வியாழன், 20 அக்டோபர், 2016

ஆண்டின் பொதுக்காலம் முப்பதாம் வாரம், 23 ஒக்டோபர் 2016, Thirtieth Sunday in Ordinary Time


ஆண்டின் பொதுக்காலம் முப்பதாம் வாரம், 23 ஒக்டோபர் 2016, Thirtieth Sunday in Ordinary Time



ஆண்டின் பொதுக்காலம் முப்பதாம் வாரம்
23 ஒக்டோபர் 2016
'ஏனெனில் தம்மைத் தாமே உயர்த்துவோர் தாழ்த்தப்பெறுவர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.' 
லூக்கா 18,14

முதல் வாசகம்: சீராக் 35,12-14.16-19
பதிலுரைப்பாடல்: திருப்பாடல் 33,2-3.17-19.23
இரண்டாம் வாசகம்: 2திமோத்தேயு 4,6-8.16-18.
நற்செய்தி: லூக்கா 18,9-14





சீராக் 35,12-14.16-18
12ஆண்டவர் நடுவராய் இருக்கிறார்; அவரிடம் ஒருதலைச் சார்பு என்பதே கிடையாது. 13அவர் ஏழைகளுக்கு எதிராய் எவரையும் ஒருதலைச் சார்பாய் ஏற்கமாட்டார்; தீங்கிழைக்கப்பட்டோரின் மன்றாட்டைக் கேட்பார். 14கைவிடப்பட்டோரின் வேண்டுதலைப் புறக்கணியார். தம்மிடம் முறையிடும் கைம்பெண்களைக் கைவிடார். 15கைம்பெண்களின் கண்ணீர் அவர்களுடைய கன்னங்களில் வழிந்தோடுவதில்லையா? 16ஆண்டவரின் விருப்பதிற்கு ஏற்றவாறு பணி செய்வோர் ஏற்றுக்கொள்ளப்படுவர். அவர்களுடைய மன்றாட்டு முகில்களை எட்டும். 17தங்களைத் தாழ்த்துவோரின் வேண்டுதல் முகில்களை ஊடுருவிச் செல்லும்; அது ஆண்டவரை அடையும்வரை அவர்கள் ஆறுதல் அடைவதில்லை. 18உன்னத இறைவன் சந்திக்க வரும்வரை அவர்கள் நற்பயிற்சியில் தளர்ச்சியடைவதில்லை; அவர் நீதிமான்களுக்குத் தீர்ப்பு வழங்குகிறார்; தம் தீர்ப்பைச் செயல்படுத்துகிறார். 19ஆண்டவர் காலம் தாழ்த்தமாட்டார். 

சீராக்கின் காலத்தில் கிரேக்கர்கரின் ஆதிக்கம் எபிரேய கலாச்சாரத்தையும், மொழியையும் மற்றும் நம்பிக்கையையும் கேள்விக்குறியாக்கியது. செப்துவாஜிந்தில் இந்த புத்தகம் உள்வாங்கப்பட்டுள்ளதால் இது கத்தோலிக்க விவிலியத்திலும் இணைத் திருமுறையாக உள் அடக்கப்பட்டுள்ளது. எபிரேய மற்றும் சீர்திருத்த திருச்சபைகளின் விவிலியங்களில் இந்த புத்தகம் உள்ளடக்கப்படவில்லை. முதலில் இந்த நூல் எபிரேய மொழியில் எழுதப்பட்டாலும், அந்த எபிரேய நூல் பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை எமக்கு கிடைக்கவில்லை, மாறாக கிரேக்க மற்றும் பண்டைய வேறு மொழி பிரதிகள்தான் இதுவரை இந்த நூலின் பிரதியாக திருச்சபைக்கு கிடைத்திருக்கிறது. இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் மேற்கொண்ட ஆய்வுகளின் போது இதன் எபிரேய மூலத்தின் மூன்றில் இரண்டு பகுதிகள் எகிப்திலும் (காய்ரோ கெனிட்சா), மசாதாவிலும் மற்றும் கும்ரானிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த கண்டுபிடிப்புக்களை தழுவியே புதிய மொழிபெயர்ப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தமிழ் விவிலியமும் இதனையே தழுவியுள்ளதை அவதானிக்கலாம். பென் சீராஹ் என்ற இதன்; ஆசிரியர், மக்கபேயரின் காலத்திற்கு முன்பே 
இறந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது ஆனால் அவர் கிரேக்க மயமாக்கலையும், அதன் ஆபத்துக்களையும் நன்கு முன்-அறிந்திருந்தார் என்று நம்பலாம். 
இந்த புத்தகம் ஒரு மெய்யறிவு நூலாக வாழ்வின் எல்லா பகுதிகளையும் தழுவிச் செல்கிறது. மெய்யறிவு, மெய்யறிவின் தொடக்கம், இறை அச்சம், பாவம், துன்பம், வஞ்சத்தீர்வு, அல்லற்கேடு, விடாமுயற்சி, மறாமனநிலை, ஆரோக்கியம், வழமை, பிள்ளைகள், நீடிய வாழ்வு, ஆசீர்வாதம், இறப்பு, தண்டனை, பாதாளம், போன்ற பலவிதமான இஸ்ராயேலரின் நம்பிக்கையின் அடித்தளங்களைத் தொடுகிறது. இறுதியில் இந்த புத்தகம் இஸ்ராயேலரின் மூதாதையர் புகழ் என்ற அழகான பகுதி வாயிலாக வரலாற்றை பின்நோக்கிப் பார்த்து முன்நோக்கி பயணிக்க அழைக்கிறது. ஆங்காங்கே இந்தப் புத்தகத்திலும் திருப் பாடல்களைப் போல் அகர வரிசை பாடல்கள் உள்ளதாக சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இன்றைய வாசகம் இறைநீதியின் முக்கியத்துவம் என்ற பகுதியில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த இறைநீதி இஸ்ராயேலின் மெய்யறிவின் முக்கியமான கருப்பொருளில் ஒன்றாகும். இறைநீதி காலம் தாழ்த்தலாம், ஆனால் மறக்கப்படாது என்பது சீராக்கின் ஞானம். 

வ.12: சீராக் ஆண்டவரை நடுவராகக் காண்கிறார் (κριτής கிறிடேஸ்- நடுவர், நீதிபதி), அத்தோடு ஆண்டவரின் ஒரு தலைச்சார்பு கிடையாது என்பதன் மூலம், மனித நடுவர்களிடம் ஒருதலைச் சார்பு அதிகமாக காணப்படுகிறது என்பதை மறைமுகமாக சொல்கிறார் போல. இதனை குறிக்க முகச்சார்பு அல்லது முகதுதி என்ற சொல் பாவிக்கப்பட்டுள்ளது (δόξα προσώπου முக துதி). எவரையும் முகதுதி செய்கிறவர் நல்ல நடுவர்களாக இருக்க முடியாது என்பதை நாம் இன்றைய வாழ்வியலில் காண்கின்றோம். 

வ.13-14அ: இந்த வசனங்கள் கடவுளுடைய நீதியின் சில முக்கிய பண்புகளைக் காட்டுகிறது. 
அ. ஏழைகளுக்கு வஞ்சம் செய்ய மாட்டார். 
ஆ. துன்புறுகிறவர்களுக்கு செவிசாய்ப்பார்.
இ. கைவிடப்பட்டவரின் வேண்டுதலுக்கு செவிசாய்ப்பார்.  
இந்த ஏழைகளையும் துன்புறுகிறவர்களையும் மற்றும் கைவிடப்பட்டவர்களையும், ஏற்கனவே நீதி மறுக்கப்பட்டவர்கள் என எடுக்கலாம். அத்தோடு கடவுள் இங்கே ஏழைகளுக்கு மற்றும் துன்புறுகிறவர்களுக்கு அநீதியானமுறையில் சார்பாக இருக்கிறார் என்று எடுக்க முடியாது. 

வவ.14ஆ-15: இந்த வரிகள் கைம்பெண்களை மையப்படுத்துகிறது. இவர்கள் இஸ்ராயேல் சமூகத்தில் தொன்றுதொட்டே பலவீனமானவர்களாக இருந்தவர்கள். பலவிதமான சுரண்டல்களுக்கும், அநியாயாங்களுக்கும் முகம் கொடுத்தவர்கள், இவர்களை செப்துவாஜிந் χήρα கேரா என்று அழைக்கிறது. இஸ்ராயேல் அரசர்கள் காலத்திலும் சரி, அந்நிய அரசர்கள் காலத்திலும் சரி இவர்கள் வாழ்வு மிகவும் மோசமானதாகவே இருந்தது. போர் மற்றும், ஆண்களை மையப்படுத்திய சமூக கட்டமைப்பு இவர்களை வறுமைக் கோட்டினுள்ளும், பல சமூக ஆபத்துகளுக்குள்ளும் தள்ளியது. இவர்களின் ஒரே நம்பிக்கையாக திகழ்ந்தவர் ஆண்டவர் மட்டுமே. பதினைந்தாவது வசனம் மிகவும் உணர்வு பூர்வமாக உள்ளது.

வ.16-17: விண்ணப்பங்கள் முகில்களை எட்டுதல் என்பது விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுதலைக் குறிக்கிறது. முகில்கள் இங்கே இறைபிரசன்னத்தை அல்லது இறைவனின் இல்லிடத்தைக் குறிக்கலாம். வேலை செய்பவர்கள் கடவுளுக்கு ஏற்றபடி வேலைசெய்ய எதிர்பார்க்கப்படுகிறார்கள். முன் உள்ள பல வரிகளைப்போல இந்த வரிகளும் திருப்பிக் கூறுதல் வகையில் அமைந்துள்ளது, இவ்வாறு தாழ்ச்சியுடையவர்கள், கடவுளின் திட்டத்திற்கு வேலைசெய்பவர்களுடன் ஒப்பிடப்படுகின்றனர். அவர்களின் வேண்டுதலும் முகில்களை ஊடுருவிச் செல்லும்

அ. ஆண்டவரின் விருப்பத்திற்கு ஏற்றபடி வேலை செய்வோர் - மன்றாட்டுக்கள் முகில்களை எட்டும்
ஆ. தங்களைத் தாழ்த்துவோர் - அவர்கள் மன்றாட்டுக்கள் முகில்களை ஊடுருவிச் செல்லும்

வ.18: இப்படியானவர்கள், தங்கள் நற்பயிற்சிகளில் விடாமுயற்சியுடன் இருப்பார்கள், ஆண்டவர் அவர்களை நிச்சயம் சந்திப்பார், மற்றும் அவர் நிச்சயமாக நீதி தீர்ப்பு வழங்குவார். இங்கே ஒழுக்கவியலின் முக்கிய மூன்று பண்புகள் விவரிக்கப்படுகின்றன. 

வ.19: ஆண்டவர் இந்த செயல்களை எப்போது செய்வார் என்பது இந்த புத்தகத்தின் காலத்தில் மிக முக்கியமான கேள்விகளில் ஒன்றாக இருந்தது. இந்தக் கேள்விக்கு சாதகமாகவும் உறுதியாகவும் ஆசிரியர் பதிலளிக்கிறார்.  

திருப்பாடல் 34,1-2.16-18.23
1ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும். 2நான் ஆண்டவரைப்பற்றிப் பெருமையாகப் பேசுவேன்; எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர்.
16ஆண்டவரின் முகமோ தீமைசெய்வோர்க்கு எதிராக இருக்கின்றது; அவர், அவர்களின் நினைவே உலகில் அற்றுப்போகச் செய்வார். 
17நீதிமான்கள் மன்றாடும்போது, ஆண்டவர் செவிசாய்க்கின்றார்; அவர்களை அனைத்து 
இடுக்கண்ணினின்றும் விடுவிக்கின்றார்.
18உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் ஆண்டவர் இருக்கின்றார்; நைந்த நெஞ்சத்தாரை அவர் காப்பாற்றுகின்றார். 
22ஆண்டவர் தம் ஊழியரின் உயிரை மீட்கின்றார்; அவரிடம் அடைக்கலம் புகும் எவரும் தண்டனை அடையார்.

இந்த முப்பதிநான்காம் திருப்பாடலின் தலையங்க வரி இதற்கு பின்னால் உள்ள வரலாற்றை நினைவுபடுத்துகின்றது. (தாவீதுக்கு உரியது அவர் அபிமெலக்கின் முன் பித்துப் பிடித்தவர்போலத் தம்மைக் காட்டியபோது அவன் அவரைத்துரத்திவிட, அவர் வெளியேறினார்; அப்போது அவர் பாடியது). இந்த பின்னணியை ✽1சாமு 21,10-14 இல் வாசிக்கலாம். சவுலுக்கும் தாவீதிற்கும் இடையில் நடந்த அதிகாரப் போட்டியில் தாவீது தன் உயிரைக் காக்க அந்நியரான பிலிஸ்திய அரசன் காத்தின் பாதுகாப்பை நாடி அவர் நாட்டில் தங்கினார். காத்தினுடைய தனிப்பட்ட பெயர் ஆகிஷ் ஆனால் இந்த திருப்பாடல் அவரை அபிமெலெக் அல்லது அகிமெலக் என வாசிப்பது வித்தியாசமாக உள்ளது ( אֲבִימֶלֶךְ அவிமெமெலக், Αχιμελεχ அகிமெலெக்). இந்த பிலிஸ்திய அரசன் தாவீதிற்கு அடைக்கலம் கொடுத்த போது சவுலின் பகைமையை மட்டுமே நினைத்திருப்பார், அனால் பிலிஸ்தியருக்கெதிரான தாவீதின் செயல்கள் அவருக்கு 
நினைவூட்டப்பெற்ற போது அவர் தாவீதை சிறைப்பிடிக்க முயல்கிறார், இதனால் தாவீது மனநோயாளிபோல் நடித்து தப்பிக்கிறார். தாவீது சிறந்த போர் வீரன் மட்டுமல்ல நல்ல தற்பாதுகாப்பு நடிகன் என்பதையும் நிரூபிக்கிறார். 
ஆகிஷிடம் இருந்து தப்பித்தது, தாவீதுக்கு ஒரு கடவுள் அனுபவத்தைக் கொடுக்கிறது, அந்த கடவுள் அனுபவம் அவரை இந்த பாடலை இயற்றி படிக்க வைத்ததாக எபிரேய வரலாற்று நம்பிக்கை எடுத்துரைக்கிறது. 

(✽10பிறகு தாவீது எழுந்து அந்நாளில் தப்பியோடி காத்தின் மன்னன் ஆக்சிடம் சென்றார். 11ஆக்கிசின் அலுவலர்கள் அவரிடம், 'இவன் இஸ்ரயேல் நாட்டு அரசன் தாவீது அன்றோ? 'சவுல் ஆயிரம் பேரைக் கொன்றான். தாவீதோ பதினாயிரம் பேரைக் கொன்றான்' என்று பெண்கள் நடனமாடித் தங்களுக்குள் பாடிக் கொள்ளவில்லையா?' என்றனர். 12தாவீது இவ்வார்த்தைகளைத் தம் மனதில் வைத்துக் கொண்டு, காத்தின் அரசன் ஆக்கிசை முன்னிட்டு மிகவும் அஞ்சினார். 13அதனால் தம் முகத் தோற்றத்தை மாற்றிக் கொண்டு வாயிற் கதவுகளில் கிறுக்கிக் கொண்டு, தாடி வழியே வாயிலிருந்து நுரை ஒழுகச் செய்து அவர்கள் முன்னிலையில் ஒரு பைத்தியக்காரன் போல் நடித்தார். 14அப்போது ஆக்கிசு தன் அலுவலர்களிடம், 'இதோ இம்மனிதனைப் பாருங்கள்; இவன் ஒரு பைத்தியக்காரன்! இவனை ஏன் என்னிடம் அழைத்து வந்தீர்கள்? 15என் முன்னிலையில் பைத்தியக் காரத்தனத்தை காட்ட நம்மிடம் பைத்தியங்கள் குறைவா? இவன் என் வீட்டினுள் நுழையலாமா?' என்று சினமுற்றான்.)

வவ.1-2: இந்த முன்னுரையின் உதவியுடன் இந்த வரிகளை வாசிக்கின்ற போது இந்த வார்த்தைகளின் ஆழத்தை புரிந்து கொள்ள முடிகிறது. ஆண்டவரை புகழ்தல் அல்லது அவரது பெருமைகளை பறைசாற்றுதல் என்பது, ஒரு காலத்திற்கு உட்பட்டதல்ல ஏனெனில் கடவுள் ஒருவர் பலமாக இருக்கும் போது மட்டுமல்ல அவர் பலவீனமாக இருக்கும் போது தேவையானவர் என்ற உண்மையை தாவீது பிலிஸ்தியரின் அரன்மனையில் புரிந்துகொண்டார். கடவுளின் பெருமைகளை கேட்டபோது எளியோர் அக்களிப்பர் என்று தாவீது பாடுவது, இஸ்ராயேலரை குறிக்கும் அல்லது தாவீதைச் சார்ந்த இஸ்ராயேலரைக் குறிக்கிறது என்று எடுக்கலாம். 

வவ.16-17: மீட்பின் இரகசியம் இந்த வரிகளில் வெளிப்படுத்தப்படுகிறது. ஆண்டவரின் முகம் என்பது இங்கே ஆண்டவரையையே குறிக்கிறது (פְּנֵי יְהוָה בְּעֹ֣שֵׂי רָע). ஆண்டவரின் முகம் என்று இஸ்ராயேலர் ஆண்டவரின் பிரசன்னத்தையே விளங்கிக்கொண்டனர், கடவுளின் முகத்தை அறிந்து கொள்ள சில அடையாளங்களை கண்டனர். சீயோன் மலை, மேகம், வானவில், தேவாலயம், உடன்படிக்கைப் பேழை, அதன்மேல் இருந்த கெருபூகள் போன்றவை சில அடையாளங்கள் ஆகும், ஆனால் அவை கடவுள் அல்ல, அல்லது கடவுளின் அடையாளங்களும் அல்ல மாறாக அவர் பிரசன்னத்தின் தூய்மையைப் பற்றியே அவை காட்டின. மனிதர்கள் இறந்து போவர், இந்த உலகோடு மனிதர்களின் வாழ்வு முடிவடைகிறது என்று எபிரேய பழைய நம்பிக்கை கண்டது. ஆனால் மனிதர்களின் நம்பிக்கை வாழ்வின் பின்னரும் நிலைக்கும் என்று பல எபிரேயர்கள் நம்பினர். இதனால்தான் வாழும்போது பல கடடிட மற்றும் சிற்ப வேலைகளில் முனைப்பு காட்டினர். தீமைசெய்வோர் தங்களின் நினைப்பையே இந்த உலகத்தில் இழந்து விடுவர் என்பது மிகவும் பாரதூரமான தண்டனை. 
நீதிமான்கள் என்பவர்கள் இங்கே சட்டங்களை பின்பற்றுகிறவர்களைக் குறிக்கலாம் (צָעֲקוּ 
ட்ஷெஅகு - நீதியை வாழ்பவர்கள்). மோசேயின் சட்டங்கள் அல்லது தோராஹ் என்பதுதான் ஞானமாகவும் உண்மை அறிவாகவும் கருதப்பட்டது. இதனை கடைப்பிடிப்பவர்தான் மெய்யறிவு வாதி,  ஆனால் பாவம் செய்கிறவர்கள் இந்த சட்டங்களை மீறுகிறவர்கள் அவர்கள் நிச்சயமாக கடவுளின் செவிசாய்ப்பை பெறமாட்டார்கள் என்பது ஆசிரியரின் வாதம். நீதிமான்களை கடவுள் அனைத்து இடுக்க்கண்களிலும் காக்கிறார் என்று தாவீது தன்னை கடவுள் ஆகிஷிடம் இருந்தும் சவுலிடமிருந்தும் காத்ததை நினைவுகூருகிறார் என எடுக்கலாம். 

வவ.18.22: இந்த இரண்டு வசனங்களும் அழகான திருப்பிக் கூறும் எபிரேய கவிநடையில் அமைந்துள்ளது (chiasmus கியாஸ்முஸ்)

18:அ. உடைந்த உள்ளத்தோர் - ஆண்டவர் அருகில் இருக்கிறார்
ஆ. நைந்த நெஞ்ஞத்தோர் - ஆண்டவர் காப்பாற்றுகிறார்
22:அ. ஆண்டவர் - ஊழியரின் உயிரை மீட்கிறார் 
ஆ. அவரிடம் - அடைகலம் புகுவோர் தண்டனை அடையார்

உடைந்த உள்ளத்தோர் மற்றும் நைந்த நெஞ்சத்தோர் என்ற வார்த்தைகள் மிகவும் சாதாரணமாக ஆனால் நெருடுகின்ற வார்த்தைகளாக உள்ளது. இந்த வார்த்தைகளின் மூலம் அனைத்து மனிதர்களும் எதோ ஒரு வகையில் உடைந்த உள்ளத்தவர்களாகவும், நெருங்கிய நெஞ்ஞசத்தவர்களாகவும் இருப்பதை தாவீது உணர்ந்து பாடுகிறார். ஆண்டவரின் அருகிலிருப்பு இப்படியான துன்புறுகிறவர்களுக்கு நம்பிக்கையையும் ஆறுதலையும் கொடுக்கிறது. இறுதியான வரி தாவீதின் வாய்க்கு நன்றாக பொருந்துகின்றது. தாவீது தன்னை கடவுளின் ஊழியன் என்று நம்பினார் அதனால்தான் பல விதமான பெரிய வேலைகளையும் பயமின்றி முன்னெடுத்தார். பிலிஸ்தியரை போரில் அழித்தவர் அவர்களிடமே அடைக்கலம் புகுகிறார் என்றால், அதற்கு அவர் கடவுள் மட்டில் கொண்டிருந்த உறவையும் அல்லது கடவுள் தன்னை காப்பார் என்ற அவர் நம்பிக்கையையும் உதராணமாக காட்டலாம். 

2திமோத்தேயு 4,6-8.16-18.
6ஏனெனில், நான் இப்போதே என்னைப் பலியாகப் படைக்கிறேன். நான் பிரிந்து செல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது. 7நான் நல்லதொரு போராட்டத்தில் ஈடுபட்டேன் என் ஓட்டத்தை முடித்துவிட்டேன். விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன். 8இனி எனக்கென வைக்கப்பட்டிருப்பது நேரிய வாழ்வுக்கான வெற்றி வாகையே. அதை இறுதி நாளில் ஆண்டவர் எனக்குத் தருவார்; நீதியான அந்த நடுவர் எனக்கு மட்டுமல்ல, அவர் தோன்றுவார் என விரும்பிக் காத்திருக்கும் அனைவருக்குமே தருவார். 16நான் முதன்முறை வழக்காடிய போது எவரும் என் பக்கமிருக்கவில்லை; எல்லாரும் என்னை விட்டு அகன்றனர். அக் குற்றம் அவர்களைச் சாராதிருப்பதாக. 17நான் அறிவித்த செய்தி நிறைவுற்று, அனைத்து நாட்டவரும் அதனைக் கேட்க வேண்டுமென்று ஆண்டவர் என் பக்கம் நின்று எனக்கு வலுவூட்டினார்; சிங்கத்தின் வாயிலிருந்தும் என்னை விடுவித்தார். 18தீங்கு அனைத்திலிருந்தும் அவர் என்னை விடுவித்துத் தம் விண்ணரசில் சேர்த்து எனக்கு மீட்பளிப்பார். அவருக்கே என்றென்றும் மாட்சி உரித்தாகுக! ஆமென்.

இந்த பகுதி பவுல் திமோத்தேயுவிற்கு கொடுத்த இறுதி அறிவுரைப் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இங்கே இரண்டு வகையான இறுதி அறிவுரைகளை காணலாம்.

அ. தனிப்பட்ட சாட்சியம் (வவ 6-8)
ஆ. தனிப்பட்ட கருத்துக்கள் (வவ 9-18)

இந்த கடிதத்தை பவுல்தான் எழுதினார் என்றால், அவர் இதனை நிச்சயமாக உரோமையில் சிறையில் இருந்தபோது எழுதியிருக்க வேண்டும். அவர் தன்வாழ்வில் மேற்கொண்ட பயணங்கள், மனமாற்றம், கிறிஸ்து அனுபவம், திருத்தூதுத்துவம், சபைகளின் பிரச்சனைகள், தனிப்பட்ட துன்பங்கள் போன்றவை இந்த திருமுகத்தின் முடிவில் நினைவுகூரும் படியாக வசனங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கடித்தத்தை அடிப்படையில் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் தருகின்ற கடிதமாகவே எடுக்கவேண்டும். தூய பவுல் அல்லாமல் அவர் சீடரொருவர் இதனை எழுதியிருப்பார் என்றால், இந்த வரிகளின் மூலமாக ஆரம்ப கால திருச்சபையில் இருந்து பிரிவினை மற்றும் பிளவுப் பிரச்சினைகளை இங்கனம் அறிந்து கொள்ளலாம். திமோத்தேயு சிக்கல்களில் மாட்டி அதனால் ஆட்கொள்ளப்படாமலும் அதேவேளை சிக்கல்களை கண்டு பயப்படாமல் நற்செய்தி அறிவிப்பு பணியை திறம்பட செய்ய வேண்டும் என்பதே பவுல் நோக்கமாக உள்ளது. முதலாவது கடிதத்தைப் போலல்லாது இந்த இரண்டாவது கடிதத்தில் தன்னிடம் வருமாறு பவுல் அழைக்கிறார். அத்தோடு ✽எபிரேயர் 13,23 இன் படி திமோத்தேயுவும் சிறையிலிருந்தவர் என்பது புலப்படுகிறது. 

(✽நம் சகோதரர் திமொத்தேயு விடுதலை பெற்று விட்டார். அவர் விரைவில் வந்து சேர்ந்துவிட்டால் அவரோடு நான் உங்களை வந்து பார்ப்பேன் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.)

வ.6: பவுல் தன் இறுதி நாட்களை எண்ணுவதை இங்கே காணலாம். தன்னுடைய தண்டனையை அவர் பலிக்கு ஒப்பிடுகிறார். ஏற்கனவே ✽பிலிப்பியர் 2,17இல் இதனைப் பற்றி பேசியிருக்கிறார். இதனை ஒருவேளை திமோத்தேயுவிற்கு உதாரணமாக இருக்க கூறியிருக்கலாம். தன்னைப்போலவே கிறிஸ்துவை அறிவிக்க திமோத்தேயுவும் தன் இரத்தத்தை நீர்மப் பலியாக கொடுக்க வேண்டியிருக்கும் என்பதை நினைவூட்டுகிறார். இங்கே பலியை குறிக்க பாவிக்கப்பட்டுள்ள சொல் (σπένδομαι நீர்மம் பலியாக கொடு) திருத்தூதர்களின் சாட்சிய வாழ்வின் எதிர்பார்ப்பையும் நியதியையும் குறிக்கிறது. யாராக இருந்தாலும் அவர்களுக்கும் காலம் ஒன்று உள்ளது அத்தோடு எந்த பணியாளரும் காலம் வரும்போது பிரிய வேண்டும், வாழ்வை முடிக்க வேண்டும் அத்தோடு இந்த துன்பமான யதார்த்தத்தை ஏற்க வேண்டும் எனவும் நினைவூட்டுகிறார். 

(✽நம்பிக்கையால் நீங்கள் படைக்கும் பலியில் நான் என் இரத்தத்தையே பலிப் பொருளாக வார்க்கவேண்டியிருப்பினும் அது எனக்கு மகிழ்ச்சியே. அம்மகிழ்ச்சியை நான் உங்கள் அனைவரோடும் பகிர்ந்துகொள்கிறேன்.)

வ.7: இந்த வரியில் தன் போராட்டம் நல்ல விதமாக அமைந்ததென்றும் அத்தோடு அது இப்போது நிறைவை அடைந்துவிட்டது என்பதையும் விளக்குகிறார். தன்னுடைய பணியைப்பொறுத்தோ அல்லது அவர் சாட்சியத்தைப் பொறுத்தோ, பவுல் எந்த விதமான அவமானத்தையும் காட்டவில்லை இது அவர் கிறிஸ்துவில் கொண்டிருந்த விசுவாசத்தின் ஆழத்தையும் ஒருமைப்பாட்டையும் காட்டுகிறது. தன்னுடைய விசுவாச போராட்டத்தை ஒரு மரதன் ஓட்டத்திற்கு ஒப்பிடுகிறார். கிரேக்க நாடு மெய்வல்லுநர் போட்டிகளின் தாயகம், இப்படியான ஓட்டப்போட்டிகள் அங்கே நல்ல உருவகமாக இருக்கிறது. இந்த உருவக அணியின் மூலமாக பவுலின் கிரேக்க அறிவைக் கண்டுகொள்ளலாம் (δρόμος- துரொமொஸ்- ஓட்டப் பந்தயம்). தன்னுடைய ஓட்டப் பந்தயத்தில் அவர் சிறந்த முயற்சியைக் காட்டியதாகவும் பவுல் சொல்லுவதில் விசுவாச ஓட்டப் போட்டியில், விசுவாச வீரர்கள் நல்ல முயற்சியை காட்ட வேண்டும் என்ற செய்தி திமோத்தேயுவிற்கும் அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் கடத்தப்படுகிறது. 

வ.8: ஓட்டப்பந்தயத்தில் வெல்பவருக்கு இலை முடி கிரேக்க ஓட்டப் பந்தயங்களில் வழங்கப்பட்டது. 
இதனை στέφανος ஸ்தேபானொஸ் என்று கிரேக்க மொழி குறிக்கிறது. தூய ஸ்தாவானின் பழைய தமிழ்ப் பெயரின் (முடியப்பர்) அர்த்தமும் இதனையை அண்டியதே. இந்த இலைக்கிரிடம் அல்லது முடி, உரோமையர் காலத்தில் உலோக முடியாக மாறி, இன்று அரசர்களும் தலைவர்களும் தங்கள் தலையில் சூடும் மணிமுடியின் ஆரம்பமாக உள்ளது. இந்த வாகையை, பவுல் நல்ல வாழ்வு அதாவது கிறிஸ்துவில் கிடைக்கும் இரண்டாம் வாழ்வின் பரிசாகப் பார்க்கிறார். அதனை பவுல் தனக்கு இறுதி நாளில் கிடைப்பதாக பார்க்கிறார். கிரேக்க விவிலியம் கடைசி நாளை 'அந்த நாளில்' என்றே விழிக்கிறது. இது இயேசுவின் இரண்டாம் வருகை நாளைக் குறிக்கலாம் (ἐν ἐκείνῃ τῇ ἡμέρᾳ). அத்தோடு இயேசுவை அவர் நீதியான நடுவராக காண்கிறார் (ὁ δίκαιος κριτής நீதியான நடுவர்), இயேசுவை நீதியான நடுவராக காண்பதற்கு, அக்காலத்தில் நடுவர்களைப் பற்றிய தவறான சிந்தனைகள் இருந்ததையும், இயேசுவே சில வேளைகளில் நடுவர்களை சாடியதையும் காரணமாக காணலாம். ஆக இங்கு இயேசு கிரேக்க-உரோமைய மனித நடுவர் ஒருவர் அல்லர், மாறாக நீதியான இறை நடுவர். இயேசு தரவிருக்கும் இந்த வெற்றி வாகை தனக்கு மட்டுமல்ல மாறாக அவருக்காக காத்திருக்கும் ஒவ்வொரு விசுவாச ஓட்ட வீரருக்கும் கிடைக்கும் என்ற செய்தியையும் பவுல் தருகிறார். இந்த செய்திதான் அனைத்து வாசகர்களுக்கும் கொடுக்கப்படும் செய்தி. 

வ.16: பவுல் இங்கே குறிப்பிடுகின்ற முதல் வழக்காடுதலை அடையாளப்படுத்துவது கடினமான ஒன்று. இது செசாரியாவில் அல்லது உரோமையில் நடந்திருக்கலாம். செசாரியாவில் பலர் பவுலோடு இருந்தனர் எனவே இதனை செசாரிய சிறை அனுபவம் என எடுக்க முடியாது. ஆனால் உரோமையில் பவுல் சிறையிலிருந்தபோது அவர் அதிகமாக தனிமையிலேயே இருந்தார். இதற்கு பல காரணங்கள் இருந்தன. 

அ. உரோமைய கிறிஸ்தவர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருந்தமை
ஆ. பவுலைப் பற்றிய போதிய அறிவு அவர்களுக்கு இருந்திருக்கவில்லை
இ. உரோமைய சட்டங்களைப்பற்றிய அறிவு கிறிஸ்தவர்களை பயமுறுத்தியிருக்கலாம். 
ஒன்றுமட்டும் நிச்சயமாக தெரிகிறது அதாவது பவுல் தான் கடுமையாக தனிமையாக விடப்பட்டார் என்பதை நன்கு உணர்ந்திருந்தார் அத்தோடு அந்த அனுபவம் அவரை கடுமையாக பாதித்திருந்தது. இதனை குற்றமாக கண்டாலும் அந்த தண்டனையை அவர் தன்னை தனிமையாக விட்டவர்கள் மேல் சுமத்தாமல் அவர்களை மன்னிப்பது அவரது கிறிஸ்தவ விழுமியத்தைக் காட்டுகிறது. இயேசு தொடங்கிய இந்த விழுமியமான பாவங்களை மன்னித்தலை, ஸ்தேவானும் தன்னை தண்டித்தவர்களை மன்னித்து நிறைவேற்றினார் (தி.ப 7,60). இங்கே பவுலும் அதனைத்தான் செய்கிறார். 

வ.17: இந்த வரியில் பவுல் தன் திருத்தூதுத்துவத்தின் நோக்கத்தை சுருங்கச் சொல்கிறார். 
அ. நற்செய்தி அறிவிக்கப்பட்டது
ஆ. அனைத்து நாட்டவரும் அதனைக் கேட்டனர்
இ. இந்த பணியில் ஆண்டவர் பவுல் பக்கம் நின்றார். 
ஈ. அனைத்து துன்பத்திலிரும் ஆண்டவர் பவுலை மீட்டார். 
முதலாவது வசனத்தில் அனைவரும் தன்னை தனியே விட்டுவிட்டாலும் எல்லா இடுக்கண்களிலும் இயேசு தன்னோடு இருந்தார் என்று சொல்லி திமோத்தேயுவை திடப்படுத்துகிறார். அதாவது சிறைவாழ்வு நிச்சயம் ஆனால் இயேசு பணியாளரோடு நிச்சயமாக இருப்பார், சிறைப்படுத்துவோர் சிங்கங்களாக இருந்தாலும், இயேசுவின் பாதுகாப்பு நிச்சயமாக உண்டு என்பதே அந்த செய்தி. இங்கே ஆசிரியர் சிங்கத்தின் வாய் (στόματος λέοντος ஸ்டொமாடொஸ் லெஒன்டொஸ்) என்று குறிப்பிடுவதை, நீரோ மன்னனின் கலாபனை என சில ஆய்வாளர்கள் காண்கின்றனர். ஆனால் சிங்கம் ஆபத்திற்கு சாதாரணமான பாவிக்கப்படும் ஒரு விவிலிய உவமானம் (✽காண்க 1பேதுரு 5,8). தானியேலையும் கடவுள் சிங்கத்தின் வாயினின்று காத்தார் என்பதை முதல் ஏற்பாட்டிலிருந்து காண்கிறோம் (காண்க தாணியேல் 6,16-19).
(✽அறிவுத் தெளிவோடு விழிப்பாயிருங்கள். உங்கள் எதிரியாகிய அலகை யாரை விழுங்கலாமெனக் கர்ச்சிக்கும் சிங்கம்போலத் தேடித் திரிகிறது.)

வ.18: இயேசு எப்படியான விடுதலை பவுலுக்கு கொடுத்தார், வாசகர்களுக்கு கொடுக்கவிருக்கிறார் என்பதனை இந்த வரி விளக்குகிறது. உண்மையில் பவுல் உரோமையரின் தண்டனையிலிருந்து தப்பவில்லை என்பதை வரலாற்றில் பார்க்கிறோம், ஆனால் இங்கே பவுல் பேசுகின்ற விடுதலை விண்ணரசு தருகின்ற விடுதலை. உரோமையர் பவுலை மரணம் தந்து தண்டித்தாலும் கடவுள் அவருக்கு நித்திய வாழ்வு தந்து காக்கிறார். அது நிச்சயமாக திமோத்தேயுவிற்கும் அனைத்து துன்புறும் கிறிஸ்தவர்களும் நல்ல செய்தியாக அமைகிறது. அத்தோடு எந்த விதமான பயமுமின்றி அனைத்து மாட்சியையும் கடவுளுக்கு மட்டுமே கொடுக்கச் சொல்கிறார். 


லூக்கா 18,9-14
பரிசேயரும் வரிதண்டுபவரும் பற்றிய உவமை

9தாங்கள் நேர்மையானவர் என்று நம்பி மற்றவர்களை இகழ்ந்து ஒதுக்கும் சிலரைப் பார்த்து இயேசு இந்த உவமையைச் சொன்னார்: 10'இருவர் இறைவனிடம் வேண்டக் கோவிலுக்குச் சென்றனர். ஒருவர் பரிசேயர், மற்றவர் வரிதண்டுபவர். 11பரிசேயர் நின்று கொண்டு, இவ்வாறு இறைவனிடம் வேண்டினார்: 'கடவுளே, நான் கொள்ளையர், நேர்மையற்றோர், விபசாரர் போன்ற மற்ற மக்களைப் போலவோ இந்த வரிதண்டுபவரை போலவோ இல்லாதது பற்றி உமக்கு நன்றி செலுத்துகிறேன்; 12வாரத்தில் இரு முறை நோன்பிருக்கிறேன்; என்வருவாயில் எல்லாம் பத்திலொரு பங்கைக் கொடுக்கிறேன்.' 13ஆனால் வரிதண்டுபவர் தொலையில் நின்று கொண்டு வானத்தை அண்ணாந்து பார்க்கக்கூடத் துணியாமல் தம் மார்பில் அடித்துக்கொண்டு, 'கடவுளே, பாவியாகிய என்மீது இரங்கியருளும்' என்றார்.' 14இயேசு, 'பரிசேயரல்ல, வரிதண்டுபவரே கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்பினார். ஏனெனில் தம்மைத் தாமே உயர்த்துவோர் தாழ்த்தப்பெறுவர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்' என்றார்.

லூக்கா நற்செய்தி இயேசுவை அனைத்து மக்களின் கடவுளாக காட்டும் அதேவேளை அவர் அனைத்து மக்களையும் உள்ளவாங்குகின்ற மீட்பராகவும் காட்டுகிறது. லூக்காவின் படி இயேசு ஆதாமின் மகன், புதிய ஆதாம் (ஒப்பிடுக லூக்கா 3,38). ஆதாம் மனித குலத்தின் அடையாளம், இயேசுவை ஆதாமோடு இணைப்பதன் மூலம் அனைவரும் இயேசுவின் மீட்புத் திட்டத்தினுள் இணைக்கப்பட்டுள்ளனர் என்பதை அழகாகவும் ஆழமாகவும் காட்டுகிறார் இந்த மாண்புமிகு வைத்தியர் லூக்கா. பதினெட்டாம் அதிகாரத்தின் முதலாவது உவமையை சென்ற வாரம் தியானித்தோம் இந்த வாரம் அதன் இரண்டாம் உவமையான பரிசேயரும் வரிதண்டுபவரும் என்ற உவமையை தியானிக்கின்றோம். பரிசேயர்களும் விரிதண்டுபவர்களும் ஒன்றுக்கொண்டு மாறுபட்ட இரண்டு விதமான வாழ்க்கையை வாழ்ந்தவர்கள். 

அ. பரிசேயர் (Φαρισαῖος பரிசய்யோஸ்):
இரண்டாம் ஆலயத்தின் காலத்தில் (பபிலோனிய இடப்பெயர்விற்குப் பின்) பாலஸ்தீனாவில் காண்பட்ட மிக முக்கியமான கூட்டங்களில் பரிசேயர்களும் ஒரு கூட்டத்தினர். இவர்கள் தங்களைப் பற்றி எழுதிய எந்த தரவுகளும் இல்லாதபடியால் மூன்றாவது நபர்களின் தரவுகளைக் கொண்டே இவர்களை அறிய வேண்டியுள்ளது. புதிய ஏற்பாட்டு ஆசிரியர்களும், பிளேவியஸ் யோசேபுஸ் என்ற வரலாற்று ஆசிரியரும் இவர்களைப் பற்றி சில தரவுகளை தருகிறார்கள். இவர்களின் பெயரின் அர்த்தமாக, பிரிவினைவாதிகள், சீர்திருத்தவாதிகள், அர்ப்பணிக்கப்பட்டவர்கள், பாரசீகர், நுணுக்கவாதிகள் என்ற பல அர்த்ங்களைக் காணலாம். இதில் எதுவும் நிறைவானதாக இல்லை. இவர்கள் குருகுலம் சேராத சாதரான பொது மக்கள் கூட்டத்திலிருந்து வந்தவர்கள். உரோமை அரசுடனோ அல்லது யூத தலைமை குரு குலத்துடனோ சேராது, மோசேயின் சட்டங்களையும் தங்கள் சட்டங்களையும் நுணுக்கமாக கடைப்பிடித்து உரோமைய மயமாக்கலுக்கு எதிராக போராடினார்கள், அத்தோடு மற்றவர்களையும் அவ்வாறு செய்ய தூண்டினார்கள். மக்கபேயர்களின் அழிவின் பின்னரே இவர்கள் தோன்றியிருக்க வேண்டும். விவிலியத்தைப் பற்றி சகல அறிவினையும் இவர்கள் கற்றுத்தெளிந்தார்கள் என்பதில் சநதேகமில்லை.
பரிசேயர்களுக்கு இயேசு மிக முக்கிய எதிர்வாதியாக இருந்தார் என்பதை நற்செய்தியகளில் காணலாம். அதற்கு பல காரணங்கள் இருந்தன. தூய பவுல் தன்னை ஒரு முன்னால் பரிசேயனாக அடையாளப்படுத்துவார். பவுலின் விவிலிய அறிவும், சமூக அறிவும் இந்த நம்பிக்கைக்கு வலுச்சேர்கிறது. மத்தேயு இவர்களை சதுசேயருடன் இணைத்தே காட்டுவார், அத்தோடு பழைய இஸ்ராயேலின் தலைமைத்துவத்தின் அiயாளமாகவும் இவர்களை நேரடியாகவும் மறைமுகமாகவும சாடுவார். மத்தேயுவின் பார்வை இவர்களை யூத-கலிலேய தலைமைத்துவத்தை நினைவூட்டுகிறது. லூக்கா இவர்களை கிரேக்க மெய்யறிவுவாதிகளைப்போல காட்டுவார். இவர்களை இயேசுவிற்கு எதிரானவர்களாக காட்டினாலும், இயேசு இவர்களோடு தனிப்பட்ட பகைமை எதையும் கொள்ளவில்லை என்பதையும் காட்டுகிறார். திருத்தூதர் பணிகள் நூல் இவர்களை தலைமைச் சங்கத்துடன் இணைத்து பார்கிறது. கமாலியேல் என்ற முக்கியமான போதகர் இந்த குழுவைச் சார்ந்தவரே. இவர்கள் எப்போதுமே சதுசேயர்களுக்கும் அவர்கள் நம்பிக்கைகளுக்கும் எதிராக இருந்தார்கள். யோசேபுஸ் பிளேவியுஸின் கருத்துப்படி இவர்களின் தவறான வழிநடத்துதலாலேயே யூதர்கள் உரோமையருக்கு எதிராக கலகம் செய்ததாகவும், அது புனித போர் அல்ல, மாறாக ஒரு பிரயோசனம் அற்ற கலகம், அந்த கலகத்தால் யூதர்களின் கடவுள் தோற்கவில்லை மாறாக தேவையற்ற முனைப்பு ஒன்றே தோற்றது. இவரின் கருத்துப்படி பரிசேயர்கள் மறுவாழ்வு, வானதூதர்கள், நீதித்தீர்ப்பு மற்றும் கடவுளின் கொடை என்பவற்றில் நம்பிக்கை வைத்தார்கள். ஆனால் யோசேப்புஸ், உரோமையர்களுக்கு சார்பானவர் என்பதை வரலாற்றில் காண்கிறோம். யோசேபுஸ், பரிசேயர்களின் மக்கள் செல்வாக்கை நிச்சயமாக ஏற்றுக்கொள்கிறார். பாலஸ்தீன மற்றும் அனைத்து இராபினிக்க இலக்கியங்கள் அனைத்தும் பரிசேயர்களுடன் தொடர்பு பட்டுள்ளது என்பதை மறக்க முடியாது. இராபி என்ற சொல்லும் இவர்களோடு அடையாளப் படுத்தப்பட்டது. இன்றைய விவிலிய ஆசிரியர்க்ள முழு பரிசேயர்களையும இராபினிக்க குழுக்களுடன் சேர்த்து பார்ப்பது கிடையாது. 

ஆ. வரிதண்டுபவர் (τελώνης டெலோனேஸ்): 

இவர்கள் உரோமைய இராணுவ அரசிற்காக வரி அறவிட்ட பொதுப் பணியாளர்கள். இந்த பணியை யூதர்கள் அசிங்கமான, அத்தோடு காட்டுக்கொடுக்கிற பணிகளில் ஒன்றாக கருதினார்கள். உரோமைய இராணுவமும் அதன் மக்களும், தாங்கள் கைப்பற்றிய மற்றய நாடுகளின் மேல் பல விதமான வரிகைளை சுமத்தி அறவி;ட்டார்கள். இந்த வரிகள், சீசருக்கான தனி நபர் வரி, அரச வரி, வாணிப வரி, மறறும் சமூக கட்டமைப்பு வரி என்று பல விதமாக அமைந்திருந்தது. பிலாத்து போன்ற உரோமைய நிதிப்பொறுப்பாளர்களும், செயலுரிமையாளர்களும் இதற்கு பொறுப்பாக 
இருந்தார்கள். இயற்கை பேரிடர்களின் போது சீசர்கள் இந்த வரியை நீக்கினார்கள். இதனைவிட மறைமுகமான வரிகள் பல சாதாரண மக்கள் மேல் உரோமையினால் சுமத்தப்பட்டது. கடல், நிலம், விவசாயம், கால்நடை வளர்ப்பு போன்ற எல்லா துறைகளிலும் உரோமையர்கள் தங்கள் கைவரிசையைக் காட்டி கப்பம் பெற்றார்கள் (ஐரோப்பியர் நம் நாட்டை சுரண்டியதைப் போல). 
இப்படியான வேலைகளைச் செய்ய உரோமையர் தாங்கள் பிடித்த நாடுகளிலிருந்து சிலரை பணிக்கு அமர்த்தியிருந்தார்கள். இவர்களை ஆயக்காரர்கள் என்று சொல்லுகிறோம். அதைவிட சில பணக்கார ஏலம் விடுகிறவர்கள், தங்கள் பணத்தை உரோமையருக்கு செலுத்திவிட்டு பின்னர் அதனை வட்டி வைத்து மக்களிடம் அறவிட்டுக் கொண்டார்கள். இவர்கள் தாங்கள் செலவிட்டதைவிட அதிகமான தொகையை ஏழை மக்களிடம் அறவிட பல கொடிய முறைகளையும் கையாண்டார்கள். 
இவர்கள் தங்கள் பாதுகாப்பிற்காகவும், மக்களை விரட்டவும் உரோமை படைவீரர்களின் பாதுகாப்பிலும் இந்த ஆயப் பணியை செய்தாhக்ள். 
லேவி (மத்தேயு) என்ற திருத்தூதரும் மற்றும் சக்கேயு போன்றவர்களும் இவர்களைச் சார்ந்தவர்களே. இவர்களின் இந்த பணி மற்றும் அதன் அடாவடித்தனங்கள் காரணமாக சாதாரண மக்கள் இவர்களை அதிகமாக வெறுத்தனர். சில வேளைகளில் யூத போராளிகள் இவர்களை கடத்தி கொலையும் செய்தார்கள். 

வவ.9-10: இந்த உவமை, தங்களை நீதிமான்கள் என காட்டிக்கொண்டு உள்ளத்தில் பாவிகளாக 
இருக்கிறவர்களுக்காக ஆண்டவரால் சொல்லப்பட்டது என்று லூக்கா இந்த உவமையை ஆரம்பிக்கிறார். இதிலிருந்து இது யாருக்கு எழுதப்பட்டது என்பது புலப்படுகிறது. அத்தோடு இயேசு யாரையும் அவரது வெளித் தொழில், மற்றும் அடையாளங்கள் என்பவற்றை மட்டும் கொண்டு பார்ப்பவரல்ல மாறாக இயேசு அகத்தை பார்க்கிறவர் என்பது இங்கே புலப்படுகிறது. லூக்காவின் வரிகளில் இருந்து இந்த உவமை சிலருக்கு பொருந்துவதாக எடுக்கலாம்.

அ. பரிசேயர்களுக்கு எதிராக
ஆ. அனைத்து சமய தலைவர்களுக்கும் எதிராக
இ. ஆட்சியாளர்களுக்கு எதிராக
ஈ. தங்களை உயர்த்துகிறவர்களுக்கு எதிராக 
இங்கே இயேசு காட்டுகிற இந்த இரண்டு குழுக்களும் ஒன்றுக்கொன்று எதிரானவர்கள். பரிசேயர்கள் மோசேயின் சட்டங்களை நடைமுறைப்படுத்த விளைந்தார்கள். வரிதண்டுபவர்கள் உரோமையரின் சட்டத்தை நடைமுறைப்படுத்த விளைந்தார்கள். முதலாவது கூட்டத்தினர் மக்களால் மேசேயின் இடத்தில் வைத்து பார்க்கப்பட்டு வணக்கம் செலுத்தப்பட்டார்கள், இரண்டாவது கூட்டத்தினர் துரோகிகளாக பார்க்கப்பட்டார்கள். மக்கள் என்ற வகையில் இவர்கள் இருவரும் கடவுள் முன் சமனாகவே இருக்கிறார்கள் என்பது லூக்காவின் வாதம். 

வ.11-12: இந்த பரிசேயரின் செப முறை விளக்கப்படுகிறது. நின்று கொண்டு செபித்தல் யூதர்களின் செப முறைகளில் ஒன்று. இவர் தான் செய்வதை விவரிக்கிறார். 

அ. வாரத்தில் இருமுறை நோன்பிருக்கிறார்.
ஆ. வருவாயில் பத்திலொன்று கொடுக்கிறார்.
இவை சாதாரணமாக எதிர்பார்க்பட்டவையை விட மேலதிகமாகவே இருக்கிறது, ஆனால்
இவருடைய செபம் தன்னை மையப்படுத்தியதாகவே அமைகிறது. அத்தோடு இவர் மறைமுகமாக கடவுளுக்கே அறிவுரை செய்கிறார். தான் மற்றவர்கள் போல் (οἱ λοιποὶ) அதாவது, கொள்ளையர் (ἅρπαγες பணம் பறிக்கிறவர்கள்), நேர்மையற்றோர் (ἄδικοι நீதியற்றோர்), விபச்சாரர் (μοιχοί தவரான பால் உறவு கொள்வேர்) மற்றும் வரிதண்டுவோர் (τελώνης ஆயக்காரர்) போல் அல்லாதவர் என்று கடவுளுக்கே சொல்லிக் கொடுத்து, தன்னை மையப்படுத்துகிறார். ஈழத்தில் இது இன்று தன்னை உயர்ந்த சாதி, இனம், குலம் என்று அறிமுகப்படுத்தும் எல்லா பரிசேயருக்கும் பொருந்தும். இவர் வாயிலிருந்தே இவருக்கு தீர்ப்பு வருகிறது. 

வ.13: வரிதண்டுபவரின் செயற்பாடுகள் அவதானிக்கப்படவேண்டியவை:
அ. தெலையில் நிற்கிறார்.
ஆ. வானத்தை பார்க்க துணியார். 
இ. மார்பில் அடித்துக்கொள்கிறார்.
ஈ. கடவுளிடம் இரக்கம் கேட்கிறார்.
இவரும் தன்னையே மையப்படுத்துகிறார் ஆனால் தன் பலவீனத்தையும், பாவத்தையும் மையப்படுத்துகிறார். தன்னைப் பற்றிய சரியான அறிவும், அவை திருத்தப்படவேண்டியவை என்ற பக்குவமும் அவரை உயர்ந்த மனிதராக இயேசுவின் பார்வையில் காட்டுகிறது. தொலையில் நின்றாலும், கீழ்நோக்கி பார்த்தாலும், இவர் தன் தாழ்ச்சியின் பொருட்டு, உயர்த்தப்படுகிறார். 

வ.14: இந்த வரிதான், இந்த உவமையின் செய்தி. தாழ்ச்சி எனற புண்ணியம் லூக்கா நற்செய்தியில் மிகவும் முக்கியமான பண்பு. இங்கே லூக்காவோ அல்லது இயேசுவோ, அனைத்து பரிசேயர்களுக்கும் எதிராக கருத்தியம்புகிறார்கள் என்பதற்கில்லை. இது குறிப்பிட்ட பரிசேயர்களை பற்றி மட்டுமே பேசுகிறது. தவறான விவிலியப் பார்வையும் அறிவும், வரலாற்றில் அனைத்து பரிசேயர்களையும் தவறானவர்களாக காட்டியிருக்கிறது. தமிழிலும் ஆங்கிலத்திலும் இன்னும் பல மொழிகளிலும் பரிசேயர் என்ற சொல் எதிர்மறையான சில அர்த்தங்களை கொடுக்கிறது, இது தவிர்க்கப்பட வேண்டும். இயேசுவிற்கு பல நல்ல பரிசேய நண்பர்கள் இருந்தார்கள் என்பதை மறக்கக்கூடாது.


கடவுளுக்கே அறிவுரை சொல்பவர்கள்,
கடவுளாளும் மீட்கப்பட முடியாதவர்கள்.
நான் என்ற வாதம் ஒரு குணப்படுத்த முடியாத நோய், 
அதனை விடும் வரை அது நம்மை விடாது. 

அன்பு ஆண்டவரே, 
நான் வெறும் வெற்றுப் பொருள்,
அதை உம் அன்பாலும் இரக்கத்தாலும் நிரப்பும். ஆமென். 

மி. ஜெகன் குமார் அமதி
தூய யூதா ததேயு ஆலயம்,
செல்வ புரம், முல்லைத் தீவு.
வியாழன், 20 அக்டோபர், 2016




தமிழர் விடுதலைக்காக பல தியாகங்களை செய்து,
தம்மை தாழ்த்தி-உயர்ந்த,
 இம் மண்ணின் மைந்தர்களுக்கு,
இது சமர்ப்பணம். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆண்டின் பொதுக்காலம் முப்பத்திநான்காம் வாரம் கிறிஸ்து அரசர் பெருவிழா:  Our Lord Jesus Christ, King of the Universe 24.11.2024

ஆண்டின் பொதுக்காலம் முப்பத்திநான்காம் வாரம்   கிறிஸ்து அரசர் பெருவிழா :  Our Lord Jesus Christ, King of the Universe 24.11.2024 இய...