங்கு வாழ்ந்திருக்கின்றன அத்தோடு அவற்றைப் பற்றிய நல்ல அறிவும் அங்கே இருந்திருக்கிறது. சிங்கத்தின் பலம் அதன் கால்களிலும், அதன் தாடைகளிலும் இருக்கின்றன அதனைத்தான் ஆசிரியர் எதிரிகளுக்கு ஒப்பிடுகிறார்

வவ.14-15: எதிரிகளின் பலத்தை வர்ணித்த ஆசிரியர் தன்னுடைய பலவீனத்தை பலமான உருவங்கள் வாயிலாக ஒப்பிடுகிறார்

. கொட்டப்பட்ட நீர்போல் ஆனேன் (כַּמַּיִם נִשְׁפַּכְתִּי֮): கொட்டப்பட்ட நீரை மீளவும் பெறமுடியாது அதனைப் போல் தன்னிலை என்கிறார்.
. எலும்புகள் கழன்றுபோயின (הִתְפָּֽרְדוּ כָּֽל־עַצְמ֫וֹתָי): எலும்புகள் கழன்றால் உடல் இயங்காது அத்தோடு அது தாங்க முடியா துன்பத்தைக் கொடுக்கும்
. இதயம் மெழுகுபோல் உருகிற்று (לִבִּי כַּדּוֹנָג): உருகிய மெழுகு தன் உருவத்தையும் வடிவத்தையும் இழக்கும், அதனால் ஒளிகொடுக்க முடியாது.
. ஓடுபோல் காய்ந்த வலிமை (יָ֘בֵ֤שׁ כַּחֶ֨רֶשׂ כֹּחִ֗י): சில மூல பிரதிகள் இந்த 'வலிமையை' மேல் நாக்கு என்று வாசிக்கின்றன. காய்ந்த வலிமையினாலும், காய்ந்த மேல் நாக்கு ஓட்டினாலும் எந்த பயனுமில்லை என்பதுதான் ஆசிரியரின் புலம்பல்.
. நாக்கு மேல் அண்ணத்துடன் ஒட்டிக்கொண்டது (לְשׁוֹנִי מֻדְבָּ֣ק מַלְקוֹחָ֑י): அசையாத நாக்கினால் உச்சரிக்க முடியாது
. சாவின் புழுதியிலே போடப்பட்டார் (לַעֲפַר־מָ֥וֶת תִּשְׁפְּתֵֽנִי): புழுதி, சாவு மற்றும் அசுத்தத்தைக் குறிக்கும் சாதாரண அடையாளம்

வவ.16-18: இந்த இரண்டு வரிகளும் ஆண்டவர் இயேசுவின் பாடுகளை அப்படியே வர்ணிப்பது போல உள்ளன. ஆசிரியர் தன்னுடைய துன்பமான நிலையை மீளவும் காட்ட முயற்;ச்சிக்கின்றார். தீமை செய்பவர்களை நாய்கள் கூட்டத்திற்கு ஒப்பிடுகிறார் ஆசிரியர் (כִּ֥י סְבָבוּנִי כְּלָ֫בִים). விவிலியம் நாய்களை அசுத்தமான மற்றும் தீமையான விலங்காக வர்ணித்தாலும், புதைபொருள் ஆய்வுகள், நாய்கள் வீட்டுப்பிராணிகளாக பாலஸ்தீனாவிலே வளர்கப்பட்டிருந்ததைக் காட்டுகின்றன. இருப்பினும் நகர்ப்புறங்கள் மற்றும் வீதியோரங்களில் கூட்டமாக திரிந்த கட்டாக்காலி நாய்கள் சில வேளைகளில் மனித உடல்களையும் தின்றன. இது மிகவும் பயங்கரமான காட்சியாக பார்க்கப்படுகிறது. இதனால் நாய் இவருக்கு மிகவும் அருவருப்பான மற்றும் அசிங்கமான விலங்காக பார்க்கப்படுகிறது. தன் கைகளும் கால்களும் துளைக்கப்படுகின்றன என்கிறார், நற்செய்தியாளர்கள் இதனை இயேசுவின் சிலுவை அறைதலுக்கு ஒப்பிடுகின்றனர். தன்னுடைய எலும்புகளை எண்ணிவிடலாம் என்று தன்னுடைய உடலின் மெலிவை வறுமையாக காட்டுகிறார். 18வது வரி நற்செய்தியில் உரோமைய பாடைவீரர்கள் இயேசுவின் உடைகளை பங்கிட்டதை நினைவூட்டுகின்றது (மத் 27,35: மாற் 15,24: லூக் 23,34: யோவா 19,24)

வவ.19-21: இந்த திருப்பாடலின் முதலாவது பிரிவில், இந்த வரிகள் இறுதி வேண்டுதல்களாக அமைகின்றன. ஆண்டவரை தன்னருகில் இருக்கும்படிக் கேட்கிறார், அதாவது ஆண்டவர் தொலைவில் போவது, அடியானுக்கு ஆபத்தானது என்பதை நன்கு உணர்ந்திருக்கிறார். ஆண்டவருக்கு 'தன்னுடைய பலம்' (אֱיָלוּתִ֗י) என்று அழகான பெயரை சூட்டுகிறார். வாளுக்கு இரையாகாத படி தன்னைக் காப்பற்றக் கேட்பது, இந்த பாடலுக்கு இராணுவ சாயம் பூசுவது போல இருக்கிறது. ஏற்கனவே தன் எதிரிகளுக்கு நாய் (כֶּ֗לֶב), சிங்கம் (אַרְיֵה), எருமை (רְאֵם) என்று பெயர் வைத்தவர் அதனை மீண்டும் நினைவூட்டுகிறார்

மேலுள்ள 21(22) வரிகளில் தன்னுடைய புலம்பலை பாடிய ஆசிரியர் இனிவருகின்ற பத்து வரிகளில் கடவுளை புகழந்து பாடுவதற்கு முயற்சி செய்கிறார்

.22: ஆசிரியர், தன் கடவுளின் பெயரை தன்னுடைய சகோதரர்களுக்கு அறிவிப்பதாகச் சொல்கிறார். கடவுளின் பெயர் எனப்படுவது, கடவுளின் மாட்சியையே குறிக்கிறது (אֲסַפְּרָה שִׁמְךָ לְאֶחָי), கடவுளின் பெயரை அறிவிப்பது கடவுளை அறிவிப்பதற்கு சமனாகும். இங்கே சகோதரர்கள் என்போர் இஸ்ராயேல் மக்கள் கூட்டத்தினரையே குறிக்கின்றனர். இந்த சிந்தனையை, இந்த வரியின் இரண்டாம் பாகம், 'சபை' קָהָל என்று வரைவிலக்கணப்படுத்துகின்றது. இந்த சபையும் (கஹால்) இஸ்ராயேல் மக்கள் கூட்டத்தையே குறிக்கிறது. திருச்சபையை ஒரு சபையாக இறையியல் படுத்துவதற்கு இந்த சொல்தான் பின்புலம்

.23: இந்த சபையினர் யாவர் என்று பெயரிடுகின்றார். இஸ்ராயேல் சமூகத்தின் அழகான பெயர்கள் இங்கே வரிசைப்படுத்தப்பட்டுள்ளன:
. ஆண்டவருக்கு அஞ்சுவோர் (יִרְאֵ֤י יְהוָ֨ה).
. யாக்கோபிக் மரபினர் (כָּל־זֶ֣רַע יַעֲקֹ֣ב).
. இஸ்ராயேல் மரபினர் (כָּל־זֶ֥רַע יִשְׂרָאֵֽל). 

வவ.24-25: ஏன் இஸ்ராயேல் சமூகம் கடவுளை புகழ்ந்து பாடவேண்டும் என்பது இந்த வரியில் விளக்கப்படுகிறது. கடவுள் எளியோரை அற்பமானவர்களாக எண்ணாதவர், அவர்களை கவனிப்பவர், அவர்களுக்கு தன் முகத்தை மறைக்காதவர், அத்தோடு அவர்களுக்கு செவிசாய்க்கிறவர். இந்த புகழ்ச்சிகளை எல்லாம் ஆசிரியர் தான் தன்னுடைய மாபெரும் சபையாகிய அதாவது இஸ்ராயேல்
இனத்திடமிருந்தே செய்வதாக சொல்கிறர்

வவ.26-27: இந்த வரிகளில் வருகின்ற எளியோர் மற்றும் ஆண்டவரை நாடுவோர்கள்என்றும் வாழ்வார்கள் என சொல்லப்படுகிறார்கள். யார் இவர்கள், இஸ்ராயேல் மக்களா அல்லது இஸ்ராயேல் மக்கள் அல்லாதவர்களாக என்ற கேள்வி எழுகின்றனது. ஆனால் 27வது வரி, ஆசிரியர் உலகின் அனைத்து மக்களையும் உள்வாங்கி பாடுகிறார் என்பதை தெளிவாக காட்டுவது போல உள்ளது

வவ.28-29: இந்த வரிகள் இந்த கருதுகோளை இன்னும் தெளிவாக்குகின்றது. அரசு ஆண்டவருக்குரியது என்று ஆசிரியர் சொல்வதிலிருந்து (לַיהוָה הַמְּלוּכָה), ஆண்டவருக்கு பிரிவினைவாதம் கிடையாது அத்தோடு அனைவரும் அவர் மக்கள் என்பது புலானகிறது. செல்வர்களாக இருந்தாலும் சரி எதுவும் இல்லாத வறியவர்களாக இருந்தாலும் சரி அவர்களும் ஆண்டவரின் புகழ்ச்சிக்குள்ளும் வழிபாடுகளுக்குள்ளும் உள்வாங்கப்படுகிறார்கள். மண்ணின் செல்வர்களைக் குறிக்க (דִּשְׁנֵי־אֶ֗רֶץ) என்ற சொல் பாவிக்கப்பட்டுள்ளது. இது உணவுண்டு கொழுத்தவர்களைக் குறிக்கும். இவர்களுக்கு எதிர்பதமாக கல்லறைகளில் வாழ்பவர்கள் காட்டப்படுகிறார்கள். இவர்களைக் குறிக்க கோல் யோர்தே அபார் (כָּל־יוֹרְדֵי עָפָר) என்ற பதம் பாவிக்கப்பட்டுள்ளது, இது புழுதிக்குள் இறங்குபவர்களைக் குறிக்கும்

வவ.30-31: இருந்தவர்கள் மற்றும் இருப்பவர்களைப் பற்றி பாடிய ஆசிரியர் இந்த வரிகளில் இனி 
இருக்கப்போகும் எதிர்கால சந்ததியினரைப் பற்றி வசனிக்கிறார். எதிர்கால தலைமுறையினருக்கு ஆண்டவரைப் பற்றி சொல்லப்படும் என்கிறார் ஆசிரியர் (זֶ֥רַע יַֽעַבְדֶ֑נּוּ יְסֻפַּ֖ר לַֽאדֹנָ֣י לַדּֽוֹר׃). இனி பிறக்கப் போகும் தலைமுறையும் (לְעַ֥ם נ֝וֹלָ֗ד), ஆண்டவரின் செயல்களை அறிந்துகொள்ளும் என்கிறார்

பிலிப்பியர் 2,6-11
6கடவுள் வடிவில் விளங்கிய அவர், கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை வலிந்து பற்றிக்கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை. 7ஆனால் தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி, 8சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார். 9எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார். 10ஆகவே இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்; 11தந்தையாம் கடவுளின் மாட்சிக்காக 'இயேசு கிறிஸ்து ஆண்டவர்' என எல்லா நாவுமே அறிக்கையிடும்.

பவுலுடைய மனதிற்கு மிகவும் நெருக்கமாக இருந்த இந்த பிலிப்பிய திருச்சபை சில ஆபத்துக்களை சந்தித்தது, அவற்றில் வளர்ந்து வரும் பிரிவினை வாதம், யூத ஆணவம், தலைவர்களின் மமதை, தாழ்ச்சியைப் பற்றிய தவறான கருத்துக்கள் மற்றும் இயேசுவை பற்றிய சில பிழையான போதனைகள் போன்றவை மிக முக்கியமானதாக அமைந்தது. இதனை சரிப்படுத்த பவுல் இந்த திருமுகத்தை பயன்படுத்துகிறார் எனலாம். பிலிப்பிய சமுதாயம் மகிழ்ச்சியில் வாழவேண்டும் என்றால் அது தாழ்ச்சியில் வாழவேண்டும் என்பதில் பவுல் கவனமாக இருந்தார். யாருடைய தாழ்ச்சியை இவர்களுக்கு முன்னுதாரணமாக காட்டுவது என்ற தேடலில், அவர் இறுதியாக ஆண்டவர் இயேசுவின் தாழ்ச்சியையே இங்கே உதாரணமாக எடுக்கிறார். இந்த பகுதியை, ஆய்வாளர்கள், ஆரம்ப கால திருச்சசபையின் ஒரு வழிபாட்டு பாடலாக இருந்திருக்க வேண்டும் என்று வாதாடுகின்றனர். இதன் வார்த்தைகளை கவனமாக ஆய்வு செய்வதன் வாயிலாக ஆரம்பகால திருச்சபை கிறிஸ்துவைப் பற்றி கொண்டிருந்த நம்பிக்கைகளை காணலாம்.

.6: கிறிஸ்து கடவுள் வடிவில் விளங்கினார் (ὃς ἐν μορφῇ θεοῦ ὑπάρχων). கிறிஸ்து கடவுளின் உருவம் மட்டுமல்ல, அவர் உன்னதமான மனிதர் மட்டுமல்ல, கடவுளின் மகன் மட்டுமல்ல அவற்றிக்கும் மேலாக அவர் உண்மையாக கடவுளாக இருந்தார். அத்தோடு கடவுளாக இருக்கும் நிலையை அவர் வலிந்து பற்றிக்கொண்டிருக்க வேண்டிய தேவையிலும் இருக்கவில்லை. தன் மக்களுக்காக இந்த கடவுள் எதையோ செய்ய முன்வருகிறார். கிரேக்க சிந்தனைக்கு இது மிக வித்தியாசமாக அமையும். கிரேக்க தெய்வங்கள் தங்களுடைய நிலையை தக்கவைக்க போர்களை செய்ததாகவும், புரட்சிகளை செய்ததாகவும் கிரேக்க புராணக் கதைகள் சொல்கின்றன. ஆனால் உண்மைக் கடவுளாக இயேசு தன் மக்களுக்காக தனது கடவுள் தன்மையையும் வேறு விதத்தில் பாவிக்கின்றார் என்று பவுல் சொல்வது அழகாக இருக்கிறது

.7: தம்மையே வெறுமையாக்கினார் அடிமையின் வடிவை ஏற்றார் (ἑαυτὸν ἐκένωσεν μορφὴν δούλου λαβών). தங்களுடைய யூத பிறப்பையும், அல்லது கிறிஸ்தவ அழைப்பையும் பெருமையாக கருதிய பிலிப்பிய சில கிறிஸ்தவர்களுக்கு பவுல் சவுக்கடி கொடுக்கிறார். அடிமையின் வடிவை யாரும் ஏற்க் மாட்டார்கள் ஆனால் இயேசு அதனைத்தான் செய்தார் ஆக கிறிஸ்தவர்களும் தங்கள் ஆண்டவரை பின்பற்ற வேண்டும் என்பதுதான் இங்கே பவுலின் செய்தி. கிறிஸ்து மனித உருவில் தோன்றி மனிதருக்கு ஒப்பானார் என்று பவுல் சொல்வது பல செய்திகளை பின்புலமாகக் கொண்டுள்ளது. கிறிஸ்து ஒரு சாதாரண மனிதர் அல்ல அவர் இந்த சாயலையும், தோற்றத்தையும் விரும்பியே பெறுகிறார் என்ற செய்தியும் இதன் பின்னால் மறைந்துள்ளன.

.8: கிறிஸ்துவின் தாழ்ச்சியின் பலம் இங்கே காட்டப்படுகிறது. கடவுளால் மரணிக்க முடியா? இது ஒரு முக்கியமான கேள்வி. மரணம் அக்காலத்தில் தோல்வியின் அடையாளமாக கருதப்பட்ட வேளையில் கடவுள் மரணத்தை தழுவ முன்வருகிறார் அதுவும் சிலுவை சாவை (θανάτου δὲ σταυροῦ) ஏற்கும் அளவிற்கு முன்வருகிறார். சிலுவை சாவு உரோயைருக்கு மடமை, யூதருக்கு சாபம். உரோமையர்கள் இந்த தண்டனையை சட்டமில்லாதவர்கள், உரோமையர் அல்லாதவர்கள், புரட்ச்சிக்காரர்கள், ஆபத்தான குற்றவாளிகள் என்று தாங்கள் கருதியவர்களுக்கு கொடுத்தனர், அதே வேளை இந்த தண்டனையை பெறுகிறவாகள் கடவுளால் கைவிடப்பட்டவர்கள் மற்றும் சபிக்கப்பட்டவர்கள் என யூதர்கள் கருதினார்கள். இந்த சிந்தனைகள் பலமாக இருக்கின்ற வேளையில்தான், இங்கே கடவுளே முன்வந்து சிலுவை சாவை ஏற்று, இப்படியான சிந்தனைகள் உண்மையல்ல என்பதையும், தாழ்ச்சிதான் உண்மையான பலம் என்பதையும் காட்டுகிறார் (. 21,23: 1கொரிந் 1,8). 

.9: கடவுள் இயேசுவிற்கு செய்த கைமாறை விளக்குகிறார். எனவே கடவுளும் அவரை உயர்த்தினார் என்பது (διὸ καὶ ὁ θεὸς αὐτὸν ὑπερύψωσεν), ஆண்டவர் இயேசுவின் மெசியாத்துவத்தினுள் அவரை கடவுள் உயர்த்தியது ஓர் அங்கம் என புலப்படுகிறது. அத்தோடு இயேசுவினுடைய வருகை, பாடுகள் மற்றும் உயிர்ப்பினுடன் கடவள் இணைந்திருக்கிறார் என பவுல் காட்டுகிறார். இதனால் இயேசுவை மறுதலிப்பவர்கள் கடவுளை மறுதலிப்பவர்கள் ஆகின்றனர்

.10: இந்த வரி மானிட குலம் மற்றும் இறையரசின் மக்கள் கூட்டத்தை நினைவுபடுத்துகின்றது. மூன்று விதமான மக்கள் கூட்டத்தை பற்றி பேசுகிறார் பவுல்.

. மேலுலகோர்- விண்ணவர் (ἐπουράνιος எபுரானியோஸ்): இது பரலோக வாசிகளைக் குறிக்கிறது. இவர்கள் யார் என்பதில் பல கருத்துக்கள் உள்ளன. கிரேக்க சிந்தனையில் இதற்க்குள் கடவுள், வானதூதர்கள், தூயவர்கள் அத்தோடு கதிரவன், சந்திரன் நட்சத்திரங்கள் போன்றவை உள்ளடங்குகின்றன. எபிரேய சிந்தனையில் இதற்க்குள், கடவுள், செரூபீன்கள், செராபீன்கள் போன்றவை உள்ளடங்குகின்றன. பவுல் இந்த இரண்டு சிந்தனைகளையும் உள்ளடக்குகிறார் என எண்ணத்தோன்றுகின்றது. காலத்திற்கு காலம் இந்த வானவர்கள் பற்றிய சிந்தனை மாற்றம் பெற்றுக்கொண்டு வந்துள்ளது

. மண்ணுலகோர்- மண்ணவர் (ἐπίγειος எபிகெய்யோஸ்): விவிலிய மற்றும் கிரேக்க மெய்யிலின் படி இந்த சொல் பூமியில் வாழ்கிறவர்களைக் குறிக்கின்றது. இவர்கள் காணக்கூடிய உடலைக் (σῶμα சோமா-உடல்) கொண்டவர்கள். இவர்கள் பரலோக வாசிகள் அல்லர். இவர்கள் உடலின் உணர்வுகள், ஆசைகள் மற்றும் துன்பங்களுக்கு கட்டுப்பட்டவர்கள். இவர்களுடைய ஞானம் மட்டுப்படுத்தப்பட்டது அது தவறிழைக்கக்கூடியது. கிறிஸ்தவ சிந்தனையை விட, கிரேக்க சிந்தனையின் படி, முக்கியமாக பிளேடோட்வின் சிந்தனைப்படி இவர்கள் எப்போதும் குறைவானவர்கள் என கருதப்பட்டார்கள். ஆனால் கிறிஸ்தவ மெய்யியல் அப்படியான வாதத்தை முன்வைக்கவில்லை.  

. கீழுலகோர் (καταχθόνιος கடாக்தோனியோஸ்): கிறிஸ்தவ கால கிரேக்க சிந்தனை, இவர்களை இறந்து கீழுலகில் அதாவது நரகத்தில் வாழ்கிறவர்கள் என சொல்கிறது. கிறிஸ்தவம் இவர்களை நரகத்தில் வாடுகிறவர்களைக் குறிக்கிறது. இவர்களைப் பற்றி எபிரேய மற்றும் யூத சிந்தனைகள் வித்தியாசமானவை. யூதர்கள் நரகம் என்னும் எண்ணக்கருவை ஆரம்ப காலத்தில் கொண்டிருக்கவில்லை, ஆனால் இறப்பிற்கு பின் மனிதர்கள் சீயோல் என்ற ஆதாளபாதாளத்திற்கு செல்கிறார்கள் என்ற எண்ணம் இவர்களிடம் 
இருந்திருக்கிறது. கிரேக்கருடைய காலத்தில், இந்த யூதர்களின் சிந்தனையில் மாறுதல் ஏற்பட்டுள்ளதை 
இணைத்திருமுறை நூல்களில் காணலாம்
இப்படியான மூவுலக வாசிகளும் இயேசுவின் பெயருக்கு மண்டியிடுவர் என்று சொல்லி, ஆண்டவரை அனைவருக்கும் அதிபதியாக்குகிறார் பவுல்

.11: இந்த வரி மிகவும் இறையியல் ஆழம் கொண்டது. இயேசுவே ஆண்டவர் அத்தோடு அவரை இப்படி சொல்வது தந்தையாகிய கடவுளின் மாட்ச்சிக்காகவே. (πᾶσα γλῶσσα  ἐξομολογήσηται ὅτι κύριος Ἰησοῦς Χριστὸς εἰς δόξαν θεοῦ πατρός.) எல்லா நாவுகளும், அதாவது பேசக்கூடியவர்கள் எல்லோரும் இதனை செய்கிறார்கள். இயேசுவை ஆண்டவர் என்று ஏற்பதும் ஆண்டவரை மாட்சிப்படுத்துவதும் ஒன்றோடோன்று தொடர்புபட்டது. இயேசுவை ஆண்டவர் என அறிக்கையிடாதவர்கள், தந்தையாம் கடவுளை மகிமைபடுத்தாதவர்கள் அதாவது அவவிசுவாசிகள் என்பது பவுல் ஆழமான கருத்து




இயேசுவின் பாடுகள், மரணம் மற்றும் அடக்கம் 
இந்த துன்புறும் ஆண்டவரின் அன்பின் அடையாளம்.
இதன் ஆழத்தை எத்தனை யுகங்கள் கடந்தாலும் புரிந்து கொள்ள முடியாது
இந்த மெசியா துன்புற்று இறந்து அடக்கம் செய்யப்படும் மெசியா,
ஆனால் இது அவர் முடிவல்ல, தொடக்கம்

அன்பு ஆண்டவரே உமது தியாகங்களை 
புரிய நல்ல உள்ளத்தை தாரும். ஆமென்.

மி. ஜெகன்குமார் அமதி
கற்கிடந்த குளம், மன்னார்,
தூய சூசையப்பர் ஆலயம், மகாஞானொடுக்கம்,
வியாழன், 6 ஏப்ரல், 2017

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆண்டின் பொதுக்காலம் பதினொராம் ஞாயிறு (ஆ) 16.06.2024: 11th Sunday in OT 2024 B

ஆண்டின் பொதுக்காலம் பதினொராம் ஞாயிறு ( ஆ ) 16.06.2024 M. Jegankumar Coonghe OMI, Shrine of Our Lady of Good Voyage, Chaddy, Velanai...