வியாழன், 13 மே, 2021

ஆண்டவரின் விண்ணேற்பு திருவிழா (ஆ) 16,05,2021, The Ascention of the Lord, 2021:

 




ஆண்டவரின் விண்ணேற்பு திருவிழா ()

16,05,2021


M. Jegankumar Coonghe OMI,

Shrine of Our Lady of Good Voygage,

Chaddy, Velanai,

Jaffna.

Friday, 14 May 2021



முதல் வாசகம்: திருத்தூதர் பணிகள் 1,1-11

பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 47

இரண்டாம் வாசகம்: எபேசியர் 4,1-13

நற்செய்தி: மாற்க்கு 16,15-20


விண்ணேற்ப்பு என்னும் சிந்தனையை விவிலிய நூல்களும் ஏற்றுக்கொள்ளப்படாத நூல்களும் உள்வாங்கியிருக்கின்றன. முதல் ஏற்பாடு, ஏனோக்கு மற்றும் எலியா போன்றவர்கள் விண்ணிற்கு சென்றதாக காட்சி அமைக்கின்றது (காண் தொ.நூ 5,24: 2அர 2,11). மோசே கூட, அவருடைய இறந்த உடலை மக்கள் காணாதபடியால், விண்ணகம் சென்றார் என இஸ்ராயேல் மக்கள் நம்பினர்

இராபேல், தோபியாவின் கண்முன்னால் வானகம் ஏறிச்சென்றதை தோபித்து நூல் காட்டுகிறது (காண் தோபி 12,20). ஏற்றுக்கொள்ளப்படாத பல நூல்களான யோசேப்பு-அசனேத், 4ம் எஸ்ரா, 2ம் பாருக்கு, போன்ற காட்சி நூல்களும் இந்த சிந்தனையை ஆழமாக முன்வைக்கின்றன. இதைவிட வேறு சில யூத நூல்களும் இப்படியான சிந்தனைகளைக் கொண்டிருக்கின்றன. ஆரோனின் சாட்சியம் என்ற நூல் அவர் கடவுளின் அரியணைக்கு ஏறிச்சென்றதாக கூறும் அதேவேளை சில கும்ரான் சுருள்களும் நீதிமான் என்னும் பெரும் தலைவரும், வானகம் ஏறிச்சென்றார் என்று கூறுகின்றது (காண் 4கு491). ஆபிராகாம், ஈசாக்கு போன்றோரும் இவ்வாறு வானகம் சென்றதாகவும் சில வெளிப்பாட்டு நூல்கள் காட்டுகின்றன. ஏறுதல்-இறங்குதல் என்னும் சிந்தனை, மோசே சீனாய் மலையின் மீது ஏறி கடவுளின் வார்த்தையை பெற்றுக்கொண்டு இறங்கினார், அத்தோடு மேலே உயரமான இடத்தில்தான் கடவுள் இருக்கிறார் என்ற சிந்தனையிலிருந்து தொடங்கியது என சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

புதிய ஏற்பாடு, ஆண்டவர் இயேசு மரணத்திற்கு பின்னர் உயிர்த்து விண்ணுலகம் ஏறினார் என்பதை காட்டுகின்றது. நற்செய்தியாளர்கள் இயேசு விண்ணிற்கு சென்ற நிகழ்வை தானியேலில் காணப்படும் மானிட மகனுடன் (காண்க தானி 7,13) ஒப்பிடுகின்றனர். மேகங்களில் இயேசு மேலே செல்லும் நிகழ்வு, இயேசு மேலுலகை சார்ந்தவர் என்பதனைக் காட்டுகிறது. இந்த சிந்தனையை யோவான் அதிகமாக பயன்படுத்துவார் (காண்க யோவான் 3,13: 6,62). இது இயேசுவிற்கு கடவுளோடு இருந்த நெருங்கிய தொடர்பையும், அவரது இறைதன்மையையும் காட்டும் அடையாளங்களாகும். இந்த சிந்தனைகளையும் தாண்டி, எபிரேயர் திருமுகம், இயேசுவை வானகத்திற்கு ஏறிச்சென்ற தலைமைக் குருவாகக் காண்கின்றது. இந்த தலைமைக் குருவால்தான் மனித குலம் தன்னுடைய பழைய பாவங்களுக்கு பரிகாரம் செய்ய முடிந்தது என்பதனையும் விவரிக்கின்றது. பவுல் தன்னுடைய திருமுகங்களில், காலம் வரும்போது இயேசுவைப் போல மக்களும் வானகத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுவர் என எழுதுகிறார் (காண் 1தொச 4,17). இச் சிந்தனையை திருவெளிப்பாடும் காட்டுகிறது (காண்க தி.வெ 11,12)


திருத்தூதர் பணிகள் 1,1-11

தூய ஆவியைப் பற்றிய வாக்குறுதி


1தெயோபில் அவர்களே, இயேசு தாம் தெரிந்து கொண்ட திருத்தூதர்களுக்கு அவர்கள் தூய ஆவியின் துணையோடு செய்யவேண்டியவற்றைக் குறித்து அறிவுறுத்தியபின் விண்ணேற்றமடைந்தார். 2விண்ணேற்றமடைந்த நாள்வரை அவர் செய்தவை, கற்பித்தவை யாவற்றையும் குறித்து எனது முதலாம் நூலில் நான் எழுதினேன். 3இயேசு துன்புற்று இறந்தபின்பு நாற்பது நாள்களாக அவர்களுக்குத் தோன்றி, இறையாட்சியைப் பற்றிக் கற்பித்தார்; பல தெளிவான சான்றுகளால் தாம் உயிரோடு இருப்பதைக் காண்பித்தார்.4அவர்களோடு சேர்ந்து உண்ணும்போது அவர்களிடம், 'நீங்கள் எருசலேமை விட்டு நீங்கவேண்டாம். என்னிடமிருந்து கேட்டறிந்த தந்தையின் வாக்குறுதி நிறைவேறக் காத்திருங்கள். 5யோவான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தார். நீங்களோ இன்னும் சில நாட்களில் தூய ஆவியால் திருமுழுக்கு பெறுவீர்கள்' என்று கூறினார்.


இயேசுவின் விண்ணேற்றம்

6பின்பு அங்கே கூடியிருந்தவர்கள் அவரிடம், 'ஆண்டவரே, இஸ்ராயேலுக்கு ஆட்சியுரிமையை மீண்டும் பெற்றுத்தரும் காலம் இதுதானோ?' என்று கேட்டார்கள்.

7அதற்கு அவர், 'என் தந்தை தம் அதிகாரத்தால் குறித்து வைத்துள்ள நேரங்களையும் காலங்களையும் அறிவது உங்களுக்கு உரியது அல்ல் 8ஆனால் தூய ஆவி உங்களிடம் வரும்போது நீங்கள் கடவுளது வல்லமையைப் பெற்று எருசலேமிலும் யூதேயா, சமாரியா முழுவதிலும் உலகின் கடையெல்லைவரைக்கும் எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள்' என்றார்.

9இவற்றைச் சொன்னபின்பு, அவர்கள் கண்கள் முன்பாக அவர் மேலே எடுத்துக்கொள்ளப்பட்டார். மேகம் ஒன்று அவரை எடுத்துச் சென்று அவர்கள் பார்வையிலிருந்து மறைத்துவிட்டது. 10அவர் செல்லும் போது அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டே இருந்தார்கள். அப்போது வெண்ணுடை அணிந்த இருவர் தோன்றி, 11'கலிலேயரே, நீங்கள் ஏன் வானத்தைப் பார்த்துக் கொண்டே நிற்கிறீர்கள்? இந்த இயேசு உங்களிடமிருந்து விண்ணேற்றமடைந்ததைக் கண்டீர்களல்லவா? அவ்வாறே அவர் மீண்டும் வருவார்' என்றனர்.


வவ.1-3: லூக்கா தன்னுடைய இரண்டாவது நூலான திருத்தூதர் பணி நூலையும் முதலாவது நூலின் பெறுநரான தியோபிலுவிற்கே எழுதுகிறார். Θεόφιλος தியோபிலொஸ் என்பவர் அல்லது என்பது, இறைவனின் அன்பரைக் குறிக்கலாம். அல்லது ஒரு மரியாதைக்குரிய தனி நபரைக் குறிக்கலாம். உரோமைய பேரரசில் அனைவரினாலும் மரியாதை செய்யப்பட்ட ஒருவர், லூக்கா நற்செய்தியாளர், ஆண்டவரின் வரலாற்றை எழுதுவதற்கு நிதியுதவி செய்திருக்கிறார், அவருக்கே லூக்கா தன்னுடைய நூல்களை சமர்பித்ததாகவும் சில அறிஞர்கள் கருதுகின்றனர். இவர் யாராக இருந்தாலும், இங்கே நோக்கப்பட வேண்டியது லூக்காவின் செய்திகளையாகும். லூக்கா இயேசு விண்ணேற்றமடைந்த நிகழ்வை இயேசுவின் முதலாவது பாகமாகக் காண்கிறார். அத்தோடு இயேசு தான் திருத்தூதர்களுக்கு சொல்ல வேண்டிய அனைத்தையும் சொல்லிய பின்னர்தான், விண்ணேற்றம் அடைந்தார் என்கிறார். இதனால் இயேசுவின் விண்ணேற்றம் அவருடைய கட்டுப்பாட்டில்தான் நடந்தது என்கிறார். இயேசு உயிர்த்த நாளில் இருந்து விண்ணேற்றம் அடையும் நாள்வரை, இந்த குறிப்பிட்ட நாட்களில் அவர் திருத்தூதர்களோடு பல செயற்பாடுகளை மேற்கொண்டிருந்தார் என்பதும் புலப்படுகிறது. இந்த செயற்பாடுகள் இயேசு உண்மையிலேயே உயிர்த்தார் என்பதைக் காட்டுகின்றன. இயேசு இறந்த பின்னர் அவருடைய உடல் திருடப்பட்டது, அவர் உண்மையிலேயே உயிர்க்கவில்லை என்ற சில கிறிஸ்தவ எதிர்போக்குகள் அக்காலத்தில் முன்வைக்கப்பட்டன. இதனை எதிர்க்க வேண்டிய தேவையும் லூக்காவிற்கு இருந்தது. மூன்றாவது வசனத்தில் உள்ள நாற்பது நாட்கள் (ἡμερῶν τεσσεράκοντα) என்பது அவர் நாற்பது நாட்களும் தொடர்ச்சியாக தோன்றினார் என்பதை குறிக்காது. நாற்பது நாட்கள் என்னும் காலப் பகுதி ஒரு நிறைவான காலப்பகுதியாக விவிலியத்தில் அங்காங்கே காணப்படுகிறது


நாற்பது ஆண்டுகள் விடுதலைப்பயணம்

எலியாவின் நாற்பது நாள் பயணம்

தாவீதின் நாற்பது ஆண்டுகால ஆட்சி

இயேசுவின் நாற்பது நாள் பாலை வன அனுபவம் 


என்று இந்த நாற்பது நாள் உண்மையில் ஒரு நிறைவான காலத்தை காட்ட முயல்கிறது எனலாம்


4: இயேசுவின் கட்டளைகள் மீள அறிவிக்கப்படுகின்றன. இயேசு திருத்தூதர்களுடன் உணவருந்தும் போதுதான் இந்த கட்டளைகளைக் கொடுத்தார் என்று கூறுவதனால் இயேசுவின் உயிர்ப்பு ஒரு மன அனுபவம் அல்ல, மாறாக அது ஒரு உண்மையான நிகழ்வு என்று விவரிக்கின்றார். 'அவர்களோடு சேர்ந்து உண்ணும் போது' என்ற இந்த சொற்களை கிரேக்க மூல மொழியில் வித்தியாசமாக காண்கிறோம். இது συναλιζόμενος (சுனாலிட்சொமெநொஸ்) என்று கிரேக்கத்தில் உள்ளது, இதற்கு மூன்று அர்த்தங்களை கொடுக்க ஆய்வாளர்கள் முயல்கின்றனர்

. அவர்களோடு உணவருந்திக்கொண்டிருந்த போது,

. அவர்களோடு கூடியிருந்தபோது,

. அவர்களோடு இரவைக் கழித்தபோது,

இந்த மூன்று அர்த்தங்களில் சரியானதை கண்டுபிடிப்பது இலகுவாக இருக்காது. மற்றைய

கட்டளைகள் இயேசுவால் சீடர்களுக்கு கொடுக்கப்பட்டன, மாறாக அவை சீடர்கள் உருவாக்கிய கட்டுக்கதைகள் அல்ல என்பதையும் காட்டுகிறார் லூக்கா. எருசலேமில் காத்திருக்கச் சொன்னது, ஏற்கனவே லூக்கா நற்செய்தியிலும் வேறு வார்த்தைகளில் பதியப்பட்டுள்ளது (காண் லூக்கா 24,49). எருசலேமின் முக்கியத்துவத்தை காட்டுவதாகவும் இந்த வசனத்தை எடுக்கலாம். தந்தையின் வாக்குறுதி என்பது, தூய ஆவியாரின் வருகையைக் குறிக்கிறது என அதிகமானவர்கள், சூழலியலின் அடிப்படையில் நோக்குகின்றனர்


. 5: ஏற்கனவே இயேசு திருமுழுக்கு பெற்றபோது, இயேசுவின் திருமுழுக்கின் முக்கியத்துவத்தை யோவான் கூறியிருக்கிறார் (காண் லூக் 3,16). இது இங்கே நிறைவடைகிறது. இயேசுவின் சீடர்களில்  சிலரும் தண்ணீர் திருமுழுக்கை பெற்றவர்களாக இருந்திருக்கலாம், இங்கே இயேசுவின் உண்மை திருமுழுக்கான தூய ஆவியின் (ἐν πνεύματι என் புனுமாடி) திருமுழுக்கு முக்கியத்துவம் பெறுகிறது. யோவானின் தண்ணீர் திருமுழுக்கும் (Ἰωάννης μὲν ἐβάπτισεν ὕδατι யோஅன்னேஸ் மென் எபாப்டிசென் ஹுதாடி), இயேசுவின் பெயரால் பெற்ற தூய ஆவியார் திரு முழுக்கும், ஆரம்ப காலத்தில் ஒரே நேரத்தில் இருந்ததாகவும் திருத்தூதர் பணி நூலில் காணலாம். திருச்சபை தூய ஆவியின் திருமுழுக்கை மட்டுமே உண்மையானதாக அங்கீகரித்தது, நீர் திருமுழுக்கை அடையாளமாகவும் அல்லது ஆயத்தமாகவும் நோக்கியது


வவ. 6-7: திருத்தூதர்களின் இந்தக் கேள்வி அவர்களின் இஸ்ரேலிய பாரம்பரிய நம்பிக்கையைக் காட்டுகிறது. பபிலோனியர்கள், அசீரியர்கள், பாரசீகர்கள், கிரேக்கர்கள், எரோதியர்கள், உரோமையர்கள் என பலரால் ஆட்சிசெய்யப்பட்டவர்கள், தங்களுக்கு சுதந்திரமும் தாவீதின் ஆட்சியைப்போல சொந்த ஆட்சியுரிமையும் கிடைக்கவேண்டும் என்று எதிர்பார்த்தார்கள். அந்நியர்களின் ஆட்சியை மண்ணின் மைந்தர்களால் சகிக்க முடியாமல் இருப்பதை வரலாற்றில் காண்கின்றோம், இந்த விடயத்தில் இஸ்ராயேலர்கள் சற்று கடினமானவர்களாகவே 

இருக்கிறார்கள். இஸ்ராயேலருக்கு ஆட்சியுரிமை என்பது, இயேசுகால யூதர்களுக்கு மிக முக்கியமான கனவாக இருந்தது (ἀποκαθιστάνεις τὴν βασιλείαν τῷ Ἰσραήλ; அபொகாதிஸ்டானெய்ஸ் டேன் பாசிலெய்யான் டோ ஈஸ்ராயேல்). (தமிழர்களுக்கும் அவர்கள் போராளிகளாக இருந்தாலும், மதவாதிகளாகவிருந்தாலும், மிதவாதிகளாகவிருந்தாலும், சாதாரண பொது மக்களாக இருந்தாலும், இந்த கேள்வி இதயத்திலிருந்து மறைவாக எழும் என்பதை யாரும் மறுக்க முடியாது). 


இயேசுவின் பதில் இரண்டு சிந்தனைகளை முன்வைக்கிறது

) காலங்களை நிர்ணயிப்பவர் இறைவன் ஒருவரே

) மனிதர்களின் ஆட்சி மாறினாலும் உள்ளார்ந்த சுதந்திரத்தை அவர்களால் தர இயலாது. அத்தோடு உண்மையான ஆட்சியுரிமை கடவுளிடமிருந்தே வருகிறது


காலங்களையும் நேரங்களையும் (χρόνους ἢ καιροὺς குரொனூஸ் ஹே காய்ரூஸ்) கணித்தல் கிரேக்க காலத்தில் மிக முக்கியமான விஞ்ஞானமாக இருந்தது. இக்காலத்திலும் இது முக்கியமான அறிவியலாக இருக்கிறது. சில விஞ்ஞானிகள் காலத்தை கடக்க முயல, சிலர் நேரத்ததை விட வேகமாக சென்று முன்நோக்கி பார்க்க முடியுமாக என சிந்திக்கிறார்கள். இந்த இடத்தில் கிரேக்க விவிலியம், நேரத்தையும், தக்க காலத்தையும் கணிக்கும் இரண்டு முக்கியமான சொற்களை பாவிக்கிறது. காலத்தையும் நேரத்தையும் மனிதன் கணித்தால், இயற்கையில் விநோதம், எதிர்பார்ப்புக்கள், அதிசயங்கள் மற்றும் நம்பிக்கை இல்லாமல் போகும், ஆக அது கடவுளுடைய வேலை, அவருக்கே விட்டுவிடுங்கள் என்கிறார் ஆண்டவர்


. 8: இவர்கள் இஸ்ராயேலுக்கு விடுதலையை பற்றி பேச, இயேசு இவர்கள் விரும்பாத சமாரியாவையும் இஸ்ராயேலோடு சேர்த்து அனைவருக்கும் விடுதலை தரவேண்டியுள்ளது என்கிறார்

எருசலேமில் தங்கியிருக்கச் சொன்னவர், இப்போது சமாரியாவையும் உலகின் கடையெல்லையையும் உள்ளடக்குகிறார். இந்த உள்ளடக்க சிந்தனைக்கு, அவர்களுக்கு தேவையாக இருந்தது தூய ஆவியின் வருகையே எனவும் காட்டுகிறார். உலகின் கடை எல்லை (ἕως ἐσχάτου τῆς γῆς ஹெயோஸ் எஸ்காடூ டேஸ் கேஸ்) என்பது, அக்காலத்தில் உரோமையாக கருதப்பட்டது என்கின்றனர் சில ஆய்வாளர்கள். சிலர் இதனை உரோமைய பேரரசின் மேற்கு எல்லையாக 

இருக்கும் என கருதுகின்றனர், அதாவது இது இன்றைய ஸ்பானிய தேசமாக இருக்கலாம்

இருப்பினும் இந்த வரிக்கு பின்னால் இறுதிக்கால சிந்தனை இருக்கிறது என்றும் சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர், இதனால் 'உலகின் கடையெல்லை' என்பது விண்ணகத்தை குறிக்கலாம்


. 9: ஆண்டவர் சீடர்களின் கண் முன்னால்தான் எடுத்துக்கொள்ளப்பட்டார். இங்கே செயற்பாட்டு வினை பாவிக்கப்படுகிறது (ἐπήρθη எபோர்தே, மேலே எடுக்கப்பட்டார்). ஆக ஆண்டவரின் விண்ணேற்பில் இறைவனின் திட்டம் அடங்கியிருக்கிறது என்பதை லூக்கா காட்டுகிறார். இயேசுவை அனுப்பியதைப் போல இப்போது அவருடைய வருகையையும் கடவுளே ஏற்பாடு செய்கிறார். மேகம் (νεφέλη நெபெலே), இயேசுவின் தெய்வீகத்தையோ அல்லது அவர் மனித உலகில் இருந்து தன்னுடைய உலகம் செல்லுவதையோ குறிக்க பயன்படுகிறது


வவ. 10-11: வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்து, இவர்கள் காட்சி; காண்பவர் போல் காணப்படுகிறார்கள். அனைத்தும் அவர்கள் கண்முன்னாலே நடக்கிறது. வெண்ணுடை அணிந்தவர்கள் லூக்கா நற்செய்தியில் ஏற்கனவே தோன்றியவர்கள் (காண்க லூக் 24,4.23).

இவர்கள் வானதூதர்களாக இருக்கலாம். கலிலேயர்கள் என்று சீடர்களை அழைப்பதன் மூலம் சீடர்களை குறுகிய வரையறைக்குள் இருந்து, வெளியால் வந்து, இயேசு சொன்ன முழு உலகையும் பார்க்கக் கேட்கின்றனர்;. வெண்மை இங்கே இவர்களின் ஆடையைவிட அவர்களின் மேலுலக தன்மையை காட்டும் உருவகமாக இருக்கலாம். பார்வையாளர்களாக இருக்காமல் சாட்சியாளர்களாக இருக்குமாறு இந்த வெண்மையானவர்கள் இயேசுவின் கட்டளைகளை நினைவூட்டுகின்றனர்



திருப்பாடல் 47

ஆண்டவரே உலகின் அரசர்

(பாடகர் தலைவர்க்கு: கோராகியரின் புகழ்ப்பா)


1மக்களினங்களே, களிப்புடன் கைகொட்டுங்கள்; ஆர்ப்பரித்துக் கடவுளைப் புகழ்ந்து பாடுங்கள். 2ஏனெனில், உன்னதராகிய ஆண்டவர் அஞ்சுதற்கு உரியவர்; உலகனைத்தையும் ஆளும் மாவேந்தர் அவர் 

3வேற்று மக்களை நமக்கு அடிபணியச் செய்தவர்; அன்னிய நாடுகளை நம் தாள் பணிய வைத்தார். 4நம் உரிமைச் சொத்தை அவர் நமக்குத் தேர்ந்து அளித்தார்; அது அவர் அன்புகூரும் யாக்கோபின் பெருமை ஆகும். (சேலா

5ஆரவார ஒலியிடையே பவனி செல்கின்றார் கடவுள்; எக்காளம் முழங்கிடவே உயரே ஏறுகின்றார் ஆண்டவர்

6பாடுங்கள்; கடவுளுக்குப் புகழ் பாடுங்கள்; பாடுங்கள், நம் அரசருக்குப் புகழ் பாடுங்கள்

7ஏனெனில், கடவுளே அனைத்து உலகின் வேந்தர்; அருட்பா தொடுத்துப் புகழ் பாடுங்கள்

8கடவுள் பிறஇனத்தார் மீது ஆட்சி செய்கின்றார்; அவர்தம் திரு அரியணையில் வீற்றிருக்கின்றார். 9மக்களினங்களின் தலைவர்கள் ஆபிரகாமின் கடவுளுடைய மக்களோடு ஒன்றுகூடுவர்; ஏனெனில், மண்ணுலகின் மன்னர் அனைவரும் கடவுளின் கொற்றத்திற்கு உட்பட்டவர்; கடவுளே அனைத்திற்கும் மேலானவர்.


இந்த நாற்பத்தி ஏழாவது திருப்பாடல் ஒரு வகை புகழ்சிப்பாடல் வகையை சார்ந்தது. கோராவின் பாடல்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. இந்த கோராவினர் (קֹרַח கோராஹ்), பாடகர் குலாமாக இருக்கலாம் என சில அறிஞர்கள் வாதிடுகின்றனர். இந்த பாடல் இஸ்ராயேலரின் பெருமைகளை எடுத்துரைப்பது போல தோன்றினாலும், இங்கே மக்கள் என்பவர்கள், கடவுளின் பிள்ளைகளாகிய அனைவரையும் குறிக்கும் என்ற நோக்கோடு இப்பாடலை காணவேண்டும். இஸ்ராயேல் மக்கள், தங்களுடைய வேதனையான நாட்களில் இப்படியான பாடல்களை பாடி தங்களது பழைய பெருமைகளை நினைத்து, துன்பத்தில் துவண்டு விடாமல், மீண்டும் எழுந்திருக்க முயற்சிசெய்தனர். பழைய நன்மைத் தனங்களை நினைப்பது தற்கால வெறுமைகளிடமிருந்து தப்பிக்க, நல்லதொரு ஆரோக்கியமான முயற்சி என்பதை அவர்கள் அன்றே அறிந்திருக்கிறார்கள். (ஒப்பிடுக: வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா யாக்கை பொறுத்த நிலம். குறள் 239). இந்த பாடல் பல வழிபாட்டு வார்த்தைகளை கொண்டமைந்திருப்பதனால் இதனை ஆலய வழிபாட்டு புகழ்சிப்பாடல் எனவும் சிலர் தரம்பிரிக்கின்றனர்


வவ.1-2: மக்களினங்கள் என்று அனைத்து மக்களையும் உள்வாங்குகிறார் ஆசிரியர். கைதட்டுதலும் (תָּקַע தகா'), மகிழ்சியால் சத்தமிடுதலும் (רוּעַ ருவா') வழிபாட்டு முறையை குறிக்கின்றன. உன்னதராகிய கடவுள் (יְהוָה עֶלְיוֹן அடோனாய் எலியோன்) என்பது கடவுளுக்கு இஸ்ராயேலர் கொடுத்த இன்னொரு காரணப் பெயர். கடவுளுக்கு அஞ்சுதல் என்பது பயத்தை உண்டுபண்ணுவதற்கல்ல, மாறாக நன்மைத் தனத்தை மேற்கொள்வதற்கே என்று பார்க்கவேண்டும். இந்த கருத்துடன்தான், கடவுளிடம் கொள்ளும் அச்சமே மெய்யறிவின் தொடக்கம் என்று விவிலியம் காட்டுகின்றது. மக்களினங்களுக்கு மனிதர்கள் அரசர்களாக இருக்க முடியாது கடவுள் மட்டுமே அரசர் என்பது கடவுள்-இறைமைத் தத்துவம். கடவுள்தான் உண்மையான அரசர் என்பதற்கு பின்னால் பல இறையியல் மற்றும் வரலாற்று கருத்துக்கள் காணக்கிடக்கின்றன


வவ.3-4: யாக்கோபு வீட்டாரின் (இஸ்ராயேலரின்) பழைய பெருமைகள் நினைவூட்டப்படுகின்றன 

(גְּאוֹן יַעֲקֹב கெ'யோன் யா'அகோவ்) எபிரேய விவிலியத்தில் வேற்றினத்தார் என்ற பிரிவினைச் சொல் இல்லை, மக்களினம் என்றே உள்ளது (עַמִּים 'அம்மிம்). இது சில வேளைகளில் 

இஸ்ராயேலரையும் குறிக்கும், சில வேளைகளில் மற்றவரையும் குறிக்கும். கடவுளுக்கு அனைவரும் அவர் மக்களே. யாக்கோபு வீட்டார் தவறான வழியில் சென்றால் அவர்களும் மற்றவர் காலடியில் விழுவர் என்பதைத்தான் ஆசிரியர் காட்டுகிறார். தமது பெருமைகளைக் காட்டும் அதேவேளை ஆசிரியர் மறைமுகமாக எச்சரிக்கை மணியையும் அடிக்கிறார்


வவ.5-7: கடவுள் உயரமான இடத்தில் இருக்கிறார் என்பது பண்டைய நம்பிக்கை

இஸ்ராயேலர் இதனால்தான் மலைகளில் மற்றும் குன்றுகளில் பலிப் பீடங்களைக் கட்டினர்

இயேசுவும் மலையில் சென்று செபிப்பதையும் அல்லது மலையில் அமர்ந்து போதிப்பதையும் இங்கு ஒப்பிட வேண்டும். ஆறாவது வசனம் அழகான எபிரேய சொற்றொடர் அணிநயத்தில் அமைந்துள்ளது. (זַמְּרוּ אֱלֹהִים זַמֵּרוּ זַמְּרוּ לְמַלְכֵּנוּ זַמֵּרוּ׃ ட்சம்ரூ 'எலோஹிம் ட்சம்ரூ ட்சம்ரூ லெமல்கெனூ ட்சம்ரூ) நான்கு தடவைகள் பாடுங்கள் என்று ஏவல் விடப்படுகிறது (זַמְּרוּ ட்சம்ரூ- பாடுங்கள்), மீண்டுமாக ஆசிரியர் கடவுளை அரசராக வர்ணிக்கிறார்;. ஏழாவது வசனம், புகழ்பா என்ற வார்த்தையை அறிமுகப்படுத்துகிறது. இதனை எபிரேயத்தில் மஸ்கில் מַשְׂכִּיל என்று அழைப்பார்கள். இதற்கு பல அர்த்தங்கள் உள்ளன, தியானப் பாடல் என்றும் இது பொருள்படும்.


வவ.8-9: பிற இனத்தார் என்பதற்கு நாடுகளின் மக்கள் (עַל־גּוֹיִם 'அல்-கோயிம்) என்ற சொல் பாவிக்கப்படுகிறது. இது அனைவருக்கும் கடவுள் மேல் உரிமையுண்டு என்பதனைக் காட்டுகிறது. அரியணையை அதிகாரத்தின் அடையாளமாக மனிதர்கள் கருதுகின்றனர். ஆனால் கடவுளின் அரியணை தூய்மையின் அடையாளமாக இருப்பதாக காட்டுகிறார் ஆசிரியர் (קֹדֶשׁ கொடோஷ்- தூய்மை).


.10: ஆபிரகாமின் மக்களுக்கு இணையாக, மக்களினங்களின் தலைவர்கள் (נְדִיבֵי עַמִּים நெதிவே 'அமிம்) ஏற்றுக்கொள்ளப்படுவதையும், பாதுகாக்காக்கப்படுவததையும் நினைவூட்டுகிறார். கொற்றம் என்பதை கடவுளின் பாதுகாப்பு கேடயம் எனவும் கொள்ளலாம். அதாவது கடவுளுடைய பாதுகாப்பிற்கு அனைத்து மக்களும் தகுயுள்ளவர்கள் என்ற பொருள் தரப்படுகிறது



எபேசியர் 4,1-13

கிறிஸ்துவின் உடலில் ஒற்றுமை


1ஆதலால் ஆண்டவர் பொருட்டு கைதியாக இருக்கும் நான் உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன்; நீங்கள் பெற்றுக்கொண்ட அழைப்புக்கு ஏற்ப வாழுங்கள். 2முழு மனத்தாழ்மையோடும் கனிவோடும் பொறுமையோடும் ஒருவரையொருவர் அன்புடன் தாங்கி, 3அமைதியுடன் இணைந்து வாழ்ந்து, தூய ஆவி அருளும் ஒருமைப்பாட்டைக் காத்துக்கொள்ள முழு முயற்சி செய்யுங்கள். 4நீங்கள் ஒரே எதிர்நோக்கு கொண்டு வாழ அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். ஒரே எதிர்நோக்கு இருப்பது போல, உடலும் ஒன்றே; தூய ஆவியும் ஒன்றே. 5அவ்வாறே ஆண்டவர் ஒருவNர் நாம் கொண்டுள்ள நம்பிக்கை ஒன்றே; திருமுழுக்கு ஒன்றே. 6எல்லாருக்கும் கடவுளும் தந்தையுமானவர் ஒருவர் அவர் எல்லாருக்கும் மேலானவர்; எல்லார் மூலமாகவும் செயலாற்றுபவர்; எல்லாருக்குள்ளும் இருப்பவர்.


7கிறிஸ்து கொடுக்க விரும்பும் அளவுக்கேற்ப நம் ஒவ்வொருவருக்கும் அருள் அளிக்கப்பட்டுள்ளது. 8ஆகையால்தான், 'அவர் உயரே ஏறிச் சென்றார்; அப்போது, சிறைப்பட்ட கைதிகளை இழுத்துச் சென்றார்; மனிதருக்குப் பரிசுகளை வழங்கினார்' என்று மறைநூல் கூறுகிறது. 9'ஏறிச் சென்றார்' என்பதனால் அதன் முன்பு மண்ணுலகின் கீழான பகுதிகளுக்கு அவர் இறங்கினார் என்று விளங்குகிறது அல்லவா? 10கீழே இறங்கியவர்தான் எங்கும் நிறைந்திருக்கும்படி எல்லா வானுலகங்களுக்கும் மேலாக ஏறிச் சென்றவர். 11அவரே சிலரைத் திருத்தூதராகவும் சிலரை இறைவாக்கினராகவும், வேறு சிலரை நற்செய்தியாளர்களாகவும், ஆயர்களாகவும், போதகர்களாகவும் ஏற்படுத்தினார். 12திருத்தொண்டாற்ற இறைமக்களை ஆயத்தப்படுத்தவும், கிறிஸ்துவின் உடலைக் கட்டி எழுப்பவும் இவர்களை அவர் ஏற்படுத்தினார். 13அதனால் நாம் எல்லாரும் இறை மகனைப் பற்றிய அறிவிலும் நம்பிக்கையிலும் ஒருமைப்பாட்டை அடைவோம். கிறிஸ்துவிடம் காணப்பட்ட நிறைவைப் பெறுமளவுக்கு நாம் முதிர்ச்சியடைவோம்.


எபேசியர் திருமுகம் திருச்சபையியலை அதிகமாக சுட்டிக்காட்டுகின்ற திருமுகங்களில் மிக முக்கியமானது. ஒரு குறிப்பிட்ட தப்பறைக்கு எதிராக இந்த திருமுகம் எழுதப்பட்டது போல தெரியவில்லை மாறாக திக்கிக்கு (Tychicus) என்ற பவுலுடைய அன்பான சீடர் சென்ற இடம் எல்லாம் இதனை வாசிக்கும் படியாக எழுதப்பட்டுள்ளது போல தோன்றுகிறது. பவுல் இந்த திருமுகத்தின் ஆசிரியர் இல்லை என்று வாதிட்டாலும், இதிலுள்ள முக்கியமாக, செபங்கள் பவுலுடையவை போன்றே தோன்றுகின்றன. ஆக பவுலுடைய இறையியலையும், சிந்தனையையும் இந்த திருமுகம் நிச்சயமாக கொண்டுள்ளது எனலாம். வழிபாட்டை பற்றி பேசுவதும் இந்த திருமுகத்தின் முக்கியமான ஒரு சிறப்பம்சம். இருந்தும் பவுலுடைய ஆசிரியத்தும் என்பது இன்றும் ஒரு கேள்வியாகவே எபேசியர் திருமுகத்தைப் பொறுத்தவரையில் இருந்துகொண்டே இருக்கிறது


.1: தன்னை ஆண்டவர் பெயரால் கைதியாக இருக்கும் ஒருவர் என அறிமுகப் படுத்துகிறார் அத்தோடு தன் சீடர்களை ஆண்டவருக்கு உரிய வாழ்க்கையை வாழுமாறு மீண்டும் கட்டளையிடுகிறார். எபேசியர் திருமுகமும் சிறைக்கூட திருமுகங்களில் ஒன்று என்பதற்கு இந்த வரி சான்றாகலாம் (ὁ δέσμιος ἐν κυρίῳ ஹொ தெஸ்மியொஸ் என் கூரியோ- ஆண்டவரில் கைதியான). 

அதேவேளை அவர் தன்னை கைதி என்று சொல்லாமல், 'ஆண்டவரின் கைதி' என்பது ஒருவேளை அவருடைய கிறிஸ்தவ சீடத்துவத்தை குறிக்கலாம் என்ற ஆழமான வாதமும் முன்வைக்கப்படுகிறது. ஆக இந்த திருமுகத்தை எழுதியபோது பவுல் உண்மையில் அரசியல் கைதியாக இருந்தாரா அல்லது, இயேசுவல் அவர் மேல் கொண்ட அன்பினால் தன்னை 'இயேசுவில் கைதி' என்று குறிப்பிடுகிறாரா? என்ற கேள்வி எழுகிறது

கிறிஸ்தவராக இருப்பது ஒரு அழைப்பு என்ற இறையியல் இங்கே முன்வைக்கப்படுகிறது

இந்த அழைப்பிற்கு ஏற்ப ஒவ்வொருவரும் வாழக் கேட்கப்படுகிறார்கள் (ἐκλήθητε எக்லேதேடெ- அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்). 


வவ.2-3: சில முக்கியமான விழுமியங்களை வாழும் படி கேட்கிறார். முழு மனத்தாழ்மையோடும் (ταπεινοφροσύνης டாபெய்நொப்ரொசுனேஸ்), கனிவோடும் (πραΰτητος பிராவ்டேடொஸ்), பொறுமையோடும் (μακροθυμίας மக்ரூதுமியாஸ்), ஒருவரை ஒருவர் அன்புடன் தாங்கி (ἐν ἀγάπῃ என் அகாபே), அமைதியில் இணைந்து (τῆς εἰρήνης டேஸ் எய்ஸ்ரேனேஸ்), தூய ஆவி அருளும் ஒருமைப் பாட்டை காத்துக்கொள்ள கட்டளையிடுகிறார்

இங்கே சொல்லப்படுகின்ற விழுமியங்கள் கிறிஸ்தவ வாழ்விற்கும், திருச்சபையின் ஒருமைப்பாட்டிற்கும் மிக முக்கியம் என்பதை பவுல் உணர்ந்திருக்கலாம், அல்லது இவை 

இல்லாமையினாலேதான் திருச்சபையில் பல சிக்கல்கள் உருவாகின்றன என்பதையும் அவர் சந்தேகித்திருக்கலாம்


.4: பவுலுடைய இறையியலில் 'எதிர்நோக்கு' (ἐλπίς எல்பிஸ்) என்பது மிக முக்கியமான ஓர் 

இறையியல் பதம். இன்று உலகு, எதிர்நோக்கு என்ற பதத்திற்கு வேறு அர்த்தங்களைக் கொடுத்தாலும், விவிலியத்தில் எதிர்நோக்கு நம்பிக்கையோடு தொடர்புபட்ட ஒரு விழுமியமாக பார்க்கப்படுகிறது. ஒருவர் தான் நம்புகின்ற விசுவாச உண்மைகள் நடக்கும் என எதிர்பார்ப்பதை எதிர்நோக்கு எனலாம். உதாரணமாக இயேசுவின் இரண்டாம் வருகை, நிலைவாழ்வு, நீதித்தீர்ப்பு போன்றவை எதிர்நோக்காக கருதப்படலாம். நம்பிக்கை வேறு, எதிர்நோக்கு வேறு. எதிர்நோக்கில் ஒருவர் தன்னுடைய நம்பிக்கையை எதிர்பார்க்கிறார். இதனை நம்பிக்கை கலந்த காத்திருப்பு என்றும் அழைக்கலாம்

கிறிஸ்தவர்களுடைய எதிர்நோக்கு, என்றும் ஒன்றே என்பதை ஒரே உடலுடனும், ஒரே ஆவியுடனும் ஒப்பிடுகிறார். இங்கே உடல் திருச்சபையை குறிக்கிறது என எடுக்கலாம். திருச்சபை தன்னிலே ஒன்று, என்ற வாதம் எபேசியர் திருமுகத்தில் முன்வைக்கப்படுகிறது, (Ἓν σῶμα καὶ ἓν πνεῦμα என் சோமா காய் என் புனுமா- ஒரே உடல் மற்றும் ஒரே ஆவி). 


.5: பிரிவினைவாதம் ஆரம்ப கால திருச்சபையை பாதித்த மிக முக்கியமான சவாலாக பார்க்கப்படுகிறது. இவற்றிக்கு எதிராகத்தான் பல திருமுகங்கள் எழுதப்பட்டன. ஒவ்வொருவரும் தாங்கள் விரும்பிய படி குழுக்களை உருவாக்கி அதற்கு தூய ஆவியரின் பெயர்களை வைப்பது பிற்காலத்தில் பல சிக்கல்களை உருவாக்கும், அதே வேளை யூத மற்றும் உரோமைய சவால்களை சமாளிப்பதற்கும் இவை இடைஞ்சலாக இருக்கும் என்பதையும் ஆரம்ப கால திருச்சபை தலைவர்கள் நன்கு அறிந்திருந்தனர்

ஆண்டவரும், நம்பிக்கையும், திருமுழுக்கும் ஒன்றே என்று சொல்வதன் மூலம், அடிப்படையில் கிறிஸ்தவர்களுக்கிடையில் பிரிவினைகள் இல்லை என்பது உறுதிப்படுத்தப்படுகிறது. (εἷς κύριος, μία πίστις, ἓν βάπτισμα, எய்ஸ் கூரியோஸ், மியா பிஸ்டிஸ், என் பப்டிஸ்மா- ஒரே ஆண்டவர், ஒரே நம்பிக்கை, ஒரே திருமுழுக்கு). 


.6: இவை எல்லாவற்றிக்கும் மேலாக கடவுளும் ஒருமையின் உதாராணத்திற்கு எடுக்கப்படுகிறார். . கடவுளை எல்லோருக்கும் தந்தை எனவும் (πατὴρ பாடேர்), அவர் எல்லோருக்கும் மேலானவர் எனவும் (ἐπὶ πάντων எபி பன்டோன்), எல்லோருக்கும் மூலம் எனவும் (διὰ πάντων தியா பன்டோன்), மற்றும் எல்லோருக்குள்ளும் இருப்பவர் (ἐν πᾶσιν என் பாசின்) என்றும் சொல்லப்படுகிறது

வரிகள் 4-6 போன்றவற்றில் 'ஒன்று' என்ற வார்த்தை ஏழு தடவைகள் பாவிக்கப்பட்டுள்ளன

இது ஒருமையின் முக்கியத்துவத்தைக் காட்டுகின்ற அதே வேளை, ஒரு காலைச் செபம் போன்ற வடிவத்தையும் உருவாக்குகின்றது. யூதர்கள் தினமும் காலையில் 'ஷேமா யிஸ்ராயேல்

(இஸ்ராயேலே கேள்) என்ற செபத்தை செபிப்பார்கள், இது ஒரு கடவுள் நம்பிக்கையை நினைவூட்டுகின்ற செபம் (. 6,4), இதனை ஒத்ததாக எபேசியர் திருமுக வரிகள் அமைகின்றன


.7: அருள் கடவுள் கொடுக்கும் இலவசமான கொடை, அதன் அளவுகளை கிறிஸ்துதான் தீர்மானிக்கிறார், ஆக அருளையும், அதன் அளவுகளையும் மனிதர்கள் அல்லது அவர்களது அடையாளங்கள் தீர்மாணிக்க முடியாது என்பது சொல்லப்படுகிறது


.8: இந்த கூற்றிக்கு மறைநூல் வாக்கு ஒன்றை உதாரணத்திற்கு எடுக்கிறார். கிறிஸ்து உயரே ஏறிச்சென்றபோது, சிறைப்பட்ட கைதிகளையும் இழுத்துச் செல்கிறார், மனிதர்களுக்கு பரிசில்களையும் வழங்கியுள்ளார்

இந்ந இறைவாக்கு நேரடியாக முதல் எற்பாட்டில் எங்கிருந்த எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை ஆனால் இதற்கும் திருப்பாடல் 68,18ம் தொடர்பு இருந்திருக்க வேண்டும். (காண்க திருப்பாடல் 68,18: உயர்ந்த மலைக்கு நீர் ஏறிச் சென்றீர்; சிறைப்பட்ட கைதிகளை இழுத்துச் சென்றீர்; மனிதரிடமிருந்தும் எதிர்த்துக் கிளம்பியவரிடமிருந்தும் பரிசுகள் பெற்றுக் கொண்டீர்;) 

இருப்பினும் வார்த்தைகள் சற்று வித்தியாசமாகவே உள்ளன. திருப்பாடலில் 'பரிசில்களை பெற்றுக்கொண்டீர்' என்பது எபேசிய திருமுகத்தில் 'பரிசில்களை வழங்கினீர்' என்றுள்ளது. ஒருவேளை ஆசிரியர் இந்த வார்த்தைகளை மாற்றியிருக்கலாம். இப்படியாக இறைவார்த்தை வரிகளை மாற்றி தேவைக்கேற்றவாறு உபயோகிப்பது அக்காலத்தில் இராபினிக்க இலக்கியங்களில் வழக்கத்தில் இருந்திருக்கின்றன்

அல்லது இந்த வரி, ஆரம்ப கால திருச்சபையின் ஒரு புகழ்சிப்பாடல் வரியாக 

இருந்திருக்கலாம் என்ற நம்பிக்கையும் உள்ளது


.9: 'ஏறிச்சென்றார்' (ἀνέβη அனெபே) என்பதன் மூலம், அவர் இறங்கியும் வந்திருக்க வேண்டும் என்பதை நியாயமான மெய்யியல் மூலம் தெளிவு படு;த்துகிறார்

எங்கே இறங்கினார் என்பதற்கு, பூவுலகின் கீழ் பகுதிகள் இடமாக தரப்படுகின்றன (κατώτερα  μέρη τῆς γῆς காடோடெரா, (மெரே) டேஸ் கேஸ்- பூவுலகின் கீழ்ப் பகுதிகள்). பாதாள உலகம் என்பது பூமிற்கு கீழே உள்ள ஒரு பாதாளம் என்பது முதல் ஏற்பாட்டு நம்பிக்கை

இந்த இடம், இருள் நிறைந்த இடமாகவும், அங்கே கடவுளுடைய பிரசன்னம் இல்லாமலும் 

இருந்திருக்கிறது. இருப்பினும் இந்த இடமும் அவருடைய ஆளுகைக்கு உட்பட்டே இருந்திருக்கிறது.

இது, மனித தன்மை என்கின்ற கீழான இடத்திற்குகடவுள் தன்மை வாய்ந்தவர் இறங்கி வந்தார் என்பதை குறிப்பது போலவும் இருக்கிறது என்ற வாதம் ஒன்றும் முன்வைக்கப்படுகிறது. ஆனால் பாவிக்கப்படுகின்ற வார்த்தைகள், கீழுலகம் என்ற ஓர் இடத்தை குறிப்பது போலவே உள்ளன


.10: கீழே இறங்கியவர் யார் என்பதை இந்த வரியும் விளங்கப்படுத்துகிறது. அவர் கீழே 

இறங்கியவராக இருந்தாலும், மேலுலகு அனைத்தும் அவரால் நிறைந்துள்ளது என்கிறார் ஆசிரியர்

கீழுலகு மற்றும் மேலுலகு என்பது கிரேக்க சிந்தனையாக இருந்தாலும், எபிரேய சிந்தனையும் இந்த கருப்பொருட்களை மறைமுகமாக கொண்டிருந்தது. முதல் ஏற்பாட்டின் இறுதி காலத்தில் கிரேக்க சிந்தனையின் தாக்கத்தினால், எபிரேய சிந்தனையிலும் கீழுலகு மற்றும் மேலுலகு போன்ற சிந்தனைகள் ஆழமாக வளரத்தொடங்கின

வானங்களுக்கு மேலாக ஏறிச் செல்லுதல் என்பது சாதாரண மனிதர்களால் முடியாதது. இதனை மெசியாவல் மட்டும்தான் செய்ய முடியும். மேலுலகை சார்ந்தவர் மட்டும்தான் கீழுலகிற்கு வரமுடியும், தன் வேலை முடிந்தவுடன் மேலுலகிற்கு ஏறிச் செல்லவும் முடியும். ஆக இயேசு என்பவர் ஒரு சாதாரண மனிதர் அல்ல என்பது உறுதியாகச் சொல்லப்படுகிறது


.11: திருச்சபையில் பணிகள் பலவகை, இருப்பினும் அவை அனைத்தும் ஆண்டவரையே அடிப்படையாக கொள்ள வேண்டும், ஏனெனில் இவற்றை ஏற்படுத்துகிறவர் ஆண்டவராகவே 

இருக்கிறார். இந்த ஆண்டவர் சிலரை திருத்தூதர்களாகவும் (ἀπόστολος அபொஸ்டொலொஸ்), சிலரை இறைவாக்கினர்களாகவும் (προφήτης புரொபேடேஸ்), வேறு சிலரை நற்செய்தியாளர்களாகவும் (εὐαγγελιστής எவாங்கெலிஸ்டேஸ்), சிலரை ஆயர்களாகவும் (ποιμήν பொய்மேன்) இன்னும் சிலரை போதகர்களாகவும் (διδάσκαλος திதாஸ்காலொஸ்) ஏற்படுத்துகிறார்

இந்த பணிகளை நோக்கின், ஆரம்ப கால திருச்சபையில் இந்த பணிகள் நல்ல நிலையில் 

இருந்திருக்கின்றன என்பது தெளிவாகிறது. அத்தோடு இறைவாக்கினர்கள் மற்றும் நற்செய்தியாளர்கள் பலர் குழுவில் இருந்திருக்கிறார்கள் என்பதும் வியப்பாக இருக்கிறது

இந்த விசேட பணியாளர்களும், இன்று திருச்சபையில் உள்ள சில இப்படியான பணியாளர்களும் ஒரே அர்த்தத்தில் பார்க்கப்படவேண்டுமா? என்ற சந்தேகமும் எழுகிறது. இன்றைய பணியாளர்கள், முக்கியமாக ஆசிரியர்கள், ஆயர்கள் போன்றோர், இந்த குழுக்களிலிருந்து உருவாகியிருக்கலாம்


.12: இந்த பணிக்குழுக்களின் நோக்கம் என்னவென்பதை தெளிவாக இந்த வரி தெளிவு படுத்துகிறது. இவர்கள் திருத்தொண்டாற்றவும் (διακονία தியாகொனியா), இறைமக்களை ஆயத்தப்படுத்தவும் (καταρτισμός காடாரிஸ்மொஸ்), கிறிஸ்துவின் உடலை கட்டியெழுப்பவும் (σώματος τοῦ Χριστοῦ சோமாடொஸ் டூ கிறிஸ்டூ) ஏற்படுத்தப்பட்டிருக்கிறார்கள். ஏற்படுத்துகிறவர் கிறிஸ்து. இவர்கள் பணியாளர்கள் என்பது தெளிவாக சொல்லப்படுகிறது. இந்த பணிகள் அனைத்தும் ஒரே அர்த்தத்தைiயும் கொடுக்கலாம். திருச்சபைக்கு பல அர்த்தங்கள் கொடுக்கப்படுகின்றன. அது இறைமக்கள் கூட்டமாகவும், கிறிஸ்துவின் உடலாகவும் பார்க்கப்படுகிறது. இப்படியான சிந்தனை எபேசியர் திருமுகத்தின் தனித்துவம் எனலாம்

இறைமக்களைக் குறிக்க 'புனிதர்கள்' என்ற சொல் பாவிக்கப்பட்டு;ள்ளது அவதானிக்கப்பட வேண்டும். இறைமக்கள் அனைவரும் புனிதர்களாக கருதப்பட்டிருக்கிறார்கள், இவர்கள் அதிசயம் செய்யும் புனிதர்கள் என்பதைவிட அவர்களுடைய நம்பிக்கையும், சாட்சிய வாழ்வுமே இந்த அடையாளத்தை அவர்களுக்கு கொடுத்தது எனலாம் (ἁγίων ஹகியோன்- புனிதர்கள்)

இந்த வரியை விளக்குவதில் கத்தோலிக்கரும், சீர்திருத்தவாதிகளும் நிச்சயமாக வேறுபடுவார்கள். இருவருடைய பார்வைகளும் வித்தியாசமாக இருப்பதனால் இந்த வித்தியாசம் ஏற்படலாம். இருப்பினும், இந்த வரிகளை சூழலியலில் வாசிப்பதே பொருத்தமாக இருக்கும்


.13: இந்த செயற்பாடுகளினால் என்ன நடைபெறும் என்பதை இந்த வரி காட்டுகிறது. மேற்சொன்ன செயற்பாடுகள், நம்பிக்கையாளர்களை, இறைமகனைப் பற்றிய அறிவிலும், நம்பிக்கையிலும், ஒருமைப் பாட்டை அடையவைக்கிறது. அத்தோடு கிறிஸ்துவில் காணப்பட்ட நிறைவைப் பெரும் அளவிற்கு முதிர்ச்சி அடைய வைக்கிறது

கிறிஸ்துவைப் பற்றிய அறிவிலும், நம்பிக்கையிலும் (ἑνότητα τῆς πίστεως καὶ τῆς ἐπιγνώσεως ஹெனொடேடா டேஸ் பிஸ்டெயோஸ் காய் டேஸ் எபிகுனோசெயோஸ்) ஒருமைப்பாட்டை அடைய வேண்டிய தேவை எபேசிய திருச்சபைக்கு இருந்திருக்கிறது என்பதை 

இந்த வரி காட்டுகிறது. நிறைவு என்பது கிறிஸ்துவிடம் மட்டுமே உண்மையாக இருக்கிறது, அதனை பெறுவதே அனைவருடைய இலக்கு என்பதும் இங்கே சொல்லப்படுகிறது



மாற்கு 16,15-20

நற்செய்தி பறைசாற்ற அனுப்புதல்

(மத் 28:16-20; லூக் 24:36-49; யோவா 20:19-23; திப 1:6-8)


15இயேசு அவர்களை நோக்கி, 'உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள். 16நம்பிக்கைகொண்டு திருமுழுக்குப் பெறுவோர் மீட்புப் பெறுவர்; நம்பிக்கையற்றவரோ தண்டனைத் தீர்ப்புப் பெறுவர். 17நம்பிக்கை கொண்டோர் பின்வரும் அரும் அடையாளங்களைச் செய்வர்: அவர்கள் என் பெயரால் பேய்களை ஓட்டுவர்; புதிய மொழிகளைப் பேசுவர்; 18பாம்புகளைத் தம் கையால் பிடிப்பர். கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்குத் தீங்கு இழைக்காது. அவர்கள் உடல் நலமற்றோர்மீது கைகளை வைக்க, அவர்கள் குணமடைவர்' என்று கூறினார்.

இயேசுவின் விண்ணேற்றம்

(லூக் 24:50-53; திப 1:9-11)

19இவ்வாறு அவர்களோடு பேசியபின்பு ஆண்டவர் இயேசு விண்ணேற்றமடைந்து கடவுளின் வலப்புறம் அமர்ந்தார். 20அவர்கள் புறப்பட்டுச் சென்று எங்கும் நற்செய்தியைப் பறைசாற்றினர். ஆண்டவரும் உடனிருந்து செயல்பட்டு, நிகழ்ந்த அரும் அடையாளங்களால் அவர்களுடைய வார்த்தையை உறுதிப்படுத்தினார்.


மாற்கு நற்செய்தியில் 16ம் அதிகாரத்தின் 9வது வசனத்திற்கு பிற்பட்ட வரிகள் பல முக்கியமில்லாத படிவங்களில் மட்டுமே காணப்படுகிறது. மாற்குவின் மூல விவிலியம் ஆண்டவருடைய உயிர்ப்புச் செய்தியை ஒரு வியப்புடனேயே நிறைவு செய்கிறது (காண்க மாற்கு 16,8). இப்படியாயின், மாற்குவின் பிற்பட்ட பகுதிகள் பிற்காலத்தில் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த இணைப்பிற்கு பல காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. இவற்றுள் மிக முக்கியமானதாக 'மாற்குவின் முழுமையாக்கல்' கொள்கையை கருதலாம். அதாவது மாற்கு நற்செய்தியின் முடிவு (மாற்கு 16,8), நிறைவடையாமல் தொக்கி நிலையில் இருப்பது போல கருதப்பட்டது. இதனால் மாற்குவின் சிந்தனையில் வந்த சீடர் ஒருவர், மற்றைய நற்செய்திகளின் துணையோடு, உயிர்த்த ஆண்டவரின் காட்சிகள் மற்றும் அவருடைய விண்ணேற்பை, இடைச் சொருகியிருக்க வேண்டும். இன்றைய நற்செய்தி பகுதி, 'நற்செய்தி பறைசாற்ற அனுப்பப்படல்' மற்றும் 'விண்ணேற்பு' போன்ற பகுதிகளை கொண்டுள்ளது. இயேசுவின் விண்ணேற்பு செய்திகூட, மற்றைய நற்செய்திகளைப் போலல்லாது, மாற்குவிற்கே உரிய சுருக்கமான நடையை பின்பற்றப்படுகிறது


.15: சீடர்களுக்கு தோன்றிய இயேசு, சீடர்களை 'உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்' என்று அனுப்புகிறார். κηρύξατε τὸ εὐαγγέλιον πάσῃ τῇ κτίσει கேருட்சாடெ டொ எவாங்கலியோன் பாசே டே கிடிசெய்- படைப்பிற்கெல்லாம் நற்செய்தியை அறிவியுங்கள்

நற்செய்திகளில் தொடக்கத்தில் இயேசுவின் பார்வை முக்கியமாக யூத மக்களையே நோக்கியதாக இருந்தது, அவருடைய உயிர்ப்பின் பின்னர் இந்த பார்வை முழுமை பெறுவதை அவதானிக்கலாம். அவர் படைப்பு அனைத்திற்கும் நற்செய்தியை அறிவிக்க தன் சீடர்களை அனுப்புகிறார்


.16: திருமுழுக்கின் வித்தியாசம் காட்டப்படுகிறது. அதாவது நம்பிக்கை கொண்டு திருமுழுக்கு பெறுகிறவர்கள் மட்டுமே மீட்படைவர் என சொல்லப்படுகிறார்கள் (ὁ πιστεύσας καὶ βαπτισθεὶς σωθήσεται, ஹொ பிஸ்டெயுசாஸ் காய் பாப்டிஸ்தெய்ஸ் சோதேசெடாய்). நம்பிக்கையில்லாமல் திருமுழுக்கு பெறுகிறவர்கள் எந்த நன்மையையும் பெறாமல் போகலாம் என்பது மறைமுகமாக சொல்லப்படுகிறது எனவும் எடுக்கலாம்

திருமுழுக்கு என்பது பல மதங்களில் தூய்மையின் அடையாளமாக இருந்திருக்கிறது. கிறிஸ்தவம் அதனை அருளின் அடையாளமாக கண்டது. நம்பிக்கை திருமுழுக்கிற்கு உயிர் கொடுத்தது. நம்பிக்கையோடு திருமுழுக்கு பெற்றவர்கள் தூய ஆவியையும் பெற்றார்கள் என்பது புதிய ஏற்பாட்டில் சில இடங்களில் காட்டப்படுகிறது

நம்பிக்கையற்றவர்கள் தண்டனைத் தீர்ப்பை பெறுவார்கள் என்றும் எச்சரிக்கப்படுகிறார்கள். நம்பிக்கையற்றவர்கள் என்பவர்கள் (ἀπιστήσας  κατακριθήσεται. அபிஸ்டேசாஸ் காடாகிறிதேசெடாய்-நம்பிக்கையற்றவர்கள் தண்டனைபெறுவார்கள்) இங்கே யாரைக் குறிக்கிறது? என்பது தெளிவாக இல்லை. இவர்கள் நம்பிக்கையில்லாமல் திருமுழுக்கு பெற்றவர்களையும் குறிக்குமா? என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது

இதற்கு மாறாக, திருமுழுக்கு என்பதே நம்பிக்கையின் அடையாளம்தான், ஆக நம்பிக்கையற்றவர்கள் திருமுழுக்கு பெறாதவர்களைத்தான் குறிக்கிறது என்கின்ற வாதமும் 

இருக்கிறது


வவ.17-18: யார் நம்பிக்கை கொண்டவர்கள் என்பதை மாற்கு தெளிவு படுத்துகிறார்: அவர்கள் பல அரும் அடையாளங்களைச் செய்கிறார்கள் (σημεῖον சேமெய்யோன்- அடையாளம்). இவை சாதாரண அதிசயங்கள் என்பதை விட, பல கருத்துக்களைக் கொண்ட அடையாங்கள் என்றே கருதப்பட வேண்டும்


. அவர்கள் இயேசுவின் பெயரால் பேய்களை ஓட்டுவர் (δαιμόνια ἐκβαλοῦσιν தைமொனியா எக்பாலூசின்): பேய்களை ஓட்டுதல் என்பது மெசியாவின் அடையாளமாக கருதப்பட்டது. பேய்களுக்கு மனிதர்களை விட வல்லமை சற்று உயர்வாகவும், வானதூதர்களைவிட சற்று குறைவானதாகவும் இருந்ததாக கருதப்பட்டது. பேய்களை ஒருவர் ஓட்டுதல், அவர் மெசியாவில் சார்பாக இருக்கிறார் என்ற நம்பிக்கையை தருகிறது


. புதிய மொழிகளை பேசுவர் (γλώσσαις λαλήσουσιν καιναῖς குலோஸ்சாய்ஸ் லாலேசூசின் காய்னாய்ஸ்): புதிய மொழிகனை பேசுதல் கிரேக்க உலகத்தில், கல்வி கற்றவர்களின் தகமைகளாக கருதப்பட்டது

இந்த இடத்தில் அந்நிய மொழிகள் என்பது வானுலக மொழிகள் என்ற அர்த்தத்தைக் கொடுக்கிறது என்றும் சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்


. பாம்புகளை கையால் பிடிப்பர் (ἐν ταῖς χερσὶν ὄφεις ἀροῦσιν என் டாய்ஸ் கெர்சின், ஒபெய்ஸ் அரூசின்): பாம்புகளுக்கு படையும் நடுங்கும் என்பது தமிழ் பழமொழி. பாம்புகளை கையால் பிடிப்பவர்கள் இன்றும் இருக்கிறார்கள். இது சிலருடைய தொழிலாகவும் இருக்கிறது. சாதாரணமானவர்கள் பாம்பை கையால் பிடிப்பதுதான் இங்கே அதிசயமாக நோக்கப்பட வேண்டும்


. கொல்லும் நஞ்சைக் குடித்தாலும், அவர்களுக்கு அது ஒன்றும் செய்யாது: நஞ்சு மூலம் மரண தண்டனை அக்காலத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது. சிலர் நஞ்சு மூலம் தற்கொலையும் செய்திருக்கிறார்கள். நஞ்சு ஒருவருடைய இரத்தில் கலந்து மூளையையும், இதயத்தையும் செயலிழக்க செய்யும்

இயற்கையை வென்றவர்களால்தான் நஞ்சையையும் ஏமாற்ற முடியும். இப்படியாக இவர்கள் சாதாரண மக்களைவிடவும் வித்தியாசமானவர்களாக காட்டப்படுகிறார்கள்


. உடல் நலமற்றவர்கள் மீது கைகளை வைத்து நலமாக்குவார்கள்: உடல் நலமற்றவர்களை குணப்படுத்தல், மெசியாவின் மிக முக்கியமான அடையாளம். விவிலியம் கடவுளை நலமளிப்பவராக காட்டுகின்றது. ஆக இவர்கள் கடவுளின் மக்களாக மாறுகிறார்கள்


.19: இவற்றை சொன்ன பின்னர் இயேசு விண்ணேற்றம் அடைந்து, கடவுளின் வலப்புறம் அமர்ந்தார். விண்;ணேற்றம் அடைந்தார் என்பதற்கு செயற்பாட்டு வினை பாவிக்கப்பட்டுள்ளது (ἀνελήμφθη அனெலேம்ப்தே-விண்ணேற்றப்பட்டார்). ஆக இந்த செயற்பாட்டிற்கு பின்னால், கடவுளின் வல்லமை இருப்பது தெளிவாகிறது

இயேசு கடவுளின் வலப்புறம் அமர்வது, அவரை கடவுளின் பிரியமானவராகக் காட்டுகிறது. வலப்புறம் விவிலியத்தில் பல அர்த்தங்களைக் கொடுக்கும். இதற்கு ஆட்சியுரிமை என்ற அர்த்தமும் உள்ளது. δεξιός தெக்ட்ஸியோஸ் - வலம்


.20: சீடர்கள் இயேசு விரும்பியது போல, அனைத்து இடங்களிலும் நற்செய்தியை பறைசாற்றுகிறார்கள். இந்த செயற்பாடுதான் அனைத்து நற்செய்திகளுடைய இலக்காக உள்ளது. ஆண்டவரும் அவர் பங்கிற்கு, இவர்களோடு இருக்கிறார், அடையாளங்கள் வாயிலாக சீடர்களுடைய வார்த்தையை உறுதிப்படுத்துகிறார். ஆக இவர்களுடைய வார்த்தை கடவுளின் வார்த்தையாக மாறுகிறது



இயேசுவுடைய விண்ணேற்றம், மானிட வாழ்வின் இலக்கை காட்டுகிறது

கிறிஸ்துவின் மக்கள், விண்ணேற்றமடைய வேண்டிவர்கள்

அவர்களுடைய வாழ்வு விண்ணகத்தை நோக்கியதாக இருக்கவேண்டும்,

விவிலியத்தில் விண்ணேற்றம் அடைந்தவர்கள் அனைவரும்

ஆண்டவரின் ஆன்பர்களாக இருந்தவர்கள்

உலகில் வாழ்ந்தாலும்

விண்ணை சார்ந்தவர்களாக வாழ முடியும்



அன்பு ஆண்டவரே

என்னையும் உம்மை சார்ந்தவானக மாற்றும், ஆமென்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆண்டின் பொதுக்காலம் முப்பத்திநான்காம் வாரம் கிறிஸ்து அரசர் பெருவிழா:  Our Lord Jesus Christ, King of the Universe 24.11.2024

ஆண்டின் பொதுக்காலம் முப்பத்திநான்காம் வாரம்   கிறிஸ்து அரசர் பெருவிழா :  Our Lord Jesus Christ, King of the Universe 24.11.2024 இய...