வியாழன், 28 ஜனவரி, 2016

The Fourth Sunday in Ordinary Times, C. 31,01,2016.


31.01.2016 ஆண்டின் பொதுக்காலம் 4ஆம் ஞாயிறு
முதல் வாசகம் எரேமியா 1,4-5.17-19
4எனக்கு அருளப்பட்ட ஆண்டவரின் வாக்கு: 5'தாய் வயிற்றில் உன்னை நான் உருவாக்கு முன்பே அறிந்திருந்தேன்; நீ பிறக்குமுன்பே உன்னைத் திருநிலைப்படுத்தினேன்; மக்களினங்களுக்கு இறைவாக்கினனாக உன்னை ஏற்படுத்தினேன்.'
17நீயோ உன் இடையை வரிந்து கட்டிக்கொள். புறப்படு, நான் கட்டளையிடும் அனைத்தையும் அவர்களிடம் சொல். அவர்கள் முன் கலக்கமுறாதே. இல்லையேல், அவர்கள் முன் உன்னைக் கலக்கமுறச் செய்வேன். 18இதோ, இன்று நான் உன்னை நாடு முழுவதற்கும், அதாவது, யூதாவின் அரசர்களுக்கும் அதன் தலைவர்களுக்கும் அதன் குருக்களுக்கும் நாட்டின் மக்களுக்கும் எதிராக அரண்சூழ் நகராகவும் இரும்புத் 
தூணாகவும் வெண்கலச் சுவராகவும் ஆக்கியுள்ளேன். 19அவர்கள் உனக்கு எதிராகப் போராடுவார்கள். எனினும் உன்மேல் வெற்றி கொள்ள அவர்களால் இயலாது. ஏனெனில் உன்னை விடுவிக்க நான் உன்னோடு இருக்கிறேன்' என்கிறார் ஆண்டவர்.

எரேமியா, முதல் ஏற்பாட்டில், பிந்திய இறைவாக்கினருள் மிகவும் முக்கியமானவர். தென்நாட்டு யூதேயாவில் மிக வளமான காலங்களில் இருந்து மிக கடினமான காலங்களில் இறைவாக்குரைத்தவர். (יִרְמְיָהוּ யிர்மெயாகு)  (எரேமியா) - என்றால் கடவுள் ஒளிர்கிறார், ஒளிர்கின்ற கடவுள், என்றும் பொருள் படும். ஐந்து யூதேயாவின் அரசர்களின் காலத்தில் இறைவாக்குரைத்த இவர், இறுதியாக எருசலேம் பாபிலோனியர்களினால் அழிந்த போது அதையும் தம் கண்களால் கண்டவர் இவர். இவருடைய காலத்தில்தான் எருசலேமில் இளம் அரசரான யோசியா தமது சமய மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார், ஹூல்டா என்ற பெண் இறைவாக்கினரும், எரேமியாவுடைய காலத்தைச் சார்ந்தவரே. அடையாளங்கள் மூலமாக இறைவாக்குரைப்பதில் வல்லவரான எரேமியா, பழைய ஏற்பாட்டில் இயேசுவை அடையாளப்படுத்துகிறார் என்பர் கிறிஸ்தவ ஆய்வாளர்கள். உருவகங்கள் வாயிலாக பேசுவது, தமது சொந்த மக்களாலேயே புறக்கனிக்கப்பட்டது, மக்களுக்காகவும் எருசலேமிற்காகவும் கண்ணீர்விட்டது, சிறைப்படுத்தப்பட்டது, உயிர்தியாகம் செய்தது போன்றவை இயேசு ஆண்டவரின் வாழ்வை ஒத்திருந்ததை மறக்க இயலாது, இதனால் தானோ என்னவோ, சிலர் இயேசுவை எரேமியா என்றும் எண்ணினர் (காண். மத் 16,14).

வவ. 4-5: இறைவாக்கினர்கள் பலர் இருந்த காலத்தில் உண்மை இறைவாக்கினர்கள் தமது உண்மைத்தன்மையை தெளிவாக்க வேண்டிய தேவையில் இருந்தனர். இந்த வசனங்கள் மூலமாக எரேமியா, தான் உண்மையான இறைவாக்கினர் எனவும், கடவுள்தான் தன்னை தெரிந்தெடுத்தார் என்றும் சொல்ல விளைகின்றார். தாயின் கருவில் என்று சொல்லாமல் தாய் வயிற்றில் என்று சொல்லி எபிரேய சிந்தனையை ஆசிரியர் உணர்த்துகிறார். (בֶּטֶן பெதென்) அடிவயிறு அல்லது வயிறு என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானது, ஆசைகள், உணர்வுகளின் முக்கிய இடமாகிய இது மனிதர்களின் முக்கியமான உறுப்பாகக் கருதப்பட்டது. இன்றைய உணர்வு வார்த்தைகளில் இதனை தாயின் மடி அல்லது மார்பு என்றுகூட பொருள்கொள்ளலாம். இந்த வார்த்தைகள், ஆண்டவர் பிள்ளைகளை எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து படைக்கிறார் என்பதை புலப்படுத்துகின்றன. இந்த இரண்டு வரிகளும் கவிதை நடையில் உள்ளதை அவதானிக்கலாம். 5வது வசனத்தை, 'கற்பத்தில் இருந்து நீ வெளியே போகும் முன்பே உண்னை திருநிலைப்படுத்தினேன்' என்று மொழிபெயர்கலாம். மக்களினங்களுக்கு இறைவாக்கினன் என்பதன் மூலம், கடவுளையும் இறைவாக்கையும் யாரும் சுய உரிமை கொண்டாட முடியாது என்று சொல்கிறார் போல. 

வவ. 17-19: 'இடையைக் கட்டுதல்' (תֶּאְזֹ֣ר מָתְנֶ֔יךָ), ஒரு மரபுக்கூற்று அல்லது குழுகுக் குறி. இது தயார் நிலையைக் குறிக்கும். அனைத்தையும் சொல் என்பது, இறைவாக்கினர் கடவுள் சொல்வதை மட்டும் சொல்ல வேண்டும் எனும் இறைவாக்கு விழுமியத்ததைக் காட்டுகிறது. நாடு, அரசர், தலைவர்கள், குருக்கள், மக்கள் என அனைவரும் இறைவாக்கினுள் உள் வாங்கப்படுகிறார்கள். அரண்சூழ் நகர், இரும்புத் தூண், வெண்கலச் சுவர், போன்றவை அக்கால அசைக்கமுடியாத பலமான ஆயூதங்களைக்  குறிப்பவை. இன்றைய அணுவாயுதங்களைப் போல. 19வது வசனம், சொந்த மக்களை எதிரி நாட்டு படைகளைப்போல காட்டுகிறது. இந்த வசனங்கள், இறைவாக்குரைத்தல் எவ்வளவு கடினமானது ஆபத்தானது என அடையாளப் படுத்துகின்றன. இங்கே இன்னொரு அடையாளத்தையும் காணலாம். பாபிலோனியர்கள் எருசலேமை தாக்கியபோது, அரணான கடவுளைப் பற்றாமல், எகிப்தை நாடியதாலே எருசலேம் அழிந்தது என்பர் ஆய்வாளர்கள். போர் சொற்பதங்களைப் பாவித்து, உண்மையில் காக்கிறவர் கடவுளே, மனிதர்கள் அல்ல என, தமது வாழ்வின் அழைப்பு மூலமாக விவரிக்கிறார். (ஈழ விடுதலை தனியே அரசியல் தலைவர்களிலும், அயல் நாடுகளிலும் இல்லை. மாறாக கடவுளில் அடித்தளமிடப்பட்ட நல்ல விழுமிய, கல்வி, பாரம்பரிய, விசுவாச உருவாக்குதலிலும் உள்ளது என்று எரேமியா சொல்வதாக தோன்றுகிறது). ஆண்டவர் எரேமியாவோடு இருந்தார், எரேமியாவும் ஆண்டவரோடு இருந்தார். நாமும் இருந்தால் நல்லது.   
பதிலுரைப்பாடல்
திருப்பாடல் 71
தலையங்கம் இல்லாத திருப்பாடல்களில் ஒன்றான இப்பாடல், தி.பா 70வதை பல வழிகளில் ஒத்திருக்கிறது. அவமானம், குழப்பம், விடுதலை, மீட்பு, பகைவர்கள் விவவிரிப்பு, அவசரமான செபம் மற்றும் புகழ்ச்சி போன்றவற்றை இவ்விரு பாடல்களிலும் காணலாம். இப்பாடல் ஆசிரியர் சிறுவயதிலிருந்தே கடவுளை உடன்படிக்கையின் கடவுளாக அறிந்திருக்கிறார். מִנְּעוּרָי என் இளமை முதல். தனது நம்பிக்கையையே இப்போது செபமாக பாடுகிறார். தான் விசுவாசியாக இருந்ததனால் தனது செபம் கேட்கப்படும் என்பது இவரது நம்பிக்கை. கடவுள் தன்னை விட்டு தூரம் சென்றுவிட்டார் என்று சொல்லியே பகைவர்கள் தன்னை துன்புறுத்துவதாக் கூறுகின்ற இவர், தான் கடவுளை புகழ்ந்துகொண்டே இருப்பேன் என்று பதிலளிக்கிறார். இவ்வரிகள் இஸ்ராயேல் விசுவாசத்தில் மிக முக்கியமான ஒன்று, என்ன துன்பம் வந்தாலும் கடவுளோடு இருப்பது. வாழ்க்கையில் துன்பங்கள்; உண்டு என்பதை ஏற்றுக்கொள்கிற இவர், அனைத்திற்கும் ஒரே வழி கடவுள்தான் எனவும் சொல்கிறார். கடவுளை, קְד֗וֹשׁ יִשְׂרָאֵֽל (கெடோஷ் யிஸ்ராயேல்), என்று விளிப்பது மிகவும் நம்பிக்கை நிறைந்த வாக்கு. இப்பாடல் முடிவடைகிறபோது ஆசிரியர், தனது பகைவர்கள் தண்டனை பெற்றுவிட்டார்கள் என்று பாடுகிறார். இது அவருடைய நம்பிக்கையின் ஆழத்தைக் காட்டுகிறது. இங்கே தண்டைனை என்பது உடல் ரீதியான தண்டனை என்பதை விட, நீதி என்பதையே குறிக்கும். 

இரண்டாம் வாசகம்
கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம் 12,31-13,13
எனவே நீங்கள் மேலான அருள் கொடையையே ஆர்வமாய் நாடுங்கள்.
31எல்லாவற்றையும்விடச் சிறந்த நெறி ஒன்றை நான் உங்களுக்கு எடுத்துக் காட்டுகிறேன்.
1நான் மானிடரின் மொழிகளிலும் வானதூதரின் மொழிகளிலும் பேசினாலும் அன்பு எனக்கில்லையேல் ஒலிக்கும் வெண்கலமும் ஓசையிடும் தாளமும் போலாவேன். 2இறைவாக்கு உரைக்கும் ஆற்றல் எனக்கு இருப்பினும், மறைபொருள்கள் அனைத்தையும் அறிந்தவனாய் இருப்பினும், அறிவெல்லாம் பெற்றிருப்பினும், மலைகளை இடம்பெயரச் செய்யும் அளவுக்கு நிறைந்த நம்பிக்கை கொண்டிருப்பினும் என்னிடம் அன்பு இல்லையேல் நான் ஒன்றுமில்லை. 3என் உடைமையை எல்லாம் நான் வாரி வழங்கினாலும் என் உடலையே சுட்டெரிப்பதற்கென ஒப்புவித்தாலும் என்னிடம் அன்பு இல்லையேல் எனக்குப் பயன் ஒன்றுமில்லை.✠ 4அன்பு பொறுமையுள்ளது; நன்மை செய்யும்; பொறாமைப்படாது தற்புகழ்ச்சி கொள்ளாது இறுமாப்பு அடையாது. 5அன்பு இழிவானதைச் செய்யாது தன்னலம் நாடாது எரிச்சலுக்கு இடம் கொடாது தீங்கு நினையாது. 6அன்பு தீவினையில் மகிழ்வுறாது மாறாக உண்மையில் அது மகிழும். 7அன்பு அனைத்தையும் பொறுத்துக் கொள்ளும்; அனைத்தையும் நம்பும்; அனைத்தையும் எதிர்நோக்கி இருக்கும்; அனைத்திலும் மனஉறுதியாய் இருக்கும். 8இறைவாக்கு உரைக்கும் கொடை ஒழிந்துபோம்; பரவசப்பேச்சு பேசும் கொடையும் ஓய்ந்துபோம்; அறிவும் அழிந்துபோம். ஆனால் அன்பு ஒருபோதும் அழியாது. 9ஏனெனில், நமது அறிவு அரைகுறையானது நாம் அரைகுறையாகவே இறைவாக்கும் உரைக்கிறோம். 10நிறைவானது வரும் போது அரைகுறையானது ஒழிந்துபோம். 11நான் குழந்தையாய் இருந்தபோது குழந்தையைப்போலப் பேசினேன்; குழந்தையின் மனநிலையைப் பெற்றிருந்தேன்; குழந்தையைப்போல எண்ணினேன். நான் பெரியவனானபோது குழந்தைக்குரியவற்றை அறவே விட்டுவிட்டேன். 12ஏனெனில் இப்போது நாம் கண்ணாடியில் காண்பதுபோல் மங்கலாய்க் காண்கிறோம் ஆனால் அப்போது நாம் நேரில் காண்போம். இப்போது நான் அரைகுறையாய் அறிகிறேன்; அப்போது கடவுள் என்னை அறிந்துள்ளதுபோல் முழுமையாய் அறிவேன். 13ஆக, நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு ஆகிய மூன்றுமே நிலையாய் உள்ளன. இவற்றுள் அன்பே தலைசிறந்தது.

பவுலடிகளாருடைய திருமுகங்களில் மிகவும் அழமான பகுதிகளில் இதுவும் ஒன்று. இந்த பகுதிக்கு முன், பவுல் பிரிவினைகளைப் பற்றியும் அதனுடைய தாக்கங்களைப்பற்றியும் பேசியவர், இப்போது அந்த பிரிவினைகளை எப்படி மேற்கொள்வது என்பதனை எபிரேய-கிரேக்க வசன நடையில் ஒப்பிடுகிறார். இது ஒரு வகை 'புகழ்மாலை' (encomium) இலக்கிய வகையைச் சார்ந்தது. ஒரு கருத்தை மிகைப்படுத்தி வாதிட்டு இறுதியில் அதனை பின்பற்ற கேட்டல், கிரேக்க அணியிலக்கணத்தில் மிகவும் முக்கியமானது. சிலர் இதனை பவுல் எழுதவில்லை பின்னர் இங்கு சேர்க்ப்பட்டது என்பர், இதற்க்கு ஆதாரங்கள் குறைவு. பவுல் பல வகையான சொல்லணி இலக்கணங்களை பாவித்து வாசிப்பவர்களை வசப்படுத்தக் கூடியவர். இந்த முழுப்பகுதியின் எழுவாயாக வருவது, அன்பு. மூல மொழியில் ἀγάπη (அகாபே) என்று சொல்லப்படுவது, முழுமையாக, விவிலியம் மற்றும் அறம் சார்ந்த ஒரு குணாதிசயம். இதற்கு பல அர்த்தங்கள் பல மொழியில் கொடுக்கப்பட்டாலும், தமிழில் அன்பு என்ற சொல்லுக்கு மேல் எதுவும் தேவையில்லை என நினைக்கிறேன். புதிய ஏற்பாட்டில் 114 தடவைகள் வரும் இச்சொல், கொரிந்தியர் திருமுகத்தில் 23 தடவைகள் பாவிக்கப்பட்டிருக்கிறது. யோவான் நூல்களில் 28 தடவைகள் பாவிக்கப்பட்டிருக்கிறது, ஆக ஆரம்ப கால திருச்சபைக்கும் மற்றும் கிரேக்க உலகத்திற்கும் நன்கு தெரிந்த ஒரு எண்ணக் கரு என்று கொள்ளலாம். காதல் என்ற சொல் தமிழ் இலக்கியங்களை இன்றும் ஆட்சி செய்வதனைப் போல கொள்ளலாம். அரிஸ்டோட்டில் இச்சொல்லை பயன்படுத்தியிருக்கிறார். செப்தவாயிந்து (LXX), אַהֲבָה (அஹாவா) என்ற எபிரேய அன்புக்கு, கிரேக்க மொழிபெயர்ப்பாக இதனை பாவிக்கிறது. இதனை உளம் சார்ந்த அல்லது ஆன்மா சார்ந்த சொல்லாக மட்டும் எடுக்க முடியாது. இது உடலும் உள்ளமும் சார்ந்த தனித்துவமான பண்பு.  

வ.1: பவுல் இந்த முகவுரை விளக்கத்தில் தன்னை உள்வாங்கி தன்மையில் பேசுகிறார் (நான்). பல்வகை மொழி அறிவுகளை கொரிந்திய சமுதாயம் முக்கியமாகக் கருதியது. வானதூதர்களின் மொழி என்று பரவசப்பேச்சை கருதினர். வெண் கலமும், தாளமும் உயிரற்றதினால் அதனை ஒப்பிடுகிறார்.

வவ. 2-3: இறைவாக்கு, மறைபொருள் அறிவு, முழு அறிவு, மலையை அகற்றும் நம்பிக்கை, வள்ளல் தன்மை, மறைசாட்சிய உயிர்தியாகம் இவைகள் கொரிந்தியரால் மிகவும் மதிக்கப்பட்டது. (நம்பிக்கையால் மலையை அகற்றலாம் என்று ஆண்டவர் சொன்னது நினைவிருக்கலாம்: மத். 17,20). ஒன்றுமில்லாத தன்மையை யாரும் விரும்ப மாட்டார்கள். இங்கு பவுல் ஆண்டவரின் படிப்பினைகளுடன் முரன்படவில்லை தனது கருத்ததை ஒப்பிட்டு அன்பை முதன்மைபப்டுத்துகிறார். 

வவ. 4-7: அன்பின் நேர்எதிர்மறை  பண்புகளை விவவிரிக்கிறார். நேர்மறை: பொறுமை, நன்மை, உண்மையில்  மகிழ்ச்சி, நம்பிக்கை, எதிர்நோக்கு, மனஉறுதி. எதிர்மறை: பொறாமை, தற்புகழ்ச்சி, இறுமாப்பு, இழிசெயல், தன்னலம், எரிச்சல், தீங்கு, தீவினை. 

வவ. 8-12: அன்பின் உயர்வின் காரணத்தைக் கூறுகிறார். இறைவாக்கு, பரவசப்பேச்சு, அறிவு போன்றவை காலத்திற்கு உட்பட்டவை, வளர்ந்து கொண்டிருப்பவை என்கிறார். அத்தோடு இவை நமக்கு தெரியாதவை பற்றிய அறிவுசார்ந்த புலமைத்துவம் எனவும், அன்பு அப்படியல்ல மனிதனில் இயற்கையாய் உள்ள தெய்வீகத்தன்மை என்கிறார். பவுல், இங்கு மூன்று காரணங்களை முன்வைக்கிறார். 1.அன்புதான் நித்தியமானது. 2.கொரிந்தியர் மதிக்கும் கொடைகளுக்குள் அன்புதான் சிறந்தது. 3.கொரிந்;தியரிடம் உண்மையாக இல்லாதது அன்புதான் என்கிறார். இந்த வாதங்களை முன்வைக்கிறபோது பவுல் தன்னையும் உள்வாங்குவது, ஆயன் மந்தைக்கு எவ்விதத்திலும் மேற்பட்டவன் அல்ல என்ற உண்மைச் சமதர்மத்தை கையாளுகிறார். 

வ. 13. இது மிக முக்கியமான வசனம். நம்பிக்கை (πίστις பிஸ்டிஸ்), எதிர்நோக்கு (ἐλπίς எல்பிஸ்), அன்பு (ἀγάπη அகாபே) ஆகிய மூன்றுமே நிலையானவை என்று சொல்கிறார். அன்பை இவற்றுள் தலைசிறந்தது என்று சொல்கிறார் ஆனால் மற்றவை தேவையற்றவை என்று சொல்லவில்லை. பல கடிதங்களில் மற்றைய இரண்டின் முக்கியத்துவங்களை அழகாகவும் ஆணித்தரமாகவும் சொல்வதனை மறக்கக் கூடாது. (காண் உரோ1,16: 8,24). அன்பு தலைசார்தது என்று சொல்வதற்கு இரண்டு காரணம் உள்ளது. அ. அதுதான் இயேசுவின் போதனைகளின் மையம். ஆ. கொரிந்தியரின் தளப்(தலைப்) பிரச்சனைகளுக்கு அன்பு ஒன்று மட்டும்தான் மருந்து என பவுல் கண்டார். இது இன்று எமது ஈழ தளத் திருச்சபைகளுக்கு சாலப் பொருந்துவதைக் காணலாம். 

நற்செய்தி 
லூக்கா 4,21-30
21அப்பொழுது அவர் அவர்களை நோக்கி, 'நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று' என்றார். 22அவர் வாயிலிருந்து வந்த அருள்மொழிகளைக் கேட்டு வியப்புற்று, 'இவர் யோசேப்பின் மகன் அல்லவா?' எனக் கூறி எல்லாரும் அவரைப் பாராட்டினர். 23அவர் அவர்களிடம், 'நீங்கள் என்னிடம், 'மருத்துவரே உம்மையே நீர் குணமாக்கிக்கொள்ளும்' என்னும் பழமொழியைச் சொல்லி, 'கப்பர்நாகுமில் நீர் செய்ததாக நாங்கள் கேள்விப்பட்டவற்றை எல்லாம் உம் சொந்த ஊராகிய இவ்விடத்திலும் செய்யும்' எனக் கண்டிப்பாய்க் கூறுவீர்கள். 24ஆனால் நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இறைவாக்கினர் எவரும் தம் சொந்த ஊரில் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. 25உண்மையாக நான் உங்களுக்குச் சொல்கிறேன்; எலியாவின் காலத்தில் மூன்றரை ஆண்டுகளாக வானம் பொய்த்தது நாடெங்கும் பெரும் பஞ்சம் உண்டானது. அக்காலத்தில் இஸ்ரயேலரிடையே கைம்பெண்கள் பலர் இருந்தனர். 26ஆயினும் அவர்களுள் எவரிடமும் எலியா அனுப்பப்படவில்லை; சீதோனைச் சேர்ந்த சாரிபாத்தில் வாழ்ந்த ஒரு கைம்பெண்ணிடமே அனுப்பப்பட்டார். 27மேலும், இறைவாக்கினர் எலிசாவின் காலத்தில் இஸ்ரயேலரிடையே தொழு நோயாளர்கள் பலர் இருந்தனர்; ஆயினும் அவர்களுள் எவருக்கும் நோய் நீங்கவில்லை. சிரியாவைச் சார்ந்த நாமானுக்கே நோய் நீங்கியது' என்றார். 28தொழுகைக்கூடத்தில் இருந்த யாவரும் இவற்றைக் கேட்டபோது, சீற்றங் கொண்டனர்; 29அவர்கள் எழுந்து, அவரை ஊருக்கு வெளியே துரத்தி, அவ்வூரில் அமைந்திருந்த மலை உச்சியிலிருந்து கீழே தள்ளிவிட இழுத்துச் சென்றனர். 30அவர் அவர்கள் நடுவே நடந்து சென்று அங்கிருந்து போய்விட்டார்.

இன்றைய நற்செய்தி வாசகம் கடந்த வாரத்தின் தொடர்ச்சியாகும். இன்னும் ஆண்டவர் நசரேத்தூர் தொழுகைக் கூடத்தில்தான் இருக்கிறார். (σήμερον செமரோன்) 'இன்று' என்று மீண்டும் லூக்கா நம்மை எசாயாவின் அருள் தரும் ஆண்டிற்கு அழைத்துச் செல்கறார். யூபிலி அல்லது அருள் ஆண்டில் அனைவரும் பொருளாதார விடுதலை பெற்றனர். யூதமக்கள் தங்களுக்குள் கடனாளிகளையும், அடிமைகளையும் விரும்புவதில்லை. இயேசுவின் வாயில் இருந்து வரும் இந்த வரி, உண்மையாகவே உரோமைய அடிமைத்தனத்திற்குள் இருந்த மக்களுக்கு, தேன் போல இனித்தது. (தாயகத்தில் இன்று தமிழருக்கு விடுதலை என்றால் எப்படி இருக்கும்). எசாயாவின் வாக்கு இப்போதுதான் நிறைவாகிறது என்ற ஆழமான வரிகளை லூக்கா எழுதுகிறபோது காட்சி மாறுகிறது. 

வ.22: 'ஆச்சரியம்' இங்கு நேர்மறையாக இருந்தாலும், இந்த ஆச்சரியம் நம்பிக்கை கலந்த ஆச்சரியம் அல்ல. லூக்கா இந்த நான்கு அதிகாரங்களிலும் இயேசுவை கடவுளின் மகன் என காட்டிக்கொண்டு வரும் போது, முக்கியமாக அவருடைய திருமுழுக்கின் வேளையில், மக்கள், ஒரே வரியில் அவர் யோசேப்பின் மகன் என்று முழுவதையும் மாற்ற நினைக்கின்றனர் என வாசகர்களுக்கு மறைமுகமாக சொல்கிறார். மற்றைய நற்செய்தியாளர்கள் இந்நிகழ்வை இன்னும் வேறுவிதமாக காண்பர் (ஒப்பிடுக மத். 13,55: மாற்கு 6,3: யோவான் 6,42). இந்த பாராட்டு ஒரு நக்கல். இங்கு 'எல்லாரும்' என்று யாரை சொல்கிறார் என்று ஆய்வு செய்ய வேண்டும். 

வ.23: இயேசு பாவிக்கின்ற இந்த பழமொழி பல ஆய்வாளர்களின் நித்திரையைக் களவெடுக்கிறது. லூக்கா தனது நற்செய்திக்கு பல மூலங்களை பாவித்ததை இங்கு உணரலாம். இயேசு மக்களுடைய நம்பிக்கையில் சந்தேகம் கொள்ளவில்லை, ஆனால் அந்த நம்பிக்கையின் தன்மையில் சந்தேகம் கொள்கிறார். ஏனெனில் ஏற்கனவே கப்பர்நாகூமில் நடந்தவற்றை அவர்கள் அறிந்திருந்தனர். 

வ.24: இந்த வரி மற்றைய நற்செய்திகளைவிட கொஞ்சம் பலமாக இருக்கிறது. (ஒப்பிடுக மாற். 6,4: மத். 13,57: யோவான் 4,44) லூக்கா மட்டுமே, ஆமென் (ἀμὴν உறுதியாக) என்ற வார்த்தையை பாவிக்கிறார். இங்கே லூக்கா சொல்லிலே விளையாடுகிறார். 'ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை' என்ற சொல் கிரேக்க மூலத்தில் (δεκτός தெக்டோஸ்) என்று வருகிறது. இச்சொல் 19வது வசனத்தில் ஆண்டவரின் அருளைக் குறிக்கிறது. இஃது இவர்கள் இயேசுவையோ இறைவாக்கினரையோ அல்ல மாறாக ஆண்டவரின் அருளையே புறக்கணிக்கின்றனர் என்கிறார் லூக்கா. (πατρίς பட்றிஸ்) சொந்த ஊர் என்பது சொந்த நாட்டையும் குறிக்கும். 

வவ.25-27: வட அரசில் இருந்த இரண்டு இறைவாக்கினர்களை துணைக்கு அழைக்கிறார் லூக்கா. எலியாவை வெகு அரிதாகவே இயேசுவின் முன்னோடியாக பார்க்கின்றனர். மூன்றரை வருடங்கள் பஞ்சம் மற்றும் இயேசு ஆண்டவரின் மூன்று வருடத்திற்கு மேலான பணி, என்று எதனையோ இணைக்கிறார் லூக்கா (காண் 1அர 18,1: யாக்கோபு 5,17). இதே மூன்;றரை வருடங்கள்தான் கிரேக்க எபிபானுஸ் அந்தியோக்குஸ் மன்னன் எருசலேமை பலமாக வதைத்தான். எலியாவின் ஆவியை பெற்ற எலிசாவால் கூட தன் மக்களின் நம்பிக்கையின்மையால் நல்லது செய்ய முடியவில்லை என்பது ஆண்டவரின் வாதம். சீதோனியரான கைம்;பெண்ணும், சீரியானான நாமானும் புறவினத்தவர்கள் என்று இஸ்ராயேல் மக்களால் கருதப்பட்டனர், ஆனால் நலம் பெற்றனர். 

வ.வ.28-30: இயேசுவின் வார்த்தைகளால் கோபமுற்றவர்கள் அவரை மலையில் இருந்து தள்ளிவிட முனைகின்றனர். இங்கே நான்கு செயல்களை மக்கள் செய்கின்றனர், எழுந்தனர், வெளியே துரத்தினர், இழுத்துக்கொண்டு போயினர், மலையிலிருந்து தள்ளிவிட நினைத்தனர். இங்கு புதுமை எதுவும் நடக்கவில்லை. லூக்கா இங்கு பாவிக்கும் வினைச்சொல் (ἐπορεύετο.), அவரது பயணம், நேரம் வரும்வரை தொடர்ந்தது என்பதையே குறிக்கிறது. 

ஆண்டவரே எமது காதுகளுக்கு ஏற்றபடி உமது வார்த்தையை திரிவுபடுத்தாமல்,
உமது வார்த்தைக்கு ஏற்ப எமது இதயங்களை மாற்ற வரம் தாரும். ஆமென். 

மி. ஜெகன்குமார்அமதி
உரோமை



வியாழன், 21 ஜனவரி, 2016

The Torah of the LORD is perfect, refreshing the soul, Ps 19,8

The Third Sunday of Ordinary Time, C.



24 சனவரி, 2016 - ஆண்டின் பொதுக்காலம் மூன்றாம் ஞாயிறு
முதலாம் வாசகம்,
நெகேமியா 8,2-4.5-6.8-10
2அவ்வாறே ஏழாம் மாதம் முதல்நாள் குரு எஸ்ரா ஆடவர், பெண்டிர், புரிந்துகொள்ளும் ஆற்றலுள்ள சிறுவர் அனைவரும் அடங்கிய சபை முன்னிலையில் திருநூலைக் கொண்டு வந்தார். 3தண்ணீர் வாயிலுக்குமுன் இருந்த வளாகத்தில் காலைமுதல் நண்பகல்வரை ஆடவரையும், பெண்டிரையும், புரிந்து கொள்ளும் ஆற்றலுள்ள சிறுவரையும் பார்த்து அதை உரக்க வாசித்தார். எல்லா மக்களும் திருநூலுக்குச் செவி கொடுத்தனர். 4திருநூல் வல்லுநரான எஸ்ராவோ இதற்காகச் செய்யப்பட்ட மர மேடையின்மேல் நின்றுகொண்டிருந்தார். 
5எஸ்ரா மக்களை விட உயரமான இடத்தில் நின்றதால் அவர் திருநூலைத் திறந்தபோது எல்லா மக்களும் அதைப் பார்த்தார்கள்; திருநூலைத் திறந்தபோது எல்லா மக்களும் எழுந்து நின்றார்கள். 6அப்பொழுது எஸ்ரா மாபெரும் கடவுளாகிய ஆண்டவரை வாழ்த்தினார். மக்கள் எல்லாரும் கைகளை உயர்த்தி 'ஆமென்! ஆமென்!' என்று பதிலுரைத்தார்கள்; பணிந்து, முகங்குப்புற விழுந்து ஆண்டவரைத் தொழுதார்கள்.
8மக்களுக்குப் புரியும்படி தெளிவாகவும், பொருளோடும் கடவுளின் திருச்சட்டத்தை உரக்க வாசித்தார்கள். ஆதலால் மக்களும் வாசிக்கப்பட்டதன் பொருளைப் புரிந்து கொண்டனர். 9ஆளுநர் நெகேமியாவும், குருவும் திருநூல் வல்லுநருமான எஸ்ராவும், விளக்கம் கூறிய லேவியர்களும் மக்கள் அனைவரையும் நோக்கி: 'இன்று கடவுளாகிய ஆண்டவரின் புனித நாள்; எனவே நீங்கள் அழுதுபுலம்ப வேண்டாம்' என்றனர். ஏனெனில் மக்கள் அனைவரும் திருச்சட்டத்தின் சொற்களைக்கேட்டதிலிருந்து அழுது கொண்டிருந்தார்கள். 10அவர் அவர்களைப் பார்த்து, 'நீங்கள் போய்க் கொழுத்தவற்றை உண்டு, இனிய திராட்சை இரசத்தைக் குடியுங்கள்; எதுவும் தயார் செய்யாதவருக்குச் சிறிது அனுப்பிவையுங்கள். ஏனென்றால், நம் ஆண்டவரின் புனித நாள் இதுவே; எனவே வருந்த வேண்டாம்; ஏனெனில் ஆண்டவரின் மகிழ்வே உங்களது வலிமை' என்று கூறினார்.

எஸ்ரா புத்தகத்தைப் போன்று, பபிலோனிய அடிமைத்தனத்தின் பின்னர் நாடு திரும்பிய இஸ்ராயேல் மக்கள் தங்களின் நாட்டைக் கட்டியெழுப்பியதையும், எருசலேமின் மதில்களை புதுப்பித்தலையும், ஆண்டவருடனான உடன்படிக்கையை புதுப்பித்தலையும் நெகேமியா புத்தகம் எடுத்துரைக்கின்றது. எஸ்ரா சமயத்தில் அக்கறைகாட்டினார் என்றால், நெகேமியா அரசியலில் அக்கறை காட்டுவார். நெகேமியா, இஸ்ராயேல் மக்கள் பாரசீக (மற்றும் கிரேக்க?) கலாச்சாரத்தினால் ஆட்கொண்டிருந்தவேளை, இஸ்ராயேல் மக்களைத் தமது மூதாதையரின் பாரம்பரியத்துக்கு கொண்டுவந்த முக்கியமான சீர்திருத்தவாதி.

வவ. 2-4: ஏழாம் மாதம் முதல்நாள் என்பது யூதர்களின் புத்தாண்டைக் குறிக்கலாம் (செப்டம்பர் அல்லது அக்டோபர் தொடக்கம்), இங்கே ஏழு, முழுமையையும் குறிக்கலாம். இந்த மக்களின் கூட்டத்தில் அனைவரும் இருப்பதைக்கொண்டு இறைவார்த்தை வாசிப்பின் முக்கியத்துவத்தை உணரலாம். தண்ணீர் வளாகம் எனப்படுவது இங்கே கிஹோன் (שַֽׁעַר־הַמַּ֗יִם தண்ணீர் வாயில்) ஊற்றை குறிக்கிறது. இதற்கருகிலேயே நெகேமியா மதில்களை புதுப்பித்தார். இங்கே வாசிப்பவர் எஸ்ரா, மரமேடையில் வாசிக்கிறார், காலை முதல் மாலைவரை என்பது முழு நாளையும் குறிக்கும். வாசிப்பவர் ஆயத்தத்தோடும், கேட்போர் அவதாணத்தோடும், நேரம் பார்காது, தகுந்த இடத்தில் வாசிப்பதை அவதானிப்போம். இந்நிகழ்வு சாலமோனின் செபத்தை எமக்கு நினைவூட்டுகிறது. (காண். 2குறிப் 6,13).

வவ. 5-6: திருநூல் என்பது விவிலிய சுருளைக் குறிக்கும். எழுந்து நின்றல், மரியாதையையும் அவதானத்தையும் காட்டும் நிலை. ஆண்டவரை வாழ்த்துதல், இஸ்ராயேல் மக்கள் அடிக்கடி செய்யும் முக்கியமான செபம். (בָּרַךְ பராக் வாழ்த்து). இயேசுவும் இதை அடிக்கடி செய்ததை காணலாம். ஆமென் (אָמֵן֙ உறுதியாக நில், நம்பு, விசுவசி எனப்பொருள்படும்). இதனை இங்கு இரண்டு தடவை சொல்கின்றனர். கைகளை  உயர்த்துதல், பணிந்து முகம்பட விழுதல் ஆராதனையைக் குறிக்கும்.

வ. 8-10: தெளிவான வாசிப்பே பொருளைக் கொடுக்கும். வாசகப்பணி எவ்வளவு முக்கியமானது என்பதை இங்கு காணலாம். தெளிவற்ற வாசிப்பு ஆபத்தானதும், மரியாதைக் குறைவானதுமாகும். அதிகமான வேளைகளின் சட்டங்கள் (தோரா) வாசிக்கப்பட்ட போது மக்கள் குற்ற உணர்வோடு அழுவது வழக்கம், யோசியா அரசரும் அவ்வாறே செய்தார் (காண் 2அர 22,11). இங்கே இவர்களை மகிழச் சொல்கின்றனர். உண்மையாகவே மறுமலர்ச்சிக்காரர்கள். அத்தோடு உண்ணவும் குடிக்கவும் சொல்கிறார்கள், இது ஆண்டவருடைய சட்டங்கள் தண்டிக்கவல்ல மாறாக வாழ்வு கொடுக்கவே என்பதைக் குறிக்கின்றது. இதனையே ஆண்டவர் பின்னர் அழகாகச் சொல்வார். ஆண்டவரில் மகிழ்ச்சி, அது உங்கள் வல்லமை. (כִּֽי־חֶדְוַ֥ת יְהוָ֖ה הִ֥יא מָֽעֻזְּכֶֽם׃ நேரடி மொழிபெயர்பு) இதுதான் நாடு இழந்து அடையாளம் இழந்து அழுதுகொண்டிருக்கும் எமக்கு நம்பிக்கைச் செய்தி.


பதிலுரைப்பாடல்
திருப்பாடல் 18(19)
14 வரிகளைக் கொண்டுள்ள இந்த திருப்பாடல், பாரம்பரியமாக தோரா திருப்பாடல் என்று அறியப்பட்டது. தற்போது வல்லுனர்கள் இதனை இரண்டாக பிரித்து, 1-6 வரிகளை படைப்புத் திருப்பாடல் எனவும் 7-15 வரிகளை தோரா பாடல் எனவும் காண்கின்றனர். முதலாவது பகுதி வெளிச்சத்தையும், சூரியனையும்,
இரண்டாவது பகுதி ஆண்டவரின் திருச்சட்டத்தையும் அழகுற வர்ணிக்கிறது. ஓர் அழகிய வரி: வ.2, ஒவ்வொரு பகலும் அடுத்த பகலுக்கு அச்செய்தியை அறிவிக்கின்றது ஒவ்வோர் இரவும் அடுத்த இரவுக்கு அதைப்பற்றிய அறிவை வழங்குகின்றது. 

வவ.4-6: சூரியனின் மகிமையைப்பற்றி எடுத்தியம்புகின்றன. ஆசிரியர் சூரியனை, அறிக்கையிடுபவனாகவும், கூடாரத்தைக் கொண்டவனாகவும், மணமகனாகவும், ஓட்ட வீரனாகவும் அத்தோடு வலிமை மிக்கவனாகவும் காட்டுகிறார்.

சூரியனை ஒப்பிட்ட ஆசிரியர் இரண்டாவது பகுதியில் கடவுளின் திருச்சட்டத்தை ஒப்பிடுகிறார். ஓர் இஸ்ராயேல் மகனு(ளு)க்கு திருச்சட்டம் எவ்வளவு இதமானது என்பதை இவ்வாறு காட்டுவார் ஆசிரியர்: வ.8: ஆண்டவரின் நியமங்கள் சரியானவை அவை இதயத்தை மகிழ்விக்கின்றன. ஆண்டவரின் கட்டளைகள் ஒளிமயமானவை அவை கண்களை ஒளிர்விக்கின்றன. திருச்சட்டத்திற்கு பல ஒத்த சொற்களை பயன்படுத்தும் ஆசிரியர் அதனை, நிறைவானது, உயிரளிப்பது, நம்பத்தக்கது, ஞானமுள்ளது, சரியானது, மகிழ்விப்பது, ஒளிமயமானது, தூய்மையானது, நிலையானது, உண்மையானது, நீதியானது, விலைமதிப்பற்றது, இனிமையானது, என்று பலவாறு வர்ணிக்கிறார். இங்கே திருச்சட்டம் (தோரா תּוֹרָה) எனப்படுவது, விசாலமான பார்வையில் நோக்கப்படவேண்டும். இவை திருச்சட்டங்களையும், முதல் 5 புத்தங்களையும், முழு விவிலியத்தையும், சில வேளைகளில் கடவுளையும் குறிக்கும். வ. 14: என் கற்பாறையும் மீட்பருமான ஆண்டவரே! என் வாயின் சொற்கள் உமக்கு ஏற்றவையாய் இருக்கட்டும்; என் உள்ளத்தின் எண்ணங்கள் உமக்கு உகந்தவையாய் இருக்கட்டும். உள்ளத்தின் எண்ணங்கள் என்பது (הִגָּיוֹן ஹிக்காய்யோன்) எனும் ஒரு வகை தியானத்தை குறிக்கும்.

இரண்டாம் வாசகம்
1கொரிந்தியர் 12,12-30
12உடல் ஒன்றே; உறுப்புகள் பல. உடலின் உறுப்புகள் பலவாயினும் உடல் ஒன்றாயிருப்பதுபோல கிறிஸ்துவும் இருக்கிறார். 13ஏனெனில், யூதரானாலும் கிரேக்கரானாலும், அடிமைகளானாலும் உரிமைக் குடிமக்களானாலும் நாம் எல்லாரும் ஒரே தூய ஆவியால் ஒரே உடலாய் இருக்கும்படி திருமுழுக்குப் பெற்றோம். அந்த ஒரே ஆவியையே பானமாகவும் பெற்றோம். 14உடல் ஒரே உறுப்பால் ஆனது அல்ல் பல உறுப்புகளால் ஆனது. 15'நான் கை அல்ல் ஆகவே இவ்வுடலைச் சேர்ந்தவன் அல்ல' எனக் கால் சொல்லுமானால், அது அவ்வுடலைச் சேர்ந்ததில்லை என்றாகிவிடுமா? 16'நான் கண் அல்ல் ஆகவே இவ்வுடலைச் சேர்ந்தவன் அல்ல' எனக் காது சொல்லுமானால், அது அவ்வுடலைச் சேர்ந்ததில்லை என்றாகிவிடுமா? 17முழு உடலும் கண்ணாயிருந்தால் கேட்பது எப்படி? முழு உடலும் காதாயிருந்தால் முகர்வது எப்படி? 18உண்மையில் கடவுள் ஒவ்வோர் உறுப்பையும் தாம் விரும்பியவாறே உடலில் அமைத்தார். 19அவை யாவும் ஒரே உறுப்பாயிருந்தால் உடல் என ஒன்று இருக்குமா? 20எனவேதான் பல உறுப்புகளை உடையதாய் இருந்தாலும் உடல் ஒன்றே.
21கண் கையைப்பார்த்து, 'நீ எனக்குத் தேவையில்லை' என்றோ தலை கால்களைப் பார்த்து, 'நீங்கள் எனக்குத் தேவையில்லை' என்றோ சொல்ல முடியாது. 22மாறாக, உடலில் மிக வலுவற்றனவாய்த் தோன்றும் உறுப்புகளே மிகவும் தேவையானவையாய் இருக்கின்றன. 23உடலின் மதிப்புக் குறைவான உறுப்புகள் என நமக்குத் தோன்றுபவற்றிற்கே நாம் மிகுந்த மதிப்புக் கொடுக்கிறோம். நம் மறைவான உறுப்புகளே மிகுந்த மதிப்புப் பெறுகின்றன. 24மறைந்திராத நம் உறுப்புகளுக்கு அது தேவையில்லை. மாறாக, மதிப்புக் குறைந்த உறுப்புகளுக்கு மிகுந்த மதிப்புக் கொடுத்தே கடவுள் உடலை ஒன்றித்து உருவாக்கினார். 25உடலில் பிளவு ஏற்படாமல், ஒவ்வொரு உறுப்பும் மற்ற உறுப்புகளின் மீது ஒரேவிதக் கவலை கொள்ளவேண்டுமென்றே இப்படிச் செய்தார். 26ஓர் உறுப்பு துன்புற்றால் அதனுடன் மற்ற எல்லா உறுப்புகளும் சேர்ந்து துன்புறும். ஓர் உறுப்பு பெருமை பெற்றால் அதனுடன் மற்ற எல்லா உறுப்புகளும் சேர்ந்து மகிழ்ச்சியுறும்.
27நீங்கள் கிறிஸ்துவின் உடல்; ஒவ்வொருவரும் அதன் தனித்தனி உறுப்புகள். 28அவ்வாறே திருச்சபையிலும் கடவுள் முதலாவது திருத்தூதர்களையும், இரண்டாவது இறைவாக்கினர்களையும், மூன்றாவது போதகர்களையும், பின்னர் வல்லசெயல் செய்வோர்களையும், அதன்பின் பிணி தீர்க்கும் அருள்கொடை பெற்றவர்கள், துணைநிற்பவர்கள், தலைமையேற்று நடத்துபவர்கள், பல்வகை பரவசப்பேச்சு பேசுகிறவர்கள் ஆகியோரையும் ஏற்படுத்தினார். 29எல்லாருமே திருத்தூதர்களா? எல்லாருமே இறைவாக்கினர்களா? எல்லாருமே போதகர்களா? எல்லாருமே வல்ல செயல் செய்பவர்களா? இல்லை. 30எல்லாருமே பிணி தீர்க்கும் அருள்கொடையைப் பெற்றவர்களா? எல்லாருமே பரவசப் பேச்சுப் பேசுகிறவர்களா? எல்லாருமே விளக்கம் அளிப்பவர்களா? இல்லையே!

பவுலடிகளாரின் கிரேக்க யூத மெய்யியல் அறிவிற்கும் அவரது கிறிஸ்தியல் புலமைத்துவத்திற்கும் ஒரு வரைவிலக்கனமாக இந்த பகுதியைக் காணலாம். கிரேக்க மெய்யியலிலும், தல பிரிவினைகளிலும் மூழ்கியிருந்த ஆரம்பகால கிறிஸ்தவர்களை பவுல் கிறிஸ்து, உடல், திருச்சபை போன்ற நற்சிந்தனைகளில் மூழ்கச்செய்கிறார்.

வவ. 12-13: உடல், உறுப்புக்கள், கிறிஸ்து, தூயஆவி, போன்றவற்றை உதாரணத்துக்கு எடுத்து ஒற்றுமையை கொரிந்தியருக்கு ஆழமாகச் சொல்கிறார். கிரேக்கர்கள் உடல்உறுப்பியல் சம்பந்தமான மருத்துவத் துறையில் புலமைபெற்றவர்கள், அவர்களுக்கு உடலை உதாரணமாக எடுப்பதன் வாயிலாக அவர்களின் அறிவிலே அவர்களுக்கு பாடம் புகட்டுகிறார். கடவுளுக்கு முன்னால் மனிதன் அவர் பிள்ளையாக மட்டுமே இருக்க முடியும் என்பது புவுலுடைய நம்பிக்;கை, இது மீண்டும் மீண்டும் பவுலுடைய கடிதங்களில் வருவதைக் காணலாம். யூதர், கிரேக்கர், உரிமை மக்கள், அடிமைகள் இந்த பிரிவினைதான் கொரிந்தியரை சலனப்படுத்தியது, அதனை பவுல் இங்கு வேரறுக்கிறார். (சிலர் கடவுளுக்கு உடலைக் கொடுத்து, அதனை  தரப்படுத்தி, கடவுள் பிள்ளைகளை மேலோர் கீழோர் என பிறிவுபடுத்தி, தமிழர்களை கடவுளின் கீழ் உறுப்புகளில் இருந்து வந்தவர்கள் என்று சொல்லி, அடிமைப்படுத்துவதை: சில தமிழர்களே இன்றுவரை நம்பத்தான் செய்கிறார்கள்). (σῶμα சோமா: மனித, மிருக உடல்)

வவ. 14-17: கிரேக்க ஸ்தொயிக்க மெய்யறிவு, சமுதாயத்தின் ஒற்றுமை வேற்றுமையைக் காட்ட உடல் உறுப்புகளின் உருவக அணியை பாவித்தது தங்கியிருக்கும் தன்மையை விளங்கப்படுத்தியது. பவுல் இந்த ஒப்புவமையில் மூளையை அல்லது, தலையை அல்லது இதயத்தை உதாரணத்திற்கு எடுக்காதது அவரின் சிறந்த தெளிவைக்காட்டுகிறது. ஏனெனில் கிரேக்கர் அவற்றை ஆன்மாவின் உறைவிடமாகக் கொண்டு மற்றவற்றை இரண்டாம்தரப்படுத்தினர். கை, கால், கண், காது, இவை வெளியால் தெரியக்கூடிய அதிகமான வேலைகளைச் செய்கிற முக்கியமான உறுப்புக்கள். உயிரைப் பொறுத்தவரையில் இவை இரண்டாம் தர உறுப்புக்கள்;, ஏன் பவுல் இவற்றை சிந்தனைக்கு எடுக்கிறார் என்பதை நோக்க வேண்டும?

வவ. 18-20: கடவுளை சாட்சிக்கு எடுக்கிறார். உடலின் வேற்றுமையை தெரிவு செய்ய வேண்டியவர் கடவுள் ஒருவரே, அவருடைய வேலையை மனிதர் செய்ய வேண்டாம் எனச் சொல்கிறார்.

வவ. 21-23,24-26: உடலின் அதிசயத்தைக் காட்டுகிறார், வலுவற்றது தேவையாய் இருக்கிறது, மதிப்புக்குறைவானதும் மறைவானதும், மிக மதிப்பு பெறுகிறது. பலவீனமானவர்களை தெரிவு செய்வது முதல் ஏற்பாட்டிலும் எபிரேய சரித்திரத்திலும் மிக முக்கியமான கடவுளின் செயல். இதற்கான காரணம், பொறுப்புணர்சி, அக்கறை, பகிர்வு எனவும் விடையளிக்கிறார்.

வவ. 27-30: இங்குதான் பவுல் சொல்லவருகிற செய்தி இருக்கிறது. கிறிஸ்துவின் உடலான (σῶμα Χριστοῦ சோமா கிறிஸ்து) திருச்சபையின் பணியாளர்களை வரிசைப்படுத்துகிறார். திருத்தூதர், இறைவாக்கினர், போதகர்கள், வல்லசெயல் செய்வோர், குணமாக்குவோர், துணையாளர்க்ள, தலைவர்கள், பரவசப்பேச்சாளர்கள். தற்பெறுமை, கிறிஸ்துவின் உடலான திருச்சபையில் ஏற்றுக்கொள்ள பட முடியாதது என்பதே பவுலடியாரின் செய்தி. (இந்த நோய்க்கு இன்னும் திருச்சபையில் மருந்து முழுமையாக வரவில்லை என்பது ஆபத்தான உண்மை).

லூக்கா 1,1-4:4,14-21
1மாண்புமிகு தியோபில் அவர்களே, நம்மிடையே நிறைவேறிய நிகழ்ச்சிகளை முறைப்படுத்தி ஒரு வரலாறு எழுதப் பலர் முயன்றுள்ளனர்; 2தொடக்க முதல் நேரில் கண்டும் இறைவார்த்தையை அறிவித்தும் வந்த ஊழியர் நம்மிடம் ஒப்படைத்துள்ளவாறே எழுத முயன்றனர். 3அது போலவே நானும் எல்லாவற்றையும் தொடக்கத்திலிருந்தே கருத்தாய் ஆய்ந்து நீர் கேட்டறிந்தவை உறுதியானவை எனத் தெரிந்து கொள்ளும் பொருட்டு, 4அவற்றை ஒழுங்குப்படுத்தி உமக்கு எழுதுவது நலமெனக் கண்டேன்.
14பின்பு இயேசு தூய ஆவியின் வல்லமை உடையவராய்க் கலிலேயாவுக்குத் திரும்பிப் போனார். அவரைப் பற்றிய பேச்சு சுற்றுப்புறம் எங்கும் பரவியது. 15அவர் அவர்களுடைய தொழுகைக் கூடங்களில் கற்பித்து வந்தார். எல்லாரும் அவரைப்பற்றிப் பெருமையாகப் பேசினர்.16இயேசு தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு வந்தார். தமது வழக்கத்தின்படி ஓய்வுநாளில் தொழுகைக் கூடத்திற்குச் சென்று வாசிக்க எழுந்தார். 17இறைவாக்கினர் எசாயாவின் சுருளேடு அவரிடம் கொடுக்கப்பட்டது. அவர் அதைப் பிரித்தபோது கண்ட பகுதியில் இவ்வாறு எழுதியிருந்தது:
18'ஆண்டவருடைய ஆவி என்மேல் உளது; ஏனெனில்,
அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார். ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும்
சிறைப்பட்டோர் விடுதலை அடைவர், பார்வையற்றோர் பார்வைபெறுவர்
என முழக்கமிடவும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்பவும்
19ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிக்கவும் அவர் என்னை அனுப்பியுள்ளார்.'
20பின்னர் அந்த ஏட்டைச் சுருட்டி ஏவலரிடம் கொடுத்துவிட்டு அமர்ந்தார். தொழுகைக்கூடத்தில் இருந்தவர்களின் கண்கள் அனைத்தும் அவரையே உற்று நோக்கியிருந்தன. 21அப்பொழுது அவர் அவர்களை நோக்கி, 'நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேறிற்று' என்றார்.

வவ.1-4: யார் இந்த லூக்கா, யார் இந்த தியோபில்? (Θεόφιλος தியோபிலோஸ்) என்பவர்கள் இலகுவாக பதிலக்க முடியாதவர்கள். மாண்புமிகு வைத்தியர், லூக்கா தன்னுடைய நற்செய்தியின் நோக்கத்தை இங்கே பதிவுசெய்கிறார். தியோபில் என்பவர் ஆரம்ப கால மதிக்பட்ட இரண்டாம் தலைமுறை கிறிஸ்தவராக இருந்திருக்கலாம். தற்போது சிலர் இவரை அனைத்து கிறிஸ்தவர்களை குறிக்க லூக்கா பயன்படுத்திய ஒரு சொல் எனவும் காண்கின்றனர். லூக்கா தான் எழுதுவதற்கு முன்னர் பல நற்செய்திகள் இருப்பதையும் ஏற்றுக்கொள்கிறார், ஆக அவருடையது முதலாவதல்ல. அவர் எவ்வாறு எழுதினார் என்பதன் மூலம், லூக்கா ஒர் இரண்டாம் தலைமுறை கிறிஸ்தவர் என்பது வெளிப்பாடு. வரலாற்றில் முக்கியமானவர்களுக்காக ஆண்டவரின் வரலாற்றை எழுதுவது லூக்காவின் காலத்திற்கு முன்னரும் இருந்த ஒரு சாதாரண வழக்கம்.

வ. 14: நான்காம் அதிகாரத்தில் இயேசு ஆண்டவரின் பாலைவன தியானத்தைப் பார்க்கலாம். திருமுழுக்கு, பரம்பரை அட்டவணை, பாலைவன அனுபவம் என கடவுள் மெசியாவை தயார்படுத்தியதை அழகான காட்சிப்படுத்துகிறார், இந்த வைத்தியர். தூயஆவியார், லூக்கா நற்செய்தியிலும் திருத்தூதர்பணிகள் நூலிலும் அதிகமாக வருகிறவர். (லூக்கா 12 தடவைகளாக, தி.ப. 38 தடவைகளுக்கு மேலாக)

வவ. 15-16: இயேசு ஆண்டவர் கலிலேயாவிற்கும் நசரேத்திற்கும் போவது, முதல் ஏற்பாட்டில் கடவுள் ஆபிரகாமை சந்திக்க வருவதை ஞாபகப்படுத்துகிறது. ὑπέστρεψεν திரும்பிச்சென்றார் என்பதன் வாயிலாக கடவுள் எப்போதும் தன் மக்களின் இருப்பிடத்தையே உறைவிடமாகக் கொள்கிறார் என்பது, லூக்காவின் படிப்பினை. யோவானைப் போலல்லாது, ஆண்டவர் தொழுகைக்கூடத்தில் கற்பிக்கிறார், அனைவரும் அவரைப்பற்றி பேசுகின்றனர். இவை இயேசு ஆண்டவர்தான் மெசியா எனக்காட்டும் ஒப்பீட்டுச் செயல்.

வ. 17: சாதாரணமாக ஓய்வுநாளில் தோராவில் இருந்தும் இறைவாக்குகளிலிருந்தும் ஒன்றுமாக இரண்டு பாடங்கள் வாசிப்பது வழக்கம், ஆண்டவர் இரண்டாவதை தெரிவு செய்வது, கடவுள் இறைவாக்கிற்கு முக்கியத்துவம் கொடுப்பதனைப்போல் உள்ளது.

வவ. 18-19: இயேசு எசாயாவின் இறைவாக்கை சற்று மாற்றி வாசிக்கிறார். (எசா 61,1-2). ஆண்டவரின் ஆவி, அருட்பொழிவு (מָשַׁח மாஷா), ஏழைகளுக்கு நற்செய்தி, சிறைப்பட்டோருக்கு விடுதலை (எசாயா: உடைந்த இதயங்களை ஒன்று சேர்க்க), பார்வையற்றோருக்கு பார்வை, ஒடுக்கப்பட்டோருக்கு விடுதலை, அருள் ஆண்டை அறிவிக்க என்று இயேசு வாசிக்கிறார், ஆனால் ஆண்டவரின் பழிவாங்கும் நாளை அறிக்கையிடும் செயலை இயேசு கூறாமலே ஏட்டை சுருட்டுகிறார். லூக்காவின் கடவுள் ஆசிர்வதிக்கிறவா,; பழி வாங்குபவரல்ல.

வவ. 20-21: இயேசுவின் அமர்தலும், அனைவரின் பார்வையும் அவரைநோக்கியிருப்பதும், இயேசுவை புதிய மோசேயாகவோ, அரசராகவே அல்லது மேலாக, கடவுளாகவே காட்டுவதைப்போல அமைக்கப்பட்டிருக்கிறது.

வசனம் 21, ஆண்டவரின் தீர்ப்பு அல்லது விளக்கம் போல வருகிறது. மக்கள் அதனை எவ்வாறு எடுக்கிறார்கள் என்பதிலிருந்துதான், ஆண்டவர் அவர்களோடு அங்கிருப்பாரா அல்லது வெளியே செல்வாரா என்பது அமையும்.

சட்டங்கள் தேவையானவை, அவை மனிதனுக்கு தெய்வீகத்தை கொடுக்க ஏற்படுத்தப்பட்டவை. சட்டங்களை அதன் விளக்கம் இல்லாமல் பயன்படுத்தினால் மனிதன் பயங்கரவாதிகளாக மாறி, கடவுளைக்கூட பாவியாக பார்ப்பான், சட்டமே இல்லாமல் சுய நலத்தோடே மட்டும் நினைத்ததை எல்லாம் செய்தால் கடவுளைக்கூட கல்லாக மட்டுமே பார்ப்பான். இந்த இரண்டு வகை மனிதர்களே இன்று உலகை ஆக்கிரமித்துள்ளனர்.

ஆண்டவரில் மகிழ்ச்சி அது வல்லமை!
மீண்டும் உமது அருளின் ஆண்டை அறிவிக்க வாரும் ஆண்டவரே, ஆமென்.

உரோமை
மி. ஜெகன்குமார் அமதி

வியாழன், 14 ஜனவரி, 2016

The Second Sunday of the Ordinary Time, 17,01,2016




பொதுக்காலம் இரண்டாம் வாரம் (ஆண்டு இ)

முதலாம் வாசகம்: எசாயா 62,1-5

1சீயோனின் வெற்றி வைகறை ஒளியெனவும், அதன் மீட்பு சுடர் விளக்கெனவும் வெளிப்படும்வரை, அதனை முன்னிட்டு மவுனமாயிரேன்; எருசலேம் பொருட்டுச் செயலற்று அமைதியாயிரேன். 2பிறஇனத்தார் உன் வெற்றியைக் காண்பர்; மன்னர் யாவரும் உன் மேன்மையைப் பார்ப்பர்; ஆண்டவர் தம் நாவினால் சூட்டும் புதியதொரு பெயரால் நீ அழைக்கப்படுவாய். 3ஆண்டவரின் கையில் நீ அழகிய மணிமுடியாகத் திகழ்வாய்; உன் கடவுளின் கரத்தில் அரச மகுடமாய் விளங்குவாய். 4'கைவிடப்பட்டவள்' என்று இனி நீ பெயர்பெற மாட்டாய்; 'பாழ்பட்டது' என இனி உன் நாடு அழைக்கப்படாது; நீ 'எப்சிபா' என்று அழைக்கப்படுவாய்; உன் நாடு 'பெயுலா' என்று பெயர் பெறும். ஏனெனில், ஆண்டவர் உன்னை விரும்புகின்றார்; உன் நாடு மணவாழ்வு பெறும். 5இளைஞன் கன்னிப் பெண்ணை மணப்பதுபோல உன்னை எழுப்பியவர் உன்னை மணந்து கொள்வார்; மணமகன் மணப்பெண்ணில் மகிழ்வதுபோல் உன் கடவுள் உன்னில் மகிழ்வார்.

இது சீயோனின் மகிமை என்னும் மூன்றாம் எசாயாவின் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. திருப்பாடலையொத்த அழகுற அமைக்கப்பட்ட ஒரு பாடல் போல இது தோன்றுகிறது. இங்கே எருசலேம் அல்லது சீயோன், திருமணத்திற்கு அல்லது கனவனுக்காக ஏங்கும் இளம்பெண்போல உருவகிக்கப்பட்டுள்ளது. இன்றைய வாசகத்திலே கடவுள்தாமே முயற்சியெடுத்து எருசலேமை திருமணம்முடிப்பதாகவும் அவளது துன்பத்தை தீர்த்துவைப்பதாகவும் அமைக்கப்பட்டுள்ளது. இது ஷநீங்கள் என்னை தேர்ந்து கொள்ளவில்லை நான்தான் உங்களைத் தேர்ந்துகொண்டேன் எனும் ஆண்டவரின் வார்த்தைகளை ஞாபகப்படுத்துகிறது. (யோ 15,16: தி.பா 89,3)

வ.1. வைகறை ஒளியும், சுடர் விளக்கும் வெளிச்சத்தையும் விடியலையும் குறிக்கும். ஆண்டவரின் தெரிவும் அவருடைய அன்பும் இஸ்ராயேல் மக்களுக்கு அவ்வாறான விடியலைக் கொணர்கிறது என்கிறார் எசாயா. வெளிச்சம் இருளுக்கு எதிராகவும், வெளிச்சம் அல்லது ஒளி கடவுளுடைய திருவெளிப்பாட்டையும் இங்கு குறிக்கின்றது.

வ.2. எருசலேம் அழிக்கப்பட்டபோது புறவினத்தவர்களும் மன்னர்களும் அதனைப்பார்த்தனர்,
இப்பபோது இது இஸ்ராயேலின் நேரம் அதே புறவினத்தவர்களும் மன்னர்களும் எருசலேமின் மாட்சியைக் காண்பர். அத்தோடு அழிந்து போன எருசலேமிற்கு ஆண்டவர் புதியபெயர் ஒன்று
சூட்டுகிறார். புதிய பெயரை வைத்தலானது புதிதாய் பிறத்தலையோ அல்லது பழைய வாழ்கையிலிருந்து புதியவாழ்கைக்கு வருவதையோ காட்டும். வரலாற்றில் துறவிகள் துறவறத்தில் புதிய பெயர்களை பெற்றுக்கொண்டனர், அரசர்களும் அரியணை ஏறும்போது புதிய பெயர்களை எடுத்தனர். திருத்தந்தையரும் தெரிவின் பின்னர் ஒரு புதிய பெயரை எடுக்கின்றனர். ஈழத்தில் போராளிகளும் அமைப்பில் சேர்ந்து புதிய பெயரை எடுத்தனர். இஃது புதிய பெயர் என்பது ஒரு விசேட நிகழ்வு என்பதனைக் காணலாம்.

வ.3. மக்கள் மத்தியில் இகழ்சிக்குட்பட்டிருந்த எருசலேம் இப்போது அழகிய மணிமுடியாகவும், அரச மகுடமாகவும் விளங்கும் என்பது. இஸ்ராயேலின் புதிய மாட்சியைக் காட்டுகிறது.

வ.4. எருசலேமின் பழையபெயர்கள் ஷஷகைவிடப்பட்டவள்||; (עֲזוּבָה அட்சூவா),
பாழ்பட்டது (שְׁמָמָ֔ה ஷெமாமா), புதிய பெயர் எப்சிபா (חֶפְצִי־בָ֔הּ அவளில் மகிழ்ச்சி) மற்றும் பெயுலா (בְּעוּלָה மணமானவாள்). இதற்க்கு காரணம் ஆண்டவர் எருசலேமை திருமணம் முடிக்கிறார். முதற்ஏற்பாட்டில் திருமணம் என்பது புதிய வாழ்வையும், பாதுகாப்பையும் ஒவ்வொரு இளைஞனும் யுவதியும் விரும்பும் வாழ்வின் உச்சத்தையும் குறிக்கிறது.

வ.5. இளைஞன் கன்னிப்பெண்னை மணத்தல் என்பது சந்தோசத்தின் உச்ச வெளிப்பாடு. இங்கே இளைஞன் என்பவர் இஸ்ராயேலை உருவாக்கிய இறைவன். கடவுளுக்கு வயது கிடையாது. அவர் என்றுமே இருக்கிறவர். இங்கே யுவதி எருசலேம் நகர், அதாவது புதிதாய் பிறந்த அழகிய நகர். புதிதாய் திருமணமானவர்கள் பிரியமாட்டார்கள், அதே போல கடவுள் பிரியமாட்டார் என்கிறார்.


திருப்பாடல் 96
பல்லவி: அனைத்து மக்களுக்கும் ஆண்டவரின் வியத்தகு செயல்களை அறிவியுங்கள். ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்

திருப்பாடல்கள் 93-100 ஆனவை ஷஎருசலேமிற்கு புகழ்சி| என்ற புகழ் பாடல் வகையைச் சார்ந்;தவை. இன்றைய திருப்பாடல் (96), 13 வரிகளைக் கொண்டு, எதுகை மோனை ஏற்று அழகாக அமைக்கப்பெற்று, ஆண்டவரே அனைத்துலகின் அரசர் என்று பாடுகிறது. ஆண்டவர் மட்டுமே அணைத்துலகின் அரசராக இருக்க முடியும் என்பது எபிரேயர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை, மனிதர்கள் மனிதர்கள் மேல் எவ்வாறு அரசர்களாக இருக்க இயலும் என்னும் கேள்வி விவிலியத்தில் பல வேளைகளில் தோன்றி மறைவதைக் காணலாம். இப்பாடல் ஆண்டவரை ஏன் அனைவரும் போற்ற வேண்டும் என விளக்கம் கொடுக்கிறது:

அ. அவர் வியத்தகு செயல்கள் செய்பவர்
ஆ. அவர் மாட்சி மிக்கவர், தெய்வங்களுக்கு மேலானவர், மற்றவை வெறும் சிலைகளே
இ. அவரே உலகனைத்தையும் படைத்தவர்
ஈ. ஆண்டவரே ஆட்சிசெய்கிறார், அவரது நீதி வழுவாது
உ. அவர் மண்ணுலகிற்கு நீதி வழங்க வருகிறார், உண்மையுடன் தீர்ப்பிடுவார்.
இவ்வாறான ஆண்டவரை மக்களினம் புகழவேண்டும் அத்தோடு முழு படைப்புக்களும் புகழ வேண்டும் என்கிறார்.


இரண்டாம் வாசகம், திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 12: 4-11
4அருள்கொடைகள் பலவகையுண்டு; ஆனால் தூய ஆவியார் ஒருவரே. 5திருத் தொண்டுகளும் பலவகையுண்டு; ஆனால் ஆண்டவர் ஒருவரே. 6செயல்பாடுகள் பலவகையுண்டு; ஆனால் கடவுள் ஒருவரே. அவரே எல்லாரிடமும் எல்லாவற்றையும் செயல்படுத்துபவர். 7பொது நன்மைக்காகவே தூய ஆவியாரின் செயல்பாடுகள் ஒவ்வொருவரிலும் வெளிப்படுகிறது. 8தூய ஆவியார் ஒருவருக்கு ஞானம் நிறைந்த சொல்வளத்தை அருளுகிறார். இன்னொருவருக்கோ அதே ஆவியார் அறிவுசெறிந்த சொல்வளத்தை அளிக்கிறார். 9அதே ஆவியார் வேறொருவருக்கு நம்பிக்கை அருளுகிறார். அந்த ஒரே ஆவியார் மற்றொருவருக்குப் பிணிதீர்க்கும் அருள் கொடையையும் அளிக்கிறார். 
10.தூயஆவியார் ஒருவருக்கு வல்ல செயல் செய்யும் ஆற்றலையும் இன்னொருவருக்கு இறைவாக்குரைக்கும் ஆற்றலையும் வேறொருவருக்கு ஆவிக்குரியவற்றைப் பகுத்தறியும் ஆற்றலையும் மற்றொருவருக்குப் பல்வகை பரவசப் பேச்சு பேசும் ஆற்றலையும் பிறிதொருவருக்கு அப்பேச்சை விளக்கும் ஆற்றலையும் அருளுகிறார். 
11அந்த ஒரே ஆவியாரே இவற்றையெல்லாம் செயல்படுத்துகிறார்; அவரே தம் விருப்பம்போல் ஒவ்வொருவருக்கும் இவற்றைப் பகிர்ந்தளிக்கிறார்.

பவுலுடைய காலத்தில் உடம்பைப்பற்றிய தவறான கருத்துக்களும், மெய்யென்பது உயிரைவிட தாழ்வானது என்ற கிரேக்க தத்துவவியல் சிந்தனைகளை பவுல் எதிர்பதைக் கொரிந்தியருக்கெழுதிய திருமுகத்தில் காணலாம். πνευματικός புனுஉமாடிகோஸ் என்னும் கிரேக்கச் சொல் உண்மையில் ஆவிசார்ந்தவையையே குறிக்கிறது. பவுல் அதற்க்கு ஷஆவிசார்ந்த அருட்கொடைகள்| (τῶν πνευματικῶν டோன் புனுஉமாடிகோன்) என்னும் புது விளக்கம்கொடுத்து அதை உடம்போடு இனைத்துக்காட்டி, மெய்யின் தூய்மையை விளஙகப்படுத்துகிறார். இன்றைய வாசகப் பகுதி, ஆரம்ப கால கிறிஸ்தவர்களுக்கிடையிலிருந்த பிரிவினைகளையயும், அருட்கொடைகளைப்பற்றிய தவறான சிந்தனைகளையும் எவ்வாறு பவுல் தீர்கிறார் எனக் காட்டுகிறது.

வ.4-6: அ. அருட்கொடைகள் (χάρισμα காரிஸ்மா), ஆ. திருத்தொண்டுகள் (διακονία தியாகோனியா), இ. செயல்பாடுகள் (ἐνέργημα எனேர்கெமா) போன்றவை பலவகையிருக்கலாம் அனால் அவற்றின் மூலமும் ஊற்றும் ஆக இருப்பது ஆவியானவரே, ஆண்டவரே, கடவுளே என்று ஒருமையில் காட்டி, திரித்துவ ஒருமைபோல அருட்கொடைகளின் நிறைவும் அமைதிக்காகவே இருக்க வேண்டும் என்கிறார்.

வ. 7: இதுதான் இந்தப்பகுதியின் மைகக்கருத்து: ஆவியாரின் கொடைகள் ஷபொது நன்மைக்கே| கொடுக்கப்பட்டது என்பதை அதனைக் கொண்டுள்ளவர்கள் உணரவேண்டும் என்கிறார். (பொது நன்மை என தமிழில் மொழிபெயர்கப்பட்டுள்ள இச்சொல் கிரேக்க மூலத்தில் ஷஒன்றாகசேர்தலைக்| குறிக்கும்). பல தலத் திருச்சபைகளில் அருட்கொடைகள் மக்களை பிளவுபடுத்துவதை ஏற்க முடியாது.

வ. 8-10: அருட்கொடைகள் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன.
1.மெய்யறிவு நிறைந்த சொல் வளம் (λόγος σοφίας லோகோஸ் சோபியாஸ்)
2.அறிவுள்ள சொல்வளம் (λόγος γνώσεως லோகோஸ் குனோசெயோஸ்)
3.நம்பிக்கை (πίστις பிஸ்டிஸ்)
4.பிணிதீர்கும் அருள் (χαρίσματα ἰαμάτων காரிஸ்மாடா இமாடோன்)
5.வல்லசெயல் செய்யும் அற்றல் (ἐνεργήματα δυνάμεων எனேர்கெமாடா துனாமெயோன்)
6.இறைவாக்கு (προφητεία புரோஃபேடேய்யா)
7.ஆவிக்குரியவற்றை பகுத்தறியும் ஆற்றல் (διακρίσεις πνευμάτων தியாகிரிசெய்ஸ் புனுமாடோன்)
8.பல்வகைப் பரவசப்பேச்சு (γένη γλωσσῶν கெனே குலோஸ்ஸோன்)
9.பரவசப்பேச்சசை விளக்கும் ஆற்றல் (ἑρμηνεία γλωσσῶν எர்மேனேய்யா குலோஸ்ஸோன்)

வ.11: இதுதான் இந்தப்பகுதியின் முடிவுரை. கொடைகள் பலவகையாக இருந்தாலும், அதனை தருபவரும், அதனைத் செயல்படுத்துபவரும் ஆவியான ஒருவரே, கடவுளே. ஆகவே பிரிவினைகளும், உயர் தாழ் மனப்பான்மைகளும் இயல்பிலேயே தவறானவை என்கிறார். அருட்கொடைகளைப்பற்றி பெருமைபாராட்டாது அதனை தரும் ஆவியானவரையே பற்றிக் கொள்ள வேண்டும்.
யாதும் ஊரே யாவரும் கேளீர்

நற்செய்தி வாசகம்: 
யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 1-12
1மூன்றாம் நாள் கலிலேயாவில் உள்ள கானாவில் திருமணம் ஒன்று நடைபெற்றது. இயேசுவின் தாயும் அங்கு இருந்தார். 2இயேசுவும் அவருடைய சீடரும் அத்திருமணத்திற்கு அழைப்புப் பெற்றிருந்தனர். 3திருமண விழாவில் திராட்சை இரசம் தீர்ந்து போகவே இயேசுவின் தாய் அவரை நோக்கி, 'திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது' என்றார். 4இயேசு அவரிடம், 'அம்மா,⁕ அதைப்பற்றி நாம் என்ன செய்யமுடியும்? எனது நேரம் இன்னும் வரவில்லையே' என்றார். 5இயேசுவின் தாய் பணியாளரிடம், 'அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்' என்றார்.
6யூதரின் தூய்மைச் சடங்குகளுக்குத் தேவையான ஆறு கல்தொட்டிகள் அங்கே இருந்தன. அவை ஒவ்வொன்றும் இரண்டு மூன்று குடம் தண்ணீர்கொள்ளும். 7இயேசு அவர்களிடம், 'இத்தொட்டிகளில் தண்ணீர் நிரப்புங்கள்' என்று கூறினார். அவர்கள் அவற்றை விளிம்பு வரை நிரப்பினார்கள். 8பின்பு அவர், 'இப்போது மொண்டு பந்தி மேற்பார்வையாளரிடம் கொண்டு போங்கள்' என்று அவர்களிடம் கூறினார். அவர்களும் அவ்வாறே செய்தார்கள். 9பந்தி மேற்பார்வையாளர் திராட்சை இரசமாய் மாறியிருந்த தண்ணீரைச் சுவைத்தார். அந்த இரசம் எங்கிருந்து வந்தது என்று அவருக்குத் தெரியவில்லை; தண்ணீர் மொண்டு வந்த பணியாளருக்கே தெரிந்திருந்தது. ஆகையால் பந்தி மேற்பார்வையாளர் மணமகனைக் கூப்பிட்டு, 10'எல்லாரும் நல்ல திராட்சை இரசத்தை முதலில் பரிமாறுவர்; யாவரும் விருப்பம் போலக் குடித்தபின்தான் தரம் குறைந்த இரசத்தைப் பரிமாறுவர். நீர் நல்ல இரசத்தை இதுவரை பரிமாறாமல் ஏன் வைத்திருந்தீர்?' என்று கேட்டார்.
11இதுவே இயேசு செய்த முதல் அரும் அடையாளம். இது கலிலேயாவில் உள்ள கானாவில் நிகழ்ந்தது. இதன் வழியாக அவர் தம் மாட்சியை வெளிப்படுத்தினார். அவருடைய சீடரும் அவரிடம் நம்பிக்கை கொண்டனர். 12இதன் பிறகு அவரும் அவர் தாயும் சகோதரர்களும் அவருடைய சீடரும் கப்பர்நாகும் சென்று அங்குச் சில நாள்கள் தங்கியிருந்தனர்.

யோவான் நற்செய்தியை வாசிப்பதற்கு முன் யோவான் நற்செய்தியின் ஆசிரியர் இயேசுவை, இறைவன், மெசியா, இறைமகன், என்பதனை ஒவ்வொரு வார்த்தையிலும் விளக்குவதை அவதானமாக நோக்குவோம். சில ஆய்வாளர்கள் யோவான் நற்செய்தியின் 2-12 அதிகாரங்களை அடையாளங்களின் பகுதியாக பார்க்கின்றனர். இன்றைய வாசகம் ஆண்டவருடைய முதலாவது அடையாளம் என்ற கானான் ஊர் திருமணவிழாவைக் காட்டுகிறது. யோவான் நற்செய்தியில் ஷஅடையாளம்| எனச்சொல்லக் காரணம், இயேசுவின் ஓர் அடையாளம் பின்னர் அதே தொடக்க பகுதியில் படிப்பினைகளைக் கொண்டுவரும். இந்த நற்செய்தியில் அடையாளங்கள் மெசியாவின் யுகத்தைக் குறிக்கிறது. பழையன புதிதாக மாறுவதை யோவான் அழகாக காட்டுவார்.


வ.1-2: கானா என்கிற ஊர், யோர்தான் நதியிலிருந்து (இயேசு திருமுழுக்கு பெற்ற யோர்தான் பகுதி) மூன்று நாள் நடை தொலைவிலிருந்தது. இயேசுவின் தாய் இங்கிருப்பதன் மூலம் இயேசு தாயும்
சமூக வாழ்வில் இருந்ததைக் காணலாம். இயேசு சீடர்களோடு இங்கு வருவது, பாலைநில அல்லது தனிமை வாழ்வை தெரிவுசெய்யாமல் சமூக வாழ்வை தனக்கும் தன் சீடர்களுக்கும் (தாய்க்கும்) தெரிவுசெய்வது இயேசுவின் தனித்துவத்தைக் காட்டுகிறது.

வ.3: இரசம் (οἶνος ஒய்னோஸ்), முதல் ஏற்பாட்டில் மெசியாவின் காலம் புலருவதைக் குறிக்கிறது. (காண் ஆமோஸ 9,13-14: யோவேல் 3,18). இங்கே நிச்சயமாக மெசியாவைக் காட்டவே யோவானின் கழுகுப் பார்வை செல்கிறது எனக் கொள்ளலாம். இரசம் தீர்ந்துவிட்டது என்று மரியா தன் மகனிடம் சொல்வது, அவர் மற்றவரின் சிக்கலில் எவ்வளவு கரிசனையாக இருந்தார் என்பதைக் காட்டுகிறது. திருமணவீட்டில் இரசம் தீர்ந்தால் அது மணமக்களுக்கு அவமானமாக அமையலாம். (நமக்கு திருமண வீட்டில் சோறு போல)

வ.4: இந்த வசனத்தை மிக  கவனமாக நோக்கவேண்டும். இயேசுவின் விடையாக (τί ἐμοὶ καὶ σοίஇ γύναι;) உமக்கும் எனக்கும் என்ன? பெண்ணே! (நேரடி மொழி பெயர்பு) என்ற கேள்விவருகிறது. ஏன் தனது தாயை பெண் என்கிறார் இயேசு. இந்த சொல்லின் மேல் பல சொற்போர்களே நடந்திருக்கறது. இதனுடைய முழுமையான விளக்கத்தை இதுவரை யாரும் கொடுக்கவில்லை. சில கருத்துக்கள்:

அ. அரேமேயிக்க-எபிரேய பிள்ளைகள் தாயை பெண்னென்று அழைப்பதில்லை. (இத்தாலியில் சில நகரவாசிகள் தங்கள் பெற்றோர்களை பெயர்சொல்லி அழைப்பார்கள், நாகரீகம்!). யோவான் இயேசுவைக் கடவுள் என்று வாசகர்களுக்கு நினைவூட்ட இச்சொல்லை பயன்படுத்தியிருக்கலாம்.

ஆ. இயேசு இன்னொரு முக்கியமான இடத்திலும் மரியாவை பெண்ணே என்றே அழைக்கிறார். (காண் யோவான் 19,26) இரண்டு இடத்திலும் நற்செய்தியாளர் மரியாவை இயேசுவின் தாய் என்றே எழுதுவதை அவதானிக்க வேண்டும்.

இ. இங்கே நோக்கப்படவேண்டியவர் இயேசுவும் அவரது அடையாளமும். அன்புச் சீடரும், மரியாவை இறுதிவரை பாராமரித்தவருமான யோவான், மரியாவை இகழ்சிப்படுத்தினார் எனபதை ஏற்க முடியாது.

வ.5: இது திருமணவீட்டாருக்கு மட்டுமல்ல மாறாக நமக்கும் மரியாவின் கட்டளை. இந்த வசனம், மரியா இயேசு நிச்சயமாக உதவிசெய்வார் என்பதை நம்பினார் எனக் காட்டுகிறது. இருவர்கிடையிலிருந்து புரிந்துணர்வையும் காட்டுகிறது.

வ. 6-8: தண்ணீர் முதல் ஏற்பாட்டில் மனித தூய்மையாக்கும் ஒரு சடப்பொருளையே குறிக்கும். இங்கே சாடிகள் நிரப்பப்படுவது, கடவுள் மனிதனை அடுத்த நிலைக்கு உயர்த்துவதைக் குறிக்கலாம். சிலர் பழைய சடங்குகளை இயேசு புதியதாக்குகிறார் என்று இதனைப் பார்க்கின்றனர்.

வ. 9-10: திருமணவிழாக்களில் விருந்தினர் மது மயக்கத்தில் இருக்கும் போது இரண்டாம் தர இரசத்தை தருவது வழக்கம், இங்கே இயேசு தரும் இரசம் எந்த இரசத்தையும்விட மேலானது என்று, மேற்பார்வையாளரின் கேள்வி மூலமாக காட்டுகிறார் யோவான்.

வ. 10-11: இந்த வரிகள் இயேசுவின் இந்த அடையாளத்தின் நோக்கத்தை காட்டுகிறது. சீடர்கள் நம்பினர், இயேசுவோடு சென்றனர். இயேசு மரியாவோடு இருந்தார் என்பதை யோவான் காட்ட மறக்கவில்லை. இதன் மூலமாக மரியா தொடர்ந்தும் இயேசுவின் உலகத்திலே இறுதிவரை இருந்தார் என்கிறார்.

இன்றைய உலகிலும் இரசம் தீர்ந்துவிட்டதை காணலாம். உலகம் நல்ல இரசம் இல்லாததால் அசுத்தமானதை பகிர்ந்து மேலும் பிரச்சனைகளை கூட்டுகிறது. நல்ல இரசத்தை தர நல்ல இயேசுவை வேண்டுவோம். அன்னை மரியாவை பரிந்து பேச சொல்லுவோம். அவர் சொன்ன படி, இயேசு சொல்வதெல்லாம் செய்ய முயல்வோம். ஆமென்.

அன்புடன்

மி. ஜெகன் குமார்
உரோமை


வெள்ளி, 8 ஜனவரி, 2016

The Baptism of the Lord Jesus.








ஆண்டவரின் திருமுழுக்கு பெருவிழா
சனவரி 10, 2016

லூக்கா நற்செய்தியில் வரும் ஆண்டவரின் திருமுழுக்கு வரலாறு, ஒரு அரசன் அரியணை ஏறுவதைப்போலவும், அதனை கடவுள் அங்கீகரிப்பதைப் போலவும் அமைக்கப்பெற்றுள்ளது. திருமுழுக்கு சடங்கு தோராவில் ஏற்படுத்தப்பட்டாலும் (வி.ப. 29,4: 30,17-21: 40,30-33: லேவி 17,15-16: இ.ச. 21,6) மத்திய கீழைத்தேய நாடுகளில் ஏற்கனவே வழக்கத்திலிருந்த ஒரு தூய்மைச் சடங்காகும். கும்ரான் குழுமங்களிலும் இந்தச் சடங்கு ஒரு தூய்மைச் சடங்காக கருதப்பட்டது. புதிய ஏற்பாட்டு காலத்திற்கு முன்னர் புறமதத்தவர் யூத மதத்திற்குள் நுழைய இது ஒரு சடங்காக கருதப்பட்டது. இது உள்புகு சடங்கா அல்லது ஒரு பாவமன்னிப்பு சடங்கா என்பதில் பல கேள்விகளும் விடைகளும் உள்ளன. புதிய ஏற்பாட்டு காலத்தில் சில வேளைகளில் தூய ஆவி திருமுழுக்கின் பின்னரும், அல்லது திருமுழுக்கின் முன்னரும் இறங்கி வருவதைக் காணலாம். திருமுழுக்கு இல்லாத போதும் தூய ஆவியானவர் இறங்கி வருவதையும் புதிய ஏற்பாட்டில் காண்கிறோம். ஆக தூய ஆவியானவர் திருமுழுக்கையும் தாண்டியவர் என்பதனை அறியலாம். இன்றைய ஆண்டவரின் திருமுழுக்கின் முக்கியத்துவத்தை சற்று ஆழமாக பார்ப்போம்.

முதல் வாசகம்: எசாயா 40,1-5.9-11
1'ஆறுதல் கூறுங்கள்; என் மக்களுக்குக் கனிமொழி கூறுங்கள்' என்கிறார் உங்கள் கடவுள். 2எருசலேமிடம் இனிமையாய்ப் பேசி, உரத்த குரலில் அவளுக்குச் சொல்லுங்கள்; அவள் போராட்டம் நின்றுவிட்டது; அவள் குற்றம் மன்னிக்கப்பட்டது; அவள் தன் பாவங்கள் அனைத்திற்காகவும் ஆண்டவர் கையில் இருமடங்கு தண்டனை பெற்றுவிட்டாள்.
3குரலொளி ஒன்று முழங்குகின்றது; பாலைநிலத்தில் ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; பாழ்நிலத்தில் நம் கடவுளுக்காக நெடுஞ்சாலை ஒன்றைச் சீராக்குங்கள். 4பள்ளத்தாக்கு எல்லாம் நிரப்பப்படும்; மலை, குன்று யாவும் தாழ்த்தப்படும்; கோணலானது நேராக்கப்படும்; கரடு முரடானவை சமதளமாக்கப்படும். 5ஆண்டவரின் மாட்சி வெளிப்படுத்தப்படும்; மானிடர் அனைவரும் ஒருங்கே இதைக் காண்பர்; ஆண்டவர்தாமே இதை மொழிந்தார்.
9சீயோனே! நற்செய்தி தருபவளே, உயர்மலைமேல் நின்றுகொள்! எருசலேமே! நற்செய்தி உரைப்பவரே! உன் குரலை எழுப்பு, அஞ்சாதே! 'இதோ உன் கடவுள்' என்று யூதா நகர்களிடம் முழங்கு! 10இதோ என் தலைவராகிய ஆண்டவர் ஆற்றலுடன் வருகின்றார்; அவர் ஆற்றலோடு ஆட்சி புரிய இருக்கிறார். அவர்தம் வெற்றிப் பரிசைத் தம்முடன் எடுத்து வருகின்றார்; அவர் வென்றவை அவர்முன் செல்கின்றன. 11ஆயனைப்போல் தம் மந்தையை அவர் மேய்ப்பார்; ஆட்டுக்குட்டிகளைத் தம் கையால் ஒன்று சேர்ப்பார்; அவற்றைத் தம் தோளில் தூக்கிச் சுமப்பார்; சினையாடுகளைக் கவனத்துடன் நடத்திச் செல்வார்.' 

இந்த எசாயாவின் பகுதி 'எதிர்பார்க்கப்பட்ட கடவுள்' என்ற பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. 

வ.1: கடவுளுடைய தாய்மையை காட்டுகின்ற வசனங்களாக இவை அமைந்துள்ளன. ஆறுதல் என்பதன் எபிரேய மூலச்சொல் (נחם நஹம்) ஆகும். இதன் அர்த்தங்களாக ஆறுதல் படுத்து, இரக்கம் காட்டு, திடப்படுத்து, பரிவு கொள், ஓய்வெடு எனக்கொள்ளலாம். இங்கே கட்டளை இடுபவாராக கடவுளே இருப்பதால் கடவுளுடைய இரக்கம் அருகில் உள்ளது என்பதை இது உணர்த்துகிறது. 

வ.2.அ.: 'எருசலேமின் இதயத்திடம் பேசுங்கள்' என்பது 'இனிமையாய் பேசுங்கள்' என மொழிபெயர்கப்பட்டுள்ளது. (דַּבְּרוּ עַל־לֵ֤ב יְרֽוּשָׁלִַ֙ם֙ தப்ரு அல் லேவ் யிருஷலா(இ)ம்). போராட்டம் நிறைவுபெற்றது, பாவங்கள் மன்னிக்கப்பட்டன என உருவகமாகக் கூறி, ஆண்டவருக்கெதிரான போராட்டம் பாவமே எனச் சொல்கிறார். 

ஆ.: இரண்டு மடங்கு தண்டனை என்பது ஒரு ஆழமான விவிலிய சிந்தனை. (כִּפְלַיִם கிஃலாயிம், כָּפַל இரட்டை மடங்கு) தண்டனையோ அல்லது ஆசீர்வாதமோ இரண்டு மடங்காகும் போது அது ஒருவகை நிறைவைக் குறிக்கும். (காண் வி.ப. 22,4: எரே 16,18: தி.வெ 18,6) 

வ.3:
குரலொன்று முழங்குகின்றது (ק֣וֹל קוֹרֵ֔א), பாலைநிலத்தில் (בַּמִּדְבָּ֕ר), 
கடவுளின் பாதையை தயார் படுத்துங்கள் (פַּנּ֖וּ דֶּ֣רֶךְ יְהוָ֑ה).
நேராக்குங்கள் வரண்ட நிலத்தை
 (יַשְּׁרוּ֙ בָּעֲרָבָ֔ה), 
எங்கள் இறைவனின் பெருவீதியை
 (מְסִלָּ֖ה לֵאלֹהֵֽינוּ ׃).
என்றே முறையாக மொழிபெயர்க்கப்படவேண்டும். இதே பகுதியை லூக்கா செப்துவாஜினிலிருந்து எடுத்து வித்தியாசமாக கையாள்வார் (ஒப்பிடுக லூக் 3,4). 

வ.3-4: எசாயாவுக்கு இந்த வசனங்கள், ஒரு இடம்யெர்ந்த மக்களின் நாடு திரும்புதலையே மையப்படுத்துகிறது, அவர் இந்த குரலை மக்களின் விடுதலையை அறிவிக்கும் அறிவிப்பாளனின் குரலாக காண்பதாக சில விவிலிய வல்லுநர்கள் காண்கின்றனர். லூக்காவிற்கு இது திருமுழுக்கு யோவானின் குரல்.

வ.9: சீயோனும், எருசலேமும் இங்கே ஒத்தகருத்துச் சொற்கள், நற்செய்தி உரைப்பது அவளது செயல். உயர்மலையில் நில், குரலை எழுப்பு மீண்டும் ஒத்தகருத்து உவமானம். 'இதோ உன் இறைவன்' என்பதுதான் இங்கே வருகின்ற நற்செய்தி. இதனையே எருசலேம் உரைக்க வேண்டும். 

வ.10: இந்த இறைவனின் செயல்கள் வர்ணிக்கப்படுகிறன்றன. ஆற்றலானவராக வருகின்றார், அவருடைய கரங்கள் ஆட்சி புரிகின்றன, வெற்றிப்பொருள்கள் அவரோடு. இந்த வசனம் போரில் வெல்கின்ற அரசனை வருணிப்பதாக அமைகிறது, இதனையே எருசலேமை கொள்ளையிட்டவர்கள் செய்தனர். அல்லது அவர்களின் கடவுள்கள் செய்தனர். இப்போது ஆண்டவரே வருகிறார் என்பதன் மூலம், இஸ்ராயேலரின் கடவுள் தோற்கவில்லை என எசாயா கூறுகிறார். 

வ.11. கடவுளை ஆயனாக (רֹעֶה֙ ரோஏஹ்) உருவகப்படுத்துவது இஸ்ராயேலருக்கு மிகவும் பிடித்தமானது. (ஈழத்தமிழருக்கு கார்த்திகைப் பூப்போல) இந்த ஆயனின் செயல்களான ஆட்டுக்குட்டிகளைச் சேர்த்தல், மடியில் சுமத்தல், சினையாடுகளைக் கவனித்தல் போன்றவை ஆண்டவரின் இறுக்கமான அரவணைப்பை காட்ட எசாயா பயன்படுத்துகிறார். (தமிழ்த் தாய்மார் தம் பிள்ளைகளுக்கு நெற்றியிலிடும் முத்தத்தைப் போன்ற உருவகம்). 
  

பதிலுரைப்பாடல், திருப்பாடல் 104
என் ஆன்மாவே ஆண்டவரைப் புகழ்வாய், ஆண்டவருக்கு புகழ்ச்சி
இது ஒரு படைப்பு புகழ்ச்சிப்பாடல். 35வசனங்களைக் கொண்ட இப்பாடல் பிரபஞ்சம் கடவுளைப் போற்றுவதைப் போல் அமைக்கப்பட்டு;ள்ளது. ஆசிரியர் தொடக்க நூலில் கடவுள் உலகை படைத்ததை தியானிப்பவர் போல தன்னைக் காட்டுகிறார். இத் திருப்பாடல் கட்டமைப்பு வித்தியாசமானதாக இருக்கிறது. தொடக்கவுரையுடன் தொடங்குகின்ற பாடல், (என் ஆன்மாவே ஆண்டவரைப் புகழ்வாய்) முடிவுரையில் தனிப் புகழ்சியாக முடிவடைகிறது (நான் ஆண்டவரைப் பாடுவேன் என் வாழ்நாள் வரை வ33). முதலாவது வசனத்திலே வந்த அதே வரிகளுடன், என் ஆன்மாவே ஆண்டவரைப் புகழ், ஆண்டவருக்கு புகழ்ச்சி (הַֽלְלוּ־יָֽהּ ஹல்லூ யாஹ்) என்று நிறைவடைகிறது. 

இரண்டாம் வாசகம், தீத்துவிற்கு எழுதிய திருமுகம், 2,11-14: 3,4-7
11ஏனெனில் மனிதர் அனைவருக்கும் மீட்பராம் கடவுளின் அருள் வெளிப்பட்டுள்ளது. 12நாம் இறைப்பற்றின்மையையும் உலகுசார்ந்த தீய நாட்டங்களையும் மறுத்துக் கட்டுப்பாட்டுடனும் நேர்மையுடனும் இறைப்பற்றுடனும் இம்மையில் வாழ இவ்வருளால் பயிற்சி பெறுகிறோம். 13மகிழ்ச்சியோடு எதிர்நோக்கியிருப்பது நிறைவேறும் எனக் காத்திருக்கிறோம். நம் பெருமைமிக்க கடவுளும் மீட்பருமாகிய இயேசு கிறிஸ்துவின் மாட்சி வெளிப்படப்போகிறது. 14அவர் நம்மை எல்லா நெறிகேடுகளிலிருந்தும் மீட்டு, நற்செயல்களில் ஆர்வமுள்ள தமக்குரிய மக்களாகத் தூய்மைப்படுத்தத் தம்மையே ஒப்படைத்தார்.
4நம் மீட்பராம் கடவுளின் நன்மையும் மனித நேயமும் வெளிப்பட்டபோது, 5நாம் செய்த அறச்செயல்களை முன்னிட்டு அல்ல, மாறாகத் தம் இரக்கத்தை முன்னிட்டு, புதுப் பிறப்பு அளிக்கும் நீரினாலும் புதுப்பிக்கும் 
தூய ஆவியாலும் கடவுள் நம்மை மீட்டார். 6அவர் நம் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் வழியாகத் தூய ஆவியை நம்மீது நிறைவாகப் பொழிந்தார். 7நாம் அவரது அருளால் அவருக்கு ஏற்புடையவர்களாகி, நாம் எதிர்நோக்கி இருக்கும் நிலைவாழ்வை உரிமைப்பேறாகப் பெறும் பொருட்டே இவ்வாறு செய்தார்

தூய பவுல் எழுதிய மேய்ப்புப்பணி திருமுகங்களில் ஒன்றான இதில், இயேசு கொடுக்கும்; தூயஆவியின் தன்மைகளை தீத்துவிற்கு ஞாபகப்படுத்துகிறார். தீத்து என்ற தனிநபருக்கு எழுதியதெனினும், இதனை உற்று நோக்குகின்ற போது, பவுல் தப்பறைகளுக்கு விளக்கம் கொடுப்பது போல அமைந்துள்ளதைக் காணலாம். 

வ.11: 'மனிதர் அனைவருக்கும் மீட்படையும் அருள்' என்பது பவுலுடைய மனமாற்றத்தின் முக்கியமான நம்பிக்கை. இது பல வேளைகளில் கேள்விக்குள்ளாக்கப்பட்டபோதும் பவுல் அதனில் ஆழமாக இருப்பதைக் காணலாம்.  

வ.12: யூதருக்கு மட்டுமே என்று அறியப்பட்ட அருள், இயேசுவால் அனைவருக்கும் கிடைக்கப்பட்டுள்ளது, இதனால் இம்மையில் கட்டுப்பாடுடன் வாழ அனைவரும் கடமைப்பட்டவர்கள் என ஞாபகப்படுத்துகிறார். இந்த அருளை காரணம் காட்டி யாரும் தான்தோன்றித்தன வாழ்வு வாழக்கூடாது என்பதில் கருத்தாயிருக்கிறார் பவுல். 

வ.13.அ.: புவுலுடைய முக்கியமான நம்பிக்கை ஒன்று இங்கே காட்டப்படுகிறது. (προσδεχόμενοι τὴν μακαρίαν ἐλπίδα καὶ ἐπιφάνειαν) 'நாம் காத்திருக்கிறோம், மகிழ்சியான எதிர்நோக்கிற்காகவும் மற்றும் இறைவெளிப்பாட்டிற்காகவும்..' இவ்வார்த்தைகள் இயேசுவினுடைய வருகையை அருகில் பவுல் எதிர்பார்த்திருந்தார் என்பதைக் காட்டுகிறது.

ஆ. μεγάλου θεοῦ καὶ σωτῆρος ἡμῶν Ἰησοῦ Χριστοῦ 'பெரிய கடவுளும் மீட்பருமான இயேசு கிறிஸ்து'. இது ஆரம்பகால திருச்சபையில் ஆண்டவருக்கு வழங்கப்பட்ட ஒரு இறையியல் பெயர்.

வ14. இயேசு பெரிய கடவுளாக இருந்தாலும் அவர் நமக்காக தம்மையையே ஒப்படைத்தார் என காட்டி ஆயரான தீத்துவை தியானிக்க வைக்கிறார் பவுல்

வ.4-5. கடவுளுடைய இந்த மீட்பு எப்படி கொடுக்கப்பட்டது என்பதற்கு விளக்கம் கொடுக்கிறார். நமது அறத்தை முன்னிட்டு அல்ல, மாறாக தமது இரக்கத்தினாலும் (ἔλεος எலேஒஸ்) தமது கழுவுதலினாலும் (λουτρόν லுட்ரோன்), தூய ஆவியின் புதுப்பித்தலாலும் மீட்டார். கழுவுதல், இங்கு ஓர் இடத்தையோ அல்லது அந்த செயற்பாட்டையோ குறிக்கலாம்.

வ.6. கடவுள் தூய ஆவியை இயேசு வழியாகவே பொழிந்தார் என்று கூறி, இயேசுவிற்கும் தூய ஆவியின் வருகைக்கும் பிரிக்க முடியாத தொடர்புள்ளதைக் காட்டுகிறார். 

வ.7. கடவுளுடைய அருள்தான் ஒருவர் கடவுளுக்கு ஏற்புடையவர் ஆவதற்கும் உரிமைவாழ்வை அடைவதற்கும்  காரணம்; அவர் பிறப்போ, குலமோ அல்லது அவருடைய நற்செயல்களோ காரணமாக முடியாது என்பது பவுலுடைய ஆழமான இறையியல் நம்பிக்கை. இது பிற்காலத்தில் 'அருள் மட்டுமே போதும் நற்செயல்கள் கூட தேவையில்லை' எனும் தவறான கருத்தியல்களை நிரூபிக்க தவறாக பாவிக்கப்பட்டதை வரலாற்றில் காணலாம். 
நற்செய்தி
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3:15-16,21-22

15. அக்காலத்தில் மக்கள் மீட்பரை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒருவேளை யோவான் மெசியாவாக இருப்பாரோ என்று எல்லாரும் தங்களுக்குள் எண்ணிக்கொண்டிருந்தார்கள்.16 யோவான் அவர்கள் அனைவரையும் பார்த்து, 'நான் தண்ணீரால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுக்கிறேன்; ஆனால் என்னைவிட வலிமைமிக்க ஒருவர் வருகிறார். அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை. அவர் தூய ஆவி என்னும் நெருப்பால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுப்பார். 21 மக்களெல்லாரும் திருமுழுக்குப் பெறும் வேளையில் இயேசுவும் திருமுழுக்குப் பெற்று, இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தபோது வானம் திறந்தது.22 தூய ஆவி புறா வடிவில் தோன்றி அவர்மீது இறங்கியது. அப்பொழுது, ' என் அன்பார்ந்த மகன் நீயே, உன்பொருட்டு நான் பூரிப்படைகிறேன் ' என்று வானத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது.

லூக்கா நற்செய்தியில் இந்தப் பகுதி ஆண்டவரின் குழந்தைப் பருவ நிகழ்சிகளின் பின்னரும், ஆண்டவரின் பொதுப்பணியின் முன்னரும், அவரை உலகிற்கு அறிமுகம் செய்யும் ஒரு நிகழ்வு போல லூக்கா இருத்தியிருப்பதை இங்கே காணலாம். லூக்கா ஒப்பிட்டு இயேசுவை உயர்த்துவதில் வல்லவர், அதனையே இங்கேயும் செய்கிறார். இந்த நிகழ்வு, இயேசு யார் என்பதை வாசகர்களுக்கு மட்டுமல்ல, திரு முழுக்கு யோவானுக்குமே காட்டும்படி அழகாக வர்ணிக்கிறார் லூக்கா. (ஒப்பிடுக மத்.3,13-17: மாற் 1,9-11: யோவான் 1,32-33)

வ.15. திருமுழுக்கு யோவானை மெசியாவாக எண்ணிய கொள்கை, திருச்சபையை பதம்பார்த்த ஆரம்பகால பேதகங்களில் ஒன்று. இதனை நன்கு அறிந்திருந்து அழகாக அதனை  வர்ணிக்கிறார் லூக்கா. யோவானை மக்கள் ஒருவேளை மெசியாவாக இருப்பாரோ எனக் எண்ண காரணம், அவரது பிறப்பின் அறிவிப்பும் அத்தோடு அவரது வாழ்க்கையுமாக இருந்திருக்கலாம். லூக்கா இங்கு யோவானுக்கு எதிரானவர் அல்ல என்பதை விளங்கவேண்டும். மரியாவின் வாழ்த்துச்செய்தி முதலில் எட்டியது யோவான் புலன்களுக்கே, அவர் அன்னை எலிசபெத்துக்கு அல்ல என லூக்கா அழகுறச் சொல்வார். (லூக் 1,41)

வ.16. இந்த ஒரே வசனத்தில் லூக்காவின் புலமை யோவானை அவரது இடத்திலும் இயேசுவை அவரது இடத்திலும் வைப்பதைக் காணலாம். யோவானின் வார்த்தைகள்:

அ. ஷஷதண்ணீரால் திருமுழுக்கு கொடுக்கிறேன்||, என்று சொல்லி யோவான் தான் செய்வது ஒரு மன்னிப்பு அல்லது துய்மை சடங்கே ஆகும் அத்தோடு இது யூத பாரம்பரியத்தையோ அல்லது கானானிய பாரம்பரியத்ததையோ குறிக்கலாம். இங்கே தண்ணீர் மனித கழுவுதல்களையே காட்டுகிறது. 

ஆ. என்னைவிட வலிமைமிக்கவர்: (ὁ ἰσχυρότερός இஸ்குரோடெரோஸ்) இந்த வார்த்தை பல வேளைகளில் கடவுளின் தன்மையை குறித்தாலும் இங்கு ஒர் ஒப்பீட்டுக்காகவே பாவிக்கப்படுகிறது என கொள்ளலாம். அவர் மிதியடிவாரை அவிழ்க்கும் தகுதி: இச் செயல்களை அநேகமாக அடிமைகளாக வாங்கப்பட்டவர்களே செய்தனர். யோவான் தன்னை கடவுளுடைய அடிமை அல்லது பணியாளன் என்கிறார். 

இ. தூய ஆவி என்னும் நெருப்பினால் திருமுழுக்கு: இங்கே தமிழ் மொழிபெயர்பில் சிறு மயக்கம் இருப்பதைக் காணலாம். (αὐτὸς ὑμᾶς βαπτίσει ἐν πνεύματι ἁγίῳ καὶ πυρί· அவர் உங்களுக்கு திருமுழுக்கு கொடுப்பார், தூய ஆவியாலும் மற்றும்-அதாவது நெருப்பாலும் - நேரடி மொழிபெயர்பு). இதற்கு பல வியாக்கியானங்களையும், விளக்கவுரைகளையும், மொழிபெயர்புக்களையும் வல்லுநர்கள் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்க்ள். சொற்களை வைத்து பார்க்கும் போது, லூக்கா தூய ஆவியையும் நெருப்பையும் தொடர்பு படுத்தி, முதல் ஏற்பாட்டு இறைபிரசன்னத்தை நினைவூட்டுகிறார். நெருப்பு கடவுளை குறிக்கும் ஓரு நிச்சயமான அடையாளம். லூக்கா பல வேளைகளில் இந்த நெருப்பை தனது நற்செய்தியிலும், திருத்தூதர் பணி நூலிலும் காட்டுவார். நெருப்பு இங்கே இறை கழுவுதலையோ அல்லது இறை ஊடகத்தையோ குறிக்கலாம்.

வ.21-22. இயேசு திருமுழுக்கு பெறுவதன் மூலம், திருமுழுக்கு எனும் சாதாரண தூய்மை சடங்கிற்கே அருளடையாளம் என்னும் திருமுழுக்கு கொடுக்கப்படுகிறது. திருமுழுக்கு, திருமுழுக்கு பெறுகிறது. இனி இது அருளடையாளம். யோவானிடம் திருமுழுக்கு பெற்றார் எனக்காட்டி, இயேசு யோவானில் எவ்வளவு மரியாதை வைத்திருந்தார் எனக் காட்டுகிறார். இது லூக்காவின் மரியாதையும் கூட. அத்தோடு இரண்டு நிகழ்வு நடக்கிறது. இயேசு வேண்டிக்கொண்டிருக்க,
அ. வானம் திறந்தது: வானங்களுக்கு மேலேதான் பரலோகம் அங்கேதான் கடவுள் வாழ்கிறார் என்பது ஒரு பாரம்பரிய நம்பிக்கை. ஆக இந்நிகழ்வு இயேசுவை கடவுளாக காட்டுகிறது. 

ஆ. புறாவடிவில் தூய ஆவி இறங்கியது: இது எசாயாவின் இறைவாக்கை நினைவூட்டுகிறது (காண் எசா 11,1-5: 42,1: 61,1) ஆக இதுவும் இயேசுவை கடவுளின் வாரிசாக அல்லது உண்மைக்கடவுளாக காட்டுகிறது. 

இ. கடவுளின் குரல்: இந்த குரல்தான் இயேசுவிற்கு அதிகாரம் கொடுக்கிறது அல்லது அவரை யார் எனக் காட்டுகிறது. முதல் ஏற்பாட்டில் பல வேளைகளில் இந்த இறை குரல் வருவதைக் காணலாம். ஆபிரகாமுக்கு தொட.நூ 22,2: தாவீதுக்கு திருப்பாடல் 2,7: சைரசுக்கு எசா 42,1: ஆக இந்த வான அசரீரி இயேசுவை அருள்பொழிவு செய்வது போல காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. லூக்காவின் இயேசு அருள்பொழிவு செய்யப்பட்ட வல்ல இறைவன். இதே ஆவியோடு இயேசு தனது பணியை தொடங்குவதாக லூக்கா சொல்வார். (காண் 4,1)

நமது திருமுழுக்கு ஒரு சலுகையல்ல. அது அருளடையாளம். நம்முடைய தண்ணீர் திருமுழுக்கு தூய ஆவியை நமக்கு தர வேண்டும். திருமுழுக்கு எடுத்தும் பல கிறிஸ்தவர்கள் படுபாவிகளாக வாழ்ந்து இறந்ததை வரலாறு அறியும். இவர்களிடம் திருமுழுக்கு பொய்க்கவில்லை, இவர்கள் திருமுழுக்கிடம் பொய்த்துப்போனார்கள்.
ஆண்டவரே, எமது திருமுழுக்கின் அழைப்பை உணர்ந்து நாங்கள் கடவுளின் பிள்ளைகளாகவும், திருச்சபையின் உறுப்பினர்களாகவும், நல் வாழ்வு வாழ்ந்து தூய ஆவியை தாங்கியவர்களாக வாழவும், உம்முடைய இந்த ஆவி எமது மக்களுக்கு விடுதலை தரவும் உம்மை வேண்டுகிறோம். ஆமென்.

மி. ஜெகன்அமதி
உரோமை. சனவரி,6,2016.

ஆண்டின் பொதுக்காலம் முப்பத்திநான்காம் வாரம் கிறிஸ்து அரசர் பெருவிழா:  Our Lord Jesus Christ, King of the Universe 24.11.2024

ஆண்டின் பொதுக்காலம் முப்பத்திநான்காம் வாரம்   கிறிஸ்து அரசர் பெருவிழா :  Our Lord Jesus Christ, King of the Universe 24.11.2024 இய...