மண்ணுலகில் அமைதியை ஏற்படுத்த வந்தேன் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை, பிளவு உண்டாக்கவே வந்தேன் என உங்களுக்குச் சொல்கிறேன்.
(லூக்கா 12,51)
M. Jegankumar Coonghe OMI,
Shrine of Our Lady of Good Voyage,
Chaddy, Velanai,
Jaffna.
முதல் வாசகம்: எரேமியா 38,4-6.8-10
பதிலுரைப்பாடல்: திருப்பாடல் 40
இரண்டாம் வாசகம்: எபிரேயர் 12,1-4
நற்செய்தி: லூக்கா 12,49-53
எரேமியா 38,4-6.8-10
4 பின்னர் தலைவர்கள் அரசனைப் பார்த்து, 'இம்மனிதன் கண்டிப்பாய்ச் சாகவேண்டும்; ஏனெனில் இவன் இவ்வாறு பேசி இந்நகரில் எஞ்சியுள்ள போர் வீரர்களையும் மக்கள் அனைவரையும் மனம் தளரச்செய்து வருகிறான். இந்த ஆள் இம்மக்களின் அழிவைத் தேடுகிறானே அன்றி, நலனைத் தேடுவதில்லை' என்றார்கள். 5 அதற்கு அரசன் செதேக்கியா, 'நன்று. அவனை உங்களிடமே கையளிக்கிறேன். ஏனெனில் உங்களைப் பகைத்துக்கொண்டு அரசனால் எதுவும் செய்ய இயலாதே' என்றான். 6எனவே அவர்கள் எரேமியாவைப் பிடித்து, காவல்கூடத்தில் அரச மகன் மல்கியாவுக்குச் சொந்தமான பாழ்ங்கிணற்றுக்குள் கயிற்றில் கட்டி அவரைக் கீழே இறக்கிவிட்டார்கள். அக்கிணற்றில் தண்ணீர் இல்லை; சேறு மட்டுமே இருந்தது. எனவே எரேமியா சேற்றுக்குள் புதையத் தொடங்கினார்.8எபேது மெலேக்கு அரண்மனையினின்று வெளியே சென்று அரசனை நோக்கி, 9'என் தலைவரே! என் அரசரே! இறைவாக்கினர் எரேமியாவைப் பாழ்ங்கிணற்றில் தள்ளியதால் இம்மனிதர்கள் பாவம் செய்தார்கள். அவர் அங்குப் பட்டினியால் மடிந்துபோவார்; ஏனெனில் நகரில் அப்பம் ஏதும் கிடையாது' என்று கூறினார்.10 அதைக் கேட்ட அரசன் எத்தியோப்பியரான எபெது மெலேக்கை நோக்கி, 'உன்னோடு மூன்று பேரை இங்கிருந்து கூட்டிச்செல். இறைவாக்கினர் எரேமியா சாவதற்கு முன்பே கிணற்றினின்று அவரைத் தூக்கிவிடு' என்று கட்டளையிட்டான்.
இறைவாக்கினர்களுக்கும் அரச அதிகாரிகளுக்குமிடையிலான போராட்டத்தின் ஒரு உதாரணமாக இன்றைய வாசகத்தைக் காணலாம். எரேமியா புத்தகத்தின் 37-39 வரையிலான அதிகாரங்கள் யூதாவின் இறுதிநாட்கள் வரலாற்றை சித்தரிக்கின்றன. இறைவாக்கினர்களின் அறிவுரைகளைக் கேளாது எகிப்துடன் கூட்டுச்சேர்ந்து பபிலோனியாவின சினத்திற்கு ஆளாகி செதேக்கியா மன்னன் சுதந்திரத்தை இழந்தான். எகிப்துடன் கூட்டுச் சேரவேண்டாம் எனவும், எந்த புறவின அரசர்களையும் நம்ப வேண்டாம், மாறாக இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவரை மட்டுமே நம்ப கேட்டார் இறைவாக்கினர் எரேமியா. தன் சொந்த புத்தியை நம்பாது, அரச அலுவலர்களின் கிழுகிழுப்பை நம்பி அல்லது அவர்களின் மேல் குற்றத்தை சுமத்தி எரேமியாவை பாழ் குழிக்குள் தள்ளிவிட்டான் இந்த யூதேயாவின் இறுதி அரசன். பல விரிவுரையாளர்கள் எரேமியாவின் துன்பத்தையும், இஸ்ராயேலின் விசுவாச தளர்ச்சியையும் ஒப்பிட்டு நோக்குகின்றார்கள். அரசனையும் அவனுடைய அடிவருடிகளையும் திருப்திப்படுத்தாமல்,
இறைவனுடைய வார்த்தைகளை பறைசாற்றியமை எரேமியாவை குற்றவாளியாக்கி மரணதண்டனையை வரவழைக்கிறது. சொந்தத மக்கள் தங்கள் இறைவாக்கினரை சுயநலத்திற்காக கொலை செய்ய துணியும் வேளை அன்நியரான நண்பர் ஒருவர் இறைவாக்கினரை காப்பாற்ற முன்வருகிறார். இன்றைய தமிழ் உலகில் அதிகமான துன்பங்கள் தமிழருக்கு தமிழரால் ஏற்படுத்தப்படுகின்றவையே. அன்நிய நண்பர்கள்தான் அதிகமாக தமிழருக்காக வாழுகிறவர்களாகவும், உதவிசெய்பவர்களாகவும் இருக்கின்றமை ஏற்றுக்கொள்ளப்படவேண்டிய உண்மை.
வ.4: யோயாக்கின் (காண்க 2குறிப்பேடு 36,9-10❆) மன்னன் பபிலோனிய அடிமைத்தனத்தை திருப்பதிப்படுத்தாததால் அரசாட்சியிலிருந்து அகற்றப்பட்டு பபிலோனியாவிற்கு நாடுகடத்தப்பட்டான். இந்த மன்னனின் சிறிய தந்தை மத்தானியா (காண்க 2அரச 24,17❆❆) செதேக்கியாவாக பெயர் மாற்றப்பட்டு பபிலோனியாவின் கைப்பபொம்மை அரசனாகினான். எற்கனவே பபிலோனியர் எருசலேமை சூறையாடியிருந்தனர்அத்தோடு பல வீரர்களை அடிமைகளாக நாடுகடத்தியருந்தனர். செதேக்கியாவின் புத்தியில்லாத அரசாட்சி மீண்டும் பபிலோனியாவின் சீற்றத்தை வரவழைத்தது. இதனை அறியாத அரசியல்வாதிகள் எரேமியாவின் அறிவுரைகளை தேசத்துரோகமாக பார்க்கின்றனர். இவர்கள் இரண்டு வகையான குற்றங்களை முன்வைக்கின்றனர்.
அ. எரேமியா எஞ்சியுள்ள போர் வீரர்களின் கரங்களை வலுவிழக்க செய்கிறார்
ஆ. நலமில்லாத வார்த்தைகளை பேசி எஞ்சியுள்ள மக்களை பலவீனப்படுத்தி, மக்களுக்கு துன்பத்தை தேடுகிறார்.
(❆யோயாக்கின் அரசனானபோது அவனுக்கு வயது எட்டு; எருசலேமில் அவன் மூன்று மாதம் பத்து நாள்களே ஆட்சி செய்து, ஆண்டவரின் பார்வையில் தீயனவே செய்தான். 10ஆதலால், அவ்வாண்டின் இறுதியில் மன்னன் நெபுகத்னேசர் தனதுபடையை அனுப்பி, கைதியான அவனையும் அவனுடன் ஆண்டவரின் இல்லத்தில் இருந்த விலையுயர்ந்த பாத்திரங்களையும் கொண்டுவரச் செய்தான்; பின்பு அவன் சிற்றப்பன் செதேக்கியாவை அவனுக்குப்பதில் யூதா, எருசலேமுக்கு அரசனாக்கினான்.)
(❆❆17யோயாக்கினுக்குப் பதிலாக அவனுடைய சிறிய தந்தை மத்தனியாவை அரசனாக்கி, அவனது பெயரைச் 'செதேக்கியா' என்று மாற்றினான்.)
(மக்களின் நலன் என்பது என்ன? இந்த நலனை தீர்மானிப்பவர்கள் மக்களும் அறிவாளிகளுமாகவே இருக்கவேண்டும். அரசியல்வாதிகளும் சமயவாதிகளும் தங்களுடைய சொந்த சுயநல தேவைகளுக்காக தங்கள் நலன்களுக்கு மக்களின் நலம் என பெயர் சூட்டுவதை இன்றுவரை காண்கிறோம்).
வ.5: அரசனின் இந்த வசனம் அவனுடைய கையாலாகாத தன்மையை அப்படியே காட்டுகிறது. பொறுப்புள்ள குடிமக்களை பகைக்காத மன்னனே நல்ல அரசனாக இருக்க முடியும். இங்கே செதேக்கியா அரசியல்வாதிகளை பகைக்காமல் வரலாற்றில் அறிவற்ற அரசர்களில் ஒருவனாகிறான். செதேக்கியா என்ற எபிரேயச் சொல் 'கடவுளின் நீதி' என்பதைக் குறிக்கிறது (צִדְקִיָּהוּ ட்சிட்கியாகு - கடவுளின் நீதி). கடவுளின் நீதி என பெயர் பெற்றவர் இங்கு நீதியில்லாமல் இயக்கப்படுகிறார்.
வ.6: பழங்கிணறு எனப்படுவது ஒரு வகை நிலத்தில் தோண்டப்பட்ட குழி. இது சுண்ணாம்புக் கற்களால் அமைக்கப்பட்டு சுண்ணக்கந்தகியால் மொழுகப்பட்ட நிலக்குழிகளாகும். இதிலே மழைநீர் தேக்கி வைக்கப்பட்டு கோடைகாலங்களில் பாவிக்கப்பட்டது. சில வேளைகளில் இதனுள் சகதியிருக்கும். இப்படியான ஒரு குழிக்குள்ளே எரேமியா தள்ளப்படுகிறார் (בּוֹר போர், பாழ்குழி, பாழங் கிணறு). எரேமியா மல்கியாகு என்ற அரச குடும்பத்தவரின் தண்ணீர்க் குழிக்குள் தள்ளப்படுகிறார். எரேமியாவின் தண்டனைக்குள் பல அரச மக்கள் சம்மந்தப்பட்டிருப்பதை இது காட்டுகிறது.
வவ.8-10: எபேட்-மெலக் என்றார் அரசரின் பணியாளர் என்று பொருள் (עֶבֶד־מֶלֶךְ). இவரை பத்தாவது வசனம் குசித்தியர் அல்லது எத்தியோப்பியர் எனக் குறிக்கிறது. நிச்சயமாக இவர் யூதரல்லாத புறவின நண்பர். பபிலோனியரின் முற்றுகை நேரம் நகரத்தில் உணவு குறைவாகவே இருந்தது. அக்காலத்தில் ஒரு நகரை கைப்பற்ற, உணவு பற்றாக்குறையை உருவாக்கி சரணடையவைத்தார்கள். எரேமியாவின் துன்பங்களை நன்கு அறிந்த இந்த நண்பர் அவருக்காக பரிந்து பேசுகிறார். அரசர் எபேட்-மெலக்குவிற்கு வீரர்களை கொடுக்கிறான். சில பாடங்கள் அவர்களை மூன்று என்கிறது, சில பாடங்கள் முப்பது என்கிறது. அரசன் ஏன் எரேமியாவிற்கு இரக்கம் காட்டுகிறான் என்பது தெளிவாக இல்லை. ஒரு வேளை தன் தவறை உணர்ந்திருப்பான் அல்லது எபேட் மெலக்கை திருப்த்திபடுத்த முயன்றிருப்பான்.
திருப்பாடல் 40
1நான் ஆண்டவருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவரும் என் பக்கம் சாய்ந்து எனது மன்றாட்டைக் கேட்டருளினார்.
2அழிவின் குழியிலிருந்து என்னை அவர் வெளிக்கொணர்ந்தார். சேறு நிறைந்த பள்ளத்தினின்று
தூக்கியெடுத்தார்; கற்பாறையின்மேல் நான் காலூன்றி நிற்கச் செய்தார்; என் காலடிகளை உறுதிப்படுத்தினார்.
3புதியதொரு பாடலை, நம் கடவுளைப் புகழும் பாடலை என் நாவினின்று எழச் செய்தார்; பலரும் இதைப் பார்த்து அச்சங்கொண்டு ஆண்டவர் மீது நம்பிக்கை கொள்வர்;
17நானோ ஏழை எளியவன்; என் தலைவர் என்மீது அக்கறை கொண்டுள்ளார்; நீரே என் துணைவர், என் மீட்பர்! என் கடவுளே, எனக்குத் துணை செய்ய விரைந்து வாரும்.
இந்த திருப்பாடல் தாவீதின் திருப்பாடல்களில் ஒன்று என பெயர் பெறுகிறது. இதன் வரிகளின் அமைப்பிலிருந்து இதனை நன்றிப்பாடல்களில் ஒன்று என எடுக்கலாம். வழமையாக புகழ்ச்சிப்பாடல்கள், வரலாற்றில் கடவுள் செய்த நன்மைத் தனங்களை நினைத்துப்பாடி பின்னர் தற்கால தேவைகளுக்காக மன்றாடுவதை அமைப்பாக கொண்டிருக்கும். பதினேழு வரிகளைக் கொண்டுள்ள இந்தப் பாடல் அழகான வரலாற்று அனுபவங்களை நினைவுபடுத்தி தற்கால சிக்கல்கள் எல்லாம் பனிபோல் சூரியனின் வருகையால் இல்லாமல் போகும் என்பதை காட்டுகிறது.
வ.1: ஆண்டவருக்காக பொறுமையுடன் காத்திருத்தல் என்பது ஒரு இனிமையான விவிலிய விழுமியம். விவிலிய நீதிமான்கள், குலமுதல்வர்கள், நீதிபதிகள், அரசர்கள் போன்றவர்கள் தங்களது வாழ்வில் ஆண்டவருக்காக பொறுமையுடன் காத்திருந்ததன் மூலமாக கடவுளைக் கண்டடைந்தனர். ஆண்டவருக்காக காத்திருத்தல் விவிலியத்தில் ஒருவர் ஆண்டவரில் கொண்டுள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. இந்த வரியில் உள்ள பொறுமையுடன் காத்திருத்தல் என்பதை எபிரேயம் 'ஆண்டவரில் முழுமையாக சாய்ந்திருத்தல்' எனக் காட்டுகிறது. ஆண்டவர் செவிசாய்த்தார் என்பது, ஆண்டவர் மக்களின் தேவைகளை கண்டுகொண்டார் ஆதலால் இனி கவலையில்லை என்பதைக் குறிக்கிறது.
வ.2: குழி என்பது ஒரு பௌதீக உரு, இது பின்னர் உருவக அடையாளமாக மாறியது. கானானில் காணப்பட்ட இந்த நிலக் குழிகள் விவிலிய ஆட்களுடன் விசேடமாக யாக்கோபுவின் மகன் யோசேப்பு, இறைவக்கினர் எரேமியா பின்னர் ஆண்டவர் இயேசுவுடனும் சம்மந்தப்பட்டுள்ளது. குழிக்குள் விழுதல் என்பது ஒருவர் தீயவர்களின் கைகளில் வீழ்வதையும், வாழ்வின் சோதனைகளையும் காட்டுகிறது. அழிவின் குழியும், சேறு நிறைந்த பள்ளமும் ஒத்த கருத்துச்சொல்லாக பாவிக்கப்பட்டுள்;ளன. கற்பாறையும் காலடிகளை உறுதிப்படுத்தலும் நிலையான வாழ்வைக் காட்டுகிறது.
வ.3: புதிய பாடல் இங்கு கடவுளின் புதிய தலையீட்டைக் குறிக்கிறது. விவிலியத்தில் இறையச்சம் மரியாதை கலந்த ஒரு விசுவாசத்தைக் குறிக்கிறது.
வ.4: புகழ்சிப்பாடல் வழமையாக ஒரு வேண்டுதலுடன் முடிவடைவது போல இங்கே ஆசிரியர் கடவுளை துணைக்கு அழைக்கிறார். மீட்பர் துணைவர் என்பன ஒத்தகருத்துச் சொற்கள் அவை ஒரே பொருளைத்தான் குறிக்கின்றன.
எபிரேயர் 12,1-4
1எனவே, திரண்டு வரும் மேகம் போல் இத்தனை சாட்சிகள் நம்மைச் சூழ்ந்து நிற்க எந்தச் சுமையையும், நம்மைப் பற்றிக் கொண்டிருக்கும் எந்தப் பாவத்தையும் உதறித்தள்ளிவிட்டு, நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மனஉறுதியோடு ஓடுவோமாக. 2நம்பிக்கையைத் தொடங்கி வழி நடத்துபவரும் அதை நிறைவு செய்பவருமான இயேசுவின் மீது கண்களைப் பதிய வைப்போம். அவர் தாம் அடையவிருந்த மகிழ்ச்சியின் பொருட்டு, இழிவையும் பொருட்படுத்தாமல் சிலுவையை ஏற்றுக்கொண்டார். இப்போது, கடவுளது அரியணையின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார். 3பாவிகளால் தமக்கு உண்டான எந்த எதிர்ப்பையும் மன உறுதியோடு தாங்கிக்கொண்ட அவரை எண்ணிப்பாருங்கள். அப்போது நீங்கள் மனம் சோர்ந்து தளர்ந்து போக மாட்டீர்கள். 4பாவத்திற்கு எதிரான போராட்டத்தில், இரத்தம் சிந்தும் அளவுக்கு நீங்கள் இன்னும் எதிர்த்து நிற்கவில்லை.
எபிரேயருக்கு எழுதப்பட்டது, ஒரு திருமுகம் என்று முன்னர் அறியப்பட்டாலும் அது பவுலுடைய கடிதங்களில் ஒன்றல்ல என்பது இன்று பலராலும் ஏற்றக்கொள்ளப்படுகிறது. ஆழமான இறையியலையும் அழகான கிறிஸ்தியலையும் கொண்டுள்ள இதனை ஒரு மறையுரைத்திரட்டு என்றே கொள்ள வேண்டும். இதனுடைய 11வது மற்றும் 12வது அதிகாரங்கள் நம்பிக்கை மற்றும் பொறுமையை விவரிக்கின்றன. பதினொராவது அதிகாரம் நம்பிக்கையை முதல் ஏற்பாட்டு உதாரணங்களுடன் விளக்கி பன்னிரண்டாவது அதிகாரத்தில் அதே நம்பிக்கையை பொறுமையுடன் முன்னெடுக்க வேண்டும் என்றுரைக்கிறது.
வ.1: எபிரேயர் நூல் கலாபனையால் துவண்டிருந்த கிறிஸ்தவர்களுக்கு நம்பிக்கை தருவதற்காகவே எழுதப்பட்டது என்ற முக்கியமான வாதம் ஒன்றிருக்கிறது. முதல் ஏற்பாட்டு உதாரண மக்கள் எவ்வாறு நம்பிக்கையால் வாழ்வடைந்தார்களோ அதே போல துன்புறும் கிறிஸ்தவர்களும் நம்பிக்கையில் தளராது முன்நோக்கி ஓட வேண்டும் என்கிறார் ஆசிரியர். ஆசிரியர் இங்கே கிரேக்க விளையாட்டு சொற்களை பாவித்து நம்பிக்கை வாழ்வு வெற்றியை நோக்கிய ஓட்டம் என்று விவாதிக்கின்றார். இப்படியான வார்த்தை பிரயோகங்களை பவுலடிகளாரும் அதிகமாக பாவிப்பார். இப்படியான ஒத்த வார்த்தைகள்தான், எபிரேயர் நூலை பவுலுடைய கடதங்களில் ஒன்றாக முன்னர் பார்க்கத் தூண்டியது. இந்த வார்த்தைகள் அன்றைய மக்களுக்கு தெரிந்திருந்த அக்கால கவர்ச்சி வார்த்தைகளாக இருந்திருக்கலாம். இக்கால முகப்புத்தகம், வோட்ஸ் அப், வைபர், மற்றும் கூகுள் போன்றவை அனைவரினதும் கவனத்தை ஈர்ப்பது போல அந்த வார்த்தைகள் செயற்பட்டிருக்கலாம் (உ-ம்: τρέχω டிரேகோ- ஓடு, ἀγών அகோன்- போட்டி). விளையாட்டு போட்டி வீரர்களுக்கும் ஒவ்வொரு நாளும் பயிற்சி செய்யும் உணர்வாளர்களுக்கும் உரியது போல. நம்பிக்கை வீரர்களுக்கும், கனவான்களுக்கும் உரியது என்பது மிகவும் அழகான உதாரணம்.
கிறிஸ்துவைப் பற்றிய சிந்தனைகளை தற்கால வார்த்தைகளுடன் இற்றைப்படுத்தி கொடுக்கும் போது அது எப்படி வாசகர்களை கவர்கின்றன என்பதற்கு இந்த வார்த்தைகள் நல்ல உதாரணம்.
வ.2: இந்த வரி கிறிஸ்தியலின் முக்கியமான வரிகளில் ஒன்று. நம்பிக்கைக்கு பலரை உதாரணமாக காட்டிய ஆசிரியர், இங்கே இயேசுதான் நம்பிக்கையின் தொடக்கமும் அதனை நிறைவுசெய்பவரும் என்று சொல்வது ஆசிரியரின் சமரசம் செய்ய முடியாத நம்பிக்கையையும், ஆரம்ப கால திருச்சபை எவ்வளவிற்கு இயேசுவை அன்பு செய்தது என்பதனையும் காட்டுகின்றன. கிறிஸ்து சிலுவையை மகிழ்சியாக ஏற்றுக்கொண்டதனை ஆசிரியர் அவருடைய நம்பிக்கையின் அடையாளமாக காட்டுகிறார். இதன் காரணமாக இயேசு கடவுளின் வலப்பக்தை அடைகிறார் என்பது இவரின் தொடர்ச்சியான வாதம். கடவுளின் அரியணையின் வலதுபுறம் யாருக்கு என்பது இஸ்ராயேலர் மத்தியில் விவாதிக்கப்பட்ட முக்கியமான விடயம். ஆபிரகாம், மோசே மற்றும் தாவீது போன்றவர்கள் கடவுளின் வலது பக்கத்திற்கு அல்லது விசேட இடத்திற்கு பரிந்துரைக்கப்பட்டவர்கள் எனலாம், இந்த இடம் உண்மையாக இயேசுவிற்கே உரியது என்பது புதிய ஏற்பாட்டு ஆசிரியர்களின் படிப்பினை.
வ.3: இதுதான் எபிரேயர் நூலாசிரியரின் செய்தி. கிறிஸ்தவர்களின் மனச்சோர்வு திருச்சபையின் வளர்ச்சியை பாதிக்கும் என்பதில் கருத்தாய் இருக்கிறார் ஆசிரியர். மனச்சோர்வு என்பது தனிப்பட்ட வாழ்க்கையிலும் மனிதரின் வளர்ச்சிக்கு பாதிப்பை உண்டாக்கும் என்பதை உளவியல் மற்றும் மனநலவியல் மருத்துவ ஆய்வுகளின் காண்கின்றோம்.
வ.4: ஒருவேளை இந்த நூலை எழுதும்போது கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்பட்டார்கள் அத்தோடு தமது நாளாந்த சமூக வாழ்கை முறையிலிருந்து புறக்கணிக்கப்பட்டார்கள் ஆனாலும் கொலை செய்யப்படவில்லை எனலாம். எதிர்காலத்தில் அதாவது இரண்டாம் மூன்றாம் நூற்றாண்டுகளில் முக்கியமாக உரோமைய கலாபனைகளில் இவர்கள் இரத்தம் சிந்தினார்கள் என்பதை நாம் திருச்சபை வரலாற்றில் காண்கிறோம். ஆரம்ப கால திருச்சபையில் இரத்தம் சிந்தி வேதசாட்சிகளாக மரணித்தது அதியுயர் கிறிஸ்தவ சாட்சியமாக கருதப்பட்டது, இந்த சிந்தனையின் ஆரம்பத்தை இந்த பகுதியில் காணலாம்.
லூக்கா 12,49-53
49'மண்ணுலகில் தீமூட்ட வந்தேன். அது இப்பொழுதே பற்றி எரிந்து கொண்டிருக்க வேண்டும் என்பதே என் விருப்பம். 50ஆயினும் நான் பெற வேண்டிய ஒரு திருமுழுக்கு உண்டு. அது நிறைவேறுமளவும் நான் மிகவும் மன நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறேன். 51மண்ணுலகில் அமைதியை ஏற்படுத்த வந்தேன் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை, பிளவு உண்டாக்கவே வந்தேன் என உங்களுக்குச் சொல்கிறேன். 52இது முதல் ஒரு வீட்டிலுள்ள ஐவருள் இருவருக்கு எதிராக மூவரும் மூவருக்கு எதிராக இருவரும் பிரிந்திருப்பர். 53தந்தை மகனுக்கும், மகன் தந்தைக்கும், தாய் மகளுக்கும், மகள் தாய்க்கும், மாமியார் தன் மருமகளுக்கும், மருமகள் மாமியாருக்கும் எதிராகப் பிரிந்திருப்பர்.'
லூக்கா நற்செய்தி சாதாரணமாக நேர்முகமான சிந்தனைகளை தருவதிலும் இயேசுவின் இரக்கம் நிறைந்த கடவுள் தன்மையை காட்டுவதிலும் பிரசித்திபெற்றது. அப்படியான நற்செய்தியில் இந்த பகுதி பலருக்கு வித்தியாசமானதாக தோன்றலாம். இதன் காரணமாகவும் சிலர் இந்த பகுதியை லூக்காவுடையது அல்ல எனவும் வாதாடுகின்றனர். ஆனால் உண்மையில் இதனை லூக்கா நற்செய்தியின் ஒருகிணைந்த பகுதி அல்ல என்று சொல்வதற்கு போதுமான ஆதாரங்களும் உதாரணங்களும் இல்லை. எந்த ஒரு காதல் கதையிலும் ஒரு சண்டைக்காட்சி வருவதனைப்போல அல்லது ஒரு முடிவுக் காட்சி வருவதனைப்போல இங்கே லூக்காவும் முக்கியமான ஒரு செய்தியை இன்னொரு வடிவத்தில் தருகிறார். இந்த வரிகளில் உள்ள எதிர்மறையான வார்த்தைகளின் நேர்முகத்தன்மையை விளங்கிக்கொள்ள அதனை அதன் சூழலியலில் வைத்து பார்க்க வேண்டும். பன்னிரண்டாவது அதிகாரம், இயேசு சீடர்களை உற்சாகப்படுத்தி திடப்படுத்திய நிகழ்வுகளை காட்டுகிறது. இந்த பகுதியில் இயேசு சீடர்களின் சாட்சிய வாழ்வின் சவால்களையும், இயேசு துன்ப வேளைகளில் சீடர்களுடன் நிச்சயமாக இருப்பார் என்பதனையும் காட்டுகிறது.
பன்னிரண்டாவது அதிகாரத்தில்:
அ. வவ. 1-7: அச்சத்தின் அவசியமின்மை
ஆ. வவ. 8-12: கிறிஸ்துவை அறிக்கையிடுவதன் தேவை
இ. வவ. 13-21: அறிவற்ற செல்வனின் உவமை
ஈ. வவ. 22-34: கவலை தேவையில்லை
உ. வவ. 35-48: விழிப்பாயிருக்கும் பணியாளர்கள்
ஊ. வவ. 49-53: பிளவு ஏற்படுதல்
எ. வவ. 54-56: காலத்தை கணித்தல்
ஏ. வவ. 57-59: எதிரியோடு உடன்பாடு செய்தல்
வ.49: இந்த வசனத்தில் உள்ள தீ என்னும் சொல்லை ஆராயவேண்டும். கிரேக்க மூலம் πῦρ பூர் என்ற சொல்லை தீக்கு பயன்படுத்துகிறது. இது சமஸ்கிறித பூ (தூய்மைப்படுத்தல்) என்ற சொல்லிலிருந்து வந்ததாக மொழியியலாளர்கள் கருதுகின்றனர். மத்திய கிழக்கு நாட்டு சமுதாயத்தில் நெருப்பு பல தேவைகளுக்காக பயன்பட்டது. வீட்டில் சமைப்பதற்கும், வெப்பமூட்டுவதற்கும் தொடங்கி இராணுவத்தில் சமிக்கை கொடுப்பதற்கும் பயன்பட்டது. முதல் ஏற்பாடு தீயை கடவுளின் நீதியின் அடையாளமாக காட்டுகிறது (காண்க தொ.நூல் 19,24❆). இஸ்ராயேலர் மட்டுமன்றி எகிப்தியரும் நெருப்பை கடவுளின் அடையாளமாகவே கண்டனர். குருத்துவ நெறிமுறைகளை ஆரோனின் புதல்வர்கள் மீறியபேதும் அவர்கள் நெருப்பினாலே தண்டிக்கப்பட்டனர் (காண்க லேவி 10,2❆❆). இவ்வாறு பல வேளைகளில் பலர் இப்படியான நெருப்பாலே தண்டிக்கப்பட்டனர். ஒரு மனித படைப்பு கடவுளால் ஏற்றுக்கொள்ளப்பட அது நெருப்பால் சுட்டெரிக்கப்பட வேண்டும் என்ற நம்பிக்கையும் அக்கால மக்கள் மத்தியில் வழக்கிலிருந்தது. முக்கியமான வேளைகளில் நெருப்பு கடவுளின் பிரசன்னத்தை வெளிக்காட்டியது (காண்க தொ.நூல் 15,17❆❆❆). முதன் முதலில் கடவுள் தன்னுடைய இருப்பை தீச்சூழையிலே மோசேக்கு காட்டினார் (காண்க வி.ப 3,2❆❆❆❆), பின்னர் இந்த தீத் தூண் வழியாகவே கடவுள் மக்களை கானான் நாட்டை நோக்கி வழிநடத்தினார். எருசலேம் தேவாலயத்திலிருந்த மெனோரா என்ற ஏழு தீச்சுவாலை தண்டுகள் கடவுளின் பிரசன்னத்தை நினைவூட்டியது. (எபிரேயம் தீயை எஷ் אֵשׁ என்ற சொல்லால் குறிக்கிறது).
(❆அப்பொழுது ஆண்டவர் வானத்திலிருந்து சோதோம், கொமோரா நகர்களின்மேல் கந்தகமும் நெருப்பும் பொழியச் செய்தார்.)
(❆❆உடனே, ஆண்டவரிடமிருந்து நெருப்பு விரைந்தெழுந்து அவர்களை விழுங்கியது. அவர்கள் ஆண்டவர் முன்னிலையிலேயே மடிந்தனர்.)
(❆❆❆கதிரவன் மறைந்ததும் இருள்படர்ந்தது. அப்பொழுது புகைந்து கொண்டிருந்த தீச்சட்டி ஒன்றும் எரிந்து கொண்டிருந்த தீப்பந்தம் ஒன்றும் அந்தக் கூறுகளுக்கிடையே சென்றன.)
(❆❆❆❆அப்போது ஆண்டவரின் தூதர் ஒரு முட்புதரின் நடுவே தீப்பிழம்பில் அவருக்குத் தோன்றினார். அவர் பார்த்தபோது முட்புதர் நெருப்பால் எரிந்து கொண்டிருந்தது. ஆனால் அம்முட்புதர் தீய்ந்துபோகவில்லை)
இந்த சிந்தனைகளுடன் பார்கின்ற போது இயேசு மண்னுலகில் கடவுளின் நீதியையும் அவருடைய உண்மையான இருப்பையும் நினைவூட்டவே விரும்புகிறார் என விளங்கிக்கொள்ளலாம். 'நெருப்பு' ஒரு தேக்க நிலை பொருள் அல்ல மாறாக அது அதனை சுற்றியிருக்கும் அனைத்தையும் ஆட்கொள்ளும் வல்லமையுடையது. இப்படித்தான் கடவுளும் அல்லது அவரில் கொள்ளும் நம்பிக்கையும் தேக்க நிலையில் இருக்க முடியாது. இருந்தால் அது வெறும் மதம் பிடித்த மதமாகவும் அல்லது இறந்து போன சடங்குகளாகவும் மட்டுமே இருக்கும். இப்படியாக இல்லாமல், கடவுளின் நினைவு நெருப்பாக இருக்க வேண்டும் அத்தோடு அது எரிந்து கொண்டிருக்க வேண்டும் என்று இயேசு விரும்புகிறார். முக்கியமாக அதுதான் தன் விருப்பம் என இயேசு சொல்வதனை ஆழமாக தியானிக்க வேண்டும்.
வ.50: யோவான் ஏற்கனவே இயேசு ஆண்டவரின் திருமுழுக்கு தூய ஆவியென்னும் நெருப்பால் கொடுக்கப்படும் என்கிறார். இதனைத்தான் இங்கே இயேசு நினைவூட்டுகிறார் (காண்க லூக்கா 3,16❆)
இந்த திருமுழுக்கு ஒரு ஆயத்த திருமுழுக்கல்ல மாறாக அது நிறைவு செய்கிற திருமுழுக்கு அந்த திருமுழுக்கு அதிகமான பணிகளையும் கடமைகளையும் இயேசுவின் சீடர்களுக்கு கொண்டு வருகிறது. இந்த திருமுழுக்கை பெறும்வரை ஆண்டவர் மனநிறைவில்லாமல் இருப்பது அவர் இந்த பணிக்கு அனைவரின் துணையையும் எதிர்பார்க்கிறார் என எடுக்கலாம். கிறிஸ்துவின் காலத்தில் பல விதமான திருமுழுக்கு அல்லது கழுவுதல் சடங்குகள் புழக்கத்தில் இருந்தன, இதனைப்போல ஆண்டவரின் நெருப்புத் திருமுழுக்கு பலவற்றில் ஒன்றாக மாறி மறைந்துவிடக்கூடாது என்பதில் ஆண்டவர் கவனமாக இருக்கிறார்.
(❆யோவான் அவர்கள் அனைவரையும் பார்த்து, 'நான் தண்ணீரால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுக்கிறேன்; ஆனால் என்னைவிட வலிமைமிக்க ஒருவர் வருகிறார். அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை. அவர் தூய ஆவி என்னும் நெருப்பால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுப்பார்.)
வ.51: இயேசு ஆண்டவர் வித்தியாசமான அர்த்தங்களை அமைதிக்கும், பிளவிற்கும் கொடுக்கிறார். அமைதியை கிரேக்கம் εἰρήνη எய்ரேனே என்றழைத்தது. உரோமையருக்கும், கிரேக்கருக்கும், யூதருக்கும் இந்த அமைதி என்பது ஒரு அரசியல் சிக்கலற்ற நிலையாகவே காணப்பட்டது. இயேசு இந்த அமைதிக்கு உண்மையான இறையியல் அர்த்தத்தை கொடுக்க விளைகிறார். எபிரேய முறைப்படி அமைதி என்பது (שָׁלוֹם ஷலோம்) நிறைவு, முழுமை, மகிழ்ச்சி என்ற நிலைகளைக் குறித்தது. அமைதிக்கான கிரேக்க-உரோமையரின் புதிய அர்த்தம், இலங்கை அரசாங்கமும் உலகமும் அமைதி என்று அனைவரையும் வரலாற்றில் ஏமாற்றியதற்கு ஒப்பாகும். இப்படியான அரசியல் ஏமாற்று கலந்த உதவாத அமைதியையே இயேசு நீக்குவதாக கூறுகிறார். ஆக இப்படியான அமைதியற்ற அமைதிகள் நீக்கப்படும் போது அங்கே பல பிளவுகள் உண்டாகும், இந்த பிளவுகள் தேவையான பிளவுகளே.
பிளவுகள் என்பதை கிரேக்கம் διαμερισμός தியாமெரிஸ்மோஸ் என்று வரைவிலக்கணப்படுத்துகிறது. இது பிரிவு, விநியோகம், வேற்றுமை என பல பொருளைக் கொடுக்கிறது. பலர் தங்களுடைய சோம்பல் தனத்திலும், தீமையிலும், அநீதிகளிலும், மனிதமில்லா தன்மைகளிலும், கிறிஸ்தவமில்லாமையிலும் ஒன்றாக இருப்பதைவிட, நன்மை செய்ய பிரிந்திருப்பதையே இயேசு விரும்புகிறார். சோம்பேறிகளுடைய அமைதியைவிட இயேசுவின் பிரிவு, நன்மைசெய்யக்கூடியது என்பதை நாம் உணர வேண்டும் (ஒப்பிடுக 1கொரி 3,19❆).
(❆இவ்வுலக ஞானம் கடவுள்முன் மடமையாய் உள்ளது. ஏனெனில் மறைநூலில் எழுதியுள்ளவாறு, 'ஞானிகளைக் கடவுள் அவர்களது சூழ்ச்சியில் சிக்க வைப்பர்.')
வ.52: ஐந்து என்னும் இலக்கம் ஒருவேளை ஒன்றாக இருந்தாலும் நிறைவில்லா இலக்கமாக இருப்பதனைஇயேசு காட்டுகிறார் போல. இந்த நிறைவில்லாத ஐந்து நிறைவான மூன்றாகவும் இரண்டாகவும் மாறவேண்டும். தேவையில்லாத கூட்டமைப்புக்களும், கூட்டணிகளும் அவசியமானால் பிரிவதன் வாயிலாகத்தான் மக்களுக்கும் நாட்டிற்கும் நன்மை பயக்க முடியும்.
வ.53: இயேசு காட்டும் குடும்ப பிரிவுகள்:
தந்தை ⇏ மகன்
தாய் ⇏ மகள்
மாமியார் ⇏ மருமகள்.
இந்த பிரிவுகளை விளங்கிக்கொள்ள ஆரம்ப கால திருச்சபையும் இன்றை நவீன கால திருச்சபையும் நல்ல உதாரணங்கள். அன்று போல இன்றும் சாட்சியமற்ற ஒரு மயக்கமான ஒற்றுமையை நாம் குடும்பங்களில் காண்கிறோம். பல வளர்ந்த நாட்டு சமூகங்களில் இன்று அரோக்கியமான சவால்கள் கிடையாது. இது மிகவும் ஆபத்தான அபத்தம். ஒவ்வொருவரும் தனி மனித சுதந்திரம் என்ற போர்வையில் விரும்பியது, வேண்டியது அனைத்தையும் செய்கிறார்கள். இங்கே ஒருவிதமான அமைதியிருந்தும் ஆனால் அது இயேசு தரும் விடுதலை அமைதியல்ல. தந்தையிடம் சவால் பெறாத மகனும், மகனிடம் ஆலோசனை பெறாத தந்தையும் எப்படி கிறிஸ்துவை போதிக்க முடியும்? தாயிடம் கற்காத மகளும், மகளின் உணர்வுகளை புரியாத தாயும் எப்படி நல்ல கிறிஸ்தவ பிள்ளைகளை உருவாக்க முடியும்? ஏன் ஆண்டவர் மருமகன், மாமாவை விட்டுவிட்டார் என தெரியவில்லை. ஒருவேளை ஆண்களை அவர்களின் மடமைத்தன கர்வத்திலிருந்து திருத்த முடியாது என்று நினைக்கிறாறோ தெரியவில்லை. மாமியாரின்அனைத்து
இசைகளுக்கேற்ப ஆடும் மருமகள்களும், அல்லது மருமகள்களை எப்போதுமே திருப்திப்படுத்த முயலும் மாமிமார்களும் நல்ல சாட்சிய வாழ்வை தர முடியாது. இந்த வரி மிகவும் முக்கியமான குடும்ப சிக்கல்களை நமக்கு நினைவூட்டுகிறது. சவால்கள், வேறுபாடுகள், மாற்றுச் சிந்தனைகள், மாற்றுக் கருத்துக்கள், வித்தியாசமாக பார்வைகள் போன்றவை கிறிஸ்வத்திற்கு மிக முக்கியமானவை. இவையில்லாமல் இருக்கும் குடும்பத்தில் இயேசுவின் தீ நிச்சயமாக பற்றவைக்கப்படவேண்டும். இயேசுவின் இந்த விசேட பிரிவினைகளை இக்கால சுயநலம் நிறைந்த மனித பிரிவினைகளுடன் ஒப்பிட்டு குழம்பிவிடக்கூடாது.
நான் உன்னை குழப்பவில்லை, நீ என்னை குழப்பாதே என்ற வாதம் நண்பர்களுக்கு பொருந்தாது.
உண்மை நண்பர்கள் கேள்வி கேட்க வேண்டும்.
உண்மை சீடர்கள் சவால்களை உருவாக்க வேண்டும்.
சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை
நேரா நிரந்தவர் நட்பு
(அகத்தே பொருந்தாமல் புறத்தே பொருந்தி நடப்பவரின் நட்பு,
தக்க இடம் கண்டபோது எறிவதற்கு ஒப்பாகும் - குறள் 821)
அன்பான நல்ல ஆண்டவர் இயேசுவே!
உம்முடைய அமைதியின் அர்த்தத்தை அறிய
ஞானத்தையும் விருப்பத்தையும் தாரும். ஆமென்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக