புதன், 23 மார்ச், 2016

பெரிய வெள்ளி Good Friday



பெரிய வெள்ளி Good Friday


பெரிய வெள்ளி என்று தமிழில் அழகாக அழைக்கப்படும் இந்த தூய்மையான வெள்ளி பலவாறு பல மொழிகளில் அழைக்கப்படுகிறது. Good Friday என்று ஆங்கிலத்தில் அழைக்ப்படும் இத்தினம் God Friday என்பதிலிருந்து வந்ததென்கின்றனர் சிலர். இதனை விட இன்னும் சில நாடுகளில் இது தூய வெள்ளி, பெரிய வெள்ளி, கறுப்பு வெள்ளி என்றும் அழைக்கப்படுகிறது. ஜேர்மானியத்தில் இவ்வெள்ளி Karfreitag (வியாகுல வெள்ளி) என்று அழைக்கப்படுகிறது. ஆண்டவரின் தெய்வீகத்தை வெளிப்படுத்தியது உயிர்ப்பு ஞாயிறு என்றால், அவரின் அளவுகடந்த அன்பையும் இந்த மனித குலத்தின் பெறுமதியையும் உறுதிப்படுத்தியது இந்த வெள்ளியாகும், துன்பாமான வெள்ளியாக இருந்தாலும், மனித குலத்தை விடுவித்ததால் இதனை பெரிய-வெள்ளி என்று அழைப்பதே பொருத்தமாக இருக்கும். 


எசாயா: 52,13-53,12
துன்புறும் ஊழியர்

13இதோ, என் ஊழியர் சிறப்படைவார்; அவர் மேன்மைப்படுத்தப்பட்டு, உயர்த்தப்பட்டு, பெரிதும் மாட்சியுறுவார். 14அவரைக் கண்ட பலர் திகைப்புற்றனர்; அவரது தோற்றம் பெரிதும் உருக்குலைந்ததால் மனித சாயலே அவருக்கு இல்லாதிருந்தது; மானிடரின் உருவமே அவருக்கு இல்லை. 15அவ்வாறே, அவர் பல பிற இனத்தாரை அதிர்ச்சிக்குள்ளாக்குவார்; அரசர்களும் அவரை முன்னிட்டு வாய்பொத்தி நிற்பர்; ஏனெனில் தங்களுக்குச் சொல்லப் படாததை அவர்கள் காண்பர்; தாங்கள் கேள்விப்படாததை அவர்கள் புரிந்து கொள்வர்.

1நாங்கள் அறிவித்ததை நம்பியவர் யார்? ஆண்டவரின் ஆற்றல் யாருக்கு வெளிப்படுத்தப்பட்டது? 2இளந்தளிர் போலும் வறண்ட நில வேர் போலும் ஆண்டவர் முன்னிலையில் அவர் வளர்ந்தார்; நாம் பார்ப்பதற்கேற்ற அமைப்போ அவருக்கில்லை; நாம் விரும்பத்தக்க தோற்றமும் அவருக்கில்லை; 3அவர் இகழப்பட்டார்; மனிதரால் புறக்கணிக்கப்பட்டார்; வேதனையுற்ற மனிதராய் இருந்தார்; நோயுற்று நலிந்தார்; காண்போர் தம் முகத்தை மூடிக்கொள்ளும் நிலையில் அவர் இருந்தார்; அவர் இழிவுபடுத்தப்பட்டார்; அவரை நாம் மதிக்கவில்லை. 4மெய்யாகவே அவர் நம் பிணிகளைத் தாங்கிக்கொண்டார்; நம் துன்பங்களைச் சுமந்து கொண்டார்; நாமோ அவர் கடவுளால் வதைக்கப்பட்டு நொறுக்கப்பட்டவர் என்றும் சிறுமைப் படுத்தப்பட்டவர் என்றும் எண்ணினோம். 5அவரோ நம் குற்றங்களுக்காகக் காயமடைந்தார்; நம்தீச்செயல்களுக்காக நொறுக்கப்பட்டார்; நமக்கு நிறைவாழ்வை அளிக்க அவர் தண்டிக்கப்பட்டார்; அவர்தம் காயங்களால் நாம் குணமடைகின்றோம். 6ஆடுகளைப் போல நாம் அனைவரும் வழிதவறி அலைந்தோம்; நாம் எல்லாரும் நம் வழியே நடந்தோம்; ஆண்டவரோ நம் அனைவரின் தீச்செயல்களையும் அவர்மேல் சுமத்தினார். 7அவர் ஒடுக்கப்பட்டார்; சிறுமைப்படுத்தப்பட்டார்; ஆயினும், அவர் தம் வாயைத் திறக்கவில்லை; அடிப்பதற்கு இழுத்துச் செல்லப்பட்ட ஆட்டுக்குட்டிபோலும் உரோமம் கத்தரிப்போர் முன்னிலையில் கத்தாத செம்மறி போலும் அவர் தம் வாயைத் திறவாதிருந்தார். 8அவர் கைது செய்யப்பட்டு, தீர்ப்பிடப்பட்டு, இழுத்துச் செல்லப்பட்டார்; அவருக்கு நேர்ந்ததைப்பற்றி அக்கறை கொண்டவர் யார்? ஏனெனில், வாழ்வோர் உலகினின்று அவர் அகற்றப்பட்டார்; என் மக்களின் குற்றத்தை முன்னிட்டுக் கொலையுண்டார். 9வன்செயல் எதுவும் அவர் செய்ததில்லை; வஞ்சனை எதுவும் அவர் வாயில் இருந்ததில்லை; ஆயினும், தீயவரிடையே அவருக்குக் கல்லறை அமைத்தார்கள்; செத்தபோது அவர் செல்வரோடு இருந்தார். 10அவரை நொறுக்கவும் நோயால் வதைக்கவும் ஆண்டவர் திருவுளம் கொண்டார்; அவர் தம் உயிரைக் குற்றநீக்கப்பலியாகத் தந்தார்; எனவே, தம் வழிமரபு கண்டு நீடு வாழ்வார்; ஆண்டவரின் திருவுளம் அவர் கையில் சிறப்புறும். 11அவர் தம் துன்ப வாழ்வின் பயனைக் கண்டு நிறைவடைவார்; நேரியவராகிய என் ஊழியர் தம் அறிவால் பலரை நேர்மையாளராக்குவார்; அவர்களின் தீச்செயல்களைத் தாமே சுமந்து கொள்வார். 12ஆதலால், நான் அவருக்கு மதிப்பு மிக்கவரிடையே சிறப்பளிப்பேன்; அவரும் வலியவரோடு கொள்ளைப் பொருளைப் பங்கிடுவார்; ஏனெனில், அவர் தம்மையே சாவுக்கு கையளித்தார்; கொடியவருள் ஒருவராகக் கருதப்பட்டார்; ஆயினும் பலரின் பாவத்தைச் சுமந்தார்; கொடியோருக்காகப் பரிந்து பேசினர்.

நான்காவது ஊழியர் பாடல் என்று அறியப்படும் இந்த இரண்டாவது எசாயா புத்தகப்பாடல், யூத மற்றும் கிறிஸ்தவ வழிபாடுகளில் மிகவும் முக்கியமான பாவனையை கொண்டுள்ளது. யார் இந்த துன்புறும் ஊழியர் என்பதில் கிறிஸ்தவ மற்றும் யூத வல்லுனர்களிடையே பல வேறுபட்ட கருத்தியல்களை காணலாம். யூத அல்லது எபிரேய ஆய்வாளர்க்ள், இந்த துன்புறும் ஊழியரை இறைவாக்கினர் எசாயா, அல்லது தாவீதின் ஒரு வாரிசு, அல்லது புலம் பெயர்ந்த இஸ்ராயேல் இனம் என்று காண்கின்றனர். கிறிஸ்தவ பாரம்பரியம் மாற்றுக் கருத்துக்கள் இன்றி இந்த துன்புறும் ஊழியரை ஆண்டவர் இயேசுவாகவே காண்கின்றனர். 

வவ. 13-15: இந்த வரிகள் கடவுளின் நேரடி சொற்களாக உள்ளன. தாழ்தப்பட்ட கீழ்மையிலிருந்து ஊழியர் எவ்வாறு உயர்த்ப்பட்டு மேன்மையடைவார் என்பதை இவ்வரிகள் விவரிக்கின்றன. பிற இனத்தார், அரசர்கள் என்று கூறப்படுவதால் இந்த ஊழியர் துன்புறும் இஸ்ராயேல் இனம் என்றே எண்ணத்தோன்றுகிறது. 

வவ. 1-3: இங்கே பேசுகிறவர் இன்னொருவர். ஊழியர் எவ்வாறு பரிகாசம் செய்யப்பட்டார் என்று இறைவாக்கினர் விவரிக்கின்றார். இங்கே சொல்லப்படுகின்ற விவரணங்கள் அதிகமான அடையாளங்களை கொண்டதாய் அமைந்துள்ளன. இயேசு கைது செய்யப்படுவதற்கு முன், அவருடைய தோற்றமும், மக்கள் அவரிலே வைத்திருந்த மரியாதையும் இந்த இறைவாக்குடன் ஒத்துப்போகாது. கைது செய்யப்பட்டு துன்புறுத்தப்பட்ட இயேசுவின் சாயல் இந்த விவரணங்களுடன் ஒத்து போவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.  

வவ. 4-6: இந்த வரிகள் நச்சென்று இயேசு ஆண்டவருக்கு பொருந்துகின்றன. இது இந்தப்பாடலின் மையப்பொருள் என்று சொன்னால் மிகையில்லை. அவரும் நாங்களும் என்று ஒப்பிட்டு ஊழியரின் செயல்கள் விவரிக்கப்பட்டு மெச்சப்படுகின்றன. மக்களின் பாவங்களை ஓர் ஆட்டில் மீது ஏற்றி அந்த ஆட்டை 
சமூகத்திற்கு வெளியே அனுப்பி, அதனை கழுவாயாக்கும் மரபு இருந்தது. அந்த மரபில் இங்கே இந்த ஊழியர் கழுவாயாகிறார். 

வவ. 7-9: இயேசுவை பலவேளைகளில் செம்மறி ஆட்டுக்குட்டிக்கு ஒப்பிடுவது வழக்கம், அதற்கான காரணத்தை விவிலிய வல்லுனர்கள் இந்த இந்த பகுதியிலிருந்து பெற்றிருப்பார்கள் எனலாம். இயல்பிலே மிகவும் சாதுவான செம்மறி, தான் கொலையுற போகிறதையும் அறியாதிருக்கிறது, ஆனால் இந்த ஊழியர் அறிந்திருந்தும், கடவுளுக்கு பணிந்து அமைதியாயிருக்கிறார் என்கிறார் ஆசிரியர். ஒன்பதாவது வசனம் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட மிகவும் கடினமானது. இறந்தபோது செல்வந்தராய் இருந்தார் என்பதற்கு பல அர்தங்கள் உள்ளன, செல்வரின் கல்லரையில் அடக்கம்செய்யப்பட்டார் என்றும் சிலர் கருதுகின்றனர். 

வவ. 10-12: முதலில் அவரை கழுவாயாக்குவதும், பின்னர் அவருக்கு நீடூழி வாழ்வு அருளுவதும் கடவுளின் திருவுளம் என்கிறார் இரண்டாம் எசாயா. பாவங்களை சுமத்தலும், பலருக்காக பரிந்து பேசுதலும் என்ற இந்த வாசகத்தின் செய்தி, இஸ்ராயேல் இனம் என்பதனையும் தாண்டி, யாரே ஒரு நபரைக் குறிப்பது போலவே காணப்படுகிறது. யார் இந்த துன்புறும் ஊழியர், எசாயாவா, சைரஸ் மன்னனா, இஸ்ராயேலா, தாவிதின் ஒரு வாரிசா, அல்லது இயேசு ஆண்டவரா? விசுவாச அல்லது திருச்சபையின் வரலாற்று கண்ணோட்டத்தில் இவை இயேசு ஆண்டவரைத் தவிர வேறு எவருக்கும் கச்சிதமாக பொருந்த வாய்ப்பில்லை என நினைக்கிறேன். 

எபிரேயர் 4,14-16: 5,7-9:
இயேசு கிறிஸ்துவின் குருத்துவத்தின் மேன்மை


14எனவே, வானங்களைக் கடந்து சென்ற இறைமகனாகிய இயேசுவை நாம் தனிப்பெரும் தலைமைக் குருவாகக் கொண்டுள்ளதால் நாம் அறிக்கையிடுவதை விடாது பற்றிக்கொள்வோமாக! 15ஏனெனில், நம் தலைமைக் குரு நம்முடைய வலுவின்மையைக் கண்டு இரக்கம் காட்ட இயலாதவர் அல்ல் மாறாக, எல்லா வகையிலும் நம்மைப்போலச் சோதிக்கப்பட்டவர்; எனினும் பாவம் செய்யாதவர். 16எனவே, நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற வேளையில் உதவக் கூடிய அருளைக் கண்டடையவும், அருள் நிறைந்த இறை அரியணையைத் துணிவுடன் அணுகிச் செல்வோமாக.


7அவர் இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில், தம்மைச் சாவிலிருந்து காப்பாற்ற வல்லவரை நோக்கி உரத்த குரல் எழுப்பி, கண்ணீர் சிந்தி, மன்றாடி வேண்டினார். அவர் கொண்டிருந்த இறைப்பற்று கலந்த அச்சத்தை முன்னிட்டு, கடவுள் அவருக்குச் செவி சாய்த்தார். 8அவர் இறைமகனாயிருந்தும், துன்பங்கள் வழியே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார். 9அவர் நிறைவுள்ளவராகி, 'தமக்குத் கீழ்ப்படிவோர் அனைவரும் என்றென்றும் மீட்படையக் காரணமானார். 10'மெல்கிசதேக்கின் முறைப்படி வந்த தலைமைக் குரு' என்று கடவுள் அவருக்குப் பெயர் சூட்டினார்.


இந்த புத்தகம் திருமுகமா அல்லது வரிவுரையா என்பதில் இன்னமும் கருத்தொற்றுமையில்லை. கிறிஸ்தியலை மையமாக கொண்டு அழகான இறையியல் வாதங்களை அக்கால தேவைகளுக்கு ஏற்றபடி கொடுத்த இந்த புத்தகம், இன்றும் எமக்கும் பல சிந்தனைகளை தந்துகொண்டே இருக்கிறது. எபிரேயர் புத்தகம் நான்காம் அதிகாரம், இயேசுவை இரக்கம் நிறைந்த நம்பத்தகுந்த தலைமைக் குரு என்று வர்ணிக்கிறது. இன்றைய வாசகம் இரண்டு கருத்துக்களை முக்கியமாக முன்வைக்கிறது. அ. இயேசு மாபெரும் தலைமைக்குரு: ஆ. அவர் துன்புற்ற தலைமைக் குரு. 

வவ. 14-16: எந்த ஒரு தலைமைக் குருவும் தன்னுடைய மனிதத்தன்மை மற்றும் சுய பாவ நிலை என்று பலவீனங்களால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளார், எனவே வானங்களைக் கடக்கட இயலாதவர். ஆனால் இயேசுவிற்கு இந்த சிக்கல்கள் இல்லையென்பதால், அவர்தான் உன்மையான தலைமைக் குருவாகிறார். இயேசுவினுடைய இரக்க குணத்தை விவரிக்க συμπαθέω சும்பதேயோ என்ற கிரேக்க மூலச் சொல் பாவிக்கப்பட்டுள்ளது. இது ஒருவர் தன்னுடையவர்களுக்காக சேர்ந்து துன்பப்படுதலைக் குறிக்கும். ஆக இயேசுவின் இரக்கம், அனுதாபம் அல்ல, அதையும் தாண்டிய அன்புகடந்த உடன்-இருப்பு என்கிறார் ஆசிரியர். வழமையாக அரியணைகள் ஆட்சியாளர்களின் அதிகாரங்களையும், செல்வங்களையும் குறிக்கும், இங்கே இயேசுவின் அரியணை இரக்கத்தின் அரியனை என் விவரிக்கப்படுகிறது. 


வ. 7-: தலைமைக் குருக்களின் வேண்டுதல்கள் உன்னத தலைமைக் குருவான இயேசுவிற்கு முன்னால் இரண்டாம் தரமானவை என்கிறார், ஆசிரியர். εὐλάβεια எவுலாபெய்யா என்பது இறைபற்று கலந்த அச்சம் என்று அழகாக மொழிபெயர்கப்பட்டுள்ளது. இவர்களை பேறுபெற்றோர் என்று முதல் ஏற்றபாடும் குறிப்பிடுகிறது. இறையச்சமே மெய்யறிவின் தொடக்கம் எனவும் சொல்லப்படுகிறது. இதுவே கடவுள் இயேசுவிற்கு செவிசாய்க்க காரணம் என்கிறார், ஆசிரியர். 

வவ. 8-9: துன்பங்கள் வழியே கீழ்படிதல் என்று, மூல மொழியில் சிலேடை பாவிக்கப்பட்டுள்ளது. துன்பப்பட்டு கற்றுக்கொண்டார், அல்லது கீழ்படிதலை துன்புற்று கற்றுக்கொண்டார் என்றும் மொழிபெயர்கலாம். கீழ்படிதல் ஒரு விழுமியம் என்று இவ்வாறு காண்பிக்கப்படுகிறது. இதனால் இப்போது தனக்கு கீழ்படுவோர்க்கு அதே ஆசீரை வழங்குவார் என்று விவாதிக்கிறார். மெல்கிசதேக் என்னும் குரு, சாலமின் அரசர் என்று தொடக்கநூலில் வருகிறார். இவரின் பின்புலங்களைப் பற்றிய அதிகமான புரிதல்கள் விவிலிய பதிவுகளில் இல்லை. (காண் தொ.நூ 14: தி.பா 110,4). தொடக்கமும் முடிவும் இல்லாமையாலும், ஆபிரகாமே இவருக்கு காணிக்கை செலுத்தியதாலும், முதல் ஏற்பாட்டில் இவர்தான் கடவுளின் முதல் குரு என அறியப்படுகிறார். நீதியின் அரசர் என்றும் இவருடைய பெயருக்கு பொருளுண்டு. ஆக முதல் ஏற்பாட்டு குருக்களோ அரசர்களோ அல்ல, மாறாக இயேசுவே இவர் வழி வந்த உன்மையான தலைமைக்குரு என்பது ஆசிரியரின் வாதம். 



நற்செய்தி 
யோவான் 18,1 - 19,42

யோவான் எழுதிய படி ஆண்டவரின் பாடுகளை தியானிப்பதற்கு முன், யோவானை பற்றிய சிறு விளக்கம் நல்லதென நனைக்கிறேன். 

அ. திருச்சபை காலம் காலமாக நான்காம் நற்செய்தியின் ஆசிரியர், ஆண்டவர் இதயத்திற்கு நெருக்கமான திருத்தூதர் யோவான் என நம்புகிறாள். 

ஆ. கலிலேயரான இந்த யோவான், ஆழமான அரேமேயிக்க மற்றும் கிரேக்க மொழி புலமைத்துவத்தை எப்படி பெற்றிருப்பார் என்பது, பலரின் வாதமும், கேள்வியுமாகும். 

இ. அதிகாமான நிகழ்சி பற்றிய தரவுகள், யாரோ இயேசுவிற்கு அருகில் இருந்து அவதானித்தவர் போல, பல நிகழ்வுகள் பதியப்பட்டுள்ளன. 

ஈ. கொய்னே (சாதாரண) கிரேக்க மெய்யியல் தழுவல்களையும், இராபினிக்க யூத கற்கை நடைமுறைகளையும் கொண்டமைந்துள்ளதும் இந்நற்செய்தியின் சிறப்பம்சமாகும். 

உ. இயேசுவை மெசியாவாகவோ, அல்லது தாவிதின் வழிமரபாகவோ, அல்லது உன்னதமான மனிதராகவோ காட்டுவதை விடுத்து, யோவான் நற்செய்தி இயேசுவை அதிவல்லமை வாய்ந்த கடவுள், அல்லது கடவுளின் வார்த்தையாகக் காட்டுகிறது. 

ஊ. யோவான் நற்செய்தியில், இயேசு தான் செய்யும் எல்லா காரியங்களையும், முழு அறிவுடனும், விருப்பத்துடனுமே செய்வார். இயேசுவின் திட்டபடியே அனைத்தும் நடக்கின்றன என்பதையும் யோவான் அழகாக காட்டுவார். சுருக்கக் கூறின், முதல் ஏற்பாட்டில் தோன்றிய அதோனாய் எலோகிம் இறைவன் தான் இந்த இயேசு ஆண்டவர் என்று யோவான் வார்த்தைக்கு வார்த்தை நிறுவிப்பார். 

இதனையே இந்த பாடுகளின் வரலாற்றிலும் யோவான் காட்சிபடுத்துகிறார். இந்த பாடுகளின் வரலாற்றை இவ்வாறு பிரிப்போம்:

அ. 18,1-11:         ஆண்டவர் முன்வந்து கைதாகிறார்
ஆ. 18,12-27: அன்னாவினதும் கயபாவினதும் முன்னால் ஆண்டவர்
இ. 18,28-19,16: பிலாத்துவினால் தீர்ப்பிடப்படுகிறார்
ஈ. 19,16-22:         சிலுவையில் அறையப்படுகிறார்
உ. 19,23-24: ஆடைகள் களையப்படுதல்
ஊ. 19,25-27: தாயும் அன்புச் சீடரும்
எ. 19,28-30: மரணம்
ஏ. 19,31-37: விலா குத்தப்படுகிறது. 
ஐ. 19,38-42: நல்லடக்கம்


அ.18,1-11: ஆண்டவர் முன்வந்து கைதாகிறார்
(கடவுளை யாரும் கைது செய்ய முடியாது: ஒளியை சிறைபடுத்த முயலும் தீப்பந்தங்கள்!!!)

யோவான் இந்த இடத்தை பெயர் சொல்லாவிட்டாலும், புவியியல் அடையாளங்களை வைத்தும் சமநோக்கு நற்செய்தியாளர்களின் தரவுகளை வைத்தும் இதனை கெத்சமெனி எனக் கணிக்கலாம். இயேசு அடிக்கடி எருசலேமிற்கு சென்றுவந்தார் என்பது யோவான் நற்செய்தியின் ஒரு படிப்பினை இதனையும் இஙகு காணலாம். யூதாசு நெருப்புக்களோடும் தீப்பந்தங்களோடும் வந்தது, இவை நடந்தது இரவில் என்ற காட்டுகிறது. யோவான் நற்செய்தியில் இருள் தீமையின் ஆதிக்கத்தை காட்டுகிறது. சமநோக்கு நற்செய்திகளைப் போலல்லாது யோவான் இயேசுவின் மனிதத்தை அதிகமாக காட்ட மாட்டார். இங்கே இயேசுவே முன்வந்து யாரைத் தேடுகிறீர்கள் என்று கேட்கிறார். இது அவருடைய அதிகாரத்தை காட்டுகிறது. நான் தான் (ἐγώ εἰμι எகோ எய்மி) என்ற இயேசு கூறும் வார்த்தைகள் முதல் ஏற்பாட்டில் கடவுள் தன்னை வெளிப்படுத்தும் போது கூறுகின்ற வார்த்தைகள். கடவுள் தன்னை வெளிப்படுத்தும் போது தீய சக்திகள் தரையில் விழுவது போல படைவீரர்களும், தலைமைக் குருக்கள் மற்றும் பரிசேயரின் காவலர்களும் தரையில் விழுகின்றனர். இயேசு தன்னோடு இருந்தவர்களையும் தனது அதிகாரத்தால் பாதுகாக்கிறார். கடவுள் தன் பணியாளர் மீது துன்பங்களை திணிக்கிறார் என்பது சரியான வாதமாகாது. யோவான் நற்செய்திப்படி படைவீரரின் காதை துண்டித்தவர் பேதுரு. இயேசு அவ்வீரரை குணப்படுத்தியன் மூலம் வன்முறைக்கு முடிவுகட்டுகிறார். 

ஆ. 18,12-27: அன்னாவினதும் கயபாவினதும் முன்னால் ஆண்டவர்
(கடவுள், குருக்களால் சோதிக்கப்படுகிறார்!!!)

படைபிரிவினர், ஆயிரத்தலைவர், யூத காவலர், என அதிகமானவர்கள் ஆண்டவரை கைது செய்ய ஒன்றாக சேர்ந்துள்ளனர். இது ஒரு போர்க் காட்சி போல இருக்கிறது. நன்பர்களைவிட பகைவர்கள் சுயநலத்திற்காக ஒனறாக சேர்வது இலகுவான காரியம் போல. இது ஈழ தமிழருக்கு நன்கு தெரிந்த அனுபவம். அன்னா எற்கனவே இயேசுவைப்பற்றி வாக்குரைத்திருந்தவர் (11,50). இவர் முன்னால் தலைமைக் குரு, கி.பி 7-14 ஆண்டுகளில் சேவையிலிருந்தார். இவரின் ஐந்து புதல்வர்களும் இறுதியாக மருமகனான கயபா தற்போது சேவையிலிருந்தார். 

!. பேதுரு மறுதலித்தல்: முதலாவது தடைவையாக பேதுரு மறுதலிக்கிறார். பேதுருவுடன் சென்ற இந்த மற்ற சீடர் யார் என்று தெளிவாக சொல்லப்படவில்லை. இந்நற்செய்தியின் ஆசிரியராய் இருக்கலாம். இந்த சீடர் பேதுருவைவிட தலைவர்களிடம் பரீட்சாத்தியமாய் இருக்கிறார். முதலாவது தடவையாக ஒரு பெண்ணிடம் தன் ஆண்டவரை மறுதலிக்கிறார் பேதுரு. மறுதலித்தாலும் ஆண்டவரை விட்டு அகலாமல் அந்த வளாகத்திலுள்ளே சுற்றி வரும் பேதுருவை, ஒரு பலவீனன் ஆனாலும் புனிதன் என காட்டுகிறார் யோவான். 

!. அன்னா,  யோவானில் இயேசுவை விசாரிக்கும் விதம் வித்தியாசமாக இருக்கும். இங்கே இயேசுவே அதிகம் பேசுகிறார். இயேசுவை கன்னத்தில் அறைந்தவர்கும் இயேசு பதிலளிக்கிறார். இயேசு அனைவருக்கும் சவால் விடுகிறார்.

!. பேதுரு இரண்டாம் முறையாகவும் மூன்றாம் முறையாகவும் மறுதலிக்கிறார், பின்னர் சேவல் கூவுகிறது. இந்த நிகழ்வுகள் சமநோக்கு நற்செய்திகளைப்போல் நாள் சாமத்தில் நடந்ததைப்போல் உள்ளன. 

இ. 18,28-19,16: பிலாத்துவினால் தீர்ப்பிடப்படுகிறார்
(கடவுளை வைத்து புறவினத்தவரிடம் அரசியல் லாபம்)

!. பிலாத்து, வரலாற்றில் நன்கு அறியப்பட்ட உரோமைய பதிலாளி. யோவான் பிலாத்துவை காட்டும் விதமும் தனித்துவமானது. பிலாத்துவை தந்திரக்காரனாகவும், உண்மையென்றால் என்வென்று அறியாதவர்களில் ஒருவனாகவும் காட்டுகிறார். 

!. பத்து வருடங்களாக உரேமைய, யூதேய-கருவூல முகவராயிருந்த இவன், பல இரத்த களரிக்கு காரணமாக இருந்தான். ஆலயத்திற்குள் உரோமைய இராணுவ உருவங்களை கொணர்ந்தமை, ஆலய பணத்தை சுரண்டியமை போன்ற பல கேவலமான செயல்களை யூதருக்கெதிராக செய்தான். யூதர்கள் எவ்வளவு கடினவாதிகளாக தங்களை உரோமையருக்கு காட்டினரோ அதனையே இவன் யூதர்களுக்கு பதிலுக்கு பதில் செய்தான். சமாரியருக்கு இவன் செய்த கொடுமையின் காரணமாக திபேரியஸ் சீசர் உரோமைக்கு இவனை திரும்பும்படி அழைத்தார். இறுதியாக இவன் தற்கொலை செய்து கொண்டான் என்று எவுசோபியசு கூறுகிறார். உரோமைய ஆட்சியின் பல ஆளுமையற்ற தலைவர்கள் தற்கொலை செய்து கொண்டே மாண்டனர். மற்ற நாடுகளை சுரண்டியவர், தங்கள் இதயங்களை கையாளாமல் மாண்டுபோகிறார்கள், இதற்கு இவன் நல்ல உதாரணம். இவன் இயேசுவை விசாரித்தான் என்பதைவிட, இயேசு முன்னால் இவன் தோன்றிய காரணத்தால் மட்டுமே வரலாற்றில் இன்றும் அறியப்படுகிறான், அசிங்கமாக. 

!. யோவான், பிலாத்து இயேசுவை விசாரித்த விதத்தை, இரட்டை அரங்கு விதத்தில் விவரிக்கிறார். இயேசு மாளிகைக்குள் இருக்கிறார், யூத தலைவர்கள் மாளிகைக்கு வெளியில் இருக்கின்றனர். பாஸ்கா காலமாகியதால் அவர்கள் உரோமைய இராணுவ மாளிகைக்குள் நுழையவில்லையாம். ஆனால் பாஸ்காவின் கடவுளும், பாஸ்கா செம்மறியும் உள்ளே இருக்கிறார். பிலாத்துவினதும், தலைவர்களினதும் கேள்விகளும் விடைகளும், இவர்களுக்கிடையில் எரிந்துகொண்டிருந்த பகைமையை நேரடியாகவே காட்டுகிறது. 

!. பிலாத்து இயேசுவை, நீ யூதரின் அரசனா என்று ஆச்சரியமில்லாமலே கேட்கிறான். உரோமைய பேரரசில் கபபம்கட்டும் அரசர்களாக இருப்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயம்தான். பிலாத்துவின் கேள்விக்கு ஆண்டவரின் பதில் இன்னொரு கேள்வி. யார் யாரிடம் கேள்வி கேட்பது. இயேசு இரண்டு விடயங்களை பிலாத்துவிற்கு சொல்வது போல அனைத்து போலி தலைவாக்களுக்கும் சொல்கிறார். கடவுளுடைய அரசும் ஆட்சியும், உண்மையும் இவ்வுலக போலித் தலைவர்களுக்கும் அவர்களின் பங்காளிகளுக்கும் தெரியவே தெரியாது என்பது அது.  

!. உண்மை, ἀλήθεια அலேதெய்யா, என்பது ஒரு முக்கியமான கிரேக்க மெய்யறிவு வாதம், இது பிலாத்துவிற்கு மட்டுமல்ல, அதிமானவர்களுக்கு புரியாது. 

!. பாஸ்கா விழாவிற்கு ஒரு கைதியை விடுதலை செய்வது, நற்செய்திகளில் மட்டுமே காணப்படுகிறது, அதுவும் கொலைகாரர்களை விடுதலை செய்வதும் புதுமையாய் உள்ளது. உரோமையர்களும் கொலைகாரர்களே. 

!. படைவீரர்கள் செய்யும் பரிகாசங்கள், போரிலே தோற்றும் சரணடையாத அரசனுக்கு செய்யும் அவமரியாதையை ஒத்திருக்கிறது. முள் முடி, செம்போர்வைகள் மறைமுகமாக அரச அணிகலன்களையே காட்டுகின்றன. இதோ மனிதன் (Ecce Homo) என்று பிலாத்து அன்று சொன்னது, இன்று பல முக்கிய வாக்காகிறது. நேரடியாக மொழிபெயர்த்தால் இதோ அப்பாவி என்றும் பொருள் படும். (காண் செக்கரியா 6,12)

!. பிலாத்து தன்னுடைய அதிகாரத்தைப் பற்றி சொல்ல, இயேசு தன்மேல் எவருக்கும் அதிகாரம் இல்லை என்கிறார். அதேவேளை காட்டிக்கொடுபபவர்கள் பாவப்பட்டவர்கள் என்கிறார்.

!. கல்தளம், கபதா என்பது விசாரனை செய்யும் இருக்கை, இதன் எச்சங்களை வடக்கு எருசலேமில் இன்னும் காணலாம். இயேசு தன்னை கடவுள் என்று சொல்லி தேவ தூசனம் சொல்கிறார் என்று பொய் சொல்லியவர்கள், உரோமைய சீசரை தங்கள் கடவுளுக்கு நிகராக வைத்து அரசனாக்கி யூத தலைவர்கள் தேவ தூசனம் சொல்கிறார்கள் என்று அன்புச் சீடர் கோபத்தோடு சரியாகச் சொல்கிறார். இத்தோடு இயேசுவின் கொலைப் பொறுப்பை யூதத் தலைவர்களே ஏற்றுக்கொள்கின்றனர். 



ஈ. 19,16-22: சிலுவையில் அறையப்படுகிறார்
(சிலுவை சுமக்கும் கடவுள்)

யோவான் நற்செய்தியில் இயெசு தன்சிலுவையை தானே சுமப்பார். கொல்கொதா என்கிற எபிரேய சொல் லத்தின் மொழியில் கல்வாரியா என்று பொருள்படும். சிலுவையின் உச்சியில் வைக்கப்பட்ட பெயர் பலகை நான்கு நற்செய்திகளிலும் நான்கு விதமாக உள்ளது. மூன்று மொழியில் எழுதப்பட்டது, இயேசுவின் முழு உலக அரசாட்சியைக் காட்டுகிறது. எழுதியது எழுதியதே என்பது, கலகக் காரர்களின் கூக்குரல் எப்போதும் எடுபடாது என்பதைக் குறிக்கலாம். பிலாத்து இயேசுவை வைத்து யூத தலைவர்களை ஏளனப்படுத்துகிறான். 

உ. 19,23-24: ஆடைகள் களையப்படுதல்
(தைக்கப்படாத தையல்)

சிலுவையில் அறையப்படும் கைதிகளின் உடைமைகளை படைவீரர்கள், தங்களுடையாக்;கிக் கொண்டது வழமை. (போரின் போதும், இடப்பெயர்வின் போதும், எமது உடமைகளை சாதாரன சிப்பாய்களே தங்களுடையதாக்கினது நினைவுக்கு வரும். இன்னும் போரில் கொள்ளையடித்து அதற்கு அர்தமும் கொடுக்கும் அழிவின் கலாச்சாரம் நின்றபாடில்லை!!! கொள்ளைக்காரர்கள்.)
இங்கே இயேசுவின் தையலே இல்லாமல் இருந்த ஆடை, அவரின் தலைமை குருத்துவத்தை அடையாளப்படுத்துகிறது என்கின்றனர் சிலர். ஆனால் யோவான் இயேசுவை தலைமைக் குரு என்பதைவிட அரசராகவே காட்ட முயற்சிக்கிறார்.  


  ஊ. 19,25-27: தாயும் அன்புச் சீடரும்
(திருச்சபையும் தாயும்)

யோவான் நற்செய்திப்படி இதனை சாதாரன நிகழ்வாக எடுக்க முடியாது. பெயரிடப்படாத மரியாவும், யோவானும் அவர்களின் அடையாள உருவகங்களை வெளிப்படுத்துகின்றனர். இந்த நிகழ்வு பல படிப்பினைகளை தாங்கி வருகிறது. 

!. இந்த பெண் திருச்சபையையும், அன்புச் சீடர் கீழ்படிதலையையும் குறிக்கலாம், அன்னை மரியாளையும் திருச்சபையையும் குறிக்கலாம். 

!. தொடக்க நூலில் வந்த முதல் பெண்ணும், மரக்கனியையும் போன்று, இங்கே புதிய பெண்ணும், புதிய கனியும் என்றும் நோக்கலாம். 

!. ஏன் யோவான் மட்டும் மரியாவை சிலுவையடியில் நிறுத்துகிறார்:
- திருச்சபையின் பெண் தன்மையை காட்ட இருக்கலாம்.
- மீட்பின் வரலாற்றில் பெண்மையின் தன்மையை காட்டவும் இருக்கலாம்
- மரியாவின் நல் உதாரணத்தை காட்டவும் எணலாம்.
- இனி மரியா இயேசுவிற்கல்ல மாறாக நமக்கும் தாய் என காட்டவும் எனலாம்.

எ. 19,28-30: மரணம்
(கடவுளின் தூக்கம்)

யோவான் நற்செய்தியில் இயேசு ஆண்டவராக தனது மரண நேரத்தை தானே முடிவு செய்கிறார். அனைத்தும் நிறைவேறிவிட்டதென்பது என்பதையும் நன்கு அறிந்திருக்கிறார். தாகமாய் இருக்கிறது என்பது திருப்பாடல் 69,21ஐ அல்லது 22,15ஐ நினைவூட்டலாம். ஈசோப்புத் தண்டில் திராட்சை இரசம், எகிப்தில் வாயிற் கதவுகளில் பூசப்பட்ட இரத்தத்தை நினைவூட்டலாம், இப்படியாக இவரது மரணம் பலருக்கு உயிர்ப்பு கொடுக்க் இவ்வாறு நிகழ்ந்தது என்றும் கூறலாம். இறுதியாக இயேசு வலியால் மரணமடையவில்லை மாறாக தனது ஆவியை தானே ஒப்படைக்கிறார், παραδίδωμι பராதிதோமி- கையளி என்று பொருள். இவ்வாறு அவர் முடிவையும் இங்கே அவரே முடிவுசெய்கிறார். 


ஏ. 19,31-37: விலா குத்தப்படுகிறது.
(எலும்பு முறிபடாத பாஸ்கா செம்மறி)

யோவான் நற்செய்திப்படி இயேசு சிலுவையில் உயிர்விட்டது, வெள்ளி மதியம் எனவே, இது பாஸ்காவிற்கு முதல் நாள். எனவே பலருடைய மரணம் விரைவுபடுத்தப்படுகிறது. எனெனில் சனிக்கழமையில் (பாஸ்காவில்)
உடல்கள் தொங்கப்படக்கூடாதாம். (உயிரைவிட சடங்குகள் முக்கியமாகிறது! ஆண்டவரை கொலை செய்து அவரின் பாஸ்கா கொண்டாடப்படுகிறது! ஆண்டவரை வெளியில் விட்டுவிட்டு ஞாயிறு திருப்பலி ஒப்புக்கொடுப்பது போல). யோவான் இந்த பாடுகளின் வரலாற்றில் பல இறைவாக்குகள் நிறைவேறுவதை ஆரம்பம் முதல் குறிப்பிடுகிறார். விலாவில் இருந்துவந்த இரத்தத்தையும் நீரையையும், திருச்சபை தந்தையர்கள் நற்கருணைக்கும், திருமுழுக்கிற்கும் ஒப்பிடுகின்றனர். இயேசு புதிய ஆதாமாகவும், சிலுவை புதிய மரமாகவும், திருச்சபைக்கு அருட்சாதனங்கள் இங்கே வழங்கப்படுகிறது. யோவான் இடையில் ஆண்டவரின் விலாவை குத்திய உரோமையரின் சாட்சியை பதிவு செய்கிறார் போல தோன்றுகிறது. ஆண்டவரின் எலும்புகள் முறிபடாதது, பாஸ்கா செம்மறியின் சட்டங்களை நினைவூட்டுகிறது (காண் வி.ப 12,46). குத்தியவரை ஊடுருவி பார்ப்பதன் மூலம் இயேசு நேர்மையாளர் என்று மீண்டும் நினைவூட்டப்படுகிறது (காண் செக் 12,10). 



ஐ. 19,38-42: நல்லடக்கம்
(உயிரின் உறக்கம்)

நான்கு நற்செய்தியாளர்களும் அரிமத்தியா யோசேப்பு இயேசுவின் நல்லடக்கத்திற்கு உதவியதை பதிவு செய்திருக்கின்றனர். மத்தேயு நற்செய்திப்படி இந்த கல்லறைத் தோட்டம் அரிமத்தியா யோசேப்புடையது. நிக்கோதேம் இங்கே வந்து அரிமத்தியா யோசேப்புடன் ஆண்டவரை அடக்கம் செய்தது யோவான் நற்செய்தியில் மட்டுமே உள்ளது. யோவான் இவர்கள் இருவரையும் நல்லவர்களாக இருந்தாலும், பயந்தவர்களாகவும், இருட்டில் பணிசெய்கிறவர்களாகவும் காட்டுகிறார். இயேசுவின் சீடர்கள் இன்னும் வெளிப்படையாக பகலில் பணிசெய்கிறவர்களாக இருக்க வேண்டும் என்று என்கிறார் போல. இயேசுவின் அடக்கத்திற்கு பயன்படுகின்ற நறுமண பொருட்கள் முப்பது கிலோக்களாக இருப்பது, ஆச்சரியமளிக்கிறது. இவ்வாறு யோவான் இறுதியாக ஓரு அரச நல்லடக்கத்தை காண்பிக்கிறார். புதிய கல்லரையும் இதனைத்தான் குறிக்கிறது. இயேசு இவ்வாறு கன்னியின் வயிற்றில் உருவானவர், புதிய கல்லறையில் விதைக்கப்படுகிறார், உயிர்ப்பதற்காக. கடவுளுக்கே அடக்கச் சடங்கு!!!

கல்லறையில் உயிர்கள் தூங்குகின்றன என்பது கிரேக்க சிந்தனை, அங்கே உடல்கள் கடவுளின் வருகைக்காக காத்திருக்கின்றன என்பது கிறிஸ்தவ சிந்தனை, துயிலும் இல்லத்தில் உடலும் உயிரும் விதைக்கப்படுகின்றன என்பது ஈழ தமிழ் சிந்தனைகளின் ஒன்று. உயிரை அழிக்கலாம், உடலை சிதைக்கலாம், உயிர்ப்பையும் உண்மையையும் எவராலும் ஒன்றும் செய்ய முடியாது. 

ஆண்டவரே, இயேசுவே, பாடுகளைத் தாங்கி, மரணத்தை தழுவி உயிர்ப்பைக் காட்டிய நீர், தொடர்;ந்து துன்புறுத்தப்பட்டுக்கொண்டும், அப்பாவிகளைக் காக்க விரைந்து வாரும். துன்பமின்றி தூய்மையில்லை என்பதை கற்றுத்தாரும். ஆமென்.

மி. ஜெகன்குமார் அமதி
றெஜியோ எமிலியா
23, பங்குனி, 2016.






பெரிய-தூய வியாழன் 24, Maundy Thursday.


பெரிய-தூய வியாழன் 24, Maundy Thursday. 


பெரிய வியாழன், ஆண்டவர் புதிய கட்டளையை சீடர்களுக்கு கொடுத்ததால், கட்டளை வியாழன் என்று லத்தின் மொழியில் அழைக்கப்படுகிறது (mandatum). நற்கருணையை ஏற்படுத்திய படியால் இந்த வியாழன் குருத்துவத்தின் வியாழனாகவும் ஏற்படுத்தப்படுகிறது. மிருகங்களையும், பறவைகளையும் ஒப்புக்கொடுத்து தெய்வங்களை திருப்திப்படுத்தும், பயங்கரமான உலகில் கடவுளே வந்து, பாதங்களைக் கழுவி, தன்னை ஒப்புக்கொடுத்து பலி என்றால் என்ன வென்று போதிக்கிறார்.  

முதலாம் வாசகம்
வி.ப: 12,1-8.11-14

1எகிப்து நாட்டில் ஆண்டவர் மோசேக்கும் ஆரோனுக்கும் பின்வருமாறு கூறினார்: 2உங்களுக்கு மாதங்களில் தலையாயது இம்மாதமே! ஆண்டில் உங்களுக்கு முதல் மாதமும் இதுவே! 3இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பு முழுவதற்கும் நீங்கள் அறிவியுங்கள்; அவர்கள் இம்மாதம் பத்தாம்நாள், குடும்பத்துக்கு ஓர் ஆடு, வீட்டிற்கு ஓர் ஆடு என்று தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும். 4ஓர் ஆட்டினை உண்ண ஒரு வீட்டில் போதிய ஆள்கள் இல்லையெனில், உண்போரின் எண்ணிக்கைக்கும் உண்ணும் அளவுக்கும் ஏற்ப அண்டை வீட்டாரைச் சேர்த்துக்கொள்ளட்டும். 5ஆடு குறைபாடற்றதாக, கிடாயாக, ஒரு வயது குட்டியாக இருக்க வேண்டும். தேர்ந்தெடுப்பது வெள்ளாடாகவோ செம்மறியாடாகவோ இருக்கலாம். 6இம்மாதம் பதினான்காம் நாள்வரை அதை வைத்துப் பேணுங்கள். அந்நாள் மாலை மங்கும் வேளையில் இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பின் அனைத்துச் சபையும் அதை வெட்ட வேண்டும். 7இரத்தத்தில் சிறிதளவு எடுத்து, உண்ணும் வீடுகளின் இரு கதவு நிலைகளிலும், மேல் சட்டத்திலும் பூச வேண்டும். 8இறைச்சியை அந்த இரவிலேயே உண்ணவேண்டும். நெருப்பில் அதனை வாட்டி, புளிப்பற்ற அப்பத்தோடும் கசப்புக் கீரையோடும் உண்ண வேண்டும்.

11நீங்கள் அதனை உண்ணும் முறையாவது: இடையில் கச்சை கட்டி, கால்களில் காலணி அணிந்து, கையில் கோல் பிடித்து விரைவாக உண்ணுங்கள். இது 'ஆண்டவரின் பாஸ்கா'.
12ஏனெனில், நான் இன்றிரவிலேயே எகிப்து நாடெங்கும் கடந்து சென்று, எகிப்து நாட்டில் மனிதர் தொடங்கி விலங்குவரை அனைத்து ஆண்பால் தலைப்பிறப்பையும் சாகடிப்பேன். எகிப்தின் தெய்வங்கள் அனைத்தின்மேலும் நான் தீர்ப்பிடுவேன். நானே ஆண்டவர்! 13இரத்தம் நீங்கள் இருக்கும் வீடுகளில் உங்களுக்கு அடையாளமாக இருக்கும். நான் இரத்தத்தைக் கண்டு உங்களைக் கடந்து செல்வேன். எகிப்து நாட்டில் நான் அவர்களைச் சாகடிக்கும்போது, கொல்லும் கொள்ளை நோய் எதுவும் உங்கள்மேல் வராது.
புளிப்பற்ற அப்ப விழா. 14இந்நாள் உங்களுக்கு ஒரு நினைவு நாளாக விளங்கும். இதனை ஆண்டவரின் விழாவாக நீங்கள் தலைமுறை தோறும் கொண்டாடுங்கள். இந்த விழா உங்களுக்கு நிலையான நியமமாக இருப்பதாக!

அ. பாஸ்கு (פֶּסַח பெசா) என்பது கடந்து போதலைக் குறிக்கும். பாஸ்கு விழா இஸ்ராயேலருடைய முக்கிய விழாவாகி, ஆண்டவர் எகிப்திலே இஸ்ராயேல் மக்களை மீட்டதையும், அழிக்கும் வான தூதர் இஸ்ராயேல் வீடுகளைக் கடந்து சென்றதையும், இஸ்ராயேலர் செங்கடலைக்க கடந்ததையும் குறிக்கிறது. அநேகமாக நிசான்-சித்திரை மாதம் 14ம் நாள் இந்த விழா கொண்டாடப்பட்டது. ஓரு செம்மறி ஆட்டுக் குட்டியை பலியிட்டு குடும்பமாக கொண்டாடப்பட்ட இந்த விழா, அதே மாதம் 15ம் தொடங்கப்பட்ட புளிக்காத அப்ப விழாவுடன் சேர்த்துக் கொள்ளப்பட்டது. இந்த இரண்டு விழாக்களும் வரலாற்றிலே தனித் தனியாக தொடங்கப்பட்டு, பின்நாளில் இஸ்ராயேலிரின் மீட்வு வரலாற்றோடு சேர்ந்து ஒரே விழாவானது. மத்தேயு, மாற்கு, லூக்கா, பவுல் போன்றோர் ஆண்டவரின் இறுதி உணவை பாஸ்கா விழாவாக காண்கின்றனர், யோவான் சற்று முன்னே சென்று ஆண்டவர் சிலுவையில் மரணித்ததே, பாஸ்கா விழாவென்று காண்கிறார். 

ஆ. குரு மரபு பாரம்பரியம் என்று காணப்படும் இந்த பகுதி, மத்திய கிழக்கு பகுதிகளின் நாடோடி வாழ்கையை நினைவு கூறுகிறது என்பர் ஆய்வாளர்கள். வசந்த காலத்தின் தொடக்கத்தில் புதிய மேய்சல் நிலங்களைத் தேடி மந்தைகளை கூட்டிச் செல்கிற நாடோடி மக்கள், தெய்வங்களிடம் பாதுகாப்பு வேண்டி, செய்யப்பட்ட ஒரு வகை பலி விழாக்களை ஒட்டி இது அமைந்துள்ளது. குரு, பலிப்பீடம், ஆலயம் இவை இந்த பகுதியில் இல்லாமையானது, இந்த விழா மிகவும் புரதனமானது என காட்டுகிறது. மதத்திற்கு வெளியில் உண்டாகி, பின்னர், இஸ்ராயேலின் மதத்திற்குள் உள்வாங்கப்பட்டிருக்க வேண்டும். எம்முடைய தைப்பொங்கலுக்கும் இப்படியான அழகான வரலாறு உள்ளது நினைவிற்கு வருகிறது. 

வவ. 1-4: பல புராதன கால அட்டவணைகள், வசந்த காலத்தையே வருடத்தின் முதலாவது மாதமாக கொண்டிருந்தன. குடும்ப விழா என்பதும், அயலவரையும் சேர்த்துக்கொள்ளட்டும் என்பதும், மனிதன் சமூக பிராணி என்பதற்கு நல்ல உதாரணம்.

வவ. 5-6: ஆண்டின் தேர்வுத்தன்மை விவரிக்கப்படுகிறது. தொடக்க காலத்தில் அனைத்து ஆடுகளும் நல்லவைகளாகவே கருதப்பட்டன, பின்னர் இறையியலும், அறிவியலும் வளர, செம்மறி நல்லதையும், ஆடு தீமையையும் குறிப்பதாக மாறிவிட்டது. 

வவ. 7-8.11: இரத்தங்களை பூசுதல் ஒரு வகை பாதுகாப்பு வேண்டி பலி ஒப்புக்கொடுக்கும் சடங்கு. சட்டங்களிலும் நிலைகளிலும் பூசுதல், இக்காலங்ளில் ஏற்கனவே இவர்கள் சிறிய வகை வீடுகளில் வாழத்தொடங்கிவிட்டனர் எனலாம். (கிறிஸ்து சிலுவையில் தொங்கி, தனது இரத்தத்தால் அனைவரையும் ஒப்புரவாக்கிவிட்டார், ஆனாலும் இன்னும் சில கிறிஸ்தவர்கள் இயேசுவை திருப்திப்படுத்த சில ஆலயங்களில் அப்பாவி மிருகங்களை பலியிடுவதை என்னவென்று சொல்வது?) இறைச்சியை உண்ணும் விதமும், கசப்புக் கீரையும், சாதாரண பாலைவன மேய்சல்காரர்களின் வறிய உணவை குறிக்கிறது. வாட்டி உண்ணுதல், சமைக்க பாத்திரம் இன்மையையும், கசப்புக் கீரை அவர்களின் தொட்டுண்ணும் உணவையும் குறிக்கலாம். உண்ணுபவர்களின் முறை, எதோ ஒரு அவசரத்தை காட்டுகிறது. குறிப்பிடப்பட்டுள்ள ஆடை அணிகள் சாதாரண நாடோடி மக்களின் உடைகள். இவ்வளவு காலமும் சாதாரன சடங்காக இருந்தது இப்போது ஆண்டவரின் பாஸ்காவாக மாறுகிறது. இதுவே விடுதலைப் பயண ஆசிரியரின் மையச் செய்தி. 

வவ. 12-14: தலைப்பிள்ளைகளின் மரணம், ஒரு இனத்தின் எதிர்காலத்தின் மரணத்தைக் குறிக்கும். இவ்வாறு ஆண்டவர்தான் உன்மையான கடவுள் என்று காட்ட ஆசிரியர் கொடுக்கும் விளக்கம். 
אֲנִי יְהוָה அனி அடோனாய், என்று இங்கே கடவுள் மோசேய்கு சொல்வது, பின்நாளில் யோவான் நற்செய்தியில் இயேசு தன்னைப் பற்றி சொல்லும் வசனங்களை ஒத்திருக்கின்றன. இரத்தம் முதல் ஏற்பாட்டில் பல அர்தங்களைக் கொடுக்கிறது. இரத்தம் உயிரின் அடையாளம் என்பது மிகவும் முக்கியாமான ஒரு செய்தி.
இன்றிலிருந்து இந்த விழா ஆண்டவரின் நினைவு நாளாக இஸ்ராயேல் மக்களுக்கு மாறுகிறது. 

இரண்டாம் வாசகம்
1கொரி 11,23-26

23ஆண்டவரிடமிருந்து நான் எதைப் பெற்றுக்கொண்டேனோ அதையே உங்களிடம் ஒப்படைக்கிறேன். அதாவது, ஆண்டவராகிய இயேசு காட்டிக்கொடுக்கப்பட்ட அந்த இரவில், அப்பத்தை எடுத்து, 24கடவுளுக்கு நன்றி செலுத்தி, அதைப்பிட்டு, 'இது உங்களுக்கான என் உடல். இதை என் நினைவாகச் செய்யுங்கள்' என்றார். 25அப்படியே உணவு அருந்தியபின் கிண்ணத்தையும் எடுத்து, 'இந்தக் கிண்ணம் என் இரத்தத்தால் நிலைப்படுத்தப்படும் புதிய உடன்படிக்கை. நீங்கள் இதிலிருந்து பருகும் போதெல்லாம் என் நினைவாக இவ்வாறு செய்யுங்கள்' என்றார். 26ஆதலால் நீங்கள் இந்த அப்பத்தை உண்டு கிண்ணத்திலிருந்து பருகும் போதெல்லாம் ஆண்டவருடைய சாவை அவர் வரும்வரை அறிவிக்கிறீர்கள்.

புதிய ஏற்பாட்டில் நற்செய்திகளைத் தாண்டி, நற்கருணை ஏற்பாட்டினைப் பற்றி விவரிக்கின்ற முக்கியமான பகுதி இதுவாகும். இந்த விவரிப்பின் மூலம், நற்செய்திகள் எழுதப்படுவதற்கு முன்னமே ஆரம்ப திருச்சபை நற்கருணைக் கொண்டாட்டங்களை நிறைவேற்றியது என காணலாம். பவுல் எழுதியிருக்கும் வசனங்கள், நற்செய்தியாளர்கள் எழுதியிருக்கும் வசனங்களோடு அதிகமாக ஒத்திருப்பததைக் காணலாம். 1கொரிந்தியர் 11வது அதிகாரம், ஆரம்பகால திருச்சபைக் கொண்டாட்டங்களில் இருந்த பிணக்குகளை தீர்க்க எழுதப்பட்டது. பவுல் இந்த வசனங்களை நினைவூட்டியதன் வாயிலாக இன்று போல அன்றும் நற்கருணைக் கொண்டாட்டங்களில் சில நடைமுறை சிக்கல்கள் இருந்திருந்ததை எண்பிக்கிறது. 

வ. 23: பவுல் தன்னுடைய செய்திகளுக்கும், தான் பெற்றுக்கொண்ட செய்திகளும் வித்தியாசம் காட்டுகிறார். திருத்தூதர்களிடமிருந்தே பவுல் இந்த வரிகளைப் பெற்றிருப்பார், ஆண்டவரிடமிருந்து பெற்றுக்கொண்டேன் என்று அவற்றிக்கு உரமேற்றுகிறார். 

வ. 24: ஆண்டவர் காட்டிக்கொடுக்கப்பட்ட இரவிலேதான் இந்த பாஸ்கு கொண்டாடப்பட்டிருக்கிறது என இவ்வாறு நிறுவலாம். 

வவ. 24ஆ-25: நினைவாகச் செய்ய சொன்னதை பவுல் மையப்படுத்துகிறார். விடுதலைப்பயண நூல், 12வது அதிகாரத்தில், முன்னைய பாஸ்காவை, ஆண்டவர் தன் நினைவாகவே செய்யச் சொன்னார், ஆனால் இங்கே அப்பத்தை தன் உடலாகவும், இரசத்தை தன் இரத்தமாகவும் மாற்றி புதிய உடன்படிக்கையை நினைவுகூற சொல்கிறார் என்று பவுல் அழகாக சொல்லுகிறார். 

வ. 26: இதுவே பவுலுடைய முக்கிய செய்தி, நினைவுகூறப்படும் இந்த உணவு, ஆண்டவரின் சாவை முன்னறிவிக்கிறது. ஆக ஆயத்தம் இல்லாமலும், தகுதியில்லாமலும் உண்ணப்படும் இவ்வுணவு அவரின் சாவை கொச்சைப்படுத்துகிறது எனலாம்.    

நற்செய்தி
யோவான் 13,1-15
சீடரின் காலடிகளைக் கழுவுதல்
1பாஸ்கா விழா தொடங்கவிருந்தது. தாம் இவ்வுலகத்தை விட்டுத் தந்தையிடம் செல்வதற்கான நேரம் வந்துவிட்டது என்பதை இயேசு அறிந்திருந்தார். உலகில் வாழ்ந்த தமக்குரியோர்மேல் அன்பு கொண்டிருந்த அவர் அவர்கள் மேல் இறுதிவரையும் அன்பு செலுத்தினார். 2இயேசுவைக் காட்டிக் கொடுக்கும் எண்ணத்தை அலகை சீமோனின் மகனாகிய யூதாசு இஸ்காரியோத்தின் உள்ளத்தில் எழச்செய்திருந்தது. இரவுணவு வேளையில், 3தந்தை அனைத்தையும் தம் கையில் ஒப்படைத்துள்ளார் என்பதையும் தாம் கடவுளிடமிருந்து வந்தது போல் அவரிடமே திரும்பச் செல்லவேண்டும் என்பதையும் அறிந்தவராய், 4இயேசு பந்தியிலிருந்து எழுந்து, தம் மேலுடையைக் கழற்றி வைத்துவிட்டு ஒரு துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக் கொண்டார். 5பின்னர் ஒரு குவளையில் தண்ணீர் எடுத்துச் சீடர்களுடைய காலடிகளைக் கழுவி இடுப்பில் கட்டியிருந்த துண்டால் துடைக்கத் தொடங்கினார். 6சீமோன் பேதுருவிடம் இயேசு வந்தபோது அவர், 'ஆண்டவரே, நீரா என் காலடிகளைக் கழுவப் போகிறீர்?' என்று கேட்டார். 7இயேசு மறுமொழியாக, 'நான் செய்வது இன்னதென்று இப்போது உனக்குப் புரியாது பின்னரே புரிந்து கொள்வாய்' என்றார். 8பேதுரு அவரிடம், 'நீர் என் காலடிகளைக் கழுவ விடவேமாட்டேன்' என்றார். இயேசு அவரைப் பார்த்து, 'நான் உன் காலடிகளைக் கழுவாவிட்டால் என்னோடு உனக்குப் பங்கு இல்லை' என்றார். 9அப்போது சீமோன் பேதுரு, 'அப்படியானால் ஆண்டவரே, என் காலடிகளை மட்டும் அல்ல, என் கைகளையும் தலையையும்கூடக் கழுவும்' என்றார். 10இயேசு அவரிடம், 'குளித்துவிட்டவர் தம் காலடிகளை மட்டும் கழுவினால் போதும். அவர் தூய்மையாகிவிடுவார். நீங்களும் தூய்மையாய் இருக்கிறீர்கள். ஆனாலும் அனைவரும் தூய்மையாய் இல்லை' என்றார். 11தம்மைக் காட்டிக்கொடுப்பவன் எவன் என்று அவருக்கு ஏற்கெனவே தெரிந்திருந்தது. எனவேதான் 'உங்களுள் அனைவரும் தூய்மையாய் இல்லை' என்றார். 12அவர்களுடைய காலடிகளைக் கழுவியபின் இயேசு தம் மேலுடையை அணிந்துகொண்டு மீண்டும் பந்தியில் அமர்ந்து அவர்களிடம் கூறியது: 'நான் உங்களுக்குச் செய்தது என்னவென்று உங்களுக்குப் புரிந்ததா? 13நீங்கள் என்னைப் 'போதகர்' என்றும் 'ஆண்டவர்' என்றும் அழைக்கிறீர்கள். நீங்கள் அவ்வாறு கூப்பிடுவது முறையே. நான் போதகர்தான், ஆண்டவர்தான். 14ஆகவே ஆண்டவரும் போதகருமான நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால் நீங்களும் ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவக் கடமைப்பட்டிருக்கிறீர்கள். 15நான் செய்தது போல நீங்களும் செய்யுமாறு நான் உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன்.

யோவான் நற்செய்தி பல அர்தங்களையும் அடையாளங்களையும் ஒருங்கே கொண்டிருப்பதால் அதனை அவதனமாகா வாசிக்க வேண்டும். 13 தொடக்கம் 17வரையான அதிகாரங்கள், இயேசுவுக்கும் அவரது சீடர்களுக்கும் இடையில் நடந்த தனித்துவமான உரையாடல்களை கொண்டமைந்துள்ளது. இன்றைய வாசகத்திலே வருகின்ற பாதங்களை கழுவுகின்ற நிகழ்வு, யோவான் நற்செய்தியின் தனித்துவத்தைக் காட்டுகிறன்ற பகுதிகளில் ஒன்று என்று கருதலாம். 

வ.1: குறிப்பிட்ட பாஸ்கா விழாவை சீடர்கள் எப்போது கொண்டாடினாhக்ள் என்பதை இந்த வசனத்தில் இருந்து கணிப்பது கடினம். சமநோக்கு நற்செய்தியாளர்களுக்கும் யோவானுக்கும் இடையில் பாஸ்கா விழாவின் நாள் மட்டில் பல வேறுபாடுகள் தோன்றுவது போல உள்ளது. யோவானுடைய கணிப்பின்படி இயேசு பாஸ்கா உணவுண்ட நாளை மற்றவர்களை விட ஒரு நாள் முன்கூட்டி கணித்தது போல தோன்றுகிறது. இதற்கான காரணம் இரண்டு வகையான கால அட்டவணைகள் பாவிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் இந்த விடையும், திருப்திகரமானதாக இல்லை. எவ்வாறு எனினும் நிசான் மாதம் 15ம் நாள் இவ்விழா கொண்டாடப்பட்டது எனலாம். யோவான் நற்செய்திப்படி இயேசு காலங்களையும் நேரங்களையும் நன்கு அறிந்திருக்கிறார். தமக்குரியோர் என்று இங்கு குறிப்பிடப்பட்டுள்ளவர்கள், இங்கே சீடர்களைக் குறிக்கலாம், முழு நற்செய்தியில் இது கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்களைக் குறிக்கிறது. 

வ.2: இயேசுவை காட்டிக்கொடுக்கும் திட்டம் யூதாசுடையது என்பதையும் தாண்டி, அது அலகையுடையது என்கிறார் யோவான். யூதாசினுடைய இதயம் இப்போது கடவுளுடைய இடமல்ல மாறாக அலகையுடையது என்கிறார் யோவான். 

வ.3: மீண்டுமொறுமுறை தன்னுடைய பணிகளை நன்கு அறிந்திருந்தார் இயேசு என்று கூறி, இயேசுவின் தெய்வீகத்தை மீண்டும் மீண்டும் தன்னுடைய வாசகர்களுக்கு நினைவூட்டுகிறார் யோவான். 

வவ.4-5: இங்கே சில நோக்கப்படவேண்டிய செயற்பாடுகள் நடைபெறகின்றன. பந்தியிலிருந்து எழும்புதல்: பணிசெய்ய ஒருவர் தன்னுடைய நிலையை விட்டு எழுந்திருக்க வேண்டும் என்பதனைக் குறிக்கலாம். மேலுடைகளை கழட்டி வைத்தல்: ஒருவர் தன்னுடைய மேன்மையை தியாகம் செய்ய வேண்டும் என்பதைக் குறிக்கலாம். துண்டை இடுப்பில் கட்டுதல்: இன்னொரு குறைவான நிலைக்கு தன்னை அர்ப்பணித்ததைக் குறிக்கும். காலடிகளைக் கழுவுதலும், அதனை தன்னுடைய துண்டால் துடைத்தலும், சாதராணமாக சேவகர்க்ள் அல்லது அடிமைகள் செய்கின்ற வேலை, அதனை ஆண்டவரே செய்கின்றமை, நல்ல ஒரு உதாரணமாக அமைகிறது. இங்கே இரண்டு செய்திகளை அவதானிக்கலாம். அ). ஒருவர் பாதங்களைக் கழுவ மற்றவரை தன்னைவிட உயர்ந்தவராக கருதவேண்டும். ஆ). தன்னுடைய மேன்மையில் இருந்து
இறங்கி வர வேண்டும். 

வவ. 7-11: பேதுருவின் கேள்விகளும், ஆண்டவரின் பதிலும் புதிய ஏற்பாட்டில் பேதுருவின் நடத்தையை பற்றி தெரிந்த வாசகர்களுக்கு பெரிய வியப்பாக இருக்காது. பேதுருவின் கணிப்பின்படி, இயேசு, மெசியா மற்றும் இறைவனின் உத்தம மகன், அவர், ஒரு சாதாரண கலிலேய யூதனின் பாதங்களை கழுவுவதை சகித்துக்கொள்ள முடியாது. அதே வேளை, அனைத்தையும் அறிந்திருக்கிற இயேசு ஆண்டவர் காரணமின்றி எதையும் செய்ய மாட்டார் என்ற முன்கூட்டிய அறிவும் இப்போது இந்த பேதுருவுக்கு இல்லை. இங்கே அவரின் சாதாரண அறிவிற்கப்பாற்பட்ட அன்பு பேசுகிறது. பேதுருவின் அறியாமையை நன்கு அறிந்திருந்த ஆண்டவர் தன்னுடைய கழுவுதலின் முக்கியத்துவத்தைப் பற்றி அடையாளமாக சொல்ல பேதுரு அதனை உடல் ரீதியான கழுவுதலாக எடுத்து ழுழு உடலையையும் கழுவச் சொல்லி கேட்கிறார். கடவுளோடு கூடவே இருந்தாலும், பணியாளர்கள் தங்களை இற்றைப் படுத்தாவிட்டால், ஆண்டவரின் எண்ணங்களை செவ்வனே புரிந்து கொள்ள முடியாது என்பதற்கு பேதுரு ஒரு நல்ல உதாரணம். 

வ. 12: யூதாசைப் பற்றி இயேசுவிற்கு முதலே தெரிந்திருந்தது என்று சொல்லி மீண்டுமாக அனைத்தையும் அறிந்த இயேசு ஆண்டவர் என்கிறார் யோவான். 

வவ. 13-15: இந்த வரிகள் இந்த பகுதியின் மிகவும் முக்கியமான செய்திகளைத் தாங்கி வருகிறது. பணியாளர்கள் தங்களின் செயற்பாடுகளின் பின்னர், தமது நிலைக்கு திரும்பி வரவேண்டும் என்கிறார் போல. யோவான் நற்செய்தியில் இயேசு தன்னுடைய தெய்வீகத்தை அப்படியே ஏற்று உறுதிப்படுத்துவார். இங்கே தனக்கே உரித்தான இரண்டு சொற்பதங்களை ஏற்றுக்கொள்கிறார். (ὁ διδάσκαλος καί· ὁ κύριος ஹோ திதாஸ்கலோஸ் காய் ஹோ குரியோஸ்) - தான்தான் உண்மையான ஆசிரியரும் ஆண்டவரும் என்கிறார். செய்தி என்னவெனில் இந்த ஆசிரிய-ஆண்டவரின் முன்மாதிரியை தனது சீடர்கள் பின்பற்ற வேண்டும் என்பது. முதல் ஏற்பாட்டில் நானே கற்றுத்தருவேன் என்று கடவுள் எரேமியாவிற்கு சொன்னது நினைவிற்கு வருகிறது (காண் எரே 31,34). 

குருத்துவத்திற்கு வரைவிலக்ணமும் அகராதியும் கொடுத்தவர் ஆண்டவர் இயேசு! நற்கருணையிலே கடவுளையே பலிப்பொருளாக்கி மனிதத்தின் தெய்வீகத்தை போதிக்கிறார். பாதங்களை கழுவ விடுவதல்ல, மாறாக கழுவுவதே குருத்தவம் என்கிறார்.

ஆண்டவரே, குருத்துவத்தின் நாளில், குருக்கள் உம்மையே பற்றிக் கொள்ள வரம் தாரும், நவீன கால சாத்தான்களினால் கடத்தப்பட்ட இந்திய குருவை இந்த நாளில் நீர் நினைவிற் கொள்ள வேண்டுகிறோம். ஆமென். 

மி. ஜெகன்குமார் அமதி
றெஜியோ எமிலியா 21, பங்குனி 2016. 







வியாழன், 17 மார்ச், 2016

குருத்தோலை ஞாயிறு: 20, பங்குனி 2016. Hossanna, Palm Sunday of the Lord.



குருத்தோலை ஞாயிறு: 
20, பங்குனி 2016.

(லூக்கா 22, 14 - 23, 56)

லூக்கா எழுதிய படி, பாடுகளின் வரலாறை இவ்வாறு பிரிப்போம்

அ. பாஸ்கு உணவு
ஆ. மேசையில் கலவரம்
இ. துயரமும் கைதும்
ஈ. பேதுருவின் மறுதலிப்பு
உ. யூத சபையின் (சென்ஹட்ரின்) முடிவு
ஊ. பிலாத்துவினதும் எரோதினதும் அரசியல்
எ. மரண தண்டனை
ஏ. சிலுவைப் பாதை
ஒ. சிலுவையில் அறைதலும் மரணமும்
ஓ. நல்லடக்கம்


அ. பாஸ்கு உணவு (22,7-20), இயேசு புதிய பாஸ்கா உணவாகிறார்.

1. லூக்கா மாற்கு மற்றும் மத்தேயுவைப்போல ஆண்டவரின் இராவுணவை பாஸ்காவுணவாகவே காட்டுகிறார். இயேசு பேதுருவிடமும் யோவானிடமும் அடையாளங்கள் வாயிலாக பாஸ்கா கொண்டாடும் இடத்தைப்பற்றி சொல்லுவது, ஒருவேளை தான் முன்கூட்டியே கைதாகமல் இருப்பதற்கு என கருதலாம். வழமையாக பெண்கள் தண்ணீர் குவளைகளை சுமந்து கொண்டு வருகின்ற காலங்களில், ஆண்கள் அதனை சுமப்பது சீடர்களுக்கு நல்ல அடையாளமாக அமைகிறது. 

2. லூக்கா இயேசுவை உண்மையான பாஸ்கா உணவாக காட்டுகிறார். நான் ஆவலாக இருந்தேன் என்று இயேசு சொல்லுவதன் மூலம், இந்த பாஸ்காவுணவு இயேசுவிற்கு முக்கியம் வாய்ந்ததாக அமைகிறது. இறையாட்சி நிறைவேறும் மட்டும் இனி இந்ந பாஸ்கா உணவை உண்ணமாட்டேன் என்று இயேசு சொல்வது, இறையாட்சி என்பது ஒரு தொடர் பணி அது சாதாரண பாஸ்காiவிட முக்கியமானது, இறையாட்சின் முன் இப்படியான கொண்டாட்டங்கள் இரண்டாம் தரமானவை எனக் காட்டுகிறது. 

3. வவ 19-20: இந்த வசனங்கள்தான் திருச்சபை ஒவ்வொரு நாளும் திருப்பலியில் பயன்படுத்துகின்ற வசீகர செபங்கள். இந்த செபங்கள் வருடாந்த பாஸ்கா விழாவையும் தாண்டி இப்போது அவை இயேசுவை மையப்படுத்துகின்றன. கடவுளே வரும் போது பூசாரிக்கு என்ன வேலை எனக் கேட்கலாம். பாஸ்கா விழா பல வகையான செபங்கள், ஆசீர்கள், உணவு வகை பரிமாற்றங்களைச் சார்ந்தது, இங்கே இயேசு தன்னை மையப்படுத்தி, அப்பத்திலும் இரசத்திலும் தனது செய்தியை கொடுக்கிறார். இது ஒரு புதிய நித்திய உடன்படிக்கையை குறிக்கலாம். நினைவாக செய்யச்சொல்லுவது, இதே போன்ற பலியை மக்கள் தங்கள் வாழ்வில் பின்பற்ற வேண்டும் என்பதைக் காட்டுகிறது. நினைவுகள் வாழ்வதற்கே என்ற தத்துவம் இங்கே திருவருட்சாதனமாக்கப்படுகிறது. நற்கருனை ஏற்படுத்தப்பட்ட கதாம்சம் இரண்டு பாரம்பரியங்களில் நமக்கு வருகின்றன, அ). மாற்கு-மத்தேயு பாரம்பரியம், ஆ). பவுல் பாரம்பரியம். சாதாரணமாக நான்கு கிண்ண இரசங்கள் பாஸ்காவிழாவிற்கு பயன்பட்டன, இயேசு இரண்டை பாவித்தார் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். 

ஆ. மேசையில் கலவரம்: (22,21-38), பதவி மோகம்.

1. ஆசை யாரையும் விடாது! கடவுள் பக்கத்தில் இருந்தும் கூட, பதவிகளை நாடச்செய்கிறது. லூக்கா இந்த காட்சியை சற்று வித்தியாசமாக பதிவு செய்கிறார். லூக்கா யூதாசின் காட்டிக்கொடுப்பை உதாரணமாக்கி ஒருவரின் பாவ வாழ்க்கைக்கு அவரே பொறுப்பு என்றி சொல்லி, விதி என்று ஏமாற்று வித்தை காட்டவேண்டாம் என்கிறார். யூதாசிற்கும் இந்த பன்னிருவருக்கும் இந்த மேசையில் பெரிய வித்தியாசங்கள் இல்லை. அவன் பணத்தை விரும்பினான், இவர்கள் பதவிகளை விரும்புகின்றனர். யார் பெரியவர் என்ற வாதம் இதனையே குறிக்கிறது. 

2. யார் பெரியவர் என்ற கேள்வியும் அதற்கான கதையிடங்களும் மாற்குவிலும் மத்தேயுவிலுமு; (மாற் 10,42-45: மத் 20,25-28) வேறு இடங்களில் அமைகின்றன. இயேசு இறையாட்சிக்கும் அரசியல் ஆட்சிக்கும் வித்தியாசம் காட்டுகிறார். அரசியல் ஆட்சியில் அடிமைத்தனங்களே நன்கொடை என்பதை அழகாக சித்தரிக்கிறார். இயேசு உரோமையரின் ஆட்சியை நன்கு வறுத்தெடுக்கிறார். இறையாட்சியில் அதிகாரம் கிடையாது, தன்னையொட்டி சேவை மட்டுமே உள்ளது என்கிறார். (διακονία தியாகோனியா-சேவை).

3. சேவையின் தன்மைகளைப பற்றி பன்னிருவருக்கு அறிவுறுத்திய பின் இயேசு சீடர்களை இஸ்ராயேலரின் குலமுதுவர்களாக நியமிக்கிறார். இப்போது இந்த புதிய இஸ்ராயேலின் முதல் குலமுதுவரை அவருடைய எபிரேய பெயரில் அழைக்கிறார் (சீமோன் - Σίμων). சாத்தான் அனுமதி கேட்கிறான் என்பதன் மூலம், பன்னிருவரை சோதிக்க விசேட அனுமதி தேவை என்கிறார், ஆனால் தனது உடனிருப்பு எப்போதும் உள்ளது என்பதையும் நினைவூட்டுகிறார். பேதுருவின் பலவீனத்தை ஆண்டவர் சொன்ன வேளை பேதுரு தனது பலததை நிரூபிக்கப் பார்கிறார். சேவல் கூவாது என்பது, இங்கே பேதுரு தனது பலவீனத்தை ஏற்றுக்கொள்ளும் வரை அவருக்கு விடியல் இல்லை என்பது போல உள்ளது. 

4. சீடர்கள் பணிக்கு அனுப்பப்பட்ட நிகழ்வை மீளாய்வு செய்கிறார் இயேசு (9,3). சில மாற்றங்களையும் உண்டு பண்ணுகிறார். அப்போது கடவுளின் தயவை நாடச்சொன்னவர், இப்போது பணப் பையையும், பயணப் பையையும் எடுக்கச் சொல்கிறார். இது ஆரம்ப கால திருச்சபையின் அங்கலாய்பு நிறைந்த நாட்களை படம் பிடிக்கிறது. ஆயுதங்களை எடுக்கச் சொன்னது போருக்கு தயாராக இருக்கச் சொல்லுவது போல உள்ளது. சீடர்கள் அதனை மிக ஆழாக எடுத்து எத்தனை கத்திகள் வேண்டும் என கேட்கின்றனர், இயேசு சொன்னது ஆயத்தங்களை, ஆயுதங்களை அல்ல. இங்கே வாள் என்று லூக்கா எழுதுவது ஒரு வகை பட்டாக்கத்தி (μάχαιρα மகாய்ரா, பட்டாக் கத்தி), அக்காலத்து கைத்துப்பாக்கி எனச் சொல்லலாம், இது தற்பாதுகாப்பிற்கே, போருக்கு உதவாது. 

இ. துயரமும் கைதும் (22,39-53), அழுக்காகிப்போன அன்பு முத்தம்.

1. மாற்குவின் கெத்சமெனி காட்சியை லூக்கா சிறியதாக்கியுள்ளார். ஒலிவ மலை லூக்காவிற்கு மிக முக்கியமான இடம். இங்கு இயேசு பல முக்கியமான முடிவுகளை எடுக்கிறார் இதனால்தான் கெஸ்தமெனியை ஒலிவ மலையாக மாற்றுகிறார் லூக்கா, அல்லது ஒலிவ மலையில் கெஸ்தமெனி இருந்ததை உறுதிப்படுத்துகிறார்.  மாற்குவிலும் மத்தேயுவிலும் இயேசுவை மூவர் பின்தொடர்ந்தனர், இங்கு சீடர் என்று பலரை உள்வாங்குகின்றார் லூக்கா. ஆக செபமும், திருவிழி;ப்பும் அனைத்து சீடர்களின் கடமையாகிறது. செபித்தலும் விழித்தலும் அனைவருக்கும் உரியது என்கிறார் போல. சோதனை இயேசுவையும் விடவில்லை ஆனால் அவர் அதனை மேற்கொண்டதை கோடிடுகிறார். கிண்ணம், (ποτήριον-பொடெரியோன்) சாதரணமாக கடவுளுடைய நீதியையும் கோபத்தையும் வெளிப்படுத்தலாம், இங்கு தீர்ப்பை வெளிப்;படுத்துகிறது. வானதூதரின் பங்களிப்பு இயேசு தனியாக இல்லை எனக் காட்டுகிறது. இரத்த வியர்வை இயேசுவின் முழு மனித இயல்பை காட்டும் உருவகம். மறு புறத்தில் சீடர்களின் உறக்கம் மனித பலவீனத்தை காட்ட, அதனை மேற்கொள்ள விழித்திருந்து செபிக்க வேண்டும் என்கிறார் இயேசு. துயரத்தால் அவர்கள் தூங்கினார்கள் என்று இவர்களின் தவறை சிறியவர்களின் தவறாக்குகிறார் லூக்கா. 

2. யூதாசை பன்னிருவருள் ஒருவன் என்பதன் மூலம் திருத்தூதர்களின் முரண்பாட்டை விளக்குகிறார், இங்கே மாற்கு-மத்தேயுவுடன் சேர்ந்து போகிறார் லூக்கா. காதல், அன்பு, நம்பிக்கை, உறவு, நட்பு போன்றவற்றின் அழகிய அடையாளமான முத்தம் காட்டிக்கொடுக்கும் அசிங்கமான அடையாளமாக மாறுகிறது. பாவியென்று ஆண்களால் அடையாளமிடப்பட்ட பெண்ணொருவர் ஆண்டவரின் பாதங்களை கண்ணீரால் முத்தமிட்டு கழுவினார், இங்கே திருத்தூதரிலே ஒருவர் கன்னத்தை முத்தமிட்டு தீயவர்களிடம் தன் ஆண்டவரையே கையளிக்கிறான். (ஒப்பிடுக 7,38: 22,47). யோவான் நற்செய்திப்படி இயேசுவிற்காக படைவீரரின் காதை துண்டித்தவர் பேதுரு. லூக்கா நற்செய்தியில் மட்டுமே இயேசு காது துண்டிக்கப்பட்டவரை குணப்படுத்துகிறார். லூக்காவிற்கு இயேசு எப்போதுமே குணப்படுத்தும் ஆண்டவர். இருளில் நடக்கும் கைது மனிதர்களின் இருண்ட யுகத்தையும் இருண்ட குணங்களையும் காண்பிக்கிறது. நேரம் என்பது அதிகமாக யோவானில் நேர் பதமாகும், லூக்கா இங்கே இதனை எதிர் மறையாக பாவிக்கின்றார். இருட்டில் இவர்கள் செய்யும் செயல், கள்வர்கள் செய்யும் கொள்ளை செயலாகும் என்று சொல்கிறார் போலும்.

ஈ. பேதுருவின் மறுதலிப்பு (22,54-65), அபாயமாகிப்பபோன ஆண்டவர்.

1. தலைமைக்குருவின் வீட்டிற்கு இயேசுவை இழுத்துச் செல்வது, ஏற்கனவே இவர்கள் அதனை திட்டமிட்டிருந்தார்கள் என்பதனைக் காட்டுகிறது. மற்றைய நற்செய்திகளைப் போலல்லாது பேதுருவை மையப்படுத்துகிறார் லூக்கா. ஒரு மணித்தியாலத்தில் ஒரு பெண்ணும் இரு ஆண்களுமாக மூன்று பேர் பேதுருவை சோதிக்கின்றனர். ஒரு வேளை பேதுரு சோதனைகளின் போதும் இந்த இடத்தைவிட்டு வெளியேறாமல் இருப்பதனைக் காட்டலாம். ஆண்டவர் பேதுருவை கூர்ந்து நோக்கினார் என்று, எமது காட்டிக்கொடுப்புக்களில் கடவுள் கூர்ந்து நோக்குகிறார் என்கிறார் லூக்கா. மனம்நொந்து அழுதது, இயேசுவிடம் இருந்து ஓடிச்செல்ல அல்ல, மாறாக ஊதாரி மகனைப்போல தந்தையிடம் திரும்பிவரவே என்கிறார் லூக்கா. பேதுரு பாவியானலும் துரோகியல்ல என்பது போல உள்ளது. 

2. இயேசுவை பரிகாசம் செய்தவர்கள் ஆலய காவலர்கள் என்பது லூக்காவின் எழுத்து. இங்கே மெசியா அல்லது மனுமகன் என்பதைவிட, கடவுளின் உண்மையான இறைவாக்கினர் ஏளனம் செய்யப்படுகிறார் எனக் காட்டுகிறார். இறைவாக்கினரை பழிந்துரைப்பதன் மூலம் ஆலயத்தை காக்கிற இவர்கள், ஆலயத்தின் கடவுளையே பழிந்துரைக்கின்றனர் என்கிறார் லூக்கா. 

உ. யூத சபையின் (சென்ஹட்ரின்) முடிவு (22,66-71): 
கடவுள் நிந்தனை சட்டம், கடவுளை நிந்திக்கிறது.

1. இயேசுவை இழுத்து வந்தவர்கள் மூப்பர்கள், தலைமைக்குருக்கள், மறைநூல் அறிஞர்கள் என்பதன் மூலம் அனைத்து தலைமைத்துவமும் இயேசுவை முடிவுகட்ட ஒன்றாக வருவதை அழகாக காட்டுகிறார். லூக்கா, இங்கே உரையாடல்களை பதிவு செய்வதன் மூலம், இயேசு சுயநினைவில் இருந்தார் என்பதனை காட்டுகிறார், எனவே இவர்கள் இயேசுவை கொலை செய்ய திட்டமிடுகின்றனர், இயேசு தற்கொலை செய்ய முயற்சிக்கவில்லை என்பதில் மற்றைய நற்செய்தியாளருடன் ஒத்துபோகிறார். மத்தேயு-மாற்குவில் இரவில் நடக்கும் சங்கக் கூட்டம் இங்கே விடியலில் நடக்கிறது. இயேசு இத்தலைவர்களுக்கு பதில் சொல்ல மறுக்கிறார் அத்தோடு தனக்கு கேள்வி கேட்கும் அதிகாரம் இருக்கிறது என்கிறார். தன்னை இங்கே மானிட மகனாக உருவகித்து கடவுளின் வலப்புறம் தன்னுடையது என்கிறார் (காண் தானி.7,13-14). தேவ நிந்தனைச் சட்டம், தேவனையே நிந்திப்பதாக மனிதர்களின் நகைச்சுவையை விவரிக்கிறார் லூக்கா. 

2. சங்கத்திற்கு மரண தண்டனை கொடுக்கும் அதிகாரம் இல்லாமையால் அதனை தேட வழிதேடுகின்றனர். இயேசுவின் வாயிலிருந்து கேட்டோமே என்று இவர்கள் சொல்வதன் மூலம், கேட்டும் புரிந்து கொள்ளவில்லை என ஊகிக்க வைக்கிறார். 

ஊ. பிலாத்துவினதும் எரோதினதும் அரசியல் (23,1-12)
நரியும் கழுதைப்புலியும்

1. பிலாத்து அன்றைய நாளில் இருந்து உரோமைய பேரரசின் மாகாண பதிலாளி. ஐந்து வருடங்களாக இந்த வேலையை செய்து வந்தான், தன்னுடைய அலுவலகம் செசாரியாவில் இருந்தாலும், பாஸ்கா விழாவில் கலவரம் நடப்பதை எதிர்பார்த்து எருசலேமில் இருந்தான். அரசியல் ரீதியான காரணங்களை தங்களுடைய சகோதரனுக்கு எதிராக ஒர் அன்னிய ஆட்சியாளரிடம் முன்வைக்கின்றனர், இந்த மூத்த சகோதரர்கள். மத ரீதயான காரணங்களை, பல கடவுள் கொள்கைக்காரர்களான உரோமையர் செவிசாயார் என்பதனை உணர்ந்து:  புரட்சி, கப்பம், அரச துரோகம் என்ற குற்றங்களை சுமத்துகின்றனர். மாற்குவைப் போல லூக்காவும், பிலாத்துவை அவ்வளவு கெட்டவனாக காட்டாமல், ஆண்டவரை குற்றம் சுமத்தியவர்கள்மேல் வாசகர்களின் பார்வையை இழுக்கிறார். பிலாத்துவுக்கு இயேசு கொடுக்கும் பதில், புதிர் போல உள்ளது.

2. ஏரோது முன்னிலையில் இயேசுவின் காட்சி லூக்காவில் உள்ள சிறப்பம்சம். இந்த இதுமேயனான ஏரோது, ஒரு யூதன் அல்ல, மக்கபேயருடைய காலத்தில் கிரேக்கருடனும், உரோமருடனும் சேர்ந்து, ஹஸ்மோனிய ஆட்சியாளர்களை வஞ்சித்து ஆட்சியை பிடித்தவன்தான் இவன் பாட்டன், பெரிய ஏரோது. வரலாற்றில் பெரியவர்கள் இப்படியானவர்கள்தான். இவனைத்தான் ஆண்டவர் நரி என்று வர்ணிப்பார். பிலாத்துவும் ஏரோதும் ஒருவருக்கொருவர் குறைவில்லாத அரசியல் செய்கின்றார்கள். ஏரோது திருமுழுக்கு யோவானைப் பொருட்டு இயேசுவைக் காணவிரும்பினான். இயேசு இவனுக்கு எந்த பதிலும் சொல்லாது, அவனுக்கு கிடைக்கும் உச்ச கட்ட தண்டனை. அவர் வார்ததைகளைக் கேட்க இவனின் காதுகளுக்கு தகுதியில்லை எனச் சொல்லாம். அமைதி எவ்வளவு பலமான 
ஆயூதம் என்பதை இங்கு காணலாம்.  ஆலய படைவீரர்களைப் போல ஏரோதின் கூலிப்படைகளும் ஆண்டவரை ஏளனம் செய்கிறது. தீயவர்கள் நன்பர்கள் ஆகிறார்கள். இயேசுவின் உயிர்பின் பின்னர் இந்த நரியும், பிலாத்துவும் தங்களது தலைவர்களாலேயே தூக்கி வீசப்படுவார்கள். பிலாத்து ஏரோதுவை வைத்து அரசியல் லாபம்செய்யப் பார்கிறான். உரோமையர்கள் தங்களை கழுகு என்பார்கள், இவனுக்கு எந்த கழுகுக் குணமும் இல்லை. 




எ. மரண தண்டனை (23,13-25), உயிருக்கு மரணதன்டனை.

1. இந்த காட்சி மூன்று செய்திகளை அழகாக வர்ணிக்கிறது. அ. இயேசுவின் குற்றமின்மை, ஆ. கலகக்கும்பலின் தீமைக்கான கொந்தளிப்பு, இ. பிலாத்துவின் பலவீனம். பிலாத்து மூன்று முறை அதாவது நிறைவாக, இயேசுவை விடுதலை செய்ய விரும்பியும் அவனால் முடியவில்லை என்று காட்டுவதன் மூலம் இந்த பாவத்திற்கு முழுகாரணமும் இந்த மக்கட் தலைவர்களே என்கின்றார் லூக்கா. பரபாவை இவர்கள் விடுதலை செய்யக் கேட்பதன் ஊடாக எப்படியாவது அல்லது எவரையாவது கொண்டு இயேசுவை முடிக்கவேண்டும் என்பதில் இவர்கள் உறுதியாக இருப்பது புலனாகிறது. வ.17 லூக்காவின் மூல பிரதியில் இல்லை, மாற்குவிலிருந்து உள்புகுத்தப்பட்டுள்ளது (மாற் 15,6). பிலாத்து இவர்களை கூப்பிட்டு பேச நினைக்கையில் கலகக் கும்பல் திடீரென சிலுவை மரணத்தைக் கேட்டு கத்துகிறது. லூக்கா கிரேக்கத்தில், ஒன்றாக சேர்ந்து கூச்சலிட்டார்கள் (ἀνακράζω அனாகிராட்ஸோ) என்று எழுதுகிறார். 

2. ஆட்சியாளின் பலவீனமும், கலகக்காரர்களின் பலமும் எவ்வளவு ஆபத்தானது. அவை இயேசுவிற்கு மரசண தண்டனையை கொண்டுவருகின்றன. சிலுவை மரணம் உரோமையருடைய ஆட்சியில், பேரரசிற்கு எதிராக கலகம் அல்லது பாரிய குற்றம் என உரோமையர்கள் நினைத்ததை-செய்தவர்களுக்கு வழங்கப்பட்டது. இது உரோமையர் அல்லாதவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. யூதர்க்ள் இந்த தண்டனையை கடவுளுடைய சாபமாக கண்டனர் (காண் இனை 21,23: காலா 3,13). இங்கே கடவுளுடைய சாபத்தை கடவுளுக்கு கொடுக்க இவர்கள் முயலுகிறார்கள். பிலாத்துவின் முயற்சி தோற்க்க, கலகக் கும்பலின் கூச்சல் வெற்றியளிக்கிறது. இயேசு இவர்களின் ஆசைக்கு கையளிக்கப்படுகிறார் என்று உணர்வு பூர்வமாக பதிகிறார் லூக்கா. 

ஏ. சிலுவைப் பாதை (23,26-31), பாதையான முதல் பயனம். 

1. இந்த பகுதியில் எமது பாரம்பரிய சிலுவைப்பாதையின் சில நிலைகள் வருவதைக் காணலாம். (சீரேனூர் சீமோனும், எருசலேம் மகளீரும்). இந்த சீரேன் ஊர் சீமோன், பின்னாலில் வந்த சீரேனிய கிறிஸ்தவர்களை நினைவூட்கிறார் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். சீமோன் இயேசுவின் சிலுவையை சுமந்ததை மூன்று நற்செய்தியாளர்களும் பதிவுசெய்கின்றனர். சீமோன் நல்ல சீடன் போல இயேசுவிற்கு பின்னால் நடக்கிறார். (காண் 14,27: சிலுவையை சுமந்துகொண்டு என்னை பின்பற்றாதவர் என் சீடராய் இருக்க முடியாது.)

2. பலமில்லாமல் சிலுவையைச் சுமந்தாலும், ஆண்டவராக இருக்கிறார் என்பதை எருசலேம் மகளீருக்கு சொன்ன வார்த்தைகளிலிருந்து எண்பிக்கிறார் லூக்கா. இங்கே ஆழமான பல கருத்துக்களை பதிகிறார் லூக்கா. எருசலேம் மகளீர் என இஸ்ராயேல் இனத்தையே குறிப்பிடுகிறார் லூக்கா. இயேசு ஒசேயா 10,8ஆ வரிகளையே நினைவூட்டுகிறார். லூக்கா 11,27ல் ஒரு பெண் மரியாவுக்கு குழந்தை பிறந்ததை நினைத்து மகிழ்ந்ததற்கு மாறாக இப்போது இவர்கள் பிள்ளைப்பேற்றை நினைந்து அழுவார்கள் என்பது, லூக்கா வாசகர்களுக்கு தரும் கடவுளின் இறுதி நாள் பற்றிய பயங்கர காட்சிகளாகும். பாவம் செய்யாத ஆண்டவருக்கு இந்த தண்டனை கிடைத்தால், பாவத்திறகுரிய எருசலேமின் நிலை என்ன என்று கேட்கிறர் லூக்கா. இந்த கேள்விற்கு விடை கி.பி 70இலும், 150 இலும் கிடைத்தது. ஒசேயா 10,8ஆ நிறைவேறியது, உரோமையரின் இரக்கமற்ற இராணுவ கைகளால். 

ஒ. சிலுவையில் அறைதலும் மரணமும் (23,32-49).
உயிர்த் தூக்கம்.

1. லூக்கா, கொல்கொதா என்ற அரமேயிக்க சொல்லை பாவிக்கமால் மண்டையோடு என்று கல்வாரி மலையின் உச்சியை குறிக்கும் ஒரு பொதுப் பெயரை பாவிக்கிறார். இயேசு இரண்டு குற்றவாளிகளின் நடுவில் சிலுவையில் அறையப்படுகிறார், இதனை மூன்று நற்செய்தியாளர்களும் பதிவு செய்கின்றனர் (காண் எசா 53,12). 

2. இயேசுவின் மன்னிப்பு வார்த்தைகள் பின்னாலில் கிறிஸ்தவ மறைசாட்சிகளின் மன்னிப்பு வார்த்தைகளானது, ஸ்தேவானும் இதனையே சொன்னார் (காண். தி.பணி 7,60). 

3. இயேசுவின் ஆடைகளை பகிர்ந்து தி.பாடல் 22,19ஐ நிறைவுசெய்கிறார்கள். லூக்கா முழு 
யூத இனத்தையும் குற்றம் சொல்லாமல், அவர்களின் தலைவர்களையே கடுமையாக சாடுகிறார். லூக்கா, வழிப்போக்கர்கள் இயேசுவை கடவுளின் மெசியா என்று சொல்லி கிண்டல் செய்வாதாக குறிப்பிடுகிறார், இது ஆண்டவரின் திருஉரு மாற்றக் காட்சியை நினைவு படுத்துகிறது (காண் 9,35). மற்றைய நற்செய்தியாளர்கள் இந்த இடத்தில் இயேசுவை, யூதர்களின் அரசர் என்று சொல்லி ஏளனம் செய்ததாக எழுதியுள்ளார்கள். படைவீரர்கள் தங்களது இரண்டாம் தர இரசத்தை அரசரான இயேசுவுக்கு கொடுப்பதன் மூலம், தங்களது பகிடிவதையை காண்பிக்கின்றனர். 

4. திருந்திய குற்றவாளியின் விசுவாச பிரமாணம், லூக்காவிற்கே உரிய பாணி. அவரின் நற்செய்தியின் மையப் பொருளும் இதுதான். பாவிகளையே தேடி மீட்கிற கடவுள், இங்கேயும் அதனையே செய்கிறார். இவரின் மூலம், ஆண்டவரின் அரசு வருகிறது என்பதையும், அதிலே அரசர், இயேசு என்பதையும், மனந்திருப்பியவர்கள் இன்றே அதை அடைவார்கள் என்பதையும், இயேசுவின் மரணம்தான் புதிய விடுதலைப் பயணம் என்பதையும் அழகாக காட்டுகிறார். இன்று (σήμερον செமெரொன் - இன்று) என்பதன் மூலம், இயேசு காலங்களை நிர்ணயிக்கும் கடவுள் என்று காட்டுகிறார். பேரின்ப வீடு என்பது கிரேக்கத்தில் பரதெய்சொஸ் (παράδεισος) எனப் பொருள் படும். இது ஏதோன் தோட்டத்தை நினைவுபடுத்துகிறது. 

5. இயேசுவின் மரணத்தில் பல காட்சிகள் நடைபெறுகின்றன. இருள்: தீமையின் நேரம் என உருவகிக்கலாம். திரை கிழிதல்: இயேசுவின் மரணம், கடவுளுக்கும் மனிதருக்கும் இடையிலான திரையை கிழக்கிறது என நினைவூட்டுகிறது. இயேசு, யாராலும் கொலை செய்யப்பட முடியாதவர், அவர் கடவுள், தன் ஆவியை தன்னால் தான் கொடுக்க முடியும் என்று காட்டுகிறார் லூக்கா. சொந்த மக்கள் தம் மெசியாவை புறக்கணிக்க இங்கே ஒரு அன்னியன் அவரை இறைமகனாக அடையாளம் காண்கிறார். மாரடித்து புலம்புவதன் மூலமாக பெண்கள் எப்போதும் லூக்காவில்  முக்கியமான இடத்தை பிடிப்பதைக் காணலாம். லூக்கா, கெஸ்தனமெனியில் சீடர்க்ள் இயேசுவை விட்டு ஓடினார்கள் என்று குறிப்பிடவில்லை, ஆகவே அவர்கள் இங்கே தெலைவில் நின்று அனைத்தையும் பார்திருக்கலாம். 

ஓ. நல்லடக்கம் (23,50-56)

1. அரிமத்தேயா எருசலேமிற்கு வடக்கிலிருந்த ஒரு சிற்றூர். யோசேப்பு இங்கே சக்கரியா, எலிசெபேத்து, சிமியோன், அன்னா போன்ற நீதிமான்களின் வரிசையில் இடம்பெறுகிறார். இவரும் இறையாட்சிக்கு காத்திருக்கிறார். புதுக் கல்லறை என்கிற இடத்தில் ஆச்சரியாமாக ஒத்தமை நற்செய்தியாளர்களும் யோவானும் ஒத்துப்போகிறார்கள். 
தெய்வீக மக்கள் அல்லது அரசர்கள் புதிய கல்லறையில் அடக்கம் செய்யப்படுவதை பல வரலாற்று கதைகளில் காணலாம்.

2. பெண்கள் கல்லறையில் இயேசுவை தரிசித்தார்கள் என்று சொல்லி இது வதந்தியல்ல என்கிறார் லூக்கா. ஓய்வு நாளுக்கு எதிராக எவரும் எதனையும் செய்யவில்லை என்பதை அவதானமாக சொல்கிறார் லூக்கா. இது கிறிஸ்துவை பின்பற்றுகிறவர்கள் சட்டங்களுக்கு எதிரானவர்கள் என்ற குற்றச்சாட்டை மறுக்கும் வாதத்தை தருகிறது. நறுமண தைலங்களையும் எண்ணைகளையும் ஆயத்தம் செய்கிறார்களே தவிர, அவற்றைக் கொணர்ந்து இயேசுவிற்கு ஓய்வு நாளில் பூசவில்லை என்கிறார்.


ஆண்டவரின் பாடுகளின் வரலாறு கல்லறையில் முடிவடையவில்லை, அது அவரின் உயிர்பிலே நிறைவடைந்து தொடர்கிறது. எருசலேமிலே அவர் நடந்த பாதைகளில் இன்றும் பல ஆயிரம் மக்கள் தினம் தினம் நடக்கிறார்கள், ஆனால் அழுகையும் ஒப்பாரியும் இன்றும் நின்றபாடில்லை. 

இந்த குருத்து ஞாயிறிலே, கழுதைக் குட்டியில் வருகின்ற ஆண்டவர், எங்களை எமது பாவங்கள், பலவீனங்களில் இருந்து மீட்பாராக. ஆமென்.

மி. ஜெகன்குமார் அமதி
உரோமை
புதன், 16 மார்ச், 2016




வியாழன், 10 மார்ச், 2016

தவக்காலம் 5ம் வாரம், மார்ச் 13, 2016, The 5th Sunday of Lent.



முதலாம் வாசகம்: எசாயா 43,16-23
திருப்பாடல்: 125
இரண்டாம் வாசகம்: பிலிப்பியர் 3,8-14
நற்செய்தி: யோவான் 8,1-11

முதலாம் வாசகம்: எசாயா 43,16-21
16கடலுக்குள் வழியை ஏற்படுத்தியவரும், பொங்கியெழும் நீர்நடுவே பாதை அமைத்தவரும், 17தேர்களையும், குதிரைகளையும், படைவீரரையும், வலிமைமிக்கோரையும் ஒன்றாகக் கூட்டி வந்தவரும், அவர்கள் எழாதவாறு விழச்செய்து, திரிகளை அணைப்பதுபோல் அவர்களை அழித்தவருமாகிய ஆண்டவர் கூறுவது இதுவே. 18முன்பு நடந்தவற்றை மறந்து விடுங்கள்; முற்கால நிகழ்ச்சிபற்றிச் சிந்திக்காதிருங்கள்; 19இதோ புதுச்செயல் ஒன்றை நான் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றிவிட்டது; நீ அதைக் கூர்ந்து கவனிக்கவில்லையா? பாலைநிலத்தில் நான் பாதை ஒன்று அமைப்பேன்; பாழ்வெளியில் நீரோடைகளைத் தோன்றச் செய்வேன். 20காட்டு விலங்குகளும் என்னைப் புகழும்; குள்ள நரிகளும், தீக்கோழிகளும் என்னைப் பெருமைப்படுத்தும்; ஏனெனில், தேர்ந்தெடுக்கப்பட்ட என் மக்களுக்குப் பாலைநிலத்தில் குடிக்கக் கொடுப்பேன்; பாழ்நிலத்தில் நீரோடைகள் தோன்றச் செய்வேன். 21எனக்கென்று நான் உருவாக்கிய இந்த மக்கள் என் புகழை எடுத்துரைப்பர்.

இந்தப்பகுதி பொங்கிவரும் கடவுளின் நன்மைத்தனமாக 43வது அதிகாரத்தில் பதியப்பட்டுள்ளது. இந்த இரண்டாவது எசாயா புத்தகம், நம்பிக்கை தருவதாக, நாடு கடந்த அல்லது அதற்கு சற்று பிற்பட்ட காலப்பகுதியில் எழுதப்பட்டிருக்க வேண்டும். 'அகதியாய் இருந்து பார், தாய் மண்ணின் சுகம் தெரியும்' என்று முகநூல் ஆசிரியர்கள் எழுதுவது நினைவிற்கு வருகிறது. இந்த பகுதி எகிப்திலிருந்து சுவீகரித்த விடுதலை இறையியலை, பபிலோனியாவில் இருந்தவர்களுக்கு நினைவூட்டுவது போல அமைக்கப்பட்டுள்ளது. இத்தாலிய எழுத்தாளர் உம்பேர்தோ எகோ, நினைவிழந்தவர் ஆன்மாவை இழந்தவர் என்று சொல்வார், இதனையே பல வருடங்களுக்கு முன் இஸ்ராயேல் மக்கள், ஆண்டவர் செய்தவற்றை நினைந்து, தங்களையும் தங்கள் எதிர்காலத்தையும் காத்துக்கொண்டனர். நினைவூட்டுகிற கதையம்சத்தை கொண்டிருந்தாலும் எபிரேய கவிதை அமைப்பை தழுவி அமைக்கப்பட்டுள்ளது. 

வவ.16-17: கடலுக்குள் பாதை என்பது, செங்கடலுக்குள் (புற்கடல்) பாதையமைத்து பாரவோனின் படைகளிடமிருந்து தமது முன்னோர்களை காத்ததை நினைவூட்டுகிறார். இதனை உண்மையில் பாரவோனுக்கும் கடவுளுக்கும் இடையில் நடந்த போராகவே கருதுகிறார் ஆசிரியர். பெரும் படைகொண்டு வந்தவர்கள், எழாதவாறு வீழ்ந்தனர் என்கிறார். எத்தனையாயிரம் படைகள் வந்தாலும் இஸ்ராயேல் கடவுளின் முன் அணைந்த திரியாவார்கள் என்பது இவர்களின் வரலாற்று பாடம்.

வ.18: உளவியல் பேசுகிறார் எசாயா. முதல் நடந்தவை, எபிரேய பாடத்தில் முதலாவதாக நடந்தவற்றை அதாவது, கடவுளால் கைவிடப்பட்ட நிலையை குறிக்கிறது. இது எகிப்திய அடிமைத்தனத்தின் துன்பியலையும் அத்தோடு பபிலோனியனர்கள், அசிரியர்கள் இழைத்த கொடுமைகளையும் குறிக்கலாம். பழையதை நினைக்க வேண்டாம் என்கின்றாரே தவிர அவற்றை மறக்கச் சொல்லவில்லை. அத்தோடு கடவுள் தர இருக்கும் நம்பிக்கையான எதிர்காலத்தை நினைக்கச் சொல்கிறார். (நேர்கூற்று சிந்தனை வாழவைக்கும்).

வவ.19-20: ஆண்டவர் புதியனவற்றை செய்கிறேன் என்று நிகழ்காலத்திலே சொல்கிறார், மாறாக
எதிர்காலத்தில் இல்லையென்பதை அவதானிக்கவேண்டும். பாலைவனத்தில் பாதைகளையும், நீரோடைகளையும் அமைப்பது, இவர்களுக்கு நன்கு தெரிந்த விடுதலைப் பயண அனுபவமாகும். நிலத்தின் மிருகங்கள், நரிகள், தீக்கோழிகள் இவை இறுதிகாலத்தை குறிக்கின்றன என சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்த மிருகங்களுக்கு இவை தெரிந்துள்ளது உங்களுக்கு தெரியவில்லையா? என கேட்பது போல தோன்றுகிறது. பாலை நிலத்தில் தண்ணீர் என்னும் உவமானம் கடவுளுடைய இருத்தலைக் குறிக்கும். 

வவ.21. இறைவனின் புகழை அறிக்கையிடுவதே, மக்கள் படைக்கப்பட்டதன் நோக்கம் என்கிறார் ஆசிரியர். 

திருப்பாடல்: 126

1சீயோனின் அடிமை நிலையை ஆண்டவர் மாற்றினபோது, நாம் ஏதோ கனவு கண்டவர் போல இருந்தோம். 2அப்பொழுது, நமது முகத்தில் மகிழ்ச்சி காணப்பட்டது. நாவில் களிப்பாரவாரம் எழுந்தது 'ஆண்டவர் அவர்களுக்கு மாபெரும் செயல் புரிந்தார்' என்று பிற இனத்தார் தங்களுக்குள் பேசிக்கொண்டனர். 3ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல் புரிந்துள்ளார்; அதனால் நாம் பெருமகிழ்ச்சியுறுகின்றோம். 4ஆண்டவரே! தென்னாட்டின் வறண்ட ஓடையை நீரோடையாக வான்மழை மாற்றுவதுபோல, எங்கள் அடிமை நிலையை மாற்றியருளும். 5கண்ணீரோடு விதைப்பவர்கள் அக்களிப்போடு அறுவடை செய்வார்கள். 6விதை எடுத்துச் செல்லும்போது — செல்லும்போது — அழுகையோடு செல்கின்றார்கள்; அரிகளைச் சுமந்து வரும்போது — வரும்போது — அக்களிப்போடு வருவார்கள்.

இது ஒருவகை சீயோன் மலைப்பாடல். ஐந்தாவது புத்தகத்தை சார்ந்த இப்பாடலை அதிகமானவர்க்ள் ஒரு குழு புலம்பல் பாடலாக காண்கின்றனர். ஆறு வரிகளை மட்டும் கொண்டு;ள்ள இப்பாடலை அதன் அர்த்தத்தை மையமாகக் கொண்டு இரண்டு பகுதிகளாக பிரிக்கலாம். எதிர்கால வழமையை மீளாக்குதல் என்பதே இப்பாடலின் மைய பொருளாக வருகிறது. (1-3, 4-6)

வ.1: உயர ஏறுதலின் பாடல் என்று தொடங்குகிறது. சீயோனின் வளமையை ஆண்டவர் திரும்பி கொணர்ந்தபோது கனவு போலிருந்தது என்பது எந்த நிகழ்வை குறிக்கிறது என்பதில் தெளிவின்மை இருக்கிறது. கி.மு 701ல் சென்னாகெரிபின் முற்றுகையின் போது ஆண்டவர் எருசலேமை அற்புதமாக காத்த நிகழ்வை குறிக்கிறது என்பர் சிலர் (காண் எசாயா 37,36-37). ஆனால் இது ஒரு விவசாய பாடல் போல தோன்றுகிற படியால், இது காலத்தை கடந்தது என்றும் சொல்லலாம். திருப்பாடல்களுக்கு காலத்தைக் கணிப்பது மிகவும் கடினம். 

வ.2: 'அப்போது அவர் எங்கள் வாய்;களையும், நாக்குகளையும் சிரிப்பால் நிறைத்தார்' என்றே இரண்டாவது வரியின் அ பிரிவை, நேரடி மொழிபெயர்க்க வேண்டும். பிற இனத்தார் என்பது இங்கு பிற நாட்டவர்களை அதாவது இஸ்ராயேலரின் கடவுளை வணங்காதவர்களை குறிக்கிறது.  

வ.4-6: இது இரண்டாவது பிரிவின் தொடக்கத்தில் முதலாவது வசனத்தில் வந்த அதே 'வளமையை ஆண்டவரே திருப்பி கொண்டுவாரும்' என்று பொருளில் அமைந்துள்ளது. தென்நாடு என்பது நெகேபுவைக் குறிக்கும். பாலைவனத்தில் ஆறுகள் கிடையாது, ஆனால் ஓடைகள் எனப்படும், மழைக்கால ஆறுகளை, மக்கள் கடவுளின் அதிசய கொடையாகக் கண்டனர். மழையைத் தருபவரும் கடவுள் என்றபடியால் அது அவரின் ஆசீர்வாதமாகக் கருதப்பட்டது. ஆசிரியர் இந்த ஓடைகளை தங்களது 
வாழ்வுக்கு  ஒப்பிடுகிறார். இந்த இரண்டாவது பிரிவில் இரண்டு விடயங்கள் சொல்லப்பட்டுள்ளது. 
அ). கண்ணீரில் விதைப்பு - மகிழ்சியில் அறுவடை
ஆ). புலம்பலோடு விதை விதைப்பு - மகிழ்ச்சியில் கதிர் சேகரிப்பு.

விசுவாச வாழ்வு, விவசாயிகளின் அனுபவத்தோடு ஒத்திருப்பதை அழகாகச் சொல்லுகிறார் இந்த அறியப்படாத ஆசிரியர். 

இரண்டாம் வாசகம்: 
பிலிப்பியர் 3,8-14

8உண்மையில், என்னைப் பொறுத்தமட்டில் என் ஆண்டவராம் கிறிஸ்து இயேசுவைப் பற்றிய அறிவே நான் பெறும் ஒப்பற்றச் செல்வம். இதன் பொருட்டு மற்ற எல்லாவற்றையும் இழப்பாகக் கருதுகிறேன். அவர் பொருட்டு நான் அனைத்தையும் இழந்து விட்டேன். கிறிஸ்துவை ஆதாயமாக்கிக்கொள்ள எல்லாவற்றையும் குப்பையாகக் கருதுகிறேன். 9கிறிஸ்துவோடு இணைந்திருப்பதற்காகத்தான் நான் இவ்வாறு கருதுகிறேன். திருச்சட்டத்தின் அடிப்படையில் நான் கடவுளுக்கு ஏற்புடையவனாக இயலாது. கிறிஸ்துவின்மீது கொண்டுள்ள நம்பிக்கையால்தான் அவருக்கு நான் ஏற்புடையவன் ஆகமுடியும். இந்த ஏற்புடைமை கடவுளிடமிருந்து வருவது நம் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது. 10கிறிஸ்துவையும் அவர்தம் உயிர்த்தெழுதலின் வல்லமையையும் அறியவும் அவருடைய துன்பங்களில் பங்கேற்று, சாவில் அவரை ஒத்திருக்கவும் விரும்புகிறேன். 11அப்பொழுதுதான் நானும் இறந்தோருடன் உயிர்த்தெழ இயலும். இலக்கை நோக்கி ஓடுதல். 12நான் இவற்றை ஏற்கெனவே அடைந்துவிட்டேன் என்றோ, நிறைவு எய்திவிட்டேன் என்றோ சொல்வதற்கில்லை. கிறிஸ்து இயேசு என்னை ஆட்கொண்டதற்கான நோக்கம் நிறைவேறுவதற்காகத் தொடர்ந்து ஓடுகிறேன். 13அன்பர்களே, இந்நோக்கம் நிறைவேறிவிட்டது என நான் எண்ணவில்லை. ஆனால் ஒன்றுமட்டும் செய்கிறேன். கடந்ததை மறந்துவிட்டு, முன்னிருப்பதைக் கண்முன்கொண்டு, 14பரிசுபெற வேண்டிய இலக்கை நோக்கித் தொடர்ந்து ஓடுகிறேன். கிறிஸ்து இயேசுவின் மூலம் கடவுள் எனக்கு மேலிருந்து விடுக்கும் அழைப்பே அப்பரிசாகும்.

பவுல் தனது காதல் திருச்சபைக்கு எழுதிய மடல்தான் பிலிப்பியர் திருமுகம் என்று முன்னர் பார்த்திருக்கிறோம். (காண் இல 13, தவக்காலம் இரண்டாம் வாரம் (இ) 21,02,2016). இந்த பிலிப்பியர் திருமுகத்தில் பல ஆழமான பகுதிகள் உள்ளன, அவற்றில் இன்றைய நாள் வாசகம் மிகவும் முக்கியமானது. 

வ.8: அழகான வார்த்தை அமைப்பில் இந்த வரி, மூல கிரேக்க பாடத்தில் அமைந்துள்ளது. பவுல் இங்கு வணிகச் சொற்களைப் பயன்படுத்துகிறார். கிறிஸ்துவை சந்திப்பதற்கு முன்னர் பலவற்றை தனது சொத்துக்களாக கொண்டிருந்தார். இந்த கடிதத்தை எழுதுகிறபோது ஒரளவுக்கு தனது முடிவை ஊகித்திருப்பார் என்று எண்ணலாம். கிறிஸ்துவைப்பற்றிய அறிவே தனது வரவு, மற்றெல்லாம் தேவையில்லா செலவு என்கிறார் (ζημία ட்ஸேமியா- விரயம், செலவு). கிறிஸ்து ஆண்டவரைப்பற்றிய அறிவு என்று, இந்த அறிவை பவுல் மையப்படுத்துவது அக்காலத்தில் மக்கள் மத்தியில் இருந்த உலக-அறிவுப்பசியின் ஆபத்தை நமக்கு நினைவூட்டுகிறார். குப்பை என்று தமிழிலும் வேறு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, உன்மையில் 'மலக் கழிவைக்' குறிக்கும் (σκύβαλον ஸ்குபலொன்- மலக்கழிவு). இவ்வாறு, இயேசுவிற்கு முன்னால் அனைத்து பொருட்களின் பெறுமதியை காரசாரமாக மூக்கை மூடிக்கொண்டு சொல்லுகிறார் (இன்று பல கழிவுகள் கிறிஸ்துவின் இடத்தை பிடிக்க முயலுகின்றன)

வ.9: (அ). கிறிஸ்துவில் இணைந்திருத்தல், இதனை சரியாக, 'கிறிஸ்துவில் கண்டுபிடிக்கப்படல்' என்றுதான் கிரேக்கம் வாசிக்கிறது. கடவுளைப் பற்றிய சரியான புரிதல் ஒவ்வொரு இஸ்ராயேலரின் கடமை அதனைத்தான் தான் இயேசுவில் சரியாக செய்கிறேன் என்று வாதிடுகிறார்.

(ஆ). ஏற்புடமை (δικαιοσύνη திகையோசுனெ) என்பது இஸ்ராயேல் மக்கள் மத்தியில் இருக்கின்ற முக்கியமான பாரம்பரிய விசுவாசம். ஆபிரகாமின் பி;ள்ளைகளாக இருப்பதனாலும், திருச்சட்டங்களை கடைப்பிடிப்பதனாலும் ஒருவர் ஏற்புடமையை அடையலாம் என்பது, பல நூற்றாண்டு கருதுகோளாக இருந்தது. கிறிஸ்துவின் வருகை இதனை மாற்றியது என்பதில் பவுல் ஆழமாக இருக்கிறார். இந்த வரியில், இயேசுவில் கொண்டுள்ள நம்பிக்கைதான், தன்னை ஏற்புடையாக்குகிறது என்கிறார். பவுலின் நம்பிக்கை என்பது வாழ்க்கையையும் குறிக்கும் என்பதை அவதானிக்கவேண்டும். (πίστεως Χριστοῦ பிஸ்டெயோஸ் கிறிஸ்து) கிறிஸ்துவில் நம்பிக்கையா அல்லது கிறிஸ்துவைப் பற்றிய நம்பிக்கையா  என்பது இன்னும் அறிஞர்களால் வாதிடப்பட்டுக்கொண்டு இருக்கிறது. இங்கே ஆறாம் வேற்றுமையில் மயக்கம் உள்ளது. இதன் அர்த்த்ம் பவுலுக்கு மட்டும்தான் தெரியும் போல.  இரண்டு கருத்துக்களிலும் ஆழமான அர்தங்கள் உள்ளன.  

வவ.10-11: பவுல் தனது முடிவை  தெரிந்து வைத்திருந்தார் என இந்த இரண்டு வரிகளிலும் காணலாம். மூன்று விதமான விருப்பங்களை தருகிறார். கிறிஸ்துவை அறிதல், துன்பங்களில் பங்கேற்றல், சாவில் ஒத்திருத்தல். இதனால்தான் கிறிஸ்துவின் உயிர்ப்பில் பங்குகொள்ள முடியும் என்கிறார். பவுலுடைய காலத்தில் எற்கனவே யூதர்கள் உயிர்ப்பை பற்றிய புதிய அறிவை கொண்டிருந்தனர். உயிர்ப்பு என்னும் வாதம் கிறிஸ்தவர்களின் கண்டுபிடிப்பல்ல. ஆனால் கிறிஸ்துவின் உயிர்ப்பில் புது விளக்கத்தையே பவுல் காட்டுகிறார். 

வ.12: இங்கே பவுல் சில அடிப்படைவாதிகளின் கருத்துக்களை உடைக்கிறார். ஒருவருடைய விசுவாச வாழ்வு, அவர் கிறிஸ்துவில் உயிர்ப்பதாகும். இது ஒரு ஓட்டம், இவ்வுலகில் அது யாருக்கும் நிறைவடையாது என்கிறார். 'தொடர்ந்து ஒடுகிறேன்' என்பதை கடினப்பட்டு; ஓடுகிறேன் என்றுதான் பார்க்க வேண்டும். 

வவ.13-14: மூன்றாவது தடவையாக இன்னும் தான் அந்த இலக்கை அடையவில்லை என்ற கருத்தை உறுதிப்படுத்துகிறார். கடந்தது என்று சொல்லுவது தன்னுடைய பழைய நம்பிக்கைகளையோ பலவீனங்களையோ குறிக்கலாம், முன்னிருப்பது என்பது, கிறிஸ்துவின் உயிர்ப்பைக் குறிக்கும். இந்த கிறிஸ்து-ஒன்றிப்பு வாழ்வு ஒரு பரிசு என்பதும் பவுலுடைய அசைக்க முடியாத நம்பிக்கை. 


நற்செய்தி: 
யோவான் 8,1-11
விபசாரத்தில் பிடிபட்ட பெண்

1இயேசு ஒலிவ மலைக்குச் சென்றார். 2பொழுது விடிந்ததும் அவர் மீண்டும் கோவிலுக்கு வந்தார். அப்போது மக்கள் அனைவரும் அவரிடம் வந்தனர். அவரும் அங்கு அமர்ந்து அவர்களுக்குக் கற்பித்தார். 3மறைநூல் அறிஞரும் பரிசேயரும் விபசாரத்தில் பிடிபட்ட ஒரு பெண்ணைக் கூட்டிக் கொண்டு வந்து நடுவில் நிறுத்தி, 4'போதகரே, இப்பெண் விபச்சாரத்தில் கையும் மெய்யுமாகப் பிடிப்பட்டவள். 5இப்படிப்பட்டவர்களைக் கல்லால் எறிந்து கொல்ல வேண்டும் என்பது மோசே நமக்குக் கொடுத்த திருச்சட்டத்திலுள்ள கட்டளை. நீர் என்ன சொல்கிறீர்?' என்று கேட்டனர். 6அவர்மேல் குற்றம் சுமத்த ஏதாவது வேண்டும் என்பதற்காக அவர்கள் இவ்வாறு கேட்டுச் சோதித்தார்கள். இயேசு குனிந்து விரலால் தரையில் எழுதிக்கொண்டிருந்தார். 7ஆனால் அவர்கள் அவரை விடாமல் கேட்டுக்கொண்டிருந்ததால், அவர் நிமிர்ந்து பார்த்து, 'உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண்மேல் கல் எறியட்டும்' என்று அவர்களிடம் கூறினார். 8மீண்டும் குனிந்து தரையில் எழுதிக் கொண்டிருந்தார். 9அவர் சொன்னதைக் கேட்டதும் முதியோர் தொடங்கி ஒருவர் பின் ஒருவராக அவர்கள் யாவரும் அங்கிருந்து சென்று விட்டார்கள். இறுதியாக இயேசு மட்டுமே அங்கு இருந்தார். அப்பெண்ணும் அங்கேயே நின்று கொண்டிருந்தார். 10இயேசு நிமிர்ந்து பார்த்து, 'அம்மா, அவர்கள் எங்கே? நீர் குற்றவாளி என்று எவரும் தீர்ப்பிடவில்லையா?' என்று கேட்டார். 11அவர், 'இல்லை, ஐயா' என்றார். இயேசு அவரிடம் 'நானும் தீர்ப்பு அளிக்கவில்லை. நீர் போகலாம். இனிப் பாவம் செய்யாதீர்' என்றார்.

யார் யாருக்கு கல்லெறிவது? யோவான் நற்செய்தியை யார் எழுதியது என்பது இன்னும் அறியப்படாத இனிமையான தேடல். கத்தோலிக்க பாரம்பரியம் இவரை, 
ஆண்டவருக்கு நெருக்கமாக இருந்நதவரும், அருவடைய மார்பில் சாய்ந்தவரும், அன்னை மரியாவை பாராமரித்தவருமான கலிலேய இளைஞனான யோவான் என்று காண்கின்றனர். இந்த ஊகிப்பை, ஆய்வியல் ரீதியாக நிரூபிக்கவும் முடியாது, மறுக்கவும் முடியாது. கி.பி. 90-175 ஆண்டுகளில் எழுதப்பட்ட இந்த அழகானதும் ஆழமானதுமான நற்செய்தி, உருவகங்கள் மற்றும் அடையாளங்கள் வாயிலாக ஆண்டவர் இயேசுவை, உன்னத கடவுளாக காட்டுகிறது. கிரேக்க மற்றும் இராபினிக்க எபிரேய சிந்தனைகளை கொண்டுள்ள இந்த நற்செய்தியை அவற்றால் கட்டுப்பட்டது என்று சொல்ல முடியாது. யோவான் நற்செய்தி தனித்துவமானது. அழகிற்கு அழகுசேர்த்தால் போல் வரும் இந்த பகுதி, யோவானின் கழுகுப் பார்வையை நமக்கு காட்டுகிறது. ஏழாவது எட்டாவது அதிகாரங்கள் எருசலேமில் ஆண்டவரும் அவரை புரிந்து கொள்ளாதவர்களுக்கும் இடையில் நடந்த வாத பிரதிவாதங்களை விவரிக்கின்றன. யோவான் 7,53 - 8,11 போன்ற வசனங்கள், அவற்றினுடைய மொழி மற்றும் இறையியல் நடையை கருத்தில் கொண்டு,  மூல கிரேக்க பிரதியில் இருந்திருக்கவில்லை எனவும், பின்னர் தோன்றிய பிரதிகளில் இருந்து மூல பிரதியுடன் சேர்த்துக்கொள்ளப்பட்டது என பல அறிஞர்கள் ஏற்றுக்கொள்கின்றனர். இந்தப் பகுதி லூக்காவின் சாயலை ஒத்திருப்பதாகவும் சிலர் காண்கின்றனர். 

வ.1: ஓலிவ மலைக்கு ஆண்டவர் செபிக்கச் செல்வது சமநோக்கு (ஒத்தமைவு) நற்செய்தியில் அதிகமாக காணப்படுகிறது, யோவான் நற்செய்தியில் இங்கு மட்டுமே வருகிறது. எருசலேமிற்கு கிழக்கில் இருக்கும் இந்த குன்று ஒலிவ மரங்களை அதிகமாக கொண்டிருப்பதனால் இவ்வாறு அழைக்கப்படுகிறது. ஆண்டவருடைய வாழ்விலும் வார்த்தையிலும் இந்த மலை  முக்கியம் பெறுகிறது. இங்கிருந்து பழைய எருசலேமையும், தாவீதின் நகரையும் காணலாம், இந்த மலையில் இருந்துதான் ஆண்டவர் எருசலேமை பார்த்து அழுதார் என்று பாரம்பரியமும் வரலாறும் கூறுகின்றன. 

வ.2: மலையிருந்து வருகிறபடியால் அவர் இரவு முழுவதும் செபத்தில் இருந்தார் எனக் கொள்ளலாம். முதல் ஏற்பாட்டில் கடவுள் மலையில் இருப்பார், மக்கள் அவரைத் தேடி செல்வார்கள், இங்கே இவர் மலையிலிருந்து இறங்கி வந்து, மக்களுடன் அமர்ந்து கற்பிக்கிறார்.

வ.3-6: இந்த வரிகள் பல சிந்தனைகளை தாங்கி வருகின்றன. அ). ஆணாதிக்க சமூதாயத்தின் கோர முகம் இங்கு படம்பிடிக்கப்படுகிறது. பரிசேயர்களைம் மறைநூல் வல்லுனர்களையும் இங்கு இயேசுவின் அதிகாரத்தை ஏற்காதவர்களின் அடையாளம் எனக் கொள்ளலாம். மறைநூல் வல்லுனர்கள் இங்கு மட்டும்தான் யோவான் நற்செய்தியில் வருகிறார்கள். ஆலயத்தின் நடுவில் பிடிபட்ட பெண்ணை நிற்க வைப்பதன் மூலம் அவர்களின் தேவை வேறாக இருக்கிறது என்கிறார் யோவான். 

வ.4: தங்களைத்தான் உண்மையான ஆசிரியர்கள் என்று சொல்கிறவாக்ள், இயேசுவை 'ஆசிரியரே' என்று சொல்வது யோவானின் கைவன்மையை காட்டுகிறது. பெண்ணைக் கொண்டு வந்துள்ளனர், விபச்சாரத்தில் பிடிப்பட்ட ஆணை காணவில்லை. ஒரு வேளை இயேசு பெண்களுக்கு சீடத்துவம் கொடுத்ததால் இயேசுவை சிக்க வைக்க பெண்ணை அவர் முன்னிலையில் வைக்கின்றனர் என சந்தேகிக்கலாம். 

வ.5: தவறாக மோயிசனின் கட்டளைகளை குறிப்பிடுகின்றனர் (காண்: லேவி 20,10: இ.ச: 22,22): இந்த சட்டங்கள் பாலியல் விபச்சாரத்திற்கு எதிரானவை என்பதைவிட, அவை குடும்ப ஒழுக்கத்தையும், எதிர்கால சந்ததியை பாதுகாக்கவும் எழுதப்பட்டது என்றே கொள்ள வேண்டும். இந்த சட்டங்கள் ஆண்களையும் சமனாக தண்டிக்கிற படியால், இங்கே இவர்கள் செய்வது சட்டத்திற்கு முரணானது எனலாம். அவர்கள் மட்டுமே பேசுகிறார்கள், அந்த பெண் பேசவில்லை. அவருடன் விபச்சாரம் செய்தவரும் அங்கிருந்திருக்கலாம். பெண்களின் விபச்சாரம் தவறு என்று இந்த ஆண்கள் எப்படிச் சொல்லலாம்? பெண்களுக்கு சட்டம் அமைக்க ஆண்களுக்கு யார் அனுமதி அளித்தது?

வ.6: அவர்களின் நோக்கம் சமூகத்தில் ஒழுக்கத்தை கொண்டுவரவல்ல, மாறாக இயேசுவை சிக்க வைக்க. இயேசுவின் அமைதியும், நிலத்தில் குனிந்து எழுதுதலும், தான் இந்த மாசுபட்ட ஆண் வர்க்கத்தை சார்ந்தவன் அல்ல என காட்டவே அமைகிறது. என்ன எழுதியிருப்பார்? தண்டிக்க படவேண்டியவர்கள் தண்டிக்க துடிக்கிறார்கள் என்று எழுதியிருப்பாரோ? மத்திய கிழக்கு நாடுகளில், உரையாடல்களின் போது குனிந்து வேறேதாவது செய்வது, அவர் அந்த உரையாடலில் ஈடுபாடு காட்டவில்லை என்பதைக் குறிக்கும். இயேசுவும் இதனைத்தான் செய்கிறார்.

வ.7-8: அவர் நிமிர்ந்து பார்த்து சொன்னார், என்பது அவருடைய கடவுள் தன்மையை காட்டுகிறது. மோசேயின் சட்டங்களை நன்கு தெரிந்திருந்தார் இயேசு அதனால்தான் குற்றமற்றவர் யார் இங்கு என வினவுகிறார். மீண்டும் குனிந்து எழுதுவது, ஆண்களில் யார் பாவிகள் என்று பார்ப்பது தனது நோக்கமல்ல என்பதைக் குறிக்கிறது. 

வ.9: முதியவர்கள் (πρεσβύτερος பிரஸ்புடெரொஸ்- பெரியவர்கள்) தொடங்கி அனைவரும் சென்றுவிட்டனர் என்பது, சமுதாயத்தில் அனைவரும் பாவிகளே என்று யோவான் சொல்வதை கவனிக்கலாம். இந்தப் பெண்ணும் இயேசுவும் மட்டும் என்பது, கைவிடப்பட்டவர்களோடு இயேசு என்றும் இருக்கிறார் என்பது புலப்படுகிறது. 

வவ.10-11: நிமிர்ந்து பார்ப்பதன் மூலம் இயேசு மீண்டுமாக தனது தெய்வீக தன்மையை காட்டுகிறார். இயேசுவின் கேள்வி இங்கே உண்மையில் விடையாக வருகிறது. இரண்டு கேள்விகள்: எங்கே ஒவ்வொருவரும்? ஒருவரும் தீர்ப்பிடவில்லையா? பரிசேயரும் மறைநூல் வல்லுனர்களும் இயேசுவை, போதகரே என்று விளித்த போது இந்தப் பெண், ஆண்டவரே என்கிறார். (κύριε கூரியே, ஆண்டவரே!). இயேசுவும் இந்த பெண்ணை தீர்ப்பிடாமல் விட்டது, சென்ற ஆண்களையும் தீர்ப்பிடாமல் விட்டதற்கு சமனாகும். இயேசு இந்த பெண்ணுக்கு பரிவு காட்டுகிறார், பாவ வாழ்க்கைக்கு அல்ல. இஃது, இயேசு மோசேயின் சட்டங்களுக்கு எதிரானவர் அல்ல மாறாக தான் சட்டங்களுக்கும் கடவுள் என்பதைக் குறிக்கலாம். 

பெண்களுக்கு ஆண்களும், ஆண்களுக்கு பெண்களும் சட்டங்களை இயற்றுவதை விடுத்து, எதிர்காலத்தையும் மனிதத்தையும் நேசித்தால் சட்டங்கள் தேவைப்படாது. இரக்கம் மட்டுமே மிஞ்சும்.

ஆண்டவர் இயேசுவே! பல குப்பைகள் உம்முடைய இடத்தை பிடிக்க முயலுகின்றன. உம்மை உமது இடத்தில் வைக்க வரம் தாரும். ஆமென். 

மி. ஜெகன்குமார் அமதி
10,03,2016- உரோமை. 

வியாழன், 3 மார்ச், 2016

தவக்காலம், நான்காம் வாரம் (இ), 06,03,2016; The Sunday of Joy.


முதல் வாசகம்
யோசுவா 5,9-12:
9ஆண்டவர் யோசுவாவிடம், 'இன்று எகிப்தியரின் பழிச்சொல்லை உங்களிடமிருந்து நீக்கிவிட்டேன்' என்றார். ஆகவே அந்த இடம் இந்நாள்வரை 'கில்கால்' என்று அழைக்கப்படுகின்றது. 10இஸ்ரயேலர் கில்காலில் தங்கினர். மாதத்தின் பதினான்காம் நாள் மாலை எரிகோ சமவெளியில் பாஸ்கா கொண்டாடினர். 11பாஸ்காவின் மறுநாள் நிலத்தின் விளைச்சலையும் புளிப்பற்ற அப்பத்தையும் வறுத்த தானியத்தையும் உண்டனர். 12நிலத்தின் விளைச்சலை உண்ட மறுநாளிலிருந்து மன்னா நின்றது.இஸ்ராயேலருக்கு மன்னா மீண்டும் கிடைக்கவில்லை. கானான் நிலத்தின் விளைச்சலை அந்த ஆண்டு உண்டனர்.

முதல் ஏற்பாட்டில் ஆறாவது இடத்தில் அமைந்துள்ள இந்த நூல் பாரம்பரியமாக யோசுவா, மேசேயுடைய உதவியாளரினால் எழுதப்பட்டது என அழைக்கப்படுகிறது. இந்த புத்தகம் எப்போது எழுதப்பட்டது என்பதிலும் பல வியாக்கியானங்கள் உள்ளன. அநேகமாக கி.மு 1050ல் எழுதப்பட்டது எனக் கொள்ளலாம். தற்கால ஆய்வாளர்கள் யோசுவா புத்தகத்திற்கு இணைச்சட்டம், நீதிபதிகள், 1-2சாமுவேல், 1-2 அரசர்கள் போன்றவற்றோடு இறையியலில் நெருக்கிய தொடர்பிருப்பதனை அவதானிக்கின்றனர். இதனை 'இணைச்சட்ட வரலாறு' என்று அழைப்பர். எது எவ்வாறெனினும், இறையியலில் மிகவும் அழகான புத்தகங்களில் இதுவும் ஒன்று. நாடு கடவுள் தரும் கொடை, தேசியத்தை நிறுவுவதில் ஒற்றுமை, இஸ்ராயேலின் ஒற்றுமை, உடன்படிக்கையில் நம்பகத்தன்மை, மற்றும் புனிதப்போர் போன்றவை யோசுவா நூலின் முக்கியமான சிந்தனைகள். பிரேதேசங்களையும், சாதிப்-பொய்யையும், சம்மந்தமில்லா மதப்பிரிவினைகளையும், காலங்கடந்த ஆணாதிக்க சிந்தனைகளையும் தேவையில்லாமல் உள்வாங்கி ஈழ தேசிய ஒற்றுமையை சிதைக்க நினைப்பவர்களுக்கு உண்மையில் இது அழகான எதிர்க்கருத்து. இன்றைய வாசக பகுதி வாக்களிக்ப்பட்ட நாட்டினுள் நுழைந்த பகுதியில் உள்ள ஆயத்த சடங்கு பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.

வ.9அ: எகிப்தின் பழிச்சொல் என்பது இரண்டு சிந்தனைகளை முன்வைக்கிறது. அ. விருத்தசேதனம் செய்யாத எகிப்தில் இருந்த நிலை. ஆ. எகிப்திலே அடிமைகளாக இருந்த நிலை, அதாவது கைவிடப்பட்ட நிலை. இவற்றை இப்போது கடவுள் நீக்குகிறார். நீக்கிவிட்டார் என்பதைவிட புரட்டிவிட்டார் என்றே எபிரேய மூல நூல் குறிப்பிடுகிறது.

வ.9ஆ: கில்கால் (גִּלְגָּל கில்கால்), சாக்கடலுக்கு, எரிக்கோவிற்கு வடகிழக்கில் அமைந்துள்ள நகர். 35தடவைகளாக முதல் ஏற்பாட்டில் வருவதனால் இதன் முக்கியத்துவத்தை அறியலாம். பெத்தோலுடன் சேர்த்து இஸ்ராயேலுக்கு முக்கியமான புனிதத் தளம். இங்கேதான் சவுலும் தாவிதும் பின்நாள்களில் அரசர்களாக திரு நிலைப்படுத்தப்பட்டார்கள். சவுலின் பணிவின்மையால் அவர் அரசபதவியை இழந்த நிகழ்வுகளும் இந்த இடத்துடன் தொடர்பு பட்டுள்ளது. இப்போது யோசுவா இங்கே செய்யும் உடன்படிக்கை பின்நாளில் பல அரசர்கள் செய்யும் உடன்படிக்கையுடன் தொடர்புபட்டு;ள்ளது. ஆக இந்நிகழ்வு பின்நாள் நிகழ்வுகளை ஞாபகப்படுத்துகின்றது. அத்தோடு இந்நிகழ்வு செங்கடலை கடந்ததையும் நினைவூட்ட அமைக்கப்பட்டுள்ளது என ஆய்வாளர்கள் பார்க்கின்றனர்.

வ.10: நிசான் மாதம் 14ம் நாள் (சித்திரை-வைகாசி எனக் கொள்ளலாம்.) பாஸ்கா (פָּסַח பாசஹ், கட) என்றால் கடத்தல் என்று பொருள். இந்த விழா இஸ்ராயேல் மக்களுடைய பழைய நாடோடி வாழ்வோடு தொடர்புபட்டது. (மேலும் அறிய காண்க வி.ப 12-13). ஏற்கனவே இஸ்ராயேல் மக்கள் இதனை எகிப்தில் கொண்டாடினார்கள் என வி.ப. நூல் சொல்கிறது. எரிக்கோவில் கொண்டாடினார்கள் என்றால், கடவுள் கொடுத்த நாட்டில் முதல் தடவையாக கொண்டாடுகிறார்கள் என எடுக்கலாம்.

வ.11: நாடுபிடிப்பவர்களாக உள்நுழைந்தவர்களுக்கு எங்கிருந்து நிலத்தின் விளைச்சலும் புளிப்பற்ற அப்பமும் வறுத்த தானியமும் வந்தன? நிலத்தின் விளைச்சல் என்னும் சொல்லிலே ஒரு சொல் விளையாட்டு உள்ளதை அவதானிக்கலாம். מֵעֲבוּר மெஅவுர் என்பது விளைச்சலைக் குறிக்கிறது, עָבַר அவர், என்பது கடத்தலைக் குறிக்கும். எனவே இவர்கள் நாட்டை கடந்து பிடித்ததைப்போல, விளைச்சலையும் பிடித்திருக்கலாம் என சிலர் கருதுகின்றனர்.

வ.12: (מָן மன்) மன்னா, கடவுள் இதனை இஸ்ராயேல் மக்களுக்கு நாற்பது ஆண்டுகளாக வழங்கினார். கொத்து மல்லி அல்லது உறைபனி போன்ற இந்த வெள்ளை உறைதிரவத்தை இஸ்ராயேல் மக்கள் கடவுளின் ஆச்சரியமாக கண்டனர். சில ஆய்வாளர்கள், சீனாய் பாலை நிலத்தில் சில மரங்கள் தருவதனை இது ஒத்திருக்கிறது என்கின்றனர். ஒருவகை மரப்பாசியும் மன்னாவுக்கு சொல்லப்படுகிறது. மன்னா என்பது வானகத்திலிருந்து வரும் உணவினை குறிக்கவும் பயன்படுகிறது. எப்படியாயினும், மன்னா கடவுளின் பராமரிப்பை குறிக்கிறது. யோவான் இயேசு ஆண்டவர்தான் உண்மையான மன்னா என்பார். இவ்வளவு காலமும் கடவுளின் மன்னாவை உண்ட மக்கள் இந்நாளில் இருந்து நிலத்iதின் விளைச்சலை உண்கின்றனர்.
பதிலுரைப்பாடல்
தி.பாடல் 34:
1ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும்.

தாவீது சவுலிடமிருந்து தப்ப காத்தின் அரசன் அகிஷிடம் சென்றார், ஆனால் அவன் முன்னர் தாவீதை களத்தில் சந்தித்திருந்தான், இதனால் அவரை நம்ப மறுக்கிறான், பின்னர் தாவீது தனது மனதைமாற்றி வேறிடம் சென்றபோது இப்பாடலை பாடினார் என்று இத்திருப்பாடலின் தலை வரி கூறுகிறது. (ஒப்பிடுக 21,10-14). சாமுவேல் புத்தகம் தாவீது தானாக சவுல்-அகிஷிடமிருந்து தப்பினார் என்று கூற, இத் திருப்பாடலில் தாவிது தன்னை ஆண்டவர் காப்பாற்றினார் என்று கூறுகிறார். இத்திருப்பாடல் அகரவரிசையில் வரும் பாடல்களில் ஒன்றாக காணலாம், ஆனால் அங்காங்கே சில மாறுதல்கள் உள்ளன.

வவ. 1-2: ஆசிரியர், எது நடந்தாலும் ஆண்டவரை எக்காலமும் போற்றுவேன் என்கிறார்.

வவ. 3-6: தன்னுடைய அனுபவத்ததை பறைசாற்றுகின்றார்: ஆண்டவர் மறுமொழி பகர்ந்தார், இந்த ஏழை கூவியழைத்தான், ஆண்டவர் செவிசாய்த்தார் இந்த வரிகள் தாவிதின் இறையனுபவத்ததை காட்டுகின்றன.

வவ. 7-10: இறையனுபவத்தில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்களை விவரிக்கின்றார். ஆண்டவரின் தூதர் காத்திடுவார், ஆண்டவரை சுவைத்துப்பாருங்கள், அவர் இனியவர், ஆண்டவருக்கு அஞ்சுவோருக்கு எக்குறையும் இராது, நம்மை சிங்கக் குட்டிகளைகளைப் போல ஆண்டவர் பாதுகாப்பார், நன்மை எதுவுமே குறையாது, போன்றவை, தாவிதின் கற்றுக்கொண்ட பாடங்கள்.

வவ. 11-14: நல் வாழ்வின் இரகசியம் சொல்லப்படுகிறது: ஆண்டவருக்கு அஞசுதல், வாழ்வில் நிறைவைக் காண- தீச்சொல்லில் இருந்து நா காக்கப்பட வேண்டும், வஞ்சக மொழியிலிருந்து வாய் விலக்கப்பட வேண்டும், தீமையை விலக்கி நன்மை செய்ய வேண்டும், போன்றவையாகும் அவை.

வவ. 15-18: துன்பங்களை எதிர்கொள்ளும் இரகசியம் சொல்லப்படுகிறது: ஆண்டவரின் கண்கள் நீதிமான்களை நோக்குகின்றன என்பதை உணர வேண்டும், ஆண்டவர் தீயவர்களின் நினைவையே உலகினின்று அற்றுப்போகச் செய்வார் என்பதை அறிய வேண்டும், நீதிமான்களின் வேண்டுதல்களை ஆண்டவர் கேட்கின்றார், உடைந்த உள்ளத்தோருக்கும், நைந்த நெஞ்சத்தாரையும் ஆண்டவர் கைவிடுவதில்லை என்பதை உணரவேண்டும்: இதுவே அந்த இரகசியம்.

வவ. 19-22: விடுதலையின் இரகசியம் சொல்லப்படுகிறது: நேர்மையாளர்க்கு தீங்குகள் வரும் ஆனால் அவை அவரை மேற்கொள்ளா, ஒரு எலும்பு கூட முறிபடாது (இயேசுவிற்கு இது நடந்தது), தீயோரை அவர்களின் தீவினையே சாகடிக்கும், நேர்மையாளரை வெறுப்போர் நிச்சயம் தன்டனை பெறுவர், ஆண்டவரிடம் அடைக்கலம் புகுவோர் என்றுமே கைவிடப்படார். இவைதான் அந்த இரகசிய சிந்தனைகள்.

இரண்டாம் வாசகம்
2கொரிந் 5,17-21:
17எனவே ஒருவர் கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்போது அவர் புதிதாகப் படைக்கப்பட்டவராய் இருக்கிறார். பழையன கழிந்து புதியன புகுந்தன அன்றோ! 18இவை யாவும் கடவுளின் செயலே. அவரே கிறிஸ்துவின் வாயிலாக நம்மைத் தம்மோடு ஒப்புரவாக்கினார்; ஒப்புரவாக்கும் திருப்பணியையும் நமக்குத் தந்துள்ளார். 19உலகினரின் குற்றங்களைப் பொருட்படுத்தாமல் கடவுள் கிறிஸ்துவின் வாயிலாக அவர்களைத் தம்மோடு ஒப்புரவாக்கினார். அந்த ஒப்புரவுச் செய்தியை எங்களிடம் ஒப்படைத்தார். 20எனவே நாங்கள் கிறிஸ்துவின் தூதுவர்களாய் இருக்கிறோம். கடவுளே எங்கள் வாயிலாக வேண்டுகோள் விடுக்கிறார். ஆகவே கடவுளோடு ஒப்புரவாகுங்கள் என்று கிறிஸ்துவின் சார்பில் நாங்கள் மன்றாடுகிறோம். 21நாம் கிறிஸ்து வழியாகத் தமக்கு ஏற்புடையவராகுமாறு கடவுள் பாவம் அறியாத அவரைப் பாவநிலை ஏற்கச் செய்தார்.

கொரிந்தியருக்கான இரண்டாம் திருமுகம், அந்த திருச்சபையிலே முளைத்த சில சிக்கல்களை கையாள, பவுலடிகளார் இதனை எழுதினார் என்று சொல்லப்படுகிறது. உண்மையில் பவுல் ஐந்து மடல்களை இந்த திருச்சபைக்கு எழுதினார் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பொய்த் திருத்தூதர்களின் வருகையும் கொரிந்திய திருச்சபையின் முக்கிய பிரச்சனைகளில் ஒன்றாக இருந்தது. இந்த கடிதத்தின் ஒன்று தொடக்கம் ஏழு வரையான அதிகாரங்கள் இப்படியான பிரச்சனைகளுக்கு எப்படி தீர்வு காண்பது என்பதனை விளக்கி, மக்களை இயேசுவில் மையப்படுத்த கேட்கிறது. இன்றைய வாசகம் 'ஒப்புரவாக்கும் பணி' என்ற எண்ணக்கருவை தாங்கி வருகிறது.

வவ. 17: புதிதாய் படைக்கப்படுதல் மற்றும் பழையன கழிதல் போன்றவற்றை தனது சொந்த அனுபவத்தில் இருந்து எடுக்கிறார் இயேசு. அதாவது இயேசுவை அறிதலும் அவரை ஏற்றுக்கொள்ளலுமே இந்த புதுமைக்கான காரணம் என்பது அவர் வாதம். பவுல் ஆண்டவருடைய வருகை- அவருடைய பாஸ்கா மறைபொருள் போன்றவை காரணமாக ஏற்கனவே முழு உலகும் புதுப்பிக்கப்பட்டுவிட்டது என்கிறார்.

வவ. 18: இங்கே முக்கியமான சில சிந்தனைகளை முன்வைக்கிறார். அ. இது புதுப்பித்தல் கடவுளின் செயல்: ஆ. கடவுள் கிறிஸ்து வாயிலாக நம்மை தன்னோடு ஒப்புரவாக்கினார்: இ. இப்போது அந்த ஒப்புரவுப் பணி நமக்கும் தரப்பட்டுள்ளது. ஒப்புரவு என்பது கிரேக்கத்தில் ஒரு வணிகச் சொல் καταλλαγή கடால்லாகெ, இது பண்டமாற்றைக் குறிக்கும். இதனை பவுல் கிறிஸ்துவின் மரணம் எமது பாவத்திற்காக பரிகாரம் செய்துள்ளது என்கிறார். இந்த நற்செய்தியை அதாவது இந்த ஒப்புரவு செய்தியை பெற்றவர்கள் அதனை மற்றவரோடு பகிரவேண்டும் என்கிறார்.

வவ. 19. கடவுள் மனித பாவங்களை பாராமல், இந்த ஒப்புரவுச் செய்தியை நம்மிடம் முதலில் ஒப்படைத்தார் என்கிறார். யார் இந்த 'நாம்' என்பது விளங்கவில்லை, திருத்தூதர்களாக இருக்கலாம் அல்லது அனைத்து கிறிஸ்தவர்களாகவும் இருக்கலாம்.

வவ. 20: இங்கே செய்தி தெளிவாக விளங்குகிறது. பவுல் திருத்தாதர்களை, தூதர்கள் என்கிறார். இதற்கு அரசஅதிகாரி என்ற சொல் பாவிக்கப்பட்டு;ள்ளது இது ஒரு முதல் குடிமகனையோ அல்லது முதிர்ச்சி உள்ளவரையோ குறிக்கும் (πρεσβεία பிரஸ்பெய்யா).

வவ. 21: ஏற்புடைமையாகுதல், (δικαιοσύνη திகையோசுனே) பவுலுடைய இறையியலில் மிகவும் முக்கியமான கரு. முதல் ஏற்பாட்டு நீதிமான்கள் என்பவர்களும் இந்த வாழ்வையுடையவர்களே. ஏற்புடைமையாகுதல் கடவுள் நமக்கு இயேசுவால் தரும் கொடை மட்டுமே அதனை யாரும் வாங்க முடியாது என்பதும் பவுலுடைய அசைக்க முடியாத நம்பிக்கை. கடவுள் கிறிஸ்துவை பாவம் நிலை ஏற்கச்செய்தார் என்பதைவிட, பாவத்திற்கு பரிகாரமாக்கினார் என்றே கொள்ள வேண்டும்.
நற்செய்தி
லூக் 15,1-3.11-32:
1வரிதண்டுவோர், பாவிகள் யாவரும் இயேசு சொல்வதைக் கேட்க அவரிடம் நெருங்கிவந்தனர். 2பரிசேயரும், மறைநூல் அறிஞரும், 'இவர் பாவிகளை வரவேற்று அவர்களோடு உணவருந்துகிறாரே' என்று முணுமுணுத்தனர். 3அப்போது அவர் அவர்களுக்கு இந்த உவமையைச் சொன்னார்: 11மேலும் இயேசு கூறியது: 'ஒருவருக்கு இரண்டு புதல்வர்கள் இருந்தார்கள். 12அவர்களுள் இளையவர் தந்தையை நோக்கி, 'அப்பா, சொத்தில் எனக்கு உரிய பங்கைத் தாரும்' என்றார். அவர் சொத்தை அவர்களுக்குப் பகிர்ந்து அளித்தார். 13சில நாள்களுக்குள் இளைய மகன் எல்லாவற்றையும் திரட்டிக்கொண்டு, தொலை நாட்டிற்கு நெடும் பயணம் மேற்கொண்டார்; அங்குத் தாறுமாறாக வாழ்ந்து தம் சொத்தையும் பாழாக்கினார். 14அனைத்தையும் அவர் செலவழித்தார். பின்பு அந்த நாடு முழுவதும் கொடிய பஞ்சம் ஏற்பட்டது. அப்பொழுது அவர் வறுமையில் வாடினார்; 15எனவே அந்நாட்டுக் குடிமக்களுள் ஒருவரிடம் அண்டிப் பிழைக்கச் சென்றார். அவர் அவரைப் பன்றி மேய்க்கத் தம் வயல்களுக்கு அனுப்பினார். 16அவர் பன்றிகள் தின்னும் நெற்றுகளால் தம் வயிற்றை நிரப்ப விரும்பினார். ஆனால் அதைக்கூட அவருக்குக் கொடுப்பார் இல்லை. 17அவர் அறிவு தெளிந்தவராய், 'என் தந்தையின் கூலியாள்களுக்குத் தேவைக்கு மிகுதியான உணவு இருக்க, நான் இங்குப் பசியால் சாகிறேனே! 18நான் புறப்பட்டு என் தந்தையிடம் போய், 'அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; 19இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்; உம்முடைய கூலியாள்களுள் ஒருவனாக என்னை வைத்துக் கொள்ளும் என்பேன்' என்று சொல்லிக்கொண்டார். 20உடனே அவர் புறப்பட்டுத் தம் தந்தையிடம் வந்தார். தொலையில் வந்துகொண்டிருந்தபோதே அவர் தந்தை அவரைக் கண்டு, பரிவு கொண்டு, ஓடிப்போய் அவரைக் கட்டித் தழுவி முத்தமிட்டார். 21மகனோ அவரிடம், 'அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்' என்றார். 22தந்தை தம் பணியாளரை நோக்கி, 'முதல்தரமான ஆடையைக் கொண்டுவந்து இவனுக்கு உடுத்துங்கள்; இவனுடைய கைக்கு மோதிரமும், காலுக்கு மிதியடியும் அணிவியுங்கள்; 23கொழுத்த கன்றைக் கொண்டு வந்து அடியுங்கள்; நாம் மகிழ்ந்து விருந்து கொண்டாடுவோம். 24ஏனெனில் என் மகன் இவன் இறந்துபோயிருந்தான்; மீண்டும் உயிர் பெற்று வந்துள்ளான். காணாமற்போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான்' என்றார். அவர்கள் மகிழ்ந்து விருந்து கொண்டாடத் தொடங்கினார்கள். 25'அப்போது மூத்த மகன் வயலில் இருந்தார். அவர் திரும்பி வீட்டை நெருங்கி வந்துகொண்டிருந்தபோது, ஆடல் பாடல்களைக் கேட்டு, 26ஊழியர்களுள் ஒருவரை வரவழைத்து, 'இதெல்லாம் என்ன?' என்று வினவினார். 27அதற்கு ஊழியர் அவரிடம், 'உம் தம்பி வந்திருக்கிறார். அவர் தம்மிடம் நலமாகத் திரும்பி வந்திருப்பதால் உம் தந்தை கொழுத்த கன்றை அடித்திருக்கிறார்' என்றார். 28அவர் சினமுற்று உள்ளே போக விருப்பம் இல்லாதிருந்தார். உடனே அவருடைய தந்தை வெளியே வந்து, அவரை உள்ளே வருமாறு கெஞ்சிக் கேட்டார். 29அதற்கு அவர் தந்தையிடம், 'பாரும், இத்தனை ஆண்டுகளாக நான் அடிமைபோன்று உமக்கு வேலை செய்துவருகிறேன். உம் கட்டளைகளை ஒருபோதும் மீறியதில்லை. ஆயினும், என் நண்பரோடு நான் மகிழ்ந்துகொண்டாட ஓர் ஆட்டுக்குட்டியைக்கூட என்றுமே நீர் தந்ததில்லை. 30ஆனால் விலைமகளிரோடு சேர்ந்து உம் சொத்துகளையெல்லாம் அழித்துவிட்ட இந்த உம் மகன் திரும்பி வந்தவுடனே, இவனுக்காகக் கொழுத்த கன்றை அடித்திருக்கிறீரே!' என்றார். 31அதற்குத் தந்தை, 'மகனே, நீ எப்போதும் என்னுடன் இருக்கிறாய்; என்னுடையதெல்லாம் உன்னுடையதே. 32இப்போது நாம் மகிழ்ந்துகொண்டாடி இன்புற வேண்டும். ஏனெனில் உன் தம்பி இவன் இறந்து போயிருந்தான்; மீண்டும் உயிர்பெற்றுள்ளான். காணாமற்போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான்' என்றார்.'

மான்பு மிகு வைத்தியர் லூக்காவின் நற்செய்தி வாசிக்க வாசிக்க, தித்திக்க வைக்கும். இந்த உவமைகளை உற்று நோக்குகின்ற போது லூக்கா முதல் ஏற்பாட்டு சிந்தனைகளை அதிகமாக கையாள்வதைப் போல உள்ளது. இங்கே வருகின்ற கடவுள் முதல் ஏற்பாட்டில் தன்னை பல வேளைகளில் வெளிப்படுத்திய இரக்கதத்தின் தந்தையாக வருகிறார். இந்த 15வது அதிகாரம், காணமல் போன ஆடு, திராக்மா, மகன் போன்ற அழகான உவமைகளைத் தாங்கி வருகிறது. இதனை புறக்கனிக்கப்பட்டவரின் நற்செய்தி என்றும், இரக்கத்தில் ஊதாரி தந்தையின் நற்செய்தி என்றும் வர்ணிக்கின்றனர். இன்றைய வாசகத்திலே வரும் உவமையில் மூன்று பாத்திரங்களை அவதானிக்கலாம். தந்தை, முதல் மகன், இரண்டாவது மகன். லூக்கா, ஒப்பிட்டு பின்னர் செய்தியை விவரிப்பதில் வல்லவர். இயேசு நிச்சயமாக இந்த உவமையை மக்களின் வாழ்வியலிருந்தே எடுத்திருப்பார். இஸ்ராயேல் சமுதாயம் தந்தை சமூதாயமாக இருந்தபடியால், இங்கே தந்தையும் மகன்களுமே பார்வைக்கு வருகின்றனர். இந்த உவமையில் தாயும் மகள்களும் மையப்படுத்தப்படவில்லை. இயேசு நமக்கு கடவுள் என்ற படியால், இந்த உவமை அவருடைய சொந்த அனுபவம் எனக் கொள்ளலாம்.

வவ. 1-3: இவை 15ம் அதிகாரத்திற்கு முன்னுரை. வரிதண்டுவோர் (οἱ τελῶναι), மற்றும் பாவிகள் (οἱ ἁμαρτωλοὶ), இயேசுவிடம் வர: பரிசேயரும் (οἱ Φαρισαῖοι), மறைநூல் வல்லுனர்களும் (οἱ γραμματεῖς) முணுமுணுக்கின்றனர். இவர்களை லூக்கா வழமைபோல ஒப்பிடுகிறார்.

வவ. 11-13: இந்த இரண்டு-மகன்கள் என்பது விவிலியத்தில் பல வேளைகளில் வருகிறது. காயின்-ஆபேல், இஸ்மாயில்-ஈசாக்கு. எசா-யாக்கோபு, மூத்த சகோதரர்கள்-யோசேப்பு: ஏன் கடவுள் இரண்டாவது மகன்களை தெரிவு செய்கிறார்? தெரிவு செய்பவர் எப்போதும் கடவுளே. தந்தையின் மரணத்திற்கு முன் மகன் சொத்தை கேட்பது இஸ்ராயேல் வழக்கமல்ல (காண்க சீராக் 33,22-21: இராபினிக்க தத்துவங்களும் தந்தையின் உரிமையினையே முதலில் பாதுகாக்கின்றன). அத்தோடு இ.ச சட்டப்படி மூத்த மகன் இரண்டு பங்குகள் பெற வேண்டும் (காண்க இ.ச 21,17). இங்கே அனைத்து சட்டங்களும் விலக்கப்படுகிறது. தந்தையின் சொத்துக்களை விற்பதும் அக்காலத்தில் ஏற்றுக்கொள்ளப்படும் நிகழ்வல்ல, இயேசு புதுமைகளை உள்வாங்குகிறார். தாறுமாறாக வாழ்தல், அசிங்கமான வாழ்வைக் குறிக்கும்

வவ. 14-16: எந்த நாடு என்று கூறப்பட வில்லை, தொலை நாடு என்பது அவர் தந்தையை விட்டு தொலை தூரம் போனார் என்பதைக் குறிக்கலாம். பஞ்சம், வறுமை, இளைய மகனுடைய ஆபத்தை உணர்த்துகிறது. தந்தையை விட்டு போய் இப்போது அந்நியரிடம் அடைக்கலம் தேடுகிறார். மகனாக இருந்தவர் இப்போது வேலையாளாக மாறுகிறார். பன்றிகளை இஸ்ராயேலர் வெறுக்கின்ற போது, முதலாளியான இவர் பன்றிகளை மேய்கிறார். (காண்க லேவி 11,7: இ.ச 14,8). இவருக்கு பன்றிகளின் உணவு கூட இல்லை என்பது இவரின் உச்சகட்ட இல்லாமையை காட்டுகிறது.

வவ. 17-19: இவரின் அறிவு தெளிவு விவரிக்கப்படுகறிது. 'அவர் தனக்குள்' வந்தார் என்று மூல பாடம் வாசிக்கிறது. பாவ பரிகாரம் செய்கிறார். பல செயற்பாடுகளை லூக்கா முன்வைக்கிறார். அ. தவறை உணர்தல். ஆ. புறப்பட்டு போதல், இ. பாவத்தை தந்தையிடம் அறிக்கையிடல். இங்கே அவர் தனக்குள்ளே பேசிக்கொள்கிறார். லூக்கா நற்செய்தியில் பலர் தங்களுக்குள் பேசிக்கொள்கின்றனர் (காண்க 12,17-18). எமது ஒப்புரவு திருவருட்சாதனத்திற்கு இதனை அடிப்படையாகக் கொள்ளலாம்.

வவ. 20-24: மகனின் வருகையும் தந்தையின் செயல் பாடுகளும் உடனுக்குடன் நடைபெறுகின்றன. தந்தையின் செயல்பாடுகளான: தொலைவில் காணல், பரிவு கொள்ளல், ஓடிப்போதல், கட்டித்தழுவுதல், முத்தமிடல், இவை இயேசுவின் இறை செய்தியை ஆழமாக வாசகர்களுக்கு உணர்த்துகின்றது. முதல் ஏற்பாட்டில் அன்பையும் இரக்கத்தையும் வெளிப்படுத்த இந்த செயற்பாடுகள் பாவிக்கப்பட்டன. ஈசா, யாக்கோபுக்கு, தாவீது அப்சலோமிற்கு இதனையே செய்தார்கள். மகன் பாவமன்னிப்பு செய்வதில் கருத்தாய் இருந்தார், அதுவும் இங்கே நோக்கப்பட வேண்டும். தந்தை அதனை கேட்பதில் ஈடுபாடு காட்டவில்லை, அவர் மகனையே பார்கிறார், பாவத்தை அல்ல. தந்தை பணியாளருக்கு பல கட்டளைகளை போடுகிறார். ஆடை, மோதிரம், மிதியடி இவை ஒருவரின் மாண்பினைக் குறிப்பவை. மகன் மாண்பினை மீண்டும் பொறுகிறார். கொழுத்த கன்றினை அக்கால மக்கள் விருந்துக்கு மட்டுமே செலவிட்டனர். மகன் வருகை விருந்தாகிறது. விருந்திற்கான காரணம்: இறந்திருந்தான்-உயிர் பெற்றான், காணாமல் போயிருந்தான்-கிடைத்துள்ளான். லூக்கா இங்கே அனைவரும் விருந்து கொண்டாடுவதை காட்டுகிறார்.

வவ. 25-28அ: இப்போது காட்சி மாறுகிறது. கதையின் அடுத்த முக்கிய பாத்திரத்தை உள் எடு;க்கிறார் லூக்காவின் இயேசு. மூத்த மகன் இங்கு இயேசுவின் போதனைகளை கேட்காதவர்களையே குறிக்கிறது, வயலிலிருந்து வருகிறார் என்பதன் மூலம் இவர் வீட்டை விட தொழிலையே அதிகம் காதலிக்கிறார் என்று சொல்லலாம். மூத்த மகனுடைய கோபத்திற்கு என்ன காரணம்? தம்பியின் வருகையா அல்லது அவர்மேல் உள்ள தந்தையின் பாசமா? லூக்கா, இளைய மகன் தன்னிலை உணர்ந்து தனக்குள் வந்தார் என்றும், இவர் தன்னிலை உணராமல் வெளியிலே நிற்கிறார் என்றும் காட்டுகிறார்.

வவ. 28ஆ-30: தந்தை சிறிய மகனை வரவேற்பது போல பெரிய மகனிடமும் அவரே வருகிறார், உள்ளே வரும் படி கெஞ்சிக்கேட்கிறார், என்கிறார் இயேசு. இளைய மகன் கூற வந்தததைப் போல இவரும் தனது வாதத்தை முன்வைக்கிறார். தம்பியைப் போல் அல்லாது, கட்டளை வாக்கியத்தில் தந்தையுடன் பேசுகிறார்.   இளைய மகனின் பாவ அறிக்கையை கேட்காத தந்தை இங்கே இவரின் நியாய வாதங்களைக் கேட்கிறார். அவரின் வாதம்: அடிமைபோல் வேலை செய்கிறேன், கட்டளைகளை மீறியதில்லை, ஓர் ஆட்டுக்குட்டியைக் கூட தந்ததில்லை, இவனுக்காக கொழுத்த கன்றை அடித்திருக்கிறீரே! இங்கே சுய நியாயமே மேல் நிற்கிறது.

வவ. 30-: தந்தையின் காரணங்கள் தரப்படுகின்றன: 'என்னுடன் இருக்கிறாய், என்னுடையது உன்னுடையதே'. உம்முடைய மகன் என்று சொன்ன மூத்தவருக்கு உன்னுடைய சகோதரன் என்று நினைவூட்டுகிறார் லூக்காவின் தந்தை. ஏற்கனவே வேலையாட்களுக்கு சொன்ன காரணத்தையே மூத்த மகனுக்கும் சொல்கிறார் (வ.24). இறந்து போயிருந்தான்-உயிர் பெற்றுள்ளான், காணாமற்போயிருந்தான்-கிடைத்துள்ளான். முதல் ஏற்பாட்டில் விருந்து மகிழ்வைக் குறிக்கும். இயேசுவும் பல வேளைகளில் விருந்துக்கு செல்வதை நற்செய்திகளில் பார்க்கலாம். லூக்கா, முணுமுணுத்த பரிசேயர் - மறைநூல் வல்லுனர்களை மூத்தவராகவும், பாவிகளை இளையவராகவும், இயேசுவை தந்தையாகவும் வர்ணிக்கிறார்.

ஆண்டவருக்கு தேவை கீழ்படிவும் மனந்திருந்தலுமே, பாவத்ததைப் போல சுய நியாயப்படுத்தலும் நிவர்த்தி செய்யப்பட வேண்டியவையே.

அன்பான ஆண்டவரே, கட்டளைகளைவிட உமது அன்பை வாழ கற்றுத்தாரும்!!! 
மி.ஜெகன்குமார் அமதி
உரோமை, புதன், 2 மார்ச், 2016

Thirty-third Sunday in Ordinary Time (C) ஆண்டின் பொதுக்காலம் முப்பத்தி மூன்றாம் வாரம் 13.11.2022

  Thirty-third Sunday in Ordinary Time (C) ஆண்டின் பொதுக்காலம் முப்பத்தி மூன்றாம் வாரம் 13.11.2022 Thirty-third Sunday in Ordinary T...