ஆண்டின் பொதுக்காலம் இருபத்தி மூன்றாம் வாரம்
04, செப்டம்பர், 2022
தேசிய இளையோர் தினம் (இலங்கை)
என்னிடம் வருபவர் தம் தந்தை, தாய், மனைவி, பிள்ளைகள், சகோதரர் சகோதரிகள் ஆகியோரையும், ஏன், தம் உயிரையுமே என்னைவிட மேலாகக் கருதினால், அவர் என் சீடராயிருக்க முடியாது
முதல் வாசகம்: சாலமோனின் ஞானம் 9,13-18
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 90
இரண்டாம் வாசகம்: பிலமோன் 1,9-10.12-17
நற்செய்தி: லூக்கா 14,25-33
சாலமோனின் ஞானம் 9,13-18
13'கடவுளின் திட்டத்தை அறிபவர் யார்? ஆண்டவரின் திருவுளத்தைக் கண்டுபிடிப்பவர் யார்? 14நிலையற்ற மனிதரின் எண்ணங்கள் பயனற்றவை; நம்முடைய திட்டங்கள் தவறக்கூடியவை. 15அழிவுக்குரிய உடல் ஆன்மாவைக் கீழ்நோக்கி அழுத்துகிறது. இந்த மண் கூடாரம் கவலை தோய்ந்த மனதுக்குச் சுமையாய் அமைகிறது. 16மண்ணுலகில் உள்ளவற்றையே நாம் உணர்வது அரிது! அருகில் இருப்பவற்றையே கடும் உழைப்பால்தான் கண்டுபிடிக்கிறோம். இவ்வாறிருக்க, விண்ணுலகில் இருப்பவற்றைத் தேடிக் கண்டுபிடிப்பவர் யார்? 17நீர் ஞானத்தை அருளாமலும், உயர் வானிலிருந்து உம் தூய ஆவியை அனுப்பாமலும் இருந்தால், உம் திட்டத்தை யாரால் அறிந்து கொள்ள இயலும்? 18இவ்வாறு மண்ணுலகில் வாழ்வோருடைய வழிகள் செம்மைப்படுத்தப்பட்டன. உமக்கு உகந்தவற்றை மனிதர் கற்றுக்கொண்டனர்; ஞானத்தால் மீட்பு அடைந்தனர்.'
சாலமோனின் ஞானம் என்ற இந்த மெய்யறிவு புத்தகத்திலிருந்து எடுக்கப்படும் இந்தப் பகுதி 'ஞானம் அருளும்படி மன்றாட்டு' என்ற பகுதியிலிருந்து வருகிறது. ஞானம் ஒரு கொடை அல்லது ஓர் இறையருள். அறிவிற்கும் ஞானத்திற்கும் நிறையவே வித்தியாசங்கள் உள்ளன. அறிவு மனிதனின் கண்டுபிடிப்புக்கள், மற்றும் தத்துவங்களைச் சார்ந்தது ஆனால் ஞானம் இறைவனின் வெளிப்படுத்தல் மற்றும் மனித அனுபவங்களைச் சார்ந்து. இதனால்தான் புது தமிழ்ச் சொல் ஞானத்தை மெய்யறிவு என்று அழகாக வரைவிலக்கணப் படுத்துகிறது. ஞானம் ஒரு கொடையாக இருப்பதனால், இதனை பெற ஒருவர் மன்றாட வேண்டும் அத்தோடு அதனை கடவுள்தான் வழங்க வேண்டும் என்பதும் இஸ்ராயேலரின் பாரம்பரிய நம்பிக்கை. இதனைத்தான் கிறிஸ்தவமும் நம்புகிறது. இதனால் தான் நாம் ஞானத்தை தூய ஆவியானவரின் ஏழு கொடைகளில் ஒன்று என கருதுகின்றோம்.
இணைத் திருமுறை நூல்களில் மிக முக்கியமான இந்நூலை, அரசர் சாலமோன் எழுதினார் என்று பாரம்பரியம் கூறினாலும், இந்நூல் அவருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என்றே இன்றைய விவிலிய ஆய்வுகள் கருதுகின்றன. 1அரசர் 3,6-9 இல் அரசர் சாலமோன் ஞானத்திற்காக ஒரு செபம் செய்வார், அந்த செபத்தோடு இந்த பகுதி தொடர்பு படுத்தப்பட்டுள்ளது. தூய அகுஸ்தினாரின் விருப்பத்திற்குரிய புத்தகங்களில் இதுவும் ஒன்றாக இருந்துள்ளது. இதன் காலத்தை கணிப்பது கடினம் எனினும், இது முதலாம் நூற்றாண்டைச் சார்ந்தது என்று சிலர் வாதிடுகின்றனர். இதன் ஆசிரியர் யூதர் அல்லது யூத பின்புலத்தைக் கொண்டவர் என்பதில் பல உண்மைகள் இருக்கலாம். ஞானம் அல்லது மெய்யறிவு என்பதுதான், இந்நூலின் முக்கிய கருப்பொருள், இது ஐம்பது தடவைகளுக்கு மேலாக இந்நூலில் தோன்றுகின்றது (σοφία சோபியா, மெய்யறிவு - ஞானம்). மற்றைய மெய்யறிவு நூல்களான யோபு, நீதிமொழிகள், சீராக், மற்றும் சபையுரையாளர் போன்றவற்றிலிருந்து முக்கியமான சிந்தனைகளில் இது மாறுபடுகிறது. சிலர் இதனை கிரேக்க இலக்கிய அமைப்புக்களுடன் தொடர்பு படுத்த முயல்கின்றனர், ஆனால் இது ஒரு கணிப்பு மட்டுமே. ஞானம் என்பது இறைவனின் அருள், அது அளிக்கப்பட வேண்டும் அத்தோடு அதுதான் மனிதர் நல்ல இறைபிள்ளைகளாக வாழ்வதற்கான ஒரே வழி என்பதுதான் இந்நூலின் மையக்கருத்து என எடுக்கலாம்.
வ. 13: ஆசிரியர் இந்த கேள்விகளூடாக முக்கியமான விடைகளை தர முயற்ச்சிக்கிறார். கடவுளுடைய திட்டங்களை அறிய பல பயிற்சி பெற்ற விஞ்ஞான முறைகள் அக்காலத்தில் இருந்திருக்கிறது. இன்றைய உள்ளங்கை வாசிப்பு, வானசாஸ்திரம், சகுண வாசிப்பு போன்றவை இப்படியான விஞ்ஞான முறைகளில் இருந்து வளர்ந்தவையே. இந்த ஆசிரியர் இங்கே இஸ்ராயேலரின் முக்கியமான நம்பிக்கையை தன் வாசகர்களுக்கு அறிவிக்கிறார். அதாவது கடவுளின் திட்டங்களை யாரும் அறிய முடியாது, அத்தோடு அவர் திருவுளமும் மனித அறிவைத்தான்டியது என்பதே.
வவ. 14-15: உடல் ஆன்மா பற்றிய கிரேக்க இரட்டைக் சிந்தனைகளை இந்த வரிகளில் காணலாம். உடலையும் ஆன்மாவையும் பிரித்;து, உடலை சிறையாகவும், ஆன்மாiவை அச்சிறையினுள் உள்ள கைதியாகவும் பிளேட்டோ கண்டார். எபிரேய சிந்தனை இப்படியான இரட்டை தத்துவத்தைக் கொண்டிருக்கவில்லை, ஆனால் இந்த புத்தகத்தின் ஆசிரியர் கிரேக்க சிந்தனைகளை நன்கு அறிந்தவராக இருந்திருக்கிறார் என எண்ணலாம். மனிதர்களின் எண்ணங்கள் மற்றும் திட்டங்களின் நிலையாமையை திருப்பிக் கூறும் எபிரேய கவி வடிவில் வடிக்கிறார் ஆசிரியர்
அ. நிலையற்ற மனிதன் - நாம்
ஆ. எண்ணங்கள் பயனற்றவை - திட்டங்கள் தவறக்கூடியவை
அ. அழிவுக்குரிய உடல் - மண் கூடாரம்
ஆ. ஆன்மாவை கீழ்நோக்கி நகர்த்துகிறது - மனதிற்கு சுமையாய் இருக்கிறது.
வ. 16: எபிரேயரின் மிக முக்கியமான நம்பிக்கை கற்பிக்கப்படுகிறது. மண்ணுலகிலும் கடவுளின் ஆச்சரியங்கள் நிறைந்துள்ளன ஆயினும் அவற்றை கடின உழைப்பால்தான் கண்டுபிடிக்கிறோம் அவ்வாறிருக்க எங்கனம் மேலுலகின் அறிவை பெறமுடியும்?
வ. 17: ஆச்சரியமான வரி இது. ஆசிரியர் ஞானத்தையும் தூய ஆவியையும் ஒப்பிடுகிறார்.
அ. ஞானம் (σοφία சோபியா) - உம்முடைய தூய ஆவி (ἅγιόν σου πνεῦμα ஹகியோன் சு புனுமா).
(யோவான் நற்செய்தியாளரின் தூய ஆவியாரின் செயற்பாடுகள் பற்றிய கருத்துக்களை இந்த இறையியலில் புரிந்துகொள்ளலாம் (காண்க யோவான் 14,26✡)
(✡என் பெயரால் தந்தை அனுப்பப்போகிற தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத் தருவார்; நான் கூறிய அனைத்தையும் உங்களுக்கு நினைவூட்டுவார்.)
வ. 18: மீட்பு மனிதருக்கு எப்படி வருகிறது? மனித அறிவினாலும் கண்டுபிடிப்புக்களினாலுமா? அல்லது மேலிருந்து கடவுள் அருளும் மெய்யறிவினாலா? என்பதை அசலாக அலசுகிறார் இந்த ஞானி. மனிதரின் வழிகள் செம்மைப்படுத்தப்டுவதும், அவர்கள் மீட்படைவதும் இறைவனின் ஞானத்தால் மட்டுமே என்பது இவரின் நம்பிக்கையும் தீர்ப்புமாகும்.
திருப்பாடல் 90
1என் தலைவரே! தலைமுறைதோறும் நீரே எங்கள் புகலிடமாய் உள்ளீர்.
2மலைகள் தோன்றுமுன்பே, நிலத்தையும் உலகையும் நீர் உருவாக்குமுன்பே, ஊழி ஊழிக்காலமாய் உள்ள இறைவன் நீரே!
3மனிதரைப் புழுதிக்குத் திரும்பிடச் செய்கின்றீர்; 'மானிடரே! மீண்டும் புழுதியாகுங்கள்' என்கின்றீர். 4ஏனெனில், ஆயிரம் ஆண்டுகள், உம் பார்வையில் கடந்துபோன நேற்றைய நாள் போலவும் இரவின் ஒரு சாமம் போலவும் உள்ளன.
5வெள்ளமென மானிடரை வாரிக்கொண்டு செல்கின்றீர்; அவர்கள் வைகறையில் முளைத்தெழும் புல்லுக்கு ஒப்பாவர்;
6அது காலையில் தளிர்த்துப் பூத்துக் குலுங்கும்; மாலையில் வாடிக் காய்ந்து போகும்.
7உமது சினத்தால் நாங்கள் அழிந்து போகின்றோம்; உமது சீற்றத்தால் நாங்கள் திகைப்படைகின்றோம்.
8எம் குற்றங்களை உம் கண்முன் நிறுத்தினீர்; மறைவான எம் பாவங்களை உம் திருமுக ஒளிமுன் வைத்தீர்.
9எங்கள் அனைத்து வாழ்நாள்களும் உமது சினத்தால் முடிவுக்கு வந்துவிட்டன் எங்கள் ஆண்டுகள் பெருமூச்செனக் கழிந்துவிட்டன.
10எங்கள் வாழ்நாள் எழுபது ஆண்டுகளே; வலிமை மிகுந்தோர்க்கு எண்பது; அவற்றில் பெருமைக்கு உரியன துன்பமும் துயரமுமே! அவை விரைவில் கடந்துவிடுகின்றன. நாங்களும் பறந்துவிடுகின்றோம்.
11உமது சினத்தின் வலிமையை உணர்பவர் எவர்? உமது கடுஞ்சீற்றத்துக்கு அஞ்சுபவர் எவர்? 12எங்கள் வாழ்நாள்களைக் கணிக்க எங்களுக்குக் கற்பியும்; அப்பொழுது ஞானமிகு உள்ளத்தைப் பெற்றிடுவோம்.
13ஆண்டவரே, திரும்பி வாரும்; எத்துணைக் காலம் இந்நிலை? உம் ஊழியருக்கு இரக்கம் காட்டும். 14காலைதோறும் உமது பேரன்பால் எங்களுக்கு நிறைவளியும்; அப்பொழுது வாழ்நாளெல்லாம் நாங்கள் களிகூர்ந்து மகிழ்வோம்.
15எங்களை நீர் ஒடுக்கிய நாள்களுக்கும் நாங்கள் தீங்குற்ற ஆண்டுகளுக்கும் ஈடாக, எம்மை மகிழச் செய்யும்.
16உம் அடியார்மீது உம் செயலும் அவர்தம் மைந்தர்மீது உமது மாட்சியும் விளங்கச் செய்யும். 17எம் கடவுளாம் தலைவரின் இன்னருள் எம்மீது தங்குவதாக! நாங்கள் செய்பவற்றில் எங்களுக்கு வெற்றி தாரும்! ஆம், நாங்கள் செய்பவற்றில் வெற்றியருளும்!
மனிதரின் நிலையாமையை பற்றி அழகாக பாடும் இந்த திருப்பாடல், திருப்பாடல்கள் தொகுப்பின் நான்காம் பிரிவின் (90-106) முதலாவது பாடலாகும். இந்த பாடல் மட்டும்தான் மோசேயின் பாடல் என மேற்குறிப்பிடப்பட்டுள்ளது. மனித வாழ்வின் பலவிதமான அனுபங்களை அட்டவணைப்படுத்தி, அனைத்தும் இறைவனின் இரக்கத்திலும் வழங்களிலுமே தங்கியுள்ளது என்கிறது இந்தப் பாடல். இஸ்ராயேலின் அனுபவமோ அல்லது முழு உலகின் அனுபவமோ பெரிய வித்தியாசங்களைக் தரவில்லை மாறாக அனைவரின் சிக்கல்களும் சவால்களும் ஒன்றாகவே இருப்பதனை இங்கு காணலாம். இந்த திருப்பாடலின் அதிகமான வரிகள் திருப்பிக்கூறும் எபிரேய கவி நடையில் அமைந்திருக்கின்றன.
வவ. 1-7: இந்த வரிகள் கடவுளின் பலத்ததையும் அவர் பற்றிய வரலாற்று அனுபவ அறிவையும் விவரிக்கின்றன.
அ. இது மோசே காலத்துப் பாடல் என்றால், இங்கே கடவுளை ஆசிரியர் 'புகலிடம்' என்று அழைப்பது, இஸ்ராயேல் மக்கள் வேறு எவரிலும் தங்கியிருக்கவில்லை என்ற நம்பிக்கையை காட்டுகிறது. (מָעוֹן אַתָּה நீரே எங்கள் தங்குமிடம்).
ஆ. இந்த உலகம் கடவுளால் உண்டான பிரபஞ்சம், அத்தோடு இந்த உலகைவிட கடவுள் நித்தியமானவர் என்ற நம்பிக்கையையும் இது காட்டுகிறது. மலைகளையும் நிலத்தையும் பௌதீக பொருட்களில் பழமையானவை என்று ஆசிரியர் எண்ணியிருக்கலாம்.
இ. மனிதர்களை கடவுள் புழுதியின்று படைத்தார் என்ற தொடக்க நூல் நம்பிக்கையை இங்கே ஆசிரியர் நினைவூட்டுகிறார்.
ஈ. கடவுள் காலத்தை கடந்தவர், மற்றும் காலங்கள் மனிதனுக்கு மட்டுமே உரியவை என்பதை ஆசிரியர் காட்டுகிறார். ஆயிரம் என்பது அக்காலத்தில் மிக அதிகமான இலக்கமாக கருதப்பட்டது. இந்த அதிகமான இலக்கம் கூட நமது கடவுளுக்கு கடந்து போன நேற்றைய நாள் போன்றது என்கிறார் ஆசிரியர் (אֶלֶף שָׁנִים எலெப் ஷானிம் - ஆயிரம் ஆண்டுகள்).
உ. கடவுளை வெள்ளமாகவும், மனிதரை வரண்ட புல்லாகவும் பார்க்கிறார் ஆசிரியர். பாலஸ்தீன பலைநிலங்களில் உருவாகும் மழைக்கால ஆறுகள் மிகவும் ஆபத்தானவை, அவை காட்டாறு போல அனைத்தையும் வாரிக் கொண்டு சென்றுவிடும். இதனை இவர் ஒப்பிடுகிறார் போல.
ஊ. புல்லின் நிலையாமையை ஒப்பிடுகிறார். இந்த புற்கள் இவர்களுக்க நன்கு தெரிந்த ஒரு இயற்கைப் பொருள் அது இங்கே இறையியல் உருவகமாகிறது. இயேசுவும் பல வேளைகளில் இந்த புற்களை ஒப்பிடுவார் (காண்க மத்தேயு 6,30✡). முதல் ஏற்பாட்டு புல்லும் இயேசுவின் காலத்தும் புற்களும் ஒன்றாக இருக்கவேண்டிய தேவையில்லை.
(✡நம்பிக்கை குன்றியவர்களே, இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பில் எறியப்படும் காட்டுப்புல்லுக்குக் கடவுள் இவ்வாறு அணிசெய்கிறார் என்றால் உங்களுக்கு இன்னும் அதிகமாகச் செய்ய மாட்டாரா?)
எ. கடவுளின் சினமும் சீற்றமும் இங்கே காட்டப்படுகின்றன. இது தண்டனை என்பதை விட, கடவுளின் நீதியின் குணங்கள் எனவும் எண்ணப்படலாம்.
வவ. 8-10: இங்கே ஆசிரியர் மனிதரின் நிலையாமையையும் அவர்களின் சவால்களையும் வர்ணிக்கிறார்.
அ. மனிதரின் எந்த பாவங்களும் மறைக்கப்பட்டவையல்லை மாறாக அவையனைத்தும் கடவுளின் முகத்தின் முன் நன்கு தெரிந்திருக்கின்றன, என்பது ஒரு ஆழமான இஸ்ராயேலரின் நம்பிக்கை.
ஆ. மனிதரின் வாழ்நாட்கள் ஒரு பெரும் மூச்சிற்கு ஒப்பிடப்படுகின்றன. இந்த பெரும் மூச்சு הָגָה ஹகாஹ் என்று எபிரேயத்தில் அழைக்கப்படுகிறது. இது புலம்பல், முனங்கல், மற்றும் சலனம் என்ற அர்த்தங்களையும் கொடுக்கிறது. இதிலிருந்து மனிதரின் வாழ்நாட்களின் பெறுமதியை கணித்துக் கொள்ளலாம்.
இ. இன்று மனிதரின் சராசரி வாழ்நாட்கள் நாட்டுக்கு நாடு வேறுபடுகிறது. ஈழத்தின் சராசரி மனித வாழ்நாட்கள் 75 ஆண்டுகள் என சில ஆய்வுகள் காட்டுகின்றன. இந்த பாடல் ஆசிரியர் மனிதருக்கு சராசரியாக எழுபது ஆண்டுகளையும், பலசாலிகளுக்கு என்பது ஆண்டுகளையும் கொடுத்து, பின்னர் அனைவருக்கும் பொதுவானது துன்பங்களும் துயரங்களும் மட்டுமே என்கிறார் நக்கலாக.
வவ. 11-16: இந்த வரிகளில் பல வேண்டுதல்கள் கடவுளின்பால் முன்வைக்கப்படுகின்றன. திருப்;பாடல் எவ்வகை பாடல்களாக இருந்தாலும் அங்கே பல வேண்டுதல்கள் இருப்பதை ஒவ்வொரு திருப்பாடல்களிலும் காணலாம். இங்கே:
அ. வாழ்நாட்களை கணிக்க கற்பிக்க கேட்கிறார் ஆசிரியர், இது உண்மை ஞானத்தை கொடுக்கும் என்று நம்புகிறார். வாழ்நாட்களில் நிலையாமையை அறியாது, நம் சித்தமும் உடலும் பல வேளைகளில் அகங்காரம் கொள்வதை நாமே காண்கிறோம்.
ஆ. ஆண்டவர் தம்முடன் இல்லாமையினாலே இஸ்ராயேலர் துன்பப்படுகின்றனர் என நம்புகிறார் ஆசிரியர். இது அநேகமாக இடப்பெயர்வுக்கு பின்னான அனுபவத்தை காட்டுகிறது. ஆண்டவரை திரும்பி வரக் கேட்பது, ஆண்டவரின் இரக்கம் நிறைந்த துணையை நாடுவதற்கு சமனாகும்.
இ. 'காலைதோறும் நிறைவு' என்பது ஒவ்வொரு நாளும் நம்பிக்கையின் நாளாக அமையவேண்டும் என்ற வேண்டுதலைக் குறிக்கிறது.
ஈ. கடவுளின் சித்தத்திலேயே அனைத்தும் நடந்தன, நடக்கின்றன மற்றும் நடக்கப்போகின்றன என்பது இஸ்ராயேலரின் அசைக்க முடியாத நம்பிக்கை. அவர்கள் தங்கள் தண்டனைகளும் ஆண்டவரிடம் இருந்தே வருகின்றன என்பதையும் ஏற்றுக்கொண்டனர். கிறிஸ்தவர்களுக்கு, இது மட்டுபடுத்தப்பட்ட நம்பிக்கையாக தோன்றலாம், ஏனெனில் பல வேiளைகளில் இயேசு, கடவுள் தண்டிப்பவர் அல்ல என காட்டியுள்ளார். ஆனால் இஸ்ராயேலரின் தண்டனை பற்றிய அறிவும் நம்முடைய தண்டனை பற்றிய அறிவும் ஒன்றல்ல. அவர்களின் தண்டனை என்பது அதிகமாக கண்டிப்பையே குறிக்கும். இந்த திருப்பாடல் ஆசிரியர் தண்டனைக்கு பதிலாக மகிழ்சியைக் கேட்கிறார்.
உ. கடவுளின் மாட்சியையும் வேண்டுகிறார் ஆசிரியர். கடவுளின் மாட்சியை அவரது முக தரிசனம் எனவும் கொள்ளலாம்.
வ. 17: இந்த இறுதி வரியில் ஆசிரியர் கடவுளின் இரக்கத்தை கேட்கிறார். இந்த இரக்கம்தான் அனைத்து வெற்றிகளுக்கும் காரணம் என்று நம்புகிறார். திருந்தந்தை பிரான்சிஸ்குவின் நம்பிக்கையும் இதுவே. (MISERICORDES SICUT PATER மிசரிகோர்டஸ் சிகுட் பாடர் - தந்தையைப்போல் இரக்கமுள்ளவர்களாய்!). உண்மையில் தமிழ் விவிலியத்தில் 'இன்னருள்;' என்ற சொல் அழகான எபிரேய சொல்லை அப்படியே மொழிபெயர்க்கிறது. இதனை இனிமை மற்றும் மகிழ்ச்சி என்று கூட சொல்லலாம் (נָעֵם நஎம் இன்னருள், இனிமை, மகிழ்ச்சி).
பிலமோன் 1,9-10.12-17
9அன்பின் பெயரால் வேண்டுகோள் விடுவிக்கவே விரும்புகிறேன். கிறிஸ்து இயேசுவின் தூதுவனாக அவர் பொருட்டுக் கைதியாக இருக்கும் 10பவுலாகிய எனக்குச் சிறையிலிருந்த போது பிள்ளையான ஒனேசிமுக்காக உம்மிடம் வேண்டுகிறேன். 11முன்பு உமக்குப் பயனற்றவனாக இருந்த அவன், இப்பொழுது எனக்கும் உமக்கும் பயனுள்ளவன். 12அவனை உம்மிடம் திரும்ப அனுப்புகிறேன். அவனை அனுப்புவது என் இதயத்தையே அனுப்புவது போலாகும். 13நற்செய்தியின் பொருட்டுச் சிறையுற்றிருக்கும் எனக்கு, உமது பெயரால் பணியாற்ற, அவனை என்னிடமே நிறுத்திக்கொள்ள விரும்பினேன். 14ஆனால் நீர் செய்யும் நன்மையைக் கட்டாயத்தினால் செய்யாமல், மனமாரச் செய்ய வேண்டுமென்று நினைத்தே, உம்முடைய உடன்பாடின்றி எதையும் செய்ய நான் விரும்பவில்லை. 15அவன் என்றும் உம்மோடு இருக்க உம்மைவிட்டுச் சிறிதுகாலம் பிரிந்திருந்தான் போலும்! 16இனி அவனை நீர் அடிமையாக அல்ல, அடிமையை விட மேலானவனாக, அதாவது உம்முடைய அன்பார்ந்த சகோதரனாக ஏற்றுக்கொள்ளும். அவன் என் தனிப்பட்ட அன்புக்குரியவன். அப்படியானால் மனிதன் என்னும் முறையிலும் ஆண்டவரைச் சார்ந்தவன் என்னும் முறையிலும் அவன் எத்துணை மேலாக உம் அன்புக்குரியவனாகிறான்!
17எனவே, நமக்குள்ள நட்புறவைக் கருதி, என்னை ஏற்றுக்கொள்வதுபோல் அவனையும் ஏற்றுக்கொள்ளும்.
பவுலின் கடிதங்கள் என அறியப்படுபவற்றில் மிகவும் சிறியதும், அத்தோடு மிகவும் தனிப்பட்டதுமான கடிதம் பிலமோனுக்கு பவுல் எழுதிய இந்த கடிதமாகும். ஆனால் இந்த கடிதம் தனிப்பட்ட கடித தொடர்பையும் தாண்டி இறைவார்த்தைகளையும் தாங்கியுள்ளது என ஆழமாக நம்பி, திருச்சபை தந்தையர்கள் இதனை விவிலியத்தில் இணைத்துள்ளனர். அத்தோடு இது மற்றைய பவுலின் பெரிய கடிதங்களை ஒட்டி பல மறைபரப்பு போதனைகளையும் கொண்டுள்ளது. இந்த கடிதம் கிறிஸ்தவரான பிலமோனுக்கு எழுதப்பட்டுள்ளது, இவர் மனைவி அப்பியாவும் மற்றும் பவுலின் சக மறைபரப்பாளரான ஆர்கிபுசும் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளனர். இந்த கடிதம் பவுலின் தற்போதய துணையாளரான ஒனேசிமுசுக்கு மன்னிப்பு வழங்கி ஏற்றுக்கொள்ளும் படியாக எழுதப்பட்டுள்ளது. ஒனேசிமுஸ் எப்படி பிலமோனுக்கு தவிறிழைத்தார் என்று காணுவது கடினம். வசனம் 18இல் இருந்து ஒனேசிமுஸ் பிலமோனின் பணத்தை திருடியிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் ஊகிக்கின்றனர். இப்படியான திருட்டு உரோமைய சட்டப்படி மரண தன்டனைக்குரிய குற்றமாகும். அடிமைகள் தப்பி ஓடுவதும், பின்னர் வேறு இடங்களில் மறைந்து வாழ்வதும் அக்கால உரோமைய-கிரேக்க முதலாளி-முதலைகள் உலகில் சாதாரணமாக இருந்தது. இப்படியாக ஒனேசிமுஸ் பவுலை சந்தித்து அடைக்கலம் தேடியிருக்கலாம்.
பவுல் சட்டங்களை மதிப்பவராக அத்தோடு பிலமோன் ஒரு நல்ல மனிதராக இருந்த படியினாலும், பவுல் ஒனேசிமுசை மீண்டும் அவர் தலைவரிடம் அனுப்புகிறார். அதேவேளை ஒனேசிமுசை எந்தளவுக்கு பவுல் அன்பு செய்தார் அத்தோடு பிலமோனை எந்தளவுக்கு மரியாதை செய்தார் என்பதும் இந்த வாசகத்தில் காணக்கிடக்கின்றன. பிலமோன் கொலோசேயில் வாழ்ந்திருக்கலாம் அவருக்கு பவுல் தன் சொந்த கையால் இதை எழுதினார் என்று இன்று வரை நம்பப்படுகிறது. இந்த நம்பிக்கைக்கு எதிரான கருத்துக்கள் மிகக் குறைவாகவே உள்ளன. இதனுடைய காலம் கி.பி 60-61 ஆக இருக்கலாம்.
தூய பவுல் அடிமைத்தனத்தை ஆதரித்தார் என்ற சில பிழையான வாதங்கள் இருக்கின்றன. பவுலை நாம் அவர் கால உலகில் வைத்து பார்க்க தவறக் கூடாது. பவுல் எந்த இடத்திலும் அடிமைத்தனத்தையோ அல்லது மனித வர்த்தகத்தையே ஆதரிக்கவில்லை. பவுல்தான் உலக வரலாற்றில் முதல் தடவையாக, அதன் கறைபிடித்த இதயத்திற்கு, அடிமை ஒனேசிமுசை சகோதரனாக பார்க்கும் படி கட்டளையிட்டவர். யூதர்கள் எந்த யூத சகோதரனையும் அடிமையாக்க மாட்டார்கள், அவர்களை விடுவிக்க பல முயற்சிகளை செய்வார்கள். இயேசு, இந்த பவுல் என்னும் யூதனுக்கு, அனைத்து நபர்களும் சகோதரர்கள் என்று கற்பித்தார். இப்போது பவுல் அதனைத்தான் பிலமோனுக்கு கற்பிக்கிறார். பிலமோனுக்கு எழுதிய திருமுகம், அனைத்து அடிமைத்தன பிரச்சினையைப் பற்றி ஆராயவில்லை மாறாக ஒரு கிறிஸ்தவ சகோதரனை அடிமை வாழ்விலிருந்து விடுவிக்கும் வாய்ப்பை ஏற்படுத்துகிறது. அடிமைத்தனத்தை இல்லாமல் செய்யக் கூடியது சட்டமல்ல மாறாக நல்ல உறவே. இன்றும் இந்த இலத்திரனியல் தொழில் நுட்ப உலகில் பல வடிவங்களில் பல இன மக்கள் அடிமைகளாக வாழ்கிறார்கள். நம் ஈழ உறவுகளில் பலர் ஈழத்திலும், புலத்திலும் அடிமைகளாகவே வாழ்கிறார்கள். அடிமைத்தனத்தை கழைய, பவுல் காட்டும் சமத்துவ சகோதரத்துவமே உதவும் என நம்புகிறேன்.
வவ. 9-10: ஒனேசிமுசுக்காக வேண்டும் இ;ந்தப் பகுதி, பவுலின் தனிப்பட்ட உறவு முறைகளைக் காட்டுகிறது. பவுலின் இதயம், அவர் வயதில் வளர வளர, இயேசுவின் படிப்பினைகளில் நன்கு பக்குவப்பட்டது என்பதனை இந்த வரிகளில் காணலாம். பவுல் தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தாமல் தம் அன்புறவை பாவிக்க விளைகிறார். ஓர் பாதிக்கப்பட்ட அடிமை சகோதரனை மகனாக பார்பது அவரின் தூய்மையைக் காட்டுகிறது. இந்த வரிகள் நிச்சயமாக பிலமோனிடம் நல்ல தாக்கங்களை எற்படுத்தியிருக்கும். ஒன்பதாவது வசனத்திலுள்ள 'தூதுவன்' என்னும் சொல் கிரேக்கத்தில் 'முதியவர்' என்றே உள்ளது (πρεσβύτης பிரஸ்புடேஸ் - முதியவர், பெரியவர், முதிர்ச்சியுள்ளவர்). பவுல் ஒனேசிமுசை பிள்ளையென காண்கிறார். இதற்கு τέκνον தெக்னொன் என்ற கிரேக்க சொல் பாவிக்கப்பட்டுள்ளது. இது பிள்ளையென்பதையும் விட வாரிசு மற்றும் மகன் என்ற அர்த்தத்களையும் கொடுக்கும்.
வ. 11: ஒனேசிமுசின் புதிய வாழ்கை வடிவத்தைக் காட்டுகிறார். முன்னர் சட்டத்தை மீறிய அவர் இப்போது மனித சட்டங்களையும் தாண்டி இன்னொரு இயேசுவாயிருக்கிறார் என பவுல் பரிந்துரை செய்கிறார்.
வ. 12: இந்த வரி பவுலின் மனித உணர்வுகளை படம்பிடிக்கிறது. சில வேறு முக்கியமான பிரதிகளின் வாசகங்கள் இந்த வரியை வித்தியாசமாக வாசிக்கின்றன. அதில்: 'நான் இப்போது அவரை உம்மிடம் தருப்பி அனுப்பியுள்ளேன், அவரை ஏற்றுக்கொள்ளும் அதாவது என் இதயத்தைப் போல' என்றுள்ளது. பவுல் இங்கே யாரை-எதை 'இதயம்' என்று சொல்கிறார் என்பதில் சில மயக்கம் உள்ளது. இதயம் என்ற தமிழ் மொழிபெயர்ப்பு, கிரேக்க மூலத்தில் σπλάγχνον ஸ்பிலாக்னொன் என்ற சொல்லைக் கொண்டுள்ளது. இது மனித உணர்வுகளைத் தரக்கூடிய உறுப்புக்களான இதயம், நுரையீரல், கல்லீரல் மற்றும் குடல் போன்றவற்றைக் குறிக்கும். முதல் ஏற்பாட்டிலும் (எபிரேயம்), ரகமிம் רַחֲמִים என்ற சொல்லும் இந்த சிந்தனைகளையே மையப்படுத்துகிறது.
வ. 13: இந்த கடிதத்தை எழுதியபோது பவுல் சிறையிலிருந்தார் என்பதை இந்த வரியிலும் காணலாம். தன்னுடைய விருப்பத்தையும் இங்கே அவர் பதிவு செய்கிறார். (சில காலங்களின் பின்னர் ஒசேனிமுஸ் மீண்டும் பவுலை வந்தடைந்தார் என சில பாரம்பரியங்கள் கூறுகின்றன.)
வவ. 14-15: பவுல் உரோமைய-கிரேக்க சட்டங்களை மதித்தார் என்பதனை இந்த வரிகளில் காணலாம். அத்தோடு பவுல் ஒரு காலத்திலும் தன் திருத்தூதுவத்தை அதன் உரிமைகளை தன் சொந்த விருப்பத்திற்கு பயன்படுத்தவில்லை என்பதையும் காண்டுகொள்ளலாம். ஒனேசிமுசை தன்னுடன் வைத்திருக்க விரும்பினாலும் அவர் தன் தலைவருடன் இருப்பதே முறை என்று உணர்கிறார் போல.
வ. 16: இந்த வரி, பிலமோன் திருமுகத்திலே மிக முக்கியமான வரி. அடிமை (δοῦλος துலொஸ் - அடிமை, பணியாளர்) என்பவர் அக்கால கலாச்சாரத்தில் தலைவரின் ஒரு 'மனித பொருளாக' காணப்பட்டார். இந்த அசிங்கமான மனித வரலாற்றை அழகான கிறிஸ்தவ விழுமியமான சகோதரத்துவத்தால் நிரப்பச்சொல்கிறார் பவுல். கிறிஸ்தவத்தில் சகோதரர் என்பவர், மனிதர் சார்பாகவும், ஆண்டவர் சார்பாகவும் அன்புக்குரியவர் என்ற வாதத்தை பவுல் எழுதுகிறார். (இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்தும் இந்த அழகிய சகோதரத்துவம் நம் கிறிஸ்தவத்திலும் முழுமையாக வாழப்படவில்லை. அனைத்து பிரிவினை வாதங்களும் இந்த விழுமியத்திற்கு எதிரான பாவமே!!!).
வ. 17: பவுல் ஒசேனிமுசுக்கு தன்னுடைய நிலையை ஒத்த நிலையை அளிக்கிறார். ஏற்றுக்கொள்ளும் என்பது 'வரவேற்றுக்கொள்ளும்' என்ற அர்த்தத்தையும் கொடுக்கும்.
லூக்கா 14,25-33
25பெருந்திரளான மக்கள் இயேசுவோடு சென்றுகொண்டிருந்தனர். அவர் திரும்பிப் பார்த்து அவர்களிடம் கூறியது: 26'என்னிடம் வருபவர் தம் தந்தை, தாய், மனைவி, பிள்ளைகள், சகோதரர் சகோதரிகள் ஆகியோரையும், ஏன், தம் உயிரையுமே என்னைவிட மேலாகக் கருதினால், அவர் என் சீடராயிருக்க முடியாது. 27தம் சிலுவையைச் சுமக்காமல் என் பின் வருபவர் எனக்குச் சீடராய் இருக்கமுடியாது. 28'உங்களுள் யாராவது ஒருவர் கோபுரம் கட்ட விரும்பினால், முதலில் உட்கார்ந்து, அதைக் கட்டிமுடிக்க ஆகும் செலவைக் கணித்து, அதற்கான பொருள் வசதி தம்மிடம் இருக்கிறதா எனப் பார்க்கமாட்டாரா? 29இல்லாவிட்டால் அதற்கு அடித்தளமிட்ட பிறகு அவர் கட்டி முடிக்க இயலாமல் இருப்பதைப் பார்க்கும் யாவரும் ஏளனமாக, 30'இம்மனிதன் கட்டத் தொடங்கினான்; ஆனால் முடிக்க இயலவில்லை' என்பார்களே! 31'வேறு ஓர் அரசரோடு போர் தொடுக்கப்போகும் அரசர் ஒருவர், இருபதாயிரம் பேருடன் தமக்கு எதிராக வருபவரைப் பத்தாயிரம் பேரைக் கொண்டு எதிர்க்க முடியுமா என்று முதலில் உட்கார்ந்து சிந்தித்துப் பார்க்க மாட்டாரா? 32எதிர்க்க முடியாதெனில், அவர் தொலையில் இருக்கும்போதே தூதரை அனுப்பி, அமைதிக்கான வழியைத் தேட மாட்டாரா? 33அப்படியே, உங்களுள் தம் உடைமையையெல்லாம் விட்டுவிடாத எவரும் என் சீடராய் இருக்க முடியாது.
மான்புமிகு வைத்தியர் லூக்காவின் நற்செய்தியில், இந்த அதிகாரமும், எருசலேம் நோக்கிய பயணத்தின் போது வழங்கப்பட்ட நீண்ட உரையின் ஒரு பகுதியாகவே இருக்கிறது. சீடத்துவம் என்பதை நான்கு நற்செய்திகளிலும் தனித்துவமாக ஆராயப்படுகிறது. லூக்காவும் தனக்கே உரிய பாணியில் இயேசு கற்பித்த சீடத்துவத்தை விவரிக்கின்றார். இந்த பகுதி லூக்காவிற்கே உரிய தனித்துவமான பகுதி, மற்றைய நற்செய்தியாளர்களில் மத்தேயு இதனை சில வரிகளில் ஒத்திருக்கிறார் (ஒப்பிடுக மத் 10,37-38). சீடத்துவம் அக்காலத்தில் மிகவும் அறியப்பட்ட மற்றும் பிரதான கல்விக்கான உண்மையான வழிமுறையாகும். கிரேக்க-உரோமைய பெரும் மெய்யறிவு வாதிகள் பல சீடர்களை கொண்டிருந்தனர். அதிகமான இளைஞர்கள், முக்கியமான பெரும் மெய்யறிவு வாதிகளிடம் கற்று தங்கள் எதிர்காலத்தை நிச்சயிக்க முயன்றனர். அரிஸ்டோட்டிஸ் மற்றும் அலெக்சான்டர் சோடி இதற்கு நல்ல உதாரணம். இயேசுவை பின்பற்றிய கூட்டம் அனைத்தும், அவர் சீடர்கள் அல்ல என்பதை விளக்க லூக்கா முயற்சிக்கின்றார். இயேசுவை பின்னால் மூன்றுவிதமான குழுக்கள் சீடர்களாக வலம்வந்தனர். அவர்கள்:
அ. பொதுவான சீடர்கள், இவர்களில் பல பெண்களும் அடங்குவர்
ஆ. பன்னிரு திருத்தூதர்கள், இவர்களை இயேசுவே தெரிந்து கொண்டார்.
இ. முக்கியமான மூவர் கூட்டம் (பேதுரு, யோவான் மற்றும் யாக்கோபு). இவர்கள் மிக முக்கியமான நிகழ்வுகளில் இயேசுவோடு இருந்தனர்.
வ. 25: இங்கே கூறப்படுகின்ற பெருந்திரளான மக்கள் என்பவர்கள் இயேசுவின் சீடர்கள் மட்டுமல்ல, மாறாக இயேசுவை பினபற்றிய மக்கள் கூட்டத்தைக் குறிக்கின்றது. இயேசுவை சுற்றி பெரிய கூட்டம் ஒன்று எப்போதும் இருந்ததை லூக்கா மீண்டும் மீண்டும் பதிவுசெய்வார். ஆண்டவர் இந்த கூட்டத்தை திரும்பிப் பார்த்து அறிவுரைகள் கூறுவது, முதல் ஏற்பாட்டில் கடவுள் தனது திரு முக ஒளியை காட்டுவதனை நினைவுபடுத்துகிறது. சாதாரணமான ஒருவர் திரும்பி பார்த்தல் என்பது, அவர் பார்க்கப்படுகிறவர்கள் மேல் கொண்டுள்ள அக்கறையைக் காட்டுகின்றது.
வ. 26: இயேசுவின் சீடத்துவத்தின் மதிப்பு இங்கு மதிப்பீடு செய்யப்படுகிறது. இங்கே சீடர்கள் என்பவர்கள் திருத்தூதர்களை மட்டும் குறிப்பதாக எண்ண முடியாது. ஒரு மனிதனின் மிக முக்கிய உறுவுகள் இங்கே வரிசைப் படுத்தப்பட்டுள்ளன. அத்தோடு, வாழ்வின் மிக முக்கியமான சொத்தான உயிரும் இங்கே சீடத்துவத்தின் குரு தட்சனையாக கேட்கப்படுகிறது. இந்து மதத்திலே சீடத்துவம் என்பது, குருவின் காலடிகளில் அமர்ந்து அவர் சொல்வதைக் கேட்பதாகும். இதனைத்தான் உபநிசாத் என்கின்றோம். இயேசுவின் சீடத்துவம், அனைத்தையும் இயேசுவிற்கு கீழாக வைக்கக் கேட்கிறது. பௌத்த மத பாரம்பரிய சீடத்துவம், சீடர்கனை அனைத்தையும் துறந்து, குருவின் தயவில் தங்கி அவர் கற்பிப்பதை கற்றுக்கொள்ள கேட்டது.
இயேசு இந்த வரியில், தன்னிடம் வரும் சீடர்கள் தம் உறவுகளை அனைத்தையும் துறந்துவிட வேண்டும் என்று கேட்கவில்லை மாறாக, இவர்கள் அனைத்திற்கும் மேலான இடத்தை தனக்கும் தன் பணிக்கும் தரவேண்டும் என்றே கேட்கிறார். ஆரம்ப கால கிறிஸ்தவ சீடத்துவத்திற்கு சவாலாக குடும்ப உறவுகள் விளங்கியதையும், குடும்ப அதி-அன்பின் காரனமாக பல சீடர்கள் கிறிஸ்தவத்தை கைவிட்டு யூத உரோமைய மதங்களுக்கு திரும்பிச் சென்றதையும் இங்கே நினைவுகூர வேண்டும். இந்த சீடத்துவத்தின் அழைப்பு அழகாக விளங்கப்பட்டு, ஆரம்ப கால மற்றும் மத்திய காலத்தில் கிறிஸ்தவ சீடத்துவம், இயேசு கிறிஸ்துவிற்கே முக்கியத்துவம் கொடுத்தது. இன்று பல வியாக்கியானங்களினாலும், நவீன கால சமாளிப்புக்ளாலும்
இயேசுவிற்கு இரண்டாம் இடத்தையே அதிகமான சீடர்கள் கொடுப்பதை கவலையோடு பார்க்கலாம்.
வ. 27: சிலுவை (σταυρός ஸ்தௌரொஸ் - சிலுவை) சமரசம் செய்யப்பட முடியாத சீடத்துவத்தின்
ஆயூதம் என்பதை ஆண்டவர் விளக்குகிறார். சிலுவை என்பது உரோமையருக்கு தண்டனையின் அடையாளமாகவும், யூதர்களுக்கு சாபமாகவும் விளங்கியது. இந்த சிலுவைதான் ஒருவரை இயேசுவின் சீடர்களாக்குகிறது என்கிறார் மாண்புமிகு வைத்தியர் லூக்கா. பவுல் தன்னுடைய திருமுகங்களில் இந்த சிலுவையின் ஆன்மீகத்தை அழகாகவும் ஆழமாகவும் இறையியல்படுத்துவார் (ஒப்பிடுக 1கொரி 1,18✡). இங்கே லூக்கா குறிப்பிடும் 'தம் சிலுவை' என்பது நோக்கப்பட வேண்டும். அதாவாது சீடத்துவம் என்பது ஒருவரின் சொந்த சிலுவையாகும், இது ஒருவர் இயேசுவிற்காக செய்யும் இரக்கச் செயல் அல்ல மாறாக ஒவ்வொருவரும் தம் சொந்த வாழ்வையும் அதன் சவால்களையும் தமக்காக சந்திக்கவேண்டும். இதுவே சீடத்துவம் என்கிறார் லூக்கா. கிரேக்க-உரோமைய சீடத்துவம் விஞ்ஞான அறிவை மையப்படுத்தியது, ஆனால் கிறிஸ்தவ சீடத்துவம் சாதாரண வாழ்வை மையப்படுத்துவதை வியந்து பார்க்கலாம்.
(✡சிலுவை பற்றியச் செய்தி அழிந்து போகிறவர்களுக்கு மடமையே. ஆனால், மீட்புப் பெறும் நமக்கோ அது கடவுளின் வல்லமை. 19ஏனெனில், 'ஞானிகளின் ஞானத்தை அழிப்பேன், அறிஞர்களின் அறிவை வெறுமையாக்குவேன்' என்று மறைநூலில் எழுதியுள்ளது.).
வவ. 28-30: இந்த வரிகளில் கோபுரம் ஒன்று கட்டப்படுவதன் வழிமுறையை இயேசு சீடத்துவத்தின் உதராணமாக பார்க்கிறார். இங்கே இயேசு சீடத்துவத்தை சாதாரண கிறிஸ்தவ வாழ்வாகவே பார்கிறார் என்பதனையும் தொடர்ந்து நோக்க வேண்டும். அந்த காலத்தில் பல விதமான கோபுரங்கள் (πύργος புர்கொஸ்- கேபுரம்) பாவனையில் இருந்தது. வாயிற் கோபுரம், கோட்டையின் அரண் கோபுரம், இல்லங்களில் இருந்த கோபுரம், தொழில் இடங்களின் கோபுரம். இவ்வாறு கோபுரங்கள் அக்கால பாதுகாப்பின் அடையாளங்களாக இருந்தன. சண்டைகளின் போது முதலில் கோபுரங்களே தாக்கப்பட்டன. இன்று ஒரு வீட்டிற்கு எப்படி பாதுகாப்பு ஒளிப் பதிவுக்கருவி முக்கியமோ அப்படித்தான் அன்று கோபுரம் இருந்தது. இந்த கோபுரங்களின் வலிமை அதன் அடித்தளத்திலே அதிகமாக தங்கியிருந்தது. இதனால்தான் இதனை கட்டுகிறவர் முதலில் அதன் அடித்தள செலவை கணிக்க வேண்டும் என்று இயேசு ஆண்டவர் ஒப்பிடுகிறார். வீட்டிற்கு எப்படி கோபுரம் முக்கியமோ அதே போல் கிறிஸ்தவ வாழ்விற்கு சீடத்துவம் முக்கியம் என்கிறார் இயேசு.
யார் இந்த ஏளனம் செய்யும் மக்கள் கூட்டம் என்பது அவ்வளவு தெளிவாக விளங்கவில்லை. ஒருவேளை இவர்கள் ஆரம்ப காலத்தில் கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவ வாழ்வை புறக்கணித்த போது அவர்களை ஏளனம் செய்த யூதர்களையோ அல்லது கிரேக்க-உரோமையர்களையோ குறிக்கலாம்.
வவ. 31-32: போர் தந்திரம் மற்றும் போர்த்திறன் போன்றவை அக்காலத்தில் நன்கு அறியப்பட்ட உவமைகள். இன்று போர் செய்யும் நாடுகளின் திறன் அவர்களின் இராணுவ ஆயுத பலத்தையும், அரசியல் பலத்தையும் கொண்டு ஒப்பிடப்படுகிறது. இயேசுவின் காலத்தில் இது, போர் வீரர்களின் எண்ணிக்கையை கொண்டு ஆராயப்பட்டது. இதனால்தான் லூக்கா 10000தையும் 20000தையும் ஒப்பிடுகிறார். அமைதி வழியை தேடுதல் அக்காலத்தில் பலமின்மையின் அடையாளமாக கருதப்படவில்லை மாறாக அதுவும் அரசியல் இராஜ தந்திரமாகவே பார்க்கப்பட்டது. கிறிஸ்தவ வாழ்க்கையும் இதனைப்போல, உலகரத்திற்கு எதிரான ஒரு போர் போன்றதே என்கிறார் லூக்கா.
வ. 33: உடமைகள் என்பது இங்கே ஒருவரின் அசையும்-அசையா சொத்துக்கள் மற்றும் உரிமைகளைக்கூட குறிக்கலாம். உடமைகள் என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது கிரேக்க மூலத்தில் ஒருவரின் 'அனைத்தும்' என்றே உள்ளது (πᾶσιν τοῖς ἑαυτοῦ அவர்குரிய அனைத்தும்).
இயேசுவின் சீடத்துவம் ஒரு மதம் அல்ல,
அது ஒரு மகத்தான அழைப்பு,
கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் ஒரே அழைப்பே கொடுக்கப்பட்டுள்ளது.
இயேசுவே கிறிஸ்தவ சீடத்துவத்தின் எல்லையும் முடிவும்.
இந்த சீடத்துவம் தாழ்ச்சியையும், சுய அறிவையும் எதிர்பார்க்கிறது.
அத்தோடு இந்த சீடத்துவம் மனித அறிவில் தங்கியிருப்பதில்லை,
மாறாக மனித அறிவை பயன்படுத்துகிறது.
அன்பு ஆண்டவரே!
உம்மை பற்றிக்கொண்டு உம் சீடராக, முதலில் எமக்கு சுய அறிவை தாரும்.
எமது சிலுவைகள் சுமக்கப்படவேண்டிய
சொந்த மணிமுடிகள் என்ற அறிவையும் தாரும், ஆமென்.