புதன், 5 ஜனவரி, 2022

ஆண்டவரின் திருமுழுக்கு பெருவிழா 09.01.2022

 




ஆண்டவரின் திருமுழுக்கு பெருவிழா

09.01.2022


M. Jegankumar Coonghe OMI,

Shrine of Our Lady of Good Voyage,

Chaddy, Velanai,

Jaffna.

Wednesday, 5 January 2022



லூக்கா நற்செய்தியில் வரும் ஆண்டவரின் திருமுழுக்கு வரலாறு, ஒரு அரசன் அரியணை ஏறுவதைப்போலவும், அதனை கடவுள் அங்கீகரிப்பதைப் போலவும் அமைக்கப்பெற்றுள்ளது. திருமுழுக்கு சடங்கு தோராவில் ஏற்படுத்தப்பட்டாலும் (வி.. 29,4: 30,17-21: 40,30-33: லேவி 17,15-16: .. 21,6) மத்திய கீழைத்தேய நாடுகளில் ஏற்கனவே வழக்கத்திலிருந்த ஒரு தூய்மைச் சடங்காகும். கும்ரான் குழுமங்களிலும் இந்தச் சடங்கு ஒரு தூய்மைச் சடங்காக கருதப்பட்டது. புதிய ஏற்பாட்டு காலத்திற்கு முன்னர் புறமதத்தவர் யூத மதத்திற்குள் நுழைய இது ஒரு சடங்காக கருதப்பட்டது. இது உள்புகு சடங்கா அல்லது ஒரு பாவமன்னிப்பு சடங்கா என்பதில் பல கேள்விகளும் விடைகளும் உள்ளன. புதிய ஏற்பாட்டு காலத்தில் சில வேளைகளில் தூய ஆவி திருமுழுக்கின் பின்னரும், அல்லது திருமுழுக்கின் முன்னரும் இறங்கி வருவதைக் காணலாம். திருமுழுக்கு இல்லாத போதும் தூய ஆவியானவர் இறங்கி வருவதையும் புதிய ஏற்பாட்டில் காண்கிறோம். ஆக தூய ஆவியானவர் திருமுழுக்கையும் தாண்டியவர் என்பதனை அறியலாம். இன்றைய ஆண்டவரின் திருமுழுக்கின் முக்கியத்துவத்தை சற்று ஆழமாக பார்ப்போம்.


முதல் வாசகம்: எசாயா 40,1-5.9-11

1'ஆறுதல் கூறுங்கள்; என் மக்களுக்குக் கனிமொழி கூறுங்கள்' என்கிறார் உங்கள் கடவுள். 2எருசலேமிடம் இனிமையாய்ப் பேசி, உரத்த குரலில் அவளுக்குச் சொல்லுங்கள்; அவள் போராட்டம் நின்றுவிட்டது; அவள் குற்றம் மன்னிக்கப்பட்டது; அவள் தன் பாவங்கள் அனைத்திற்காகவும் ஆண்டவர் கையில் இருமடங்கு தண்டனை பெற்றுவிட்டாள்.

3குரலொளி ஒன்று முழங்குகின்றது; பாலைநிலத்தில் ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; பாழ்நிலத்தில் நம் கடவுளுக்காக நெடுஞ்சாலை ஒன்றைச் சீராக்குங்கள். 4பள்ளத்தாக்கு எல்லாம் நிரப்பப்படும்; மலை, குன்று யாவும் தாழ்த்தப்படும்; கோணலானது நேராக்கப்படும்; கரடு முரடானவை சமதளமாக்கப்படும். 5ஆண்டவரின் மாட்சி வெளிப்படுத்தப்படும்; மானிடர் அனைவரும் ஒருங்கே இதைக் காண்பர்; ஆண்டவர்தாமே இதை மொழிந்தார்.

9சீயோனே! நற்செய்தி தருபவளே, உயர்மலைமேல் நின்றுகொள்! எருசலேமே! நற்செய்தி உரைப்பவரே! உன் குரலை எழுப்பு, அஞ்சாதே! 'இதோ உன் கடவுள்' என்று யூதா நகர்களிடம் முழங்கு! 10இதோ என் தலைவராகிய ஆண்டவர் ஆற்றலுடன் வருகின்றார்; அவர் ஆற்றலோடு ஆட்சி புரிய இருக்கிறார். அவர்தம் வெற்றிப் பரிசைத் தம்முடன் எடுத்து வருகின்றார்; அவர் வென்றவை அவர்முன் செல்கின்றன. 11ஆயனைப்போல் தம் மந்தையை அவர் மேய்ப்பார்; ஆட்டுக்குட்டிகளைத் தம் கையால் ஒன்று சேர்ப்பார்; அவற்றைத் தம் தோளில் தூக்கிச் சுமப்பார்; சினையாடுகளைக் கவனத்துடன் நடத்திச் செல்வார்.' 


இந்த எசாயாவின் பகுதி 'எதிர்பார்க்கப்பட்ட கடவுள்' என்ற பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது


.1: கடவுளுடைய தாய்மையை காட்டுகின்ற வசனங்களாக இவை அமைந்துள்ளன. ஆறுதல் என்பதன் எபிரேய மூலச்சொல் (נחם நஹம்) ஆகும். இதன் அர்த்தங்களாக ஆறுதல் படுத்து, இரக்கம் காட்டு, திடப்படுத்து, பரிவு கொள், ஓய்வெடு எனக்கொள்ளலாம். இங்கே கட்டளை இடுபவாராக கடவுளே இருப்பதால் கடவுளுடைய இரக்கம் அருகில் உள்ளது என்பதை இது உணர்த்துகிறது


.2..: 'எருசலேமின் இதயத்திடம் பேசுங்கள்' என்பது 'இனிமையாய் பேசுங்கள்' என மொழிபெயர்கப்பட்டுள்ளது. (דַּבְּרוּ עַל־לֵ֤ב יְרֽוּשָׁלִַ֙ם֙ தப்ரு அல் லேவ் யிருஷலா()ம்). போராட்டம் நிறைவுபெற்றது, பாவங்கள் மன்னிக்கப்பட்டன என உருவகமாகக் கூறி, ஆண்டவருக்கெதிரான போராட்டம் பாவமே எனச் சொல்கிறார்


.: இரண்டு மடங்கு தண்டனை என்பது ஒரு ஆழமான விவிலிய சிந்தனை. (כִּפְלַיִם கிஃலாயிம், כָּפַל இரட்டை மடங்கு) தண்டனையோ அல்லது ஆசீர்வாதமோ இரண்டு மடங்காகும் போது அது ஒருவகை நிறைவைக் குறிக்கும். (காண் வி.. 22,4: எரே 16,18: தி.வெ 18,6) 


.3:

குரலொன்று முழங்குகின்றது (ק֣וֹל קוֹרֵ֔א), பாலைநிலத்தில் (בַּמִּדְבָּ֕ר), 

கடவுளின் பாதையை தயார் படுத்துங்கள் (פַּנּ֖וּ דֶּ֣רֶךְ יְהוָ֑ה).

நேராக்குங்கள் வரண்ட நிலத்தை

 (יַשְּׁרוּ֙ בָּעֲרָבָ֔ה), 

எங்கள் இறைவனின் பெருவீதியை

 (מְסִלָּ֖ה לֵאלֹהֵֽינוּ ׃).

என்றே முறையாக மொழிபெயர்க்கப்படவேண்டும். இதே பகுதியை லூக்கா செப்துவாஜினிலிருந்து எடுத்து வித்தியாசமாக கையாள்வார் (ஒப்பிடுக லூக் 3,4). 


.3-4: எசாயாவுக்கு இந்த வசனங்கள், ஒரு இடம்யெர்ந்த மக்களின் நாடு திரும்புதலையே மையப்படுத்துகிறது, அவர் இந்த குரலை மக்களின் விடுதலையை அறிவிக்கும் அறிவிப்பாளனின் குரலாக காண்பதாக சில விவிலிய வல்லுநர்கள் காண்கின்றனர். லூக்காவிற்கு இது திருமுழுக்கு யோவானின் குரல்.


.9: சீயோனும், எருசலேமும் இங்கே ஒத்தகருத்துச் சொற்கள், நற்செய்தி உரைப்பது அவளது செயல். உயர்மலையில் நில், குரலை எழுப்பு மீண்டும் ஒத்தகருத்து உவமானம். 'இதோ உன் இறைவன்' என்பதுதான் இங்கே வருகின்ற நற்செய்தி. இதனையே எருசலேம் உரைக்க வேண்டும்


.10: இந்த இறைவனின் செயல்கள் வர்ணிக்கப்படுகிறன்றன. ஆற்றலானவராக வருகின்றார், அவருடைய கரங்கள் ஆட்சி புரிகின்றன, வெற்றிப்பொருள்கள் அவரோடு. இந்த வசனம் போரில் வெல்கின்ற அரசனை வருணிப்பதாக அமைகிறது, இதனையே எருசலேமை கொள்ளையிட்டவர்கள் செய்தனர். அல்லது அவர்களின் கடவுள்கள் செய்தனர். இப்போது ஆண்டவரே வருகிறார் என்பதன் மூலம், இஸ்ராயேலரின் கடவுள் தோற்கவில்லை என எசாயா கூறுகிறார்


.11. கடவுளை ஆயனாக (רֹעֶה֙ ரோஏஹ்) உருவகப்படுத்துவது இஸ்ராயேலருக்கு மிகவும் பிடித்தமானது. (ஈழத்தமிழருக்கு கார்த்திகைப் பூப்போல) இந்த ஆயனின் செயல்களான ஆட்டுக்குட்டிகளைச் சேர்த்தல், மடியில் சுமத்தல், சினையாடுகளைக் கவனித்தல் போன்றவை ஆண்டவரின் இறுக்கமான அரவணைப்பை காட்ட எசாயா பயன்படுத்துகிறார். (தமிழ்த் தாய்மார் தம் பிள்ளைகளுக்கு நெற்றியிலிடும் முத்தத்தைப் போன்ற உருவகம்). 

  


பதிலுரைப்பாடல், திருப்பாடல் 104

என் ஆன்மாவே ஆண்டவரைப் புகழ்வாய், ஆண்டவருக்கு புகழ்ச்சி

இது ஒரு படைப்பு புகழ்ச்சிப்பாடல். 35வசனங்களைக் கொண்ட இப்பாடல் பிரபஞ்சம் கடவுளைப் போற்றுவதைப் போல் அமைக்கப்பட்டு;ள்ளது. ஆசிரியர் தொடக்க நூலில் கடவுள் உலகை படைத்ததை தியானிப்பவர் போல தன்னைக் காட்டுகிறார். இத் திருப்பாடல் கட்டமைப்பு வித்தியாசமானதாக இருக்கிறது. தொடக்கவுரையுடன் தொடங்குகின்ற பாடல், (என் ஆன்மாவே ஆண்டவரைப் புகழ்வாய்) முடிவுரையில் தனிப் புகழ்சியாக முடிவடைகிறது (நான் ஆண்டவரைப் பாடுவேன் என் வாழ்நாள் வரை 33). முதலாவது வசனத்திலே வந்த அதே வரிகளுடன், என் ஆன்மாவே ஆண்டவரைப் புகழ், ஆண்டவருக்கு புகழ்ச்சி (הַֽלְלוּ־יָֽהּ ஹல்லூ யாஹ்) என்று நிறைவடைகிறது


இரண்டாம் வாசகம், தீத்துவிற்கு எழுதிய திருமுகம், 2,11-14: 3,4-7

11ஏனெனில் மனிதர் அனைவருக்கும் மீட்பராம் கடவுளின் அருள் வெளிப்பட்டுள்ளது. 12நாம் இறைப்பற்றின்மையையும் உலகுசார்ந்த தீய நாட்டங்களையும் மறுத்துக் கட்டுப்பாட்டுடனும் நேர்மையுடனும் இறைப்பற்றுடனும் இம்மையில் வாழ இவ்வருளால் பயிற்சி பெறுகிறோம். 13மகிழ்ச்சியோடு எதிர்நோக்கியிருப்பது நிறைவேறும் எனக் காத்திருக்கிறோம். நம் பெருமைமிக்க கடவுளும் மீட்பருமாகிய இயேசு கிறிஸ்துவின் மாட்சி வெளிப்படப்போகிறது. 14அவர் நம்மை எல்லா நெறிகேடுகளிலிருந்தும் மீட்டு, நற்செயல்களில் ஆர்வமுள்ள தமக்குரிய மக்களாகத் தூய்மைப்படுத்தத் தம்மையே ஒப்படைத்தார்.

4நம் மீட்பராம் கடவுளின் நன்மையும் மனித நேயமும் வெளிப்பட்டபோது, 5நாம் செய்த அறச்செயல்களை முன்னிட்டு அல்ல, மாறாகத் தம் இரக்கத்தை முன்னிட்டு, புதுப் பிறப்பு அளிக்கும் நீரினாலும் புதுப்பிக்கும் 

தூய ஆவியாலும் கடவுள் நம்மை மீட்டார். 6அவர் நம் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் வழியாகத் தூய ஆவியை நம்மீது நிறைவாகப் பொழிந்தார். 7நாம் அவரது அருளால் அவருக்கு ஏற்புடையவர்களாகி, நாம் எதிர்நோக்கி இருக்கும் நிலைவாழ்வை உரிமைப்பேறாகப் பெறும் பொருட்டே இவ்வாறு செய்தார்


தூய பவுல் எழுதிய மேய்ப்புப்பணி திருமுகங்களில் ஒன்றான இதில், இயேசு கொடுக்கும்; தூயஆவியின் தன்மைகளை தீத்துவிற்கு ஞாபகப்படுத்துகிறார். தீத்து என்ற தனிநபருக்கு எழுதியதெனினும், இதனை உற்று நோக்குகின்ற போது, பவுல் தப்பறைகளுக்கு விளக்கம் கொடுப்பது போல அமைந்துள்ளதைக் காணலாம்


.11: 'மனிதர் அனைவருக்கும் மீட்படையும் அருள்' என்பது பவுலுடைய மனமாற்றத்தின் முக்கியமான நம்பிக்கை. இது பல வேளைகளில் கேள்விக்குள்ளாக்கப்பட்டபோதும் பவுல் அதனில் ஆழமாக இருப்பதைக் காணலாம்.  


.12: யூதருக்கு மட்டுமே என்று அறியப்பட்ட அருள், இயேசுவால் அனைவருக்கும் கிடைக்கப்பட்டுள்ளது, இதனால் இம்மையில் கட்டுப்பாடுடன் வாழ அனைவரும் கடமைப்பட்டவர்கள் என ஞாபகப்படுத்துகிறார். இந்த அருளை காரணம் காட்டி யாரும் தான்தோன்றித்தன வாழ்வு வாழக்கூடாது என்பதில் கருத்தாயிருக்கிறார் பவுல்


.13..: புவுலுடைய முக்கியமான நம்பிக்கை ஒன்று இங்கே காட்டப்படுகிறது. (προσδεχόμενοι τὴν μακαρίαν ἐλπίδα καὶ ἐπιφάνειαν) 'நாம் காத்திருக்கிறோம், மகிழ்சியான எதிர்நோக்கிற்காகவும் மற்றும் இறைவெளிப்பாட்டிற்காகவும்..' இவ்வார்த்தைகள் இயேசுவினுடைய வருகையை அருகில் பவுல் எதிர்பார்த்திருந்தார் என்பதைக் காட்டுகிறது.


. μεγάλου θεοῦ καὶ σωτῆρος ἡμῶν Ἰησοῦ Χριστοῦ 'பெரிய கடவுளும் மீட்பருமான இயேசு கிறிஸ்து'. இது ஆரம்பகால திருச்சபையில் ஆண்டவருக்கு வழங்கப்பட்ட ஒரு இறையியல் பெயர்.


14. இயேசு பெரிய கடவுளாக இருந்தாலும் அவர் நமக்காக தம்மையையே ஒப்படைத்தார் என காட்டி ஆயரான தீத்துவை தியானிக்க வைக்கிறார் பவுல்


.4-5. கடவுளுடைய இந்த மீட்பு எப்படி கொடுக்கப்பட்டது என்பதற்கு விளக்கம் கொடுக்கிறார். நமது அறத்தை முன்னிட்டு அல்ல, மாறாக தமது இரக்கத்தினாலும் (ἔλεος எலேஒஸ்) தமது கழுவுதலினாலும் (λουτρόν லுட்ரோன்), தூய ஆவியின் புதுப்பித்தலாலும் மீட்டார். கழுவுதல், இங்கு ஓர் இடத்தையோ அல்லது அந்த செயற்பாட்டையோ குறிக்கலாம்.


.6. கடவுள் தூய ஆவியை இயேசு வழியாகவே பொழிந்தார் என்று கூறி, இயேசுவிற்கும் தூய ஆவியின் வருகைக்கும் பிரிக்க முடியாத தொடர்புள்ளதைக் காட்டுகிறார்


.7. கடவுளுடைய அருள்தான் ஒருவர் கடவுளுக்கு ஏற்புடையவர் ஆவதற்கும் உரிமைவாழ்வை அடைவதற்கும்  காரணம்; அவர் பிறப்போ, குலமோ அல்லது அவருடைய நற்செயல்களோ காரணமாக முடியாது என்பது பவுலுடைய ஆழமான இறையியல் நம்பிக்கை. இது பிற்காலத்தில் 'அருள் மட்டுமே போதும் நற்செயல்கள் கூட தேவையில்லை' எனும் தவறான கருத்தியல்களை நிரூபிக்க தவறாக பாவிக்கப்பட்டதை வரலாற்றில் காணலாம்

நற்செய்தி

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3:15-16,21-22


15. அக்காலத்தில் மக்கள் மீட்பரை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒருவேளை யோவான் மெசியாவாக இருப்பாரோ என்று எல்லாரும் தங்களுக்குள் எண்ணிக்கொண்டிருந்தார்கள்.16 யோவான் அவர்கள் அனைவரையும் பார்த்து, 'நான் தண்ணீரால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுக்கிறேன்; ஆனால் என்னைவிட வலிமைமிக்க ஒருவர் வருகிறார். அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை. அவர் தூய ஆவி என்னும் நெருப்பால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுப்பார். 21 மக்களெல்லாரும் திருமுழுக்குப் பெறும் வேளையில் இயேசுவும் திருமுழுக்குப் பெற்று, இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தபோது வானம் திறந்தது.22 தூய ஆவி புறா வடிவில் தோன்றி அவர்மீது இறங்கியது. அப்பொழுது, ' என் அன்பார்ந்த மகன் நீயே, உன்பொருட்டு நான் பூரிப்படைகிறேன் ' என்று வானத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது.


லூக்கா நற்செய்தியில் இந்தப் பகுதி ஆண்டவரின் குழந்தைப் பருவ நிகழ்சிகளின் பின்னரும், ஆண்டவரின் பொதுப்பணியின் முன்னரும், அவரை உலகிற்கு அறிமுகம் செய்யும் ஒரு நிகழ்வு போல லூக்கா இருத்தியிருப்பதை இங்கே காணலாம். லூக்கா ஒப்பிட்டு இயேசுவை உயர்த்துவதில் வல்லவர், அதனையே இங்கேயும் செய்கிறார். இந்த நிகழ்வு, இயேசு யார் என்பதை வாசகர்களுக்கு மட்டுமல்ல, திரு முழுக்கு யோவானுக்குமே காட்டும்படி அழகாக வர்ணிக்கிறார் லூக்கா. (ஒப்பிடுக மத்.3,13-17: மாற் 1,9-11: யோவான் 1,32-33)


.15. திருமுழுக்கு யோவானை மெசியாவாக எண்ணிய கொள்கை, திருச்சபையை பதம்பார்த்த ஆரம்பகால பேதகங்களில் ஒன்று. இதனை நன்கு அறிந்திருந்து அழகாக அதனை  வர்ணிக்கிறார் லூக்கா. யோவானை மக்கள் ஒருவேளை மெசியாவாக இருப்பாரோ எனக் எண்ண காரணம், அவரது பிறப்பின் அறிவிப்பும் அத்தோடு அவரது வாழ்க்கையுமாக இருந்திருக்கலாம். லூக்கா இங்கு யோவானுக்கு எதிரானவர் அல்ல என்பதை விளங்கவேண்டும். மரியாவின் வாழ்த்துச்செய்தி முதலில் எட்டியது யோவான் புலன்களுக்கே, அவர் அன்னை எலிசபெத்துக்கு அல்ல என லூக்கா அழகுறச் சொல்வார். (லூக் 1,41)


.16. இந்த ஒரே வசனத்தில் லூக்காவின் புலமை யோவானை அவரது இடத்திலும் இயேசுவை அவரது இடத்திலும் வைப்பதைக் காணலாம். யோவானின் வார்த்தைகள்:


. ஷஷதண்ணீரால் திருமுழுக்கு கொடுக்கிறேன்||, என்று சொல்லி யோவான் தான் செய்வது ஒரு மன்னிப்பு அல்லது துய்மை சடங்கே ஆகும் அத்தோடு இது யூத பாரம்பரியத்தையோ அல்லது கானானிய பாரம்பரியத்ததையோ குறிக்கலாம். இங்கே தண்ணீர் மனித கழுவுதல்களையே காட்டுகிறது


. என்னைவிட வலிமைமிக்கவர்: (ὁ ἰσχυρότερός இஸ்குரோடெரோஸ்) இந்த வார்த்தை பல வேளைகளில் கடவுளின் தன்மையை குறித்தாலும் இங்கு ஒர் ஒப்பீட்டுக்காகவே பாவிக்கப்படுகிறது என கொள்ளலாம். அவர் மிதியடிவாரை அவிழ்க்கும் தகுதி: இச் செயல்களை அநேகமாக அடிமைகளாக வாங்கப்பட்டவர்களே செய்தனர். யோவான் தன்னை கடவுளுடைய அடிமை அல்லது பணியாளன் என்கிறார்


. தூய ஆவி என்னும் நெருப்பினால் திருமுழுக்கு: இங்கே தமிழ் மொழிபெயர்பில் சிறு மயக்கம் இருப்பதைக் காணலாம். (αὐτὸς ὑμᾶς βαπτίσει ἐν πνεύματι ἁγίῳ καὶ πυρί· அவர் உங்களுக்கு திருமுழுக்கு கொடுப்பார், தூய ஆவியாலும் மற்றும்-அதாவது நெருப்பாலும் - நேரடி மொழிபெயர்பு). இதற்கு பல வியாக்கியானங்களையும், விளக்கவுரைகளையும், மொழிபெயர்புக்களையும் வல்லுநர்கள் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்க்ள். சொற்களை வைத்து பார்க்கும் போது, லூக்கா தூய ஆவியையும் நெருப்பையும் தொடர்பு படுத்தி, முதல் ஏற்பாட்டு இறைபிரசன்னத்தை நினைவூட்டுகிறார். நெருப்பு கடவுளை குறிக்கும் ஓரு நிச்சயமான அடையாளம். லூக்கா பல வேளைகளில் இந்த நெருப்பை தனது நற்செய்தியிலும், திருத்தூதர் பணி நூலிலும் காட்டுவார். நெருப்பு இங்கே இறை கழுவுதலையோ அல்லது இறை ஊடகத்தையோ குறிக்கலாம்.


.21-22. இயேசு திருமுழுக்கு பெறுவதன் மூலம், திருமுழுக்கு எனும் சாதாரண தூய்மை சடங்கிற்கே அருளடையாளம் என்னும் திருமுழுக்கு கொடுக்கப்படுகிறது. திருமுழுக்கு, திருமுழுக்கு பெறுகிறது. இனி இது அருளடையாளம். யோவானிடம் திருமுழுக்கு பெற்றார் எனக்காட்டி, இயேசு யோவானில் எவ்வளவு மரியாதை வைத்திருந்தார் எனக் காட்டுகிறார். இது லூக்காவின் மரியாதையும் கூட. அத்தோடு இரண்டு நிகழ்வு நடக்கிறது. இயேசு வேண்டிக்கொண்டிருக்க,

. வானம் திறந்தது: வானங்களுக்கு மேலேதான் பரலோகம் அங்கேதான் கடவுள் வாழ்கிறார் என்பது ஒரு பாரம்பரிய நம்பிக்கை. ஆக இந்நிகழ்வு இயேசுவை கடவுளாக காட்டுகிறது


. புறாவடிவில் தூய ஆவி இறங்கியது: இது எசாயாவின் இறைவாக்கை நினைவூட்டுகிறது (காண் எசா 11,1-5: 42,1: 61,1) ஆக இதுவும் இயேசுவை கடவுளின் வாரிசாக அல்லது உண்மைக்கடவுளாக காட்டுகிறது


. கடவுளின் குரல்: இந்த குரல்தான் இயேசுவிற்கு அதிகாரம் கொடுக்கிறது அல்லது அவரை யார் எனக் காட்டுகிறது. முதல் ஏற்பாட்டில் பல வேளைகளில் இந்த இறை குரல் வருவதைக் காணலாம். ஆபிரகாமுக்கு தொட.நூ 22,2: தாவீதுக்கு திருப்பாடல் 2,7: சைரசுக்கு எசா 42,1: ஆக இந்த வான அசரீரி இயேசுவை அருள்பொழிவு செய்வது போல காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. லூக்காவின் இயேசு அருள்பொழிவு செய்யப்பட்ட வல்ல இறைவன். இதே ஆவியோடு இயேசு தனது பணியை தொடங்குவதாக லூக்கா சொல்வார். (காண் 4,1)


நமது திருமுழுக்கு ஒரு சலுகையல்ல. அது அருளடையாளம். நம்முடைய தண்ணீர் திருமுழுக்கு தூய ஆவியை நமக்கு தர வேண்டும். திருமுழுக்கு எடுத்தும் பல கிறிஸ்தவர்கள் படுபாவிகளாக வாழ்ந்து இறந்ததை வரலாறு அறியும். இவர்களிடம் திருமுழுக்கு பொய்க்கவில்லை, இவர்கள் திருமுழுக்கிடம் பொய்த்துப்போனார்கள்.


ஆண்டவரே, எமது திருமுழுக்கின் அழைப்பை உணர்ந்து நாங்கள் கடவுளின் பிள்ளைகளாகவும், திருச்சபையின் உறுப்பினர்களாகவும், நல் வாழ்வு வாழ்ந்து தூய ஆவியை தாங்கியவர்களாக வாழவும், உம்முடைய இந்த ஆவி எமது மக்களுக்கு விடுதலை தரவும் உம்மை வேண்டுகிறோம். ஆமென்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆண்டின் பொதுக்காலம் முப்பத்திநான்காம் வாரம் கிறிஸ்து அரசர் பெருவிழா:  Our Lord Jesus Christ, King of the Universe 24.11.2024

ஆண்டின் பொதுக்காலம் முப்பத்திநான்காம் வாரம்   கிறிஸ்து அரசர் பெருவிழா :  Our Lord Jesus Christ, King of the Universe 24.11.2024 இய...