தவக்காலம் முதலாம் ஞாயிறு (ஆ)
(18,02,2024)
Michael Jegankumar Coonghe OMI,
Sinthathirai Matha Shrine,
Chaddy, Velanai, Jaffna.
Thursday, 15 February 2024
முதல் வாசகம்: தொடக்க நூல் 9,8-15
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 24
இரண்டாம் வாசகம்: 1பேதுரு 3,18-22
நற்செய்தி: மாற்கு 1,12-15
தவக்காலம்:
இந்த வருடம் தவக்காலம், மாசி மாதம் 14ம் நாளுடன் தொடங்குகிறது, அன்றைய நாள் காதலர் தினம் அல்லது தூய வலன்ரீனுடைய நாளகவும் இருப்பது வித்தியாசமான அனுபவத்தை தருகிறது. தவக்காலம் நாற்பது நாட்களை கொண்டமைந்து பங்குனி மாதம் 23ம் நாளுடன் நிறைவடையும். இந்த காலம் கிறிஸ்தவர்களுக்கு மிகவும் முக்கியமான காலம், இதனை அருளின் காலம் என அழைக்கின்றனர். இந்த நாட்களில் கிறிஸ்தவர்கள் தவம், செபம், ஒறுத்தல், விரதம் போன்றவற்றை கடைப்பிடிக்க அழைக்கப்படுகிறார்கள். இந்த நாட்கள் விவிலியத்தில் பல பின்புலங்களைக் கொண்டுள்ளது. இயேசு ஆண்டவரும் தன்னுடைய பொதுப் பணிக்காலத்தின் முன் நாட்பது நாட்கள் பாலைவனத்தில் செபம் தவம் செய்யதார் என்று நற்செய்தியாளர்கள் காட்டுகின்றனர்.
இந்த நாட்களில் களியாட்டங்களை தவிர்க்க கிறிஸ்தவர்கள் எதிர்பார்க்கப்படுகிறார்கள். அமைதியாக இருந்து, அமைதியில் ஆண்டவரின் குரலுக்கு செவிமடுக்க இந்ந நாட்கள் நல்ல வாய்ப்பை தேடித் தருகின்றன. தவக்காலத்தில் மொத்தமாக 46 நாட்கள் உள்ளன, அதில் ஞாயிறு தினங்களும் சில பெருவிழாக்களும் உள்ளடக்கப்டாமையால் அது நாட்பது நாட்களாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தவக்காலம் துன்பத்தின் மற்றும் அழுகையின் காலமல்ல, மாறாக ஆண்டவரின் துன்பத்தையும் பாடுகளையும் நினைத்து தியானிக்கும் காலம். இது அருளின் காலம்.
தொடக்க நூல் 9,8-15
8கடவுள் நோவாவிடமும் அவருடனிருந்த அவர் புதல்வரிடமும் கூறியது. 9'இதோ! நான் உங்களோடும் உங்களுக்குப் பின்வரும் உங்கள் வழிமரபினரோடும் 10பேழையிலிருந்து வெளிவந்து உங்களோடிருக்கும் உயிரினங்கள், பறவைகள்,கால்நடைகள், நிலத்தில் உங்களுடன் உயிர்வாழும் விலங்கினங்கள் எல்லாவற்றோடும், மண்ணுலகில் உள்ள எல்லா உயிர்களோடும் என் உடன்படிக்கையை நிலைநாட்டுகிறேன். 11உங்களோடு என் உடன்படிக்கையை நிறுவுகிறேன்; சதையுள்ள எந்த உயிரும் வெள்ளப் பெருக்கால் மீண்டும் அழிக்கப்படாது. மண்ணுலகை அழிக்க இனி வெள்ளப் பெருக்கு வரவே வராது.'
12அப்பொழுது கடவுள், 'எனக்கும் உங்களுக்கும் உங்களுடன் இருக்கும் உயிருள்ள எல்லாவற்றிற்குமிடையே தலைமுறைதோறும் என்றென்றும் இருக்கும்படி, நான் ஏற்படுத்திய உடன்படிக்கையின் அடையாளமாக, 13என் வில்லை மேகத்தின்மேல் வைக்கிறேன். எனக்கும் மண்ணுலகுக்கும் இடையே உடன்படிக்கையின் அடையாளமாக இது இருக்கட்டும். 14மண்ணுலகின் மேல் நான் மேகத்தை வருவிக்க, அதன்மேல் வில் தோன்றும்பொழுது, 15எனக்கும் உங்களுக்கும் சதையுள்ள உயிரினங்கள் எல்லாவற்றுக்கும் இடையே உள்ள என் உடன்படிக்கையை நான் நினைவுகூர்வேன். உயிர்கள் எல்லாவற்றையும் அழிப்பதற்குத் தண்ணீர் இனி ஒருபோதும் பெருவெள்ளமாக மாறாது.
கடவுள் முதல் ஏற்பாட்டில் பல உடன்படிக்கைகளை செய்திருக்கிறார். இந்த உடன்படிக்கைகளில், அவர் நோவாவுடன் செய்த உடன்படிக்கை மிகவும் அழகாக விவரிக்கப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு அழிவு, பின்னர் வாழ்வு போன்ற பல கதைகள் மொசப்தேமிய இலக்கியங்களில் அதிகமாக கிடைக்கப்பெறுகின்றன. மொசப்தேமியரின் வெள்ளப் பெருக்கு கதைகளுக்கும் நோவாவின் கதைக்கும் தொடர்ப்பிருந்திருக்கலாம். ஆனால் இறையியலில் தனித்துவம் தனியாக தெரிகிறது. அத்ராஹாசிஸ், கில்காமெஷ், ட்சியுஸ்உத்ரா போன்ற கதைகள் வெள்ளப்பெருக்கை பற்றிய மொசபத்தேமிய பின்புலத்தைக் காட்டுகின்றன.
விஞ்ஞான ரீதியாகவோ அல்லது வரலாற்று ரீதியாகவோ, நோவாவின் காலத்தில் முழு உலகமும் வெள்ளத்தால் அழிந்து மீண்டது என்பதை நிரூபிப்பது மிகவும் கடினமாக இருக்கும். அதேவேளை, கடல் வாழ் உயிரினங்களின் படிவங்கள் மலையுச்சில் கிடைத்திருக்கின்றன. அத்தோடு துருக்கி நாட்டில், அராராத் மலை உச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட மரத்துண்டு ஒன்று நோவாவின் பெட்டகத்தின் எச்சம் என்றும் சிலர் வாதிடுகின்றனர். இருப்பினும் கார்பன் 14, ஆய்வுகள் இந்த மரத்துண்டு கி.மு 1400 ஆண்டுகள்தான் பழமையானது என்று காட்டுகின்றன. தற்கால விஞ்ஞானத்தின் ஆய்வுகளிலும், கண்டுபிடிப்புக்களிலும்தான் விவிலிய தரவுகள் அடக்கப்படவேண்டும் என்ற சிந்தனையை ஏற்றுக்கொள்ள முடியாது. விவிலியம் ஒரு விஞ்ஞான புத்தகம் அல்ல ஆனால் அங்கே விஞ்ஞான அறிவுகளும் உள்ளன.
வெள்ளப் பெருக்கு நிகழ்வில் கடவுள்தான் கதாநாயகர், நோவா இந்த நிகழ்வுகளில் பேசமாட்டார். வெள்ளப்பெருக்கத்திற்கு காரணமாக விவிலிய ஆசிரியர் மனிதருடைய தீமையான இதய சிந்தனைகளைக் காட்டுகிறார் (காண்க தொ.நூல்1,31). கடவுளுடைய கோபம், நோவாவுடைய நல்வாழ்க்கையால் தணிகிறது போல காட்சி அமைக்கப்பட்டுள்ளது. மனித குலம் மட்டுமல்ல, அனைத்து உயிர்களும் நோவாவின் நல்வாழ்வால் மீட்படைகிறது. வெள்ளப்பெருக்கால் முழு உலகும் அழியவில்லை, தெய்வங்கள் உலகை அழிக்கவில்லை என்ற சிந்தனையை அப்படியே எபிரேய விசுவாசம் ஒரே கடவுள் நம்பிக்கையில் தருகிறது இந்த நிகழ்வு. நோவாவிற்கு முற்பட்ட காலத்தில் கடவுள் மனிதரின் தீமையின் பொருட்டு அதிகமான சாபங்களை கொடுத்தவராக காட்டப்பட்டுள்ளார். நோவாவுடன் செய்த உடன்படிக்கை கடவுளை ஆசீர்வாதங்களின் கடவுளாகக் காட்டுகிறது. கடவுள் மட்டுமல்ல, மனிதர்களும் இரக்கம் உள்ளவர்களாக காட்டப்படுகிறார்கள். இனி மனிதர்களை சபிப்பது கடவுள் அல்ல, மாறாக சக மனிதர்கள்தான் என்பதை நாசூக்காக காட்டுகிறார் ஆசிரியர், நோவாதான் தன்பிள்ளைகளை சபிக்கிறார் (காண்க தொ.நூல் 9,20-27).
வவ.8-10: மீண்டும் ஒருமுறை கடவுள் பேசுகிறார். இந்தமுறை கடவுள் நோவாவுடனும், அவர் பிள்ளைகளோடும் பேசுகிறார். இது நோவாவின் பிள்ளைகளும் முக்கியமானவர்கள் என்பதைக் காட்டுகிறது எனலாம்
(וַיֹּאמֶר אֱלֹהִים אֶל־נֹחַ וְאֶל־בָּנָיו אִתּוֹ வாய்யோ'மெர் 'எலோஹிம் 'எல்-நோவாஹ் வெ'எல்-பானாவ் 'இத்தோ).
ஆண்டவர் உடன்படிக்கை ஒன்றை செய்வதாகச் சொல்கிறார், ஆதாம், காயின் போன்றவர்களுக்கு பின்னர் கடவுள் இப்போது இன்னொரு உடன்படிக்கையைச் செய்கிறார். இது முழுக்க முழுக்க, ஆசீர்வாதமான உடன்படிக்கையாக அமைகிறது (מֵקִים אֶת־בְּרִיתִי மெகிம் 'எத்-பெரிதி- என் உடன்படிக்கையை செய்கிறேன்).
இந்த உடன்படிக்கையினுள், நோவா, அவர் வழிமரபு மற்றும் உயிரினங்கள் அனைத்தும் உள்ளடக்கப்படுவது மிகவும் அதிசயமாக உள்ளது. உயிரினங்கள் அனைத்தும் (כָּל־נֶפֶשׁ הַֽחַיָּה கோல்-நெபெஷ் ஹஹய்யாஹ்)
உள்ளடக்கப்பட்டுள்ளன, அவை அனைத்து பறவைகள் (עוֹף 'ஓப்- பறவை), அனைத்து விலங்குகள் (בְּהֵמָה பெஹெமாஹ்- விலங்கு), நிலத்தில் வாழும் உயிரினங்கள் அனைத்தும் (כָל־חַיַּת הָאָ֖רֶץ கோல்-ஹய்யெத் ஹா'ஆரெட்ஸ்) போன்றவை ஆகும்.
வ.11: கடவுள் அல்லது தெய்வங்கள், தன்னுடைய, தங்களுடைய கோபத்தினால் மனிதர்களை வெள்ளப்பெருக்கினால் அழித்தார்கள் என்ற ஒரு மொசப்தேமிய நம்பிக்கை இருந்திருக்கிறது. அத்தோடு அடிக்கடி ஏற்படும் வெள்ளப்பெருக்கின் அர்த்தத்தையும் அறிய வேண்டிய தேவை ஒன்றும் இருந்திருக்கிறது. பூவுலகின் ஐந்து சக்திகளில் வெள்ளம் ஒரு பயங்கரமான சக்தியாக இருந்தது, இதன் அர்த்தத்தை பல சமயங்கள் பலவாறு காட்டுகின்றன. வெள்ளத்திற்கு காரணம், நீர்த் தெய்வம் என்ற வாதம் பல இதிகாசங்களில் எழுதப்பட்டுள்ளன. யூதர்கள் வெள்ளப்பெருக்கை எப்படிக் கண்டார்கள் என்பதற்கு இந்த ஒரு நல்ல சான்று.
கடவுள் தானே முன்னின்று ஒரு உடன்படிக்கையை நிறுவுகிறார்
(הֲקִמֹתִי אֶת־בְּרִיתִי אִתְּכֶם ஹகிமோதி எத்-பெரிதி
'இத்கெம்- நான் என் உன்படிக்கையை). புராணங்களின் தெய்வங்கள் மனிதர்களை பழிவாங்க வெள்ளப்பெருக்கை உருவாக்க, இந்த உண்மைக் கடவுள் இனி வெள்ளத்தால் அழிவில்லை என்று உடன்படிக்கை செய்கிறார். இந்த உடன்படிக்கை அனைத்து சதையுள்ள உயிரினங்களையும் உள்வாங்குகிறது (כָּל־בָּשָׂר கோல்-பாசார்- அனைத்து சதையுள்ளவையும்). மனிதர்கள் மட்டுமல்ல அனைத்து உயிரினங்களும் ஆண்டவரின் பார்வையில் பெறுமதியானவை என்பதை இந்த வரி காட்டுகிறது.
இந்த வரியின் இறுதி பிரிவு வித்தியாசமாக இருக்கிறது. கடவுள், இனி மனிதரை அழிக்க வெள்ளப் பெருக்கு வரவே வராது என்கிறார் (לֹֽא־יִהְיֶה עוֹד லோ-யிஹ்யெஹ் 'ஓர்- இனிமேல் இராது), ஆனால் ஒவ்வொரு வருடமும் ஏதோ ஓர் இடத்தில் வெள்ளத்தால் மக்கள் அழிந்து கொண்டிருப்பது, பல கேள்விகளை எழுப்பலாம். இந்த இறையியல் கேள்விக்கு அறிஞர்கள் பல விடைகளைத் தருகின்றனர், இதில் ஒன்று: கடவுள் இனி ஒருபோதும் தான் வெள்ளப்பெருக்கிற்கு காரணமாக இருக்கமாட்டேன் என்று சொல்வதாக எடுக்கின்றனர். மனிதர்களும், இயற்கையும் வெள்ளப்பெருக்கை உருவாக்கினால் அதற்கு தான் பொறுப்பல்ல என்பது போல உள்ளது. அப்படியானால் மனிதர்களும், இயற்கையும் சுதந்திரமாக செயற்பட முடியுமா? என்ற கேள்வியும் எழும்பலாம்.
வவ.12-13: கடவுள் தன் உடன்படிக்கையின் அடையாளமாக வானவில்லை வைப்பதாக ஆசிரியர் காட்டுகிறார். வானவில் (קֶשֶׁת கெஷெத்-வில்), மேகத்தில் உள்ள நீர்குமிழிகளின் விம்பம் சூரிய ஒளிக்கீற்றுக்களால் உருவாகின்றன என்பது விஞ்ஞான விளக்கம்.
இந்த இடத்தில், வானவில்லுக்கு பயன்பட்டுள்ள சொல், சாதாரண வில்லைத்தான் முதன்மையாக குறிக்கிறது. வெள்ளத்தின் பின் இந்த நிகழ்வுகள் நடப்பதாலும், வெள்ளத்தின் பின் வரும் வெயிலின் காரணமாக ஏற்படும் வானவில், சாதாரணமாக வானத்தில் தோன்றும்.
கடவுளை போருக்கு செல்லும் அரசராக வர்ணித்து, போரிலே வென்ற ஓர் அரசர், எதிர் அணியுடன் சமாதானம் செய்யும் போது தன்னுடைய வில்லை தொங்கவிடுவார், இதனைத்தான் ஆசிரியர் உருவகிக்கின்றார் என்றும் சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்த வானவில் அடையாளத்திற்கு பின்னால் மொசப்தேமியர் அல்லது கானானியரின் வானவில் பற்றிய அக்கால அறிவின் தாக்கம் நிச்சயமாக
இருந்திருக்க வேண்டும்.
இந்த வரியில் மையக்கருத்தாக இருப்பது போர் அல்ல, மாறாக ஆண்டவரின் உடன்படிக்கை. இந்த உடன்படிக்கையை ஆண்டவர் மனிதர்களோடு மட்டுமல்லாது, அனைத்து உயிர்களோடும் செய்கிறார் என்றும் தலைமுறைதோறும் மனிக்குலத்திற்கு அடையாளமாக இருக்கும் என்பதும் மீண்டும் ஒருமுறை சொல்லப்பட்டுள்ளது.
வ.14: வானவில் எப்படி தோன்றுகிறது என்பதை இந்த வரி காட்டுகிறது. கடவுள் மேகத்தை வரவைத்து அதன் மேல் வானவில்லை வைப்பதாகச் சொல்லப்படுகிறது. அதாவது வானவில்லின் தோற்றத்திற்கு காரணம், சந்தர்ப்பம் அல்ல, மாறாக கடவுளின் விருப்பம் என்பது சொல்லப்படுகிறது.
வ.15: இந்த வானவில் உலகிற்கான அடையாளம் மட்டுமல்ல, தனக்கும் ஓர் நினைவு அடையாளம் என்கிறார் கடவுள். இதனை பார்க்கும் போதெல்லாம், தான் மனிதர்கள் மற்றும் உயிருள்ள அனைத்தோடும் செய்து கொண்ட உடன்படிக்கையை நினைவுகூருவதாக அமையும் என்கிறார்.
உயிர்கள் எல்லாம் அழிய இனி ஒருபோதும் நீர் வெள்ளமாக மாறாது என்பது இங்கே மீளவும் சொல்லப்பட்டுள்ளது.
திருப்பாடல் 25
வழிகாட்டிப் பாதுகாக்குமாறு வேண்டல்
(தாவீதின் புகழ்ப்பா)
1ஆண்டவரே, உம்மை நோக்கி, என் உள்ளத்தை உயர்த்துகிறேன்.
2என் கடவுளே, உம்மில் நம்பிக்கை கொள்கின்றேன் நான் வெட்கமுற விடாதேயும்; என் பகைவர் என்னைக் கண்டு நகைக்க விடாதேயும்.
3உண்மையிலேயே, உம்மை நம்பும் எவரும் வெட்கமுறுவதில்லை; காரணமின்றித் துரோகம் செய்பவரோ வெட்கத்திற்கு உள்ளாவர்.
4ஆண்டவரே, உம் பாதைகளை நான் அறியச்செய்தருளும்; உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும்.
5உமது உண்மை நெறியில் என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும்; ஏனெனில், நீரே என் மீட்பராம் கடவுள்; உம்மையே நான் நாள் முழுதும் நம்பியிருக்கின்றேன்;
6ஆண்டவரே, உமது இரக்கத்தையும், உமது பேரன்பையும் நினைந்தருளும்; ஏனெனில், அவைதொடக்கமுதல் உள்ளவையே.
7என் இளமைப் பருவத்தின் பாவங்களையும், என் குற்றங்களையும் நினையாதேயும், உமது பேரன்பிற்கேற்ப என்னை நினைத்தருளும்; ஏனெனில், ஆண்டவரே நீரே நல்லவர்.
8ஆண்டவர் நல்லவர்; நேர்மையுள்ளவர்; ஆகையால், அவர் பாவிகளுக்கு நல்வழியைக் கற்பிக்கின்றார்.
9எளியோரை நேரிய வழியில் அவர் நடத்துகின்றார்; எளியோருக்குத் தமது வழியைக் கற்பிக்கின்றார்.
10ஆண்டவரது உடன்படிக்கையையும் ஒழுங்குமுறையையும் கடைப்பிடிப்போர்க்கு, அவருடைய பாதைகளெல்லாம் பேரன்பும் உண்மையும் உள்ளனவாய் விளங்கும்.
11ஆண்டவரே, உமது பெயரின் பொருட்டு என் குற்றத்தை மன்னித்தருளும்; ஏனெனில், என் குற்றம் மிகப் பெரியது.
12ஆண்டவருக்கு அஞ்சி நடப்பவர் எவரோ அவருக்குத் தாம் தேர்ந்துகொள்ளும் வழியை அவர் கற்பிப்பார்.
13அவர் நலமுடன் வாழ்வார்; அவருடைய மரபினர் நாட்டைச் சொந்தமாக்கிக்கொள்வர்.
14ஆண்டவரின் அன்புறவு அவருக்கு அஞ்சி நடப்போருக்கே உரித்தாகும்; அவர் அவர்களுக்கு தமது உடன்படிக்கையை வெளிப்படுத்துவார்;
15என் கண்கள் எப்போதும் ஆண்டவரை நோக்கியிருக்கின்றன, அவரே என் கால்களை வலையிலிருந்து விடுவிப்பார்.
16என்னை நோக்கித் திரும்பி என் மீது இரங்கும்; ஏனெனில், நான் துணையற்றவன்; துயருறுபவன்.
17என் வேதனைகள் பெருகிவிட்டன் என் துன்பத்தினின்று என்னை விடுவித்தருளும்.
18என் சிறுமையையும் வருத்தத்தையும் பாரும்; என் பாவங்கள் அனைத்தையும் மன்னித்தருளும்.
19என் எதிரிகள் பெருகிவிட்டதைப் பாரும். அவர்கள் எத்துணைக் கொடுமையாய் என்னை வெறுக்கின்றனர்!
20என் உயிரைக் காப்பாற்றும்; என்னை விடுவித்தருளும்; உம்மிடம் அடைக்கலம் புகுந்துள்ள
என்னை வெட்கமுற விடாதேயும்.
21வாய்மையும் நேர்மையும் எனக்கு அரணாய் இருக்கட்டும்; ஏனெனில், நான் உம்மையே
நம்பியிருக்கின்றேன்.
22கடவுளே, இஸ்ரயேலரை அவர்கள் படும் துன்பங்கள் அனைத்தினின்றும் மீட்டருளும்.
திருப்பாடல்கள் புத்தகத்தை ஐந்து பிரிவுகளாக பிரிக்கும் பிரிவினுள், இந்த 25வது பாடல், முதலாவது பிரிவினுள் உள்ளடக்கப்பட்டுள்ளது. ஆய்வாளர்கள் இந்த திருப்பாடலை ஒரு தனி மனித புலம்பல் பாடல் என வகைப்படுத்தியுள்ளனர். அத்தோடு இதனை முழுமையில்லாத அகரவரிசைப் பாடல் எனவும் வாதிடுகின்றனர். எபிரேய அகரவரிசையில் சில எழுத்துக்கள் இந்த பாடலிலே தவறவிடப்பட்டிருக்கின்றன. இந்தப் பாடலின் முன்னுரை இதனை தாவீதிற்குரிய பாடல் எனக் காட்டுகிறது
(לְדָוִד லெதாவித்- தாவீதிற்குரியது).
வ.1: (א அலெப்- எபிரேய அரிச்சுவடியின் முதல் எழுத்து): முதலாவது எழுத்தில் தொடங்கும் இந்த வரியில், ஆசிரியர் தான் ஆண்டவரை நோக்கி தன் ஆன்மாவை அல்லது உள்ளத்தை உயர்த்துவதாகச் சொல்கிறார் (נַפְשִׁי אֶשָּׂא நப்ஷி 'எஸ்ஸா'). இது ஒரு தனிநபர் புலம்பல் பாடலாக இருக்கின்ற படியால், இங்கே ஆண்டவரை நோக்கி உள்ளத்தை உயர்த்துவது, அவரது துன்பமான நிலையைக் காட்டுகிறது என எடுக்கலாம்.
வ.2: இந்த வரியும் முதலாவது எழுத்துடனேயே தொடங்குகின்றது. தான் ஆண்டவரில் நம்பிக்கை வைத்திருப்பதால், தன்னை அவமானம் அடையவிடவேண்டாம் என்கிறார் (אַל־אֵבוֹשָׁה 'அல்-'எவோஷாஹ்- நான் அவமானம் அடையாதிருப்பேனாக). அதுவும் தான் தன்னுடைய எதிரிகளிடம் அவமானம் அடையவிடவேண்டாம் என்கிறார். என் எதிரிகள் என்னில் மகிழ்சி அடையாதிருப்பார்களாக என்று எபிரேய விவிலியம் காட்டுகிறது
(אַל־יַעַלְצוּ אֹיְבַי לִי׃ 'அல்-ய'ல்ட்சூ ஓ'யெவாய் லி)
தான் அவமானம் அடைந்தால் அதுவும் கடவுளுடைய அனுமதியோடே நடைபெறுகிறது. அதாவது அனைத்தும் ஆண்டவரின் கைகளிலேயே உள்ளது, எனவே அவர் நினைத்தால் அதனை தடுக்கலாம் என்பதால் ஆண்டவரிடம் மன்றாடுகிறார் ஆசிரியர்.
வ.3: (ג கிமெல்- எபிரேயத்தின் மூன்றாவது எழுத்து). இந்த வரி மூன்றாவது எழுத்தில் ஆரம்பிக்கிறது. ஆண்டவரை நம்புவோர் வெட்கம் அடைவதில்லை என்பது இஸ்ராயேலரின் நம்பிக்கை, அதனை தானும் கொண்டிருக்கிறார் ஆசிரியர்.
அதேவேளை துரோகம் இழைக்கிறவர்கள் நிச்சயமாக அவமானம் அடைவார்கள் அதில் மாற்றம் இல்லை என்பதையும் அவர் அறிந்திருக்கிறார். இவர்களை குறிக்க הַבּוֹגְדִים רֵיקָם
ஹபோக்திம் ரெகாம் என்ற சொல் பாவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தங்களாக, தேவையில்லாமல் துரோகம் இழைப்பவர்கள் அல்லது பிரியோசனமில்லாமல் துரோகம் இழைப்பவர்கள் என்று வருகின்றன.
வ.4: (ד தலெத்- நான்காவது எழுத்து). எபிரேயத்தின் நான்காவது எழுத்தில் இந்த வரி தொடங்குகின்றது. திருப்பிக் கூறுதல் முறையில், உமது பாதைகளை (דְּרָכֶיךָ தெராகெகா) மற்றும் உமது வழிகளை (אֹרְחוֹתֶיךָ 'ஓர்ஹோதெகா) என்ற ஒத்த கருத்துச் சொற்கள் பாவிக்கப்பட்டுள்ளன.
ஆண்டவரின் பாதைகளையும் அவர் வழிகளையும் விட்டு தங்களை அகலவிட வேண்டாம் என்ற வேண்டுதலை ஆசிரியர் முன்வைக்கிறார்.
வ.5: (ה ஹெ - ஐந்தாவது எழுத்து). ஆசிரியர் கடவுளை தன்னுடைய மீட்பராம் கடவுளாக ஏற்றுக்கொள்வதால் (אֱלֹהֵי יִשְׁעִי 'எலோஹே யிஷ்'இ), உண்மை நெறியில் தன்னை நடத்தி கற்பிக்க கேட்கிறார். ஆண்டவரை மீட்பின் கடவுளாக காண்பது இஸ்ராயேலர்களின் நம்பிக்கைகளில் மிக முக்கியமானது. இந்த கடவுளையே இவர் நாள் முழுவதும் நம்பியிருப்பதாகவும் சொல்கிறார். இதிலிருந்து சிலர், சில வேளைகளில் கடவுளையும் வேறு வேளைகளில் பொய்த் தெய்வங்களையும் நம்பியிருக்கிறாகள்; என்ற குற்றச்சாட்டையும் முன்வைப்பது போல தெரிகிறது.
வ.6: (ז ட்ஸயின்- எழாவது எழுத்து). ஆறாவது எழுத்து தவறவிடப்பட்டுள்ளது. இந்த வரி ஏழாவது வரியில் தொடங்குகின்றது. ஆறாவது வரி தவறியதற்கான காரணம் அறியப்படவில்லை. ஆண்டவருக்கு, அவர் தன்னுடைய இரக்கத்தையும் (רַחֲמֶיךָ ரஹாமெகா), பேரன்பையும் (וַחֲסָדֶיךָ வஹாசாதேகா) நினைக்கவேண்டும் என சொல்லப்படுகிறது.
மனிதர்கள் கடவுளுக்கு எப்படி நினைவூட்டலாம் என்ற கேள்வியை இந்த வரி தரலாம். ஆனால் திருப்பாடல் ஆசிரியர் தன்னுடைய ஆழமான உறவின் பொருட்டும், தான் கடவுளிடம் கொண்டுள்ள நெருக்கத்தின் பொருட்டும் இப்படிச் சொல்கிறார் என எடுக்கலாம். இதுவும் ஒரு வகையான மன்றாட்டே. அதேவேளை இந்த இரக்கமும் பேரன்பும் தொடக்கமுதல் உள்ளவை என்பதையும் ஆசிரியர் தெளிவு படுத்துகிறார்.
வ.7: (ח ஹேத்- எட்டாவது எழுத்து). இளமைப் பருவத்தின் பாவங்களும் குற்றங்களும் இங்கே எழுவாய் பொருளாக எடுக்கப்படுகின்றன. இளமைப் பருவத்தில் பாவங்களும் குற்றங்களும் நடைபெறுவதற்கான வாய்ப்புக்கள் அதிமாக உள்ளன என்பதை இவர் காட்டுகிறார் போல. ஆண்டவர் நல்லவராக
இருக்கிறபடியால், அவரது பேரன்பிற்கேற்ப தன்னை மன்னிக்கும் படி கேட்கிறார்.
வ.8: (ט தெத்- ஒன்பதாவது எழுத்து). ஆண்டவர் நல்லவர், மற்றும் நேர்மையுள்ளவர் என்று விழிக்கப்படுகிறார் (טוֹב־וְיָשָׁר יְהוָה தோவ்-வெயாஷார் அதோனாய்). இதன் காரணமாகத்தான் அவர் பாவிகளுக்கு நல்வழியைக் காட்டுகிறார் என்று நம்புகிறார் ஆசிரியர். ஆசிரியர் தன்னையும் பாவியாக ஒப்புவித்து மன்னிப்பு கேட்பது போல வரிகள் அமைக்கப்பட்டுள்ளதை நோக்குவோம்.
வ.9: (י யோத்- பத்தாவது எழுத்து). பாவிகளைப் பற்றி பேசிய ஆசிரியர் இந்த வரியில் எளியோர்களைப் பற்றி பேசுகிறார். ஆண்டவர் எளியோருக்கு நேரிய வழியைக் காட்டி, அதில் வாழச் செய்கிறார் என்கிறார். இங்கே எளியோர்களை குறிக்க עֲנָוִים ('அனாயிம்) என்ற சொல் பாவிக்கப்பட்டுள்ளது. அது வழக்கமாக தாழ்த்தப்பட்டவர்களை அல்லது வறியவர்களை குறிக்கின்ற சொல், ஆனால் இங்கே இது மனத்தாழ்மை உடையவர்களை குறிப்பதாக ஆய்வாளர்களால் நோக்கப்படுகிறது.
வ.10: (כּ கப்- பதினோராவது எழுத்து). இந்த வரி இஸ்ராயேல் ஞானிகளுடைய இன்னொரு நம்பிக்கையைக் காட்டுகிறது. ஆண்டவருடைய உடன்படிக்கையும் (בְּרִית பெரித்), அவருடைய ஒழுங்குமுறையும் (עֵדוּת 'எதூத்) மிக முக்கியமானவை. அதை அனைவரும் கடைப்படிக்க கட்டளையிடப்பட்டார்கள்.
இவற்றை கடைப்பிடிப்போருக்கு ஆண்டவருடைய பாதைகள் எல்லாம் பேரன்பு உள்ளதாகவும், உண்மையுள்ளதாகவும் விளங்குமாம்.
வ.11: (ל லமெத்- பன்னிரண்டாவது எழுத்து). இந்த எழுத்தில் ஆசிரியர் தன்னை நேரடியாகவே, பாவி என்று அழைக்கிறார் (לַעֲוֹנִי லா'அயோனி- என் குற்றத்தை). தன்னுடைய குற்றத்தை மன்னிக்க கேட்கும் அவர், அதனை ஆண்டவர் தனது பெயரின் பொருட்டு செய்ய வேண்டும் என்ற வாதத்தை முன்வைக்கிறார் (לְמַֽעַן־שִׁמְךָ֥ லெமா'அன்-ஷிம்கா). ஆண்டவருடைய பெயர் புனிதமானது, ஆக இந்த புனிதத்துவத்தை கொண்டுள்ள ஆண்டவர் தன் மக்களின் பாவத்தை மன்னிக்க வேண்டியவராக இருக்கிறார் என்பதே ஆசிரியரின் வாதம். அதேவேளையில் தன்னுடைய குற்றங்களும் அதிகமாக உள்ளன என்றும் அறிக்கையிடுகிறார் (רַב־הוּא ராவ்-ஹு').
வ.12: (ם இמ மெம்- பதின்மூன்றாவது எழுத்து). ஆண்டவர் யாருக்கு தன் வழியை கற்பிக்கிறார் என்பதை இந்த வரி காட்டுகிறது. ஆண்டவருக்கு அஞ்சிநடப்பவர்கள் என்பவர்கள், ஆண்டவரில் நம்பிக்கை கொண்டவர்களைக் குறிக்கிறது, இவர்களுக்குத்தான் ஆண்டவர் தன் வழியை கற்பிக்கிறார். ஆக ஞானிகளுக்கல்ல மாறாக ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழியில் நடப்பவர்கள்தான் ஆண்டவரின் சீடர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.
(מִי־זֶה הָאִישׁ יְרֵא יְהוָה மி-ட்செஹ் ஹா'இஷ் யெரெ' அதோனாய்- யார் இந்த மனிதன், அவன் கடவுளுக்கு அஞ்சுபவன்).
வ.13: (נ இן நுன்- பதினாங்காம் எழுத்து). கடவுளுக்கு அஞ்சுபவருக்கு இந்த உலகத்தில் நடப்பது என்னவென்று சொல்லப்படுகிறது. முதலில் இவர்கள் நலமுடன் வாழ்வார்கள். இதனை எபிரேய விவிலியம் 'அவருடைய ஆன்மா நன்மையில் வாழும்' என்கிறது (נַפְשׁוֹ בְּטוֹב תָּלִין நப்ஷோ பெதோவ் தாலின்;). அதேவேளை ஆண்டவருடைய ஆசீர் அவரின் வழிமரபையும் ஆசீர்வதிக்கிறது அதாவது அவர் வழிமரபினர் நாட்டை உரிமையாக்குவர் என்பதும் சொல்லப்படுகிறது (יִרַשׁ אָֽרֶץ யிராஷ் 'ஆரெட்ஸ்).
வ.14: (ס சாமெக்- பதினைந்தாவது எழுத்து). ஆண்டவரின் நட்புறவு யாருக்குரியது என்பதை இந்த வரி காட்டுகிறது. வழமையாக ஆண்டவருடைய நட்புறவைப் பற்றி விவிலியம் அதிகமாக பேசுவதில்லை, அது ஆண்டவருடைய இறைதன்மையை குறைத்துவிடும் என்பதால் அப்படி இருக்கலாம். ஆனால் திருவிவிலியத்தின், ஞான ஆசிரியர்கள் மற்றும் கவிஞர்கள் இந்த சட்டங்களை தாண்டியவர்கள் என்பதால் இந்த கருத்தை அவர் பயமின்றி முன்னெடுக்கிறார். (ס֣וֹד יְ֭הוָה சோத் அதோனாய்- ஆண்டவரின் நட்பு).
இப்படியாக ஆண்டவரின் நட்புறவை பெற்றவர்கள் அதாவது அவர் நண்பர்கள் என்போர் ஆண்டவருக்கு அஞ்சிநடக்கிறவர்கள், இவர்களுக்குத்தான் ஆண்டவர் தன்னுடைய உடன்படிக்கையை வெளிப்படுத்துகிறார்.
வ.15: (ע அயின்- பதினாறாவது எழுத்து). மீண்டுமாக தன்னுடைய நம்பிக்கையின் உணர்வுகளை தன் அங்க உறுப்புக்களை பாவித்து விளக்குகிறார். தன்னுடைய கண்கள் எப்போதும் ஆண்டவரையே நோக்கியிருக்கின்றன என்கிறார். கண்கள் என்பது இங்கே பார்வை, விருப்பம், நோக்கம் மற்றும் சிந்தை போன்றவற்றை குறிக்கின்றன (עֵינַי תָּמִיד אֶל־יְהוָה 'எனாய் தாமித் 'எல்-அதோனாய்: என் கண்கள் எப்போதும் ஆண்டவரிலே).
கண்களைப் போலவே தன் கால்களையும், ஆண்டவர் வலையிலிருந்து மீட்பார் என்கிறார் (רֶגֶל ரெகெல்- கால்). கால்கள் இங்கே ஒருவருடைய சுயத்தைக் காட்டுகின்றன. அவர் தன்னை கண்ணியில் சிக்கிய கால்களுடன் ஒப்பிடுகிறார்.
வ.16: (פּ இ ף பே- பதினேழாவது எழுத்து). ஆசிரியர் தன்னுடைய வேதனையை மேலும் வலுப்படுத்துகிறார். கடவுளை தன்னைநோக்கி திரும்பி, அவர் மீது இரங்குமாறு கேட்கிறார். ஆண்டவரை திரும்பச் சொல்வது மனிதர்களை திரும்பச் சொல்வது போல இருக்கலாம். ஆனால் இங்கே ஆண்டவரை திரும்பச் சொல்வதன் வாயிலாக ஆசிரியர் ஆண்டவரின் கவனத்தை பெறவேண்டும் என்றே நினைக்கிறார். அதற்கான காரணத்தையும் முன்வைக்கிறார். அதாவது அவர் தனிமையாக இருப்பதாகவும், அவர் துணையற்று இருப்பதாகவும் சொல்கிறார் (כִּֽי־יָחִ֖יד וְעָנִ֣י אָֽנִי கி-யாஹித் வெ'ஆனி 'ஆனி).
வ.17: (צஇ ץஇ ட்சாதே- பதினெட்டாவது எழுத்து). தன்னுடைய வேதனைகள் பெருகிவிட்டதாகவும், தன்துயரங்களிலிருந்து தன்னை மீட்டருளும் என்றும் இரஞ்சுகிறார். இந்த திருப்பாடல் ஒரு தனி மனிதனுடைய வரலாற்று அனுபவமாக இருப்பதற்கு பல வாய்ப்புக்கள் உள்ளது என்பதை இந்த வரி நிரூபிக்கிறது.
இந்த வரி எபிரேய விவிலியத்தில் வித்தியாசமாக உள்ளது.
צָרוֹת לְבָבִי הִרְחִיבוּ ட்சாரோத் லெவாவி ஹிர்ஹிவூ- என் இதயத்தின் துன்பங்கள் பெருக்கப்பட்டுள்ளன - பெருக்குகிறார்கள்.
குறிப்பு:
(எபிரேய வினைச் சொல்லின் அர்த்தத்தில் இந்த இறுதி சொல்லின் தன்மைக்கு பல விளக்ங்கள் கொடுக்கப்படுகின்றன. சிலர் இதனை ஹிபில் மூன்றாம் ஆள் வினைமுற்று என காண்கின்றனர். அப்படியாயின் இதன் அர்த்தமாக 'அவர்கள் என் இதயத்தின் வேதனையை பெருக்குகிறார்கள்' என்று வரும் - הִרְחִיבוּ ஹிர்ஹிவூ: இன்னும் சிலர் இந்த சொல்லை எபிரேய வினைச் சொல்லின் இன்னொரு வகையான ஹிபில் வியங்கோள் சொல்லாக பார்க்கின்றனர், இப்படியாயின் இதன் அர்த்தமாக 'என் இதயத்தின் வேதனைகளில், என் உறைவிடத்தை பெரிதாக்கும்' என்று வரும் - הַרְחֵיב ஹர்ஹெவ். எபிரேய விவிலியம் ஆரம்ப காலத்தில் மெய்யெழுத்துக்களை மட்டுமே கொண்டு பரம்பரையாக வாசிக்கப்பட்டன. பிற்காலத்தில் மசரோட்டியர் என்ற மொழிவல்லுனர்கள்தான் இந்த விவிலியத்திற்கு உயிர் எழுத்து அடையாளங்களை வழங்கினர். இதனால் எபிரேய விவிலியம் பல இடங்களில் பல வித்தியாசமான விளக்கங்களை கொடுப்பது போன்று தோன்றுகிறது).
מִמְּצֽוּקוֹתַי הוֹצִיאֵנִי׃ மிம்மேட்சுகோதாய் ஹோட்சி'எனி-
என்னுடைய துன்பத்திலிருந்து என்னை எடுத்தருளும்.
வ.18: (ר ரெஷ்- இருபதாவது எழுத்து). பதினொன்பதாவது எழுத்தும் இங்கே விடப்பட்டிருக்கிறது.
இது காலப்போக்கில் தவறவிடப்பட்டதா என்று தெரியவில்லை. இந்த வரியும் ஒரு செபமாக அல்லது வேண்டுதல் வாக்கியமாகவே வருகிறது. ஆசிரியர் தன்னுடைய சிறுமையையும் (עָנִי 'அனி), தன்னுடைய துன்பங்களையும் (עָמַל 'ஆமல்) பார்க்கச் சொல்லிக் கேட்கிறார். அதேவேளை தன்னுடைய அனைத்து பாவங்களையும் மன்னிக்குமாறும் கேட்கிறார். இந்த இடத்திலும் ஆசிரியர் தன்னை பாவியென்று வெளிப்படையாகவே ஏற்றுக்கொள்கிறார்.
வ.19: மீண்டும் ஒருமுறை எபிரேய அரிச்சுவடியின் இருபதாவது எழுத்து ר ரெஷ்- பாவிக்கப்படுகிறது.
இதற்கான காரணம் புரியவில்லை. தன்னுடைய எதிரிகள் பெருகிவிட்டார்கள் என ஆண்டவரிடம் முறையிடுகிறார் (אוֹיְבַי כִּי־רָבּוּ 'ஓயெவாய் கி-ராவூ). இந்த பாடலின் ஆசிரியர் யார் என்று தெரியாமையினால், இவர் எதிரிகள் யார் என்றும் கண்டுபிடிக்க முடியாமல் உள்ளது. அவர்கள் கொடுமையோடு தனக்கு கொடுமை செய்கிறார்கள் என்கிறார்.
வ.20: (שׁ ஷின்- இருபத்திதோராவது எழுத்து). இந்த வரி இறுதியான மன்றாட்டாக இருக்கிறது. மூன்றுவிதமான மன்றாட்டுக்களை அவர் முன்வைக்கிறார்.
அ. என்னுயிரைக் காப்பாற்றும் - שָׁמְרָה נַפְשִׁי ஷாம்ராஹ் நப்ஷி
ஆ. என்னை விடுவித்தருளும் - הַצִּילֵנִי ஹட்சிலெனி
இ. என்னை வெட்கமுறவிடாதேயும் - אַל-אֵ֝בוֹשׁ 'அல்-'எவோஷ்
இதற்கு காரணமாக தான் ஆண்டவரிடம் அடைக்கலம் புகுந்துள்ளவன் என்பதைக் காட்டுகிறார்.
வ.21: (ת தௌ- இருபத்திரண்டாவது எழுத்து, இது இறுதியான எழுத்து). கடவுளுடைய விழுமியங்களை ஆசிரியர் நன்கு புரிந்துவைத்திருக்கிறார் எனலாம். தன்னுடைய பாதுகாப்பு அரணாக வாய்மையையும் (תֹּם தோம்), நேர்மையையும் (יָשַׁר யாஷர்) காட்டுகிறார். தான் கடவுளையே நம்பியிருப்பதாக இந்த வரியிலும் காட்டுகிறார். இந்த வரி ஆசிரியரின் ஆழமான ஆன்மீகத்தைக் காட்டுகிறது.
வ.22: (פ பே- பதினேழாவது எழுத்து). ஏன் பதினேழாவது எழுத்தோடு இந்த பாடல் முடிவடைகிறது என்று புரியவில்லை. அத்தோடு ஏற்கனவே பதினேழாவது எழுத்து பாவிக்கப்பட்டுவிட்டது, மேலும் சில எழுத்துக்கள் பாவிக்கப்படவும் இல்லை. இப்படியிருக்க ஏன் இரண்டாவது தடவையாக פ பே என்ற எழுத்து பாவிக்கப்படுகிறது என்ற கேள்வி எழும்புகிறது.
இவ்வளவு நேரமும் தனிமனித புலம்பல் போல பாட்டிசைத்தவர் இந்த இறுதியான வரியில் முழு இஸ்ராயேலரையும் எழுவாய்ப் பொருளாக எடுக்கிறார். இப்படி பாடல் முடிவது வழக்கமாக
இருந்தாலும், இங்கே இந்த வரி சற்று வித்தியாசமாகத்தான் இருக்கிறது. சில வேளைகளில் குழு புலம்பல் பாடல்கள் தனிமனித பாடல்களாகவும், தனிமனித புலம்பல்கள் குழுப்பாடல்களாக வருவதும் திருப்பாடல்களில் காணப்படுகின்றன. திருச்சபையின் செபங்கள் மற்றும் சடங்குகளிலும் இப்படி நடப்பதுண்டு. முழு இஸ்ராயேலையும் உள்வாங்கி அனைவருக்கும் கடவுளின் இரக்கமும் மன்னிப்பும் தேவை என்று சொல்லி, அவர்களை துன்பங்களிலிருந்து மீட்கச்சொல்லி பாடலை நிறைவு செய்கிறார் ஆசிரியர்.
1பேதுரு 3,18-22
18கிறிஸ்துவும் உங்கள் பாவங்களின் பொருட்டு ஒரே முறையாக இறந்தார். அவர் உங்களைக் கடவுளிடம் கொண்டு சேர்க்கவே இறந்தார். நீதியுள்ளவராகிய அவர் நீதியற்றவர்களுக்காக இறந்தார். மனித இயல்போடிருந்த அவர் இறந்தாரெனினும் ஆவிக்குரிய இயல்புடையவராய் உயிர் பெற்றெழுந்தார். 19அந்நிலையில் அவர் காவலில் இருந்த ஆவிகளிடம் போய்த் தம் செய்தியை அறிவித்தார். 20நோவா பேழையைச் செய்து கொண்டிருந்த நாள்களில், பொறுமையோடு காத்துக் கொண்டிருந்த கடவுளை அந்த ஆவிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. சிலர், அதாவது, எட்டுப்பேர் மட்டும் அந்தப் பேழையில், தண்ணீர் வழியாகக் காப்பாற்றப்பட்டனர். 21அந்தத் தண்ணீரானது திருமுழுக்கிற்கு முன்னடையாளம். இத்திருமுழுக்கு உடலின் அழுக்கைப் போக்கும் செயல் அல்ல் அது குற்றமற்ற மனச்சான்றுடன் கடவுளுக்குத் தரும் வாக்குறுதியாகும்; இது இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் வழியாக இப்போது உங்களுக்கு மீட்பளிக்கிறது. 22அவர் வான தூதர்களையும் அதிகாரங்களையும் வல்லமைகளையும் தமக்குப் பணிய வைத்து, விண்ணுலகம் சென்று, கடவுளின் வலப்பக்கத்தில் இருக்கிறார்.
யார் பேதுருவின் முதலாவது திருமுகத்தை எழுதியது?
1-2 பேதுருவின் திருமுகங்கள் கத்தோலிக்க திருமுகங்களாக (பொது திருமுகம்) கணிக்கப்படுகின்றன. ஆசிரியர் தன்னை பேதுரு எனவும், கிறிஸ்துவின் சீடர் எனவும், அவரது மாட்சியின் சாட்சி எனவும் அறிமுகப்படுத்துகிறார் (காண்க 1,1: 5,1.12-13 Πέτρος ἀπόστολος Ἰησοῦ Χριστοῦ பெட்ரொஸ் அபொஸ்டொலொஸ் இயேசூ கிறிஸ்டூ). சிலாஸ் அல்லது சில்வானுடைய துணையுடன் தான் இந்திருமுகத்தை எழுதியதாகவும் சொல்கிறார். இயேசுவின் உணர்வுகளை பேதுருவின் திருமுகங்களைப்போல எந்த புதிய ஏற்பாட்டு திருமுகங்களும் கொண்டிருக்கவில்லை என்பது முக்கிய சில ஆய்வாளர்களின் கருத்து. அகக் காரணிகள் பேதுருதான், இந்த திருமுகத்தின் ஆசிரியர் என்பதைக் காட்டுகிறது.
தற்காலத்தில் பேதுருவின் ஆசிரியத்துவத்திற்கு எதிராக சில முக்கிய வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன:
அ. பேதுரு கிரேக்க அறிவில் முதிர்ந்தவராக இருந்திருக்க முடியாது. அவர் ஒரு கலிலேய மீனவர். இந்த திருமுகத்தின் மொழி, ஓரு வளர்ந்த கிரேக்க மொழியிலைக் கொண்டுள்ளது. அத்தோடு இங்கே ஆசிரியர் பயன்படுத்தும், முதல் ஏற்பாட்டு வாசகங்கள் செப்துவாஜினிருந்து எடுக்கப்பட்டுள்ளது, எபிரேய விவிலியத்தில் இருந்து எடுக்கப்படவில்லை. ஏன் பேதுரு செப்துவாஜினிலிருந்து எடுக்க வேண்டும், என்பது ஒரு முக்கியமான கேள்வி.
இருப்பினும், கலிலேயாவில் அக்காலத்தில் மீனவர்கள் கூட நல்ல கிரேக்க மொழியை பேசியிருக்கலாம். ஏனெனில் இவர்கள் அரமேயிக்க மொழியையும் கூட பேசினார்கள். பேதுருவிற்கு கிரேக்க மொழி தெரியக்கூடாது என்பதற்கு விடைகள் இல்லை. கலிலேயா உரோமையரின் முக்கியமான வணிக பாதையாக இருந்ததும் இதற்கு ஒரு வாய்ப்பு. பேதுருவின் சகோதரரின் பெயர், அந்திரேயா ( Ἀνδρέας அந்த்ரெயாஸ்), இது ஒரு கிரேக்க பெயர், ஆக இந்த குடும்பத்தில் கிரேக்க அறிமுகம் இருந்திருக்க வேண்டும். பேதுருவின் முப்பதுவருட பணிவாழ்வும், கிரேக்கர்களுக்கு நற்செய்தி பணியும், அவருக்கு, கிரேக்க மொழியிலும், செப்துவாஜினிலும் நல்ல புலமைத்துவத்தைக் கொடுத்திருக்கலாம். சில்வானுஸ் பேதுருவின் கடிதத்தை அவருக்காக எழுதியிருந்தாலும், இதன் கிரேக்கம் நல்ல கிரேக்கமாக வந்திருக்கும்.
ஆ. இந்த கடிதத்தின் அகச்சான்றுகள் கிறிஸ்தவர்களுக்கு எதிரான கலாபனையைக் காட்டுகிறது. இந்த கடிதத்தின் காலத்தில் கிறிஸ்தவர்களாக இருப்பது தேசதுரேகமாக இருப்பது போல தோன்றுகிறது. ஆனால் பேதுருவின் காலத்தில் இப்படியான பயங்கரமான கலாபனை இருந்ததாக தெரியவில்லை, அது பிற்காலத்தில்தான் ஆதிக்கம் பெற்றது.
இ. இந்த திருமுகத்தின் சில போதனைகள் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்தின் இறையியலை ஒத்திருக்கிறது.
பேதுருவும், பவுலும் எதிரிகள் அல்ல, அவர்கள் கிறிஸ்தவ சகோதரர்கள். ஆண்டவர் இயேசுவை எல்லாவற்றிக்கும் அதிகமாக நேசித்தவர்கள். ஒருவர் மற்றவர் மேல் அதிகமான மரியாதை வைத்திருந்தவர்கள். இதனால் ஒருவர் இன்னொருவருடைய இறையியலை பின்பற்றுவதில் எந்த சிக்கலும் இருந்திருக்காது. அதேவேளை யார் என்ன எழுதினாலும், அடிப்படையில் அவை இயேசுவைப் பற்றியது என்பதால், ஒற்றுமைகள் நிச்சயமாக இருக்கும். பேதுருவும் பவுலும் பிற்காலத்தில் உரோமையில் ஒன்றாக இருந்தவர்கள், இதனால் பல சிந்தனைகளை அவர்கள் கலந்தாலோசித்திருக்கலாம்.
ஈ. கலாத்தியர் 2,9 இன் படி பவுலும் பேதுருவும் இரண்டு வேறுபட்ட இடங்களில் பணிசெய்ய முடிவெடுக்கின்றனர், ஆனால் இந்த இவர்களின் திருமுகத்தினை நோக்கத்தை பார்க்கின்றபோது அவை, ஒரே இலக்கை கொண்டுள்ளது தெரிகின்றது.
இருப்பினும் காலத்தியர் திருமுகம் காலத்தால் மிகவும் முந்தியது. பிற்காலத்தில் பேதுருவும், பவுலும் ஒரே நோக்கில் பணியாற்றியிருக்கலாம்.
உ. பேதுரு இயேசுவின் அருகில் இருந்தவர், அப்படியாயின் ஏன் இந்த திருமுகத்தில் அவரைப் பற்றிய தனிபட்ட நிகழ்வுகள் இல்லை என்பது சில ஆய்வாளர்களின் கேள்வி.
தனிப்பட்ட நிகழ்வுகள் இல்லாவிடினும், இந்த திருமுகத்தில் உள்ள பல வரிகள் (காண்க 1,8.13: 2,21-25: 3,14: 4,14: 5,1-2), பேதுருவிற்கு இயேசுவோடிருந்த ஆழமான உணர்வுகளைக் காட்டுகின்றன. கடிதங்களின் நோக்கம் இயேசுவின் வரலாறல்ல என்பதால், பேதுரு அவற்றை தவிர்த்திருக்கலாம்.
இப்படியாக பேதுருவின் திருமுகத்தில் அவருடைய ஆசிரியத்துவத்திற்கு எதிரான கேள்விகள் எதுவுமே பலமாக இல்லை. இதனால் இந்த திருமுகத்தை பேதுருதான் எழுதினார் என்ற நம்பிக்கை சற்று பலமாகவே உள்ளது.
வ.18: இன்றைய வாசகங்கள் 'நீதியின் பொருட்டு துன்புறுதல்' என்ற தலைப்பிலிருந்து எடுக்கப்படுகிறது. கிறிஸ்துவின் இறப்பை விளங்கப்படுத்துகிறார் ஆசிரியர். ஏன் கிறிஸ்து சாகவேண்டும்? என்ற கேள்வி பலருக்கு ஏற்பட்டிருக்கலாம். மெசியா எப்படி இறக்க முடியும் என்பது ஒரு முக்கியமான கேள்வியாக நிச்சயமாக இருக்கும்.
கிறிஸ்துவின் இறப்பு ஒரு முறை நடைபெற்றது என்கிறார் பேதுரு. இதன் மூலம் மற்றவர்கள் பலமுறை இறக்கிறார்கள் என்கிறராரா என்று தெரியவில்லை. இந்த வரியில் கிறிஸ்துவின் இறப்பை அவர் முக்கியத்துவப்படுத்துவது மட்டும் தெரிகிறது. இயேசுவின் இறப்புத்தான், மக்களை கடவுளிடம் கொண்டு சேர்க்கிறது என்பது, ஆரம்ப கால திருச்சபை தந்தையர்களின் முக்கியமான படிப்பினைகளில் ஒன்று. இதனை பவுலும் பல இடங்களில் பேசுகிறார்.
இந்த வரியில், பேதுரு சில ஒப்புவமைகளைச் செய்கிறார். அதாவது இயேசு நீதியுள்ளவர்(δίκαιος திகாய்யோஸ்- நீதிமான்), அவர் நீதியற்றவர்களுக்காக இறக்கிறார். கடவுள் நீதியுள்ளவர் என்பது முதல் ஏற்பாட்டில் மிக முக்கியமான ஓர் அடையாளம். அவர் இறந்தது மனித இயல்பில் ஆனால் அவர் உயிர்த்தது ஆவிக்குரிய இயல்பில் (πνεύματι புனுமாடி- ஆவியில்). சில முக்கியமான படிவங்களில், இயேசு இறந்தார் என்பதற்கு பதிலாக அவர் துன்புற்றார் என்று இருக்கிறது.
வ.19: காவலில் இருந்த ஆவிகளைப் பற்றி பேசுகிறார் பேதுரு. இறந்தோர் வாழும் இடத்தை பல அடையாளங்கள் வாயிலாக யூதர்கள் விளங்கிக் கொண்டனர். இதனை சீயோல், கெஹெனா என்றெல்லாம் அழைத்தனர், அத்தோடு அதனை சிறைச்சாலையாகவும் விளங்கிக் கொண்டனர்.
கிறிஸ்து யாருக்கு போதித்தார் என்ன போதித்தார் என்ற பல கேள்விகளும் இங்கே எழுகின்றன.
இங்கே குறிப்பிடப்படுகின்ற வானதூதர்கள் தொடக்க நூலில் குறிப்பிடப்பட்ட வீழ்ந்த வானதூதர்களாக
இருக்கலாம் என்றும் சிலர் வாதிடுகின்றனர். அவருடைய செய்தியாக, இனி சாவிற்கு வேலையில்லை என்பதையும் குறிப்பிடுகின்றனர். அதேவேளை, நோவா காலத்து தவறிய வானதூதர்களுக்கு
இயேசு இன்னொரு வாய்ப்புக்கொடுக்கவே இப்படிச் செய்தார் என்றும் ஆரம்ப காலத்தில் திருச்சபை தந்தையர்களால் போதிக்கப்பட்டது.
வ.20: இந்த வரியில் அந்த தவறிய ஆவிகள் என்ன செய்தார்கள் என்பது தெளிவாக விளங்கப் படுத்தப்பட்டுள்ளது. நோவா பேழையை செய்தபோது (காண்க தொ.நூல் 6,1-7), அவர் நெபிலிம் எனப்பட்ட (נְּפִלִים நெபிலிம்) தவறிய வானதூதர்களினால் சில இடைஞ்சல்களை சந்தித்தார். இந்த நெபிலிமை தமிழ் விவிலியம் அரக்கர்கள் என மொழிபெயர்க்கிறது. இவர்களை ஒரு கானானிய மக்கள் கூட்டமாக ஆய்வாளர்கள் அடையாளப்படுத்துகின்றனர்.
நோவாவுடைய பேழையினால் எட்டு பேர் மட்டும்தான் தப்பித்தனர் என்பதை அவர்கள் தண்ணீரால் தப்பித்தார்கள் என்று பேதுரு குறிப்பிடுகிறார். அழிவின் காரணமாக இருந்த தண்ணீரை, பேதுரு மீட்பின் அடையாளமாக பார்க்கிறார். மறைமுகமாக அவர் திருமுழுக்கை குறிப்பிடுகிறார் என்று எடுக்கலாம்.
வ.21: நீரை நேரடியாகவே திருமுழுக்கு எனக் குறிப்பிடுகிறார் பேதுரு. யூதர்களும், அநேகமான பாலைவன மக்களும் தண்ணீரை, தங்களின் உடல் அழுக்குகளை அகற்றும் ஓர் ஊடகமாகவே பார்த்தனர். பிற்காலத்தில் இதற்கு சமய அடையாளம் கொடுக்கப்பட்டு, இது ஒரு சடங்காக மாறியது. திருமுழுக்கும் இந்த வகையில் உருவான ஒன்றுதான். கிறிஸ்தவத்திற்கு முன்பும், வெளியிலும் திருமுழுக்கு நடைமுறையில் இருந்திருக்கிறது. திருமுழுக்கை ஒரு சாதாரண சடங்காக எடுக்கவேண்டாம் என்பது பேதுருவின் வாதம் (οὐ σαρκὸς ἀπόθεσις ῥύπου ஹு சார்கொஸ் அபொதெய்ஸ் ரூபூ- உடலின் அழுக்கை அகற்றுவதல்ல).
திருமுழுக்கை பேதுரு, கடவுளுக்கு தரும் மனச்சான்றின் அடையாளம் என்கிறார், அது கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் வழியாக நம்பிக்கை கொண்டோருக்கு வாழ்வளிக்கிறது என்கிறார். இங்கணம் பேதுரு, திருமுழுக்கை உயிர்ப்பின் அடையாளமாகப் பார்க்கிறார் (δι᾿ ἀναστάσεως Ἰησοῦ Χριστοῦ தி அனாஸ்டாசெயோஸ் இயேசூ கிறிஸ்டூ- இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பின் வழியாக).
வ.22: இயேசு கடவுளின் வலது பக்கத்தில் உள்ளார். இதுவும் ஒரு முதல் ஏற்பாட்டு நம்பிக்கை. கடவுள் தன் மெசியாவை தனது வலது பக்கத்தில் அமர வைத்துள்ளார் என்பதை முதல் ஏற்பாடு பல இடங்களில் காட்டுகிறது. வலது பக்கம், உரிமையை அல்லது ஆட்சி அதிகாரத்தைக் குறிக்கும் (δεξιός தெக்ட்சியோஸ்-வலது).
இந்த இடத்திற்கு வர, கிறிஸ்து வானதூதர்களையும் (ἀγγέλων அங்கெலோன்), அதிகாரங்களையும் (ἐξουσιῶν எட்சூசியோன்), வல்லமைகளையும் (δυνάμεων தூனாமெயோன்), வெற்றிகொள்ளவேண்டியதாக
இருந்தது என்பதையும் பேதுரு காட்டுகிறார். இந்த மூன்று வகையான பெயர்களும், கடவுளுக்கு எதிராக செயற்பட்ட ஆதி கால வானதூதர்களை குறிக்கிறது என இந்த சூழலியலில் எடுக்கலாம்.
மாற்கு 1,12-15
இயேசு சோதிக்கப்படுதல் (மத் 4:1-11; லூக் 4:1-13)
12உடனே தூய ஆவியால் அவர் பாலைநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 13பாலை நிலத்தில் அவர் நாற்பது நாள் இருந்தார்; அப்போது சாத்தானால் சோதிக்கப்பட்டார்; அங்குக் காட்டு விலங்குகளிடையே இருந்தார். வானதூதர் அவருக்குப் பணிவிடை செய்தனர்.
2. இயேசுவே மெசியா
இயேசுவும் மக்கள் கூட்டமும்
கலிலேயாவில் இயேசு பணி தொடங்குதல் (மத் 4:12-17; லூக் 4:14-15)
14யோவான் கைதுசெய்யப்பட்டபின், கடவுளின் நற்செய்தியைப் பறைசாற்றிக் கொண்டே இயேசு கலிலேயாவிற்கு வந்தார். 15'காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்து விட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்' என்று அவர் கூறினார்.
மாற்கு நற்செய்தி மிகவும் சுருக்கமான நற்செய்தி எனவும், மிகவும் நேரடி மொழியைக் கொண்ட நற்செய்தி என்றும் பார்த்திருக்கிறோம். மற்றைய நற்செய்திகள் இந்த பகுதியை மிக வெகுவாக விவரிக்கின்ற வேளை மாற்கு இதனை ஒரு சில வரிகளிலேயே விவரித்துவிட்டார். மாற்கு நற்செய்தியை முதல் நற்செய்தியாக பார்க்க இதுவும் ஒரு காரணம்.
வ.12: இயேசு திருமுழுக்கு பெற்ற உடனேயே பாலை நிலம் செல்கிறார். திருமுழுக்கை நற்செய்தியாளர்கள் இயேசுவிற்காக அதிகாரமாக பார்க்கின்றனர். சாதாரண ஆட்சியாளர்கள், அதிகாரத்தை பெற்றவுடன் தங்கள் ஆட்சியை தொடங்குவார்கள், அல்லது தங்கள் எதிரிகளை இல்லாமல் ஆக்குவதில் கவனம் செலுத்துவார்கள். இயேசு இங்கே வித்தியாசமாக தன்னை சோதித்துப் பார்க்க பாலை நிலம் செல்கிறார்.
இயேசு பாலை நிலத்திற்கு தூய ஆவியாலேயே அனுப்பி வைக்கப்படுகிறார், ஆக இயேசுவின் சோதனைகள் கூட அவர் கட்டுப்பாட்டில்தான் நடக்கிறது என்பது காட்டப்படுகிறது (τὸ πνεῦμα αὐτὸν ἐκβάλλει εἰς τὴν ἔρημον. டொ புனுமா அவுடொன் எக்பால்லெய் எய்ஸ் டேன் ஏரேமென்). தூய ஆவி என்று கிரேக்க விவிலியத்தில் காட்டப்படாவிட்டாலும், சூழலியலில் இவர் தூய ஆவியார் என்ற எடுக்கவேண்டியுள்ளது.
வ.13: பாலைநிலத்தில் இயேசுவிற்கு என்ன நடந்தது என்பதை ஒரே வரியில் காட்டிவிட்டார் மாற்கு. இயேசு பாலைநிலத்தில் நாற்பது நாட்கள் இருக்கிறார். பாலை நிலம், சோதனை களமாகவே விவிலியத்தில் காட்டப்படுகிறது. பாலைநிலத்தின் வெயிலும், பாதுகாப்பற்ற தன்மையும், கரடுமுரடான மணலும் இந்த சிந்தனையை இன்னும் வலுப்படுத்துகிறது.
நாற்பது நாட்கள் முதல் ஏற்பாட்டில் பல கதைகளை நமக்கு நினைவூட்டுகின்றன.
அ. கடவுள் நாற்பது நாட்களில் வெள்ளப்பெருக்ககை அனுப்பினார் (காண்க தொ.நூல் 7,4)
ஆ. மோசே சீனாய் மலையில் நாற்பது நாட்கள் தங்கியிருந்தார் (காண்க வி.ப 24,18)
இ. யோசுவாவின் ஒற்றர்கள் நாட்பது நாட்கள் கானானை உளவு பார்த்தார்கள் (காண்க எண் 13,25)
ஈ. மோசே நாற்பது நாட்கள் இஸ்ராயேலருடைய பாவத்திற்காக செபித்தார் (காண்க இ.ச 9,25).
உ. எலியா நாற்பது நாட்கள் பயணம் செய்து ஒரேபை அடைந்தார் (காண்க 1அரசர் 19,8).
ஊ. கடவுள் யூதா வீட்டாரின் குற்றத்திற்காக நாற்பது நாட்களை எசேக்கியேலுக்கு கொடுக்கிறார் (காண்க எசே 4,6).
எ. யோனா நாற்பது நாட்கள் நினிவேயின் மனமாற்றத்திற்காக பிரசங்கித்தார் (காண்க யோனா 3,4)
ஏ. இயேசு உயிர்ப்பின் பின் நாற்பது நாட்கள் தொடர்ச்சியாக தோன்றினார் (காண்க தி.ப 1,3).
ஐ. இஸ்ராயேலர் நாற்பது ஆண்டுகள் பாலைவனத்தில் அலைந்தனர், மன்னாவையும் உண்டனர்
(காண்க வி.ப 16,35)
இப்படியான நாற்பது ஒரு அடையாளமாக அல்லது நிறைவின் அடையாளமாக இயேசுவிற்கு காட்டப்படுகிறது.
பின்னர் இயேசு அலகையினால் சோதிக்கப்பட்டார். அலகையை சோதிக்கறவன் என்றும் மொழி பெயர்க்கலாம் (πειραζόμενος ὑπὸ τοῦ σατανᾶ பெய்ராட்சொமெநொஸ் ஹுபோ டூ சாடானா). சாத்தானை சோதிக்கறவன் என்று பார்க்கும் வழக்கம், ஏவாள் கதையிலிருந்தே தொடங்கிவிட்டது.
இயேசு காட்டு விலங்குகளிடையே இருக்கிறார், இது ஏதேன் தோட்டத்தில் ஆதாம் காட்டு விலங்குகளோடு இருந்ததை நினைவுபடுத்துகிறது எனலாம் (ἦν μετὰ τῶν θηρίων ஏன் மெடா டோன் தேரியோன்- விலங்குகளின் நடுவில் இருந்தார்), அல்லது தானியேல் சிங்கக் குகையினுள் இருந்தும் கடவுளை காட்டிக்கொடுக்காமல் இருந்ததை நினைவுகூறலாம். இதன் மூலமாக இயேசு சாதாரண இடத்தில் இல்லாமல், சிக்கலான இடத்தில் இருந்திருக்கிறார் என்பதை மாற்கு காட்டுகிறார்.
காட்டு விலங்குகளோடு அவர் இருந்தாலும், வானதூதர்கள் அவருக்கு பணிவிடை செய்கின்றனர், அதாவது அவர் பாலைவனத்திலும் கடவுளாகவே இருந்தார் என்பதை இது காட்டுகிறது. மத்தேயுவும் இந்த காட்சியை தெளிவுபடுத்துகிறார்.
வ.14: தன்னுடய சோதனை காலம் நிறைவு அடைந்த உடன் இயேசு, உடனடியாக தன் பணியை தொடங்குகிறார். யோவான் கைது செய்யப்பட்ட பின்தான் இயேசு நகரிற்குள் வருகிறார். அதாவது அரசர் வருகிறார், அவருக்கு வழியை ஏற்பாடு செய்தவர் இனி தேவையில்லை என்பதை குறிப்பது போல இந்த காட்சி அமைந்துள்ளது. இயேசுவின் வருகை, நற்செய்தியை கலிலேயாவிற்கு கெண்டு வருகிறது.
மாற்கு நற்செய்தியின் மிக முக்கியமான நோக்கமான 'காலம் நெருங்கி வந்துவிட்டது, மனம்மாறி நற்செய்தியை நம்புங்கள்' (ἤγγικεν ἡ βασιλεία τοῦ θεοῦ· μετανοεῖτε καὶ πιστεύετε ἐν τῷ εὐαγγελίῳ. ஏங்கிகென் ஹே பசிலெய்யா டூ தியூ. மெடாநொய்டெ காய் பிஸ்டெயுயெடெ என் டோ எவாங்கெலியோ) என்பது மிக நேர்த்தியாக சரியான இடத்தில் சொல்லப்படுகிறது.
இந்த நோக்கத்திற்காகத்தான் மாற்கு நற்செய்தி மிக சுருக்கமாகவும், நேரடியாகவும் எழுதப்பட்டது. மாற்குவின் அவசரத்தை அவரது மொழியிலேயே காணலாம்.
ஆண்டவர் நம்மோடு இருக்கிறார்,
ஆண்டவரோடு நாம் இருக்கிறோமா என்பதுதான் கேள்வி,
நாற்பது நாட்கள் விவிலியத்தில ஓரு அடையாளம்,
இந்த அடையாளம் பல மாற்றங்களை கொண்டு வந்தது.
நாற்பதில் தொடக்கமும், நடுவும், கடுமையாக இருந்தாலும்,
முடிவு இனிமையாக இருந்தது,
அதனையே நாமும் அமைப்போம் இந்த
தவக்கால நாற்பதில்
அன்பு ஆண்டவரே,
என்னை நானே சோதிக்க உதவி செய்யும், ஆமென்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக