முதல் வாசகம்
யோசுவா 5,9-12:
9ஆண்டவர் யோசுவாவிடம், 'இன்று எகிப்தியரின் பழிச்சொல்லை உங்களிடமிருந்து நீக்கிவிட்டேன்' என்றார். ஆகவே அந்த இடம் இந்நாள்வரை 'கில்கால்' என்று அழைக்கப்படுகின்றது. 10இஸ்ரயேலர் கில்காலில் தங்கினர். மாதத்தின் பதினான்காம் நாள் மாலை எரிகோ சமவெளியில் பாஸ்கா கொண்டாடினர். 11பாஸ்காவின் மறுநாள் நிலத்தின் விளைச்சலையும் புளிப்பற்ற அப்பத்தையும் வறுத்த தானியத்தையும் உண்டனர். 12நிலத்தின் விளைச்சலை உண்ட மறுநாளிலிருந்து மன்னா நின்றது.இஸ்ராயேலருக்கு மன்னா மீண்டும் கிடைக்கவில்லை. கானான் நிலத்தின் விளைச்சலை அந்த ஆண்டு உண்டனர்.முதல் ஏற்பாட்டில் ஆறாவது இடத்தில் அமைந்துள்ள இந்த நூல் பாரம்பரியமாக யோசுவா, மேசேயுடைய உதவியாளரினால் எழுதப்பட்டது என அழைக்கப்படுகிறது. இந்த புத்தகம் எப்போது எழுதப்பட்டது என்பதிலும் பல வியாக்கியானங்கள் உள்ளன. அநேகமாக கி.மு 1050ல் எழுதப்பட்டது எனக் கொள்ளலாம். தற்கால ஆய்வாளர்கள் யோசுவா புத்தகத்திற்கு இணைச்சட்டம், நீதிபதிகள், 1-2சாமுவேல், 1-2 அரசர்கள் போன்றவற்றோடு இறையியலில் நெருக்கிய தொடர்பிருப்பதனை அவதானிக்கின்றனர். இதனை 'இணைச்சட்ட வரலாறு' என்று அழைப்பர். எது எவ்வாறெனினும், இறையியலில் மிகவும் அழகான புத்தகங்களில் இதுவும் ஒன்று. நாடு கடவுள் தரும் கொடை, தேசியத்தை நிறுவுவதில் ஒற்றுமை, இஸ்ராயேலின் ஒற்றுமை, உடன்படிக்கையில் நம்பகத்தன்மை, மற்றும் புனிதப்போர் போன்றவை யோசுவா நூலின் முக்கியமான சிந்தனைகள். பிரேதேசங்களையும், சாதிப்-பொய்யையும், சம்மந்தமில்லா மதப்பிரிவினைகளையும், காலங்கடந்த ஆணாதிக்க சிந்தனைகளையும் தேவையில்லாமல் உள்வாங்கி ஈழ தேசிய ஒற்றுமையை சிதைக்க நினைப்பவர்களுக்கு உண்மையில் இது அழகான எதிர்க்கருத்து. இன்றைய வாசக பகுதி வாக்களிக்ப்பட்ட நாட்டினுள் நுழைந்த பகுதியில் உள்ள ஆயத்த சடங்கு பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.
வ.9அ: எகிப்தின் பழிச்சொல் என்பது இரண்டு சிந்தனைகளை முன்வைக்கிறது. அ. விருத்தசேதனம் செய்யாத எகிப்தில் இருந்த நிலை. ஆ. எகிப்திலே அடிமைகளாக இருந்த நிலை, அதாவது கைவிடப்பட்ட நிலை. இவற்றை இப்போது கடவுள் நீக்குகிறார். நீக்கிவிட்டார் என்பதைவிட புரட்டிவிட்டார் என்றே எபிரேய மூல நூல் குறிப்பிடுகிறது.
வ.9ஆ: கில்கால் (גִּלְגָּל கில்கால்), சாக்கடலுக்கு, எரிக்கோவிற்கு வடகிழக்கில் அமைந்துள்ள நகர். 35தடவைகளாக முதல் ஏற்பாட்டில் வருவதனால் இதன் முக்கியத்துவத்தை அறியலாம். பெத்தோலுடன் சேர்த்து இஸ்ராயேலுக்கு முக்கியமான புனிதத் தளம். இங்கேதான் சவுலும் தாவிதும் பின்நாள்களில் அரசர்களாக திரு நிலைப்படுத்தப்பட்டார்கள். சவுலின் பணிவின்மையால் அவர் அரசபதவியை இழந்த நிகழ்வுகளும் இந்த இடத்துடன் தொடர்பு பட்டுள்ளது. இப்போது யோசுவா இங்கே செய்யும் உடன்படிக்கை பின்நாளில் பல அரசர்கள் செய்யும் உடன்படிக்கையுடன் தொடர்புபட்டு;ள்ளது. ஆக இந்நிகழ்வு பின்நாள் நிகழ்வுகளை ஞாபகப்படுத்துகின்றது. அத்தோடு இந்நிகழ்வு செங்கடலை கடந்ததையும் நினைவூட்ட அமைக்கப்பட்டுள்ளது என ஆய்வாளர்கள் பார்க்கின்றனர்.
வ.10: நிசான் மாதம் 14ம் நாள் (சித்திரை-வைகாசி எனக் கொள்ளலாம்.) பாஸ்கா (פָּסַח பாசஹ், கட) என்றால் கடத்தல் என்று பொருள். இந்த விழா இஸ்ராயேல் மக்களுடைய பழைய நாடோடி வாழ்வோடு தொடர்புபட்டது. (மேலும் அறிய காண்க வி.ப 12-13). ஏற்கனவே இஸ்ராயேல் மக்கள் இதனை எகிப்தில் கொண்டாடினார்கள் என வி.ப. நூல் சொல்கிறது. எரிக்கோவில் கொண்டாடினார்கள் என்றால், கடவுள் கொடுத்த நாட்டில் முதல் தடவையாக கொண்டாடுகிறார்கள் என எடுக்கலாம்.
வ.11: நாடுபிடிப்பவர்களாக உள்நுழைந்தவர்களுக்கு எங்கிருந்து நிலத்தின் விளைச்சலும் புளிப்பற்ற அப்பமும் வறுத்த தானியமும் வந்தன? நிலத்தின் விளைச்சல் என்னும் சொல்லிலே ஒரு சொல் விளையாட்டு உள்ளதை அவதானிக்கலாம். מֵעֲבוּר மெஅவுர் என்பது விளைச்சலைக் குறிக்கிறது, עָבַר அவர், என்பது கடத்தலைக் குறிக்கும். எனவே இவர்கள் நாட்டை கடந்து பிடித்ததைப்போல, விளைச்சலையும் பிடித்திருக்கலாம் என சிலர் கருதுகின்றனர்.
வ.12: (מָן மன்) மன்னா, கடவுள் இதனை இஸ்ராயேல் மக்களுக்கு நாற்பது ஆண்டுகளாக வழங்கினார். கொத்து மல்லி அல்லது உறைபனி போன்ற இந்த வெள்ளை உறைதிரவத்தை இஸ்ராயேல் மக்கள் கடவுளின் ஆச்சரியமாக கண்டனர். சில ஆய்வாளர்கள், சீனாய் பாலை நிலத்தில் சில மரங்கள் தருவதனை இது ஒத்திருக்கிறது என்கின்றனர். ஒருவகை மரப்பாசியும் மன்னாவுக்கு சொல்லப்படுகிறது. மன்னா என்பது வானகத்திலிருந்து வரும் உணவினை குறிக்கவும் பயன்படுகிறது. எப்படியாயினும், மன்னா கடவுளின் பராமரிப்பை குறிக்கிறது. யோவான் இயேசு ஆண்டவர்தான் உண்மையான மன்னா என்பார். இவ்வளவு காலமும் கடவுளின் மன்னாவை உண்ட மக்கள் இந்நாளில் இருந்து நிலத்iதின் விளைச்சலை உண்கின்றனர்.
பதிலுரைப்பாடல்
தி.பாடல் 34:
1ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும்.
தாவீது சவுலிடமிருந்து தப்ப காத்தின் அரசன் அகிஷிடம் சென்றார், ஆனால் அவன் முன்னர் தாவீதை களத்தில் சந்தித்திருந்தான், இதனால் அவரை நம்ப மறுக்கிறான், பின்னர் தாவீது தனது மனதைமாற்றி வேறிடம் சென்றபோது இப்பாடலை பாடினார் என்று இத்திருப்பாடலின் தலை வரி கூறுகிறது. (ஒப்பிடுக 21,10-14). சாமுவேல் புத்தகம் தாவீது தானாக சவுல்-அகிஷிடமிருந்து தப்பினார் என்று கூற, இத் திருப்பாடலில் தாவிது தன்னை ஆண்டவர் காப்பாற்றினார் என்று கூறுகிறார். இத்திருப்பாடல் அகரவரிசையில் வரும் பாடல்களில் ஒன்றாக காணலாம், ஆனால் அங்காங்கே சில மாறுதல்கள் உள்ளன.
வவ. 1-2: ஆசிரியர், எது நடந்தாலும் ஆண்டவரை எக்காலமும் போற்றுவேன் என்கிறார்.
வவ. 3-6: தன்னுடைய அனுபவத்ததை பறைசாற்றுகின்றார்: ஆண்டவர் மறுமொழி பகர்ந்தார், இந்த ஏழை கூவியழைத்தான், ஆண்டவர் செவிசாய்த்தார் இந்த வரிகள் தாவிதின் இறையனுபவத்ததை காட்டுகின்றன.
வவ. 7-10: இறையனுபவத்தில் இருந்து கற்றுக்கொண்ட பாடங்களை விவரிக்கின்றார். ஆண்டவரின் தூதர் காத்திடுவார், ஆண்டவரை சுவைத்துப்பாருங்கள், அவர் இனியவர், ஆண்டவருக்கு அஞ்சுவோருக்கு எக்குறையும் இராது, நம்மை சிங்கக் குட்டிகளைகளைப் போல ஆண்டவர் பாதுகாப்பார், நன்மை எதுவுமே குறையாது, போன்றவை, தாவிதின் கற்றுக்கொண்ட பாடங்கள்.
வவ. 11-14: நல் வாழ்வின் இரகசியம் சொல்லப்படுகிறது: ஆண்டவருக்கு அஞசுதல், வாழ்வில் நிறைவைக் காண- தீச்சொல்லில் இருந்து நா காக்கப்பட வேண்டும், வஞ்சக மொழியிலிருந்து வாய் விலக்கப்பட வேண்டும், தீமையை விலக்கி நன்மை செய்ய வேண்டும், போன்றவையாகும் அவை.
வவ. 15-18: துன்பங்களை எதிர்கொள்ளும் இரகசியம் சொல்லப்படுகிறது: ஆண்டவரின் கண்கள் நீதிமான்களை நோக்குகின்றன என்பதை உணர வேண்டும், ஆண்டவர் தீயவர்களின் நினைவையே உலகினின்று அற்றுப்போகச் செய்வார் என்பதை அறிய வேண்டும், நீதிமான்களின் வேண்டுதல்களை ஆண்டவர் கேட்கின்றார், உடைந்த உள்ளத்தோருக்கும், நைந்த நெஞ்சத்தாரையும் ஆண்டவர் கைவிடுவதில்லை என்பதை உணரவேண்டும்: இதுவே அந்த இரகசியம்.
வவ. 19-22: விடுதலையின் இரகசியம் சொல்லப்படுகிறது: நேர்மையாளர்க்கு தீங்குகள் வரும் ஆனால் அவை அவரை மேற்கொள்ளா, ஒரு எலும்பு கூட முறிபடாது (இயேசுவிற்கு இது நடந்தது), தீயோரை அவர்களின் தீவினையே சாகடிக்கும், நேர்மையாளரை வெறுப்போர் நிச்சயம் தன்டனை பெறுவர், ஆண்டவரிடம் அடைக்கலம் புகுவோர் என்றுமே கைவிடப்படார். இவைதான் அந்த இரகசிய சிந்தனைகள்.
இரண்டாம் வாசகம்
2கொரிந் 5,17-21:
17எனவே ஒருவர் கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்போது அவர் புதிதாகப் படைக்கப்பட்டவராய் இருக்கிறார். பழையன கழிந்து புதியன புகுந்தன அன்றோ! 18இவை யாவும் கடவுளின் செயலே. அவரே கிறிஸ்துவின் வாயிலாக நம்மைத் தம்மோடு ஒப்புரவாக்கினார்; ஒப்புரவாக்கும் திருப்பணியையும் நமக்குத் தந்துள்ளார். 19உலகினரின் குற்றங்களைப் பொருட்படுத்தாமல் கடவுள் கிறிஸ்துவின் வாயிலாக அவர்களைத் தம்மோடு ஒப்புரவாக்கினார். அந்த ஒப்புரவுச் செய்தியை எங்களிடம் ஒப்படைத்தார். 20எனவே நாங்கள் கிறிஸ்துவின் தூதுவர்களாய் இருக்கிறோம். கடவுளே எங்கள் வாயிலாக வேண்டுகோள் விடுக்கிறார். ஆகவே கடவுளோடு ஒப்புரவாகுங்கள் என்று கிறிஸ்துவின் சார்பில் நாங்கள் மன்றாடுகிறோம். 21நாம் கிறிஸ்து வழியாகத் தமக்கு ஏற்புடையவராகுமாறு கடவுள் பாவம் அறியாத அவரைப் பாவநிலை ஏற்கச் செய்தார்.கொரிந்தியருக்கான இரண்டாம் திருமுகம், அந்த திருச்சபையிலே முளைத்த சில சிக்கல்களை கையாள, பவுலடிகளார் இதனை எழுதினார் என்று சொல்லப்படுகிறது. உண்மையில் பவுல் ஐந்து மடல்களை இந்த திருச்சபைக்கு எழுதினார் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பொய்த் திருத்தூதர்களின் வருகையும் கொரிந்திய திருச்சபையின் முக்கிய பிரச்சனைகளில் ஒன்றாக இருந்தது. இந்த கடிதத்தின் ஒன்று தொடக்கம் ஏழு வரையான அதிகாரங்கள் இப்படியான பிரச்சனைகளுக்கு எப்படி தீர்வு காண்பது என்பதனை விளக்கி, மக்களை இயேசுவில் மையப்படுத்த கேட்கிறது. இன்றைய வாசகம் 'ஒப்புரவாக்கும் பணி' என்ற எண்ணக்கருவை தாங்கி வருகிறது.
வவ. 17: புதிதாய் படைக்கப்படுதல் மற்றும் பழையன கழிதல் போன்றவற்றை தனது சொந்த அனுபவத்தில் இருந்து எடுக்கிறார் இயேசு. அதாவது இயேசுவை அறிதலும் அவரை ஏற்றுக்கொள்ளலுமே இந்த புதுமைக்கான காரணம் என்பது அவர் வாதம். பவுல் ஆண்டவருடைய வருகை- அவருடைய பாஸ்கா மறைபொருள் போன்றவை காரணமாக ஏற்கனவே முழு உலகும் புதுப்பிக்கப்பட்டுவிட்டது என்கிறார்.
வவ. 18: இங்கே முக்கியமான சில சிந்தனைகளை முன்வைக்கிறார். அ. இது புதுப்பித்தல் கடவுளின் செயல்: ஆ. கடவுள் கிறிஸ்து வாயிலாக நம்மை தன்னோடு ஒப்புரவாக்கினார்: இ. இப்போது அந்த ஒப்புரவுப் பணி நமக்கும் தரப்பட்டுள்ளது. ஒப்புரவு என்பது கிரேக்கத்தில் ஒரு வணிகச் சொல் καταλλαγή கடால்லாகெ, இது பண்டமாற்றைக் குறிக்கும். இதனை பவுல் கிறிஸ்துவின் மரணம் எமது பாவத்திற்காக பரிகாரம் செய்துள்ளது என்கிறார். இந்த நற்செய்தியை அதாவது இந்த ஒப்புரவு செய்தியை பெற்றவர்கள் அதனை மற்றவரோடு பகிரவேண்டும் என்கிறார்.
வவ. 19. கடவுள் மனித பாவங்களை பாராமல், இந்த ஒப்புரவுச் செய்தியை நம்மிடம் முதலில் ஒப்படைத்தார் என்கிறார். யார் இந்த 'நாம்' என்பது விளங்கவில்லை, திருத்தூதர்களாக இருக்கலாம் அல்லது அனைத்து கிறிஸ்தவர்களாகவும் இருக்கலாம்.
வவ. 20: இங்கே செய்தி தெளிவாக விளங்குகிறது. பவுல் திருத்தாதர்களை, தூதர்கள் என்கிறார். இதற்கு அரசஅதிகாரி என்ற சொல் பாவிக்கப்பட்டு;ள்ளது இது ஒரு முதல் குடிமகனையோ அல்லது முதிர்ச்சி உள்ளவரையோ குறிக்கும் (πρεσβεία பிரஸ்பெய்யா).
வவ. 21: ஏற்புடைமையாகுதல், (δικαιοσύνη திகையோசுனே) பவுலுடைய இறையியலில் மிகவும் முக்கியமான கரு. முதல் ஏற்பாட்டு நீதிமான்கள் என்பவர்களும் இந்த வாழ்வையுடையவர்களே. ஏற்புடைமையாகுதல் கடவுள் நமக்கு இயேசுவால் தரும் கொடை மட்டுமே அதனை யாரும் வாங்க முடியாது என்பதும் பவுலுடைய அசைக்க முடியாத நம்பிக்கை. கடவுள் கிறிஸ்துவை பாவம் நிலை ஏற்கச்செய்தார் என்பதைவிட, பாவத்திற்கு பரிகாரமாக்கினார் என்றே கொள்ள வேண்டும்.
நற்செய்தி
லூக் 15,1-3.11-32:
1வரிதண்டுவோர், பாவிகள் யாவரும் இயேசு சொல்வதைக் கேட்க அவரிடம் நெருங்கிவந்தனர். 2பரிசேயரும், மறைநூல் அறிஞரும், 'இவர் பாவிகளை வரவேற்று அவர்களோடு உணவருந்துகிறாரே' என்று முணுமுணுத்தனர். 3அப்போது அவர் அவர்களுக்கு இந்த உவமையைச் சொன்னார்: 11மேலும் இயேசு கூறியது: 'ஒருவருக்கு இரண்டு புதல்வர்கள் இருந்தார்கள். 12அவர்களுள் இளையவர் தந்தையை நோக்கி, 'அப்பா, சொத்தில் எனக்கு உரிய பங்கைத் தாரும்' என்றார். அவர் சொத்தை அவர்களுக்குப் பகிர்ந்து அளித்தார். 13சில நாள்களுக்குள் இளைய மகன் எல்லாவற்றையும் திரட்டிக்கொண்டு, தொலை நாட்டிற்கு நெடும் பயணம் மேற்கொண்டார்; அங்குத் தாறுமாறாக வாழ்ந்து தம் சொத்தையும் பாழாக்கினார். 14அனைத்தையும் அவர் செலவழித்தார். பின்பு அந்த நாடு முழுவதும் கொடிய பஞ்சம் ஏற்பட்டது. அப்பொழுது அவர் வறுமையில் வாடினார்; 15எனவே அந்நாட்டுக் குடிமக்களுள் ஒருவரிடம் அண்டிப் பிழைக்கச் சென்றார். அவர் அவரைப் பன்றி மேய்க்கத் தம் வயல்களுக்கு அனுப்பினார். 16அவர் பன்றிகள் தின்னும் நெற்றுகளால் தம் வயிற்றை நிரப்ப விரும்பினார். ஆனால் அதைக்கூட அவருக்குக் கொடுப்பார் இல்லை. 17அவர் அறிவு தெளிந்தவராய், 'என் தந்தையின் கூலியாள்களுக்குத் தேவைக்கு மிகுதியான உணவு இருக்க, நான் இங்குப் பசியால் சாகிறேனே! 18நான் புறப்பட்டு என் தந்தையிடம் போய், 'அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; 19இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்; உம்முடைய கூலியாள்களுள் ஒருவனாக என்னை வைத்துக் கொள்ளும் என்பேன்' என்று சொல்லிக்கொண்டார். 20உடனே அவர் புறப்பட்டுத் தம் தந்தையிடம் வந்தார். தொலையில் வந்துகொண்டிருந்தபோதே அவர் தந்தை அவரைக் கண்டு, பரிவு கொண்டு, ஓடிப்போய் அவரைக் கட்டித் தழுவி முத்தமிட்டார். 21மகனோ அவரிடம், 'அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்' என்றார். 22தந்தை தம் பணியாளரை நோக்கி, 'முதல்தரமான ஆடையைக் கொண்டுவந்து இவனுக்கு உடுத்துங்கள்; இவனுடைய கைக்கு மோதிரமும், காலுக்கு மிதியடியும் அணிவியுங்கள்; 23கொழுத்த கன்றைக் கொண்டு வந்து அடியுங்கள்; நாம் மகிழ்ந்து விருந்து கொண்டாடுவோம். 24ஏனெனில் என் மகன் இவன் இறந்துபோயிருந்தான்; மீண்டும் உயிர் பெற்று வந்துள்ளான். காணாமற்போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான்' என்றார். அவர்கள் மகிழ்ந்து விருந்து கொண்டாடத் தொடங்கினார்கள். 25'அப்போது மூத்த மகன் வயலில் இருந்தார். அவர் திரும்பி வீட்டை நெருங்கி வந்துகொண்டிருந்தபோது, ஆடல் பாடல்களைக் கேட்டு, 26ஊழியர்களுள் ஒருவரை வரவழைத்து, 'இதெல்லாம் என்ன?' என்று வினவினார். 27அதற்கு ஊழியர் அவரிடம், 'உம் தம்பி வந்திருக்கிறார். அவர் தம்மிடம் நலமாகத் திரும்பி வந்திருப்பதால் உம் தந்தை கொழுத்த கன்றை அடித்திருக்கிறார்' என்றார். 28அவர் சினமுற்று உள்ளே போக விருப்பம் இல்லாதிருந்தார். உடனே அவருடைய தந்தை வெளியே வந்து, அவரை உள்ளே வருமாறு கெஞ்சிக் கேட்டார். 29அதற்கு அவர் தந்தையிடம், 'பாரும், இத்தனை ஆண்டுகளாக நான் அடிமைபோன்று உமக்கு வேலை செய்துவருகிறேன். உம் கட்டளைகளை ஒருபோதும் மீறியதில்லை. ஆயினும், என் நண்பரோடு நான் மகிழ்ந்துகொண்டாட ஓர் ஆட்டுக்குட்டியைக்கூட என்றுமே நீர் தந்ததில்லை. 30ஆனால் விலைமகளிரோடு சேர்ந்து உம் சொத்துகளையெல்லாம் அழித்துவிட்ட இந்த உம் மகன் திரும்பி வந்தவுடனே, இவனுக்காகக் கொழுத்த கன்றை அடித்திருக்கிறீரே!' என்றார். 31அதற்குத் தந்தை, 'மகனே, நீ எப்போதும் என்னுடன் இருக்கிறாய்; என்னுடையதெல்லாம் உன்னுடையதே. 32இப்போது நாம் மகிழ்ந்துகொண்டாடி இன்புற வேண்டும். ஏனெனில் உன் தம்பி இவன் இறந்து போயிருந்தான்; மீண்டும் உயிர்பெற்றுள்ளான். காணாமற்போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான்' என்றார்.'மான்பு மிகு வைத்தியர் லூக்காவின் நற்செய்தி வாசிக்க வாசிக்க, தித்திக்க வைக்கும். இந்த உவமைகளை உற்று நோக்குகின்ற போது லூக்கா முதல் ஏற்பாட்டு சிந்தனைகளை அதிகமாக கையாள்வதைப் போல உள்ளது. இங்கே வருகின்ற கடவுள் முதல் ஏற்பாட்டில் தன்னை பல வேளைகளில் வெளிப்படுத்திய இரக்கதத்தின் தந்தையாக வருகிறார். இந்த 15வது அதிகாரம், காணமல் போன ஆடு, திராக்மா, மகன் போன்ற அழகான உவமைகளைத் தாங்கி வருகிறது. இதனை புறக்கனிக்கப்பட்டவரின் நற்செய்தி என்றும், இரக்கத்தில் ஊதாரி தந்தையின் நற்செய்தி என்றும் வர்ணிக்கின்றனர். இன்றைய வாசகத்திலே வரும் உவமையில் மூன்று பாத்திரங்களை அவதானிக்கலாம். தந்தை, முதல் மகன், இரண்டாவது மகன். லூக்கா, ஒப்பிட்டு பின்னர் செய்தியை விவரிப்பதில் வல்லவர். இயேசு நிச்சயமாக இந்த உவமையை மக்களின் வாழ்வியலிருந்தே எடுத்திருப்பார். இஸ்ராயேல் சமுதாயம் தந்தை சமூதாயமாக இருந்தபடியால், இங்கே தந்தையும் மகன்களுமே பார்வைக்கு வருகின்றனர். இந்த உவமையில் தாயும் மகள்களும் மையப்படுத்தப்படவில்லை. இயேசு நமக்கு கடவுள் என்ற படியால், இந்த உவமை அவருடைய சொந்த அனுபவம் எனக் கொள்ளலாம்.
வவ. 1-3: இவை 15ம் அதிகாரத்திற்கு முன்னுரை. வரிதண்டுவோர் (οἱ τελῶναι), மற்றும் பாவிகள் (οἱ ἁμαρτωλοὶ), இயேசுவிடம் வர: பரிசேயரும் (οἱ Φαρισαῖοι), மறைநூல் வல்லுனர்களும் (οἱ γραμματεῖς) முணுமுணுக்கின்றனர். இவர்களை லூக்கா வழமைபோல ஒப்பிடுகிறார்.
வவ. 11-13: இந்த இரண்டு-மகன்கள் என்பது விவிலியத்தில் பல வேளைகளில் வருகிறது. காயின்-ஆபேல், இஸ்மாயில்-ஈசாக்கு. எசா-யாக்கோபு, மூத்த சகோதரர்கள்-யோசேப்பு: ஏன் கடவுள் இரண்டாவது மகன்களை தெரிவு செய்கிறார்? தெரிவு செய்பவர் எப்போதும் கடவுளே. தந்தையின் மரணத்திற்கு முன் மகன் சொத்தை கேட்பது இஸ்ராயேல் வழக்கமல்ல (காண்க சீராக் 33,22-21: இராபினிக்க தத்துவங்களும் தந்தையின் உரிமையினையே முதலில் பாதுகாக்கின்றன). அத்தோடு இ.ச சட்டப்படி மூத்த மகன் இரண்டு பங்குகள் பெற வேண்டும் (காண்க இ.ச 21,17). இங்கே அனைத்து சட்டங்களும் விலக்கப்படுகிறது. தந்தையின் சொத்துக்களை விற்பதும் அக்காலத்தில் ஏற்றுக்கொள்ளப்படும் நிகழ்வல்ல, இயேசு புதுமைகளை உள்வாங்குகிறார். தாறுமாறாக வாழ்தல், அசிங்கமான வாழ்வைக் குறிக்கும்
வவ. 14-16: எந்த நாடு என்று கூறப்பட வில்லை, தொலை நாடு என்பது அவர் தந்தையை விட்டு தொலை தூரம் போனார் என்பதைக் குறிக்கலாம். பஞ்சம், வறுமை, இளைய மகனுடைய ஆபத்தை உணர்த்துகிறது. தந்தையை விட்டு போய் இப்போது அந்நியரிடம் அடைக்கலம் தேடுகிறார். மகனாக இருந்தவர் இப்போது வேலையாளாக மாறுகிறார். பன்றிகளை இஸ்ராயேலர் வெறுக்கின்ற போது, முதலாளியான இவர் பன்றிகளை மேய்கிறார். (காண்க லேவி 11,7: இ.ச 14,8). இவருக்கு பன்றிகளின் உணவு கூட இல்லை என்பது இவரின் உச்சகட்ட இல்லாமையை காட்டுகிறது.
வவ. 17-19: இவரின் அறிவு தெளிவு விவரிக்கப்படுகறிது. 'அவர் தனக்குள்' வந்தார் என்று மூல பாடம் வாசிக்கிறது. பாவ பரிகாரம் செய்கிறார். பல செயற்பாடுகளை லூக்கா முன்வைக்கிறார். அ. தவறை உணர்தல். ஆ. புறப்பட்டு போதல், இ. பாவத்தை தந்தையிடம் அறிக்கையிடல். இங்கே அவர் தனக்குள்ளே பேசிக்கொள்கிறார். லூக்கா நற்செய்தியில் பலர் தங்களுக்குள் பேசிக்கொள்கின்றனர் (காண்க 12,17-18). எமது ஒப்புரவு திருவருட்சாதனத்திற்கு இதனை அடிப்படையாகக் கொள்ளலாம்.
வவ. 20-24: மகனின் வருகையும் தந்தையின் செயல் பாடுகளும் உடனுக்குடன் நடைபெறுகின்றன. தந்தையின் செயல்பாடுகளான: தொலைவில் காணல், பரிவு கொள்ளல், ஓடிப்போதல், கட்டித்தழுவுதல், முத்தமிடல், இவை இயேசுவின் இறை செய்தியை ஆழமாக வாசகர்களுக்கு உணர்த்துகின்றது. முதல் ஏற்பாட்டில் அன்பையும் இரக்கத்தையும் வெளிப்படுத்த இந்த செயற்பாடுகள் பாவிக்கப்பட்டன. ஈசா, யாக்கோபுக்கு, தாவீது அப்சலோமிற்கு இதனையே செய்தார்கள். மகன் பாவமன்னிப்பு செய்வதில் கருத்தாய் இருந்தார், அதுவும் இங்கே நோக்கப்பட வேண்டும். தந்தை அதனை கேட்பதில் ஈடுபாடு காட்டவில்லை, அவர் மகனையே பார்கிறார், பாவத்தை அல்ல. தந்தை பணியாளருக்கு பல கட்டளைகளை போடுகிறார். ஆடை, மோதிரம், மிதியடி இவை ஒருவரின் மாண்பினைக் குறிப்பவை. மகன் மாண்பினை மீண்டும் பொறுகிறார். கொழுத்த கன்றினை அக்கால மக்கள் விருந்துக்கு மட்டுமே செலவிட்டனர். மகன் வருகை விருந்தாகிறது. விருந்திற்கான காரணம்: இறந்திருந்தான்-உயிர் பெற்றான், காணாமல் போயிருந்தான்-கிடைத்துள்ளான். லூக்கா இங்கே அனைவரும் விருந்து கொண்டாடுவதை காட்டுகிறார்.
வவ. 25-28அ: இப்போது காட்சி மாறுகிறது. கதையின் அடுத்த முக்கிய பாத்திரத்தை உள் எடு;க்கிறார் லூக்காவின் இயேசு. மூத்த மகன் இங்கு இயேசுவின் போதனைகளை கேட்காதவர்களையே குறிக்கிறது, வயலிலிருந்து வருகிறார் என்பதன் மூலம் இவர் வீட்டை விட தொழிலையே அதிகம் காதலிக்கிறார் என்று சொல்லலாம். மூத்த மகனுடைய கோபத்திற்கு என்ன காரணம்? தம்பியின் வருகையா அல்லது அவர்மேல் உள்ள தந்தையின் பாசமா? லூக்கா, இளைய மகன் தன்னிலை உணர்ந்து தனக்குள் வந்தார் என்றும், இவர் தன்னிலை உணராமல் வெளியிலே நிற்கிறார் என்றும் காட்டுகிறார்.
வவ. 28ஆ-30: தந்தை சிறிய மகனை வரவேற்பது போல பெரிய மகனிடமும் அவரே வருகிறார், உள்ளே வரும் படி கெஞ்சிக்கேட்கிறார், என்கிறார் இயேசு. இளைய மகன் கூற வந்தததைப் போல இவரும் தனது வாதத்தை முன்வைக்கிறார். தம்பியைப் போல் அல்லாது, கட்டளை வாக்கியத்தில் தந்தையுடன் பேசுகிறார். இளைய மகனின் பாவ அறிக்கையை கேட்காத தந்தை இங்கே இவரின் நியாய வாதங்களைக் கேட்கிறார். அவரின் வாதம்: அடிமைபோல் வேலை செய்கிறேன், கட்டளைகளை மீறியதில்லை, ஓர் ஆட்டுக்குட்டியைக் கூட தந்ததில்லை, இவனுக்காக கொழுத்த கன்றை அடித்திருக்கிறீரே! இங்கே சுய நியாயமே மேல் நிற்கிறது.
வவ. 30-: தந்தையின் காரணங்கள் தரப்படுகின்றன: 'என்னுடன் இருக்கிறாய், என்னுடையது உன்னுடையதே'. உம்முடைய மகன் என்று சொன்ன மூத்தவருக்கு உன்னுடைய சகோதரன் என்று நினைவூட்டுகிறார் லூக்காவின் தந்தை. ஏற்கனவே வேலையாட்களுக்கு சொன்ன காரணத்தையே மூத்த மகனுக்கும் சொல்கிறார் (வ.24). இறந்து போயிருந்தான்-உயிர் பெற்றுள்ளான், காணாமற்போயிருந்தான்-கிடைத்துள்ளான். முதல் ஏற்பாட்டில் விருந்து மகிழ்வைக் குறிக்கும். இயேசுவும் பல வேளைகளில் விருந்துக்கு செல்வதை நற்செய்திகளில் பார்க்கலாம். லூக்கா, முணுமுணுத்த பரிசேயர் - மறைநூல் வல்லுனர்களை மூத்தவராகவும், பாவிகளை இளையவராகவும், இயேசுவை தந்தையாகவும் வர்ணிக்கிறார்.
ஆண்டவருக்கு தேவை கீழ்படிவும் மனந்திருந்தலுமே, பாவத்ததைப் போல சுய நியாயப்படுத்தலும் நிவர்த்தி செய்யப்பட வேண்டியவையே.
அன்பான ஆண்டவரே, கட்டளைகளைவிட உமது அன்பை வாழ கற்றுத்தாரும்!!!
மி.ஜெகன்குமார் அமதிஉரோமை, புதன், 2 மார்ச், 2016
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக