வெள்ளி, 14 ஜூன், 2024

ஆண்டின் பொதுக்காலம் பதினொராம் ஞாயிறு (ஆ) 16.06.2024: 11th Sunday in OT 2024 B


ஆண்டின் பொதுக்காலம் பதினொராம் ஞாயிறு ()

16.06.2024


M. Jegankumar Coonghe OMI,

Shrine of Our Lady of Good Voyage,

Chaddy, Velanai, 

Jaffna. 

Saturday, 15 June 2024

முதல் வாசகம்: எசேக்கியேல் 17,22-24

பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 92

இண்டாம் வாசகம்: 2கொரிந்தியர் 5,6-10

நற்செய்தி: மாற்கு 4,26-34


எசேக்கியேல் 17,22-24

கடவுளின் நம்பிக்கை தரும் வாக்குறுதி

22தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: உயர்ந்த கேதுரு மரத்தின் நுனிக்கிளை ஒன்றை எடுத்து நானே நடுவேன். இளங்கொழுந்து ஒன்றை அதன் நுனிக் கொப்புகளிலிருந்து கொய்து, ஓங்கி உயர்ந்ததொரு மலை மேல் நான் நடுவேன். 23இஸ்ரயேலின் மலையுச்சியில் நான் அதை நடுவேன். அது கிளைத்து, கனி தந்து, சிறந்த கேதுரு மரமாகத் திகழும். அனைத்து வகைப் பறவைகளும் அதனைத் தம் உறைவிடமாகக் கொள்ளும். அதன் கிளைகளின் நிழல்களில் அவை வந்து தங்கும். 24ஆண்டவராகிய நான் ஓங்கிய மரத்தைத் தாழ்த்தி, தாழ்ந்த மரத்தை ஓங்கச் செய்துள்ளேன் என்றும், பசுமையான மரத்தை உலரச் செய்து, உலர்ந்த மரத்தைத் தழைக்கச் செய்துள்ளேன் என்றும், அப்போது வயல்வெளி மரங்களெல்லாம் அறிந்து கொள்ளும். ஆண்டவராகிய நானே உரைத்துள்ளேன்; நான் செய்து காட்டுவேன்.


  எசேக்கியேல் புத்தகம் பபிலோனிய இடப்பெயர்வு வாழ்வின் உணர்வுகளைக் காட்டுகிறது என்பது வரலாற்று ஆய்வாளர்களினதும், பாரம்பரிய ஆசிரியர்களினதும் நம்பிக்கை. எசேக்கியேல் இறைவாக்கினர், பபிலோனிய இராணுவத்தால் அடிமைகளாக கொண்டு செல்லப்பட்டவர்கள் கூட்டத்தில் சிறுவனாக சென்றிருக்க வேண்டும். இதனை இறைவாக்கு நூலாக கிறிஸ்தவ-யூத பாரம்பரியம் ஏற்றுக்கொண்டாலும், இதில் திருவெளிப்பாட்டு இலக்கிய வகை பகுதிகள் இருப்பதை மறுக்க முடியாது. எசேக்கியேல் இறைவாக்கினர் காட்சிகள் உருவகங்கள் வாயிலாக அழகாக இறைவாக்குரைப்பார்

  எசேக்கியேல் புத்தகத்தை திறனாய்வு செய்வதில் யூத இராபிக்களும் அக்காலத்திலே பல சவால்களை எதிர்நோக்கியிருந்திருக்கிறார்கள். இந்த புத்தகம் பல சுயாதீனமாக உரைகள் மற்றும் இறைவாக்குகளின் தொகுப்பு என்பதையும் இன்றைய ஆய்வாளர்கள் முன்னிறுத்துகிறார்கள். இந்த இறைவாக்கு தொகுப்புக்கள் இறையியல் சார்பாகவே ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன, வரலாற்று காலக்கோட்டில் அவை ஒழுங்கமைக்கப்பட்டனவா என்பது முக்கியமான கேள்வி. பகுதி பகுதியாக எசேக்கியேல் புத்தகத்தின் இறைவாக்குகளை வாசிப்பது தவறாக இருக்காது. எசேக்கியேல் அதிகமான கவிதை நயங்களையும், அடையாள வார்த்தைகளையும் பாவிக்கிறார் என்பதையும் வாசகர்கள் கருத்தில எடுக்க வேண்டும். எசேக்கியேலுக்கென்று தனித்துவமான மொழிநடையும், வரிநடையும் இருக்கிறது. எசேக்கியேல் புத்தகம் எருசலேம் நகரின் நிலையையும், எருசலேம் வாசிகளைப் பற்றிய அயலவர்களின் பார்வையையும் பதிவு செய்கிறது. இது அக்கால சிந்தனையை மட்டுமே கருத்தில் கொண்டுள்ளது என்பதையும் அவதானிக்க வேண்டும். எசேக்கியேல் காலத்தைப் போல அல்லாவிடினும், அரசியல் அநியாயங்கள், அரசியல் ஊழல்கள், நம்பிக்கை பிறழ்வுகள், நம்பிக்கைவாழ்வு இல்லாத திருத்தளங்கள், சமூக கட்டமைப்பின் சிதைவுகள் போன்றவை, இன்றைய சமுதாயத்தின் சிலைவாழ்வுகள் என எடுக்கலாம். இந்த தீமைகளுக்கு எசேக்கியேல் இறைவாக்கினர் நிச்சயமாக இடித்துரைப்பார்

  எசேக்கியேல் புத்தகத்தின் 17வது அதிகாரம் கழுகு, திராட்சைக் கொடி, போன்ற உவமைகளை கொண்டுள்ளது. இந்த அதிகாரத்தின் இறுதி பகுதி கடவுளின் நம்பிக்கை தரும் வாக்குறுதி என்ற பகுதியைக் தாங்கியுள்ளது


.22: எசேக்கியேல் கடவுளை 'தலைவராகிய ஆண்டவர்' என்கிறார். இது எசேக்கியேல் அதிகமாக பயன்படுத்துகிற ஒரு காரணப் பெயர்ச் சொல் (אֲדֹנָי יְהוִ֔ה 'அதோனாய் எலோஹிம்). இந்த வரியில் கடவுள் நேரடியாக பேசுவது போன்று வரிகளை அமைக்கிறார்

  கடவுள் தான் கேதுரு மரத்தின் நுனிக்கிழை ஒன்றை எடுத்து நாட்டுவேன் என்கிறார். கேதுரு மரம் (אֶרֶז 'எரெட்ஸ்-கேதுரு) மத்திய கிழக்கு நாடுகளின் மலையில் வளர்ந்த ஒரு பிரசித்தி பெற்ற மரம். உயரமாகவும், நீண்ட கிளைகளைக் கொண்டும், நல்ல நறுமணம் தரக்கூடியதாகவும் இருந்தது. மிகவும் வலிமையாக இருந்ததால், இதனைக்கொண்டு படகுகள், வீட்டுக் கூரைகள், தூண்கள் மற்றும் சிற்ப வேலைகளும் இதனை பயன்படுத்தினார்கள். லெபனானில் இந்த மரம் அதிகமாக வளர்கிறது. இன்றை நவீன லெபனான் நாட்டின் கொடியில் இடம்பெற்றுள்ளது இந்த மரம்தான், இது அவர்களின் தேசிய அடையாளமாக விளங்குகின்றது. சாலமோன் லெபனானில் இருந்து பெருவாரியான லெபனான் மரங்களை எருசலேம் தேவாலயம் கட்ட பெற்றுக்கொண்டார் என்று விவிலியம் காட்டுகிறது

  லெபனான் கேதுரு மரங்களில் பல இனங்கள் இருந்திருக்கிறது, அவற்றில் எட்டு வகையானவைதான் இன்று வளர்கின்றன என்கிறார்கள் இயற்பியலாளர்கள். கேதுரு மரங்கள் பலத்தின் மற்றும் மாட்சியின் அடையாளமாகவும் விவிலியத்தில் பார்க்கப்படுகிறது

  கடவுள் கேதுரு மரத்தின் இளங்கொழுந்து ஒன்றை கொய்து அதனை உயர்ந்த மலை ஒன்றின் மேல் நடுவதாகச் சொல்கிறார். சாதாரணமாக கேதுரு மரங்கள் விதைகள் மூலமாகத்தான் வளரும். இருப்பினும் கடவுள் இதனை கொழுந்திலிருந்து உருவாக்குவதாகச் சொல்கிறார். ஒங்கியுயர்ந்த மலை ஒன்றில் இது நடப்படும் (הַר־גָּבֹהַ ஹர்-காவோஹா- உயரமான மலை) எனப்டுகிறது. இந்த மலை எருசலேமை அல்லது, முழு இஸ்ராயேல் இனத்தையும் குறிக்கலாம்


.23: முன்னைய வரியின் சந்தேகத்தை இந்த வரி தீர்த்து வைக்கிறது. அந்த உயர்ந்த மலை இஸ்ராயேலின் மலை என்பதை இந்த வரியில் தீர்த்துவைக்கிறார். இந்த மரம் இஸ்ராயேல் மலையில் கிளைத்து வளரும், கனி தரும் எனப்படுகிறது. கேதுரு மரங்களின் கனிகள் மனித உணவாக கொள்ளப்படவில்லை என தோன்றுகிறது. இந்த குறிப்பிட்ட மரம், இஸ்ராயேலில் சிறந்த கேதுருவாக கருதப்படபோகின்றது. கடவுளே இதனை நட்டதால் இப்படியாகலாம்

கேதுரு மரங்கள் உயரமாகவும், அடர்த்தியாகவும் வளர்வதால் பல பறவைகள் அதில் கூடு கட்டும். இந்த மரத்திலும் அப்படியே நடைபெறுகிறது. இங்கே பறவைகள் என்பது மக்களைக் குறிக்கலாம். இந்த மரத்தின் நிழல்கள், இஸ்ராயேல் நாட்டின் பாதுகாப்பைக் குறிக்கின்றன. பறவைகளுக்கு கேதுரு நிழல்தருவது போல, இஸ்ராயேல் நாடு தன் மக்களுக்கு பாதுகாப்பு தரும் எனப்படுகிறது


.24: ஆண்டவரின் செயற்பாடுகள் ஒப்பிட்டுக் காட்டப்படுகிறது

. ஆண்டவர் ஓங்கிய மரத்தை தாழ்த்துகிறார், தாழ்ந்த மரத்தை உயர்த்துகிறார் - அதாவது கர்வமுள்ளவர்கள் தாழ்த்தப்படுகிறார்கள், தாழ்ச்சியுள்ளவர்கள் உயர்த்தப்படுகிறார்கள்

இஸ்ராயேலுக்கு எதிரியாக இருக்கின்றவர்களையும் இந்த உவமை குறிக்கலாம்


. பசுமையான மரம் உலரச் செய்யப்படுகிறது, உலர்ந்த மரம் தழைக்கச்செய்யப்படுகிறது - இது பொருளாதாரத்தில் நல்ல நிலையில் இருந்து கடவுளை மறந்தவர்களைக் குறிக்கலாம். கடவுள் கர்வமுள்ள செல்வர்களை தாழ்த்தி, நம்பிக்கையுள்ள எளியவர்களை உயர்த்துவார் என்பது காட்டப்படுகிறது. இஸ்ராயேலுக்கு எதிரியாக இருக்கின்றவர்களையும் இந்த உவமை குறிக்கலாம்


. வயல்வெளி மரங்கள் (עֲצֵי הַשָּׂדֶה 'அட்சே ஹசாதெஹ்) இங்கே வேற்று நாட்டவர் அல்லது அனைத்து மக்களினங்களையும் குறிக்கலாம். இஸ்ராயேலரின் அடிமை வாழ்வு அனைவருக்கும் தெரிந்திருந்தது. இப்போது அவர்கள் கடவுளின் ஆசீரையும் இஸ்ராயேலின் வாழ்வையும் காண இருக்கிறாhர்கள் என்பது புலப்படுகிறது

 கடவுள் இந்த வார்த்தையை தானே உரைத்ததாகவும் (אֲנִ֥י יְהוָ֖ה דִּבַּרְתִּי 'அனி அதோனாய் திபார்தி- கடவுளாகிய நானே உரைத்தேன்) தானே செய்து காட்டுவதாகவும் (וְעָשִׂיתִי வெ'ஆசிதி- செய்வேன்) சொல்கிறார்


திருப்பாடல் 92

புகழ்ச்சிப்பாடல்

(ஓய்வு நாளுக்கான புகழ்ப்பாடல்)

1ஆண்டவருக்கு நன்றியுரைப்பது நன்று உன்னதரே! உமது பெயரைப் புகழ்ந்து பாடுவது நன்று.


2காலையில் உமது பேரன்பையும் இரவில் உமது வாக்குப் பிறழாமையையும்


3பத்துநரம்பு வீணையோடும் தம்புரு, சுரமண்டல இசையோடும் எடுத்துரைப்பது நன்று.


4ஏனெனில், ஆண்டவரே! உம் வியத்தகு செயல்களால் என்னை மகிழ்வித்தீர்;

உம் வலிமைமிகு செயல்களைக் குறித்து நான் மகிழ்ந்து பாடுவேன்.


5ஆண்டவரே! உம் செயல்கள் எத்துணை மேன்மையாவை உம் எண்ணங்கள் எத்துணை ஆழமானவை.


6அறிவிலிகள் அறியாததும் மூடர் உணராததும் இதுவே:


7பொல்லார் புல்லைப்போன்று செழித்து வளரலாம்; தீமை செய்வோர் அனைவரும் பூத்துக் குலுங்கலாம்! ஆனால், அவர்கள் என்றும் அழிவுக்கு உரியவர்


8நீரோ ஆண்டவரே! என்றுமே உயர்ந்தவர்.


9ஏனெனில், ஆண்டவரே! உம் எதிரிகள்ஆம், உம் எதிரிகள்அழிவது திண்ணம்; தீமை செய்வோர் அனைவரும் சிதறுண்டுபோவர்.


10காட்டைருமைக்கு நிகரான வலிமையை எனக்கு அளித்தீர்; புது எண்ணெயை என்மேல் பொழிந்தீர்.


11என் எதிரிகளின் வீழ்ச்சியை நான் கண்ணாரக் கண்டேன்; எனக்கு எதிரான பொல்லார்க்குநேரிட்டதை நான் காதாரக் கேட்டேன்.


12நேர்மையாளர் பேரீச்சை மரமெனச் செழித்தோங்குவர்; லெபனோனின் கேதுரு மரமெனத்தழைத்து வளர்வர்.


13ஆண்டவரின் இல்லத்தில் நடப்பட்டோர் நம் கடவுளின் கோவில் முற்றங்களில் செழித்தோங்குவர்.


14அவர்கள் முதிர் வயதிலும் கனிதருவர்; என்றும் செழுமையும் பசுமையுமாய் இருப்பர்;

15‛ஆண்டவர் நேர்மையுள்ளவர்; அவரே என் பாறை அவரிடம் அநீதி ஏதுமில்லை' என்று அறிவிப்பர்.


ஓய்வு நாள் திருப்பாடல் என இந்தப் பாடல் அறியப்படுகிறது. மகிழச்சியானதும், பக்தியானதுமான வார்த்தைகளை இந்த பாடல் கொண்டுள்ளது. தனி மனித புகழ்ச்சிப்பாடலான 

இந்த பாடல், இறைவனை புகழ்வதை மட்டுமே தன்னுடைய கருப்பொருளாகக் கொண்டுள்ளது. ஒய்வு நாள் கடைப்பிடிப்பு, பபிலோனிய நாட்டிலே கடுமையாக வளர்ந்திருக்க வேண்டும். உண்மையான ஓய்வு நாள் என்பது கடவுளில் மகிழ்ந்திருப்பது அல்லது அவரைப் பற்றி சிந்திப்பது என்பதை அழகாகக் காட்டுகிறார் ஆசிரியர்

இந்த திருப்பாடலை முதல் மனிதன் ஆதாம் பாடினார் என்ற அழகான கதை ஒன்று யூத மக்கள் மத்தியில் வழக்கிலிருக்கிறது. பிற்காலத்தில், இதில் குறிப்பிடப்பட்டுள்ள இசைக் கருவிகளைக் கருத்தில் கொண்டு, இதனை தாவீது எழுதினார் என்ற வாதமும் உள்ளது

இருப்பினும் இந்த பாடல் ஓய்வு நாளை முன்னிறுத்துவதால் இது தாவீதிற்கும் பிற்கால பாடலாகவே இருந்திருக்க வேண்டும் என்பது தற்கால ஆய்வின் முடிவு


.0: ஓய்வு நாளுக்கான தாவீதின் பாடல் என்று இதன் தலைப்பு காட்டுகிறது 

(מִזְמוֹר שִׁ֗יר לְיוֹם הַשַּׁבָּת׃ மிட்ஸ்மோர் ஷிர் லெயோம் ஹஷ்ஷாவாத்- திருப்புகழ் பாடல், தாவீதின் ஓய்வுநாளுக்கான). நவீன கால மொழியியல் ஆய்வாளர்களால் அவ்வளவு இலகுவாக முதல் ஏற்பாட்டு எபிரேயத்தை மொழி பெயர்க்க முடியாது. இந்த பாடல் 'தாவீதிற்கானதா' அல்லது 'தாவீதுடையதா' என்பது புதிர். இருப்பினும் இந்த பாடல் ஓய்வு நாளுக்கான விசேட பாடல் என்பது தெளிவாகத் தெரிகிறதுஇந்த தலைப்பு பிற்காலத்திற்குரியது என்ற வாதமும் இருக்கிறது


.1: ஆண்டவருக்கு நன்றியுரைப்பதை முக்கியமாகக் கொண்டுள்ளது இந்த திருப்பாடல், ஆண்டவருக்கு 'உன்னதரே' என்ற அழகான வார்த்தையும் பயன்படுத்தப்படுகிறது (עֶלְיֽוֹן 'எல்யோன்- உயரத்தில் இருப்பவர்). கடவுளை புகழ்ந்து பாடுவதுதான் நல்லது என்கிறார் 

(ט֗וֹב לְהֹדוֹת לַיהוָה தோவ் லெஹொதொத் லதோனாய்- கடவுளுக்கு நன்றியுரைப்பது நன்று). 


.2: காலையையும் மாலையையும் உட்படுத்துகிறார். காலையில் அவருடைய பேரன்பையும் 

(בַּבֹּקֶר חַסְדֶּךָ பாபோகெர்   ஹஸ்தேகா), மாலையில் அவரது வாக்குப் பிறழாமையையும் 

(אֱמֽוּנָתְךָ֗ בַּלֵּילוֹת எமூனாதெகா  பாலெலோத்) சிந்தனைக்கு எடுக்கிறார்.


.3: இந்த இரண்டு நேரங்களிலும் கடவுளை பத்து நரம்பு வீணை, தம்புரு, மற்றும் சுரமண்டல இசையோடு எடுத்துரைப்பது நன்று என்கிறார் ஆசிரியர்

 இங்கே பாவிக்கப்பட்டடுள்ள தமிழ் சொற்கள் எபிரேய நரம்பிசை கருவிகளை தெளிவுபடுத்துகின்றன. இருப்பினும் தமிழ்ச் சொற்களுக்கும், எபிரேய சொற்களுக்கும் அதிகமான வேறுபாடுகள் உள்ளன. இந்த இசைக் கருவிகள் தாவீதின் காலத்தில் பாவனையில் இருந்தனவா எனபதைப் பற்றியும் பல வாதங்கள் உள்ளன. இருப்பினும் சில நரம்பிசைக் கருவிகள் தாவீதின் காலத்தில் வழக்கிலிருந்திருக்கின்றன


.4: இதற்கான காரணத்தை பாடுகிறார், அதாவது கடவுள் தன்னுடைய வியத்தகு செயல்களால் இவரை மகிழ்வித்ததன் காரணமாக, இவர் ஆண்டவரின் வலிமைமிகு செயல்களை பாட முன்வருகிறார்

 வலிமைமிகு செயல்களைக் குறிக்க 'உம் வலதுகரத்தின் செயல்கள்' என்ற சொல் பாவிக்கப்படுகிறது (יָדֶיךָ யாதெகா). 


.5: இந்த வரியில் ஆண்டவரை நேரடியாக விழிக்கிறார். ஆண்டவருடைய செயல்களை மேன்மையானவையாகவும், எண்ணங்களை ஆழமானவையாகவும் காட்டுகிறார்

  இதனைக் குறிக்க எதுகை மோனை வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன

מַה־גָּדְל֣וּ מַעֲשֶׂ֣יךָ יְהוָ֑ה மா-காத்லூ 'அஸ்ஏகா (அதோனாய்) - எவ்வளவு பெரியன உம் செயல்கள் ஆண்டவரே!

מְאֹ֗ד עָמְק֥וּ מַחְשְׁבֹתֶֽיךָ׃ மெ'ஓத் 'ஆம்கூ மஹ்ஷெவோதேகா - மிக அழமானவை உம் சிந்தனைகள்!


.6: இதனை அறிவிலிகளும் (אִישׁ־בַּעַר 'இஷ்-'அர்) மூடர்களும் (כְסִ֗יל கெசில்) உணர்கிறார்கள் இல்லை என்கிறார். அறிதலுக்கும் புரிதலுக்கும் 'யாதா' (יָדַע) மற்றும் 'பின்னா' (בִּין) என்ற அழகாக எபிரேய மெய்யியல் வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன


.7: இவ்வளவு நேரமும் தன்னுடைய உறவைப் பற்றி பேசியவர், இந்த வரியில் பொல்லரையும், தீயவரையும் பற்றிப் பேசுகிறார்

 தீயவர்கள் செழித்து வளர, நல்லோர் துன்பப்படுகிறார்கள் என்பது மானிட சமுதாயத்தின் தொடர்ச்சியான குற்றச்சாட்டு. இதற்கு விவிலியம் பல விதத்தில் விடையளிக்க முயல்கிறது. இந்த பாடலில், ஆசிரியர் பொல்லார் புல்லைப் போல செழித்து வளர்வது உண்மைதான் என்பதை ஏற்றுக்கொள்கிறார்

(בִּפְרֹחַ רְשָׁעִים ׀ כְּמוֹ עֵ֗שֶׂב பிப்ரோஹ் ரெஷாஇம் கெமோ 'எசெவ்- தீயவர்கள் வீரியமான புல்லைப் போல வளர்ந்தாலும்), 

(וַיָּצִיצוּ כָּל־פֹּ֣עֲלֵי אָוֶן வாய்யாட்சியூ கோல்-போ'அலே 'ஆவென்- தீயவர்கள் செழிப்பாக வளர்ந்தாலும்)

 அவர்கள் அழிவிற்கு உரியவர்களே என்கிறார். அதாவது கண்ணுக்கு தெரிவது ஒன்று, கடவுள் அவர்களுக்கு வைத்துள்ள முடிவு இன்னொன்று, அது நீதியானது என்பது சொல்லப்படுகிறது


.8: ஆண்டவர் என்றும் உயர்ந்தவர் என்ற இஸ்ராயேல் நம்பிக்கை வார்த்தையிடப்படுகிறது. 'உயர்ந்தவர்' என்பதை சில மொழிபெயர்ப்புக்கள் 'அரசாள்கிறவர்' என்றும் மொழி பெயர்க்கின்றன. இருப்பினும் எபிரேய விவிலியம் இதனை 'உயரத்தில் உள்ளவர்' என்றே காட்டுகிறது - וְאַתָּה מָר֗וֹם לְעֹלָם יְהוָֽה׃ வெ'அத்தாஹ் மாரோம் லெ'ஓலாம் அதோனாய்- ஆனால் நீர் பெரியவர், உயர்ந்தவர் ஆண்டவரே.


.9: இஸ்ராயேலின் எதிரிகள் ஆண்டவரின் எதிரிகள் எனக் காட்டப்படுகிறார்கள். அவர்களை இரண்டு தடவை ஆண்டவரின் எதிரிகள் என்கிறார் (אֹיְבֶיךָ ׀ יְֽהוָ֗ה 'ஓய்வேகா அதோனாய்). எதிரிகளுக்கு 'தீமை செய்பவர்கள்' என்ற ஒத்த கருத்துச் சொல்லை பாவிக்கிறார், அவர்கள் அழிவது திண்ணம் என்கிறார் (יִתְפָּרְד֗וּ כָּל־פֹּעֲלֵי אָֽוֶן׃ யித்பார்தோ கோல்-போ'அலே 'அவென் - தீமைசெய்பவர்கள் அனைவரும் சிதறுருவர்). 


.10: காட்டெருமை மத்திய கிழக்கு நாடுகளின் காட்டு விலங்குகளில் மிகவும் பலமானதா கருதப்பட்டது. முக்கியமாக இந்த வகை விலங்குகள் லெபனான் காடுகளில் இருந்திருக்க வேண்டும். மாடுகளுக்கு பாதுகாப்பு கொடுத்தது அதன் கொம்புகள், இதனால் கொம்புகள் பலத்தின் அடையாளமாக விவிலியத்தில் பார்க்கப்படுகிறது

 இந்த வரியை எபிரேய விவிலியம் 'நீர் என் கொம்பை காட்டெருமையுடையததைப் போல உயர்த்தினீர்' (וַתָּרֶם כִּרְאֵ֣ים קַרְנִי வாத்தாரெம் கிர்'எம் கார்னி) என்று காட்டுகிறது.

 புது எண்ணெய்யை பொழிதல் என்பது திருப்பொழிவு அல்லது அதிகாரம் கொடுத்தலைக் குறிக்கும். இங்கு புது எண்ணெய் கொடுப்பதன் வாயிலாக பழைய வாழ்வு கழையப்படுகிறது என எடுக்கலாம். புது எண்ணெய்க்கு 'பசுமையான கொழுப்பு' என்ற சொல் பாவிக்கப்பட்டுள்ளது 

(שֶׁמֶן רַעֲנָן ஷெமென் 'அனான்). 


.11: எதிரிகள் அழிவது நம்பிக்கையில் இருந்தால் மட்டும்போதாது அதனை தன்னுடைய கண்ணால் காணவும், காதால் கேட்கவும் வேண்டும் என்று கேட்கிறார்

ஒருவேளை எதிரிகள் அழிவதை கண்ணால் காண்பதும், காதால் கேட்பதும் நீதி கிடைத்ததற்கான உணர்வாக இருந்திருக்கலாம். இந்த திருப்பாடலில், எதிரி என்பவர் சில வேளைகளில் கடவுளின் எதிரியாகவும், சில வேளைகளில் ஆசிரியரின் எதிரியாகவும் பாடப்படுகிறார். இவர்கள் இஸ்ராயேலர்களின் தேசிய எதிரிகளா? அல்லது தனி மனிதருடைய தனிப்பட்ட எதிரியா? என்பது தெளிவாக இல்லை


.12: நேர்மையாளர்களை அடையாளப்படுத்த (צַדִּיק ட்சாதித்) என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது

இந்த நேர்மையாளர்கள் செழித்து வளரும்  பேரீட்சை மரத்திற்கும் (תָּמָר தாமார்), தழைக்கும்  லெபனானின்  கேதுரு    (אֶרֶז 'எரெட்ஸ்) மரத்திற்கும் ஒப்பிடப்படுகின்றனர்

இந்த இரண்டு மரங்களும் இஸ்ராயேலின் மிகவும் அதிகமாக மெச்சப்படுகின்ற அல்லது, விலையுயர்ந்த மரங்களாகும். இஸ்ராயேலில் இவை காணப்பட்டாலும், இஸ்ராயேலைவிட அண்டைய நாடுகளில் இவை பெரியளவில் வளர்ந்தன. இவற்றின் வளர்ச்சியைக் கொண்டு அந்த இடங்களின் வளமையும் அளவிடப்பட்டன. பேரீட்சையும், கேதுரு மரங்களும் விவிலியத்தில் பல இடங்களில் விலையுயர்ந்த இயற்கை வளங்களாக காட்டப்படுகின்றன


.13: ஆண்டவரின் இல்லம் (בֵית יְהוָה பேத் அதோனாய்), அவரது கோவில் முற்றம் (חַצְרוֹת אֱלֹהֵינוּ ஹட்ஸ்ரோத் 'எலோஹெனூ) என்ற இரண்டு ஒத்த கருத்துச் சொற்கள் இந்த வரியில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவை இரண்டு வகையான இடங்களையும் குறிக்கலாம் என்பது போல தோன்றுகிறது

  ஆண்டவரின் இல்லம், மற்றும் அவரது முற்றம் என்பன, ஆண்டவரின் பிரசன்னத்தை அடையாளப்படுத்துகின்றன. ஆண்டவருடைய பிரசன்னத்தில் இருப்பவர் அனைத்து வளங்களையும் கொண்டு மகிழ்ச்சியாக இருப்பார் என்பதைக் காட்டுகிறது


.14: முதிர் வயதில் கனிதருவர் என்பது, இயற்கைக்கு அப்பாற்பட்ட விடயம். முதிர் வயதில் கனிதருவது சாத்தியமாகாது

இங்கே ஆண்டவருடைய மக்கள் முதிர்ச்சி அடைந்தாலும், அவர்க்ளுடைய பயன்தருதலில் எந்த விதமான மாற்றங்களும் நடைபெறாது என்பது காட்டப்படுகிறது. ஆண்டவர் அவர்களோடு இருக்கின்ற படியால் அவர்கள் இயற்கையில் விதிமுறைகளையும் கடந்து செல்கின்றனர். இதனால் அவர்கள் என்றும் பசுமையாகவும் செழுமையாகவும் இருக்கிறார்கள் என்பது ஆசிரியரின் நம்பிக்கை


.15: இவர்கள் ஆண்டவரைப் பற்றி சில மறையுண்மைகளை தங்களுடைய அனுபவத்திலிருந்து அறிவிக்கின்றனர். இந்த நம்பிக்கைகள் இஸ்ராயேலருடைய நம்பிக்கையின் வரைவிலக்கணத்தைக் காட்டுகிறது. இந்த வரிதான் இந்த திருப்பாடலின் நோக்கமாக இருக்கவேண்டும். நம்பிக்கை அறிவிக்கப்பட வேண்டும் என்பது காட்டப்படுகிறது.

. ஆண்டவர் நேர்மையுள்ளவர்: יָשָׁר יְהוָה யாஷார் அதோனாய்

. என் பாறை: צוּרִי ட்சூரி

. அவரிடம் அநீதி எதுவுமில்லை: לֹא־עֹלָתָה லோ'-'ஓலாதாஹ்




2கொரிந்தியர் 5,6-10

6ஆகவே நாங்கள் எப்போதும் துணிவுடன் இருக்கிறோம். இவ்வுடலில் குடியிருக்கும் வரையில் நாம் ஆண்டவரிடமிருந்து அகன்று இருக்கிறோம் என்பது நமக்குத் தெரியும். 7நாம் காண்பவற்றின் அடிப்படையில் அல்ல, நம்பிக்கையின் அடிப்படையிலேயே வாழ்கிறோம். 8நாம் துணிவுடன் இருக்கிறோம். இவ்வுடலை விட்டகன்று ஆண்டவரோடு குடியிருக்கவே விரும்புகிறோம். 9எனவே நாம் இவ்வுடலில் குடியிருந்தாலும் அதிலிருந்து குடிபெயர்ந்தாலும் அவருக்கு உகந்தவராயிருப்பதே நம் நோக்கம். 10ஏனெனில் நாம் அனைவருமே கிறிஸ்துவின் நடுவர் இருக்கை முன்பாக நின்றாக வேண்டும். அப்போது உடலோடு வாழ்ந்தபோது நாம் செய்த நன்மை தீமைக்குக் கைம்மாறுபெற்றுக் கொள்ளுமாறு ஒவ்வொருவரின் செயல்களும் வெளிப்படும்.


வவ.1-5: இவ்வுலக வாழ்க்கை அழிந்ததுபோகக்கூடியது என்றாலும், அழியாத இல்லம் ஒன்று வான்வீட்டில் தயாராக இருக்கிறது என்பதை பவுல் இந்த அதிகாரத்தில் அடையாளம் வாயிலாக காட்டுகிறார். மனிதர்கள் இந்த உலகத்தில் பலவிதமான பணிகளில் ஈடுபட்டாலும், அவர்கள் வான் வீட்டிற்காக ஏங்குகிறார்கள் என்பதையும் அவர் நினைவூட்டுகிறார்

மனிதர்கள் வான்வீட்டை உரிமையாக்க பூவுல வீட்டை புறக்கணிக்க வேண்டும் என்பதற்கில்லை மாறாக வான்வீட்டை முதன்மைப் படுத்த வேண்டும் என்பதே இங்கு வலியுறுத்தப்படுகிறது. வான் வீடு தயாராக இருக்கிறது என்பதற்கு கடவுள் கொடுத்த தூய ஆவியாரை உதாரணமாக எடுக்கிறார் பவுல். தூய ஆவியாரின் வருகையும், அவருடைய இருப்பும், மனிதர்க்கு வான்வீட்டை நினைவுபடுத்துகின்றன


.6: பவுல் கிறிஸ்தவர்கள் துணிவோடு இருக்கிறவர்கள் என்பதை நினைவுபடுத்துகிறார்   (Θαρροῦντες οὖν πάντοτε தார்ரூன்டெஸ் ஊன் பன்டொடெ). 

இவ்வுலகில் இருக்கும் காலம் ஆண்டவருக்கு தொலைவில் இருக்கும் காலம் என்ற வித்தியாசமான இறையியலை இன்னொருமுறை பவுல் நினைவூட்டுகிறார். பவுல் இப்படியான இறுக்கமான இறையியலை பல இடங்களில் முன்வைக்கிறார். ஆண்டவருக்கு தொலைவில் இருக்கிறோம் என்பது அனைவருக்கும் தெரியும் என்பதையும் அவர் நாசூக்காக சொல்லிவிடுகிறார்


.7: கிறிஸ்தவர்கள் யார்? அவர்கள் காண்பவற்றின் படி வாழ்கிறவர்களா? அல்லது நம்பிக்கையின் அடிப்படையில் வாழ்பவர்களா? என்ற கேள்விற்கு பதிலளிக்கிறார். கிறிஸ்தவர்கள் நம்பிக்கையின் அடிப்படையில் வாழக்கிறவர்கள். நம்பிக்கைதான் கிறிஸ்தவர்களின் அடையாளம். இதனை இந்த வரியில் தெளிவாக காட்டிவிடுகிறார் பவுல்

διὰ πίστεως γὰρ περιπατοῦμεν οὐ διὰ εἴδους· தியா பிஸ்டெயோஸ் கார் பெரிபாடூமென், தியா எய்தூஸ்- நாங்கள் நம்பிக்கையின் படி நடக்கிறவர்கள், பார்பதன் படி அல்ல


.8: இந்த உடலை விட்டகன்று ஆண்டவரோடு இருக்க துணிவுடன் இருப்பதாக பவுல் இறைவாக்குரைக்கிறார். இந்த உடலை விட்டகலல் என்பது மரணத்தையும், நித்தியவாழ்வையும் குறிக்கிறது. ஆண்டவரோடு குடியிருத்தல் என்பது பவுலுடைய முக்கியமான இறையியல் சிந்தனைகளில் ஒன்று (ἐνδημῆσαι πρὸς τὸν κύριον என்தேமேசாய் புறொஸ் டொன் கூரியோன்- ஆண்டவரோடு வீடமைக்க). பலவிதமான துன்புறுத்தல்களை சந்தித்தவர்களுக்கும், ஆண்டவருடை இரண்டாம் வருகை மிக அருகில் இருக்கிறது என்பதையும் நம்பிய ஆரம்ப கால திருச்சபைக்கு இந்த வரிகள் முக்கியமானதாக இருந்திருக்கும்.  


.9: இந்த வரி மிக முக்கியமான நேர்த்தியான வரி, அதாவது இவ்வுலகில் இருந்தாலும், மேலுலகில் இருந்தாலும், ஆண்டவருக்கு உகந்தவராக இருப்பதுதான் கிறிஸ்தவர்களின் நோக்கம் என்ற சிந்தனையை பவுல் வலியுறுத்துகிறார். இந்த சிந்தனைதான் பிற்காலத்தில் மிக அதிகமான வளர்ச்சியடைந்தது


.10: கிறிஸ்துவின் நடுவர் இருக்கை என்பது அவருடைய தீர்ப்புச் செயலைக் காட்டும் அடையாளம். ஆண்டவர் இரண்டாம் வருகையின் போது தீர்ப்பிடுவார் என்ற நம்பிக்கை ஆரம்ப கால திருச்சபையில் நன்கு வளர்ந்திருந்தது. இரண்டு விதமான தீர்ப்பிடுதலை பவுல் அடையாளப்படுத்துகிறார். அதாவது மரணத்தின் பின்னர் ஒருவர் இந்த தீர்ப்பை சந்திக்கிறார், அத்தோடு ஆண்டவருடைய இரண்டாவது வருகையின் பின்னரும் ஒருவர் இந்த நீதி தீர்ப்பை சந்திக்கிறார்

 ஆண்டவரின் நீதித் தீர்ப்பின் முன் அனைவரும் நிற்க வேண்டும் என்ற நம்பிக்கையை கொரிந்தியர்களுக்கு கடுமையாக நினைவூட்டுகிறார் பவுல் (ἔμπροσθεν τοῦ βήματος τοῦ Χριστοῦ எம்ப்ரொஸ்தென் டூ பேமாடொஸ் டூ கிறிஸ்டூ- கிறிஸ்துவின் தீர்வைத்தொட்டியின் முன்னால்). 

  ஆண்வரின் நடுவர் இருக்கைக்கு முன்னால், ஒவ்வொருவருக்கும் உடலோடு வாழ்ந்தபோது செய்த நன்மையும் தீமையும் கைமாறுக்காக எடுக்கப்டுகிறது. களியாட்டங்களில் திழைத்திருந்த கொரிந்து நகரத்திற்கும், அந்த களியாட்டங்களில் ஈடுபாடு காட்ட முயன்ற கிறிஸ்தவர்களுக்கு இந்த எச்சரிக்கை சவாலாக இருந்திருக்கும்


மாற்கு 4,26-34

முளைத்துத் தானாக வளரும் விதை உவமை


26தொடர்ந்து இயேசு, 'இறையாட்சியைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்; 27நிலத்தில் ஒருவர் விதைக்கிறார். அவர் எதுவும் செய்யாமலே நாள்கள் நகர்ந்து செல்கின்றன. அவருக்குத் தெரியாமல் விதை முளைத்து வளருகிறது. 28முதலில் தளிர், பின்பு கதிர், அதன் பின் கதிர் நிறைய தானியம் என்று நிலம் தானாகவே விளைச்சல் அளிக்கிறது. 29பயிர் விளைந்ததும் அவர் அரிவாளோடு புறப்படுகிறார்; ஏனெனில் அறுவடைக் காலம் வந்துவிட்டது' என்று கூறினார்.


கடுகு விதை உவமை

(மத் 13:31-32; லூக் 13:18-19)


30மேலும் அவர், 'இறையாட்சியை எதற்கு ஒப்பிடலாம்? அல்லது எந்த உவமையால் அதை எடுத்துச் சொல்லலாம்? 31அது கடுகு விதைக்கு ஒப்பாகும். அது நிலத்தில் விதைக்கப் படும்பொழுது உலகிலுள்ள எல்லா விதைகளையும்விடச் சிறியது. 32அது விதைக்கப்பட்டபின் முளைத்தெழுந்து எல்லாச் செடிகளையும் விடப் பெரிதாகி, வானத்துப் பறவைகள் அதன் நிழலில் தங்கக் கூடிய அளவுக்குப் பெருங்கிளைகள்விடும்' என்று கூறினார்.


உவமைகள் வாயிலாகவே பேசும் இயேசு

(மத் 13:34-35)


33அவர்களது கேட்டறியும் திறமைக்கு ஏற்ப, அவர் இத்தகைய பல உவமைகளால் இறைவார்த்தையை அவர்களுக்கு எடுத்துரைத்து வந்தார். 34உவமைகள் இன்றி அவர் அவர்களோடு பேசவில்லை. ஆனால் தனிமையாக இருந்தபோது தம் சீடருக்கு அனைத்தையும் விளக்கிச் சொன்னார்.


மாற்கு நற்செய்தியின் நான்காம் அதிகாரம் பல உவமைகளை கொண்டமைந்துள்ளதுஇங்கே காட்டப்படுகின்ற உவமைகள் மற்றைய நற்செய்திகளில் விளக்கமாக ஆராயப்படுகின்றன. அதிகமான இந்த உவமைகள் மாற்கு நற்செய்தியில்தான் மூலமாக உள்ளன என்பது பல ஆய்வாளர்களின் கருத்து. விதைப்பவர் உவமை, விளக்கு உவமை, தானாக வளரும் விதை உவமை, கடுகு விதை உவமை போன்றவை இந்த அதிகாரத்தில் காட்டப்படுகின்றன


. முளைத்து தானாக வளரும் உவமை (வவ 26-29): இந்த உவமை வேறு நற்செய்திகளில் காட்டப்படவில்லை.  


.26: தொடர்ச்சியாக உவமைகளில் பேசும் இயேசு இறையாட்சியை இன்னொரு நிகழ்ச்சிக்கு ஒப்பிடுகிறார். இறையாட்ச்சி என்பதற்கு 'ஹே பாசிலெய்யா டூ தியூ' (ἡ βασιλεία τοῦ θεοῦ இறைவனின் அரசு) என்ற சொல் பயன்படுகிறது. மத்தோயு இதற்கு 'வானங்களின் அரசு' என்ற சொல்லை பயன்படுத்துவார்


.27: இறையரசு என்பது மனிதர்களின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதை, இயற்கை பலவிதத்தில் தானாக செயற்படுகிறது என்ற உதாரணத்தின் மூலம் காட்டுகிறார் ஆண்டவர். விதை வளர்வதை வெளிப்படையாக யாரும் அவதானிப்பதில்லை இருந்தாலும் விதை வளர்கிறது

 நிலத்தில் ஒருவர் விதைக்கிறார், அவர் எதுவும் செய்யாமலே நாட்கள் நகர்கின்றன. அவருக்கு தெரியாமல் விதையும் முளைத்து வளாக்கின்றது. 26ம் வரியின் பிற்பகுதியும், 27ம் வரியும் கிரேக்க விவிலியத்தில் சற்று வித்தியாசமாக உள்ளன. 26ம் வரியின் பிற்பகுதி 'மனிதர் ஒருவர் நிலத்தில் விதையை வீசுகிறார்' என்று உள்ளது. 27ம் வசனத்தில் 'அவர் நித்திரைக்குச் சென்று துயில் எழும்புப்போது, பகலும் இரவும் வருகின்றன, விதை முளைத்து வளர்கின்றது, எப்படியென்று அவருக்கு தெரியாது' என்று உள்ளது


.28: பயிரின் வளர்ச்சிப் படிநிலையை உதாரணமாக எடுத்து இயற்கையின் அமைதியான வளர்சியைக் காட்டுகிறார் இயேசு. தளிர், கதிர், பின்பு தானியம் என்பது யாருடைய மேற்பார்வையும் இல்லாமல் தானாக ஆனால் நேர்த்தியாக வளர்ச்சியடைந்து நிறைவடைகிறது, இது இயற்கையின் அதிசயமான உண்மை

 இயேசு இயற்கையை அதிகமாக தியானித்தார் அத்தோடு மிக சிறிய சாமான்ய உதாரணங்கள் மூலமான பெரிய விடயங்களையும் விளக்கமுடியும் என்பதையும் காட்டியுள்ளார்


.29: பயிர் விளைந்தது, அதை அடையாளமாகக் கொண்டு விவசாயி தன்னுடைய அறுவடை வேலையை தொடங்குகிறார். எப்படி வளர்ந்தது என்பது அவருக்கு தெரியாவிடினும், பயிரைக் கண்டவுடன் அறுவடைக்கு அவர் தயாராகின்றார். இதனை இயேசு தீர்ப்பு நாளுக்கு ஒப்பிடுகிறார்



. கடுகு விதை உவமை (வவ. 30-32): இந்த உவமை மத்தேயு நற்செய்தியிலும் லூக்கா நற்செய்தியிலும் முறையாக காணப்படுகிறது


.30: இயேசு முக்கியமான கேள்வி ஒன்றை கேட்கிறார். இறையாட்சி என்பது இயேசுவுடைய போதனையில் மிக முக்கியமான கருப்பொருள். அதனை அவர் உருவகங்கள், மற்றும் உவமைகள் வாயிலாகவே போதிக்கிறார். இந்த அதிகாரத்திலும் ஏற்கனவே அதனை செய்துவிட்டார்

இருப்பினும் இந்த வரியில் அதே கேள்வியை கேட்கிறார். இதனை இலக்கிய வகை கேள்வி முறை என அறிஞர்கள் காட்டுகின்றார்கள். அதாவது இந்த கேள்விகள் தன்னகத்தே விடையைக் கொண்டிருக்கின்றன

இறையாட்சி       (ἡ βασιλεία τοῦ θεοῦ இறைவனின் அரசு) என்பது இறைவனுடைய அரசத்துவத்தை அல்லது ஒழுங்கமைவுகளைக் குறிக்கின்றது. ஆட்சி என்ற சொல் தற்காலத்தில் நேர்முகமான சொல்லாக இல்லாவிட்டாலும், உரோமைய-கிரேக்க காலத்தில் இந்த சொல் மிக முக்கியமான சொல்லாக இருந்திருக்கிறது


வவ.31-32: இயேசு இறையாட்சியை கடுகு விதைக்கு ஒப்பிடுகிறார் (κόκκῳ σινάπεως கொக்கோ சினாபெயோஸ்). 

இஸ்ராயேல் கடுகுவிதை அளிவில் மிகச் சிறியது. தென்னாசியாவில் உள்ள கடுகு விதை இந்த குடும்பத்தை சார்ந்தாக இருக்கலாம். இந்த மிகச் சிறிய கடுகு விதைக்குள் கடவுள் ஒரு பெரிய மரச்செடியை வைத்திருக்கிறார் என்பது அதிசயமே. கடுகு மரம் பெரிய விருட்சமாக வளராவிட்டாலும், அது பெரிய செடியாக வளரும். இஸ்ராயேல் போன்ற பாலைவனங்கள் நிறைந்த இடங்களில் இந்த மரச்செடி பல இன பறைவைகளுக்கு இயற்கையாகவே வீடாகின்றன

கடுகு விதை அக்காலத்து அறிவின் படி மிகச் சிறிய விதை, ஆனால் இதன் வளர்ச்சி அசூரமாக இருக்கிறது. கடுகு விதை முதல் ஏற்பாட்டில் தாவீதின் வீட்டாரைக் குறிக்க பயன்பட்ட ஒரு அடையாளம் என்ற வாதம் ஒன்றும் முன்வைக்கப்படுகிறது (காண்க எசேக் 17,22-24). இயேசுவுடைய வருகையோடு, இறையரசின் வருயையும் தொடங்கிவிட்டது. இயேசு தனி மனிதரான, பலமில்லாதவராக தன் ஆட்சியை தொடங்கினாலும், அது பெரிய வல்லமையாக மாறும் என்பதை மறைமுகமாக இந்த உவமை காட்டுகிறது

வானத்து பறைவைகள் என்பது இங்கே (πετεινὰ τοῦ οὐρανοῦ பெடெய்னா டூ ஊரானூ)., காட்டுப் பறவைகளைக் குறிக்கலாம். வீட்டு பறவைகள் ஏற்கனவே நல்ல நிழலிடங்களில் இருக்கின்றன. காட்டுப் பறவைகளுக்குத்தான் நிழல் தேவையாக இருக்கிறது




. உவமைகள் வாயிலாக பேசும் இயேசு வவ. 33-34. உவமைகள் அக்காலத்தில் வழக்கிலிருந்த ஒரு மிக முக்கியமான படிப்பித்தல் முறை. புத்தகம், கணணி, இலத்திரனியல் வளர்ச்சி அடைந்திராத அந்த நாட்களிலே, உவமை மிக முக்கியமான படிப்பித்தல் முறையாக காணப்பட்டது. உவமை வாயிலாக கேட்பவர் அந்த காட்சிக்குள் சென்றுவிடுகிறார். இதனால் அவருடைய கற்பனை மற்றும் இயற்பயில் திறனும் வளர்கின்றது

இயேசு உவமையின் முக்கியத்துவத்தை அறிந்தவராயிருக்கிறார். எங்கு இயேசுவிற்கு உவமையின் முக்கியத்துவம் தெரிந்ததோ தெரியவில்லை. இருப்பினும் மக்களுடைய கேள்வி தகமைக்கு ஏற்றபடியே அவர் உவமைகளை பாவித்தார் என 33ம் வரி காட்டுகிறது. இயேசு உவமையை கையில் எடுத்து, அதன் வழி இறைவார்த்தையை போதித்தார். உவமைகள் இல்லாமல் சாதாரண மக்களுடன் இயேசு பேசவில்லை என மாற்கு காட்டுகிறார் (οὐκ ἐλάλει αὐτοῖς, ஊக் எலாலெய் அவ்டொய்ஸ்). இதன் மூலம் அவர் உவமைகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார் என்பது தெரிகிறது

இருப்பினும் தான் தனிமையாக இருந்தபோது சீடர்களுக்கு அதனை விளக்கினார். உவமைகள் பாவிப்பதன் நோக்கமே, நன்றாக விளங்க. இருப்பினும் அவர் சீடர்கள் சில வேளைகளில் அதனை புரியமால் போகின்றமை வியப்பாக இருக்கிறது


இயேசுவின் போதனைகள் சாதாரணமானவை

அவை போதிப்பவை மெய்யறிவிலும் மேலானவை.

இறையரசு என்பது, இறைவனின் கட்டுப்பாட்டில் உள்ள உலகம்

இது மெதுவாக வளர்கின்றது, இருப்பினும் வளர்கிறது

இறையரசை வளர்க்க வேண்டியது 

கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவரினதும் கடமை

இறையரசை அறிவிக்காத, கிறிஸ்தவம்

அதன் இலட்சியத்தை தவறவிடுகிறது


அன்பு ஆண்டவரே


என்னையும் உமது இறையரசு பணியின் பணியாளனாக்கும், ஆமென்



 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆண்டின் பொதுக்காலம் இருபத்திமூன்றாம் ஞாயிறு (ஆ) (08.09.2024)

ஆண்டின் பொதுக்காலம் இருபத்திமூன்றாம் ஞாயிறு ( ஆ ) (08.09.2024) முதல் வாசகம் : எசாயா 35,4-7 பதிலுரைப் பாடல் : திருப்பாடல் 146 இர...