ஆண்டின் பொதுக்காலம் முப்பத்திநான்காம் வாரம்
கிறிஸ்து அரசர் பெருவிழா:
Our Lord Jesus Christ, King of the Universe
24.11.2024
இயேசு ஆண்டவர் அரசரா? ஆண்டவர் எப்படி அரசராக முடியும்?
எபிரேய மொழி அரசனை (מֶלֶךְ ) மெலக் எனவும், கிரேக்க மொழி (βασιλεύς) பசிலெயுஸ் எனவும் அழைக்கின்றன. அரசன், அரசு, அரச குலம் என்பவை முழுக்க முழுக்க மனிதர்கள் உருவாக்கிய ஒருபக்கச் சார்பானதும், ஆபத்தானதுமான கட்டமைப்புக்களே ஆகும். இதற்கு இந்த உலகின் மனித வரலாறே நல்ல சான்று. இந்த வேளையில் சாமுவேலுக்கு கடவுள் சொன்னது ஞாபகத்துக்கு வருகின்றது. காண்க ✳︎(!1சாமுவேல் 8,7-18). இந்த உலகம் பல அரசர்களை உருவாக்கியிருக்கிறது. பெரிய அரசர்கள் என கொண்டாடுகின்ற யாவரும் மனிதர்களே. அவர்களுள் பலர் தங்களுடைய சிந்தனைகளுக்காகவும், நம்பிக்கைகளுக்காகவும், மதத்திற்காகவும், பெயருக்காகவும், ஆசைகளுக்காகவும்; இவ்வுலகையே கொள்ளையிட்ட வெறும் கொள்ளைகாரர்களே, சக மனிதர்க்களையும் விலங்குகளையும் கொலைசெய்த இரக்கமில்லா கொலைகார்களே, உலகை அழித்த அழிவுக்காரர்களே. கடவுள் மனிதர்களை தன் சாயலாக மட்டுமே படைத்தார், இவ்வாறிருக்க மனிதர்களே தங்களை தாங்களே ஆணாதிக்கவாதிகளாகவும், அரசர்களாகவும், சாதிக்காரர்களாகவும், மதக்காரர்களாகவும் மாற்றிக்கொண்டனர். இதற்கு கடவுள் பொறுப்பாளியல்ல, அவரை பொறுப்பாளியாக்கவும் வேண்டாம்.
இன்று நாம் கொண்டாடும் கிறிஸ்து அரசர் பெருவிழாவிற்கு ஒரு வரலாறு உண்டு. கிறிஸ்து அரசர் என்கின்ற கருப்பொருள், இறைவனின் அரசு என்ற இறையியல் சிந்தனையை உள்வாங்கியுள்ளது (ἡ βασιλεία τοῦ θεοῦ. ஹே பசிலெய்யா து தியூஒ - இறைவனின் அரசு). யூதர்கள் இயேசுவை தம் அரசராக ஏற்க மறுத்தனர் இருப்பினும், இந்த வாதத்தினுள் அவர் உண்மையில் அனைத்து உலகின் அரசர் என்ற மறைமுக வாதம் மறைந்துள்ளது. ஐரோப்பாவிலே அதிகமான ஆலயங்கள், பாடசாலைகள், வைத்தியசாலைகள், துறவு மடங்கள், மற்றும் பொது இடங்கள் போன்றவை இந்த பெயரால் அழைக்கப்படுகின்றன. உண்மையிற் சொல்லின், கிறிஸ்து அரசர் என்ற பதம் பல விதத்தில் ஒர் ஐரோப்பிய சொல் என்றே பார்க்கப்பட வேண்டும்.
கிரேக்க மொழியில் கிறிஸ்து (Χριστός கிறிஸ்டொஸ்) என்றால் அருள்பொழிவு செய்யப்பட்டவர் என்று பொருள். இதனை எபிரேய மொழி (מַשִׁיחַ ) மஷியாஹ் என்றழைக்கிறது. இதற்கு அரசர் என்ற பொருளும் கொடுக்கப்படலாம், ஆனால் இதன் உண்மையான அர்த்தம் அரசர் என்பதல்ல. புதிய ஏற்பாட்டில் இயேசு பல இடங்களில் கிறிஸ்து-மெசியா என்று அழைக்கப்பட்டாலும், கிறிஸ்து அரசர் என்ற பெயரில் அழைக்கப்படவில்லை. புதிய ஏற்பாடு இயேசுவை கிறிஸ்து அல்லது அருட்பொழிவு பெற்றவர் என்று 550 தடவைகளுக்குமேல் அழைக்கின்றபோதெல்லாம் அதன் அர்த்தம் சாதாரண அரசர் என்பதில்லை, அதுக்கும் மேலே...
1925ம் ஆண்டில் முதன்முறையாக 'கிறிஸ்து அரசர்' என்ற பதத்தை முதலாம் உலகப் போரின் பிற் காலத்தில், குவாஸ் பிறிமாஸ் Quas primas என்ற சுற்றுமடலில் திருத்தந்தை பதினோறாம் பத்திநாதர் PIUS XI பயன்படுத்தினார் (QUAS PRIMAS ENCYCLICAL OF POPE PIUS XI ON THE FEAST OF CHRIST THE KING TO OUR VENERABLE BRETHREN THE PATRIARCHS, PRIMATES, ARCHBISHOPS, BISHOPS, AND OTHER ORDINARIES IN PEACE AND COMMUNION WITH THE APOSTOLIC SEE.).
அதிலே ஐரோப்பிய தலைவர்கள் தங்கள் பிரிவினைகளையும், போரியல் சிந்தனைகளையும், அதிகார மற்றும் அழிவுக் கலாச்சாரத்தையும் விடுத்து, கிறிஸ்துவின் அரசில், அனைவரையும் மதிக்கும் தலைவர்களாக மாறவேண்டும் என்று அழைப்பு விடுத்தார். கத்தோலிக்க திருச்சபையில் இந்த விழா வருடத்தின் கடைசியில் வரும் பொதுக்கால ஞாயிறு தினத்தில் கொண்டாடப்படுகிறது. பழமைவாத கத்தோலிக்க திருச்சபையின் சில பிரிவுகள் இந்த திருநாளை இன்னொரு நாள் கொண்டாடுகின்றன. இந்த விழாவின் மூலம் அனைவரும் கடவுளின் பிள்ளைகள் என்ற சிந்தனை முன்வைக்கப்படுகிறது. ஆனால் கிறிஸ்து இயேசு நம் ஆண்டவர், அவரை அரசர் என்ற மனித, வரையறைக்குட்பட்ட அரசியல் பதத்திற்குள் அடக்க அல்லது, இறையியல் பிறழ்வுகளை உருவாக்க முயல்வது அவ்வளவு ஆரோக்கியமானதல்ல.
முதல் ஏற்பாட்டுக் காலத்தில் அரசன் என்ற பதம் ஓரு முக்கியமான பதமாக பார்க்கப்பட்டது. இஸ்ராயேலரை சுற்றியிருந்த கானானியர், மொசப்தேமியர் மற்றும் எகிப்தியர் பலர் தங்களுக்கென்று அரசர்களை கொண்டிருந்தனர். அவர்களின் அரசர்கள் பலர் கடவுளின் மகன்களாக கருதப்பட்டனர், அல்லது கடவுள்களாகவும் கருதப்பட்டனர். இந்த சிந்தனை படிப்படியாக இஸ்ராயேலரிடையே தாக்கத்தை ஏற்படுத்தி ஒரு கட்டத்தில் அவர்களும் தங்களுக்கென்று ஓர் அரசனை கேட்கும் அளவிற்கு வளர்ந்தது. பல இறைவாக்கினர்கள் கடவுள்தான் இஸ்ராயேலின் ஒரே அரசர் என்று இறையியலை பலமாக விவாதிப்பதை முதல் ஏற்பாடு அழகாக் காட்டுகிறது.
Fr. M. Jegankumar Coonghe OMI,
Shrine of Our Lady of Good Voyage, Chaddy,
Velanai, Jaffna, Sri Lanka.
21.11.2024
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக