ஆண்டின் பொதுக்காலம் பன்னிரண்டாம் ஞாயிறு (அ)
25.06.2023
M. Jegankumar Coonghe OMI,
Shrine of Our Lady of Good Voyage,
Chaddy, Velanai,
Friday, 23 June 2023
முதல் வாசகம்: எரேமியா 20,10-13
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 69
இரண்டாம் வாசகம்: உரோமையர் 5,12-15
நற்செய்தி: மத்தேயு 10,26-33
எரேமியா 20,10-13
10'சுற்றிலும் ஒரே திகில்!' என்று பலரும் பேசிக் கொள்கின்றார்கள்; 'பழிசுமத்துங்கள்; வாருங்கள், அவன்மேல் பழி சுமத்துவோம்' என்கிறார்கள். என் நண்பர்கள்கூட என் வீழ்ச்சிக்காகக் காத்திருக்கிறார்கள்; 'ஒருவேளை அவன் மயங்கிவிடுவான்; நாம் அவன்மேல் வெற்றி கொண்டு அவனைப் பழி தீர்த்துக் கொள்ளலாம்' என்கிறார்கள். 11ஆனால், ஆண்டவர் வலிமை வாய்ந்த வீரரைப் போல என்னோடு இருக்கிறார். எனவே என்னைத் துன்புறுத்துவோர் இடறி விழுவர். அவர்கள் வெற்றிகொள்ள மாட்டார்கள். அவர்கள் விவேகத்தோடு செயல்படவில்லை; அவர்களின் அவமானம் என்றும் நிலைத்திருக்கும்; அது மறக்கப்படாது. 12படைகளின் ஆண்டவரே! நேர்மையாளரை சோதித்தறிபவரும் உள்ளுணர்வுகளையும் இதயச் சிந்தனைகளையும் அறிபவரும் நீர் நீர் என் எதிரிகளைப் பழி வாங்குவதை நான் காணவேண்டும்; ஏனெனில், என் வழக்கை உம்மிடம் எடுத்துரைத்துள்ளேன். 13ஆண்டவருக்குப் புகழ் பாடுங்கள்; அவரைப் புகழ்ந்தேத்துங்கள்; ஏனெனில், அவர் வறியோரின் உயிரைத் தீயோரின் பிடியினின்று விடுவித்தார்.
இந்த பகுதி எரேமியாவின் இறுதி அறிக்கை என்ற பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. எரேமியா இறைவாக்கு உரைத்த போது அவர் பலரால் பல துன்பங்களுக்கு உள்ளாக்கப்பட்டார். இதில் சில குருக்களும் உள்ளடங்குவர். பஷ்கூர் என்ற கடவுளின் இல்லத்து தலைமை அதிகாரி எரேமியாவை அவருடைய இறைவாக்கின் பொருட்டு துன்புறுத்தி சிறையில் அடைக்கிறார். பஷ்கூர் (פַּשְׁחוּר) என்ற பெயரை எரேமியா வெளியில் வந்தபேது 'மாகோர் மீசாபீபு' (מָגוֹר מִסָּבִיב) என்று மாற்றுகிறார். இப்படியாக பிழையான இறைவாக்கின் அடையாளமாக பஷ்கூரை காட்டுகிறார். இந்த பஷ்கூர் தேவாலயத்தில் சட்ட ஒழுங்கை அமுல்படுத்துவதற்கு பொறுப்பாளராக இருந்தார். ஏரேமியாவின் அழிவைப் பற்றிய இறைவாக்கு, தேவாலயத்தில் சலசலப்பை உருவாக்கவே, இவர் எரேமியாவை கடுமையாக தண்டித்து சிறையில் அடைக்கிறார். இந்த பஷ்கூர், அரசர் மற்றும் மற்றைய அதிகாரிகளோடு பபிலோனியாவிற்கு அடிமையாக கொண்டு செல்லப்பட்டார் என நம்பப்படுகிறது.
வவ.7-9: இந்த வரிகளில் எரேமியா காரசாரமாக கடவுள்மேல் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார். கடவுள் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும், அவர் தன்னை எளிமையாக்கிவிட்டதாகவும், என்று சொல்வது போல சொல்லி, கடவுளுடைய வார்த்தையை தன்னால் அறிவிக்காமல் இருக்க முடியாது என்கிறார். கடவுளுடைய வார்த்தையை தன்னால் அடக்க முடியாது அது ஒரு பெரும் சக்தி என்கிறார்.
வ.10: எரேமியாவின் துன்பமான வார்த்தைகள் விவரிக்கப்படுகின்றன. எரேமியா தன்னை இவர்கள் எப்படியெல்லாம் துன்புறுத்துகிறார்கள் என்பதை விவரிக்கிறார். எரேமியாவின் இறைவாக்கை மக்கள் சுற்றிலுமுள்ள பயங்கரம் எனக் காண்கின்றனர் (רַבִּים מָג֣וֹר מִסָּבִיב֒ ராபிம் மாகோர் மிஸ்ஸாவிவ்). அத்தோடு அவர்கள் வெளிப்படையாகவே எரேமியா மீது பழிசுமத்துகின்றார்கள். இவர்கள் எரேமியாவை பொய் இறைவாக்கினராக காட்ட முயற்சிக்கிறார்கள், இந்த குற்றச்சாட்டை பலமுறை பொய் இறைவாக்கினர்கள் மீது எரேமியா முன்வைத்திருந்தார். அதனையே இவர்கள் எரேமியாவிற்கு சுமத்துகிறார்கள். தன்னுடைய நண்பர்கள்கூட தன் வீழ்ச்சிக்காக காத்திருக்கிறார்கள் என்கிறார் (אֱנ֣וֹשׁ שְׁלוֹמִ֔י שֹׁמְרֵ֖י צַלְעִ֑י எனோஷ் ஷெலோமி, ஷொம்ரே ட்சால்'இ). இவர்கள் தன்மீது பழிசுமத்தி வீழ்த்துவதையே நோக்கமாக கொண்டுள்ளனர் என காட்டுகிறார்.
வ.11: இந்த வசனம் எரேமியாவின் நம்பிக்கையை காட்டுகிறது. இஸ்ராயேலரின் நம்பிக்கையில், புலம்பல் ஒரு சாதாரண அம்சம். இதனை பல ஆய்வாளர்கள் ஒரு செபமாகவே காண்கின்றனர். திருப்பாடல்களில் புலம்பல் திருப்பாடல்கள் ஒரு குழுவாகவே இருக்கின்றன. ஏரேமியாவின் புலம்பல் இங்கே நம்பிக்கை வரியாக முடிவடைகிறது. கடவுள் தன்னோடு வலிமைவாய்ந்த வீரரைப்போல இருப்பதாக சொல்கிறார் (וַֽיהוָ֤ה אוֹתִי֙ כְּגִבּ֣וֹר עָרִ֔יץ வேஅதோனாய் இத்தோ கெக்வோர் 'அரிட்ஸ்).
கடவுள் மிக வலிமைவாய்ந்த வீரராக இருக்கின்றபடியால், தன்னை துன்புறுத்துகிறவர்கள் நிச்சயமாக வீழ்ந்து தோல்வியடைவர். இவர்களின் வீழ்ச்சிக்கான இன்னொரு காரணத்தையும் எரேமியா முன்வைக்கிறார், அதாவது அவர்கள் விவேகத்தோடு செயற்படவில்லை (כִּֽי־לֹ֣א הִשְׂכִּ֔ילוּ கி-லோ' ஹிஷ்கிலோ). அவர்கள் விவேகத்தோடு செயற்பட்டிருந்தால், எரேமியாவை கடவுளின்
இறைவாக்கினராக கண்டிருப்பர். இதன் விளைவாக, இவர்கள் அடையப்போகும் அவமானம் நிலைத்திருக்கப்போகிறது. இந்த செய்தி ஒரு சாரருக்கு என்பதைவிட அனைத்து கடவுள் நம்பிக்கையில்லாதவர்களுக்கும் பொருந்தும் என தோன்றுகிறது.
வ.12. இந்த வரி எரேமியாவின் வேண்டுதலாக வருகிறது. படைகளின் ஆண்டவர் என்பது கடவுளுடைய புராதன பெயர்களில் ஒன்று (יהוָ֤ה צְבָאוֹת֙ அதோனாய் ட்ஸெவா'ஓத்), அதனை பாவித்து கடவுளை விழிக்கிறார் இறைவாக்கினர். அத்தோடு கடவுளுக்கு இரண்டு தொழிற்பெயரை முன்வைக்கிறார். அவர் கடவுளை, நேர்மையாளரை சோதிக்கிறவராகவும் (בֹּחֵ֣ן צַדִּ֔יק போஹென் ட்ஸஅதிக்), உள்ளுணர்வுகளையும் இதய சிந்தனைகளையும் காண்பவராகவும் (רֹאֶה כְלָיוֹת וָלֵב ரோ'ஹெ கெலாவோத் வாலெவ்) பார்க்கிறார்.
எரேமியா உணர்ச்சிவசப்பட்டு கடவுளை ஒரு நீதிபதியாக கண்டு, தன்னுடைய எதிரிகள் தண்டிக்கப்படுவதை தான் காணவேண்டும் என்று கேட்கிறார். முதல் ஏற்பாட்டில் எதிரிகள் கண்முன்னால் தண்டிக்கப்படவேண்டியவர்கள் என்பது நீதியாக இருக்கிறது. இது பாதிக்கப்பட்டவர்களுக்கு மன ஆறுதலையையும், பாவிகளுக்கு எச்சரிக்கையும் கொடுக்கும் என நம்பப்பட்டது. எரேமியாவும் முதல் ஏற்பாட்டு மனிதர்தானே இதனை எதிர்பார்த்திருப்பார். முதல் ஏற்பாட்டின் இரக்க ஆன்மீகத்தையும், இன்னும் விசேடமாக தற்கால மாயை நிறைந்த உளவியல் ஆற்றுப்படுத்தலையும் இவர் அறியாதிருந்திருப்பார் போல.
வ.13: இப்போது எரேமியா, வாசகர்களுக்கு வேண்டுதல் ஒன்றை முன்வைக்கிறார். ஆண்டவரை பாடிப் புகழ்ந்தேற்றச் சொல்கிறார் (שִׁירוּ לַֽיהוָ֔ה הַֽלְל֖וּ אֶת־יְהוָ֑ה ஷிரூ லதோனாய், ஹல்லூ எத்-அதோனாய்). எபிரேய கவிநடைக்கே உரித்தான எதுகை மோனையையும் ஒத்த ஒலி வடிவங்களையும் இந்த வரியடியில் காண்க. தமிழ் மொழிபெயர்ப்பும் இதனை தன் அமைப்பில் உள்வாங்கி மொழி பெயர்க்க முயன்றிருக்கிறது (ஆண்டவருக்குப் புகழ் பாடுங்கள்; அவரைப் புகழ்ந்தேத்துங்கள்;).
இதற்கான காரணம், ஆண்டவர் வறியோனின் உயிரை தீயோரின் பிடியின்று விடிவிக்கிறார்
இதனால் அவர் புகழப்படவேண்டியவர். இதனை எரேமியா தன்னுடைய தனிப்பட்ட அனுபவமாக கண்டிருக்கலாம்.
திருப்பாடல் 69
உதவிக்காக வேண்டல்
(பாடகர் தலைவர்க்கு: 'லீலிமலர்' என்ற மெட்டு; தாவீதுக்கு உரியது)
1கடவுளே! என்னைக் காப்பாற்றும்; வெள்ளம் கழுத்தளவு வந்துவிட்டது.
2ஆழமிகு நீர்த்திரளுள் அமிழ்ந்திருக்கின்றேன்; நிற்க இடமில்லை; நிலைக்கொள்ளாத நீருக்குள் ஆழ்ந்திருக்கின்றேன்; வெள்ளம் என்மீது புரண்டோடுகின்றது.
3கத்திக் கத்திக் களைத்துப்போனேன்; தொண்டையும் வறண்டுபோயிற்று; என் கடவுளாம் உமக்காகக் காத்திருந்து என் கண்கள் பூத்துப்போயின்
4காரணமில்லாமல் என்னை வெறுப்போர் என் தலைமுடியைவிட மிகுதியாய் இருக்கின்றனர்; பொய்க்குற்றம் சாட்டி என்னைத் தாக்குவோர் பெருகிவிட்டனர். நான் திருடாததை எப்படித் திருப்பித் தரமுடியும்?
5கடவுளே! என் மதிகேடு உமக்குத் தெரியும்; என் குற்றங்கள் உமக்கு மறைவானவை அல்ல. 6ஆண்டவரே! படைகளின் தலைவரே! உமக்காகக் காத்திருப்போர் என்னால் வெட்கமுறாதபடி செய்யும்; இஸ்ரயேலின் கடவுளே! உம்மை நாடித் தேடுகிறவர்கள் என்பொருட்டு மானக்கேடு அடையாதபடி செய்யும்.
7ஏனெனில், உம் பொருட்டே நான் இழிவை ஏற்றேன்; வெட்கக்கேடு என் முகத்தை மூடிவிட்டது.
8என் சகோதரருக்கு வேற்று மனிதனானேன்; என் தாயின் பிள்ளைகளுக்கு அயலான் ஆனேன். 9உமது இல்லத்தின்மீது எனக்குண்டான ஆர்வம் என்னை எரித்துவிட்டது; உம்மைப் பழித்துப் பேசினவர்களின் பழிச்சொற்கள் என்மீது விழுந்தன.
10நோன்பிருந்து நான் நெக்குருகி அழுதேன்; அதுவே எனக்கு இழிவாய் மாறிற்று.
11சாக்குத் துணியை என் உடையாகக் கொண்டேன்; ஆயினும், அவர்களது பழிச்சொல்லுக்கு உள்ளானேன்.
12நகர வாயிலில் அமர்வோர் என்னைப் பற்றிப் புறணி பேசுகின்றனர்; குடிகாரர் என்னைப்பற்றிப் பாட்டுக் கட்டுகின்றனர்.
13ஆண்டவரே! நான் தக்க காலத்தில் உம்மை நோக்கி விண்ணப்பம் செய்கின்றேன்; கடவுளே! உமது பேரன்பின் பெருக்கினால் எனக்குப் பதில் மொழி தாரும்; துணை செய்வதில் நீர் மாறாதவர். 14சேற்றில் நான் அமிழ்வதிலிருந்து என்னைக் காத்தருளும்; என்னை வெறுப்போரிடமிருந்தும் ஆழ்கடலிலிருந்தும் என்னை விடுவித்தருளும்.
15பெருவெள்ளம் என்னை அடித்துக் கொண்டு போகாதிருப்பதாக! ஆழ்கடல் என்னை விழுங்காதிருப்பதாக! படுகுழி தன்வாய் திறந்து என்னை மூடிக் கொள்ளாதிருப்பதாக!
16ஆண்டவரே! எனக்குப் பதில்மொழி தாரும்; உம் பேரன்பு நன்மை மிக்கது; உமது பேரிரக்கத்தை முன்னிட்டு என்னை நோக்கித் திரும்பும்.
17உமது முகத்தை அடியேனுக்கு மறைக்காதேயும்; நான் நெருக்கடியான நிலையிலிருக்கிறேன்; என் மன்றாட்டுக்கு விரைவில் பதில்மொழி தாரும்.
18என்னை நெருங்கி, என்னை விடுவித்தருளும்; என் எதிரிகளிடமிருந்து என்னை மீட்டருளும். 19என் இழிவும், வெட்கக்கேடும், மானக்கேடும் உமக்குத் தெரியும்; என் பகைவர் அனைவரும் உம் முன்னிலையில் இருக்கின்றனர்.
20பழிச்சொல் என் இதயத்தைப் பிளந்து விட்டது நான் மிகவும் வருந்துகிறேன்; ஆறுதல் அளிப்பாருக்காகக் காத்திருந்தேன்; யாரும் வரவில்லை; தேற்றிடுவோருக்காகக் தேடிநின்றேன்; யாரையும் காணவில்லை.
21அவர்கள் என் உணவில் நஞ்சைக் கலந்து கொடுத்தார்கள்; என் தாகத்துக்குக் காடியைக் குடிக்கக் கொடுத்தார்கள்.
22அவர்களுடைய விருந்துகளே அவர்களுக்குக் கண்ணியாகட்டும்! அவர்களுடைய படையல் விருந்துகளே அவர்களுக்குப் பொறியாகட்டும்!
23அவர்களின் கண்கள் காணாதவாறு ஒளியிழக்கட்டும்! அவர்களின் இடைகள் இடையறாது தள்ளாடட்டும்!
24உமது கடுஞ்சினத்தை அவர்கள்மேல் கொட்டியருளும்; உமது சினத்தீ அவர்களை மடக்கிப் பிடிப்பதாக!
25அவர்களின் பாசறை பாழாவதாக! அவர்களின் கூடாரங்களில் ஒருவனும் குடிபுகாதிருப்பானாக! 26நீர் அடித்தவர்களை அவர்கள் இன்னும் கொடுமைப்படுத்துகின்றார்கள்; நீர் காயப்படுத்தினவர்களின் நோவைப்பற்றித் தூற்றித் திரிகின்றார்கள்.
27அவர்கள்மீது குற்றத்தின்மேல் குற்றம் சுமத்தும்! உமது நீதித் தீர்ப்பினின்று அவர்களைத் தப்ப விடாதேயும்!
28மெய்வாழ்வுக்குரியோரின் அட்டவணையிலிருந்து அவர்களுடைய பெயர்களை நீக்கிவிடும்! அவற்றை நேர்மையாளரின் பெயர்களோடு சேர்க்காதேயும்!
29எளியேன் சிறுமைப்பட்டவன்; காயமுற்றவன்; கடவுளே! நீர் அருளும் மீட்பு எனக்குப் பாதுகாப்பாய் இருப்பதாக!
30கடவுளின் பெயரை நான் பாடிப் புகழ்வேன்; அவருக்கு நன்றி செலுத்தி, அவரை மாட்சிமைப்படுத்துவேன்;
31காளையைவிட இதுவே ஆண்டவருக்கு உகந்தது கொம்பும் விரிகுளம்பும் உள்ள எருதைவிட இதுவே அவருக்கு உகந்தது.
32எளியோர் இதைக் கண்டு மகிழ்ச்சி அடைவார்கள்; கடவுளை நாடித் தேடுகிறவர்களே, உங்கள் உள்ளம் ஊக்கமடைவதாக.
33ஆண்டவர் ஏழைகளின் விண்ணப்பத்திற்குச் செவிசாய்க்கின்றார்; சிறைப்பட்ட தம் மக்களை அவர் புறக்கணிப்பதில்லை.
34வானமும் வையமும் கடல்களும் அவற்றில் வாழும் யாவும் அவரைப் புகழட்டும்.
35கடவுள் சீயோனுக்கு மீட்பளிப்பார்; யூதாவின் நகரங்களைக் கட்டி எழுப்புவார்; அப்பொழுது அவர்களுடைய மக்கள் அங்கே குடியிருப்பார்கள்; நாட்டைத் தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொள்வார்கள்.
36ஆண்டவருடைய அடியாரின் மரபினர் அதைத் தம் உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர்; அவரது பெயர்மீது அன்பு கூர்வோர் அதில் குடியிருப்பர்
லில்லி மலர் மொட்டு என்று இந்த பாடலுக்கு முன்னுரை கொடுக்கப்படுகிறது. இது ஒருவகை காதல் பாடல் மொட்டு என அறியப்படுகிறது. தி.பா 45 உம் இத்தகைய மொட்டையே கொண்டுள்ளது. இந்த வகை மொட்டுக்கள் இனிமைமிகு பாடல்களில் அதிகமாக காணப்படுகின்றன. இந்த பாடலும் தாவீதிற்கே அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இதனை தாவீதுதான் எழுதினாரா என்பதில் பல சந்தேகங்கள் இருந்தாலும், தாவீதைத் தவிர வேறு பொருத்தமான நபரை இந்த பாடலுக்கு பரிந்துரைப்பது கடினமாகவே இருக்கும். இருப்பினும் இதிலுள்ள சில வரிகள் இந்த பாடல் பபிலோனிய காலத்திற்கு பிற்பட்டது போல இருக்கின்றன.
இந்த திருப்பாடல் தனிமனித புலம்பல் திருப்பாடல் வகையைச் சார்ந்தது. சாதாரணமாக புலம்பல் பாடல்கள் இறுதியில் நம்பிக்கையையும் ஆசீர்களையும் முடிவாக கொண்டமைகின்றன.
இதனை இந்த பாடலிலும் காணலாம்.
செபம் மற்றும் புலம்பல், பின்னர் வேண்டுதல் என்ற முறையில் இந்த பாடல் எபிரேய கவிநடை வடிவான, 'படி அமைப்பு' முறையில் அமைந்துள்ளது:
அ1: ஆபத்தான நிலையை வர்ணித்து மன்றாட்டு (வவ.1-4)
ஆ1: பாதுகாப்புத் தேவையின் முக்கியத்துவம் (வவ.5-12)
அ2: உதவிக்காக கடவுளை இரஞ்சி செபம் (வவ.13-18)
ஆ2: தண்டனைக்கு உரியவர்களைப் பற்றிய வரிகள் (வவ.19-28)
அ3: புகழ்ச்சி வரிகள் (வவ.29-36).
வ.1: புலம்பல் பாடல்களில் காணப்படும் 'வேண்டுதல் வார்த்தைகள்' உடனடியாக இந்த பாடலில் தொடங்குகின்றது. ஆசிரியர் தன் ஆபத்தை, வெள்ளத்திற்கு ஒப்பிடுகிறார். இது நிச்சயமாக அடையாளமாகவே இருந்திருக்க வேண்டும். கழுத்தளவிற்கு வெள்ளம் வந்துவிட்டது என்ற தமிழ் வரி மூல எபிரேய வரியில் 'வெள்ளம் என் சுயத்தின் (ஆன்மாவின்) அளவிற்கு வந்துவிட்டது' என்றே உள்ளது (בָאוּ מַיִם עַד־נָפֶשׁ பா'ஊ மாயிம் அத்-நாபெஷ்). நீர், அக்காலத்தில் கட்டுப்படுத்த முடியாத சக்திகளில் ஒன்றாக கருதப்பட்டபடியால் ஆசிரியர் அதனை இங்கு பாவித்திருக்கலாம்.
வ.2: மீண்டுமாக தன்னுடைய நிலையை நீரின் ஆதிக்கத்துடன் ஒப்பிட்டு புலம்ப முயற்சிக்கிறார். ஆழம்காண முடியா நீருக்குள் அமிழ்ந்திருப்பதாக கூறி தன்னுடைய துன்பத்தின் கனத்தை காட்ட முயற்சிக்கிறார். புரண்டோடும் வெள்ளம், இவர் தன் துன்பத்தை கட்டுப்படுத்த முடியாதவராக இருக்கிறார் என்பதைக் காட்டுகிறது.
வ.3: வறண்ட தொண்டைகள், பூத்துப்போன கண்கள் இவருடைய ஏமாற்றத்தைக் காட்ட பயன்பட்டுள்ளன. இவைகள் ஆண்டவருக்காக காத்திருந்தும் ஏமாற்றம் அடைந்ததையும், ஆண்டவருக்கும் திருப்பாடல் ஆசிரியருக்குமிடையிலான தூரம் அதிகரித்திருப்பதையும் அழகாகக் காட்டுகின்றன.
வ.4: இந்த பாடலாசிரியர் தாவீதாக இருந்தால், தாவீது குறிப்பிடும் எதிரிகள் அரசியல் எதிரிகளாக இருக்கலாம். ஆனால் இராணுவ ரீதியாக தாவீதுக்கு அதிகமான எதிரிகள் இருந்திருக்கவில்லை, மாறாக அவருடைய வீட்டில் மற்றும் நண்பர் வட்டத்தில் இருந்திருக்கலாம். எதிரிகளின் எண்ணிக்கையை தன் தலைமுடியிலும் பார்க்க அதிகம் என்கிறார். இறுதியாக தான் திருடாடதை கேட்டால் எப்படி தரமுடியும் என்று புலம்புகிறார். இவர் எதனை திருடினார், அல்லது இதுவும் உருவகமா என்பதில் கேள்விகள் உள்ளன, (לֹא־גָזַלְתִּי אָז אָשִׁיב லொ'-காட்ஸால்தி 'அட்ஸ் 'அஷிவ் - அதை நான் வஞ்சிக்கவில்லை, எப்படி திருப்ப முடியும்?).
வ.5: தாவீது தான் பாவி என்பதை ஒருகாலும் மறைத்ததில்லை. இது தாவீதின் தனித்துவம்.
இதுதான், தாவீதை கடவுளின் பிரியமானவராக விவிலியம் காட்டுவதற்கான முக்கியமான காரணங்களில் ஒன்று. இந்த வரியில் தன்னுடைய பாவத்தை தான் அறிந்திருப்பதாகவும், அதனை கடவுள் அறிந்திருப்பதாகவும் இன்னொருமுறை தாவீது கூறுகிறார். மதிகேட்டையும் (אִוֶּלֶת 'இவ்வேலேத்- மதிகேடு), குற்றத்தையும் (אַשְׁמָה 'அஷ்மாஹ்- தவறு) ஒத்த கருத்துச் சொற்களாக பாவித்து செய்தியை ஆழப்படுத்த முயல்கிறார் ஆசிரியர். இதிலிருந்து தவறுகளுக்கு மூல காரணம் மதிகேடு என்று ஆசிரியர் சொல்வது போல் உள்ளது.
வ.6: இந்த வரியில் வேண்டுதலை முன்வைக்கிறார். இந்த வரி திருப்பிக் கூறல் முறையில் அழகாக அமைக்கப்பட்டிருக்கிறது. கடவுளுக்கு இரண்டு முக்கியமான விவிலிய பெயர்கள் பாவிக்கப்பட்டுள்ளன. ஆண்டவர் படைகளின் ஆண்டவர் என பெயரிடப்படுகிறார் (יְהוִ֗ה צְבָ֫א֥וֹת அதோனாய் ட்ஸெவா'ஓத்). அவர் இஸ்ராயேலின் கடவுள் எனவும் பெயர்பெறுகிறார் (אֱלֹהֵ֗י יִשְׂרָאֵל 'எலோகே யிஸ்ரா'எல்). கடவுளுக்காக காத்திருப்போரும், அவரை நாடுவோரும் ஒத்த கருத்துச் சொற்களில் விவரிக்கப்பட்டுள்ளனர். ஆசிரியர் தன்னையும் இந்த குழுவில் உள்வாங்கியுள்ளார் போல.
வ.7: தன்னுடைய நிகழ்கால துன்பத்திற்கும், அவமானத்திற்கும் கடவுள் மீதுள்ள நம்பிக்கைதான் காரணம் என சொல்லி கடவுளின் கவனத்தை திருப்ப முயல்கிறார். இழிவும் வெட்கக்கேடும் ஒப்பிடப்படுகிறது.
வ.8: தாவீது தன்னுடைய துன்பத்திற்கு காரணம், தன் வீட்டிற்குள்ளே இருப்பதை இந்த வரியில் காட்டுகிறார். தன்னுடைய சகோரர்கள், தாயின் பிள்ளைகள், தன்னை வேற்றவர் போல் பார்ப்பதாக புலம்புகிறார். இவர்கள் உடன் பிறந்தவர்களாக அல்லது ஒன்றுவிட்ட சகோதரர்களா என்பது புரியவில்லை (לְאֶחָי லெ'ஏஹாய் - என் சகோதரர்க்கு: לִבְנֵי אִמִּי லெவெனெ 'இம்மி - என் தாயின் பிள்ளைகளுக்கு).
வ.9: இந்த வரி புதிய ஏற்பாட்டில் கோடிடப்பட்டுள்ளது (காண்க யோவான் 2,17: உரோமையர் 15,3). தாவீது ஆண்டவரிடம் புலம்பினாலும் அவருக்கும் ஆண்டவருக்குமான அன்பில் மாற்றமோ குறைவோ இல்லை என்பதை இந்த வரி காட்டுகிறது.
வ.10: நோன்பிருத்தல் (צּוֹם ட்சோம் - நோன்பு) தாவீதுடைய காலத்தில் செபத்தின் ஒரு முக்கியமான அங்கமாக இருந்தது. இந்த நோன்பின் மூலம், அதனை செய்கிறவர் தன்செயற்பாட்டின் புனிதத் தன்மையை காட்டுவார். ஆனால் அதுவே இவருக்கு ஏளனம் செய்யப்படும் பொருளாக மாறிவிட்டது என புலம்புகிறார்.
வ.11: சாக்கு துணி அணிதல், ஆழ்ந்த புலம்பல் செபத்தினுடைய இன்னொரு அடையாளம். இதனை உடுத்துவது ஒருவர் தன்னை முழுமையாக தாழ்த்திக்கொள்கிறார் என்பதைக் காட்டியது
(לְבוּשִׁי שָׂק லெபூஷி ஸாக் - சாக்கு உடையில்). இந்த உடையையும் தாவீதின் எதிரிகள் பழிக்கிறார்கள். இவர்கள் இந்த நடவடிக்கையை பழிக்கிறார்கள் என தாவீது சொல்லவில்லை மாறாக தன்னை பழிக்கிறார்கள் என்கிறார்.
வ.12: நகரவாயில், அக்காலத்தில் ஊர் பெரியோர்களும் அத்தோடு வேலைவெட்டியில்லாதவர்களும் உட்காரும் இடமாக இருந்தது. சில முக்கியமான சபைகளும் இங்கே கூடியது. சில வேளைகளில் ஊர்த் தலைவர்கள் இங்கே சிறிய தீர்ப்புக்களையும் வழங்கினர். தாவீது இந்த முக்கியமான இடத்தில் இருப்பவர்களை குடிகாரர்கள் என சபிக்கிறார். ஒருவேளை இவர்கள் அரசருக்கு எதிராக புறணி கதைத்தது அவருக்கு தெரிய வந்திருக்கலாம். அத்தோடு இங்கே நாட்டு மக்களுக்கும் தாவீதுக்கும் இடையிலான மனக் கசப்பை காட்டுவது போல் உள்ளது (יֹשְׁבֵי שָׁ֑עַר யோஷ்வே ஷா'அர் - நகரில் வாயில்கள்).
வ.13: இந்த வரியில் வேண்டுதலும் புகழ்ச்சியும் ஒருமித்து வருகிறது. இதுவும் இஸ்ராயேல் வேண்டுதலின் முக்கியமான அம்சம். திருப்பாடல்களில் புலம்பம், வேண்டுதல் மற்றும் புகழ்ச்சிகள் ஒன்றோடொன்று தொடர்புபட்டிருக்கும். கடவுளிடம் மன்றாட்டு செய்யும் வேளையில், அவர் என்றுமே மாறாதவர் எனச் சொல்லி தன்னுடைய விசுவாசத்தின் ஆழத்தைக் காட்டுகிறார்.
வ.14: முதலில் தன் துன்பத்தை நீர்த்திரளுக்கு ஒப்பிட்ட ஆசிரியர், இந்த வரியில் அதனை ஆழ்கடலுக்கு ஒப்பிடுகிறார். சேறையும், ஆழ்கடலையும் தன்னை வெறுப்போரின் தீமைக்கு ஒப்பிடுகிறார். முதல் ஏற்பாட்டில் நீர் மற்றும் கடல் போன்றவை தம்முடைய பௌதீக சக்திகள் மற்றும் அதிசயங்கள் காரணமாக, தீய சக்திகளின் உறைவிடமாக பார்க்கப்பட்டது.
வ.15: வெள்ளம், ஆழ்கடல், படுகுழி போன்றவை மீண்டும் உருவகப்படுத்தப்படுகின்றன. இவை மரணத்தை நினைவூட்டுகின்றன அல்லது மரண வேதனையை நினைவூட்டுகின்றன. இவற்றிலிருந்து தன்னை காக்கும் படியாக வேண்டுகிறார்.
வவ.16-17: ஆண்டவருடைய பதிலுக்காக கெஞ்சுகிறார். பதில்மொழி தருதல் மற்றும் முகத்தை திருப்புதல் போன்றவை வேண்டுதலுக்கு கடவுளுடைய பதில்களாக பார்க்கப்படுகின்றன. ஆசிரியர் கடவுளை மனித வார்த்தையில் காண முயற்சிக்கிறார். இதனால்தான் கடவுளின் முகத்தை தன்பக்கம் திருப்பச் சொல்லி கேட்கிறார்.
ஆண்டவர் தன் முகத்தை மறைக்கிறார் என்றால்;, ஆண்டவர் அந்த நபருக்கு செவிசாயக்கிறார் இல்லை என்று பொருள்.
வவ.18-20: இந்த வரிகள் மீண்டுமாக ஆசிரியருடைய நிகழ்கான துன்பங்களையும், வேதனைகளையும் உணர்வுபூர்வமான வார்த்தைகளால் விளக்க முயல்கின்றன. ஆசிரியர் கடவுளை தன்னை நெருங்கி வருமாறு கேட்கிறார். இதனை என் சுயத்தை (ஆன்மாவை) 'நெருங்கிவந்து, என்னை மீட்டருளும்' என்று எபிரேய விவிலியம் கொண்டுள்ளது (קָרְבָה אֶל־נַפְשִׁי גְאָלָהּ கார்வாஹ் ஏல்-நாப்ஷி கெ'அலாஹ்). இந்த மீட்டருளும் என்ற வார்த்தை, கடவுளுடைய மீட்கும் பணியை நினைவுபடுத்துகிறது. கடவுளுக்கு ஒருவருடைய இழிநிலை மட்டுமல்ல அதற்கு காரணமானவர்களையும் தெரியும் என்று சொல்கிறார்.
பழிச்சொல், இன்று மட்டுமல்ல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னமும் மனிதருடைய அமைதியான வாழ்வை சிதைத்திருக்கிறது என்பது இந்த வரியில் புலப்படுகிறது. இதயத்தின் வேதனை வாழ்வை குழப்புகிறது என்று, இந்த வேளையில் மனிதர்கள் எதிர்பார்க்கும் நட்புகள், உண்மையான உறவுகள் இல்லாமல் இருப்பது எவ்வளவு வேதனையானது எனக் காட்டுகிறார். தாவீது தன்னுடைய துன்பத்தில் யாரையும் காணவில்லை என்கிறார். இவர் அரசராக
இருக்கிறபடியால் இவருக்கு பணிவிடை புரிய பலர் இருந்திருப்பார்கள் இருந்தும் தான் தனிமையாக இருப்பதாகச் சொல்கிறார். இதன் மூலம் இவர் எதிர்பார்ப்பது பணிவிடைகளையல்ல மாறாக உண்மையான உறவை, அதனை மனிதர்கள் தருகிறார்கள் இல்லை என்பதும் புலப்படுகிறது.
வ.21: ஆசிரியர் தன் பகைவர்கள் தனக்கு நஞ்சை கொடுத்தார்கள் என்கிறார். இது உண்மையான செயலைச் சொல்கிறாரா அல்லது அடையாளமாக தன்துன்பத்தை சொல்கிறாரா என்று புரியவில்லை. இந்த வரியின் இரண்டாவது பகுதியை வைத்துப் பார்த்தால் இவர் அடையாளமாக பேசுவதுபோல தோன்றுகிறது. பல அரசர்கள் தங்கள் நண்பர்கள் உறவினர்களால் உணவில் நஞ்சூட்டப்பட்டே கொலைசெய்யப்பட்டார்கள் என்பதற்கு பல வரலாறுகள், சான்றுகள். இந்த வரியின் இரண்டாவது பகுதியில் வரும் 'தாகத்துக்கு காடியைக் கொடுத்தார்கள்' என்பது நற்செய்தியில் இயேசு ஆண்டவர் சொன்ன வார்த்தைகளை நமக்கு நினைவூட்டுகின்றன (காண்க மத் 27,48: மாற் 15,36: லூக் 23,36: யோவா 19,28-29).
வவ.22-23: சாப வரிகள் போல தென்படுகின்றன. ஆசிரியர் தன்னுடைய எதிரிகளை சபிக்கிறார்.
இஸ்ராயேல் விவிலிய இலக்கியத்தில் வருகின்ற சாபங்கள் வித்தியாசமாக நோக்கப்பட வேண்டும். நம்முடைய தமிழ் இலக்கிய கலாச்சாரத்திலும் சபித்தல் என்பது ஒரு ஆற்றுப்படுத்தல் முயற்சியாக
இருந்திருக்கிறது. இதனைப்போலவே எபிரேய சபித்தல் என்பது எதிரி அழிய வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டதல்ல, மாறாக நீதி கிடைக்கவேண்டும் என்பதற்கான எதிர்பார்ப்பு.
அவர்கள் கொடுக்கும் விருந்தே அவர்களுக்கு கண்ணியாகட்டும் என்றும், அவர்கள் கண்கள் ஒளியிழக்கட்டும் என்றும், இடைகள் அசையட்டும் என்றும் தனது கோபத்தை தீர்க்க முயல்கிறார்.
வவ.24-25: கடும்சினம் மற்றும் சினத்தீ போன்றவை இங்கே கடவுளின் நீதியென பார்க்கப்படவேண்டும். கடவுள் சினம் கொள்பவரல்ல மாறாக அவர் நீதியுள்ளவர் அந்த நீதி கோபமாக வெளிப்படும் என்பதை இது உணர்த்துகிறது. தாவீது இவர்களின் பாசறையைப் பற்றி பேசுகிறார். இதற்கு திராஹ் (טִֽירָתָם திராதாம் கூடாரங்கள்) என்ற சொல் பாவிக்கப்பட்டுள்ளது இது கூடாரத்தை பற்றி பேசுகிறபடியால் இந்த காலத்தில் இந்த பாடுபொருளுக்கு உரியவர்கள் கூடாரத்தில் வாழ்ந்திருக்கிறார்கள் என எடுக்கலாம். அல்லது இதுவும் ஒரு அடையாள சொல்லாக பாவிக்கப்பட்டிருக்கலாம்.
வ.26: இந்த வரியின் மூலம் தான் ஏற்கனவே கடவுளால் தாக்கப்பட்டவர் என்பது போல உணர்வதாக தெரிகிறது. இவர் ஒருவேளை தன்னுடைய பாவத்திற்காக தண்டிக்கப்பட்டிருக்கலாம்.
இவருடையை வருத்தம், கடவுள் தன்னை தண்டித்தது பற்றியல்ல மாறாக, மற்றவர்கள் தன்னை ஏளனப்படுத்துவதைப் பற்றியே.
வவ.27-28: இந்த வரிகள் மீண்டுமாக சாப வரிகளாக வருகின்றது. இந்த வரிகளில் பல சாபங்களை முன்வைத்து அதனை மன்றாட்டாக வெளிப்படுத்துகிறார் ஆசிரியர். அவர்கள் மேல் குற்றம் சுமத்தச் சொல்கிறார். இந்த எதிரிகள் எதோ ஒரு விதத்தில் ஆசிரியரின் பலமான எதிரிகளாக இருந்திருக்க வேண்டும், அத்தோடு தாவீது இவர்களால் மிக துன்பம் அடைந்திருக்க வேண்டும். இதனால்தான் இப்படியான கடுமையான வார்த்தைகளை பிரயோக்கின்றார்.
மெய்வாழ்வுக்குரியோரின் புத்தகம் (סֵּפֶר חַיִּם செபெர் ஹய்யிம் - வாழ்வின் புத்தகம்) என்பது இஸ்ராயேலரின் நம்பிக்கைகளில் ஒன்று. நல்லவர்களின் பெயர்கள் இந்த புத்தகத்தில் எழுதப்படும் என்றும் இதனை கடவுள் தன்னோடு வைத்திருக்கிறார் என்ற இவர்கள் நம்பினார்கள். மத்திய கிழக்கு அரச அவைகள் மக்களின் அறிக்கைகளை சுருள்களிலும் புத்தகங்களிலும் எழுதி பாதுகாத்தார்கள். இதனை அவர்கள் ஒரு தெய்வீக வேலையாக கருதினார்கள். தெய்வங்களும்
இப்படி செய்வதாக நினைத்தார்கள். இந்த சிந்தனை எற்றுக்கொள்ளப்படாத நூல்களிலும் அதிகமாக காணப்படுகிறது. இந்த சிந்தனை முதல் ஏற்பாட்டிற்கு மட்டுமல்ல புதிய ஏற்பாட்டிலும் காணப்படுகிறது (காண்க தி.வெளி 3,5: 21,27). இதனைப்போல அழிவின் புத்தகம் என்ற ஒன்றையும் இவர்கள் நம்பினர், அது தண்டனையின் புத்தகமாக கருதப்பட்டது. இதிலிருந்தே பாவிகள் தண்டிக்கப்பட்டார்கள் எனவும் பார்க்கப்பட்டது (காண்க தானி 7,10).
தாவீது தன் எதிரிகளின் பெயர்களை வாழ்வின் புத்தகத்திலிருந்து நீக்கி நீதிமான்களோடு சேர்க்க வேண்டாம் என்கிறார். இவ்வாறு தன்னுடைய பெயர் அந்த பத்தகத்தில் நிச்சயமாக
இடம்பெறும் என நம்புகிறார் என்பது தெரிகிறது.
வ.29: இந்த வரியில் தன்னுடைய உண்மையான தாழ்ச்சியை வெளிப்படுத்துகிறார். தாவீது அரசராக இருந்தும் கடவுள் முன்னிலையில் தன்னை சிறியவன், காயப்பட்டவன், என்று சொல்வது அவருடைய சுய அறிவை நலமாகக் காட்டுகிறது.
வ.30: ஆண்டவர் நன்மைத்தனங்களை செய்கின்றபோது மன்றாடுபவர் என்ன செய்யவேண்டும் என்பதை இந்த வரியில் காட்டுகிறார். ஆண்டவரைப் பாடுதல், அவரை புகழ்தல், நன்றிசெலுத்தல், மற்றும் மாட்சிப்படுத்தல் போன்றவை நல்ல செபமாக அமையும் என்பது போல் உள்ளன. கடவுளின் பெயரை போற்றுதல் என்பது ஆண்டவரை போற்றுதலுக்கு சமனாகும். இஸ்ராயேல் மக்களுக்கு ஆண்டவரைப் போலவே அவருடைய பெயரும் முக்கியமானதாக கருதப்பட்டது. அவருடைய பெயருக்கான புகழ்ச்சி அவருக்கான புகழ்ச்சியாகவே கருதப்பட்டது.
வ.31: காளை மற்றும் எருதுகளை விட ஆண்டவர் விரும்புவது நல்ல வாழ்வு என்பது சொல்லப்படுகிறது. இங்கே இந்த மிருகங்கள் எரிபலியை நினைவூட்டுகின்றன. இந்த வரி மிக முக்கியமான வரி. கடவுள் எரிபலிகளை விரும்புகிறவர் அல்ல என்பது முதல் ஏற்பாட்டில் பல இடங்களில் வந்திருக்கிறது. எரிபலிகள் நடந்த காலத்தில் இந்த வரி புரட்சிகரமான வரியாக இருந்திருக்கும். எரிபலிகள் இல்லாத அதாவது எருசலேம் தேவாலயம் அழிக்ககப்பட்ட காலதில் இந்த வரி உருவாகியிருந்தால் இது, மக்களுக்கு ஆறுதலளிக்கும் வரியாக
இருந்திருக்கும்.
வ.32: எளியோர்கள் என்பது இங்கே துன்புறுகிறவர்களை குறிக்கிறது (עֲנָוִים 'அனாவிம்- துன்புறுகிறவர்கள்). இவர்களை கடவுளை நாடித்தேடுகிறவர்களுடன் (דֹּרְשֵׁי אֱלֹהִים தோர்ஷி 'எலொஹிம்- கடவுளை தேடுகிறவர்கள்) ஒப்பிடுகிறார். இவர்கள் துன்புற்றாலும் நிச்சயமாக மகிழ்ச்சியடைவார்கள் என்பது இவர் நம்பிக்கை.
வ.33: மீண்டுமாக இந்த வரியின் மூலமாக இந்தப் பாடல் பபிலோனிய இடப்பெயர்வு அல்லது அதற்கு பிற்பட்ட கால பாடலாக இருக்குமோ என்ற கேள்வியை எழுப்புகிறது. இந்த வரியில் சிறைப்பட்டவர்கள்தான் இந்த எளியவர்கள் என்று ஒரு வரி வருகிறது. தாவீதின் காலத்தில் மக்கள் வெளிநாடுகளில் சிறைப்பட்டிருந்தார்களா என்பது சந்தேகமே. அல்லது ஆசிரியர் இதனை ஒரு உருவகமாக பாவித்திருக்கலாம்.
வ.34: மக்கள் மட்டுமல்ல மாறாக முழு உலகமே ஆண்டவரை புகழவேண்டும் என பாடுகிறார். மூன்று உலகங்களும் அவற்றில் அசைவன அனைத்தும் உள்வாங்கப்பட்டுள்ளது
(יְהַלְלוּהוּ שָׁמַיִם וָאָרֶץ יַמִּים וְֽכָל־רֹמֵשׂ בָּם யெஹல்லூஹ ஷாமாயிம் வா'அரெட்ஸ் யாமிம் வெகோல்-ரோமெஸ் பாம்- அவரைப்புகழுங்கள் வானங்களே, நிலமே, நீர்களே மற்றும் அதில் அசையும் அனைத்துமே).
வ.35: இந்த வரியை ஆய்வுசெய்கின்ற போது, ஏதோ சீயோன் அழிந்து கிடக்கிறது போல தோன்றுகிறது. தாவீதின் காலத்தில் இப்படி நடந்திருக்க வாய்ப்பில்லை. யூதாவின் நகர்களை கட்டியெழுப்ப வேண்டிய தேவை பபிலோனிய வாழ்விற்கு பின்னரே ஏற்பட்டது. இந்த வரியில் சீயோன், யூதேயாவின் நகர்கள், மற்றும் இஸ்ராயேல் நாடு என்று நிலங்களே முன்னிறுத்தப்படுகின்றன.
வ.36: யார் ஆண்டவருடைய நாட்டில் குடியிருப்பார்கள் என்ற கேள்விக்கு இந்த வரி பதிலளிக்கிறது. கடவுளின் அடியாரின் மரபினர் (זֶרַע עֲבָדָיו ட்செரா' 'அவாடாய்வ்- அவர் பணியாளரின் வித்துக்கள்). இந்த வரியின் அடுத்த பகுதி இவர்களை, ஆண்டவரின் பெயர் மீது அன்புகூறுகிறவர்கள் என விளக்கம் கொடுக்கிறது (אֹהֲבֵ֥י שְׁמוֹ 'ஓஹாவி ஷெம்மோ- அவர் பெரை அன்புசெய்கிறவர்கள்). இவர்கள்தான் ஆண்டவர் கொடுக்கும் நாட்டில் குடியிருப்பார்கள்.
உரோமையர் 5,12-15
ஆதாமும் கிறிஸ்துவும்
12ஒரே ஒரு மனிதன் வழியாய்ப் பாவம் இந்த உலகத்தில் நுழைந்தது; அந்தப் பாவத்தின் வழியாய்ச் சாவு வந்தது. அதுபோலவே, எல்லா மனிதரும் பாவம் செய்ததால், எல்லா மனிதரையும் சாவு கவ்விக்கொண்டது. 13திருச்சட்டம் தரப்படுமுன்பும் உலகில் பாவம் இருந்தது; ஆனால், சட்டம் இல்லாதபோது அது பாவமாகக் கருதப்படவில்லை. 14ஆயினும் ஆதாம் முதல் மோசே வரையில் இருந்தவர்கள் ஆதாமைப்போல் கடவுளின் கட்டளையை மீறிப் பாவம் செய்யவில்லை எனினும் சாவு அவர்கள்மீதும் ஆட்சி செலுத்திற்று இந்த ஆதாம் வரவிருந்தவருக்கு முன்னடையாளமாய் இருக்கிறார்.
15ஆனால், குற்றத்தின் தன்மை வேறு, அருள்கொடையின் தன்மை வேறு. எவ்வாறெனில், ஒருவர் செய்த குற்றத்தால் பலரும் இறந்தனர். ஆனால் கடவுளின் அருளும் இயேசு கிறிஸ்து என்னும் ஒரே மனிதரின் வழியாய் வரும் அருள்கொடையும் பலருக்கும் மிகுதியாய்க் கிடைத்தது.
உரோமையருக்கான திருமுகம் பவுலுடைய திருமுகங்களின் தொகுப்பில் மிக முக்கியமானதொன்று. ஏற்றகனவே கிறிஸ்தவர்களாக இருப்பவர்களுக்கும், தான் உருவாக்காத தளத் திருச்சபை ஒன்றிக்கும் பவுல் இந்த திருமுகத்தை எழுதியிருக்கிறார் என நம்பப்படுகிறது. இது பவுலுடைய திருமுகம் அல்ல, மாறாக அவருக்கு அர்பணிக்கப்பட்டுள்ளது, அதாவது மிக சிக்கலான நடைமுறை தேவைகள் மற்றும் தொடக்க கால திருச்சபை சந்தித்த துன்பங்களின் பொருட்டு பவுல் பெயரில் அவர் சீடர் ஒருவர் இதனை எழுதினார் என்பது ஒரு முக்கியமான வாதமாக இருந்து வருகிறது.
இந்த திருமுகத்தின் நான்காவது அதிகாரம், மனிதர் இயேசுவில் இணைந்தால் ஒழிய புதுவாழ்வு அடைய முடியாது என்பதை உதாரணங்களோடு விளக்குகின்றது. இந்த அதிகாரத்தில் ஒருவர் கடவுளுக்கு ஏற்புடையவர் (καταλλαγή காடால்லாகே- ஏற்புடைமை) ஆகினால், அதனால் விளையும் பயன், மற்றும் ஆதாமிற்கும் கிறிஸ்துவிற்கும் இடையிலான உறவு பற்றி விளக்குகின்றது.
வ.12: ஒரு மனிதன் வழியாக பாவம் இவ்வுலகிற்குள் வந்தது என புதிய ஒப்பீட்டை தொடங்குகிறார்
இந்த புறவினத்தவர்க்கான திருத்தூதர். ஒரே ஒரு மனிதனின் வழியாகத்தான் பாவம் நுழைந்தது என்பது ஆதாமை கடுமையாக தண்டிப்பது போன்ற தோற்றத்தைக் கொடுக்கிறது. இதிலிருந்து யூதர்கள் மட்டில் ஆதாம் எப்படியான அபிப்பிராயத்தை கொண்டிருந்தார் என்பது புலப்படுகிறது. δι᾿ ἑνὸς ἀνθρώπου ἡ ἁμαρτία εἰς τὸν κόσμον εἰσῆλθεν தி ஹெனோஸ் அந்த்ரோபு ஹே ஹமார்டியா ஹெய்ஸ் ஹமார்டியா எய்ஸ் டொன் கொஸ்மொன் எய்ஸேல்தேன் - ஒரு மனிதர் வழியாக பாவம் உலகத்திற்குள் நுழைந்தது. இந்த பாவத்தையும் (ἁμαρτία ஹமார்டியா), சாவையும் (θάνατος தனாடொஸ்) இணைத்துப் பார்க்கிறார் பவுல். இந்த பாவத்தின் வழியாய்தான் சாவு வந்தது என்கிறார் ஆக, ஆதாம் பாவம் செய்திராவிடில் சாவில்லை அத்தோடு சாவு, பாவத்தின் சம்பளம் என்பது அவர் கணிப்பு (காண்க உரோ 6,23).
இது இப்படியிருக்க இந்த சாவு ஏன் எல்லாரையும் பற்றிக்கொள்ளவேண்டும் என்ற உரோமையரின் கேள்விக்கு பதிலையும் தருகிறார். அதாவது ஆதாமைப் போல அனைவரும் பாவம் செய்ய, சாவும் அனைவரையும் கவ்விக்கொண்டது. பாவம் ஆதாம், பாவம் நாம் எல்லாரும்!
வ.13: திருச்சட்டத்தை முன்னிறுத்தி இயேசுவை பின்னிறுத்த பார்த்த பார்வைகளுக்கு விளக்கம் கொடுக்கிறார். அதவாது திருச்சட்டம் மோசேயின் காலத்திற்கு பின்னரே உருவானது, ஆனால் மோசேக்கு முன்பே பாவத்தின் விளைவும் ஆதிகக்மும் இருந்திருக்கிறது. இருப்பினும் அவர்களுக்கு அது பாவம் என்று தெரியாமல் இருந்திருக்கிறது. பவுலுடைய கருத்துப்படி திருச்சட்டம்தான் பாவத்தை பாவம் என்று சொல்லிக்கொடுத்திருக்கிறது. ஆதாமை சாடியவர் இங்கே திருச்சட்டத்தையும் மெல்லச் சாடுகிறார். பாவம் திருச்சட்டம்!
இங்கே திருச்சட்டம் என்று சொல்லப்படுவது (νόμος நொமொஸ்), பத்துக்கட்டளைகளை மட்டுமல்ல மாறாக மோசேயின் அனைத்து கட்டளைகளின் தொகுப்பையும், பல வேளைகளில் இது முதல் ஐந்து புத்தகங்களின் படிப்பினைகளையும் குறிக்கும். இதனைத்தான் இயேசுவுடன் ஒப்பிடும் போது விளக்க முயல்கிறார். (תּוֹרַת מֹשֶׁה தோராத் மோஷேஹ் - νόμος Μωϋσέως நொமொஸ் மோவுசெயோஸ் - மோசேயின் சட்டம்)
வ.14: பவுல் மோசேயையும் அல்லது அனைத்து குலமுதுவர்களையும் ஆதாமோடும் அவர் பாவத்தோடும் ஒப்பிடவில்லை. பவுலின் விளக்கத்தின் படி, ஆதாமிற்கும் மோசேக்கும் இடையில் வாழ்ந்தவர்கள் மோசேயின் சட்டங்களை அறிந்திருக்கவில்லை இதனால் சட்டங்களை உடைக்கவுமில்லை மீறவுமில்லை. இருந்தும் அவர்கள் அனைவரும் இறந்தார்கள். இங்கனம் சட்டத்தை மீறினால் மரணம் என்ற போதனை எல்லாருக்கும் பொருந்தாது எனக் காட்டுகிறார். இறுதியாக ஆதாம் வரவிருந்தவரின் முன்னடையாளம் என்கிறார். இறுதியாக வரவிருந்தவர் இயேசு என்பது அனைவருக்கும் ஆரம்ப கால திருச்சபையில் தெளிவாக தெரிந்திருந்தது (μέλλοντος மெல்லொன்டொஸ்- வரவிருந்தவர்: τύπος டுபொஸ்- அடையாளம்).
வ.15: ஆதாம், பாவம் மற்றும் குற்றம் போன்றவற்றைப் பற்றி பேசியவர், இப்போது அருளைப் பற்றி பேசுகிறார். குற்றத்தையும் அருளையும் ஒப்பிடுகிறார் (παράπτωμα பாராத்டோமா- குற்றம்: χάρισμα காரிஸ்மா- அருள்). ஒருவருடைய குற்றம் (ஆதாமுடையது) காரணமாக பலர் இறந்தனர், ஆனால் ஒருவருடைய குற்றமில்லா வாழ்வு பலருக்கு அருளைக் கொணர்ந்தது என்கிறார். இதுவும் மிகுதியாய் கிடைத்தது என்கிறார். கிரேக்கர்கள் அல்லது கிரேக்க கால படித்தவர்கள் ஒப்பீட்டியல் மற்றும் தத்துவவியல் போன்றவற்றில் புலமைவாய்ந்தவர்கள், இவர்களுக்கு எழுதுகின்றபோது பவுல் அவர்களுடைய மொழியறிவையும் புலமையையும் நன்கு பாவிக்கிறார், இதனைத்தான் இந்த வரிகளில் அவதானிக்கின்றோம். இப்படியாக பவுல் திருச்சட்டத்தை சபிக்கிறார் என்பதைவிட அவர், இயேசுவை முன்னிறுத்தப் பார்க்கிறார் என்றே சொல்ல வேண்டும்.
மத்தேயு 10,26-33
அஞ்சாதீர்கள் (லூக் 12:2-7)
26'எனவே, அவர்களுக்கு அஞ்ச வேண்டாம். ஏனெனில் வெளிப்படாதவாறு மூடப்பட்டிருப்பது ஒன்றும் இல்லை; அறியமுடியாதவாறு மறைந்திருப்பதும் ஒன்றும் இல்லை. 27நான் உங்களுக்கு இருளில் சொல்வதை நீங்கள் ஒளியில் கூறுங்கள். காதோடு காதாய்க் கேட்பதை வீட்டின் மேல்தளத்திலிருந்து அறிவியுங்கள். 28ஆன்மாவைக் கொல்ல இயலாமல். உடலை மட்டும் கொல்பவர்களுக்கு அஞ்சவேண்டாம். ஆன்மாவையும் உடலையும் நரகத்தில் அழிக்க வல்லவருக்கே அஞ்சுங்கள். 29காசுக்கு இரண்டு சிட்டுக் குருவிகள் விற்பதில்லையா? எனினும் அவற்றுள் ஒன்று கூட உங்கள் தந்தையின் விருப்பமின்றித் தரையில் விழாது. 30உங்கள் தலைமுடியெல்லாம் எண்ணப்பட்டிருக்கின்றது. 31சிட்டுக் குருவிகள் பலவற்றைவிட நீங்கள் மேலானவர்கள். எனவே அஞ்சாதிருங்கள்.
மக்கள் முன்னிலையில் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்தல்
(லூக் 12:8 - 9)
32'மக்கள் முன்னிலையில் என்னை ஏற்றுக்கொள்பவரை விண்ணுலகில் இருக்கும் என் தந்தையின் முன்னிலையில் நானும் ஏற்றுக்கொள்வேன். 33மக்கள் முன்னிலையில் என்னை மறுதலிப்பவர் எவரையும் விண்ணுலகில் இருக்கிற என் தந்தையின் முன்னிலையில் நானும் மறுதலிப்பேன்.
மத்தேயு நற்செய்தி இயேசுவை மெசியாவாகவும், புதிய மோசேவாகவும் காட்ட முயல்கிறது என்பது முக்கியமான வாதங்களில் ஒன்று. மத்தேயுவின் வார்த்தை பிரயோகங்கள், புத்தக அமைப்பு முறைகள், பின்புல கதைகள் மற்றும் உவமைகள் பேன்றவற்றை உற்று நோக்குகின்ற போது இந்த எடுகோல் பல விதத்தில் சரியாக அமையும் என நினைக்கலாம். மத்தேயு நற்செய்தியின் 10வது அதிகாரம், திருத்தூதுப் பொழிவு அதிகாரம் என அறியப்படுகிறது. இந்த அதிகாரத்தில்தான் இயேசு தன்னுடைய பன்னிருவரை அழைத்து மிக முக்கியமான அதிகாரங்களைக் கொடுக்கிறார் (வவ.1-4), பின்னர் அவர்களை இஸ்ராயேல் நிலத்திற்குள் மட்டுமே அனுப்புகிறார் (வவ.5-15). அனுப்பப்பட்டவர்கள் நிச்சயமாக துன்பங்களை அடைவர் என்றும் அவர்களை எச்சரிக்கிறார் (வவ.16-25). இப்படிக் கூறியவர், அவர்களை அஞ்சவேண்டாம் என தைரியப்படுத்துவதை இன்றைய வாசகம் கொண்டிருக்கிறது.
வ.26: ஆண்டவர் துன்புறுத்துவோர்க்கு அஞ்சவேண்டாம் என்கிறார். ஆரம்ப கால திருச்சபை யூதர்களாலும், உரோமையர்களாலும், மற்றையவர்களாலும் பலமாக துன்புறுத்தப்பட்டது. சில கிறிஸ்தவர்கள் வெளிப்படையாக கொலையும் செய்யப்பட்டார்கள்.
'வெளிப்படாதவாறு மூடப்பட்டிருப்பது ஒன்றும் இல்லை அறியமுடியாதவாறு மறைந்திருப்பதும் ஒன்றும் இல்லை' என்பது ஒரு பழமொழியாக இருந்திருக்கலாம். இதன் வாயிலாக இந்த உலகில் மறைவு என்பது இல்லை ஆனால் அனைத்தும் திறந்தே இருக்கின்றன என்பதை மத்தேயு காட்டுகிறார்.
மத்தேயு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சொன்னது, இன்று நம்பப்படுகிறது. இந்த எண்ணியல் (டிஜிட்டல்) உலகத்தில் மறைவு மற்றும் இரகசியம் என்பது ஒன்றுமே கிடையாது என்பது நமக்கு நன்கு தெரியும்.
வ.27: எபிரேய மொழிநடையான திருப்பிக்கூறுதலை மத்தேயு அழகாக செய்கிறார். இந்த வசனத்தில் ஒத்த கருத்து வரிகளை அழகாக பாவிக்கிறார். இருளும், காதோடு காதாய் பேசுதலும் ஒத்த கருத்துச் சொற்களாகவும், ஒளியும் வீட்டின் மேற்கூரையும் ஒத்த கருத்துச் சொற்களாகவும் பார்க்கப்படுகின்றன. அதாவது இனிமேல், நற்செய்தி அறிவிப்பு உள்வீட்டு விவகாரம் அல்ல அது அனைவருக்கும் உரியது என்பது அறிவிக்கப்படுகிறது. யோவான் நற்செய்தியைப்போல மத்தேயு இருளை பாவத்தின் அடையாளமாகவும், ஒளியை அருளின் அடையாளமாகவும் பாவிக்கிறாரா என்று தெரியவில்லை மாறாக ஒளியை பரந்த நோக்காகவும், இருளை குறுகிய நோக்காகவும் பாவிப்பது நன்கு தெரிகிறது. (σκοτίᾳ ஸ்கொடியா- இருள்: φῶς போஸ்- ஒளி: ὃ εἰς τὸ οὖς ἀκούετε காதோடு காது: δῶμα தோமா- வீட்டுக் கூரை). காதோடு காதாய் பேசுதல் என்பது தமிழின் அழகான உருவகம், இது இரகசியாமாக பேசுதல் என்ற பொருளைத் தருகிறது. இந்த சொல் கிரேக்க விவிலியத்தில் இப்படியான உருவகத்தால் சொல்லப்படவில்லை (ஒப்பிட ὃ εἰς τὸ οὖς ἀκούετε நீங்கள் கேற்கிற அதை). இது ஒரு கிரேக்க மொழி மரபுக் கூற்று.
வ.28: ஆன்மா என்கின்ற சிந்தனை கிரேக்கர்களுக்கே உரிய மிக முக்கியமான சிந்தனை. இதனை அவர்கள் ψυχή ப்ஸ்வுகே என அழைத்தார்கள். இதற்கு உள்ளுயிர், சுயம், ஆவி, ஆன்மா, உயிர் மூச்சு, என்ற பல அர்த்தங்கள் உள்ளன. ஆன்மாவைப் பற்றிய யூதர்களின் சிந்தனையும் கிரேக்கர்களின் சிந்தனையும் ஒன்றல்ல. கிரேக்கர் காலத்தில் யூதர்களின் ஆன்மா பற்றிய சிந்தனையில், பல கிரேக்க தாக்கங்கள் இருந்ததை காணமுடிகிறது. புதிய ஏற்பாட்டுக்காலம் கிரேக்க-உரோமைய காலம், இந்த காலத்தில் பேசப்படுகின்ற இந்த பொருள் கிரேக்க உலகத்திலிருந்து நோக்கப்பட வேண்டும். கிரேக்கர்கள் உடலை (σῶμα சோமா) ஆன்மாவிற்கு நிகராக கருதவில்லை அதனை இரண்டாம் தரமாகவும், அத்தோடு ஆன்மாவிற்கான ஒரு
இயந்திரமாகவுமே கருதினர். பிளேட்டோ போன்ற கிரேக்க பெரும் தத்துவஞானிகள் இதனையே வலியுறுத்தினர்.
பவுல், மற்றும் திருச்சபை தந்தையர்கள், நற்செய்தியாளர்கள் கிரேக்க சிந்தனைகளை அப்படியே உள்வாங்கினர் அல்லது அதனை கிறிஸ்தவ மயப்படுத்தினர் என்று சொல்வதற்கில்லை. மாறாக இவர்களின் போதனைகள் இந்த சிந்தனைகளை வெகுவாக பாதித்துள்ளன என்று சொல்லலாம். அதேவேளை யூத நம்பிக்கை மற்றும் கலாச்சாரம் குறைவுபடாமல் அங்காங்கே புதிய ஏற்பாட்டில் ஆதிக்கம் செலுத்துகின்றன என்பதையும் காணலாம்.
உடல் அழியும், ஆனால் ஆன்மா அழியாது என்பது அக்காலத்தவரின் நம்பிக்கை,
இருப்பினும் ஆன்மாவையும் தண்டிக்கக்கூடியவர் ஒருவர் இருக்கிறார், அவர்தான் உயிருள்ள கடவுள். அவருக்கு அஞ்சுங்கள் என்பதுதான் மத்தேயுவின் போதனை.
நரகத்தை குறிக்க γέεννα (கெஎன்னா) என்ற கிரேக்கச் சொல் பாவிக்கப்பட்டுள்ளது. இந்த கெஎன்னா எருசலேமில் தென்கிழக்காக உள்ள ஒரு பள்ளத்தாக்கு. முற்காலத்தில் இங்கே குப்பைகள் கொட்டப்பட்டு நெருப்புவகை;கப்பட்டது. சில வேளைகளில் குற்றவாளிகளின் உடல்களும் இங்கே எரியப்பட்டு நெருப்புவைக்கப்பட்டது. இந்த நெருப்பு அணையாமல் இருந்தது. இதனை பார்க்கிறவர்கள் நரகத்தை நினைவுகூர்ந்தார்கள். (நரகம் என்ற சிந்தனை கூட ஆரம்ப கால எபிரேய சிந்தனை இல்லை).
வ.29: மத்தேயு சிட்டுக்குருவிகளை உதாரணத்திற்கு எடுக்கிறார். சிட்டுக்குருவிகள் என்று στρουθίον (ஸ்டுருதியொன்) இந்த கிரேக்க சொல்லை பாவிக்கிறார் மத்தேயு. இது ஒரு சிறியவகை முக்கியமில்லாத குருவியைக் குறிக்கிறது. இது இரண்டு அஸ்ஸாரியொனுக்கு (ἀσσάριον அஸ்ஸாரியொன் - ஒருவகை செப்புக் காசு) விற்கப்பட்டது. இந்த அஸ்ஸாரியொன் ஒரு தெனாரியத்தின் 16இல் ஒரு பங்கைக் குறிக்கும். அதாவது மிக சிறிய தொகை. அரை மணித்தியாலம் வேலைசெய்வதற்கு வழங்கப்படும் உரோமை ஊதியம் இதுவாகும். இப்படியாக முக்கியமில்லாத அல்லது பெறுமதியில்லாத உயிர்களைக் கூட கடவுள் கூர்ந்து கவனிக்கிறார் என்பதுதான் ஆண்டவரின் செய்தி. இந்த சிறிய உயிரினங்கள் கூட கடவுளின் விருப்பம் இல்லாமல் நிலத்தில் விழாது அதாவது மரணிக்காது என்பது மத்தேயுவின் அழகான வரி. இது ஆரம்ப கால துன்புறுத்தப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு இனிமையான செய்தியாக இருந்திருக்கும்.
வ.30: தலைமுடிகள் எல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது என்கிறார் மத்தேயு. தமிழ் பேசும் சில
இடங்களில் மனிதரின் உடலில் பெறுமதியில்லாத பாகம், இந்த முடி (மசிறு). வேறு இடங்களில்
இந்த பொருள்தான் மிக விலையுயர்ந்ததும், பெறுமதியானதும் (தலையில் முடியில்லாதவர்களிடமும், பெண்களிடமும் இதற்கான விடையை பெறலாம்).
முடி (θρίξ த்ரிக்ஸ்), விவிலிய உலகில் முக்கியமான மனிதரின் உடல் பொருளாக
இருக்கிறது. எகிப்தியர்கள் வழுக்கைத் தலையை விரும்பினார்கள். எபிரேயர்களும் அவர் அயலவர்களும் நீண்ட தலைமுடியையும், தாடியையும் விரும்பினார்கள். உரோமைய ஆண்கள் மீசை தாடியில்லா முகத்தையும் விரும்பினார்கள். உரோமைய பெண்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான முடியலங்காரம் செய்தார்கள். நசிரேயர்கள் என்ற ஒரு குறிப்பிட்ட குழு தங்கள் முடியை வெட்டாமல் நீளமாக வளர்த்து கடவுளுக்கு பரிகாரம் செய்ய முயன்றார்கள். சிம்சோன் இப்படியானவர்களுள் ஒருவர் (காண்க 2சாமு14,26). குருக்கள் தங்கள் முடியை வெட்ட தடைசெய்யப்பட்டார்கள். தொழுநோய் பிடித்தவர்கள் மட்டுமே தங்கள் முடியை வழிக்க அனுமதிக்கப்பட்டார்க்ள. பவுல் ஒருவகையான நசிரேய வாக்குறுதியை தன்னுடைய முடியை வெட்டி நிறைவேற்றியதாக திருத்தூதர் பணிகள் நூல் காட்டுகிறது (காண்க தி.ப 18,18). சில இடங்களில் முதல் ஏற்பாட்டிலும் புதிய ஏற்பாட்டிலும் கடவுள் பஞ்சு போன்ற வெள்ளை முடியை கொண்டவராக காட்டப்படுகிறார் (காண்க தானி 7,9: தி.வெளி 1,14). தலை எண்ணெய்யால் திருப்பொழிவு செய்யப்பட்டபோது முடியே திருப்பொழிவு செய்யப்பட்டது, அதேபோல் துன்பமான வேளையில் இந்த முடியின் மேலே சாம்பல் போடப்பட்டது. இயேசுவின் கால்களை நறுமண தைலத்தால் பூசி தன் கூந்தலால் துடைத்த மகதலா மரியாவின் செயல் இங்கு நினைவுகூரப்பட வேண்டும் (லூக் 7,38: யோவான் 11,2). இப்படியான முடி, ஒரு முக்கியமற்ற பொருள் அல்ல.
இந்த முக்கியமான முடி ஒவ்வொன்றும் கடவுளுக்கு முக்கியமானது, அத்தோடு அவற்றை கடவுள் அறிந்திருக்கிறார் என்கிறார் மத்தேயு. அதாவது கடவுளுக்கு தெரியாதது ஒன்றுமில்லை என்பது இதன் பொருள் என எடுக்கலாம்.
வ.31: சிட்டுக்குருவிகளையும், தலை முடியையும் உருவகித்தவர் இங்கே முடிவு செய்கிறார். இந்த வரியை இப்பகுதியின் முக்கியமான செய்தியாக எடுக்கலாம். அதாவது கடவுள் அருகில் இருக்கிற படியால் நாம் பயம் கொள்ளத் தேவையில்லை என்பது அந்த செய்தி. சிட்டுக்குருவிகளைவிட மனிதர்கள் முக்கியமானவர்கள் என்பது மத்தேயுவின் நற்செய்தி, இருப்பினும் சிட்டுக்குருவிகள் முக்கியமில்லாத படைப்புக்கள் என்று சொல்லவில்லை. (இன்று சில இடங்களில் மிருகங்களை அதன் புராணக் கதைகளை முன்னிட்டு, கதாநாயகர்களாக்க, மனிதர்கள் துன்புறுத்தப்படுவதை என்னவென்று சொல்வது).
வவ.31-32: இந்த பகுதி ஆண்டவரை மறுதலிப்பவர்களையும், அவரை ஏற்று சாட்சியம் சொல்பவர்களையும் பற்றி பேசுகிறது. தொடாக்ககால திருச்சபையில் ஆண்டவரையும், விசுவாசத்தையும் மறுதலித்தது திருச்சபையின் மிக முக்கியமான பிரச்சனைகளில் ஒன்றாக இருந்தது. யூத-உரோமைய கொடுமையான கலாபனைகள் இதற்கு காரணமாக இருந்தது.
இந்த பின்புலத்திலே இயேசுவின் வார்த்தைகளை மீட்டுப் பார்கிறார் மத்தேயு. மக்கள் முன்னால் தன்னை ஏற்றுக்கொள்கிறவர்கள் கடவுள் முன்னால் ஏற்றுக்கொள்ளப்படுகிறார்கள். ஏற்றுக்கொள்ளுதலுக்கு கிரேக்க விவிலியம் ὁμολογέω (ஹொமொலொகெயோ) என்ற சொல்லை பயன்படுத்துகிறது. இதற்கு ஆமென், ஆமோதித்தல், விசுவசித்தல், அப்படியே ஏற்றுக்கொள்ளல், மற்றும் புகழ்தல் என்ற பல பொருட்கள் உள்ளன. ஆக ஆண்டவரை விசுவசிக்கிறவர் இவற்றை செய்ய வேண்டியவராக இருக்கிறார். இதனால் ஆண்டவரை ஏற்றுக்கொள்ளல் விழுமியமாகிறது.
மக்கள் முன்னிலையில் இயேசுவை மறுதலிக்கிறவர் கடவுள் முன்னிலையில் இயேசுவால் மறுதலிக்கப்படுவார்கள் என்கிறார் மத்தேயு. மறுதலித்தல் என்பதற்கு கிரேக்க விவிலியம் ἀρνέομαι அர்நெயோமாய் என்ற சொல்லை பயன்படுத்துகிறது. இது மறுதலித்தல், சபித்தல், உடன்படாமல்
இருத்தல், விட்டொழிதல், மற்றும் துறத்தல் என்ற அர்த்தங்களையும் கொடுக்கிறது. ஆக, இயேசுவை மறுதலித்தல் என்பது இந்த செயற்பாடுகள் அனைத்தையும் உள்ளடக்கியிருக்கிறது என்பது போல தென்படுகிறது. ஆக இயேசுவை மறுதலித்தல், பலவீனமாகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக