வியாழன், 12 அக்டோபர், 2023

ஆண்டின் பொதுக்காலம் இருபத்தெட்டாம் ஞாயிறு 15,10,2023: Twentyeight Sunday in OT, A, 2023



ஆண்டின் பொதுக்காலம் இருபத்தெட்டாம் ஞாயிறு

15,10,2023

M. Jegankumar Coonghe OMI,

Shrine of Sinthathirai Matha,

Chaddy, Velanai, 

Jaffna. 

Friday, 13 October 2023

முதல் வாசகம்: எசாயா 25,6-10

பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 23

இரண்டாம் வாசகம்: பிலிப்பியர் 4,12-14.19-20

நற்செய்தி: மத்தேயு 22,1-14


விருந்து:


உணவு மனிதனுடைய அடிப்படைத் தேவைகளுள் மிக முக்கியமானது. உணவின் வளர்ச்சியைக் கொண்டே மனிதர்களுடைய நாகரீக வளர்ச்சியையும், மனித இனத்தின் வளர்ச்சியையும் கண்டு கொள்ளலாம். உணவு பழக்க வழங்கங்களை ஆய்வு செய்தே மானிடவியலின் வித்தியாசங்களையும் உணர்ந்து கொள்ளலாம். மனிதருடைய நாகரீகமும், கலாச்சாரமும், மற்றும் மத நம்பிக்கைகளும், அவர்களுடைய உணவு பழக்கவழங்களைக் கொண்டு ஆராயப்படலாம். தமிழருக்கு உணவும், விருந்து முறைகளும் மிக முக்கியமானவை. விரும்தோம்பல், தமிழ் கலாச்சாரத்தின் அடையாளம். உணவுகளில் வேறுபாடும் வித்தியாசங்களும், விருந்துகளின் தன்மைகளும் தமிழ்க் கலாச்சாரத்தின் பிரிவுகளையும், வளத்தையும் காட்டுகின்றன. முல்லை, குறிஞ்சி, நெய்தல் மற்றும் மருத நிலங்கள் ஒவ்வொன்றும் தங்களுக்கென்று வேறான உணவுப் பழக்கங்களையும், விருந்துபசார முறைகளையும் கொண்டுள்ளன. அதனைப் போலவே எபிரேய இனமும், உணவு மற்றும் விருந்துபசார முறையில் மிகவும் தனித்துவமாக விளங்குகின்றது

 திருக்குறள் அறத்துப்பாலில், விருந்தோம்பலில் பத்துக் குறள்களில் (81-90) தமிழரின் விருந்தோம்பல் ஒரு தவிர்க்க முடியாத ஒழுக்கம் என்பதைக் காட்டுகிறது. .ம்


வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை

பருவந்து பாழ்படுதல் இன்று (குறள் 83).

(விருந்தினரை வரவேற்று வாழ்கிறவருடைய வாழ்க்கை, துன்பத்தால் அழியாது). 


 விவிலியத்தில் உணவும், விருந்தும் மிக முக்கியமானவைகளாக நோக்கப்படுகின்றன. இரண்டு வகையான உணவுகளை விவிலியம் காட்டுகின்றது. ஒன்று சமயம் சார்ந்த உணவுப் பழக்கம், மற்றது சமயம் சாராத உணவுப் பழக்கம். உணவு பழக்கவழக்கங்கள் முதல் ஏற்பாட்டிலும் பழைய ஏற்பாட்டிலும் யூதர்களின் நம்பிக்கைகளையும், ஆன்மீகத்தையும் காட்டுகின்றன. மத்திய கிழக்கு கலாச்சாரங்களும்; கிரேக்க உரோமைய கலாச்சாரங்களும் யூத உணவு மற்றும் விருந்துபசாரத்தில் தாக்கம் செலுத்தியிருக்கின்றன. இவற்றிக்கு எல்லாம் மேலாக, யூதர்களுடைய உணவுப் பழக்கவழக்கங்கள், உணவுச் சட்டங்களால் மிகவும் கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டன. லேவியர் புத்தகம் இந்த உணவு சம்மந்தமான சட்டங்களை மிகவே விலாவாரியாக விளங்கப்படுத்துகின்றது

  ஆபிரகாம் வழிப்போக்கருக்கு உணவளித்த நிகழ்வே விவிலியத்தின் முதலாவது விருந்துபசாரமாக பார்க்கப்படுகிறது. இவர்கள் யார், எங்கிருந்து வந்தவர்கள், அவர்களின் அடையாளம் என்ன, என்பவை பற்றி பலவிதமான கேள்விகளும் விடைகளும் காணப்படுகின்றன (காண்க தொ.நூல் 18,1-8). இவர்களைப் போலவே லோத்தும் இரண்டு கடவுளின் தூதர்களுக்கு உணவளித்திருக்கிறார் (காண்க தொ.நூல் 19,1-4). இந்த இரண்டு சந்தர்பங்களும் விருந்தோம்பலின் முக்கியத்துவத்தைக் காட்டுகின்றன. எபிரேயர்கள், வழிப்பபோக்கர்கள் மற்றும் அந்நியர்களுக்கு விருந்தளிக்க அழைக்கப்பட்டார்கள். ஆபிராகாம் மம்பிரே என்னும் இடத்தில் அந்நியர்களுக்கு விருந்தளித்த நிகழ்வின் விளக்கங்கள் எபிரேயர்களின் பண்பினை அழகாகக் காட்டுகிறது. ஆபிரகாம் இவர்களுக்கு விருந்தளிப்பவராகவும், அவர்கள் உண்ணும்போது அவர்களின் சேவகராகவும் மாறிவிடுகிறார். சாரா கூடராத்திலேயே இருந்துகொண்டு உதவி செய்கிறார். அக்காலத்தில், மரியாதைக்குரிய பெண்கள், தங்கள் குடும்பம் சேராத ஆண்களோடு உணவருந்தவில்லை. சாதாரணமாக கி.மு 7ம் நூற்றாண்டுகளில் மக்கள் சாய்ந்திருந்தே உணவருந்தினார்கள். ஆண்கள் உணவருந்திருகின்றபோது பெண்கள் கதிரைகளில் அமர்ந்திருந்தனர்

இப்படியான வழக்கங்கள் ஆமோஸ் புத்தகத்திலும் காட்டப்பட்டுள்ளது (காண்க ஆமோஸ் 6,4-6). பணக்காரர்களின் விருந்துகளில், அதிகமான இரசம் பகிரப்பட்டது, அத்தோடு அவர்களின் தலைகள் ஒலிவ எண்ணெயினால் தேய்க்கவும் பட்டன, அந்த வேளைகளில் இசைப்பவர்களும் நடனமாடுபவர்களும் அழைக்கப்பட்டனர். பென் சீராவுடைய காலத்தில், இஸ்ராயேலர்கள் கிரேக்கர்களினதும் உரோமையர்களினதும் விருந்தோம்பலை தங்கள் கலாச்சாரத்தினுள் உள்வாங்கியிருந்தார்கள் (காண்க சீராக் 31,12 - 32,13). சீராக் கொடுக்கின்ற அறிவுரைகளை நோக்கினால், விருந்தோம்பல் எந்தளவிற்கு சாதாரண மக்களின் கரிசனையில் இருந்திருக்கிறது என்பது நன்கு புலப்படும்

  இயேசுவுடைய காலத்திலும் மக்கள் சாய்ந்திருந்தே உணவருந்தினார்கள். விருந்தோம்பல் கலாச்சாரத்திலும், சமூகத்திலும் மிக முக்கியமான நிகழ்வாகவும் கருதப்பட்டது (காண்க மாற் 2,15. 8,6. 14,18). விருந்தின் போது அழைக்கப்பட்டவர்கள் அரை நீள் வட்டவடிவில் சாய்ந்து அமர்ந்தார்கள். முக்கியத்துவத்தின் பொருட்டு அவர்கள் இருந்திவைக்கப்பட்டார்கள். இதனால்தான் யோவான் அன்பு சீடராக இயேசுவிற்கு அருகில் இருந்தார் (காண்க யோவான் 13,23). இவர் இயேசுவின் மார்பில் சாய்ந்திருந்தார் என்பது, அவர் இயேசுவிற்கு மிக நெருக்கமாக இருந்தார் என்பதையே காட்டுகிறது. இதனைத்தான் இறந்த ஏழை இலாசரும் பெற்றார் என இயேசு காட்டுவார் (காண்க லூக்கா 16,19-31)

விருந்தினர்கள் தகுதியின் பொருட்டு வித்தியாசமாக இருந்திவைக்கப்படுதல், அக்கால சாதாரண வழக்கமாக இருந்தாலும், பிற்காலத்தில் திருச்சபையில் இந்த முறை பலமாக விவாதிக்கப்பட்டது (காண்க 1கொரிந்தியர் 11,17-34). இயேசுவுடைய காலத்திலேயே முக்கியமான பெண்கள், உணவு மேசைக்கு வர தொடங்கிவிட்டார்கள். இருப்பினும் அவர்கள் ஆண்களுக்கு நிகராக அமர வைக்கப்பட்டார்களா, என்பதில் சந்தேகம் இருக்கிறது. அதே வேளை, மிக முக்கியமான பெண்கள், போதகர்களின் காலடியில் இருந்து அவர்கள் சொல்வதை கேட்கவும் அனுமதிக்கப்பட்டார்கள் (காண்க லூக்கா 7,36-50)

சாதாரணமாக வீட்டிலே விருந்துவைக்கிறவர்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் முக்கியமானவர்களையே அழைத்தார்கள், உதாரணமாக லேவி இயேசுவை அழைக்கிறார் (காண்க மத்தேயு 9,9-13). இந்த விருந்திற்கு வரவழைத்தலை, இயேசு இறையரசின் அழைத்தலுக்கு ஒப்பிடுகிறார். இயேசுவோடு அவர் விருந்தில், அதிகமாக ஏழைகள், பாவிகள், வரிதண்டுபவர்கள், மற்றும் பெண்கள் இருந்ததை அடையாளமாக நோக்கவேண்டும். சாதாரணமாக விருந்தினர்களின் பாதங்களை விருந்திற்கு முன்னர், வீட்டு வேலையாட்கள் கழுவினார்கள். இதனை ஒரு நிகழ்வில் இயேசுவே தன் சீடர்களுக்கு செய்கிறார், இதன் மூலம் இயேசு யூத மதத்தின் விருந்தோம்பலின் இன்னொரு நிலைக்கு சென்றுவிடுகிறார், இதனை அவர் இறையரசின் விழுமியமாகவும் காட்டுகிறார் (காணக் யோவான் 13,1-16). உணவருந்தும் முன் கைகளை கழுவும் வழக்கம் யூதர்களிலும் யூதரல்லாதவர்களிலும் இருந்திருக்கிறது. பரிசேயர்கள் இதற்கு சமய அடையாளம் கொடுத்தார்கள். இயேசு பரிசேயர்களை கண்டிக்க இந்த முறையை பின்பற்றாமல் விட்டுவிட்டார் என விவிலியம் காட்டுகிறது (காண்க மாற்கு 7,1-8). அத்தோடு அழைக்கப்பட்டவர்கள் தங்கள் தலையிலே எண்ணெய்யும் தடவப்பட்டார்கள், இது அவர்களின் முக்கியத்துவத்தைக் காட்டியது

பண்டைய கால விருந்தோம்பல் இரண்டு வகையான உணவு முறையைக் கொண்டிருந்தது. முதலாவது அவர்கள் பல்சுவை உணவை உண்டார்கள் பின்னர் அவர்கள் திராட்சை இரசத்தை குடித்தார்கள். ஒவ்வொரு உணவின் முன்னரும் செபம் அல்லது ஆசீர்வாத முறையை இவர்கள் பின்பற்றினார்கள். இந்த முறை யூதர்களுக்கும், கிரேக்கர்களுக்கும், உரோமையர்களுக்கும் வேறாக இருந்தது, இயேசு இந்த முறையை பின்பற்றினார் (காண்க மாற்கு 8,6). விருந்தின் இரண்டாம் பகுதியான இரசம் பருகுதல் பல மணித்தியாளங்கள் வரை நீண்டு சென்றது. இந்த வேளையில் அவர்கள் இசையையும், நடனத்தையும் அனுபவித்தார்கள். கிரேக்கர்களும், உரோமையர்களும் இந்த நேரத்தில் பல முக்கியமான மெய்யறிவு தலைப்புகளிலே வாதாடினார்கள். இப்படியாக இது ஒரு உரையாடல் நேரமாகவும் அமைந்தது. இவர்களைப் போலவே யூதர்கள் இந்த நேரத்தில் திருச்சட்டங்களைப் பற்றி உரையாடினார்கள் (காண்க சீராக் 9,15-16). இயேசுவும் பல நேரத்தில் உணவு மேசையிலிருந்து போதனைகள் செய்திருக்கிறார் (காண்க லூக் 14). 

  விருந்தோம்பல் சமுக கட்டமைப்பை காட்டும் ஒரு படமாகவும் அமைந்தது. விருந்திற்கு யார் யார் அழைக்கப்படுகிறார்கள் என்பதிலிருந்து யார் உடன் மக்கள், யார் எதிரிகள் அல்லது விரோதிகள் என்பதும் நன்கு புலப்பட்டது. சாதாரணமாக இயேசுவுடைய காலத்தில் நண்பர்களே அழைக்கப்பட்டார்கள். இதனை அக்கால சாதி முறை என பார்க்கலாம்(இந்த சாத்தானிய முறை இன்றும் அகலாமல் இருப்பது வேதனையான உண்மை, ஈழத்திருநாடும் இதற்கு விதிவிலக்கல்ல, சாதியைக் நியாயம் காட்டிசாத்தான்கள் ஆட்சி செய்யும் வரை, ஈழத்தமிழரை கடவுளாலும் காப்பாற்ற முடியாது. ). (காண்க தானி 1,8: தோபி 1,10). 

 புறவின கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை வளர்ந்தபோது இந்த உணவு பழக்க வழக்க முறை திருச்சபையிலே மிக ஆழமான சலசலப்பை ஏற்படுத்தியது. யூத கிறிஸ்தவர்கள் புறவின கிறிஸ்தவர்களுடன் உணவருந்த தயங்கினார்கள் (காண்க கலாத் 2,11-14). திருச்சபையிலே இரண்டு விதமான உணவு பழக்கங்களோ, அல்லது மேசை பரிமாற்றங்களோ இருக்க முடியாது, கிறிஸ்துவைப் போல விருந்தும் ஒன்றே என்று பவுல் ஆழமாக வாதிட்டார் (காண்க கலாத்தியர் 3,28). இருப்பினும் யூதர்களுகளுக்கும், யூதரல்ல கிறிஸ்தவர்களுக்கும் இடையிலான இந்த உணவு பழக்கம் மட்டிலான பழக்கங்களும் சிக்கல்களும் தொடர்ந்து கொண்டே இருந்தது. பிற்காலத்தில் இவை இன்னொரு முறையிலே தீர்த்து வைக்கப்பட்டன (காண்க தி.பணி 15). இயேசு அனைத்து உணவுகளையும் தூயதாகவே கருதினார், அத்தோடு நல்ல யூதனாக அவர் விருந்தோம்பலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்


எசாயா 25,6-10

ஆண்டவர் அளிக்கும் மாபெரும் விருந்து


6படைகளின் ஆண்டவர் இந்த மலையில் மக்களினங்கள் அனைவருக்கும் சிறந்ததொரு விருந்தை ஏற்பாடு செய்வார்; அதில் சுவைமிக்க பண்டங்களும், பழரசப் பானமும், கொழுப்பான இறைச்சித் துண்டுகளும், வடிகட்டிப் பக்குவப்படுத்திய திராட்சை இரசமும் பரிமாறப்படும். 7மக்களினங்கள் அனைவரின் முகத்தை மூடியுள்ள முக்காட்டை இந்த மலையில் அவர் அகற்றிவிடுவார்; பிற இனத்தார் அனைவரின் துன்பத் திகிலைத் தூக்கி எறிவார். 8என்றுமே இல்லாதவாறு சாவை ஒழித்துவிடுவார்; என் தலைவராகிய ஆண்டவர் எல்லா முகங்களிலிருந்தும் கண்ணீரைத் துடைத்து விடுவார்; தம்மக்களுக்கு ஏற்பட்ட நிந்தையை இம்மண்ணுலகில் அகற்றிவிடுவார்; ஏனெனில், ஆண்டவரே இதை உரைத்தார். 9அந்நாளில் அவர்கள் சொல்வார்கள்; இவரே நம் கடவுள்; இவருக்கென்றே நாம் காத்திருந்தோம்; இவர் நம்மை விடுவிப்பார்; இவரே ஆண்டவர்; இவருக்காகவே நாம் காத்திருந்தோம்; இவர் தரும் மீட்பில் நாம் மகிழ்ந்து அக்களிப்போம்.'


எசாயா புத்தகத்தின் இருபத்தாறாவது அதிகாரம், முதலாம் எசாயா பரிவிலிருந்து எடுக்கப்படுகிறது. இருபத்தி நான்காவது அதிகாரத்திலிருந்து இருபத்தி ஆறாவது அதிகாரம் வரை எசாயா ஆண்டவரின் இறுதி நாள் வெற்றியைப் பற்றி பறைசாற்றுகிறார். எருசலேமின் அழிவு, அதன் சுவர்களின் தகர்ப்பு, இறுதியாக எருசலேம் ஆலயத்தின் எரிவு போன்றவை இஸ்ராயேலரின் விசுவாசத்தின் ஆணி வேரையே ஆட்டம் காண வைத்திருக்கும். இஸ்ராயேலின் கடவுள் தோற்க முடியாதவர், அவர் எப்படி தன்னுடைய மக்களையும் நகரையும் அழிவடைய விடுவார். இந்த கேள்வி சாதாரண இஸ்ராயேல் மக்களை நிச்சயமாக பாதித்திருக்கும். இந்த நிகழ்விற்கு இறைவாக்கினர்கள் விளக்கம் கொடுக்க வேண்டியவர்களாக இருந்தார்கள். எசாயா, பலவற்றைப் பற்றி இறைவாக்குரைத்துவிட்டு, இந்த அதிகாரத்திலே ஆண்டவரின் விருந்தை விவரிக்க முயல்கிறார். இந்த வரிகள், இஸ்ராயேலருக்கு நம்பிக்கையை கொடுத்திருக்கும். ஆண்டவர் தங்களை கைவிட மாட்டார் என்ற எண்ணத்தையும் உருவாக்கியிருக்கும். விருந்து என்பது இங்கே அடையாளமாக பாவிக்கப்படுகிறது. இது ஆண்டவருடைய அன்பை அல்லது இஸ்ராயேலர் மீண்டும் ஆண்டவருடைய உறவை பெறவிருக்கிறார்கள் என்ற அர்த்தத்தைக் கொடுத்திருக்கும் என நினைக்கலாம்


.6: படைகளின் ஆண்டவர் மலையில் மக்களினங்களுக்கு விருந்து செய்கிறார். ஆண்டவரை, படைகளின் ஆண்டவர் என அழைப்பது மிகவும் பிரசித்தி பெற்றது (יְהוָה צְבָאוֹת அதோனாய் ட்செபா'ஓத்). புதிய ஏற்பாடு அடங்கலாக இந்த சொல் 1300 தடவைகளுக்கு மேல் விவிலியத்தில் பாவிக்கப்பட்டுள்ளது. கடவுளுக்கு அதிகமான சேவகர்கள் இருப்பதாகவும், இவை அவருடைய பலத்தின் அடையாளமாக இருக்கிறது என எபிரேயர்கள் நம்பினார்கள். இதனால்தான் வானதூதர்களை கடவுளோடு ஒப்பிட்டு பார்த்தார்கள். இப்படியாக படைகளின் ஆண்டவர், மலையில் மக்களினங்கள் அனைவருக்கும் சிறந்த விருத்தொன்று கொடுக்க இருக்கிறார் என்கிறார் எசாயா. எந்த மலை என்று அவர் விவரிக்காவிட்டாலும், சூழலியலில் வைத்து, அது சீயோன் மலை என அடையாளம் காணப்படுகிறது. சீயோன் மலையில் உள்ள ஆலயம்தான் பபிலோனியர்களால் தகர்க்கப்பட்டது, இங்கேதான் கடவுள் யூதர்களை மட்டுமல்ல, அனைத்து மக்களினங்களையும் கூட்டப்போகிறார் என்பதும், இனி அனைவரும் கடவுளின் மக்களாகும் பேறுபெறுகிறார்கள் என்பதும் புலப்படுகிறது. விருந்து (מִשְׁתֵּה שְׁמָנִים மிஷ்தெஹ் ஷெமானிம்- உணவு விருந்து), இங்கே உணவைக் குறித்தாலும், அதற்கு மேலாக அது உறவையும் குறிக்கிறது. நண்பர்களுக்கு மகிழ்ச்சி கொடுக்கவே ஒருவர் விருந்து வைப்பார், அல்லது தன்னுடைய மகிழ்வை பகிர்ந்துகொள்ளவே அவர் விருந்து வைப்பர் (நம்மில் சிலர் காசு சேர்க்க விருந்து வைப்பது போல் அல்ல).  இந்த விருந்தில் என்னவெல்லாம் பகிரப்படும் என்பதை ஒரு சமையல்காரரைப் போல விளங்கப்படுத்துகிறார் இறைவாக்கினர். இதிலிருந்து எசாயா ஆசிரியர் நன்றாக உணவை ருசிப்பவர் என்பது நன்கு புலப்படுகிறது


. מִשְׁתֵּה שְׁמָרִ֑ים மிஷ்தெஹ் ஷெமாரிம்: இரச விருந்து - யூதர்களுக்கு திராட்சை இரசம் முக்கியமான விருந்து பானம். இது மகிழ்வைத் தரும் பானம் என கருதப்படுகிறது. பல ஆயிரம் ஆண்டுகளாக திராட்சை இரசம் யூதர்களுடைய வாழ்வோடு கலந்திருக்கிறது


. שְׁמָנִים֙ מְמֻ֣חָיִ֔ם ஷெமானிம் மெமெஹாயிம்: எலும்பு மஜ்ஜை விருந்து- யூத மக்கள் இறைச்சி வகைகளை சுவைத்து உண்டார்கள். எலும்பினுள் இருந்த மஜ்ஜை அவர்களாலும் விரும்பப்பட்டதுஇதனைத்தான் சீயோன் மலையில் கடவுள் தரும் விருந்தில் பெறப்போகிறார்கள் என்கிறார்


. שְׁמָרִים מְזֻקָּקִֽים׃ ஷெமாரிம் மெட்சூக்காகிம்: நொதிக்கப்பட்ட இரசம்- இரசத்தின் காலம் செல்லச் செல்ல, அதன் அடர்த்தியும், தகமையும், நொதியமும் கூடுகிறது. இதனால் அதன் போதைத் தன்மையும் கூடுகிறது. இப்படியான இரசத்தை விருந்தில் மிக முக்கியமானவர்களுக்கே கொடுத்தார்கள். இதுவும் சீயோன் மலையில் கிடைக்கும் என்கிறார் ஆசிரியர்


.7: மிகவும் அழகானதும் ஆழமானதுமான வரி. யார் புறவினத்தவர்கள் என்பதை முதலில் புரிந்து கொள்ளவேண்டும். இஸ்ராயேல் அல்லாதவர்கள் புறவினத்தார்கள் என அழைக்கப்பட்டார்கள். சில வேளைகளில் (பல வேளைகளில்) இவர்கள் பாவிகளாகவே கருதப்பட்டார்கள். ஆனால் உண்மையில் அழைக்கப்பட்டவர்கள் தூயவர்கள் என்பதைவிட அவர்கள் தூயவர்களாக வாழ அழைக்கப்பட்டார்கள் என்றே விவிலியம் காட்டுகிறது. இவர்கள் மற்றைய மக்களின் மீட்பிற்காக பணிசெய்ய அழைக்கப்பட்டவர்கள். ஆக அழைக்கப்பட்டவர்கள் பணியாளர்கள் என்று பொருள். இது இப்படியிருந்தாலும், நடைமுறையில் புறவினத்தவர்கள் தீண்டப்படாதவர்களாக அறியப்பட்டு, அவர்களிலே பலவீனமானவர்கள் அதிகமான துன்பத்தை அனுபவிக்க நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். முக்கியமாக கானானியர், மோவாபியர், சமாரியர் போன்றோர் இந்த துன்பத்தை சந்தித்தார்கள். புறவினத்தவரிலே சக்தி படைத்தவர்கள், முக்கியமாக அசிரியர், பபிலோனியர், எகிப்தியர், கிரேக்கர், உரோமையர், இந்த யூதர்களின் தெரிவுசெய்யப்பட்ட இனம்-புறவினம் என்ற கருப்பொருளை நகைப்பாகவே பார்த்திருப்பர். இன்னொரு சொல்லில் சொல்லின், அவர்களுக்கு இஸ்ராயேலர்தான் புறவினத்தவர்கள். எசாயா புத்தகம் இந்த இனம்-புறவினம் என்ற கருப்பொருளை சரியாக கையாள்கிறது

கடவுளுக்கு அனைவருமே தன்னினம், தன் மக்கள். கடவுள் யாரையாவது தனித்துவமாக அன்பு செய்கிறார் என்றால், அது அவர்களைக் கொண்டு, மற்றவர்களுக்கு பணிசெய்வதற்கே என்பதுதான் விவிலிய உண்மை. இந்த ஏழாவது வரியில் ஆசிரியர், கடவுள் மக்களினங்களின் முக்காட்டை ஆண்டவர் நீக்கிவிடுவார் என்று சொல்கிறார். அதுவும் இதே மலையில் (சீயோன்) நடக்கும் என்கிறார். மக்களினத்தை குறிக்க (הָֽעַמִּים 'அம்மிம்) என்ற சொல் பயன்பட்டுள்ளது. இது அனைத்து மக்களிங்களையும் குறிக்கும் ஒரு சொல். முக்காடு என்பது (לּוֹט லோத்) இங்கே பாகுபாட்டை அல்லது தடையாக இருப்பதைக் குறிக்கலாம். இந்த முக்காட்டை கடவுள் அகற்றுவார் என்பதன் மூலம் இனி தடைகளும் இல்லை பாகுபாடும் இல்லை என்பது சொல்லப்படுகிறது

  இதனை மீண்டுமாக வேறு சொற்களில், வேற்றினத்தாரின் துன்பத் துகில் என்று காட்டுகிறார் ஆசிரியர். இங்கே இரண்டு ஒத்தகருத்துச் சொற்கள் பாவிக்கப்படுகின்றன. வேற்றினத்தாரைக் குறிக்க (גּוֹיִם கொய்யிம்) என்ற சொல்லும், மூடியுள்ள துகிலைக் குறிக்க (מַּסֵּכָה மஸ்செகாஹ்) என்ற சொல்லும் பாவிக்கப்பட்டுள்ளன. இந்த வரி எற்கனவே சொல்லப்பட்டதைத்தான் மீண்டுமாக சொல்கிறது. துகில் என்பது எதைக் குறிக்கிறது என்பது தெளிவாக இல்லை, தமிழ் விவிலியம் இதனை துன்பத்துகில் என்று காட்டுகிறது. சில ஆய்வாளர்கள் இதனை மரணம் என்னும் துன்பம் என்றும் விளக்குகின்றனர்


.8: ஏழாவது வரியில் இருந்தவற்றை அழகாக தெளிவாக இந்த வரி காட்டுகிறது. முக்கியமான விடயங்கள் இங்கே ஆராயப்படுகின்றன


. என்றுமே இல்லாதவாறு சாவை அழித்துவிடுவார்: בִּלַּע הַמָּ֙וֶת לָנֶצַח பில்லா' ஹம்மாவெத் லாநெட்சாஹ் - மரணம் ஒரு சாதாரண துன்பியல் நிகழ்வு, இதனை கடவுள் அழித்துவிடுவார் என்று எசாயா சொல்வது. இயற்கையான மரணத்தையா அல்லது, நித்திய மரணத்தையா என்ற கேள்வி எழுகிறது

  கானானிய புரணக் கதையின் படி மரணம் என்பது ஒரு கொடிய விலங்காகவும், அது மக்களை விழுங்குவதாகவும் பார்க்கப்பட்டது. இந்த பின்னனியில் கடவுள் மரணத்தையே விழுங்கிவிட்டார் (בִּלַּע பில்லா' விழுங்கப்படும்) என்கிறார் எசாயா


. எல்லார் முகத்திலிருந்தும் கண்ணீரைத் துடைத்துவிடுவார்: מֵעַל כָּל־פָּנִים மெ'அல் கோல்-பானிம் - கண்ணீர் துன்பத்தின் அடையாளம், கண்ணீரைத் துடைத்துவிடுதல் என்பது, துன்பத்தை அகற்றுதல் என்பதற்கு சமன். அதனைத்தான் அடையாளமாக சொல்கிறார் ஆசிரியர்


. மக்களின் நிந்தையை இம்மண்ணுலகில் அகற்றிவிடுவார்: חֶרְפַּת עַמּוֹ ஹெர்பத் 'அம்மோ- மக்களின் நிந்தை. எருசலேம் அழிக்கப்பட்டபோது யூதேயாவின் மகிமையும் அழிக்கப்பட்டது. ஒரு நகர் மக்களுக்கு நில அடையாளம் மட்டுமல்ல, அது அவர்களுடைய கலாச்சாரத்தின் அடையாளம், அத்தோடு நகர் அழிக்கப்படுகிறது என்று சொன்னால் அந்த இனத்தின் மரியாதை மற்றும் மாண்பு அழிக்கப்படுகிறது என்றும் பொருள். (யாழ் நூலக அழிப்பையும், கிளிநொச்சி நகர அழிப்பையும் இந்த ஒப்புவமையில் ஒப்பிடலாம்). எருசலேம் அழிந்தது, இதனைக்கொண்டு எருசலேமின் கடவுள் அந்த மக்களை கைவிட்டுவிட்டார் என்று இஸ்ராயேலரின் நண்பர்கள் 

இஸ்ராயேலரை ஏளனம் செய்தார்கள். எருசலேமை மீண்டும் கட்டியெழுப்புவதன் வாயிலாக இந்த நிந்தை அகற்றப்படும்

 இறுதியாக இந்த உறுதிமொழிகளை கடவுளே உரைத்தார் என்கிறார் எசாயா. இதனால் இது தன்னுடைய இறைவாக்கல்ல மாறாக இது ஆண்டவருடைய சொந்த வரிகள் என சொல்கிறார் எனலாம் (כִּי יְהוָה דִּבֵּר׃ פ கி அதோனாய் திவ்வெர்). 


.9: ஆண்டவருடைய வார்த்தைகள் இப்படியாக இருக்கின்றபோது, இதனை பார்க்கின்ற மக்களின் உணர்வுகள் எப்படியிருக்கின்றன என்பதை இந்த வரி காட்டுகிறது. அந்நாளின் மக்கள் சொல்வார்கள் என்று எதிர்காலத்தில் வரி அமைக்கப்பட்டுள்ளது (וְאָמַר֙ בַּיּ֣וֹם הַה֔וּא வெ'ஆமர் பாய்யோம் ஹஹு'). 


. இவரே நம் கடவுள்: הִנֵּה אֱלֹהֵינוּ זֶה ஹின்நெஹ் 'எலோஹிமூ ட்செஹ். கடவுளை தங்கள் கடவுளாக ஏற்றுக்கொள்ளாததன் வாயிலாகத்தான் பல பிரச்சினைகள் ஏற்பட்டதாக எசாயா நம்பினார். இப்படியான அவவிசுவாசம் விலகி, அந்நாட்களில் மக்கள் கடவுளை தங்கள் கடவுளாக ஏற்றுக்கொள்வார்கள் அதாவது அவர்கள் நம்பிக்கையில் வளர்வார்கள் என்கிறார்


. இவருக்கென்றே தாங்கள் காத்திருப்பதாகவும், அவர் இவர்களை விடுவிப்பதாகவும் சொல்கிறார் ஆசிரியர். இந்த வரி கடவுளுக்கும் அவர் மக்களுக்கும் இடையிலான ஆழமான உறவைக் காட்டுகிறது. ஆண்டவருக்காக காத்திருத்தல் என்பது அவரிலே முழுமையான நம்பிக்கையை வைப்பதற்கு சமனாகும். அவர் விடுவிப்பார் என்பது அந்த நம்பிக்கையை ஏற்றுக்கொள்வதைக் குறிக்கும். இங்கணம் இந்த கடவுள் இஸ்ராயேலரின் ஒரே கடவுள் என்பதை இவர்கள் வலியுறுத்துகின்றனர். இந்த விசுவாசம் இரண்டு வரிப் பிரிவுகளில் மீண்டும் மீண்டும் சொல்லப்படுகிறது


. ஆண்டவருடைய மீட்பில் கலந்து அக்களிப்போம்: பலர் பலவற்றில் அக்களிக்கின்றபோது 

இவர்கள் ஆண்டவர் தரும் மீட்பில் அக்களிப்பதாகச் சொல்கிறார். ஆண்டவரின் மீட்பில் அக்களித்தல் என்ற சொல்லும், ஆண்டவரை முழுமையாக நம்பி அவரை ஏற்றுக்கொள்ளுதலையே குறிக்கிறது,וְנִשְׂמְחָה בִּישׁוּעָתוֹ׃ வெநிஷ்மெஹாஹ் பிஷு'அத்தோ.  




திருப்பாடல் 23

ஆண்டவரே நம் ஆயர்

(தாவீதின் புகழ்ப்பா)


1ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை

2பசும்புல் வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார்

3அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார்; தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார்

4மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்; உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும்

5என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்; என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்; எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது

6உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் எனைப் புடைசூழ்ந்துவரும்; நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன்.


திருப்பாடல் புத்தகத்திலுள்ள 151 பாடல்களில், முதன்மையான பாடலாக இந்தப் பாடலைக் கொள்ளலாம். பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு பல இசைவடிவங்களைக் கொண்டுள்ள இந்த பாடல் பல ஆண்டுகள் சென்றாலும் அழியாத கடவுள்-மனித பாரம்பரியமாக மாறிவிட்டது. இந்த பாடலின் முன்னுரை இதனை தாவீதின் பாடலாக முன்மொழிகிறது (מִזְמוֹר לְדָוִד மிஷ்மோர் லெதாவித்). அழகான இந்த பாடலை மூன்று பிரிவாக பிரித்து கடவுளின் பாதுகாக்கும் தன்மையை உற்று நோக்கலாம். இங்கே பாவிக்கப்பட்டுள்ள சொற்பிரயோகங்கள் சாதாரண சொற்களாக இருந்தாலும் அவை மிக ஆழமான உணர்வுகளை தாங்கியுள்ளன. தேவை ஒன்றும் இராது, பயம் இராது, ஆண்டவரில் வாழ்தல் போன்றவை மிக ஆழமான வரிகள். எப்படியான பின்புலத்தில் தாவீது இந்த திருப்பாடலை பாடினார் என்பது புலப்படவில்லை ஆனால் இதன் வரிகளைக் கொண்டு நோக்குகின்ற போது, கடுமையான சிக்கிலிருந்து அவர் மீண்ட போது ஆண்டவரின் நன்மைத் தனத்தை நினைத்து அவர் பாடியிருக்கலாம் என்பது புலப்படுகிறது. தாவீதுதான் இந்தப் பாடலை பாடினார் அல்லது இயற்றினார் என்பதற்கும் போதிய சான்றுகள் இல்லை, இதனை சிலர் திருப்பயண பாடல் என்றும் காண்கின்றனர்


.1: ஆண்டவரை ஆயராக வர்ணிப்பது, முதல் ஏற்பாட்டின் மிக முக்கியமான உருவகம். இதனைத்தான் புதிய ஏற்பாட்டில் இயேசுவும் அடிக்கடி செய்வார் (காண்க எசே 34,10: செக் 11,16: யோவா 10,11.14). Ἐγώ εἰμι ὁ ποιμὴν ὁ καλός. எகோ எய்மி ஹொ பொய்மேன் ஹொ காலொஸ். ஆயத்துவம் அக்கால இஸ்ராயேல் மக்களுக்கு மிக தெரிந்திருந்தது. ஆயர்கள் அதிகமாக நல்லவர்களாக இருந்து தங்கள் மந்தைகளை காத்தார்கள். மந்தைகளை தங்கள் சொந்த பிள்ளைகள் போல வளர்த்தார்கள், சில வேளைகளில் ஆபத்துக்களையும் பாராது தங்கள் மந்தைகளை மேய்த்தார்கள். தாவீது கூட நல்ல ஆயனாக தன் மந்தைக்காக கொடிய விலங்குகளுடன் போரிட்டதாக விவிலியம் சொல்கிறது (காண்க 1சாமு 17,34.37). இதனால் தாவீது உண்மையான ஆயனாக கடவுளைக் காண்பது அவருடைய சொந்த அனுபவம் என்றுகூட சொல்லலாம், அத்தோடு கடவுள் தன் ஆயனாக இருப்பதனால் தனக்கு எதுவும் தேவையில்லை என்கிறார் (יְהוָ֥ה רֹ֝עִ֗י לֹ֣א אֶחְסָֽר அதோனாய் ரோ'யி லோ' 'எஹ்சார்)


.2: இங்கே தாவீது தன்னை ஓர் ஆடாக வர்ணிக்கிறார். பசும் புல் வெளிமீது இளைப்பாற செய்வது அழகான உருவகம். நவீன உளவியலாளர்கள் சிலர், கிறிஸ்தவம் மக்களை மந்தைகளாக காட்டுகின்றது என்று குற்றம் சாட்டுகின்றனர், ஆனால் மந்தைகளுக்குள் இருக்கும் இந்த அதிசயமான பண்புகள், நல்ல அடையாளங்கள் என்பதை சாதாரண மனித உணர்வுகள் ஏற்றுக்கொள்ளும். பசும்புல்வெளி மற்றும் குறையாத நீரோடைகள் என்பன பாலஸ்தீன ஆடுகளுக்கும் மேய்ப்பர்களுக்கும் என்றுமே ஒரு கனவுதான். இப்படியானவை அங்கே குறைவு, அவை கிடைத்தாலும், அங்கே அதிகமான போட்டிகளிருக்கும். ஆனால் ஆண்டவர் ஆயனாக இருக்கின்ற படியால் இந்த கனவு, தாவீதுக்கு நனவாகிறது


.3: கடவுள் தனக்கு புத்துயிர் அளிப்பதாக தாவீது பாடுகின்றார். இதனை எபிரேய விவிலியம், 'என் ஆன்மாவை புதுப்பிக்கிறார்' என்று அழகாக காட்டுகிறது (נַפְשִׁי יְשׁוֹבֵב நப்ஷி யெஷோவெவ்). கழைத்துப்போய் சேர்ந்துபோய் இருக்கின்ற தலைவர்களுக்கு, தங்கள் பதவி, பலம், குலம், சொத்துக்கள், இன்பங்கள் போன்றவை புத்துயிர் அளிக்கா, மாறாக புத்துயிர் தருபவர் கடவுள் ஒருவரே என்பது தாவீதுக்கு நன்கு தெரிந்திருக்கிறது. அத்தோடு கடவுளுடைய நன்மைத்தனங்களுக்கும் அவருடைய நீதியான பெயருக்கும் நெருங்கிய தொடர்புள்ளது நன்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அவருடைய பெயரைப்போலவே அவருடைய உறவும் இருக்கிறது என்பது ஆசிரியரின் அனுபவம்


.4: இந்த வரி இன்னும் ஆழமான உணர்வுகளைத் தாங்கிச் செல்கிறது. முதல் மூன்று வரிகளும் கடவுளை மூன்றாம் ஆளாகவும், ஆயனாவும் வர்ணித்தது. இந்த நான்காம் வரி கடவுளை இரண்டாம் ஆளாக காட்டுகிறது அத்தோடு அவரை வழியில் பாதுகாப்பவராக காட்டுகிறது. இந்த வரியில் இருந்துதான் சிலர் இந்த பாடலை வழித்துணை திருப்பயணப் பாடல் என்று காண்கின்றனர். பாலைவனங்கள், பயங்கரங்கள், தனிமையான பாதைகள், வழிப்பறிக் கொள்ளைகள் என்று பாலஸ்தீனத்தின் பாதைகள் இருந்திருக்கின்றன. இந்த பாதைகளில் கடவுளின் காத்தல் மிகவும் அனுபவிக்கப்பட்டிருக்கின்றது. இதனால்தான் ஆசிரியர் சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் தான் நடக்க நேர்ந்தாலும் என்று பாடுகிறார் (גַּ֤ם כִּֽי־אֵלֵ֨ךְ בְּגֵ֪יא צַלְמָ֡וֶת לֹא־אִ֘ירָ֤א காம் கி-'எலெக் பெகெ' ட்சால்மாவெத் லோ'-'இரா'). அதற்கான காரணமாக கடவுளுடைய கோலையும் (שֵׁבֶט ஷெவெட்), நெடுங்கழியையும் (מִשְׁעֶנֶת மிஷ்எனெத்), காட்டுகிறார். இவை ஆயர்களுடைய பாதுகாப்பு ஆயுதங்கள், இதனைக் கொண்டே அவர்கள் தங்கள் மந்தைகளை பாதுகாத்தார்கள். பிற்காலத்தில் இவை பாதுகாப்பின் அடையாளங்களாக மாறின. அரசர்களுடைய கையிலிருக்கும் கோலுக்கும், ஆயனுடைய கோலுக்கும் அதிகமான தொடர்பிருக்கிறது


.5: இவ்வளவு நேரமும் தன்னை ஆடாக வர்ணித்த ஆசிரியர் இந்த வரியிலிருந்த தன் உருவத்தை விருந்தாளியாக மாற்றுகிறார். ஆட்டின் தலையில் நறுமண தைலம் பூச மாட்டார்கள். எதிரிகளின் கண்முன்னே விருந்தை ஏற்பாடு செய்தல், தலையில் நறுமண தைலம் பூசுதல், பாத்திரத்தை 

இரசத்தால் நிறைத்தல் போன்றவை சிற்றரசர்களுக்கு பேரரசர்கள் கொடுக்கும் அன்பு விருந்தைக் காட்டுகிறது. இப்படியான விருந்துகள் மத்திய கிழக்கு முன்னைய பேரரசுகளில் பலமுறை நடந்திருக்கிறது. இந்த வரியை வைத்து பார்க்கும் போது, பாடலாசிரியர் ஒரு அரசர் போல தோன்றுகிறது, அல்லது அவர் அரச உதாரணத்தை எடுத்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. தன்னுடைய எதிரிகள் அவமானப்பட கடவுள் தன்னுடைய நன்மைத் தனத்தைக் காட்டுகிறார் அதாவது தன்னை உயர்த்துகிறார் என்பது இந்த ஆசிரியரின் அனுபவம்.


.6: கடவுளின் அருளும், பேரன்பும் (ט֤וֹב וָחֶסֶד தோவ் வாஹெசெத்) வாழ்நாள் முழுவதும் புடைசூழ்ந்து வரும் என்பதிலிருந்து ஆசிரியரின் அசைக்க முடியாத நம்பிக்கை புலப்படுகிறது. அத்தோடு ஆசிரியரின் கடவுள் அனுபவம் ஒரு முடிவுறாத அனுபவம் என்பதும் புலப்படுகிறது. ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்வேன் என்கிறார் ஆசிரியர். இந்த ஆண்டவரின் இல்லத்தை எபிரேய விவிலியம், கடவுளின் வீடு (בֵית־יְהוָ֗ה வெத்-அதோனாய்) என்கிறது. இதனால் இதனை எருசலேம் ஆலயம் என்று எடுக்கலாம் எனவும் எண்ணத் தோன்றுகிறது. இது எருசலேம் ஆலயமாக இருந்தால், இந்த பாடலின் ஆசிரியராக தாவீது இருக்க முடியாது, ஏனெனில் தாவீதின் காலத்தில் எருசலேம் தேவாலயம் இருந்திருக்கவில்லை




பிலிப்பியர் 4,12-14.19-20

12எனக்கு வறுமையிலும் வாழத் தெரியும்; வளமையிலும் வாழத் தெரியும். வயிறார உண்ணவோ, பட்டினி கிடக்கவோ, நிறைவோ குறைவோ எதிலும் எந்தச் சூழலிலும் வாழப் பயிற்சி பெற்றிருக்கிறேன். 13எனக்கு வலுவூட்டுகிறவரின் துணைகொண்டு எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு. 14ஆயினும் நான் பட்ட துன்பத்தில் நீங்கள் பங்குகொண்டது உங்கள் நன்மனத்தைக் காட்டுகிறது.19என் கடவுள், கிறிஸ்து இயேசுவின் வழியாய்த் தம் ஒப்பற்ற செல்வத்தைக் கொண்டு, உங்கள் தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்வார். 20நம் தந்தையாகிய கடவுளுக்கு என்றென்றும் மாட்சி உரித்தாகுக! ஆமென்.


பிலிப்பியர் திருமுகம் ஓர் அறிமுகம், கடந்தவார தொடர்ச்சி


  பிலிப்பியர் திருமுகம் மகிழ்ச்சியைப் பற்றி அதிகமாக பேசுகின்ற அதேவேளை, அது உறவு மற்றும் ஒற்றுமையைப் பற்றியும் அதிகமாக பேசுகிறது. ஆரம்ப காலத்திலிருந்தே பிலிப்பியர்கள் பவுலுடை நற்செய்தி பணிக்கு துணையாற்றினார்கள் என்பதை பவுல் மெச்சுகின்றார் (காண்க.1,5). பிலிப்பியருடைய அடையாளமே அவர்களுடைய கிறிஸ்தவ உறவு என்பதனை பவுல் அவர்களுக்கு கோடிட்டுக் காட்டுகிறார் (காண்க 1,7). இதனையே இவர்கள் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்றும், ஒருவர் மற்றவருக்கு துணையாக இருந்து ஒற்றுமையாக கிறிஸ்துவிற்கு சான்று பகரவேண்டும் என்கிறார் இந்த புறவினத்தவர் திருத்தூதர் (காண்க 1,27). அனைவரும் ஒத்த கருத்துள்ளவர்களாய் இருப்பது தனக்கு நிறைவான மகிழ்வை தருவதையும் பவுல் விளங்கப்படுத்துகிறார் (காண்க 2,2). 

இப்படியான தன்னுடைய அன்புத் திருச்சபை பிரிவினைகளாலும், சுயநலத்தாலும் மற்றும் கட்சி மனப்பான்மையாலும் சேர்வடைந்து விடக்கூடாது என்பதற்காகவே பவுல் இந்த கருத்தை மீண்டும் மீண்டும் முன்வைக்கிறார் (காண்க 2,1-4). பிலிப்பியர் திருமுகத்தைப் போல வேறெந்த திருமுகமும் அவருடைய ஆன்மீக வாஞ்சையை அவ்வளவு திருத்தமாகக் காட்டவில்லை. கிறிஸ்துதான் தன்னுடைய வாழ்வினதும் பணியினதும் இலக்கு என்பதையும் பவுல் அழகாகக் காட்டுகிறார். இயேசுவே தன்னுடைய இலக்காகவும், பாதையாகவும் இருப்பதனால், பவுல் தனக்கு வாழ்வும் சாவும் ஒன்றே என்றும், வளமையும் வறுமையும் கூட ஒன்றே என்று உரைக்கிறார்


வவ. 10-11: தன்னுடைய திருமுகத்தின் இந்த இறுதி அதிகாரத்தில் பவுல் பிலிப்பியருடைய நன்கொடைக்காக நன்றி சொல்கிறார். தன்னுடைய நலன்களைப் பற்றி பிலிப்பியர் மிகவும் கரிசனையாக இருந்ததாகவும், அந்த கரிசனையைக் காட்ட அவர்களுக்கு பெரிதாக வாய்ப்புக்கிடைக்கவில்லை என்பதையும் பவுல் காட்டுகிறார். இதனால் பவுலுக்கு எதோ ஒன்று தேவையாக இருக்கிறது என்று இவர்கள் எண்ணிவிடக்கூடாது என்பதிலும் அவர் கவனமாக இருக்கிறார்


.12: பிலிப்பியர் திருமுகத்தின் இந்த குறிப்பிட்ட வரி அதிகமான ஆன்மீக வாதிகளாலும், மறையுரைஞர்களாலும் அதிகமாக பாவிக்கப்பட்டுள்ளது. தனக்கு வழமையிலும் வாழத் தெரியும், மற்றும் வறுமையிலும் வாழத்தெரியும் என்று பவுல் பிலிப்பியர்க்கு கூறுவது, அவருடைய வாழ்வின் நிலைகளைக் காட்டுகிறது. பவுல் நல்ல படித்த யூத-உரோமைய பின்புலத்தை சார்ந்தவர் இதனை அவரின் வளமையாகவும், அவர் கிறிஸ்தவத்தின் பொருட்டு சிறையில் இருந்தது, துன்புற்றது இதனை அவரின் வறுமையாகவும் கண்டிருக்கலாம். இந்த இரண்டிலும் தான் வாழ கற்றுக்கொண்டேன் என்பது அவர் இவற்றிலிருந்து கற்றிருக்கிறார் என்பதையும் காட்டுகிறது

 வயிறாற உண்ணல், பசியாக கிடத்தல்: நிறைவாக இருத்தல், குறைவாக வாழ்தல் இவற்றை ஒப்பிட்டு இதில் எதிலும் வாழ தான் பயிற்சி பெற்றதாகச் சொல்கிறர்


.13: இவற்றை எப்படிச் செய்கிறார் என்பதன் இரகசியத்தை உடைக்கிறார் பவுல். அதாவது தனக்கு வலுவூட்டுகிறவரின் துணைகொண்டு எதனையும் செய்ய தனக்கு ஆற்றல் உண்டு என்கிறார் பவுல். πάντα ἰσχύω ἐν τῷ ἐνδυναμοῦντί με  பான்டா இஸ்குஉவோ இன் டோ என்துநாமூன்டி மெ- எனக்கு வலுவூட்டுகறவரால் எதையும் செய்ய எனக்கு முடியும்


.14: பவுலின் பொருட்டு பிலிப்பியர்களும் பல துன்பங்களைப் பட்டிருக்கிறார்கள் என்பது புலப்படுகிறது. பவுல் பிலிப்பியில் துன்புறுத்தப்பட்டபோது அவருடைய சீடர்கள் மற்றும் கிறிஸ்தவர்களும் துன்புறுத்தப்பட்டிருக்கலாம். அதனை அவர் நல்ல மனம் என எடுக்கிறார்

 நல்ல நண்பர்கள் துன்பம் வரும்போது அடையாளம் காட்டப்படுவார்கள் என்பது ஒரு முது மொழி, அதனைத்தான் பவுலும் விவிலிய வார்த்தையில் வடிக்கிறார்


வவ.15-17: தன்னுடைய மசிதோனியாவிற்கு பின்னான பணிவாழ்வில், யாரும் தன்னை பெரிதாக கவனிக்கவில்லை ஆனால் பிலிப்பியர்கள் தன்னை கவனித்தார்கள் என்கிறார். தான் தெசலோனிக்காவில் இருந்தபோது இரண்டு தடவைகள் பிலிப்பிய திருச்சபை உதவிகளை அனுப்பியது என்பதையும் ஏற்றுக்கொள்கிறார். இந்த வரியிலிருந்து பவுல் உண்மையாகவே தெசலோனிக்காவிற்கு சென்றிருக்கிறார், அத்தோடு அங்கே பல தேவைகளில் இருந்திருக்கிறார். பிலிப்பிய திருச்சபை அவரில் தொடர்ச்சியாக கரிசனை கெண்டிருந்தது என்பதையும் இந்த வரி காட்டுகிறது. தனக்கு நன்கொடை தேவையில்லை என்றாலும், இந்த பழக்கம் வாயிலாக பிலிப்பியர் நல்ல பங்கை தேர்ந்துகொண்டார்கள் என மெச்சுகிறார்.


.18: பிலிப்பியர் அனுப்பிய காணிக்கையை தான் எப்படி பார்க்கிறார் என்பதைக் காட்டுகிறார். முதலில் அவர்கள் அனுப்பியதெல்லாவற்றையும் தான் பெற்றுக்கொண்டதாகச் சொல்கிறார். காணிக்கைகளை ஏற்றுக்கொள்வதும் நல்ல பழக்கமாக இருந்தது. ஒருவருடைய காணிக்கையை ஏற்காமல் இருப்பது, அவர்களை அவமதிப்பதற்கு சமனாக இருந்தது

 அடுத்ததாக தற்போது அவர் நிறைவாக இருப்பதாகவும் சொல்கிறார். அதாவது தனக்கு மேலதிகமாக காணிக்கை கொடுக்கவேண்டாம் என்பதை மறைமுகமாகச் சொல்கிறார் (πεπλήρωμαι பெப்லேரோமாய்- நிறைவாக இருக்கிறேன்). பிலிப்பியர் பவுலுக்கு உதவிகளை எபாப்பிராத்து என்ற திருச்சபை தலைவர் ஒருவரின் வாயிலாக கொடுத்தனுப்பியிருக்கிறார். இவர் பவுலுடைய சீடர்களில் முதன்மையானவராக இருந்திருக்க வேண்டும் ( Ἐπαφρόδιτος எபாப்ரொதிடொஸ்).

 எபாப்பிராதித்து ஒரு கிரேக்க கிறிஸ்தவராக இருந்திருக்க வேண்டும். இந்த சொல் அக்காலத்தில் அதிகமாக பிள்ளைகளின் பெயர்களுக்கு வைக்கப்ட்டது. அப்ரோதித்து என்பது கிரேக்கரின் அன்பைக் குறிக்கும் கடவுள். எபாப்பிராதித்து பவுலுக்கு முக்கியமாக அவர் சிறையில் இருந்தபோது பணியாற்றி பின்னர் நோய்வாய்ப்பட்டார். இவரை பவுல் தன் சகோதரன் என்கிறார் (காண்க பிலி 2,25-30).

 இறுதியாக பிலிப்பியர் அனுப்பிய பரிசில்களை கடவுளுக்கு அளிக்கப்படும் காணிக்கைகளோடு ஒப்பிடுகிறார் திருத்தூதர். காணிக்கைகள் பரிசுத்தமானவை, அதனைப்போலவே பிலிப்பியரின் அன்பளிப்புக்களும் பரிசுத்தமானவை என சொல்கிறார். இதனை அவர் நறுமணம் வீசுகின்ற அத்தோடு கடவுளுக்கு உகந்த காணிக்கையுமாகும் என்கிறார்


.19: இவ்வளவு நேரமும், பிலிப்பியர்கள் தனக்கு கொடுத்த காணிக்கையை பற்றி சொன்னவர்

இந்த வரியில் பிலிப்பியருக்கு நன்மை பயிற்க வேண்டும் என ஆசிக்கிறார்

 கடவுளை தன் கடவுள் என்கிறார் (θεός μου தியோஸ் மூ). கடவுள், கிறிஸ்து இயேசு வழியாகத்தான் தன்னுடைய ஒப்பற்ற செல்வத்தை கொண்டு, மக்களின் தேவைகளை பூர்த்தி செய்கிறார் என்கிறார். கிறிஸ்துவின் மெசியாப் பணித்துவத்தை ஆரம்ப கால திருச்சபை எப்படி புரிந்து கொண்டது என்பதை இந்த இந்த வரி காட்டுகிறது.  

 






மத்தேயு 22,1-14

திருமண விருந்து உவமை

(லூக் 14:15 - 24)


1இயேசு மீண்டும் அவர்களைப் பார்த்து உவமைகள் வாயிலாகப் பேசியது: 2'விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்; அரசர் ஒருவர் தம் மகனுக்குத் திருமணம் நடத்தினார். 3திருமணத்திற்கு அழைப்புப் பெற்றவர்களைக் கூட்டிக்கொண்டு வருமாறு அவர் தம் பணியாளர்களை அனுப்பினார். அவர்களோ வர விரும்பவில்லை. 4மீண்டும் அவர் வேறு பணியாளர்களிடம், 'நான் விருந்து ஏற்பாடு செய்திருக்கிறேன். காளைகளையும் கொழுத்த கன்றுகளையும் அடித்துச் சமையல் எல்லாம் தயாராயுள்ளது. திருமணத்திற்கு வாருங்கள்' என அழைப்புப் பெற்றவர்களுக்குக் கூறுங்கள் என்று சொல்லி அனுப்பினார். 5அழைப்புப் பெற்றவர்களோ அதைப் பொருட்படுத்தவில்லை. ஒருவர் தம் வயலுக்குச் சென்றார்; வேறு ஒருவர் தம் கடைக்குச் சென்றார். 6மற்றவர்களோ அவருடைய பணியாளர்களைப் பிடித்து இழிவுபடுத்திக் கொலை செய்தார்கள். 7அப்பொழுது அரசர் சினமுற்றுத் தம் படையை அனுப்பி அக்கொலையாளிகளைக் கொன்றொழித்தார். அவர்களுடைய நகரத்தையும் தீக்கிரையாக்கினார். 8பின்னர் தம் பணியாளர்களிடம், 'திருமண விருந்து ஏற்பாடாகி உள்ளது. அழைக்கப் பெற்றவர்களோ தகுதியற்றுப் போனார்கள். 9எனவே நீங்கள் போய்ச் சாலையோரங்களில் காணும் எல்லாரையும் திருமண விருந்துக்கு அழைத்து வாருங்கள்' என்றார். 10அந்தப் பணியாளர்கள் வெளியே சென்று வழியில் கண்ட நல்லோர், தீயோர் யாவரையும் கூட்டி வந்தனர். திருமண மண்டபம் விருந்தினரால் நிரம்பியது. 11அரசர் விருந்தினரைப் பார்க்க வந்த போது அங்கே திருமண ஆடை அணியாத ஒருவனைக் கண்டார். 12அரசர் அவனைப் பார்த்து, 'தோழா, திருமண ஆடையின்றி எவ்வாறு உள்ளே வந்தாய்?' என்று கேட்டார். அவனோ வாயடைத்து நின்றான். 13அப்போது அரசர் தம் பணியாளர்களிடம், 'அவனுடைய காலையும் கையையும் கட்டிப் புறம்பே உள்ள இருளில் தள்ளுங்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்' என்றார். 14இவ்வாறு அழைப்புப் பெற்றவர்கள் பலர், ஆனால் தெரிந்தெடுக்கப்பட்டவர்களோ சிலர்.'


  இறையரசை பற்றிய உவமைகளில் இந்த உவமை மூன்றாவது இடத்தை பிடிக்கிறது. தொடர்ச்சியாக எற்கனவே இரண்டு உவமைகள் இறையரசை விளங்கப்படுத்த சொல்லப்பட்டிருக்கிறது. இந்த மூன்றாவது உவமையும் இறையரசின் தன்மைகளைப் பற்றியும், அழைக்கப்பட்வர்கள் அதனை ஏற்காதுவிடில், அந்த அழைப்பு மற்றவருக்கு நிச்சயமாக வழங்கப்படும் என்பதை மையப் பொருளாகக் கொண்டுள்ளது


.1: இயேசு தொடர்ச்சியாக உவமைகள் வாயிலாக பேசுகிறார் என்பதை காட்சிப்படுத்தி இன்னமும் பேசுகிறவர் இயேசுவாகவே இருக்கிறார் என்கிறார் மத்தேயு (ἐν παραβολαῖς என் பராபொலாய்ஸ்- உவமைகளில்). 


.2: விண்ணரசை திருமணத்திற்கு ஒப்பிடுகிறார் இயேசு (γάμος காமொஸ்- திருமணம்). இந்த திருமணம் அரச திருமணமாக இருக்கிறது, ஏனெனில் இங்கே திருமணத்தை அரசர் ஒருவர் தன் மகனுக்கு நடத்துகிறார். கடவுளை அரசராக வர்ணிக்கிறார். இது ஒரு உவமை மட்டுமே

  திருமணங்கள் கிரேக்க மற்றும் உரோமைய கலாச்சாரத்திலே மகிவும் முக்கியமானதாக இருந்தன. யூதர்களுக்கும் திருமணம் மிக முக்கியமான விழாவாகவே இருந்தது. திருமண விருந்திற்கு உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் அழைக்கப்பட்டு, அவர்களின் வருகையும் எதிர்பார்க்கப்பட்டது. திருமணத்திற்கு வராமல் இருப்பது, அதனை நடாத்துபவர்களை அலட்சியம் செய்வதாகவும் கணிக்கப்பட்டது. அதேவேளை, இந்த திருமணத்தை கிறிஸ்துவிற்கும் திருச்சபைக்கும் இடையிலான உறவாகவும் சில வேளைகளில் ஒப்பிடப்படுவதால், இங்கே இது ஒரு உருவகமாக பாவிக்கப்பட்டுள்ளது என்றும் சிலர் நம்புகின்றனர்


.3: அரசர் திருமணத்திற்கு அழைப்பு பெற்றவர்களை அழைக்க தன் பணியாளர்களை அனுப்புகிறார். சில வேளைகளில் தூர இடங்களில் இருந்த நண்பர்களை அழைத்துவர குதிரைகளும் பல்லக்குகளும் அனுப்பப்பட்டன, இதனை இந்த வரி குறிக்கலாம். அழைக்கப்பட்டவர்கள் வர விரும்பவில்லை என இந்த வரியின் இறுதி பகுதி காட்டுகிறது (οὐκ ἤθελον ஊக் ஏதெலொன்). இவர்கள் விருப்பம் இல்லாமல் இருந்ததன் காரணமாகத்தான் அந்த அரசர் தன் பணியாளர்களை (δοῦλος தூலொஸ்) அனுப்புகிறார் என்றும் எடுக்கலாம்.  


.4: அரசர் மீண்டும் வேறு பணியாளர்களை அனுப்புகிறார் (ἄλλους δούλους அல்லூஸ் தூலூஸ்). பணியாளர்களை மாற்றுவதற்கு காரணம் இருந்திருக்கலாம். ஒருவேளை பணியாளர்களின் தவறு காரணமாக இருக்கலாம் என எடுக்கலாம். இந்த முறை தன்னுடைய விருந்தின் முக்கியத்துவத்தையும் அதன் செலவையும் அவர் சொல்லி அனுப்புகிறார். தன்னுடைய காளைகளும் (ταῦροί டௌரொய்), கொழுத்த கன்றுகளும் (σιτιστὰ சிடிஸ்டா) அடிக்கப்பட்டுவிட்டன என்கிறார். இந்த காளைகளும் கன்றுகளும் அவருடைய பொருட்செலவையும், விருந்தின் முக்கியத்துவத்தையும் காட்டுகின்றன. அத்தோடு மீண்டுமாக திருமணத்திற்கு வாருங்கள் என நேரடியாகவே அழைப்பு விடப்படுகிறது (δεῦτε தெயுடெ- வாருங்கள்). 


.5: அழைப்பு பெற்றவர்கள் அழைப்பை பொருட்படுத்தவில்லை. இது மிகவும் பாரதூரமானது. ஏனெனில் இங்கே அழைக்கிறவர் ஓர் அரசர். இந்த செயல் அக்காலத்தில் மிகவும் தண்டனைக்குரிய குற்றம். அதேவேளை அழைக்கப்பட்டவர்களில் ஒருவர் வயலுக்கும், இன்னொருவர் கடைக்கும் செல்கிறார். கடைக்குச் சென்றார் என்பதை, வியாபாரத்திற்கு சென்றார் என்கிறார் மத்தேயு (ἐμπορία எம்பொரியா- வியாபாரம்).  இந்த செயல்களில் இருந்து இவர்கள் அரசரை ஒரு பொருட்டாக கருதாமல், தங்கள் வேலைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பது தெரிகிறது. அல்லது அவர்கள் வேண்டுமென்றே இப்படிச் செய்கிறார்கள் என்றும் எடுக்கலாம்


.6: மூன்றாவது குழு இன்னும் கொடூரமான செயலைச் செய்கிறது, அதாவது அவர்கள் அரசரின் பணியாளர்களை பிடித்து, இழிவுபடுத்தி கொலையும் செய்கிறார்கள். அரசரை இழிவுபடுத்துவது மிகவும் பாரதூரமானது. அவர் பணியாளர்களை கொலை செய்வது தேசதுரோக குற்றம். ஆயினும் 

இவர்கள் இதன் தார்ப்பரியத்தை புரிந்ததாக தெரியவில்லை. இந்த குற்றங்களைச் செய்கிறவர்கள் மரண தண்டனை கொடுக்கப்பட்டார்கள் (ὕβρισαν καὶ ἀπέκτειναν. ஹுப்ரிஸான் காய் அபெக்டெய்னான்).  


.7: இதனால் சினமுற்ற அரசர் தன்படையை அனுப்பி அவர்களை தண்டித்து, அவர்கள் நகரையும் அழிக்கிறார். இது எதிர்பார்த்த ஒன்றுதான். ஆயினும் ஏன் இவர்கள் அரசரை அறிந்திருந்தும் இப்படிச் செய்தார்கள் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. மத்தேயுவின் உண்மையான வாசகர்களுக்கு இயேசு யாரை அந்த அழைக்கப்பட்டவர்கள் என குறிப்பிடுகிறார் என்பது நன்கு புரிந்திருக்கும்நகரை தீக்கிரையாக்குவது அக்காலத்தில் வழமையான ஒன்றாக இருந்தது. எருசலேமும் சமாரியாவும் இப்படித்தான் தீக்கிரையானது. நகர் தீக்கிரையாவதை எதிர்காலமே தீர்க்கிரையாவதுடன் ஒப்பிடலாம்


வவ.8-9: இப்போது அரசரின் கோபம் தணிய அவர், தன் பணியாளர்களுக்கு புதிய கட்டளை கொடுக்கிறார். அதாவது அழைக்கப்பட்டவர்கள் அழிந்து போனார்கள். அவர்கள் தகுதியை இழந்தார்கள் என கிரேக்க விவிலியம் காட்டுகிறது (οὐκ ἦσαν ἄξιοι· ஊக் ஏசான் அக்ட்சியோய்).  ஆயினும் திருமணவிருந்து தடைப்பட இயலாது. அதற்கு வேறு ஆட்கள் தேவை. எனவே வேறு தளங்கள் தேடப்படுகின்றன. இந்த முறை அந்தஸ்தில் குறைந்தவர்கள் அழைக்கப்படுகிறார்கள்.

 சாலையோரங்களில் (διέξοδος தியட்சொதொஸ்) இருக்கும் அனைவரையும் அழைக்கும் படி கட்டளை கொடுக்கப்படுகிறது. சாலையோரங்களில் பல விதமான மக்கள் இருந்தார்கள். நடைப் பயணிகள், வியாபாரிகள், பிச்சை எடுப்பவர்கள், பணக்கார மக்கள் என்று அனைவரும் சந்திக்கிற இடமாக சாலையோரம் இருக்கிறது


.10: பணியாளர்கள் சாலையின் கண்ட அனைவரையும் அழைக்கிறார்கள். நல்லோர் தீயோர் அனைவரும் உள்வாங்கப்டுகிறார்கள். திருமண மண்டபம் நிறைகின்றது (πονηρούς τε καὶ ἀγαθούς பொனேரூஸ் டெ காய் அகாதூஸ்- தீயோரும் நல்லோரும்). அழைக்கப்பட்டவர்கள் வராவிடினும் அரசரால் திருமண மண்டபத்தை நிறைக்க முடியும் என காட்டுகிறது இந்த உவமை


.11: அரசர் இவர்களை காண வருகிறார். அக்கால திருமண விருந்தின் ஓர் அங்கமாக அழைக்கிறவர்கள் அழைக்கப்பட்டவர்களை காண வருவார்கள். ஆனால் இங்கே வருகிறவர் அரசர், அழைக்கப்பட்டவர்கள் சாலையோர மக்கள்

இவர்களில் ஒருவர் திருமண ஆடையில்லாமல் இருக்கிறார். மற்றவர்கள் அனைவரும் திருமண ஆடையில் இருக்கிறார்கள் என எடுக்கலாம். அனைவரும் சாலையோர மக்கள்

இப்படியிருக்க மற்றவர்களுக்கு எங்கணம் திருமண ஆடை வந்தது? நிச்சயமாக அரசர்தான் அதனை கொடுத்திருக்க வேண்டும். பின்னர் ஏன் இந்த மனிதர் மட்டும் ஆடையில்லாமல் இருந்தார்? அவர் ஆடையணிய மறுத்திருக்கலாம். இந்த செயற்பாடும் ஒர் அலட்சியமாகவே கருதப்படும் (ἔνδυμα γάμου என்தூமா காமூ- திருமண ஆடை). 


.12: அரசரின் கேள்வி நியாயமானதாக இருக்கிறது. அத்தோடு அரசர் அவரை தோழா என்றே அழைக்கிறார் (ἑταῖρε ஹெடாய்ரெ- நண்பா). ஏன் ஆடை அணியவில்லை என்கிறார். தோழா என்பதன் மூலமும், ஏன் ஆடை அணியவில்லை என்பதன் மூலமும், ஏன் வாய்ப்பை பயன்படுத்தவில்லை என்ற கேள்விதான் கேட்கப்படுகிறது

அவர் வாயடைத்து நின்றார் என்கிறார் மத்தேயு (ἐφιμώθη எபிமோதே). இவ்வாறு தவறு அந்த மனிதர் மேல்தான் உள்ளது என்பதைக் காட்டுகிறார் மத்தேயு


.13: அரசரின் தீர்ப்பு கொடுபடுகிறது. இந்த நண்பரின் காலும் கையும் கட்டப்பட்டு சிறையில் அடைக்கப்படவேண்டும் என்கிறது தீர்ப்பு, அத்தோடு அந்த சிறையில் அழுகையும் அங்கலாய்ப்பும் 

இருக்கும் எனவும் சொல்லப்படுகிறதுகாலும் கையும் கட்டப்படுதல், அவர்களால் இனி சுதந்திரமாக நடமாடமுடியாது என சொல்லப்படுகிறது. அவர் இருளில் இனி தள்ளப்படுவார் (σκότος ஸ்கொடொஸ்). இருள் அவரது துன்பத்தையும், கஸ்டமான நிலையையும் குறிக்கும். அழுகையும் பற்கடிப்பும் சிறையில் கிடைக்கும் சித்திரவதையைக் குறிக்கலாம். தாங்க முடியாத துன்பத்தைக் குறிக்கவே பற்கடிப்பு என்ற அடையாளம் கொடுக்கப்படுகிறது (βρυγμὸς τῶν ὀδόντων புருக்மொஸ் டோன் ஹொதொன்டோன்- பற்கடிப்பு). வேதனைகளின் போது இது நடைபெறுகிறது


14: இந்த வரிதான் இந்த உவமையின் செய்தி: அழைக்கப்பட்டவர்கள் பலர், தெரிவு செய்யப்பட்டவர்கள் சிலர் (πολλοὶ γάρ εἰσιν κλητοί ὀλίγοι δὲ ἐκλεκτοί. பொல்லொய் கார் எய்சின் கிலேடொய், ஒலிகொய் தெ எக்லெக்தொய்). 

இந்த உவமை யாருக்கு எதிராக சொல்லப்பட்டது என்பதை வாசகர்கள் நன்கு அறிந்திருப்பர்கள். இயேசுவை ஏற்க மறுத்த யூதர்களுக்குத்தான் இந்த உவமை சொல்லப்படுகிறது. இருப்பினும், இயேசுவை வாழ மறுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இது நன்கு பொருந்தும். திருமணவிருந்து இறையசை குறிக்கிறது என்பதும் இன்னொரு செய்தி


நம்முடைய கடவுள் விருந்து கொடுக்கும் கடவுள்

சிலரை அழைக்கிறார்

பலரை கூட்டிக்கொண்டும் வருகிறார்

அழைக்கப்பட்டவர்களும்

கூட்டிவரப்பட்டவர்களும் உதாசீனம் செய்கிறார்கள்

தண்டனை இருவருக்கும் ஒன்றே

அங்கே இருட்டும் அழுகையும் இருக்கும்,

இதற்கு கடவுள் பொறுப்பல்ல


அன்பு ஆண்டவரே!

நீர் தரும் வாய்ப்பை பயன்படுத்த பக்குவம் தாரும், ஆமென்.



 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆண்டின் பொதுக்காலம் முப்பத்திநான்காம் வாரம் கிறிஸ்து அரசர் பெருவிழா:  Our Lord Jesus Christ, King of the Universe 24.11.2024

ஆண்டின் பொதுக்காலம் முப்பத்திநான்காம் வாரம்   கிறிஸ்து அரசர் பெருவிழா :  Our Lord Jesus Christ, King of the Universe 24.11.2024 இய...