பொதுக்காலம் ஏழாம் வாரம் (அ)
19,02,2017
כִּי קָדוֹשׁ אֲנִי יְהוָה אֱלֹהֵיכֶם:
'ஏனெனில் தூயவர் நான், உங்கள் கடவுளாகிய ஆண்டவர்'.
ἔσεσθε οὖν ὑμεῖς τέλειοι ὡς ὁ πατὴρ ὑμῶν ὁ οὐράνιος τέλειός ἐστιν.
'ஆகவே நீங்கள் நிறைவுள்ளவர்களாய் இருங்கள், உங்கள் வானக தந்தை நிறைவுள்ளவராய்
இருப்பதைப் போல'
முதலாம் வாசகம்: லேவியர் 19,1-2.17-18
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 103
இரண்டாம் வாசகம்: 1கொரிந்தியர் 3,16-23
நற்செய்தி: மத்தேயு 5,38-48
லேவியர் 19,1-2.17-18
1ஆண்டவர் மோசேயிடம் கூறியது: 2'நீ இஸ்ரயேல் மக்களிடம் கூறவேண்டியது
தூயோராய் இருங்கள். ஏனெனில் உங்கள் கடவுளும் ஆண்டவருமாகிய நான் தூயவர்!17உன் சகோதரரை உன் உள்ளத்தில் பகைக்காதே! உனக்கடுத்தவர் பாவம் செய்யாதபடி அவரைக் கடிந்து கொள். 18பழிக்குப் பழியென உன் இனத்தார்மேல் காழ்ப்புக் கொள்ளாதே. உன் மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக! நான் ஆண்டவர்!
லேவியர் புத்தகத்தின் பத்தொன்பதாம் அதிகாரத்தின் இந்த வரிகள் அதிகமாக புதிய ஏற்பாட்டில் பாவிக்கப்பட்டுள்ளன. இந்த பத்தொன்பதாம் அதிகாரம் தூய்மை, நீதி போன்ற சட்டங்களைப் பற்றி பேசுகின்றன. இந்த அதிகாரத்திற்கு சற்று முன், பாலியற் குற்றங்கள் (18) என்ற அதிகாரம், அக்கால பாலியல் பற்றிய வரலாற்றை வாசகர்களுக்கு காட்டுகின்றது. இஸ்ராயேல் மகனோ, மகளோ சாதாரண மனித இயல்பால் கட்டுப்பட்டவர்கள் அல்ல, மாறாக அவர்கள் கடவுளின் சாயல்கள் இதனால் அவர்கள் அவரைப்போல தூயவர்களாய் இருக்க கேட்கப்படுகிறார்கள். தூய்மை அல்லது பரிசுத்தம், கடவுளின் முக்கியமான பண்புகளில் ஒன்று. இந்த பண்பு அக்கால கானானியா தெய்வங்களுக்கும் சாட்டப்பட்டாலும், இந்த பரிசுத்தம் இஸ்ராயேலின் கடவுளை தனித்துவமானவராகவும், அனைத்திற்கும் மேலானவராகவும் காட்டியது. மற்றைய கடவுள்கள் அனைத்தும், வெறும் மாயைகளும், புராணங்களும் என்பதைக் காட்ட விவிலிய ஆசிரியர்கள் இந்த பரிசுத்தத்தை முக்கியமான ஒரு கருப்பொருளாகக் காட்டினர். இஸ்ராயேலின் இந்த பரிசுத்த தன்மை, குருக்களை மட்டுமன்றி, அனைத்து இஸ்ராயேலரையும், அவர்கள் உடமைகளையும் அத்தோடு ஆடு மாடு மற்றும் விலங்குகள் அனைத்தும் தூய்மையானதாக இருக்க அழைப்பு விடுத்தது. அல்லது இஸ்ராயேலின் கடவுளைப் போல, இஸ்ராயேலும் தனித்துவமானவர்களாகவும், அனைவருக்கும் முன்னுதாரணமானவர்களாகவும்
இருக்க அழைக்கப்பட்டனர் (✽காண்க வி.ப 19,6)
முதல் ஐந்து நூல்களில் காணப்படுகின்ற பல நூறு சட்டங்கள், மற்றும் கட்டளைகள், இந்த பரிசுத்தமான வாழ்க்கை முறையையே எடுத்துக்காட்டுகின்றன. கடவுளுடைய பரிசுத்தத்திற்கு எதிரான பாவங்கள், கடவுளுக்கு எதிரான பாவங்களாகவே கருதப்பட்டன, இதனால்தான் அந்த பாவங்கள் கடுமையாக தண்டிக்கப்பட்டன. சிலைவழிபாடு, இனமாற்று திருமணம், பரத்தமை போன்ற செயற்பாடுகள் இந்த பரிசுத்தத்திற்கு எதிரான பாவங்களாக கருதப்பட்டன (ஒப்பிடுக 1சாமு 2,12-17). யாரிடம் பரிசுத்தமான வாழ்க்கை எதிர்பார்க்கப்பட்டதோ, அவர்கள் அந்த பரிசுத்தமான வாழ்க்கைக்கு எதிராக பாவம் இழைத்தபோது கடுமையாக தண்டிக்கப்பட்டனர். இறைவாக்கினர்கள், குருக்கள், அரசர்கள், நீதி தலைவர்கள் இந்த குழுவினுள் அடக்கப்பட்டனர்.
(✽மேலும், எனக்கு நீங்கள் குருத்துவ அரசாகவும், தூய மக்களினமாகவும் இருப்பீர்கள். இவ்வார்த்தைகளே நீ இஸ்ரயேல் மக்களிடம் கூற வேண்டியவை' என்றார்.)
வவ. 1-2: இந்த வசனம், கடவுளுக்கும் அவர் மக்களுக்கு வரைவிலக்கணம் கொடுக்கிறது. கடவுள் தூயவர் என்று இறைவாக்கினர்களோ அல்லது கடவுளின் நண்பர் மோசேயோ சொல்லவில்லை, மாறாக இந்த வரியை கடவுள்தாமே தன் சொந்த வாயினால் சொல்கிறார். தூய்மையை, முதல் ஏற்பாடு קָדוֹשׁ காடோஷ் என்றழைக்கிறது. இதன் பொருளாக பரிசுத்தம், உன்னதம், தூய்மை, அபிசேகம் செய்ய்பட்டது, என்பனவற்றைக் கொள்ளலாம். கடவுள் தான் தூயவராக இருப்பதனால், அவரைப்போல அல்லது அவர் மக்கள் என சொல்பவர்கள், தூயவராக இருக்க வேண்டும் என கட்டளையிடுகிறார். இங்கே கட்டளையிடப்படுகிறது, பரிந்துரை செய்யப்படவில்லை என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.
அக்காலத்தில் இஸ்ராயேலை சுற்றி வாழ்ந்த மக்கள் தூய்மையற்றவர்களாக வாழ்ந்திருக்கலாம், அத்தோடு அவர்களில், பாவ வாழ்க்கை இஸ்ராயேலருக்கு பெரும் சவாலாக இருந்திருக்கலாம், அல்லது அவர்கள் தூய்மையான வாழ்க்கை வாழ்ந்திருக்கலாம் அதனைப்போல, தன் மக்களும் வாழ வேண்டும் என்று ஆசிரியர் விரும்பியிருக்கலாம். எது எப்படியெனினும், பரிசுத்தம், இஸ்ராயேல் மக்களுக்கே உரிய ஒரு தனித்துவமான பண்பு.
வ. 17: உன் சகோதரரை உள்ளத்தில் பகைக்காதே என்பது, உன் இனத்தவரை உன்; இதயத்தில் வெறுக்காதே என்று பொருள் படும் (לֹֽא־תִשְׂנָא אֶת־אָחִיךָ בִּלְבָבֶךָ). இங்கே சகோதரர் என்பவர் (אָח அஹ்) ஆண் மட்டுமல்ல, அனைத்து இஸ்ராயேல் மக்களையும் இந்த சூழலியலில் குறிக்கிறது.
இரண்டாவது பகுதி வித்தியாசமாக இருக்கிறது. அதாவது 'உனக்கடுத்திருப்பவர்' என்பவருவம்
இந்த இனத்தாரையே குறிக்கிறது, இவர் மட்டில், மற்றவர் கரிசனையாக இருக்க வேண்டும், இதனால் இவர் பாவம் செய்தால் அதனை திருத்த வேண்டியது ஒருவரின் கடமையாகிறது. 'உனக்கடுத்திருப்பவர்' என்பதை எபிரேய விவிலியம், நண்பர்-உறவினர்-உற்றார் (עָמִית) என்ற பல அழகாக அர்த்தங்களைக் கொடுக்கிறது. இதனால் இஸ்ராயேல் இனத்தில் அனைவரும் உறவினராக இருக்க அழைக்கப்படுகிறார்கள் என்பது தெளிவாகிறது. இந்த அடையாளம், சாதி மற்றும் பிரதேச வாதம் என்பவற்றிற்கெதிரான கடவுள் கட்டளையென எடுக்கலாம்.
வ.18: லேவியர் புத்தகத்தின் மிக மிக முக்கியமான வசனம். இந்த வசனத்தைத்தான் மத்தேயுவில்
இயேசு மூன்று தடவைகள் கோடிட்டு காட்டுவார் (ஒப்பிடுக மத் 5,43: 19,19: 22,39). பழிவாங்குதலும் காழ்ப்புணர்ச்சி கொள்ளலும், மனிதம் மற்றும் சகோதரத்துவத்திற்கும் எதிரான பாவங்கள். இவை செயற்பாட்டில் வரும் போது பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. இந்த ஆபத்தை உணர்ந்தவராகவே, இதனை மனதிலேயே குணப்படுத்த வேண்டும் என்கிறார் ஆண்டவர் அத்தோடு இதனைத்தான் இயேசுவும் மீள புதிய ஏற்பாட்டில் ஆழப்படுத்துவார்.
இந்த கட்டளையின் இரண்டாவது பிரிவு இன்னும் அர்த்தமுள்ளதாய் உள்ளது. எபிரேய விவிலியம் இதனை 'உன்னைப்போல உன் நண்பரையும் அன்பு செய்' என்று காட்டுகிறது. தமிழ் விவிலியம் இதனை 'உனக்கு அடுத்திருப்பவர்' என்று மொழிபெயர்க்கிறது. ரெஅஹ் (רֵעַ) என்ற எபிரேயச் சொல், நண்பன், அயலவன், சகபாடி, உற்றான், உடன் இருப்பான் போன்ற அர்த்தத்தைக் கொடுத்தாலும், அதில் நண்பர் என்ற அர்த்தம் முதன்மையானது. இதிலிருந்து, இஸ்ராயேல் சிந்தனையில் அனைத்து இஸ்ராயேல் உடன்-சகோதரர்களும் நண்பராக இருக்க அழைக்கப்பட்டுள்ளனர் என்பது தெளிவாகிறது. புதிய ஏற்பாட்டில் இதனை இயேசு, இஸ்ராயேலையும் தாண்டி அனைத்து இன மக்களும் நண்பர்களாக இருக்க அழைக்கிறார். இந்த வரியில் அயலவரைக் குறிக்க பல ஒத்த கருத்துச் சொற்கள் பயன்படுத்தப்பட்டு, இஸ்ராயேல் இன ஒற்றுமை ஆழப்படுத்தப்பட்டுள்ளது. இறுதி வசனம் 'நானே ஆண்டவர்' (אֲנִי יְהוָה), என்றுள்ளது இந்த கட்டளைகளுக்கு வலுச்சேர்க்கிறது.
திருப்பாடல் 103
கடவுளின் அன்பு
(தாவீதுக்கு உரியது)
1என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் முழு உளமே! அவரது திருப்பெயரை ஏத்திடு!
2என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே!
3அவர் உன் குற்றங்களையெல்லாம் மன்னிக்கின்றார்; உன் நோய்களையெல்லாம் குணமாக்குகின்றார். 4அவர் உன் உயிரைப் படுகுழியினின்று மீட்கின்றார்; அவர் உனக்குப் பேரன்பையும் இரக்கத்தையும் மணிமுடியாகச் சூட்டுகின்றார்.
5அவர் உன் வாழ்நாளை நலன்களால் நிறைவுறச் செய்கின்றார்; உன் இளமை கழுகின் இளமையெனப் புதிதாய்ப் பொலிவுறும்.
6ஆண்டவரின் செயல்கள் நீதியானவை ஒடுக்கப்பட்டோர் அனைவருக்கும் அவர் உரிமைகளை வழங்குகின்றார்.
7அவர் தம் வழிகளை மோசேக்கு வெளிப்படுத்தினார்; அவர் தம் செயல்களை இஸ்ரயேல் மக்கள் காணும்படி செய்தார்.
8ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்; நீடிய பொறுமையும் பேரன்பும் உள்ளவர்.✠
9அவர் எப்பொழுதும் கடிந்து கொள்பவரல்லர்; என்றென்றும் சினங்கொள்பவரல்லர்.
10அவர் நம் பாவங்களுக்கு ஏற்ப நம்மை நடத்துவதில்லை; நம் குற்றங்களுக்கு ஏற்ப நம்மைத் தண்டிப்பதில்லை.
11அவர் தமக்கு அஞ்சுவோர்க்குக் காட்டும் பேரன்பு மண்ணினின்று விண்ணளவுபோன்று உயர்ந்தது. 12மேற்கினின்று கிழக்கு எத்துணைத் தொலைவிலுள்ளதேர் அத்துணைத் தொலைவிற்கு நம் குற்றங்களை நம்மிடமிருந்து அவர் அகற்றுகின்றார்.
13தந்தை தம் பிள்ளைகள்மீது இரக்கம் காட்டுவதுபோல் ஆண்டவர் தமக்கு அஞ்சுவோர் மீது இரங்குகிறார்.
14அவர் நமது உருவத்தை அறிவார்; நாம் தூசி என்பது அவர் நினைவிலுள்ளது.
15மனிதரின் வாழ்நாள் புல்லைப் போன்றது; வயல்வெளிப் பூவென அவர்கள் மலர்கின்றார்கள். 16அதன்மீது காற்றடித்ததும் அது இல்லாமல் போகின்றது; அது இருந்த இடமே தெரியாமல் போகின்றது.
17ஆண்டவரது பேரன்போ அவருக்கு அஞ்சுவோர்மீது என்றென்றும் இருக்கும்; அவரது நீதியோ அவர்களின் பிள்ளைகளின் பிள்ளைகள்மீதும் இருக்கும்.
18அவருடைய உடன்படிக்கையைக் கடைப்பிடித்து அவரது கட்டளையின்படி நடப்பதில் கருத்தாய் இருப்போர்க்கு அது நிலைக்கும்.
19ஆண்டவர் தமது அரியணையை விண்ணகத்தில் நிலைநிறுத்தியுள்ளார்; அவரது அரசு அனைத்தின்மீதும் பரவியுள்ளது.
20அவர்தம் சொற்கேட்டு நடக்கும் வலிமைமிக்கோரே! ஆண்டவரின் தூதர்களே! அவரைப் போற்றுங்கள்.
21ஆண்டவரின் படைகளே! அவர் திருவுளப்படி நடக்கும் அவர்தம் பணியாளரே! அவரைப் போற்றுங்கள்.
22ஆண்டவரின் ஆட்சித் தலத்தில் வாழும் அனைத்துப் படைப்புகளே! ஆண்டவரைப் போற்றுங்கள்! என்னுயிரே! ஆண்டவரைப் போற்றிடு!
திருப்பாடல் 103, தாவிதின் பாடல் என்று தலைப்பிடப்பட்டுள்ளது, ஆனால் இந்த தலைப்பு பிற்கால விளக்கவுரையின் ஓர் அங்கமாக இருக்கலாம். இந்த திருப்பாடலை நான்காம் புத்தகத்தின் ஒரு அங்கமாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். கடவுளை தந்தை பண்புமிக்க என்றென்றும் அரசாள்கிற தலைவராக காண்கிறார் ஆசிரியர். இருபத்திரண்டு வரிகளைக் கொண்டுள்ள இந்தப் பாடல் எபிரேய புகழ்ச்சிப் பாடல் வகையை சார்ந்தது. ஆசிரியர் தன் சுயத்தை, ஒரு ஆளாக வர்ணித்து அதற்கு கட்டளையிடுவதைப் போல இந்த பாடலை அமைத்தாலும், இந்த கட்டளை ஒவ்வொரு கடவுளின் பிள்ளைக்கும் பொருந்தும் படியாக அமைந்துள்ளது. எபிரேய கவிநடையான திருப்பிக்கூறல் மற்றும் ஒத்த கருத்துச் சொற்களின் பாவனைகள் இந்த பாடலிலும் மீண்டும் மீண்டுமாக வலம் வருகிறது.
வ.1: இந்த முதலாவது வரியில் ஆசிரியர் தன் உயிருக்கு கட்டளையிடுகிறார். உயிரையும் (נֶפֶשׁ), தனது முழு உள்ளத்தையும் (כָל־קְ֝רָבַ֗י) இரண்டாவது ஆளாக பாவித்து கட்டளை கொடுக்கிறார். ஆண்டவரும் அவரது திருப்பெயரும் ஒரே அர்;த்தத்திலே முதல் ஏற்பாட்டில் பாவிக்கப்படுகின்றன.
வ.2: ஆண்டவருடைய கனிவான செயல்களை மறக்கவேண்டாம் என்ற கட்டளை கொடுக்கப்படுகிறது. மறதி மனித குலத்தின் இக்கால சாபமல்ல மாறாக அது அக்காலத்திலும் அது பயங்கரமாக
இருந்துள்ளது என்பதை இது காட்டுகிறது. கனிவான செயல்கள் என்பது (גְּמוּלָיו), ஆண்டவரின் நலன்தரும் செயல்கள் என்ற பொருளைக் கொடுக்கிறது.
வ.3: குற்றங்களையும் நோய்களையும் ஒரே வரியில் இணைத்து இவை இரண்டிற்கும் தொடர்புள்ளது போல காட்டுகிறார். குற்றங்களுக்காகத்தான் நோய்கள் வருகின்றன என்ற ஒரு முதல் ஏற்பாட்டு சிந்தனையை இந்த வரியில் காணலாம். இதனால் மன்னிப்பும் (סָלַח) குணமாக்கலும் (רָפָא) ஆண்டவரின் செயற்பாடாகின்றன.
வ.4: படுகுழி என்பது (שַׁחַת) ஒரு முடிவில்லாத பள்ளத்தை குறிக்கிறது. இதனைப் பற்றி பல தரவுகளை முதல் ஏற்பாட்டில் காணலாம். இந்த பள்ளத்திற்குள் உயிர்கள் செல்கின்றன என்ற நம்பிக்கையையும் இஸ்ராயேல் மக்கள் கொண்டிருந்தனர். பிற்காலத்தில் நரகம் என்ற கருவும்
இதிலிருந்து உருவானதே. இந்த பள்ளத்திற்குள் செல்பவர்கள் வெளியில் வருவதில்லை ஆனால் கடவுள் ஒருவருக்கே இந்த பள்ளத்தின் மீது அதிகாரம் இருக்கிறது என்பதையும்
இஸ்ராயேலர்கள் நம்பினர். சீயோல் (שְׁאוֹל) என்பதும் இந்த பள்ளத்திற்கான இன்னொரு சொல்.
பேரன்பும் இரக்கமும், கடவுள் தரும் மணிமுடியாக வருவது எத்துணை அழகான அடையாளங்கள் (חֶסֶד וְרַחֲמִים). இவை இரண்டும் பணம் கொடுத்தும் வாங்க முடியாத இறையாசீர்கள் என்பதால் இதனை மணி முடியாகக் காண்கின்றார் ஆசிரியர்.
வ.5: வாழ்நாள் நலன்களால் நிறைக்கப்படுகின்ற போது அது வளமானதாகவும் நிம்மதியானதாகவும் மாறுகின்றது. இதனை தரவல்லவர் கடவுளே என்பது ஆசிரியரின் நம்பிக்கை கலந்த அனுபவம். நலன்கள் என்பதற்கு எபிரேய விவிலியம் நல்ல அணிகலன்களால் (בַּטּוֹב עֶדְיֵךְ) என்று சொல்லிடுகிறது. அணிகலன்கள் இங்கே உருவகங்களாக பாவிக்கப்பட்டுள்ளன.
இளமை கழுகின் இளமையாக மாறும். இது கழுகு தன் இறகுகளை புதுபித்து, மீண்டும் மீண்டும் தன் வல்லமையை புதுப்பிக்கும் இயற்கையான செயற்பாட்டைக் குறிக்கிறது.
வ.6: ஆண்டவரின் செயல்கள் என்றும் நீதியானவை, அதற்கு நல்ல உதாரணம் அவர் ஒடுக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் நீதியை வழங்குகின்றார். ஒடுக்கப்பட்டவர்கள் பல முகங்களில் அக்காலத்தில் இருந்திருக்கிறார்கள், இவர்களுக்கு நீதி என்பது எட்டாக்கனியாகவே இருந்திருக்கிறது. பலர் தங்கள் தேவைகளுக்காவே, இவர்களுக்கு உதவி செய்ய முன்வருவர் ஆனால் உண்மையாக
இவர்களுக்கு உரிமையளிப்பவர் கடவுள் ஒருவரே என்பது இங்கே புலப்படுகிறது.
வ.7: ஆண்டவர் மேசேக்கு தன் வழிகளை காட்டினதும், இஸ்ராயேலருக்கு தம் செயல்களை காண்பித்ததும் ஒரே செயற்பாடாக காட்டப்பட்டுள்ளன. இந்த செயற்பாடுகளை என்னவென்று ஆசிரியர் காட்டவில்லை ஆனால் சூழலியலில் அவற்றை மீட்புச்செயல்கள் என எடுக்கலாம்.
வ.8: ஆண்டவரின் சில முக்கிய பண்புகள் விளக்கப்பட்டுள்ளன: இரக்கமும் அருளும் ஆண்டவரின் பண்புகள் (רַחוּם וְחַנּוּן). இதற்கு ஒத்த கருத்துச் சொற்களாக நீடிய பொறுமையும், பேரன்பும் காட்டப்படுகின்றன. நீடிய பொறுமைக்கு, எபிரேய விவிலியம், 'கோபத்தில் மெதுமை' என்ற சொல்லை பயன்படுத்துகின்றது (אֶרֶךְ אַפַּיִם). ஆண்டவர் கோபம் கொள்ளாதவர் என்பது இங்கே காட்டப்படவில்லை, மாறாக அவர் மெதுவாக கோபம் கொள்பவர் என்பதே இங்கே சொல்லப்படுகிறது. பேரன்பு (רַב־חָֽסֶד அதிகமான அன்பு), ஆண்டவருடைய அடையாளம். பின்வரும் வரிகள் இந்த பண்புகளை விளக்குகின்றன:
வ.9: எப்போதும் கடிந்து கொள்வதும், சினம் கொள்வதும் கடவுளுடைய பண்பல்ல என்கிறார் ஆசிரியர். ஆண்டவர், மனிதரின் பாவங்களுக்காக சினம் கொள்வதும் அவர்களை கடிவதும் பல வேளைகளில் விவிலியத்தில் காட்டப்பட்டுள்ளன. இது சிலவேளைகளில் கடவுளின் மென்மையை குறைவாக எடைபோட காரணமாக அமைந்துவிடக்கூடாது என்பதில் ஆசிரியர் கரிசனையாக
இருக்கிறார். ஆண்டவரின் கோபமும், கடிதலும் தேவையான நேரங்களில் நிச்சயமாக இருக்கும் என்பதை ஆசிரியர் மறுக்கவில்லை.
வ.10: நம் பாவங்களும் குற்றங்களும் நியாயப்படுத்தப்பட முடியாதவை. அவை கழுவப்படவேண்டியவை. கடவுள் முன்னிலையில் அனைவரும் பாவிகளாக இருக்கின்ற படியால், யாரும் கடவுள் முன் தங்களை நியாயப்படுத்த முடியாது. நியாயம் என்று சொன்னால் அது, கடவுள் காட்டும் இரக்கமே என்று அழகாக காட்டுகிறார் ஆசிரியர்.
வ.11: இந்த பேரன்பு எந்தளவு பெரியது என்று விவரிக்கின்றார் ஆசிரியர். மண்ணுலகிற்கும் விண்ணுலகிற்கும் இடையிலான உயரம்தான் மிக மிக உயரமான தூரம் என்று அக்கால மக்கள் கருதினர். அவ்வளவு பெரியது கடவுளின் அன்பு என்கிறார் ஆசிரியர் (שָׁמַיִם עַל־הָאָ֑רֶץ). இது கடவுளின் இரக்கத்திற்கான ஒரு செங்குத்து அடையாளம்.
வ.12: இதில் கடவுளின் மன்னிப்பை காட்ட ஒரு கிடைமட்ட அளவு பாவிக்கப்பட்டுள்ளது. கடவுளின் மன்னிப்பு தூரத்தை கணக்கிட முடியாது என்பது இங்கே காட்டப்பட்டுள்ளது. அதாவது நெடுந்தூரத்திற்கு நம் பாவங்களை கடவுள் துரத்தி விடுகிறார் என்பது காட்டப்பட்டுள்ளது. மேற்கிற்கும் கிழக்கிற்கும் இடையிலான கிடைமட்ட தூரம்தான் அக்காலத்தில் அறியப்பட்ட மிக பெரிய தூரம், அவ்வளவிற்கு கடவுள் பாவங்களை துரத்திவிடுகிறார் என்று கடவுளின் இரக்கத்தை விவரிக்கிறார் ஆசிரியர்.
வ.13: இரக்கமுள்ள தந்தை என்பது இஸ்ராயேல் சமுதாயத்தில் தெரிந்திருந்த அழகான அடையாளம். தந்தை (אָב அவ்) என்பவர் செமித்திய குடும்பங்களில் மிக மிக முக்கியமானவர். தமிழ் சமுதாயத்தில் தாயைப் போல, செமித்திய சமுதாயத்தில் தந்தைதான் வீட்டிலும், வெளியிலும் மிக முக்கியமானவர். ஒருவிதத்தில் தந்தை ஒரு குடும்பத்தில் கடவுள் போல கருதப்பட்டார். தந்தையின் பேச்சு மற்றும் அவரின் முடிவுகள்தான் குடும்பத்தின் இறுதி முடிவாக கருதப்பட்டது. இதனால் தந்தை இரக்கம் காட்டும் போது, அந்த இரக்கம் பலமான இரக்கமாக கருதப்பட்டது. இந்த நன்கு தெரிந்த உருவகத்iதை, கடவுளுக்கு ஒப்பிட்டு, கடவுளின் இரக்கம் தமக்கு அஞ்சுவோர் மீது, தந்தையின் இரக்கம் போல இருக்கும் என்கிறார் ஆசிரியர்.
வ.14: மனிதர்களின் அடையாளம் மற்றும் உருவம் என்பது, தூசி (עָפָר அபார்). இந்த நம்பிக்கை தொடக்கநூலில் இருந்து உருவாகிறது. கடவுள் மனிதரை தூசியிலிருந்து படைத்தார், இதனால் அவர்கள் தூசிக்கு திரும்புவர் என்பதும் இஸ்ராயேலரின் நம்பிக்கை. தூசி, பாலஸ்தீனாவிற்கு மிகவும் நெருங்கிய மற்றும் அறியப்பட்ட பொருள். பாலஸ்தீனத்தின் வரட்சியான காலநிலை, இந்த தூசியை மிகவே உருவாக்கியது. காற்றினால் தூக்கியெறியப்படும் இந்த தூசி, எதற்கும் உதவாதது என்பது, அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதனைப்போன்றது மனிதரின் உருவம் என்கிறார், ஆசிரியர்.
வவ.15-16: புல்லும் (חָצִיר), வயல்வெளி பூவும் (צִיץ הַשָּׂדֶה) அழகானதாக இருப்பினும், அவை நிலையில்லாதவை. அவை மலர்கின்ற வேகமும் அவற்றின் உதிர்தலின் வேகமும் இங்கே ஒப்பிடப்படுகின்றன. காற்று என்பது மிகவும பலமான ஒரு பௌதீக சக்தி, இந்த சக்தியின் முன்னால் புல்லும் பூவும் இல்லாமல் போகின்றன. இப்படித்தான் மனித வாழ்க்கை, என்கிறார் ஆசிரியர்.
வ.17: மனிதரின் நிலையாமையை பற்றி பாடிய ஆசிரியர், கடவுளின் அதாவது அவரின் பேரன்பின் நித்தியத்தை விவரிக்கின்றார். ஆண்டவரின் பேரன்பும் (חֶסֶד ஹெசெத்), அத்தோடு அவரின்
இரக்கமும் (צְדָקָה ட்செதெகாஹ்) ஒப்பிடப்படுகின்றன. இந்த இரண்டும் முற்குறிப்பிடப்பட்ட புல் மற்றும் பூவைப்போல இல்லாமல் போகாது மாறாக அவை நித்தியத்திற்கம் நிலைக்கும் என்பது ஆசிரியர் அனுபவ மெய்யறிவு.
வ.18: மேற்குறிப்பிட்ட வரப்பிரசாதங்கள், ஆண்டவரின் கட்டளையை கடைப்பிடித்து அதனை வாழ்வோருடையது என்கிறது இந்த வரி. ஆண்டவரின் உடன்படிக்கை (בְרִית יְהוָה), இஸ்ராயேலருக்கு மிக முக்கியமான ஒரு அனுபவம். இருப்பினும் இந்த உடன்படிக்கை பல வேளைகளில் மீறப்பட்டது. இந்த உடன்படிக்கையும், ஆண்டவரின் கட்டளைகளும் (פְּקוּדִים) தொடர்புபட்டது என்கிறார் ஆசிரியர். ஆண்டவரின் கட்டளைகளை கடைப்பிடிப்போர், அவரின் உடன்படிக்கையை பாதுகாக்கிறார்கள் என்பது ஆசிரியர் படிப்பினை என்பது புலப்படுகிறது.
வ.19: இஸ்ராயேலின் ஆரம்ப கால கடவுள் நம்பிக்கை, அவரை ஒரு விண்ணக அரசராகவும், அவரது அரியணை (כִּסֵּא) விண்ணகத்தில் இருக்கிறதாகவும் கண்டது. இஸ்ராயேலரை சுற்றியிருந்த மக்களும் இப்படியாக தங்கள் தெய்வங்களின் அரியணைகளை கற்பனை செய்தனர். இந்த மக்களின் நம்பிக்கைகள், இஸ்ராயேலின் நம்பிக்கையில் தாக்கம் செலுத்தியதை இங்கே காணலாம். இந்து மக்களும் இப்படியான நம்பிக்கையை கொண்டிருந்தனர் என்பதை இந்து புராண மற்றும் தெய்வக் கதைகளில் காணலாம். இருப்பினும் இஸ்ராயேலரின் நம்பிக்கை, இந்த மக்களின் நம்பிக்கையை அப்படியே ஒத்தது என்று சொல்ல முடியாது, இங்கே அவர்கள் உருவக அணியை மட்டுமே பாவிக்கிறார்கள். விண்ணகத்தை யாரும் பார்த்ததாகவே அல்லது அது மனிதர் அறிவிற்கு உட்பட்டதாகவே சொல்லவில்லை. அத்தோடு கடவுளின் அரசுதான் உண்மையான பலமிக்க அரசு என்பதும் காட்டப்படுகிறது.
வ.20: ஆண்டவரின் சொற்கேட்டு நடக்கிறவர்கள், பலமானவர்கள், அவர்கள் வானதூதர்கள் என்பதையும் ஆசிரியர் காட்டுகிறார். வானதூதர்களைப் (מַלְאָךְ) பற்றிய அறிவு மெது மெதுவாக இஸ்ராயேலின் வரலாற்றில் வளர்ந்தது. கிரேக்க காலத்தின்தான் இந்த அறிவு உச்ச கட்டத்தை அடைந்தது. இந்த வரிகளைக் கொண்டு சிலர் இந்த திருப்பாடலின் வயதையும் கணிக்க முயற்சி செய்யலாம். இந்த வானதூதர்களுக்கு ஆசிரியர் கட்டளை கொடுத்து, கடவுளை போற்றச் சொல்லி கேட்கிறார்.
வ.21: ஆண்டவரின் படைகளுக்கும் கட்டளைகள் கொடுக்கப்படுகிறது. ஆண்டவர் படைகளின் ஆண்டவர் என்பது, முதல் ஏற்பாட்டில் கடவுளுக்கு கொடுக்கப்படும் முக்கியமான ஒரு பெயர் (יְהוָה צְבָאוֹת அதோநாய் ட்செபாஓத்). கடவுளுக்கு படைகள் இருப்பதாகவும் அவர்கள் கடவுளின் கட்டளைகளை நிறைவேற்றும் பணியாளர்களாகவும் நம்பப்பட்டன. இந்த படைகள், வானதூதர்கள், செருபீன்கள், கெருபீன்கள், மற்றும் தூயவர்கள் என்று பல வகைப்படுத்தப்பட்டனர்.
வ.22: ஆண்டவரின் ஆட்சித் தளம் என்பது எங்கே என்று சொல்லப்படவில்லை, இது பூவுலகாக இருக்கலாம். அனைத்து படைப்புக்கள் என்பது உயிருள்ள மற்றும் உயிரற்ற அனைத்தையும் குறிக்கலாம். இறுதியாக, முதலாவது வரியில் சொல்லப்பட்ட அதே வார்த்தை பாவிக்கப்பட்டுள்ளது, 'என்னுயிரே! ஆண்டவரைப் போற்றிடு!'.
1கொரிந்தியர் 3,16-23
16நீங்கள் கடவுளுடைய கோவிலென்றும் கடவுளின் ஆவியார் உங்களில் குடியிருக்கிறார் என்றும் உங்களுக்குத் தெரியாதா? 17ஒருவர் கடவுளின் கோவிலை அழித்தால் கடவுள் அவரை அழித்துவிடுவார். ஏனெனில் கடவுளின் கோவில் தூயது நீங்களே அக்கோவில்.
18எவரும் தம்மைத்தாமே ஏமாற்றிக்கொள்ள வேண்டாம். இவ்வுலகில் தங்களை ஞானிகள் என்று கருதிக் கொள்வோர் தாங்களே மடையராகட்டும். அப்போது அவர்கள் ஞானிகள் ஆவார்கள். 19இவ்வுலக ஞானம் கடவுள்முன் மடமையாய் உள்ளது. ஏனெனில் மறைநூலில் எழுதியுள்ளவாறு, 'ஞானிகளைக் கடவுள் அவர்களது சூழ்ச்சியில் சிக்க வைப்பர்.' 20மேலும் 'ஞானிகளின் எண்ணங்கள் வீணானவை என ஆண்டவர் அறிவார்.' 21எனவே மனிதரைக் குறித்து யாரும் பெருமை பாராட்டலாகாது. பவுல், அப்பொல்லோ, கேபா, ஆகிய அனைவரும் உங்களுக்குரியவர்களே. 22அவ்வாறே உலகம், வாழ்வு, சாவு, நிகழ்காலம், எதிர்காலம் இவை அனைத்தும் உங்களுக்குரியவைகளே. 23ஆனால் நீங்கள் கிறிஸ்துவுக்குரியவர்கள்; கிறிஸ்து கடவுளுக்குரியவர்.
கொரிந்தியர் முதலாம் திருமுகத்தின் மூன்றாம் அதிகாரம், கடவுளின் உடன் உழைப்பாளர்கள், என்ற கருத்தை தாங்கியுள்ளது. தன் உடன் பணியாளர்களான அப்பலோ மற்றும் பேதுரு போன்றவர்களைப் பற்றிய சில தப்பான கருதுகோள்கள், கொரிந்திய திருச்சபையில் பிரிவினைகளை உருவாக்கியது. இந்த பின்புலத்தைக் கொண்டு, இவர்கள் அனைவரும் உடன் உழைப்பாளர்கள், அத்தோடு அவர்களின் பெயர்களில் ஏற்படுத்தப்படும் பிரிவினைகள், திருச்சபையின் மாண்பிற்கு ஏற்றதல்ல என்பது பவுலின் வாதம். தன் உடன் உழைப்பாளர்கள் மட்டுமல்ல அனைத்து உடன் கிறிஸ்தவர்களும் முக்கியமானவர்கள் என்ற வாதத்தை பவுல் மெது மெதுவாக உருவாக்குகிறார். உடன் பணியாளர்கள் கீழ்த்தளம் போன்றவர்கள் எனவும், ஆனால் கட்டடம் என்பது அனைத்து கிறிஸ்தவர்களையும் குறிப்பதாகவும், இந்த கிறிஸ்தவர்கள் கிறிஸ்து எனும் அத்திவாரத்தை முதன்மைப் படுத்த வேண்டும் என்பதே பவுலின் நோக்கம்.
வ.16: பவுலின் அழகான படிப்பினைகளில் இந்த வரி காலத்தை கடந்தும் சுடர்விடுகிறது. கிறிஸ்தவர்கள்தான் கடவுளின் கோவில் (ναὸς θεοῦ), அங்கேதான் கடவுளின் ஆவியார் (πνεῦμα τοῦ θεοῦ) குடிகொள்கிறார் எனவும், புதிய, ஆனால் ஆழமான ஒரு உண்மையை உரைக்கிறார் பவுல். கடவுள் விண்ணுலகில் மட்டுமல்ல மாறாக, கடவுள் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் இருக்கிறார் என்பது இங்கே புலப்படுகிறது. இதனை கேள்வியாக கேட்கிறார் பவுல், அதாவது இந்த உண்மை இவர்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்க வேண்டிய ஒன்று என்று வாதிடுகிறார். இதிலிருந்து, இந்த படிப்பினைகளை தெரிந்துகொள்ளாமல், திருச்சபை பிழையான வியாக்கியானங்களை பற்றி வாதிட்டது என்ற தரவுகளையும் பெறலாம்.
வ.17: கடவுளின் கோவில் புனிதமானது. இவர்களுக்கு தெரிந்த கடவுளின் கோவில், எருசலேம் திருக்கோவில், இது மூன்றுமுறைகளுக்கு மேல் அழிக்கப்பட்டது. அழித்தவர்கள் வரலாற்றில் அழிந்து போனார்கள். கடவுளின் கோவில், கடவுளின் தூய இருப்பைக் காட்டுகிறது. எருசலேம் தேவாலயத்தில் கடவுளின் பிரசன்னத்தையும் அதன் பரிசுத்தத்தையும், இந்த கிறிஸ்தவர்கள் அறிந்திருப்பார்கள். எருசலேம் தேவாலயம் உரோமையரால் அழிந்ததையும் பார்த்திருப்பார்கள். அத்தோடு கிரேக்க உலகில், கோவில்கள் பரிசுத்தமானவை என்பதையும் அனுபவித்திருப்பார்கள். இந்த பின்புலத்தில்தான், இப்போது கோவிலை அதாவது ஒருவர் தன் சொந்த சுயத்தை அழிக்க முன்வரக்கூடாது என்கிறார் பவுல். 'நீங்கள்தான் கடவுளின் திருக்கோவில்' οἵτινές ἐστε ὑμεῖς என்னும் பவுலின் வார்த்தை மிக மிக ஆழமானது. இன்றளவும் இது ஆச்சரியமூட்டுகிறது.
வ.18: தங்களைத் தானே ஞானிகள் என்போர் உண்மையில் மடையர்கள் என்கிறார் பவுல். ஞானம் (σοφία சோபியா) கிரேக்கர்கள் விரும்பித்தேடிய முக்கியமான விழுமியம். தன்னைத்தானே மடையராக்குவோர் எப்படி ஞானியாக முடியும்? இதுதான் பவுலின் ஞானம், அத்தோடு இதுதான் விவிலியத்தின் ஞானம். பவுலின் கருத்துப்படி தன்னைத்தானே ஞானி என்போர், அகந்தை பிடித்தவர்கள் அல்லது அறிவில்லாதவர்கள். மாறாக தன்னை மடையோர் என்போர், உண்மையில் தாழ்ச்சியுள்ளவர்கள், அவர்களின் தாழ்ச்சிதான் ஞானம் என்கிறார். தன்னைத்தானே ஞானி என்பவர் உண்மையில் மடையர் என்கிறார், இது இக்காலத்திலும் அப்படியே பொருந்துகின்றது.
வ.19: இந்த வரியில் பவுல் ஒரு இறைவாக்கை கோடிடுகிறார். இந்த இறைவாக்கு யோபு 5,18 இருந்து எடுக்கப்படுகிறது (✽காண்க யோபு 5,18). கடவுள் மனிதர்களை தன் சூழ்ச்சிகளில் சிக்கவைக்க அவர் மனிதர் கிடையாது, ஆனால் மனிதர்கள் தங்கள் சூழ்ச்சிகளில் சிக்கிக் கொள்கின்றனர், அவர்கள் ஞானம் என்று கருதுவது உண்மையில் மடமையே என்கிறார் ஆசிரியர்.
வ.20: இந்த வரியில் இன்னொரு இறைவாக்கை பவுல் கோடிடுகிறார். இந்த வரி திருப்பாடல் 94,11 இருந்து எடுக்கப்படுகிறது, காண்க (✽தி.பா 94,11). பவுல் இதில் சில மாற்றங்களைச் செய்துள்ளார். எபிரேய விவிலியமும், செப்துவாஜின்தும் இந்த வரியில் 'மனிதரின் எண்ணங்கள்' (מַחְשְׁב֣וֹת אָדָם , διαλογισμοὺς τῶν ἀνθρώπων) என்றே கூறுகின்றன, ஆனால் பவுல் அதனை ஞானிகளின் எண்ணங்கள் என்று மாற்றியிருக்கிறார். ஒருவேளை இவர்களின் ஞானம் வெறும் மனித ஞானம் என கூறுவதற்காக இருக்கலாம்.
(✽ஞானிகளை அவர்தம் சூழ்ச்சியில் சிக்க வைக்கின்றார்; வஞ்சகரின் திட்டங்கள் வீழ்த்தப்படுகின்றன)
(✽✽மானிடரின் எண்ணங்கள் வீணானவை இதனை ஆண்டவர் அறிவார்.)
வவ.21-22: இந்த வரியில் முடிவுரை எழுதுகிறார். இந்த கொரிந்தியர் யாரைப் பற்றி பெருமை பாராட்டினர், அத்தோடு யாரெல்லாம் பிரிவினைக்கு தங்களை அறியாமலே காரணமாக இருந்தனர் என்பது இப்போது புலப்படுகிறது. இவர்கள் பவுல், அப்பலோ, கேபா. இவர்கள் அல்ல, மாறாக இவர்களின் பெயரில், பிரிவினைகள் உண்டாக்கப்பட்டன. இந்த பிரிவினை மனித ஞானம் அது மடமை, அத்தோடு அழிவுக்குரியது என சாடுகிறார் பவுல். பவுல் தன்னுடைய பெயரையும் இணைத்து, அதுவும் பிரிவினைக்கு காரணம் என்றால், பிழையானது என்று சொல்வது, அவரின் உண்மையான விசுவாசத்தைக் காட்டுகிறது. அத்தோடு இவர்களைப் போலவே, உலகம், வாழ்வு, சாவு, நிகழ்காலம் போன்றவையும் இந்த உலகத்துக்குரியது என்கிறார். ஒரு வேளை இந்த கருப்பொருள்களில் கருத்து வேறுபாடுகள் தோன்றியிருக்கலாம்.
வ. கிறிஸ்து என்னும் மறைபொருள் இந்த மனித ஞானத்தை கடந்த, கடவுளின் ஞானம் என்பது காட்டப்படுகிறது. கிறிஸ்துவின் மக்கள் அவருக்குரியவர்கள், அவர் கடவுளுக்குரியவர். இந்த உறவு மேலுள்ளதைப் போல அழியாத உறவு, அதுதான் பவுல் சொல்லும் அழியாத ஞானம்.
மத்தேயு 5,38-48
38'கண்ணுக்குக் கண்', 'பல்லுக்குப் பல்' என்று கூறப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். 39ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; தீமை செய்பவரை எதிர்க்க வேண்டாம். மாறாக, உங்களை வலக் கன்னத்தில் அறைபவருக்கு மறுகன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள். 40ஒருவர் உங்களுக்கு எதிராக வழக்குத் தொடுத்து, உங்கள் அங்கியை எடுத்துக்கொள்ள விரும்பினால் உங்கள் மேலுடையையும் அவர் எடுத்துக் கொள்ள விட்டு விடுங்கள். 41எவராவது உங்களை ஒரு கல் தொலை வரக் கட்டாயப்படுத்தினால் அவரோடு இரு கல் தொலை செல்லுங்கள். 42உங்களிடம் கேட்கிறவருக்குக் கொடுங்கள்; கடன் வாங்க விரும்புகிறவருக்கு முகம் கோணாதீர்கள்.
43''உனக்கு அடுத்திருப்பவரிடம் அன்பு கூர்வாயாக', 'பகைவரிடம் வெறுப்புக் கொள்வாயாக' எனக் கூறியிருப்பதைக் கேட்டிருக்கிறீர்கள். 44ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்.45'இப்படிச் செய்வதால் நீங்கள் உங்கள் விண்ணகத் தந்தையின் மக்கள் ஆவீர்கள். ஏனெனில் அவர் நல்லோர் மேலும் தீயோர் மேலும் தம் கதிரவனை உதித்தெழச் செய்கிறார். நேர்மையுள்ளோர் மேலும் நேர்மையற்றோர் மேலும் மழை பெய்யச் செய்கிறார். 46உங்களிடத்தில் அன்பு செலுத்துவோரிடமே நீங்கள் அன்பு செலுத்துவீர்களானால் உங்களுக்கு என்ன கைம்மாறு கிடைக்கும்? வரி தண்டுவோரும் இவ்வாறு செய்வதில்லையா? 47நீங்கள் உங்கள் சகோதரர் சகோதரிகளுக்கு மட்டும் வாழ்த்துக் கூறுவீர்களானால் நீங்கள் மற்றவருக்கும் மேலாகச் செய்துவிடுவதென்ன? பிற இனத்தவரும் இவ்வாறு செய்வதில்லையா? 48ஆதலால், உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பது போல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள்.
கடந்த வாரத்தின் தொடர்ச்சியாக மத்தேயு நற்செய்தில் ஐந்தாம் அதிகாரத்தின் இறுதி பிரிவுகள் இன்றைய நற்செய்தியாக எடுக்கப்பட்டுள்ளன. இந்த பகுதியில் இரண்டு தலைப்புக்கள் பிரதானமாக வருகின்றன: பழி வாங்குதலின் தீமை, மற்றும் பகைவரிடம் அன்பாயிருக்க வேண்டிய தேவை என்பனவாகும். மேலுள்ள வாசகங்களைப் போலவே இந்த பகுதியும் பரிசுத்தத்தை மையப்படுத்துகின்றன. இயேசு, கடவுளின் உன்மையான பரிசுத்தர் இதனை பலர் வெளிப்படுத்தியுள்ளனர். வானதூதர்கள் (லூக்கா 1,32), தந்தையாகிய கடவுள் (மத் 3,17), இயேசுவுடைய செயற்பாடுகள், அவர் உருமாற்றம் (மத் 17,2), மற்றும் அவரின் உயிர்ப்பு போன்றவையாகும். முதல் ஏற்பாட்டில் கடவுள் பரிசுத்தராக காட்டப்படுவதைப் போல, புதிய ஏற்பாட்டு ஆசிரியர்கள் அதே பரிசுத்தத்தை இயேசுவிற்கு காட்டுகின்றனர், இதன் வாயிலாக அவர்தான் வரவிருந்தவர் என்றும், அவர்தான் கடவுள் என்றும் காட்டுகின்றனர். மத்தேயு நற்செய்தியின் இந்த பகுதிகள் லூக்கா நற்செய்தியில் வேறு இடங்களில் காணப்படுகின்றன (ஒப்பிடுக பழி வாங்குதல்
லூக் 6:29 - 30: பகைவரிடம் அன்பாயிருத்தல் - லூக் 6:27 - 28, 32 - 36).
பழி வாங்குதல்:
முதல் ஏற்பாட்டில் பழி வாங்குதல், ஒரு தீமையான செயற்பாடாக கருதப்படவில்லை. சில வேளைகளில் கடவுள் கூட பாதிக்கப்பட்ட நல்லவர்களுக்காக பழிவாங்குபவராக கருதப்பட்டார். காயின், ஆபோல், ஆபிரகாம் தொடங்கி இறைவாக்குகள் வரை இந்த பழிவாங்குதல் கடவுளின் தண்டனையாக அல்லது நீதியை நிலைநாட்டும் ஒரு செயற்பாடாக கருதப்பட்டன. கடவுள் இஸ்ராயேலரின் பொருட்டு எகிப்திய பாரவோனையும் அவர் மக்களையும் பழிவாங்கி தண்டித்தார் என்று பல காலமாக நம்பப்பட்டு வந்தது. இது நீதியாகவும் கருதப்பட்டது (காண்க வி.பா 15). இருப்பினும் சில வேளைகளில் பழிவாங்குதல்களை இஸ்ராயேல் பெரியவர்கள் எதிர்த்தனர். யாக்கோபின் புதல்வி தீனாவின் பொருட்டு யாக்கோபுவின் புதல்வர்கள், செக்கேமியர்களை பழிவாங்கியபோது, யாக்கோபு அதனை வன்மையாக கண்டித்தார் (ஒப்பிடுக தொ.நூ 34). இந்த சிந்தனைகள் தனி மனித சுய விருப்பங்கள் சார்ந்ததாக இருக்கவில்லை, இருந்த சந்தர்பங்களில் எல்லாம் அந்த பழிவாங்குதல்கள் கடவுளின் தண்டனையாக பார்க்கப்படவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பழிவாங்குதல் பற்றிய சட்டங்கள், நாகரீகம் மற்றும் மனித உரிமைகள் பற்றிய சிந்தனைகள் வளர்ந்திராத அந்த நாட்களில், வன்முறைகள் மனித குலத்தையே அழித்துவிடாமல், மனிதரின் கோபங்களை கட்டுபடுத்த இயற்றப்பட்டன என்றும் சிலர் வாதிடுகின்றனர். இன்றைய சூழலில் இருந்து கொண்டு முதல் ஏற்பாட்டு சட்டங்களை, அதன் பின்புலம் மற்றும் சூழலியல் அறிவின்றி தீர்ப்பிடுவது ஆபத்தாக இருக்கும்.
வ.38: 'கண்ணுக்கு கண், பல்லுக்குப் பல்' (ὀφθαλμὸν ἀντὶ ὀφθαλμοῦ °καὶ ὀδόντα ἀντὶ ὀδόντος.), இந்த வரிகளை மத்தேயு விடுதலைப் பயணம் மற்றும் லேவியர் புத்தகத்திலிருந்து மத்தேயு நினைவூட்டுகிறார் (காண்க ✽வி.ப 21,24: ✽✽ லேவி 24,20). இந்த சட்டங்கள் அதிகளவான தீமைகளில் இருந்து பாதிக்கப்பட்டவர்களையும், பாதிப்பை ஏற்படுத்தியவர்களையும் பாதுகாக்க முதல் ஏற்பாட்டு சூழலியலில் உருவாக்கப்பட்டன. இயேசுவின் காலத்தில் மனித மாண்புகளும், இரக்க குணத்தின் தேவையும் வெகுவாக வளர்ந்திருந்தது. அத்தோடு இயேசு தான் எந்த விதமான பழிவாங்களுக்கும் சார்பானவர் இல்லை என்பதில் உறுதியாக இருந்தார். இங்கே இந்த முதல் ஏற்பாட்டு சட்டங்கை இயேசுவும் நன்கு அறிந்திருந்தது நமக்கு புலப்படுகிறது.
(✽24கண்ணுக்குக் கண்; பல்லுக்குப் பல்; கைக்குக் கை; காலுக்குக் கால்; 25சூட்டுக்குச் சூடு; காயத்துக்கு காயம்; கீறலுக்குக் கீறல் என நீ ஈடுகொடுப்பாய்.)
(✽✽20முறிப்புக்கு முறிப்பு, கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்; இதுபோன்றே காயம் விளைவித்தவருக்கும் செய்யப்படும்.).
வ.39: இந்த வரி மத்தேயு நற்செய்தியிலும், முழு புதிய ஏற்பாட்டிலும் இன்னும் கிறிஸ்தவ நாகரீகத்திலும் இன்றுவரை தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஒரு கன்னத்திற்கு மறு கன்னத்தையும் கொடு, என்ற இயேசுவின் வார்த்தைகளுக்கு பலர், பல விளக்கங்களைக் கொடுக்கிறார்கள். கிறிஸ்தவர்கள் இல்லாதவர்களும் இந்த வரிக்கு சில வித்தியாசமான அர்த்தத்தை கொடுக்க முயல்கிறார்கள். ஆனால் மத்தேயுவின் ஐந்தாவது அதிகாரத்தில், இயேசு வன்முறையை முற்றாக எதிர்க்கும் ஒரு சூழலில் இந்த வரிகளை உதரிர்க்கிறார் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
வ.40: அங்கிக்கு எதிரான வழக்கில் (χιτών), மேலுடைகளையும் (ἱμάτιον) கொடுக்க சொல்கிறார்
இயேசு. கிரேக்க-உரோமைய காலத்தில் அங்கியைவிட, மேலுடை பெறுமதி வாய்ந்ததாக இருந்தது. சாதாரண மக்கள் அங்கியை மட்டுமே அணிந்தனர். மேலுடை என்பது பணக்காரர்களுக்கு மட்டுமே கிட்டியது. மத்தேயுவின் நற்செய்தி காலத்தில் இயேசுவின் இரண்டாம் வருகையை நற்செய்தியாளர்களும், மக்களும் அதிகமாக உடனடியாக எதிர்பார்த்த படியால், அழிந்து போகக் கூடிய ஆடைகளையோ அல்லது மனித நீதிமன்ற செயற்பாடுகளிலோ அதிக கவனம் செலுத்த வேண்டாம் என கேட்கப்படுகிறார்கள்.
வ.41: ஒரு கல் தொலை என்பது, ஒரு மைல் கல் என்று கிரேக்க மூல பாடத்தில் உள்ளது (μίλιον ἕν மிலியோன் என்). உரோமையர்கள் அக்காலத்தில் தாங்கள் பிடித்திருந்த நாடுகளில் கட்டாய வேலைகளை திணித்தார்கள், அவர்களின் சுமைகளை சாதாரண மக்கள் சுமந்தார்கள். இந்த பின்புலத்தில்தான் இந்த வரி வருகிறது. இவர்களோடு சண்டைபோட்டு முக்கியமான செய்தியாகிய மெசியாவின் மீட்பை திசைதிருப்பாமல், அவர்களோடு இரண்டு மைல் கற்கள் தொலை செல்லுமாறு கட்டளை கொடுக்கிறார் இயேசு.
வ.42: கொடுத்தலும் கடன் கொடுத்தலும் மிக முக்கியமான இரக்கச் செயல்களாக உரோமையர் காலத்தில் இருந்தன. இஸ்ராயேல் மக்கள் தங்கள் உடன் சகோதரர்க்கு கடன் கொடுக்கலாகாது என்ற சட்டத்தை பின்பற்றினர். இதனால் கொடுக்கிற பணமோ அல்லது பொருளோ திரும்பி வருவதற்கான உத்தரவாதம் குறைவாகவே இருக்கும். இதனால் கேட்கிறவர்க்கு தங்கள் பணத்தை முகம் கோணாமல் (ἀποστραφῇς) கொடுக்கும் பழக்கம் மிக குறைவானதாகவே
இருந்திருக்கும். இருப்பினும் முகம் கோணாமல் கொடுக்கச் சொல்கிறார் ஆண்டவர் இயேசு.
பகைவரிடம் அன்பாயிருத்தல்:
வ.43: லேவியர் 19,18 ஐ வித்தியாசமாக கையாளுகிறார் இயேசு. இஸ்ராயேல் மக்களுக்கு அடுத்திருக்கிறவர்கள் என்போர், இன்னொரு உடன் இஸ்ராயேலரையே குறித்தது. பிறவினத்தவர்கள் இந்த அடுத்திருப்பவர் அடையாளத்திற்குள் வராதவர்கள். பகைவர்களை வெறுப்பதற்கான காரணத்தையும், உரிமைகளையும் லேவியர் புத்தகம் கொடுத்தது. இது தீமைகளை இஸ்ராயேலர் வெறுப்பதற்கு ஆவன செய்தது. தீயவர்களை தீமையால் அழித்தல் என்ற சித்தாந்தம் இன்றுவரை சில மதங்களில் பின்பற்றப்படுகிறது. இதனை இயேசு மாற்றுகிறார். இயேசு முதல் ஏற்பாட்டு சட்டத்தை மீறுகிறார் அல்லது உடைக்கிறார் என்பதைவிட அவர் அதனை முழுமையாக்கி அதன் ஆன்மாவை தொடுகிறார் என்றே சொல்ல வேண்டும்.
வ.44: முதல் ஏற்பாட்டையும் மீறி, இயேசு புதிய கட்டளையை தன் அதிகாரத்தில் கொடுக்கிறார். இங்கே இயேசு கடவுளாக காட்சிப்படுத்தப்படுகிறார். மலையில் மோசேக்கு கடவுள் கட்டளை கொடுத்ததுபோல் இங்கே இயேசு தன் சீடர்களுக்கு கட்டளை கொடுக்கிறார். 'நான் உங்களுக்கு சொல்கிறேன்' ἐγὼ δὲ λέγω ὑμῖν என்ற வரி இதனைத்தான் குறிக்கிறது.
பகைவருக்கு அன்பு செலுத்துதல் என்ற கட்டளை முதல் ஏற்பாட்டில் வரவில்லை. ஆனால் அதுதான் கடவுளின் விருப்பம், அது முதல் ஏற்பாட்டின் ஆன்மீகம் என்பதை இயேசு காட்டுகிறார். பகைவருக்கு அன்பு, துன்புறுத்துகிறவர்களுக்கு இறை வேண்டுதல், சபிக்கிறவர்களுக்கு ஆசி, வெறுக்கிறவர்களுக்கு நன்மை மற்றும் தூற்றுகிறவர்களுக்கு இறை வேண்டல் என்பது முழுக்க முழுக்க இயேசு ஆண்டவரின் புதிய ஆன்மீகம் அல்லது இஸ்ராயேல் ஆன்மீகத்தின் முழுமை எனலாம். தமிழ் விவிலியத்தில் இந்த 44ம் வசனத்தின் இரண்டாவது பகுதியின் குறுகிய வடிவமே உள்ளது. சில முக்கியமில்லாத பாடங்களில் இந்த முழு வரி காணப்படுகிறது (காண்க (Most MSS Read ([D] L [W] Θ ƒ13 33 𝔐 lat)).
வ.45: பகைவருக்கு அன்பு செய்ய வேண்டியது ஓர் இறையரசுக் கடமை என்பதை ஆண்டவராகிய கடவுளின் செயல்களிலிருந்து உதாரணம் காட்டுகிறார் இயேசு. கதிரவன் நல்லோர் மீதும் தீயோர் மீதும் உதிக்கிறான். மழை நேர்மையாளர் மீதும், நேர்மையற்றோர் மீதும் பொழிகிறது. இதனை செய்பவர் கடவுள், ஆக அவர் மக்கள், நன்மைத்தனத்தில் அவரைப்போல இருக்கவேண்டியது கடமை என உணர்த்தப்படுகிறது.
வ.46: வரிதண்டுபவர்கள் (τελῶναι) அக்கால யூதர்களால் மிகவும் வெறுக்கப்பட்டார்கள். இவர்கள் உரோமைய அரசுக்காக தம் சொந்த மக்களிடம் வரிவசூலித்தனர். அத்தோடு இவர்கள் வரியோடு சேர்த்து தமக்கும் சில இலாபங்களைத் தேடிக்கொண்டனர். இவர்களை இயேசு அவர்களின் பலவீனத்தோடு ஏற்றுக்கொண்டார், லேவி என்னும் திருத்தூதர் இவர்களில் ஒருவர். நற்செய்தியாளர் மத்தேயுதான் இந்த வரிதண்டிய லேவி என்றும் சொல்லப்படுகிறது (காண்க லூக் 5,27.29: மாற் 2,14: மத் 9,9). இவர்கள் கூட தங்கள் நண்பர்களுக்கு நன்மை செய்தனர். சாதாரண, நல்ல யூதருக்கும் வரி தண்டுவோருக்கும் வித்தியாசம் இருக்கவேண்டும். அதனைத்தான் இயேசு முதன்மைப் படுத்துகிறார். இப்படி செய்யாவிட்டால் கடவுளிடம் எந்த கைமாறும் கிடையாது என்பது இயேசுவின் போதனை.
வ.47: இஸ்ராயேல் யூதர்கள் தங்கள் உடன் மக்களை சந்திக்கும் போது வாழ்த்து சொல்லிக்கொள்வார்கள். அந்த வாழ்த்து மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்தும், நம்முடைய வணக்கத்தைப் போல (நமக்கு வணக்கத்தை விட Good Moring and Good Evening தான் பெரிதாக சில வேளைகளில் தெரிகிறன). யூதர்கள் 'கடவுள் ஆசீர்வதிக்கப்படுவாராக' என்று வாழ்த்துவார்கள் (בָּרוּךְ יְהוָֹה பரூக் அதோநாய்). இதில் பல வகை ஆசீர்கள் இருந்தன. இவர்களைப்போல மற்றவர்களும் பலவிதமான வாழ்த்துச் சொற்களை பாவித்தனர். உரோமையர்கள் 'சீசர் வாழ்க', 'நலம் உண்டாகுக' என்ற பல வாழ்த்துச் செய்திகளை பாவித்தனர் (Ave, Vale, Salve). இவையனைத்தையும், யூதர்கள் யூதருக்கும், மற்றவர்கள் அவர்கள் உற்றவருக்கும் மட்டுமே பாவித்தனர். இதனைத்தான் கடக்கச் சொல்கிறார் ஆண்டவர் இயேசு. (மற்றவர்களுக்கு வாழ்த்தையும் வணக்கத்தையும், அவர்களின் தாய் மொழிகளில் சொல்வது, அவர்களுக்கு மரியாதையுடன் அன்பையும் கொடுக்கும் என நினைக்கிறேன்).
வ.48: இது மத்தேயு நற்செய்தியின் மிக மிக முக்கியமான ஒரு வரி. இதன் பின்புலத்தை லேவியர் 19,2 இல் காணலாம் (✽காண்க லேவி. 19,2: ஒப்பிடுக ✽✽இ.ச 18,13: 1யோவான் 3,3). தூய்மை (τέλειος) என்பது நிறைவு, மேன்மை, முழுமை என்ற பல அர்த்தங்களைக் கொடுக்கவல்லது.
இங்கே இயேசு நிறைவை பலவீனங்கள் கடந்த முழுமையான வாழ்வு என்ற அர்தத்திலே பாவிக்கிறார் என்பது போல தோன்றுகிறது.
(✽'நீ இஸ்ரயேல் மக்களிடம் கூறவேண்டியது தூயோராய் இருங்கள். ஏனெனில் உங்கள் கடவுளும் ஆண்டவருமாகிய நான் தூயவர்!)
(✽✽13கடவுளாகிய ஆண்டவருக்கு நீ முற்றிலும் உண்மையாய் இரு.)
(✽✽✽3அவரை எதிர்நோக்கி இருக்கிற அனைவரும் அவர் தூயவராய் இருப்பதுபோல் தம்மையே தூயவராக்க வேண்டும்.)
பரிசுத்தமான வாழ்வு என்பது,
நம்முடைய அனைத்து செயற்பாடுகளிலும் காணப்படவேண்டும்.
பரிசுத்தரை வணங்கிறவர்கள் பரிசுத்தராய்,
இருக்கவேண்டும் என்பது இயற்கையே.
ஆண்டவரின் பரிசுத்தம், பரிசுத்தம் இல்லா
அவர் மக்களால் சிதைக்கப்படலாம்.
அன்பு ஆண்டவரே,
பரிசுத்தததை தேடுபவனாக மட்டுமன்றி,
அதனை நேசித்து வாழ வரம் தாரும். ஆமென்.
மி. ஜெகன் குமார் அமதி
தூய செபஸ்தியார் பேராலயம், மன்னார்.
மகா ஞானொடுக்கம்
வியாழன், 16 பிப்ரவரி, 2017
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக