ஆண்டின் பொதுக்காலம் இருப்பத்தொன்பதாம் வாரம் 18,10,2016: 29th Week in Ordinary Times.
ஆண்டின் பொதுக்காலம் இருப்பத்தொன்பதாம் வாரம்
18,10,2016
முதல் வாசகம்: வி.ப 17,8-13
திருப்பாடல்: 121
இரண்டாம் வாசகம்: 2திமோ 3,14-4,2
நற்செய்தி: லூக் 18,1-8
வி.ப 17,8-13
அமலேக்கியரோடு போர்
8பின்னர் அமலேக்கியர் இரபிதிமில் இஸ்ரயேலரை எதிர்த்துப் போரிட வந்தனர். 9மோசே யோசுவாவை நோக்கி 'நம் சார்பில் தேவையான ஆள்களைத் தேர்ந்தெடு. நாளை நீ போய் அமலேக்கியரை எதிர்த்துப் போரிடு. நான் கடவுளின் கோலைக் கையில் பிடித்தவாறு குன்றின் உச்சியில் நின்று கொள்வேன்' என்றார். 10அமலேக்கியரை எதிர்த்துப் போரிட மோசே கூறியவாறு யோசுவா செய்யவே மோசே. ஆரோன் கூர் என்பவர்கள் குன்றின் உச்சிக்கு ஏறிச்சென்றனர். 11மோசே தம் கையை உயர்த்தியிருக்கும்போதெல்லாம் இஸ்ரயேலர் வெற்றியடைந்தனர்; அவர் தம் கையைத் தளர விட்டபோதெல்லாம் அமலேக்கியர் வெற்றியடைந்தனர். 12மோசேயின் கைகள் தளர்ந்து போயின. அப்போது அவர்கள் கல்லொன்றை அவருக்குப் பின்புறமாக வைக்க அவர் அதன்மேல் அமர்ந்தார். அவர் கைகளை ஆரோன் ஒருபக்கமும் கூர் மறுபக்கமுமாகத் தாங்கிக்கொண்டனர். இவ்வாறாக அவர் கைகள் கதிரவன் மறையும் வரை ஒரே நிலையில்
இருந்தன. 13யோசுவா அமலேக்கையும் அவனுடைய மக்களையும் வாளுக்கிரையாக்கி முறியடித்தார்.
அமேலேக்கியர், இஸ்ராயேலரைப்போல அரை நாடோடி மக்களாயிருந்தனர். இவர்கள் அமேலேக் என்ற மூதாதையின் வழிமரபு என அறியப்படுகிறது. இந்த அமேலேக் எசாவின் பேரனாவார் (❊காண்க தொ.நூல் 36,11-12). விவிலியத்தைவிட வெளித் தரவுகளில் அமேலேக்கியரைப் பற்றி அறிவது கடினமாக இருக்கும். இவர்கள் இஸ்ராயேலரின் பரம்பரை எதிரிகளாக பார்க்கப்படுகின்றனர். மந்தை வளர்ப்பில் மிக முக்கியமாக திகழ்ந்த இவர்கள் அதிகமான நிலப்பரப்பை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். பல சந்தர்பங்களில்
இவர்கள் இஸ்ராயேலர்களின் வணிக பயணங்களை தடுத்தனர் சில வேளைகளில், வழிப்பறி கொள்ளைகளிலும் ஈடுபட்டனர். இஸ்ராயேலர் அமேலேக்கியரை போரில் வென்றாலும் பல காலங்களாக இருவருக்குமிடையில் பகைமை வேரூன்றியிருந்தது. சில வேளைகளில் வேறு மன்னர்களும் இஸ்ராயேலருக்கு எதிராக இந்த அமேலேக்கியரை பயண்படுத்தியும் போர் செய்திருக்கின்றனர் (ஒப்பிடுக நிதிபதிகள் 3,12-15). தாவீது தன்னுடைய காலத்தில் அமேலேக்கியர் மீது அதிகமான வெற்றிகளை பெற்றிருந்ததாக சாமுவேல் புத்தகத்தில் பதியப்பட்டுள்ளது (காண்க 1சாமு 27,8-9). சவுல் அமேலேக்கியராலே கொல்லப்பட்டதாக நம்பிய தாவீது அவர்கள் மேல் வெறுப்புக் கொண்டிருந்ததாகவும் வாசிக்கிறோம் (❊1குறி 18,11). இந்த குறிப்புக்களிலிருந்து அமேலேக்கியர் மேல் இஸ்ராயேலருக்கு நெரும் பகையிருந்ததை காணக்கூடியதாக இருக்கிறது.
(❊11எலிப்பாசின் புதல்வர்கள்; தேமான், ஓமார், செப்போ, காத்தாம், கெனாசு. 12ஏசாவின் மகன் எலிப்பாசின் மறுமனைவி திம்னா எலிப்பாசுக்கு அமலேக்கைப் பெற்றெடுத்தாள். இவர்களே ஏசாவின் மனைவி ஆதாவின் பேரப் பிள்ளைகள்.)
(❊❊தாவீது அரசர் இவற்றையும், தாம் ஏதோமியர், மோவாபியர், அம்மோனியர், பெலிஸ்தியர், அமலேக்கியர் ஆகியோரிடமிருந்து கைப்பற்றிய வெள்ளி, பொன் யாவற்றையும் ஆண்டவருக்கென்று அர்ப்பணம் செய்தார்.)
வ.8: இந்த வரியிலிருந்து அமேலேக்கியரை பற்றி அல்லது அவர்களோடு இஸ்ராயேலருக்கு ஒரு தொடர்பு இருந்ததை ஊகிக்கமுடியும். இரபிதிமிம் (רְפִידִֽם ரெபிடிம்) விடுதலை பயண அனுபவத்தில் ஒரு முக்கியமான இடத்தைப் பிடிக்கிறது. இங்கேதான் இஸ்ராயேலர்கள் தண்ணீருக்காக கடவுளிடம் வாதிட்டனர். இதனால் இரபிதிம் மாசாவாகவும் மெரிபாவாகவும் பெயர் மாற்றம் பெற்றது. மேசேயின் மாமனார் எத்ரோ, மோசே தனக்கு உதவியாளர்களை நியமிக்க வேண்டும் என்ற அறிவுரையை
இங்கேதான் வழங்கினார் (காண்க வி.ப 18,18-23). இந்த இடத்தை இன்று வரை தொல்பொருளியளாளர்களால் கண்டுபிடிக்கப்படவில்லை.
வ.9: இங்கேதான் மோசே முதல் முதலாக யோசுவவை தன் தளபதியாகவும் வழித்தோன்றலாகவும் நியமிக்கிறார். இந்த வேளையில் இஸ்ராயேல் மக்கள் நாடோடியராகவே இருந்திருக்க வேண்டும், இங்கே யோசுவாவுடன் போருக்கு செல்லும் மக்கள் சாதாரணமானவர்களாகவே
இருந்திருப்பர். மோசே கடவுளின் கோலை இங்கே முதல் தடவையாக எகிப்தியரல்லாதவர்க்கு எதிராக எடுக்கிறார். கோல் இங்கே கடவுளின் சக்தியையும், பிரசன்னத்தைக் குறிக்கலாம். குன்றின் உச்சியில் நிற்றலும் இங்கே ஒரு தெய்வ பிரசன்னத்தையே காட்டுகிறது.
வ.10: மோசே தன்னுடன் இன்னும் இரண்டு பேரை குன்றின் உச்சிக்கு கூட்டிச் செல்கிறார். ஆரோன் மோசேயின் சகோதரர் அத்துடன் இஸ்ராயேல் மக்களின் முதல் குருவாக கடவுளால் தேர்ந்து கொள்ளப்பட்டவர். கூர் என்பவரும் மோசேயின் முக்கியமான சகாக்களில் ஒருவர், இங்கே மோசேயோடு குன்றின் உச்சியில் நிற்கின்றார், இன்னொரு சந்தர்பத்தில் மோசே கடவுளிடம் பேச மலைக்கு செல்லும் வேளை, மக்களுக்கு இவர் நீதித் தீர்ப்பு வழங்குவார் (காண்க வி.ப 24,14).
வ.11: இந்த வசனம் மோசேயின் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது. மோசே என்கின்ற இந்த தனிநபரின் முக்கியத்துவம், இஸ்ராயேல் மக்களின் அனைத்து ஆண் வீரர்களின் வீரத்தையும் விட மேலானது என்பதை இது நேரடியாகவே காட்டுகிறது. இங்கே மோசேயின் கை, அவரின் ஆசீர்வாதத்தையும், அவரின் பலமான பரிந்துரையையும் காட்டுகிறது. பிற்காலத்தில் இஸ்ராயேலரின் பிள்ளைகளுக்கு இந்த நிகழ்வு, மோசே எவ்வளவு முக்கியமானவர் என்பதை நிச்சயமாக காட்டியிருக்கும். அத்தோடு மோசே என்கின்ற இந்த தனிநபர் ஒரு சாதாரண மனிதர் என்பதையும் இது காட்டுகிறது.
வ.12: இந்த வசனத்தில் மோசேயின் கையின் நிலைமை அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இங்கே வெற்றி தருபவர் கடவுள், மனிதரல்ல என்ற ஆழமான சிந்தனை முன்வைக்கப்படுகிறது. மோசேயின் கை கதிரவன் மறையும் வரை ஓரே நிலையில் இருந்தன என்பதைக் குறிக்க אֱמוּנָ֖ה எமுனாஹ் என்ற சொல் பாவிக்கப்பட்டு;ள்ளது. இதன் வேர்ச்சொல்லாக ஆமென் אָמֵן என்ற சொல் இருக்கிறது. இது நம்பிக்கை, உறுதி, மனவுறுதி போன்ற அர்த்தத்தை கொடுக்கிறது. மறைமுகமாக இந்த நிகழ்வு விசுவாச வாழ்வின் நம்பிக்கை தன்மையையும். மனம் தளரா தன்மையையும் சுட்டிக்காட்டுகிறது. வெற்றி என்பது தளரா தன்மையிலேயே தங்கியுள்ளது என்பதையும் இது காட்டுகிறது.
வ.13: இந்த வரி, இந்தக் கதையின் முடிவுரை போல காணப்படுகிறது. மோசேயின் தளராத தன்மையும், கடவுளின் தளராத அன்பும் அமேலேக்கியருக்கு எதிராக முதலாவது வெற்றியை தருகிறது. இதுதான் யோசுவாவின் வாழ்விலும் முக்கியமான நிகழ்வாக மாற்றம் பெறுகிறது.
தி.பா 121
1மலைகளை நோக்கி என் கண்களை உயர்த்துகின்றேன்! எங்கிருந்து எனக்கு உதவி வரும்? 2விண்ணையும் மண்ணையும் உண்டாக்கிய ஆண்டவரிடமிருந்தே எனக்கு உதவி வரும்.
3அவர் உம் கால் இடறாதபடி பார்த்துக் கொள்வார்; உம்மைக் காக்கும் அவர் உறங்கிவிடமாட்டார். 4இதோ! இஸ்ரயேலைக் காக்கின்றவர் கண்ணயர்வதுமில்லை; உறங்குவதும் இல்லை.
5ஆண்டவரே உம்மைக் காக்கின்றார்; அவர் உம் வலப்பக்கத்தில் உள்ளார்; அவரே உமக்கு நிழல் ஆவார்!
6பகலில் கதிரவன் உம்மைத் தாக்காது இரவில் நிலாவும் உம்மைத் தீண்டாது.
7ஆண்டவர் உம்மை எல்லாத் தீமையினின்றும் பாதுகாப்பார்; அவர் உம் உயிரைக் காத்திடுவார். 8நீர் போகும்போதும் உள்ளே வரும்போதும் இப்போதும் எப்போதும் ஆண்டவர் உம்மைக் காத்தருள்வார்.
இஸ்ராயேலைக் காக்கிறவர் என்ற இந்த திருப்பாடல், எருசலேமை நோக்கி பயணம் செய்யும் இஸ்ராயேல் மக்களின் திருப்பயணப் பாடல்களில் மிக முக்கியமான திருப்பாடல். உயரே ஏறும் போது படிக்கப்படும் பாடல்களில் ஒன்று என்றும் இது அறியப்படுகிறது. இதனுடைய அழகான எதுகை மோனை வரிகள் பல இனிமையான இராகங்களை எபிரேய பாடல் இலக்கியத்தில் உருவாக்கியிருக்கிறது. தமிழிலும் இந்த திருப்பாடலை பின்புலமாகக் கொண்டு பல அழகான பாடல்கள் உருவாகியுள்ளன. இஸ்ராயேலருக்கு சீயோன் மலையை நோக்கிய திருப்பயணம் மிக முக்கியமான அனுபவங்களில் ஒன்றாகக் காணப்பட்டது. அவர்கள் பயணம் செய்யும் போது பல விதமான ஆபத்துக்களை சந்தித்தனர், அந்த ஆபத்து வேளையில் அவர்கள் சீயோன் குன்றை நோக்கி தமது கண்களை உயர்த்தி ஆண்டவரிடம் பாதுகாப்பிற்காக வேண்டினர். அத்தோடு எல்லா விதமான பாதுகாப்பும் மலையில் உள்ள ஆண்டவரிடமிருந்தே வரும் என்ற நம்பிக்கையையும் இந்தப் பாடல் காட்டுகிறது. மலையில் மோசே இருந்து தன் கைகளை உயர்த்திய போது
இஸ்ராயேல் மக்கள் வெற்றியடைந்தனர் என்ற முதலாம் வாசகத்தின் மையக் கருத்தும் இந்த பாடலில் பின்புலமாக உள்ளதை அவதானிக்கலாம்.
வ.1: முக்கியமான கேள்வியொன்றை பாடல் ஆசிரியர் முன்வைக்கிறார். இங்கே மலைகள் என்பது குன்றுகளைக் குறிக்கிறது (הָרִ֑ים ஹரிம்). இது அனேகமாக சீயோன் குன்றுகளைக் குறிக்கிறது. மனிதருக்கு எங்கிருந்து உதவி வரும் என்ற முக்கியமான கேள்வியொன்றையும் இது தொட்டுச் செல்கிறது.
வ.2: விண்ணையும் மண்ணையும் உண்டாக்கிய கடவுள் என்பது அழகிய விசுவாசப் பிரமாணம். இது இஸ்ராயேலருக்கு கடவுளின் பெருமைகளை பறைசாற்றும் மிக முக்கியமான வரிகள். மனிதர்களின் உதவி எவ்வளவுதான் முக்கியமானதாக இருப்பினும் அவை மட்டுப்படுத்தப்பட்டதே, ஆனால் அனைத்தையும் உருவாக்கிய கடவுளின் பாதுகாப்பிற்கு எதுவும் உலகில் ஈடுடில்லை என்பதை இந்த வரி அழகாகக் காட்டுகிறது.
வ.3-4: மனிதர்கள் உறங்கக் கூடியவர்கள். எந்த படைவீரரும் ஒரு கட்டத்தில் நிச்சயமாக உறங்க வேண்டியவர். ஆனால் உறங்காத துணையாளர் கடவுள் ஒருவரே என்ற ஆழமான இறையியலை மிக நேர்த்தியாகவும் மிக இலகுவான சொற்பதத்திலும் இந்த ஆசிரியர் பாடுகிறார். கண்ணயர்வதுமில்லை உறங்குவதுமில்லை என்பவை ஒத்த கருத்துச் சொற்கள், இவை இங்கே கடவுளின் உறுதியான பாதுகாப்பை வலியுறுத்துகின்றன.
வ.5: வலது பக்கத்தில் காவல் தூதர்கள் நம்மைக் காக்க இருக்கிறார்கள் என்ற கிறிஸ்தவ நம்பிக்கையை இங்கே நினைவு கூர வேண்டும். வலது பக்கம் முக்கியமான இடமாக கருதப்பட்டது. இந்த வலது பக்கம், பலமான பக்கமாகவும் கருதப்பட்டது. நிழல் என்பது பாலைவன பிரதேசத்தில் மிக முக்கியமான அரணாக பார்க்கப்படுகிறது. நெருந்தூர பலைவன பயணத்தில் நிழல் முக்கியமான ஆறுதலாக பார்க்கப்படும். இதனை உருவகமாகவும் உவமையாகவும் கொண்டு வாழ்க்கை பயணத்தில் கடவுளே நிழலாக இருக்கிறார் என்பதை ஆசிரியர் பாடுகிறார்.
வ.6: சூரியனின் கதிர் மனிதரை தீண்டுவது வழமை ஆனால் சந்திரனின் கதிர் மனிதரை தீண்ட முடியுமா? என்ற கேள்வி இங்கே பலமாக எழுகிறது. ஒருவேளை இந்த வரிகள் திருப்பிக் கூறுதல் என்ற எபிரேய கவிநடைக்காக இங்கே பாவிக்கப்பட்டிருக்கலாம். அத்தோடு நிலவின் கதிர்கள் மனிதரின் மூளைக்கு ஆபத்தானவை என்ற பழங்கால நம்பிக்கையையும் இது
நினைவூட்டுகிறது. இந்நாள் விஞ்ஞான விளக்கங்கள், சந்திரனின் ஈர்ப்பு விசைக்கும், மனிதரின் மனநோய்களுக்கும் தொடர்பிருக்கிறது என்பதைக் விளக்க முயல்கின்றன, இது இந்த வரியை விளங்க உதவியாக அமையலாம்.
வவ.7-8: பயணங்கள் அப்போதும் சரி இப்போதும் சரி ஆபத்தானவையாகவே இருக்கின்றன. இன்றை உலகில் விபத்துக்கள் சாதாரணமாக மாறிவிட்டது. வெளியே போவதும், உள்ளே வருவதும், கடவுளின் பாதுகாப்பின்றி நடைபெறாது என்பதை ஆசிரியர் இங்கே பாடுகிறார்.
2திமோ 3,14-4,2
14நீ கற்று, உறுதியாய் அறிந்தவற்றில் நிலைத்து நில்; யாரிடம் கற்றாய் என்பது உனக்குத் தெரியுமே. 15நீ குழந்தைப் பருவம் முதல் திருமறைநூலைக் கற்று அறிந்திருக்கிறாய். அது இயேசு கிறிஸ்துவின் மீதுள்ள நம்பிக்கையால் உன்னை மீட்புக்கு வழி நடத்தும் ஞானத்தை அளிக்க வல்லது. 16மறைநூல் அனைத்தும் கடவுளின் தூண்டுதல் பெற்றுள்ளது. அது கற்பிப்பதற்கும் கண்டிப்பதற்கும் சீராக்குவதற்கும் நேர்மையாக வாழப் பயிற்றுவிப்பதற்கும் பயனுள்ளது. 17இவ்வாறு கடவுளின் மனிதர் தேர்ச்சி பெற்று நற்செயல் அனைத்தையும் செய்யத் தகுதி பெறுகிறார்.
1கடவுள் முன்னிலையிலும் வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் தீர்ப்பு அளிக்கப் போகிற கிறிஸ்து இயேசு முன்னிலையிலும் அவர் தோன்றப்போவதை முன்னிட்டும் அவரது ஆளுகையை முன்னிட்டும் நான் ஆணையிட்டுக் கூறுவது 2இறைவார்த்தையை அறிவி. வாய்ப்புக் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் இதைச் செய்வதில் நீ கருத்தாயிரு. கண்டித்துப் பேசு; கடிந்துகொள்; அறிவுரை கூறு மிகுந்த பொறுமையோடு கற்றுக்கொடு.
பவுலின் இந்த அறிவுரைகள் ஒரு பிரியாவிடை உரை போல அமைகிறது. திமோத்தேயு மிக முக்கியமான ஆரம்ப கால திருச்சபைத் தலைவர், ஆயர் என்று சொல்லலாம். இந்த வரிகள் அக்காலத்தில் திருச்சபையின் தலைமைத்துவம் எப்படியான சவால்களை சந்தித்தது அத்தோடு சவால்களில் அது எப்படியிருக்க வேண்டும் என்ற நியதியையும் இது காட்டுகிறது. தளர்ந்து போகிற அல்லது சமரசம் செய்கிற தலைமைத்துவம், அடிப்படை விழுமியங்களுக்கு ஆபத்தாக அமைந்துவிடுகின்றன. ஆரம்ப கால திருச்சபையில் இந்த பிரச்சனைகள் மிக ஆபத்தாகக் காணப்பட்டன. திருச்சபை குழுக்களுக்கிடையே இருந்த கொள்கை மற்றும் நம்பிக்கை பிரச்சனைகள், மற்றும் கிறிஸ்தவ-யூத மதங்களுக்கிடையே இருந்த முரண்பாடுகள் என்பன பல விதமான கேள்விகளையும் குழப்பங்களையும் உண்டாக்கின, இந்த வேளையில், கிறிஸ்தவத்தின் அடிப்படை உண்மையில் எந்த விதமான விட்டுக்கொடுப்புக்களுக்கும், அல்லது சமரச நிலைக்கும் இடமில்லை என்பதை இந்த மூன்றாம் நான்காம் அதிகாரங்கள் காட்டுகின்றன.
வ.14: இந்த வரி, திமோத்தேயுவின் குடும்பத்திற்கும் இந்த கடிதத்தின் ஆசிரியருக்கும் நெருங்கிய தொடர்பிருக்கிறதை காட்டுகிறது. ஒரு வேளை திமோத்தேயுவிற்கு ஆரம்ப காலம் முதல் பவுல் ஆசிரியராக இருந்திருக்கலாம். கற்பது மட்டும் போதாது மாறாக கற்றவற்றில் உறுதியாக நிற்பது விசுவாச வாழ்விற்கு மிக முக்கியமானது என்பதை பவுல் ஆணித்தரமாக எடுதுரைக்கிறார். வள்ளுவரின் 391வது குறள் இந்த சிந்தனையை ஒட்டிய சிந்தனையை தருகிறது.
கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க
அதற்குத் தக
(பிழை இல்லாதவற்றை தனது குறைகள் நீங்குமளவிற்கு கற்றுக்கொள்ள வேண்டும், கற்றுக் கொண்ட பின் அதன்படி நடக்க வேண்டும் - கலைஞர் உரை).
திமோத்தேயு யாரிடம் கற்றார் என்பதை சொல்லாமல் அதனை நினைவூட்டுகிறார் ஆசிரியர். இதன் செய்தி திமோத்தேயுவிற்கும் ஆரம்ப கால திருச்சபைக்கும் நன்கு விளங்கியிருக்கலாம்.
வ.15: இந்த வரியிலிருந்து தீமோத்தேயு, ஆரம்ப காலமுதலே கிறிஸ்தவராக இருந்திருக்கிறார் என்ற உண்மை புலப்படுகிறது. திருமறைநூல் என்பது அனேகமாக இங்கே முதல் ஏற்பாட்டைக் குறிக்கலாம் (γράμματα கிராம்மாடா எழுதப்பட்டவை). அத்தோடு இந்த முதல் ஏற்பாடு இயேசு கிறிஸ்துவை மையப்படுத்தியது என்பதில் பவுல் உறுதியாக இருக்கிறார். அத்தோடு அவை ஒரு மெய்யறிவை இங்கே கொடுக்கின்றன அதாவது, இயேசு கிறிஸ்துவில் கொண்ட விசுவாசமே மீட்பைத் தரும் என்பதே அந்த விசுவாசம். இது ஆரம்ப கால விசுவாச பிறழ்வுகளுக்கு (மாறுதல்களுக்கு) ஆசிரியர் முன்வைக்கும் முக்கியமான கிறிஸ்தியல் அல்லது மீட்பியல் போதனை.
வ.16: விவிலியம் அல்லது இறைவார்ததை பற்றிய மிக முக்கியமான வரிகளில் இதுவும் ஒன்று. அதிகமான பிரசங்கிகள் (மறையுரைஞர்கள்) விவிலியத்தை பற்றி பேசுகிறபோது இந்த வரியை தவறவிடார். மறைநூல் அனைத்தும் என்பது இங்கே 'எழுத்துக்கள் அனைத்தும்' என்ற அர்த்தத்தைக் கொடுக்கிறது (πᾶσα γραφὴ பாசா கிராபே). இது முதல் ஏற்பாட்டை குறிக்கிறது என்பதை மறுக்கமுடியாது. இதன் முக்கியமான நோக்கங்கள் முன்வைக்கப்படுகின்றன:
அ. கற்பிக்க
ஆ. கண்டிக்க
இ. சீராக்க
ஈ. நேர்மையாக்க
ஒரு வேளை மறைநூல்களில் சிலவற்றை பற்றிய பிழையான வாதங்கள் அக்காலத்தில்
இருந்திருக்கலாம், அதனை திருத்துவதற்காக இந்த படிப்பினையை ஆசிரியர் முன்வைத்திருக்கலாம்.
வ.17: கடவுளின் மனிதர், தேர்ச்சி பெற்றவர், நற்செயல் செய்ய வேண்டியவர் என்ற முக்கியமான நோக்கத்தை ஆசிரியர் இங்கே முன்வைக்கிறார். முதிர்ச்சி பெறாதவரும், நற்செயல் செய்யாதவரும், கடவுளின் மனிதராக இருக்க முடியாது என்பதை இவை அறிவூட்டுகின்றன.
வ.4,1: இந்த வரி கிறிஸ்தவத்தின் சில முக்கியமான நம்பிக்கைகளை உறுதிப்படுத்துகின்றன
அ. இயேசு கடவுளின் பிரசன்னத்தில் இருக்கிறார்
ஆ. இயேசு வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் தீர்ப்பளிக்கிறவர்
இ. இவர் இரண்டாம் தடவை நிச்சயமாக தோன்றுவார்
ஈ. அவர்தான் ஆளுகை செய்கிறவர்
வ.2: தீமோத்தேயுவிற்கு மிக முக்கியமான அறிவுறுத்தல் கொடுக்கப்படுகிறது. இறைவார்த்தையை எந்தச் சந்தர்ப்பத்திலும் போதிக்க தலைவர்கள் ஆயத்தமாக இருக்க வேண்டும் என்பதில் ஆசிரியர் கருத்தாய் இருக்கிறார். இறைவார்த்தையை போதிக்க தகுந்த சந்தர்பத்தை தேடி
பணிவாழ்வின் யூபிலிகளை வெறுமனே கடக்கும் (கடத்தும்) பணியாளர்களுக்கு இந்த வசனம் நல்ல சவால். கண்டித்து பேசுதல் (ἐλέγχω எலெக்கோ), கடிந்து கொள்ளுதல் (ἐπιτιμάω எபிடிமாவோ), அறிவுரை கூறுதல் (παρακαλέω பராகாலேயோ) மற்றும் பொருமையோடு கற்றுக்கொடுத்தல் (μακροθυμία; மக்ரொதுமியா) போன்றவை கடவுளின் மனிதருக்கும், போதகருக்கும் மிக முக்கியமானவை என்பதையும் ஆசிரியர் வலியுறுத்துகிறார்.
லூக்கா 18,1-8
நேர்மையற்ற நடுவரும் கைம்பெண்ணும் பற்றிய உவமை
1அவர்கள் மனந்தளராமல் எப்பொழுதும் இறைவனிடம் மன்றாட வேண்டும் என்பதற்கு இயேசு ஓர் உவமை சொன்னார். 2'ஒரு நகரில் நடுவர் ஒருவர் இருந்தார். அவர் கடவுளுக்கு அஞ்சி நடப்பதில்லை; மக்களையும் மதிப்பதில்லை. 3அந்நகரில் கைம்பெண் ஒருவரும் இருந்தார். அவர் நடுவரிடம் போய், 'என் எதிரியைத் தண்டித்து எனக்கு நீதி வழங்கும்' என்று கேட்டுக் கொண்டேயிருந்தார். 4நடுவரோ, நெடுங்காலமாய் எதுவும் செய்ய விரும்பவில்லை. பின்பு அவர், 'நான் கடவுளுக்கு அஞ்சுவதில்லை; மக்களையும் மதிப்பதில்லை. 5என்றாலும் இக்கைம்பெண் எனக்குத் தொல்லை கொடுத்துக்கொண்டிருப்பதால் நான் இவருக்கு நீதி வழங்குவேன். இல்லையானால் இவர் என் உயிரை வாங்கிக் கொண்டேயிருப்பார்' என்று தமக்குள்ளே சொல்லிக்கொண்டார்.' 6பின் ஆண்டவர் அவர்களிடம், 'நேர்மையற்ற நடுவரே இப்படிச் சொன்னாரென்றால், 7தாம் தேர்ந்துகொண்டவர்கள் அல்லும் பகலும் தம்மை நோக்கிக் கூக்குரலிடும்போது கடவுள் அவர்களுக்கு நீதி வழங்காமல் இருப்பாரா? அவர்களுக்குத் துணைசெய்யக் காலம் தாழ்த்துவாரா? 8விரைவில் அவர்களுக்கு நீதி வழங்குவார் என நான் உங்களுக்குச் சொல்கிறேன். ஆயினும் மானிடமகன் வரும்போது மண்ணுலகில் நம்பிக்கையைக் காண்பாரோ?' என்றார்.
லூக்கா நற்செய்தி வாசிக்க வாசிக்க தெவிட்டாத நற்செய்தி. லூக்காவின் பார்வை சில வேளைகளில் பாரம்பரியமாகவும் சில வேளைகளில் மிக நவரசமாகவும் இருக்கும். பதினெட்டாவது அதிகாரம், இந்த உவமையை விட, பரிசேயரும் வரிதண்டுபவரும், சிறு பிள்ளைகளுக்கு ஆசீர், மற்றும் இயேசுவை பின்பற்ற விரும்பிய செல்வர் போன்ற உவமைகளை உள்ளடக்கியுள்ளது. செபித்தல் லூக்கா நற்செய்தியில் மையக்கருத்துக்களின் முக்கியமான ஒன்று. செபித்தல் (προσεύχομαι புரொசெயுகோமாய்) யூதர்களின் முக்கியமான வாழ்க்கை முறைகளில் ஒன்று. அவர்கள் பலவிதமான செபித்தல் முறையை கையாண்டனர். தியானமாக வாசித்தலும் யூதர்களின் முக்கியமான செபித்தல் வடிவம் எனச் சொல்லலாம். இதில் எழுந்து நின்று செபித்தல், தலைகளை முட்டி செபித்தல், முழங்காலில் இருந்து செபித்தல், பயணத்தில் செபித்தல், கண்ணீரில் செபித்தல் எனவும் வகைகள் உள்ளன.
வ.1: இந்த வசனம் லூக்கா நற்செய்தியின் தொடக்கத்தை நமக்கு நினைவூட்டுகின்றது (ஒப்பிடுக 1,1-4). தொடர்ச்சியாக செபித்தலும் மனந்தளராமலும் லூக்கா நற்செய்தியின் நோக்கம் என்று கூட சொல்லலாம். ஆரம்ப கால திருச்சபை சந்தித்த சவால்கள், தொடர்ச்சியான கலாபனைகள், மனச்சோர்வுகள் போன்றவை அதன் விசுவாச பயணத்தில் சில தொய்வுகளை உருவாக்கியிருக்கலாம். இதனை கருத்தில் கொண்டு இயேசுவின் ஒரு போதனையை அழகாக மையப்படுத்தி அதனை அனைவருக்கும் நல்ல உதாரணமாகக் கொடுக்கிறார் மாண்புமிகு வைத்தியர், நற்செய்தியாளர் தூய லூக்கா.
வ.2: நடுவர்கள் இஸ்ராயேலரின் வாழ்வில் மிக முக்கியமானவர்கள். அரசர்கள் காலத்திற்கு முன் பல நடுவர்களே இஸ்ராயேல் மக்களை வழிநடத்தினர். எபிரேயம் (שֶׁפֶט சோபேட்) இதனை நீதித் தீர்ப்பு என்று காட்ச்சிப் படுத்துகிறது. இந்த நீதித் தீர்ப்பு வழங்குதல், கடவுளின் பணியாகவே கருதப்பட்டது. மோசேதான் இஸ்ராயேல் வரலாற்றில் மிக முக்கியமானவரும் நீதியானவருமான நடுவராக கருதப்படுகிறார். இது ஒரு தொழில் என்பதை விட இதனை அவர்கள் ஒரு அழைப்பாகவே கருதினர். அரசர்கள் காலத்தில் இந்த நடுவப் பணிஅரசர்களின் பணியாக மாறியது. சாலமோன் ஆரம்ப காலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற நடுவராக இருந்தார். இஸ்ராயேல் மக்கள் பாபிலோனில் இருந்த காலத்தில் பாரசீக மன்னர்கள் யூதர்களில் சட்டம் தெரிந்த சிலரை அவர்களுக்கு நடுவர்களாக நியமித்தனர் (❊காண்க எஸ்ரா 7,25). கிரேக்கர்களின் காலத்தில் தலைமைக்குரு அரசர்களின் பணியாகிய நடுவத்தை செய்தனர். புதிய ஏற்பாட்டுக் காலத்தில் தலைமைச் சங்கம் மக்களுக்கு உயர் நீதிமன்றமாக விளங்கியது. இந்த வரியில் இயேசு காட்டுகின்ற நீதியில்லா நீதிபதி, யாரைக் குறிக்கிறார் என்பதில் பல கேள்விகள் இருக்கின்றன. உரோமையர்களின் நலனையும் அவர்களின் பிரியத்தையும் பெற பல நீதிபதிகள் பல காட்டிக்கொடுப்புக்களை இயேசுவின் காலத்தில் செய்தனர், அவர்களை இயேசு சாடியிருக்கலாம். அல்லது தலைமைச் சங்கத்தில் இணக்க அரசியலின் அசிங்கத்தை சாட இந்த உவமையை லூக்கா பாவித்திருக்கலாம். இன்றுகூட அதிக நாடுகளின் நீதித்துவம் தெய்வீகமாகவும், அரசியலுக்கு அப்பாற்பட்டதாகவும் பார்க்கப்படுகிறது, ஆனால் இன்னும் இலங்கையிலும், தென் ஆசியாவிலும்
இந்த நீதித்துவம் மக்களை விட உதவாத சட்டங்களை காப்பதிலே கருத்தாய்யிருப்பது வேதனையானது.
கடவுளுக்கு அஞ்சுதல், மெய்யறிவின் தொடக்கமாக கருதப்படுகிறது (ஒப்பிடுக ❊❊சீராக் 1, 11-14). ஆக இந்த நடுவர் மெய்யறிவு (ஞானம்) இல்லாமல் நடுவராக இருக்கிறார் என்று லூக்கா நக்கல் செய்கிறார். மக்களை மதிக்காதவர் எப்படி மக்களுக்கு வேலை செய்ய முடியும். அதாவது அவர் தலைக்கனம் உடையவராக இருக்க வேண்டும், தலைக்கனம் உடையவர் பிரச்சினைகளை சீர்தூக்கி பார்க்க முடியாது. இவற்றிலிருந்து இந்த நடுவர் ஒர் தோற்ற நடுவர் அல்லத தகுதியில்லா நடுவர் என்பது புலப்படுகிறது.
(❊எஸ்ரா, கடவுள் உமக்குக் கொடுத்துள்ள ஞானத்தின்படி யூப்பிரத்தீசின் அக்கரைப் பகுதியில் வாழும் எல்லா மக்களுக்கும் நீதி வழங்க, உம் கடவுளின் திருச்சட்டத்தை அறிந்தவரான நீதிபதிகளையும், ஆளுநர்களையும் ஏற்படுத்தும்; திருச்சட்டம் அறியாதவர்களுக்கு அதைக் கற்பியும்.)
(❊❊11ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே மாட்சியும் பெருமையுமாகும்; அதுவே மகிழ்ச்சியும் அக்களிப்பின் மணிமுடியுமாகும். 12ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே உள்ளத்தை இன்புறுத்துகிறது; மகிழ்வையும் அக்களிப்பையும் நீடிய ஆயுளையும் வழங்குகிறது. 13ஆண்டவரிடம் அச்சம் கொள்வோரது முடிவு மகிழ்ச்சிக்கு உரியதாய் அமையும்; அவர்கள் இறக்கும் நாளில் ஆசி பெறுவார்கள். 14ஆண்டவரிடம் அச்சம் கொள்ளுதலே ஞானத்தின் தொடக்கம்; அது இறைப்பற்றுள்ளோருக்கு தாய் வயிற்றிலிருக்கும்பொழுதே வழங்கப்பெறுகிறது.)
வ.3: நடுவர்கள் உரோமையர்கள் காலத்தில் மிகவும் பலமானவர்களாக இருந்த அதே வேளை, கைம்பெண்கள் உரோமையர்கள் காலத்தில் மிகவும் பலவீனமானவர்களாக இருந்தனர். எல்லா விதமான அடக்கு முறைகளையும், அநியாயங்களையும் இவர்கள் சந்தித்தனர். மரியாவும் யோசசேப்பின் இறப்பிற்கு பிறகு கைம்பெண்ணாகவே வாழ்ந்தார், இதனாலேயோ என்னவோ, இயேசுவிற்கும், லூக்காவிற்கும் இவர்கள் மேல் அதிகமான அக்கறையிருந்தது (χήρα கேரா கைம்பெண், விதவை). இவர்களின் குரல்கள் நீதிமன்றங்களில் கேட்கப்படுவதில்லை என்ற உண்மையை இந்த வரி விளக்குகிறது (ஈழத்தில் இன்று காணாமல் போன தம் உறவுகளை தேடும் நம் அன்னையர்களைப் போல). இவருடைய எதிரி என்பவர் இங்கு இவரின் சொத்துக்களை அநியாயமாக சூறையாடுபவராக இருக்கலாம். கைம்பெண்கள் சமுக அந்தஸ்தில் பலவீனமாக இருந்த படியால் அவர்களின் சொத்துக்களை பல பணக்காரர்கள் சுரண்டினர்.
வவ.4-5: இங்கே லூக்கா ஒரு எதிர் மறையான பண்பை பாவித்து தொடர்ந்து முயற்ச்சி செய்தல் நல்ல பயனைத் தரும் என்ற உண்மையை உரைக்கிறார். இந்த கைம்பெண்ணின் நச்சரிப்பு இந்த உதவாத நடுவரின் உயிரை எடுக்கும் அளவிற்கு தொடர்ச்சியாக இருக்கிறது. அத்தோடு இந்த நடுவருக்கு தான் செய்வது அதாவது கடவுளுக்கஞ்சாமை, மனிதரை மதியாமை போன்றவை தவறு என்று நன்கு தெரிந்திருக்கிறது.
வ.6-7: இந்த வசனம், உவமையிலிருந்து விலகி ஆண்டவரின் வரியை பதிவு செய்கிறது. தீய நடுவரின் வசனங்களை பதிவு செய்த லூக்கா இப்போது தூய்மையின் உறைவிடமான நல்ல நடுவரான இயேசுவின் ஆறுதல் வார்த்தைகளை பதிவு செய்கிறார். இயேசு, தீயவர்களே சுயநலத்திற்காகவேனும் இணங்குகின்ற போது நல்ல கடவுள் எப்படி தம்மை வேண்டுபவர்களின் தேவைகளை உதறித்தள்ளுவார் என்ற கேள்வியை விடையாகத் தருகிறார். இரவும் பகலும் செபிப்பதில் யூதர்களை யாரும் மிஞ்ச முடியாது, அதனை நன்கு அறிந்திருந்த ஆண்டவர் அதனை இங்கே உதாரணமாக எடுக்கிறார் (ἡμέρας καὶ νυκτός பகல்வேளையிலும் மற்றும் இரவு வேளையிலும்).
வ.8: இது மிகவும் அதிசியமான வரி. இயேசு இங்கே ஒரு விடையையும் ஆனால் இன்னொரு கேள்வியையும் முன்வைக்கிறார். இந்த வரி ஆண்டவர் இயேவின் வருகையின் முன் திருச்சபையும், அல்லது அவர் சீடர்களும் சந்திக்க இருக்கின்ற சவால்களை காட்டுகிறது. நம்பிக்கை என்பது ஒரு தொடர் பயணம், அத அதன் விடாமுயற்சியிலேயே தங்கியிருக்கிறது என்பதைக் காட்டுகிறது. கடவுளின் நடுவத்தில் சந்தேகமிருக்கப் போவதில்லை ஆனால் மனிதரின் நம்பிக்கையில்தான்
இயேசுவிற்கும், லூக்காவிற்கும் சந்தேகம் இருக்கிறது.
நீதித் தீர்ப்புக்கள் இந்த உலகில் மனிதர்க்கும், நாடுகளுக்கும் ஏற்றவாறு மாறுவது ஏன்?
நீதித் தீர்ப்புக்கள் சட்டங்களை காக்கவா, அல்லது மனிதர்களை காகக்கவா?
மனிதர்;க்கும், நீதிக்கும் எதிரான சட்டங்களை உருவாக்க இவர்களுக்கு உரிமை கொடுத்தவர் எவர்?
அன்பு ஆண்டவரே,
நீதியை தேடி அலைந்து களைத்துப்போனோம்,
தொடர்ந்து உம்மிடம் மன்றாட
வரம் தாரும். ஆமென்
மி.ஜெகன் குமார் அமதி
அமதியகம், வவுனியா
வியாழன், 13 அக்டோபர், 2016
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக