சனி, 4 மே, 2024

பாஸ்கா காலம் ஆறாம் ஞாயிறு (ஆ) 05.05.2024





பாஸ்கா காலம் ஆறாம் ஞாயிறு ()

05.05.2024


M. Jegankumar Coonghe  OMI,

Shrine of Our Lady of Good Voyage,

Chaddy, Velanai,

Jaffna.


முதல் வாசகம்: திருத்தூதர் பணிகள்: 10,25-26.34-35.44-48

பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 98

இரண்டாம் வாசகம்: 1யோவான் 4,7-10

நற்செய்தி: யோவான் 15,9-17


திருத்தூதர் பணிகள்: 10,25-26.34-35.44-48

25பேதுரு உள்ளே வரவே, கொர்னேலியு அவரை எதிர்கொண்டு போய் அவர் காலில் விழுந்து வணங்கினார். 26பேதுரு, 'எழுந்திடும்; நானும் ஒரு மனிதன்தான்' என்று கூறி அவரை எழுப்பினார். 27அவரோடு பேசியவாறே பேதுரு உள்ளே சென்றார்

34அப்போது பேதுரு பேசத் தொடங்கி, 'கடவுள் ஆள் பார்த்துச் செயல்படுவதில்லை என்பதை நான் உண்மையாகவே உணர்கிறேன். 35எல்லா இனத்தவரிலும் அவருக்கு அஞ்சி நடந்து நேர்மையாகச் செயல்படுபவரே அவருக்கு ஏற்புடையவர்.


பிற இனத்தவர் தூய ஆவியால் ஆட்கொள்ளப்படுதல்

44பேதுரு தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கும்போது அவருடைய சொற்களைக் கேட்ட அனைவர்மீதும் தூய ஆவி இறங்கிவந்தது. 45பேதுருவோடு வந்திருந்த விருத்தசேதனத்தில் நம்பிக்கையுடையோர் தூய ஆவியின் கொடை பிற இனத்தவர்மீதும் பொழியப்பட்டதைக் கண்டு மலைத்துப் போயினர்; 46ஏனென்றால் அவர்கள் பரவசப்பேச்சுப் பேசிக் கடவுளைப் போற்றிப் பெருமைப்படுத்தியதைக் கண்டார்கள்.

47பேதுரு, 'நம்மைப் போலத் தூய ஆவியைப் பெற்றுக் கொண்ட இவர்கள் தண்ணீரால் திருமுழுக்குப் பெறுவதை யார் தடுக்க முடியும்?' என்று கூறி, 48இயேசு கிறிஸ்துவின் பெயரால் அவர்களுக்குத் திருமுழுக்குக் கொடுக்கப் பணித்தார். பின்பு அவர்கள் சில நாள் தங்களுடன் தங்கியிருக்குமாறு அவரிடம் வேண்டினார்கள்.


இன்றைய முதல் வாசகம் கொர்னேலியுவும் பேதுருவும் என்ற பகுதியிலிருந்து எடுக்கப்படுகிறது. திருச்சபை யூதர்களை மட்டும் அல்லாது யூதர்-அல்லாதவர்களையும் தழுவ தொடங்கிய காலத்தில் கொர்னேலியு (Κορνήλιος கொர்னேலியொஸ்) மிக முக்கியமான ஒரு நபராக காணப்படுகிறார். இவர் உரோமைய இராணுவத்தில் ஒரு நூற்றுவத் தலைவராக இருந்தார், கடலோர செசாரியாவில் பணியாற்றினார். கொர்னேலியுவின் மனமாற்றம் நான்கு தடவைகளாக திருத்தூதர் பணிகள் நூலில் காட்டப்படுகின்றமை அவருடைய முக்கியத்துவத்தை நன்கு தெரிவிக்கின்றது எனலாம். எருசலேம் பொதுச் சங்கத்தில் கொர்னேலியுவின் வீட்டில் நடந்த நிகழ்வுதான் உதாரணத்திற்கு எடுக்கப்பட்டது, இந்த உதாரணத்தினால்தான் புறவினத்தவர்கள் தங்கள் உரிமைகளை பெற்றனர்

  யூதரல்லாத, நேர்மையாளராக, மக்களை மதிப்பவராக அத்தோடு கடவுளுக்கு அஞ்சுபவராக கொர்னேலியு காட்டப்படுகிறார். கொர்னேலியு கிறிஸ்தவராக மாறுவதற்கு முன்னர் யூதர்களோடும் அவர்களின் செபக்கூடங்களோடும் நல்ல உறவை கொண்டிருந்திருக்க வேண்டும். கொர்னேலியுவின் வீட்டில் அனைவரும், தூய ஆவியாரை பெற்ற நிகழ்வு புறவினத்தாரின் பெந்தகோஸ்து என அழைக்கப்படுகிறது. கொனேலியுவின் வீட்டில் பேதுரு உணவருந்தியது பலத்த கேள்விகளையும், விவாதங்களையும் ஏற்படுத்தியது. இந்த விவாதங்கள்தான் பிற்காலத்தில் இந்த முறையையே திருச்சபையின் முறையாக எற்படுத்த உதவியது. கொர்னேலியுவின் மனமாற்றம், புறவின உலகின் மனமாற்றத்தின் தொடக்கமாக பார்க்கப்படுகிறது. கொர்னேலியு யூத கிறிஸ்தவர்களின் பழமைவாதசிந்தனைகளை மாற்றினார். திருச்சபைக்கு புதிய அடையாளம் கொடுத்தார். மூன்று நூற்றாண்டுகளுக்கு பின்னர் முழு உரோமை பேரரசுமே கிறிஸ்தவர்களாக மாறியதற்கு கொர்னேலியு தொடக்கமாக இருக்கிறார்.  



.25: கொர்னேலியு ஒரு உரோமைய நூற்றுவத்தலைவர், குறிப்பிட்ட அளவு அதிகாரத்தைக் கொண்டிருந்தவர். உரோமையர்கள் புறவினத்தவர்களின் கால்களில் விழுவததை இராணுவ சட்டங்களோ அல்லது உரோமைய ஆதிக்க கலாச்சாரமோ ஏற்றுக்கொள்ளாது. பேதுரு ஒரு சாதாரண, கலிலேய யூதன். இவருடைய காலடியில் ஒரு உரோமைய இராணுவ அதிகாரி விழுவது ஆச்சரியமாக இருக்கிறது. இதன் மூலம் கொர்னேலியுவிற்கு பேதுருவின் உள்ளார்ந்த முக்கியத்துவம் நன்கு தெரிந்திருந்தது என்பது புலப்படுகிறது, அத்தோடு பேதுரு ஆண்டவரின் பிரசன்னத்தை முழுமையாக கொண்டிருந்த, மதிக்கப்பட்ட தலைவராக உருவாகியிருந்தார் என்பதும் புலப்படுகிறது

  கிரேக்க விவிலியம் கொர்னேலியு செய்த மூன்று விதமான செயற்பாடுகளை அழகாகக் காட்டுகிறது (συναντήσας αὐτῷ ὁ Κορνήλιος⸃ πεσὼν  ⸀ἐπὶ τοὺς πόδας προσεκύνησεν. சுனான்டேசாஸ் அவுடோ ஹொ கொர்னேலியொஸ் எபி டூஸ் பொதாஸ் புரொசெகுனேசென்- கொர்னேலியு அவரைச் சந்தித்து, காலில் விழுந்து வணங்கினார்). ஆரம்ப திருச்சபையில் சில முக்கிய ஆட்சியாளர்கள் ஆன்மீக தலைவர்களுக்கு எப்படியான மரியாதையைக் கொடுத்தார்கள் என்பது இங்கே புலப்படுத்தப்படுகிறது


.26: பேதுருவின் புனிதத் தன்மையும், தாழ்ச்சியும் அழகாக வர்ணிக்கப்படுகிறது. கொர்னேலியு என்ற உரோமைய அதிகாரி மிக உயர்ந்த வணக்கத்தைக் கொடுத்ததினால், பேதுரு மகிழ்ந்ததாக தெரியவில்லை, மாறாக பேதுரு சற்று குழப்பமடைகிறார். தான் யார்? என்பதில் பேதுரு தெளிவாகவே இருக்கிறார். மக்கள் அவரை கடவுளின் பிரதிநிதி என்று நினைத்தாலும், அந்த தகமை மக்களுக்கு பணியாற்றவே, மாறாக அவர்களை சிறுமைப் படுத்த அல்ல என்பதை தன்னுடைய இயல்பான வார்த்தையால் அவர் காட்டிவிடுகிறார்

 ἀνάστηθι· καὶ ἐγὼ αὐτὸς ἄνθρωπός εἰμι. (அனாஸ்டேதி காய் எகோ அவ்டொஸ் அந்த்ரோபொஸ் எய்மி- எழுந்திரும், நானும் மனிதராகவே இருக்கிறேன்). இக்காலத்தில் சில சமய மற்றும் ஆன்மீகத் தலைவர்கள் தங்களை கடவுளின் நேரடி பிரதிகளாக் காட்டி, மக்களை அடிமைகளாக்குகின்ற சூழ்நிலையில், இந்த உண்மைச் சீடர், பேதுரு தன் பணியின் வடிவங்களில் மிகவும் நேர்த்தியாக இருக்கிறார். கடவுள் ஒருவருக்கே வணக்கம் கொடுக்கப்பட வேண்டும் என்பதிலும் பேதுரு கருத்தாய் இருக்கிறார்.


.27: இவருடைய செயலால் சற்று குழப்பமடைந்தாலும், தன் வருகையின் நோக்கத்தில் கவனமாக இருக்கிறார் பேதுரு. கொர்னேலியுவை புறவினத்தவர் என்று பாராமல், சகோதரராக பார்த்து, பேதுரு அவருடைய வீட்டினுள் செல்கிறார்

கொர்னேலியு தன்னுடைய உரோமைய ஆதிக்கத்திலிருந்து வெளிவருகிறார், பேதுரு தன்னுடைய யூத பழமைவாதத்திலிருந்து வெளியேவருகிறார். இரண்டு உத்தம மனிதர்களும் சந்திக்கிறார்கள்


.34: கடவுள் ஆள்பார்த்து செயற்படுகிறாரா? என்பது ஒரு மிக முக்கியமான கேள்வி. யூதர்களின் பல சட்டங்களும், நம்பிக்கை பிரமாணங்களும், கடவுள் ஒரு இனத்துக்கு உரியவர் போன்ற சிந்தனைகளை தந்தது என்பதை மறைக்க முடியாது. இதனைப்போலவே உரோமைய, கிரேக்க பாரசீக மத சிந்தனைகளும் இருந்திருக்கின்றன. தெய்வங்கள் தங்கள் மக்களை மட்டுமே முதன்மைப் படுத்தின என்பது ஒரு நம்பிக்கையாக இருந்திருக்கிறது

 பேதுரு, இந்த சிந்தனை பிழை என்று காட்டுகிறார். இதனை தான் உண்மையாகவே உணர்கின்றேன் என்று கூறுகிறார் (εἶπεν· ἐπ᾿ ἀληθείας καταλαμβάνομαι ὅτι οὐκ ἔστιν προσωπολήμπτης ὁ θεός எய்பென் எப் அலேதெய்யாஸ் காடாலாம்பானொமாய் ஹொடி ஊக் எஸ்டின் புரொசோபொலேம்டேஸ் ஹொ தியுஸ் - உண்iமாயகவே உணர்கின்றேன், அதாவது கடவுள் முகம்பர்க்கிறவர் அல்லர்). 

 பிழையான புராணங்களும், இதிகாசங்களும் கடவுளின் பெயரால் பிரிவினையையும், வேற்றுமைகளையும் உருவாக்குகின்ற இக்காலத்தில், கடவுள் முகம் பார்த்து செயல்படுகிறவர் அல்ல என்ற உண்மை ஆழமாக சொல்லப்படவேண்டும்


.35: கடவுளுக்கு ஏற்புடையவராக செயல்படுபவர் யார்? மோசேயின் மற்றும் லேவிய சட்டங்களை ஒருவர் சரிவர கடைப்பிடித்தால் அவர்தான் கடவுளுக்கு ஏற்புடையவர் என்ற வாதம் யூதர்கள் மட்டில் பலமாக இருந்தது. இயேசுவின் போதனைகள் இந்த சிந்தனையை சவால் படுத்தியது. சட்டங்கள் ஒரு வாய்ப்பு மட்டுமே, அதாவது அவை ஓர் ஊடகம், ஆனால் முடிவல்ல. யாரும் கடவுளுக்கு ஏற்புடையவர் ஆகலாம்

 சட்டங்கள் கடவுளுக்கு அஞ்சி நடக்கச் சொல்கிறது. சட்டங்கள் தெரியவிட்டாலும், மனட்சாட்சி என்ற உள்ளார்ந்த சட்டமும் கடவுளுக்கு அஞ்சி நடக்கச் சொல்கிறது. எவராவது கடவுளுக்கு அஞ்சி நடந்தால் அவர் யூதரோ, அல்லது யூதர் அல்லாதவரோ, அவரும் கடவுளுக்கு ஏற்புடையவரே, என்ற உண்மை பேதுருவால் நேர்த்தியாக உரைக்கப்படுகிறது

ἐν παντὶ ἔθνει ὁ φοβούμενος αὐτὸν καὶ ἐργαζόμενος δικαιοσύνην δεκτὸς αὐτῷ ἐστιν. என் பான்டி எத்னெய் ஹொ பொபூமெனொஸ் அவ்டொன் காய் எர்காட்சொமெனொஸ் திகாய்யோசுனேன் டெக்டொஸ் அவ்டோ எஸ்டின் - எல்லா இனத்திலும் அவருக்கு அஞ்சுவோர் மற்றும் நீதியான செயற்பாடுகளைச் செய்வோர், அவருக்கு ஏற்புடையவராக இருக்கிறார்கள்


.44: இந்த பகுதி, கொர்னேலியுவின் வீட்டில், பேதுருவின் உரையின் பின்னர் நடந்தவற்றை காட்சிப்படுத்துகிறது

 பேதுரு பேசிக்கொண்டிருக்கும் போதே, பேதுருவின் சொற்களைக் கேட்ட அனைவர் மீதும் தூய ஆவியார் இறங்கிவருகிறார். திருமுழுக்கு பெற்றபோதுதான் தூய ஆவியார் இறங்கிவந்தார் என்ற சிந்தனையில், இந்த காட்சி சற்று மாறுபடுகிறது. இங்கே திருமுழுக்கை பெறுவதற்கு முன்பே இவர்கள் தூய ஆவியை பெற்றுக்கொள்கிறார்கள். அத்தோடு, கொர்னேலியுவின் வீட்டில் இருந்த அனைவரும் தூய ஆவியைப் பெற்றுக்கொள்கிறார்கள். இந்த வரியும், ஆரம்ப கால திருச்சபையின் நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. தூய ஆவியாரும் ஆள் பார்த்து செயற்படுகிறவர் அல்ல, அவர் யார்மேல் இறங்க வேண்டும் என்பதையும் அவர்தான் தீர்மானிக்கிறார். பேதுருவின் சொல்லைக் கேட்ட அனைவரும் (ἐπὶ πάντας τοὺς ἀκούοντας τὸν λόγον  எபி பான்டாஸ் டூஸ் அகூஊன்டாஸ் டொன் லொகொன், அந்த வார்த்தையைக் கேட்ட அனைவர் மேலும்) இங்கே நம்பிக்கை கொள்ள முயன்றோர் என்ற பொருளையும் தரும்


.45: பேதுருவோடு வந்திருந்தவர்கள் மலைத்துப்போயினர் (ἐξέστησαν எட்க்செஸ்டேசான்- வியந்துபோனார்கள்). இந்த மலைத்துப் போதல் என்பது அவர்கள் இதனை எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் என்பதைக் காட்டுகிறது. வந்திருந்தவர்களை விருத்தசேதனத்தில் நம்பிக்கையுள்ளவர்கள் என்று லூக்கா காட்டுகிறார். இவர்கள் யூதர்களாகவே இருந்திருக்க வேண்டும். எதோ ஒரு தேவைக்காக இப்படி அவர்களை அவர் அடையாளப்படுத்துகிறார் (περιτομῆς πιστοὶ  பெரிடொமேஸ் பிஸ்டொய்- விருத்தசேதனத்தில் நம்புவோர்). 

 விருத்தசேதனத்தில் நம்பிக்கையுடையோர், அவர்களுக்கு மட்டும்தான் தூய ஆவி என நினைத்திருப்பார்கள், இங்கே தூய ஆவி புறவினத்தவரை ஆட்கொள்வது, இவர்களின் நம்பிக்கையை ஆட்டம் காண வைக்கிறது. ஆக விருத்தசேதனத்திற்கும், தூய ஆவியாரின் வருகைக்கும் சம்மந்தம் இல்லை என்ற உணர்வை இவர்கள் பெற்றிருக்கலாம். அல்லது கடவுளுடைய பார்வையில் விருத்தசேதனம் மற்றும் சாதாரணமானவர்கள் அனைவரும் சமனே என்ற புது அறிவையும் இவர்கள் பெற்றிருக்கலாம். லூக்காவின் இந்த செய்தி அக்கால, துன்புறுத்தப்பட்ட ஆரம்ப கால திருச்சபைக்கு ஆறுதலாக இருந்திருக்கும்


.46: அத்தோடு புறவினத்தவர்கள் பரவசப் பேச்சு பேசி கடவுளைப் போற்றுவதையும் இவர்கள் கண்டார்கள். பரவசப் பேச்சு (γλώσσαις குலோஸ்சாய்ஸ்-பல மொழிகளில்) என்பது ஒரு வகையான அடையாளத்தைக் குறிக்கிறது. படித்தவர்கள் பல மொழிகளில் பேசுவது யூத உலகத்தில் சாதரணமாக இருந்திருக்கும், ஆனால் பாமர மக்கள் பல மொழிகளில் பேசுவது நிச்சயமாக ஆச்சரியமே. மனிதர்கள் சாதாரண விலங்குகள் என்பதையும் தாண்டி அவர்களுள் ஆன்மா இருக்கிறது என்பதற்கு இந்த அடையாளம் ஒரு செய்தியைக் கொடுக்கிறது. கிரேக்க உலகத்திலும் இந்த பரவசப் பேச்சு அறியப்பட்டிருக்க வேண்டும், தூய பவுல் பரவசப் பேச்சு பேசுவதை தூய ஆவியாரின் கொடைகளில் ஒன்றெனக் காண்கின்றார்

 பெந்தகோஸ்து விழாவில் திருத்தூதர்கள் பரவசப் பேச்சு பேசினார்கள், மக்கள் அதனை தத்தமது மொழிகளில் புரிந்துகொண்டார்கள். விவிலிய ஆய்வாளர்கள் பல மொழி என்கின்ற இந்த பரவசப் பேச்சைப் பற்றி பல விவாதங்களை முன்னெடுக்கின்றனர். சிலர் இதனை ஒருவகையான பரவச நிகழ்வு என்று மட்டுமே காண்கின்றனர், சிலர் இதனை மொழிப் புலமைத்துவம் என வாதிடுகின்றனர் இன்றும் சிலர் இதனை ஆண்டவரின் கொடை எனக் காண்கின்றனர். எது எவ்வாறெனினும், பரவசப் பேச்சு என்பது தூய ஆவியாரின் வருகையோடு சம்மந்தப்படுகிறது


.47: பரவசப்பேச்சை தூய ஆவியாரின் அடையாளமாக கண்டுகொண்ட பேதுரு, புறவின மக்களுக்கு சார்பாக பேசுகிறார். தூய ஆவியாரைப் பெறும் எவரையும் திருமுழுக்கிலிருந்து தடுக்க முடியாது என்ற தீர்ப்பை வழங்குகிறார்

 தூய ஆவியாரின் வருகையின் பின்னர்தான் இங்கே திருமுழுக்கு வழங்கப்படுகிறது. சில வேளைகளில், திருமுழுக்கின் பின்னர் தூய ஆவியாரின் வருகை நிகழ்கின்றது


.48: அங்கிருந்தவர்கள் இயேசுவின் பெயரில்தான் திருமுழுக்கு பெறுகிறார்கள். ஆரம்ப கால திருச்சபையில் திருமுழுக்கு இயேசுவின் பெயரில்தான் கொடுக்கப்பட்டிருக்கிறது. பிற்காலத்தில்தான் திருமுழுக்கு திரித்துவத்தின் பெயரில் கொடுக்கப்பட்டது எனலாம் (ἐν τῷ ὀνόματι  ⸄Ἰησοῦ Χριστοῦ⸅ என் டோ ஒனொமாடி ஈயேசூ கிறிஸ்டூ- இயேசுவின் பெயரில்)

 இங்கே திருமுழுக்கு கொடுக்கிறவர் பேதுரு மட்டும்தான் என்பதும் காட்டப்படவில்லை. பேதுரு கட்டளை கொடுக்கிறார், ஆக பலர் திருமுழுக்கு கொடுத்திருக்க வேண்டும் (προσέταξεν புரொசெடாட்சென்- கட்டளையிட்டார்). பேதுரு இவர்களுடன் பல நாட்கள் தங்கியிருந்த பின்னரே திரும்புகிறார்




திருப்பாடல் 98

1ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். அவருடைய வலக்கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன

2ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்; பிற இனத்தார் கண்முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார்

3இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பையும் உறுதிமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார். உலகெங்குமுள்ள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர்

4உலகெங்கும் வாழ்வோரே! அனைவரும் ஆண்டவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்! மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப் புகழ்ந்தேத்துங்கள்

5யாழினை மீட்டி ஆண்டவரைப் புகழ்ந்தேத்துங்கள்; யாழினை மீட்டி இனிய குரலில் அவரை வாழ்த்திப் பாடுங்கள்

6ஆண்டவராகிய அரசரின் முன்னே எக்காளம் முழங்கி கொம்பினை ஊதி ஆர்ப்பரித்துப் பாடுங்கள்

7கடலும் அதில் நிறைந்தவையும் உலகும் அதில் உறைபவையும் முழங்கிடுக

8ஆறுகளே! கைகொட்டுங்கள்; மலைகளே! ஒன்றுகூடுங்கள்

9ஆண்டவர் முன்னிலையில் மகிழ்ந்து பாடுங்கள்; ஏனெனில், அவர் உலகுக்கு நீதி வழங்க வருகின்றார்; பூவுலகை நீதியுடன் ஆண்டிடுவார்; மக்களினங்களை நேர்மையுடன் ஆட்சி செய்வார்.


இது ஒரு குழு புகழ்சிப்பாடல். மூன்று இடங்களில் வியங்கோள் வாக்கியங்கள் பாவிக்கப்பட்டுள்ளன. பின்னர் அந்த கட்டளைக்கான காரணங்களும் விளக்கப்பட்டுள்ளன

இஸ்ராயேல் மக்களின் வாழ்வில் புதுமைகள் என்றால் அவை ஆண்டவர் செய்தவை மட்டுமே. ஆண்டவரின் செயல்கள் அனைத்தையும் அவர்கள் புதுமைகளாகவும், ஆச்சரியமூட்டும் செயல்களாகவும் கண்டு பாவித்து அதனை தங்கள் பிள்ளைகளுக்கும் எதிர்கால சந்ததியினருக்கும் கடத்தினர். எந்தக் கடவுள் பெரியவர், அல்லது உண்மையானவர்? என்ற வாதம் அக்காலத்தில் மிகவும் முக்கியமான ஆன்மீக போட்டியாக இருந்தது. சில பேரரசுகளில் அரசர்கள், தங்களை கடவுள்களாக பிரகடனப்படுத்திக்கொண்டனர். எகிப்து அசிரியா, பபிலோன், பாரசீகம், கிரேக்கம், உரோமை போன்றவை இதற்கு நல்ல உதாரணங்கள். இப்படியான சுற்றத்தில், இந்த ஆசிரியர் கடவுள் ஒருவரே வியப்புக்குரியவர் அவர் ஒருவரே உன்னதர், மற்றவர்கள் எல்லாரும் சாதாரணமானவர்களே என்ற ஆழமான சிந்தனையை இலகுவான மொழியில் முன்வைக்கிறார்


.1: முதலாவது கட்டளை கொடுக்கப்படுகிறது. புதியதொரு பாடல் பாடக் கேட்கப்படுகிறது. கடவுள் வியத்தகு செயல்கள் புரிவதன் காரணமாக அவருக்கு பழைய பாடல் அல்ல புதிய பாடல் ஒன்று கேட்கப்படுகிறது. ஆண்டவரின் வியத்தகு செயல்கள் என்பன (כִּֽי־נִפְלָאוֹת עָשָׂה ஏனெனில் வியப்பான செயல்கள் செய்தார்) படைப்பிலிருந்து இன்று வரை அவர் செய்த எல்லாவற்றையும் உள்வாங்கி வருகிறது. வலக்கரமும் (יְמִינ֗וֹ) வலிமைமிகு புயமும் (זְרוֹעַ) ஒத்த கருத்துச் சொற்கள் கவி நயத்திற்காக பாவிக்கப்பட்டுள்ளன. கடவுள் தோல்வி காணாதவர், அவருக்கு வெற்றி மட்டுமே உரியது என்பது, கடவுளை மட்டும் தான் மக்கள் நம்ப வேண்டும் என்றுரைக்கிறது


.2: பிறவினத்தார் முன்னே இஸ்ராயேலின் கடவுள் சில வேலைகளை செய்ய வேண்டியவராய் 

இருக்கிறார். ஏனெனில் இஸ்ராயேலின் தோல்விகள் பிறவினத்தாரின் ஏளனத்தை உண்டுபண்ணுகின்றன. பிறவினத்தார் கண்முன்னே தன் நீதியை வெளிப்படுத்தினார் என்பது 

இஸ்ராயேலுக்காக பிறவினத்தாரை தண்டிப்பது என்ற பொருளையும் கொடுக்கிறது


.3: நிச்சயமாக இந்தப் பாடல் ஏதோ ஒரு இடப்பெயர்வின் பின் பாடப்பட்டதாகவே இருக்கும். பபிலோனிலிருந்து வந்ததன் பின்னர் பாடப்பட்டதாக இருக்க அதிகமான வாய்ப்புக்கள் உள்ளன. எகிப்திலிருந்து வந்ததன் பின் எழுதப்பட்டதாகவும் சிலர் இதனை காண்கின்றனர். அல்லது எகிப்தின் அனுபவங்களை நினைத்து எழுதப்பட்டிருக்கலாம். இஸ்ராயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட பேரன்பு மற்றும் உறுதி மொழி என்பது பலவற்றை குறிக்கலாம்:

. வாக்களிக்கப்பபட்ட நாடு

. நாடு திரும்புதல்

. விசேட ஆசீர்வாதம்

. விசேட தெரிவு

 முழு உலகு என்பது இங்கு அக்கால அரமாயிக்க உலகை மட்டுமே குறிக்கும் என நினைக்கிறேன். இன்றைய எம்முடைய முழு உலகு பற்றிய சிந்தனைகளை இந்த ஆசிரியரின் சிந்தனையுடன் பார்க்க முடியாது.


.4: இரண்டாவது வியங்கோள் வாக்கியம் பாடப்படுகிறது. இந்த வியங்கோளில் முழு உலகமும் உள்வாங்கப்படுகிறது (כָּל־הָאָרֶץ). இதனை முழு உலகம் என்பதைவிட, இஸ்ராயேலின் வார்த்தையில் முழு நிலமும் என்று கூட சொல்லலாம். மகிழ்ச்சியாக இருத்தல் மற்றும் பாடல் பாடுதல் என்பன ஒத்த கருத்துள்ள சொற்பிரயோகங்கள்


.5: யாழ், (כִּנּוֹר கிண்ணோர்) இது ஒரு நரம்பிசைக் கருவி, சாதாரண இசைக்கும் இறை

இசைக்கும் இந்தக் கருவி பாவிக்கப்பட்டது. இது அக்காலத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு முக்கியமான இசை வாத்தியமாக காணப்பட்டது. இந்த யாழிற்க்கும் எமது யாழ்ப்பாணத்திற்கும் நெருங்கிய தொடர்புள்ளதாக வடக்கு பாரம்பரிய கதைகள் கூறுகின்றன. தாவீது அரசர் இந்த யாழ் கருவியை மீட்டுவதில் ஆர்வமுள்ளவராய் இருந்ததாகவும் இஸ்ராயேல் நாட்டு நம்பிக்கைகள் கூறுகின்றன. கடவுளை புகழ்வதற்கு இனிமையான குரல் கொடுக்கப்படுகிறது. சில ஆலயங்களில் இனிமையான குரல்கள் இல்லாவிட்டாலும், குடும்ப பாரம்பரியங்களை கொண்டு பாடகர் குழாமில் இனிமையான குரல் உள்ளவர்களை இணைக்காமல் விடுவது அல்லது தாங்கள் குரல்களைக் காட்டுவதற்காகவே பாடகர் குழாமை பயன்படுத்துவதை இன்றும் சகித்துக் கொண்டிருக்க வேண்டியதாய் உள்ளது


.6: இங்கே இரண்டு இசைக் கருவிகள் பாவிக்கப்பட்டுள்ளன: எக்காளம் (חֲצֹצְרוֹת), கொம்பு (שׁוֹפָר) போன்றவை போhக் காலத்தில் பாவிக்கப்படுகின்ற கருவிகள். ஆண்டவரை புகழ்வதற்கும் அல்லது ஆண்டவரின் பிரசன்னத்தை குறிப்பதற்கும் போர்க்கருவிகள் பயன்படுத்தப்படுவது ஒருவேளை தெய்வ பயத்தை குறிப்பதற்காக இருக்கலாம்


வவ.7-8: யார் யாரெல்லாம் ஆண்டவரின் இந்த புகழ்ச்சி ஆர்ப்பரிப்பிற்கு உட்படுகின்றனர் என்பதைக் விவரிக்கின்றார்:


. கடலும் அதில் நிறைந்துள்ளவையும்: கடல் அறிய முடியாததும், ஆபத்துக்கள் நிறைந்ததுமான 

இடமாக கருதப்படுகிறது. கடலும் அதிலுள்ளவையும் ஆண்டவரை புகழுதல், ஆண்டவருக்கு 

இவற்றின் மேலுள்ள அதிகாரத்தைக் காட்டுகின்றது. இயேசுவும் கடல் மேல் நடந்த நிகழ்வை இங்கே நினைவுகூற வேண்டும். உலகும் அதிலுறைந்துள்ளவையும் ஆண்டவரைப் புகழ்தல், கடல்களில் மட்டுமல்ல நிலத்திலுள்ளவையும் ஆண்டவரின் அதிகாரத்திற்கு உட்பட்டுள்ளன


. ஆசிரியர் ஆறுகளையும் மலைகளையும் ஆட்களாக உருவகிக்கின்றார். இஸ்ராயேல் ஆசிரியர்கள் பௌதீக வளங்களை ஆட்களாக உருவகிப்பது மிகவும் குறைவு. இங்கே இவை கானானிய பல கடவுள் கொள்கைகளை ஞாபகப்படுத்தலாம். ஆனால் இந்த பௌதீக வளங்கள் ஆட்களாக இஸ்ராயேல் கடவுளின் வருகைக்கு காத்திருக்கின்றன இவ்வாறு அவைகள் (அவர்கள்) ஆண்டவராகிய கடவுளை உண்மைக் கடவுளாக ஏற்றுக்கொள்கின்றன என்பது போலக் காட்டுகின்றன


.9: ஆண்டவரின் இறுதிநாள் வருகை இங்கே நினைவூட்டப்படுகிறது. ஆண்டவர் ஓர் அரசராக வருகின்றார் அவரது ஆட்சியில் போர் இல்லை, இரத்தக் களரி இல்லை, நாடு பிடித்தலும் அடிமைத்தனங்களும் இல்லை மாறாக இங்கே நீதியும் (צֶדֶק ட்செடெக் நீதி), நேர்மையும் (מֵישָׁר 

மெஷர்) மட்டுமே இருக்கும்.  


1யோவான் 4,7-10

அன்பும் கடவுளும்

7அன்பார்ந்தவர்களே, ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துவோமாக! ஏனெனில் அன்பு கடவுளிடமிருந்து வருகிறது. அன்பு செலுத்தும் அனைவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள். அவர்கள் கடவுளை அறிந்துள்ளார்கள். 8அன்பில்லாதோர் கடவுளை அறிந்து கொள்ளவில்லை; ஏனெனில், கடவுள் அன்பாய் இருக்கிறார். 9நாம் வாழ்வு பெறும் பொருட்டுக் கடவுள் தம் ஒரே மகனை உலகிற்கு அனுப்பினார். இதனால் கடவுள் நம்மீது வைத்த அன்பு வெளிப்பட்டது. 10நாம் கடவுள்மீது அன்பு கொண்டுள்ளோம் என்பதில் அல்ல, மாறாக அவர் நம்மீது அன்புகொண்டு தம் மகனை நம் பாவங்களுக்குக் கழுவாயாக அனுப்பினார் என்பதில்தான் அன்பின் தன்மை விளங்குகிறது.


 அன்பு (ἀγάπη அகாபே- அன்பு) என்ற வார்த்தை யோவானின் புத்தகங்களில் விசேட 

இறையியல் சிந்தனையைக் கொண்டுவருகிறது. யோவான் இப்படியான வார்த்தைகளை புதிய ஏற்பாட்டில் அதிகமாக பயன்படுத்துகிறார்


.7: யோவான் தன் வாசகர்களை அன்பார்ந்தவர்களே! என்று அழைக்கிறார் (Ἀγαπητοί அகாபேடொய்). சில விவிலியங்கள் இந்த சொல்லை நண்பர்களே என்றும் மொழி பெயர்க்கின்றன. இந்த சொல் நண்பர்களைக் குறிக்கலாம், இருந்தும் இது சாதாரண நண்பர்களை மட்டும் குறிக்கவில்லை என்றே தோன்றுகிறது

 ஏற்கனவே உண்மையையும் பொய்மையையும் பற்றி அழகாக விவரித்த யோவான் இந்த பகுதியில், கடவுளுக்கும் அன்பிற்கும் இடையிலான தொடர்பை பற்றி அழகாக விவரிக்கிறார். ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துவோமாக என்கிறார் (ἀγαπῶμεν ἀλλήλους, அகாபோமென் அல்லேலூஸ்- மற்றவருடன் அன்புசெலுத்துவோம்). இந்த 'மற்றவர்' என்பவர்கள், திருச்சபையில் இருக்கும் ஒவ்வொரு கிறிஸ்தவர்களையும் குறிக்கலாம்

 அன்பின் உறைவிடம் கடவுள் என்பதைக் காட்டுகிறார் (ἡ ἀγάπη ἐκ τοῦ θεοῦ ἐστιν ஹே அகாபே எக் டூ தியூ எஸ்டின்- கடவுளிடமிருந்து அன்பு இருக்கிறது). அன்பின் உறைவிடமாக பல தெய்வங்களையும், இடங்களையும் கிரேக்க உலகம் காட்டுகின்ற வேளை, கடவுளை அன்பின் உண்மையான உறைவிடமாக, யோவான் காட்டுகிறார்

 அன்பு கடவுளிடமிருந்து வருகின்ற படியால், அன்பு செலுத்துகிற ஒவ்வொருவரும் கடவுளிடமிருந்து பிறந்தவர்கள், மற்றும் கடவுளை அறிந்தவர்கள் என்ற நிலையை பெறுகிறார்கள். கடவுளிடமிருந்து பிறந்தவர்களும், அவரை அறிந்தவர்களும் என்ற நிலை, இவர்களுக்கு உயர்ந்த இடத்தைக் கொடுக்கிறது


.8: அன்புள்ளவர்களைப் பற்றிச் சொன்னவர், அன்பில்லாதவர்களைப் பற்றிச் சொல்கிறார். அன்பில்லாதவர்கள் கடவுளை அறியாதவர்கள் என்று சொல்லப்படுகிறார்கள். கடவுள் அன்பாய் இருக்கிறார் என்ற முக்கியமான வாதத்திற்கு இந்த வரியே விவிலிய மூலமாக இருக்கிறது.

(ὁ θεὸς ἀγάπη ἐστίν. ஹொ தியூஸ் அகாபே எஸ்டின்- கடவுள் அன்பாய் இருக்கிறார்).

 இந்த வசனம் இறையியலில் பல கேள்விகளை எழுப்புகின்றது. அன்பு என்பது ஒரு உள்ளார்ந்த சக்தி. இது ஒரு மானிட பண்பு. இதனை தெய்வீக பண்பு என்கின்றோம். அன்பு கடவுளின் ஒரு முக்கியமான பண்பா? அல்லது கடவுள்தான் அன்பா? அல்லது அன்புதான் கடவுளா?

அன்பை கடவுள் என்று சொன்னால், அவர் ஓர் உள்ளார்ந்த சக்தியாக மட்டுமே மட்டுப்படுத்தப்படுவார். கிறிஸ்தவ நம்பிக்கையின் படி, அன்பு கடவுளுடைய முதன்மையான பண்பு, அத்தோடு கடவுளுக்கு அதனை விடவும் வேறு பண்புகள் உள்ளன. யோவான் இந்த வசனத்தை தனக்கே உரிய கிரேக்க மொழியில் அமைக்கிறார், இங்கே அன்பு என்கின்ற பதம் எழுவாய் சொல்லாக இருக்கிறது, அதற்கு முன்னுள்ள கடவுள் என்ற சொல்லும் எழுவாய்ச் சொல்லாக இருக்கிறது. வேறு இடங்களில் யோவான் கடவுளை ஒளி என்று சொல்வார் (காணக் 1யோவான் 1,5) அத்தோடு கடவுளை ஆவி என்றும் சொல்லவார் (காண்க யோவான் 4,24). ஆக இந்த இரண்டாவது எழுவாய்ச் சொல் முன் வரும் எழுவாய்ச் சொல்லின் தகமையாகவே நோக்கப்பட வேண்டும்

 தமிழ் விவிலியத்தின் மொழி பெயர்ப்பான 'கடவுள் அன்பாய் இருக்கிறார்' என்பது மிக பொருத்தமான மொழிபெயர்ப்பு


.9: கடவுள் அன்பாய் இருக்கிறார், இந்த கடவுள் தன்னுடைய அன்பை, தன் மகனை உலகிற்கு அனுப்பியதன் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார். அவர் மகனை உலகிற்கு அனுப்பியதன் நோக்கம், மனிதர் நிலைவாழ்வு பெறவே என்பது சொல்லப்படுகிறது

 ஆக இயேசுவின் வருகை, மனிதரின் நிலைவாழ்வு, மற்றும் கடவுளின் அன்பு போன்றவை ஒன்றோடொன்று தொடர்பு பட்டது எனலாம்


.10: அன்பின் தன்மையையும் இந்த வரியில் யோவான் தெளிவு படுத்துகிறார். மனிதர்கள் கடவுள் மீது கொண்டுள்ள அன்பு, அன்பின் தன்மையை காட்ட போதுமானது அல்ல மாறாக கடவுள் தன் மகனை மனிதர்களுக்காக கழுவாயாகக் கொடுத்ததுதான் அன்பின் தன்மையை வெளிக்காட்டுகிறது என்று வாதிடுகிறார்

 கழுவாய் என்ற தமிழ் பதத்திற்கு ἱλασμός (ஹிலாஸ்மொஸ்) என்ற கிரேக்கச் சொல் பாவிக்கப்பட்டுள்ளது. இது முதல் ஏற்பாட்டில் கடவுளின் கோபத்தை தணிக்க செய்யப்படும் பரிகாரத்தைக் குறிக்கிறது. முற்காலத்தில் இதற்கு விலங்குகள் பாவிக்கப்பட்டன. குரு, மக்களின் பாவத்தை கழுவ அதனை ஆட்டின் மீது ஏற்றி அந்த ஆட்டை கூடாரத்தை விட்டு விரட்டி விடுவார், அல்லது அதனை பலியாக ஒப்புக்கொடுப்பார், இப்படியாக மக்கள் தங்கள் பாவங்களில் இருந்தும், கடவுளின் சினத்திலிருந்தும் தப்பித்தார்கள். அதே அடையாளம் இங்கே இயேசுவிற்கு கொடுக்கப்படுகிறது, அதாவது இறைமகனே பலியாடாகிறார், மக்களுடைய அனைத்து பாவங்களையும் சுமந்து தன்னை சிலுவையில் பரிகாரப் பலியாக்குகிறார்




யோவான் 15,9-17

9என் தந்தை என் மீது அன்பு கொண்டுள்ளது போல நானும் உங்கள்மீது அன்பு கொண்டுள்ளேன். என் அன்பில் நிலைத்திருங்கள். 10நான் என் தந்தையின் கட்டளைகளைக் கடைப்பிடித்து அவரது அன்பில் நிலைத்திருப்பது போல நீங்களும் என் கட்டளைகளைக் கடைப்பிடித்தால் என் அன்பில் நிலைத்திருப்பீர்கள். 11என் மகிழ்ச்சி உங்களுள் இருக்கவும் உங்கள் மகிழ்ச்சி நிறைவு பெறவுமே இவற்றை உங்களிடம் சொன்னேன். 12'நான் உங்களிடம் அன்பு கொண்டிருப்பதுபோல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்புகொண்டிருக்க வேண்டும் என்பதே என் கட்டளை. 13தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை. 14நான் கட்டளை இடுவதையெல்லாம் நீங்கள் செய்தால் நீங்கள் என் நண்பர்களாய் இருப்பீர்கள். 15இனி நான் உங்களைப் பணியாளர் என்று சொல்ல மாட்டேன். ஏனெனில் தம் தலைவர் செய்வது இன்னது என்று பணியாளருக்குத் தெரியாது. உங்களை நான் நண்பர்கள் என்றேன்; ஏனெனில் என் தந்தையிடமிருந்து நான் கேட்டவை அனைத்தையும் உங்களுக்கு அறிவித்தேன். 16நீங்கள் என்னைத் தேர்ந்து கொள்ளவில்லை; நான்தான் உங்களைத் தேர்ந்து கொண்டேன். நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன். ஆகவே நீங்கள் என் பெயரால் தந்தையிடம் கேட்பதையெல்லாம் அவர் உங்களுக்குக் கொடுப்பார். 17நீங்கள் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொள்ள வேண்டும் என்பதே என் கட்டளை.


இந்த பகுதி கடந்த வார நற்செய்தியின் தொடர்ச்சி. கடந்த வாரத்தில் இயேசுவே உண்மையான திராட்சை செடி என்பதை நற்செய்தி வாசகம் காட்டியது, இந்த வாரத்தில் அது 

இயேசுவின் அன்பைப் (ἀγάπη அகாபே) பற்றி காட்டுகிறது. அன்பு என்கின்ற கருப்பொருள் விவிலியத்தில் மிக முக்கியமான இறையியலைக் கொடுக்கிறது. விவிலியத்தின் ஒவ்வொரு பிரிவும் இந்த அன்பு என்கின்ற கருப்பொருளை தனித்துவமாக நோக்குகின்றன. யோவான் இந்த அன்பு என்ற கருப்பொருளை நோக்கும் விதம் சற்று ஆழமானது எனலாம்

  யோவான் அன்பை கடவுளோடு நெருக்கமாக ஒப்பிடுகிறார், அதனை கடவுளுடைய அடையாளமாகவும் பார்க்கிறார். இயேசுவை கடவுளுடைய அன்பின் அடையாளமாகவும், அவருடைய உலக வருகை அதனை வெளிப்படுத்துவதாகவும் பார்க்கிறார். இயேசு உலகிற்கு வந்தது மனிதர்களை அவர்கள் பாவத்திலிருந்து விடுவிக்க, இதனை அவர் கடவுளுடைய அன்பின் அதி உச்ச செயற்பாடாக பார்க்கிறார். கிரேக்க மொழி அன்பிற்கு பல சொற்களை பாவிக்கின்றவேளை, யோவான் அகாப்பே என்ற தெய்வீக அன்பைக் குறிக்கும் சொல்லையே தெரிவு செய்கிறார். இயேசு கடவுளுக்கு தன் அன்பை காட்ட அவருக்கு பிரமாணிக்கமாக இருந்தார், கடவுள் விரும்பியதைச் செய்தார். மனிதர்கள் இயேசுவிற்கு பிரமாணிக்கமாக இருக்க, இயேசுவின் கட்டளைகளைக் கடைப்பிடிக்க கேட்கப்படுகிறார்கள்

 கடவுளின் அன்பைப் பெற்ற மக்கள் அந்த அன்பை ஒருவர் ஒருவரோடு பகிர்ந்து கொள்ள கேட்கப்படுகிறார்கள். கடவுளிடம் அன்பைக் காட்ட விளைகிறவர்கள் அவரில் நம்பிக்கை வைக்கவும் கேட்கப்படுகிறார்கள். கடவுளுடையதும், இயேசுவுடையதும் அன்பு நிறைவான அன்பு அது, எற்கனவே நிறைவடைந்து விட்டது, ஆனால் மனிதர்களுடைய அன்பு இன்னமும் நிறைவடையவில்லை. மனித குலத்திற்கு செய்யப்படும் அன்புச் செயல்கள், இந்த அன்பை நிறைவடையச் செய்யும், இயேசுவைப் போல ஒவ்வொரு கிறிஸ்தவரும் தம் அயலவருக்கு இந்த அன்பை வெளிப்படுத்த கேட்கப்படுகிறார்கள்


.9: இயேசு மிக முக்கியமான கட்டளையை இந்த வரியில் கொடுக்கிறார். அதாவது தந்தை அவர் மீது அன்பு கொண்டுள்ளதுபோல அவரும் மக்கள் மீது அன்புகொண்டுள்ளார். இந்த வரி

இயேசுவுடைய அன்பின் ஆழத்தைக் காட்டுகிறது. இயேசுவிற்கும் தந்தைக்குமான உறவு மிக உண்மையானது. அந்த அன்பிற்கு அளவு கிடையாது, அதனைப் போலவே தானும் தன் மக்கள் மீது அன்பு கொண்டுள்ளார் என்பது மிகவும் அழகாக இருக்கிறது. Καθὼς ἠγάπησέν με ὁ πατήρ, κἀγὼ  ⸉ὑμᾶς ἠγάπησα⸊· காதோஸ் ஏகாபேசென் மெ ஹொ பாடேர் காகோ ஹுமாஸ் ஏகாபேசா- என் தந்தை என்மீது அன்பு செலுத்தியது போல, நானும் உங்கள் மீது அன்பு செலுத்துகிறேன்.

 அவருடைய இந்த அன்பில் நிலைத்திருக்கக் கேட்கிறார் இயேசு (μείνατε ἐν τῇ ἀγάπῃ τῇ ἐμῇ. மெய்னாடெ என் டே அகாபே டே எமே- என்னுடைய அன்பில் நிலைத்திருங்கள்). இயேசுவின் அன்பில் நிலைத்திருக்காமல், மனிதர்கள் பலவிதமான நிலையங்களில் நிலைத்திருப்பதே பல சிக்கல்களுக்கு காரணம் என சொல்வது போல உள்ளது இந்த வரி. நிலைத்திருங்கள் என்பதை உறுதியாக இருங்கள் என்றும் மொழி பெயர்க்கலாம்


.10: தன்னுடைய அன்பில் நிலைத்திருக்க இயேசு ஓர் இலகுவான வழியைக் காட்டுகிறார். அதாவது தான் தன் தந்தையின் அன்பில் நிலைத்திருப்பது அவர் கட்டளைகளைப் கடைப்பிடிப்பதால் ஆகும், அவ்வாறே அவர் கட்டளைகளை ஒருவர் கடைப்பிடித்தால், இயேசுவின் அன்பில் நிலைத்திருக்கலாம். கட்;டளைகளுக்கும் அன்பிற்கும் இடையிலான நெருங்கிய தொடர்பு இந்த வரியில் காட்டப்படுகிறது


.11: இயேசுவின் மகிழ்ச்சி (χαρὰ காரா) என்பது மிக முக்கியமான ஓர் அனுபவம். இயேசுவின் மகிழ்ச்சி, அவர் மக்களில் இருக்கவும், இதன் வாயிலாக அந்த மகிழ்ச்சி நிறைவு பெற வேண்டும் என்பதை இயேசு விரும்புகிறார்

 மனிதர்களின் மகிழ்ச்சி, இயேசுவிடம் இருந்து வராமையினால் அவை வெறும் இன்பமாக மட்டுமே இருக்கின்றன, இதனால்தான் அவை அவர்களுக்கு நிறைவைக் கொடுக்காமல் உள்ளன. மனிதர்களின் மகிழ்ச்சி, இயேசுவின் மகிழ்ச்சியாக இருந்தால் அது நிச்சயமாக நிறைவான மகிழ்ச்சியாக இருக்கும். இன்றைய உலகத்தைப் போல, அன்றைய கிரேக்க உலகமும் மகிழ்ச்சியை பலவற்றில் தேடியது. அவற்றைவிடுத்து மகிழ்ச்சியை தன்னில் தேடச் சொல்கிறார் ஆண்டவர். ἡ χαρὰ ἡ ἐμὴ ἐν ὑμῖν  ᾖ καὶ ἡ χαρὰ ὑμῶν πληρωθῇ. ஹே காரா ஹே எமே ஹுமின் காய் ஹே காரா ஹோமோன் பிலேரோதே- என் மகிழ்ச்சி உங்களில் இருக்கவும், அத்தோடு உங்கள் மகிழ்ச்சி நிறைவடையவும்


.12: இயேசு தன்னுடைய கட்டளை என்னவென்பதை மீளவும் அறிக்கையிடுகிறார். ἀγαπᾶτε ἀλλήλους  καθὼς ἠγάπησα ὑμᾶς. அகாபாடெ அல்லேலூஸ் காதோஸ் ஏகாபேசா ஹுமாஸ்- ஒருவர் மற்றவரை அன்புசெய்யுங்கள், நான் உங்களை அன்பு செய்தது போல

 இயேசு தந்தை தன்னை அன்பு செய்வது போல, தன் மக்களை அன்பு செய்கிறார்

இதனைத்தான் அவர் தன் மக்களிடமும் எதிர்பார்க்கிறார். எந்த அளவில் அவர் மக்களை அன்பு செய்கிறாரோ, அதே அளவில் மக்களும் ஒருவர் ஒருவரை அன்பு செய்யக் கேட்கப்படுகிறார்கள்

இந்த அளவிற்கு எதிரான எந்த அன்பும் இயேசுவின் அன்பாக இருக்காது என்பது மறைமுகமாக இங்கே சொல்லப்படுகிறது


.13: இந்த வரிதான் முழு உலகத்திற்கும் அன்பின் மகத்துவத்தைக் காட்டுகிறது. μείζονα ταύτης ἀγάπην οὐδεὶς ἔχει, ἵνα  °τις τὴν ψυχὴν  ⸀αὐτοῦ θῇ ὑπὲρ τῶν φίλων αὐτοῦ.  மெய்டசொனா டவுடேஸ் அகாபேன் ஹுதெய் எகெய், ஹினா டிஸ் டேன் ஸ்புகேன் அவுடூ தே ஹுபெர் டோன் பிலோன் அவுடூ- இதனைவிட பெரிய அன்பில்லை, அதாவது ஒருவர் தன் உயிரை நண்பருக்காக கொடுப்பதைவிட

 இந்த வரியில் மட்டும் பல நூறு புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளன. இங்கே நண்பர்கள் (φίλων பிலோன்) என்பவர்கள் நெருக்கமான நண்பர்களைக் குறிப்பது போல உள்ளது. ஆக இயேசுவிற்கு அனைத்து மக்களும் நெருக்கமான நண்பர்களாகிவிட்டார்கள் என்பது சொல்லப்படுகிறது. இதனைப் போலவே இந்த உலகமும், சக மனிதர்களை பிரிவினைகளைத் தாண்டி, நெருக்கமான நண்பர்களாக பார்க்கவேண்டும் என்ற கட்டளை கொடுக்கப்படுகிறது


.14: இயேசுவின் நண்பர்கள் அவர் கட்டளைகளைக் கடைப்பிடிப்பவர்கள். நண்பர்களாக இருக்க ஒரு குறிப்பிட்ட இனத்திலிருந்து தோன்ற வேண்டிய தேவையில்லை, மாறாக அவர் கட்டளைகளைக் கடைப்பிடித்தால் மட்டுமே போதுமானது. கடவுளின் நண்பர்கள் என்ற உறவு, ஒரு குறிப்பிட்ட மக்கள் கூட்டத்திற்கு மட்டுமே இருந்தது, இப்போது அனைவருக்கும் திறந்துவிடப்படுகிறது. ஆனால் அவர்கள் இயேசுவின் கட்டளைகளைக் கடைப்பிடிக்க கேட்கப்படுகிறார்க்ள


.15: உலக இலக்கியங்கள் தெய்வங்களை முதலாளிகளாகவும், மனிதர்களை அவைகளின் பணியாளர்களாகவும் காட்டுகிறது. மத்திய கிழக்கு இலக்கியங்களும், எகிப்திய இலக்கியங்களும் மனிதர்களை தெய்வங்களின் அடிமைகளாக கருதுகின்ற வேளை, இயேசு தன் மக்களை நண்பர்களுக்குரிய நிலையை கொடுக்கிறார். இந்த இடத்திலும் இயேசு வித்தியாசமான கடவுளாக தன்னை வெளிப்படுத்துகிறார்

 இயேசு ஏன் தன் மக்களை நண்பர்கள் என அழைக்கிறார் என்பதை தெளிவு படுத்துகிறார். நண்பர்களுக்கு அனைத்தும் தெரியும், பணியாளர்களுக்கு தெரியாது. பணியாளர்கள் கூலியை எதிர்பார்த்து தொழில் ரீதியாக வேலைசெய்கிறவர்கள். நண்பர்கள் உறவை எதிர்பார்க்கிறவர்கள். பணியாளர்கள் நண்பர்களாக மாறலாம். நண்பர்களும் பணியாளர்களின் வேலையைச் செய்யலாம்

இருப்பினும் இருவரும் வௌ;வேறானவர்கள். (இந்த உலகம் பல நண்பர்களை பணியாளர்களாக்கி, உறவை விட ஊதியத்தையே முதன்மைப் படுத்துகிறது, அதனை விழுமியமாகவும் காண்கிறது). 

 பணியாளர்கள் என்பதற்கு கிரேக்க விவிலியம் அடிமைகள் என்ற சொல்லையே பயன்படுத்துகிறது (δοῦλος தூலொஸ்). அடிமைகள் என்பவர்கள் கிரேக்க உலகத்தில் எந்த விதமான உரிமைகளையும் பெறாதவர்களாகவே கருதப்பட்டார்கள். நண்பர்கள், உறவினர்களைவிட உயர்ந்த நிலையில் வைக்கப்பட்டார்கள்


.16: நீங்கள் என்னை தேர்ந்துகொள்ளவில்லை நான்தான் உங்களை தேர்ந்துகொண்டேன் என்கிறார் ஆண்டவர். மக்கள் தங்கள் விருப்ப தெங்வங்களை தேடிக்கொள்ளும் வேளையில், இங்கே கடவுள் தன் மக்களை தேர்ந்துகொள்கிறார். இந்த இடத்திலும் இயேசு தன்னை முதல் ஏற்பாட்டு கடவுளாக காட்டுகிறார் எனலாம். முதல் ஏற்பாட்டில் இஸ்ராயேல் மக்களை கடவுள்தான் தேர்ந்து கொள்கிறார். ஆபிரகாமை கடவுள்தான் அழைத்தார். அதனைப்போலவே இங்கே இயேசு தன் மக்களை தேர்ந்துகொள்கிறார்

இந்தத் தேர்வு, கனி தரும் படி கேட்கிறது. மக்கள் கனிதரவும், அந்த கனிகள் நிறைவாக இருக்கவுமே, இயேசு அவர் மக்களை தேர்ந்து கொள்கிறார். οὐχ ὑμεῖς με ἐξελέξασθε ἀλλ᾿ ἐγὼ ἐξελεξάμην ὑμᾶς  ஊக் ஹுமெய்ஸ் மெ எக்செலெட்சாஸ்தெ, அல்ல எகோ எட்ஸ்லெட்சாமேன் ஹுமாஸ்- நீங்கள் என்னை தெரிவு செய்யவில்லை, நான்தான் உங்களை தெரிவுசெய்தேன். 

 இயேசு இவர்களை தெரிவு செய்த படியால் இவர்கள், இயேசுவின் நண்பர்கள் என்ற நிலையை அடைகிறார்கள், இதனால் இவர்கள் இயேசுவின் பெயரால் கேட்கும் அனைத்தையும் கடவுளும் இவர்களுக்கு கொடுக்க ஆயத்தமாக இருக்கிறார்


.17: மீண்டும் ஒருமுறை தன் கட்டளையை இயேசு நினைவூட்டுகிறார்: Ταῦτα ἐντέλλομαι ὑμῖν,  °ἵνα ἀγαπᾶτε ἀλλήλους. தௌடா என்டெல்லொமாய் ஹுமின், ஹினா அகாபாடெ அல்லேலூஸ்

இதை நான் உங்களுக்கு கட்டளையிடுகிறேன், அதாவது ஒருவர் மற்றவரை அன்பு செய்யுங்கள்

இந்த உலகில் அனைவரும் அடிப்படையாக எதிர்பார்ப்பது அன்பு

உண்மையான அன்பு இருக்கும் இந்த உலகத்தில்தான்

அன்பின் பெயரில் பல அநியாயங்களும் நடைபெறுகின்றன

அன்பு என்ற தெய்வீக பண்பு

ஆசையாகவும், விருப்பமாகவும் மட்டுமே மாறிவிட்டது.

அன்பு ஒரு கொடை

பொருளாலும், புகழாலும், இன்பத்தாலும் 

அன்பு மலராது, அப்படி மலர்ந்தால் அது அன்பாகாது

அன்பு கடவுள் தருவது

அவரைப்போலவே அதுவும் இறவாதது, புனிதமானது


ஆண்டவரே உம்மையும், அயலவரையும், என்னையும் அன்புசெய்ய

வரம் தாரும், ஆமென்



அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு 

என்புதோல் போர்த்த உடம்பு (80)



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தூய ஆவியார் பெருவிழா (18.05.2024) Pentacost Sunday

தூய ஆவியார் பெருவிழா (18.05.2024) Pentacost Sunday தூய ஆவியார் பெருவிழா (18.05.2024) மி . ஜெகன்குமார் அமதி , சங்கமம் , அமதிகள் ஆன்மீக...