வியாழன், 23 பிப்ரவரி, 2017

ஆண்டின் பொதுக்காலம் எட்டாம் ஞாயிறு (அ), Eighth Week in Ordinary Times


ஆண்டின் பொதுக்காலம் எட்டாம் ஞாயிறு (அ)
26,02,2017

கவலை வேண்டாம்

முதல் வாசகம்: எசாயா 49,14-15
பதிலுரைப்பாடல்: திருப்பாடல் 61
இரண்டாம் வாசகம்: 1 கொரிந்தியர் 4,1-5
நற்செய்தி: மத்தேயு 6,24-34

எசாயா 49,14-15
14சீயோனோ, 'ஆண்டவர் என்னைக் கைநெகிழ்ந்துவிட்டார்; என் தலைவர் என்னை மறந்து விட்டார்' என்கிறாள். 15பால்குடிக்கும் என் மகவைத் தாய் மறப்பாளோ? கருத்தாங்கினவள் தன் பிள்ளைமீது இரக்கம் காட்டாதிருப்பாளோ? இவர்கள் மறந்திடினும், நான் உன்னை மறக்கவே மாட்டேன். 

எசாயா புத்தகத்தின் நாற்பத்தொன்பதாவது அதிகாரம் அதன் நம்பிக்கை தரும் வரிகளினால் மிகவும் பிரசித்தி பெற்றிருக்கிறது. இந்த பகுதி எருசலேமிற்கான திடப்படுத்தும் பாடல் பகுதி, என வர்ணிக்கப்படுகிறது. இஸ்ராயேல் மற்றும் எருசலேமின் அழிவையும், நம்பிக்கையில்லா நிலையையும் கண்டிருக்கிற மக்களுக்கு ஆற்றுப்படுத்தல் தேவையாக இருந்தது. அடிமைகளாக இருந்த மக்களுக்கும், நாடு திரும்ப மனமில்லாமலிருந்த மக்களுக்கும், எருசலேமின் நேர்முக சிந்தனைகளை தரவேண்டிய கட்டாயத்தில் எசாயா இருக்கிறார். பபிலோனியாவின் மோகங்களும், சற்று வளமான வாழ்வும், மறந்து போகின்ற தாய் மொழி, மற்றும் தாய் நாடு பற்றிய அறிவு ஒருபுறம், தாய் நாடு பற்றிய ஏக்கம், எதிர் காலத்தைப் பற்றிய பயம், பிள்ளைகளைப் பற்றிய அச்சம் இன்னொரு புறம் என்று பபிலோனியாவிலிருந்த இஸ்ராயேலருக்கு பல தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கும். இப்படியான பல கேள்விகளையும் உருவாக்கியிருக்கும். எசாயா புத்தகத்தின் மூன்று பிரிவுகளும், எருசலேமின் வீழ்ச்சிக்கான காரணத்தையும், எருசலேமின் வீழ்;ச்சியை கடவுள் விரும்பவில்லை அத்தோடு எருசலேம் மீண்டும் எழுச்சி பெறும் என்றும் நேர்த்தியாகக் காட்டுகின்றன. 
பாரம்பரியமாக, முழு எசாயா புத்தகத்தையும் இறைவாக்கினர் எசாயா எழுதினார் என்று நம்பப்பட்டது, ஆனால் இன்று இந்த சிந்தனை பல கேள்விகளை சந்திக்கிறது. இறைவாக்கினர் எசாயா அல்ல, அவர் சிந்தனையில் அவர் மாணவர்கள் சிலர் அல்லது வேறு பெயர் தெரியாத அன்பர்கள் இந்த புத்தகத்தை (புத்தகங்களை) எழுதியிருக்கலாம் என வாதாடப்படுகிறது. அவ்வாறு முதலாவது எசாயாவாக அதிகாரங்கள் 1-39, இரண்டாவது எசாயாவாக அதிகாரங்கள் 40-54, மற்றும் மூன்றாவது எசாயாவாக அதிகாரங்கள் 55-66 போன்றவையும் பிரிக்கப்பட்டுள்ளன. நம்முடைய இன்றைய வாசகம், இரண்டாம் எசாயா புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளன. இது பபிலோனிய காலத்தை வரலாற்று பின்னணியாக கொண்டுள்ளதை நினைவிற் கொள்ள வேண்டும். 

வ. 14: எருசலேமின் மீட்புச்செய்தியைப் பற்றி ஆண்டவரின் வாக்குறுதிகளை இறைவாக்கினர் உரைக்கின்றபோது, சீயோன் அதனை நம்பாமல் ஆண்டவரின்-கைவிடுதலைப் பற்றி வியாகுலம் செய்கிறாள். அதனை இந்த வரி காட்டுகிறது. சீயோன் என்பது பழைய எருசலேமை அல்லது தாவீதின் நகரை குறிக்கும் (צִיּוֹן ட்சீயோன்). நமக்கு ஈழத்ததைப் போல, இஸ்ராயேலருக்கு அவர்களின் இதயத்திற்கு மிகவும் நெருக்கமான பெயர். சிலவேளைகளில் இது முழு இஸ்ராயேல் குலத்தையும் குறித்தது. இந்த பகுதியில் இது தென்நாட்டு மக்களான யூதர்களைக் குறிக்கிறது. சீயோன், கடவுள் தன்னை கைவிட்டுவிட்டதாகவும் (עָזַב), மறந்து விட்டதாகவும் (שָׁכַח) குறைசொல்வதாக ஆசிரியர் கோடிடுகிறார். 

வ.15: முந்தின வரி கேள்விக்கு பலமான ஓர் உருவகம் வாயிலாக பதிலளிக்கிறார். இந்த வரியின் எபிரேய வரிகளை தமிழ் விவிலியம் அழகாக மொழிபெயர்த்திருக்கிறது:

הֲתִשְׁכַּח אִשָּׁה עוּלָ֔הּ பெண்-மனைவி தன் பால்குடிக்கும் மகவை மறப்போளோ? 
בֶּן־בִּטְנָהּ גַּם־אֵלֶּה תִשְׁכַּ֔חְנָה தன் வயிற்றின் மகனை இவள் மறப்பாளோ? 
וְאָנֹכִי לֹא אֶשְׁכָּחֵךְ׃ இருப்பினும் நான் மறக்கவே மாட்டேன்.
பால் கொடுக்கும் தாய் தன் மகவை மறக்க மாட்டாள் என்பது அக்காலத்தில் உலகமும் கடவுளும் அறிந்த உண்மை. இதனை கடவுள் தனக்கு உதாரணமாக காண்கிறார், இன்று பால் குடிக்கும் மகவும், பால் கொடுக்கும் தாயும் ஒருவரை ஒருவர் மறந்து கைவிடுவது மனித சுதந்திரம் என்றாகிப்போகிறது. இதனை எசாயா அன்றே அறிந்திருக்கிறார் போல. ஆனால் பெரும்பான்மையான தாயார் இந்த இயற்கை நியதியான மாறாத அன்பிற்கு இன்றும் இலக்கனமாக இருக்கின்றனர். எது எவ்வாறெனிறும் கடவுள் தன் பிள்ளைகளை மறப்பதே இல்லை என்பதே இங்கே மையக் கருத்து. 


திருப்பாடல் 62
கடவுளின் பாதுகாப்பில் நம்பிக்கை
(பாடகர் தலைவர் எதுத்தூனுக்கு தாவீதின் புகழ்ப்பா)
1கடவுளின் செயலுக்காக நான் மௌனமாய்க் காத்திருக்கின்றேன்; எனக்கு மீட்பு கிடைப்பது அவரிடமிருந்தே 
2உண்மையாகவே என் கற்பாறையும் மீட்பும் அவரே என் கோட்டையும் அவரே எனவே நான் சிறிதும் அசைவுறேன். 
3ஒருவரைக் கொல்லவேண்டுமென்று நீங்கள் அனைவரும் எவ்வளவு காலம் வெறியுடன் தாக்குவீர்? நீங்கள் எல்லாரும் இடிந்த மதிலுக்கும் சிதைந்த வேலிக்கும் ஒப்பாவீர். 
4அவர் இருக்கும் உயர்நிலையிலிருந்து அவரைத் தள்ளிவிடத் திட்டமிடுகின்றனர்; பொய் சொல்வதில் இன்பம் காண்கின்றனர்; அவர்களது வாயில் ஆசிமொழி; அவர்களது உள்ளத்திலோ சாபமொழி. (சேலா) 
5நெஞ்சே கடவுளுக்காக மௌனமாய்க் காத்திரு ஏனெனில், நான் எதிர்பார்க்கும் நலன் வருவது அவரிடமிருந்தே 
6உண்மையாகவே, என் கற்பாறையும் மீட்பும் அவரே. எனவே, நான் சிறிதும் அசைவுறேன். 
7என் மீட்பும் மேன்மையும் கடவுளிடமே இருக்கின்றன் என் வலிமைமிகு கற்பாறையும் புகலிடமும் கடவுளே. 
8மக்களே! எக்காலத்திலும் அவரையே நம்புங்கள்; அவர் முன்னிலையில் உங்கள் உள்ளத்தில் உள்ளதைத் திறந்து கொட்டுங்கள்; கடவுளே நமக்கு அடைக்கலம். (சேலா) 
9மெய்யாகவே, மானிடர் நீர்க்குமிழி போன்றவர்; மனிதர் வெறும் மாயை துலாவில் வைத்து நிறுத்தால், அவர்கள் மேலே போகின்றார்கள்; எல்லாரையும் சேர்த்தாலும் நீர்க்குமிழியை விட எடை குறைகின்றார்கள். 
10பிறரைக் கசக்கிப் பிழிவதில் நம்பிக்கை வைக்காதீர்; கொள்ளையடிப்பதில் குறியாய் இராதீர்; செல்வம் பெருகும்போது, உள்ளத்தை அதற்குப் பறிகொடுக்காதீர். 
11'ஆற்றல் கடவுளுக்கே உரியது!' என்று அவர் ஒருமுறை மொழிய, நான் இருமுறை கேட்டேன். 12'என் தலைவரே! உண்மைப் பேரன்பு உமக்கே உரியது!' ஏனெனில், ஒவ்வொரு மனிதருக்கும் அவர்தம் செயல்களுக்குத் தக்க கைம்மாறு நீரே அளிக்கின்றீர்.

இந்த திருப்பாடல் ஞான வகை திருப்பாடல்களைச் சார்ந்தது. இந்த திருப்பாடல் வாயிலாக ஆசிரியர் தன்னுடைய அனுபவத்தை மெய்யறிவாக அடுத்த தலைமுறைக்கு கடத்த முயற்ச்சி செய்கிறார். உலகத்திலே பல பயங்களும் துன்பங்களும் இருக்கின்றன, அதற்கான பல நியாயமான காரணங்களும் இருக்கின்றன. ஆனால் கடவுளை கற்பாறையாகவும், அடித்தளமாகவும் கொண்ட மக்கள் பயப்படவேண்டிய தேவையில்லை என்பது இவரது நம்பிக்கை. உலகில் காணப்படும் பிரச்சனைகளுக்கு கடவுளைவிட்டு எந்த விதமான முடிவுகளையும் காணமுடியாது என்பதுதான் இந்த திருப்பாடலின் முக்கியமான செய்தி. அதிகமான திருப்பாடல்களைப் போல் இந்த திருப்பாடலும், திருப்பிக்கூறல் என்ற எபிரேய கவிநடையை சார்ந்துள்ளது. 

முகவுரை: யார் இந்த எதுத்தான், அவருக்கும் தாவீதுக்கும் என்ன தொடர்பு என்பது தெரியவில்லை. எதுத்தானுக்கு தாவீது இந்த பாடலை வடித்தாரா, அல்லது எதுத்தான் தாவீதுக்கு இதனை எழுதினாரா என்பது தெரியவில்லை. அல்லது இந்த பெயர்கள் பின்நாட்களில் சேர்க்கப்பட்டதா என்பதும் தெளிவில்லை. எதுத்தானைப் பற்றி விவிலியம் இரண்டு தரவுகளைத் தருகிறது. 

அ. இவர் எருசலேம் அரண்மனையின் வாயில் காப்பாளராக அல்லது அவர்களின் தந்தையாக இருந்திருக்கிறார் (காண்க 1குறி 16,38).

ஆ. தாவீதின் இசைக்கலைஞர்களில் ஒருவர் (காண்க 1குறி 16,41-42). இன்னுமாக குறிப்பேடு புத்தகம் இவரை தாவீதின் அரசவையில் பல வேலைகளோடு குறிப்பிடுகிறது. 

வ.1: காத்திருப்பு ஒரு விவிலிய விழுமியம். பலவற்றிக்காக பலர் மௌனமாக காத்திருக்க, ஆசிரியர் தன் ஆன்மா ஆண்டவருக்காக மௌமாக காத்திருப்பதாகக் கூறுகிறார் (דּוּמִיָּה மௌன காத்திருப்பு). இரண்டவது பகுதி அதற்கான காரணத்தையும் சொல்கிறார், அதாவது அவர்தான் தன்னுடைய மீட்பு என்கிறார் (יְשׁוּעָתִֽי யோசுவாதி)

வ.2: ஆண்டவருக்கிருக்கின்ற பல பெயர்களில், கற்பாறை மற்றும் அரண் என்பன மிக முக்கியமானவை. பாலைவன பிரதேசங்களில் மணல் உறுதியற்றது, ஆனால் கற்பாறை மிகவும் உறுதியானது (צוּר ட்சுர்), இதனால் இது கடவுளின் அடையாளமானது. அதேபோல் அரண், யுத்தங்களை அதிகமாக சந்தித்த மக்களுக்கு, மிக தேவையான கட்டமைப்பாக இருந்தது. இதனால் இதுவும் கடவுளின் அடையாளமாகின்றது (מִשְׂגָּב). கடவுள், பாறையாகவும், மீட்பாகவும், மற்றும் அரணாகவும் இருக்கின்ற படியால் தான் அசைக்க முடியாதவர் என்கிறார் ஆசிரியர். 

வ.3: நீங்கள் என்று, தன் எதிரிகளை இரண்டாம் ஆள் பன்மையில் காட்டுகிறார். எந்த அளவிற்கு அவர்கள் ஒரு மனிதரை தாக்குவார்கள் என்று கேள்வியும் கேட்கிறார். இங்கே அவர் குறிப்பிடுகின்ற 'ஆள்' என்ற பதம் (אִישׁ֮ இஷ்), பொதுச்சொல்லாக பயன்பட்டுள்ளது. இது இவரைக்கூட குறிக்கலாம். தாக்கு, என்பதைக் குறிக்க பயன்பட்டுள்ள சொல் (הוּת ஹூத்), முதல் ஏற்பாட்டில் இங்கே மட்டும்தான் ஒரே ஒருமுறை பயன்பட்டுள்ளது. இடிந்த மதிலும் சிநை;த வேலியும் என்ற உருவகம், பல அர்தங்களைக் கொடுக்கிறது. ஒரு பக்கம் இது பகைவர்களின் பலவீனத்தைக் காட்டுகிறது, இன்னொரு பக்கம் இது சரிந்த மதில்-வேலி போன்று எந்த நேரத்திலும் சரியக்கூடிய ஆபத்துள்ளவர்கள் பகைவர்கள் என்பதையும் காட்டுகின்றது (כְּקִ֥יר נָט֑וּי  גָּ֝דֵ֗ר הַדְּחוּיָֽה׃).

வ.4: இந்த தீயவர்களின் செயற்பாடுகள் விவரிக்கப்படுகின்றன. அவர்கள் கதாநாயகனை அவரின் உயர்நிலையிலிருந்து தள்ளிவிட முயல்கின்றனர். இந்த கதாநாயகர், முன் பாடப்பட்ட பெயர் குறிப்பிடப்படாத மனிதராக இருக்கலாம். உயராமான இடம், அவருடைய நற் பெயராகவும் 
இருக்கலாம் (מִשְּׂאֵתוֹ). பொய் சொல்லவதில் இன்பம் காண்கின்றனர். வாயினால் ஆசிக்கின்றனர் ஆனால் உள்ளே உண்மையாக சபிக்கின்றனர் என்கிறார் ஆசிரியர். இந்த வரிகள் மூலமாக ஆசிரியர் தன் உண்மையில்லா நண்பர்களை சாடுவதைப்போல் உள்ளது. 

வ.5: தன் உள்ளத்திற்கு கட்டளையிடுகிறார். இந்த கட்டளையை அவர் தனக்கு தானே வழங்கினாலும் அனைத்து வாசகர்களுக்கும் கொடுப்பது போல உள்ளது. இந்த வரி ஏற்கனவே முதலாவது வரியில் உள்ள அர்த்தத்தையே கொடுக்கிறது. ஆனால் இங்கே ஆசிரியர் 'அமைதியாய்யிரு' என்ற வியங்கோள் சொல்லை பாவிக்கிறார் (דּוֹמִּי). அதற்கான காரணம், கடவுள் தான் அவர் நம்பிக்கையாய் இருக்கிறார். 

வவ.6-7: இந்த வரிகள் மீண்டுமாக கடவுளின் தகைமைகளை காட்டுகின்றன. ஆண்டவர் கற்பாறையாகவும், மீட்பாகவும், அரணாகவும் இருக்கிறார். அத்தோடு அவர் வலிமைமிகு கற்பாறையாகவும், புகலிடமாகவும் இருக்கிறார். இந்த வரிகள் ஏற்கனவே இரண்டாவது வரியில் விவரிக்கப்பட்டவை. இங்கே மீண்டும் பாவிக்கப்படுகின்றன. இங்கே பாவிக்கப்படுகின்ற இறை தகமைகள் விவிலியத்தில் மிகவும் பிரசித்தமானவை. 

வ.8: இதற்கு முன் வரிகளில், தன் உள்ளத்திற்கு கட்டளை கொடுத்த இவர், இந்த வரியில் அனைத்து மக்களுக்கும் கட்டளை கொடுக்கிறார். இதுதான் இந்த பாடலின் நோக்கமாக இருக்கலாம். கடவுளுக்கு எக்காலத்திற்கும் செவிகொடுக்க கேட்கப்படுகிறது 
(בִּטְחוּ בוֹ  בְכָל־עֵת). அவருக்கு முன்னால் மக்களின் இதயங்களை கொட்டக் கேட்கிறார், இது கடவுளுக்கு தொடர்ச்சியான வேண்டுதலைக் கொடுப்பதைக் குறிக்கும் (שִׁפְכֽוּ־לְפָנָ֥יו לְבַבְכֶם)
அதற்கு காரணம், அவர்தான் அடைக்கலம் என காட்டப்படுகிறது (מַחְסֶה)

வ.9: இந்த வரி மனிதரின் உண்மை நிலவரத்தை காட்டுகிறது. மனிதரைக் குறிக்க 'ஆதாமின் மகன்கள்' என்ற சொல் பாவிக்கப்பட்டுள்ளது, இவர்களின் மூச்சு, மாயை என்று அறிவு புகட்டப்படுகிறது (בְּנֵי־אָדָם). மீண்டுமாக மனிதரை குறிக்க 'மனிதனின் மக்கள்' என்ற சொல் பாவிக்கப்பட்டுள்ளது (בְּנֵ֫י אִ֥ישׁ), அவர்கள் நிறுவையில் மிகவும் குறைவானவர்கள் எனப்படுகிறது. இந்த இரண்டு சொற்களும், இரண்டு வகையான மக்களினங்களைக் குறிப்பதாகவும் சிலர் வாதிடுகின்றனர். இருப்பினும் சூழலியலில் அவ்வாறு தோன்றவில்லை. 

வ.10: மக்களுக்கு நல்ல அறிவுரை வழங்கப்படுகிறது. மற்றவரை அடக்குவதில் நம்பிக்கை வைக்கவேண்டாம் என கேட்கப்படுகிறது, அத்தோடு கொள்ளையடிப்பதிலும் குறியாய் இருக்க வேண்டாம் எனவும் கேட்கப்படுகிறது. இவற்றிக்கு உள்ளத்தை பறிகொடுக்க வேண்டாம் எனவும் சொல்லப்படுகிறது. இந்த வரியிலிருந்து, இப்படியான செயற்பாடுகள,; அந்த நாட்களில் புத்திசாலித்தனமான வாழ்வாக கருதப்பட்டிருக்கலாம் என்ற சிந்தனை புலப்படுகிறது. 

வ.11: இந்த வரி மிகவும் வித்தியாசமான ஒரு பழமொழியைக் கொண்ட வரி. 'ஆண்டவர் ஒருசொல் சொன்னார், ஆனால் நான் இரண்டு சொல் கேட்டேன்' (אַחַת ׀ דִּבֶּר אֱלֹהִים שְׁתַּיִם־ז֥וּ שָׁמָעְתִּי). இது கடவுளின் ஞானத்தையும் இறைதன்மையையும் காட்டுகின்றன. இந்த வரியை பல ஆய்வாளர்கள் பல விதமாக விளக்குகின்றார்கள். இது கடவுளின் சிந்தனை, மனிதனின் சிந்தனை இல்லை என்பதைக் காட்டுகின்றன. அதற்கான காரணம், ஆற்றல் கடவுளுக்கே உரியது எனவும் சொல்லப்படுகிறது 
(כִּ֥י עֹ֝֗ז לֵאלֹהִֽים׃). 

வ.12: உண்மைப் பேரன்பு என்னும் ஒரு தகமை (חָסֶד), கடவுளுக்கு மட்டுமே உரியது என்கிறார் ஆசிரியர். இந்தச் சொல்லுக்கு பல அர்த்தங்கள் உள்ளன. இரக்கம், இரக்கமுடைய அன்பு, இனிமை, போன்றவையாகும். பல இடங்களில் இந்த பண்பு கடவுளுக்கு மட்டுமே பாவிக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம், அவர் மனிதருக்கு தக்க கைமாறு கொடுப்பதாக காரணம் காட்டப்படுகிறது. 

1 கொரிந்தியர் 4,1-5
1நீங்கள் எங்களைக் கிறிஸ்துவின் ஊழியர்கள், கடவுளின் மறை உண்மைகளை அறிவிக்கும் பொறுப்புடையவர்கள் எனக் கருத வேண்டும். 2பொறுப்பாளர்கள் நம்பிக்கைக்குரியவர்களாய்க் காணப்பட வேண்டும் என எதிர்பார்க்கலாம் அன்றோ! 3என்னைப் பொறுத்த மட்டில் எனக்கு எதிராக நீங்களோ மக்களின் நீதிமன்றமோ தீர்ப்பளித்தால் அதைப்பற்றிச் சிறிதும் கவலைப்படமாட்டேன். எனக்கு நானே தீர்ப்பளித்துக் கொள்ளவும் மாட்டேன். 4எனக்கு எதிராகக் குற்றம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆயினும் நான் குற்றமற்றவனாகி விட மாட்டேன். எனக்குத் தீர்ப்பு வழங்குபவர் ஆண்டவர் ஒருவரே. 5எனவே, குறித்த காலம் வருமுன், அதாவது ஆண்டவரின் வருகைக்குமுன் யாருக்கும் தீர்ப்பளிக்க வேண்டாம். அவரே இருளில் மறைந்திருப்பவற்றை வெட்ட வெளிச்சமாக்குவார்; உள்ளங்களின் நோக்கங்களையும் வெளிப்படுத்துவார். அப்பொழுது ஒவ்வொருவரும் கடவுளிடமிருந்து பாராட்டுப் பெறுவர்.

கொரிந்தியருக்கு எழுதிய திருமுகத்தின் இந்தப் பகுதி, திருத்தூதர்களின் பணியையும் அவர்கள் பற்றிய உன்மையில்லா குற்றச்சாட்டுக்களையும் எடுத்துக்காட்டுகின்றன. இந்த வரிகளிலிருந்து, திருத்தூதர்கள் பல குற்றச்சாட்டுகளை அந்த திருச்சபையிலே எதிர்கொண்டார்கள் என்பது புலப்படுகிறது. பவுல் கனத்த இதயத்தோடு இந்த வரிகளை எழுதியிருக்கவேண்டும். 

வ.1: பவுல் தானும் தன் உடன் பணியாளர்களும் எவ்வாறு கருதப்படவேண்டும் என்பதை வலியுறுத்துகின்றார். இங்கே இரண்டு விதமான பண்புகளை பவுல் பாவிக்கின்றார். அதாவது இவர்கள் கிறிஸ்துவின் பணியாளர்கள் (ὑπηρέτας Χριστοῦ), அத்தோடு கடவுளின் மறையுண்மைகளை காத்து அறிவிக்கும் முகாமையாளர்கள் (οἰκονόμους μυστηρίων θεοῦ). இதன் மூலமாக திருத்தூதர்களுக்கு எதிராக இருந்த பல சிந்தனைகள் மாற்ற முயல்கிறார் என ஊகிக்கலாம். 

வ.2: இந்த உலகத்தில் பொறுப்பாளர்கள் (οἰκονόμοις ஒய்கொநொமொய்ஸ்) நம்பிக்கைக்குரியவர்களாக எதிர்பார்கப்ப்டார்கள் என்ற அக்கால உரோமைய-கிரேக்க ஒழுக்கவியலை நினைவூட்டுகிறார். பொறுப்பாளர்கள் நம்பிக்கைக்குரியவர்களாக இல்லாது போனால் அவர்கள் தண்டிக்கப்பட்டார்கள் அல்;லது அவர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டார்கள். இதனால் பொறுப்பாளர்கள் தங்கள் நம்பிக்கைத்தன்மையில் கவனமாக இருந்தார்கள். இது கொரிந்தியருக்கு நன்கு தெரிந்திருந்த விடயம். பவுல் கையாளுகின்ற இந்த பொறுப்பாளர் என்ற சொல் அக்காலத்தில் பெரிய வீடுகள் அல்லது மாளிகையில் இருந்த ஒரு முக்கியமான பணியைக் குறிக்கிறது. இந்த பொறுப்பாளர்கள் உரிமைக் குடிமக்களாகவோ அல்லது அடிமைகளாகவே இருந்தார்கள். இவர்களை நம்பியே வீட்டுத் தலைவர் அனைத்து பணிகளையும் விட்டுச்செல்வார். குழந்ததைகளை பராமரிப்பதில் தொடங்கி, வீட்டு பணியாளர்களை மேற்பார்வை செய்வது வரைக்கும் இந்த பணி முக்கியமாக இருந்தது. இந்த சொல்லைத்தான் திருச்சபையில், தாங்கள் கிறிஸ்துவின் பணியின் பொறுப்பாளர்கள் என்று அழகாக பாவிக்கிறார் இந்த திருத்தூதர், பவுல். 

வ.3: இங்கே பவுல் தீர்ப்பைப் பற்றி பேசுகிறார். தீர்ப்பிடுதல் (ἀνακρίνω), கிரேக்க உலகில் முக்கியமான விடயமாகக் கருதப்பட்டது. தீர்ப்பிடுதலின் வாயிலாக ஒருவரின் குற்றமில்லா தன்மை நிரூபிக்கப்பட்டது. இங்கே தனக்கு மனிதருடைய அங்கீகாரம் தேவையில்லை என்கிறார். 
இந்த இடத்தில் பவுல் மனிதருடைய தீர்ப்பையோ அல்லது தன்னுடைய சொந்த தீர்ப்பையோ பற்றிக் கவலைப்படுவதில்லை என்கிறார். இந்த காலத்தில் பல கிறிஸ்தவர்கள் மனித நீதிமன்றங்களால் பல தீர்ப்புகளுக்கு உள்ளானார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 

வ.4: இந்த வரியில் பவுல் குற்றங்களைப் பற்றி பேசுகிறார். தனக்கெதிரான குற்றங்கள் உண்மையில்லாதவை என்று வலியுறுத்துகின்றவேளை, தான் பரிசுத்தவான் என்று தம்பட்டம் அடிப்பதையும் தவிர்;த்துக்கொள்கிறார். அதாவது மனிதர்கள் சுமத்தும் குற்றமெதுவும் தன்னிலே இல்லை என்பதே பவுலுடைய வாதம். அப்படி குற்றமிருந்தால் அதனை சுமத்தவேண்டியவர் கடவுள் ஒருவரே என்று, ஆண்டவர் ஒருவர்தான் தனக்கு நீதிபதி என்கிறார். 

வ.5: இந்த வரி தக்க காலத்திற்கு முன்னான தீர்ப்பிடுதலைப் பற்றி அலசுகிறது (κρίνω). தகுந்த காலம் என பவுல் இங்கே விவரிப்பதை, ஆண்டவருடைய இரண்டாவது வருகை என எடுக்கலாம். கிரேக்க உலகம், இரண்டு விதமான நேரத்தை பற்றி பேசுகிறது. அவை, குறோனஸ் (χρόνος) மற்றும் கைறோஸ் (καιρός). இவற்றிலே குறோனோஸ் என்பது சாதாரண கால நேரத்தையும், கைறோஸ் எனப்படுவது சரியான தருணத்தையும் குறிக்கின்றன. புதிய ஏற்பாட்டு ஆசிரியர்கள் மற்றும் முதல் ஏற்பாட்டு ஆசிரியர்கள் கைறோஸ் எனப்படும் தகுந்த நேரத்தையே கடவுளுடைய அதிகமான திட்டங்களோடு ஒப்பிடுகின்றனர். குறோனோஸ் என்பது உண்மையில் விஞ்ஞான மற்றும் மனித காலத்தை கடந்த இறை காலம், இதற்கு அளவுகள் கிடையாது அத்தோடு இதனை தீர்மானிப்பவர் கடவுள் ஒருவரே. 
இந்த சிந்தனையிலேயே பவுல், தன் சக உடன் கிறிஸ்தவர்களை தகுந்த காலத்திற்கு முன் தீர்ப்பிட வேண்டாம் என எச்சரிக்கிறார், அதாவது பிழையாக தீர்ப்பிடவேண்டாம் என்கிறார். ஏற்கனவே பல வேளைகளில் ஆண்டவர் இயேசு யாரும் யாரையும் தீர்ப்பிடவேண்டாம் என்று சொல்லியிருக்கிறார், அதனை பவுல் மீள நினைவூட்டுவதைப் போல் இது இருக்கிறது எனலாம் (❖காண்க மத் 7,1). கடவுள் ஒருவராலே சரியான தீர்ப்பு வழங்க முடியும், அத்தோடு அவரால் மட்டுமே சரியான வெளிச்சத்தை தர இயலும் என்பது பவுலுடைய வாதம். சில மக்களுடைய பிழையான தீர்ப்புக்கள் கொரிந்திய திருச்சபையினுள் பிளவுகளைக் கொண்டுவந்த சூழலியலில் பவுல் இந்த வாதத்தை முன்வைக்கிறார். 

(❖1பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு அளிக்காதீர்கள்; அப்போதுதான் நீங்களும் தீர்ப்புக்கு உள்ளாக மாட்டீர்கள்.)

மத்தேயு 6,24-34

24'எவரும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்ய முடியாது. ஏனெனில், ஒருவரை வெறுத்து மற்றவரிடம் அவர் அன்பு கொள்வார்; அல்லது ஒருவரைச் சார்ந்து கொண்டு மற்றவரைப் புறக்கணிப்பார். நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது.


25ஆகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன்; உயிர் வாழ எதை உண்பது, எதைக் குடிப்பது என்றோ, உடலுக்கு எதை உடுத்துவது என்றோ நீங்கள் கவலை கொள்ளாதீர்கள். உணவை விட உயிரும் உடையைவிட உடலும் உயர்ந்தவை அல்லவா? 26வானத்துப் பறவைகளை நோக்குங்கள்; அவை விதைப்பதுமில்லை; அறுப்பதுமில்லை; களஞ்சியத்தில் சேர்த்து வைப்பதுமில்லை. உங்கள் விண்ணகத் தந்தை அவற்றுக்கும் உணவு அளிக்கிறார். அவற்றைவிட நீங்கள் மேலானவர்கள் அல்லவா! 27கவலைப் படுவதால் உங்களில் எவர் தமது உயரத்தோடு ஒரு முழம் கூட்ட முடியும்? 28உடைக்காக நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? காட்டுமலர்ச் செடிகள் எப்படி வளருகின்றன எனக் கவனியுங்கள்; அவை உழைப்பதுமில்லை, நூற்பதுமில்லை. 29ஆனால் சாலமோன் கூடத் தம் மேன்மையில் எல்லாம் அவற்றில் ஒன்றைப் போலவும் அணிந்திருந்ததில்லை என நான் உங்களுக்குச் சொல்கிறேன். 30நம்பிக்கை குன்றியவர்களே, இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பில் எறியப்படும் காட்டுப்புல்லுக்குக் கடவுள் இவ்வாறு அணிசெய்கிறார் என்றால் உங்களுக்கு இன்னும் அதிகமாகச் செய்ய மாட்டாரா? 31ஆகவே, எதை உண்போம்? எதைக் குடிப்போம்? எதை அணிவோம்? எனக் கவலை கொள்ளாதீர்கள். 32ஏனெனில் பிற இனத்தவரே இவற்றையெல்லாம் நாடுவர்; உங்களுக்கு இவை யாவும் தேவை என உங்கள் விண்ணகத் தந்தைக்குத் தெரியும். 33ஆகவே அனைத்திற்கும் மேலாக அவரது ஆட்சியையும் அவருக்கு ஏற்புடையவற்றையும் நாடுங்கள். அப்போது இவையனைத்தும் உங்களுக்குச் சேர்த்துக் கொடுக்கப்படும். 34ஆகையால் நாளைக்காகக் கவலைப்படாதீர்கள். ஏனெனில் நாளையக் கவலையைப் போக்க நாளை வழி பிறக்கும். அந்தந்த நாளுக்கு அன்றன்றுள்ள தொல்லையே போதும்.

இன்றைய நற்செய்திப் பகுதியோடு மத்தேயு நற்செய்தியின் ஆறாவது அதிகாரம் முடிவடைகிறது. இன்றைய நற்செய்தியில் இரண்டு முக்கியமான கட்டளைகள் முன்வைக்கப்படுகின்றன. அ. கடவுளா செல்வமா? ஆ. கவலை வேண்டாம். மோசே தன்னுடைய சடடங்களை முன்வைத்தபோது, வாழ்வையும்-சாவையும், இருளையும்-ஒளியையும், ஆசீரையும்-சாபத்தையும் மக்கள் முன்வைத்தார். அதில் அவர்கள் விரும்புவதை எடுக்கச்சொன்னார் (இ.ச. 33). அதே தோரணையிலே இப்போது மத்தேயுவின் புதிய மோசே, மற்றும் உன்மையான மீட்பர், கடவுளுக்கும் செல்வத்திற்கும் இடையில் தெரிவொன்றை மேற்கொள்ளச் சொல்கிறார். 

வ.24: தலைவர்கள் பணியாளர்கள் என்ற வாழ்க்கை முறை உரோமைய காலத்தில் மிகவும் பிரசித்தி பெற்றதாய் இருந்தது. தலைவர்கள் தங்கள் பணியாளர்களை தம் சொந்த பிள்ளைகளாக கருதிய வரலாறும் உள்ளது, பணியாளர்கள் தங்கள் தலைவர்களை கடவுள்களாக கருதியதும் வரலாற்றில் பதியப்பட்டுள்ளது. தலைவாகள் இல்லாத பணியாளர்களும், பணியாளர்கள் இல்லாத தலைவர்களும் நிறைவில்லாதவர்களாகவும் சில வேளைகளில் கருதப்பட்டனர். இங்கணம் இந்த சமூதாயத்திற்கு தலைவர்-பணியாளர் உறவு நன்கு தெரிந்திருந்தது. விசுவாசமில்லாத பணியாளர்கள் தங்கள் சுயநலங்களை கருத்தில் கொண்டு தம் தலைவர்களுக்கு துரோகம் செய்வர், அதாவது இன்னொருவருக்கு தன் தலைவரை காட்டிக்கொடுப்பர். இதனை இரண்டு தலைவர்க்கு வேலை செய்தல் என்கிறார் இயேசு. 
கடவுளையும் செல்வத்தையும் இயேசு இரண்டு தலைவர்களாக உருவகிக்கிறார் (οὐ δύνασθε θεῷ δουλεύειν καὶ μαμωνᾷ.). செல்வம், மமோனாஸ் (μαμωνᾶς) என்ற சொல்லிற்கு பல அர்த்தங்கள் உள்ளன. இந்த கிரேக்க-அரேமேயிக்க சொல் பணம், செல்வம், பொருள் என்ற பல அர்த்தங்களைக் கொடுக்கும். இயேசு இங்கே செல்வம் வேண்டாம் என சொல்லவில்லை மாறாக தெரிவில், கடவுள், செல்வத்திற்கு மேலாக இருக்க வேண்டும் என்கிறார். 

கவலை வேண்டாம்:

இயேசுவுடைய காலத்தில் பல கவலைகள், மக்களை வாட்டி வதைத்தன. மெசியா பற்றிய கவலைகள், உரோமையரைப் பற்றிய அரசியல் கவலைகள், பேராளிகளைப் பற்றிய விடுதலையுணர்வு கவலைகள், சதுசேயர் பரிசேயரைப் பற்றிய மத சார்பான கவலைகள், ஏரோதுவைப் பற்றிய கவலைகள், வேலையில்லா திண்டாட்டம் மற்றும் வறுமை பற்றிய கவலைகள் என்று அக்கால யூதர்கள் பல கவலைகளுடனேயே வாழ்ந்தனர். மத்தேயுவின் வாசகர்கள் என நம்பப்படும், யூத கிறிஸ்தவர்களுக்கும் இப்படியான கவலைகளும் இன்னும் பல விசேட கவலைகளும் இருந்தன. அவர்கள் தேவாலயத்திலிருந்து துரத்தப்பட்டார்கள், தேவாலயம் உரோமையரால் எரிக்கப்பட்டதை கண்ணால் கண்டார்கள், அதற்க்கு காரணம் கிறிஸ்தவர்கள் என குற்றம் சாட்டப்பட்டார்கள், செபக்கூடங்களுக்குள் மறுக்கப்பட்டார்கள், யூத அடையாளங்களை இழந்தார்கள், காட்டிக் கொடுக்கப்பட்டார்கள், மற்றய உடன் யூதர்களாலும் உரோமைய-கிரேக்க ஆட்சியாளர்களாலும் துன்புறுத்தப்பட்டார்கள். இந்த சூழ்நிலையிலேயே மத்தேயுவின் இயேசு, கவலை வேண்டாம் என அழுத்திச் சொல்கிறார் (μὴ μεριμνᾶτε கவலை வேண்டாம்).

வ. 25: மனிதர் நிச்சயமாக கவலைப்பட வேண்டிய சில தேவைகளை இயேசு நினைவில் கொண்டுவருகிறார். இங்கே இயேசு, வாழ்க்கையைப் பற்றி அக்கறையில்லாமல் இருக்கக் கேட்கவில்லை மாறாக கவலையில் நல்ல தெரிவு வேண்டும் என்கிறார். உண்ணல் (ἐσθίω), குடித்தல் (πίνω) மற்றும் உடை (ἐνδύω), இவை அக்காலத்தில் மிக முக்கியமான நடைமுறை சிக்கல்கள். இதனைவிட உயிரும் (ψυχή), உடலும் (σῶμα) முக்கியமானவை என்கிறார் இயேசு. 

வ.26: இயேசுவுடைய காலத்தில் பல மெய்யியல் வாதிகள் வாழ்ந்துள்ளார்கள், பல 
இறையியலாளர்களும், இன்னும் அதிகமான தத்துவவியலாளர்களும் வாழ்ந்து பல புத்தகங்களை அன்றே உருவாக்கியுள்ளார்கள். இவர்களுள் பலர் காலத்தால் இல்லாமலேயே போனார்கள். இயேசு இவர்களை விட தனது உவமையாலும், சிந்தனையாலும் மாறுபடுகிறார். இந்த வரியில் இயேசு, பாலஸ்தீனர்களுக்கு மிகவும் பரீட்சியமான மற்றும் சாதரணமான உதாரணங்களை முன்வைத்து மிக மிக ஆழமான தன்னுடைய இறையரசின் நற்செய்தியை முன்வைக்கிறார். வானத்து பறவைகள் வியாபாரம் மற்றும் சேமிப்பு செய்யாமல் தன் உணவை ஒவ்வொரு நாளும் பெற்றுக்கொள்கின்றன. பறவைகள் (πετεινόν பெடெய்னோன்) என்பது இங்கே இறக்கைகளுள்ள அனைத்து பறப்பனவற்றையும் குறிக்கும். இவர்களுக்கே நல்ல எதிர்காலத்தை கொடுக்கிற இறைவன் தன் மக்களை கைவிடமாட்டார் என்பது இயேசுவின் நற்செய்தி. மனிதர்கள் இந்த உலகில், மாண்பினை பொறுத்த மட்டில் முக்கியமானவர்கள் என்ற செய்தியையும் இயேசு முன்வைக்கிறார். 

வ.27: உயரத்தோடு ஒரு முழம் கூட்டுதல்: இந்த தமிழ் மொழிபெயர்ப்பு நல்ல அர்தத்தைக் கொடுக்கிறது, ஆனால் இதற்கு பாவிக்கப்பட்டுள்ள கிரேக்க சொற்றொடர் மேலும் பல கருத்துக்களை தன்னகத்தே கொண்டுள்ளன (προσθεῖναι ἐπὶ τὴν ἡλικίαν αὐτοῦ πῆχυν ἕνα;). ἡλικία ஹெலிகியா என்பது வாழ்வு, உயரம், நேரம், உடல் அமைப்பு என்ற பல அர்தங்களைக் கொடுக்கிறது. πῆχυς பெகுஸ் என்னும் சொல் இன்னும் வித்தியாசமான அர்த்தங்களைக் கொடுக்கிறது. இது ஒரு முழம் என்ற அர்த்தத்தை பின்னாளில் கொடுத்தது. முன்னாளில் இது அளவிடுவதற்கு பயன்பட்ட திண்ம அளவையும் கொடுத்தது (இலத்தின் உல்னா ulna). ஏறக்குறைய இது 48 செ.மீ அல்லது 18 அங்குலங்களைக் கொடுக்கும். எது எவ்வாறாயினும், இங்கே இயேசுவின் செய்தியாவது, குழப்பத்தாலும், கவலையாலும் யாரும் ஒரு அங்குலத்தையும் கூட்ட முடியாது என்பதாகும். 

வ.28: உடைக்கான கவலை அன்று மட்டுமல்ல இன்றும் அதிகமாகவே இருக்கிறது. அக்காலத்தை விட இக்காலத்தில்தான் சிலர் காட்டு செடிகள், மலர்களைப் போல தங்கள் உடை இருக்கவேண்டும் என்று நினைக்கின்றனர். இதனால்தானோ என்னவோ, சிலர் நாகரீகம் என்ற போர்வையில் இலை குழைகளை அணிந்து கொண்டு திரிக்கின்றனர். உடை அக்காலத்தில் ஒருவரின் ஆளுமையை அத்தோடு அவருடைய சமூக அந்தஸ்தைக் காட்டியது. உடையை வைத்தே ஒருவரின் அடையாளங்கள் கணிக்கப்பட்டன. இதனால்தான் உடைகளில் மக்கள் கவனமாக இருந்தார்கள். ஆனால் இங்கே இயேசு ஒருவரின் அடையாளம் என்பது அவரின் இன-மொழி அடையாளமல்ல மாறாக கடவுளின் பிள்ளைகள் என்ற அடையாளமே என்கிறார். இங்கே இயேசு எடுக்கும் அதியசமான உதாரணம் காட்டு மலர் செடி. இதற்கு κρίνον கிரினொன் என்ற சொல் பாவிக்கப்பட்டுள்ளது. பாரம்பரியமாக இது லில்லி என்று கருதப்பட்டாலும், பல தாவரவியல் நிபுணர்கள் இதனை அனிமோன், பொப்பி, கிளேடியுஸ் மற்றும் டெய்சி போன்ற அழகிய காட்டு மலர்களுடன் ஒப்பிடுகின்றனர். 

வ.29: சாலமோன் இஸ்ராயேலருக்கு அவருடைய மகிமை, மேன்மை, அழகு, செல்வ செழிப்பு என்பதனால் நன்கு அறியப்பட்டவர். (நம்முடைய பலருக்கு ஐரோப்பா மோகத்தைப் போல, அதில் பல ஊகங்கள் மட்டுமே). சாலமோன் தன் வாழ்நாளில் செல்வச் செழிப்பில் மிதந்தவர், அழகாக உடுத்தியவர், இருப்பினும் இவரால் கூட இந்த இயற்கை மலர்களை தோற்கடிக்க முடியவில்லை என்பது ஆண்டவரின் செய்தி. ஒரு விதத்தில் சாலமோன் புல்லிலும் குறைவானவர் என்பது இங்கே புலப்படுகிறது. 

வ.30: சாலமோனை மிஞ்சிய காட்டுப் புல் (τὸν χόρτον τοῦ ἀγροῦ), அதுகூட ஒரு நாளைக்குத்தான் உயிர்வாழ்கிறது, இவ்வாறிருக்க உன்னதமான மனிதர்கள் தங்கள் வாழ்நாளில் தேவையில்லா கவலைகளை ஏன் தமதாக்கி வருத்தத்தை தேடுகின்றனர் என்பது ஆண்டவரின் கேள்வி. அத்தோடு, இந்த வரியில், மனிதர்களின் வாழ்வை அணிசெய்கிறவர் கடவுள் என்பது அழகாக சொல்லப்படுகிறது. 

வ.31: மீண்டுமாக இந்த வரி உண்ணல், குடித்தல் மற்றும் அணிதலைப் பற்றிய கவலை வேண்டாம் என்று மீள நினைவூட்டுகிறது. இந்த வரியிலிருந்து இந்த பகுதி நன்கு சிந்தித்து எழுதப்பட்டது அல்லது ஒரே மூலப் பிரதியைக் கொண்டது என ஊகிக்கலாம். 

வ.32: இவற்றைப் பற்றிய கவலை பிறவினத்தவருடையது என்கிறார் மத்தேயு. பிறவினத்தவர் என்பதற்கு ἔθνος எத்நொஸ் என்ற சொல் பாவிக்கப்பட்டுள்ளது. வழமையாக இது யூதரல்லாதவரைக் குறிக்கும். இங்கே இது இயேசுவின் போதனையை உள்ளவாங்காதவர்களைக் குறிக்கிறது. அத்தோடு கடவுள் அனைத்தையும் அறிந்தவர் என்ற கடவுளைப் பற்றிய இன்னொரு அறிவும் இங்கே கொடுக்கப்படுகிறது. இயேசுவை நம்மாதவர்கள் அனைவரும் சாதாரண மக்களாகின்றனர், அல்லது இயேசுவை நம்பாவி;டடால் யூதராக பிறப்பிலிருந்தாலும் அவர்களும் புறவினத்தவரே என்பது போல தோன்றுகிறது. 

வ.33: இதுதான் இந்த அதிகாரத்தின் மையச் செய்தி. இயேசுவின் சீடர்கள் அனைத்திற்கும் மேலாக, இறையரசையும் (βασιλείαν τοῦ θεοῦ), மற்றும் நீதியையும் (δικαιοσύνη), தேடச் சொல்லி கேட்கப்படுகின்றனர். இவற்றை தேடுவதில் ஆரம்ப கால கிறிஸ்தவர்கள் தளர்ந்திருக்கலாம் அல்லது சோர்ந்திருக்கலாம். இதனைத்தான் மீண்டும் வலியுறுத்துகிறார் இந்த இந்த ஆசிரியர் மத்தேயு. இறையரசு மற்றும் நீதியான வாழ்வு போன்றவை மத்தேயு நற்செய்தியின் மையமான கருப்பொருட்களில் சில, இவற்றை சுற்றியே மற்றனைத்து போதனைகளும் அழகாக அணி செய்ய்ப்பட்டுள்ளன. மத்தேயு எவ்வளவு நேர்த்தியாக இதனை மேற்கொள்கிறார் என்பதை இந்த பகுதியில் காணலாம்.  

வ.34: நேற்று என்பது வரலாறு, நாளை என்பது கனவு, இன்று மட்டுமே நிச்சயம் என்ற தமிழ் பழமொழியை நினைவூட்டுகிறது இந்த வரி. கவலைகள் நிச்சயமாக நம்மோடு பிறந்து நம்மோடு இறக்கப்போகிறது. இதனால் இன்றைய நாளைப்பற்றி அத்தோடு அதன் அலுவல்களைப் பற்றி கருத்தாயிருப்போம் என்கிறார் ஆண்டவர். தொடக்கத்தில் கவலைவேண்டாம் என்றவர், ஏன் இன்றைய நாளை மையப்படுத்துகிறார் என்ற கேள்வி வரலாம். ஆனால் இங்கே மத்தேயு, தேவையற்ற அல்லது முறையற்ற கவலை வேண்டாம் என்பதையே மையப்படுத்துவதைக் காணலாம். 
ஒவ்வொரு நாளும் ஆண்டவரின் ஆசீராக இருந்தாலும், ஒவ்வொரு நாளும் தொல்லைகள் வரும் அதனை தகுந்த ஆயத்தத்தோடு மேற்கொள்ளலாம் என்ற மெய்யியல் செய்தியும் இங்கே பகிரப்படுகிறது, ἀρκετὸν τῇ ἡμέρᾳ ἡ κακία αὐτῆς - இந்த நாளுக்குரிய தீமை போதுமானதாக இருக்கிறது.   

இன்று காசைவிட கடவுளும், அல்லது 
காசுக்காக மட்டுமே கடவுளும் தேடப்படுகிறார்.
நிச்சயமாக கடவுளை பிரியோசனமில்லாதவர் 
என்று சொல்லும் 'புத்திசாலிகள்' கூட்டம் பெருகிக்கொண்டே போகிறது. 
தங்கள் ஆசைகளை பெரிதாக்கி, அந்த ஆசைகளை யதார்தமாக்கி, 
அதனை ஞானமாக்கவும் உலகம் முயற்ச்சி செய்கிறது.  


ஆண்டவரே கிறிஸ்தவம் ஒரு தேடல், 
அந்த தேடல் உம்மை நோக்கி இருக்க 
உதவி செய்யும். ஆமென்

மி. ஜெகன் குமார் 
தூய செபஸ்தியார் பேராலயம், மன்னார்
மகாஞானொடுக்கம். 
வியாழன், 23 பிப்ரவரி, 2017

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆண்டின் பொதுக்காலம் முப்பத்திநான்காம் வாரம் கிறிஸ்து அரசர் பெருவிழா:  Our Lord Jesus Christ, King of the Universe 24.11.2024

ஆண்டின் பொதுக்காலம் முப்பத்திநான்காம் வாரம்   கிறிஸ்து அரசர் பெருவிழா :  Our Lord Jesus Christ, King of the Universe 24.11.2024 இய...