புதன், 24 ஏப்ரல், 2024

பாஸ்கா காலம் ஐந்தாம் ஞாயிறு (ஆ) 28.04.2024



பாஸ்கா காலம் ஐந்தாம் ஞாயிறு ()

28.04.2024


M. Jegankumar Coonghe OMI,

Shrine of Lady of Good Voyage,

Chaddy, Velanai,

Thursday, 25 April 2024



முதல் வாசகம்: திருத்தூதர் பணிகள் 9,26-31

பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 22

இரண்டாம் வாசகம்: 1யோவான் 3,18-24

நற்செய்தி: யோவான் 15,1-8


திருத்தூதர் பணிகள் 9,26-31

எருசலேம் நகரத்தில் சவுல்

26அவர் எருசலேம் நகரத்துக்கு வந்தபோது சீடர்களுடன் சேர்ந்து கொள்ள முயன்றார். ஆனால் அவரும் ஒரு சீடர் என்பதை நம்பாமல் அனைவரும் அவரைக் கண்டு அஞ்சினர். 27பர்னபா அவருக்குத் துணை நின்று அவரைத் திருத்தூதர்களிடம் அழைத்துச் சென்றார். பவுல் ஆண்டவரை வழியில் கண்டதுபற்றியும் ஆண்டவர் அவரோடு பேசியதுபற்றியும் அவர் தமஸ்குவில் இயேசுவின் பெயரால் துணிவுடன் உரையாடியது பற்றியும் பர்னபா அவர்களுக்கு விளக்கிக் கூறினார். 28அதன்பின் சவுல் அவர்களோடு சேர்ந்து எருசலேமில் அங்கும் இங்குமாகச் சென்று ஆண்டவரின் பெயரால் துணிவுடன் பேசிவந்தார். 29கிரேக்க மொழி பேசும் யூதரிடம் சென்று அவர்களோடு வாதாடினார். அவர்கள் அவரைக் கொன்றுவிட முயன்றார்கள். 30ஆனால் அவரோடு இருந்த சகோதரர்கள் இதை அறிந்து அவரைச் செசரியாவுக்குக் கூட்டிச்சென்று அங்கிருந்து தர்சு நகருக்கு அனுப்பி வைத்தார்கள்.

31யூதேயா, கலிலேயா, சமாரியா ஆகிய பகுதிகளிலெல்லாம் திருச்சபை வளர்ச்சியுற்று, ஆண்டவருக்கு அஞ்சி நடந்து, அமைதியில் திளைத்து, தூய ஆவியாரின் துணையால் பெருகிவந்தது.



திருப்பாடல் 22

துயர்மிகு புலம்பல்

(பாடகர் தலைவர்க்கு: 'காலைப் பெண்மான்' என்ற மெட்டு; தாவீதின் புகழ்ப்பா)


1என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்? என்னைக் காப்பாற்றாமலும், நான் தேம்பிச் சொல்வதைக் கேளாமலும் ஏன் வெகு தொலையில் இருக்கின்றீர்

2என் கடவுளே, நான் பகலில் மன்றாடுகின்றேன்; நீர் பதில் அளிப்பதில்லை, இரவிலும் மன்றாடுகின்றேன்; எனக்கு அமைதி கிடைப்பதில்லை

3நீரோ தூயவராய் விளங்குகின்றீர்; இஸ்ரயேலின் புகழ்ச்சிக்கு உரியவராய் வீற்றிருக்கின்றீர்

4எங்கள் மூதாதையர் உம்மில் நம்பிக்கை வைத்தனர்; அவர்கள் நம்பியதால் நீர் அவர்களை விடுவித்தீர்

5உம்மை அவர்கள் வேண்டினார்கள்; விடுவிக்கப்பட்டார்கள்; உம்மை அவர்கள் நம்பினார்கள்; ஏமாற்றமடையவில்லை

6நானோ ஒரு புழு, மனிதனில்லை; மானிடரின் நிந்தைக்கு ஆளானேன்; மக்களின் இகழ்ச்சிக்கு உள்ளானேன்

7என்னைப் பார்ப்போர் எல்லாரும் ஏளனம் செய்கின்றனர்; உதட்டைப் பிதுக்கித் தலையசைத்து, 8'ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்தானே! அவர் இவனை மீட்கட்டும்; தாம் அன்பு கூர்ந்த இவனை அவர் விடுவிக்கட்டும்' என்கின்றனர்

9என்னைக் கருப்பையினின்று வெளிக்கொணர்ந்தவர் நீNர் என் தாயிடம் பால்குடிக்கையிலேயே என்னைப் பாதுகாத்தவரும் நீரே

10கருப்பையிலிருந்தே உம்மைச் சார்ந்திருந்தேன்; நான் என் தாயின் வயிற்றில் இருந்தது முதல் என் இறைவன் நீரே

11என்னைவிட்டுத் தொலையில் போய்விடாதேயும்; ஏனெனில், ஆபத்து நெருங்கிவிட்டது; மேலும், உதவி செய்வார் யாருமில்லை

12காளைகள் பல என்னைச் சூழ்ந்து கொண்டுள்ளன் பாசானின் கொழுத்த எருதுகள் என்னை வளைத்துக் கொண்டன

13அவர்கள் என்னை விழுங்கத் தங்கள் வாயை அகலத் திறக்கின்றார்கள்; இரை தேடிச் சீறி முழங்கும் சிங்கம்போல் பாய்கின்றார்கள்

14நான் கொட்டப்பட்ட நீர்போல் ஆனேன்; என் எலும்புகள் எல்லாம் கழன்று போயின் என் இதயம் மெழுகுபோல் ஆயிற்று; என் உள்ளுறுப்புகளின் நடுவே உருகிப் போயிற்று

15என் வலிமை ஓடுபோலக் காய்ந்தது; என் நாவு மேலண்ணத்தோடு ஒட்டிக்கொண்டது; என்னைச் சாவின் புழுதியிலே போட்டுவிட்டீர்

16தீமை செய்வோரின் கூட்டம் என்னை வளைத்துக் கொண்டது; நாய்கள் என அவர்கள் என்னைச் சூழ்ந்து கொண்டார்கள்; என் கைகளையும், கால்களையும் துளைத்தார்கள்

17என் எலும்புகளை எல்லாம் நான் எண்ணிவிடலாம்; அவர்கள் என்னை முறைத்துப் பார்க்கின்றார்கள்

18என் ஆடைகளைத் தங்களிடையே பங்கிட்டுக் கொள்கின்றனர்; என் உடையின்மேல் சீட்டுப் போடுகின்றனர். 19நீரோ ஆண்டவரே! என்னை விட்டுத் தொலைவில் போய்விடாதேயும்; என் வலிமையே! எனக்குத் துணை செய்ய விரைந்து வாரும்

20வாளுக்கு இரையாகாதபடி என் உயிரைக் காத்தருளும்; இந்த நாய்களின் வெறியினின்று என் ஆருயிரைக் காப்பாற்றும்

21இந்தச் சிங்கங்களின் வாயிலிருந்து என்னைக் காப்பாற்றும்; காட்டெருமைகளின் கொம்புகளில் சிக்கியுள்ள என்னைக் காத்தருளும்.

புகழ்ச்சிப் பாடல்


22உமது பெயரை என் சகோதரருக்கு அறிவிப்பேன்; சபை நடுவே உம்மைப் புகழ்ந்து பாடுவேன். 23ஆண்டவருக்கு அஞ்சுவோNர் அவரைப் புகழுங்கள்; யாக்கோபின் மரபினரே, அனைவரும் அவரை மாட்சிமைப்படுத்துங்கள்; இஸ்ரயேல் மரபினரே, அனைவரும் அவரைப் பணியுங்கள்

24ஏனெனில், எளியோரின் சிறுமையை அவர் அற்பமாக எண்ணவில்லை; அதைக் கவனியாமல் இருந்துவிடவில்லை; தமது முகத்தை அவர்களுக்கு மறைக்கவுமில்லை; தம்மை நோக்கி அவர்கள் மன்றாடுகையில் அவர்களுக்குச் செவிசாய்த்தார்

25மாபெரும் சபையில் நான் செலுத்தும் புகழ் உம்மிடமிருந்து எழுவதாக! உமக்கு அஞ்சுவோர் முன்னிலையில் என் பொருத்தனைகளைச் செலுத்துவேன்

26எளியோர் உணவு உண்டு நிறைவு பெறுவர்; ஆண்டவரை நாடுவோர் அவரைப் புகழ்வராக! அவர்கள் இதயம் என்றென்றும் வாழ்வதாக

27பூவுலகின் கடையெல்லைவரை உள்ளோர் அனைவரும் இதை உணர்ந்து ஆண்டவர் பக்கம் திரும்புவர்; பிற இனத்துக் குடும்பத்தார் அனைவரும் அவர் முன்னிலையில் விழுந்து பணிவர்

28ஏனெனில் அரசு ஆண்டவருடையது; பிற இனத்தார்மீதும் அவர் ஆட்சி புரிகின்றார்

29மண்ணின் செல்வர் யாவரும் அவரைப் பணிவர்; புழுதிக்குள் இறங்குவோர் யாவரும் தம் உயிரைக் காத்துக்கொள்ளாதோரும் அவரை வணங்குவர்

30வருங்காலத் தலைமுறையினர் அவரைத் தொழுவர்; இனிவரும் தலைமுறையினருக்கு ஆண்டவரைப்பற்றி அறிவிக்கப்படும்

31அவர்கள் வந்து, அவரது நீதியை அறிவிப்பர்; இனி பிறக்கப்போகும் மக்களுக்கு 'இதை அவரே செய்தார்' என்பர்.



32 வரிகளைக் கொண்ட (முன்னுரை அடங்கலாக) இந்த திருப்பாடல் ஒரு தனி மனித புலம்பல் பாடலாக பார்க்கப்படுகிறது. எபிரேய விவிலியத்தில் இதனுடைய முதலாவது வரி, இப்பாடலின் முன்னுரை போல காணப்படுகிறது. 'பாடகர் தலைவர்க்கு காலைநேர பெண்மான் போல' (לַמְנַצֵּחַ עַל־אַיֶּלֶת லம்நட்செஹா 'அல்-'அய்யெலெத்) என்னும் வரி இந்தப்பாடலின் மெட்டைக் குறிக்கிறது என்கின்றனர் சில ஆய்வாளர்கள். அத்தோடு இது தாவீதின் பாடல் அல்லது தாவீதுக்கான பாடல் என்றும் முன்னுரைப் படுத்தப்பட்டுள்ளது (מִזְמוֹר לְדָוִד׃ மிட்ஸ்மோர் லெதாவித்). இந்த பாடலை இரண்டு பிரிவுகளாக பிரித்து, முதலாவது புலம்பல் பாடலாகவும் (வவ2-22), இரண்டாவது புகழ்ச்சிப் பாடலாகவும் (வவ.23-32) நோக்கலாம். இதன் முன்னுரை, பிற்கால இணைப்பாகக்கூட இருக்கலாம். பல கிறிஸ்தவ ஆசிரியர்கள் இந்தப் பாடலை இயேசுவின் பாடுகளின் அழுகையோடு ஒப்பிட்டு பார்க்கின்றனர்


.1: ஆசிரியர் கடவுள் தன்னை கைவிட்டுவிட்டதாக பாடலை தொடங்குகின்றார். இது புலம்பல் பாடலுக்கான ஒரு அடையாளம். இதன் எபிரேய வரிகள் (אֵלִי אֵלִי לָמָה עֲזַבְתָּנִי) எலி எலி லமாஹ் அட்ஸாவ்தானி, இயேசு சிலுவையின் கூறிய வார்த்தைகளை நினைவூட்டுகின்றன (ஏலி ஏலி லமாஹ் சபத்தானி  ηλι ηλι  λεμα σαβαχθανι) - என் இறைவா என் இறைவா ஏன் என்னை கைவிட்டீர். இயேசு ஒருவேளை இந்த திருப்பாடலை இறுதியாக நினைத்திருப்பார் என எண்ணத்தோன்றுகிறது.

ஏன் தன் குரலைக் கேளாமல், கடவுள் வெகுதொலைவில் இருக்கிறார் என்ற கேள்வியையும் ஆசிரியர் கேட்கிறார்.  


.2: ஆசிரியரின் ஏமாற்றத்தை இந்த வரி காட்டுகின்றது. பகலிலும் இரவிலும் தன்னுடைய செபம் கேட்கப்படுவதில்லை, அதாவது தன்னுடைய செபம் என்றுமே கேட்கப்படுவதில்லை என்ற வாதத்தை முன்வைக்கிறார் ஆசிரியர். אֶקְרָא יוֹמָם וְלֹא תַעֲנֶ֑ה וְלַ֗יְלָה וְֽלֹא־דֽוּמִיָּה לִי׃ 'எக்ரா' யோமாம் வெலோ' ' 'அனெஹ், வெலய்லாஹ் வெலோ'-தூமியாஹ் லி- பகிலில் கத்துகிறேன் பதில் இல்லை: இரவிலும் எனக்கு ஆறுதல் இல்லை



.3: புலம்பலும், ஏமாற்றமும் முதல் வரிகளில் சொல்லப்பட்டாலும், கடவுள் ஏமாற்றாதவர், நம்பிக்கைக்குரியவர் என்ற வாதத்தை இந்த வரி முன்வைக்கிறது.

கடவுளை இஸ்ராயேலின் தூயவர் என்று விழிப்பது விவிலியத்தில் மிக முக்கிய, கடவுளைக் குறிக்கும் சொல். אַתָּה קָדוֹשׁ 'அத்தாஹ் காதோஷ்- நீர் தூயவர். இஸ்ராயேலின் நோக்கம் கடவுளைப் புகழ்தல் என்பதும் சொல்லப்படுகிறது. תְּהִלּוֹת יִשְׂרָאֵל׃ தெஹில்லோத் யிஸ்ரா'எல்- இஸ்ராயேலின் புகழ்பாக்கள்



வவ.4-5: இந்த வரிகளில், ஆசிரியர் தன் மூதாதையர்களின் நம்பிக்கையை நினைத்துப் பார்க்கின்றார். முதாதையர்களின் நம்பிக்கை, வேண்டுதல் மற்றும் மன்றாட்டுக்கள் அவர்களின் நம்பிக்கை வாயிலாக நல்ல பலனைத் தந்தது. אֲבֹתֵינוּ בָּטְחוּ וַתְּפַלְּטֵמוֹ׃ 'அவோதினூ பாத்ஹு வத்தெபல்லெதிமோ- எங்கள் தந்தையர்கள் நம்பிக்கைவைத்தனர், நீர் அவர்களை விடுவித்தீர். 


இந்த ஆசிரியர் தன்னுடைய மன்றாட்டு கேட்கப்படவில்லை என்றாலும், தன் மூதாதையரின் மன்றாட்டு கேட்க்கப்பட்டது என்று சொல்லி, பிழை தன்னுடைய பக்கமே இருக்கிறது என்கிறார். எபிரேய திருப்பாடல் இலக்கியத்தில் புலம்பல் இருந்தாலும், அங்கும் நம்பிக்கை இருக்கிறது என்பதை இந்த வரிகள் காட்டுகின்றன. לֹא־בֽוֹשׁוּ׃ லோ'-வோஷு, ஏமாற்றம் அடையவில்லை


வவ. 6-8: இந்த வரிகள் ஆசிரியரின் துன்பங்களை காட்டுகின்றன. இவர் தன்னை ஒரு புழுவிற்கு ஒப்பிடுகிறார் (אָנֹכִי תוֹלַעַת  'ஆனோகி தோலா'அத்- நான் ஒரு புழு). புழு உயிரினங்களுள் மிக அர்ப்பமான பிராணி, அவ்வாறு தன்னிலையும் மற்றவர்களால் மாற்றப்பட்டுள்ளது என்கின்றார் போல. பார்க்கிறவர்கள் ஏளனம் செய்கிறார்கள் என்கின்றார் (כָּל־רֹאַי יַלְעִגוּ לִי கோல்-ரோ'அய் யல்'இகூ லி- பார்க்கும் அனைவரும் என்னை ஏளனம் செய்கிறார்கள்). மற்றவர்களின் துன்பத்தில் இன்பம் காணுவதும், மற்றவர்கள் துன்பத்தில் வெற்றி காண்பதும் ஒருவகையான மனநோய் என்பதை நவீன உளவியல் ஏற்றுக்கொள்கிறது, ஆனால் இந்த நோய் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே மக்களை தாக்கியிருக்கிறது என்பது, இந்த வரியில் நன்கு தெரிகிறது. உதட்டை பிதுக்குதல் மற்றும் தலையை அசைத்தல் போன்றவை இப்படியான ஏளனக் குறிகள் (בְשָׂפָ֗ה יָנִיעוּ வெசாபாஹ் யானி' '- உதட்டால் அசைக்கிறார்கள்). 

அத்தோடு இவர்கள் ஆண்டவரையும் விட்டபாடில்லை. அவரையும் கிண்டல் செய்கிறார்கள் என்கின்றார். ஆண்டவரிடம் நம்பிக்கை வைத்தால் அவர் விடுவிப்பார் என்ற விசுவாசமும் இங்கு தெரிகிறது. ஆண்டவர் இவரை அன்புகூர்ந்தார் என்பதையும் ஏற்றுக்கொள்கிறார்கள். כִּי חָפֵֽץ בּֽוֹ கி ஹாபெட்ஸ் போ-ஏனெனில் அவர் இவனில் மகிழ்ந்தார்


வவ.9-11: இந்த வரிகள் ஆசிரியரின் தனிப்பட்ட விசுவாச அறிக்கை போல வருகிறது. கருப்பையிலிருந்து ஒருவரின் அழைப்பு தொடங்குகிறது என்பது விவிலியம் காட்டும் உண்மைகளில் ஒன்று, அதனை இந்த ஆசிரியர் நமக்கு நன்கு நினைவூட்டுகின்றார் (כִּי־אַתָּה גֹחִי מִבָּטֶן கி-''அத்தாஹ் கோஹி மிப்பாதென்- ஏனெனில் நீர் என்னை கருப்பையில் இருந்து வெளிக்கொணாந்தீர்). இதற்கு இணையாக தாயின் மடியிலிருந்தே தான் காக்கப்பட்டதாக ஒத்த வசனங்கள் அமைக்கப்பட்டுள்ளன (מַבְטִיחִי עַל־שְׁדֵי אִמִּי மவ்திஹி 'அல்-ஷெதெ 'இம்மி- என்தாயின் மார்புகளின் நான் திடப்பட்டேன்). 

10வது வரி இதே அர்த்தத்தை வேறு சொற்களில் மீள பாடுகின்றது. தான் தன் தாயின் கருப்பையிலிருந்தே கடவுளுடையவன் என்கிறார், அத்தோடு, கடவுள்தான் தன் இறைவன் என்பதையும் தொடக்கத்திலிருந்தே ஏற்றுக்கொள்கிறார் (מִבֶּטֶן אִמִּ֗י אֵלִי மிபெதென் 'இம்மோ 'ஏலி- தாயின் கருப்பையிலே நீர் என் இறைவன்). 


11வது வரி ஒரு வேண்டுதலாக அமைந்து, அதன் மூலம் தன்னுடைய பயத்தை வெளிகாட்டுகிறார் ஆசிரியர். தன்னைவிட்டு தொலைவில் போய்விட வேண்டாம் என்று மன்றாடுகிறார் (אַל־תִּרְחַק מִמֶּנִּי 'அல்-திர்ஹாக் மிம்மெனி- என்னைவிட்டு தொலைவில் வேண்டாம்). தனக்கு உதவிசெய்ய  யாரும் இல்லை என்று சொல்வது அவருடைய உறவின் வெறுமையைக் காட்டுகிறது


வவ.12-13: இந்த வரிகளில் ஆசிரியர் தன் எதிரிகளை விலங்குகளுடன் ஒப்பிடுகிறார். எருதுகள் சாதுவானாலும், அதேவேளை அவை பலமானவை. சிலவேளைகளில் அவை சிங்கங்களையும் தாக்கக்கூடியவை. காட்டு எருதுகள் ஆபத்தான விலங்குகளாகவே பார்க்கப்படுகின்றன. இந்த எருதுகளுக்கு தன் எதிரிகளை ஒப்பிடுகிறார் (פָּרִים பாரிம்-எருதுகள்). இந்த எருதுகளை மீண்டும், பாசானின் காளைகள் என அர்த்தப்படுத்துகிறார் (אַבִּירֵי בָשָׁן 'அவ்ரே வாஷான்). யோர்தான் நதிக்கு கிழக்கிலே யார்முக் நதியின் வழியிலே காணப்படும் இந்த பாசான் பகுதி கானான் தேசத்தின் மிக வளமான பகுதி, இங்கே மேய்சலில் ஈடுபடும் மாடுகளும் பசுக்களும் கொழுத்து பருத்திருந்தன

இந்த உருவகத்தை முதல் ஏற்பாட்டு இறைவாக்கினர்கள் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கும் புறவினத்தவர்களுக்கும் பாவித்தனர். இந்த திருப்பாடல் ஆசிரியரும் அதனையே இங்கே செய்கிறார். சிங்கங்கள் இஸ்ராயேல் நாட்டில் பிற்காலத்தில் இல்லாமல் போயினும், அவை முற்காலத்தில் அங்கு வாழ்ந்திருக்கின்றன அத்தோடு அவற்றைப் பற்றிய நல்ல அறிவும் அங்கே இருந்திருக்கிறது. சிங்கத்தின் பலம் அதன் கால்களிலும், அதன் தாடைகளிலும் இருக்கின்றன அதனைத்தான் ஆசிரியர் எதிரிகளுக்கு ஒப்பிடுகிறார் (אַרְיֵ֗ה 'அர்யெஹ்- அரி, சிங்கம்). சிங்கத்தைப்போல இவர்கள் வாயை திறந்து கொண்டு திரிகிறார்கள் என்கிறார். அவர்களின் செயற்பாடுகள் சிங்கத்தின் பாய்ச்சலுக்கு ஒப்பிடப்படுகிறது


வவ.14-15: எதிரிகளின் பலத்தை வர்ணித்த ஆசிரியர் தன்னுடைய பலவீனத்தை பலமான உருவங்கள் வாயிலாக ஒப்பிடுகிறார்


. கொட்டப்பட்ட நீர்போல் ஆனேன் (כַּמַּיִם נִשְׁפַּכְתִּי֮ கம்மாயிம் நிஷ்பாக்தி): கொட்டப்பட்ட நீரை மீளவும் பெறமுடியாது அதனைப் போல் தன்னிலை என்கிறார்.

. எலும்புகள் கழன்றுபோயின (הִתְפָּרְדוּ כָּל־עַצְמוֹתָי ஹித்பார்தூ கோல்-'அட்ஸ்மோதாவ்): எலும்புகள் கழன்றால் உடல் இயங்காது அத்தோடு அது தாங்க முடியாத துன்பத்தைக் கொடுக்கும்

. இதயம் மெழுகுபோல் உருகிற்று (לִבִּי כַּדּוֹנָג லிபி கத்தோனாக்): உருகிய மெழுகு தன் உருவத்தையும் வடிவத்தையும் இழக்கும், அதனால் ஒளிகொடுக்க முடியாது.

. ஓடுபோல் காய்ந்த வலிமை (יָבֵשׁ כַּחֶרֶשׂ כֹּחִי யாவெஷ் கஹெரெஸ் கோஹி): சில மூல பிரதிகள் இந்த 'வலிமையை' மேல் நாக்கு என்று வாசிக்கின்றன. காய்ந்த வலிமையினாலும், காய்ந்த மேல் நாக்கு, ஒட்டினாலும் எந்த பயனுமில்லை என்பதுதான் ஆசிரியரின் புலம்பல்.

. நாக்கு மேல் அண்ணத்துடன் ஒட்டிக்கொண்டது (לְשׁוֹנִי מֻדְבָּק מַלְקוֹחָי லிஷோனி முத்பாக் மல்கோஹாவ்): அசையாத நாக்கினால் உச்சரிக்க முடியாது

. சாவின் புழுதியிலே போடப்பட்டார் (לַעֲפַר־מָוֶת תִּשְׁפְּתֵֽנִי 'அபர்-மாவெத் திஷ்பெதெனி): புழுதி, சாவு மற்றும் அசுத்தத்தைக் குறிக்கும் சாதாரண அடையாளம்


வவ.16-18: இந்த வரிகளும் ஆண்டவர் இயேசுவின் பாடுகளை அப்படியே வர்ணிப்பது போல உள்ளன. ஆசிரியர் தன்னுடைய துன்பமான நிலையை மீளவும் காட்ட முயற்ச்சிக்கின்றார். தீமை செய்பவர்களை நாய்கள் கூட்டத்திற்கு ஒப்பிடுகிறார் (כִּי סְבָבוּנִי כְּלָבִים கி செவாவூனி கெலாவிம்). விவிலியம் நாய்களை அசுத்தமான மற்றும் தீமையான விலங்காக வர்ணித்தாலும், புதைபொருள் ஆய்வுகள், நாய்கள் வீட்டுப்பிராணிகளாக பாலஸ்தீனாவிலே வளர்கப்பட்டிருந்ததைக் காட்டுகின்றன. இருப்பினும் நகர்ப்புறங்கள் மற்றும் வீதியோரங்களில் கூட்டமாக திரிந்த கட்டாக்காலி நாய்கள் சில வேளைகளில் மனித உடல்களையும் தின்றன. இது மிகவும் பயங்கரமான காட்சியாக பார்க்கப்படுகிறது. இதனால் நாய் இவருக்கு மிகவும் அருவருப்பான மற்றும் அசிங்கமான விலங்காக பார்க்கப்படுகிறது

தன் கைகளும் கால்களும் துளைக்கப்படுகின்றன என்கிறார் ஆசிரியர். நற்செய்தியாளர்கள் இந்த வரியை இயேசுவின் சிலுவை அறைதலுக்கு ஒப்பிடுகின்றனர்தன்னுடைய எலும்புகளை எண்ணிவிடலாம் என்று தன்னுடைய உடலின் மெலிவை, வறுமையாக காட்டுகிறார் (עַצְמוֹתָי 'அட்ஸ்மோதாவ்- என் எலும்புகள்).

18வது வரி நற்செய்தியில் உரோமைய பாடைவீரர்கள் இயேசுவின் உடைகளை பங்கிட்டதை நினைவூட்டுகின்றது (மத் 27,35: மாற் 15,24: லூக் 23,34: யோவா 19,24). அக்காலத்தில் போரிலே தோற்கின்ற எதிரி வீரர்களின் உடமைகளை, வெற்றி பெறுகிறவர்கள் பங்குகொள்வர். இதனைத்தான் இந்த வரி நினைவூட்டுகிறது


வவ.19-21: இந்த திருப்பாடலின் முதலாவது பிரிவில், இவ் வரிகள் இறுதி வேண்டுதல்களாக அமைகின்றன. ஆண்டவரை தன்னருகில் இருக்கும்படிக் கேட்கிறார், அதாவது ஆண்டவர் தொலைவில் போவது, அடியானுக்கு ஆபத்தானது என்பதை நன்கு உணர்ந்திருக்கிறார். ஆண்டவருக்கு 'தன்னுடைய பலம்' (אֱיָלוּתִ֗י 'ஏயாலூதி) என்று அழகான பெயரை சூட்டுகிறார். வாளுக்கு இரையாகாத படி தன்னைக் காப்பற்றக் கேட்பது, இந்த பாடலுக்கு இராணுவ சாயம் பூசுவது போல இருக்கிறது. ஏற்கனவே தன் எதிரிகளுக்கு நாய் (כֶּ֗לֶב கெலெவ்), சிங்கம் (אַרְיֵה 'அர்யெஹ்), எருமை (רְאֵם ரெ'எம்) என்று பெயர் வைத்தவர் அதனை மீண்டும் நினைவூட்டுகிறார்


மேலுள்ள 21(22) வரிகளில் தன்னுடைய புலம்பலை பாடிய ஆசிரியர் இனிவருகின்ற பத்து வரிகளில் கடவுளை புகழந்து பாடுவதற்கு முயற்சி செய்கிறார்


.22: ஆசிரியர், தன் கடவுளின் பெயரை தன்னுடைய சகோதரர்களுக்கு அறிவிப்பதாகச்சொல்கிறார். கடவுளின் பெயர் எனப்படுவது, கடவுளின் மாட்சியையே குறிக்கிறது (אֲסַפְּרָה שִׁמְךָ לְאֶחָי 'அசாப்ராஹ் ஷிம்கா லெ'எஹாய்), கடவுளின் பெயரை அறிவிப்பது கடவுளை அறிவிப்பதற்கு சமனாகும். இங்கே சகோதரர்கள் என்போர் இஸ்ராயேல் மக்கள் கூட்டத்தினரையே குறிக்கின்றனர். இந்த சிந்தனையை, இந்த வரியின் இரண்டாம் பாகம், 'சபை' (קָהָל காஹால்) என்று வரைவிலக்கணப்படுத்துகின்றது

இந்த சபையும் (காஹால்) இஸ்ராயேல் மக்கள் கூட்டத்தையே குறிக்கிறது. திருச்சபையை ஒரு சபையாக இறையியல் படுத்துவதற்கு இந்த சொல்தான், பின்புலம்


.23: இந்த சபையினர் யாவர் என்று பெயரிடுகின்றார். இஸ்ராயேல் சமூகத்தின் அழகான பெயர்கள் இங்கே வரிசைப்படுத்தப்பட்டுள்ளன, இவையனைத்தும் ஒத்த கருத்துச் சொற்களில் அமைகின்றன

. ஆண்டவருக்கு அஞ்சுவோர் (יִרְאֵי יְהוָה யிர்' அதோனாய்).

. யாக்கோபிக் மரபினர் (כָּל־זֶרַע יַעֲקֹב கோல்-ட்செரஅ' 'அகோவ்).

. இஸ்ராயேல் மரபினர் (כָּל־זֶרַע יִשְׂרָאֵל கோல்-ட்செரஅ' யிஸ்ரா'எல்). 


வவ.24-25: ஏன் இஸ்ராயேல் சமூகம் கடவுளை புகழ்ந்து பாடவேண்டும் என்பது இந்த வரியில் விளக்கப்படுகிறது (עָנִי 'ஆனி- எளியோர், שַׁוְּעוֹ ஷவ்வெஓ- அவரைநோக்கி கத்துவோர்). கடவுள் எளியோரை அற்பமானவர்களாக எண்ணாதவர், அவர்களை கவனிப்பவர், அவர்களுக்கு தன் முகத்தை மறைக்காதவர், அத்தோடு அவர்களுக்கு செவிசாய்க்கிறவர். இந்த புகழ்ச்சிகளை எல்லாம் ஆசிரியர் தான் தன்னுடைய மாபெரும் சபையாகிய அதாவது இஸ்ராயேல் இனத்திடமிருந்தே செய்வதாக சொல்கிறர்

இஸ்ராயேலை மாபெரும் சபை என்று சொல்வது ஒரு பாரம்பரியம் (קָהָל רָב காஹால் ராவ்). இந்த மாபெரும் சபையினராகிய இஸ்ராயேலர், கடவுளுக்கு அஞ்சுகிறவர்கள் என்ற, இன்னோர் ஒத்த கருத்துச் சொல்லால் விழிக்கப்படுகிறார்கள் (יְרֵאָֽיו யெரெ'அய்வ்-அவருக்கு அஞ்சுவோர்). 


வவ.26-27: இந்த வரிகளில் வருகின்ற எளியோர் மற்றும் ஆண்டவரை நாடுவோர்கள், என்றும் வாழ்வார்கள் என சொல்லப்படுகிறார்கள். யார் இவர்கள்? இஸ்ராயேல் மக்களா அல்லது இஸ்ராயேல் மக்கள் அல்லாதவர்களாக? என்ற கேள்வி எழுகின்றனது.

ஆனால் 27வது வரி, ஆசிரியர் உலகின் அனைத்து மக்களையும் உள்வாங்கி பாடுகிறார் என்பதை தெளிவாக காட்டுவது போல உள்ளது. ஆக எளியோர்கள் என்பவர்கள் அனைத்து மனிதர்களும்தான் என்பதை ஆசிரியர் காட்டுகிறார். இதனைக் குறிக்க 'உலகின் எல்லையில் 

இருப்போர்' (כָּל־אַפְסֵי־אָרֶץ கோல்-'அப்செ-'ஆரெட்ஸ்), மற்றும் 'புறவினத்துக் குடும்பங்கள்

(כָּל־מִשְׁפְּחוֹת גּוֹיִם கோல்-மிஷ்பெஹோத் கோயிம்) என்ற சொற்களைப் பாவிக்கிறார்


வவ.28-29: இந்த வரிகள் மேற்சொன்ன கருதுகோளை இன்னும் தெளிவாக்குகின்றது. அரசு ஆண்டவருக்குரியது என்று ஆசிரியர் சொல்வதிலிருந்து (לַיהוָה הַמְּלוּכָה லஅதோனாய் ஹம்மெலூகாஹ்), ஆண்டவருக்கு பிரிவினைவாதம் கிடையாது, அத்தோடு அனைவரும் அவர் மக்கள் என்பதும் புலானகிறது

செல்வர்களாக இருந்தாலும் சரி, எதுவும் இல்லாத வறியவர்களாக இருந்தாலும் சரி அவர்களும் ஆண்டவரின் புகழ்ச்சிக்குள்ளும் வழிபாடுகளுக்குள்ளும் உள்வாங்கப்படுகிறார்கள். மண்ணின் செல்வர்களைக் குறிக்க (דִּשְׁנֵי־אֶ֗רֶץ திஷ்னெ-'எரெட்ஸ்) என்ற சொல் பாவிக்கப்பட்டுள்ளது

இது உணவுண்டு கொழுத்தவர்களைக் குறிக்கும். இவர்களுக்கு எதிர்பதமாக கல்லறைகளில் வாழ்பவர்கள் காட்டப்படுகிறார்கள். இவர்களைக் குறிக்க கோல் யோர்தே அபார் (כָּל־יוֹרְדֵי עָפָר) என்ற பதம் பாவிக்கப்பட்டுள்ளது, இது புழுதிக்குள் இறங்குபவர்களைக் குறிக்கும்


வவ.30-31: இருந்தவர்கள் மற்றும் இருப்பவர்களைப் பற்றி பாடிய ஆசிரியர் இந்த வரிகளில் இனி இருக்கப்போகும் எதிர்கால சந்ததியினரைப் பற்றி வசனிக்கிறார். எதிர்கால தலைமுறையினருக்கு ஆண்டவரைப் பற்றி சொல்லப்படும் என்கிறார் ஆசிரியர் (זֶרע יַֽעַבְדֶ֑נּוּ יְסֻפַּר לַֽאדֹנָ֣י לַדּֽוֹר׃ ). இனி பிறக்கப் போகும் தலைமுறையும் (לְעַם נוֹלָ֗ד லெஅம் நோலாத்), ஆண்டவரின் செயல்களை அறிந்துகொள்ளும் என்கிறார்

வருங்காலத் தலைமுறையினர் கடவுளின் நீதியை பறைசாற்றுவர் என்றும், கடவுளைப் பற்றி அறிவிக்க வருங்கால தலைமுறையும் ஆயத்தமாயிருக்கிறது என்றும் தன் பாடலை முடிக்கிறார் ஆசிரியர். (יָבֹאוּ וְיַגִּידוּ צִדְקָתוֹ யாவோ' யெலக்கிதூ ட்சித்காதோ- அவர்கள் வந்து அவரின் நீதியை அறிவிப்பார்கள்).



1யோவான் 3,18-24

18பிள்ளைகளே, நாம் சொல்லிலும் பேச்சிலும் அல்ல, செயலில் உண்மையான அன்பை விளங்கச் செய்வோம். 19இதனால் நாம் உண்மையைச் சார்ந்தவர்கள் என அறிந்து கொள்வோம்; நம் மனச்சான்று நாம் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்தாலும், கடவுள் திருமுன் நம் உள்ளத்தை அமைதிப்படுத்த முடியும். 20ஏனெனில் கடவுள் நம் மனச்சான்றைவிட மேலானவர்; அனைத்தையும் அறிபவர்.

21அன்பார்ந்தவர்களே, நம் மனச்சான்று நாம் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்காதிருந்தால் நாம் கடவுள் திருமுன் உறுதியான நம்பிக்கை கொண்டிருக்க முடியும். 22அவரிடம் நாம் எதைக் கேட்டாலும் பெற்றுக் கொள்வோம்; ஏனெனில் அவர் கட்டளைகளைக் கடைப்பிடிக்கிறோம்; அவர் திருமுன் அவருக்கு உகந்தவற்றையே செய்து வருகிறோம். 23கடவுள் நமக்குக் கொடுத்த கட்டளைப்படி, அவருடைய மகன் இயேசு கிறிஸ்துவிடம் நம்பிக்கை கொண்டு, ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்தவேண்டும். இதுவே அவரது கட்டளை. 24கடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பவர் அவரோடு இணைந்திருக்கிறார்; கடவுளும் அவரோடு இணைந்திருக்கிறார். கடவுள் நம்மோடு இணைந்திருக்கிறார் என்பதை அவர் நமக்கு அருளிய தூய ஆவியால் அறிந்து கொள்கிறோம்.

………………………………………..


யோவான் 15,1-8

இயேசுவே உண்மையான திராட்சைச் செடி

திராட்சைச் செடி:


  தெற்கு சிரியா மற்றும் வடக்கு இஸ்ராயேல் பகுதிகளில் திராட்சை பயிற்ச்செய்கை செப்புக்காலத்திலிருந்து நடந்திருப்பதாக தொல்பொருளியல் வரலாறுகள் காட்டுகின்றன. அதாவது இது கி.மு. 4000-3500 ஆண்டுகளுக்கு முன்னரே நடந்திருக்கிறது. மத்திய தரை பிரதேசத்தின் கிழக்கு பகுதிகளின் நில அமைவும், மண்ணும், காலநிலையும், திராட்சை பயிர்ச்செய்கைக்கு சாதகமாக இருந்திருக்கின்றன. மத்தியதரைக் கடல் பிரதேசத்தின் மேற்பகுதியில் இரண்டு வகையான திராட்சைகள் வளர்ச்சியில் இருந்திருக்கின்றன, அவை: விட்டிஸ் சில்வெஸ்ரிஸ் (Vitis silvestris), இது ஒருவகை காட்டு திராட்சை செடியைக் குறிக்கும். இத்தாலி மற்றும் தெற்கு ஐரோப்பாவிலே இந்த திராட்சை அதிகமாக வளர்கிறது. விட்டிஸ் வினிபெரா (Vitis vinifera) இது ஒரு தோட்டங்களிலே வளர்கின்ற திராட்சை. இவை கற்காலத்திலிருந்து (கி.மு 8000-3500) மனித பயிர்ச் செய்கையில் இருந்திருக்கிறது. காட்டு கொடிமுந்திரி இஸ்ராயேல் பகுதியில் இருந்தற்கான தொல்பொருளியல் தரவுகள் இதுவரைக்கும் கிடைக்கவில்லை

நோவாதான் முதன் முதலில் திராட்சை பயிர்செய்கை செய்தவராக விவிலியத்தில் காட்டப்படுகிறார் (காண்க தொ.நூல் 9,20). வீட்டுத் திராட்சை பயிர் செய்யப்பட்டதற்கான சான்றுகள் இஸ்ராயேல் நாட்டில் ஆரம்ப வெண்கல காலத்திலே இருந்திருக்கின்றன. விவிலியத்தைவிட ஏனைய தரவுகளும், இந்த பிரதேசங்களில் அதிகமான திராட்சைகள் வளர்ந்திருந்ததை காட்டுகின்றன. வெண்கல காலத்தில் பிற்பகுதியில் திராட்சை பயிர்ச்செய்கை கானான் பிரதேசத்தின் மிக முக்கியமான பயிர்ச்செய்கையாக உருவெடுத்தது. எகிப்திய பாரவோனான மூன்றாம் துத்மோஸ் திராட்சை பயிர்ச் செய்கையை கானானிலிருந்து எகிப்திற்கு கொண்டு சென்றார். சாலமோன் மன்னர் திராட்சை இரசத்தை, ஒலிவ எண்ணெய், பார்லி, மற்றும் கோதுமையோடு சேர்த்து வணிகம் செய்திருக்கிறார். இவற்றைக் கொடுத்துத்தான் அவர் லெபனானிய தேக்கு மரங்களை பெற்றுக்கொண்டார் என விவிலியம் காட்டுகிறது (காண்க 2குறி 2,8-10). 

  திராட்சைத் தோட்டக்கலை, பாறைகள் மற்றும் கடினமாக கற்கள் நிறைந்த பாலஸ்தீன நாட்டில் சவால் நிறைந்த ஒன்றாகவே இருந்திருக்கிறது. இதனால் அதிகமான வேளைகளில் மக்கள் திராட்சை பயிர்செய்கையில் மிகவும் சிக்கனமாகவே இருந்திருக்கிறார்கள். சிவப்பு திராட்டை அதிகமான மக்களால் விரும்பப்பட்ட திராட்சை இனமாக இருந்திருக்கிறது. இதனை விட வெள்ளைத் திராட்சை மற்றும் சிவப்பு திராட்சை என்ற வகைகளும் இருந்திருக்கின்றன. சாதாரணமாக திராட்சை தோட்டத்தைச் சுற்றி கற்களாலும், பற்றைகளாலும் வேலிகள் அமைக்கப்பட்டன, அத்தோடு தோட்டத்தின் நடுவில் ஒரு காவற் கோபுரமும் அமைக்கப்பட்டது. இவற்றின் உதவியுடன் இந்த தோட்டங்கள் பாதுகாக்கப்பட்டன அல்லது அவற்றின் எல்லைகள் அடையாளப்படுத்தப்பட்டன. மற்றவருடைய தோட்டங்களில் திராட்சையை உண்ணலாம் ஆனால் அவற்றை எடுத்துச் செல்லக்ககூடாது என்ற ஒரு பழைய சட்டமும் இருந்திருக்கிறது (இணை 23,24). தோட்டங்களுக்கு இடையில் நெருக்கமான பாதைகளும் இருந்திருக்கின்றன

  விளைச்சலை அதிகரிக்கவும், பெறுமதியைக் கூட்டவும், கொடிகளை நறுக்குதல் மிக முக்கியமான வேலையாக கருதப்பட்டது (காண்க எசாயா 18,5.). ஓய்வு ஆண்டில் (சபத் ஆண்டு) நிலம் பயிரிடப்படாமல் ஓய்வாக விடப்பட்டது. இந்த காலத்தில் திராட்சை தோட்டங்களும் ஓய்வாகவே விடப்பட்டன (காண்க லேவி 25,4-5). இயற்கை சூழலை பாதுகாக்கவேண்டும் என்று அதிகமான விழிப்புணர்வுகள் இருக்கும் இந்த காலத்தைப்போல, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நிலத்தை ஓய்வாக வைத்திருக்க வேண்டும் என்று கட்டளைகள் இருப்பது ஆச்சரியாமான மகிழ்வைத் தருகிறது

 அனேகமாக கோடைகாலத்தின் இறுதிக்காலத்திலும், இலையுதிர் காலத்தின் தொடக்கத்திலும் திராட்சை அறுவடை நடைபெற்றது (எசாயா 16,9-10). நான்கு வருடங்களுக்கு ஒருமுறை திராட்சை கொடிகள் வெட்டியெடுக்கப்பட்டன. நான்காம் வருட அறுவடை ஆண்டவருக்கு காணிக்கையாக ஒப்படைக்கப்பட்டது. இராணுவ சேவைகளில் இருப்பவர்கள் ஐந்தாவது ஆண்டு, அறுவடை நடத்தால் அந்த ஆண்டில் தன் திராட்சை தோட்டத்தின் பலனை அனுபவிக்கும் பொருட்டு, சேவையிலிருந்து ஓய்வு அளிக்கப்பட்டார்கள் (காண்க இணை 20,6). திராட்சை தோட்டத்தில் அறுவடையின் போது விடப்பட்டவையை சேகரிப்பது, ஏழைகள், கைம்பெண்கள், அனாதைகளுக்கு மகிழ்வான காலமாக பார்க்கப்பட்டது (காண்க லேவி. 19,10: இணை 24,21). பழங்களாக திராட்சை உண்ணப்பட்டாலும், அதிகமானவை ஆலைகளுக்கு கொண்டுவரப்பட்டு, இரசமாக பிழியப்பட்டன. முதல் ஏற்பாட்டுக் காலத்திலும், புதிய ஏற்பாட்டுக் காலத்திலும் அதிகமான திராட்சை ஆலைகள் இருந்திருந்தன என்பதை தற்கால அகழ்வுகள் காட்டுகின்றன

  விவசாயத்தையும் தாண்டி, திராட்சை செடியும் அதன் அறுவடையும் இஸ்ராயேலருடைய கலாச்சாரத்தின் அடையாளமாக இருக்கின்றன. பயனுள்ள திராட்சைத் தோட்டம் கடவுளுடைய உண்மையான நன்மைத்தனத்தின் அடையாளமாக பார்க்கப்பட்டது. இஸ்ராயேலர்கள் கானானை கைப்பற்றிய போது, அங்கிருந்த திராட்சை தோட்டங்களையும் கைப்பற்றியிருக்கலாம் (காண்க எண். 13,23-24: .. 6,11). கடவுளுடைய சட்டங்களை மக்கள் நிறைவேற்றினால் ஆண்டவர் திராட்சை தோட்டங்களை ஆசிர்வதிப்பார், அத்தோடு விளைச்சலும் அதிகமாக கிடைக்கும் என்பன நம்பிக்கை (காண்க .. 8,6-10). இயேசுவும் சீடத்துவத்தைப் பற்றி விவரிக்க திராட்சை செடியையும், கொடியையும், அவை எப்படி புதுப்பிக்கப்படுகின்றன என்பவை பற்றியும் படிப்பிக்கிறார் (யோவான் 15,1-17). ஆண்டவருடைய கட்டளைகளை கடைப்பிடிப்பவருக்கு நல் பலனளிக்கும் திராட்சை செடியைப்போல மனைவி கிடைப்பார் என திருப்பாடல் ஆசிரியர் சொல்கிறார் (காண்க தி.பா 128,1-3). 

  நாடுகளை கடவுள் தீர்ப்பிடும் செயலுக்கு அடையாளமாகவும், திராட்சை செடிகள் பார்க்கப்படுகின்றன. எசாயா திராட்சை செடியைக் கொண்டு பாடல் ஒன்றையே அமைத்திருக்கிறார் (காண்க எசா 5,1-7). திராட்சை செடியைப்போல கடவுளை நம்பாதவர்கள் எதிரிகளால் சூறையாடப்படுவர் என்று யோவேல் இறைவாக்கினர் எச்சரிக்கிறார் (காண்க யோவேல் 1,6-12). எரேமியா இறைவாக்கினரும் இஸ்ராயேலின் தண்டனையை திராட்சை செடியுடன் ஒப்பிடுகிறார் (காண்க எரேமியா 48,32-33). திராட்சை பலன்களை ஒத்து வாழ்வது விவிலியத்தில் துறவற வாழ்வுடன் ஒப்பிட்டு பார்க்கப்படுகிறது. நசிரேயர்கள் திராட்சை இரசத்தை தவிர்த்தனர் (காண்க எண் 6,1-4). இராகாப்பியர் என்ற ஒரு மக்கள் கூட்டமும் திராட்சை இரசம் குடிப்பதை தவிர்த்தனர் (காண்க எரேமியா 35). இவர்களை எரேமியா ஒரு உதாரணமாக பாவிக்கிறார். குருக்களும் தங்களுடைய வழிபாட்டு நேரத்தில் திராட்சை இரசம் அருந்துவதை தவிர்க்க கேட்கப்பட்டார்கள் (காண்க லேவி 10,8). அக்காலத்திலும் திராட்சை இரசம் ஒரு மதுவகை பானமாகவே பார்க்கப்பட்டுள்ளது என்பது 

இந்த பகுதிகளில் தெரிகிறது

  இவ்வாறு, திராட்சைக் கொடி இஸ்ராயேல் மக்களாகவும், அதனை நட்டவராக கடவுளும் பார்க்கப்பட்டிருக்கிறார்கள். இயேசு திராட்சை கொடியாக தன் சீடர்களையும், அதன் உரிமையாளர்களாக கடவுளையும் காட்டுகிறார். பிற்காலத்தில் இயேசுவின் இரத்தத்தை குறிக்கவும் திராட்சை இரசம் பாவிக்கப்பட்டது. இன்றும் திருப்பலியில் திராட்சை இரசமே பாவிக்கப்படுகிறது என்பதிலிருந்து இதன் முக்கியத்துவத்தை திருச்சபையின் வாழ்விலும் உணர்ந்து கொள்ளலாம்


1'உண்மையான திராட்சைச் செடி நானே. என் தந்தையே அதை நட்டு வளர்ப்பவர். 2என்னிடமுள்ள கனிகொடாத கொடிகள் அனைத்தையும் அவர் தறித்துவிடுவார். கனிதரும் அனைத்துக் கொடிகளையும் மிகுந்த கனி தருமாறு கழித்து விடுவார். 3நான் சொன்ன வார்த்தைகளால் நீங்கள் ஏற்கெனவே தூய்மையாய் இருக்கிறீர்கள். 4நான் உங்களோடு இணைந்து இருப்பதுபோல நீங்களும் என்னோடு இணைந்து இருங்கள். கொடி திராட்சைச் செடியோடு இணைந்து இருந்தாலன்றித் தானாக கனிதர இயலாது. அதுபோல நீங்களும் என்னோடு இணைந்திருந்தாலன்றிக் கனிதர இயலாது. 5நானே திராட்சைக் செடி; நீங்கள் அதன் கொடிகள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந்திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார். என்னைவிட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாது. 6என்னோடு இணைந்து இராதவர் கொடியைப் போலத் தறித்து எறியப்பட்டு உலர்ந்து போவார். அக்கொடிகள் கூட்டிச் சேர்க்கப்பட்டு நெருப்பிலிட்டு எரிக்கப்படும். 7நீங்கள் என்னுள்ளும் என் வார்த்தைகள் உங்களுள்ளும் நிலைத்திருந்தால் நீங்கள் விரும்பிக் கேட்பதெல்லாம் நடக்கும். 8நீங்கள் மிகுந்த கனி தந்து என் சீடராய் இருப்பதே என் தந்தைக்கு மாட்சி அளிக்கிறது.


.1: பல திராட்சை செடிகள் இருந்தாலும் இயேசு தன்னைத்தான் உண்மையான திராட்சை செடி என்கிறார் (Εγώ εἰμι ἡ ἄμπελος ἡ ἀληθινὴ எகோ எய்மி ஹே அம்பெலொஸ் ஹே அலேதினே- நானே உண்மையான திராட்சை செடி). யோவான் நற்செய்தியில் இயேசு, 'நானே' என்ற வார்த்தையை ஏழு தடவைகளாக பயன்படுத்துகிறார். இந்த வார்த்தை பிரயோகங்கள், அவரை முதல் ஏற்பாட்டு கடவுளாக அடையாளம் காட்டுகிறது. இந்த இடத்தில் இயேசு தன்னை உண்மையான திராட்சை செடி என்று சொல்வது, இஸ்ராயேல் பின்புலத்தில் நோக்கப்படவேண்டும்

இஸ்ராயேலர்கள் தங்களை திராட்சை செடியாக வர்ணிப்பது வழமை, சில வேளைகளில் இந்த திராட்சை செடி நல்ல பலனை தரவில்லை என்ற குற்றச்சாட்டும் முதல் ஏற்பாட்டு 

இறைவாக்கினர்களால் முன்வைக்கப்பட்டது. இப்படியான சூழ்நிலையில் இயேசு தன்னை உண்மையான திராட்சைச் செடி என்கிறார். ஆக இறைவாக்கினர்களின் குற்றச்சாட்டு அவருக்கு பொருந்தாது என்பது இங்கே தெளிவாக காட்டப்படுகிறது

யோவான் நற்செய்தியாளர் அடையாளங்கள் வாயிலாக பேசுவதில் கைதேந்தவர். அவருடைய அடையாளங்கள், உவமைகளைவிட சற்று மேலானவை. இஸ்ராயேல் ஒரு வகையான திராட்சை செடி, ஆனால் இயேசு உண்மையான திராட்சை செடி என்கிறார் யோவான். திராட்சை செடி, அதன் உரிமையாளரைப் பற்றியும் சொல்லும். இங்கே இயேசு தான் திராட்சை செடியெனவும், வாணக தந்தையை அதன் தோட்டக்காரராகவும் காட்டுகிறார், (ὁ πατήρ μου ὁ γεωργός ἐστιν. ஹொ பாடேர் மூ ஹொ கெஓர்கொஸ் எஸ்டின், என் தந்தை அதன் உரிமையாளராக இருக்கிறார்). இந்த இடத்தில் இஸ்ராயேல் மக்களுக்கும், தனக்கும் உள்ள சகோதர உறவைக் காட்டுகிறார். அத்தோடு தனக்கும் தந்தையும் உள்ள இறுக்கமான உறவையும் அவர் காட்டுகிறார்


.2: இந்த உண்மையான திராட்சை செடி, தன்னுடைய கொடிகள் மட்டில் கடுமையான நடவடிக்கையை எடுக்கிறது. இந்த செயற்பாடுகளை தந்தையே முன்னெடுக்கிறார். கனிகொடாத கொடிகள் அனைத்தும் தறித்துவிடப்படுகிறது. கொடிகளை தறித்தல் திராட்சை செடிக்கு மிகவும் அவசியமான ஒரு செயல். இந்த தறித்தல் மூலம் புதிய கொடிகள் வளர்வதற்கான வாய்ப்பு உருவாக்கப்படுகிறது

கனிதரும் கொடிகள் பாராட்டப்பட்டு கழித்துவிடப்படுகிறது. இதுவும் திராட்சைச் செடிக்கு மிகவும் முக்கியமான செயற்பாடு. நன்றாக கனிதரும் கொடிகள் பாதுகாக்கப்படவேண்டியவை. பிற்காலத்தில் இவை புதிய செடிகளாகக்கூட மாற வாய்ப்புண்டு. இந்த இரண்டுவகையான கொடிகளும் இரண்டுவகையான சீடத்துவத்தைக் காட்டுகின்றன

பயன்தராத சீடர்கள் நிச்சயமாக வெளியேற்றப்பட வேண்டியவர்கள். இது இயேசுவின் நீதியைக் காட்டுகிறது. பயன்தராத சீடர்கள் மற்றவர்களுக்கு இடைஞ்சலாகவும், சில வேளைகளில் ஆபத்தானவர்களாகவும் இருக்கலாம். இவர்கள் பயன்தராமல் இருப்பதே இவர்களுடைய தண்டனை. இயேசு இவர்களுக்கு தண்டனை கொடுப்பது போல காட்டப்படவில்லை. தந்தைதான் இவர்களுக்கு தண்டனை கொடுக்கிறார். இந்த தண்டனைக்கு இவர்களும் காரணமாக இருக்கிறார்கள். மிகுந்த கனிதருகிறவர்கள், பாராட்டப்படுகிறார்கள், அதாவது இவர்கள் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக 

இருக்க அழைக்கப்படுகிறார்கள்

வெட்டியெறிதல் என்ற தமிழ் மொழிபெயர்ப்பிற்கு (αἴρω) அய்ரோ என்ற சொல் பாவிக்கப்படுகிறது. இது 'உயர்த்துதல்' அல்லது 'தூக்கிவிடுதல்' என்ற அர்த்தத்தைக் கொடுக்கும். யோவானின் இறையியலில் தண்டனை என்பது மிக அரிதான ஒன்றாக இருக்கின்ற படியால், இந்த 'தறித்துவிடுதல்' மொழிபெயர்ப்பு மிக சரியானதாக இல்லை என்ற வாதமும் இருக்கிறது. இருப்பினும் இயேசு பல வேளைகளில் இறுதி தீhப்ப்பை இயேசு வலியுறுத்துவதால், இதனை தண்டனை என்ற அர்த்ததில், மொழிபெயர்ப்பாளர்கள் காண்கின்றனர்


.3: தன்னுடைய சீடர்கள் அனைவரும் ஏற்கனவே நற்கனி தந்து கழிக்கப்படுகிறவர்கள் என்பது 

இந்த வரியில் காட்டப்படுகிறது. இயேசு இந்த வார்த்தையை உதிர்க்கின்றபோது, அவர் யூதாசையும் உள்ளடக்குகிறார் எனப்து தெரிகிறது. இயேசுவின் அன்பிலும், அவருடைய பார்வையில் யாரும் பிறவியிலேயே தீயவர்கள் இல்லை என்பதும் புலப்படுகிறது

ἤδη ὑμεῖς καθαροί ἐστε ஹேதே ஹுமெய்ஸ் காதாரொய் எஸ்டெ - நீங்கள் ஏற்கனவே தூய்மையாய் இருக்கிறீர்கள். இந்த தூய்மைக்கு காரணமாக இயேசு தன்னுடைய வார்த்தைகளைக் காட்டுகிறார், διὰ τὸν λόγον ὃν λελάληκα  ὑμῖν· தியா டொன் லொகொன் ஹொன் லெலாலேகா- என்னுடைய வார்த்தை அதை உங்களுக்கு சொன்னதான் வாயிலாக


.4: 'இணைந்திருத்தல்' யோவான் நற்செய்தியில் மிக முக்கியமான பண்பைக் குறிக்கிறது (μένω மெனோ-நிலைத்திரு). இயேசுவோடு இணைந்திருத்தல், அவரில் நம்பிக்கைவைத்தல், அவரை மெசியாவாக ஏற்றுக்கொள்ளல் போன்ற அர்த்தத்தைக் கொடுக்கிறது. இயேசு ஏற்கனவே தன் மக்களோடு இணைந்திருக்கிறார் என்பது சொல்லப்படுகிறது. இவர் 'இணைந்திருக்கின்ற ஆண்டவர்'. 

μείνατε ἐν ἐμοί, κἀγὼ ἐν ὑμῖν. மெய்நாடெ என் எமொய், காகோ என் ஹுமின்- என்னில் இணைந்திருங்கள் நான் உங்களில் இணைந்திருப்பது போல


இதற்கு உருவகமாக திராட்சை செடியும் அதன் கொடிகளும் உருவகிக்கப்படுகின்றன. திராட்சைச் செடியோடு இணையாத கொடிகள் பலன்தர முடியாது. திராட்சை கொடிகளுக்கு பழங்களையும், திராட்சை என்ற அர்த்தத்தையும் செடிதான் கொடுக்கிறது. திராட்சை கொடிகளுக்கு வேர்கள் கிடையாது, ஆக அது மிக முக்கியமான மூலப்பொருளான தண்ணீரை செடியோடு இணைந்திருந்தால் மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும், இதனை தன் சீடர்களுக்கு உருவகிக்கிறார் இயேசு. சீடர்கள் சுயமானவர்களாக இருந்தாலும், அவர்கள் இயேசுவோடு இணைந்திருந்தால் அன்றி, பலன்தர இயலாது என்பது அழகாகக் காட்டப்படுகிறது

இயேசுவோடு இணைந்திராதவர்கள் என்பது இங்கே ஒரு குறிப்பிட்ட குழுவைக் குறிப்பது போல தென்படுகிறது. இவர்கள் யோவானின் தலத் திருச்சபையில் பிளவுகளை உண்டாக்கியவர்களை அடையாளம் காட்டுவது போல தென்படுகிறது. அல்லது இது பெரியளவில் 

இயேசுவை எற்றுக்கொள்ளாத யூதர்கள் மற்றும் வேறு மக்களையும் குறிக்கலாம். அவரின்றி வாழ்வில்லை என்பது யோவான் நற்செய்தியின் மிக முக்கியமான முழக்கம்

οὐδὲ ὑμεῖς ἐὰν μὴ ἐν ἐμοὶ  μένητε. ஊதெ ஹுமெய்ஸ் எயான் மே என் எமொய் மெனேடெ- என்னில் இணைந்திருந்தால் அன்றி உங்களாலும் ஒன்றுமில்லை. (தமிழ் விவிலியம் தெளிவிற்காக சில வார்த்தைகளை இந்த வரியில் சேர்த்திருக்கின்றது). 

.5: ஒரே இடத்தில் இரண்டாவது முறையாக இயேசு தன்னை, திராட்சை செடியென இரண்டாவது முறையாக அழைக்கிறார் (ἐγώ εἰμι ἡ ἄμπελος எகோ எய்மி ஹே அம்பெலொஸ்- நானே திராட்சை செடி). இந்த முறை தெளிவாக தன்னவர்களை அவர் கொடிகள் என அன்பொழுக அழைக்கிறார் (ὑμεῖς τὰ κλήματα. ஹுமெய்ஸ் டா கிலேமாடா- நீங்கள் அந்த கிளைகள்). 

ஒருவர் கனிதர, அவர் இயேசுவுள்ளும் இயேசு அவருள்ளும் இணைந்திருக்க வேண்டியது கட்டாயம் ஆகிறது. இந்த கனி மிகுதியாக இருக்கும் என்பதும் சொல்லப்படுகிறது (καρπὸν πολύν கார்பொன் பொலூன்- மிகுந்த கனி). இயேசுவைவிட்டு எதுவும் செய்ய முடியாது என்ற வரி 

இறுதியாக, அழுத்தமாக சொல்லப்படுகிறது. யோவான் நற்செய்தியிலேயே இந்த வரி மிகவும் அழுத்தமான வரியாக நோக்கப்படவேண்டும் (ὅτι χωρὶς ἐμοῦ οὐ δύνασθε ποιεῖν  ⸀οὐδέν. ஹொடி கோரிஸ் எமூ ஹு துனாஸ்தெ பொய்யென் ஊதென்- அதாவது என்னைவிட்டு உங்களால் ஒன்றும் செய்ய இயலாது). 


.6: இயேசுவோடு இணைந்திருப்பது ஓர் அவசியமான தேவை, அப்படியல்லாதவர்களுக்கு என்ன நடைபெறும் என்பதும் இந்த வரியில் காட்டப்படுகிறது. அவர் தறிக்கப்பட்ட கொடிகளைப்போல உலர்ந்து போவார்கள். பின்னர், இந்த உலர்ந்த கொடிகள் சேர்க்கப்பட்டு எரிக்கப்படும்

இந்த வரிகள் இறுதிநாள் தீர்ப்பைப்பற்றி சொல்வது போல தோன்றலாம் (εἰς τὸ πῦρ βάλλουσιν   καὶ καίεται. எய்ஸ் டொ பூர் பால்லூசின் காய் காய்யெடாய்- நெருப்பில் எறியப்பட்டு எரிக்கப்படும்). இது சாதாரணமாக ஒரு திராட்சை ஆலையில் நடைபெறுகின்ற செயல்தான்

இதனைத்தான் யோவான் நற்செய்தியாளர் அடையாளமாக எடுக்கிறார்


.7: ஆண்டவருள் நிலைத்திருத்தல், ஒருவருக்கு இனிமையான வாழ்வை கொடுக்கிறது. இயேசுவோடு இணைந்திருத்தல் என்பது அவருடைய வார்த்தையை தன்னுள் கொண்டிருப்பதை நினைவூட்டுகிறது

இயேசு என்கின்ற கடவுள் அவருடைய உயரிப்பின் பின்னர், வார்த்தையாக ஒருவருள் வாழ்கிறார். ஆக அவர் வார்த்தையை கொண்டிருந்தால், அது அவரைக் கொண்டிருப்பதற்கு சமனாக அமைகிறது

விரும்பிகேட்பதெல்லாம் (θέλητε  ⸁αἰτήσασθε தெலேடெ அய்டேசாஸ்தெ- விரும்புவது கேட்பது) என்பது நிறைவான வாழ்வைக் குறிக்கின்றது


இந்த உலகம் பல மதங்களை உருவாக்கியிருக்கிறது, இருப்பினும்

கடவுள்-மனிதர் உறவை அது இன்னும் பலப்படுத்தவில்லை,

மனிதருக்கும் அவர்கள் உருவாக்கிய பரிவினைவாதங்களுக்கும் நல்ல உறவு இருக்கிறது,

கடவுளுக்கும்-மனிதருக்கும், மனிதருக்கும்-மனிதருக்குமான உறவு இன்னமும் வளரவில்லை.


இயேசு தன்னோடு இணைந்திருக்க கேட்கிறார்

பொய்யான திராட்சை செடிகள், அதன் கொடிகளையும் நஞ்ஞாக்குகின்றன

இயேசுவே உண்மையான திராட்சை செடி

அதனோடான இணைப்பு

நிச்சயமான அனைத்து கொடிகளையும்

இனிமையாக்கும்



அன்பு ஆண்டவரே உம்மோடு இணைந்திருக்க வரம் தாரும், ஆமென்.




 

ஆண்டின் பொதுக்காலம் முப்பத்திநான்காம் வாரம் கிறிஸ்து அரசர் பெருவிழா:  Our Lord Jesus Christ, King of the Universe 24.11.2024

ஆண்டின் பொதுக்காலம் முப்பத்திநான்காம் வாரம்   கிறிஸ்து அரசர் பெருவிழா :  Our Lord Jesus Christ, King of the Universe 24.11.2024 இய...