வெள்ளி, 10 டிசம்பர், 2021

திருவருகைக்காலம் மூன்றாம் வாரம் (இ) (12,12,2021) A Commentary on the Sunday Readings



திருவருகைக்காலம் மூன்றாம் வாரம் ()

(12,12,2021)

A Commentary on the Sunday Readings



M. Jegankumar Coonghe OMI, 

Shrine of Our Lady of Good Voyage, 

Chaddy, Velanai, 

Jaffna. 

Friday, 10 December 2021


முதல் வாசகம்: செப்பானியா 3,14-18

பதிலுரைப் பாடல்: எசாயா 12,2-6

இரண்டாம் வாசகம்: பிலிப்பியர் 4,4-7

நற்செய்தி: லூக்கா 3,10-18


செப்பானியா 3,14-18

மகிழ்ச்சிப் பாடல்

14மகளே சீயோன்! மகிழ்ச்சியால் ஆர்ப்பரி இஸ்ரயேலே! ஆரவாரம் செய்;

மகளே எருசலேம்! உன் முழு உள்ளத்தோடு அகமகிழ்ந்து அக்களி.

15ஆண்டவர் உன் தண்டனைத் தீர்ப்பைத் தள்ளிவிட்டார்; உன் பகைவர்களை அப்புறப்படுத்தினார்;

இஸ்ரயேலின் அரசராகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கின்றார்; நீ இனி எந்தத் தீங்கிற்கும் அஞ்சமாட்டாய்.

16அந்நாளில் எருசலேமை நோக்கி இவ்வாறு கூறப்படும்: 'சீயோனே, அஞ்சவேண்டாம்;

உன் கைகள் சோர்வடைய வேண்டாம்.

17உன் கடவுளாகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கின்றார்; அவர் மாவீரர்; மீட்பு அளிப்பவர்;

உன்பொருட்டு அவர் மகிழ்ந்து களிகூருவார்; தம் அன்பினால் உனக்குப் புத்துயிர் அளிப்பார்;

உன்னைக் குறித்து மகிழ்ந்து ஆடிப்பாடுவார்.

18அது திருவிழாக் காலம்போல் இருக்கும். உனது துன்பத்தை அகற்றிவிட்டேன்;

ஆகவே, இனி நீ இழிவடையமாட்டாய்.


 விவிலியத்தின் பன்னிரு சிறிய இறைவாக்கினருள் ஒன்பதாவது இடத்தில் காணப்படும் செப்பானியா இறைவாக்கு கி.மு. 7ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது. இவருடைய பெயரின் அர்த்தமாக ஷகடவுள் காக்கிறார்| (צְפַנְיָה֙ ட்சேபான்யாஹ்) எனக் கொள்ளலாம். செப்பானியா புத்தகம் ஒன்பது உரைகளின் தொகுப்பாக காணப்படுகிறது. இன்றைய முதல் வாசகம் இறுதியான ஒன்பதாவது உரையிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.


.14: மகளே சீயோன்!, இஸ்ராயேலே! எருசலேம்! இவை புகழ்ச்சிகளுக்கு பயன்படுத்தப்படும் விளிப்புச் சொற்கள். இஸ்ராயேல் வாசகர்களுக்கு மிகவும் நேசமான வார்த்தைகள், மகளே! என விளிப்பதன் மூலம் வாசகர்களின் பார்வையை தன்னகத்தே திருப்புகிறார் ஆசிரியர். மீண்டும் மீண்டும் வரும் வார்த்தை பிரயோகங்கள், எபிரேய கவிதை மற்றும் உரைநடையின் முக்கிய பண்பான ஷதிருப்பிக்கூறுதலை| படம் பிடிக்கிறது. ஒத்த கருத்துடைய சொற்கள் ஒரே செய்தியை கூற பயன்படுத்தப்பட்டுள்ளது. திரும்ப திரும்ப கூறுவதன் வாயிலாக ஆசிரியர், திருப்பாடல்களை ஞாபகப்படுத்துகிறார், அத்தோடு தனது செய்தியையும் ஆழப்படுத்துகிறார்

רָנִּי֙ בַּת־צִיּ֔וֹן הָרִיעוּ יִשְׂרָאֵ֑ל ரோன்னி பாத்-ட்சியோன், ஹாரி' யிஸ்ரா'எல்- மகிழ் மகள் சீயோனே, சத்தமிடு இஸ்ராயேலே

 கடவுளுக்கு பிரியமானவர்கள், பிரியமற்றவர்கள் என்றில்லை அனைவருமே பிரியமானவர்கள்தாம் என இரண்டு நாட்டினரையும் உள்வாங்கி எருசலேம், இஸ்ராயேல் என்று அறிவிக்கின்றார். எவ்வளவுதான் ஆண் ஆதிக்க சமுதாயமாக இருந்தாலும் (அன்றும் இன்றுமாக), இதயத்திலும் மனிதத்திலும் பெண்களின் மாண்பினை காட்டுகிறார் செப்பானியா, நமக்கும்..!


வவ.15-17: தண்டனைத் தீர்ப்பு, பகைவர்கள்: இவ்வார்த்தைகள் அரசவைக்கு தகுதியான வார்த்தைகள். הֵסִיר יְהוָה֙ מִשְׁפָּטַ֔יִךְ ஹெசிர் அதோனாய் மிஷ்பாதாயிக்- உன்தீர்ப்பை ஆண்டவர் எடுத்துவிட்டார். அரசராகிய ஆண்டவர்: (מֶ֣לֶךְ יִשְׂרָאֵל יְהוָה֙ மெலெக் யிஸ்ரா'யேல் அதோனாய்) இந்த வார்த்தை பிரயோகம் மிகவும் முக்கியமானது.


 . இஸ்ராயேலுக்கு மனிதர்கள் எவரும் அரசராக இருக்க முடியாது, இருந்தாலும் அவர்கள் உண்மை அரசராக இருக்க முடியாது, ஏனெனில் கடவுள் ஒருவரே அரசர் என்பது பல இறைவாக்கினர்களின் வாதம்

 . மனிதர்கள் அரசர்களாக இருக்கிறபோதுதான் இடப்பெயர்வுகளும், அழிவுகளும், தோல்விகளும், ஆனால் கடவுள் அரசராக எருசலேமில் இருக்கிறபோது இப்பிறழ்வுகள் நடைபெறாது என முன்னுரைக்கின்றார் செப்பானியா


இந்த அரசரின் பண்புகள்:

 . மாவீரர்- எபிரேய மூலச்சொல் ஷஅவர் போர்வீரர், மீட்கிறவர்| என காட்டுகிறது. கடவுள் மட்டுமே வீரர், மீட்கிறவர், மற்றய மனிதர் அனைவரும் ஏதோ ஒரு விதத்தில் தோற்கிறவர்களும் மீட்கப்பட வேண்டியவர்களுமே ஆவர். גִּבּוֹר יוֹשִׁ֑יעַ கிவோர் யோஷி'- மீட்கும் பெரியவர்.

 . உன் பொருட்டு மகிழ்ந்து களி கூர்வார்: இவ்வுலக அரசர்கள் தங்களது சொத்துக்களிலும், தங்கள் சொந்த பலத்திலும், சொந்த பிள்ளைகளிலும் அல்லது தங்கள் சொந்த வல்லமையிலுமே களிகூர்வர், ஆனால் கடவுள் தன் மக்கள் அனைவரிலும் களிகூர்வார்

 ,. அன்பினால் புத்துயிர் அளிப்பார்: ‘அவர் அன்பினால் அமைதி கொள்வார்என்கிறது எபிரேய மூல பாடம்

 . மகிழ்ந்து ஆடிப்பாடுவார்: வழமையாக மக்கள் தங்கள் கடவுளர்களுக்கு ஆடுவார்கள் பாடுவார்கள், இங்கு கடவுளே ஆடுவாராம் பாடுவாராம். செப்பானியாவின் கடவுள் மக்களின் கடவுள். יָגִיל עָלַיִךְ בְּרִנָּה யாகில் 'அலாயிக் பெரின்னாஹ் - அவர் உன்னில் மகிழ்ந்து அக்களிப்பார்.

 . 18வது வசனம் எபிரேய மூல நூலில் ஷதிருநாளில் துன்புறுகிறவர்களை கூட்டிச்சேர்க்கிறேன், உன் மத்தியிலிருந்து, இருந்தார்கள்: அஞ்சலி அவள்மேல், நிந்தை.| யார் இந்த வரிகளின் பாடு பொருள் என்பதை அறிய கடினமாக இருக்கிறது. இது இஸ்ராயேலின் எதிரிகளை குறிப்பது போல தெரிகிறது.  


செப்துவாயின்த்: இவ்வாறு மொழிபெயர்க்கிறது: உன்னுடைய துன்பப்பட்டவர்களை கூட்டிச்சேர்பேன், ஐயோ கேடு!, அவளுக்கெதிராய் நிந்தை செய்தவர் யார்? (நேரடி மொழிபெயர்பு சில வேளைகளில் கடினமாக இருக்கும்)



எசாயா 12,2-6

அந்நாளில் நீ இவ்வாறு சொல்வாய்:

ஆண்வடரே, நான் உமக்கு நன்றி சொல்வேன்; நீர் என்மேல் சினமடைந்திருந்தீர்;

இப்பொழுதோ, உம் சினம் தணிந்து விட்டது நீர் எனக்கு ஆறுதலும் அளித்துள்ளீர்.

2இறைவன் என் மீட்பர், அவர்மேல் நம்பிக்கை வைக்கிறேன், நான் அஞ்சமாட்டேன்;

ஆண்டவரே என் ஆற்றல், அவரையே பாடுவேன், என் மீட்பும் அவரே.'

3மீட்பருளும் ஊற்றுகளிலிருந்து நீங்கள் அகமகிழ்வோடு தண்ணீர் முகந்து கொள்வீர்கள்.

4அந்நாளில் நீங்கள் சொல்வதாவது: ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; அவர் திருப்பெயரைப் போற்றுங்கள்; மக்களினங்களிடையே அவர்செயல்களை அறிவியுங்கள்; அவர் திருப்பெயர் உயர்க எனப் பறைசாற்றுங்கள்.

5ஆண்டவருக்குப் புகழ்ப்பா அமைத்துப் பாடுங்கள்; ஏனெனில் அவர் மாட்சியுறும் செயல்களைப் புரிந்துள்ளார்; அனைத்துலகும் இதை அறிந்துகொள்வதாக.

6சீயோனில் குடியிருப்போரே! ஆர்ப்பரிந்து அக்களியுங்கள்; இஸ்ரயேலின் தூயவர் உங்களிடையே சிறந்து விளங்குகின்றார்.


 அமைப்பிலும், வார்த்தை பிரயோகங்களிலும் திருப்பாடலை ஒத்திருக்கும் இந்த 12வது அதிகாரம், எசாயாவின் முதல் பகுதியின் முடிவில் அமைந்துள்ளது. யூதாவிற்கான பல இறைவாக்கின் பின்னர் நன்றிப்பாடலாக அமைந்துள்ளது. இரண்டு பாடல்களை அடக்கிய ஒரு பாடல் போல தோன்றுகிறது. தனி மற்றும் குழு நன்றிப்பாடலாக தெரிகின்ற இப்பாடல், பதிலுரைப் பாடல்கள், திருப்பாடல் நூலுக்கு மட்டும் உரியதல்ல, மாறாக விவிலியத்தின் அனைத்து இடங்களிலும் அதனைக் காண முடியும் என்பதை நிருபிக்கிறது


.1: ஆண்டவர் கோபம் நிலைக்காது, அது தணியும், அத்தோடு கோபித்த ஆண்டவர் ஆறுதல் படுத்துவார் (மனிதருடைய கோபத்தை போல் அல்ல, என்கிறாரோ?)

 ஆண்டவருடைய கோபம் தணிந்துவிட்டமை, இவருக்கு நன்றியுணர்வைக் கொண்டு வருகிறது. ஏனெனில் ஆண்டவருடைய கோபம் நீதியானது, அவர் அந்த கோபத்தை தணித்திருப்பது இவருக்கு நன்மை பயக்கின்றது


.2: இறைவன் என் மீட்பர், அவர்மேல் நம்பிக்கை வைக்கின்றேன் என்பது புராதன 

இஸ்ராயேலர்களின் நம்பிக்கை. אֵל יְשׁוּעָתִי אֶבְטַח 'எல் யெஷு'ஆதி 'எவ்தாஹ்- ஆண்டவர் என் மீட்பர், அவரில் நம்பிக்கை வைக்கின்றேன். இதனை அதிகமான திருப்பாடல்களில் காணலாம். இந்த வரியை இஸ்ராயேலர்களுடைய நம்பிக்கை பிரகடனம் என்று கூடச் சொல்லாம்

 'ஆண்டவரே என் ஆற்றல் அவரையே பாடுவேன|; : கடவுள் என் 'பலமும் சக்தியும|; இந்த வரி சற்று மயக்கமாக உள்ளது. எபிரேய விவிலியம், இதனை 'ஆண்டவரே என் சக்தி, அவரே எனது வல்லமை' என்று காட்டுகிறது כִּי־עָזִּי וְזִמְרָת֙ கி-'அட்சி வெட்சிம்ராஹ். (זמר ட்ஸ்மார்) என்பது எபிரேயத்தில் சக்தியை குறிக்கும், பல முந்தைய மொழிபெயர்ப்பாளர்கள் இதனைப் பாடல் எனக் கொண்டனர். கடவுள் எனது பலமும் வல்லமையும் என்பது மோசேக்கு மிகவும் பிடித்த சொற் பிரயோகம்.


.3: 'மகிழ்ச்சியில் தண்ணீர் அள்ளுங்கள், மீட்பின் ஊற்றுக்களிலிருந்து|: இவ்வாறு நேரடி மொழிபெயர்ப்பு இருக்கும். தூய ஆவியை மகிழ்ச்சியின் ஊற்றுக்கும், வாழ்வு தரும் தண்ணீருக்கும் நற்செய்தியாளர் யோவான் அடிக்கடி ஒப்பிடுவதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம். தண்ணீர் 

இன்றுவரை இஸ்ராயேல் மக்களுக்கு இறையாசீராகவே இருக்கிறது. מַיִם בְּשָׂשׂוֹן  மாயிம் பெசாசோன்- மகிழ்ச்சியில் தண்ணீர்.


.4: ஆண்டவருக்கு நன்றி செலுத்தலும், அவர் பெயரை போற்றுவதும் ஒத்த கருத்து வரிகளாக பாவிக்கப்பட்டுள்ளது. ஆக ஆண்டவருக்கு நன்றியுள்ளவர்களாக இருத்தல் அவரை போற்றும் வழிபாட்டிற்கு சமனாக அமைகிறது. הוֹדוּ לַֽיהוָה קִרְאוּ בִשְׁמ֔וֹ ஹோதூ லாஅதோனாய் கிர்' வெஷ்மோ- ஆண்டவருக்கு நன்றி சொல்லுங்கள் அவர் பெயரை அறிவியுங்கள்

 மக்களினங்கள் அனைவருக்கும் அவர்செயல்களை அறிவியுங்கள், அனைத்துலகும் இதை அறிந்து கௌ;வதாக: ஆண்டவருடைய நன்மைத்தனங்களை அனுபவித்தால் போதாது, அதனை அறிக்கையிட வேண்டும், அதாவது மற்றவருடன் பகிர வேண்டும், மற்றவரையும் நினைக்க வேண்டும். நன்றி சொல்லுதல் வார்த்தையிலும் செயலிலும் தங்கியுள்ளதை இந்த அழகான வரி காட்டுகிறது


.5: புகழ்பா என்பது ஒரு வகை பாடல் வகை என எடுக்கலாம். திருப்பாடல் புத்தகத்தில் 

இவ்வகையான பாடல்கள் பல உள்ளன. புகழ்பாக்களை கடவுள் விரும்பினார் என்ற நம்பிக்கை ஒன்றும் புழக்கத்தில் இருந்திருக்கலாம். ஆண்டவர் மாட்சியுறும் செயல்கள் புரிந்துள்ள படியால், அவர் புகழப்படவேண்டியவர். அனைத்துலகும் அதனை அறிந்து கொள்ள வேண்டும்


6. சீயோனில் குடியிருப்பவர்கள் எருசலேம் வாசிகளைக் குறிக்கலாம். எருசலேம் குறிக்கப்பட்டாலும், இது முழு இஸ்ராயேல் தேசத்தையும் குறிக்கிறது என்றுதான் எடுக்கவேண்டும். צַהֲלִי וָרֹנִּי יוֹשֶׁבֶת צִיּ֑וֹן ட்சாஹலி வாரோனி யோஷேவெத் ட்சியோன்- சீயோன் வாசிகளே ஆர்ப்பரியுங்கள் மகிழுங்கள்

 இஸ்ராயேலின் தூயவர்: எசாயாவினுடைய முக்கியமான இறையியல் கருத்து இது

இஸ்ராயேலின் தூயவர் என்ற பதம் முதல் ஏற்பாட்டில் பல இடங்களில் காணக்கிடைக்கிறது. இது கடவுளுடைய பெயர்களில் ஒன்று. (קְדוֹשׁ יִשְׂרָאֵל கெதோஷ் யிஷ்ராஏல்) கடவுளை வெளியில் தேட வேண்டாம், அவர் இங்கே இருக்கிறார்! (இது எசயாவினுடைய மக்களுக்கும் புரியவில்லை எமக்கும் புரியவில்லை).   




பிலிப்பியர் 4,4-7

4ஆண்டவரோடு இணைந்து என்றும் மகிழுங்கள்; மீண்டும் கூறுகிறேன், மகிழுங்கள். 5கனிந்த உங்கள் உள்ளம் எல்லா மனிதருக்கும் தெரிந்திருக்கட்டும். ஆண்டவர் அண்மையில் உள்ளார். 6எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம். ஆனால் நன்றியோடு கூடிய இறை வேண்டல், மன்றாட்டு ஆகிய அனைத்தின் வழியாகவும் கடவுளிடம் உங்கள் விண்ணப்பங்களைத் தெரிவியுங்கள்


 கடந்த வாரம் இதே திருமுகத்தில் முதல் அதிகாரத்தில் இருந்த அதே செய்தி, இன்று 

இறுதி அதிகாரத்தில் மீண்டும் கூறப்படுகிறது. இது செபத்திற்கும், மகிழ்ச்சிக்குமான அழைப்பு. இதன் செய்திகளாவன:


.4: மகிழ்ச்சி: (காரிஸ் χαρις) பிலிப்பியர் திருமுகத்தின் முக்கிய செய்தி இது. ஆண்டவரோடு 

இணைந்திருப்பவர் மகிழ்ச்சியாக மட்டுமே இருக்கமுடியும். ஆக ஆண்டவரோடு இணைந்திருந்து மகிழுங்கள் அதனை மீண்டும் சொல்லி அதன் முக்கியத்துவத்தைக் காட்டுகிறார் பவுல். விவிலியத்தில் 200 தடவைகளுக்கு மேலாக வருகின்ற இந்த சொல் பிலிப்பியர் திருமுகத்தில் 9 தடவைகள் மட்டும் வருகின்றது


.5. பிலிப்பியருடைய கனிந்த உள்ளத்தை அனைவரும் தெரிய வேண்டும் அதன் வாயிலாக அனைவரும் கனிந்த உள்ளத்தை பெறவேண்டும் என்பது பவுலுடைய நோக்கம். கனிந்த உள்ளம்: அழகான தமிழ் மொழிபெயர்பு, மூலச்சொல் (ἐπιεικής எபிஎய்கேஸ்). இதற்கு ஷஉண்மையான, பொருத்தமான, மென்மையான, சமத்துவமான, நியாயமான| என பல அர்த்தங்களைக் கொள்ளலாம். ஆண்டவர் அண்மையில் உள்ளதால் பிலிப்பியரை இவ்வாறு வாழ அழைக்கிறார்

 பிலிப்பியர் திருமுகத்தை எழுதியபோதும் பவுல் சிறையில் இருந்திருக்கலாம். அதேவேளை அவர் ஆண்டவருடைய இரண்டாம் வருகை மிக அருகில் உள்ளது என்பதை இந்த காலத்தில் அதிகமாக நம்பினார். ஆனால் இந்த நம்பிக்கையில் மாற்றங்கள் மெது மெதுவாக உருவாகியது


.6. கவலை கொள்ளாமல், நம்பிக்கையோடு வாழ பிலிப்பியர் திருமுகம் மிக முக்கியமான உதாரணங்களைக் கொடுக்கிறது. பிலிப்பியர் திருமுகத்தை நம்பிக்கை மற்றும் மகிழ்ச்சியின் திருமுகம் என அழைக்கிறார்கள். எதைப் பற்றியும் கவலை கொள்ள வேண்டாம் என்கிறார் பவுல். இந்த நாட்களில் பவுலே பலவற்றைப் பற்றி கவலை கொண்டிருக்க வேண்டும், இருந்தாலும் எதைப் பற்றியும் கவலை கொள்ள வேண்டாம் என்கிறார்

 கவலைக்கு மாறாக சில செப முறைகளை அவர் உதாரணப்படுத்துகிறார். நன்றியோடு கூடிய இறைவேண்டல் (προσευχῇ புரொசெயுகே) மன்றாட்டு (δεήσει தேஏசெய்), மற்றும் விண்ணப்பம் (αἰτήματα எய்டேமாடா) என்ற சொற்பதங்கள் இங்கே பாவிக்கப்படுகின்றன

 (εὐχαριστία எவுகரிஸ்தியா) பலவகை செபங்களான, வேண்டுதல், செபித்தல், இறைஞ்சுதல் இவையனைத்தையும் விட நன்றி கூறுதலே சிறந்த செபம் என்கிறார் பவுலடிகளார். திருப்பலியினுடைய மூலச் சொல் இதுவாகும்.


.7. அறிவெல்லாம் கடந்த இறை அமைதி: இவ்வசனம் பவுலின் விசுவாசத்தையும் அறிவின் ஆழத்தையும் காட்டுகிறது. கிரேக்கத்திலே பல அறிவுக்கொள்கைகள் இருந்த காலப்பகுதியில், எந்த அறிவும், கிறிஸ்துவில் இணைந்திருப்பதால் கிடைக்கும் இறைவனின் அமைதியுடன் ஒப்;பிட முடியாது என்கிறார். சிறந்த அறிவாளி பவுல், ஷகிறிஸ்துவின் பொருட்டு அனைத்தையும் குப்பை எனக் கருதுகிறேன்| என்பது ஞாபகத்துக்கு வருகிறது. καὶ ἡ εἰρήνη τοῦ  θεοῦ ἡ ὑπερέχουσα πάντα νοῦν காய் ஹே எய்ரேனே டூ தியூ ஹே ஹுபெரெகூசா பன்டா நூன்- அறிவெல்லாம் கடந்த இறை அமைதி





லூக்கா 3,10-18

10அப்போது, 'நாங்கள் என்ன செய்ய வேண்டும்?' என்று கூட்டத்தினர் அவரிடம் கேட்டனர். 11அதற்கு அவர் மறுமொழியாக, 'இரண்டு அங்கிகளை உடையவர் இல்லாதவரோடு பகிர்ந்து கொள்ளட்டும்; உணவை உடையவரும் அவ்வாறே செய்யட்டும்' என்றார். 12வரி தண்டுவோரும் திருமுழுக்குப் பெற வந்து, 'போதகரே, நாங்கள் என்ன செய்யவேண்டும்?' என்று அவரிடம் கேட்டனர். 13அவர், 'உங்களுக்குக் குறிக்கப்பட்ட தொகைக்கு அதிகமாக எதையும் தண்டாதீர்கள்' என்றார். 14படைவீரரும் அவரை நோக்கி, 'நாங்கள் என்ன செய்ய வேண்டும்?' என்று கேட்டனர். அவர், 'நீங்கள் எவரையும் அச்சுறுத்திப் பணம் பறிக்காதீர்கள்; யார்மீதும் பொய்க் குற்றம் சுமத்தாதீர்கள்; உங்கள் ஊதியமே போதும் என்றிருங்கள்' என்றார்.

15அக்காலத்தில் மக்கள் மீட்பரை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒருவேளை யோவான் மெசியாவாக இருப்பாரோ என்று எல்லாரும் தங்களுக்குள் எண்ணிக்கொண்டிருந்தார்கள். 16யோவான் அவர்கள் அனைவரையும் பார்த்து, 'நான் தண்ணீரால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுக்கிறேன்; ஆனால் என்னைவிட வலிமைமிக்க ஒருவர் வருகிறார். அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை. அவர் தூய ஆவி என்னும் நெருப்பால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுப்பார். 17அவர் சுளகைத் தம் கையில் கொண்டு கோதுமையையும் பதரையும் பிரித்தெடுப்பார். கோதுமையைத் தம் களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அணையா நெருப்பிலிட்டுச் சுட்டெரிப்பார்' என்றார். 18மேலும் பல அறிவுரைகள் கூறி மக்களுக்கு நற்செய்தியை அறிவித்தார்.


 கடந்த வாரம் எடுக்கப்பட்ட அதே அதிகாரத்திலிருந்தே இந்த வாரமும் நற்செய்திப் பகுதி எடுக்கப்படுகிறது. இது ஆண்டவர் இயேசுவின் திருமுழுக்கு பகுதிக்கு சற்று முன்னுள்ள பகுதியாகும். ஆண்டவர் இயேசுவின் திருமுழுக்கின் தன்மையையும், அவர் யாருடைய திருமுழுக்கை பகிர்ந்து கொண்டார் என்பதையும் இப்பகுதி படம் பிடிக்கிறது. யோவானிடம் திருமுழுக்கு பெற்ற மக்;கள் யார் எனப் பார்ப்போம், யார் அவர்கள்?


.10: கூட்டத்தினர் (ὄχλος ஒக்லோஸ்): இவர்கள் சாதாரண மக்கள், தற்செயலாக ஒன்று கூடியவர்கள், ஆட்சியாளர்களுக்கும் தலைவர்களுக்கும் எதிர்ப்பதமானவர்கள், அறிவில்லாத சாமானியர்கள், சனம், கொந்தளிக்கும் கூட்டம், சட்டமில்லாதவர்கள் என பல வரைவிலக்கனங்களை கிரேக்க அகராதிகள் கொடுக்கின்றன. ஆக இவர்கள் சாதாரண சாமானிய மக்கள் என்பது இவ்வாறு புலப்படுகின்றது

 யோவானிடம் பலர் வந்து போகின்ற போது, இந்த சாமானிய மக்கள்தான் முதலாவது கேள்வியை கேட்கிறார்கள், இப்படியாக இவர்கள் மற்றவர்களுக்கு முன்னுதராணமாக இருக்கிறார்கள். τί οὖν ποιήσωμεν; டி ஊன் பொய்யேசோமென்- நாங்கள் என்ன செய்யவேண்டும்?


.11: யோவானின் பதில்: உள்ளார்ந்த மனமாற்றத்தை காட்டுகிறார் யோவான், பழைய காலத்தில் சாக்குடை தரிக்க கேட்கப்பட்டது, ஆனால் யோவான் இவர்களை பகிரக்கேட்கிறார். மற்றவருக்கு இரக்கம் காட்ட கேட்கிறார். (காண் லேவியர் 19,18: மீக்கா 6,8) கலகத்திற்கு போகாமல் பழைய பாரம்பரிய விழுமியமான ஷநல்ல இரக்கத்திற்கு| போகச் சொல்கிறார். ὁ ἔχων δύο χιτῶνας μεταδότω τῷ μὴ ἔχοντι,  ஹொ எக்கோன் துவூ கிடோனாஸ் மெடாதொடோ மே எகொன்டி, இரண்டு ஆடைகள் உள்ளவர், இல்லாதவருக்கு பகிரட்டும்

καὶ ὁ ἔχων βρώματα ὁμοίως ποιείτω. காய் ஹொ எய்கோன் புரோமாடா ஹொய்யோஸ் பொய்எடோ- அவ்வாறே உணவு உடையவர்களும் செய்யட்டும்


.12: வரிதண்டுவோர் (τελῶναι தேலோனாய்) இவர்கள் உரோமையருக்காக மண்ணின் மைந்தரிடம் கப்பம் பொறுபவர்கள்,     

 யூதர்களினால் அதிகமாக வெறுக்கப்பட்டவர்கள் இவர்கள். வேலை நேரத்தில் உரோமை இராணுவத்தின் பாதுகாப்பு இல்லாவிட்டால் பிணமாகவே மீட்கப்பட்டார்கள். இவர்களின் குடும்ப சுமைகளும், வறுமையும், வெறுப்பும், அதிகாரமும் தங்களது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்த தூண்டியது. (பி.கு. ஈழத்தில் போராட்ட காலத்திலும் சரி தற்போதும் சரி இவர்களின் வாரிசுகள் பலர் இருக்கிறார்கள், திருவாளர் எட்டப்பனுடைய மற்றும் —— உடைய வாரிசுகள்) இவர்கள் மத்தியில் இருந்த நியாயத்தையும் பலவீனத்தையும் யோவானும் இயேசுவும் நன்கு அறிவார்கள், அதனால்தான் அவர்களை அன்பும் செய்தனர். ἦλθον δὲ καὶ τελῶναι ஏல்தோன் தெ காய் டெலோனாய்- வரிதண்டுபவர்களும் வந்தார்கள். διδάσκαλε, τί ποιήσωμεν திதாஸ்காலெ, டி பொய்யேசோமென்- ஆசிரியரே நாங்கள் என்ன செய்ய வேண்டும். 

 யோவானின் பதில்: அதிகாரத்தை தவறாக பயன்படுத்த வேண்டாம் என்கிறார். வரிகொடுக்க வேண்டாம் என்று சொல்லவில்லை, இயேசுவும் போதுருவை வரி கொடுக்கச் சொன்னது ஞாபகம் வருகிறது. (புறவின அரசு என்பதற்காக மக்கள், பொதுச் சொத்துக்களை சூறையாடுவதும், வரி ஏற்றம் செய்வதும், சொந்த மக்களிடமே சீட்டு பிடிப்பதும், இன்னும் கள்ள மின்சாரம் எடுத்தல், சொந்த குப்பைகளை ஆட்கள் இல்லா வீடுகளிலும், மற்றவர்கள் மதில்களுக்கு அருகில் போடுவதும் எவ்விதத்திலும் சுயநிர்ணய போராட்டமாகது என்கின்றார் போல). போராட்டம் வேறு, போராட்டத்தை சுயநலத்திற்காக பயன்படுத்துவது வேறு என்பதை திருமுழுக்கு யோவான் நன்கு அறிந்து வைத்திருக்கிறார்


.14: படைவீரர்கள் (στρατευόμενοι ஸ்ட்த்ராதெயுஒமெனொய்): இவர்கள் உரேமைய இராணுவமல்ல என எண்ணுகிறேன், அனேகமாக காசுக்கு ஆலயத்திலும் வேறு இடங்களிலும் கூலிக்கு பாதுகாப்பு கொடுக்கும் கூலிப்படையினர்

 அதிகமான அக்கால அரசுகள் இந்த கூலிப்படையையே நம்பி இருந்தார்கள். போரில் தங்கள் சொந்த மக்கள் வீழ்வதை இவர்கள் விரும்பவில்லை. அத்தோடு கூலிப்படையினர் சில வேளைகளில் ஆக்ரோசமாக போரிட்டார்கள் என்பதும், இவர்களுக்கு உரிமைகளும், கூலியும் வெகுவாக தேவையில்லை என்பதும் இன்னொரு முக்கியமான காரணமாகிறது

 யோவானின் பதில்: பொய்சாட்சி சொல்ல வேண்டாம், பயமுறுத்த வேண்டாம் (μηδένα διασείσητε  μηδὲ συκοφαντήσητε மேதெனா தியாசெய்சேடெ மேதெ சுகொபான்டேசேடெ- யாரையும் பயமுறுத்த வேண்டாம், பொய் சாட்சி சொல்ல வேண்டாம்). இந்; மூன்று பகுதியினர்க்கும் பொதுவாக, மற்றவரை சுரண்ட வேண்டாம் என்ற அறிவரை வழங்கப்படுகிறது, பல வேளைகளில் வறுமை வன்முறையாக மாறி, சுரண்டப்படுகிறவர்கள் சுரண்டுபவர்களாக மாறுவதை வரலாற்றில் பார்க்கிறோம். வெற்றி பெற்றால் அவர்கள் மறுமலர்ச்சிக்காரர்கள், தோற்றால் அவர்கள் பயங்கரவாதிகள். யோவானும் இயேசுவும் இந்த சிந்தனையை ஆதரிக்கவில்லை என்பதனை அவதானமாக நோக்க வேண்டும் என எண்ணுகிறேன்

 உங்கள் ஊதியமே போதுமென்று இருங்கள் என்பது அழகான அறிவுரை: καὶ ἀρκεῖσθε τοῖς ὀψωνίοις ὑμῶν. காய் அர்கெய்ஸ்தெ டொய்ஸ் ஒப்ஸ்னியொய்ஸ் ஹுமோன்- உங்கள் ஊதியமே போதுமென்று இருங்கள்.


.15: யோவானும் இயேசுவும்:

 வைத்தியர் லூக்கா எவ்வளவு சிறந்த நற்செய்தியாளரும் ஆசிரியரும் என்பதற்கு இந்த வரிகளே போதும். இயேசு வந்த காலம் மெசியாவினுடைய காலம் என்று மக்கள் எண்ணுவதிலிருந்து, தன் நற்செய்தியை நிரூபிக்கின்றார் லூக்கா. யோவான் எலியாவைப் போல இருக்கலாம். ஆனால் கடவுளாகவோ அல்லது மெசியாவாகவே இருக்கமுடியாது என்று காட்டுகிறார். யோவானை மெசியாவாக பார்த்த அக்கால ஒரு பிரதிவாதத்தினரிடமிருந்து தனது வாசகர்களை பாதுகாக்க வேண்டிய தேவையை லூக்கா நன்கு அறிவார்


.16: மிதியடிவாரை அவிழ்க்கக்கூட எனக்கு தகுதியில்லை: கிரேக்க உரோமை காலத்தில் விலைக்கு வாங்கப்பட்ட அடிமைகளே தமது முதலாளி முதலைகளின் காலணிகளை அவிழ்த்தனர், இங்கு அடிமைகளை கொச்சைப்படுத்த லூக்கா முயலவில்லை. மாறாக, மெசியாவை காட்ட முயல்கிறார். இதே லூக்கா இன்னொரு இடத்தில் (காண். லூக்கா 7,28) யோவானை இயேசு உயர்ந்த இடத்தில் வைப்பதை காட்டுவார்.

 அதே வேளை காலணிகளை அவிழ்த்தல் என்பது ஒருவர் தனக்கு இந்த பொறுப்பில் அக்கறையிருக்கிறது என்பதை காட்டுகிறது. இந்த நிகழ்வை ரூத்து புத்தகத்தில் காணலாம். (காணக் ரூத்து 4,7-9). யோவான் இயேசுவின் காலணிகளை அவிழ்க முயலவில்லை என்பது, இயேசுவுடை மீட்பு பணியை தன்னால் செய்ய முடியாது என்பதைக் காட்டலாம்


. தூய ஆவியெனும் நெருப்பால் திருமுழுக்கு: இது லூக்காவின் ஓப்பீட்டுச் செய்;தி. (πνεῦμα புனுஎவுமா, ஆவி மூச்சு: πῦρ பூர், நெருப்பு, நாக்கு, தீ) தண்ணீர் சாதாரண தூய்மைப் பொருள், நெருப்பும் ஆவியும் உன்னதமான தூய்மைப் பொருட்கள், முதல் ஏற்பாட்டில் இவை கடவுளின் பிரசன்னத்தைக் குறிக்கின்றன.


.17: கோதுமை, பதர், அணையா நெருப்பு: கோதுமை மணிகளும் பதரும் விவசாயிகளுக்கு நன்கு தெரிந்த உருவகங்கள். அறுவடையின் போது நடக்கும் வேலையைத்தான் யோவான் கண்டுபாவிக்கிறார். இங்கே இவை நல்லாரையும் பொல்லாரையும் குறிக்கின்றன

அணையா நெருப்பு என்று யோவான் ஷகேஹேனா| பள்ளத்தாக்கை குறிப்பிடுகிறார். எருசலேமின் குப்பைகளைக் கொண்டமைந்த இப்பள்ளத்தாக்கு, எப்போதுமே எரிந்துகொண்டிருந்தது. இதனை பாவித்து ஆண்டவரின் வருகையால் நடக்கும் நீதித்தீர்ப்பை வர்ணிக்கிறார் திருமுழுக்கு யோவான்.


.18: இதனைவிட மேலும் பல அறிவுரைகளைக் கூறி ஆண்டவர் நற்செய்தியை போதித்ததாகச் சொல்லப்படுகிறது. நற்செய்தியை அறிவிக்க பல அறிவுரைகள் ஆண்டவருக்கே தேவைப்பட்டது என்பதை இங்கனம் புரிந்துகொள்ளலாம்.  


மேலுள்ள வாசகங்களைப் போல நற்செய்தியும் அருகில் இருக்கும் ஆண்டவரை குறிப்பதாக அமைகிறது. ஆண்டவரைக் கோவில்களில் தேடித் தேடி களைத்துப்போன மக்களுக்கு இன்றைய வாசகங்கள், அவர் அருகில் இருப்பதை உணர்த்துகின்றன


ஆண்டவருடைய வருகைக்கு உள்ளத்து மறுமலர்ச்சியும்

நீதியுமே இன்றியமையாதது என்கின்றனர் ஆசிரியர்கள்

வியாபாரமயமாகிப்போன

கிறிஸ்து இல்லாத கிறிஸ்துமஸில் 

இது கடினமாகவே இருக்கப்போகிறது


ஆண்டவரே நீர் எங்கள் நடுவில் சாதாரணமாகவும் 

இருக்கிறீர் என்பதை எங்களுக்குப் புரிய வையும்

ஆமென்.



 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆண்டின் பொதுக்காலம் முப்பத்திநான்காம் வாரம் கிறிஸ்து அரசர் பெருவிழா:  Our Lord Jesus Christ, King of the Universe 24.11.2024

ஆண்டின் பொதுக்காலம் முப்பத்திநான்காம் வாரம்   கிறிஸ்து அரசர் பெருவிழா :  Our Lord Jesus Christ, King of the Universe 24.11.2024 இய...