M. Jegankumar Coonghe OMI,
Shrine of Our Lady of Good Voyage,
Chaddy, Velanai,
Jaffna.
Saturday, 31 December 2022
மரியன்னையைப் பற்றி நான்கு விசுவாசக் கோட்பாடுகளை கத்தோலிக்க திருச்சபை விசுவசித்து ஏற்றுக்கொள்கிறது. அவை
அ. அன்னை மரியா இறைவனின் தாய்
ஆ. அன்னை மரியா என்றும் கன்னி
இ. அன்னை மரியா என்றும் அமல உற்பவி
ஈ அன்னை மரியா உடலோடும் ஆன்மாவோடும் வானகம் எடுத்துக்கொள்ளப்பட்டவர்.
இந்த கோட்பாட்டு படிப்பினைகளுள் இன்று அன்னை மரியா இறைவனின் படிப்பினை ஒவ்வொரு வருடமும் முதல் நாளில் கொண்டாடப்படுகிறது. அன்னை மரியாவோடு ஆண்டினை தொடங்குவது எவ்வளவு நலம், இதற்காகவே நாம் விவிலிய மற்றும் வழிபாட்டு ஆணைக்குழுவினரை பாராட்ட வேண்டும்.
அன்னை மரியா இறைவனின் தாய் (கத்தோலிக்க பார்வை):
அன்னை மரியாவின் விண்ணேற்றத்திற்கு பின் அவரைப் பற்றிய பல நம்பிக்கைகளும் அதனால் உருவாகிய விழாக்களும் திருச்சபையில் வழக்கத்திற்கு வந்தன. அவற்றுள் மிக முக்கியமானது இந்த பெருவிழா. இந்த விழா அன்னை மரியாவை மையப்படுத்துகிறது என்பதை விட இயேசுவையே மையப்படுத்துகிறது. இயேசு ஆண்டவர், கடவுளாகிய இவர் உண்மையான கடவுளாகவும் மனிதராகவும் ஒரே நேரத்தில் இருந்தார் என்பது திருச்சபையின் விசுவாசம். சிலர் இந்த நம்பிக்கையை திரித்துக் கூற முற்பட்டனர். உதாரணமாக சிலர் இயேசுவை ஒரு வானக வாசி என்றனர், சிலர் அவரை ஒரு சக்திமிக்க வானதூதர் என்றனர், சிலர் அவரை ஓர்
இறைவாக்கினர் என்றனர், சிலர் அவரை கடவுளின் அவதாரம் என்றனர், சிலர் அவரை தெய்வீக மனிதன் என்றனர், சிலர் அவரை ஒரு சாதாரண ஆனால் கடவுள் அருள் பெற்ற மனிதர் என்றனர், இன்னும் சிலர் அவரை மறைவாக இருந்த கடவுள் என்றனர். இயேசுவின் தெய்வீகமும் மனிதமும் பலமுறை பலரால் பேதகங்களாக முன்வைக்கப்பட்டன. இயேசுவின் மனிதமும், தெய்வீகமும் முழுமையானது அது ஒன்றிலொன்று தங்கியுள்ளது. இதில் ஏதாவது ஒன்றிற்கு எதிரான பேதகம் மற்றைய விசுவாச கோட்பாட்டை பாதிக்கும் என்பதை திருச்சபை கண்டுகெண்டது.
இந்த வேளையில் ஆரிய கோட்பாடு என்ற பேதகம், இயேசுவை மனிதராகவும், இதனால் அவரை சுமந்தவர் 'மனிதரைச் சுமந்தவர்' (άνδροποτοκος- அந்ரொபொடொகொஸ்) என்றழைக்கபட வேண்டும் என நம்பினர். இதற்கு எதிராக எபேசிய (கி.பி 431), பொதுச்சங்கத்தில் கூடிய திருச்சபை தந்தையர்கள் அன்னை மரியாவிற்கு 'இறைவனை சுமந்தவர்' (θεοτοκος- தியோட்டோகோஸ்) என்ற கொள்கையை விசுவாச பிரகடனமாக ஏற்படுத்தினர். இதனை ஏற்றுக்கொள்ளாதவர்ககள் மரியன்னைக்கு எதிரானவர்கள் என்றெடுக்க முடியாது, அவர்களின் வாதங்கள் எல்லாம் இயேசுவைப் பற்றியதாகவே இருந்தது. மரியன்னையை இறைவனின் தாய் என்ற வாதத்தை முன்வைத்து வாதாடியவர்களுள் தூய அத்தனாசியார் மிக முக்கியமானவர். இந்த வாதத்தின் போது அவர் ஒரு தியாக்கோனாகவே (திருத்தொண்டர்) இருந்தார். அன்னை மரியா இறைவனின் தாய் என்பதற்கு லூக்காவின் வரிகள் மிக முக்கியமானவையாக கோடிடப்பட்டன (காண். லூக் 1,43 καὶ πόθεν μοι τοῦτο ἵνα ἔλθῃ ἡ μήτηρ τοῦ κυρίου μου πρὸς ἐμέ; ஆக ஏன் என் ஆண்டவரின் தாய் என்னிடம் வந்திருக்க வேண்டும்?||). இது நம் திருச்சபையின் விசுவாசம், எம் முன்னோர்களின் விசுவாசம், இரண்டாயிரம் ஆண்டுகளாக இவ் விசுவாசம் நமக்கு நன்மையைத்தான் தந்துள்ளது, இந்த விசுவாச சத்தியம் எம்மையும் இறைவனை சுமப்பவர்களாக இருக்க ஓர் அழைப்பை விடுகிறது. உரோமன் கத்தோலிக்க திருச்சபை மட்டுமல்ல பல கத்தோலிக்க திருச்சபைகள் இந்த விழாவை மிக முக்கியமான விழாவாக கொண்டாடுகின்றன.
மேலும் வாசிக்க இங்கே சொடுக்குக:
(http://www.catholic.org/mary/theo.php)
(http://www.catholicnewsagency.com/resources/mary/general-information/the-four-marian-dogmas/)
முதல் வாசகம்: எண்ணிக்கை 6,22-27
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 66
இரண்டாம் வாசகம்: கலாத்தியர் 4,4-7
நற்செய்தி லூக்கா 2,16-21
எண்ணிக்கை 6,22-27
22ஆண்டவர் மோசேயிடம் கூறியது: 23நீ ஆரோனிடமும் அவன் புதல்வரிடமும் சொல்; நீங்கள் இஸ்ரயேல் மக்களுக்கு ஆசிகூற வேண்டிய முறை; 24'ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக! 25ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச்செய்து உன்மீது அருள் பொழிவாராக! 26ஆண்டவர் தம் திருமுகத்தை உன் பக்கம் திருப்பி உனக்கு அமைதி அருள்வாராக!' 27இவ்வாறே அவர்கள் என் பெயரை இஸ்ரயேல் மக்களிடையே நிலைநாட்டுவர்; நானும் அவர்களுக்கு ஆசி வழங்குவேன்.
இந்த பகுதி கடவுள் ஆரோனுக்கும் அவரது புதல்வர்களுக்கும் அருளிய குருத்துவ தகமைகளை விளக்குகிறது. ஆரோன் முதல் ஏற்பாட்டில் ஆச்சரியமூட்டுகிற தலைமைத்துவங்களின் ஒருவராக காணப்படுகிறார். மோசேயோடு சேர்ந்து ஆரோனும் அவர் சகோதரி மிரியமும் மிக முக்கியமான தலைவர்களாக பார்க்கப்படுகிறார்கள். விடுதலை பயணத்திலே மோசேயோடு இவர்கள் ஒன்றாக சேர்ந்து உழைத்தார்கள். இருப்பினும் சில வேளைகளில் மோசேக்கு எதிராக கருத்துக்களை உரைத்ததன் வாயிலாக அவர்கள் தண்டிக்கப்பட்டார்கள் என்பதையும் விவிலியத்தில் காணலாம். யூதாவின் புதல்வர்களில் ஒருவரான லேவியின் வழிமரபில் வந்தவராக கருதப்படும் ஆரோன் இஸ்ராயேல் மக்களிடையே குருத்துவத்தையும் தலைமைக் குருத்துவத்தையும் தொடங்கி வைக்கிறார் (ஒப்பிடுக வி.ப 7,1-25). ஆரோனைப் பற்றியும் அவரது புதல்வர்களைப் பற்றியதுமான தரவுகள் அதிகமாக இணைச்சட்ட வரலாற்று புத்தகங்களிலே காணப்டுகிறது (முதல் ஐந்து நூல்களில்). பிற்கால இறைவாக்கு புத்தகங்களில் இவர்களை பற்றிய குறிப்புக்கள் இல்லாமையும் அத்தோடு செதோக்கியர் என்ற இன்னொரு குருத்துவ குடும்பத்தைப் பற்றிய தரவுகள் நமக்கு பல கேள்விகளையும் கூடவே விடைகளையும் தருகின்றன (ஒப்பிடுக எசேக் 40,46). சிலர் ஆரோனை குருவாக பார்காமல் அவரை மோசேயின் சக தலைவராக பார்க்க வேண்டும் என்றும் வாதாடுகின்றனர். புதிய ஏற்பாடு ஆரோனுக்கு அவ்வளவு முக்கியத்துவத்தைக் கொடுக்கவில்லை. சில வேளைகளில் அவரை பொன்கன்றுக் குட்டிக்கு தவறான வழிபாடு செய்தவராகவும் சாடுகிறது (காண்க தி.பணி 7,40). அதேவேளை எபிரேயர் திருமுகம் (புத்தகம்) ஆரோனின் குருத்துவத்தை ஏற்றுக்கொண்டாலும் அது கிறிஸ்துவின் குருத்துவத்திற்கு இணையாகாது என்கிறது (எபி 7,11).
எது எவ்வாறெனினும் ஆரோன் ஒரு தெரிவு செய்யப்பட்ட குருவாக விடுதலைப் பயண வரலாற்றிலே காட்டப்படுகிறார். ஆரோன், மோசே மற்றும் மிரியத்தைப்போல் வாக்களிக்கப்பட்ட நாட்டிற்கு செல்லாமலே வெளியில் மரிக்கிறார்கள். இதன் வாயிலாக, கடவுள் மனித குருத்துவத்திற்கு கட்டுப்பட்டவர் அல்லர், அத்தோடு தவறு செய்கிறவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தம் தண்டனையை நிச்சயமாக பெறுவார்கள் என்பதில் உறுதியாக இருக்கிறார் என்பதை காணமுடிகிறது.
இன்றைய பகுதியிலே வருகின்ற ஆரோனின் ஆசீர் என்கிற நிகழ்வு சரியான இடத்திலே பதியப்பட்டுள்ளது. ஆரோனின் ஆசிர் மூலம் இஸ்ராயேலுக்கு தங்களின் விசேட அழைப்பு நினைவூட்டப்படுகிறது. ஆரோனின் ஆசீர் வெறும் வார்த்தைகள் அல்ல மாறாக இந்த வார்த்தைகளுக்கு பின்னால் ஆழமான இறையியல் நிறைந்துள்ளது. இங்கே இந்த ஆசீர்வாதங்கள் முன்னிலையை, (இரண்டாம் ஆளை, நீ-நீங்கள்) ஒருமையாக (நீ) நினைத்து வழங்கப்படுகிறது ஆனால் இது பலரைக் குறிக்கும் (நீங்கள்). ‘உனக்கு’ என்பது ‘உங்களுக்கு’ என்று பொருள் படும். இந்த பகுதியை ஆறு பிரிவுகளாக பிரித்து நோக்கலாம்.
அ. கடவுள் உங்களை ஆசீர்வதிக்கிறார் (יְבָרֶכְךָ יְהוָה): கடவுளின் ஆசீர்வாதம் அவர் ஆபிரகாமிற்கு கொடுத்த வாக்குறுதியை மையப்படுத்தி நினைவூட்டுகிறது. தந்தையர்கள் தங்கள் மக்களை (மகன்களை) ஆசீர்வதிப்பது வழக்கம் (காண்க தொ.நூல் 27,27-29). கடவுளும் ஆதி மனிதன் ஆதாமை தன் மகனாக கருதி ஆசீர்வதித்தார் (தொ.நூல் 1,28). ஆதாமின் கீழ்படியாமையே அவனுக்கு சாபத்தை கொணர்ந்தது, இருப்பினும் ஆபிரகாம் மூலமாக இந்த ஆசீர் மீள வாக்களிக்கப்பட்டது. முதல் ஏற்பாட்டில் ஆசீர் என்பது நிறைவான வாழ்வைக் குறிக்கும் அதாவது பல பிள்ளைகள், நீடிய ஆயுள், பல மடங்கான சொத்துக்களும் கால்நடைகளும், போன்றவைகளுமாகும். இவையில்லாதவர் கடவுளால் ஆசீர் பெற்றவராக கருதப்படவில்லை, அதேவேளை இவைகள் ஆசீரின் அடையாளங்களாக மட்டுமே கருதப்பட்டன.
ஆ. கடவுள் உங்களை பாதுகாக்கிறார் (יִשְׁמְרֶךָ): கடவுளின் பாதுகாப்பும் இஸ்ராயேல் மக்களுக்கு அவர்கள் கடவுளோடு செய்துகொண்ட உடன்படிக்கையை நினைவூட்டியது. தங்களை காக்கிறவர் கடவுள் ஒருவரே என்ற நம்பிக்கை இஸ்ராயேல் மக்களிடையே ஆழமாக காணப்;பட்டது (காண்க தி.பா 121,7-8). இந்த காத்தல் அடையாளம் புதிய ஏற்பாட்டு காலத்தில் இயேசுவிற்கு இறை அடையாளமாக கொடுக்கப்பட்டது.
(7ஆண்டவர் உம்மை எல்லாத் தீமையினின்றும் பாதுகாப்பார்; அவர் உம் உயிரைக் காத்திடுவார். 8நீர் போகும்போதும் உள்ளே வரும்போதும் இப்போதும் எப்போதும் ஆண்டவர் உம்மைக் காத்தருள்வார்.)
இ. கடவுள் தம்திருமுக ஒளியை உம்மீது ஒளிரச் செய்வாராக (יָאֵר יְהוָ֧ה פָּנָיו אֵלֶיךָ): கடவுளுடைய முகம் என்பது இங்கே அவருடைய பிரசன்னத்தையே குறிக்கிறது. இதே பிரசன்னம்தான் அன்று மேகத்தூணாகவும் நெருப்புத்தூணாகவும் பாலைவனத்திலே காட்டப்பட்டது. திருமுக ஒளியைக் காட்டியருளும் என்பது, மக்கள் மீது அன்பு பாராட்டி அவர்களை மீட்பதற்கும் சமனாகும் (காண்க தி.பா 31,16).
(16உமது முகத்தின் ஒளி அடியேன் மீது வீசும்படி செய்யும்; உமது பேரன்பால் என்னை விடுவித்தருளும்.)
ஈ. உன்மீது அருள் பொழிவாராக (וִֽיחֻנֶּֽךָּ): ஆண்டவருடைய அன்பின் வெளிப்பாடே அவர் வழங்கும் அருள். ஆண்டவர் ஒருவரை ஆசீர்வதிக்கிறார் என்றால் அவர் ஆண்டவரின் அருளைப் பெறவேண்டும். அத்தோடு ஆண்டவர் செய்துகொண்ட உடன்படிக்கையின் பிரகாரமும் ஒருவர் ஆண்டவரின் அருளுக்கு தகுதியாகிறார். இது மக்கள் ஆண்டவர்மேல் அதிகாரமுள்ளவர்கள் என்பதைக் காட்டவில்லை மாறாக, ஆண்டவர் தன்னுடைய உடன்படிக்கையை மீறாதவர் என்பதைக் காட்டுகிறது.
உ. ஆண்டவர் தம் திருமுகத்தை உன் பக்கம் திருப்புவாராக (יִשָּׂא יְהוָה ׀ פָּנָיו אֵלֶיךָ): ஆண்டவரின் திருமுகம் என்பது ஆண்டவரின் பிரசன்னத்தையே எபிரேய மொழியில் குறிக்கிறது. ஆண்டவரின் திருமுகம் ஒருவரை நோக்கி திரும்புகின்ற போது அங்கே ஆண்டவர் அந்த நபரை தன்னுடைய கரிசனையில் எடுக்கிறார் என்பது பொருள். ஆரோனின் ஆசீர் இதனையே அந்த ஆசீர் பெறுகிறவர்களுக்கு நினைவூட்டுகிறது. ஆண்டவர் தன் முகத்தை மறைத்தால் அது அவர்களை ஆண்டவர் கைவிட்டுவிட்டார் என்பதைக் குறிக்கும். (פָּנָיו அவரது முகம்).
ஊ. ஆண்டவர் உனக்கு அமைதி அளிப்பாராக (יָשֵׂם לְךָ שָׁלוֹם): அமைதி இஸ்ராயேல் மக்களிடையே இன்று வரை எதிர்பார்கப்பட்டுக்கொண்டிருக்கும் முக்கியமான ஆசீர்வாதம். (שָׁלוֹם ஷலோம் அமைதி). அமைதியைத்; தருபவர் கடவுள் ஒருவரே என்று ஆசிரியர் தனது வாசகர்களுக்கு நினைவூட்டுகிறார். எபிரேயத்தில் அமைதி என்பது சமாதானத்தையும் தாண்டி, நிறைவு, முழுமை, வளர்ச்சி, நன்மைத்தனமான வாழ்வு என்ற பல அர்த்தத்தைக் கொடுக்கிறது. (தமிழிலும் அமைதி என்பது மிகவும் ஆழமான சொற்பதம் என்பதை நாம் மறக்கக் கூடாது). மனிதர் தருகின்ற அமைதி போலன்றி, கடவுள் தரும் அமைதி முழுமையான அமைதி என்பதை இஸ்ராயேலர் நன்கு உணர்ந்திருந்தனர் (லேவி 26,6: நீதி 16,7).
ஆரோனின் ஆசீர் இரண்டு முக்கியமான பண்புகளைக் கொண்டுள்ளது. முதலாவது இது கவிநடையில் அமைந்துள்ளது, அத்தோடு மூன்று வரிகள் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது வரி முதலாவது வரியை விட நீண்டதாக அமைந்துள்ளது. இரண்டாவது இது கடவுளுடைய திருமுகத்தை இரண்டு தடவை நினைவூட்டி அதன் முக்கியத்;துவத்தைக் காட்டுகிறது. கடவுளுடைய புனித பெயரை (யாஹ்வேஹ் יהוה) மூன்று தடைவை இந்த ஆசீர் பாவிக்கிறது. சில கத்தோலிக்க ஆய்வாளர்கள் இந்த ஆசீர் திருத்துவத்தின் ஆசீர் எனவும் சார்பு வாதாடுகின்றனர் ஆனால் இந்த ஆசீர் மிக பழைமையான ஆசீர் என்பது மட்டும் நிச்சயமாக புலப்படுகிறது. இந்த ஆசீர்வாதங்கள் பல முறை விவிலியத்தில் மீண்டும் மீண்டும் வருவதைக் காணலாம், தூய பவுலும் தனது கடிதங்களில் இதனையே சிறு மாற்றங்களுடன் பாவிக்கின்றார் (காண். உரோ1,7: 1கொரி 1,3: 2திமோ 1,2). இஸ்ராயேலர் தங்களுடைய நாளாந்த வாழ்கையில் இன்றும் இதனை திரும்ப திரும்ப பாவிக்கின்றனர்.
திருப்பாடல் 66
நன்றிப் புகழ்ப்பா
(பாடகர் தலைவர்க்கு: நரம்பிசைக் கருவிகளுடன்; புகழ்ப்பாடல்)
1கடவுளே! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக! உம் திருமுக ஒளியை எம்மீது வீசுவீராக! (சேலா)
2அப்பொழுது, உலகம் உமது வழியை அறிந்துகொள்ளும்; பிற இனத்தார் அனைவரும் நீர் அருளும் மீட்பை உணர்ந்து கொள்வர். (சேலா)
3கடவுளே! மக்களினத்தார் உம்மைப் புகழ்வார்களாக! மக்கள் எல்லாரும் உம்மைப் போற்றுவார்களாக!
4வேற்று நாட்டினர் அக்களித்து மகிழ்ச்சியுடன் பாடிடுவராக! ஏனெனில், நீர் மக்களினங்களை நேர்மையுடன் ஆளுகின்றீர்; உலகின் நாடுகளை வழிநடத்துகின்றீர். (சேலா)
5கடவுளே! மக்களினத்தார் உம்மைப் புகழ்வார்களாக! மக்கள் எல்லாரும் உம்மைப் போற்றுவார்களாக!
6நானிலம் தன் பலனை ஈந்தது நம் கடவுள் நமக்கு ஆசி வழங்கினார்.
7கடவுள் நமக்கு ஆசி வழங்குவாராக! உலகின் கடையெல்லைவரை வாழ்வோர் அவருக்கு அஞ்சுவராக!
இந்த திருப்பாடல் ஆரோனின் ஆசீரை வார்த்தைகளில் ஒத்திருக்கிறது. மிக அழகான வரிகளைக் கொண்டுள்ள இந்தப் பாடலை அறுவடை நாள் பாடல் என்று சில ஆய்வாளர்கள் ஏற்றுக்கொள்கின்றனர். முதல்வரும் மக்களும் மாறி மாறி பாடுவது போல இந்த பாடல் அமைக்கப்பட்டுள்ளது (நம்முடைய நாளாந்த திருப்புகழ்மாலை திருப்பாடல்களைப்போல). இறுதியாக இஸ்ராயேலின் கடவுளின் ஆட்சிக்குள் இந்த முழு உலகும் ஈர்க்கப்பெறுவதாக என்ற பாடகர் தலைவiரால் ஆசிக்கப்படுகிறது. பாடகர் தலைவர்க்கு, நரம்பிசைக் கருவிகளுடன்; புகழ்ப்பாடல் என்று இதன் தொடக்கவுரை ஆரம்பிக்கின்றது. இது பிற்கால இணைப்பாக இருக்கலாம். (לַמְנַצֵּח בִּנְגִינֹת מִזְמוֹר שִׁיר׃). திருப்பிக் கூறல் கவிநடை இங்கே நன்றாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
வ.1: கடவுளுடைய ஆசீருக்கு அவர் முதலில் இரக்கம்கொள்ள வேண்டும் என்கிறார் ஆசிரியர். கடவுளுடைய ஆசீர் என்பது அவரது திருமுகத்தின் ஒளி மக்கள் மீது வீசப்படுவதாகும் என்ற திருப்பிக்கூறல் அமைப்பில் விளக்கப்பட்டுள்ளது. (ஆரோனின் ஆசிருடன் ஒப்பிடுக). இந்த வரியின் முடிவில் சேலா (סֶלָה), இதனுடைய சரியான அர்த்தத்தை இன்னும் யாரும் கண்டுபிடிக்கவில்லை.
இது பாடர்களுக்கான ஒரு குறியீட்டு சொல்லாக இருக்கலாம் என்றும் ஊகிக்கின்றனர்.
வ.2: கடவுளின் வழிதான் (דַּרְכֶּךָ) உமது மீட்பு (יְשׁוּעָתֶךָ) அதனை உலகம் மற்றும் மக்களினத்தார் அறிந்துகொள்வர். இது கடவுளின் இரக்கத்தால் அதாவது அவரது திருமுக ஒளியால் நடைபெறும் என்கிறார் ஆசிரியர்.
வ.3: மக்களினங்கள் கடவுளை புகழவேண்டும் இதனை நோக்கித்தான் ஒவ்வொரு இஸ்ராயேலருடைய வாழ்வும் அமைய வேண்டும், இதனை ஆசிரியர் நன்கு உணர்ந்திருக்கிறார். அதனையே இங்கே தெளிவு படுத்துகிறார். இங்கே மக்களினங்கள் என்பது அனைத்து உலக மக்களையும் குறிக்கிறது (עַמִּים அமிம்). கடவுளுக்கும் சாதி பார்க்கின்றவர்கள் இதனை உணர்ந்தால் நல்லது.
வவ.4-5: தம் நாட்டினர் வேற்று நாட்டினர் என்ற வேறுபாடு இஸ்ராயேல் மக்களிடையே தொன்று தொட்டு இருந்துகொண்டே இருந்தது. இதிலே தம் மக்களை கடவுளின் நேசமான மக்களாக இவர்கள் கருதினார்கள், ஆனால் இந்த பாடலின் மூலமாக வேற்று நாட்டினரும் இஸ்ராயேல் மக்களின் மதிப்புக்குரியவர்கள் என்பது அக்காலத்தில் வழக்கிலிருந்திருக்கிறது என்ற உண்மை புலப்படுகிறது. அத்தோடு தம்முடைய கடவுள்தான் அனைத்து மக்களின் கடவுள் என்பதையும் இவர் ஏற்றுக்கொள்கிறார்.
வ.6: நிலம் தக்க காலத்தில் பலனைத் தருவது ஆண்டவருடைய ஆசீராகக் கருதப்பட்டது. நம்பிக்கை என்பது அதிசயத்தை எதிர்பார்ப்பதல்ல மாறாக இயற்கையின் சீரான ஓட்டத்தை எதிர்பார்ப்பதே என்கின்ற யதார்த்தத்தை தெளிவு படுத்துகிறார் ஆசிரியர்.
வ.7: இந்த இறுதி வசனத்திலும் உலகின் கடையெல்லை மக்களை உள்வாங்குகிறார் ஆசிரியர். யார் இந்த கடையெல்லை மக்கள் என்பது தெளிவாக இல்லை. இது தூர தேசத்து மக்களை குறிப்பதற்கான அடைமொழியாக இருந்திருக்கலாம். கடவுளுக்கு அஞ்சுதல் என்பது கடவுளை நம்புதல் என்ற பொருளைத் தருகிறது.
கலாத்தியர் 4,4-7
4ஆனால் காலம் நிறைவேறியபோது திருச்சட்டத்திற்கு உட்பட்டிருந்த நம்மை மீட்டுத் தம் பிள்ளைகள் ஆக்குமாறு 5கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும் திருச்சட்டத்திற்கு உட்பட்டவராகவும் அனுப்பினார். 6நீங்கள் பிள்ளைகளாய் இருப்பதால் கடவுள் தம் மகனின் ஆவியை உங்கள் உள்ளங்களுக்குள் அனுப்பியுள்ளார்; அந்த ஆவி 'அப்பா, தந்தையே எனக் கூப்பிடுகிறது. 7ஆகையால் இனி நீங்கள் அடிமைகளல்ல் பிள்ளைகள்தாம்; பிள்ளைகளாகவும் உரிமைப்பேறு உடையவர்களாகவும் இருக்கிறீர்கள். இது கடவுளின் செயலே.
பவுல் தனது கைப்பட எழுதிய கடிதமாக அதிகமானவர்கள் இதனை ஏற்றுக்கொள்கின்றனர். என்ன காரணத்திற்காக, யாருக்கெதிராக இக்கடிதத்தை ஏழுதினார் என்பதில் பல கருத்துக்கள் இருக்கின்றன. சிலர், கிறிஸ்தவர்கள் மீண்டும் யூத மதத்திற்கும் சட்டங்களுக்கும் உட்பட வேண்டும் என்று கூறியும், பவுலுடைய திருத்தூதர் பணியைப்பற்றி பல கேள்விகளையும் எழுப்பி வந்ததாக நம்பப்படுகிறது. இவர்களுக்கெதிராகவும் ஆரம்ப கால திருச்சபையின் நம்பிக்கைகளை பாதுகாப்பதற்காகவும் பவுல் இந்தக் கடிதத்தை எழுதினார் என எடுக்கலாம். இக் கடிதத்தின் காலத்தை கணிப்பது மிகக் கடினமாக உள்ளது, கி.பி 50கள் என சிலர் இக்காலத்தை கணிக்கிறார்கள். புதிய ஏற்பாட்டு திருமுக இலக்கியங்களில் அன்னை மரியாவை பற்றிய சிந்தனைகள் குறைவாகவே உள்ளன. பவுல் மரியன்னையை மறைமுகமாக கோடிட்டுக் காட்டும் முக்கியமான பகுதிகளில் இதுவும் ஒன்று.
அ. காலம் நிறைவேறியபோது என்பதை காலம் கனிந்தபோது அல்லது தகுந்த காலத்தில் என்று மொழிபெயர்கலாம் (τὸ πλήρωμα τοῦ χρόνου). காலம் என்பது கிரேக்க மெய்யியலிலும் எபிரேய நம்பிக்கையிலும் மிக முக்கியமான ஒரு கருப்பொருளாக பார்க்கப்படுகிறது. கடவுள் காலத்தை கடந்தவர் அத்தோடு காலத்தினுள்ளும் இயங்குபவர். காலத்தின் அசைவுகளும் ஓட்டங்களும் கடவுளை கட்டுப்படுத்த முடியாது. இன்று காலத்தையும் மனிதனால் தப்ப முடியும் அல்லது கடந்து பயனக்க முடியும் என்ற வாதத்தை முன்வைத்து பல ஆராய்ச்சிகளை விஞ்ஞானிகள் முன்னெடுக்கின்றனர். கால இயந்திரம் என்ற பெயரிலும் பல கதைகளும், திரைப்படங்களும் தமிழிலும் வெளிவருவதனைக் காண்கின்றோம். நடிகர் சூர்யாவின் 24 என்ற திரைப்படம் இதற்கு நலல ஒரு உதாரணம். ஆனால் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே விவிலிய ஆசிரியர், காலம் என்ற சிந்தனையும் கடவுளின் பார்வையில் சாதாரணமானதே என்பதை இலகுவாக கணிக்கிறார். தகுந்த காலம் என்பது கடவுளின் கணிப்பிலே தங்கியுள்ளது. இந்த மதத்தின் நம்பிக்கையிலும் சுப நேரம், தீய நேரம் என்ற சிந்தனையும் இப்படியான ஒரு மெய்யியலை அடிப்படையாக கொண்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த வரியில் பவுல் குறிப்பிடுகின்ற நிறைவான நேரம் என்பது கடவுளுடைய திருவெளிப்பாட்டை குறிப்பது என்பதுபோல் வாதிடுகிறார்.
ஆ. பெண்ணிடமிருந்து: (ἐκ γυναικός எக் குனாய்கோடஸ்) இந்த வாதம் லூக்காவின் நற்செய்தியின் கபிரியேல் தூதர் மரியாவுக்கு சொன்ன மங்கள வார்த்தையை ஞாபகப்படுத்துகிறது. இது இயேசுவுக்கு எதிராக சுமத்தப்பட்ட பிரதிவாதங்களை தகர்க்க பவுல் பாவித்த முக்கியமான விசுவாச பிரமாணங்களில் ஒன்று. அத்தோடு திருச்சட்டத்தை பவுல் இணைத்து இயேசு திருட்சட்டதிற்கு (தோறா) எதிரானவர் என்றில்லை என்பதை காட்டுகிறார். அதேவேளை சட்டத்தின் பிடியிலிருந்தும் அனைவரையும் மீட்க வேண்டும் என்ற தேவை இயேசுவுக்கு இருக்கிறது எனவும் காட்டுகிறார்.
இ. பவுல் தன்னுடைய திருமுகங்களில் ஆவியின் உந்துதல்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது வழக்கம் அதனையே இங்கேயும் செய்கிறார். இயேசு ஆண்டவர் முதல் முதலாக பாவித்த ஷஅப்பா| என்ற அரமேயிக்க சொல்லை (காண். மாற் 14,36) முதல் தடவையாக பாவிக்கிறார், இச் சொல்லை உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலும் பாவிப்பார் (உரோ. 8,15). இங்கே பாவிக்கப்படுகின்ற ஷஅப்பா| எனும் சொல் (אַבָּא) 'என் அப்பா' என்பதைக் குறிக்கும், ஆனால் பவுல் இங்கு இச்சொல்லை பொதுச் சொல்லாகப் பாவிக்கிறார்.
உ. அடிமைகள் அல்ல உரிமை குடிமக்கள் என்பது கலாத்தியர் திருமுகத்தின் முக்கியமான வாதம். இந்த உரிமைக் குடிமக்களாகும் தகுதியை கடவுள் இலவசாமக இயேசுவின் வாயிலாக தந்துள்ளார் என பிரதிவாதங்களை முன்வைப்பவர்களுக்கு கூறுகிறார் பவுல்.
லூக்கா 2,15-21
15வானதூதர் அவர்களைவிட்டு விண்ணகம் சென்றபின்பு, இடையர்கள் ஒருவரையொருவர்நோக்கி, 'வாருங்கள், நாம் பெத்லகேமுக்குப் போய் ஆண்டவர் நமக்கு அறிவித்திருக்கின்ற இந்த நிகழ்ச்சியைப் பார்ப்போம்' என்று சொல்லிக்கொண்டு, 16.அக்காலத்தில் இடையர்கள் பெத்லகேமுக்கு விரைந்து சென்று, மரியாவையும் யோசேப்பையும் தீவனத் தொட்டியில் கிடத்தியிருந்த குழந்தையையும் கண்டார்கள். 17. பின்பு அந்தக் குழந்தையைப் பற்றித் தங்களுக்குச் சொல்லப்பட்ட செய்தியைத் தெரிவித்தார்கள். 18.அதைக் கேட்ட யாவரும், இடையர்கள் தங்களுக்குச் சொன்னவற்றைக் குறித்து வியப்படைந்தனர். 19.ஆனால் மரியா இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தம் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக்கொண்டிருந்தார். 20.இடையர்கள் தாங்கள் கேட்டவை, கண்டவை அனைத்தையும் குறித்துக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்து பாடிக்கொண்டே திரும்பிச் சென்றார்கள். அவர்களுக்குச் சொல்லப்பட்டவாறு எல்லாம் நிகழ்ந்திருந்தது. 21.குழந்தைக்கு விருத்தசேதனம் செய்யவேண்டிய எட்டாம் நாள் வந்தது. தாயின் வயிற்றில் உருவாகுமுன்பே வானதூதர் சொல்லியிருந்தவாறு அதற்கு இயேசு என்று பெயரிட்டார்கள்.
(கிறிஸ்து பிறப்பு காலைத் திருப்பலி (அ,ஆ,இ) கடந்த வாரம் பிரசுரிக்கப்பட்டது)
லூக்கா அவதானமாக இயேசுவின் பிறப்பை அறிவிப்பதைக் காணலாம். மத்தேயு இயேசுவை புதிய மோசேயாகவும், மெசியாவாகவும் காட்டுகிற அதேவேளை, லூக்கா இயேசுவை கைவிடப்பட்டவர்களின் அல்லது அனைவரின் கடவுளாகவும் காட்டுவார். லூக்காவின் கடவுள் அனைவரினதும் கடவுள். இயேசுவின் பிறப்பையும் திருமுழுக்கு யோவானின் பிறப்பையும் லூக்கா ஒப்பிடுகிற விதத்தை கவனித்தால், இயேசுவை அவர் எப்படிப்பட்ட கடவுளாக அல்லது யாருடைய கடவுளாக காட்டுகிறார் என்பது புரியும். லூக்கா சின்கிறேசிஸ் (ளுலnஉசநளளை) என்ற ஒரு கிரேக்க இல்க்கிய வகையை இங்கே பாவிக்கிறார். அதாவது லூக்கா யோவானையும் இயேசுவையும் ஒப்பிடுகிறார், இறுதியாக இயேசுவின் பக்கத்திலுள்ள உயர்வுகளையும் விசேட தன்மைகளையும் காரணம் காட்டி அவர்தான் மெசியா என்கிறார். லூக்கா நற்செய்தியின் இரண்டாம் அதிகாரம்இயேசுவின் பிறப்பு, இடையர்களும் வானதூதர்களும், இயேசுவை கோவிலில் அர்ப்பணித்தல், நாசரேத்திற்கு திரும்பிச் செல்லுதல், மற்றும் கோவிலில் சிறுவன் இயேசு என்ற விதத்தில் இயேசுவின் முழு குழந்தைப் பருவமும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இன்றைய பகுதியிலே,
அ. வானதூதர்கள்.| (ἄγγελος ஆன்கலோஸ்) இயேசுவின் பிறப்பு வானதூதர்களுக்கும் மகிழ்ச்சியைத் தருவதாகக் காட்டுகிறார். மத்தேயு நற்செய்தியில் வான்வெள்ளியும், கீழைத்தேய ஞானிகளும் இயேசுவை அடையாளம் காட்ட, லூக்கா வானதூதர்களின் மகிழ்ச்சியை பதிவு செய்கிறார். வானதூதர்கள் முதல் ஏற்பாட்டில் பல வேளைகளில் கடவுளின் தூதர்களாகவும் (מַלְאָךְ மல்அக்), சில அதிவிசேடமான இடங்களில் கடவுளின் பிரசன்னத்தையும் காட்டுகிறவர்களாகவும் வருகிறார்கள். புதிய ஏற்பாட்டு காலத்தில் வானதூதர்கள் பற்றிய அறிவு நன்கு வளர்ந்திருந்தது.
இதற்கு கிரேக்க இலக்கியங்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. நற்செய்தியில் வருகின்ற வானதூதர்கள் கடவுளின் செய்தியை கொண்டுவருகின்ற முக்கியமான செய்தியாளர்களாக
இருக்கிறார்கள்.
ஆ. இடையர்களின் பெத்லகேம் வருகை: (ποιμένες பொய்மெனஸ்) இடையர்கள் பற்றி இயேசு பிறந்த காலத்தில் நல்ல அபிப்பிராயம் இருக்கவில்லை, அவர்கள் திருடுபவர்களாகவும் மற்றவர்களின் மேய்ச்சல் நிலத்துள் பிரவேசிப்பவர்களாகவும் கணக்கெடுக்கப்பட்டனர். விவிலியத்தின் கண்ணோட்டம் இவ்வாறு இல்லை. கடவுள் தன்னை இஸ்ராயேலின் ஆயனாகவே காட்டினார். தலைவர்களையும் நல்ல ஆயராகவே இருக்கச் சொல்கிறார், இயேசுவும் தன்னை நல்ல ஆயன் என பல வேளைகளில் வெளிப்படுத்தினார் (✽காண்க யோவான் 10,1). புதிய ஏற்பாட்டில் இயேசுவின் மிக முக்கியமான வசனம் இது. பேதுருவையும் அவர் உடன்பணியாளர்களையும், ஆயர்களாகவே இருக்கச்சொல்கிறார். லூக்கா இங்கு இரண்டு வாதங்களை முன்வைக்கிறார். ஒன்று: நல்ல ஆயரின் பிறப்பு ஏழை ஆயர்களுக்கு அறிவிக்கப்படுகிறது. இரண்டு: தாவீதின் ஊரிலேதான் இயேசு பிறந்தார் என்பதையும் லூக்கா அறிவிக்கிறார்.
(✽ Ἐγώ εἰμι ὁ ποιμὴν ὁ καλός நானே நல்ல ஆயன்)
இ. இடையர்களின் விரைந்து செல்லுதலையும் அவர்களின் கண்டடைதலையும் லூக்கா விவரிக்கும் விதம் சிந்திக்க வைக்கிறது. ஏழைகளாகவும் சாதாரணமானவர்களாகவும் இருந்தாலும் ஆண்டவரின் இரக்கம் அவர்களை திருக்குடும்பத்தையே காணவைக்கிறது. அத்தோடு அவர்கள் விரைவு ஒர் ஆவலைக் காட்டுகிறது. சோம்பல்தான் பல தோல்விகளுக்கு காரணம் என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.
ஈ. பின்பு குழந்தையைப்பற்றி அறிக்கையிட்டார்கள்: யாருக்கு சொன்னார்கள், மரியாவுக்கும் யோசேப்புக்கும் என்று நினைக்கிறேன். யோசேப்பு வழக்கம் போல அமைதியாய் இருக்கிறார், மற்றவர்கள் அனைவரும் வியப்படைந்தனர். இந்த மற்ற அனைவரும் யார்? (πάντες οἱ ἀκούσαντες கேட்ட அனைவரும்) இது இஸ்ராயேல் மக்களையோ அல்லது அனைத்து மக்களையோ குறிக்கலாம். வியப்படைதல் விவிலியத்திலே மிகவும் முக்கியமான செயல். (θαυμάζω தௌமாட்சோ: வியப்படை, ஆச்சரியப்படு, மகிழ், பயங்கொள், மரியாதைகொள், வணங்கு) ஆண்டவரின் வெளிப்பாடுகளுக்கு மக்களின் இந்த பதிலுணர்வு, வெளிப்படுத்துவது ஆண்டவர்தான் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.
உ. மரியா இந்நிகழ்ச்சிகளையெல்லாம் உள்ளத்தில் இருத்தி சிந்தித்தார்: லூக்காவின் மரியா சாதாரண இளம் பெண்ணல்ல. அவர் திருச்சபையின் முன்னோடி. நம்மை சிந்திக்க கேட்கிறார் லூக்கா. மரியா பல வேளைகளில் இவ்வாறு செய்வதாக லூக்கா எழுதுவது, மரியாவை யார் எனக் காட்டுகிறது.
ஊ. இடையர்களின் ஆட்டமும் பாட்டும், கடவுளை நம்புகிறவர்களுக்கு கிடைக்கும் ஆசீர்வாதங்களாகக் காட்டுகிறார். எல்லாம் நிகழ்ந்திருந்தது என்று சொல்லி, கடவுள் சொல்பவை அனைத்தும் நடக்கும் எனவும் சொல்கிறார்.
வ.20: மரியாவின் வயிற்றில் வந்தவர்தான் இயேசு என ஆணித்தரமாக சொல்கறார் லூக்கா. συλλημφθῆναι αὐτὸν ἐν τῇ κοιλίᾳ ‘அவள் கர்பத்தில் கருத்தரித்த அவரை’ என்று மொழிபெயர்கலாம். அவர் கர்ப்பத்தில் கருத்தரித்த அவர்தான் இயேசு எனக் காட்டுவதன் மூலம் மரியா என்பதவர்தான் இயேசுவினுடைய தாய் என விரிவாகவும், நேர்தியாகவும் சொல்கிறார் லூக்கா. மரியா இறைவனின் அல்லது ஆண்டவரின் தாய் என்பதற்கு இதைவிட வேறு வசனங்கள் தேவையில்லை.
வ.21: எட்டாம் நாள் இயேசுவிற்கு விருத்தசேதனம் செய்யப்படுகிறது, இப்படியாக அவருடைய யூத சடங்குகள் நிறைவேற்றப்படுகின்றன. இயேசு ஆபிரகாமின் சட்டங்களை நிறைவேற்றுகிறார், எனவே அவர் சடங்கிலும் ஆபிரகாமின் மகனாகிறார். இயேசு என்ற பெயரே அவருக்கு வைக்கப்படுகிறது, இவ்வாறு கடவுளின் திட்டமும் நிறைவேற்றப்படுகிறது. ஆக இயேசு கடவுளின் மகனாகிறார். Ἰησοῦς ஏசுஸ் என்ற கிரேக்க சொல் கடவுள் மீட்கிறார் அல்லது கடவுள் மீட்பராயிருக்கிறார் என்ற அர்த்தத்தைக் கொடுக்கிறது. இது எபிரேய அல்லது அரமேயிக்க ஜெசுவா என்ற சொல்லுடன் தொடர்பு பட்டது (יְהוֹשׁוּעַ).
இறைவனின் தாயான மரியா,
இறைவனை சுமந்து காட்டியவர்,
இந்த அழைப்பு நம் ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்படுகிறது.
இறைவனை தமது வார்தையாலும், வாழ்க்கையாலும், சுமப்பாவர்களும் மரியாள்களே, அவர்களும் இறைவனின் தாய்மார்களே!!!
இந்த புதிய ஆண்டில் புதிதாய் பார்ப்போம், கேட்போம், சுவாசிப்போம்,
அனைத்திலும் புதிதாய் வாழ்வோம்.
'ஆண்டவர் உனக்கு ஆசி வழங்கி உன்னைக் காப்பாராக!
ஆண்டவர் தம் திருமுகத்தை உன்மேல் ஒளிரச்செய்து உன்மீது அருள் பொழிவாராக!
ஆண்டவர் தம் திருமுகத்தை உன் பக்கம் திருப்பி உனக்கு அமைதி அருள்வாராக!'