வெள்ளி, 21 ஜூலை, 2023

ஆண்டின் பொதுக்காலம் பதினாறாம் ஞாயிறு (அ) 23.07.2023


 

ஆண்டின் பொதுக்காலம் பதினாறாம் ஞாயிறு ()

23.07.2023


M. Jegankumar Coonghe OMI,

Shrine of Our Lady of Good Voyage,

Chaddy, Velania, Jaffna. 

Saturday, 22 July 2023


முதல் வாசகம்: சாலமோனின் ஞானம் 12,13.16-19

பதிலுரைப்பாடல்: திருப்பாடல் 86

இரண்டாம் வாசகம்: உரோமையர் 8,26-27

நற்செய்தி: மத்தேயு 13,24-43



இறையரசு, விண்ணரசு 


 மத்தேயு இதனை விண்ணகங்களின் அரசு (ἡ βασιλεία τῶν οὐρανῶν ஹே பசிலெய்யா டோன் ஹுரானோன்) என அழைக்க, மற்யை நற்செய்தியாளர்கள் இதனை இறைவனின் அரசு (ἡ βασιλεία τοῦ θεοῦ ஹே பசிலெய்யா டூ தியூ) என அழைக்கிறார்கள். முதல் ஏற்பாட்டிலும் சரி, புதிய ஏற்பாட்டிலும் சரி, இந்த விண்ணரசு என்ற சிந்தனை மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது. விவிலிய ஆசிரியர்கள் இதனை, கடவுளின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதி என நினைக்கிறார்கள். இயேசுவை நற்செய்தியாளர்கள் இறைவனின் வாரிசு எனக் காட்டுவதால் அவர்தான் இறையரசின் வாரிசு எனவும் காட்டவேண்டிய தேவை முக்கியமாக இருக்கிறது


 முதல் ஏற்பாட்டில் இறையரசு


 முதல் ஏற்பாட்டில் ஒரே கடவுள் நம்பிக்கையை, பல கடவுள் நம்பிக்கை சதாரணமாக இருந்த சூழலில் தக்க வைக்க மிகவே போராடினார்கள். இஸ்ராயேலை சுற்றியிருந்த மக்கள் தங்கள் அரசர்களின் ஆட்சி வானத்திலிருக்கும் தங்கள் தெய்வங்களின் அடையாளம் என கருதினார்கள். வானத்தில் நல்ல தெய்வங்கள், தீய தெய்வங்களை வென்று நல்லாட்சிகளை நடத்துகிறார்கள் அதன் வெளிப்பாடுதான் மண்ணக அரசு என நம்பினார்கள். இந்த தெய்வங்கள்தான் மண்ணகத்தை உருவாக்கினார்கள் அத்தோடு அவர்கள் ஒவ்வொரு வருடமும் மண்ணகத்தை வளப்படுத்துகிறார்கள் எனவும் நம்பினார்கள். இதால், மண்ணகத்தில் இராணுவங்கள் சண்டைபோடுகின்ற போது அவர்கள் தங்கள் அரசர்களுக்காக மட்டுமல்ல, மாறாக வானகத்திலுள்ள தங்கள் தெய்வங்களுக்காகவும் போராடுகிறார்கள் என இவர்கள் நம்பினார்கள். மன்னக வெற்றியோ அல்லது தோல்வியோ, அந்தந்த தெய்வங்களின் தோல்விகள் அல்லது வெற்றிகள் என கருதப்பட்டன

  எபிரேயர்களுடைய இறையரசு (hwhy twlm மல்கோத் அதோனாய்) என்ற சிந்தனை இந்த கானானிய மற்றும் மொசப்தேமிய சிந்தனைகளை உள்வாங்கியிருக்கிறது என்பதை மறுக்க முடியாது. ஆனால் இவர்களுடைய சிந்தனை வியக்கத்தக்க வகையில் மிகவும் இறையியல் ஆழமுள்ளதாக இருக்கிறது. தங்களுக்கு வாக்களிக்கப்பட்ட கானான் நாடு, அவர்கள் கடவுளின் வல்லமையின் அடையாளம் என்பதையும், அதனைக் கொடுக்க அவர் பொய்தெய்வங்களை இல்லாமல் ஆக்கினார் என்றும் நம்பினர். இது மற்றயவர்களுடைய நம்பிக்கையிலும் சற்று வித்தியாசப்படுகிறது. அதாவது இஸ்ராயேலின் கடவுள் பூமியை உருவாக்கினவர் மட்டுமல்ல மாறாக அவர்தான் அனைத்தையும் தீர்மானிக்கறவர் என்பதையும் இது காட்டுகிறது. கடவுள் முழு உலகத்தையும் படைத்தார் எனினும், ஆபிரகாம் என்ற ஒரு தனி மனிதர் தன்னுடைய விசுவாச கீழ்படிதலால் ஆண்டவருடைய ஆசீர்வாதத்தையும் கானான் நாட்டையும் பெற்றுக்கொன்டார் என்பதும் பழைய ஏற்பாட்டின் நம்பிக்கை. இதே வேளை இஸ்ராயேலின் கடவுளின் ஆட்சி கானான் நாட்டிற்கு மட்டும் உட்பட்டதல்ல, மாறாக அது வடக்கு கிழக்கு, தெற்கு, மேற்கு, என அனைத்து உலகையும் ஆட்கொள்கிறது என்பதையும் அவர்கள் நம்பினார். இந்த சிந்தனை திருப்பாடல் ஆசிரியரால் மீண்டும் மீண்டும் சொல்லப்படும். விடுதலைப் பயணம் என்ற அனுபவும் இந்த இறையாட்சியுடன் ஒப்பிட்டு நேக்கப்பட வேண்டும். பாரவோன் என்கின்ற மனித மன்னன், அல்லது அவனது தெய்வங்கள், இஸ்ராயேலின் கடவுளால் தோற்றகடிக்கப்பட்டன. இதனால்தான் அவர் இஸ்ராயேல் மக்களை வெளியே கொணர்ந்து, செங்கடலை கடக்க வைத்து, உடன்படிக்கை செய்த வாக்களிக்கப்பட்ட நாட்டில் குடியமர்த்துகிறார்

 இஸ்ராயேலரின் இந்த தனிப்பட்ட இறையியல், சவுல் மற்றும் தாவீது போன்ற அரச வம்சங்களின் வருகையுடன், சற்று மாற்றமடைகிறது. சாதரணமாக இஸ்ராயேல் மக்கள் தங்களுக்கு கடவுளைத்தான் அரசராக ஏற்றுக்கொண்டார்கள். இதனால் அதிகமான விவிலிய ஆசிரியர்கள் சவுலையும், தாவீதையும் அரசர்களாக ஏற்றுக்கொள்வதில் அல்லது அவர்களை விவரிப்பததில் வித்தியாசம் காட்டுகிறார்கள். இந்த மனித அரசர்களின் தோற்றம் ஆபத்தானது, பிழையானது மற்றும் தேவையில்லாதது என்பதையும் காட்டுகின்றனர் (காண்க 2சாமுவேல் 7: 1அரசர் 9). இந்த சிந்தனையும் மெது மெதுவாக மாற்றம் பெறுகிறது. சில புத்தகங்கள் தாவீதை கடவுளுடைய பணியாளர் அல்லது மகனாக காட்டி உண்மையான அரசர் கடவுள் எனவும் காட்டுகின்றனர்


 ஏற்பாட்டிற்கு இடைப்பட்ட காலத்தில் இறையரசு:


 அரசர்களின் தோல்வியும், அடிமை வாழ்வும், பபிலோனிய நாடுகடத்தலும், இஸ்ராயேலர்களின் 

இறையியலில் மிக ஆழமான பாதிப்பை ஏற்படுத்தின. ஆண்டவர் தாவீதிற்கு, அவரின் அரசும் வாரிசும் அழிந்து போகாது என்று வாக்களித்திருந்தார், இப்படியிருக்க எப்படி அவர் சந்ததி அழியலாம் என்ற கேள்வி பலமாக விவாதிக்கப்பட்டது. தாவீதின் நிலையான அரச வம்சம்தான் கடவுளின் அழிக்க முடியாத அதிகாரத்தின் அடையாளமாக பார்க்கப்பட்டபடியால், இந்த இழப்புக்கள் கடவுளின் வார்த்தையையே கேள்வியாக்கிறதோ, என்றும் எண்ணினார்கள். இந்த காலத்தில் தோன்றிய ஆசிரியர்கள் மற்றும் அவர்களின் புத்தகங்கள், கடவுளுடைய அரசோ அல்லது ஆட்சியோ மண்ணக அரசர்கள் மற்றும் நிலங்களில் தங்கியிருப்பதில்லை. மாறாக அது மண்ணக அரசர்கள் மற்றும் நாடுகளையும் தாண்டியது என்கிறார்கள். இஸ்ராயேலின், கடவுளின் ஆட்சி என்பதை இவர்கள் முனணிருத்துகிறார்கள்

தாவீதுடைய வம்சாவளியின் தோல்வியோ, இடப்பெயர்வோ இஸ்ராயேல் கடவுளை 

ஒன்றும் செய்ய முடியாது, மாறாக அவர்தான் இந்த தண்டனைகளை அனுமதித்திருக்கிறார் என்ற புதிய செய்தியை அவர்கள் முன்வைத்தார்கள். ஒரு அரசரோ அல்லது அரசாட்சியோ நிலைக்க வேண்டும் என்றால், அவர்கள் கடவுளின் வார்த்தையை கேட்டு அதற்கு ஏற்ப வாழ வேண்டும், இல்லாவிடில் அழிவார்கள் என்பதையும் அனுபவத்தைக் கொண்டு விளக்கப்பட்டது

 இந்த காலத்தில்தான் இறுதிக்கால சிந்தனைகள் முதன் முதலாக இஸ்ராயேலருக்கு வழக்கில் வந்தன. அதாவது இறுதிக்காலத்தில் இஸ்ராயேலின் அரசர் முழு உலகையும் தனதாக்கப்போகிறார், அது கடவுளின் நாள் எனப்படும், அந்நாளில் அனைத்து நாடுகளுக்கும் அவர் தீர்ப்பளிப்பார் என்ற சிந்தனையும் வருகிறது. பின்னர் அவர் யூதேயாவையும், தாவீதின் அரசாட்சியையும் என்றென்றைக்கும் நிலைநிறுத்தப் போகிறார் என்ற சிந்தனையும் உருவாகின. இந்த சிந்தனையுன் மெசியாவின் வருகையும் உருவானது. இந்த மெசியா, அபிசேகம் செய்யப்பட்டவர் அவர்தான் கடவுளின் அரசை நிறுவப்போகிறவர் என்று ஆழமாக நம்பப்பட்டது. கடவுளின் எதிரிகள்தான் யூதேயாவின் அல்லது இஸ்ராயேலின் எதிரிகள் என்றும் அவர்களுக்கு இந்த மெசியா தண்டனை அளிப்பார் என்றும் காத்திருக்க தொடங்கினர்

 இறையரசுதான் மெசியாவின் அரசு அதனை அவர் கானானில் தொடங்குவார், அங்கு அடாத்தாக குடியிருப்பவர்களை அவர் விரட்டுவார், அவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்கும் என்பதையும் இக்கால புத்தகங்கள் காட்டுகின்றன


 புதிய ஏற்பாட்டு காலத்தில் இறையரசு


 இஸ்ராயேலருடைய இறையரசு பற்றிய சிந்தனைக்கு, இஸ்ராயேலில் உரோமையரின் ஆட்சி மிகவும் இடைஞ்சலாக இருந்தது. இதனை எதிர்க்கவே மக்கபேயர் பல யுத்தங்களைச் செய்தனர். மக்கபேயருடைய சண்டைகள் முதலில் கிரேக்கர்களுக்கு எதிராக இருந்து பின்னர் உரோமையர்களுக்கு எதிராகவும் இருந்தது. சந்தர்ப்பத்தை சாதகமாக பாவித்த எரோதியர் குடும்பம், உரோமையரின் உதவியுடன் ஆட்சியைக் கைப்பற்றி, சீசரை ஏற்றுக்கொண்டு அரசாள தொடங்கினர். எரோது தாவீதின் வழிமரபில் வராத முழுமையில்லாத ஒரு யூதன். இந்த நிகழ்வுகளும் யூதர்களின் இறையரசு 

மற்றும் கடவுளின் அதிகாரம் என்பதில் பல கேள்விகளை எழுப்பின. இந்த நிகழ்வுகள் ஆண்டவருடைய நாள் மற்றும் இறுதி தண்டனை என்ற சிந்தனையை வேகப்படுத்தின. இயேசு ஆண்டவர் 

பணிவாழ்வை தொடங்கிய காலத்தில், இறுதி நாள் பற்றிய சிந்தனைகள் ஏற்கனவே உச்சத்தை அடைந்திருந்தன. சீசருடைய ஆதிக்கம் பாலஸ்தீனாவை மட்டுமல்ல அதிகமான மத்திய கிழக்கு பிரதேசங்களை ஆட்கொள்ள முயன்ற வேளை, பல உரோமைய மாகாணங்கள் சீசரை அரசியல் தலைவர் என்பதையும் தாண்டி கடவுளாக பார்க்க முயன்றனர்

இது இஸ்ராயேலருக்கு பெரிய சவால். கடவுளால் மட்டும்தான் இந்த உரோமைய ஆதிக்கத்தில் 

இருந்து வாக்களிக்கப்பட்ட நாட்டையும், கடவுளின் சொந்த மக்களையும் காக்க முடியும் என்ற சிந்தனை வளர்ந்தது

  இப்படியான காலப்பகுதியில்தான் திருமுழுக்கு யோவான் வந்து இறையரசு வந்துவிட்டது மற்றும் மெசியா வந்துகொண்டிருக்கிறார் என்று முழங்கினார். இது யூதர்களின் இதயங்களை கவர்ந்து, புருவங்களை உயர்த்தியது. உடனடியாக இயேசு பொதுவில் தோன்றி நேரம் வந்துவிட்டது, இறையரசு ஏற்கனவே தொடங்கிவிட்டது என்று போதிக்க தொடங்கினார். இயேசுவின் போதனைகளில் இறையரசு மத்திய செய்தியாக அமைந்தது. அனைத்து செய்திகளும் இந்த மையச் செய்தியை சுற்றியே அமைக்கப்பட்டன. இதன் காரணமாக இயேசு அனைவரினதும் அவதானங்களை ஈர்த்தார். இந்த இறையரசை அமைப்பது மெசியாவின் கடமை மட்டுமல்ல அனைவரினதும் என்று சொல்லி விசுவாசத்தில் கீழ்ப்படிவை எதிர்பார்த்தார். இயேசுவுடைய போதனையுடன் இறையரசு என்பது முழுமையான ஒரு ஆன்மீக அரசு என்ற அடையாளத்தை பெறுகிறது. இதனை சில ஆய்வாளர்கள் எதிர்கிறார்கள் சிலர் ஆதரிக்கிறார்கள். யூதர்களுடையதும் கிறிஸ்தவர்களுடையதும் 

இறையரசு சிந்தனை இந்த இடத்துடன் இரண்டு விதமான பாதைகளில் செல்லத் தொடங்குகின்றது.

  இயேசுவுடைய அநேகமான உவமைகள் இறையரசை தன் மக்களுக்கு புரிய வைப்பதற்கான முயற்ச்சிதான். இந்த உவமைகள் சாதாரண எளியவர்களின் நாளாந்த கதைகளாக இருந்த படியால் அதிகமானவர்களால் இலகுவாக புரியப்பட்டன. ஆண்டவருடைய உயிர்ப்பிற்குப் பின்னர், அவருடைய இரண்டாம் வருகைதான் இறையரசின் நிறைவு என எதிர்பார்க்கப்பட்டது. ஆண்டவருடைய இரண்டாம் வருகை காலம் தாழ்த்தவும், அதனை பற்றி சரியான நேரக்கணிப்புக்களை கொடுக்க முடியாமல் போகவும், புதிய ஏற்பாட்டு ஆசிரியர்கள் அதனை கணிக்க முடியாது என்கின்றனர்

 முடிவாக, இறையரசு என்கின்ற சிந்தனை இன்றுவரை விவிலிய ஆய்வாளர்களின் தூக்கத்தை கலைக்கும் முக்கியமான சிந்தனையாக இருக்கிறது. இருப்பினும் இயேசுவுடைய பிறப்பின்போது இறையரசு ஏற்கனவே முழுமையாக நிறைவேறிவிட்டது என்று சில கிறிஸ்தவ ஆய்வாளர்கள் நம்புகின்றனர். இப்பபோதைய தேவை தனிப்பட்டவர்களின் மீட்பு மட்டுமே என்றும் வாதிடுகின்றனர்.  


சாலமோனின் ஞானம் 12,13.16-19

13ஏனெனில் உம்மைத் தவிர வேறு கடவுள் இல்லை. எல்லாவற்றின்மீதும் நீர் கருத்தாய் இருக்கிறீர். முறைகேடாக நீர் தீர்ப்பு வழங்குவதில்லை என்பதை யாரிடம் காட்டவேண்டும்? 14நீர் தண்டித்தவர்கள் சார்பாக உம்மை எதிர்த்து நிற்க எந்த மன்னராலும் தலைவராலும் முடியாது. 15நீர் நேர்மையுள்ளவர்; அனைத்தையும் நீதியோடு ஆண்டுவருகின்றீர். தண்டிக்கத்தகாதவர்களைத் தண்டிப்பது உமது ஆற்றலுக்கு அப்பாற்பட்டது என நீர் அறிவீர். 16உமது ஆற்றலே நீதியின் ஊற்று. அனைத்தின்மீதும் உமக்குள்ள ஆட்சியுரிமை அனைத்தையும் வாழும்படி விட்டு வைக்கிறது. 17மனிதர்கள் உமது வலிமையின் நிறைவை ஐயுறும்போது நீர் உம்முடைய ஆற்றலைக் காட்டுகிறீர்; அதை அறிந்திருந்தும் செருக்குற்றிருப்போரை அடக்குகிறீர். 18நீர் ஆற்றல் மிக்கவராய் இருப்பதால் கனிவோடு தீர்ப்பு வழங்குகிறீர்; மிகுந்த பொறுமையோடு எங்களை ஆள்கிறீர். ஏனெனில் நீர் விரும்பும்போதெல்லாம் செயல்புரிய உமக்கு வலிமை உண்டு. 19நீதிமான்கள் மனிதநேயம் கொண்டவர்களாக இருக்கவேண்டும் என்பதை இச்செயல்கள் வாயிலாக உம் மக்களுக்குக் கற்றுக் கொடுத்தீர்; உம் மக்களை நன்னம்பிக்கையால் நிரப்பினீர்; ஏனெனில் பாவங்களிலிருந்து மனமாற்றம் அருள்கிறீர்.


 சாலமோனின் ஞானம் என்ற நூல் கிரேக்க செப்துவாஜின்து மொழியில் எழுதப்பட்ட படியால் 

இதனை எபிரேய விவிலியத்தில் காணமுடியாது. இதனை எபிரேயர்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டாத நூலாகவே கருகின்றனர். கத்தோலிக்கருக்கு இந்த நூல் இணைத்திருமுறை நூல். ஞான நூல்கள் என்ற பிரிவில் இந்த நூல் இடம் பெறுகிறது. இந்த நூலை மன்னர் சாலமோனுக்கு அர்ப்பணித்தாலும், இதனை அந்த மன்னர்தான் எழுதினார் என்று நிரூபிப்பது கடினமாக இருக்கும். சாலமோன், ஞானத்தில் (மெய்யறிவில்) சிறந்து விளங்கியவர். ஆகவே மெய்யறிவு நூல்களை அவருக்கு அர்ப்பணிப்பது அக்காலத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு மரபு. இந்த வகையாக, நூல்களுக்கு அதிகாரமும், பிரசித்தமும் பெற்றுக்கொடுக்கப்பட்டது. இதனைப் போலத்தான் திருப்பாடல்கள் தாவீது அரசருக்கும், சட்ட புத்தகங்கள் மோசேக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது போல். இந்த புத்தகத்திலுள்ள ஒன்பதாவது அதிகாரம், 1அரசர்கள் 3,6-9 உள்ள சாலமோனின் செபத்தை ஒத்திருப்பதால் இந்த புத்தகத்திற்கும் சாலமோனுக்குமான உறவு நோக்கப்படுகிறது. சாலமோனின் ஞானம் என்று இந்த புத்தகம் அறியப்பட்டாலும், சாலமோனின் பெயர் இந்த புத்தகத்தில் இடம்பெறவில்லை. வல்கேற் இந்த புத்தகத்தை மெய்யறிவு புத்தகம் என்றே அழைக்கிறது. தூய ஜெரோமுடைய விரும்பத்தக்க புத்தகமாக இந்த நூல் இருந்திருக்கிறது

 இந்த புத்தகத்தின் காலத்தை அறிவது இலகுவாக இருக்காது. அநேகமாக இந்த புத்தகம் முதலாம் நூற்றாண்டின் (கி.பி) இறுதிப் பகுதியில் எழுதப்பட்டிருக்க வேண்டும். கிரேக்கர்களின் ஆதிக்கம் இஸ்ராயேல் நாட்டில் இருந்தபோது இந்த இந்த புத்தகம் யூதர்களின் விசுவாசத்தை தக்க வைப்பதை நோக்கமாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கலாம். இதன் ஆசிரியர் நிச்சயமாக ஒரு பாரம்பரிய யூதர், அவர் செப்துவாயிந்து மொழிபெயர்ப்பில் வேலை செய்திருக்க வேண்டும். இவர் எகிப்திய அலெக்சாந்திரியாவில் இருந்த பிரபலான யூதர்களில் ஒருவராக இருந்திருக்க வேண்டும். இதனால் புலம்பெயர் யூதர் ஒருவரின் புத்தகம் என இதனை சிலர் வரையறுக்கின்றனர். பல ஆசிரியர்கள் இந்த புத்தகத்திற்கு இருந்திருக்க வேண்டும் எனவும், இந்த புத்தகம் முதலில் அரமேயிக்கத்தில் எழுதப்பட்டது என்று சிலர் வாதிட்டாலும், அவைகளுக்கு அக புற சான்றுகள் மிக குறைவாகவே இருக்கின்றன

 இலக்கிய வகையில் இந்த புத்தகம் மெய்யறவு புத்தக வகையைச் சார்ந்தது, முக்கியமாக கிரேக்க வகையைச் சார்ந்தது. இருப்பினும் எபிரேயர்களின் ஆழமான நம்பிக்கைகள், பாரம்பரியங்கள், இலக்கிய வரிவடிவங்கள் இந்த புத்தகத்தில் நிறைவாகவே உள்ளன. ஆய்வாளர்கள் இந்த புத்தகத்தை மூன்று பிரிவுகளாகவும் பிரிக்கின்றனர். இன்றைய வாசகம் 12ம் அதிகாரத்திலிருந்து எடுக்கப்படுகிறது. இந்த பிரிவு கடவுளுடைய அருளிரக்கத்தை விளக்குவதாக அமைகிறது


.13: கடவுளைத் தவிர வேறு தெய்வங்கள் இல்லை என்பதை எபிரேய சாயலில் சொல்கிறார் ஆசிரியர். இந்த ஒரே கடவுள் அனைத்து மக்களையும் கவனிக்கிறவர் என்றும் சொல்கிறார். இந்த ஒரே கடவுள் தன் தீர்ப்பில் நீதிவழுவுவதில்லை என்பதை யாரிடம் தெரிவிக்க தேவையில்லை என்கிறார். அதாவது இவர் ஒருவர்தான் கடவுள், அவர் நீதி வழுவுவதில்லை என்பதையும் காட்டுகிறது


.14: கடவுளை யாரும் கேள்விகேட்க முடியாது அவர் தீர்ப்புக்கள் தவறக்கூடியவை அல்ல. அவரை பரிசோதிக்க எந்ந மன்னருக்கோ அல்லது ஆட்சியாளருக்கு அருகதை கிடையாது என்கிறார். அதேவேளை கடவுள் தண்டிக்க இருக்கிறவர்களையும், யாராலும் காப்பாற்ற முடியாது என்கிறார்


.15: மீண்டுமாக, இந்த வரியிலும் கடவுளின் நீதியும், அவர் தண்டிக்க இருக்கிறவர்களின் குற்றத்தன்மையும் காட்டப்படுகிறது. தண்டிக்கப்பட தகாதவர்களை கடவுள் தண்டிக்கமாட்டார் என்கிறார் அதாவது, கடவுள் தண்டிக்கிறவர்கள் உண்மையில் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்கிறார்

 

.16: நீதியின் ஊற்றை கடவுளின் ஆற்றலாகக் காண்கிறார். கடவுள் இல்லாத நீதி உண்மையான நீதியாக இருக்காது, அப்படியிருந்தாலும் அது ஒரு சாராருக்கான நீதியாகத்தான் இருக்கும். இதனை இந்த மெய்யறிவுவாதி நன்கு அறிந்திருக்கிறார் போல. நீதிக்கு (δίκαιος) திகைய்யோஸ் என்ற சொல் பாவிக்கப்பட்டுள்ளது. இந்தச்சொல் விவிலியத்தில் மிக ஆழமான அர்த்தங்களைக் கொண்டுள்ள சொல். ஆண்டவருடைய ஆட்சியுரிமை, அனைத்தையும் வாழும்படி செய்கிறது என்கிறார். மிகவும் ஆழமான வரி


.17: மனிதர் ஐயம் கொள்கின்றவேளை கடவுள் தன் வல்லமையைக் காட்டுகிறார் என்று சொல்கிறார். இதனால் மனிதர்கள் ஐயம் கொள்ளத் தேவையில்லை அத்தோடு கடவுள் நிச்சயமாக வல்லமைமிக்கவர் என்ற செய்தி வெளிப்படுகிறது. இந்த நியதியை ஏற்றுக்கொள்ளாதவர்கும் தண்டனை வழங்கப்படுகிறது.


.18: கனிவோடு தீர்ப்பு வழங்குபவர், ஆற்றல் மிக்கவர் (ἐν ἐπιεικείᾳ κρίνεις என் எபிக்கெய்யா கிறிநெய்ஸ்- பொறுமையில் நீதிவழங்குகின்றீர்). இந்த பண்பைதான் கடவுள் சாலமோனுக்கு வழங்கியிருந்தார். இந்த அர்த்தத்தை இந்த வரியின் மற்றய பகுதிகள் மீள மீள அறிக்கையிடுகின்றன. இது எபிரேய கவிநடையின் சிறப்பம்சம். கடவுள் விரும்பிய 

தெல்லாம் செய்யக்கூடியவராக இருந்தாலும், பொறுமைமிக்கவராய் இருக்கிறார் என்பது ஆசிரியரின் செய்தி


.19: இந்த வரி, முன்னைய வரிகளுக்கு முடிவுரை போல அமைகிறது. அதாவது கடவுளின் நீதிவழங்கும் தன்மையை தியானித்தவர்கள், தாங்களும் அப்படியே வாழ எதிர்பார்க்கப்படுகிறார்கள். நீதிமான்கள் மனிதநேயம் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்று தமிழ் விவிலியம் வாசிப்பதை, கிரேக்கம் ὅτι δεῖ τὸν δίκαιον εἶναι φιλάνθρωπον (ஹோடி தெய் டோன் திகைய்யோன் எய்னாய் பிலான்த்ரோபொன்- நீதிமானகள் சகோதர இருக்கமுள்ளவர்களாய் இருப்பார்களாக) என்று கொண்டுள்ளது. மேலும் கடவுள் மக்களை நன்நம்பிக்கையில் நிரப்புகிறார் என்கிறார் ஆசிரியர். இதற்கு, கடவுள் பாவத்திலிருந்து மன்னிப்பு அருள்கிறார் என்ற ஒத்த கருத்து சிந்தனையையும் முன்வைக்கிறார்


திருப்பாடல் 86

உதவிக்காக வேண்டல்

(தாவீதின் மன்றாட்டு)


1ஆண்டவரே! எனக்குச் செவிசாய்த்துப் பதிலளியும்; ஏனெனில், நான் எளியவன்; வறியவன்

2என் உயிரைக் காத்தருளும்; ஏனெனில், நான் உம்மீது பற்றுடையவன்; உம் ஊழியனைக் காத்தருளும்; நீரே என் கடவுள்! நான் உம்மீது நம்பிக்கை கொண்டுள்ளேன்

3என் தலைவரே! என் மேல் இரக்கமாயிரும்; ஏனெனில், நான் முழுவதும் உம்மை நோக்கி மன்றாடுகிறேன்

4உம் அடியானின் மனத்தை மகிழச் செய்யும்; என் தலைவரே! உம்மை நோக்கி என் உள்ளத்தை உயர்த்துகின்றேன்

5ஏனெனில் என் தலைவரே! நீர் நல்லவர்; மன்னிப்பவர்; உம்மை நோக்கி மன்றாடும் அனைவருக்கும் பேரன்பு காட்டுபவர்

6ஆண்டவரே, என் வேண்டுதலுக்குச் செவிகொடும்; உம் உதவியை நாடும் என் குரலைக் கேட்டருளும்

7என் துன்ப நாளில் உம்மை நோக்கி மன்றாடுகின்றேன்; நீரும் எனக்குப் பதிலளிப்பீர்

8என் தலைவரே! தெய்வங்களுள் உமக்கு நிகரானவர் எவருமில்லை. உமது செயல்களுக்கு ஒப்பானவை எவையுமில்லை

9என் தலைவரே! நீர் படைத்த மக்களினத்தார் அனைவரும் உம் திருமுன் வந்து உம்மைப் பணிவர்; உமது பெயருக்கு மாட்சி அளிப்பர்

10ஏனெனில், நீர் மாட்சி மிக்கவர்; வியத்தகு செயல்கள் புரிபவர்; நீர் ஒருவரே கடவுள்

11ஆண்டவரே, உமது உண்மைக்கேற்ப நான் நடக்குமாறு உமது வழியை எனக்குக் கற்பியும், உமது பெயருக்கு அஞ்சுமாறு என் உள்ளத்தை ஒருமுகப்படுத்தும்

12என் தலைவரே! என் கடவுளே! என் முழு இதயத்தோடு உம்மைப் புகழ்வேன்; என்றென்றும் உமது பெயருக்கு மாட்சி அளிப்பேன்

13ஏனெனில், நீர் என்மீது காட்டிய அன்பு பெரிது! ஆழமிகு பாதாளத்தினின்று என்னுயிரை விடுவித்தீர்

14கடவுளே! செருக்குற்றோர் எனக்கெதிராய் எழுந்துள்ளனர்; கொடியோர் கூட்டம் என் உயிரைப் பறிக்கப் பார்க்கின்றது அவர்களுக்கு உம்மைப்பற்றிய நினைவே இல்லை

15என் தலைவரே! நீரோ இரக்கமிகு இறைவன்; அருள் மிகுந்தவர்; விரைவில் சினமுறாதவர்; பேரன்பும் உண்மையும் பெரிதும் கொண்டவர்

16என்னைக் கண்ணோக்கி என்மீது இரங்கும்; உம் அடியானுக்கு உம் ஆற்றலைத் தாரும்; உம் அடியாளின் மகனைக் காப்பாற்றும்

17நன்மைத்தனத்தின் அடையாளம் ஒன்றை எனக்கு அருளும்; என் எதிரிகள் அதைக் கண்டு நாணுவர்; ஏனெனில், ஆண்டவராகிய நீர்தாமே எனக்குத் துணைசெய்து ஆறுதல் அளித்துள்ளீர்.


 தனி மனித புலம்பல் பாடலாக இதனை ஆய்வாளர்கள் வர்ணிக்கின்றனர். இதன் ஆசிரியராகவும் தாவீதை ஏற்குமளவிற்கு இதில் பல அக சான்றுகள் கிடைக்கின்றன. தாவீது கடவுளை தன் தலைவரை பல தடவைகளில் விழிக்கிறார். கடவுளுக்கு கடவுளின் தன்மைகளை விளக்கி அவரை புழக்கிறார். இது எபிரேய புலம்பல் பாடல்களின் மிக முக்கியமான பண்பு. இதனுடைய அகப் பண்புகளை மட்டுமே கொண்டு இதனை தாவீதுதான் எழுதினார் என்ற முடிவிற்கு வந்துவிடமுடியாது.


.1: முதலாவது வசனம் இந்த பாடலை தாவீதுடன் தொடர்பு படுத்துகிறது (תְּפִלָּ֗ה לְדָ֫וִ֥ד தெபிலாஹ் லெதாவித்). இதனுடைய சரியான அர்த்தத்தை கண்டுபிடிப்பது கடினமாக இருக்கும். இதனை தாவீதிற்கான பாடல், அல்லது தாவிதின் பாடல் எனவும் எடுக்கலாம். ஆசிரியர் தன் பாடலுக்கு செவிசாய்க்கும் படியாகக் கேட்கிறார், ஏனெனில் தன்னை எளியவனும் வறியவனும் என்கிறார். இது தாவீதாக இருந்தால் இந்த வார்த்தைகளின் அர்த்தம் சாதராண வறுமையாகவும், எளிமையாகவும் 

இருக்க முடியாது (עָנִי 'அனி- வறியவன் நான்: אֶבְי֣וֹן אָֽנִי 'எவ்யோன் 'அனி- தேவையில் இருப்பவன் நான்). 


.2: இந்த வரியில், ஆசிரியர் தன்னுயிரைக் காத்திடும் படி கேட்பது, அவர் ஏதோ உயிர் ஆபத்தில் 

இருப்பது போல தோன்றுகிறது. இந்த வரி எபிரேய கவிநடையில் இரண்டு தடவை உயிரைக் காத்திடும் படியாக கேட்கிறது. தாவீது தன் எதிரிகளிடமிருந்து எப்போதும் பாதுகாப்பாகவே இருந்தார்

ஆனால் அவருக்கு உயிர் ஆபத்து கொடுத்தவர்கள், சவுல் அரசராகவும், அல்லது தாவதின் சொந்த பிள்ளைகளாகவுமே இருக்கின்றனர்


.3: இந்த வரியில் தாவீது கடவுளை 'என் தலைவரே' என்று விழிக்கிறார் (אֲדֹנָי 'அதோனாய்- என் தலைவர்). இந்த வரி கடவுளுக்கு எபிரேய விவிலியம் பாவிக்கும் மிக முக்கியமானதும், இதயத்திற்கு 

மிக நெருக்கமானதுமான வரி. இந்த திருப்பாடலில் இந்த அழகான சொல் பல முறைகளில் வருகிறது. இதிலிருந்து பாடலாசிரியருக்கும் கடவுளுக்கும் இடையிலிருந்து ஆழமான புரிந்துணர்வு புலப்படுகிறது. ஆசிரியர் தான் கடவுளை நோக்கி நாள் முழுவதும் மன்றாடுவதாகச் சொல்கிறார் (אֶקְרָ֗א כָּל־הַיּוֹם 'எக்ரா' கோல்-ஹய்யோம்- கூப்பிடுகிறேன் நாள் முழுவதும்). 


.4: மீண்டுமாக கடவுளை தலைவரே என்கிறார், தன்னை அடியான் என்கிறார். தன் மனத்தை மகிழச் செய்ய மன்றாடுகிறார். இதிலிருந்து இவர் பெரும் துன்பத்திலிருக்கிறார் என்பதும், மனித இன்பங்கள் இவருக்கு மகிழ்ச்சியைக் கொடுக்காது என்பதையும், கடவுள் ஒருவர்தான் இவருக்கு 

மகிழ்ச்சியைக் கொடுக்கக்கூடடியவர் என்பதும் புலப்படுகிறது. (עַבְדֶּךָ 'அவ்தெகாஹ்- உம் பணியாளன்


.5: இன்னெரு தடவை கடவுள் தலைவர் என அழைக்கப்படுகிறார். அத்தோடு இந்த வரியில் கடவுளுடைய மிக முக்கியமான பண்புகளான, நல்லவர் (טוֹב தோவ்), மன்னிக்கிறவர் (סַלָּח சல்லாஹ்), பேரன்பு காட்டுகிறவர் (רַב־חֶ֝֗סֶד ராவ்-ஹெசெத்) போன்றவை பாடப்படுகின்றன. இந்த பண்புகளையும் ஆசிரியர் தன்னுடைய நல்ல அனுபவங்களாக கொண்டிருந்திருக்க வேண்டும். இதனால்தான் அவற்றை தன்னுடைய பழைய அனுபவமாகக் காட்டுகிறார்


.6: தன்னுடைய வேண்டுதலுக்கு செவிகொடுக்குமாறு மன்றாடுகிறார். தமிழில் இந்த பிரிவு அழகாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது, எபிரேய விவிலியமும் இதனைத்தான் வரிக்கு வரி காட்டுகிறது (הַאֲזִינָה יְהוָה תְּפִלָּתִי 'அட்சிநாஹ் அதோநாய் தெபிலாதி- செவிகொடுப்பிராக கடவுளே என் மன்றாடுக்கு). 


.7: முதல் வரியில் மன்றாட்டாகக் கேட்டவர் இந்த வரியில் அதற்கான நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார். துன்பநாளில் தான் மன்றாடுவதாகவும், கடவுள் நிச்சயமாக பதிலளிப்பார் எனவும் நிச்சயமாகச் சொல்லகிறார். இங்கே எதிர்காலம் போல தோன்றினாலும், அது நம்பிக்கை காலமாக சித்தரிக்கப்படுகிறது. துன்ப நாள் என்பது இந்த வரியில் விளக்கப்பட்வில்லை, ஆனால் இந்த பாடலின் பல வரிகள் ஆசிரியருடை துன்பத்தை விளக்க முயல்கின்றன (בְּיוֹם צָרָתִי பெயோம் ட்ஸ்ஆர்ஆதி). 


.8: தலைவர் என்ற சொல்லை மீண்டும் பாவித்து (אֲדֹנָי 'அதோனாய்), கடவுளை தெய்வங்களோடு ஒப்பிடுகிறார். யார் இந்த தெய்வங்கள் என்பது புலப்படவில்லை. முதல் ஏற்பாட்டில் பல காலமாக பிற தெய்வங்களைப் பற்றிய சிந்தனைகள் இருந்திருக்கிறது என்பதை இந்த வரி அழகாகக் காட்டுகிறது. தெய்வங்கள் என்பதற்கு எலோகிம் (אֱלֹהִ֥ים 'எலோஹிம்) என்ற சொல் பயன்படுகிறது

இந்த சொல் விவிலியத்தில் பல வேளைகளில் கடவுளையும் குறிக்கிறது. இருப்பினும் ஆசிரியர் மற்ற தெய்வங்களை நம்பினார் என்று சொல்ல முடியாது, மாறாக அவருக்கு மற்றய தெய்வங்கள் அல்லது அவர்களின் வழிபாடுகளைப் பற்றி தெரிந்திருக்கிறது எனலாம். தன் கடவுளின் செயல்களை மையப்படுத்தியே மற்ற தெய்வங்களை பற்றி பேசுகிறார்


.9: தன்னுடைய தலைவராகிய கடவுள் மக்களித்தார் அனைவரையும் படைத்தவர் என்கிறார்

இஸ்ராயேலின் கடவுள் இஸ்ராயேலை உருவாக்கியவர் என்பதிலிருந்து அவர்தான் சகல மக்களினங்களையும் உருவாக்கியவர் என்பதை ஏற்றுக்கொள்கிறார் (כָּל־גּוֹיִם ׀ אֲשֶׁר עָשִׂיתָ கோல்-கோயோம் 'அஷேர் 'ஆசிதா). இன்றை மதவெறி பிடித்தவர்களுக்கு இந்த வரி நிச்சயமாக விளங்க வேண்டும். ஒன்றே குலம், ஒருவரே தேவன் என்ற தமிழ் பழமொழி நினைவிற்கு வருகிறது

 இந்த, அனைத்து மக்களினமும் கடவுள் முன் வருகின்றனர், பணிகின்றனர், அத்தோடு மாட்சி அளிக்கின்றனர். இந்த மூன்று செயற்பாடுகளும் வழிபாட்டில் மிக முக்கியமானவை


.10: மக்களினத்தாரின் செயற்பாடுகள் மூலமாக செய்தி ஒன்றை சொல்கிறார், அதாவது கடவுள் மாட்சி மிக்கவர் (גָדוֹל אַתָּה காதோல் 'அதாஹ்), வியத்தகு செயல்கள் புரிபவர் (עֹשֵׂה נִפְלָאוֹת 'ஓசேஹ் நிப்லா'ஓத்), 

மற்றும் அவர் ஒருவரே கடவுள் (אֱלֹהִים לְבַדֶּךָ 'எலோஹிம் லெவாதெகாஹ்). 


.11: ஆசிரியர் தன்னுடைய துன்பமான காலத்திலும், அழகான விசுவாசத்தையும் கீழ்படிவையும் வெளிபப்டுத்துகிறார். கடவுளின் உண்மைக்கேற்ப தான் நடக்குமாறு வழிநடத்தச் சொல்லி கேட்கிறார். ஆண்டவருடைய வழி (דַּרְכֶּךָ தர்கேகா) என்பது, அவருடைய அறநெறியைக் குறிக்கிறது. இது ஆண்டவருடைய கட்டளைகள், விழுமியங்கள் போன்றவற்றையும் குறிக்கும். உம்முடைய பெயருக்கு என் இதயம் பயப்படுமாறு செய்தருளும் என்று இந்த வரியின் இரண்டாம் பாகம் வாசிக்கிறது. பயப்படச்செய்தல் என்பது அச்சத்தை அல்ல மாறாக மரியாதை மற்றும் நம்பிக்கையைக் குறிக்கிறது (לְיִרְאָה லெயிர்'ஆஹ்- பயப்பட). 


.12: இந்த வரி ஆசிரியரின் ஆழமான விசுவாசத்ததைக் காட்டுகிறது. தன் முழுமையான 

இதயத்தோடு அவர் கடவுளை புகழ்வதாகச் சொல்கிறார். மனித அரசர்கள், தங்கள் வல்லமையின் பொருட்டு, தாங்கள் மனிதர்கள் என்பதை மறந்து, தங்களை தெய்வங்களாக கருதிய அந்த நாட்களில், இந்த ஆசிரியர் (தாவீதாக இருந்தால்), கடவுளை வல்லமையுடையவராக ஏற்றுக்கொண்டு, அவரை புகழ்வதில் கருத்தாய் இருப்பது விசேடமான விசுவாசம். பெயருக்கு மாட்சி அளித்தல் என்பது கடவளுக்கு மாட்சி அளித்தல் என்பததைக் குறிக்கிறது


.13: ஆரம்பத்தில் தான் மிகப் பெரும் ஆபத்திலிருந்ததாகக் காட்டிய ஆசிரியர் இப்போது கடவுள் தன்னை ஆழத்திலிருந்து மீட்டதாகச் சொல்கிறார். இது இவருடைய பழைய அனுபவமாக இருக்கலாம்

நிகழ்கால துன்பத்தில், பழைய கால அனுபவத்ததை நினைத்துப் பாடி, கடவுளைப் புகழ்வது எபிரேய கவிநடையின் மிக முக்கியமான பண்பு. இது புலம்பலில் வருகின்ற புகழ்;ச்சி. பாதாளத்தை குறிக்க சீயோல் (שְּׁאוֹל ஷெ'ஓல்) என்ற சொல் பாவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விவிலியம் பல அர்த்தங்களைத் தருகிறது. இதனை கீழ் உலகம், நீதியில்லாத தன்மை, கடவுள் இல்லாத இடம், பாவ நிலை  என்று அர்த்தப்படுத்தலாம். மரணத்தின் பின்னர் பாவிகளின் ஆன்மாக்கள் இந்த இடத்திற்கு செல்வதாக எபிரேயர்களால் தெளிவில்லாமல் நம்பப்பட்டது. கிரேக்க காலத்தில் இந்த இடம், நரகம் என்ற இடத்துடன் ஒப்பிடப்பட்டது


.14: முதல் தடவையாக தன்னுடைய எதிரிகளை விவரிக்கிறார். இவர்கள் தனக்கெதிராக எழுந்த செருக்குற்றோர் என்கிறார். இவர்களை கொடியோர் கூட்டம் எனவும் அவர்கள் தாவீதின் உயிரை பறிக்க தேடியவர்கள் என்றும் சொல்கிறார். அவர்கள் கடவுள் நினைவு அற்றவர்கள் அதாவது பாவிகள் என்பது இவருடைய வரைவிலக்கணம்

 ஆய்வாளர்கள் இந்த வரிக்கு, தாவீதின் மகன் அப்சலோமின் புரட்சியை பின்புலமாகக் காட்டுகிறார்கள். அப்சலோம் தாவீதிற்கு எதிராக கிளர்;ச்சி செய்து இரத்தமில்லாமல் எருசலேமை கைப்பற்றினான். தாவீது வெறும் காலால் நாட்டைவிட்டு ஓடினார். போகும் வழியில் சவுலுடைய உறவினர் ஒருவரால் தாவீது கடுமையான வசைமொழிக்கு உள்ளானார். இது தாவீதிற்கு பயங்கர மனவுளைச்சலைக் கொடுத்திருக்கும் (காண்க 2சாமுவேல் 16-17). இந்த வரியில் யாரை தாவீது செருக்குற்றோராகவும், கடவுள் பயமற்றவராகவும் காண்கிறார் என்பது தெளிவில்லை. அப்சலோம் தாவீதை துரத்தினாலும், தாவீது அப்சலோமில் மிகுந்த அன்பு வைத்திருந்தார் என்பது நினைவுகூரப்பட வேண்டும்


.15: மீண்டுமாக கடவுளை விவரிக்கிறார். கடவுள் தலைவர் எனப் பெயரிடப்படுகிறார் (אֲדֹנָי 'அதோனாய்). இரக்கமுள்ள இறைவனாகப் பார்க்கப்படுகிறார் (אֵל־רַחוּם 'எல்-ராஹும்- இரக்கமுள்ள தெய்வம்). பழைய ஏற்பாட்டில் கடவுளுக்கு கொடுக்கப்பட்டுள்ள அழகான சொற்களில் இதுவும் ஒன்று. அவர் அருள் உள்ளவராகப் பார்க்கப்படுகிறார் (חַנּוּן ஹனூன்). மெதுவாக சினமுறுவபர் கடவுள் என்று சொல்லப்படுகிறது. சினத்தை குறிக்க மூக்கு என்ற சொல் பயன்பட்டது, ஏனெனில் மூக்கில்தான் சினம் வருகிறது என்று எபிரேயர்கள் நம்பினார்கள் (אֶרֶךְ אַ֝פַּיִם 'ஏரெக் 'ப்பாயிம்- மூக்கில் மெதுமை, மெதுவான கோபம்). கடவுள் பேரன்பும், உண்மையும் கொண்டவராகவும் பாடப்படுகிறார் (רַב־חֶ֥סֶד וֶאֱמֶֽת ராவ்-ஹெசெத் வெ'எமெத்). இந்த வரி, விவிலியத்தில் கடவுளுடைய மிக முக்கியமான பண்புகள் அனைத்தையும் விவரித்துவிட்டது


.16: தாவீது தன்னை கடவுளின் அடியாளின் மகன் என்கிறார் (בֶן־אֲמָתֶֽךָ வென்- 'அமாத்தாகா- உம் கைம் பெண்ணின் மகன்). எபிரேயர்கள் தங்களை விவரிக்கும் போது, தம் பெற்றோரையும் விவரிக்கிறார்கள். ஆசிரியர் தன் தாயை இங்கே கொண்டுவருவதன் மூலமாக இந்த கடவுளின் விசுவாசதிற்கு தன் தாயும் பொறுப்பு என்கிறார்


.17: இந்த வரி இறுதியான வேண்டுதலாக அமைகிறது. அடையாளம் ஒன்றைக் கேட்கிறார், அது நன்மைத்தனத்தின் அடையாளமாக இருக்க வேண்டும் என்கிறார். இதன் நோக்கம் அவரது எதிரிகள் வெட்கப்பட வேண்டும் என்பதாகும். எதிரிகள் வெட்கப்பட வேண்டும் என்பது எதிரிகளுக்கான முற்கால தண்டனைகளில் ஒன்றாகப் பார்க்கப்பட்டது


உரோமையர் 8,26-27

26இவ்வாறு தூய ஆவியார் நமது வலுவற்ற நிலையில் நமக்குத் துணைநிற்கிறார்; ஏனெனில், எதற்காக, எப்படி நாம் இறைவனிடம் வேண்டுவது என்று நமக்குத் தெரியாது; தூய ஆவியார் தாமே சொல்வடிவம் பெற முடியாத நம்முடைய பெருமூச்சுகளின் வாயிலாய் நமக்காகப் பரிந்துபேசுகிறார். 27உள்ளங்களைத் துருவி ஆயும் கடவுள் தூய ஆவியாரின் மனநிலையை அறிவார். தூய ஆவியாரும் கடவுளுக்கு உகந்த முறையில் இறைமக்களுக்காகப் பரிந்துபேசுகிறார்.


 கடந்த வாரத்தின் தொடர்ச்சியாகவே இந்த வார இரண்டாம் வாசக பகுதியும் வருகிறது. உரோமையர் திருமுகம் எட்டாம் அதிகாரம் தூய ஆவியார் அருளும் வாழ்வை பற்றி விவரிக்கிறது என்று பார்த்தோம். வாழ்வே கேள்விக்குறியாக இருக்கும் போது, இந்த வாழ்வைவிட இன்னொரு வாழ்வு காத்திருக்கிறது என்பது நம்பிக்கையாளர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்திருக்கும். இந்த வரியில் வரப்போகும் மாட்சியைப் பற்றி இரண்டு முக்கியமான வரிகளை பவுல் முன்வைக்கிறார்


.26: வலுவற்ற நிலையில் இருக்கிறோமோ என்று பயப்பட தேவையில்லை ஏனெனில் தூய ஆவியார் துணை நிற்கிறார் என்று உற்சாகப்படுத்துகிறார் பவுல். இறைவனிடம் வேண்டுவது ஒரு கலை, அநேகமானவர்களுக்கு இந்த கலையை எப்படிச் செய்யவது என்று தெரியவில்லை என்கிறார் 

(τί προσευξώμεθα தி புரொசெயுக்சோமெதா- எப்படி நாம் செபிப்பது?). இதனை தூய ஆவியார் செய்யவிருக்கிறார் என்கிறார், ஆனால் இதனை தூய ஆவியார் வார்த்தைகளால் வடிக்கமால், பெருமூச்சு வாயிலகா செய்யவார் என்கிறார்

 மனிதர்கள் தங்கள் துன்பங்கள் கட்டுக்கடங்காமல் போகும்போது, பெருமூச்சு விடுவார்கள்

இதற்கு பல அர்த்தங்கள் உள்ளன. பெருமூச்சை சிலர் இதயத்தின் ஒலி என்கிறார்கள். இதனைக் குறிக்க கிரேக்க மூல மொழி στεναγμός (ஸ்டெநாக்மொஸ்) என்ற சொல்லலை பயன்படுத்துகிறது

இதற்கு மௌனமான வலி என்ற அர்த்தமும் உள்ளது


.27: இந்த வரி வித்தியாசமான வரியாக அமைந்துள்ளது. இந்த வரியில் பவுல் கடவுளுக்கும் தூய ஆவியாருக்கும் வித்தியாசத்தையும் தனித்துவத்தையும் காட்டுகிறார். கடவுள் அனைவரின் உள்ளங்களையும் ஆராய்கிறவர் (ἐραυνῶν τὰς καρδίας எராவுநோன் டாஸ் கார்தியாஸ்- 

இதயங்களை ஆராய்கிறவர்). கடவுள்தான் இந்த வரியின் எழுவாய்ப் பொருள் என்பது முதல் வரியில் இருந்து புலப்படுகிறது. இந்த கடவுள் தூய ஆவியாரின் மனநிலையையும் அறிகிறார் (φρόνημα τοῦ πνεύματος புரொநேமா தூ புனுமாடொஸ்- தூய ஆவியின் மனநிலை). இவ்வாறாக தூய ஆவியார் சுயமான மனநிலை உடையவர் என்பது புலப்படுகிறது, அல்லது அவர் தனித்துவமான ஆள் என்பதும் புலப்படுகிறது

 இதற்கு ஏற்றாற்போல தூய ஆவியாரும் கடவுளின் மனநிலையை அறிகிறார், இதனால்தான் அவர் கடவுளுக்கு உகந்த முறையில் இறைமக்களுக்காக பரிந்து பேசுகிறார். இறைமக்கள் என்பதற்கு  கிரேக்க விவிலியம் 'புனிதர்கள்' (ἁγίων ஹகியோன்- தூயவர்கள்) என்ற சொல்லை பாவிக்கிறது. இதன் மூலம் இறைமக்கள் புனிதர்கள் அல்லது புனிதர்களாக வாழ அழைக்கப்பட்டவர்கள் என்பது அறியப்படுகிறது



மத்தேயு 13,24-43

வயலில் தோன்றிய களைகள் உவமை


24இயேசு அவர்களுக்கு எடுத்துரைத்த வேறு ஓர் உவமை: 'விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம். ஒருவர் தம் வயலில் நல்ல விதைகளை விதைத்தார். 25அவருடைய ஆள்கள் தூங்கும்போது அவருடைய பகைவன் வந்து கோதுமைகளுக்கிடையே களைகளை விதைத்துவிட்டுப் போய்விட்டான் 26பயிர் வளர்ந்து கதிர் விட்டபோது களைகளும் காணப்பட்டன. 27நிலக்கிழாருடைய பணியாளர்கள் அவரிடம் வந்து, 'ஐயா, நீர் உமது வயலில் நல்ல விதைகளை அல்லவா விதைத்தீர்? அதில் களைகள் காணப்படுவது எப்படி? என்று கேட்டார்கள். 28அதற்கு அவர், 'இது பகைவனுடைய வேலை' என்றார். உடனே பணியாளர்கள் அவரிடம், 'நாங்கள் போய் அவற்றைப் பறித்துக் கொண்டு வரலாமா? உம் விருப்பம் என்ன?' என்று கேட்டார்கள். 29அவர், 'வேண்டாம், களைகளைப் பறிக்கும்போது அவற்றோடு சேர்த்துக் கோதுமையையும் நீங்கள் பிடுங்கிவிடக்கூடும். 30அறுவடைவரை இரண்டையும் வளர விடுங்கள். அறுவடை நேரத்தில் அறுவடை செய்வோரிடம், 'முதலில் களைகளைப் பறித்துக் கொண்டு வந்து எரிப்பதற்கெனக் கட்டுகளாகக் கட்டுங்கள். கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்து வையுங்கள்' என்று கூறுவேன்' என்றார்.'


கடுகு விதை, புளிப்பு மாவு உவமைகள்

(மாற் 4:30 - 32; லூக் 13:18 - 21)


31-32இயேசு அவர்களுக்கு எடுத்துரைத்த வேறு ஓர் உவமை: 'ஒருவர் கடுகு விதையைழூ எடுத்துத் தம் வயலில் விதைத்தார். அவ்விதை எல்லா விதைகளையும்விடச் சிறியது. ஆனாலும், அது வளரும்போது மற்றெல்லாச் செடிகளையும் விடப் பெரியதாகும். வானத்துப் பறவைகள் அதன் கிளைகளில் வந்து தங்கும் அளவுக்குப் பெரிய மரமாகும். விண்ணரசு இக்கடுகு விதைக்கு ஒப்பாகும். 33அவர் அவர்களுக்குக் கூறிய வேறு ஓர் உவமை: 'பெண் ஒருவர் புளிப்புமாவை எடுத்து மூன்று மரக்கால் மாவில் பிசைந்து வைத்தார். மாவு முழுவதும் புளிப்பேறியது. விண்ணரசு இப்புளிப்புமாவுக்கு ஒப்பாகும்.'


உவமைகள் வாயிலாகவே பேசும் இயேசு

(மாற் 4:33 - 34)


34இவற்றையெல்லாம் இயேசு மக்கள் கூட்டத்துக்கு உவமைகள் வாயிலாக உரைத்தார். உவமைகள் இன்றி அவர் அவர்களோடு எதையும் பேசவில்லை. 35'நான் உவமைகள் வாயிலாகப் பேசுவேன்; உலகத் தோற்றமுதல் மறைந்திருப்பவற்றை விளக்குவேன்' என்று இறைவாக்கினர் உரைத்தது இவ்வாறு நிறைவேறியது.


வயலில் தோன்றிய களைகள் உவமையின் விளக்கம்


36அதன்பின்பு இயேசு மக்கள் கூட்டத்தினரை அனுப்பிவிட்டு வீட்டுக்குள் வந்தார். அப்போது அவருடைய சீடர்கள் அவரருகே வந்து, 'வயலில் தோன்றிய களைகள்பற்றிய உவமையை எங்களுக்கு விளக்கிக் கூறும்' என்றனர். 37அதற்கு அவர் பின் வருமாறு கூறினார்: 'நல்ல விதைகளை விதைப்பவர் மானிடமகன்; 38வயல், இவ்வுலகம்; நல்ல விதைகள், கடவுளின் ஆட்சிக்குட்பட்ட மக்கள்; களைகள், தீயோனைச் சேர்ந்தவர்கள்; 39அவற்றை விதைக்கும் பகைவன், அலகை; அறுவடை, உலகின்முடிவு; அறுவடை செய்வோர், வானதூதர். 40எவ்வாறு களைகளைப் பறித்துத் தீக்கிரையாக்குவார்களோ அவ்வாறே உலக முடிவிலும் நடக்கும். 41மானிட மகன் தம் வானதூதரை அனுப்புவார். அவர்கள் அவருடைய ஆட்சிக்குத் தடையாக உள்ள அனைவரையும்ழூ நெறிகெட்டோரையும் ஒன்று சேர்ப்பார்கள்; 42பின் அவர்களைத் தீச்சூளையில் தள்ளுவார்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும். 43அப்போது நேர்மையாளர் தம் தந்தையின் ஆட்சியில் கதிரவனைப்போல் ஒளிவீசுவர் கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்.'


 இன்றைய நற்செய்தியும் கடந்தவார தொடர்ச்சியாகவே அமைகிறது. இன்றைய பகுதிகள் ). வயலில் தோன்றிய களைகள், ). கடுகு விதை மற்றும் புளிப்பு மாவு, ). உவமைகள் வாயிலாக பேசும் ஆண்டவர் ). களைகள் உவமையின் விளக்கம் போன்றவற்றை உள்ளடக்கியுள்ளது. மத்தேயு நற்செய்தியில் உவமைகள் முக்கியம் பெறுகின்றன, எனெனில் இயேசுவை மிக முக்கியமான போதகராகவும், புதிய மோசேயாகவும் காட்டும் பொழுது, இது சாத்தியமாகிறது. அதிகமான உவமைகள் இறையரசை மையப்படுத்தியதாகவும், அல்லது இறையரசை எழுவாய்ப் பொருளாகக் கொண்டதாகவும் அமைகிறது


. வயலில் தோன்றிய களைகள் உவமை (வவ. 24-30). 


.24: இயேசு அவர்களுக்கு வேறு உவமை ஒன்று சொன்னார் என்பதன் மூலம், இயேசு பல உவமைகளை சொல்லியிருக்கிறார் என்பது புலப்படுகிறது. விண்ணரசை ஒருவர் வயிலில் விதைக்கும் விதைகளுக்கு ஒப்பிடுகிறார். விண்ணரசுக்கு, விண்ணகங்களின் அரசு (ἡ βασιλεία τῶν οὐρανῶν ஹே பசிலெய்யா டோன் ஹுராநோன்) என்ற சொல் பயன்படுகிறது. இது மத்தேயு நற்செய்தியின் தனித்துவம்


.25. இந்த விதைகள் கோதுமை என்பது இந்த வரியில் புலப்படுகிறது. இந்த விதைகளுக்கு நடுவில் பகைவன் களைகளை விதைக்கிறான். கோதுமை (σῖτος சிடொஸ்) பாலஸ்தீன மக்களுக்கு நன்கு அறியப்பட்ட நாளாந்த விதையும் பயிருமாகும், நமக்கு அரிசி போல. இந்த விதைகளுக்கு நடுவில் களைகள் விதைக்கப்படுகின்றன, அவை தானாக வளரவில்லை. களைகளை குறிக்க ட்சிஸ்ட்சாநியொன் (ζιζάνιον) என்ற சொல் பாவிக்கப்பட்டுள்ளது. இது ஒருவகை களை, கிட்டத்தட்ட கோதுமை போலவே தோன்றும். இதனை விதைக்கிறவர் விவசாயியின் பகைவன் என சொல்லப்படுகிறது (ἐχθρὸς எக்த்ரொஸ்- எதிரி). இவர் சாத்தானாக இருக்க வேண்டியதில்லை. இந்த பகைவர் தலைவரின் வேலையாட்கள் தூங்கும் போதே வருகிறார், அதாவது இரவில் வருகிறார் எனவே அவர் நல்லவர் இல்லை என்பது புலப்படுகிறது


.26: பயிரும் இந்த விதமான களைகளும் ஒரே நாளில் வளர்கின்றன. அதிகமான களைகள் பயிரைப்போலவே ஆயுட்காலத்தைக் கொண்டவை. இயற்கைக்கு அவைகள் களைகள் அல்ல இன்னொரு பயிர்கள். நமக்குத்தான் அவை களைகள், ஏனெனில் அவை நம்மால் எதிர்பார்க்கப்படாதவை. கத்தரி நிலத்தில் கரட் விளைந்தால் அதுவும் களைதான். இப்படியாக இந்த களை பயிருடன் ஒரே காலத்தில் வளர்ந்து நிற்கிறது


.27: நிலக்கிழாரைக் குறிக்க கிரேக்க விவிலியம் வீட்டு உரிமையாளர் என்ற சொல்லை பயன்படுத்துகிறது (οἰκοδεσπότης ஒய்கொதெஸ்பொடேஸ்- வீட்டு முதலாளி). வீட்டு முதலாளியின் பணியாளர்களின் கேள்வி நியாயமானதே. அவர்களுக்கு தெரியாமல்தான் இந்த களைகள் விதைக்கப்பட்டுள்ளன. இந்த கேள்வி மூலமாக சில விடயங்கள் பணியாளர்களுக்கு தெரியாது என்பதை மத்தேயு குறிப்பிடுகிறார். அதாவது ஆரம்ப கால திருச்சபையில் எப்படி தீயவர்கள் புகுந்தார்கள் என்பது பல கிறிஸ்தவர்களுடைய கேள்வியாக இருந்தது


.28: இந்த வரியில் தலைவர் அனைத்து கேள்விகளுக்கும் விடையளிக்கிறார். இது பகைவனுடைய வேலை என்பது (ἐχθρὸς ἄνθρωπος τοῦτο ἐποίησεν. எக்த்ரொஸ் அந்த்ரோபொஸ் டுடோ எபொய்ஏசென்) இதனை பகைவன்தான் செய்தான் என்று கிரேக்க விவிலியம் கொண்டுள்ளது. தலைவருக்கு பிரமாணிகக்மான பணியாளர்கள் அந்த களைகளை உடனடியாக அழிக்க முயல்கின்றனர். பணியாளர்கள் யார் என்பதை மத்தேயு நேரடியாகக் காட்டவில்லை. நில உரிமையாளர் கடவுளாக இருந்தால் இவர்கள் நிச்சயமாக வானதூதர்களாக இருப்பார்கள். இருப்பினும் அவர்கள் தலைவரின் விருப்பத்தைத்தான்

 நிறைவேற்ற காத்திருக்கிறார்கள்


.29: தலைவரின் பார்வை பணியாளர்களின் பார்வையாக இருக்கவேண்டியதில்லை என்பது இந்த வரியில் புலப்படுகிறது. சில வேளைகளில் தவறானவர்களுக்கு தண்டனை கொடுக்கிறபோது அது நல்லவர்களையும் தண்டித்துவிடும் என்ற நியதி சொல்லப்படுகிறது. ஏன் கடவுள் பொல்லாதவர்களை தண்டிக்காமல் விடுகிறார் என்பது பல தசாப்த கேள்வி, இதற்கு மத்தேயு தன் விடையைத் தருகிறார்


.30: அறுவடை நாள் என்பது தீர்ப்பு நாளை குறிக்கலாம் (θερισμός தெரிஸ்மொஸ்- வெட்டு). நல்லதும் கெட்டதும் ஒன்றாக வாழுகின்றன என்பதும் ஒரு யாதார்த்தம். இறுதிநாளில் நிச்சயமாக முதலில் தீயவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்பதன் மூலம், கடவுள் பொறுமையாக இருந்தாலும், தண்டனை நாளில் முதலில் தண்டிக்கப்படவேண்டியவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள் என்று சொல்கிறார். ஆக ஒன்று எரிக்கப்பட இன்னொன்று களஞ்சியத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. களஞ்சியம் என்பது பாதுகாப்பான அறை (ἀποθήκη அபொதேகே), இது நிலைவாழ்வைக் குறிக்கலாம்



. கடுகு விதை, புளிப்பு மாவு உவமைகள் (வவ.31-33)


வவ.31-32: இதனையும் இன்னொரு உவமை என மத்தேயு அறிமுகப்படுத்துகிறார். ஒருவர் கடுகு விதையை விதைக்கிறார். கடுகு விதை (σίναπι சினாபி, கடுகு), அதனுடைய சிறிய அளவிற்கு அறியப்படுகிறது. இதுவும் பாலஸ்தீனாவில் வளரும் முக்கியமான ஒரு சிறிய வகை மரம். இந்த தாவரம் எண்ணெய், விதை மற்றும் மருந்திற்காகவும் பயன்பட்டது. இந்த மரங்கள் பத்து அடிகள் உயரம் வரை வளரக்கூடியவை

 நிச்சயமாக இவை செடிகளோடு ஒப்பிடுகையில் பெரியவைதான். வானத்து பறவைகள் இதில் தங்குகின்றன. திருச்சபை ஆரம்ப காலத்தில் சிறிய குழுவாக இருந்து பின்னர் பெரிய சபையாக மாறும் என்ற சிந்தனை இதன் பின்னால் இருக்கிறது. வானத்து பறவைகள் என்பதற்கு (τὰ πετεινὰ τοῦ οὐρανοῦ டா பெடெய்நா டூ ஹுரானூ) சிலர் உரோமைய ஆட்சியையும் ஒப்பிடலாம். இந்த கடுகு மரத்திற்கு விண்ணரசை ஒப்பிடுகிறார் மத்தேயு.  


.33: இந்த வரியில் இன்னொரு உவமையை முன்வைக்கிறார். புளிப்பு மாவு (ζύμη ட்சுமே- புளி), கோதுமை மாவை பொங்கச் செய்யும். ஆனால் அதன் அளவு மிக சிறியதாகவே இருக்கும் அதே வேளை அதன் செயற்பாடுகளும் வெளியில் தெரியாமலே இருக்கும். இது விண்ணரசின் பண்புகளுடன் ஒத்துப்போகிறபடியால் இதனை மத்தேயு பயன்படுத்தியிருக்கலாம். மூன்று மரக்கால் மாவு என்பதை குறிக்க கிரேக்கம் மூன்று சாதா (σάτα τρία சாடா டிரியா) என்ற அளவு பாவிக்கப்படுகிறது. இது கிட்டத்தட்ட இருபத்தியொரு கிலோ மாவைக் குறிக்கும், அதாவது நூறு பேருக்கான உணவு. இந்த பெரிய அளவை புளிக்க வைக்க மிக சிறிய அளவான புளிப்பு போதுமானது என்பது ஆச்சரியமானதே. இந்த உதாரணத்தை பெண்கள் இலகுவாக புரிந்து கொள்வார்கள்


. உவமைகள் வாயிலாகவே பேசும் இயேசு (வவ. 34-35)


.34: இயேசு மக்களுக்கு உவமைகள் இன்றி போதிக்கவில்லை என்கிறார் மத்தேயு. மக்கள் என்பதை குறிக்க ஒக்லோஸ் (ὄχλος கூட்டம்) என்ற சொல் பாவிக்கப்பட்டுள்ளது. இது சீடர்களை குறிக்காமல், இயேசுவை பின்பற்றிய மற்றை பெரும் திரளைக் குறிக்கிறது. இவர்களில் பலர் இயேசுவை ஏற்றுக்கொள்ளவில்லை. இவர்களில் பலர் பின்நாட்களில் இயேசுவை சிலுவையில் அறையும் படி கத்தியவர்கள் என்ற குற்றச்சாட்டும் உள்ளது


.35: மத்தேயு முதல் ஏற்பாட்டு வசனத்தை மீள நினைவூட்டுகிறார். முதல் ஏற்பாட்டு 

இறைவாக்குகளை கொண்டுவந்து அதனை இயேசுவிற்க ஒப்பிடுவதும் மத்தேயு நற்செய்தியின் 

இன்னொரு முக்கியமான பண்பு. இதன் மூலமாக மத்தேயு, இயேசுவை மெசியாவாக காட்ட முயற்சிக்கிறார் அல்லது இறைவார்த்தையின் நிறைவு இயேசு என்கிறார்.

 இந்த இறைவார்த்தை திருப்பாடல் 78,2 இலிருந்து எடுக்கப்படுகிறது (2நீதிமொழிகள் மூலம் நான் பேசுவேன்; முற்காலத்து மறைசெய்திகளை எடுத்துரைப்பேன்.) ஆனால் திருப்பாடல் சொற்களுக்கும், மத்தேயு பாவிக்கும் சொற்களுக்கும் நிறையவே வித்தியாசம் இருக்கிறது


. வயலில் தோன்றிய களைகள் உவமையின் விளக்கம் (வவ.36-43)


.36: வழமைபோல இயேசு கூட்டத்தை அனுப்பி விட்டு சீடர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார். இயேசு வீட்டிற்குள் வருகிறார் என்கிறார் மத்தேயு. இதன் மூலம், இந்த சீடர்கள் இயேசுவின் வீட்டிற்குள் இருக்க வாய்ப்பு பெற்றவர்கள் அல்லது இயேசுவின் வீட்டுக்காரர்கள் என பார்க்கப்படுகிறார்கள். சீடர்கள் இயேசுவிற்கு அருகில் வருகிறார்கள். அதேவேளை அவர்களுக்கும், கூட்டத்தினரைப்போல உவமைகள் விளங்கவில்லை என்பதை மத்தேயு காட்டுகிறார்


.37: இயேசு விளக்குகிறார். நல்ல விதைகளை விதைக்கிறவர் மானிட மகன் (ὁ υἱὸς τοῦ ἀνθρώπου ஹோ ஹுய்யோஸ் டூ அந்த்ரோபூ). மானிட மகன் என்பது நற்செய்தியிகளில் மிக முக்கியமான ஒரு இறையியல் வார்த்தை. இதனை மெசியாவோடு தொடர்பு படுத்தி சில ஆய்வாளர்கள் பார்க்கின்றனர். இதனை மண்ணின் சாதாரண மனிதர் என்ற அர்த்தத்திலும் ஒரு சில ஆய்வாளர்கள் பார்க்கின்றனர். தானியேல் போன்ற பிற்கால (கிரேக்கர்) முதல் ஏற்பாட்டு புத்தகங்களிலும் இந்த சொல் பாவிக்கப்பட்டுள்ளது


.38: வயல் இவ்வுலகம், நல்ல விதைகள் - கடவுளின் மக்கள், களைகள் - தீயோனுடையவை. மத்தேயுவின் இயேசு மிக அருமையாக ஒரு இரு வார்த்தைகளில் உவமைகளை விளக்குகிறார். உலகம் (κόσμος கொஸ்மொஸ்) என்ற சொல் நேர்மறையாகவே இங்கே பாவிக்கப்பட்டுள்ளது. யோவான் இந்த சொல்லை அதிகமான இடங்களில் இயேசுவை நம்பாதவர்களுக்கு பயன்படுத்துவார் (காண்க யோவான் 1,10). கடவுளின் ஆட்சிக்கு உட்பட்ட மக்களை குறிக்க கிரேக்கம் 'ஆட்சியின் மைந்தர்கள்' (οἱ υἱοὶ τῆς βασιλείας ஹொய் ஹுய்யோய் டேஸ் பசிலெய்யாஸ்) என்ற சொல்லை பயன்படுத்துகிறது. களைகளைக் குறிக்க தீயோனின் மைந்தர்கள் என்ற சொல் பயன்படுகிறது (οἱ υἱοὶ τοῦ πονηροῦ ஹொய் ஹுய்யோய் டூ பொநேரூ). 


.39: விதைப்பவன் அலகை, அறுவடை உலக முடிவு, அறுவடை செய்வோர் வானதூதர்கள் என்று மேலும் சுருக்கமாகவும், தெளிவாகவும் உவமையை மேலும் விளக்குகிறார் இயேசு. ஆரம்பத்தில் பகைவன் என்று சொல்லப்பட்டது இங்கே நேரடியாக சாத்தான் என்று விளங்கப்படுத்தப்படுகிறது (ὁ διάβολος ஹொ தியாபொலொஸ்). இது சாத்தானை அல்லது தீய வழயில் நடத்துபவனைக் குறிக்கிறது. அறுவடையை விளக்க 'காலத்தின் முடிவு நாள்' என்ற சொல் பாவிக்கப்படுகிறது. அறுவடை செய்கிறவர்கள் பணியாளர்கள் என்று சொல்லப்பட்டது, இங்கே அவர்கள் வானதூதர்கள் என வெளிப்படுத்தப்படுகிறது (ἄγγελοί அன்கெலொய்). வானதூதர்கள் இறுதி நாட்களில் தண்டனையை நிறைவேற்றுவார்கள் என்பது கிரேக்க காலத்தில் வளர்ந்து வந்த ஒரு நம்பிக்கை


.40: களைகள் மீண்டும் பரவாமலிருக்கவும், அதன் விதைகள் தப்பாமலிருக்கவும், அவை எரியூட்டப்படுகின்றன. இதனை பாலஸ்தீன மக்கள் நன்கு அறிந்திருந்தார்கள். நெருப்பு இங்கே ஒரு அடையாளமாகவும் பாவிக்கப்பட்டிருக்கலாம். நெருப்பு கடவுளின் தீர்ப்பைக் குறிக்க விவிலியத்தில் பாவிக்கப்படுகிறது


வவ.41-42: வானதூதர்கள் என்ன செய்வார்கள் என்பதையும் இயேசு விளக்குகிறார். அவர்கள்; தீயவர்களையும் நெறிகெட்டவர்களையும் ஓன்று சேர்க்கிறார்கள். இவர்களைக் குறிக்க இரண்டு முக்கியமான வார்த்தைகள் பாவிக்கப்பட்டுள்ளன. அவை . தடையாக இருக்கிறவர்கள் (σκάνδαλον ஸ்கன்தாலொன்), . சட்டத்தை மீறுகிறவர்கள் (ἀνομία அநோமியா). இந்த நபர்கள் ஆரம்ப கால திருச்சபையில் கலகம் மற்றும் இடைஞ்சல் விளைவித்தவர்களை நினைவூட்டுகிறார்கள். இவர்கள் தீச்சூழையில் தள்ளப்படுகிறார்கள், தீச்சூழை முடியாத தண்டனைத் தீர்ப்பைக் குறிக்கிறது. இந்த அடையாளம் யூதர்களுக்கு நன்கு தெரிந்த அடையாளம். சீயோல் மற்றும் ஹெகெனா போன்ற சொற்களும் இதனைத்தான் குறித்தன (ஒப்பிடுக தானியேல் 3,6). இந்த தீச்சூழை அழுகையையும், அங்கலாய்ப்பையும் கொடுக்கிறது. இவை உண்மையானவையா அல்லது அனுபவம் சார்ந்தவையா என்பதை மத்தேயு தெளிவுபடுத்தவில்லை. அங்கலாய்ப்பைக் குறிக்க ὁ βρυγμὸς τῶν ὀδόντων (ஹொ புருக்மொஸ் டோன் ஒதொன்டோன்) பற்களை நறுநறுவென கடிக்கும் செயல் காட்டப்படுகிறது. உடல் அதிகமான நோவை தருகின்ற போது இந்த செயற்பாடு நடைபெறுகிறது.  


.43: நேர்மையாளர்கள் கதிரவனைப் போல ஒளி வீசுவார்கள் என்பது அழகான வரி. கதிரவன் வெளிச்சத்தின் உச்சம். நேர்மையாளர்கள் என்ற சொல்லும் கதிரவனும் இங்கே ஒத்த கருத்துச் சொற்களாக பாவிக்கப்பட்டுள்ளன. வெளிச்சம் கடவுளின் அடையாளமாக இருக்கிற படியால் இதனை மத்தேயு மற்றைய ஆசிரியர்களைப்போல பயன்படுத்தியிருக்கலாம் (ஒப்பிடுக தானியேல் 12,3). (οἱ δίκαιοι ஹொய் திகாய்யோய் - நேர்மையாளர்கள், ὁ ἥλιος ஹெ ஹேலியோஸ் - கதிரவன்)

 கேட்கச்செவியுள்ளோர் கேட்கட்டும் என்பது, அனைவருக்கும் செவிகள் உள்ளன ஆனால் கேட்கும் திறமை அனைவருக்கும் இல்லை என்பது புலப்படுகிறது. இந்த கட்டளை வாக்கியத்தை இயேசு அதிகமான இடங்களில் பாவிக்கிறார். இது கொஞ்சம் கடுமையாகவே கிரேக்க மூல மொழியில் இருக்கிறது. (ὁ ἔχων ὦτα ἀκουέτω. ஹெ எஹோன் ஓடா அகூஎடோ- காதுகள் கொண்டவர் கேட்கட்டும். ). 


 


விண்ணரசு என்பது வானகத்திலுள்ள 

கண்ணுக்கு தெரியா அரசு மட்டுமல்ல

அது இந்த உலக்கதில்தான் தொடங்குகிறது

இவ்வுலகில் விண்ணரசை வாழதாவர்கள்,

மேலுலகில் அதனை காணமுடியாது

விண்ணரசு வீட்டிலும், வேலைத்தளத்திலும்,

திருச்சபையிலும் வாழப்படவேண்டும்

ஏனெனில் விண்ணரசின் ஆண்டவர், இயேசு

இந்த உலகிலும் இருக்கிறார்


விண்ணரசை இங்கே இப்போதே உருவாக்க 

உதவி செய்யும் ஆண்டவரே ஆமென்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆண்டின் பொதுக்காலம் முப்பத்திநான்காம் வாரம் கிறிஸ்து அரசர் பெருவிழா:  Our Lord Jesus Christ, King of the Universe 24.11.2024

ஆண்டின் பொதுக்காலம் முப்பத்திநான்காம் வாரம்   கிறிஸ்து அரசர் பெருவிழா :  Our Lord Jesus Christ, King of the Universe 24.11.2024 இய...