சனி, 6 மே, 2023

பாஸ்காக் காலம் ஐந்தாம் ஞாயிறு (அ) 07.05.2023 Fifth Sunday Easter 2023 A


 




பாஸ்காக் காலம் ஐந்தாம் ஞாயிறு () 07.05.2023 

Fifth Sunday Easter 2023 A


பாஸ்காக் காலம் ஐந்தாம் ஞாயிறு ()

07.05.2023

M. Jegankumar Coonghe OMI,

‘Sangamam,’

Kopay South, Jaffna,

Friday, 5 May 2023

முதல் வாசகம்: திருத்தூதர் 6,1-7

பதிலுரைப்பாடல்: திருப்பாடல் 33

இரண்டாம் வாசகம்: 1பேதுரு 2,4-9

நற்செய்தி: லூக்கா: யோவான் 14,1-12


திருத்தூதர் 6,1-7

திருத்தொண்டர்களை நியமித்தல்


1அக்காலத்தில் சீடர்களின் எண்ணிக்கை பெருகி வந்தது. அப்போது, கிரேக்க மொழி பேசுவோர் தங்களுடைய கைம்பெண்கள் அன்றாடப் பந்தியில் முறையாகக் கவனிக்கப்படவில்லை என்று எபிரேய மொழி பேசுவோருக்கு எதிராக முணுமுணுத்தனர். 2எனவே பன்னிரு திருத்தூதரும் சீடர்களை ஒருங்கே வரவழைத்து, 'நாங்கள் கடவுளது வார்த்தையைக் கற்பிப்பதை விட்டுவிட்டுப் பந்தியில் பரிமாறும் பணியில் ஈடுபடுவது முறை அல்ல. 3ஆதலால் அன்பர்களே, உங்களிடமிருந்து, நற்சான்று பெற்றவர்களும் தூய ஆவி அருளும் வல்லமையும் ஞானமும் நிறைந்தவர்களுமான எழுவரைக் கவனமாய்த் தெரிந்தெடுங்கள். அவர்களை நாம் இந்தப் பணியில் நியமிப்போம். 4நாங்களோ இறை வேண்டலிலும், இறை வார்த்தைப் பணியிலும் உறுதியாய் நிலைத்திருப்போம்' என்று கூறினர். 5திரளாய்க் கூடியிருந்த சீடர் அனைவரும் இக்கருத்தை ஏற்றுக்கொண்டனர். அதன்படியே அவர்கள் நம்பிக்கையும் தூய ஆவியும் நிறைந்த ஸ்தேவான், பிலிப்பு, பிரக்கோர், நிக்கானோர், தீமோன், பர்மனா, யூதம் தழுவிய அந்தியோக்கிய நகரத்து நிர்கொலா என்பவர்களைத் தெரிந்தெடுத்து 6அவர்களைத் திருத்தூதர் முன்னால் நிறுத்தினார்கள். திருத்தூதர் தங்கள் கைகளை அவர்கள்மீது வைத்து இறைவனிடம் வேண்டினர். 7கடவுளது வார்த்தை மேன்மேலும் பரவி வந்தது. சீடர்களின் எண்ணிக்கை எருசலேம் நகரில் மிகுதியாகப் பெருகிக் கொண்டே சென்றது. குருக்களுள் பெருங் கூட்டத்தினரும் இவ்வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து நம்பிக்கை கொண்டனர்.


  பிரிவினை வாதம் திருச்சபையின் காலைச் சுற்றிய பாம்பு, மிகவும் ஆபத்தானது. இந்த இழி நிலை தொடக் கால திருச்சபையையே பதம் பார்த்திருக்கிறது, ஆக இக்கால திருச்சபையை இந்த பிரிவினைவாதம் என்னவெல்லாம் செய்யும் என்பதை சொல்லித் தெரியவேண்டிய அவசியமில்லை. திருச்சபை தொடங்கியபோது அதில் அங்கத்துவம் பெற்றிருந்த அனைத்து ஆரம்ப கிறிஸ்தவர்களும் யூத கிறிஸ்தவர்களாகவே. இந்த யூத கிறிஸ்தவர்களுள் இரண்டு வகையானவர்கள் இருந்தார்கள். பாலஸ்தீனத்தில் வாழ்ந்த யூதர்கள் அரமேயிக்க மொழியை பேசினார்கள், இவர்கள் எபிரேய யூதர்கள் என அழைக்கப்பட்டார்கள். வெளியிடங்களில் அதாவது பாலஸ்தீனாவிற்கு வெளியில் புலம் பெயர்ந்து வாழ்ந்தவர்கள் அக்கால சர்வதேச மொழியான கிரேக்க மொழியை பேசினார்கள். பாலஸ்தீனா மற்றும் இஸ்ராயேலின் வரலாற்றில் பல காலங்களில் ஏற்பட்ட போர் மற்றும் கட்டாய இடப்பெயர்வுகள் காரணமாக பல ஆயிரம் யூத மக்கள், வடக்கு மற்றும் மேற்கு ஐரோப்பா, தூர கிழக்கு ஆசியா, வடக்கு ஆபிரிக்கா போன்ற பிரதேச நாடுகளுக்கு புலம் பெயர்ந்தார்கள்இவர்கள் கிரேக்க மொழியை மற்றும் பேசவில்லை அந்த மொழியோடு சேர்த்து கிரேக்க கலாச்சாரம் மற்றும் நாகரீகத்தையும் தமதாக்கினார்கள். பாலஸ்தீன யூதர்கள் மற்றும் புலம்பெயர்ந்த யூதர்கள், இனத்தால் யூதர்களாக இருந்தாலும், இவர்களிடையே தாயகம், புலம் மற்றும் எபிரேயம், கிரேக்கம் என்ற பெரிய பிரிவினைவாதம் இருந்தது. ஈழத்தமிழர் மற்றும் புலம்பெயர்ந்த தமிழர் என்ற பெரிய பாகுபாடு நம்மிடையே இருப்பது போல.


.1: இவ்விருவருக்கும் இடையிலான கசப்புணர்விற்கான காரணத்தை லூக்கா விளக்குகிறார். சீடர்களுடைய எண்ணிக்கை பெருகுவதனால் அவர்களிடையே இயற்க்கையாகவே தேவைகளும் சிக்கல்களும் பெருகும். கிரேக்க மொழி பேசிய யூதர்கள் (Ἑλληνιστῶν Hellênistôn) தங்கள் கைம்பெண்கள் (χῆραι chêrai), அன்றாட பந்தியில் (ἐν τῇ διακονίᾳ τῇ καθημερινῇ en tê diakonia tê kathêmerinê) கவனிக்கப்படுவதில்லை என குற்றம் சாட்டுகின்றார்கள். கைம்பெண்களை கவனித்தல் விவிலியத்தின் மிக முக்கியமான விழுமியங்களில் ஒன்று. இணைச்சட்ட நூல் மற்றும் இறைவாக்குகள் நூல்களின் படிப்பினைகளின் படி இவர்கள் சமுதாயத்தில் மிகவும் வறியவர்களாகவும், பின்தங்கியவர்களாகவும் இருந்த படியால் இவர்களை கவனிக்க வேண்டியது இஸ்ராயேல் சமுகத்தின் மிக முக்கியமான அறமாக இருந்தது. (காண்க .. 10,18: 16,11.14: எசா 1,17-23: எரே 7,6: மலாக் 3,5). அன்றாட பந்தி என்பது, அன்றாட உணவு பரிமாற்றத்தைக் குறிக்கிறது. ஆரம்ப காலத்தில் திருச்சபையின் சொத்துக்கள் அனைத்தும் பொதுவுடமையாக வைக்கப்பட்டிருந்த போது, அங்கத்தவர்களுக்கான உணவு பரிமாற்றங்களும் பொதுவாகவே நடைபெற்றன. இப்படியான உணவுப் பகிர்விலே இந்த கைம்பெண்கள் சரியாக கவனிக்கப்படுகிறார்கள் இல்லை என்பதுதான் இந்த கிரேக்க யூதர்களின் குற்றச்சாட்டு


.2: இந்த குற்றச்சாட்டிற்கு திருத்தூதர்களின் விளக்கம் கொடுக்கப்டுகிறது. கடவுளின் வார்த்தையை கற்பிப்பதை விட்டுவிட்டு, பந்தியில் பரிமாறுவதற்கு முக்கியத்துவம் கொடுப்பது முறையல்ல என்கின்றனர். இந்த வரியை யூத கலாச்சாரத்தில் பார்க்க வேண்டும். பந்தியில் பரிமாறுதல் அதாவது மேசையில் உணவு பரிமாறுதல் என்பது யூத வீட்டுத் தலைவனின் முக்கியமான பணி. இதனைத்தான் இயேசுவும் பல வேளைகளில் செய்திருக்கிறார் (காண்க லூக் 22,19: 24,30). இங்கே பந்தியில் பரிமாறுவதற்காக பயன்பட்டுள்ள சொல் (τράπεζα trapedza), மேசை வாணிகம் என்ற அர்த்தத்தையும் கொடுக்கிறது. இந்த இடத்தில் திருத்தூதர்கள் இறைவார்த்தை பகிர்விற்கு முக்கியம் கொடுக்கிறார்கள் அன்றி, மேசை பகிர்வை புறக்கணிக்கிறார்கள் என்று சொல்ல முடியாது.


.3: திருத்தூதர்கள் சீடர்களை, இந்த முக்கியமான பணியான மேசைப் பணிக்கு மிகவும் தகுதியானவர்களும், நற்சான்று பெற்றவர்களும், தூய ஆவியாரின் வல்லமையும், ஞானமும் நிறைந்தவர்களை தெரிவு செய்யுமாறு கேட்கிறார்கள். இவர்களுக்கான தகைமைகளை திருத்தூதர்கள் முன்வைப்பதிலிருந்தே இந்த மேசைப் பணி எவ்வளவு முக்கியமானது என்பது புலப்படுகிறது. இவர்கள் தூய ஆவியாரின் வல்லமையில்லாமல் இந்த பணியை முன்னெடுக்க முடியாது என்பது திருத்தூதர்களின் வாதமாக இருக்கிறது. அத்தோடு இவர்கள் எழுவராக இருக்க வேண்டும் என்பதும் திருத்தூதர்களின் நிபந்தனையாக இருக்கிறது. ஏழு (ἑπτά hepta), நிறைவைக் குறிக்கிறது. ஆக இவர்கள் தெரிவிலும், ஞானத்திலும் பக்குவத்திலும், நிறைவானவர்களாக இருக்க அழைக்கப்படுகிறார்கள். யூத நகர சபைகள் அநேகமாக ஏழு அங்கத்தவர்களை கொண்டிருந்தன இதனை போலவே இந்த புதிய வேலைக்கான சபையும் இருக்க வேண்டும் என திருத்தூதர்கள் விரும்புகிறார்கள் போல


.4: இனி தாங்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்பதை திருத்தூதர்கள், சீடர்களுக்கு தெரியப்படுத்துகிறார்கள். இறைவேண்டலும் இறைவார்த்தை பணியும் முக்கியத்துவம் பெறுகிறது (ἡμεῖς δὲ  τῇ προσευχῇ καὶ τῇ διακονίᾳ τοῦ λόγου  προσκαρτερήσομεν). இந்த வசனம் திருத்தூதர்களின் பணித் தெரிவை காட்டுகின்றதே அன்றி, புதிய திருத்தொண்டர்கள் 

இனி இறைவார்த்தைப் பணியையும், செபப் பணியையும் முன்னெடுக்க மாட்டார்கள் என்று சொல்லவில்லை. பின்நாட்களில் திருத்தொண்டர்கள் பிலிப்புவும், ஸ்தேவானும் இறைவார்த்தை பணியையே மிக முக்கியமாக செய்ததனை திருத்தூதர்கள் பணிகள் நூலில் காணலம்


.5: இங்கே இன்னொரு கூட்டம் காட்டப்படுகிறது. இவர்களை கூடியிருந்த திரளான சீடர்கள் (παντὸς τοῦ πλήθους) என லூக்கா காட்டுகிறார். இதிலிருந்து சீடர்கள் பெரும் திரளாக இந்த முக்கியமான வேளையில் கூடியிருந்தார்கள் எனலாம். இந்த சீடர் கூட்டம் முக்கியமான எழுவரை தெரிவு செய்கிறது, அவர்கள் தூய ஆவியிலும் நம்பிக்கையிலும் நிறைந்தவர்கள் எனப்படுகிறார்கள். இந்த தகைமைதான் ஆரம்ப கால சீடர்களின் தகைமையாக இருந்திருக்கிறது (πλήρης πίστεως καὶ πνεύματος ἁγίου). 


. ஸ்தேவான் (Στέφανος Stefanos): எழுவரின் முதலாமவராக வருகிறபடியால் முக்கியமானவராக கருதப்பட்டிருக்க வேண்டும். இவர்தான் திருச்சையில் முதலாவது மறைசாட்சி. ஸ்டெபானொஸ் என்ற கிரேக்க சொல்லிற்கு மணிமுடி அல்லது கிரீடம் என்ற பொருள் உண்டு. இதனால்தான் இவரை பழைய அழகு தமிழ், முடியப்பர் என்று விழிக்கிறது. இவர் ஒரு கிரேக்க மொழி பேசிய யூத கிறிஸ்தவர். கிரேக்க மொழி பேசிய யூதர்களுக்கு இவர் இயேசுவை அறிவிக்க பல வழிகளில் முயன்றார். இவருடைய உரைதான் திருத்தூதர் பணிகள் நூலில் உள்ள மிக பெரிய உரை. இவருடைய இயேசு அறிவிப்பு கிரேக்க யூதர்களை அதிகமாக பாதித்தது, இதனால் சிலர் இவர் மேல் கோபம் கொண்டு, பொய் குற்றம் சாட்டி இவரை தலைமைச் சங்கத்தின் தீர்ப்பிற்கு உள்ளாக்கி கல்லால் எறிந்து கொலை செய்தனர் (காண்க தி.பணி 7,54-8,4). இவர் மேசைப் பணிக்காக தெரிவு செய்யப்பட்டாலும், இறைவார்த்தை பணியிலே மிக முக்கியமாக தன்னை இவர் ஈடுபத்தியதை விவிலியம் காட்டுகிறது. இவர் இயேசுவை எருசலேமிற்கு வெளியில் அறிவித்தவர்களில் முக்கியமானவராகிறார் அத்தோடு இவருடைய மரணம் இயேசுவின் மரணத்தை சில வழிகளில் ஒத்திருக்கிறது


. பிலிப்பு (Φιλίππος filippos): இவர் தியாக்கோனாக தெரிவு செய்யப்பட்டாலும் நற்செய்தி அறிவிப்பு பணிக்கு மிக முக்கியத்தும் கொடுக்கிறார். எத்தியோப்பிய அரச அதிகாரிக்கு நற்செய்தியை அறிவித்து அவருக்கு திருமுழுக்கும் கொடுத்தார் (காண்க தி.பணி 8). இவரும் நற்செய்தியை எருசலேமிற்கு வெளியில் முக்கியமாக சமாரியாவிற்கு கொண்டு போனவர்களில் மிக முக்கியமானவர். இவருக்கு நான்கு மகள்கள் இறைவாக்கினள்களாக இருந்திருக்கிறார்கள் (காண்க தி.பணி 21,8-9). பிற்கால விவிலிய ஆய்வாளர்கள் இந்த திருத்தொண்டர் பிலிப்புவை, திருத்தூதர் பிலிப்போடு ஒன்றாக்கி காண முயன்றிருக்கிறார்கள். ஆனால் லூக்காவின் அறிவிப்புப் படி இவர் திருத்தூதர் பிலிப்பாக இருக்க முடியாது


. பிரக்கோர் (Πρόχορος): இவர் திருத்தொண்டர் எழுவரில் ஒருவர். இந்த இடத்தில் மட்டுமே இவர் அறியப்படுகிறார். திருச்சபையின் ஒரு பாரம்பரியத்தின் படி, இவருக்குத்தான் யோவான் நற்செய்தியாளர் தன்னுடைய நாற்செய்தியை அர்ப்பணித்தார் என்றும் நம்பப்படுகிறது


. நிக்கானோர் (Νικάνωρ): மக்கபேயர் புத்தகத்தில் நிக்கானோர் என்ற ஒரு கிரேக்க இராணுவ அதிகாரி இருந்திருக்கிறார், அவர் யூதா மக்கபேயுவிற்கு எதிராக போர் செய்திருக்கிறார் (1மக் 3,38). இந்த புதிய எற்பாட்டு நிக்கானோர் ஒரு திருத்தொண்டர், இவர் சீடர்கள் மத்தியில் பிரபல்யமாக இருந்திருக்கிறார். இவரைப் பற்றி வேறு தவல்கள் இல்லை


. தீமோன் (Τίμων): இவரை திருத்தூதர் பணி நூல் எழு திருத்தூதர்களில் ஒருவராக காட்டுவதை தவிர வேறு எந்த தகவலும் புதிய ஏற்பாட்டில் இல்லை


. பர்மனா (Παρμενᾶς): இவரும் இந்த எழுவரில் ஒருவர்


. நிர்கொலா (Νικόλαος). இவரும் திருத்தூதர்களால் தெரிவு செய்யப்பட்ட முதல் ஏழு திருத்தொண்டர்களுள் ஒருவர். விவிலியம் இவரை யூதம் தழுவிய அந்தியோக்கு நகர வாசி என்கிறது. இதன் மூலம் மற்றவர்கள் பிறப்பால் யூதர்கள் என்பது புலப்படுகிறது. இவரும் கிரேக்க மொழி பேசியவர் என்பது தெரிகிறது. இந்த நிர்கொலா பிற்காலத்தில் திருச்சபையிற்கு எதிராக கிளர்ந்து நிக்கொலாசியம் என்ற பேதகத்தை பரப்பினார் என்ற ஒரு சிறிய வாதமும் இருக்கிறது, ஆனால் இதற்கு சரியான ஆதாரங்கள் இல்லை (காண்க தி.வெ. 2,6). 

 இப்படியாக இந்த எழுவர் கிரேக்க யூத கைம்பெண்களை கவனிக்கவும், மேசை பந்தி உணவுப் பரிமாற்றத்தை கவனிக்கவும் திருத்தூதர்களால் ஏற்படுத்தப்படுகிறார்கள்


.6: இந்த எழுவரையும், சீடர்கள் தெரிவு செய்து அவர்களை திருத்தூதர்கள் முன்னால் நிறுத்துகிறார்கள். பின்னர் திருத்தூதர்கள் தங்கள் கைகளை வைத்து (ἐπέθηκαν αὐτοῖς τὰς χεῖρας) அவர்களுக்கு செபம் செய்கிறார்கள். கைகளை வைத்து செபித்தல் ஆரம்ப காலம் தொட்டே திருச்சபையின் அபிசேக செபத்தின் அடையாளமாக இருந்திருக்கிறது என்பது இங்கணம் புலப்படுகிறது.


.7: இந்த வரியில் லூக்கா கடவுளின் வார்த்தையை எழுவாய்ப் பொருளாக எடுக்கிறார் (ὁ λόγος τοῦ  θεοῦ). இதிலிருந்து இந்த திருத்தொண்டர்களும் இறைவார்த்தை பணியை உடனடியாக முன்னெடுத்தார்களோ என்ற சந்தேகம் எழுகிறது. அத்தோடு சீடர்களின் எண்ணிக்கை எருசலேமில் பெருகியது, இதனால் இவர்கள் அனைவரும் யூத கிறிஸ்தவர்கள் என்ற ஊகமும் வருகிறது. இறுதியாக குருக்களும் (ἱερέων), கிறிஸ்தவ சீடத்துவத்தினுள் இணைகிறார்கள் என்கிறார் லூக்கா. யார் இந்த குருக்கள், இவர்கள் ஒருவேளை சதுசேயர்களாக இருந்திருக்கலாம்


திருப்பாடல் 33

புகழ்ச்சிப் பாடல்

1நீதிமான்களே, ஆண்டவரில் களிகூருங்கள்; நீதியுள்ளோர் அவரைப் புகழ்வது பொருத்தமானதே. 2யாழிசைத்து ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; பதின் நரம்பு யாழினால் அவரைப் புகழ்ந்து பாடுங்கள்

3புத்தம்புது பாடல் ஒன்றை அவருக்குப் பாடுங்கள்; திறம்பட இசைத்து மகிழ்ச்சிக்குரல் எழுப்புங்கள்

4ஆண்டவரின் வாக்கு நேர்மையானது; அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிக்கைக்கு உரியவை. 5அவர் நீதியையும் நேர்மையையும் விரும்புகின்றார்; அவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது. 6ஆண்டவரது வாக்கினால் வானங்கள் உண்டாயின் அவரது சொல்லின் ஆற்றலால் வான்கோள்கள் எல்லாம் உருவாயின

7அவர் கடல்நீரைக் குவியல்போல் சேர்த்துவைத்தார்; அந்நீரை ஆழ் நிலவறைகளில் சேமித்துவைத்தார்

8அனைத்துலகும் ஆண்டவருக்கு அஞ்சுவதாக! உலகில் வாழ்வோர் அனைவைரும் அவருக்கு அஞ்சிநடுங்குவராக

9அவர் சொல்லி உலகம் உண்டானது; அவர் கட்டளையிட, அது நிலை பெற்றது. 10வேற்றினத்தாரின் திட்டங்களை ஆண்டவர் முறியடிக்கின்றார்; மக்களினத்தாரின் எண்ணங்களைக் குலைத்துவிடுகின்றார்

11ஆண்டவரின் எண்ணங்களோ என்றென்றும் நிலைத்திருக்கும்; அவரது உள்ளத்தின் திட்டங்கள் தலைமுறை தலைமுறையாய் நீடித்திருக்கும்

12ஆண்டவரைத் தன் கடவுளாகக் கொண்ட இனம் பேறுபெற்றது; அவர் தமது உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறுபெற்றோர்

13வானினின்று ஆண்டவர் பார்க்கின்றார்; மானிடர் அனைவரையும் காண்கின்றார்

14தாம் வீற்றிருக்கும் இடத்திலிருந்து உலகெங்கும் வாழ்வோரைக் கூர்ந்து நோக்குகின்றார். 15அவர்களின் உள்ளங்களை உருவாக்குகின்றவர் அவரே! அவர்களின் செயல்கள் அனைத்தையும் உற்று நோக்குபவரும் அவரே

16தன் படைப் பெருக்கத்தால் வெற்றிபெரும் அரசருமில்லை; தன் வலிமையின் மிகுதியால் உயிர் தப்பிய வீரருமில்லை

17வெற்றி பெறப் போர்க்குதிரையை நம்புவது வீண்; மிகுந்த வலுவுள்ளதாயினும் அது விடுவிக்காது. 18தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன்புக்காகக் காத்திருப்போரையும் ஆண்டவர் கண்ணோக்குகின்றார்

19அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்; அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார். 20நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம்; அவரே நமக்குத் துணையும் கேடயமும் ஆவார்

21நம் உள்ளம் அவரை நினைத்துக் களிகூரும்; ஏனெனில், அவரது திருப்பெயரில் நாம் நம்பிக்கை வைத்துள்ளோம்

22உம்மையே நாங்கள் நம்பியிருப்பதால், உமது பேரன்பு எங்கள்மீது இருப்பதாக!


திருப்பாடல்கள் புத்தகத்திலுள்ள அழகான பாடல்களில் இந்த 33வது பாடலும் ஒன்றாகும். எபிரேய கவிநயத்தின் பல அம்சங்களை இந்த பாடல் தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த பாடல் ஆறு வரி சரணங்களில் தொடங்கி அதே போல் ஆறு வரி சரணங்களில் முடிவடைகிறது (1-3, 20-22). தொடக்க மற்றும் முடிவு வரிகள் கடவுளிடம் நம்பிக்கையை கேட்டு அதனை உறுதிப்படுத்துகிறன. மிகுதி எட்டு வரிகளும், சோடி சோடியாக ஒவ்வொரு செய்தியை முக்கியப்படுத்துகின்றன. அதிகமான வரிகள் திருப்பிக்கூறல் என்ற எபிரேய கவிநடையைக் கொண்டுள்ளன.  


.1: நீதிமான்கள் இங்கே இணை பாடு பொருளாக காட்டப்பட்டுள்ளனர். கடவுளின் நீதிமான்கள் (צַדִּיקִים dzaddîkîm) வித்தியாசமானவர்கள், அவர்கள் கடவுளில் மகிழ்ச்சி கொள்பவர்கள் என்ற ஆழமான எபிரேய சிந்தனை இங்கே முன்வைக்கப்பட்டுள்ளது. நீதிமான்களும், நீதியுள்ளோர்களும் (יְשָׁרִ֗ים yešārîm) ஒத்த கருத்துச் சொற்கள்


.2: யாழும் (כִנּוֹר kinnôr), பதின் நரம்பு (נֵבֶל עָשׂ֗וֹר nēvel ‘āsôr) இசைக் கருவியும் எபிரேய இசைக்கருவிகளில் பிரசித்தம் பெற்றவை. இவற்றைக் கொண்டு ஆண்டவரை புகழுமாறு ஆசிரியர் பாடுகிறவர்களை கேட்கிறார்


.3: பாடிய பாடலையே பாடாமல் புதிய பாடல் (שִׁיר חָדָשׁ šîr hādāš) ஒன்றை கேட்கிறார் ஆசிரியர். புதிய பாடல் ஆண்டவரின் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது. புதிய பாடலுக்கென்று ஒரு தனித்துவம் இருக்கிறது, இதனையே மனித அரசர்கள் தங்கள் அரசவையில் விரும்பினர். அதனைப் போலவே கடவுளுக்கு மிகவும் முக்கியமாக பாடல் கேட்கப்படுகிறது. இந்தப் பாடல், மகிழ்ச்சிக் குரல் என்று ஒத்த கருத்தும் சொல்லப்படுகிறது (תְרוּעָה terû‘āh)


.4: இந்த வரியில் தலைப்பு மாறுகிறது. இந்த வரியிலிருந்து ஆண்டவரின் பண்புகள் விவரிக்கப்படுகின்றன. ஆண்டவரின் வாக்கு (דְּבַר־יְהוָ֑ה devar-YHWH) நேர்மையானதாகவும், அதற்கு ஒத்த கருத்துச் சொல்லாக, அவரின் செயல்கள் (מַעֲשֵׂ֗הוּ ma‘asēhû) காட்டப்படுகின்றன. இதிலிருந்து மனித தலைவர்களின் வாக்குகள் அவ்வளவு நேர்மையானவையல்ல எனவும், அவர்களின் செயல்கள் அவ்வளவு நம்பிக்கைக்கு உரியவை இல்லை என்பதும் காட்டப்படுகிறது


.5: ஆண்டவர் நீதியையும் (צְדָקָה dzedāqāh), நேர்மையையும் (מִשְׁפָּט mišpāt) விரும்புகிறவராக காட்டப்படுகிறார். பூவுலகிற்கும் அழகான அடையாளம் கொடுக்கப்படுகிறது. பூவுலகு எதனால் நிறைந்துள்ளது, அது ஆண்டவரின் அன்பால் நிறைந்துள்ளது, ஆக இது நல்ல பூவுலகு என்பது மீண்டும் நிலைநிறுத்தப்படுகிறது (חֶסֶד יְהוָ֗ה מָלְאָה הָאָרֶץ).


.6: மீண்டுமாக அவருடைய வல்லமை காட்டப்படுகிறது. இந்த வானங்கள் (שָׁמַיִם šmayim), மற்றும் வான் கோள்கள் (כָּל־צְבָאָם kôl-dzevā’ām) எல்லாம் அவருடைய சொல்லால் உருவாக்பட்டவை என்கிறார் ஆசிரியர். வான் கோள்கள் என்பதை எபிரேய விவிலியம் வானின் படைகள் என்றே கொண்டுள்ளது


.7: கடல் நீரைப் (מֵי הַיָּם mê  hayām) பற்றிய பலவிதமான அறிவுகளும் ஊகங்களும் அக்கால ஆசிரியர்களுக்கு இருந்திருக்கிறது. இந்த கடல் நீரை கடவுள் குவியலாக குவித்து வைத்துள்ளார் என்பது, கடவுள் கடல் நீரின் மேல் சகல அதிகாரமும் உடையவர் என்பதைக் காட்டுகிறது. அத்தோடு இப்படி செய்தன் வாயிலாகத்தான் நிலம் உருவாகியிருக்கிறது என்பதும் புலப்படுகிறதுநிலவறைகள் (תְּהוֹמֽוֹת tehômôt) என்பது ஆழத்தின் ஆழத்தைக் குறிக்கின்றது


.8: இந்த வரியில் மீண்டும் பாடலின் அமைப்பு மாறுகிறது. இதிலிருந்து மக்களுக்கான கட்டளைகள் பிறப்பிக்கப்படுகின்றன. ஆண்டவருக்கு அஞ்சுதல் என்பது விவிலியத்தின் கருத்துப்படி ஞானம், இதனால்தான் மனிதர்கள் பாவத்தை தவிர்க்கின்றனர் என்பது சொல்லப்படுகிறது. இதனால் கடவுளுக்கு அஞ்சுங்கள் அதாவது பாவம் செய்யாதீர்கள் என்பது சொல்லப்படுகிறது


.9: கடலைப் பற்றி பாடிய ஆசிரியர் இப்போது உலகத்தை பற்றி பாடுகிறார். கடல் மட்டுமல்ல உலகமும் அவருடைய கட்டளையால்தான் உருவானது என்கிறார். உலகின் உருவாக்கம், அதன் நிலைநிறுத்தம் என்பன கடவுளின் கட்டளைக்கு உட்பட்டது என்கிறார். இந்த வரியில் உலகம் என்பது நேரடியாக சொல்லப்படவில்லை, ஆனால் எட்டாவது வரியில் அது சொல்லப்பட்ட படியால் இந்த வரியின் எழுவாய்ப் பொருளாய் உலகத்தை எடுக்கலாம் (כָּל־הָאָרֶץ kôl-hā‘āredz)


.10: வேற்றினத்தார் (גּוֹיִם gôiyîm) மற்றும் மக்களினத்தார் (עַמִּים ‘ammîm) என்போர் இங்கே தீயவர்கள் மற்றும் பொல்லாதவர்களைக் குறிக்கிறது. சாதாரண மக்களை அது குறிக்கவில்லை என்பதை நோக்க வேண்டும்


.11: வேற்றினத்தாரின் திட்டங்களை முறியடிக்கும் கடவுள், தன் திட்டத்தை நிலைநிறுத்துகிறார் என்கிறார். இதன் வழியாக கடவுளின் திட்டத்தை யாரும் முறியடிக்க முடியாது என்பது புலப்படுகிறது. அவருடைய திட்டங்கள் காலத்தைக் கடந்தும் தலைமுறை தலைமுறையாக நிலைத்து நிற்கக் கூடியவை என்கிறார்


.12: இஸ்ராயேலின் நிலை காட்டப்படுகிறது. வேற்றினத்தார் பொய்த் தெய்வங்களை தேர்ந்தெடுத்திருக்கிற வேளை, இஸ்ராயேல் ஆண்டவரை தன் கடவுளாக தெரிந்தெடுத்திருக்கிறது (אֲשֶׁר־יְהוָה אֱלֹהָיו). அதே வேளை, கடவுளும் இந்த மக்களை தன் உரிமைச் சொத்தாக தேர்ந்தெடுத்திருக்கிறார் (לְנַחֲלָה לוֹ) இதனால் இந்த இனமும் பேறு பெற்றிருக்கிறது


வவ.13-14: கடவுள் எங்கிருந்து தன் மக்களை பார்க்கிறார் என்ற கேள்விக்கு இந்த வரிகள் பதிலளிக்கின்றன. கடவுள் வானத்திலிருந்து தன் மக்களை பார்க்கிறார், இந்த வானம் உயரத்தில் இருக்கிறது அதாவது அது தூய்மையானதாக இருக்கிறது என்பது அக்கால ஆசிரியர்கள் நம்பிக்கை. வானம் விசாலமாக இருக்கிறதாலும், அது மனித அறிவிற்கு அப்பால் இருக்கிறதாலும் இந்த நம்பிக்கை வலுப்பெற்றது


.15: கடவுளுடைய பார்வை மனிதரின் வெளிப்புறத்தை மட்டுமல்ல, மாறாக அது அவர்களின் அகத்தையும் நன்கு நோக்குகிறது என்று தன்னுடைய அறிவின் ஆழத்தை காட்டுகிறார் ஆசிரியர். கடவுள் மனிதரின் உள்ளத்தை உருவாக்கி, அவர்களின் செய்ல்கள் அனைத்தையும் உற்று நோக்குகிறார். உள்ளம் என்பதற்கு எபிரேய விவிலியம், இதயம் என்ற சொல்லை பாவித்திருக்கிறது (לֵבָב levāv). இதயம், என்பது உள்ளம் மற்றும் உள்ளுணர்வு என்ற பல அர்த்தங்களைக் கொடுக்கும்


வவ.16-17: உலக அரசர்களுக்கு புத்தி புகட்டுகிறார் ஆசிரியர். அரசரின் வெற்றிக்கு காரணம் அவர்களின் பெரிய படை என்பது உலக ஞானம், அல்லது வீரரின் வெற்றிக்கு காரணம் அவரது உடல் வலிமை என்பதும் இதனையே குறிக்கிறது. இது அஞ்ஞானம் என்கிறார் ஆசிரியர். போர்க்குதிரை (הַסּוּס hasûs) அக்காலத்தில் மிக முக்கியமான போர் சாதனம், இது கூட உயிரைக் காக்காது என்கிறார் இந்த ஞான ஆசிரியர். எபிரேய விவிலியம் இந்த இடத்தில் குதிரை என்று மட்டுமே சொல்கிறது, ஆனால் தமிழ் விவிலியம், அர்த்தத்தை மனதில் கொண்டு தெளிவிற்க்காக போர்க்குதிரை என்று விவரிக்கின்றது


வவ.18-19: ஆரம்ப வரிகளில் சொல்லப்பட்ட நீதிமான்கள் யார், என்று இந்த முடிவு வரிகள் தெளிவு படுத்துகின்றன. அவர்கள் கடவுளுக்கு அஞ்சி நடப்பவர்கள் (אֶל־יְרֵאָ֑יו ‘el-yerê’āy), அத்தோடு அவர்கள் கடவுளுடைய பேரன்பிற்காக காத்திருப்பவர்கள் (לַמְיַחֲלִים lamyahalîm). கடவுள் இவர்களை சாவினின்று பாதுகாக்கிறார், அத்தோடு பஞ்சத்திலிருந்தும் காக்கிறார். இந்த இரண்டும் அக்காலத்தில் அறியப்பட்ட மிகவும் சாதாரண ஆனால் கடுமையான ஆபத்துக்கள்


வவ.20-21: இஸ்ராயேலர் யார் என்பது இந்த வரியில் காட்டப்பட்டுள்ளது. இந்த வரியில் 'நாம்' (נוּ) என்று  முதல் நபரைப் பன்மைப் பொருளில் பாடுகிறார். இவர்கள் கடவுளை நம்பியிருக்கிறவர்கள் 

(חִכְּתָ֣ה לַיהוָה hiktāh laYHWH), அத்தோடு இவர்களுக்கு கடவுளே துணையும் கேடயமும் ஆவார் (עֶזְרֵנוּ וּמָגִנֵּנוּ הוּא ‘edzrênû wûmāginnênû hû’). இவர்கள் கடவுளை நினைத்து களிக்கிறவர்கள் அத்தோடு அவரின் பெயரில் மகிழ்கிறவர்கள்.


.22: இந்த வரி ஆசீராகவும், முடிவுரையாகவும் வருகிறது. கடவுளுக்கு அன்புக் கட்டளை கொடுக்கிறார். இந்த இஸ்ராயேலின் கடவுள் மீது இவர் மக்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள், இதனால் அவர் பேரன்பு இவர்கள் மீது இருப்பது நியாயமே என்கிறார் (יְהִי־חַסְדְּךָ יְהוָה עָלֵינוּ yehî-hasdekā YHWH ‘ālênû)



1பேதுரு 2,4-9

4உயிருள்ள கல்லாகிய அவரை அணுகுங்கள். மனிதரால் உதறித் தள்ளப்பட்டதாயினும் கடவுளால் தெரிந்து கொள்ளப்பட்ட உயர்மதிப்புள்ள கல் அதுவே. 5நீங்களும் உயிருள்ள கற்களாயிருந்து, ஆவிக்குரிய இல்லமாகக் கட்டி எழுப்பப்படுவீர்களாக! இயேசு கிறிஸ்துவின் வழியாய்க் கடவுளுக்கு உகந்த ஆவிக்குரிய பலிகளைப் படைக்கும் தூய குருக்களின் கூட்டமாகவும் இருப்பீர்களாக! 6ஏனெனில், 'இதோ, சீயோனில் நான் ஒரு மூலைக்கல் நாட்டுகிறேன். அது தேர்ந்தெடுக்கப்பட்ட, விலையுயர்ந்த மூலைக்கல். அதில் நம்பிக்கை கொண்டோர் பதற்றமடையார்' என்று மறைநூலில் காணக்கிடக்கிறது. 7நம்பிக்கை கொண்ட உங்களுக்கு அது உயர்மதிப்புள்ளதாக விளங்கும். நம்பிக்கை இல்லாதவர்களைப் பொறுத்தமட்டில், 'கட்டுவோர் புறக்கணித்த கல்லே முதன்மையான மூலைக்கல்லாயிற்று.' 8மற்றும் அது, 'இடறுதற் கல்லாகவும் தடுக்கி விழச்செய்யும் கற்பாறையாகவும்' இருக்கும். அவர்கள் வார்த்தையை ஏற்காததால் தடுக்கி விழுகிறார்கள்; இதற்கென்றே அவர்கள் குறிக்கப்பட்டிருக்கிறார்கள். 9ஆனால், நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வழிமரபினர், அரச குருக்களின் கூட்டத்தினர், தூய மக்களினத்தினர்; அவரது உரிமைச் சொத்தான மக்கள். எனவே உங்களை இருளினின்று தமது வியத்தகு ஒளிக்கு அழைத்துள்ளவரின் மேன்மைமிக்க செயல்களை அறிவிப்பது உங்கள் பணி.

பேதுருவின் முதலாவது திருமுகத்திலுள்ள இந்த 'உயிருள்ள கல்லும், தூய இனமும்;' என்ற பகுதி மிகவும் அழகானதும் ஆழமானதுமாகும். கிறிஸ்துவை மூலைக் கல்லாக உருவகித்து 

இறையியல் படுத்துவது புதிய ஏற்பாட்டில் மிக முக்கியமான படிப்பினைகளில் ஒன்று. கிறிஸ்தவர்கள் தனி மனிதராகவும், சமுகமாகவும் வளரவேண்டும் என்பதை பேதுரு இங்கு வலியுறுத்துகிறார். பேதுருவிற்கு கிறிஸ்து தான் வாழுகின்ற மூலைக் கல். இவரைப் போல் வாழுகின்ற கற்களாக கிறிஸ்தவர்கள் மாற வேண்டும் என்பது இவர் கோரிக்கை. கற்கள் தம்மிலே வலுவற்றது, ஆனால் மற்றவையோடு இணைந்து கட்டப்படுகிறபோது அவை வலுப்படுத்தப்படுகிறது. ஆன்மீக இல்லத்தை அமைக்கும் ஒவ்வொரு அங்கத்தவரும் இரண்டு விதமான பணிகளை செய்ய அழைக்கப்படுகிறார், அவை: வணங்குதல் மற்றும் அறிவித்தலாகும். இதனை விவரிக்க பேதுரு முதல் ஏற்பாட்டு உருவகங்களை கையாளுகிறார்


.4: இயேசுவிற்கு அழகான உருவகத்தை கொடுக்க முயற்சிக்கிறார் இயேசுவின் தலைமைத் தளபதி, தூய பேதுரு. இயேசுவை உயிருள்ள கல் என்கிறார் (λίθον ζῶντα lithon dzônta). இந்த கல் மனிதரால் உதறித்தள்ளப்பட்ட கல் (ἀποδεδοκιμασμένον), ஆனால் கடவுளால் தெரிந்துகொள்ளப்பட்ட  உயர் மதிப்புள்ள கல் (ἐκλεκτὸν ἔντιμον eklekton entimon). இங்கே உதறித்தள்ளிய மனிதர்கள் என்பவர்கள் இயேசுவில் நம்பிக்கை கொள்ளாமல் அவருடைய சாவிற்கு காரணமானவர்களைக் குறிக்கிறது. இந்த கல் சாவடிக்கப்பட்டாலும் அது உயிருள்ள கல், அந்த கல்லிற்கு அழிவில்லை என்கிறார்.


.5: இந்த வரியில் கிறிஸ்தவர்கள் இந்த உயிருள்ள கல்லை முன்னுதாரணமாக கொள்ள வேண்டும் என கேட்கப்படுகிறார்கள். இவர்களும் உயிருள்ள கற்களாக இருக்க வேண்டும் என்கிறார் (ὡς λίθοι ζῶντες hôs lithoi dzôntes). உயிருள்ள கற்கள் என்பது, வளர்ச்சியுள்ள திருச்சபையை காட்டுகிறது. அத்தோடு இந்த இல்லம் ஆவியின் இல்லமாக மாறவேண்டும் (πνευματικὸς pneumatikos). அத்தோடு இயேசுவின் வழியாக கடவுளுக்கு பலி ஒப்புக்கொடுக்கும் தூய குருத்துவ கூட்டமாகவும் இது எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வரி பல அர்த்தங்களையும், சொற்பிரயோகங்களையும் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இதனை அவதானமாக வாசிக்க வேண்டும்


.6: பேதுரு ஒரு மறைநூலை கோடிடுகிறார். இந்த இறைவாக்கு எசாயா 28,16 (ஆதலால், ஆண்டவராகிய என் தலைவர் கூறுவது இதுவே; இதோ! சீயோனில் நான் ஓர் அடிக்கல் நாட்டுகின்றேன்; அது பரிசோதிக்கப்பட்ட கல்; விலையுயர்ந்த மூலைக்கல்; உறுதியான அடித்தளமாய் அமையும் கல்; 'நம்பிக்கை கொண்டோன் பதற்றமடையான்.) இலிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது

இங்கே சொல்லப்படுகின்ற சீயோனின் மூலைக்கல் (Σιὼν λίθον Siôn lithon), அரச மெசியாவைக் குறிக்கிறது. இதனை பேதுரு இயேசு ஆண்டவருக்கு பயன்படுத்துகிறார். எசாயாவோடு சேர்ந்து இந்த கல்லை விலைமதிப்பற்றதாகவும், நம்பிக்கைக்கு உரிய கல்லாகவும் காட்டுகிறார்


.7: நம்பிக்கை கொண்டோருக்கும், நம்பிக்கை கொள்ளாதோருக்கும் இந்த கல் எவ்வாறு தோற்றம் தருகிறது என்பது காட்டப்படுகிறது. நம்பிக்கை கொண்டோருக்கு இது விலைமதிப்பற்ற கல், மற்றவருக்கு இது புறக்கணிக்கப்பட்ட கல். 'கட்டுவோர் புறக்கணித்த கல் மூலைக்கல்லாயிற்று' என்ற இறைவாக்கையும் இங்கே உதாரணத்திற்கு எடுக்கிறார். இந்த இறைவார்த்தை, தி.பா 118,22: மத் 21,42: மாற் 12,10: லூக் 20,17: மற்றும் தி.பணி 4,11 இல் காணப்படுகின்றது. இதன் மையமாக கடவுளின் தெரிவும், மக்களின் அறியாமையும் காட்டப்படுகிறது


.8: இந்த கல்லின் இன்னொரு முகத்தை விளக்குகிறார் பேதுரு. இந்த கல், இடறுதற் கல்லாகவும், தடுக்கிவிழச் செய்யும் கற்பாறையாகவும் காட்டப்படுகிறது. இதற்கான காரணமாக இடறி விழுகிறவர்களின் அவநம்பிக்கை காட்டப்படுகிறது. தடுக்கி விழச்செய்யும் கற்பாறை (πέτρα σκανδάλου petra skandalou) என்பதற்கு (σκάνδαλον ஸ்கன்தலோன்) என்ற கிரேக்க சொல் பாவிக்கப்பட்டுள்ளதுஇது பாவத்திற்கான காரணம் என்ற அர்த்தத்தையும் கொடுக்கும். இது இவர்களுக்கு அவர்களுடைய நம்பிக்கையின்மையினால் நிச்சயமாக நடைபெறும் என்பது பேதுருவின் வாதம்


.9: இந்த வரி பேதுரு திருமுகத்தின் மிக முக்கியமான வரி. இதனைப் பற்றி மட்டுமே நூற்றுக்கணக்கான புத்தகங்களும், ஆயிரக்கணக்கான கட்டுரைகளும் எழுதப்படுகின்றன. பேதுரு கிறிஸ்தவர்களை முக்கியமாக அனைத்து கிறிஸ்தவர்களையும், அவர்கள் யூதர்கள் அல்லாவிடினும், அவர்கள் தேர்ந்துகொள்ளப்பட்ட வழிமரபினர் என்கிறார் (γένος ἐκλεκτόν genos eklekton). இது மிகவும் நோக்கப்பட வேண்டிய வரி. இஸ்ராயேல் மக்கள்தான் தங்களை தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களினம் என்றார்கள், ஆனால் இங்கே, கிறிஸ்துவின் மேலுள்ள நம்பிக்கையால் அனைவரும் இந்த நிலையை அடைகிறார்கள், அதேவேளை நம்பிக்கை இல்லாவிடில் யூதர்களும் இந்த நிலையை இழப்பார்கள் என்றும் பேதுரு சொல்வதைப் போல் உள்ளது

 இரண்டாவதாக இவர்களை அரச குருக்களின் கூட்டத்தினர் என்கிறார் (βασίλειον ἱεράτευμα Basileion hierateuma)இந்த இரண்டு பணிகளும் முதல் ஏற்பாட்டில் இரண்டு பணிகளாகவே காட்டப்படுகிறன. மெல்கிசதேக்கும், மெசியாவும் மட்டுமே இந்த பணிகளை சேர்த்து செய்பவர்களாக காட்டப்படுகின்றார்கள். சவுல் இப்படியான இரண்டு வேலைகளையும் செய்ய முனைந்தபோதுதான் அரச நிலையில் இருந்து விலக்கப்பட்டார் (காண்க 1சாமு 13,5-15). இங்கே பேதுரு உதாரணப்படுத்துவது அனைத்து கிறிஸ்தவர்களையும் குறிக்கும், இதனை கிறிஸ்தவ குருக்களுக்கு மட்டுமே உரியது என்று சொல்வதற்கில்லை


 மூன்றாவதாக பேதுரு, இந்த மக்களை தூய மக்களினத்தார் (ἔθνος ἅγιον ethnos hagion) என்கிறார். தூய மக்களினம் என்பது விடுதலைப் பயணம் மற்றும் லேவியர் புத்தகங்களின் மிக முக்கியமான கருப்பொருட்கள். கடவுள் தூய்மையானவராக இருப்பதனால் அவர் மக்களும் அவ்வாறே எதிர்பார்க்கப்படுகிறார்கள். இஸ்ராயேல் மக்களின் அதிகமான தூய்மை சடங்குகள் இதனையே குறித்தன. சில வேளைகளில் தங்களை சுற்றியிருந்தவர்களை அவர்கள் தூய்மையற்றவர்களாக கருதினார்கள். இவையனைத்தும் இங்கே கிறிஸ்துவில் உள்ள நம்பிக்கையால் பொய்த்துப்போகிறது. கிறிஸ்துவை நம்புவதன் வாயிலாக அனைவரும் தூய மக்களாக மாறுகிறார்கள்


இறுதியாக இவர்களை கடவுளின் உரிமைச் சொத்தான மக்கள் என்கிறார் பேதுரு (περιποίησιν). இப்படியான வரப்பிரசாதங்கள் கிடைப்பதனால் இவர்கள் பல கடமைகளையும் பெறுகிறார்கள். இனி இவர்கள் அமைதியாக இருக்க முடியாது மாறாக இந்த நல்ல கிறிஸ்துவை இவர்கள் அறிவிக்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள். இந்த மக்கள் கூட்டம் 

இருளினின்று ஒளிக்கு வந்தபடியால் (ἐκ σκότους ὑμᾶς καλέσαντος εἰς τὸ θαυμαστὸν  αὐτοῦ φῶς·), இதனை அறிவிக்க வேண்டும்


யோவான் 14,1-12

1மீண்டும் இயேசு, 'நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம். கடவுளிடம் நம்பிக்கை கொள்ளுங்கள். என்னிடமும் நம்பிக்கை கொள்ளுங்கள். 2தந்தை வாழும் இடத்தில் உறைவிடங்கள் பல உள்ளன. அப்படி இல்லையெனில், 'உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்யப்போகிறேன்' என்று சொல்லியிருப்பேனா? 3நான் போய் உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்தபின் திரும்பிவந்து உங்களை என்னிடம் அழைத்துக்கொள்வேன். அப்போது நான் இருக்கும் இடத்திலேயே நீங்களும் இருப்பீர்கள். 4நான் போகுமிடத்துக்கு வழி உங்களுக்குத் தெரியும்' என்றார். 5தோமா அவரிடம், 'ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர் என்றே எங்களுக்குத் தெரியாது. அப்படியிருக்க நீர் போகுமிடத்துக்கான வழியை நாங்கள் எப்படித் தெரிந்து கொள்ள இயலும்?' என்றார். 6இயேசு அவரிடம், 'வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை. 7'நீங்கள் என்னை அறிந்திருந்தால் என் தந்தையையும் அறிந்திருப்பீர்கள். இது முதல் நீங்கள் தந்தையை அறிந்திருக்கிறீர்கள். அவரைக் கண்டுமிருக்கிறீர்கள்' என்றார். 8அப்போது பிலிப்பு, அவரிடம், 'ஆண்டவரே, தந்தையை எங்களுக்குக் காட்டும்; அதுவே போதும்' என்றார். 9இயேசு அவரிடம் கூறியது: 'பிலிப்பே, இவ்வளவு காலம் நான் உங்களோடு இருந்தும் நீ என்னை அறிந்துகொள்ளவில்லையா? என்னைக் காண்பது தந்தையைக் காண்பது ஆகும். அப்படியிருக்க, 'தந்தையை எங்களுக்குக் காட்டும்' என்று நீ எப்படிக் கேட்கலாம்? 10நான் தந்தையினுள்ளும் தந்தை என்னுள்ளும் இருப்பதை நீ நம்புவதில்லையா? நான் உங்களுக்குக் கூறியவற்றை நானாகக் கூறவில்லை. என்னுள் இருந்துகொண்டு செயலாற்றுபவர் தந்தையே. 11நான் தந்தையுள் இருக்கிறேன்; தந்தை என்னுள் இருக்கிறார். நான் சொல்வதை நம்புங்கள்; என் வார்த்தையின் பொருட்டு நம்பாவிட்டால் என் செயல்களின் பொருட்டாவது நம்புங்கள். 12நான் செய்யும் செயல்களை என்னிடம் நம்பிக்கை கொள்பவரும் செய்வார்; ஏன், அவற்றைவிடப் பெரியவற்றையும் செய்வார். ஏனெனில் நான் தந்தையிடம் போகிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.


  யோவான் நற்செய்தியின் அடையாள பாவனைக்கு யோவான் நற்செய்தி மட்டுமே நிகர். பல அடையாளங்களை கையாண்டு இயேசுவை உன்னதமான கடவுளாக காட்டுகிறார் யோவான். இந்த பதினாங்காம் அதிகாரம், பயம் கொண்ட சீடர்களுக்கு நம்பிக்கை கொடுப்பதைப்போல அமைக்கப்பட்டுள்ளது. பதின்மூன்றாம் அதிகாரத்தில் சீடர்களின் கால்களை கழுவிய இயேசு, பின்னர் தனக்கு நடக்கவிருப்பதை விளக்கிக் கூறுகிறார். பின்னர் அவர்களுக்கு புதிய கட்டளையைக் கொடுத்து, பேதுரு கூட தன்னை மறுதலிப்பார் என்பதை விளக்குகிறார். இது இவர்களுக்கு பல கேள்விகளையும் அச்சங்களையும் இயற்கையாவே உருவாக்கியிருக்கும். இப்படியாக மனவுளைச்சலுக்கு உள்ளான தன் சீடர்களை இந்த அதிகாரத்தில் திடப்படுத்தி நம்பிக்கை அளிக்கிறார்


.1: குழம்பிப்போயிருந்த சீடர்களுக்கு நம்பிக்கை கொடுக்கிறார் இந்த நம்பிக்கையின் தெய்வம். ἐκ σκότους ὑμᾶς καλέσαντος εἰς τὸ θαυμαστὸν  αὐτοῦ φῶς· இது, 'நீங்கள் உங்கள் இதயத்தில் கலக்கம் கொள்ள வேண்டாம்' என்ற அர்த்தத்தைக் கொடுக்கிறது. உள்ளம் கலங்காமல் இருக்க என்ன செய்யவேண்டும் என்ற பதிலும் தரப்படுகிறது, அதாவது இவர்கள் நம்பிக்கை கொள்ளவேண்டும் என கேட்கப்படுகிறார்கள் (πιστεύετε εἰς τὸν θεὸν pisteuete eis ton theon). அத்தோடு இன்னொரு கட்டளையும் சேர்த்து கொடுக்கப்படுகிறது அதாவது இனி அவர்கள் இயேசுவிலும் நம்பிக்கை கொள்ளச் சொல்லி கேட்கப்படுகிறார்கள் (εἰς ἐμὲ πιστεύετε eis eme pisteuete).  


.2: தந்தையின் இடத்தில் பல உறைவிடங்கள் உள்ளன என்ற இந்த வரி மிக இனிமையானது

இது ஓர் அடையாள வரி. இங்கே உறைவிடங்கள் (μοναὶ πολλαί monai pollai) என்பது இறைபராமரிப்பை குறிக்கின்றது. இதனை உலக உறைவிடங்கள் போல் கனவு கண்டால் இதன் இறையியல் ஆழம் குறைந்து போகும்இந்த உறைவிடங்களுக்கு பாவிக்கப்பட்டுள்ள μοναὶ மொனாய்என்ற சொல் அரமேயிக்க சொல் எனவும், அது வழியிலே தங்குகின்ற இடங்களை குறிக்கின்ற சொல் எனவும் சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர். திருச்சபை தந்தை ஒரிஜன் இதனை, கடவுளை நோக்கிய பயணத்தின் தங்குமிடம் என விவாதித்திருக்கிறார். இலத்தீனில் இந்த சொல்லிற்கு, இலத்தீனில் மொழிபெயர்த்தவர்கள், மன்சியோ (mansio) என்ற சொல்லை பயன்படுத்தினர், இதுவும் தங்குமிடத்தைக் குறிக்கிறது. ஆங்கில மொழி பெயர்ப்பாளர்களும் இந்த சொல்லை மேன்ஷன் (Mansion) என்று மொழிபெயர்த்தார்கள். இது பிற்காலத்தில் கிரேக்க சிந்தனையைக் கொண்டு தூய்மையாக்கும் இடம் என்ற பொருளையும் கொடுத்தது. ஆனால் யோவான் நற்செய்தியில் இந்த மெனோ (μένω menô) என்கின்ற சொல் இயேசுவிற்கும் அவர் சீடர்களுக்கும் நம்பிக்கையால் கிடைக்கும் நிரந்தர உறவையே குறிக்கிறது. இது தற்காலிக இடம் அல்ல மாறாக நிரந்தர இடம்இயேசு தான் சொல்லிய வார்த்தை உண்மையானது என்பதைக் குறிக்க அதனையே கேள்வியாகக் கேட்கிறார்


.3: இந்த வரி இயேசுவின் விண்ணேற்பையும், அவருடைய இரண்டாம் வருகையையும் காட்டுவது போல உள்ளது. சிலர் இதனை தூய ஆவியாரின் வருகையுடனும், அல்லது ஒருவருடைய மரணத்துடனும் ஒப்பிட விளைகின்றனர். எது எவ்வாறெனினும், இறுதியான பகுதி அழகான வரியாக அமைகிறது. அதாவது இயேசு திரும்பி வந்த பின், அழைக்கப்பட்டவர்கள் இயேசுவின் இடத்திலேயே இருப்பார்கள் என்பதுதான் அந்த வரி (ἵνα ὅπου εἰμὶ ἐγὼ καὶ ὑμεῖς ἦτε. hina hopou eimi egô kai humeis ête). ஆண்டவரோடு இருத்தல் என்பது யோவான் நற்செய்தியின் மிக முக்கியமான செய்திகளில் ஒன்று


.4: இயேசு இன்னொரு முக்கியமான செய்தியை சீடர்களுக்கு சொல்கிறார். அதாவது தன்னுடைய பயணத்தின் வழி சீடர்களுக்கு தெரியும் என்கிறார். யோவான் நற்செய்தியில் வியப்பாகுவதும், பின்னர் கேள்வி கேட்பதும், அதன் பின்னர் இயேசு அதனை விளக்குவதும் சாதாரணம். அதுவே இங்கே நடைபெறுகிறது. இயேசு மிக முக்கியமான திட்டங்களை விளக்கிக்கொண்டிருக்கும் வேளை, சீடர்களின் பார்வை மிக மந்தமாக இருப்பதையும் யோவான அழகாகக் காட்டுகிறார்


.5: தோமாவை அறிமுகப்படுத்துகிறார் யோவான். தோமா மிகவும் முக்கியமானவராக, ஆரம்ப கால திருச்சபையில் இருந்திருக்க வேண்டும். இந்த கேள்வி தோமாவின் கேள்வியா அல்லது யோவான் திருச்சபையிலிருந்த சில சீடர்களின் கேள்வியா என்பதில் பல வியாக்கியானங்கள் உள்ளன. இருப்பினும் தோமா இபபடியான கேள்விகளை கேட்கக்கூடியவர் என்பதில் ஐயமில்லை. தோமாவின் கேள்வி மிகவும் யதார்த்தமாக உள்ளது. அவர் இயேசுவைப் பார்த்து 'நீர் போகும் இடமே எங்களுக்கு தெரியாது, அப்படியிருக்க அதற்கான வழியை எப்படி தெரிந்து கொள்ள முடியும்' (κύριε οὐκ οἴδαμεν ποῦ ὑπάγεις· πῶς  δυνάμεθα τὴν ὁδὸν εἰδέναι;). இந்த கேள்வி அக்காலத்தில் யோவான் திருச்சபையை குழப்பிய கேள்வியாக மட்டுமல்ல தற்கால திருச்சபையையும் குழப்பும் கேள்வியாகவும் அமையலாம்


.6: இயேசுவின் பதில்களில் மிக முக்கியமானதும், மிக தேவையானதாகவும் இந்த வரி அமைகிறது. இயேசு தன்னை வழி, உண்மை, வாழ்வு என்கிறார் (ἐγώ εἰμι ἡ ὁδὸς καὶ ἡ ἀλήθεια καὶ ἡ ζωή egô eimi ê hodos kai hê alêtheia kai hê dzôê). நானே என்கின்ற இயேசுவின் வார்த்தை முதல் ஏறபாட்டில் இறைவார்த்தையை வாசகர்களுக்கு நிச்சயமாக நினைவூட்டும். இயேசுவின் காலத்திலும், ஆரம்ப கால திருச்சபையில் பலர் தங்களை பாதையாகவும், உண்மையாகவும் அத்தோடு வாழ்வு தருபவர்களாகவும் காட்டியிருந்தார்கள். இவர்களின் வசீகர வார்த்தைகள் சலனத்தை ஏற்படுத்தியவேளை, யோவான் இயேசுவின் வார்த்தைகளை தன் நண்பர்களுக்கு நினைவூட்டுகிறார். கிரேக்க சிந்தனையில் இந்த மூன்று சொற்களும் மிக முக்கியமானவை. இந்த சொற்களில் அரிஸ்டோட்டில், பிளேட்டோ சோக்கிறடீஸ் போன்றோர் பல தத்துவங்களை முன்வைத்தனர். இந்த பின்புலத்தில் இயேசுவே தேவையான வழியாகவும், உண்மையாகவும், வாழ்வாகவும் காட்டப்படுகிறார். அத்தோடு தந்தையை அடைவதே அனைவரின் இலக்காக இருக்கின்ற வேளை அது இயேசுவின்றி சாத்தியமில்லை என்ற கூற்றையும் நினைவூட்டுகிறார் யோவான்


.7: இயேசுவையும் தந்தையையும் அறிதல் ஒன்றானது. சீடர்கள் தன்னை அறிந்திருக்கிறார்கள் ஆக தந்தையை அறிந்திருக்கிறார்கள் என்கிறார் இயேசு. இந்த வரி, மொழி பெயர்க்க மிகவும் கடினமாக வரியாக அமைகிறது. கிரேக்க விவிலியம் இந்த வரியில் 'ஆல்' (εἰ) வினையை பாவிக்கின்றது. இந்த ஆல்வினை எதிர்மறை விடையையே சாதாரணமாக தருகிறது. இதனால் சீடர்கள் இன்னமும் தன்னை அறியவில்லை இதனால் தந்தையை அறியவில்லை என்ற அர்த்தத்தைக் கொடுக்கிறது என்றும் சிலர் வாதிடுகின்றனர். அறிதலுக்கும் (γινώσκω ginôskô) காணுதலுக்கும் (ὁράω horaô) இடையில் நெருங்கிய தொடர்பிருக்கிறது என்பதையும் இந்த வரி காட்டுகிறது


.8: யோவான், பிலிப்பு திருத்தூதரை அறிமுகப்படுத்துகிறார். இவர் பெத்சாய்தாவை சேர்ந்தவர், யோவான் நற்செய்தியில் இவரின் அழைப்பை நாம் காண்கின்றோம் (காண்க யோவா 1,43-48). இந்த பிலிப்புதான் நத்தானியேலை இயேசுவிடம் அழைத்து வந்தவர். இவருடைய பெயர் எபிரேய பெயர் என்பதைவிட கிரேக்க பெயர் போலவே தோன்றுகிறது. சிலர் திருத்தூதர் பிலிப்புவையும், திருத்தொண்டர் பிலிப்புவையும் ஒரே நபராக காண முயல்கின்றனர். அதற்கான வாய்ப்புக்கள் புதிய ஏற்பாட்டில் மிக குறைவாகவே உள்ளன. யோவான் நற்செய்தியில் இந்த பிலிப்புதான் அப்பங்களை இயேசு பெருக்க காரணமாக அமைந்தவர் (காண்க யோவா 6,5.7). இந்த பிலிப்பு மூலம்தான் கிரேக்கர்கள், இயேசுவை காண முயற்சி செய்தார்கள் (காண்க யோவா 12,21). இந்த முக்கியமான பிலிப்புதான் இயேசுவிடம் தந்தையை காட்டச் சொல்லி கேட்கிறார். இதற்கான காரணம் பலவாக இருக்கலாம். இவர்கள் இயேசுவோடு இருந்தும் தந்தையை காண தவறியிருக்கலாம் அல்லது நேரம் நெருங்கி வருவதை உணர்ந்து, இயேசு போவதற்கு முன் தந்தையை கண்டுவிடுவோம் என முயன்றிருக்கலாம்


.9: நம்முடைய ஊகத்தை சரியென்கிறார் ஆண்டவர் இயேசு. இயேசு மூன்று வருடங்கள் 

இவர்களோடு இருந்தும் இவர்கள் தந்தை மற்றும் இயேசுவிற்கிடையிலான உறவை கண்டுகொள்ளவில்லை என்ற ஆதங்கம் புலப்படுகிறது. இது ஆரம்ப கால திருச்சபை மற்றும் தற்கால திருச்சபைக்கும் சாலப் பொருந்தும். இருக்கிறோம் ஆனால், அறிந்திருக்கிறோமா? என்பது யோவானின் மிக முக்கியமான கேள்வி. எப்படி இந்த கேள்வியை கேட்கலாம், அதுவும் 

இயேசுவிடமே கேட்கலாம். இது உண்மையில் சாதரண கேள்வியல்ல, மாறாக இதயத்தின் ஆதங்கம். இந்தக் கேள்வியை இயேசுவோ, யோவானோ, பிலிப்பிடம் மட்டுமல்ல ஒவ்வொரு வாசகரிடமும் கேட்பது போல அமைக்கப்பட்டுள்ளது


.10: இயேசு தந்தையுள் இருக்கிறார் அத்தோடு தந்தை இயேசுவினுள் இருக்கிறார். அத்தோடு இயேசுவின் வார்த்தைகள் அவருடையது என்பதை விட அவரை அனுப்பிய அவர் தந்தையாகிய கடவுளுடையது என்றும் சொல்கிறார். இதனை பிலிப்பும் அவர் சகோதரர்களும் ஏன் நம்பவில்லை என்பது இயேசுவின் கேள்வி


.11: இயேசுவின் கட்டளை வெளிப்படுகிறது. இயேசு, இவர்களை நம்பச் சொல்லி கேட்கிறார். தன் வார்த்தையின் பொருட்டு இல்லாவிடினும் தன் செயல்களின் பொருட்டாவது நம்பச் சொல்கிறார். நம்பிக்கை இரண்டு வகையான சாட்சியத்தை காணலாம். ஒன்று வார்த்தை மற்றையது அடையாளம். இந்த இரண்டும் யோவான் நற்செய்தியில் மீண்டும் மீண்டும் வருவன. என்னை நம்புங்கள் (πιστεύετέ μοι pisteuete moi) என்பது இந்த வரியிலும் ஒவ்வொரு வாசகரையும் உதைப்பது போல அமைக்கப்பட்டுள்ளது. கிரேக்க மொழியில் இது நான்காம் வேற்றுமை (எனக்கு, அல்லது எனக்காக நம்புங்கள்), தமிழில் இது இரண்டாம் வேற்றுமை (என்னை நம்புங்கள்). இரண்டிற்கும் பல வித்தியாசங்கள் உள்ளன. இரண்டு மொழியிலும் இங்கே எழுவாய்ப் பொருள் இயேசுவாக இருக்கிறார் அதாவது நம்பப்படவேண்டியவர் இயேசு


.12: நம்பிக்கை கொள்வோர் செய்யக்கூடியவற்றை இயேசு விவரிக்கிறார். நம்பிக்கை கொள்வோர் இயேசுவை செய்பவற்றையும், ஏன் அதைவிட மேலானவற்றையும் செய்வார் என்கிறார். செய்யவில்லை என்றால் அவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை என்பதை அது காட்டுகிறது. இயேசு எங்கே போகிறார் என்பது சீடர்களின் முக்கியமான கேள்வியாக இருந்தது. அவர் எங்கிருந்து வந்தாரோ அங்கேயே போகிறார் என யோவான் காட்டுகிறார். அத்தோடு அங்குதான் அனைவரும் போகிறோம் என்பதும் இதற்கு பின்னால் மறைந்திருக்கிறது


உலகில் பல பாதைகள் இருக்கின்றன, ஆனால்

அவை இலக்கை விட பல விபத்துக்ளையே விளைவிக்கின்றன.

உலகில் வாழ்வு என்பது மாயையாகவே காட்சி தருகிறது

வாழ்வை விட, நோயும் நொடியுமோ அதிகமாகின்றன.

உண்மை என்பது உண்மையிலே இல்லாமல் போகிறது

இருப்பினும்

இயேசுவே இந்த பாதை, வாழ்வு, உண்மை

என்கிறார் யோவான்.


அன்பு ஆண்டவரே

உம்மில் பயணிக்க, உம்மில் வாழ, உம்மில் நம்ப,

வரம் தாரும். ஆமென்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆண்டின் பொதுக்காலம் 33ம் வாரம் (ஆ) (18,11,2018) Commentary on the Sunday Readings 

  ஆண்டின் பொதுக்காலம் 33 ம் வாரம் ( ஆ ) (18,11,2018) Commentary on the Sunday Readings  M. Jegankumar Coonghe OMI, Chaddy Shrine of Sint...