வியாழன், 21 ஜனவரி, 2016

The Torah of the LORD is perfect, refreshing the soul, Ps 19,8

The Third Sunday of Ordinary Time, C.



24 சனவரி, 2016 - ஆண்டின் பொதுக்காலம் மூன்றாம் ஞாயிறு
முதலாம் வாசகம்,
நெகேமியா 8,2-4.5-6.8-10
2அவ்வாறே ஏழாம் மாதம் முதல்நாள் குரு எஸ்ரா ஆடவர், பெண்டிர், புரிந்துகொள்ளும் ஆற்றலுள்ள சிறுவர் அனைவரும் அடங்கிய சபை முன்னிலையில் திருநூலைக் கொண்டு வந்தார். 3தண்ணீர் வாயிலுக்குமுன் இருந்த வளாகத்தில் காலைமுதல் நண்பகல்வரை ஆடவரையும், பெண்டிரையும், புரிந்து கொள்ளும் ஆற்றலுள்ள சிறுவரையும் பார்த்து அதை உரக்க வாசித்தார். எல்லா மக்களும் திருநூலுக்குச் செவி கொடுத்தனர். 4திருநூல் வல்லுநரான எஸ்ராவோ இதற்காகச் செய்யப்பட்ட மர மேடையின்மேல் நின்றுகொண்டிருந்தார். 
5எஸ்ரா மக்களை விட உயரமான இடத்தில் நின்றதால் அவர் திருநூலைத் திறந்தபோது எல்லா மக்களும் அதைப் பார்த்தார்கள்; திருநூலைத் திறந்தபோது எல்லா மக்களும் எழுந்து நின்றார்கள். 6அப்பொழுது எஸ்ரா மாபெரும் கடவுளாகிய ஆண்டவரை வாழ்த்தினார். மக்கள் எல்லாரும் கைகளை உயர்த்தி 'ஆமென்! ஆமென்!' என்று பதிலுரைத்தார்கள்; பணிந்து, முகங்குப்புற விழுந்து ஆண்டவரைத் தொழுதார்கள்.
8மக்களுக்குப் புரியும்படி தெளிவாகவும், பொருளோடும் கடவுளின் திருச்சட்டத்தை உரக்க வாசித்தார்கள். ஆதலால் மக்களும் வாசிக்கப்பட்டதன் பொருளைப் புரிந்து கொண்டனர். 9ஆளுநர் நெகேமியாவும், குருவும் திருநூல் வல்லுநருமான எஸ்ராவும், விளக்கம் கூறிய லேவியர்களும் மக்கள் அனைவரையும் நோக்கி: 'இன்று கடவுளாகிய ஆண்டவரின் புனித நாள்; எனவே நீங்கள் அழுதுபுலம்ப வேண்டாம்' என்றனர். ஏனெனில் மக்கள் அனைவரும் திருச்சட்டத்தின் சொற்களைக்கேட்டதிலிருந்து அழுது கொண்டிருந்தார்கள். 10அவர் அவர்களைப் பார்த்து, 'நீங்கள் போய்க் கொழுத்தவற்றை உண்டு, இனிய திராட்சை இரசத்தைக் குடியுங்கள்; எதுவும் தயார் செய்யாதவருக்குச் சிறிது அனுப்பிவையுங்கள். ஏனென்றால், நம் ஆண்டவரின் புனித நாள் இதுவே; எனவே வருந்த வேண்டாம்; ஏனெனில் ஆண்டவரின் மகிழ்வே உங்களது வலிமை' என்று கூறினார்.

எஸ்ரா புத்தகத்தைப் போன்று, பபிலோனிய அடிமைத்தனத்தின் பின்னர் நாடு திரும்பிய இஸ்ராயேல் மக்கள் தங்களின் நாட்டைக் கட்டியெழுப்பியதையும், எருசலேமின் மதில்களை புதுப்பித்தலையும், ஆண்டவருடனான உடன்படிக்கையை புதுப்பித்தலையும் நெகேமியா புத்தகம் எடுத்துரைக்கின்றது. எஸ்ரா சமயத்தில் அக்கறைகாட்டினார் என்றால், நெகேமியா அரசியலில் அக்கறை காட்டுவார். நெகேமியா, இஸ்ராயேல் மக்கள் பாரசீக (மற்றும் கிரேக்க?) கலாச்சாரத்தினால் ஆட்கொண்டிருந்தவேளை, இஸ்ராயேல் மக்களைத் தமது மூதாதையரின் பாரம்பரியத்துக்கு கொண்டுவந்த முக்கியமான சீர்திருத்தவாதி.

வவ. 2-4: ஏழாம் மாதம் முதல்நாள் என்பது யூதர்களின் புத்தாண்டைக் குறிக்கலாம் (செப்டம்பர் அல்லது அக்டோபர் தொடக்கம்), இங்கே ஏழு, முழுமையையும் குறிக்கலாம். இந்த மக்களின் கூட்டத்தில் அனைவரும் இருப்பதைக்கொண்டு இறைவார்த்தை வாசிப்பின் முக்கியத்துவத்தை உணரலாம். தண்ணீர் வளாகம் எனப்படுவது இங்கே கிஹோன் (שַֽׁעַר־הַמַּ֗יִם தண்ணீர் வாயில்) ஊற்றை குறிக்கிறது. இதற்கருகிலேயே நெகேமியா மதில்களை புதுப்பித்தார். இங்கே வாசிப்பவர் எஸ்ரா, மரமேடையில் வாசிக்கிறார், காலை முதல் மாலைவரை என்பது முழு நாளையும் குறிக்கும். வாசிப்பவர் ஆயத்தத்தோடும், கேட்போர் அவதாணத்தோடும், நேரம் பார்காது, தகுந்த இடத்தில் வாசிப்பதை அவதானிப்போம். இந்நிகழ்வு சாலமோனின் செபத்தை எமக்கு நினைவூட்டுகிறது. (காண். 2குறிப் 6,13).

வவ. 5-6: திருநூல் என்பது விவிலிய சுருளைக் குறிக்கும். எழுந்து நின்றல், மரியாதையையும் அவதானத்தையும் காட்டும் நிலை. ஆண்டவரை வாழ்த்துதல், இஸ்ராயேல் மக்கள் அடிக்கடி செய்யும் முக்கியமான செபம். (בָּרַךְ பராக் வாழ்த்து). இயேசுவும் இதை அடிக்கடி செய்ததை காணலாம். ஆமென் (אָמֵן֙ உறுதியாக நில், நம்பு, விசுவசி எனப்பொருள்படும்). இதனை இங்கு இரண்டு தடவை சொல்கின்றனர். கைகளை  உயர்த்துதல், பணிந்து முகம்பட விழுதல் ஆராதனையைக் குறிக்கும்.

வ. 8-10: தெளிவான வாசிப்பே பொருளைக் கொடுக்கும். வாசகப்பணி எவ்வளவு முக்கியமானது என்பதை இங்கு காணலாம். தெளிவற்ற வாசிப்பு ஆபத்தானதும், மரியாதைக் குறைவானதுமாகும். அதிகமான வேளைகளின் சட்டங்கள் (தோரா) வாசிக்கப்பட்ட போது மக்கள் குற்ற உணர்வோடு அழுவது வழக்கம், யோசியா அரசரும் அவ்வாறே செய்தார் (காண் 2அர 22,11). இங்கே இவர்களை மகிழச் சொல்கின்றனர். உண்மையாகவே மறுமலர்ச்சிக்காரர்கள். அத்தோடு உண்ணவும் குடிக்கவும் சொல்கிறார்கள், இது ஆண்டவருடைய சட்டங்கள் தண்டிக்கவல்ல மாறாக வாழ்வு கொடுக்கவே என்பதைக் குறிக்கின்றது. இதனையே ஆண்டவர் பின்னர் அழகாகச் சொல்வார். ஆண்டவரில் மகிழ்ச்சி, அது உங்கள் வல்லமை. (כִּֽי־חֶדְוַ֥ת יְהוָ֖ה הִ֥יא מָֽעֻזְּכֶֽם׃ நேரடி மொழிபெயர்பு) இதுதான் நாடு இழந்து அடையாளம் இழந்து அழுதுகொண்டிருக்கும் எமக்கு நம்பிக்கைச் செய்தி.


பதிலுரைப்பாடல்
திருப்பாடல் 18(19)
14 வரிகளைக் கொண்டுள்ள இந்த திருப்பாடல், பாரம்பரியமாக தோரா திருப்பாடல் என்று அறியப்பட்டது. தற்போது வல்லுனர்கள் இதனை இரண்டாக பிரித்து, 1-6 வரிகளை படைப்புத் திருப்பாடல் எனவும் 7-15 வரிகளை தோரா பாடல் எனவும் காண்கின்றனர். முதலாவது பகுதி வெளிச்சத்தையும், சூரியனையும்,
இரண்டாவது பகுதி ஆண்டவரின் திருச்சட்டத்தையும் அழகுற வர்ணிக்கிறது. ஓர் அழகிய வரி: வ.2, ஒவ்வொரு பகலும் அடுத்த பகலுக்கு அச்செய்தியை அறிவிக்கின்றது ஒவ்வோர் இரவும் அடுத்த இரவுக்கு அதைப்பற்றிய அறிவை வழங்குகின்றது. 

வவ.4-6: சூரியனின் மகிமையைப்பற்றி எடுத்தியம்புகின்றன. ஆசிரியர் சூரியனை, அறிக்கையிடுபவனாகவும், கூடாரத்தைக் கொண்டவனாகவும், மணமகனாகவும், ஓட்ட வீரனாகவும் அத்தோடு வலிமை மிக்கவனாகவும் காட்டுகிறார்.

சூரியனை ஒப்பிட்ட ஆசிரியர் இரண்டாவது பகுதியில் கடவுளின் திருச்சட்டத்தை ஒப்பிடுகிறார். ஓர் இஸ்ராயேல் மகனு(ளு)க்கு திருச்சட்டம் எவ்வளவு இதமானது என்பதை இவ்வாறு காட்டுவார் ஆசிரியர்: வ.8: ஆண்டவரின் நியமங்கள் சரியானவை அவை இதயத்தை மகிழ்விக்கின்றன. ஆண்டவரின் கட்டளைகள் ஒளிமயமானவை அவை கண்களை ஒளிர்விக்கின்றன. திருச்சட்டத்திற்கு பல ஒத்த சொற்களை பயன்படுத்தும் ஆசிரியர் அதனை, நிறைவானது, உயிரளிப்பது, நம்பத்தக்கது, ஞானமுள்ளது, சரியானது, மகிழ்விப்பது, ஒளிமயமானது, தூய்மையானது, நிலையானது, உண்மையானது, நீதியானது, விலைமதிப்பற்றது, இனிமையானது, என்று பலவாறு வர்ணிக்கிறார். இங்கே திருச்சட்டம் (தோரா תּוֹרָה) எனப்படுவது, விசாலமான பார்வையில் நோக்கப்படவேண்டும். இவை திருச்சட்டங்களையும், முதல் 5 புத்தங்களையும், முழு விவிலியத்தையும், சில வேளைகளில் கடவுளையும் குறிக்கும். வ. 14: என் கற்பாறையும் மீட்பருமான ஆண்டவரே! என் வாயின் சொற்கள் உமக்கு ஏற்றவையாய் இருக்கட்டும்; என் உள்ளத்தின் எண்ணங்கள் உமக்கு உகந்தவையாய் இருக்கட்டும். உள்ளத்தின் எண்ணங்கள் என்பது (הִגָּיוֹן ஹிக்காய்யோன்) எனும் ஒரு வகை தியானத்தை குறிக்கும்.

இரண்டாம் வாசகம்
1கொரிந்தியர் 12,12-30
12உடல் ஒன்றே; உறுப்புகள் பல. உடலின் உறுப்புகள் பலவாயினும் உடல் ஒன்றாயிருப்பதுபோல கிறிஸ்துவும் இருக்கிறார். 13ஏனெனில், யூதரானாலும் கிரேக்கரானாலும், அடிமைகளானாலும் உரிமைக் குடிமக்களானாலும் நாம் எல்லாரும் ஒரே தூய ஆவியால் ஒரே உடலாய் இருக்கும்படி திருமுழுக்குப் பெற்றோம். அந்த ஒரே ஆவியையே பானமாகவும் பெற்றோம். 14உடல் ஒரே உறுப்பால் ஆனது அல்ல் பல உறுப்புகளால் ஆனது. 15'நான் கை அல்ல் ஆகவே இவ்வுடலைச் சேர்ந்தவன் அல்ல' எனக் கால் சொல்லுமானால், அது அவ்வுடலைச் சேர்ந்ததில்லை என்றாகிவிடுமா? 16'நான் கண் அல்ல் ஆகவே இவ்வுடலைச் சேர்ந்தவன் அல்ல' எனக் காது சொல்லுமானால், அது அவ்வுடலைச் சேர்ந்ததில்லை என்றாகிவிடுமா? 17முழு உடலும் கண்ணாயிருந்தால் கேட்பது எப்படி? முழு உடலும் காதாயிருந்தால் முகர்வது எப்படி? 18உண்மையில் கடவுள் ஒவ்வோர் உறுப்பையும் தாம் விரும்பியவாறே உடலில் அமைத்தார். 19அவை யாவும் ஒரே உறுப்பாயிருந்தால் உடல் என ஒன்று இருக்குமா? 20எனவேதான் பல உறுப்புகளை உடையதாய் இருந்தாலும் உடல் ஒன்றே.
21கண் கையைப்பார்த்து, 'நீ எனக்குத் தேவையில்லை' என்றோ தலை கால்களைப் பார்த்து, 'நீங்கள் எனக்குத் தேவையில்லை' என்றோ சொல்ல முடியாது. 22மாறாக, உடலில் மிக வலுவற்றனவாய்த் தோன்றும் உறுப்புகளே மிகவும் தேவையானவையாய் இருக்கின்றன. 23உடலின் மதிப்புக் குறைவான உறுப்புகள் என நமக்குத் தோன்றுபவற்றிற்கே நாம் மிகுந்த மதிப்புக் கொடுக்கிறோம். நம் மறைவான உறுப்புகளே மிகுந்த மதிப்புப் பெறுகின்றன. 24மறைந்திராத நம் உறுப்புகளுக்கு அது தேவையில்லை. மாறாக, மதிப்புக் குறைந்த உறுப்புகளுக்கு மிகுந்த மதிப்புக் கொடுத்தே கடவுள் உடலை ஒன்றித்து உருவாக்கினார். 25உடலில் பிளவு ஏற்படாமல், ஒவ்வொரு உறுப்பும் மற்ற உறுப்புகளின் மீது ஒரேவிதக் கவலை கொள்ளவேண்டுமென்றே இப்படிச் செய்தார். 26ஓர் உறுப்பு துன்புற்றால் அதனுடன் மற்ற எல்லா உறுப்புகளும் சேர்ந்து துன்புறும். ஓர் உறுப்பு பெருமை பெற்றால் அதனுடன் மற்ற எல்லா உறுப்புகளும் சேர்ந்து மகிழ்ச்சியுறும்.
27நீங்கள் கிறிஸ்துவின் உடல்; ஒவ்வொருவரும் அதன் தனித்தனி உறுப்புகள். 28அவ்வாறே திருச்சபையிலும் கடவுள் முதலாவது திருத்தூதர்களையும், இரண்டாவது இறைவாக்கினர்களையும், மூன்றாவது போதகர்களையும், பின்னர் வல்லசெயல் செய்வோர்களையும், அதன்பின் பிணி தீர்க்கும் அருள்கொடை பெற்றவர்கள், துணைநிற்பவர்கள், தலைமையேற்று நடத்துபவர்கள், பல்வகை பரவசப்பேச்சு பேசுகிறவர்கள் ஆகியோரையும் ஏற்படுத்தினார். 29எல்லாருமே திருத்தூதர்களா? எல்லாருமே இறைவாக்கினர்களா? எல்லாருமே போதகர்களா? எல்லாருமே வல்ல செயல் செய்பவர்களா? இல்லை. 30எல்லாருமே பிணி தீர்க்கும் அருள்கொடையைப் பெற்றவர்களா? எல்லாருமே பரவசப் பேச்சுப் பேசுகிறவர்களா? எல்லாருமே விளக்கம் அளிப்பவர்களா? இல்லையே!

பவுலடிகளாரின் கிரேக்க யூத மெய்யியல் அறிவிற்கும் அவரது கிறிஸ்தியல் புலமைத்துவத்திற்கும் ஒரு வரைவிலக்கனமாக இந்த பகுதியைக் காணலாம். கிரேக்க மெய்யியலிலும், தல பிரிவினைகளிலும் மூழ்கியிருந்த ஆரம்பகால கிறிஸ்தவர்களை பவுல் கிறிஸ்து, உடல், திருச்சபை போன்ற நற்சிந்தனைகளில் மூழ்கச்செய்கிறார்.

வவ. 12-13: உடல், உறுப்புக்கள், கிறிஸ்து, தூயஆவி, போன்றவற்றை உதாரணத்துக்கு எடுத்து ஒற்றுமையை கொரிந்தியருக்கு ஆழமாகச் சொல்கிறார். கிரேக்கர்கள் உடல்உறுப்பியல் சம்பந்தமான மருத்துவத் துறையில் புலமைபெற்றவர்கள், அவர்களுக்கு உடலை உதாரணமாக எடுப்பதன் வாயிலாக அவர்களின் அறிவிலே அவர்களுக்கு பாடம் புகட்டுகிறார். கடவுளுக்கு முன்னால் மனிதன் அவர் பிள்ளையாக மட்டுமே இருக்க முடியும் என்பது புவுலுடைய நம்பிக்;கை, இது மீண்டும் மீண்டும் பவுலுடைய கடிதங்களில் வருவதைக் காணலாம். யூதர், கிரேக்கர், உரிமை மக்கள், அடிமைகள் இந்த பிரிவினைதான் கொரிந்தியரை சலனப்படுத்தியது, அதனை பவுல் இங்கு வேரறுக்கிறார். (சிலர் கடவுளுக்கு உடலைக் கொடுத்து, அதனை  தரப்படுத்தி, கடவுள் பிள்ளைகளை மேலோர் கீழோர் என பிறிவுபடுத்தி, தமிழர்களை கடவுளின் கீழ் உறுப்புகளில் இருந்து வந்தவர்கள் என்று சொல்லி, அடிமைப்படுத்துவதை: சில தமிழர்களே இன்றுவரை நம்பத்தான் செய்கிறார்கள்). (σῶμα சோமா: மனித, மிருக உடல்)

வவ. 14-17: கிரேக்க ஸ்தொயிக்க மெய்யறிவு, சமுதாயத்தின் ஒற்றுமை வேற்றுமையைக் காட்ட உடல் உறுப்புகளின் உருவக அணியை பாவித்தது தங்கியிருக்கும் தன்மையை விளங்கப்படுத்தியது. பவுல் இந்த ஒப்புவமையில் மூளையை அல்லது, தலையை அல்லது இதயத்தை உதாரணத்திற்கு எடுக்காதது அவரின் சிறந்த தெளிவைக்காட்டுகிறது. ஏனெனில் கிரேக்கர் அவற்றை ஆன்மாவின் உறைவிடமாகக் கொண்டு மற்றவற்றை இரண்டாம்தரப்படுத்தினர். கை, கால், கண், காது, இவை வெளியால் தெரியக்கூடிய அதிகமான வேலைகளைச் செய்கிற முக்கியமான உறுப்புக்கள். உயிரைப் பொறுத்தவரையில் இவை இரண்டாம் தர உறுப்புக்கள்;, ஏன் பவுல் இவற்றை சிந்தனைக்கு எடுக்கிறார் என்பதை நோக்க வேண்டும?

வவ. 18-20: கடவுளை சாட்சிக்கு எடுக்கிறார். உடலின் வேற்றுமையை தெரிவு செய்ய வேண்டியவர் கடவுள் ஒருவரே, அவருடைய வேலையை மனிதர் செய்ய வேண்டாம் எனச் சொல்கிறார்.

வவ. 21-23,24-26: உடலின் அதிசயத்தைக் காட்டுகிறார், வலுவற்றது தேவையாய் இருக்கிறது, மதிப்புக்குறைவானதும் மறைவானதும், மிக மதிப்பு பெறுகிறது. பலவீனமானவர்களை தெரிவு செய்வது முதல் ஏற்பாட்டிலும் எபிரேய சரித்திரத்திலும் மிக முக்கியமான கடவுளின் செயல். இதற்கான காரணம், பொறுப்புணர்சி, அக்கறை, பகிர்வு எனவும் விடையளிக்கிறார்.

வவ. 27-30: இங்குதான் பவுல் சொல்லவருகிற செய்தி இருக்கிறது. கிறிஸ்துவின் உடலான (σῶμα Χριστοῦ சோமா கிறிஸ்து) திருச்சபையின் பணியாளர்களை வரிசைப்படுத்துகிறார். திருத்தூதர், இறைவாக்கினர், போதகர்கள், வல்லசெயல் செய்வோர், குணமாக்குவோர், துணையாளர்க்ள, தலைவர்கள், பரவசப்பேச்சாளர்கள். தற்பெறுமை, கிறிஸ்துவின் உடலான திருச்சபையில் ஏற்றுக்கொள்ள பட முடியாதது என்பதே பவுலடியாரின் செய்தி. (இந்த நோய்க்கு இன்னும் திருச்சபையில் மருந்து முழுமையாக வரவில்லை என்பது ஆபத்தான உண்மை).

லூக்கா 1,1-4:4,14-21
1மாண்புமிகு தியோபில் அவர்களே, நம்மிடையே நிறைவேறிய நிகழ்ச்சிகளை முறைப்படுத்தி ஒரு வரலாறு எழுதப் பலர் முயன்றுள்ளனர்; 2தொடக்க முதல் நேரில் கண்டும் இறைவார்த்தையை அறிவித்தும் வந்த ஊழியர் நம்மிடம் ஒப்படைத்துள்ளவாறே எழுத முயன்றனர். 3அது போலவே நானும் எல்லாவற்றையும் தொடக்கத்திலிருந்தே கருத்தாய் ஆய்ந்து நீர் கேட்டறிந்தவை உறுதியானவை எனத் தெரிந்து கொள்ளும் பொருட்டு, 4அவற்றை ஒழுங்குப்படுத்தி உமக்கு எழுதுவது நலமெனக் கண்டேன்.
14பின்பு இயேசு தூய ஆவியின் வல்லமை உடையவராய்க் கலிலேயாவுக்குத் திரும்பிப் போனார். அவரைப் பற்றிய பேச்சு சுற்றுப்புறம் எங்கும் பரவியது. 15அவர் அவர்களுடைய தொழுகைக் கூடங்களில் கற்பித்து வந்தார். எல்லாரும் அவரைப்பற்றிப் பெருமையாகப் பேசினர்.16இயேசு தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு வந்தார். தமது வழக்கத்தின்படி ஓய்வுநாளில் தொழுகைக் கூடத்திற்குச் சென்று வாசிக்க எழுந்தார். 17இறைவாக்கினர் எசாயாவின் சுருளேடு அவரிடம் கொடுக்கப்பட்டது. அவர் அதைப் பிரித்தபோது கண்ட பகுதியில் இவ்வாறு எழுதியிருந்தது:
18'ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது; ஏனெனில்,
அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும்
சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வைபெறுவர்
என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும்
19ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார்.'
20பின்னர் அந்த ஏட்டைச் சுருட்டி ஏவலரிடம் கொடுத்துவிட்டு அமர்ந்தார். தொழுகைக்கூடத்தில் இருந்தவர்களின் கண்கள் அனைத்தும் அவரையே உற்று நோக்கியிருந்தன. 21அப்பொழுது அவர் அவர்களை நோக்கி, 'நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று' என்றார்.

வவ.1-4: யார் இந்த லூக்கா, யார் இந்த தியோபில்? (Θεόφιλος தியோபிலோஸ்) என்பவர்கள் இலகுவாக பதிலக்க முடியாதவர்கள். மாண்புமிகு வைத்தியர், லூக்கா தன்னுடைய நற்செய்தியின் நோக்கத்தை இங்கே பதிவுசெய்கிறார். தியோபில் என்பவர் ஆரம்ப கால மதிக்பட்ட இரண்டாம் தலைமுறை கிறிஸ்தவராக இருந்திருக்கலாம். தற்போது சிலர் இவரை அனைத்து கிறிஸ்தவர்களை குறிக்க லூக்கா பயன்படுத்திய ஒரு சொல் எனவும் காண்கின்றனர். லூக்கா தான் எழுதுவதற்கு முன்னர் பல நற்செய்திகள் இருப்பதையும் ஏற்றுக்கொள்கிறார், ஆக அவருடையது முதலாவதல்ல. அவர் எவ்வாறு எழுதினார் என்பதன் மூலம், லூக்கா ஒர் இரண்டாம் தலைமுறை கிறிஸ்தவர் என்பது வெளிப்பாடு. வரலாற்றில் முக்கியமானவர்களுக்காக ஆண்டவரின் வரலாற்றை எழுதுவது லூக்காவின் காலத்திற்கு முன்னரும் இருந்த ஒரு சாதாரண வழக்கம்.

வ. 14: நான்காம் அதிகாரத்தில் இயேசு ஆண்டவரின் பாலைவன தியானத்தைப் பார்க்கலாம். திருமுழுக்கு, பரம்பரை அட்டவணை, பாலைவன அனுபவம் என கடவுள் மெசியாவை தயார்படுத்தியதை அழகான காட்சிப்படுத்துகிறார், இந்த வைத்தியர். தூயஆவியார், லூக்கா நற்செய்தியிலும் திருத்தூதர்பணிகள் நூலிலும் அதிகமாக வருகிறவர். (லூக்கா 12 தடவைகளாக, தி.ப. 38 தடவைகளுக்கு மேலாக)

வவ. 15-16: இயேசு ஆண்டவர் கலிலேயாவிற்கும் நசரேத்திற்கும் போவது, முதல் ஏற்பாட்டில் கடவுள் ஆபிரகாமை சந்திக்க வருவதை ஞாபகப்படுத்துகிறது. ὑπέστρεψεν திரும்பிச்சென்றார் என்பதன் வாயிலாக கடவுள் எப்போதும் தன் மக்களின் இருப்பிடத்தையே உறைவிடமாகக் கொள்கிறார் என்பது, லூக்காவின் படிப்பினை. யோவானைப் போலல்லாது, ஆண்டவர் தொழுகைக்கூடத்தில் கற்பிக்கிறார், அனைவரும் அவரைப்பற்றி பேசுகின்றனர். இவை இயேசு ஆண்டவர்தான் மெசியா எனக்காட்டும் ஒப்பீட்டுச் செயல்.

வ. 17: சாதாரணமாக ஓய்வுநாளில் தோராவில் இருந்தும் இறைவாக்குகளிலிருந்தும் ஒன்றுமாக இரண்டு பாடங்கள் வாசிப்பது வழக்கம், ஆண்டவர் இரண்டாவதை தெரிவு செய்வது, கடவுள் இறைவாக்கிற்கு முக்கியத்துவம் கொடுப்பதனைப்போல் உள்ளது.

வவ. 18-19: இயேசு எசாயாவின் இறைவாக்கை சற்று மாற்றி வாசிக்கிறார். (எசா 61,1-2). ஆண்டவரின் ஆவி, அருட்பொழிவு (מָשַׁח மாஷா), ஏழைகளுக்கு நற்செய்தி, சிறைப்பட்டோருக்கு விடுதலை (எசாயா: உடைந்த இதயங்களை ஒன்று சேர்க்க), பார்வையற்றோருக்கு பார்வை, ஒடுக்கப்பட்டோருக்கு விடுதலை, அருள் ஆண்டை அறிவிக்க என்று இயேசு வாசிக்கிறார், ஆனால் ஆண்டவரின் பழிவாங்கும் நாளை அறிக்கையிடும் செயலை இயேசு கூறாமலே ஏட்டை சுருட்டுகிறார். லூக்காவின் கடவுள் ஆசிர்வதிக்கிறவா,; பழி வாங்குபவரல்ல.

வவ. 20-21: இயேசுவின் அமர்தலும், அனைவரின் பார்வையும் அவரைநோக்கியிருப்பதும், இயேசுவை புதிய மோசேயாகவோ, அரசராகவே அல்லது மேலாக, கடவுளாகவே காட்டுவதைப்போல அமைக்கப்பட்டிருக்கிறது.

வசனம் 21, ஆண்டவரின் தீர்ப்பு அல்லது விளக்கம் போல வருகிறது. மக்கள் அதனை எவ்வாறு எடுக்கிறார்கள் என்பதிலிருந்துதான், ஆண்டவர் அவர்களோடு அங்கிருப்பாரா அல்லது வெளியே செல்வாரா என்பது அமையும்.

சட்டங்கள் தேவையானவை, அவை மனிதனுக்கு தெய்வீகத்தை கொடுக்க ஏற்படுத்தப்பட்டவை. சட்டங்களை அதன் விளக்கம் இல்லாமல் பயன்படுத்தினால் மனிதன் பயங்கரவாதிகளாக மாறி, கடவுளைக்கூட பாவியாக பார்ப்பான், சட்டமே இல்லாமல் சுய நலத்தோடே மட்டும் நினைத்ததை எல்லாம் செய்தால் கடவுளைக்கூட கல்லாக மட்டுமே பார்ப்பான். இந்த இரண்டு வகை மனிதர்களே இன்று உலகை ஆக்கிரமித்துள்ளனர்.

ஆண்டவரில் மகிழ்ச்சி அது வல்லமை!
மீண்டும் உமது அருளின் ஆண்டை அறிவிக்க வாரும் ஆண்டவரே, ஆமென்.

உரோமை
மி. ஜெகன்குமார் அமதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குருத்தோலை ஞாயிறு (இ) 13.04.2025 - Palm Sunday

  குருத்தோலை   ஞாயிறு  ( இ ) 13.04.2025   Fr. M. Jegankumar Coonghe OMI, ‘Nesakkarangal,’ Iyakachchi, Jaffna.     முதல்   ...