வெள்ளி, 11 செப்டம்பர், 2020

ஆண்டின் பொதுக்காலம் இருபத்தி நான்காம் வாரம் (அ) (13,09,2020) 24th Sunday in OT, A, 2020







ஆண்டின் பொதுக்காலம் இருபத்தி நான்காம் வாரம் ()

(13,09,2020)


முதல் வாசகம்: சீராக் 27,30-28,7

பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 103

இரண்டாம் வாசகம்: உரோமையர் 14,7-9

நற்செய்தி: மத்தேயு 18,21-35


மன்னிப்பு


மன்னிப்பு என்ற கருப்பொருளை 'அனுப்புதல்' என்று முதல் ஏற்பாடு குறிக்கின்றது. அதனை விட 'மூடுதல்', 'கழுவுதல்' என்ற அர்த்தங்களும் கொடுக்கப்படுகின்றன. புதிய ஏற்பாடு இந்த கருப்பொருளை ஆழமாக பாவனைக்கு எடுத்து அதனை 'மன்னித்தல்' என்ற சிந்தனையிலே நோக்குகின்றது. இதனை விட 'அவிழ்த்தல்' என்ற அர்த்தமும் மன்னித்தலுக்கு கொடுக்கப்படுகிறது (காண்க லூக் 6,4), (ἀπολύω அபொலுவோ- அவிழ்). அதேவேளை 'இரக்கமுள்ளவராய் 

இருத்தல்' (காண்க லூக் 7,43: 2கொரிந் 2,7 - χαρίζομαι காரிட்ஸ்சோமாய்), 'கடந்து போக விடுதல்' (காண்க உரோ 3,25 - πάρεσις பாரெசிஸ்) போன்றவை மேலதிகமான இந்த அர்த்தத்தை விவிலியத்தில் காட்டுகின்றன

  விவிலியம் மனிதர்களின் பாவத்தைப் பற்றி கருத்துரைத்தாலும், அவற்றின் முக்கிய செய்தியாக கடவுளின் மன்னிப்பு குணமே காட்டப்படுகிறது. கடவுள் எப்போது மன்னிக்க ஆயத்தமாகவும், மன்னிப்பதில் தளராத குணமுடையவராகவும் இருப்பதாக காட்டப்படுகிறார்

இறைவாக்குகளின் முக்கியமான செய்தியாகவும் இதுவே இருக்கிறது. முதல் ஏற்பாட்டில் காட்டப்படுகின்ற வழிபாட்டு முறைகள் பாவத்தை கழுவுதல் என்ற சடங்கை மையப்படுத்துகிறது

இதன் பின்புலமாக இருப்பதும் மன்னிப்புதான் (காண்க லேவியர் 4-5). மன்னிப்பு பெறுவதற்காகவே பலிப்பொருட்களும் ஒப்புக்கொடுக்கப்பட்டன. இருப்பினும் பலிப்பொருட்கள் நல்ல மனநிலையில் ஒப்புக்கொடுக்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கப்பட்டன. நல்ல மனநிலையில் ஒப்புக்கொடுக்கப்படாத பலிப்பொருட்கள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை (காண்க 1சாமு 15,22: ஒசே 6,6). கடவுள் பாவங்களை மன்னிப்பதன் வாயிலாக தனக்கும் மனிதருக்குமான உறவை சரிசெய்ய முயல்கிறார் என விவிலிய ஆசிரியர்கள் காட்டுகின்றனர்

புதிய ஏற்பாடு இந்த கருப்பொருளை அதன் மையமான செய்தியாகவே கொண்டுள்ளது. மெசியாவின் வருகையே மனிதரை மன்னிப்பதை நோக்கமாக கொண்டது எனவும் காட்டுகிறது. மன்னித்தலிலும் கடவுளே முதலாவது அடியை எடுத்துவைக்கிறார் (காண்க கலா 1,4: 2கொரி 5,19: உரோ 9,23-26). இயேசுவின் இறப்பின் காரணமும் மனிதரின் பாவத்தை கழுவுதல் ஆகும், என்பது புதிய ஏற்பாட்டின் நிறைவான செய்தியாக இருக்கிறது. கடவுளின் மன்னிப்பபை புதிய ஏற்பாடு, ஏற்புடைமையாக்குதல், மீட்டல், மற்றும் சமரசம் செய்தல் என்ற அர்த்தங்களிலே காட்டுகின்றது. சில இடங்களில் இயேசு நோயாளரைக் குணமாக்கும் முன்னர் அவர்கள் பாவத்தை மன்னிக்கிறார் (காண்க மாற் 2,5-6: தி.பணி 5,31). இயேசுவைப் போலவே ஆரம்ப கால கிறிஸ்தவர்கள் தங்களுடைய தளத் திருச்சபையில், அயலவருடைய பாவங்களை மன்னிக்க எதிர்பார்க்கப்பட்டார்கள் (காண்க யோவான் 20,23, யாக் 5,13-16). ஒரு குழுவின் முன்னேற்றமும் வளர்ச்சியும் மன்னித்தலிலே தங்கியிருக்கிறது என்பதை ஆரம்ப கால திருச்சபை நன்கு உணர்ந்திருந்தது எனலாம் (காண்க மத் 18,21-35). கர்த்தர் கற்பித்த செபம் என்ற பாரம்பரிய செபம், கடவுள் ஒருவருடைய பாவத்தை மன்னிக்க வேண்டும் என்றால் அவர், முதலில் தன் சகோதர சகோதரர்களின் பாவத்தை மன்னிக்கவேண்டும் என்பதைக் வலியுறுத்துகிறது (காண்க மத் 6,12: லூக் 11,4) அத்தோடு ஒருவர் பலி செலுத்துவதற்கு முன் தன் சகோதரரின் பாவத்தை மன்னித்திருக்க வேண்டும் எனவும் காட்டுகிறது (காண்க மத் 5,23-24: மாற்கு 11,25).   



சீராக் 27,30-28,7


சீற்றம்

30வெகுளி, சினம் ஆகிய இரண்டும் வெறுப்புக்குரியவை; பாவிகள் இவற்றைப் பற்றிக் கொள்கின்றார்கள்.


1பழிவாங்குவோர் ஆண்டவரிடமிருந்து பழிக்குப்பழியே பெறுவர். ஆண்டவர் அவர்களுடைய பாவங்களைத் திண்ணமாய் நினைவில் வைத்திருப்பார். 2உனக்கு அடுத்திருப்பவர் செய்த அநீதியை மன்னித்துவிடு; அவ்வாறெனில் நீ மன்றாடும் போது உன் பாவங்கள் மன்னிக்கப்படும். 3மனிதர் மனிதர்மீது சினங்கொள்கின்றனர்; அவ்வாறிருக்க, ஆண்டவர் தங்களுக்கு நலம் அளிப்பார் என எவ்வாறு எதிர்பார்க்க முடியும்? 4மனிதர் தம்போன்ற மனிதருக்கு இரக்கங்காட்டுவதில்லை; அப்போது அவர்கள் தம் பாவமன்னிப்புக்காக எப்படி மன்றாடமுடியும்? 5அழியும் தன்மை கொண்ட மனிதர் வெகுளியை வளர்க்கின்றனர். அவ்வாறாயின், யார் அவர்களுடைய பாவங்களுக்குக் கழுவாய் தேட முடியும்? 6உன் முடிவை நினைத்துப்பார்; பகைமையை அகற்று; அழிவையும் சாவையையும் நினைத்துப்பார்; கட்டளைகளில் நிலைத்திரு. 7கட்டளைகளை நினைவில் கொள்; அடுத்தவர்மீது சினங்கொள்ளாதே; உன்னத இறைவனின் உடன்படிக்கையைக் கருத்தில் வை; குற்றங்களைப் பொருட்படுத்தாதே.


  சீராக்கின் ஞானம் என அறியப்படும் இந்நூல் ஞான நூல்களில் ஒன்றாகவும், இணைத்திருமறை நூல்களில் ஒன்றாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே 

இந்நூல் செப்துவாஜிந்து கிரேக்க முதல் ஏற்பாட்டு விவிலியத்தில் இருந்திருக்கிறது. இது எபிரேய மொழியில் இல்லாததன் காரணமாக இதனை விவிலிய நூல்களில், எபிரேயர்களும், பிரிந்த கிறிஸ்தவ சகோதரர்களும், ஏற்றுக்கொள்வதில்லை. கத்தோலிக்க பாரம்பரியம் இந்நூலை ஏற்றுக்கொண்டு தனது விவிலியத்தின் அங்கமாக்கியுள்ளது. இதன் காலத்தை கணிப்பது கடினமாக இருந்தாலும், இந்நூல் அநேகமாக பபிலோனிய இடப்பெயர்விற்கு பின்னர்தான் எழுதப்பட்டிருக்க வேண்டும். எபிரேயம் இதனை 'பென்சீரா' எனவும், இலத்தின் இதனை 'எக்கிலேசியஸ்டிகுஸ்' எனவும் அழைக்கின்றன.

இந்நூல் உண்மையாக முதலில் எபிரேய மொழியில்தான் கி.மு 180களில் எழுதப்பட்டது. இதனை எழுதியவர் ஏசுவின் மகன் சீரா என நம்பப்படுகிறறு. பின்னர் சீராவின் பேரன், எருசலேமிற்கு வெளியே கிரேக்க சவால்களை சந்தித்த தன் உடன் யூத சகோதரர்களுக்காக 

இதனை கிரேக்க மொழியில் மொழிபெயர்த்திருக்கிறார். ஆரம்ப கால திருச்சபையில் இந்நூல், திருப்பாடல்கள் நூலைப்போல மிகவும் பிரசித்தி பெற்று வழிபாட்டில் அதிகமாக பாவனையில் 

இருந்திருக்கிறது. கும்ரானிய தொல்பொருளியல் ஆய்வுகள் மற்றும் கெய்ரோ, மாசாதா போன்ற 

இடங்களில் கிடைத்த எபிரேய சிராக் புத்தக சுருள்கள், இந்நூலின் புனிதத்துவத்தையும், உண்மைத்தன்மையையும் மேலும் வலுப்படுத்துகின்றன

  இந்த புத்தகம் எழுதப்பட்ட காலத்தில் கிரேக்க மயமாக்கல் அதி உச்சத்தில் இருந்தது. வன்முறையால் யூதர்கள் கிரேக்க கலாச்சாரத்திற்கு இழுக்கப்பட்டார்களா என்பதில் சந்தேகம் 

இருக்கிறது, ஆனால் ஆசிரியரின் இறப்பிற்கு பின்னர், இந்த கலாச்சார வன்முறை, ஆசிரியர் எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே இருந்தது. யூதர்கள் இந்த கலாச்சாரத்திற்கெதிரான வன்முறையை நம்பிக்கை மற்றும் திடம் என்ற ஆயுத்தாலேயே வெல்ல முடியும் என சீராக் நம்பினார். சீராக்கின் எழுத்தியல், நீதிமொழிகள் புத்தகத்தை அதிகமான ஒத்து, சிறிய வரி வடிவங்களில் அமைந்துள்ளது. இந்த புத்தகத்தை ஆய்வாளர்கள் இரண்டு பெரும் பகுதிகளாக பிரிக்கின்றனர். முதலாவது பகுதி, ஞானத்தை அன்றாட வாழ்வில் எப்படி கடைப்பிடிப்பது என்று விளக்குகின்றது (அதிகாரங்கள் 1-43): இரண்டாவது பகுதி இந்த ஞானத்தையும் விசுவாசத்தையும் எபிரேய மூதாதையர்கள் கையாண்டதால் அவர்கள் வாழ்வில் உயர்ந்தார்கள் என்று புகழ்வதாகவும் அமைந்துள்ளது (அதிகாரங்கள் 44-50)

காலத்தில் மாற்றங்களும், கவர்ச்சியான மெய்யியல் புரிதல்களும் நம் முன்னோர்கள் கட்டிக்காத்த பாரம்பரியம் மற்றும் விசுவாத்தை பல முனைகளில் தாக்குகின்றபோது, அதனை எவ்வாறு கையாள்வது என்பதற்கு, சீராக் புத்தகம் நல்லதொரு எடுத்துக்காட்டும், வழிகாட்டியுமாகும்


இன்றைய வாசகம், சீற்றம் என்ற தலைப்பில் சிந்திக்க அழைக்கின்றது. சீற்றத்தை வெகுளி மற்றும் சினம் என சீராக் புத்தகம் அடையாளப்படுத்துகிறது (காண்க Μῆνις, ὀργή மேநிஸ், ஓர்கே).


.30: வெகுளியையும் சினத்தையும் பாவிகளுடைய அடையாளமாக காண்கிறார் பென்சீரா. அத்தோடு இவை வெறுக்கப்படவேண்டியவை என்கிறார். பாவிகள் இவற்றை தங்களுடைய வேலையாக கொண்டுள்ளனர் என்பதன் வாயிலாக இதனை யூதர்கள் பின்பற்றினால் அவர்களும் பாவிகளாகிறார்கள் என்கிறார் போல (ἀνὴρ ἁμαρτωλὸς ஆனேர் ஹமார்தோலொஸ்- பாவ மனிதர்). 


.1: பழிவாங்குதல் விவிலியத்தில் நீதியாக கருதப்படுகின்றவேளை சீராக்கின் இந்த வரி வித்தியாசமாக இருக்கிறது. பழிவாங்குவோர் ஆண்டவரிடமிருந்து பழிவாங்குதலை சந்திக்க நேரிடும் என்கிறார் (ἐκδικέω எக்திகெயோ- பழிவாங்கல்). இவர்களுடைய பாவங்களை ஆண்டவர் திண்ணமாய் நினைவில் கொண்டிருப்பார் என்கிறார், அதாவது யாரும் ஆண்டவரை ஏமாற்ற முடியாது என்கிறார். ஆண்டவர் மன்னித்தாலும், அவர் நினைவுத்திறனை யாரும் இலகுவாக எடுக்கக்கூடாது என்பது ஆசிரியரின் எச்சரிக்கை


.2: இந்த வரி மிக அழகான ஆன்மீகத்தை வெளிப்படுத்துகிறது. மற்றவர்களின் பாவத்தை மன்னிக்கவேண்டியது மிக அவசியமானது. இங்கே தவறை, அநீதி என்று காட்டுகிறார் ஆசிரியர். அநீதிக்கு பழி வாங்கவேண்டியது அவசியம் என்றிருந்த அக்கால உலகில், இந்த வரி சாதாரண மனித சிந்தனையை தாண்டிச் செல்கிறது எனலாம் (ἀδίκημα அதிகேமா- அநீதி). அடுத்திருப்பவரின் அநீதியை மன்னித்தல், ஒருவரை கடவுளுக்கு அருகில் கொண்டுவருகிறது என்கிறார், இதனால் அவர் செபம் இலகுவில் கேட்கப்படுகிறது என்கிறார்

 இந்த அடுத்திருப்பவரை மன்னிக்கிறவரும் பாவியாக இருக்கிறார். இவருடைய செபமும் தன்னுடைய பாவத்தை மன்னிக்கவேண்டுவதாக இருக்கிறது. இவர் ஏற்கனவே மற்றவருடைய பாவத்தை மன்னித்திருப்பதால், இவர் தன்பாவத்தை மன்னிக்கும் படி கடவுளை கேட்கும் அருகதை பெறுகிறார் எனலாம். (இயேசு ஆண்டவர் கற்பித்த பரலேக மந்திரம் நமக்கு நினைவிற்கு வரலாம்- பிறர் பாவத்தை நாங்கள் மன்னிப்பதுபோல எங்கள் பாவங்கைளையும் மன்னித்தருளும்). 


.3: மிக முக்கியமான கேள்வியொன்றை வாசகர்களிடம் முன்வைக்கிறார் சீராக்கின் ஆசிரியர். மனிதர் மற்றய மனிதர் மீது கோபம் கொள்கின்றனர், இதனை அவர்கள் மனித பலவீனம் என எதிர்பார்த்து நியாயப்படுத்துகின்றனர். சினத்தை குறிக்க ὀργή (ஓர்கே) என்ற சொல் பாவிக்கப்படுகிறது, இது கோபம், வஞ்சம், காய்மகாரம், சினம், எரிச்சல் என்ற பல அர்த்தத்தைக் கொடுக்கவல்லது. கடவுளின் மக்களுக்கு இது பொருந்தாது, சூழலியலில் யூதர்களுக்கு இது 

பொருந்தாது என்பதே இவர் வாதம். சக மனிதர்களின் குற்றங்களை மன்னிக்க முடியாதவர்கள் எப்படி கடவுளிடம் இருந்து அவ்வாறான ஒரு மன்னிப்பை எதிர்பார்க்கலாம்? இது மிகவும் நியாயமான கேள்வி, καὶ παρὰ κυρίου ζητεῖ ἴασιν  காய் பரா கூரியூ ட்சேதெய் இயாசின்- ஆக ஆண்டவரிடமிருந்து எப்படி குணமாக்கலை எதிர்பார்ப்பார்


.4: மனிதர்கள் இரக்கம் காட்ட அழைக்கப்படுகிறார்கள். இரக்கம் கடவுளின் மக்களுக்கான 

இன்னொரு அடையாளம். ஒருவர் தம்போன்ற ஒருவருக்கு தம்மைப்போலவே இரக்கம் காட்டவேண்டும் என்பது சீராக்கின் படிப்பினை - ἐπ᾿ ἄνθρωπον ὅμοιον αὐτῷ οὐκ ἔχει ἔλεος எப் அந்ரோபொன் ஹொமொய்யோன் அவுடோ ஊக் எகெய் எலேயோஸ்).

 இப்படி இரக்கம் (ἔλεος - எலெயோஸ்) காட்ட முடியாதவர்கள் கடவுளிடமிருந்து அதே இரக்கத்தை எதிர்பார்ப்பது எப்படி சாத்தியமாகும். மற்றவருக்கு இரக்கம் காட்டினால்தான் ஆண்டவரிடமிருந்து இரக்கம் வரும் என்பது, கடவுளை கட்டுப்படுத்துவது போல இருந்தாலும், கடவுள் அதனை எதிர்பார்க்கிறார் என்பது புலப்படுகிறது


.5: வெகுளியை அழியும் உடலைக் கொண்ட மனிதர் ஊக்குவிக்கின்றனர் என்று ஐந்தாவது வசனம் காட்டுகிறது. வெகுளி என்ற சொல்லிற்கு செப்துவாஜிந்து Μῆνις (மேனிஸ்) என்ற சொல்லை பயன்படுத்துகிறது. இந்த சொல் பழைய அல்லது பாரம்பரிய கிரேக்க மொழியில் காணப்படவில்லை. இதனை கோபம் என்று தமிழில் இலகுவாக மொழிபெயர்க்க முடியாது. வெகுளி என்பது இந்த சொல்லின் முக்கியமான பண்புகளைக் காட்டினாலும், முழுமையாக அதன் அர்த்தத்தைக் காட்டவில்லை என்றும் சொல்லலாம். இதனை வெறுப்பு, காய்மகாரம் என்றும் மொழி பெயர்க்கலாம்.

இப்படியாக 'மேனிசை' வளர்ப்பவர்களுக்கு யார் கழுவாய் கொடுக்க முடியும் என்பது சீராக்கின் கேள்வி. யாராலும் இவர்களுக்கு கழுவாய் கொடுக்க முடியாது என்பது அவர் வாதம்


வவ.6-7: இந்த வரிகள் கோபம் மற்றும் வஞ்சத்தை விட்டு, நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைக் காட்டுகின்றன. அதற்கு சில கட்டளைகள் கொடுக்கப்படுகின்றன:


. முடிவை நினைத்துப்பார்க்க வேண்டும் - μνήσθητι τὰ ἔσχατα மினேஸ்தேடி டா எஸ்காடா

முடிவு என்பது இங்கே ஒருவருடைய மரணத்தையும் அழிவையும் குறிக்கிறது. தாம் அழிவுக்குரியவர் என்ற சிந்தனை அவரை பாவத்தை வெறுக்க வைக்கும் என்பது இவர் நம்பிக்கை


. பகைமையை அகற்ற வேண்டும் - παῦσαι ἐχθραίνων பவுசாஸ் எக்த்ராய்நோன்: பகைமை மிகவும் ஆபத்தானது, அது புற்று நோய் போல, உள்ளிருந்து நிம்மதியை அழிக்கவல்லது. எனவே இதனை நிறுத்த வேண்டும் என்பது இவர் கோரிக்கை. மன்னிப்பு பெறவும், மன்னிப்பு கொடுக்கவும், பகைமை இடைஞ்சலாக இருக்கிறது என்பதையும் சீராக் நன்றாக அறிந்து வைத்திருக்கின்றார்


. அழிவையும் சாவையும் நினைத்துப்பார்க்க வேண்டும் - καταφθορὰν καὶ θάνατον காடாப்தோரான் காய் தானாடொன்: சாவும் அழிவும் மனிதருக்கு நிச்சயமாக வருபவை. அதனை ஒருவர் நினைத்தாலே போதும் அவர் நல்லவராகிவிடுவார். ஆனால் மனிதர்கள் இவற்றை சந்திக்கும் வரை அவற்றை சிந்திப்பதில்லை. இதனைத்தான் செய்யச் சொல்கிறார் ஆசிரியர்


. கட்டளைகளில் நிலைத்திருத்தல் - ἔμμενε ἐντολαῖς எம்மெநே என்டொலாய்ஸ்: இஸ்ராயேலர்கள் கடவுளுக்கு உரிய வகையில் வாழ கட்டளைகளில் நிலைத்திருந்தனர். கட்டளைகளில் நிலைத்திருத்தல் என்பது அந்த கட்டளைகளை கடைப்பிடித்தலாகும். கட்டளைகளை கடைப்பிடித்தல் என்பது நல்லது செய்தலாகும். ஆக, கட்டளைகளில் நிலைத்திருக்கச் சொல்கிறார் ஆசிரியர். கட்டளைகளில் நிலைத்திருத்தலை பல முதல் ஏற்பாட்டு நூல்கள் ஆழமாக காட்டுகின்றன, காண்க 2குறி 14,4)


. கட்டளைகளை நினைவில் கொள் - μνήσθητι ἐντολῶν மிநேஸ்தேடி என்டொலோன்: கட்டளைகளில் நிலைத்திருத்தலும், அவற்றை நினைவில் கொள்ளலும் ஒரே சிந்தனையைக் கொடுத்தாலும், இவை இரண்டு விதமான செயற்பாடுகள். கட்டளைகளை நினைவில் கொள்ளுதல் பல தியானங்களுக்கு இட்டுச் செல்லும். அவறை கடைப்பிடிக்கவும் வழி சொல்லும். இயேசு ஆண்டவரும் இதனை அழகாக தன் வாழ்வில் சொல்லிக் காட்டியிருக்கிறார். (காண்க மத் 5,17: லூக்கா 24,44: யோவான் 15,25: கலாத் 5,14)


. அடுத்தவர் மீது சினம் கொள்ளக்கூடாது - μὴ μηνίσῃς τῷ πλησίον மே மேநிசேஸ் டோ பிளேசியோன்: சினம் அதிகமான பாவங்களுக்கு காரணமாக அமைகிறது என்பது இக்காலத்து கண்டுபிடிப்பு, ஆனால் இதனை ஆயிரத்தி நூறு ஆண்டுகளுக்கு முன்பே விவிலிய ஆசிரியர்கள் கண்டுபிடித்துவிட்டார்கள். கோபம் பகுத்தறிவையும் அன்பிரக்கத்தையும், மறக்கச் செய்து, மனிதர்ளை உணர்ச்சிகளோடு மட்டுமே எதிர்வினை செய்யச் செய்கிறது. விவிலியத்தில் காயின் செய்த கொலை முதலாவது பாவமாக பதியப்பட்டுள்ளது, இதற்கான காரணமும் சினமெனச் சொல்லப்படுகிறது (காண்க தொ.நூல் 4,5-8). திருப்பாடல் மற்றும் நீதிமொழிகள் புத்தகங்கள் அதிகமாக இந்த சீற்றம் என்ற பலவீனத்தை அதிகமாக விவரிக்கின்றன


. உன்னத இறைவனின் உடன்படிக்கையை கருத்தில் வைத்தல் - διαθήκην ὑψίστου தியாதேகேன் ஹுப்சிஸ்டூ: இறைவனின் உடன்படிக்கை இஸ்ராயேலருக்கு புதிய அடையாளம் ஒன்றைக் கொடுத்தது. இதனால் அவர்கள் புதிய வாழ்க்கை முறையை பெற்றார்கள். இந்த புதிய வாழ்கை முறை பாவத்திற்கு எதிரான வாழ்க்கை முறை. உடன்படிக்கையை கருத்தில் கொள்பவர், பாவம் செய்யார் என்பது காரணமாதலால், அதனை பின்பற்றச் சொல்கிறார் ஆசிரியர்


. குற்றங்களை பெருட்படுத்தக்கூடாது- πάριδε ἄγνοιαν பாரிதே அக்நொய்யான்: கிரேக்க செப்துவாஜிந்து விவிலியம் குற்றங்களை, அறியாமை (ἄγνοια அக்நொய்யா) என்று வார்த்தைப்படுத்துகிறது. அறியாமை குற்றமாக அதிகமான சந்தப்பர்கங்களில் இருக்க முடியாது. மற்றவருடைய அறியாமையை காரணமாகக் கொண்டிருந்தால், நல்ல உறவை அமைக்க முடியாது. அத்தோடு அறியாமை இப்போது அயலவருக்கு, வெகுவிரைவில் நமக்கும் வரலாம் என்ற நிலையில், அதனை பொருட்படுத்தாமல் இருத்தல் நன்மை உண்டாக்கும்.  



திருப்பாடல் 103

கடவுளின் அன்பு

(தாவீதுக்கு உரியது)


1என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் முழு உளமே! அவரது திருப்பெயரை ஏத்திடு

2என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! அவருடைய கனிவான செயல்கள் அனைத்தையும் மறவாதே

3அவர் உன் குற்றங்களையெல்லாம் மன்னிக்கின்றார்; உன் நோய்களையெல்லாம் குணமாக்குகின்றார். 4அவர் உன் உயிரைப் படுகுழியினின்று மீட்கின்றார்; அவர் உனக்குப் பேரன்பையும் இரக்கத்தையும் மணிமுடியாகச் சூட்டுகின்றார்

5அவர் உன் வாழ்நாளை நலன்களால் நிறைவுறச் செய்கின்றார்; உன் இளமை கழுகின் இளமையெனப் புதிதாய்ப் பொலிவுறும்

6ஆண்டவரின் செயல்கள் நீதியானவை ஒடுக்கப்பட்டோர் அனைவருக்கும் அவர் உரிமைகளை வழங்குகின்றார்

7அவர் தம் வழிகளை மோசேக்கு வெளிப்படுத்தினார்; அவர் தம் செயல்களை இஸ்ரயேல் மக்கள் காணும்படி செய்தார்

8ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்; நீடிய பொறுமையும் பேரன்பும் உள்ளவர்.

9அவர் எப்பொழுதும் கடிந்து கொள்பவரல்லர்; என்றென்றும் சினங்கொள்பவரல்லர்

10அவர் நம் பாவங்களுக்கு ஏற்ப நம்மை நடத்துவதில்லை; நம் குற்றங்களுக்கு ஏற்ப நம்மைத் தண்டிப்பதில்லை

11அவர் தமக்கு அஞ்சுவோர்க்குக் காட்டும் பேரன்பு மண்ணினின்று விண்ணளவுபோன்று உயர்ந்தது. 12மேற்கினின்று கிழக்கு எத்துணைத் தொலைவிலுள்ளதோ அத்துணைத் தொலைவிற்கு நம் குற்றங்களை நம்மிடமிருந்து அவர் அகற்றுகின்றார்

13தந்தை தம் பிள்ளைகள்மீது இரக்கம் காட்டுவதுபோல் ஆண்டவர் தமக்கு அஞ்சுவோர் மீது இரங்குகிறார்

14அவர் நமது உருவத்தை அறிவார்; நாம் தூசி என்பது அவர் நினைவிலுள்ளது

15மனிதரின் வாழ்நாள் புல்லைப் போன்றது; வயல்வெளிப் பூவென அவர்கள் மலர்கின்றார்கள். 16அதன்மீது காற்றடித்ததும் அது இல்லாமல் போகின்றது அது இருந்த இடமே தெரியாமல் போகின்றது

17ஆண்டவரது பேரன்போ அவருக்கு அஞ்சுவோர்மீது என்றென்றும் இருக்கும்; அவரது நீதியோ அவர்களின் பிள்ளைகளின் பிள்ளைகள்மீதும் இருக்கும்

18அவருடைய உடன்படிக்கையைக் கடைப்பிடித்து அவரது கட்டளையின்படி நடப்பதில் கருத்தாய் இருப்போர்க்கு அது நிலைக்கும்

19ஆண்டவர் தமது அரியணையை விண்ணகத்தில் நிலைநிறுத்தியுள்ளார்; அவரது அரசு அனைத்தின்மீதும் பரவியுள்ளது

20அவர்தம் சொற்கேட்டு நடக்கும் வலிமைமிக்கோரே! ஆண்டவரின் தூதர்களே! அவரைப் போற்றுங்கள்

21ஆண்டவரின் படைகளே! அவர் திருவுளப்படி நடக்கும் அவர்தம் பணியாளரே! அவரைப் போற்றுங்கள்

22ஆண்டவரின் ஆட்சித் தலத்தில் வாழும் அனைத்துப் படைப்புகளே! ஆண்டவரைப் போற்றுங்கள்! என்னுயிரே! ஆண்டவரைப் போற்றிடு!


 திருப்பாடல் 103, தாவிதின் பாடல் என்று தலைப்பிடப்பட்டுள்ளது, ஆனால் இந்த தலைப்பு பிற்கால விளக்கவுரையின் ஓர் அங்கமாக இருக்கலாம். இந்த திருப்பாடலை நான்காம் புத்தகத்தின் ஒரு அங்கமாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். கடவுளை - தந்தை பண்புமிக்க, என்றென்றும் அரசாள்கிற தலைவராக காண்கிறார் ஆசிரியர். இருபத்திரண்டு வரிகளைக் கொண்டுள்ள இந்தப் பாடல் எபிரேய புகழ்ச்சிப் பாடல் வகையை சார்ந்தது. ஆசிரியர் தன் சுயத்தை, ஒரு ஆளாக வர்ணித்து அதற்கு தானே கட்டளையிடுவதைப் போல இந்த பாடலை அமைத்தாலும், இந்த கட்டளை ஒவ்வொரு கடவுளின் பிள்ளைக்கும் பொருந்தும் படியாக அமைந்துள்ளது. எபிரேய கவிநடையான திருப்பிக்கூறல் மற்றும் ஒத்த கருத்துச் சொற்களின் பாவனைகள் இந்த பாடலிலும் மீண்டும் மீண்டும் வலம் வருகின்றன


.1: இந்த முதலாவது வரியில் ஆசிரியர் தன் உயிருக்கு கட்டளையிடுகிறார். உயிரையும் (נֶפֶשׁ நெபெஷ்- ஆன்மா, உயிர்), தனது முழு உள்ளத்தையும் (כָל־קְ֝רָבַ֗י கோல்-கெராவாய் அனைத்து உள்ளுளவை) இரண்டாவது ஆளாக பாவித்து கட்டளை கொடுக்கிறார். ஆண்டவரும் அவரது திருப்பெயரும் ஒரே அர்த்தத்திலே முதல் ஏற்பாட்டில் பாவிக்கப்படுகின்றன


.2: ஆண்டவருடைய கனிவான செயல்களை மறக்கவேண்டாம் என்ற கட்டளை கொடுக்கப்படுகிறது. மறதி, மனித குலத்தின் இக்கால சாபமல்ல, மாறாக அக்காலத்திலும் அது பயங்கரமாக இருந்துள்ளது என்பதை இது காட்டுகிறது. கனிவான செயல்கள் என்பது (גְּמוּלָיו கெமூலெவ்- அவர் பிரதிபலன்கள்), ஆண்டவரின் நலன்தரும் செயல்கள் என்ற பொருளைக் கொடுக்கிறது. ஆண்டவரின் கனிவான செயல்களை மறத்தல், ஆண்டவரையே மறப்பதற்கு சமமாகும்


.3: குற்றங்களையும் நோய்களையும் ஒரே வரியில் இணைத்து இவை இரண்டிற்கும் தொடர்புள்ளது போல காட்டுகிறார். குற்றங்களுக்காகத்தான் நோய்கள் வருகின்றன என்ற ஒரு முதல் ஏற்பாட்டு சிந்தனையை இந்த வரியில் காணலாம். இதனால் மன்னிப்பும் (סָלַח சாலாஹ்- மன்னித்தல்) குணமாக்கலும் (רָפָא ராபா' குணப்படுத்தல்) ஆண்டவரின் செயற்பாடாகின்றன


.4: படுகுழி என்பது (שַׁחַת ஷாஹாத் படுகுழி) ஒரு முடிவில்லாத பள்ளத்தை குறிக்கிறது. இதனைப் பற்றி பல தரவுகளை முதல் ஏற்பாட்டில் காணலாம். இந்த பள்ளத்திற்குள் உயிர்கள் செல்கின்றன என்ற நம்பிக்கையையும் இஸ்ராயேல் மக்கள் கொண்டிருந்தனர். பிற்காலத்தில் நரகம் என்ற கருவும் இதிலிருந்து உருவானதே. இந்த பள்ளத்திற்குள் செல்பவர்கள் வெளியில் வருவதில்லை ஆனால் கடவுள் ஒருவருக்கே இந்த பள்ளத்தின் மீது அதிகாரம் இருக்கிறது என்பதையும் 

இஸ்ராயேலர்கள் நம்பினர். சீயோல் (שְׁאוֹל ஷெ'ஓல்- பாதாளம்) என்பதும் இந்த பள்ளத்திற்கான 

இன்னொரு சொல்

 பேரன்பும் இரக்கமும், கடவுள் தரும் மணிமுடியாக வருவது எத்துணை அழகான அடையாளங்கள் (חֶסֶד וְרַחֲמִים ஹெசெத் வெரஹாமிம்- பேரன்பும் இரக்கமும்). இவை இரண்டும் பணம் கொடுத்தும் வாங்க முடியாத இறையாசீர்கள் என்பதால் இதனை மணி முடியாகக் காண்கின்றார் ஆசிரியர்


.5: வாழ்நாள் நலன்களால் நிறைக்கப்படுகின்ற போது அது வளமானதாகவும் நிம்மதியானதாகவும் மாறுகின்றது. இதனை தரவல்லவர் கடவுளே என்பது ஆசிரியரின் நம்பிக்கை கலந்த அனுபவம். நலன்கள் என்பதற்கு எபிரேய விவிலியம் நல்ல அணிகலன்களால் (בַּטּוֹב עֶדְיֵךְ பாதோவ் 'எத்யெக்- உம் நல் அணிகளன்களால்) என்று சொல்லிடுகிறது. அணிகலன்கள் இங்கே உருவகங்களாக பாவிக்கப்பட்டுள்ளன

இளமை கழுகின் இளமையாக மாறும். இது கழுகு தன் இறகுகளை புதுபித்து, மீண்டும் மீண்டும் தன் வல்லமையை புதுப்பிக்கும் இயற்கையான செயற்பாட்டைக் குறிக்கிறது. (נֶּשֶׁר நெஷெர்- கழுகு


.6: ஆண்டவரின் செயல்கள் என்றும் நீதியானவை, அதற்கு நல்ல உதாரணம் அவர் ஒடுக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் நீதியை வழங்குகின்றார். ஒடுக்கப்பட்டவர்கள் பல முகங்களில் அக்காலத்தில் இருந்திருக்கிறார்கள், இவர்களுக்கு நீதி என்பது எட்டாக்கனியாகவே இருந்திருக்கிறது. பலர் தங்கள் தேவைகளுக்காவே, இவர்களுக்கு உதவி செய்ய முன்வருவர் ஆனால் உண்மையாக இவர்களுக்கு உரிமையளிப்பவர் கடவுள் ஒருவரே என்பது இங்கே புலப்படுகிறது. (עֲשׁוּקִֽים 'அஷுக்கிம்- ஒடுக்கப்பட்டோர்).


.7: ஆண்டவர் மேசேக்கு தன் வழிகளை காட்டினதும், இஸ்ராயேலருக்கு தம் செயல்களை காண்பித்ததும் ஒரே செயற்பாடாக காட்டப்பட்டுள்ளன. இந்த செயற்பாடுகளை என்னவென்று ஆசிரியர் காட்டவில்லை ஆனால் சூழலியலில் அவற்றை மீட்புச்செயல்கள் என எடுக்கலாம்


.8: ஆண்டவரின் சில முக்கிய பண்புகள் விளக்கப்பட்டுள்ளன. இரக்கமும் அருளும் ஆண்டவரின் பண்புகள் (רַחוּם וְחַנּוּן ரஹும் வெஹநூன்- இரக்கமும் அருளும்). இதற்கு ஒத்த கருத்துச் சொற்களாக நீடிய பொறுமையும், பேரன்பும் காட்டப்படுகின்றன. நீடிய பொறுமைக்கு, எபிரேய விவிலியம், 'கோபத்தில் மெதுமை' என்ற சொல்லை பயன்படுத்துகின்றது (אֶרֶךְ אַפַּיִם 'எரெக் 'அப்பிம்- மூக்கில் மெதுமை). ஆண்டவர் கோபம் கொள்ளாதவர் என்பது இங்கே காட்டப்படவில்லை, மாறாக அவர் மெதுவாக கோபம் கொள்பவர் என்பதே இங்கே சொல்லப்படுகிறது. பேரன்பு (רַב־חָסֶד ராவ்-ஹாசெத் அதிகமான அன்பு), ஆண்டவருடைய அடையாளம். பின்வரும் வரிகள் இந்த பண்புகளை விளக்குகின்றன:


.9: எப்போதும் கடிந்து கொள்வதும், சினம் கொள்வதும் கடவுளுடைய பண்பல்ல என்கிறார் ஆசிரியர். ஆண்டவர், மனிதரின் பாவங்களுக்காக சினம் கொள்வதும் அவர்களை கடிவதும் பல வேளைகளில் விவிலியத்தில் காட்டப்பட்டுள்ளன. இது சிலவேளைகளில் கடவுளின் மென்மையை குறைவாக எடைபோட காரணமாக அமைந்துவிடக்கூடாது என்பதில் ஆசிரியர் கரிசனையாக 

இருக்கிறார். ஆண்டவரின் கோபமும், கடிதலும் தேவையான நேரங்களில் நிச்சயமாக இருக்கும் என்பதை ஆசிரியர் மறுக்கவில்லை.


.10: நம் பாவங்களும் குற்றங்களும் நியாயப்படுத்தப்பட முடியாதவை. அவை கழுவப்படவேண்டியவை. கடவுள் முன்னிலையில் அனைவரும் பாவிகளாக இருக்கின்ற படியால், யாரும் கடவுள் முன் தங்களை நியாயப்படுத்த முடியாது. நியாயம் என்று சொன்னால் அது, கடவுள் காட்டும் இரக்கமே என்று அழகாக காட்டுகிறார் ஆசிரியர்


.11: இந்த பேரன்பு எந்தளவு பெரியது என்று விவரிக்கின்றார் ஆசிரியர். மண்ணுலகிற்கும் விண்ணுலகிற்கும் இடையிலான உயரம்தான் மிக மிக உயரமான தூரம் என்று அக்கால மக்கள் கருதினர். அவ்வளவு பெரியது கடவுளின் அன்பு என்கிறார் ஆசிரியர் (שָׁמַיִם עַל־הָאָרֶץ ஷமாயிம் 'அல்-ஹா'ஆரெட்ஸ்- வானமும் வையமும்). இது கடவுளின் இரக்கத்திற்கான ஒரு செங்குத்து அடையாளம்


.12: இதில் கடவுளின் மன்னிப்பை காட்ட ஒரு கிடைமட்ட அளவு பாவிக்கப்பட்டுள்ளது. கடவுளின் மன்னிப்பு தூரத்தை கணக்கிட முடியாது என்பது இங்கே காட்டப்பட்டுள்ளது. அதாவது நெடுந்தூரத்திற்கு நம் பாவங்களை கடவுள் துரத்தி விடுகிறார் என்பது காட்டப்பட்டுள்ளது. மேற்கிற்கும் கிழக்கிற்கும் இடையிலான கிடைமட்ட தூரம்தான் அக்காலத்தில் அறியப்பட்ட மிக பெரிய தூரம், அவ்வளவிற்கு கடவுள் பாவங்களை துரத்திவிடுகிறார் என்று கடவுளின் இரக்கத்தை விவரிக்கிறார் ஆசிரியர். (מִזְרָח מִמַּעֲרָב மிட்ஸ்ராஹ் மிம்மா'அராவ்- கிழக்கிலிருந்து மேற்கு). 


.13: இரக்கமுள்ள தந்தை என்பது இஸ்ராயேல் சமுதாயத்தில் தெரிந்திருந்த அழகான அடையாளம். தந்தை (אָב அவ்- அப்பா) என்பவர் செமித்திய குடும்பங்களில் மிக மிக முக்கியமானவர். தமிழ் சமுதாயத்தில் தாயைப் போல, செமித்திய சமுதாயத்தில் தந்தைதான் வீட்டிலும், வெளியிலும் மிக முக்கியமானவர். ஒருவிதத்தில் தந்தை ஒரு குடும்பத்தில் கடவுள் போல கருதப்பட்டார். தந்தையின் பேச்சு மற்றும் அவரின் முடிவுகள்தான் குடும்பத்தின் இறுதி முடிவாக கருதப்பட்டது. இதனால் தந்தை இரக்கம் காட்டும் போது, அந்த இரக்கம் பலமான இரக்கமாக கருதப்பட்டது. இந்த நன்கு தெரிந்த உருவகத்iதை, கடவுளுக்கு ஒப்பிட்டு, கடவுளின் இரக்கம் தமக்கு அஞ்சுவோர் மீது, தந்தையின் இரக்கம் போல இருக்கும் என்கிறார் ஆசிரியர். இதனை ஒரு உருவக பாவனை என எடுக்கலாம்


.14: மனிதர்களின் அடையாளம் மற்றும் உருவம் என்பது, தூசி (עָפָר அபார்). இந்த நம்பிக்கை தொடக்கநூலில் இருந்து உருவாகிறது. கடவுள் மனிதரை தூசியிலிருந்து படைத்தார், இதனால் அவர்கள் தூசிக்கு திரும்புவர் என்பதும் இஸ்ராயேலரின் நம்பிக்கை. தூசி, பாலஸ்தீனாவிற்கு மிகவும் நெருங்கிய மற்றும் அறியப்பட்ட பொருள். பாலஸ்தீனத்தின் வரட்சியான காலநிலை, இந்த தூசியை மிகவே உருவாக்கியது. காற்றினால் தூக்கியெறியப்படும் இந்த தூசி, எதற்கும் உதவாதது என்பது, அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதனைப்போன்றது மனிதரின் உருவம் என்கிறார், ஆசிரியர்


வவ.15-16: புல்லும் (חָצִיר ஹாட்சிர்- புல்), வயல்வெளி பூவும் (צִיץ הַשָּׂדֶה ட்சிட்ஸ் ஹஸ்ஸாதெஹ்- வயல்வெளி பூ) அழகானதாக இருப்பினும், அவை நிலையில்லாதவை. அவை மலர்கின்ற வேகமும் அவற்றின் உதிர்தலின் வேகமும் இங்கே ஒப்பிடப்படுகின்றன. காற்று என்பது மிகவும் பலமான ஒரு பௌதீக சக்தி, இந்த சக்தியின் முன்னால் புல்லும் பூவும் இல்லாமல் போகின்றன. இப்படித்தான் மனித வாழ்க்கை, என்கிறார் ஆசிரியர்


.17: மனிதரின் நிலையாமையை பற்றி பாடிய ஆசிரியர், கடவுளின் அதாவது அவரின் பேரன்பின் நித்தியத்தை விவரிக்கின்றார். ஆண்டவரின் பேரன்பும் (חֶסֶד ஹெசெத்- அன்பிரக்கம்), அத்தோடு அவரின் நீதியும் (צְדָקָה ட்செதெகாஹ் நீதி) ஒப்பிடப்படுகின்றன. இந்த இரண்டும் முற்குறிப்பிடப்பட்ட புல் மற்றும் பூவைப்போல இல்லாமல் போகாது, மாறாக அவை நித்தியத்திற்கம் நிலைக்கும் என்பது ஆசிரியரின் அனுபவ மெய்யறிவு


.18: மேற்குறிப்பிட்ட வரப்பிரசாதங்கள், ஆண்டவரின் கட்டளையை கடைப்பிடித்து அதனை வாழ்வோருடையது என்கிறது இந்த வரி. ஆண்டவரின் உடன்படிக்கை (בְרִית יְהוָה வெரித் அதோநாய்- ஆண்டவரின் உடன்படிக்கை), இஸ்ராயேலருக்கு மிக முக்கியமான ஒரு அனுபவம். இருப்பினும் இந்த உடன்படிக்கை பல வேளைகளில் மீறப்பட்டது. இந்த உடன்படிக்கையும், ஆண்டவரின் கட்டளைகளும் (פְּקוּדִים பெகூதிம்- கட்டளைகள்) தொடர்புபட்டது என்கிறார் ஆசிரியர். ஆண்டவரின் கட்டளைகளை கடைப்பிடிப்போர், அவரின் உடன்படிக்கையை பாதுகாக்கிறார்கள் என்பது ஆசிரியர் படிப்பினை என்பது புலப்படுகிறது


.19: இஸ்ராயேலின் ஆரம்ப கால கடவுள் நம்பிக்கை, அவரை ஒரு விண்ணக அரசராகவும், அவரது அரியணை (כִּסֵּא கிஸ்ஸெ'- அரியணை) விண்ணகத்தில் இருக்கிறதாகவும் கண்டது. இஸ்ராயேலரை சுற்றியிருந்த மக்களும் இப்படியாக தங்கள் தெய்வங்களின் அரியணைகளை கற்பனை செய்தனர். இந்த மக்களின் நம்பிக்கைகள், இஸ்ராயேலின் நம்பிக்கையில் தாக்கம் செலுத்தியதை இங்கே காணலாம். இந்து மக்களும் இப்படியான நம்பிக்கையை கொண்டிருந்தனர் என்பதை இந்து புராண மற்றும் தெய்வக் கதைகளில் காணலாம்

இருப்பினும் இஸ்ராயேலரின் நம்பிக்கை, இந்த மக்களின் நம்பிக்கையை அப்படியே ஒத்தது என்று சொல்ல முடியாது, இங்கே அவர்கள் உருவக அணியை மட்டுமே பாவிக்கிறார்கள். விண்ணகத்தை யாரும் பார்த்ததாகவோ அல்லது அது மனிதர் அறிவிற்கு உட்பட்டதாகவோ, அவர்கள் சொல்லவில்லை. அத்தோடு கடவுளின் அரசுதான் உண்மையான பலமிக்க அரசு என்பதும் காட்டப்படுகிறது


.20: ஆண்டவரின் சொற்கேட்டு நடக்கிறவர்கள், பலமானவர்கள், அவர்கள் வானதூதர்கள் என்பதையும் ஆசிரியர் காட்டுகிறார். வானதூதர்களைப் (מַלְאָךְ மல்'ஆக்- தூதன்) பற்றிய அறிவு மெது மெதுவாக இஸ்ராயேலின் வரலாற்றில் வளர்ந்தது. கிரேக்க காலத்தில்தான் இந்த அறிவு உச்ச கட்டத்தை அடைந்தது. இந்த வரிகளைக் கொண்டு சிலர் இந்த திருப்பாடலின் வயதையும் கணிக்க முயற்சி செய்யலாம். இந்த வானதூதர்களுக்கு ஆசிரியர் கட்டளை கொடுத்து, கடவுளை போற்றச் சொல்லி கேட்கிறார்


.21: ஆண்டவரின் படைகளுக்கும் கட்டளைகள் கொடுக்கப்படுகிறது. ஆண்டவர் படைகளின் ஆண்டவர் என்பது, முதல் ஏற்பாட்டில் கடவுளுக்கு கொடுக்கப்படும் முக்கியமான ஒரு பெயர் (יְהוָה צְבָאוֹת அதோநாய் ட்செபாஓத்). கடவுளுக்கு படைகள் இருப்பதாகவும் அவர்கள் கடவுளின் கட்டளைகளை நிறைவேற்றும் பணியாளர்களாகவும் நம்பப்பட்டன. இந்த படைகள், வானதூதர்கள், செருபீன்கள், கெருபீன்கள், மற்றும் தூயவர்கள் என்று பல வகைப்படுத்தப்பட்டனர்


.22: ஆண்டவரின் ஆட்சித் தளம் என்பது எங்கே என்று சொல்லப்படவில்லை, இது பூவுலகாகவும் 

இருக்கலாம். அனைத்து படைப்புக்கள் என்பது உயிருள்ள மற்றும் உயிரற்ற அனைத்தையும் குறிக்கலாம். இறுதியாக, முதலாவது வரியில் சொல்லப்பட்ட அதே வார்த்தை பாவிக்கப்பட்டுள்ளது, 'என்னுயிரே! ஆண்டவரைப் போற்றிடு!' בָּרֲכִי נַפְשִׁ֗י אֶת־יְהוָֽה׃ பாராகி நப்ஷி 'எத்-அதோநாய். 


உரோமையர் 14,7-9

7நம்மிடையே எவரும் தமக்கென்று வாழ்வதில்லை தமக்கென்று இறப்பதுமில்லை. 8வாழ்ந்தாலும் நாம் ஆண்டவருக்கென்றே வாழ்கிறோம்; இறந்தாலும் ஆண்டவருக்கென்றே இறக்கிறோம். ஆகவே, வாழ்ந்தாலும், இறந்தாலும் நாம் ஆண்டவருக்கே உரியவர்களாய் இருக்கிறோம். 9ஏனெனில், இறந்தோர்மீதும் வாழ்வோர்மீதும் ஆட்சிசெலுத்தவே கிறிஸ்து இறந்தும் வாழ்கிறார். 10அப்படியிருக்க, நீங்கள் ஏன் உங்கள் சகோதரர் சகோதரிகளிடம் குற்றம் காண்கிறீர்கள்? ஏன் அவர்களை இழிவாகக் கருதுகிறீர்கள்? நாம் அனைவருமே கடவுளின் நடுவர் இருக்கை முன் நிறுத்தப்படுவோம் அல்லவா? 11ஏனெனில், 'ஆண்டவர் சொல்கிறார்; நான் என் மேல் ஆணையிட்டுள்ளேன்; முழங்கால் அனைத்தும் எனக்கு முன் மண்டியிடும். நாவு அனைத்தும் என்னைப் போற்றும்' என்று மறைநூலில் எழுதியுள்ளது அன்றோ! 12ஆகவே, நம்முள் ஒவ்வொருவரும் தம்மைக் குறித்தே கடவுளுக்குக் கணக்குக் கொடுப்பர்.


  பவுலுடைய திருமுகங்களில் மிக முக்கியமானவைகளில் ஒன்றாக கருதப்படும் உரோமையர் திருமுகம் பல விதமான நடப்பியல் பிரச்சினைகளை சந்திக்க, அறிவுரை கொடுக்கிறது. ஆரம்ப கால திருச்சபையில் சிலர் யூத கிறிஸ்தவர்களாகவும், சிலர் யூதரல்லாத கிறிஸ்தவர்களாகவும், சிலர் ஆரம்ப கிறிஸ்தவர்களாகவும் இருந்தார்கள். இவர்களிடையே பாகுபாடுகள் பலமாக இருந்திருக்க வேண்டும். சிலருடைய வாழ்க்கை முறை மற்றவருக்கு வியப்பாகவும், சில வேளைகளில் அவை இடைஞ்சலாகவும் இருந்திருக்க வேண்டும். இதனை ஆபத்தாக உணர்ந்த பவுல் சகோதர அன்பை இந்த அதிகாரத்தில் கருப்பொருளாக எடுக்கிறார். இந்த அதிகாரம் சகோதரர்களுக்கு தீர்ப்பளிகக் வேண்டாம் மற்றும், சகோதரர்களுக்கு தடையாகவும் இருக்கவும் வேண்டாம் என்ற தலைப்புக்களை விவரிக்கின்றன


வவ.1-2: நம்பிக்கையில் வலுவற்றோரையும், வலுவுல்லோரையும் பற்றி இந்த வரிகள் வாதாடுகின்றன. நம்பிக்கையில் வலுவுள்ளோர், பலவீனமானவர்களுக்கு இடைஞ்சலாக இருக்கக்கூடாது என கேட்கப்படுகிறார்கள்


வவ.3-4: உணவு முறைகள் ஒருவருக்கொருவர் வேறுபடுகிறது. இதில் முதன்மையானதோ அல்லது கடைசியானதோ என்றில்லை. மற்றவரின் உணவுமுறைகளை நகைப்பவர்கள் அல்லது தங்கள் தங்கள் உணவுமுறைகளை மற்றவர் மேல் திணிப்பவர் நல்ல சகோதரத்துவத்தை ஏற்படுத்த முடியாது


வவ.5-6: ஆரம்ப கால உரோமைய கிறிஸ்தவரிடையே, நாட்கள் மற்றும் உணவு முறைகளைப் பற்றிய வேறுபட்ட கருத்துக்கள் இருந்திருக்க வேண்டும். இந்த வேறுபாடுகள் யூத, கிரேக்க மற்றும் உரோமைய பின்புலத்தைக் கொண்டதாக இருந்திருக்க வேண்டும். இந்த வித்தியாசங்கள் ஆரம்ப கால திருச்சபையிலே சில வாத பிரதிவாதங்களை உருவாக்கின. இதனைத்தான் கண்டிக்கிறார் பவுல். உண்ணுதலும், உண்ணாமையும் ஒவ்வொருவருக்கும் தனித்துவமானவை. ஒன்றை உயர்ந்ததாகவும், மற்றயதை தாழ்ந்தாகவும், கருதுவது கிறிஸ்தவம் இல்லை என்பது புலப்படுகிறது.


.7: கிறிஸ்தவத்தில் சுயத்திற்கான வாழ்வு என்று ஒன்றுமில்லை என்ற அழகான வாதம் ஒன்று முன்வைக்கப்படுகிறது. தமகென்று வாழ்வதும் தமக்கென்று சாவதும் கிறிஸ்தவம் இல்லை. கிறிஸ்தவத்தின் மையம் இவ்வுலகம் சார்ந்த தனிமனித சுதந்திரம் இல்லை என்பதும் காட்டப்படுகிறது. οὐδεὶς γὰρ ἡμῶν ἑαυτῷ ζῇ καὶ οὐδεὶς ἑαυτῷ ἀποθνῄσκει· ஊதெய்ஸ் கார் ஹேமோன் ஹேஅவுடோ ட்சே காய் ஊதெய்ஸ் ஹேஅவுடோ அபொத்நேஸ்கெய்

 இதிலிருந்து, கிறிஸ்தவத்தில் வாழ்ந்தாலும் அது மற்றவருக்காவே, அதேபோல் கிறிஸ்தவத்தில் இறந்தாலும் அது மற்றவருக்காகவே என்பது தெரிவிக்கப்படுகிறது


.8: ஏழாவது வரி ஆரம்பித்த வாதத்தை, எட்டாவது வரி அழகாகக் காட்டுகிறது. மற்றவர்கள் என்பதிலிருந்து அனைவரும் இறுதியாக கிறிஸ்துவிற்காகவே வாழவும், இறக்கவும் கேட்கப்படுகிறார்கள். ζῶμεν, τῷ κυρίῳ ζῶμεν- ἀποθνῄσκωμεν, τῷ κυρίῳ - ட்சோமென் டோ கூரியோ ட்சோமென்- அபொத்நேஸ்கோமென் டோ கூரியோ- வாழ்கிறோம் ஆண்டவருக்காக வாழ்கிறோம்- இறக்கின்றோம் ஆண்டவருக்காவே

  ஆண்டவருக்காகவே வாழ்கிறோம், அவருக்காகவே இறக்கிறோம் என்ற சிந்தனை ஆரம்ப கால மறைசாட்சிய வாழ்வை நினைவூட்டுகிறது. ஆண்டவரை மையப்படுத்தினால், வாழ்வும் சாவும் ஒரே நிலையை அடைகின்றன, புனிதப்படுத்தப்படுகின்றன


.9: இறதோரும் வாழ்வோரும் இணைக்கப்படுகிறார்கள். ஆண்டவர் இறந்தும் வாழ்கிறார் இதனால் அவர் வாழ்வோர் மீதும் இறந்தோர் மீதும் ஆண்டவராக இருக்கிறார்

 இறந்தவர்கள் மறக்கப்பட்டவர்கள் என்ற வாதம் அக்காலத்தில் சிந்தனையில்

 இருந்திருக்கிறது. கிறிஸ்தவத்தில் அப்படியில்லை, ஆண்டவர் முன்னிலையில் இறந்தவர்களும் 

இறக்கப்போகிறவர்களும் முக்கியமானவர்கள் எனப்து புலப்படுத்தப்படுகிறது. அவர்கள் மறக்கப்படாதவர்கள்


.10: இந்த வரிதான் முக்கியமான செய்தியை வெளிப்படையாக தாங்கி வருகிறது. சகோதரர்களிடையயே குற்றம் காண்பது, உண்மைக் கிறிஸ்தவம் அல்ல. அது வெளிவேடம், எனெனில் அனைவருக்கும், இயேசுவே கடவுளாக இருக்கிறார். சகோதரர்களிடையே குற்றம் காணுதல் அவர்களை இழிவாகக் கருதுவதற்கு சமனாகும், இது கடவுளின் தண்டனையை வருவிக்கும் எனவும் எச்சரிக்கப்படுகிறது

  யாராக இருந்தாலும், அவர்கள் கடவுளின் நடுவர் இருக்கையின் முன் சமமானவர்கள் என்பதை மறக்கக் கூடாது என்கிறார். παραστησόμεθα τῷ βήματι τοῦ  θεο, பாராஸ்டேசெமெதா டோ பெமாடி டூ தியூ- கடவுளின் நீதி இருக்கைக்கு முன்னால் நாம் நிற்கின்றோம்).  



மத்தேயு 18,21-35

மன்னிக்க மறுத்த பணியாள் உவமை

21பின்பு பேதுரு இயேசுவை அணுகி, 'ஆண்டவரே, என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் எனக்கு எதிராகப் பாவம் செய்துவந்தால் நான் எத்தனை முறை அவரை மன்னிக்க வேண்டும்? ஏழு முறை மட்டுமா? எனக் கேட்டார். 22அதற்கு இயேசு அவரிடம் கூறியது: 'ஏழுமுறை மட்டுமல்ல் எழுபது தடவை ஏழுமுறை என நான் உனக்குச் சொல்கிறேன். 23விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்; ஓர் அரசர் தம் பணியாளர்களிடம் கணக்குக் கேட்க விரும்பினார். 24அவர் கணக்குப் பார்க்கத் தொடங்கியபொழுது, அவரிடம் பத்தாயிரம் தாலந்து கடன்பட்ட ஒருவனைக் கொண்டு வந்தனர். 25அவன் பணத்தைத் திருப்பிக் கொடுக்க இயலாத நிலையில் இருந்தான். தலைவரோ, அவனையும் அவன் மனைவி மக்களோடு அவனுக்குரிய உடைமைகள் யாவற்றையும் விற்றுப் பணத்தைத் திருப்பி அடைக்க ஆணையிட்டார். 26உடனே அப்பணியாள் அவர் காலில் விழுந்து பணிந்து, 'என்னைப் பொறுத்தருள்க் எல்லாவற்றையும் உமக்குத் திருப்பித் தந்து விடுகிறேன்' என்றான். 27அப்பணியாளின் தலைவர் பரிவு கொண்டு அவனை விடுவித்து அவனது கடன் முழுவதையும் தள்ளுபடி செய்தார். 28ஆனால் அப்பணியாள் வெளியே சென்றதும், தன்னிடம் நூறு தெனாரியம் கடன்பட்டிருந்த உடன் பணியாளர் ஒருவரைக் கண்டு, 'நீ பட்ட கடனைத் திருப்பித் தா' எனக்கூறி அவரைப் பிடித்துக் கழுத்தை நெரித்தான். 29உடனே அவனுடைய உடன் பணியாளர் காலில் விழுந்து, என்னைப் பொறுத்தருள்க் நான் திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்' என்று அவனைக் கெஞ்சிக் கேட்டார். 30ஆனால் அவன் அதற்கு இசையாது, கடனைத் திருப்பி அடைக்கும்வரை அவரைச் சிறையிலடைத்தான். 31அவருடைய உடன் பணியாளர்கள் நடந்ததைக் கண்டபோது மிகவும் வருந்தித் தலைவரிடம் போய் நடந்தவற்றையெல்லாம் விளக்கிக் கூறினார்கள். 32அப்போது தலைவர் அவனை வரவழைத்து, 'பொல்லாதவனே, நீ என்னை வேண்டிக் கொண்டதால் அந்தக் கடன் முழுவதையும் உனக்குத் தள்ளுபடி செய்தேன். 33நான் உனக்கு இரக்கம் காட்டியதுபோல நீயும் உன் உடன்பணியாளருக்கு இரக்கம் காட்டியிருக்க வேண்டும் அல்லவா?' என்று கேட்டார். 34அத்தலைவர் சினங் கொண்டவராய், அனைத்துக் கடனையும் அவன் அடைக்கும்வரை அவனை வதைப்போரிடம் ஒப்படைத்தார். 35உங்களுள் ஒவ்வொருவரும் தம் சகோதரர் சகோதரிகளை மனமார மன்னிக்கா விட்டால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தையும் உங்களை மன்னிக்க மாட்டார்.'


  மத்தேயு நற்செய்தியின் பதினெட்டாவது அதிகாரம் திருச்சபை பொழிவு அல்லது

திருச்சபையை பற்றிய படிப்பினை என அறியப்படுகிறது. இந்த அதிகாரத்திற்கு முன் ஏற்கனவே, இயேசு தன்னுடைய சீடர்களை தெரிந்தெடுத்திருக்கின்றார். அத்தோடு தன் திருச்சபையையும், அவர்கள் மேல் கட்டுவதாகவும் போதித்திருக்கிறார். இந்த அதிகாரம் திருச்சபையின் கொள்கைகள், நடைமுறைகள், வாழ்க்கை முறை போன்றவற்றை  மையப்படுத்துகிறது. இந்த மன்னிக்க மறுத்த பணியாளர் உவமை, மத்தேயு நற்செய்திக்கே உரிய விசேடமான பகுதி என்பதை நினைவில் கொள்ள வேண்டும்


வவ.1-5: திருச்சபையில் பெரியவர்கள், குழந்தையைப்போல் தாழ்ச்சியுள்ளவர்கள்


வவ.6-9: சகோதரர்களை பாவத்தில் விழச்செய்கிறவர்கள் நிச்சயமாக தண்டிக்கப்படுவார்கள்


வவ.10-14: ஆண்டவருடைய பார்வையில் ஒவ்வொருவரும் முக்கியமானவர்கள். ஆண்டவர் காணாமல் போனவர்கள் மட்டில் மிகுந்த கரிசனையுடையவராக இருக்கிறார். அவர் தேடிப்போகிற ஆண்டவர்


வவ.15-20: பாவம் செய்யும் சகோதரர்கள் மன்னிக்கப்படவேண்டியவர்கள். அவர்களுக்கு பல சந்தர்ப்பங்கள் கொடுக்கப்படவேண்டும். தண்டனை கொடுப்பதாக இருந்தாலும், அதுவும் அவர்களை திருத்துவதற்காகவே இருக்கவேண்டும்


.21-22: ஆண்டவர் சொன்ன மிக முக்கியமான போதனைகளைக் கேட்ட பேதுரு சிந்திக்க விளைகிறார். மன்னிப்பதைப் பற்றி அவருக்கு சந்தேகம் எழுந்திருக்க வேண்டும். ஏன் பேதுரு இந்த கேள்வியை ஆண்டவரிடம் கேட்டார் என்று தெரியவில்லை. நிச்சயமாக அவர் தன்னை முன்னிலைப் படுத்த கேட்டிருக்க மாட்டார். இது அவருடைய சந்தேகமாக இருந்திருக்க வாய்ப்பில்லை

பேதுரு ஆண்டவரை அணுகி ஒரு கேள்வி கேட்டார், என்று சொல்வதன் வாயிலாக மத்தேயு, இயேசு ஆண்டவர் என்றும் அவர் சீடர்களோடு இருந்தாலும், அவர் மனிதரையும் தாண்டியவர் எனக் காட்டுகிறார். அத்தோடு அவர் அணுகக்கூடயவர் என்பதையும் காட்டுகிறார்

 பேதுரு, பாவம் செய்யும் சகோதரர்களை ஏழுமுறை மன்னித்தால் போதுமா எனக் கேட்கிறார். பிற்கால இராபினிக்க யூதமதம், பாவம் செய்யும் சகோதரர்களை மூன்றுமுறை மன்னிக்கக் கேட்டது. கிறிஸ்தவர்கள் அவர்களைவிடவும் உயர்ந்தவர்களாக இருக்கவேண்டும் என்ற தோறனை இந்த கேள்வியின் பின்னால் இருக்கிறது. இயேசு ஏழுமுறையல்ல மறாறாக எழுபத்தியேழு முறை என்கிறார். இந்த எழுதப்பத்தியேழு ஒரு முடிவிலி இலக்கத்தைக் குறிக்கிறது. நிறைவான அதாவது எண்ணமுடியாத மன்னிப்பை இது குறிக்கிறது (ἕως ἑπτάκις ἀλλ᾿ ἕως ἑβδομηκοντάκις ἑπτά. ஹேயோஸ் ஹேப்டாகிஸ் அல் ஹேயோஸ் எப்தொமேகொன்டாகிஸ் ஹேப்டா- மாறாக எழல்ல எழுபத்தியேழு). 

 முதல் ஏற்பாடு காயினுடைய மன்றாட்டுக்கு கடவுள் இரங்கி காயினை யாராவது தீண்டினால் அவர் ஏழு முறை தன்டிக்கப்படுவார் எனக் சொன்னதாக காட்டுகிறது. அவர் வழிவந்த லாமேக்கிற்காக அவர் எதிரிகள் எழுபத்தி ஏழு முறை தண்டிக்கப்படுவார்கள் எனவும் காட்டுகிறது (காண்க தொ.நூல் 4,15-24).


.23: மத்தேயு நற்செய்தியில் 'விண்ணரசு' (ἡ βασιλεία τῶν οὐρανῶν பசிலெய்யா டோன் ஊராநோன்- வானகங்களின் அரசு) மிக முக்கியமான ஒரு கருதுகோல். இதனை மத்தேயு இங்கே சிந்தனைக்கு எடுக்கிறார். விண்ணரசை மத்தேயு ஒரு அரசருக்கு ஒப்பிடுகிறார். அரசர்கள் அக்காலத்தில் மிகவும் அறியப்பட்டவர்கள். சில அரசர்கள் மிக நேசிக்கப்பட்டார்கள், பலர் வெறுக்கப்பட்டார்கள். மத்தேயு இங்கே எடுக்கின்ற அரசர் ஓர் கண்டிப்பான அரசர் உவமானம். பணியாளர்கள் என்று தமிழ் விவிலியம் காட்டுவது, உண்மையில் இங்கே அடிமைகளையே குறிக்கிறது (δοῦλος தூலொஸ்). 


.24: அரசர் கணக்கு பார்க்கிறார். அரசர்கள் பொதுவாக தங்கள் தலைமை அடிமைகளை நம்பி பெரிய பொறுப்புக்களை ஒப்படைப்பர். சந்தேகம் வந்தால் அன்றி, அவர்களை அவர்கள் சோதிப்பது கிடையாது. இங்கே இந்த அரசர் தன்னிடம் கடன் பட்டவர்களை வரவழைக்கிறார். இந்த அரசரிடம் பத்தாயிரம் தாலாந்து கடன் பட்டவரை கொண்டுவருகிறார்கள் உடன் பணியாளர்க்ள

  பத்தாயிரம் தாலாந்து (μυρίων ταλάντων முரியோன் டாலான்டோன்). ஒரு தாலாந்து மிக பெரிய காசு. ஓரு தாலாந்து ஆராயிரம் தெனாரியங்களை குறிக்கும். ஒரு தெனாரியம்தான் அக்காலத்து ஒரு நாள் கூலியாக இருந்தது. இன்றைய நம்முடைய 1500 இலங்கை ரூபாய்களைப் போல், ஆக இவர் 10000 X 1000 தெனாரியங்களை கடன் பட்டிருக்கிறார். ஆக இவர் இலங்கை ரூபாய்களில் 90,000,000,000.00 கடனாக பெற்றிருக்கிறார் (முடிந்தால் எண்ணிப்பாருங்கள்). எப்படி ஒரு பணியாளர் (அடிமை) இந்த அளவை கடனாகப் பெற்றார் என்பது புரியாத புதிர். இதனை அடைக்க அவர் வாழ்நாள் முழுவதும் பணியாற்ற வேண்டி வரும்


.25: பத்தாயிரம் தாலாந்து ஒரு மிகப் பெரிய தொகை, சாதாரண பணியாளரால் அதனை திருப்பி அடைக்க முடியாது. இதனால் அரசர் அந்த பணியாளருக்கு உரிய அனைத்தையும் விற்று அதனை திருப்பி அடைக்கச் சொல்கிறார். அவர் சொல்வதில் வியாபார நீதி இருக்கிறது. இவர் உடமைகள் விற்கப்படவேண்டும், அவரும் அவர் மனைவி பிள்ளைகளும் அடிமைகளாக விற்கப்படவேண்டும். அப்போதுதான் இதில் கால் பகுதியையாவது அவர் சேகரிக்கலாம்

 அக்காலத்தில் கடன் பட்டவர்கள், கடனை அடைக்காது போனால் அவர்களுடைய உடமைகள் கையடக்கப்படும் அத்தோடு அவர்களும் அடிமைகளாக விற்கப்படுவது சாதாரணமாக 

இருந்தது


.26: நடக்கப்போவதை நன்கு உணர்ந்த பணியாளர் காலிலே விழுகிறார். பெறுக்கச் சொல்லிக் கேட்கிறார். தான் கடனை அடைப்பதாக சொல்கிறார். எப்படி அடைப்பார் என்பது புரியவில்லை

இவர் காலில் விழுவது, இந்த அரசரை அவர் தன் தலைவராகவும், கடவுளாகவும் ஏற்றுக்கொள்வதைக் காட்டுகிறது. இவர் காலில் விழுந்துகொண்டு கெஞ்சுவதாக கிரேக்க மூல விவிலியம் காட்டுகிறது (προσεκύνει αὐτῷ λέγων புரொஸ்குநெய் அவுடோ லெகோன்). 


.27: தான் கொடுத்த கடனைப்போலவே அரசரின் இரக்கமும் மிக மிகப் பெரிது என்பது காட்டப்படுகிறது. இந்த அரசர் அந்த பணியாளருக்கு தவணை மட்டுமல்ல, அனைத்து கடனையும் அவர் மன்னித்தே விடுகிறார். இது சாதாரண மனித அரசர்களால் செய்ய முடியாதது. இதற்கான காரணமாக அந்த அரசரின் பரிவு காட்டப்படுகிறது (σπλαγχνίζομαι ஸ்பிலாக்நிட்சோமாய்

இதயத்தில் பரிவு இரக்கம் கொள்ளல்). இந்த வரியின் மூலம் இவ் அரசர் எவ்வளவு உயர்ந்தவர் எனக் காட்டப்படுகிறார்


.28: இந்த மன்னிக்கப்பட்ட பணியாளரின் உண்மை முகம் காட்டப்படுகிறது. இவரிடம் நூறு தொனாரியம் கடன் பட்ட உடன் பணியாளர் ஒருவரை இவர் சந்திக்கிறார். இந்த நூறு தொனாரியம் மூன்றுமாத உழைப்பைக் குறிக்கும். கடன் கொடுத்தவர் முன்பு அரசரிடம் மரியாதையாகவே கொண்டு வரப்பட்டார், ஆனால் தான் கடன் கொடுத்தவரைக் கண்டதும் இவர் அவரை கழுத்தை நெரித்து தன் கடனைக் கேட்கிறார்

இங்கே அவரின் மனிதமற்ற செயலும், வன்முறையும் காட்டப்படுகிறது (πνίγω பிநிகோ- கழுத்தை பிடுங்குதல்).


.29: இவருடைய உடன் பணியாளர், அவர் முன்பு தன் அரசரிடம் செய்தவற்றையே செய்கிறார், இரக்கம் கேட்கிறார். உடன் பணியாளர், காலில் விழுகிறார், கெஞ்சிக் கேட்கிறார். இவைகள் இந்த உடன் பணியாளர் தன்னை முதல் பணியாளருக்கு அடிமையாக கருதுவதைக் காட்டுகிறது


.30: ஆனால் முதல் பணியாளர், அதற்கு இசையாது தன் உடன் பணியாளரை சிறையில் அடைக்கிறார். அக்காலத்தில் வாடகைக்கும் சில சிறைகள் இருந்திருக்கின்றன. இங்கே இரண்டு முக்கியமான செய்திகள் காட்டப்படுகின்றன. முதலாவது இந்த முதல் பணியாளர், தன் உடன் பணியாளருக்கு இரக்கம் காட்டவில்லை, இரண்டாவதாவ அவர் இவரை சிறையில் அடைக்கிறார். இந்த இரண்டையும் அரசர் இவருக்கு செய்யவில்லை


.31: இவருடைய செயல்கள் மற்றைய பணியாளர்களால் நோக்கப்டுகிறது. ஆக இவருக்கு பணியாளர்கள் தன்னை அவதானிக்கிறார்கள் என்பது தெரிந்திருக்கவும் வாய்ப்பிருந்திருக்கிறது. முதலில் அரசர் என்று சொல்லப்பட்டவர் இப்போது, தலைவர் என காட்டப்படுகிறார். (κύριος கூரியோஸ்- ஆண்டவர், தலைவர்). இவர்கள் நடந்ததைக் கண்டு மனம் வருந்தி தலைவரிடம் சொல்கிறார்கள். ஆக இவர்களுக்கு இது தவறு என்று தெரிகிறது. இதனால் இந்த குறிப்பிட்ட பணியாளர் உண்மையாகவே பொல்லாதவர் என்பது தெளிவு


.32: தலைவர், முதல் பணியாளரை வரவழைத்து, பொல்லாதவனே என்றும் தான் அவரது கடனை மன்னித்ததையும் சொல்லிக்காட்டுகிறார். (δοῦλε πονηρέ தூலெ பொநேரெ- கெட்ட பணியாளனே). அத்தோடு அவரது வேண்டுதலைத் தான் கேட்டதாகவும் சொல்கிறார்


வவ.34-35: தன்னுடைய குற்றச்சாட்டை முன்வைக்கிறார். அதாவது தன்னைப்போலவே 

இவரும் இரக்கம் காட்டியிருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறார். (ἐλεέω எலேஎயோ- இரக்கம் காட்டு). இவர் இரக்கம் காட்டாதபடியால் இவரை தலைவர் சிறையில் அடைக்கவில்லை மாறாக கடனை திருப்பி அடைக்கும் வரை, அவரை வதைப்போரிடம் ஒப்படைக்கிறார். வதைப்பவர்களை எப்படிச்சொல்லவது, நம்நாட்டு வதைமுகாம்கள் போல இருக்கலாம். உரோமையர் காலத்தில் இன்னும் கொடுமையாக இருந்திருக்கும். (βασανιστής பாசாநிஸ்டேஸ்- சித்திரவதைசெய்வோர்). 


.36: இந்த உவமையின் விளக்கம் கொடுக்கப்படுக்கிறது. இந்த பணியாளர்கள் உலகத்தில் 

இருக்கும் சகோதர சகோதரிகள் (ἀδελφός அதெல்பொஸ்). தலைவர் அல்லது அரசர் பரலோக கடவுள். சகோதர சகோதரிகளை மன்னிக்காதவர்கள் பரலோக பிதாவிடம் அதனை எதிர்பார்க்க முடியாது, மாறாக தண்டனையை எதிர்பார்க்கலாம் என்பது மத்தேயுவின் செய்தி



மன்னிக்க தெரிந்த உள்ளம் மாணிக்க கோவில் என்பது ஒரு தழிழ் பாடல் வரி

மன்னிப்பதே கிறிஸ்தவம்

மன்னிக்காமை ஒருவகை வியாதி

மன்னிக்காமை, மன்னிக்காதவரையே அதிகமாக பாதிக்கும்

இவ்வுலகில் அனைவரும் மன்னிக்கப்படவேண்டியவர்களே

மன்னிப்போம் அமைதியாக, புது நண்பர்களை சந்திப்போம்


அன்பு ஆண்டவரே மன்னிக்க பக்குவம் தாரும்

என்னையும் மன்னியும். ஆமென்





 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆண்டின் பொதுக்காலம் முப்பத்திநான்காம் வாரம் கிறிஸ்து அரசர் பெருவிழா:  Our Lord Jesus Christ, King of the Universe 24.11.2024

ஆண்டின் பொதுக்காலம் முப்பத்திநான்காம் வாரம்   கிறிஸ்து அரசர் பெருவிழா :  Our Lord Jesus Christ, King of the Universe 24.11.2024 இய...