பாஸ்காக் காலம் மூன்றாம் ஞாயிறு
18,04,2021
முதல் வாசகம்: திருத்தூதர் பணி 3,13-15.17-19
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 4
இரண்டாம் வாசகம்: 1யோவான் 2,1-5
நற்செய்தி: லூக்கா 24,35-48
திருத்தூதர் பணி 3,13-15.17-19
13ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, என்னும் நம் மூதாதையரின் கடவுள் தம் ஊழியர். இயேசுவைப் பெருமைப்படுத்தினார். ஆனால் நீங்கள் அவரைப் புறக்கணித்துப் பிலாத்திடம் ஒப்புவித்துவிட்டீர்கள். அவன் அவருக்கு விடுதலைத் தீர்ப்பு அளிக்க முயன்றபோதும் நீங்கள் அவரை மறுதலித்தீர்கள். 14நீங்கள் தூய்மையும் நேர்மையுbமானவரை மறுதலித்துக் கொலையாளியை விடுதலை செய்யுமாறு வேண்டிக்கொண்டீர்கள். 15வாழ்வுக்கு ஊற்றானவரை நீங்கள் கொன்றுவிட்டீர்கள். ஆனால் கடவுள் இறந்த அவரை உயிரோடு எழுப்பினார். இதற்கு நாங்கள் சாட்சிகள்.
17அன்பர்களே, நீங்களும் உங்கள் தலைவர்களும் அறியாமையினாலேயே இப்படிச் செய்துவிட்டீர்கள் என எனக்குத்தெரியும். 18ஆனால் கடவுள், தம் மெசியா துன்புறவேண்டும் என்று இறைவாக்கினர் அனைவர் வாயிலாகவும் முன்னறிவித்ததை இவ்வாறு நிறைவேற்றினார். 19எனவே உங்கள் பாவங்கள் போக்கப்படும்பொருட்டு மனம்மாறி அவரிடம் திரும்புங்கள்.
திருத்தூதர் பணிகள் நூலையும் நற்செய்தியாளர் லூக்காதான் எழுதினார் என்ற பல அக- புறச் சான்றுகள் உள்ளன. இந்த நூலை ஆரம்ப காலத்தில் தூய ஆவியாரின் நூல் என்றும் அழைத்தனர். திருத்தர்களின் பணிவாழ்வையும், ஆரம்ப கால திருச்சபையின் வரலாற்றையும் பற்றி விவரிக்கும் இந்த நூல் லூக்காவின் அழகிய கைவண்ணம் என்று சொல்லலாம். இந்த நூலில் இருபதிற்கும் மேற்பட்ட மறையுரைகள் காணப்படுகின்றன. இந்த மறையுரைகளைப் பற்றி பல ஆய்வுக்கட்டுரைகளும், ஆய்வு நூல்களும் வெளிவந்திருக்கின்றன. இதில் மரியொன் எல் சோர்ட்ஸ் எழுதிய 'திருத்தூதர் பணிகள் நூலின் உரைகள்' (The Speeches in Acts: Thier Content, Context, and Concerns: Kentucky 1994) என்ற புத்தகம் குறிப்பிடக்கூடியது.
சில ஆய்வாளர்கள் இந்த உரைகளை முழுக்க முழுக்க லூக்காவின்
இடைச்சொருகள்களே என்கின்றனர், ஆனால் இந்த உரைகளின் பின்புலத்தையும்,
இறையியலையும் வைத்துப் பார்க்கின்றபோது, இது இயேசுவின் சீடர்களான ஸ்தேவான், பேதுரு, பவுல், யாக்கோபு போன்றவர்களின் உண்மையான வார்த்தைகள் என்பதை பல ஆய்வாளர்கள் ஏற்றுக்கொள்ளும் அதேவேளை, அவை லூக்காவின் ஆதிக்கத்தை பெற்றுள்ளன என்பதை மறுக்கவில்லை. இன்றைய வாசகம் திருத்தூதர் பணிகள் நூலில் வருகின்ற முக்கியமான உரைகளில், இரண்டாவது உரையாகும். இங்கே பேசுகிறவர் பேதுரு, கேட்கிறவர்கள் அங்கே கூடியிருந்த மக்கள். இந்த உரை சாலமோன் மண்டபத்தின் வாயிலில் கால் ஊனமுற்றவரை பேதுரு குணமாக்கிய வேளை இடம்பெறுகிறது.
அக்கால கிரேக்க-உரோமைய அரசவை உரைகள் அல்லது மெய்யியல் உரைகளைப்போல இதுவும் ஒரு பிரதிவாத உரையாக அமைந்திருக்கிறது. இந்த உரைக்கு முன் பேதுரு செய்த அரும் அடையாளம் மற்றும் ஏற்கனவே அவர் ஆற்றியிருந்த உரை போன்றவை பல அபிமானிகளை ஆரம்ப கால கிறிஸ்தவர்களுக்கு உருவாக்கியிருக்கலாம்.
வவ.11-12: கால் சுகமடைந்தவர் அந்த வியப்பிலிருந்து வெளிவர முடியமால் பேதுருவையும் யோவானையும் பற்றிக் கொண்டிருக்கிறார். இதனைக் கண்ட மக்கள் அனைவரும் திகிலுற்று சாலமோன் மண்டபத்தில் ஒன்று கூடுகின்றனர்.
சாலமோன் மண்டபம் எருசலேம் ஆலயத்தின் கிழக்குவாயிலில் இருந்தது. மேற்கூரையைக் கொண்ட ஒரு வெளி மண்டபமாக அது இருந்தது. இதில் ஆலயத்திற்குள் செல்பவர்கள் ஓய்வெடுக்கவும், கதைத்துப்பேசவும் வசதியாக இருந்தது (Σολομῶντος ட்சொலொமோன்டொஸ்- சாலமோனுடைய). மக்கள் விசுவாசத்தினால் இங்கே கூடியதாக தெரியவில்லை, மாறாக அவர்கள் வியப்பினால் அங்கே கூடுகிறார்கள். விவிலிய வார்த்தையில் இந்த வியப்பு நேர்முகமாக நோக்கப்படாது (ἔκθαμβοι எக்தாம்பொய்- வியப்புற்றிருந்தனர்).
இவர்களுடைய வியப்பைப்பார்த்து பேதுரு மகிழ்ந்ததாக தெரியவில்லை. அவர் வியப்படையவேண்டாம் என்கிறார் (τί θαυμάζετε டி தௌமாட்செடெ- ஏன் நீங்கள் வியப்படைகிறீர்கள்). வியப்பு நம்பிக்கைக்கு எதிராக திரும்பும் என்பதை அப்போதே அவர் அறிந்திருக்கிறார் போல. இவர்களுடைய வியப்பு, பேதுரு செய்த அரும் அடையாளத்திற்கு தவறான அர்த்தத்தை கொடுத்துவிடும் என்பது அவர் பயம். அதாவது அவர்கள் பேதுருவையும் யோவானையும் மந்திரக்காரர்கள் என கணித்துவிடலாம், மந்திரவித்தைகளை யூத சமுதாயம் ஏற்றுக்கொள்ளாது என்பது பேதுருவிற்கு நன்கு தெரியும். வியப்பிற்கு மாற்றீடாக தான் சொல்லும் கதையைக் கேட்கச் சொல்கிறார்.
வ.13: கடவுளுக்கு பேதுரு பழைய பெயர் ஒன்றை முன்வைக்கிறார். கடவுளை அவர்கள் முன்னோரான ஆபிரகாம், ஈசாக்கு யாக்கோபின் கடவுள் என்கிறார் (ὁ θεὸς Ἀβραὰμ καὶ ὁ θεὸς⸌ Ἰσαὰκ καὶ ὁ θεὸς Ἰακώβ, ὁ θεὸς τῶν πατέρων ἡμῶν ஹொ தியூஸ் ஆப்ராம் காய் ஹொ தியூஸ் ஈசாக் காய் ஹொ தியூஸ் இயாகோப், ஹொ தியூஸ் டோன் பாடெரோன் ஹேமோன்- ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள், நம் தந்தையர்களின் கடவுள்). இந்த பெயர்
இவர்களுக்கு நன்கு பரீட்சித்தமானது. இந்த பெயரை சொல்வதன் மூலமாக, இஸ்ராயேலின் கடவுளின் திட்டத்தில்தான் இயேசு செயலாற்றினார் என வாதிடுகிறார்.
இயேசுவை இந்த கடவுளின் பணியாளர் எனவும் (παῖδα αὐτοῦ பாய்தா அவுடூ- அவர் பணியாளன்) அவரை கடவுள் மாட்சிப்படுத்தினார் (ἐδόξασεν எதொட்சாஸ்சென்- மாட்சிப்படுத்தினார்) எனவும் வாதிடுகிறார்.
கடவுளின் செயற்பாடுகள் இப்படியாக இருக்க, மக்கள் (இந்த இடத்தில் யூத மக்களை)
இயேசுவை புறக்கணித்து பிலாத்துவிடம் ஒப்புவித்ததாகச் குற்றம் சாட்டுகிறார். பிலாத்து இயேசுவின் மரணத்திற்கு நேரடியான காரணம் இல்லை என்பதை ஆரம்ப கால திருச்சபை வலுவாக ஆதரித்தது. சில வேளையில் பிலாத்துவை கொஞ்சம் நல்லவர் போலவும் காட்ட முயல்கிறது. வரலாற்றில் பிலாத்து நல்லவனாக இருந்ததாக தெரியவில்லை. யூதர்களுக்கு தலையிடி கொடுத்த ஆளுநர்களில் பிலாத்து மிக கடுமையானவனாக சித்தரிக்கப்பட்டுள்ளான். யூதர்களின் புறக்கணிப்பு செயலை முதன்மைப் படுத்த, பேதுரு பிலாத்துவை நல்லவன் போல காட்ட முயன்றிருக்கலாம்.
வ.14: தன் ஆண்டவர் இயேசுவை தூயவரும் நேர்மையானவரும் என்கிறார் பேதுரு. இது
இயேசுவிற்கான அக்கால பெயர்களில் ஒன்றாக இருந்திருக்கலாம் (ἅγιον καὶ δίκαιον ஹகியோன் காய் திகாய்யோன்- தூயவரும் நீதிமானும்).
இயேசுவிற்கு பதிலாக பிலாத்து விடுதலை செய்யவேண்டும் என்று கேட்ட இன்னொரு குற்றவாளியை, பேதுரு கொலைகாரன் என்கிறார் (ἄνδρα φονέα அந்த்ரா பொனெயா- கொலைகார மனிதன்). இந்த கொலைகாரனின் விடுதலைக்கு காரணம் பிலாத்தல்ல, மக்களே என்பது பேதுருவின் வாதம். பாஸ்கா விழாவில் குற்றவாளி ஒருவரை விடுதலை செய்வது எருசலேமில் உரோமையர்களின் வழக்கமாக இருந்திருக்கிறது. இந்த கொலைகாரனை பரபா என்று நற்செய்தி நூல்கள் குறிப்பிடுகின்றன. இவன் கலகத்தில் உரோமையர்களை தாக்கியிருக்கலாம், அல்லது உரோமையருக்கு சார்பாக வேலைசெய்ய யூதர்களை தாக்கியிருக்கலாம். உரோமைய இராணுவ வீரர்களை இவன் கொலைசெய்தானா என்பது தெரியவில்லை, அப்படியிருந்தால் அவனை நிச்சயமாக உரோமையர்கள் சிலுவையில் அறைந்து கொன்றிருப்பார்கள் என நம்பலாம். கொலைகாரர்களுக்கு உரோமையர்களின் தண்டனை கொடூரமாக இருந்தது (வரலாற்றில் உரோமையர்களும் கொடூரமான கொலையாளிகளே, தங்களை எதிர்த்தவர்களை அவர்கள் கொலை செய்தார்கள், அதனை உரோமைக்காக செய்ததாகச் சொல்கிறார்கள், இன்றைய பல அரசாங்கங்களைப்போல..).
வ.15: இயேசுவை வாழ்விற்கு ஊற்றான கடவுள் என்கிறார் பேதுரு (ἀρχηγὸν τῆς ζωῆς அர்கேகொன் டேஸ் ட்சோஏஸ் - வாழ்விற்கு உரியவர்). இருப்பினும் இவர் எழுப்பப்பட்டுவிட்டார் என்கிறார். இயேசுவை வாழ்விற்கு ஊற்றானவர் என்றும், அவரை கொலைசெய்வது கடவுளுக்கு எதிரான குற்றம் என்பதை பேதுரு காட்டுகிறார். யூத தலைமைத்துவம், இயேசுவை கொலை செய்ததை கடவுளுக்கு சார்பான செயலாக கருதியது, ஆனால் அது அப்படியில்லை என்பது பேதுருவின் வாதம்.
வ.16: இயேசு வாழ்விற்கு உரியவர் என்பதற்கு உதாரணமாக கால் சுகமான அந்த குறிப்பிட்ட நபரை உதாரணத்திற்க்கு எடுக்கிறார். இந்த நபர் யூதர்களுக்கு தெரிந்த நபர், இதனால் இயேசு செய்த அரும் அடையாளத்தை யாரும் மறுக்கமுடியாது. இந்த நபருக்கு சுகம் கொடுத்தது,
இயேசுவின் பெயர், அந்த பெயரில் நம்பிக்கை கொண்டதாலேயே அவர் இப்போது நடக்கிறார்.
ஒருவருடைய நலத்திற்கு அவர் இயேசுமேல் கொள்ளும் நம்பிக்கைதான் காரணம் என்பது தெளிவாகச் சொல்லப்படுகிறது. ஆரம்ப கால திருச்சபைக்கு இந்த அறிவுரை மிக முக்கியமாக தேவைப்பட்டிருக்கும்.
வ.17: யூத மக்களையும் அதன் தலைமைத்துவத்தையும் தண்டிப்பது கிறிஸ்தவத்தின் நோக்கம் அல்ல என்பதை வெகு தெளிவாகக் காட்டுகிறார் பேதுரு. ஆரம்ப கால திருச்சபை யூத மதத்திற்கு எதிரான போக்கை கடைப்பிடித்தது என்ற குற்றச்சாட்டை பொய்யாக்குகிறது இந்த வரி.
அறியாமைதான் அதிகமான தீமைகளுக்கு காரணம். யூத தலைமைத்துவம், தங்களுக்கு அனைத்தும் தெரியும் என்ற போக்கை கடைப்பிடித்தது, ஆனால் அவர்களுடைய அறியாமையால் ஒரு முக்கியமான பிழை நடந்துவிட்டது. அவர்கள் தங்கள் அறியாமையால் தமது ஆண்டவரையே கொலை செய்துவிட்டார்கள் (ἄγνοιαν ἐπράξατε அக்னொய்யான் எப்ராட்சாடெ- அறியாமையால்
இதனைச் செய்தீர்கள்) என்கிறார் பேதுரு. இருப்பினும் பேதுரு இவர்களின் அறியாமையை ஏற்றுக்கொள்கிறார் என்று எடுக்க வாய்ப்பில்லை.
வ.18: இயேசுதான் கடவுளின் மெசியா என்பதும், அவருடைய துன்பம் கடவுளுக்கு நன்கு தெரிந்த ஒன்றுதான் என்பதும் சொல்லப்படுகிறது (χριστὸν αὐτοῦ கிறிஸ்டொன் அவுடூ - அவர் மெசியா). கிறிஸ்டொஸ் என்ற இந்த கிரேக்கச் சொல் எபிரேய மெசியாவைக்குறிக்கிறது. இதற்கு அருட்பொழிவு செய்யப்பட்டவர் என்று பொருள்.
இயேசுவின் மரணம் தற்செயலான ஒன்றல்ல, இதனை கடவுள் ஏற்கனவே இறைவாக்கினர் வாயிலாக உரைத்திருக்கிறார் என்பதன் மூலம், இயேசுதான் முற்கால இறைவாக்கினர்கள் அறிவித்த மெசியா என்பது சொல்லப்படுகிறது.
வ.19: இயேசுவை கொலை செய்ததது ஒரு பாவம், மெசியாவை அறியாமல் இருந்தது இன்னொரு பாவம். இந்த பாவங்களை போக்க, அவர்கள் செய்யவேண்டியது, மனமாறுதல் ஒன்றே என்பது சொல்லப்படுகிறது. மனமாற்றல் என்பது ஆண்டவரிடம் திரும்புதல் என்பதையும் குறிக்கும். μετανοήσατε οὖν καὶ ἐπιστρέψατε மெடாநோசாடெ ஹுன் காய் எபிஸ்ட்ரெப்சாடெ- மனந்திரும்புங்கள் அதற்காக வாழ்வை மாற்றுங்கள். மனந்திரும்புதலுக்கு மெடானொய்யா என்ற சொல் பாவிக்கப்பட்டுள்ளது, இது இதயம் மனமாறுதலைக் குறிக்கும் (μετάνοια).
திருப்பாடல் 4
மாலை மன்றாட்டு
(பாடகர் தலைவர்க்கு: நரம்பிசைக் கருவிகளுடன்; தாவீதின் புகழ்ப்பா)
1எனக்கு நீதி அருள்கின்ற கடவுளே, நான் மன்றாடும்போது எனக்குப் பதிலளித்தருளும்;
நான் நெருக்கடியில் இருந்தபோது, நீர் எனக்குத் துணைபுரிந்தீர்; இப்போதும் எனக்கு இரங்கி,
என் வேண்டுதலுக்குச் செவிசாய்த்தருளும்;
2மானிடரே! எவ்வளவு காலம் எனக்குரிய மாட்சிக்கு இழுக்கைக் கொண்டு வருவீர்கள்?
எவ்வளவு காலம் வெறுமையை விரும்பிப் பொய்யானதை நாடிச் செல்வீர்கள்? (சேலா)
3ஆண்டவர் என்னைத் தம் அன்பனாகத் தேர்ந்தெடுத்துள்ளார்; நான் மன்றாடும் போது
அவர் எனக்குச் செவி சாய்க்கின்றார்; – இதை அறிந்துகொள்ளுங்கள்.
4சினமுற்றாலும் பாவம் செய்யாதிருங்கள்; படுக்கையில் உங்கள் உள்ளத்தோடு பேசி அமைதியாயிருங்கள். (சேலா)
5முறையான பலிகளைச் செலுத்துங்கள்; ஆண்டவரை நம்புங்கள்.
6‛நலமானதை எங்களுக்கு அருள யார் உளர்?' எனக் கேட்பவர் பலர். ஆண்டவரே, எங்கள்மீது உமது முகத்தின் ஒளி வீசும்படிச் செய்தருளும்.
7தானியமும் திராட்சையும் நன்கு விளையும் காலத்தில் அடையும் மகிழ்ச்சியைவிட மேலான மகிழ்ச்சியை நீர் என் உள்ளத்திற்கு அளித்தீர்.
8இனி, நான் மன அமைதியுடன் படுத்துறங்குவேன்; ஏனெனில், ஆண்டவரே, நான் தனிமையாயிருந்தாலும் நீரே என்னைப் பாதுகாப்புடன்
வாழச் செய்கின்றீர்.
திருப்பாடல் 4, ஒரு தனிமனித புலம்பல் பாடல் என அiயாளப்படுத்தப்படுகிறது. சில ஆய்வாளர்கள் இதனை ஒரு இரவு நேரத் திருப்பாடல் எனவும் வகைப்படுத்துகின்றனர். அத்தோடு தாவீது தன் மகன் அப்சலோமிடமிருந்து தப்பியோடியதை பின்புலமாகக் கொண்டிருக்கலாம் என்ற ஒரு பாரம்பரிய வாதமும் இருக்கிறது. அத்தோடு இங்கே அறுவடை காலத்தை பற்றியும் இந்த பாடல் குறிப்பிடுகின்ற படியால் இதனை ஒரு அறுவடை பாடல் என்றும் கணிக்கலாம். யோபு புத்தகத்தில் யோபு புலம்புவதைப் போலவும் இந்த திருப்பாடல் காட்சியளிக்கிறது.
வ.0: நரம்பிசைக் கருவிகளுடன் பாடகர் தலைவரின், தாவித்திற்கான பாடல் என தலைப்பு சொல்கிறது. இந்த தலைப்பு பிற்கால இணைப்பாக இருப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளது (לַמְנַצֵּחַ בִּנְגִינוֹת מִזְמוֹר לְדָוִֽד׃ லம்நாட்செஹ பின்கிநோத் மிட்ஸ்மோர் லெதாவித்).
வ.1: கடவுளை, தனக்கு நீதியருளுகின்ற கடவுள் என்கிறார். இது கடவுளுக்கான பெயர் போல தோன்றுகிறது (אֱלֹהֵי צִדְקִ֗י 'எலோஹி ட்சித்கி).
தான் நெருக்கடியில் இருந்தபோது தனக்கு இந்த கடவுள் துணைபுரிந்திருக்கிறார், இப்போதும் இதே கடவுள் தனக்கு இரங்கி செவிகொடுக்க வேண்டும் என மன்றாடுகிறார். இஸ்ராயேலரின் வேண்டுதல்களும், புலம்பல்களும் பழையகால நன்றி அனுபவங்களை மறப்பதில்லை என்பதற்கு இந்த பாடலும் நல்லதோர் உதராணம்.
வ.2: இந்த வரி பாடகர் தலைவரின் வரியா அல்லது கடவுளின் இடத்தில் இருந்து ஆசியர் கேட்கிறாரா என்று எண்ணத்தோன்றுகிறது. ஆசிரியரின் சொந்த வரியாக இருந்தால், ஆசிரியர் ஒரு சாதாரண மனிதராக இருக்க முடியாது. அவர் மக்கள் கூட்டத்தை அழைக்கிறபடியால் அவர் ஒரு தலைவராகவே இருக்க முடியும்.
இங்கே இவர் மக்கள் என்று அழைக்கிறவர்களை எபிரேய விவிலியம் மனிதர்களின் புதல்வர்கள் (בְּנֵי אִישׁ பெனி 'இஷ்) என்றழைக்கிறது. இவர்கள் ஆசிரியருடைய எதிரிகளாக
இருக்கலாம். இவர்களால் ஆசிரியருடைய பெயருக்கு களங்கம் ஏற்படுகிறது என எண்ணத்தோன்றுகிறது. ஆசிரியர் மாட்சிக்குரிய மனிதர் என்பதும் புலப்படுகிறது.
வ.3: தன் எதிரிகளுக்கு படிப்பினை ஒன்றை முன்வைக்கிறார். அதனை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என கட்டளையிடுகிறார் (דְע֗וּ தெ'ஊ- தெரிந்துகொள்ளுஙகள்).
ஆண்டவர் தன்னை தன் அன்பனாக தேர்ந்துள்ளார் என அறிக்கையிடுகிறார். அத்தோடு அவர் மன்றாடுகின்றபோது ஆண்டவர் நிச்சயமாக தனக்கு செவிசாய்ப்பார் என்கிறார். இதனை அவர் ஒரு எச்சரிக்கை போல முன்வைக்கிறார். இப்படியாக இவருக்கு எதிராக இவர் எதிரிகள் செய்யும் பாவங்கள் தண்டிக்காது விடப்படா என்று சொல்கிறார்.
வ.4: பாவத்திற்கான காரணம் கட்டுப்படுத்தப்பட முடியாத கோபமே என்று அன்றே அறிந்து வைத்திருக்கிறார். இதனால்தான் சினமுற்றாலும் பாவம் செய்ய வேண்டாம் என்கிறார். சினமுறுவது மனித இயல்பு, பாவம் செய்வது மனித இயல்பல்ல அதனை நிச்சயமாக கட்டுப்படுத்த முடியும் என்ற ஒரு நம்பிக்கை தெரிகிறது. (רִגְז֗וּ וְֽאַל־תֶּ֫חֱטָאוּ ரிக்ட்சூ வெ'அல்-தெஹெதா'ஊ- சினமுற்றாலும் பாவம் செய்யாதிருங்கள்).
படுக்கையில் உள்ளத்தோடு பேசச் சொல்கிறார். எபிரேயர்கள் படுக்கையிலும் தியானம் செய்யக்கூடியவர்கள் என்பதை இந்த வரியின் பிரிவு காட்டுகிறது. படுக்கையில் தீயனவற்றைப் பற்றி சிந்திக்காமல், நல்லதை சிந்தித்தால் மன அமைதி வரும் என்பதும் புலப்படுகிறது. மன அமைதி என்பதற்கு இதயத்தில அமைதி என்று எபிரேயம் காட்டுகிறது (אִמְרוּ בִלְבַבְכֶם 'இம்ரூ வில்வாவ்கெம்- உங்கள் இதயத்திற்கு சொல்லுங்கள்). அமைதியாக இருந்தால் (דֹמּוּ தோம்மூ- அமைதியாக இருங்கள்) அதிகமான பாவங்கள் தவிர்க்கப்படும் என்பதும் காட்டப்பட்டுள்ளது.
வ.5: முறையான பலிகளை செலுத்தச் சொல்கிறார், இதனை கடவுளை நம்புதல் என்று மீளச் சொல்கிறார். முறையான பலி என்பது உண்மையான விசுவாசமே என்ற ஆன்மீகம் இந்த வரியில் தெரிகிறது (זִבְחוּ זִבְחֵי־צֶדֶק ட்சிவ்ஹு ட்சிவ்ஹெ-ட்செதெக் முறையான பலிகளைச் செலுத்துங்கள்).
இறைநம்பிக்கையில்லாமல் செலுத்தப்படும் பலிகளால் எந்த பயனும் இல்லை என்பது நன்றாகச் சொல்லப்படுகிறது.
வ.6: வாழ்வின் சவால்களை சந்திக்கின்ற மனிதர்களுடைய மிக முக்கியமான கேள்விகளில் ஒன்று, நலமானதை தருகிறவர் யார் என்ற கேள்வி. யாரும் நலமானதை செய்யவில்லை அல்லது கடவுள் தங்களை கவனிக்கவில்லை என்ற விரக்தியும் பலருடைய பாவ வாழ்க்கைக்கு காரணமாகிவிடலாம் என்று அறிந்திவைத்திருக்கிறார். இதனை சரிப்படுத்த, ஆண்டவரை தன்னுடைய திருமுக ஒளியை மக்கள் மேல் வீசக் கேட்கிறார்.
திருமுக ஒளி கடவுளின் முகத்தை குறிக்க பயன்படுகின்ற ஒரு ஒத்த கருத்து வார்த்தை பிரயோகம். கடவுளுடைய முகம் பிரகாசமாக இருக்கும் என்று நம்பியதால் அதனை திருமுக ஒளி என நம்பினார்கள் (אוֹר פָּנֶיךָ 'ஓர் பாலெகா- உம் திருமுக ஒளி).
வ.7: விளைச்சல் காலத்தில், விவசாயிகள் மிகவும் மகிழ்வார்கள். அவர்களுடைய கடின உழைப்பின் பயனை அவர்கள் பார்க்கின்றபோதும், பலவிதமான ஆபத்துக்கள் மற்றும் இயற்கை அழிவுகளிடமிருந்து பயிர் காக்கப்பட்டு அறுவடையாக வருகின்ற போதும் கிடைக்கும் உணர்வு மகிவும் இனிமையான உணர்வு. இஸ்ராயேல் நாட்டின் முக்கிய பயிர்களான தானிய வகைகளும், திராட்சை கொடிகளும் மிகவும் பாதுகாக்கப்பட்டன.
சாதாரண மக்கள் இயற்கையாக அறுவடை காலத்தில் மகிழ்வார்கள் அதனைவிட ஆண்டவரின் அன்பர்களின் மகிழ்வு, ஆண்டவரில் மிகுதியாக இருக்கும் என்பது ஆசிரியரின் வாதம். ஆண்டவர்தான் உள்ளத்திற்கு மேலான மகிழ்சியை தருகிறார், இவ்வுலக செல்வம் அல்ல என சாற்றுகிறார் (נָתַתָּה שִׂמְחָה בְלִבִּי நாதாதாஹ் ஷிம்ஹாஹ் வெல்வி- என் இதயத்திற்கு நீர் மகிழ்ச்சியை தருகின்றீர்).
வ.8: இந்த வரியைக் கொண்டுதான் இந்த திருப்பாடல் ஓர் இரவுநேர பாடல் என நம்பப்படுகிறது.
இருப்பினும் இந்த வாதத்தை முழுமையாக ஏற்றுக்கொள்ளவேண்டிய தேவையில்லை, ஏனெனில்
இப்படியான பாடல்களை பகலிலும் பாடலாம்.
ஆண்டவர் மகிழ்ச்சி தருகிறார் என்ற நம்பிக்கையில் இனி அவர் மன அமைதியுடன் படுத்துறங்குவார் என்கிறார். ஆசிரியர் தனிமையாக இருப்பது போன்ற உணர்வை பதிவு செய்கிறார். அத்தோடு ஆண்டவர் இவரை பாதுகாக்கிறார் என்றும் சொல்கிறார்.
בְּשָׁלוֹם יַחְדָּו֮ אֶשְׁכְּבָה וְאִ֫ישָׁן பெஷாலோம் யஹ்தூவ் 'எஷ்கெவாஹ் வெ'இஷான்- அமைதியில் படுத்து உறங்குவேன்.
1யோவான் 2,1-5
1என் பிள்ளைகளே, நீங்கள் பாவம் செய்யாதிருக்க வேண்டும் என இதை நான் உங்களுக்கு எழுதுகிறேன்; ஆயினும் ஒருவர் பாவம் செய்ய நேர்ந்தால் தந்தையிடம் பரிந்து பேசுபவர் ஒருவர் நமக்கு இருக்கிறார். அவரே மாசற்ற இயேசு கிறிஸ்து. 2நம் பாவங்களுக்குக் கழுவாய் அவரே நம் பாவங்களுக்கு மட்டும் அல்ல, அனைத்துலகின் பாவங்களுக்கும் கழுவாய் அவரே.
புதிய கட்டளை
3அவருடைய கட்டளைகளை நாம் கடைப்பிடித்தால் நாம் அவரை அறிந்து கொண்டோம் என்பது உறுதியாகத் தெரியும். 4'அவரை எனக்குத் தெரியும்' எனச் சொல்லிக் கொண்டு அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்காதோர் பொய்யர்; உண்மை அவர்களிடம் இராது. 5ஆனால் அவரது வார்த்தையைக் கடைப்பிடிப்போரிடம் கடவுளின் அன்பு உண்மையாகவே நிறைவடைகிறது; நாம் அவரோடு இணைந்து இருக்கிறோம் என அதனால் அறிந்துகொள்ளலாம். 6அவரோடு இணைந்திருப்பதாகக் கூறுவோர் அவர் வாழ்ந்தவாறே வாழக் கடமைப்பட்டவர்கள்.
யோவான் தன்னுடைய வாசகர்களை பிள்ளைகளே என்று அழைக்கிறார் (Τεκνία μου டெக்னியா மூ- என் பிள்ளைகளே). இது யோவானுக்கும் அவர் வாசகர்களுக்கும் இடையிலான ஆழமான உறவைக் காட்டுகிறது. இந்த வார்த்தைகளை ஆராய்கின்றபோது ஆசிரியர் ஒரு முதிய மறைபணியாளராக இருக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகின்றது. அத்தோடு இவருடைய வரிகள், இவரை ஆண்டவர் இயேசுவிற்கு மிக நெருக்கமாக வாழ்ந்தவர் என்ற காட்சியையும் முன்வைக்கிறது.
யோவான் மூன்று திருமுகங்களை எழுதினார் என்று நம்பப்படுகிறது. இவற்றை திருமுகங்கள் என்று பாரம்பரியமாக ஏற்றாலும், திருமுகத்திற்கு இருக்கவேண்டிய அனுப்புகிறவரின் பெயரும், அவரின் கையெழுத்தும் இவற்றில் காணப்படவில்லை. இதனை விட திருமுகங்களுக்கு இருக்கவேண்டிய பல அக அம்சங்களும் இவற்றில் இல்லை, இதனால் இவற்றை திருமுகங்கள் என்பது ஒரு மரியாதை வகைப்படுத்தல் என்றே சில ஆய்வாளர்கள் கருதுகின்றார்கள். ஆனால் இதனை மறையுரைகள் தொகுப்பாக காண்வது பலவித்தில் பொருத்தமாக இருக்கலாம். யோவானுடைய திருமுகங்கள் ஒரு குறிப்பிட்ட திருச்சபைக்கு எழுதப்படவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.
ஆரம்ப காலத்திலிருந்து யோவான் திருமுகங்களின் ஆசிரியர் திருத்தூதர் யோவான்தான் என்பதில் மாற்றுக்கருத்துக்கள் இருந்திருக்கவில்லை. இவரைவிட வேறு எவரும் இதன் ஆசிரியத்துவத்திற்கு பரிந்துரைக்கப்படவில்லை. பல இடங்கள் ஆசிரியர் ஆண்டவரின் வாழ்வின் நேரடி சாடச்சியம் என்கிறார் (காண்க 1யோவான் 1,1-3). அத்தோடு மொழியியலிலும், வார்த்தை பிரயோகத்திலும் இவை நான்காம் நற்செய்தியை ஒத்திருக்கின்றன. இதனால்தான் யோவான் நற்செய்தியின் ஆசிரியர்தான் இதன் ஆசிரியர் என எண்ணத்தோன்றுகிறது. இந்த எண்ணக் கருத்தை அனைத்து ஆய்வாளர்களும் ஏற்றுக்கொள்வதாக இல்லை. சிலர், இந்த திருமுகங்களின் ஆசிரியர் யோவானின் சீடர்களில் ஒருவர் என்கின்றனர்: வேறுசிலர், இவர் யோவானின் இறையியல் சிந்தனையில் வளர்ந்த ஒருவர் என்கின்றனர். அத்தோடு யோவான் நற்செய்தியும், திருமுகங்களும்
இறையியலில் பல மாற்றங்களை கொண்டுள்ளன என்பதையும் கோடிட்டுக் காட்டுகின்றனர்.
றேமன் பிரவுன் (Raymond E. Brown) என்ற தலைசிறந்த யோவான் புத்தகங்களின் ஆய்வாளர், இவை ஒரு ஆசிரியருடையதாகவும், வேறு காலத்தில் எழுதப்பட்டதாகவும் இருக்கலாம் என்று தன்னுடைய ஒரு சிந்தனையை முன்வைக்கிறார். திருமுகத்தில் எந்த இடத்திலும் ஆசிரியர் தன்னை யோவான் எனவோ, திருத்தூதர் எனவோ காட்டுவதை தவிர்த்துவிட்டார், இது அவருடைய எளிமையாகவும் இருக்கலாம். இருப்பினும், நமக்கு தெரிந்த ஆசிரியர்களில் யோவானைத் தவிர வேறு எவரும் இந்த திருமுகங்களின் ஆசிரியத்துவத்திற்கு பொருந்துவதாக தெரியவில்லை.
வ.1: பாவத்தைப் பற்றி பேசுகிறார் யோவான். பாவம் செய்யாதிருக்கவே இவற்றை எழுதுவதாக யோவான் சொல்கிறார். இந்த இடத்தில் தன் வாசகர்களை பிள்ளைகளே என விழிக்கிறார்.
(Τεκνία μου டெக்னிய மூ- என் சிறுபிள்ளைகளே), இதன் மூலம் திருச்சபையில் உள்ளவர்கள் ஆசிரியரின் விசேட அன்பைப் பெற்றவர்கள் என்பது காட்டப்படுகிறது.
பாவம் செய்யாதிருக்கவே என்ற சொல்லிற்கு கிரேக்க மூல மொழி ஒருவகையாக இறந்த கால வினைச் சொல்லை பாவிக்கிறது (μὴ ἁμάρτητε மே அமார்டேடே- பாவம் செய்யாதிருந்திருப்பீர்களாக), இதனால் சில ஆய்வாளர்கள், யோவான் கடந்த கால பாவத்தை பற்றி பேசுவதாகச் சொல்கிறனர். வேறு சிலர் இது நிகழ்கால் மற்றம் எதிர்கால பாவத்தைப் பற்றியது என வாதிடுகின்றனர். எபிரேய சிந்தனைகளை கிரேக்க சொற்களில் இடும் போது இப்படியான சிக்கல்கள் வரலாம், அதேவேளை திருமுகத்தின் அகக் காரணிகளை நோக்கும் போது இது இறந்தகாலத்திற்கு மட்டும் உரிய போதனை போலத் தோன்றவில்லை.
ஒருவர் பாவம் செய்தால் அவருக்காக ஒருவர் பரிந்துபேச இருக்கிறார் அவர்தான் இயேசு என்கிறார். பரிந்து பேசுகிறவருக்கு புதிய ஏற்பாடடு பாராக்லேடொஸ் (παράκλητος) என்ற சொல்லை பயன்படுத்துகிறது. வழமையாக இந்த சொல் தூய ஆவியாருக்குத்தான் புதிய ஏற்பாட்டில் பயன்படுத்தப்படும், இந்த இடத்தில் அரிதாக இது இயேசுவிற்கு பயன்படுத்தப்படுகிறது. ஏன் தூய ஆவியாரின் சொல் இயேசுவிற்கு பயன்படுகிறது என்பதற்கு பல வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. இயேசுவும் பரிந்துபேசும் பணியைச் செய்யக்கூடியவர் என்பதைக் காட்டவே இந்த சொல் பயன்பட்டுள்ளது என்று ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது. இயேசு சில இடங்களில் இந்த பரிந்து பேசும் பணியை செய்தாலும் (காண்க உரோமையர் 8,34), அவரும் தூய ஆவியைத்தான் பரிந்து பேசுகிறவர் என்கிறார் (காண்க யோவான் 14,16).
இறுதியாக இயேசுவை நீதிமான் என்வும் பெயரிடுகிறார் Ιησοῦν Χριστὸν δίκαιον· ஈயேசூன் கிறிஸ்டொன் திகாய்யொன்- இயேசு கிறிஸ்து நீதிமான்.
வ.2: இயேசு அனைத்துலகின் பாவங்களுக்கான கழுவாய் என காட்டப்படுகிறார். கழுவாய் என்பதற்கு ஹிலாஸ்மொஸ் (ἱλασμός) என்ற கிரேக்கச் சொல் பாவிக்க்பபட்டுள்ளது. இதற்கு பரிகாரம், நிவிர்த்தி, என்று பல அர்தங்களைக் கொடுக்கலாம்.
முதல் ஏற்பாட்டு பின்னணியில் பாவ பரிகாரப் பலிக்காக ஆடு ஒன்று பலியிடப்பட்டது, இந்த ஆட்டின் இரத்தினால் ஒப்புக்கொடுப்பவரின் பாவமும், மற்றவர்களின் பாவமும் கழுவப்பட்டது, அத்தோடு கடவுளின் கோபமும் மாற்றியமைக்கப்பட்டது. இப்போது இங்கே உண்மையான கழுவாயாக இயேசு முன்வருகிறார்.
வ.3: ஆண்டவருடைய கட்டளையை செயற்படுத்துதல் என்பது ஆண்டவரை அறிந்துகொள்ளுதலாகும் என்கிறார் யோவான். இந்த வாதம் யோவான் நற்செய்தியிலும் முன்வைக்கப்படுகிறது. ஆண்டவரின் மக்கள் என்போர், அவர் கட்டளைகளைக் கடைப்பிடிப்போர் ஆகின்றனர். இதன் மூலமாக ஆண்டவருடைய கட்டளைகளை கடைப்பிடியாதோர் அவரை அறியாதவர்கள் என்பது சொல்லப்படுகிறது.
வ.4: மேற்சொன்ன கருத்து இந்த வரியில் உறுதிப்படுத்தப்படுகிறது. யார் பொய்யர் என்பதை தெளிவாக காட்டுகிறார் யோவான். ஆண்டவரை தெரியும் என்று சொல்லிக்கொண்டு அவர் கட்டளைகளைக் கடைப்பிடிக்காதோர் பொய்யர் (ἔγνωκα αὐτὸν καὶ τὰς ἐντολὰς αὐτοῦ μὴ τηρῶν ψεύστης ἐστίν எக்னோகா அவ்டொன் காய் டாஸ் என்டெலாஸ் அவுடூ மே டேரோன் ஹுப்டேஸ் எஸ்டின்- அவர் கட்டளைகளை கடைப்பிடியாதோர் பொய்யர்). இவர்களிடம் உண்மையில்லை என்பதும் சொல்லப்படுகிறது.
இங்கே சாட்டப்படுகிறவர்கள் யார் என்பது தெளிவாக தெரியவில்லை. யோவானின் திருச்சபையில் பிரிவினையை உருவாக்கிய கிறிஸ்தவர்களாகவோ அல்லது கிறிஸ்தவ திருச்சபையை துன்புறுத்திய ஒரு சில யூதர்களாக இவர்கள் இருக்கலாம். உண்மை
இவர்களிடம் இல்லை என்பதன் மூலம், இவர்களின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என யோவான் வாதிடுகிறார்.
வ.5: இவர்களுக்கு எதிர்மாறாக கிறிஸ்தவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை இந்த வரியில் காட்டுகிறார். இவர்கள் கடவுளது வார்த்தையை கடைப்பிடிப்போர் (τηρῇ αὐτοῦ τὸν λόγον டேரே அவுடூ டொன் லொகொன்- அவர் வார்த்தைகளை கடைப்பிடிப்போர்), அவர்களிடம் கடவுளின் அன்பு உண்மையாகவே உள்ளது (ἀγάπη τοῦ θεοῦ τετελείωται அகாபே டூ தியூ டெடெலெய்யோடாய்), அத்தோடு அவர்கள் கடவுளோடு இணைந்திருக்கிறார்கள்.
லூக்கா 24,35-48
35அவர்கள் வழியில் நிகழ்ந்தவற்றையும் அவர் அப்பத்தைப் பிட்டுக் கொடுக்கும்போது அவரைக் கண்டுணர்ந்துகொண்டதையும் அங்கிருந்தவர்களுக்கு எடுத்துரைத்தார்கள்.
இயேசு சீடர்களுக்குத் தோன்றுதல்
(மத் 28:16-20; மாற் 16:14-18; யோவா 20:19-23; திப 1:6-8)
36சீடர்கள் இவ்வாறு பேசிக்கொண்டிருந்தபோது இயேசு அவர்கள் நடுவில் நின்று, 'உங்களுக்கு அமைதி உரித்தாகுக!' என்று அவர்களை வாழ்த்தினார். 37அவர்கள் திகிலுற்று, அச்சம் நிறைந்தவர்களாய், ஓர் ஆவியைக் காண்பதாய் நினைத்தார்கள். 38அதற்கு அவர், 'நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்? ஏன் இவ்வாறு உங்கள் உள்ளத்தில் ஐயம் கொள்ளுகிறீர்கள்? 39என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், நானே தான். என்னைத் தொட்டுப் பாருங்கள்; எனக்கு எலும்பும் சதையும் இருப்பதைக் காண்கிறீர்களே; இவை ஆவிக்குக் கிடையாதே' என்று அவர்களிடம் கூறினார்; 40இப்படிச் சொல்லித் தம் கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார். 41அவர்களோ மகிழ்ச்சி மேலிட்டு, நம்பமுடியாதவர்களாய், வியப்புக்குள்ளாகி இருந்தார்கள். அப்போது அவர் அவர்களிடம், 'உண்பதற்கு இங்கே உங்களிடம் ஏதேனும் உண்டா?' என்று கேட்டார். 42அவர்கள் வேக வைத்த மீன்துண்டு ஒன்றை அவரிடம் கொடுத்தார்கள். 43அதை அவர் எடுத்து அவர்கள்முன் அமர்ந்து உண்டார்.
44பின்பு அவர் அவர்களைப் பார்த்து, 'மோசேயின் சட்டத்திலும் இறைவாக்கினர் நூல்களிலும் திருப்பாடல்களிலும் என்னைப் பற்றி எழுதப்பட்டுள்ள அனைத்தும் நிறைவேற வேண்டும் என்று நான் உங்களோடு இருந்தபோதே உங்களுக்குச் சொல்லியிருந்தேனே' என்றார்; 45அப்போது மறைநூலைப் புரிந்து கொள்ளுமாறு அவர்களுடைய மனக்கண்களைத் திறந்தார். 46அவர் அவர்களிடம், 'மெசியா துன்புற்று இறந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழ வேண்டும் என்றும், 47'பாவமன்னிப்புப் பெற மனம் மாறுங்கள்' என எருசலேம் தொடங்கி அனைத்து நாடுகளிலும் அவருடைய பெயரால் பறைசாற்றப்படவேண்டும் என்றும் எழுதியுள்ளது. 48இவற்றுக்கு நீங்கள் சாட்சிகள்.
எம்மாவு வழியில் சீடர்களை சந்தித்தல் நிகழ்வு லூக்கா நற்செய்தியில் மிக முக்கியமான ஓரு நிகழ்வு, அந்த நிகழ்விற்கு பின்னர் சீடர்களுடைய பார்வையில் மாற்றம் ஏற்படுகின்றது.
இன்றைய நற்செய்தி எம்மாவு நிகழ்விற்கு பின்னர் இயேசு தொடர்ச்சியாக தன் சீடர்களுக்கு தோன்றியது பற்றி காட்சிப்படுத்துகிறது.
வ.35: எம்மாவு வழியில் இயேசுவை சந்தித்த அந்த இரண்டு சீடர்களும் தங்கள் பயணத்தை நிறுத்திக்கொண்டு எருசலேமிற்குள் திரும்புகின்றனர். வழியில் அவர்கள் சந்தித்த அந்த மனிதர் ஒரு பயணி அல்ல மாறாக அவர் தங்கள் ஆண்டவர் இயேசு என்பதை அவர்கள் கண்டு கொண்டார்கள். இயேசு இறக்கவில்லை மாறாக அவர் உயிர்பெற்று எழுந்துவிட்டார் என்பதை அவர்கள்அறிக்கையிடஆயத்தமாகின்றார்கள். இயேசு அப்பத்தை பிட்டுக்கொடுக்கும் போதுதான் அவரை இவர்கள் கண்டுகொண்டது ஒரு அடையாள நிகழ்வு இதனை அவர்கள் தங்களுடைய சகாக்களுக்கு அறிவிக்கிறார்க்ள.
வ.36: இவர்கள் தங்களுக்கு நடந்ததை பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது இயேசு அவர்களுக்கு நடுவில் தோன்றுகிறார். இவர்கள் இரவோடு இரவாக எருசலேமிற்குள் திரும்பியிருக்க வேண்டும். மெதுவாக எம்மாவு நோக்கி பயணித்த இவர்கள் விரைவாக எருசலேமை வந்தடைந்திருக்கிறார்கள் எனலாம்.
இயேசு இவர்கள் மத்தியில் தோன்றி இவர்களுக் 'அமைதி உண்டாகுக' என வாழ்த்துகிறார் (εἰρήνη ὑμῖν எய்ரேனே ஹுமின்). அமைதி இந்த நாட்களில் இவர்களுக்கு மிகவும் தேவைப்பட்டது. பல காரணிகளாலும், யூத மற்றும் உரோமய தலைமைத்துவத்தின் கெடுபிடிகளாலும் இவர்கள் அமைதியை இழந்திருந்தார்கள். இதனால் இயேசு இவர்களுக்கு நிச்சயமாக தேவையான ஒன்றைத்தான் கொடுக்கிறார்.
வ.37: இயேசுவுடைய வருகையை எதிர்பார்த்திராத இவர்கள் ஆவியை காண்பது போல நினைக்கிறார்கள். இயேசு தான் வாழ்ந்த காலத்தில் தன்னுடைய உயிர்ப்பை பற்றி அறிவித்திருந்தாலும், இவர்களுடைய திகைப்பு, அதனை இவர்கள் புரிந்துகொள்ளவில்லை என்பதைக் காட்டுகிறது.
வ.38: இவர்களுடைய கலக்கத்தை இயேசு ஏற்றுக்கொள்ளவில்லை அதனை அவர் மெதுவாக சாடுகிறார். இவர்களின் கலக்கத்தை அவர் ஐயமாக பார்க்கிறார். சீடர்களுக்கு அது உகந்ததல்ல என்பது போல் அவர் போதனை இருக்கிறது.
கலக்கமும் ஐயமும் இந்த வரியில் எதிர்மறையான பண்புகளை சுட்டிக்காட்டுகின்றன (τί τεταραγμένοι டி டெடாராக்மெனொய் - ஏன் கலங்குகிறீர்கள்: τί διαλογισμοὶ டி தியாலொகிஸ்மொய் - ஏன் ஐயம் கொள்கிறீர்கள்). ஐயம் இதயத்தில் எழுகிறது என்பதை கிரேக்க விவிலியம் காட்டுகிறது. ஆக இது அறிவு என்பதைவிட, உணர்வு போல தோன்றுகிறது.
வ.39: இயேசு தன் கைகளையும் கால்களையும் காட்டுகிறார், அதாவது தன் சதையையும் எலும்பையும் காட்டுகிறார் (σάρκα καὶ ὀστέα சார்கா காய் ஹொஸ்டியா - சதையும் எலும்பும்). ஆவிக்கு சதையும் எலும்பும் இல்லை என்கிறார் இயேசு. ஆவி பற்றிய கதைகள் அக்காலத்திலேயே இருந்திருக்க வேண்டும். ஆவிகளுக்கு சதையும் எலும்பும் இல்லை என்றும் அவர்கள் நம்பியிருந்திருக்க வேண்டும். இதனைத்தான் இயேசுவும் சுட்டிக்காட்டுகிறார்.
ஆவிகள் என்பன (πνεῦμα புனுமா-ஆவி) வெறும் அசைவுகள், அத்தோடு அனைத்து
இடத்தினுள்ளும் செல்லக்கூடியவை என்றும் அவர்கள் நம்பியிருந்திருக்கிறார்கள். இயேசு ஆவியாக
இருந்தால் அவரால் மூடியிருந்த அறைக்குள் வர முடியும். இதனை இல்லாமல் செய்யவே இயேசு தன் உடலைக் காட்டுகிறார் எனலாம்.
வ.40: சொன்னது மட்டுமல்ல தன் கைகளையும் கால்களையும் அவர் காட்டுகிறார். இப்படியாக அவர் ஆவியில்லை என்ற முதலாவது ஆய்வு நம்பப்படுகிறது.
வ.41: இயேசுவின் இந்த காட்சி அவர்களை மகிழ்;ச்சிக்கும், வியப்பிற்கும் உள்ளாக்குகின்றது.
இருப்பினும் அவர்கள் நம்ப முடியாதவர்களாகவே இருந்தார்கள் (ἀπιστούντων καὶ θαυμαζόντων அபிஸ்டொயுன்டோன் காய் தௌமாட்சொன்டோன்- நம்பாதவர்களாகவும் ஆச்சரியத்தடனும்
இருந்தார்கள்). இதனால் இயேசு இரண்டாது நிலைக்கு செல்கிறார்.
ஆவிகளால் உண்ண முடியாது இயேசு தான் ஆவி இல்லை என்பதைக் காட்ட உண்ண முன் வருகிறார். உண்பதற்கு எதாவது கேடக்கிறார். உயிர்த்த உடலால் உண்ண முடியுமா? ஆவிக்குரிய உணவிற்கும் உயிர்த்த உடலுக்கும் என்ன வித்தியாசம்? போன்ற பல கேள்விகள்
இங்கே எழலாம். இயேசு இங்கே உண்ண முயற்சிப்பது, அவர் ஆவியில்லை என்பதை காட்டவே என எடுக்கலாம், மாறாக உயிர்த்த உடலுக்கு உண்ண வேண்டிய தேவையில்லை.
விவிலியத்தில் சில இடங்களில் ஆண்டவரின் தூதர்கள் உணவு எடுக்க மறுத்திருக்கிறார்கள் (காண்க: யூதித் 13,16: தோபித்து12,19), சில இடங்களில் உணவு கேட்டும் இருக்கிறார்கள் (காண்க தொ.நூல் 18,8: 19,3: தோபித்து 6,6).
வவ.43-44: இயேசுவிற்கு வேகவைத்த மீன்துண்டு ஒன்று கொடுக்கப்படுகிறது, இயேசு அதனை அவர்கள் முன் உண்கிறார். இதில் பல செயற்பாடுகள் அவதானிக்கப்படவேண்டும். முதலில் அவர்கள் மீனைக் கொடுக்கிறார்கள், அதாவது அவர்களும் அடையாளத்தை எதிர்பார்க்கிறார்கள் போல. அவரும் அவர்கள் முன்னிலையில் தான் அதனை உண்கிறார். அவர்கள் அதனை பார்க்க வேண்டும் என அவர் விரும்பியிருக்கலாம் (λαβὼν ἐνώπιον αὐτῶν ἔφαγεν⸃. லாபோன் எனோபியொன் அவ்டோன் எகாகென்- எடுத்து அவர்கள் முன் உண்டார்). மீன் அவர்களின் சாதாரண உணவாக இருந்ததால் அதனை கேட்கிறார் என எடுக்கலாம்.
வ.45: மோசேயுடைய சட்டமும், இறைவாக்கினருடைய இறைவாக்குகளும் இஸ்ராயேல்-யூத மக்களுக்கு மிகவும் முக்கியமான விவிலிய படிப்பினையாக இருந்தது. இதனையே அவர்கள் தங்கள் வாழ்வின் அடிப்படையாக கொண்டிருந்தார்க்ள. மெசியா சட்டத்தையும் இறைவாக்கையும் பின்பற்றியே வர வேண்டும் என நம்பியிருப்பார்கள். இயேசு இங்கே திருப்பாடலையும் இன்னொரு பிரிவாக அதனுள் உள்ளடக்கிவிட்டார்.
இவைகள் நிறைவேற வேண்டும், அதனைப் பற்றி தான் ஏற்கனவே சொல்லியிருந்ததாகவும் சொல்கிறார் (νόμῳ Μωϋσέως καὶ ⸀τοῖς προφήταις καὶ ψαλμοῖς நொமோ மோவுசெயோஸ் காய் டொய்ஸ் புரொபேடாய்ஸ் காய் ப்சால்மொய்ஸ்- மோசேயின் சட்டத்திலும், இறைவாக்கிலும், திருப்பாடலிலும்).
வ.46: எம்மாவு வழியில் அந்த இரண்டு சீடர்களின் கண்கள் திறந்தது போல் இங்கே இருந்த அனைவருடைய கண்களையும் இயேசு திறக்கிறார். இதிலிருந்து இவர்கள் கண்கள் (மனக்கண்கள்) மூடியிருந்தது என்பது சொல்லப்படுகிறது, அத்தோடு அதனை திறந்தவர் இயேசுhன் என்பதும் சொல்லப்படுகிறது.
வவ.47-48: இயேசு இவர்களுக்கு மிக முக்கியமான படிப்பினைகள் சிலவற்றை மேலும் பலமாக முன்வைக்கிறார்.
அ. மெசியா துன்புற்று இறந்து மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்பட வேண்டும் - மெசியா துன்புற்று இறந்து உயிர்க்க வேண்டும் என்பதை இவர்கள் நம்பாமல் இருந்திருக்கலாம்.
ஆ. பாவ மன்னிப்பு பெற மனமாற்றம் பெற வேண்டும் - பாவமன்னிப்பு என்பது உடனடியாக கிடைப்பதல்ல, அதற்கு மனமாற்றம் தேவை.
இ. இந்தச் செய்தி எருசலேம் தொடங்கி அனைத்து நாடுகளுக்கும் இயேசு பெயரால் சொல்லப்பட வேண்டும்.
இவையனைத்தும் எழுதப்பட்டடுள்ளது என்கிறார் (γέγραπται கெக்ராப்டாய் - எழுதப்பட்டுள்ளது). இதன் மூலம் இவை இயேசுவுடைய கண்டுபிடிப்பல்ல மாறாக ஏற்கனவே வரலாற்றில் இருந்தது என்பது காட்டப்படுகிறது.
வ.48: இவற்றிக்கு இந்த திருத்தூதர்கள் சாட்சிகள் ஆகிறார்கள் (ὑμεῖς μάρτυρες ஹுமெய்ஸ் மார்டுரெஸ்-நீங்கள் சாட்சிகள்).
சாட்சிகளுக்கு மார்டுரெஸ் என்ற சொல் பாவிக்கப்பட்டுள்ளது, இதுதான் பிற்கால மறைசாட்சியரின் சொல்லாக மாறியது. விசுவாசம் என்பது ஒரு மறைசாட்சியம் என்பதை இந்த சொல் காட்டுகிறது.
வ.49: இறுதியாக கடவுள் தனக்கு அளித்த அதே வல்லமையை தன் சீடர்களுக்கும் இயேசு கொடுக்கிறார், அதனை பெறும் வரை எருசலேமில் இருக்கச் சொல்கிறார். இந்த வல்லமை பெந்தகோஸ்து நாளை குறிக்கிறது என எடுக்கலாம் (δύναμις துனாமிஸ்- வல்லமை).
மற்ற நற்செய்தியாளர்கள் கலிலேயாவிற்கு செல்லச் சொல்ல லூக்கா பெந்தகோஸ்து மட்டும் எருசலேமில் தங்கச் சொல்கிறார்.
ஆண்டவரின் உயிர்ப்பு ஓர் இதய அனுபவம் மட்டுமல்ல,
அது ஒரு உண்மையான நிகழ்வு.
ஆண்டவர் உணவை உண்டலும்,
தன் சதையையும் எலும்பையும் காட்டியதும்,
இதனைத்தான் குறிக்கிறது.
அச்சம், ஐயம் தவிர்த்து
உயிரோடு உள்ள ஆண்டவரை
காண்போம் அறிவிப்போம்.
அன்பு ஆண்டவரே உம்முடைய
உயிர்ப்பு என்னில் மாற்றம் தரட்டும், ஆமென்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக