பாஸ்காக் காலம் நான்காம் ஞாயிறு
நல்ல ஆயன் ஞாயிறு,
உலக தேவழைத்தல் ஞாயிறு.
21.04.2023
M. Jegankumar Coonghe OMI,
Sinthathirai Matha Shrine,
Chaddy, Velanai,
Jaffna.
Friday, 19 April 2024
முதல் வாசகம்: திருத்தூதர் பணி 4,8-12
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 118
இரண்டாம் வாசகம்: 1யோவான் 3,1-2
நற்செய்தி: யோவான் 10,11-18
திருத்தூதர் பணி 4,8-12
8அப்பொழுது பேதுரு தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு அவர்களுக்கு மறுமொழியாகக் கூறியது: 'மக்கள் தலைவர்களே, மூப்பர்களே, 9உடல் நலமற்றியிருந்த இவருக்கு நாங்கள் செய்த நற்செயல் எப்படி நிகழ்ந்தது என்பதைக் குறித்து நாங்கள் இன்று விசாரணை செய்யப்படுகிறோம். 10நாசரேத்து இயேசுவின் பெயரால் இவர் நலமடைந்து நம்முடன் நிற்கிறார். இது உங்கள் எல்லாருக்கும், இஸ்ரயேல் மக்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கட்டும். நீங்கள் இயேசுவைச் சிலுவையில் அறைந்தீர்கள். ஆனால் கடவுள் இறந்த அவரை உயிருடன் எழுப்பினார். 11இந்த இயேசுவே, 'கட்டுகிறவர்களாகிய உங்களால் இகழ்ந்து தள்ளப்பட்ட கல். ஆனாலும் முதன்மையான மூலைக்கல்லாக விளங்குகிறார்.' 12இவராலேயன்றி வேறு எவராலும் மீட்பு இல்லை. ஏனென்றால் நாம் மீட்புப் பெறுமாறு வானத்தின்கீழ், மனிதரிடையே இவரது பெயரன்றி வேறு எந்தப் பெயரும் கொடுக்கப்படவில்லை.
இது பேதுருவுடைய மூன்றாவது மறையுரை, இந்த முறை அவர் சாதாரண மக்களுக்கு அல்லாமல் யூத சமூதாயத்தின் மிக உயர்ந்த ஆன்மீக பீடத்திற்கு உரையாற்றுகிறார். இந்த உரையின் வார்த்தை அமைப்பையும், வசன முறைகளையையும் நோக்கினால், இந்த பேதுருவா இயேசுவை மறுதலித்தவர், அல்லது பணிப்பெண்ணின் கருணையை எதிர்நோக்கியவர் என்று எண்ணத்தோன்றும். உயிர்ப்பு அனுபவம் மற்றும் தூய ஆவியாரின் ஆட்கொள்கை, ஒருவரை எத்துணை பலப்படுத்த முடியும் என்பதற்கு பேதுரு நல்ல ஓர் உதாரணம். இந்த உரைக்கு முன் பேதுருவும் யோவானும் சிறையில் இரவை கழித்திருக்கிறார்கள்.
வ.7: தலைமைச் சங்கத்தார் கேள்வி ஒன்றை கேட்கிறார்கள், அதாவது யாருடைய அதிகாரத்தால் பேதுருவும் யோவானும் அதிசியம் செய்தார்கள் என்பது இவர்களின் கேள்வி. இயேசுவிற்கு எந்த அதிகாரமும் இல்லை என்று சொல்லியவர்களுக்கு, இயேசுவின் பெயரால் அதிசியம் செய்வது பொறுத்துகொள்ள முடியாமல் உள்ளது. ἐν ποίῳ ὀνόματι ⸉ἐποιήσατε τοῦτο ὑμεῖς (என் பொய்யோ ஹொனொமடி எபொய்ஏசாடெ டூடொ ஹுமெய்ஸ்- எந்த பெயரின் ஊடாக இதனை நீங்கள் செய்தீர்கள்?)
வ.8: பேதுரு தூய ஆவியால் ஆட்கொள்ளப்படுகிறார் (πλησθεὶς πνεύματος ἁγίου பிலேதெய்ஸ் புனூமாடொஸ் ஹகியூ- தூய ஆவியால் நிறைந்து). தூய ஆவியாரின் ஆட்கொள்ளுகை அதிகளவில் இருந்திருக்கிறது என்பது இவ்வாறு புலப்படுகிறது. இந்த வரி மூலமாக, பேதுரு பேசுவது தூய ஆவியின் ஆட்கொள்ளுகையினால், எனவே அதனை இவர்கள் உதாசீனம் செய்ய முடியாது என்பது சொல்லப்படுகிறது.
பேதுரு தன்னுடைய உரையை 'மக்கள் தலைவர்களே மூப்பர்களே'! என்று தொடங்குகிறார். இதன் மூலம், அவருடைய உரையின் இலக்கு இவர்கள்தான் என்பது புலப்படுகிறது. அத்தோடு இவருடைய உரை ஒர் அதிகாரபூர்வமான உரை என்பதும் வெளிப்படுகிறது.
வ.9: நன்மை செய்ததற்காக தாங்கள் விசாரணை செய்யப்படுகிறார்கள் என்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார். உடல் நலமற்றவருக்கு நலம் அளிப்பது இஸ்ராயேலின் பாரம்பரியம், இதனை விசாரணை செய்வதன் மூலம், நன்மைத்தனத்தை இந்த தலைமைத்துவம் வெறுக்கிறதா? என்ற கேள்வியை அவர் மறைமுகமாக முன்வைக்கிறார்.
யூத தலைமைச் சங்கம், மக்கபேயர்களின் ஆட்சியின் இறுதியான வடிவம் (συνέδριον சுன்னெத்ரியொன்- தலைமைச்சங்கம்). உரோமையர்கள் இந்த சங்கத்தை மட்டுமே அனுமதித்திருந்தார்கள். இது சமயம் சார்ந்த சங்கமாக இருந்தாலும், இங்கும் அரசியல் பேசப்பட்டது, செய்யப்பட்டது. சமயத்தையும் அரசியலையும் எந்த சமூகத்திலும் பரிக்கமுடியாது என்பதற்கு யூத சமூகமும் விதிவிலக்கல்ல. இந்த சங்கத்தை உரோமையர்கள் கட்டுப்படுத்தினார்கள், அவர்களுடைய ஒப்புதலின் பெயரில்தான் தலைமைக்குருவும் பணிக்கமர்த்தப்பட்டார். நாட்டில் கலகம் ஏற்படுவதை
இந்த சங்கம் ஒருகாலமும் விரும்பவில்லை.
வ.10: பேதுரு தன் ஆண்டவரை அவருடைய அறிந்த பெயரால் அழைக்கிறார். 'நாசரேத்து இயேசு' என்பது அக்காலத்தில் இயேசுவை குறிக்க பயன்பட்ட பெயர், இந்த பெயரில்தான் அவர்மீதான அனைத்து வழக்குகளும் விசாரிக்கப்பட்டன. கிரேக்க மொழி இந்த பெயரை நாசரேயரான இயேசு கிறிஸ்து என்று பதிவுசெய்கிறது (Ἰησοῦ Χριστοῦ τοῦ Ναζωραίου ஈயேசூ கிறிஸ்டூ டூ நாட்ஸோராய்யூ). இந்த இயேசுவை யூதர்கள் சிலுவையில அறைந்து கொன்றார்கள், அவரை கடவுள் உயிருடன் எழுப்பியுள்ளார், இந்த இயேசுவின் பெயரில்தான் இந்த குறிப்பிட்ட மனிதர் நலமடைந்து இருக்கிறார் என்றும் இதனை இவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று பேதுரு முழக்கமிடுகிறார் (γνωστὸν ἔστω πᾶσιν ὑμῖν கின்ஓஸ்டொன் எஸ்டோ பாசின் ஹுமின்- உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கட்டும்). உங்களுக்கு தெரிந்திருக்கட்டும் என்று சொல்வதன் மூலம், உங்களுக்கு தெரியாமல் இருக்கிறது என்று மறைமுகமாக சாடுகிறார் என்றும் எடுக்கலாம். அத்தோடு யூத தலைமைத்துவத்தின் செயல் வேறு, கடவுளின் செயல் வேறு என்பதையும் அவர் பிரித்துக் காட்டுகிறார்.
வ.11: இந்த இயேசுவை யூத தலைமைத்துவம் 'புறக்கணிக்க்பபட்ட கல்;' என்று கண்டது என்கிறார், அத்தோடு யூத தலைமைத்துவத்தை 'கட்டுகிறவர்கள்' என்றும் குறிப்பிடுகிறார். இருப்பினும் இந்த கல் தலைமைக் கல்லாக மாறிவிட்டது என்கிறார் (κεφαλὴν γωνίας கெபாலேன் கோனியாஸ்). திருப்பாடல் 118,22ம் வசனம் இந்த வரியில் பின்புலமாக இருந்திருக்க வேண்டும்.
தலைமைக் கல்லும் புறக்கணிக்கப்பட்ட கல்லும் ஒன்றுக்கொன்று நேர் மறையானவை. புற்க்கணிக்கப்பட்ட கல் பாவனைக்கு உதவாது. தலைமைக் கல் மிகவும் முக்கியமானது. அது கட்டடத்திற்கு மிகவும் இன்றியமையாதது. மனிதர்கள் இயேசுவை புறக்கனிக்க, அவர்தான் கடவுளின் மெசியா, அதாவது புறக்கனிக்கப்பட முடியாதவர் என்ற செய்தி சொல்லப்படுகிறது.
வ.12: புதிய ஏற்பாட்டில் மிகவும் முக்கியமான வரிகளில் இந்த வரியும் ஒன்று. மக்களுடைய மீட்பிற்காக வானத்தின் கீழ் எந்த பெயரும் தரப்பட்டவில்லை என்று சொல்வதன் மூலம் யூதர்கள் இந்த இயேசுவின் பெயரை ஏற்றுக்கொள்ளாமல் மீட்படைய முடியாது என்பதை, அவர்களின் தலைமைச் சங்கத்திற்கே அவர் திடமாக அறிக்கையிடுகிறார். (οὐδὲ γὰρ ὄνομά ἐστιν ἕτερον ὑπὸ τὸν οὐρανὸν τὸ δεδομένον °ἐν ἀνθρώποις ἐν ᾧ δεῖ σωθῆναι ⸀ἡμᾶς. வானத்திற்கு கீழ் எந்த பெயரும் கொடுக்கப்படவில்லை, மனிதர்கள் நாம் மீட்படைய).
திருப்பாடல் 118
நன்றிப் புகழ் மாலை
1ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள். ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.
2‛என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு' என இஸ்ரயேல் மக்கள் சாற்றுவார்களாக!
3‛என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு' என ஆரோனின் குடும்பத்தார் சாற்றுவார்களாக!
4‛என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு' என ஆண்டவருக்கு அஞ்சுவோர்
அனைவரும் சாற்றுவார்களாக!
5நெருக்கடியான வேளையில் நான் ஆண்டவரை நோக்கி மன்றாடினேன்; ஆண்டவரும் எனக்குச் செவி கொடுத்து என்னை விடுவித்தார்.
6ஆண்டவர் என் பக்கம் இருக்க நான் ஏன் அஞ்ச வேண்டும்? மனிதர் எனக்கு எதிராக என்ன செய்ய முடியும்?
7எனக்குத் துணை செய்யும் ஆண்டவர் என் பக்கம் உள்ளார்; என்னை வெறுப்போர்க்கு நேர்வதைக்
கண்ணாரக் காண்பேன்.
8மனிதர்மீது நம்பிக்கை வைப்பதைவிட, ஆண்டவரிடம் தஞ்சம் புகுவதே நலம்!
9உயர்குடியினர் மீது நம்பிக்கை வைப்பதைவிட, ஆண்டவரிடம்
அடைக்கலம் புகுவதே நலம்!
10வேற்றினத்தார் அனைவரும் என்னைச் சூழ்ந்து கொண்டனர்; ஆண்டவர் பெயரால்
அவர்களை அழித்துவிட்டேன்.
11எப்பக்கமும் அவர்கள் என்னைச் சுற்றி வளைத்துக்கொண்டனர்; ஆண்டவர் பெயரால்
அவர்களை அழித்துவிட்டேன்.
12தேனீக்களைப்போல் அவர்கள் என்னைச் சூழ்ந்து கொண்டனர்; நெருப்பிலிட்ட முட்களைப்போல்
அவர்கள் சாம்பலாயினர்; ஆண்டவரின் பெயரால் அவர்களை அழித்துவிட்டேன்.
13அவர்கள் என்னை வலுவுடன் தள்ளி வீழ்த்த முயன்றனர்; ஆனால், ஆண்டவர் எனக்குத் துணை நின்றார்.
14ஆண்டவரே என் ஆற்றல்; என் பாடல்; என் மீட்பும் அவரே.
15நீதிமான்களின் கூடாரங்களில் வெற்றியின் மகிழ்ச்சிக்குரல் ஒலிக்கின்றது; ஆண்டவரது வலக்கை
வலிமையாய்ச் செயலாற்றியுள்ளது.
16ஆண்டவரது வலக்கை உயர்ந்தோங்கி உள்ளது ஆண்டவரது வலக்கை வலிமையாய்ச் செயலாற்றியுள்ளது.
17நான் இறந்தொழியேன்; உயிர் வாழ்வேன்; ஆண்டவரின் செயல்களை விரித்துரைப்பேன்;
18கண்டித்தார், ஆண்டவர் என்னைக் கண்டித்தார்; ஆனால் சாவுக்கு என்னைக் கையளிக்கவில்லை.
19நீதிமான்கள் செல்லும் வாயில்களை எனக்குத் திறந்து விடுங்கள்; அவற்றினுள் நுழைந்து நான்
ஆண்டவருக்கு நன்றி செலுத்துவேன்.
20ஆண்டவரது வாயில் இதுவே! இது வழியாய் நீதிமான்களே நுழைவர்.
21என் மன்றாட்டை நீர் கேட்டதால், எனக்கு நீர் வெற்றி அளித்ததால், உமக்கு நான் நன்றி செலுத்துகின்றேன்.
22கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று!
23ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது! நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று!
24ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம்.
25ஆண்டவரே! மீட்டருளும்! ஆண்டவரே! வெற்றிதாரும்!
26ஆண்டவரின் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர்! ஆண்டவரது இல்லத்தினின்று உங்களுக்கு ஆசி கூறுகிறோம்.
27ஆண்டவரே இறைவன்; அவர் நம்மீது ஒளிர்ந்துள்ளார்; கிளைகளைக் கையிலேந்தி விழாவினைத் தொடங்குங்கள்; பீடத்தின் கொம்புகள்வரை பவனியாகச் செல்லுங்கள்.
28என் இறைவன் நீரே! உமக்கு நான் நன்றி செலுத்துகின்றேன்; என் கடவுளே!
உம்மைப் புகழ்ந்தேத்துகின்றேன்.
29ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; ஏனெனில், அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.
ஆண்டவர் என் பக்கம் இருக்க நான் ஏன் அஞ்ச வேண்டும் என்ற ஆழமான விசுவாசத்தை மையப்பொருளாக வைத்து இந்த 118வது புகழ்சித்திருப்பாடல் வருகின்றது. இந்த
திருப்பாடலை இவ்வாறு பிரிக்கலாம்:
அ). வவ.1-4: ஒரு குழு புகழ்ச்சிக்கான அழைப்பு.
இந்த வரிகள் ஊடாக ஆசிரியர் மக்களை புகழ்சிக்கு அழைக்கிறார். முதலில் மக்களையும் பின்னர் குருக்களையும் அழைப்பது, கடவுளை புகழ்வது அனைவரின் கடமையென அழகாகவும் ஆழமாகவும் காட்டுகிறார். ஆண்டவரின் பேரன்பு என்பது உண்மையில் எபிரேயத்தில் ஆண்டவரின் இரக்கத்தையே குறிக்கிறது (חַסְדּוֹ ,חֶסֶד ஹெசட்- இரக்கம்). ஆண்டவருக்கு அஞ்சுவோர் என்று எபிரேய கோட்பாடுகளை பின்பற்றுவோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
வ.1: ஆண்டவர் நல்லவர், அவரது இரக்கம் என்றென்றும் உள்ளது என்பது ஒரு ஆழமான எபிரேய நம்பிக்கை (לְעוֹלָם חַסְדּֽוֹ׃ லா'ஓலாம் ஹஸ்தோ). ஆண்டவருடைய நன்மைத்தனத்திற்கு முன்னால் மற்றவர்களுடைய நன்மைத்தனங்கள் வெறுமையானவை என்பதை இந்த வரி காட்டுகிறது.
வ.2: இந்த என்றென்றும் உள்ள நன்மைத்தனத்தை இஸ்ராயேல் மக்கள் சாற்றக் கேட்கப்படுகிறார்கள். இதுதான் இஸ்ராயேல் மக்களுடைய படைப்பின் நோக்கம். இதனை ஆசிரியர் ஒரு கட்டளை போல கொடுக்கிறார் (יֹאמַר־נָא יִשְׂרָאֵל யோ'மர்-நா' யிஸ்ரா'ஏல்- செல்வார்களாக இஸ்ராயேலர்).
வ.3: இஸ்ராயேலருக்கு பொதுவாக கொடுக்கப்பட்ட கட்டளை இப்போது ஆரோன் குடும்பத்தாருக்கு கொடுக்கப்படுகிறது, அதாவாது ஆண்டவரின் குருக்களுக்கு கொடுக்கப்படுகிறது. குருக்கள் ஆண்டவரின் புகழைச் சாற்றுவதை தங்களது தலையாய கடைமையாக செய்ய வேண்டும் என்ற செய்தி வலியுறுத்தப்படுகிறது (יֹאמְרוּ־נָא בֵֽית־אַהֲרֹן யோ'ம்ரூ-நா' வெத்-'அஹரோன்- ஆரோனின் குடும்பத்தார் சாற்றவார்களாக).
வ.4: இறுதியான இந்த நம்பிக்கையை அனைத்து ஆண்டவருக்கும் அஞ்சுவோரையும் சாற்றக் கேட்கிறார் ஆசிரியர். இப்படியாக அனைத்து மக்களும் உள்வாங்கப்பட்டிருக்கிறார்கள் எனலாம். அதேவேளை இங்கே பாவிக்கப்பட்டிருக்கின்ற சொற்பிரயோகங்கள் இஸ்ராயேல் மக்களுக்கான ஒத்த கருத்துச் சொற்கள் எனவும் சிலரால் நோக்கப்படுகின்றன (יִרְאֵי יְהוָה யிர்'எ அதோனாய்- ஆண்டவருக்கு அஞ்சுவோர்).
ஆ). வவ.5-13: அரசரின் சாட்சியம்.
இங்கே இன்னொரு புதிய குரல் ஒலிக்கிறது அது அரசரின் குரல். அரசர் தன்னுடைய
இராணுவ துன்பங்களின் போது, எவ்வாறு கடவுள் கைகொடுத்தார் என்பதை சாட்சிசொல்கிறார்.
இதனை மக்கள் தங்களுக்கும் படிப்பினையாக எடுக்க வேண்டுமென்பதே அரசரின் விருப்பம். மனிதர் மீது நம்பிக்கை வைப்பதைவிட ஆண்டவர் மீது நம்பிக்கை வைப்பதே மேல் என்று அரசர் தன்னுடைய நேச படைகளைவிட ஆண்டவர் தரும் பாதுகாப்பே உன்னதமானது என்கிறார்.
வ.5: தான் ஒரு நெருக்கடியான வேளையில் ஆண்டவரை நம்பியதாகவும், ஆண்டவர் அதனைக் கேட்டதாகவும் சொல்கிறார். இந்த வரியுடன் காட்சி மாறுகிறது, இங்கே பேசுகிறவர் அரசராக மாறுகிறார். ஆசிரியர் அரசர் போல பேசுகிறார், அல்லது அரசரை பேசவைக்கிறார் எனலாம். பின்வரும் வரிகள் அவை அரசர்க்குரியவை என்பதை என்பதைக் காட்டுகின்றன.
வ.6: ஆண்டவர் என் பக்கம் இருக்க நான் ஏன் அஞ்சவேண்டும் (יְהוָה לִי לֹא אִירָא
அதோநாய் லி லோ' 'இரா') என்ற ஆழமான நம்பிக்கை, வரியாக தரப்படுகிறது. இந்த வரி தாவீதின் காட்சியை நினைவுபடுத்துவது போல உள்ளது. ஆண்டவர் தன் பக்கம் உள்ளதால் யாருக்கும் அஞ்ச வேண்டிய தேவை தனக்கு இல்லை என்பதை ஆசிரியர் காட்டுகிறார்.
வ.7: தன்னுடைய ஆண்டவருக்கு புதுப்பெயர் ஒன்றை வைக்கிறார். ஆண்டவரை தனக்கு துணைசெய்யும் ஆண்டவர் என்கிறார் (יְהוָה לִי בְּעֹזְרָי அதோனாய் லி பெ'ட்ஸ்ராய்- கடவுள் எனக்கு என் உதவியாக).
வ.8: மனிதர் மீது நம்பிக்கை வைப்பதைவிட ஆண்டவர் மீது நம்பிக்கை வைத்தல் நலம் என்கிறார் ஆசிரியர். இதுவும் தாவீதின் அனுபவத்தை ஒத்திருக்கிறது எனலாம். நம்பிக்கை வைத்தலை, அடைக்கலம் புகுதல் என்ற வார்த்தையில் காட்டுகிறார் ஆசிரியர் (לַחֲסוֹת லாஹசோத்- அடைக்கலம் புக).
வ.9: உயர்குடி மக்களிடம் நம்பிக்கை வைத்தல் ஒரு சாதாரண வழக்கமாக இருந்திருக்கிறது. உயர்குடி மக்களுக்கு எபிரேய மூல விவிலியம் நெதிவிம் (בִּנְדִיבִים׃ பின்திவிம்- உயர்குடிமக்களில்) எனக்காட்டுகிறது. இவர்கள் அரச மைந்தர்களாக இருக்கவேண்டிய தேவையில்லை.
வவ.10-11: வேற்றினத்தார்களை ஆண்டவர் பெயரால் அழித்ததாக ஆசிரியர் காட்டுகிறார். ஆண்டவர் பெயரால் எப்படி போர் செய்ய முடியும். இங்கே இவர் வேற்றினத்தார் என்று சொல்பவர்களை சூழலியலில் இவருடைய சொந்த எதிரிகளாகவே பார்க்க வேண்டும். இவர்களை எபிரேய விவிலியம் גּוֹיִם (கோயிம்- வேற்று நாட்டு மக்கள்) என்று காட்டுகிறது. இவர்கள் பல திசைகளில் ஆசிரியரை சூழ்ந்துகொண்டார்கள் என்று சொல்லப்படுகிறார்கள். இது போரில் எதிரிகள் அரசரை சூழ்ந்து தாக்குவதற்கு சமன்.
வ.12: இந்த எதிரிகளுடைய படைகள் பெரிதாக இருந்திருக்க வேண்டும் அல்லது, அவர்களின் தாக்குதல்கள் துல்லியமாக இருந்திருக்க வேண்டும். இதனால்தான் தன் எதிரிகளை தேனீக்களுக்கு ஒப்பிடுகிறார் ஆசிரியர் (דְבוֹרִ֗ים தெவோரிம்- தேனீக்கள்).
எதிரிகள் தேனீக்களை போல சுறுசுறுப்பாக இருந்தாலும், தான் அவர்களை நெருப்பைப் போல் சுட்டெரிப்பேன் என்கிறார். முட்கள், நெருப்பில் விரைவாக சாம்பலாகும், இதனைப்போலவே ஆண்டவரின் துணையால் எதிரிகள், முட்களைப்போல அழிக்கப்படுவார்கள் என்கிறார் ஆசிரியர்.
வ.13: ஆண்டவரின் துணையை இன்னொருமுறை காட்டுகிறார். ஏதிரிகளின் தள்ளுதல் பலமாக இருந்தாலும், ஆண்டவரின் துணை அதனைவிட பலமாக இருக்கிறது என்பது சொல்லப்படுகிறது.
இ). வ.14-19: புதுப்பிக்கப்பட்ட அரச சாட்சியம்.
வ.14: ஆண்டவரே என் ஆற்றலும் பாடலும் என்று மொழி பெயர்க்ப்பட்டுள்ளது. பாடல், என்பதை பலம் என்றும் மொழிபெயர்கலாம் (זִמְרָה ட்சிம்ராஹ்- இசை, பாடல், பலம்). ஆண்டவர் தன்னை கண்டித்தார் என்று சொல்லி கடவுளின் கண்டிக்கும் உரிமையை ஏற்றுக்கொள்கிறார் அரசர்.
வ.15: நீதிமான்களின் கூடாரங்களில் வெற்றியின் மகிழ்ச்சிக் குரல் ஒலிக்கிறது என்கிறார் (קוֹל רִנָּה கோல் ரின்னாஹ்- மகிழ்ச்சிக் குரல்), இதனை அவர் ஆண்டவரின் வலக்கரத்தின் பலம் என்று காட்டுகிறார் (אָהֳלֵי צַדִּיקִים 'அஹாலே ட்சதிகிம்- நீதிமான்களின் கூடாரங்கள்).
வ.16: விவிலியத்தில் மிக முக்கியமான ஒரு அடையாளம். இது பலம், உரிமை, வாரிசு போன்ற பல அர்த்தங்களைக் கொடுக்கிறது. அதிகமானவர்கள் வலக்கை பழக்கமுடையவர்களாக இருந்ததால் வலக்கை பலத்தின் அடையாளமாக பார்க்கப்பட்டது (יָמִין யாமின்-வலக்கை). இடக்கை பழக்கம் அதிகமான வேளையில் நல்ல அடையாளமாக பார்க்கப்படவில்லை. இருப்பினும் இதற்கும் விதிவிலக்கு இருந்தது. இஸ்ராயேலின் நீதிமான்களில் ஒருவர் இடக்கை பழக்கமுடையவராக இருந்தார், அதனை கடவுள் நல்ல விதமான பாவித்தார் என்று நீதிமொழிகள் புத்தகம் காட்டுகிறது (காண்க நீதி.3,12-30: אֵהוּד בֶּן־גֵּרָא 'எஹுத் பென்-கெரா').
வ.17: ஆண்டவர் வலப்பக்கத்தில் இருப்பதனால் தனக்கு அழிவில்லை என்கிறார். தான்
இறக்கமாட்டேன் என்கிறார். அத்தோடு இவர் இறக்காமல் இருப்பதன் நோக்கம், ஆண்டவரின் செயல்களை எடுத்துரைப்பதே என்கிறார் (לֹא אָמוּת லோ' 'ஆமுhத்- இறவேன்: וַאֲסַפֵּ֗ר வா'அசாபெர்- எடுத்துரைப்பேன்).
வ.18: ஆண்டவர் இவரை கண்டித்ததையும் மறைக்காமல் தன் பாடலில் காட்டுகிறார். ஆண்டவரின் கண்டிப்பிற்கு காரணம் இருக்கிறது என்பதும், இந்த கண்டிப்பால் தான் அழியவில்லை என்பதையும் நேர்மையாக அறிக்கையிடுகிறார்.
வ.19: தான் பாவியாக இருந்தாலும், ஆண்டவரின் கண்டிப்பை சந்தித்தாலும், தன்னை நீதிமான் என்று காட்டுகிறார். இதனால் நீதிமான்கள் செல்லும் வாயில்களில் தானும் செல்ல முடியும் என்பது இவர் நம்பிக்கை. இந்த வாயில்களில் தான் நுழைவது, ஆண்டவருக்கு நன்றி செலுத்தவாகும் என்பதையும் அறிக்கையிடுகிறார் (שַׁעֲרֵי־צֶדֶק ஷ'அரெ-ட்சாதெக்- நீதியின் வாயில்கள்).
உ). வவ.20-28: ஓரு நன்றி வழிபாடு.
இந்த வரிகள் பாடலாக மட்டுமன்றி நன்றி வழிபாடாகவும் உருவகப் படுத்தப்பட்டுள்ளது. இது ஆண்டவரின் வாயில் இவ்வழியாக நீதிமான்கள் நுழைவர் என்பது இந்த வழிபாட்டைக் குறிக்கிறது. 22வது வசனத்தை புதிய ஏற்பாட்டு ஆசிரியர்கள் அதிகமாக இயேசுவிற்கு பாவிக்கின்றனர்- கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்து. 26வது வசனம், ஆண்டவரின் பெயரால் வருகிறவர் ஆசிர்வாதங்களைக் கொண்டுவருகிறார் என்பது, பின்நாளில் குறிப்பிட்ட நபர்களை குறித்து வாசிக்கப்பட்டது, நமக்கு இது இயேசுவைக் குறிக்கிறது. 27வது வசனம், கிளைகளை கையிலேந்தி ஆண்டவரை புகழக் கேட்கிறது, இது ஒருவகை ஆர்ப்பரிப்பைக் குறிக்கலாம். இயேசு எருசலேமுள் நுழைந்தபோது இவ்வகையான ஒரு செயலை கூட்டம் செய்தமை நினைவுக்கு வரலாம்.
வ.20: இந்த வாயில் அதிகமாக எருசலேமின் நுழைவாயில்களில் ஒன்றாக இருந்திருக்க வேண்டும். இங்கே நீதிமான்கள் (צַדִּיקִ֗ים ட்சாதிக்கிம்) என்பவர்கள், ஆண்டவரின் மக்கள் அனைவரையும் குறிக்கலாம். ஆண்டவரின் மக்கள் நீதிமான்களாக வாழ அழைக்கப்பட்டவர்கள் என்பது இங்கணம் சொல்லப்படுகிறது.
வ.21: கடவுளிக்கு நன்றி செலுத்தவே இவர் எருசலேமிற்குள் நுழைகிறார் போல. ஆண்டவர் இவருக்கு செவிசாய்த்ததை, அவர் தன் வேண்டுதல் கேட்கப்பட்டதற்கு ஒப்பிடுகிறார்.
வ.22: கட்டுவோர் புறக்கணித்த கல் முலைக்கல் ஆகிற்று என்ற தமிழ் மொழி பெயர்ப்பு, எபிரேய விவிலியத்தில் (אֶבֶן מָאֲסוּ הַבּוֹנִ֑ים הָיְתָ֗ה לְרֹאשׁ פִּנָּה׃ 'எவென் மா'அசூ ஹபோனிம், ஹாய்தாஹ் லெரோ'ஷ் பின்னாஹ்) என்று உள்ளது. இது ஒரு பழிமொழியாக இருந்திருக்க வேண்டும். இதற்கான சரியான காரணம் சரியாக தெரியவில்லை. பல அர்த்தங்கள் இந்த 'மூலைக்கல்லுக்கு' கொடுக்கப்படுகிறது. சிலர் இதனை 'தலைக்கல்' என்கின்றனர். சாதாரணமாக மூலைக்கற்கள் அல்லது தலைக்கற்கள் நிலத்தினுள் மறைந்துவிடும், இருப்பினும் இவை முக்கியமான கற்களாக இருக்கின்றன. இந்த கற்களின் உறுதியில்தான் கட்டடம் நிலைத்துநிற்கிறது. இதனைவிட வேறு பல அர்த்தங்களும் இந்த கல்லுக்கு கொடுக்கப்படுகிறது. சிலர் சுவரில் இருக்கும் பெயரைக்கொண்ட கல்லை இந்தக் கல்லாக பார்க்கின்றனர், இன்னும் சிலர், இதனை அழகாக செதுக்கப்பட்டு, உயரத்தில் இருக்கும்,
இணைக்கும் கல்லாகவும் இதனை பார்க்கின்றனர். எது எப்படியாயினும் இது, முக்கியமான கல் என்பது மட்டும் மிக தெளிவாக தெரிகிறது.
புதிய ஏற்பாட்டு ஆசிரியர் இந்த 'மூலைக்கல்' அடையாளத்தை இயேசுவிற்கு பாவிக்கின்றனர் (காண்க லூக் 20,17: தி.பணி 4,11: 1பேதுரு 2,7). முதல் ஏற்பாட்டில் பல இடங்களில் இந்த உதாரணம் காணக்கிடைக்கிறது (எசாயா 8,14: 28,16-7). அனைத்து இடங்களிலும் இது ஆண்டவரின் அதிசயமாகவே பார்க்கப்படுகிறது.
வ.23: சாதாரண கல் முலைக்கல் ஆவது நிச்சயமாக மனிதர்களின் கண்களுக்கு வியப்பே,
இதனைத்தான் இந்த வரி காட்டி அதனை ஆண்டவரின் அதிசயமாக பார்க்கிறது.
வ.24: இந்த பாடல் ஒரு முக்கியமான விழா அல்லது வரலாற்று நிகழ்வு நாளில் பாடப்பட்டிருக்க வேண்டும். இந்த வரியின் வார்த்தைகள் அதனை குறிப்பது போல உள்ளது. இந்த குறிப்பிட்ட நாளை ஆண்டவரின் வெற்றியின் நாள் என்கிறார் ஆசிரியர் அத்தோடு, அந்த நாளில் ஆர்ப்பரிக்கவும் அகமகிழவும் கேட்கிறார் (נָגִילָה וְנִשְׂמְחָה நாகிலாஹ் வெநிஷ்மெஹாஹ்- நாம் மகிழ்வோம், நாம் களிப்படைவோம்).
வ.25: இந்த வரி இன்னொரு வேண்டுதல் போல காட்டப்படுகிறது. இதனை பாடலுக்கான பதிலுரையாகவும் எடுக்கலாம். ஆண்டவரே மீட்டருளும் மற்றும் ஆண்டவரே வெற்றிதாரும் என்ற வரிகள் ஒரே அர்த்தத்தையும் கொடுக்கலாம். போரில் பாவிக்கப்படக்கூடிய வார்த்தைகள் போலவும் இவை உள்ளன. הוֹשִׁיעָה נָּא ஹோஷி'ஆஹ் நா' - மீட்டருளும், הַצְלִיחָה נָּא ஹட்சிஹாஹ் நா'- வெற்றி தாரும்.
வ.26: இந்த வரி இன்னொருவர் சொல்வதைப்போல உள்ளது. அனேகமாக இந்த வரியை குருக்கள் அல்லது இந்த குறிப்பிட்ட நிகழ்வில் அரசரை போற்றுகிறவர்கள் சொல்லியிருக்கலாம். இந்த பாடல் பலர் படிக்கும் பாடல் என்பதை இந்த வரியும் நன்றாக காட்டுகிறது.
ஆண்டவர் பெயரால் வருகிறவர் ஆசி பெற்றவர் (בָּרוּךְ הַבָּא בְּשֵׁם יְהוָה பாரூக் ஹபா' பெஷெம் அதேனாய்) என்பது, இந்த பாடலின் கதாநாயகரைக் குறிக்கலாம். பிற்காலத்தில் இந்த பகுதி, புதிய ஏற்பாட்டுக் காலத்தில் இயேசு ஆண்டவருக்கு கொடுக்கப்பட்டது. இந்த வரியின் இறுதிப் பகுதி மக்களுக்கு கொடுக்கப்படும் ஆசீர் போல வார்த்தைப் படுத்தப்பட்டுள்ளது (בֵּרַכְנוּכֶם מִבֵּית יְהוָה׃
பெராக்னூகெம் மிபெத் அதேனாய் - கடவுளின் இல்லத்திலிருந்து உங்களை ஆசீக்கின்றோம்).
வ.27: அனைத்து திருப்பாடல்களினதும் முதன்மையான கதாநாயகர் இறைவன் என்பது இங்கே நன்றாக புலப்படுகிறது. ஆண்டவரே இறைவன் என்பது இஸ்ராயேலரின் முதன்மையான விசுவாச பிரகடணம் (אֵל ׀ יְהוָה֮ 'ஏல் அதேனாய்- ஆண்டவரே இறைவன்). அதோனாய் அல்லது யாவே என்பது, இஸ்ராயேலர் கடவுளை குறிக்க பயன்படுத்திய தனித்துவப் பெயர்ச்சொல். யாவே என்பது அதி பரிசுத்தமான சொல்லாக இருப்பதனால், அதனை எழுதியவர், வாசிக்கும் போது 'அதோனாய்;' என்றனர். பெயரும் ஆளும் எபிரேயர்களுக்கு ஒரே அர்த்தத்தைக் கொடுத்ததும் இதற்கான காரணமாக இருந்திருக்கலாம்.
ஆண்டவரை ஒளியாக கருதுவதால், அவரை ஒளிர்ந்தார் என்கிறார் ஆசிரியர். கிளைகளை கையிலேந்து விழாவை தொடங்கக் கேட்கிறார் ஆசிரியர். முதல் ஏற்பாட்டுக் காலத்தில், இஸ்ராயேல் நாட்டில் ஒலிவ இலைகள் வெற்றியைக் குறிக்க பயன்பட்டன. கிரேக்க நாட்டில் வேறு கிளைகள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். இலைகளைப் போலவே மாட்டுக்கொம்புகளும் வெற்றிப் பவனிக்கு பாவிக்கப்ட்டன. இந்த கொம்புகளுக்குள் நறுமண தைலங்களும் இடப்பட்டன. பிற்கால பந்தங்கள் மற்றும் எக்காள வாத்தியங்கள் போன்றவை இந்த கொம்பிலிருந்து வந்தவையே.
வ.28: மீண்டும் ஒருமுறை நம்பிக்கை சொல்லப்படுகிறது. இதுதான் திருப்பாடல்களின் நோக்கம். ஆசிரியர் கடவுளை தன் இறைவன் என்கிறார் (אֵלִי אַתָּה 'எலி 'அத்தாஹ் - என் இறைவன் நீரே).
இந்த இறைவனுக்கு அவர் நன்றியும் செலுத்தி, அவரை புகழ்ந்துரைக்கவும் செய்கிறார் (אוֹדֶךָּ 'ஓதெஹா நன்றி சொல்வேன், אֲרוֹמְמֶךָּ 'அரோம்மெகா- புகழ்ந்தேற்றுவேன்).
ஊ). வ.29: குழு புகழ்ச்சிக்கான இறுதி அழைப்பு.
இங்கே குருவின் குரல் மீண்டும் ஒலிக்கிறது. அரசரைப் போல மக்கள் கூட்டம் அனைவரையும் நன்றி செலுத்தி ஆண்டவரைப் புகழக் கேட்கிறார். ஆண்டவர் நல்லவர் மற்றும் என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு என்பது, அதிகமாக பாவிக்கப்படும் விவிலிய வரி
(ט֑וֹב כִּ֖י לְעוֹלָ֣ם חַסְדּֽוֹ தோவ் கி லெ'ஓலாம் ஹஸ்தோ- நல்லவர், அதாவது அவரது பேரன்பு என்றும் உள்ளது).
1யோவான் 3,1-2
3. கடவுளின் பிள்ளைகளும் அலகையின் பிள்ளைகளும்
1நம் தந்தை நம்மிடம் எத்துணை அன்பு கொண்டுள்ளார் என்று பாருங்கள். நாம் கடவுளின் மக்களென அழைக்கப்படுகிறோம்; கடவுளின் மக்களாகவே இருக்கிறோம். உலகம் அவரை அறிந்துகொள்ளாததால்தான் நம்மையும் அறிந்து கொள்ளவில்லை. 2என் அன்பார்ந்தவர்களே, இப்போது நாம் கடவுளின் பிள்ளைகளாய் இருக்கிறோம். இனி எத்தன்மையராய் இருப்போம் என்பது இன்னும் வெளிப்படவில்லை. ஆனால் அவர் தோன்றும்போது நாமும் அவரைப் போல் இருப்போம்; ஏனெனில் அவர் இருப்பதுபோல் அவரைக் காண்போம்.
வ.1: τέκνα θεοῦ κληθῶμεν καὶ ἐσμέν: டெக்னா தியூ கிலேதோமென் காய் எஸ்மென் ஷகடவுளுடைய பிள்ளைகளாக அழைக்கப்படலாம் ஆக அவ்வாறே இருக்கிறோம்|
யோவானின் புத்தங்களுக்கே உரிய சொற்பிரயோகம். யோவான் கிறிஸ்தவர்களை கடவுளுடைய பிள்ளைகள் என்று சொல்வதன் மூலம் எல்லாவிதமான வேற்றுமைகளையும் தகர்க்க முயல்கிறார். ὁ κόσμος கொஸ்மோஸ், உலகம் என்று யோவான் யாரைக் குறிப்பிடுகிறார் என்பது மிகவும் சாதூர்தியமாக இருக்கும். இது இயேசுவை ஏற்றுக்கொள்ளாத யூதர்களையோ, திருச்சபையில் பிரிவினைகளை ஏற்படுத்தியவர்களையோ, யோவானின் தலத்திருச்சபைக்கு ஏதிரான கருத்துக்களை பரப்பியவர்களையோ அல்லது அறிவுவாதிகளையோ குறிக்கலாம்.
வ.2. இன்னும் வெளிப்படவில்லை: (οὔπω ἐφανερώθη ஊபோ எபாநெரோதே) இது அக்கால திருச்சபைக்கு பெரிய சிக்கலாகவே இருந்தது. சிலர் ஆண்டவர் வந்துவிட்டார் அங்கே இங்கே என்று பல கதைகளைச் சொன்னதால் யோவானுக்கு தன் மக்களை தெளிவுபடுத்த வேண்டிய தேவையிருக்கிறது. இயேசு இரண்டாம் முறை வரும்போது எப்படி இருப்பார் எனும் கேள்விக்கு (ὀψόμεθα αὐτόν, καθώς ἐστιν ஹெப்சொமெதா அவ்டொன், காதோஸ் எஸ்டின்) ‘அவரைப் பார்ப்போம், அவர் இருப்பதைப் போல| என்று பதிலலிக்கிறார். யோவான், கடவுள் மோயிசனுக்கு வெளிப்படுத்தியதை இங்கே ஞாபகப்படுத்துகிறார் என நினைக்கிறேன் (காண். வி.ப 3,14: אֶהְיֶה אֲשֶׁר אֶֽהְיֶה 'எஹ்யெஹ் 'அஷெர் 'எஹ்யெஹ் - இருந்து கொண்டு இருக்கிறார் அவர் இருந்துகொண்டு இருக்கிறார்).
யோவான் 10,11-18
11நல்ல ஆயன் நானே. நல்ல ஆயர் ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கொடுப்பார்.✠ 12'கூலிக்கு மேய்ப்பவர் ஓநாய் வருவதைக் கண்டு ஆடுகளை விட்டு விட்டு ஓடிப்போவார். ஏனெனில் அவர் ஆயரும் அல்ல் ஆடுகள் அவருக்குச் சொந்தமும் அல்ல் ஓநாய் ஆடுகளைப் பற்றி இழுத்துக்கொண்டு போய் மந்தையைச் சிதறடிக்கும்.✠ 13கூலிக்கு மேய்ப்பவருக்கு ஆடுகளைப்பற்றி கவலை இல்லை. 14-15நல்ல ஆயன் நானே. தந்தை என்னை அறிந்திருக்கிறார்; நானும் தந்தையை அறிந்திருக்கிறேன். அதுபோல நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன. அவைகளுக்காக எனது உயிரைக் கொடுக்கிறேன். 16இக்கொட்டிலைச் சேரா வேறு ஆடுகளும் எனக்கு உள்ளன. நான் அவற்றையும் நடத்திச் செல்லவேண்டும். அவையும் எனது குரலுக்குச் செவி சாய்க்கும். அப்போது ஒரே மந்தையும் ஒரே ஆயரும் என்னும் நிலை ஏற்படும்.✠ 17தந்தை என்மீது அன்பு செலுத்துகிறார். ஏனெனில் நான் என் உயிரைக் கொடுக்கிறேன்; அதை மீண்டும் பெற்றுக்கொள்ளவே கொடுக்கிறேன். 18என் உயிரை என்னிடமிருந்து யாரும் பறித்துக் கொள்வதில்லை. நானாகவே அதைக் கொடுக்கிறேன். உயிரைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு; அதை மீண்டும் பெற்றுக் கொள்ளவும் அதிகாரம் உண்டு. என் தந்தையின் கட்டளைப்படியே நான் இப்படிச் செய்கிறேன்.'
19இவ்வாறு இயேசு சொன்னதால் யூதரிடையே மீண்டும் பிளவு ஏற்பட்டது. 20அவர்களுள் பலர், 'அவனுக்குப் பேய்பிடித்துவிட்டது; பித்துப்பிடித்து அலைகிறான்; ஏன் அவன் பேச்சைக் கேட்கிறீர்கள்?' என்று பேசிக் கொண்டனர். 21ஆனால் மற்றவர்கள், 'பேய் பிடித்தவனுடைய பேச்சு இப்படியா இருக்கும்? பார்வை அற்றோருக்குப் பேயால் பார்வை அளிக்க இயலுமா?' என்று கேட்டார்கள்.
யோவான் நற்செய்தி உருவங்களுக்கு பஞ்சமில்லாத நற்செய்தி. இந்த நற்செய்தியில் யோவான் இயேசுவை வல்லமையுள்ள கடவுளாக காட்டுவார். இன்னும் முக்கியமாக இயேசுவை யோவான், முதல் ஏற்பாட்டில் கடவுளுக்கு கொடுக்கப்பட்ட உருவங்களுடன் தொடர்புபடுத்திக் காட்டுவார். இந்த முயற்சியில் யோவான் இயேசுவை ஆயனாக (ποιμήν பொய்மேன்) உருவகிக்கிறார். ஆடுகளும் ஆயனும் விவிலியத்தில் மிக முக்கியமான உருவகங்கள். ஆபேல்தான் முதல் முதலாக ஆடுகளை வளர்ப்பவர் என காட்டப்டுகிறார் (தொ.நூல் 4,2). அதிகாமான இஸ்ராயேல் தலைவர்கள் ஆடு வளர்ப்பவர்களாகவும், அல்லது மந்தை முதலாளிகளாகவும் இருந்திருக்கிறார்கள் (ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, மோசே, தாவீது). தாவீது மந்தை மேய்பவராக இருந்து பின்னர் இஸ்ராயேலின் ஆயராக மாறினார் (காண்க 2சாமு 7,8). மந்தைகள் பலவீனமான மிருகங்களாக இருந்தபடியால் தங்கள் ஆயனின் பாதுகாப்பிலே அவைகள் வாழ்ந்தன. மேய்ப்பர்களும் அதிகமான நேரங்களையும், தங்கள் வாழ்நாள்களையும் இவைகளுக்காகவே பாலைநிலங்களிலும், மேய்சல்நிலங்களிலும் செலவளித்தனர். இந்த மேய்பப்பர்கள் பலவிதமான ஆபத்துக்களிலிருந்து தங்கள் மந்தைகளை பாதுகாத்தனர். திருடர்கள், கொள்ளைக்காரர்கள், மற்றும் ஆபத்தான காட்டுவிலங்குகளிடமிருந்தும் தங்கள் மந்தைகளை பாதுகாப்பது இவர்களின் வீரமாக இருந்தது (1சாமு 17,34-35).
மந்தைகளில் செம்மறி ஆடுகள், இன்னும் பலவீனமான மிருகங்களாக இருந்தன. இதன் சினையாடுகள், குட்டிகள் போன்றவை விசேடமாக கவனிக்கப்படவேண்டியவையாக இருந்தன. சாதராண மேய்ப்பர்கள் சாக்குடைகளையும், கைத்தடிகளையும், கூழாக்கற்களையும், உணவுப்பைகளையும் கொண்டே தங்களையும் தங்கள் மந்தைகளையும் பாதுகாத்தனர். விவிலியம் மக்களின் தலைவர்களை மேய்ப்பர்கள் என்று அடையாளம் காட்டுவதை வழமையாக கொண்டுள்ளது. இதற்கு இவர்களின் கடினமாக உழைப்பும், இவர்கள் மந்தைகள் மீது கொண்டுள்ள உண்மையான அன்பையும் உதாரணமாக எடுக்கலாம் (காண்க எண் 27,16-17). இஸ்ராயேலரை விட மற்றைய கானானிய மக்களும் தங்கள் தெய்வங்களை தமது ஆயர்களாக பார்க்க முயற்ச்சி செய்திருக்கின்றனர். ஆனால் இஸ்ராயேல், தங்கள் கடவுளை தமது ஆயராக பார்க்க முயற்ச்சிப்பது மிக அழகான உருவகம் (காண்க தி.பா 23, எசே 34). ஆண்டவரே நல்ல ஆயனாக இருக்கின்ற படியால், பல வேளைகளில் விவிலியம் மனித தலைவர்களை கருப்பு ஆயர்களாகவும், கூடாத ஆயர்களாகவும் வர்ணிக்க தவறுவதில்லை (காண்க எரேமி 10,21: 22,22: 23,1-4). தாவீது மற்றும் சைரஸ் போன்றவர்கள் இதற்கு விதிவிலக்காக நல்ல ஆயர்களாக காட்டப்படுகிறார்கள் (காண்க தி.பா 78: எசாயா 44,28). பிற்காலத்திலே இந்த அடையாளம் வரவிருந்த மெசியாவின் அடையாளமாக மாறியது (காண்க எசேக் 34,23: 37,22). அத்தோடு இந்த மெசியா-ஆயர், தாவீதின் வழிமரபிலேதான் வருவார் என்ற சிந்தனையும் மெதுமெதுவாக வளர்ந்தது.
புதிய ஏற்பாட்டில் மத்தேயு மற்றும் லூக்கா நற்செய்தியாளர்கள் இந்த ஆயன் உருவகத்தை பாவிக்க முயற்சி செய்திருக்கிறார்கள் (காண்க மத் 25,32-33: லூக்கா 15,3-7). யோவான் இந்த அடையாளத்தை நன்றாகவே பாவித்திருக்கிறார். நற்செய்தி நூல்களை விட வேறு புதிய ஏற்பாட்டு நூல்களும் இயேசுவை நல்ல ஆயராக காட்டுகின்றன (காண்க எபிரே 13,20). பவுலும் தன்னுடைய சீடர்களையும் ஆரம்ப கால திருச்சபை தலைவர்களையும் ஆயர்களாக ஒப்பிடுகிறார். இப்படியாக விவிலியத்தில் ஆயத்துவம் என்பது ஒரு நல்ல அடையாளமாக காட்டப்படுகிறது எனலாம்.
வ.1: ஆட்டுக்கொட்டில்களுக்கு வாயில் என்பது மிக முக்கியமானது. இந்த வாயில் வழியாகத்தான் ஆடுகள் உள்ளேயும், வெளியேயும் வந்தன. அதனைப்போலவே ஆயர்களும் இந்த வாயில் வழியாகத்தான் வந்தார்கள். தங்கள் கொட்டிலின் வாயிலை அறியாதவர் ஆயராக இருக்க முடியாது. யோவானின் கருத்துப்படி இவர்கள் கொள்ளைக்காரர்கள் (κλέπτης ἐστὶν καὶ λῃστής கிலெப்டேஸ் எஸ்டின் காய் லேஸ்டேஸ்). அதிகமான வேளைகளில் ஆடுகளை கைப்பற்றுகிறவர்கள் அல்லது கொள்ளையடிக்கிறவர்கள் இந்த வாயிலை விடுத்து வேறுவழிகளையே தேர்ந்துகொண்டார்கள். இதன் காரணமாகவும் யோவான் இந்த வாயிலை உதாரணமாக எடுத்திருக்கலாம்.
வ.11: இயேசு தன்னை நல்ல ஆயன் என்கிறார், அத்தோடு நல்ல ஆயரின் வரைவிலக்கணம் அவர் தன் ஆடுகளுக்காக உயிரைக் கொடுக்கிறார்.
Ἐγώ εἰμι ὁ ποιμὴν ὁ καλός. எகோ எய்மி ஹொ பொய்மேன் ஹொ காலொஸ்- நானே நல்ல ஆயன்.
ὁ ποιμὴν ὁ καλὸς τὴν ψυχὴν αὐτοῦ ⸀τίθησιν ὑπὲρ τῶν προβάτων· ஹொ பொய்மேன் ஹொ காலோஸ் டேன் ப்சூகேன் அவ்டூ டிதேசின் ஹுபெர் டோன் புரொபாடோன்- நல்ல ஆயன் தன்னுயிரை ஆடுகளுக்காக கொடுக்கிறார்.
புதிய ஏற்பாட்டிலும் யோவானுடைய எழுத்துக்களிலும் மிகவும் அறியப்பட்ட வரிகள். கிறிஸ்தவர்கள் நிச்சயமாக இந்த வரிகளை மனப்பாடம் செய்துவைத்திருக்க வேண்டும் என நினைக்கிறேன். முதல் ஏற்பாட்டில் பல இடங்களில் கடவுள் தன்னை நல்ல ஆயனாக வெளிப்படுத்தினாலும், யோவான் நற்செய்தியின் இந்த வரி மிகவும் தனித்துவமான வரி. நல்ல ஆயனாக தன்னை வெளிப்படுத்தும் ஆண்டவர், அதன் எதிர்பார்பையும் சேர்த்து சொல்கிறார். அத்தோடு இந்த ஆயர்த்துவத்திற்கு வருகிறவர்களும் இந்த முறையை கடைப்பிடிக்க கேட்கப்படுகிறார்கள் (ஒப்பிடுக எசேக்கியேல் 34,1-32: எபிரேயர் 13,20).
வ.12: கூலிக்கு மேய்க்கும் ஆயர்கள் யார் என்பதை தெளிவிபடுத்துகிறார் இயேசு. இவர்கள் ஓநாய் வருவதைக் கண்டு ஓடிப்போவார்கள், அத்தோடு ஆடுகள் அவருடையவை அல்ல எனப்தாலும், அவர்கள் உண்மையான ஆயர்கள் இல்லை என்பதாலும் இது நடைபெறுகிறது. இதால் மந்தை சிதறடிக்கப்படுகிறது, ஓநாய்களுக்கு அவை இரையாகின்றன.
அதிகமான ஆயர்கள் கூலிக்கு மேய்ப்பவர்கள்தான், அதேவேளை ஏழ்மையான குடும்பங்களில், மக்கள் தங்கள் மந்தையை அவர்களே மேய்த்தார்கள். அனைத்து கூலிக்கு மேய்க்கும் ஆயர்களும் தீமையானவர்களாக இருந்திருக்கவில்லை. இருப்பினும் சொந்த ஆயர்களுக்கும், கூலிக்கு மேய்ப்பவர்களுக்கும் முக்கியமான வித்தியாசம் இருப்பது கண்கூடு. கூலிக்கு மேய்ப்பவர்களுக்கு தங்களுடைய முதலாளிகளால் பல துன்புறுத்தல்கள் ஏற்பட்டிருக்கின்றன. இதன் காரணத்தாலும் அவர்கள் மந்தையில் கவனம் செலுத்தவில்லை.
சொந்த மந்தைகளை மேய்ப்பவர்கள், மந்தைகளை தங்களுடைய பிள்ளைகள் போலவே கருதினார்கள். மந்தைகள் அவர்களுடைய வாழ்வாதாரமாக இருந்ததாலும், அவற்றின் மேலான அக்கறை கூடுதலாகவே இருந்தது எனலாம்.
ஆடுகளை வேட்டையாடும் விலங்குகளில் ஓநாய் மிகவும் மிகவும் முக்கியமானது. இது ஒருவகை பாலைவன விலங்கு. இரவிலும், கூட்டமாகவும் வேட்டையாடுவதில் இவை மிகவும் சிறந்தவை. மனிதர்கள் தனிமையாக இருந்தால், இவை மனிதர்களைக் கூட வேட்டையாடக்கூடியவை. சிங்கத்தின் தாக்குதல்கள் நேரடியாக இருக்கும், எனவே அவற்றை சமாளிக்கவும் முடியும், ஆனால் இந்த விலங்குகளின் தாக்குதல்கள் மறைமுகமாக இருப்பதனால் இதற்கு ஆயர்கள் மிகவே அஞ்சினார்கள். இதன் காரணத்தினால்தான் பால ஆயர்கள் ஒன்றாக கூடி மந்தைகளை பாதுகாத்தார்கள். நெருப்பிற்கு ஓநாய்கள் பயந்தன, இதனால் நெருப்பைக் கொண்டும் ஓநாய்களை விரட்டினார்கள். ஓநாய்கள் அனைத்து ஆடுகளையும் வேட்டையாடாது, ஆனால் ஓநாய்களை கண்ட மற்றைய மந்தைகள் சிதறிப்போவதால் அவை தொலைந்து போகும், அல்லது கள்வர் கையில் அகப்படும், அல்லது வேறு விலங்குகளிடமும் சிக்கிப்போகும் (λύκος லூகொஸ், ஓநாய், சிலவேளைகள் தீய மனிதர்களையும் குறிக்கும்).
வ.13: கூலிக்கு மேய்ப்பவர்கள் தங்களைப் பற்றியும் தங்கள் குடும்பங்களைப் பற்றியும்தான் சிந்திப்பார்கள், அவர்களுக்கு மந்தையைப் பற்றி சிந்திக்கவேண்டிய தேவை இயற்கையாக
இருக்காது இதனை உதாரணத்திற்க எடுக்கிறாhர் யோவானின் இயேசு.
கூலிக்கு மேய்ப்பவர்களை குறிக்க யேவான் μισθωτός (மிஸ்தோடொஸ்) என்ற சொல்லை பயன்படுத்துகிறார். இதன் அர்த்தம் 'வாடகைக் கை'. சொந்தக் கைக்கும் வாடகைக் கைக்கும் வித்தியாசம் இருக்கிறது. வாடகைக் கை உதவிக்காக பெறப்படுவது, சொந்தக் கை தன் காரியத்தை தானாகவே செய்கிறது. சொந்த ஆயர்கள் தங்கள் மந்தையை தமது உயிராக கருதுவதால், அவர்களுடைய சிந்தனை எப்போதும் ஆடுகளின் மேலாகவே இருக்கும்.
வவ.14-15: இந்த வரிகளில் மீண்டுமாக ஆண்டவர் தன்னுடைய ஆயத்துவத்தை அழகாக விவரிக்கிறார். நல்ல ஆயனாகிய தான், தன் தந்தையை அறிந்திருப்பதாகவும், தந்தையும் தன்னை அறிந்திருப்பதாகவும் சொல்கிறார். அதாவது இவருடைய மந்தை காப்பு என்கின்ற பணியில் தந்தையும் ஈடுபட்டிருக்கிறார் என்பது சொல்லப்படுகிறது.
அறிதல் என்பது இங்கே மரியாதை, சேர்ந்து வேலைசெய்தல், மற்றவருடைய உணர்வுகளை புரிந்துகொள்ளல், மற்றவர்க்கு விசுவாசமாக இருத்தல் என்ற பல அர்த்தங்களைக் கொடுக்கிறது (γινώσκω கினோஸ்கோ- அறி, புரிந்துகொள்). தனக்கும தந்தைக்கும் இடையிலான இந்த அழாக உறவை, அவர் தன் ஆடுகளுக்கும் தனக்கும் உள்ள உறவாக ஒப்பிடுகிறார்.
இந்த வரியின் மூலம், இயேசு எந்த அளவு உயரமான இடத்தில் தன் மந்தையை வைத்திருக்கிறார் என்பது புலப்படுகிறது. தந்தைக்காக தன் உயிரைக் கொடுக்க துனிந்த இயேசு, தன் ஆடுகளுக்காகவும் தன்னுயிரைக் கொடுக்கிறார். இதன் மூலம், மந்தைகள் சாதாரண விலங்குகள் என்ற நிலையிலிருந்து, மாண்புள்ள பிள்ளைகளுக்கு உரிய இடத்தை பெற்றுக்கொள்கின்றன.
வ.16: இந்த வரியில் இயேசு 'இந்த கொட்டிலைச் சேராத' ஆடுகளைப் பற்றி பேசுகிறார். இது சூழலியலில் யூதர்கள் அல்லாதவரை குறிப்பதாக இருக்கிறது. இருந்தும் யோவான் நற்செய்தியாளரின் பின்புலத்தில், இது யோவானின் திருச்சபையை சேராதவர்களையும் குறிக்கலாம். யோவானின் திருச்சபையில் யூதர்களும் யூதர் அல்லாதவர்களும் கிறிஸ்தவர்களாக
இருந்திருக்கிறார்கள்.
இந்த கொட்டிலைச் சேராவிட்டாலும் (αὐλή அவுலே, அடைக்கப்படாத இடம், மந்தை வளாக்கும் இடம்), அவையும் தன்னுடைய ஆடுகளே என்று இயேசு அறிவிக்கிறார், ஆக யாரும் கடவுளுக்கு சொந்த உரிமை கொண்டாட முடியாது என்பது தெளிவாகிறது. கொட்டில்கள் வித்தியாசமாக இருக்கலாம், இருந்தாலும் கடவுளின் அன்பில் வித்தியாசம் இல்லை என்பது காட்டப்படுகிறது.
ஒரே மந்தையும் ஒரே ஆயரும் என்பது இயேசுவின் இலக்காக இருப்பது இந்த வரியின் முடிவில் காட்டப்படுகிறது (γενήσονται μία ποίμνη, εἷς ποιμήν. கெனேசொன்டாய் மியா பொமேனே எய்ஸ் பொய்மேன்- ஓரே மந்தை, ஓரே ஆயன் என்ற நிலைவரும்).
வ.17: தந்தைக்கும் தனக்கும் உண்மையான உறவு உள்ளதை இந்த வரி காட்டுகிறது. தந்தை தன்மீது அன்பு செலுத்துகிறார் என்று பல இடங்களில் யோவான் நற்செய்தி காட்டுகிறது. இது தந்தையும் மகனும் ஒரே திட்டத்தில் வேலைசெய்கிறார்கள் என்ற வாதத்தை முன்வைக்கிறது
(με ὁ πατὴρ ἀγαπᾷ மெ ஹொ பாடேர் அகாபா- தந்தை என்னை அன்புசெய்கிறார்).
இந்த அன்பிற்கு அடையாளமாக இரண்டு கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. முதலாவது இயேசு தன்னுடைய உன்னதமான சொந்தான உயிரைக் கொடுக்கிறார்.
இரண்டாவதாக இந்த உயிர் மீண்டும் பெற்றுக் கொள்ளப்படவே கொடுக்கப்படுகிறது.
வ.18: தன்னுடைய உயிரின் மேல் தனக்கு முழு அதிகாரம் உள்ளது என்பதை இயேசு தெளிவாக வெளிப்படுத்துகிறார். இயேசுவின் உயிரை அவருடைய விருப்பம் இல்லாமல் எடுத்துவிட்டார்கள் என்ற வாதத்திற்கு இது தெளிவான எதிர்ப்பை வெளிப்படுத்துகிறது.
யோவான் நற்செய்தியில், இயேசு முழு அதிகாரம் உள்ள கடவுளாக காட்டப்படுகிறார்.
இதனால் அவருடைய உயிரையும் அவர் அனுமதியில்லாமல் யாரும் எடுக்க முடியாது என்றாகிறது.
இயேசு தன்னுடைய உயிரைப் பொறுத்தவரையில் இரண்டு விதமான அதிகாரங்களை முன்னிருத்துகிறார்.
தன் உயிரைக் கொடுக்கும் அதிகாரம்: ἐξουσίαν ἔχω θεῖναι αὐτήν, எட்சூசியான் எகோ தெய்னாய் அவ்டேன், அதனை கொடுக்கும் அதிகாரம்.
அதனை மீளவும் பெறும் அதிகாரம்: ἐξουσίαν ἔχω πάλιν λαβεῖν αὐτήν· எட்சூசியான்; எகோ பாலின் லாபெய்ன் அவ்டேன்- அதனை மீளவும் பெற்றுக்கொள்ளும் அதிகாரம்.
கிரேக்க இலக்கியங்களின் படி இந்த அதிகாரம் கடவுளுக்கு மட்டுமே உரிய அதிகாரம்.
மனிதர்கள் யாருக்கும் தங்கள் உயிரின் மேல் அதிகாரம் இல்லை என்பதை முழு விவிலியம் தெளிவாக பல இடங்களில் காட்டுகிறது. இங்கணம் இயேசு உண்மையான கடவுளாகக் காட்டப்படுகிறார். இருப்பினும் தன்னுடைய செயல்கள் தந்தைக்கு எதிரானதோ, அல்லது சுயம் சார்ந்ததோ இல்லை எனவும், அது தந்தையின் விருப்பப்படி நடைபெறுகிறது என்பது சொல்லப்படுகிறது.
வ.19: இயேசுவின் இந்த பேச்சு இயற்கையாக யூதர்கள் மத்தியில் பிளவை உண்டாக்குகிறது. அவர்களுடைய நம்பிக்கைக்கு இது எதிராக இருக்கிறது, அல்லது அவர்களால் வேறு விதமாக சிந்திக்க முடியவில்லை என்பது தெளிவாகிறது. இருந்தாலும் யூதர்கள் அனைவரும் இயேசுவின் சிந்தனைகளை எதிர்க்கவில்லை என்பதையும் யோவான் பதிவு செய்கிறார்.
வவ.20-21: சிலர் இயேசுவுடைய சிந்தனைகளை தெய்வ நிந்தனை என்கிறார்கள், சிலர் அதனை சரியான வாதம் என்கிறார்கள். இயேசுவை பேய் பிடித்தவர் என்று சொல்வது, ஆரம்ப காலத்தில் திருச்சபை மேல், எந்தளவிற்கு பிழையான வாதங்கள் முன்வைக்கப்பட்டன என்பதைக் காட்டுகிறது. அதேவேளை இயேசுவின் அரும் அடையாளங்கள் உண்ணிப்பாக அவதானிக்கப்பட்டன என்பதையும் இந்த இருதியான வரி காட்டுகிறது.
இந்த உலகம், சுயநலம் நிறைந்த பொல்லாத ஆயர்களாலும்,
சோம்பேறித்தனமான ஆடுகளாலும் அலைக்கழிக்கப்டுகிறது.
தீய ஆயர்கள் எவ்வளவு ஆபத்தானவர்களோ,
அதனைப்போலவே, சுயஅறவில்லா ஆடுகளும் ஆபத்தானவைகள்.
மந்தை மற்றும் ஆயர் என்பவை உருவகங்கள் மட்டுமே,
ஆண்டவரைத் தவிற, யாரும் நல்ல ஆயர்கள் ஆக முடியாது,
அப்படியருந்தாலும் அவர்கள் ஆண்டவரின் பணியாளர்களே.
பங்களிக்கும் மந்தைகளையும்,
உயிரையும் தியாகம் செய்யும் ஆயர்களையும்,
தரவேண்டுவோம்.
நல்ல ஆயரே, உம் மந்தைகளை கைவிடாதேயும், ஆமென்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக