வியாழன், 14 ஜனவரி, 2016

The Second Sunday of the Ordinary Time, 17,01,2016




பொதுக்காலம் இரண்டாம் வாரம் (ஆண்டு இ)

முதலாம் வாசகம்: எசாயா 62,1-5

1சீயோனின் வெற்றி வைகறை ஒளியெனவும், அதன் மீட்பு சுடர் விளக்கெனவும் வெளிப்படும்வரை, அதனை முன்னிட்டு மவுனமாயிரேன்; எருசலேம் பொருட்டுச் செயலற்று அமைதியாயிரேன். 2பிறஇனத்தார் உன் வெற்றியைக் காண்பர்; மன்னர் யாவரும் உன் மேன்மையைப் பார்ப்பர்; ஆண்டவர் தம் நாவினால் சூட்டும் புதியதொரு பெயரால் நீ அழைக்கப்படுவாய். 3ஆண்டவரின் கையில் நீ அழகிய மணிமுடியாகத் திகழ்வாய்; உன் கடவுளின் கரத்தில் அரச மகுடமாய் விளங்குவாய். 4'கைவிடப்பட்டவள்' என்று இனி நீ பெயர்பெற மாட்டாய்; 'பாழ்பட்டது' என இனி உன் நாடு அழைக்கப்படாது; நீ 'எப்சிபா' என்று அழைக்கப்படுவாய்; உன் நாடு 'பெயுலா' என்று பெயர் பெறும். ஏனெனில், ஆண்டவர் உன்னை விரும்புகின்றார்; உன் நாடு மணவாழ்வு பெறும். 5இளைஞன் கன்னிப் பெண்ணை மணப்பதுபோல உன்னை எழுப்பியவர் உன்னை மணந்து கொள்வார்; மணமகன் மணப்பெண்ணில் மகிழ்வதுபோல் உன் கடவுள் உன்னில் மகிழ்வார்.

இது சீயோனின் மகிமை என்னும் மூன்றாம் எசாயாவின் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. திருப்பாடலையொத்த அழகுற அமைக்கப்பட்ட ஒரு பாடல் போல இது தோன்றுகிறது. இங்கே எருசலேம் அல்லது சீயோன், திருமணத்திற்கு அல்லது கனவனுக்காக ஏங்கும் இளம்பெண்போல உருவகிக்கப்பட்டுள்ளது. இன்றைய வாசகத்திலே கடவுள்தாமே முயற்சியெடுத்து எருசலேமை திருமணம்முடிப்பதாகவும் அவளது துன்பத்தை தீர்த்துவைப்பதாகவும் அமைக்கப்பட்டுள்ளது. இது ஷநீங்கள் என்னை தேர்ந்து கொள்ளவில்லை நான்தான் உங்களைத் தேர்ந்துகொண்டேன் எனும் ஆண்டவரின் வார்த்தைகளை ஞாபகப்படுத்துகிறது. (யோ 15,16: தி.பா 89,3)

வ.1. வைகறை ஒளியும், சுடர் விளக்கும் வெளிச்சத்தையும் விடியலையும் குறிக்கும். ஆண்டவரின் தெரிவும் அவருடைய அன்பும் இஸ்ராயேல் மக்களுக்கு அவ்வாறான விடியலைக் கொணர்கிறது என்கிறார் எசாயா. வெளிச்சம் இருளுக்கு எதிராகவும், வெளிச்சம் அல்லது ஒளி கடவுளுடைய திருவெளிப்பாட்டையும் இங்கு குறிக்கின்றது.

வ.2. எருசலேம் அழிக்கப்பட்டபோது புறவினத்தவர்களும் மன்னர்களும் அதனைப்பார்த்தனர்,
இப்பபோது இது இஸ்ராயேலின் நேரம் அதே புறவினத்தவர்களும் மன்னர்களும் எருசலேமின் மாட்சியைக் காண்பர். அத்தோடு அழிந்து போன எருசலேமிற்கு ஆண்டவர் புதியபெயர் ஒன்று
சூட்டுகிறார். புதிய பெயரை வைத்தலானது புதிதாய் பிறத்தலையோ அல்லது பழைய வாழ்கையிலிருந்து புதியவாழ்கைக்கு வருவதையோ காட்டும். வரலாற்றில் துறவிகள் துறவறத்தில் புதிய பெயர்களை பெற்றுக்கொண்டனர், அரசர்களும் அரியணை ஏறும்போது புதிய பெயர்களை எடுத்தனர். திருத்தந்தையரும் தெரிவின் பின்னர் ஒரு புதிய பெயரை எடுக்கின்றனர். ஈழத்தில் போராளிகளும் அமைப்பில் சேர்ந்து புதிய பெயரை எடுத்தனர். இஃது புதிய பெயர் என்பது ஒரு விசேட நிகழ்வு என்பதனைக் காணலாம்.

வ.3. மக்கள் மத்தியில் இகழ்சிக்குட்பட்டிருந்த எருசலேம் இப்போது அழகிய மணிமுடியாகவும், அரச மகுடமாகவும் விளங்கும் என்பது. இஸ்ராயேலின் புதிய மாட்சியைக் காட்டுகிறது.

வ.4. எருசலேமின் பழையபெயர்கள் ஷஷகைவிடப்பட்டவள்||; (עֲזוּבָה அட்சூவா),
பாழ்பட்டது (שְׁמָמָ֔ה ஷெமாமா), புதிய பெயர் எப்சிபா (חֶפְצִי־בָ֔הּ அவளில் மகிழ்ச்சி) மற்றும் பெயுலா (בְּעוּלָה மணமானவாள்). இதற்க்கு காரணம் ஆண்டவர் எருசலேமை திருமணம் முடிக்கிறார். முதற்ஏற்பாட்டில் திருமணம் என்பது புதிய வாழ்வையும், பாதுகாப்பையும் ஒவ்வொரு இளைஞனும் யுவதியும் விரும்பும் வாழ்வின் உச்சத்தையும் குறிக்கிறது.

வ.5. இளைஞன் கன்னிப்பெண்னை மணத்தல் என்பது சந்தோசத்தின் உச்ச வெளிப்பாடு. இங்கே இளைஞன் என்பவர் இஸ்ராயேலை உருவாக்கிய இறைவன். கடவுளுக்கு வயது கிடையாது. அவர் என்றுமே இருக்கிறவர். இங்கே யுவதி எருசலேம் நகர், அதாவது புதிதாய் பிறந்த அழகிய நகர். புதிதாய் திருமணமானவர்கள் பிரியமாட்டார்கள், அதே போல கடவுள் பிரியமாட்டார் என்கிறார்.


திருப்பாடல் 96
பல்லவி: அனைத்து மக்களுக்கும் ஆண்டவரின் வியத்தகு செயல்களை அறிவியுங்கள். ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்

திருப்பாடல்கள் 93-100 ஆனவை ஷஎருசலேமிற்கு புகழ்சி| என்ற புகழ் பாடல் வகையைச் சார்ந்;தவை. இன்றைய திருப்பாடல் (96), 13 வரிகளைக் கொண்டு, எதுகை மோனை ஏற்று அழகாக அமைக்கப்பெற்று, ஆண்டவரே அனைத்துலகின் அரசர் என்று பாடுகிறது. ஆண்டவர் மட்டுமே அணைத்துலகின் அரசராக இருக்க முடியும் என்பது எபிரேயர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை, மனிதர்கள் மனிதர்கள் மேல் எவ்வாறு அரசர்களாக இருக்க இயலும் என்னும் கேள்வி விவிலியத்தில் பல வேளைகளில் தோன்றி மறைவதைக் காணலாம். இப்பாடல் ஆண்டவரை ஏன் அனைவரும் போற்ற வேண்டும் என விளக்கம் கொடுக்கிறது:

அ. அவர் வியத்தகு செயல்கள் செய்பவர்
ஆ. அவர் மாட்சி மிக்கவர், தெய்வங்களுக்கு மேலானவர், மற்றவை வெறும் சிலைகளே
இ. அவரே உலகனைத்தையும் படைத்தவர்
ஈ. ஆண்டவரே ஆட்சிசெய்கிறார், அவரது நீதி வழுவாது
உ. அவர் மண்ணுலகிற்கு நீதி வழங்க வருகிறார், உண்மையுடன் தீர்ப்பிடுவார்.
இவ்வாறான ஆண்டவரை மக்களினம் புகழவேண்டும் அத்தோடு முழு படைப்புக்களும் புகழ வேண்டும் என்கிறார்.


இரண்டாம் வாசகம், திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 12: 4-11
4அருள்கொடைகள் பலவகையுண்டு; ஆனால் தூய ஆவியார் ஒருவரே. 5திருத் தொண்டுகளும் பலவகையுண்டு; ஆனால் ஆண்டவர் ஒருவரே. 6செயல்பாடுகள் பலவகையுண்டு; ஆனால் கடவுள் ஒருவரே. அவரே எல்லாரிடமும் எல்லாவற்றையும் செயல்படுத்துபவர். 7பொது நன்மைக்காகவே தூய ஆவியாரின் செயல்பாடுகள் ஒவ்வொருவரிலும் வெளிப்படுகிறது. 8தூய ஆவியார் ஒருவருக்கு ஞானம் நிறைந்த சொல்வளத்தை அருளுகிறார். இன்னொருவருக்கோ அதே ஆவியார் அறிவுசெறிந்த சொல்வளத்தை அளிக்கிறார். 9அதே ஆவியார் வேறொருவருக்கு நம்பிக்கை அருளுகிறார். அந்த ஒரே ஆவியார் மற்றொருவருக்குப் பிணிதீர்க்கும் அருள் கொடையையும் அளிக்கிறார். 
10.தூயஆவியார் ஒருவருக்கு வல்ல செயல் செய்யும் ஆற்றலையும் இன்னொருவருக்கு இறைவாக்குரைக்கும் ஆற்றலையும் வேறொருவருக்கு ஆவிக்குரியவற்றைப் பகுத்தறியும் ஆற்றலையும் மற்றொருவருக்குப் பல்வகை பரவசப் பேச்சு பேசும் ஆற்றலையும் பிறிதொருவருக்கு அப்பேச்சை விளக்கும் ஆற்றலையும் அருளுகிறார். 
11அந்த ஒரே ஆவியாரே இவற்றையெல்லாம் செயல்படுத்துகிறார்; அவரே தம் விருப்பம்போல் ஒவ்வொருவருக்கும் இவற்றைப் பகிர்ந்தளிக்கிறார்.

பவுலுடைய காலத்தில் உடம்பைப்பற்றிய தவறான கருத்துக்களும், மெய்யென்பது உயிரைவிட தாழ்வானது என்ற கிரேக்க தத்துவவியல் சிந்தனைகளை பவுல் எதிர்பதைக் கொரிந்தியருக்கெழுதிய திருமுகத்தில் காணலாம். πνευματικός புனுஉமாடிகோஸ் என்னும் கிரேக்கச் சொல் உண்மையில் ஆவிசார்ந்தவையையே குறிக்கிறது. பவுல் அதற்க்கு ஷஆவிசார்ந்த அருட்கொடைகள்| (τῶν πνευματικῶν டோன் புனுஉமாடிகோன்) என்னும் புது விளக்கம்கொடுத்து அதை உடம்போடு இனைத்துக்காட்டி, மெய்யின் தூய்மையை விளஙகப்படுத்துகிறார். இன்றைய வாசகப் பகுதி, ஆரம்ப கால கிறிஸ்தவர்களுக்கிடையிலிருந்த பிரிவினைகளையயும், அருட்கொடைகளைப்பற்றிய தவறான சிந்தனைகளையும் எவ்வாறு பவுல் தீர்கிறார் எனக் காட்டுகிறது.

வ.4-6: அ. அருட்கொடைகள் (χάρισμα காரிஸ்மா), ஆ. திருத்தொண்டுகள் (διακονία தியாகோனியா), இ. செயல்பாடுகள் (ἐνέργημα எனேர்கெமா) போன்றவை பலவகையிருக்கலாம் அனால் அவற்றின் மூலமும் ஊற்றும் ஆக இருப்பது ஆவியானவரே, ஆண்டவரே, கடவுளே என்று ஒருமையில் காட்டி, திரித்துவ ஒருமைபோல அருட்கொடைகளின் நிறைவும் அமைதிக்காகவே இருக்க வேண்டும் என்கிறார்.

வ. 7: இதுதான் இந்தப்பகுதியின் மைகக்கருத்து: ஆவியாரின் கொடைகள் ஷபொது நன்மைக்கே| கொடுக்கப்பட்டது என்பதை அதனைக் கொண்டுள்ளவர்கள் உணரவேண்டும் என்கிறார். (பொது நன்மை என தமிழில் மொழிபெயர்கப்பட்டுள்ள இச்சொல் கிரேக்க மூலத்தில் ஷஒன்றாகசேர்தலைக்| குறிக்கும்). பல தலத் திருச்சபைகளில் அருட்கொடைகள் மக்களை பிளவுபடுத்துவதை ஏற்க முடியாது.

வ. 8-10: அருட்கொடைகள் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன.
1.மெய்யறிவு நிறைந்த சொல் வளம் (λόγος σοφίας லோகோஸ் சோபியாஸ்)
2.அறிவுள்ள சொல்வளம் (λόγος γνώσεως லோகோஸ் குனோசெயோஸ்)
3.நம்பிக்கை (πίστις பிஸ்டிஸ்)
4.பிணிதீர்கும் அருள் (χαρίσματα ἰαμάτων காரிஸ்மாடா இமாடோன்)
5.வல்லசெயல் செய்யும் அற்றல் (ἐνεργήματα δυνάμεων எனேர்கெமாடா துனாமெயோன்)
6.இறைவாக்கு (προφητεία புரோஃபேடேய்யா)
7.ஆவிக்குரியவற்றை பகுத்தறியும் ஆற்றல் (διακρίσεις πνευμάτων தியாகிரிசெய்ஸ் புனுமாடோன்)
8.பல்வகைப் பரவசப்பேச்சு (γένη γλωσσῶν கெனே குலோஸ்ஸோன்)
9.பரவசப்பேச்சசை விளக்கும் ஆற்றல் (ἑρμηνεία γλωσσῶν எர்மேனேய்யா குலோஸ்ஸோன்)

வ.11: இதுதான் இந்தப்பகுதியின் முடிவுரை. கொடைகள் பலவகையாக இருந்தாலும், அதனை தருபவரும், அதனைத் செயல்படுத்துபவரும் ஆவியான ஒருவரே, கடவுளே. ஆகவே பிரிவினைகளும், உயர் தாழ் மனப்பான்மைகளும் இயல்பிலேயே தவறானவை என்கிறார். அருட்கொடைகளைப்பற்றி பெருமைபாராட்டாது அதனை தரும் ஆவியானவரையே பற்றிக் கொள்ள வேண்டும்.
யாதும் ஊரே யாவரும் கேளீர்

நற்செய்தி வாசகம்: 
யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 1-12
1மூன்றாம் நாள் கலிலேயாவில் உள்ள கானாவில் திருமணம் ஒன்று நடைபெற்றது. இயேசுவின் தாயும் அங்கு இருந்தார். 2இயேசுவும் அவருடைய சீடரும் அத்திருமணத்திற்கு அழைப்புப் பெற்றிருந்தனர். 3திருமண விழாவில் திராட்சை இரசம் தீர்ந்து போகவே இயேசுவின் தாய் அவரை நோக்கி, 'திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது' என்றார். 4இயேசு அவரிடம், 'அம்மா,⁕ அதைப்பற்றி நாம் என்ன செய்யமுடியும்? எனது நேரம் இன்னும் வரவில்லையே' என்றார். 5இயேசுவின் தாய் பணியாளரிடம், 'அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்' என்றார்.
6யூதரின் தூய்மைச் சடங்குகளுக்குத் தேவையான ஆறு கல்தொட்டிகள் அங்கே இருந்தன. அவை ஒவ்வொன்றும் இரண்டு மூன்று குடம் தண்ணீர்கொள்ளும். 7இயேசு அவர்களிடம், 'இத்தொட்டிகளில் தண்ணீர் நிரப்புங்கள்' என்று கூறினார். அவர்கள் அவற்றை விளிம்பு வரை நிரப்பினார்கள். 8பின்பு அவர், 'இப்போது மொண்டு பந்தி மேற்பார்வையாளரிடம் கொண்டு போங்கள்' என்று அவர்களிடம் கூறினார். அவர்களும் அவ்வாறே செய்தார்கள். 9பந்தி மேற்பார்வையாளர் திராட்சை இரசமாய் மாறியிருந்த தண்ணீரைச் சுவைத்தார். அந்த இரசம் எங்கிருந்து வந்தது என்று அவருக்குத் தெரியவில்லை; தண்ணீர் மொண்டு வந்த பணியாளருக்கே தெரிந்திருந்தது. ஆகையால் பந்தி மேற்பார்வையாளர் மணமகனைக் கூப்பிட்டு, 10'எல்லாரும் நல்ல திராட்சை இரசத்தை முதலில் பரிமாறுவர்; யாவரும் விருப்பம் போலக் குடித்தபின்தான் தரம் குறைந்த இரசத்தைப் பரிமாறுவர். நீர் நல்ல இரசத்தை இதுவரை பரிமாறாமல் ஏன் வைத்திருந்தீர்?' என்று கேட்டார்.
11இதுவே இயேசு செய்த முதல் அரும் அடையாளம். இது கலிலேயாவில் உள்ள கானாவில் நிகழ்ந்தது. இதன் வழியாக அவர் தம் மாட்சியை வெளிப்படுத்தினார். அவருடைய சீடரும் அவரிடம் நம்பிக்கை கொண்டனர். 12இதன் பிறகு அவரும் அவர் தாயும் சகோதரர்களும் அவருடைய சீடரும் கப்பர்நாகும் சென்று அங்குச் சில நாள்கள் தங்கியிருந்தனர்.

யோவான் நற்செய்தியை வாசிப்பதற்கு முன் யோவான் நற்செய்தியின் ஆசிரியர் இயேசுவை, இறைவன், மெசியா, இறைமகன், என்பதனை ஒவ்வொரு வார்த்தையிலும் விளக்குவதை அவதானமாக நோக்குவோம். சில ஆய்வாளர்கள் யோவான் நற்செய்தியின் 2-12 அதிகாரங்களை அடையாளங்களின் பகுதியாக பார்க்கின்றனர். இன்றைய வாசகம் ஆண்டவருடைய முதலாவது அடையாளம் என்ற கானான் ஊர் திருமணவிழாவைக் காட்டுகிறது. யோவான் நற்செய்தியில் ஷஅடையாளம்| எனச்சொல்லக் காரணம், இயேசுவின் ஓர் அடையாளம் பின்னர் அதே தொடக்க பகுதியில் படிப்பினைகளைக் கொண்டுவரும். இந்த நற்செய்தியில் அடையாளங்கள் மெசியாவின் யுகத்தைக் குறிக்கிறது. பழையன புதிதாக மாறுவதை யோவான் அழகாக காட்டுவார்.


வ.1-2: கானா என்கிற ஊர், யோர்தான் நதியிலிருந்து (இயேசு திருமுழுக்கு பெற்ற யோர்தான் பகுதி) மூன்று நாள் நடை தொலைவிலிருந்தது. இயேசுவின் தாய் இங்கிருப்பதன் மூலம் இயேசு தாயும்
சமூக வாழ்வில் இருந்ததைக் காணலாம். இயேசு சீடர்களோடு இங்கு வருவது, பாலைநில அல்லது தனிமை வாழ்வை தெரிவுசெய்யாமல் சமூக வாழ்வை தனக்கும் தன் சீடர்களுக்கும் (தாய்க்கும்) தெரிவுசெய்வது இயேசுவின் தனித்துவத்தைக் காட்டுகிறது.

வ.3: இரசம் (οἶνος ஒய்னோஸ்), முதல் ஏற்பாட்டில் மெசியாவின் காலம் புலருவதைக் குறிக்கிறது. (காண் ஆமோஸ 9,13-14: யோவேல் 3,18). இங்கே நிச்சயமாக மெசியாவைக் காட்டவே யோவானின் கழுகுப் பார்வை செல்கிறது எனக் கொள்ளலாம். இரசம் தீர்ந்துவிட்டது என்று மரியா தன் மகனிடம் சொல்வது, அவர் மற்றவரின் சிக்கலில் எவ்வளவு கரிசனையாக இருந்தார் என்பதைக் காட்டுகிறது. திருமணவீட்டில் இரசம் தீர்ந்தால் அது மணமக்களுக்கு அவமானமாக அமையலாம். (நமக்கு திருமண வீட்டில் சோறு போல)

வ.4: இந்த வசனத்தை மிக  கவனமாக நோக்கவேண்டும். இயேசுவின் விடையாக (τί ἐμοὶ καὶ σοίஇ γύναι;) உமக்கும் எனக்கும் என்ன? பெண்ணே! (நேரடி மொழி பெயர்பு) என்ற கேள்விவருகிறது. ஏன் தனது தாயை பெண் என்கிறார் இயேசு. இந்த சொல்லின் மேல் பல சொற்போர்களே நடந்திருக்கறது. இதனுடைய முழுமையான விளக்கத்தை இதுவரை யாரும் கொடுக்கவில்லை. சில கருத்துக்கள்:

அ. அரேமேயிக்க-எபிரேய பிள்ளைகள் தாயை பெண்னென்று அழைப்பதில்லை. (இத்தாலியில் சில நகரவாசிகள் தங்கள் பெற்றோர்களை பெயர்சொல்லி அழைப்பார்கள், நாகரீகம்!). யோவான் இயேசுவைக் கடவுள் என்று வாசகர்களுக்கு நினைவூட்ட இச்சொல்லை பயன்படுத்தியிருக்கலாம்.

ஆ. இயேசு இன்னொரு முக்கியமான இடத்திலும் மரியாவை பெண்ணே என்றே அழைக்கிறார். (காண் யோவான் 19,26) இரண்டு இடத்திலும் நற்செய்தியாளர் மரியாவை இயேசுவின் தாய் என்றே எழுதுவதை அவதானிக்க வேண்டும்.

இ. இங்கே நோக்கப்படவேண்டியவர் இயேசுவும் அவரது அடையாளமும். அன்புச் சீடரும், மரியாவை இறுதிவரை பாராமரித்தவருமான யோவான், மரியாவை இகழ்சிப்படுத்தினார் எனபதை ஏற்க முடியாது.

வ.5: இது திருமணவீட்டாருக்கு மட்டுமல்ல மாறாக நமக்கும் மரியாவின் கட்டளை. இந்த வசனம், மரியா இயேசு நிச்சயமாக உதவிசெய்வார் என்பதை நம்பினார் எனக் காட்டுகிறது. இருவர்கிடையிலிருந்து புரிந்துணர்வையும் காட்டுகிறது.

வ. 6-8: தண்ணீர் முதல் ஏற்பாட்டில் மனித தூய்மையாக்கும் ஒரு சடப்பொருளையே குறிக்கும். இங்கே சாடிகள் நிரப்பப்படுவது, கடவுள் மனிதனை அடுத்த நிலைக்கு உயர்த்துவதைக் குறிக்கலாம். சிலர் பழைய சடங்குகளை இயேசு புதியதாக்குகிறார் என்று இதனைப் பார்க்கின்றனர்.

வ. 9-10: திருமணவிழாக்களில் விருந்தினர் மது மயக்கத்தில் இருக்கும் போது இரண்டாம் தர இரசத்தை தருவது வழக்கம், இங்கே இயேசு தரும் இரசம் எந்த இரசத்தையும்விட மேலானது என்று, மேற்பார்வையாளரின் கேள்வி மூலமாக காட்டுகிறார் யோவான்.

வ. 10-11: இந்த வரிகள் இயேசுவின் இந்த அடையாளத்தின் நோக்கத்தை காட்டுகிறது. சீடர்கள் நம்பினர், இயேசுவோடு சென்றனர். இயேசு மரியாவோடு இருந்தார் என்பதை யோவான் காட்ட மறக்கவில்லை. இதன் மூலமாக மரியா தொடர்ந்தும் இயேசுவின் உலகத்திலே இறுதிவரை இருந்தார் என்கிறார்.

இன்றைய உலகிலும் இரசம் தீர்ந்துவிட்டதை காணலாம். உலகம் நல்ல இரசம் இல்லாததால் அசுத்தமானதை பகிர்ந்து மேலும் பிரச்சனைகளை கூட்டுகிறது. நல்ல இரசத்தை தர நல்ல இயேசுவை வேண்டுவோம். அன்னை மரியாவை பரிந்து பேச சொல்லுவோம். அவர் சொன்ன படி, இயேசு சொல்வதெல்லாம் செய்ய முயல்வோம். ஆமென்.

அன்புடன்

மி. ஜெகன் குமார்
உரோமை


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆண்டின் பொதுக்காலம் முப்பத்திநான்காம் வாரம் கிறிஸ்து அரசர் பெருவிழா:  Our Lord Jesus Christ, King of the Universe 24.11.2024

ஆண்டின் பொதுக்காலம் முப்பத்திநான்காம் வாரம்   கிறிஸ்து அரசர் பெருவிழா :  Our Lord Jesus Christ, King of the Universe 24.11.2024 இய...