வெள்ளி, 17 ஜனவரி, 2020

பொதுக்காலம் இரண்டாம் ஞாயிறு (அ) 19,01,2020: Second Sunday in Ordinary Time



பொதுக்காலம் இரண்டாம் ஞாயிறு (
19,01,2020: Second Sunday in Ordinary Time

M. Jegankumar Coonghe OMI,
Sangamam, OSAC,
Kopay South, Kopay,
Jaffna, Sri Lanka.
Thursday, January 16, 2020


பொதுக்காலம் இரண்டாம் ஞாயிறு ()
15,01,2017

முதல் வாசகம்: எசாயா 49,3.5-6
பதிலுரைப்பாடல்: திருப்பாடல் 40
இரண்டாம் வாசகம்: 1கொரிந்தியர் 1,1-3
நற்செய்தி: யோவான் 1,29-34 




எசாயா 49,3.5-6
3அவர் என்னிடம், 'நீயே என் ஊழியன், இஸ்ரயேலே! உன் வழியாய் நான் மாட்சியுறுவேன்' என்றார். 5யாக்கோபைத் தம்மிடம் கொண்டு வரவும், சிதறுண்ட இஸ்ரயேலை ஒன்று திரட்டவும் கருப்பையிலிருந்தே ஆண்டவர் என்னைத் தம் ஊழியனாக உருவாக்கினார்; ஆண்டவர் பார்வையில் நான் மதிப்புப்பெற்றவன்; என் கடவுளே என் ஆற்றல்; அவர் இப்பொழுது உரைக்கிறார்: 6அவர் கூறுவது: யாக்கோபின் குலங்களை நிலைநிறுத்துவதற்கும் இஸ்ரயேலில் காக்கப்பட்டோரைத் திருப்பிக் கொணர்வதற்கும் நீ என் ஊழியனாக இருப்பது எளிதன்றோ? உலகம் முழுவதும் என் மீட்பை அடைதற்கு நான் உன்னைப் பிற இனத்தாருக்கு ஒளியாகவும் ஏற்படுத்துவேன்.

 எசாயா 49,1-13 வரையான பகுதி, இறைவனின் ஊழியனின் இரண்டாவது பாடல் என அறியப்படுகிறது. இந்த பாடலில் இஸ்ராயேல் ஆண்டவரின் ஊழியனாக காட்டப்படுகிறது. அத்தோடு அந்த ஊழியனின் சிறப்பும் விளக்கப்படுகிறது. ஆண்டவரின் ஊழியனின் சில கேள்விகளுக்கு பதிலளிப்பது போல தோன்றுகிறது. இந்த பகுதியை ஆய்வாளர்கள், இரண்டாவது எசாயாவின் புத்தகத்தினுள் நிலைநிறுத்துகின்றனர். இரண்டாவது எசாயா நம்பிக்கையையும் மன்னிப்பையும் மையப்படுத்துவதனை அவதானிக்கலாம். பாவங்களும், குற்றங்களும் தண்டனையை கொணர்ந்தாலும், ஆண்டவரின் இரக்கமும், அவர் செய்துகொண்ட உடன்படிக்கையும் எப்போதுமே அவர் மக்களுக்கு துணையாக வரும் என்ற ஆழான சிந்தனைகள் இந்த பகுதியினுள் இருப்பதைக் காணலாம். குற்றம் மற்றும் தண்டனை என்பதனைப் பொறுத்தமட்டில், 'உண்மையாக மனமாறும் பாவிகளுக்கு கடவுள் பெரும் மறதிக்காரர்' என்ற திருத்தந்தை பிரான்சிஸ்குவின் வரி நினைவுக்கு வருகிறது

.3: இஸ்ராயேல், முக்கியமாக யூதா தன்னுடைய அடிமை வாழ்வாலும், நம்பிக்கை இல்லாத நிகழ்கால வாழ்க்கையாலும் மனமுடைந்து போயிருந்தது. இந்த வேளையில் அவர்களின் முக்கியமான நம்பிக்கையான, கடவுளின் தேர்ந்துகொள்ளப்பட்ட இனம், என்ற நம்பிக்கையே கேள்விக்குறியாகியது. இந்த வேளையில் இன்னமும் இந்த மக்கள் கடவுளின் மக்கள்தான்,
என்ற உண்மை சொல்லப்படவேண்டியிருந்தது. இந்த வரியில் ஆசிரியர் இரண்டு விதமான உறுதிப்பாட்டை முன்வைக்கிறார்

. இஸ்ராயேல் கடவுளின் ஊழியன் (עַבְדִּי־אָתָּה יִשְׂרָאֵל ‘avdî-’āttāh yisrāel) . முதலாளி மற்றும் ஊழியன் உறவு முறை இஸ்ராயேலருக்கு மிக முக்கியமானது. ஏனெனில் இந்த உறவு முறையில்தான் அவர்கள் கடவுளுக்கு தம் பிரமாணிக்கத்தை வெளிக்காட்டினர், அத்தோடு கடவுளும் இந்த உறவில்தான்இவர்கள் தன் மக்கள் என்பதை ஏற்றுக்கொண்டார். எருசலேம் அழிக்கப்பட்டபோது இந்த ஊழியன்-உறவும் சிதைந்து போனது. ஒருவேளை இப்போது பபிலோனியர்கள் ஆண்டவரின் ஊழியர்களாக மாறிவிட்டார்களோ என்ற சந்தேகத்தையும் உருவாக்கியது. இதனை தெளிவு படுத்துகிறார் ஆசிரியர். ஆக இன்னும் ஆண்டவரின் ஊழியன் இஸ்ராயேல்தான் என நம்பிக்கை தருகிறார் ஆசிரியர்

. இஸ்ராயேல் வழியால்தான் கடவுள் மாட்சியுறுவார் (אֲשֶׁר־בְּךָ אֶתְפָּאָֽר ’ašer-bekā ’etpā’ār). கடவுளை மாட்சியுற வைப்பதுதான் இஸ்ராயேலின் ஒரே நோக்கமாகவும் கொள்கையாகவும் இருக்கவேண்டும் என்பது முதல் ஏற்பாட்டின் கட்டளை (ஒப்பிடுக இணைச்சட்டம் 4,6-8). இந்த கட்டளையை, எப்படி தோற்றகடிக்கப்பட்ட இனம் முன்னெடுக்க முடியும் என்பதுதான் இஸ்ராயேலர்களின் கேள்வியாக இருந்தது. இதனை நிவர்த்தி செய்கிறார் ஆசிரியர். இஸ்ராயேல் வழியாய் கடவுள் மாட்சியுறுவார் என்பது, இனி இஸ்ராயேல் தொடர்ந்தும் தோற்ற இனமாக இருக்க முடியாது என்பதைக் காட்டுகிறது. இஸ்ராயேலை வெற்றி கொண்டவர்களால், கடவுள் மாட்சியுறவில்லை என்பதையும் இந்த வரி காட்டுகிறது

.5: இந்த வரி ஆண்டவரின் ஊழியரின் அழைப்பபைப் பற்றி விவரிக்கின்றது. முதல் ஏற்பாட்டு மக்களுக்கு இந்த ஆண்டவரின் ஊழியர், எஞ்சியிருந்த இஸ்ராயேலையே குறித்தது. கிறிஸ்தவர்கள் இந்த வரியை தமக்கும், அல்லது கிறிஸ்துவுக்கும் பொருந்துவதாகக் காண்கின்றனர். இந்த ஊழியரின் முக்கியமான பணியாக, யாக்கோபை அவரிடம் கொண்டுவருதலும், சிதறுண்ட இஸ்ராயேலை ஒன்று திரட்டலும் இருக்கிறது. இந்த வரிகள் எழுதப்பட்ட போது இஸ்ராயேல் அடிமையாகவும், சிதறுண்டும் இருந்தது. ஆக இந்த வரி எதிர்காலத்தை விட நிகழ்காலத்தையே (அக்காலத்தை) நேரடியாக பிரதிபலித்தது
 அத்தோடு இந்த ஊழியர் தன்னை கடவுள், தன் தாயின் கருப்பையிலே (வயிற்றில்தேர்ந்துகொண்டதாக கூறுகிறார் (יֹצְרִי מִבֶּטֶן לְעֶבֶד לוֹ yôdzrî mibbeten le‘eved lô). இந்த சிலேடையின் காரணமாகத்தான் விரிவுரையாளர்கள், இந்த ஊழியர் ஒரு இறைவாக்கினராக அல்லது முக்கியமாக இயேசுவாக இருக்கவேண்டும் என்கிறார்கள். ஆனால் இது இஸ்ராயேலின் மிஞ்சிய இனத்தை ஒரு நபராக வர்ணிப்பது போலவே சூழழியலில் இருக்கிறது.
 ஆண்டவர் பார்வையில் நான் மதிப்புப் பெற்றவன் என்ற வரி, எசாயா புத்தகத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது. அத்தோடு பல கோணங்களில் இது பல அர்த்தங்களையும் கொடுக்கிறது
 (וְאֶכָּבֵד בְּעֵינֵי יְהוָה we’ekkāved be‘ênê YHWH). அதேவேளை, இந்த நிலைக்கு காரணம், கடவுள் தன் ஆற்றலாய் இருக்கிறார் என்ற சிந்தனையைக் கொடுக்கிறது. மதிப்பு பெற்றவர்கள்தான் சமுதாயத்தில் ஒரு நபராக கருதப்பட்டனர், மதிப்பு பெற்றவர்களால் தான் எதாவது மற்றவர்களுக்கு செய்ய முடிந்தது. இந்த ஊழியர்தான் கடவுளின் பார்வையில் மதிப்பு பெற்றவர் எனச் சொல்லி, தன்னால் இஸ்ராயேலுக்கு நம்பிக்கை கிடைக்கும் என்கிறார். அடுத்த வரி இந்த ஊழியரின் செயலை விவரிக்கின்றது.

. யாக்கோபின் குலங்களை நிலைநிறுத்தல்: இது ஒரு நம்பிக்கை. இந்த வரி எழுதப்பட்டபோது வட நாடு, இஸ்ராயேல் அசிரியாவினால் ஏற்கனவே அழிந்து போயிருந்தது, அதன் பத்து குலங்களும் (שִׁבְטֵי יַעֲקֹב šivtê ya‘mqôv), சிதைந்து போயிருந்தன. அவர்களுக்கு என்ன நடந்தது என்பதே அக்கால தென்நாட்டவருக்கு தெரியாதிருந்தது. சிலர் இவர்கள் அசிரியாவிற்கு நாடுகடத்தப்பட்டனர் என நம்பினர். சிலர் இவர்கள் எகிப்திற்கு சென்றுவிட்டார்கள் என்றும் நம்பினர். ஆனால் இவர்கள் நிச்சயமாக வடநாட்டை விட்டு தூரம் சென்றார்கள் என்பது மட்டும் தெளிவாகிறது. இவர்களை இந்த ஊழியர் ஒன்று கூட்டுவதாக சபதம் செய்கிறார். அத்தோடு இந்த குலங்களோடு தென்நாட்டு இரண்டு குலங்களையும் ஒன்றாக சேர்த்து ஒரே நாடு ஒரே இனம் என்ற தோரணையில் 
இறைவாக்குரைக்கிறார்

. இஸ்ராயேலின் காக்கப்பட்டோரை திருப்பிக் கொணர்தல்: இந்த இஸ்ராயேலர் என்பவர், வட நாட்டினரைக் குறிக்கின்றதா? அல்லது தென்நாட்டினரைக் குறிக்கின்றதா? அல்லது முழு 
இனத்தையும் குறிக்கிறதா? என்பதில் பல கேள்விகளும் விடைகளும் உள்ளன. சூழலியலில் வைத்து பார்க்கின்றபோது இது முழு இனத்தையும் குறிப்பதாகவே உள்ளது. அத்தோடு காக்கப்பட்டோரை திருப்பிக்கொணர்தல் என்ற பண்பு கடவுள்குரிய பண்பு, இது இந்த ஊழியருக்கு கொடுக்கப்படுவது மிகவும் அழகாக உள்ளது. (ஈழத்திலும், புலம்பெயர்ந்தவர்களை, நம்பிக்கை இழந்தவர்களை, துன்புறுகிறவர்களை, கடவுளோடு சேர்ந்து ஒவ்வொரு ஈழத் தமிழரும் மீட்கும் பணியை முன்னெடுத்தால் எவ்வளவு நலமாக இருக்கும்)

. இப்படியான பணிகளை செய்வது எளிதல்ல: இதுதான் உண்மை. ஏனெனில் இந்த செயற்பாடுகள் அக்கால சூழலில் கனவாகவே கருதப்பட்டது. இந்த வேளையில் தென்நாட்டவர், பபிலோனில் வாழ்ந்தனர், அத்தோடு பலர், பல நாடுகளில் அகதிகளாக வாழ்ந்தனர், இன்னும் பலர் செல்வந்தர்களாகவும், வெளிநாடுகளில் தங்களது அடையாளங்களை தொலைத்தவர்களாக அல்லது மாற்றியமைத்தவர்களாகவும் வாழ்ந்தனர். இதனால்தான் ஆசிரியர் இந்த கேள்வியை ஆண்டவரின் வாயில் வைக்கிறார். இந்த கேள்விக்கான விடை அன்று கிடைக்கவில்லை மாறாக 1947ம் ஆண்டிற்கு பின்னர் புதிய இஸ்ராயேல் நாடு உருவாகியபோதே ஒரளவு கிடைத்தது. ஈழத்தை பொறுத்தமட்டில் இதற்கான விடையை கடவுள்தான் தரவேண்டும்.... 2020ம் ஆண்டும் தரும் என்பது சந்தேகமாகவே உள்ளது.

. உலகம் முழுவதும் மீட்படைய இஸ்ராயேல் ஒளியாக மாற்றமடைகிறது. நாடுகளுக்கு ஒளி என்பது பலநாடுகளுடைய கனவு, பல நாடுகள் தங்களை உலகின் ஒளியாக கற்பனை செய்தார்கள். அசிரியா, பபிலோனியா, பாரசீகம், மேதியா, எகிப்பது, கிரேக்கம், உரோமை இன்னும் பல நாடுகள். இப்படியிருக்க சிறிய நாடாக இஸ்ராயேல் உலகின் ஒளியாக மாறுவதாக இறைவாக்குரைக்கப்படுகிறது. ஒளி (אוֹר ஓர்) என்பது முதல் ஏற்பாட்டில் கடவளின் அடையாளமாக பார்க்கப்படுகறிது. (காண்க தி.பா 27,1) இதே சிந்தனை புதிய ஏற்பாட்டிலும் காணக்கிடக்கிறது (❖❖யோவான் 1,9). இப்படியாக இந்த ஊழியர் கடவுளின் பிரசன்னமாக இஸ்ராயேலுக்கு மட்டுமல்ல முழு உலக மக்களினத்திற்கும் ஒளியாகிறார், அல்லது ஆகிறார்கள்.
(1ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு).
(❖❖அனைத்து மனிதரையும் ஒளிர்விக்கும் உண்மையான ஒளி உலகிற்கு வந்துகொண்டிருந்தது.)

திருப்பாடல் 40
1நான் ஆண்டவருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவரும் என் பக்கம் சாய்ந்து எனது மன்றாட்டைக் கேட்டருளினார்
2அழிவின் குழியிலிருந்து என்னை அவர் வெளிக்கொணர்ந்தார். சேறு நிறைந்த பள்ளத்தினின்று தூக்கியெடுத்தார்; கற்பாறையின்மேல் நான் காலூன்றி நிற்கச் செய்தார்; என் காலடிகளை உறுதிப்படுத்தினார். 3புதியதொரு பாடலை, நம் கடவுளைப் புகழும் பாடலை என் நாவினின்று எழச் செய்தார்; பலரும் இதைப் பார்த்து அச்சங்கொண்டு ஆண்டவர் மீது நம்பிக்கை கொள்வர்
4ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டவரே பேறுபெற்றவர்; அத்தகையோர் சிலைகளை நோக்காதவர்; பொய்யானவற்றைச் சாராதவர்
5ஆண்டவரே! எண்ணிறந்தவற்றை நீர் எமக்கெனச் செய்துள்ளீர்; உமக்கு நிகரானவர் எவரும் இலர்; என் கடவுளே! உம் அருஞ்செயல்களும் திட்டங்களும் எங்களுக்காகவே; அவற்றை நான் எடுத்துரைக்க விரும்புவேனாகில் அவை எண்ணிலடங்கா
6பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை; எரிபலியையும் பாவம் போக்கும் பலியையும் நீர் கேட்கவில்லை; ஆனால், என் செவிகள் திறக்கும்படி செய்தீர்
7எனவே, 'இதோ வருகின்றேன்; என்னைக் குறித்துத் திருநூல் சுருளில் எழுதப்பட்டுள்ளது
8என் கடவுளே! உமது திருவுளம் நிறைவேற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்; உமது திருச்சட்டம் என் உள்ளத்தில் இருக்கின்றது' என்றேன் நான்
9என் நீதியை நீர் நிலைநாட்டிய நற்செய்தியை மாபெரும் சபையில் அறிவித்தேன்; நான் வாயை மூடிக் கொண்டிருக்கவில்லை; ஆண்டவரே! நீர் இதை அறிவீர்
10உமது நீதியை நான் என் உள்ளத்தின் ஆழத்தில் மறைத்து வைக்கவில்லை; உம் வாக்குப்பிறழாமையைப் பற்றியும் நீர் அருளும் மீட்பைப்பற்றியும் கூறியிருக்கின்றேன்; உம் பேரன்பையும் உண்மையையும் மாபெரும் சபைக்கு நான் ஒளிக்கவில்லை
11ஆண்டவர் உமது பேரிரக்கத்தை எனக்குக் காட்ட மறுக்காதேயும்; உமது பேரன்பும் உண்மையும் தொடர்ந்து என்னைப் பாதுகாப்பனவாக!
12ஏனெனில், எண்ணிறிந்த தீமைகள் எனைச் சூழ்ந்து கொண்டன் என் குற்றங்கள் என்மீது கவிந்து என் பார்வையை மறைத்துக்கொண்டன. அவை என் தலைமுடிகளைவிட மிகுதியானவை; என் உள்ளம் தளர்ந்து என்னைக் கைவிட்டது
13ஆண்டவரே, என்னை விடுவிக்க மனமிசைந்தருளும்; ஆண்டவரே, எனக்கு உதவி செய்ய விரைந்து வாரும். 14என் உயிரைப் பறிக்கத் தேடுவோர் அனைவரும் அவமானமும் குழப்பமும் அடையட்டும்! என் கேட்டில் மகிழ்வுறுவோர் தலைகுனிந்து பின்னடையட்டும்
15என்னைப் பார்த்து '!!' என்போர் தாம் அடையும் தோல்வியினால் அதிர்ச்சியுறட்டும்
16உம்மைத் தேடுவோர் அனைவரும் உம்மில் மகிழ்ந்து களிகூரட்டும்! நீர் அருளும் மீட்பில் நாட்டங்கொள்வோர், 'ஆண்டவர் எத்துணைப் பெரியவர்!' என்று எப்போதும் சொல்லட்டும்
17நானோ ஏழை; எளியவன்; என் தலைவர் என்மீது அக்கறை கொண்டுள்ளார்; நீரே என் துணைவர், என் மீட்பர்! என் கடவுளே, எனக்குத் துணை செய்ய விரைந்து வாரும்.

 தாவீதுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பாடல் என்று இந்த திருப்பாலுக்கு ஒரு பிற்கால முன்னுரை கொடுக்கப்பட்டுள்ளது. இதனைக் கொண்டு இதனை தாவீதுதான் எழுதினார் என்று கருதமுடியாது. இந்த திருப்பாடல் இரண்டு பிரிவாக அதன் அர்த்தத்தினால் பிரிக்கப்பட்டுள்ளது. வரிகள் 1-11 புகழ்ச்சிப்பாடலாகவும், வரிகள் 12-17 உதவிக்கான மன்றாட்டாகவும் அமைந்துள்ளது. அழகான திருப்பிக்கூறல் எபிரேய கவிநடையில் அமைந்துள்ள இந்த திருப்பாடல், பல ஆழமான இறையில் கருத்துக்களை தன்னகத்தே கொண்டுள்ளது

.1: இந்த வரி ஆசிரியருடைய அல்லது பாடல் தலைவனுடைய பொறுமையைக் காட்டுகிறது. பொறுமை ஆண்டவரின் பார்வையை தன் பக்கம் திருப்பியதாக காட்டுகிறார். ஒருவர் பக்கம் ஆண்டவர் சாய்வதும், அவர் மன்றாட்டை கேட்பதும் ஒரே கருத்துள்ள உவமானங்கள்

.2: மூன்று அடையாளங்கள் கடவுள் ஆசிரியரின் பக்கம் திரும்பிப்பார்த்தார் என்பதை விவரிக்கின்றது. அழிவின் குழியிலிருந்து வெளிக்கொணர்தல் (இது மரண அனுபவத்தை குறிக்கலாம்), சேறு நிறைந்த பள்ளத்திலிருந்து தூக்குதல் (இது அவமானங்கள், துன்பங்களைக் குறிக்கலாம்), கற்பாறையின் மேல் நிற்கச் செய்தல். கற்பாறை உறுதியான நிலைமையைக் குறிக்கிறது. உறுதியில்லாத நிலை, அழிவின் நிலை, ஆனால் உறுதியான நிலை ஆண்டவர் தரும் ஆசிர் என காண்கிறார் ஆசிரியர்

.3: புதிய பாடலும், புகழ்ச்சிப்பாடலும் மகிழ்ச்சியின் வெளிப்பாட்டால் வருபவை. இதனை மகிழ்வாய் இருப்பவரால் மட்டுமே பாடமுடியும். இந்த பாடல் ஏன் மற்றவர்களுக்கு அச்சத்தை கொடுக்கிறது என்பது தெளிவாய் இல்லை. ஒருவேளை ஆசிரியர் தன் எதிரிகளை குறிப்பிடலாம். இந்த பாடலின் ஆசிரியர் தாவீதாக இருந்தார், இந்த வரிகளுக்கு பல அர்த்தங்கள் கொடுக்கப்படலாம். இருப்பினும், ஆசிரியர் தன் எதிரிகள் ஆண்டவர் மீது நம்பிக்கை கொண்டார்கள் என நல்ல முடிவுரை கொடுக்கிறார்

.4: யார் பேறுபெற்றோர் என்பது ஒரு முக்கியமான ஞான வாதம். இதற்கு விடைகொடுக்கிறார் ஆசிரியர். ஆண்டவர் மீது நம்பிக்கை கொண்டவர்களே பேறுபெற்றோர் என்கிறார். இதனையே புதிய ஏற்பாட்டில் இயேசுவும் முன்னிறுத்துவார். இவர்கள் சிலைகளையும், பொய்களையும் நோக்காதவர்கள் என்கிறார் ஆசிரியர். அக்காலத்தில் இஸ்ராயேலின் அருகில் இருந்த மக்கள் சிலைகளுக்கும், அடையாளங்களுக்கும் வழிபாடு செய்தார்கள், இதனை பொய் என்கிறார் இந்த ஆசிரியர்

.5: இந்த வரி ஆசிரியரின் கடவுள் அனுபவத்தைக் காட்டுகிறது. கடவுள் தனக்கு எண்ணிறந்தவற்றை செய்ததாகவும், அவை எண்ணிலடங்காததாகவும் காண்கிறார். கடவுளுக்கு நிகரானவர் எவரும் இல்லை என்பதுதான் இந்த பாடலின் மையக் கருத்து என்றுகூடச் சொல்லலாம்

.6: இந்த வரி உண்மையான இஸ்ராயேலின் வழிபாட்டைக் காட்டுகிறது. எருசலேம் தேவாலயம் அதன் கணக்கிலடங்கா மிருகப்பலிக்கு பெயர்பெற்றது. ஆனால் இந்த மிருகப்பலிகள் இஸ்ராயேலின் ஆன்மீகம் இல்லை என்பதை இந்த வரி அழகாகக் காட்டுகிறது. பலி, காணிக்கை, எரிபலி, மற்றும் பாவம் போக்கும் பலி இவை அக்காலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற பலிமுறைகள். இவற்றைவிட கீழ்படிதலையே கடவுள் விரும்புகிறார் என இஸ்ராயேலின் உண்மை வழிபாட்டை காட்டுகிறார் ஆசிரியர். இந்த வரியிலிருந்து இந்தப் பாடல் ஒருவேளை எருசலேம் தேவாலய அழிவின் பின் அல்லது மிருகப் பலிகள் இல்லாதபோது எழுதப்பட்டதோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது

.7: தன்னைப் பற்றி திருநூலில் எழுதப்பட்டுள்ளதாக ஆசிரியர் கூறுகிறார். திருநூல் என்பது இங்கே (מְגִלַּת־סֵ֝פֶר megillat-seper), சட்ட புத்தகங்களைக் குறிக்கிறது. இந்த பாடல் ஒரு அரச பாடலாக இருக்கிற படியால் இது அரச சட்டங்களை குறிக்கலாம் என சிலர் வாதிடுகின்றனர் (ஒப்பிடுக . 17,14-20)

.8: கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுவதே உண்மையான பலி என்கின்ற இஸ்ராயேலின் ஆன்மீகம் அழகாக வரியிடப்படுகிறது. இறைவனின் திருச்சட்டம் (תוֹרָת tôrāt) ஒருவரின் உள்ளத்தில் இருத்தல் என்பது அவரின் உண்மையான வாழ்வைக் காட்டுகிறது. இதனைத்தான் அவர் உண்மைப் பலி என்கிறார்

.9: ஆசிரியர் சொல்லும், மாபெரும் சபை (קָהָל கஹால்) என்பது இஸ்ராயேல் மக்கள் கூட்டத்தைக் குறிக்கலாம். இஸ்ராயேலையும், திருச்சபையையும் ஒரு மகா சபையாக கருதுவது இந்த அர்த்தத்திலே தொடங்குகிறது. ஆண்டவர்-அனுபவத்தை அறிவிக்காமல் இருத்தல் நல்ல பண்பல்ல என்பதை ஆசிரியர் அறிந்திருக்கிறார்

.10: ஆண்டவருடைய நீதி (צְדָקָה dzedāqāh) தியானிக்கப்பட வேண்டியதில்லை, மாறாக அது வாழப்படவேண்டியது என்கிறார். அத்தோடு இந்த நீதி, வாக்கு பிறழாமையும், மீட்பும், பேரன்பும், மற்றும் உண்மையும் என்பது இவர் விளக்கம்

.11: இந்த வரி ஆசிரியரின் மன்றாட்டாக அமைகிறது. ஆண்டவரின் பேரிரக்கம் (רַחֲמִים rahamim), மற்றும் பேரன்பு (חֶסֶד hesed) என்பவைதான் தன்னை பாதுகாக்கும் சக்திகளாக காண்கிறார். இந்த வரியோடு  இந்த பாடல் புகழ்ச்சிப்பாடல் என்ற அமைப்பிலிருந்து மன்றாட்டு பாடலாக மாறுகிறது

.12: பாவமன்னிப்பு அமைப்பில் தன்னுடைய பழைய கால வாழ்க்கையை மீளாய்வு செய்கிறார். தான் பல தீமைகளை செய்ததாகவும், அவை தன் தலைமுடியிலும் அதிகமானவை என்கிறார் ஆசிரியர். இந்த பாவங்களின் பலமான எண்ணிக்கை தன்னுடைய துணிவையும் தகர்த்துவிட்டது என்கிறார். இந்த பாடலின் ஆசிரியர் தாவீதாக இருந்தால், இந்த வரிகள் அவருக்கு நன்றாக பொருந்தும். தாவீது தன்னுடைய குற்றங்களை ஏற்றுக்கொண்டு திருந்துவதில் தனக்குதானே நிகரானவர்இந்த வரிகளை ஒப்பிடுகின்றபோது இந்த பாடல் இரண்டு பாடல்களின் சேர்ப்பு போல தோன்றுகிறது

.13: யார் இந்த குற்ற உணர்வுகளிலிருந்தும், பாவக் கறைகளிலிருந்தும் பாதுகாக்கிறவர்? அவர் கடவுள் ஒருவரே என்பதையும் ஆசிரியர் நன்கு உணர்ந்திருக்கிறார்

.14: ஆசிரியர் தன்னுடைய எதிரிகளுக்கு தண்டனை கேட்கிறார். தன்னுடைய உயிரை பலர் பறிக்க தேடுகிறார்கள் என்கிறார். தாவீது தன்னுடைய சொந்த பிள்ளைகளாலேயே துரத்ததப்பட்டதை விவிலிய வரலாறு காட்டுகிறது. தாவீது தன்னை கொலை செய்ய நினைத்தவர்கள் மரணமடையவேண்டும் என்று வேண்டாதது வித்தியாசமாக இருக்கிறது. தாவீது தன் சொந்த பிள்ளைகள் இறக்க வேண்டும் என எண்ணியதில்லை. தலை குனிந்து பின்னடைதல், என்பது தோல்வியைக் குறிக்கும், இதனையே தாவீது இரஞ்சுகிறார்

.15: தமிழில் ஆஹா, ஆஹா என்று மகிழ்சியில் சொல்லப்படும் வியப்புக்குறிக்கு சமமான ஒத்த ஓசையுடைய வார்த்தைகள் எபிரேயத்திலும் உள்ளன (הֶאָח ׀ הֶאָֽח ஹெகாஹ் ஹெகாஹ்). இந்தச் சொல்லும் ஓசையும் பல மொழிகளில் ஒரேவிதமாக காணப்படுகின்றன. இந்த வெற்றியின் ஓசைகள், இதனை ஆசிரியர் இறுமாப்பின் ஓசையாகக் காண்கிறார்

.16: இந்த வரியோடு, இந்த திருப்பாடல் மீண்டுமாக புகழ்ச்சிப்பாடலாக மாற்றம் பெறுகிறது. தன் எதிரிகளை சபித்தவர், இப்போது நல்லவர்களுக்காக மன்றாடுகிறார். இறைவனை தேடுவோர் (מְבַקְשֶׁיךָ mevaqšêkā உம்மைத் தேடுவோர்) நல்லவர்களாக காட்டப்படுகிறார்கள். இவர்கள் ஆண்டவரின் மீட்பில் நாட்டம் உள்ளவர்கள் என ஒத்த சொல்லிடப்படுகிறார்கள்

.17: தன்னையும் தன் கடவுளையும் வரைவிலக்கணப்டுத்துகிறார். தன்னை ஏழை ஏளியவன் என்கிறார், இதற்கு எபிரேயத்தில் ஒத்த ஒலியுடைய வார்த்தைகள் பாவிக்கப்பட்டுள்ளன (אֲנִי ׀ עָנִי וְאֶבְיוֹן அனி அனி அவ்யோன்). கடவுளை தன்னுடைய துணையாளராகவும் (עֶזְרָתִי ‘edzrātî), மீட்பராகவும் (מְפַלְטִי mepaltî) காண்கிறார். திருச்சபை தந்தையர்கள் இந்தப் பெயரை தூய ஆவியானவர்க்கும்இயேசுவிற்கும் ஒத்த கருத்துச் சொற்களாக பாவிக்கின்றனர்


1கொரிந்தியர் 1,1-3
1-3கொரிந்து நகரிலுள்ள கடவுளின் திருச்சபைக்கு அவர் திருவுளத்தால் கிறிஸ்து இயேசுவின் திருத்தூதனாக அழைக்கப்பட்ட பவுலும் சகோதரராகிய சொஸ்தேனும் எழுதுவது: இயேசு கிறிஸ்துவோடு இணைக்கப்பெற்றுத் தூயோராக்கப்பட்டு இறைமக்களாக இருக்க அழைக்கப்பட்டுள்ள உங்களுக்கும், எல்லா இடங்களிலும் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை அறிக்கையிடும் யாவருக்கும், நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் அருளும் அமைதியும் உரித்தாகுக! இயேசு கிறிஸ்து நமக்குமட்டும் அல்ல, அனைவருக்கும் ஆண்டவர்.

 கொரிந்து, கிரேக்கர் காலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற நகரமாக இருந்து, போரினாலும் வேறு பல காரணங்களினாலும் அழிந்து போனது. உரோமையர் இதனை முதலாம் நூற்றாண்டில் கட்டியெழுப்பி அதன் பழைய மாட்சிக்கு கொண்டுவந்தனர். உரோமையர் கால கொரிந்து, அறிவியல் கலாச்சாரத்தை விட, களியாட்டங்களுக்கே பெயர் பெற்றிருந்தது. யூலியஸ் சீசர் இதன் மீள்நிர்மானத்திற்க்கு முக்கியத்துவம் கொடுத்தார். ஆரம்ப கிறிஸ்தவர்கள் மற்றும் பவுலுடைய காலத்தில் இந்த கொரிந்து அரசியல் மற்றும் சமூக முக்கியத்துவம் பெற்ற நகராக மாறியிருந்தது. இதனுடைய கேந்திர முக்கியத்துவத்தின் காரணமாக செல்வம் இங்கே கொழித்தது. கப்பல் மற்றும் கடல் வணிகமே இங்கே மிக முக்கியமான தொழிலாக கருதப்பட்டது. உரோமையர் கொரிந்தை அழித்தபோது அதன் கிரேக்க மதங்களும் அழிந்தன, ஆனால் இதனை அவர்கள் மீள்நிர்மானித்த போது அதன் பழைய மதங்கள் தழைக்கத் தொடங்கின. அத்தோடு உரோமை மதங்களும் அங்கே வளரத்தொடங்கின. பல கிரேக்க மற்றும் உரோமைய கடவுள்களின் வழிபாடுகளைப் பற்றிய தரவுகள் இன்னமும் கொரிந்தில் ஆய்வுசெய்யப்படுகின்றன
  புதிய ஏற்பாட்டுக் காலத்தில் கிறிஸ்தவம் இங்கே வளரத் தொடங்கியது. கொரிந்தின் கிறிஸ்தவத்திற்கும், பவுலுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. பவுல் கொரிந்திய திருச்சபைக்கு பல கடிதங்களை எழுதியதாக நம்பப்படுகிறது (அநேகமாக நான்கு கடிதங்கள்), அதில் இரண்டு மட்டுமே நம்முடைய கரங்களுக்கு, விவிலியத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. ஆரம்ப கால கொரிந்திய திருச்சபை பல சிக்கல்களை சந்தித்தாலும், பிரிவினைவாதம் அந்த சிக்கல்களில் மிக முக்கியமானதான பாhக்கப்படுகிறது
  கொரிந்தியர் முதலாவது திருமுகம், பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதலாவது திருமுகம் எனச் சொல்வதற்கில்லை. இதற்கு முன் அவர் ஒரு திருமுகத்தை எழுதியிருக்க வேண்டும் அது திருச்சபைக்கு பாவனையில் கிடைக்கவில்லை. இந்த கடிதத்தின் ஆசிரியராக பாரம்பரியம் பவுலையும் சொஸ்தேனையும் நம்புகின்றது. அநேகமாக இந்தக் கடிதம் எபேசில் இருந்து எழுதப்பட்டிருக்க வேண்டும். கிட்டத்தட்ட கி.பி 53-55ம் ஆண்டளவில் இந்த கடிதம் எழுதப்பட்டிருக்க வேண்டும். சிலர் இந்த காலத்திற்கு முன்னான காலத்தையும் முன்மொழிகின்றனர்

.1: இந்த வசனம் பல முக்கியமான அக்கால திருச்சபையின் நம்பிக்கைகளை நமக்கு காட்டுகின்றன. பவுல் தன்னை அழைக்கப்பட்ட கிறிஸ்துவின் அப்போஸ்தலன் (திருத்தூதர்) என்கிறார் (κλητὸς ἀπόστολος  Χριστοῦ Ἰησοῦ klētos apostolos Cristou Iēsou). இந்த அழைப்பு கடவுளின் விருப்பத்தால் (διὰ θελήματος θεοῦ dia delêmatos deou) கிடைத்தது என்கிறார். ஆரம்ப கால திருச்சபையில், பவுலைப் பற்றிய சில கருத்து முரண்பாடுகள் காணப்பட்டன. அதில் முக்கியமானது அவருடைய அப்போஸ்தலத்துவம். பவுல், இயேசுவால் அவர் மனிதராக வாழ்ந்த போது நேரடியாக அழைக்கப்படாதவர். இதனால் இவர் திருத்தூதர்களில் ஒருவர் இல்லை என்ற வாதம் முன்வைக்கப்பட்டது. இது பல மனவுழைச்சல்களை பவுலுக்கு தந்தது. இதனை பவுல் தன்னுடைய தமஸ்கு நகர் நோக்கிய பயண அனுபவத்தின் மூலமாக தெளிவு படுத்தி, தானும் கிறிஸ்து இயேசுவால் பெயர் சொல்லி அழைக்கப்பட்ட திருத்தூதன் என்பதை விளக்குவார். இதனையே இங்கேயும் கொரிந்தியருக்கு தெளிவு படுத்துகிறார்
 சொஸ்தேனஸ் என்பவரை நம் சகோதரர் என்கிறார் பவுல் (Σωσθένης ὁ ἀδελφὸς dzôsdenês ho adelfos). திருத்தூதர் பணிகள் நூல் 18, 12-17 இவரை ஒரு செபக்கூட தலைவராக காட்டுகிறது. இவர் பவுல் பொருட்டு உரோமைய ஆளுநன் கல்லியோ முன்னாலே யூதர்களால் அடிபடுகிறார். பின்னர் இதே பெயருடைய நபர் இன்றைய வாசகத்தில் வருகிறார். இந்த இரண்டுபேரும் ஒருவரா அல்லது இரண்டு வேறு நபர்களா என்பதில் பல கேள்விகள் உள்ளன. ஒருவராக இருக்கவும், இருவராக இருக்கவும் பல வாய்ப்புக்கள் உள்ளன

.2: கொரிந்தில் உள்ளது கடவுளின் திருச்சபை என்கிறார் பவுல் (ἐκκλησίᾳ τοῦ θεοῦ ekklêsia tou deou). திருச்சபையிலே இருந்த பிரதேச வாதங்களுக்கு இது நல்ல சவுக்கடி. அன்றிலிருந்து இன்றுவரை பிரதேச வாதமும், பிளவுகளும் திருச்சபையின் காலை சுற்றிய விசப் பாம்பாகவே நோக்கப்பட வேண்டும். கொhந்தியருக்கு தங்கள் திருச்சபை யாருடைய திருச்சபை என்பதில் பல சந்தேகங்கள் இருந்தன. இதனை முடிவு கட்டுகிறார் பவுல். கொரிந்து, கடவுளுடைய திருச்சபை. இந்த திருச்சபை கிறிஸ்துவில் புனிதமாக்கப்பட்டுள்ளது என்றும் மேலதிகமாக அதன் வரைவிலக்கணத்தை விளக்குகிறார் (ἡγιασμένοις ἐν Χριστῷ Ἰησοῦ êgiasmenois en Cristô). திருச்சபையை புனிதமாக்குவது எவருடைய மனித ஆற்றுலுமல்ல மாறாக இயேசுவின் ஆற்றல் என்பது இங்கே நன்கு புலப்படுகிறது. அத்தோடு இந்த திருச்சபை புனிதர்களாக வாழ அழைக்கப்பட்டுள்ளது என்றும் மேலதிகமாக சொல்கிறார் (κλητοῖς ἁγίοις klêtois hagiois). ஆரம்ப காலத்திலே அனைத்து கிறிஸ்தவர்களும் புனிதர்களாகவே கருதப்பட்டார்கள் அல்லது புனித வாழ்வுக்கு அழைக்கப்பட்டார்கள்இந்த புனிதத்துவத்தை அவர்கள் எல்லா இடங்களிலும், வேளைகளிலும் வாழ அழைக்க்பபட்டதை இந்த வரியின் இறுதி வசனம் காட்டுகிறது (σὺν πᾶσιν τοῖς ἐπικαλουμένοις τὸ ὄνομα τοῦ κυρίου ἡμῶν Ἰησοῦ Χριστοῦ ἐν παντὶ τόπῳ αὐτῶν   καὶ ἡμῶν· எல்லா இடங்களிலும் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை அறிக்கையிடும் யாவருக்கும்,) ஆக புனிதர்கள் பரலோக வாசிகள் அல்ல, அவர்கள் பூலோக வாசிகளும் கூட என்பது சாலப் புலப்படுகிறது. இந்த தூய வாழ்வு அனைத்து இடங்களிலும் இயேசுவின பெயரால் வாழ அழைக்கப்படுகிறது

.3: இவர்களுக்கு இயேசு கிறிஸ்துவின் பெயராலும், தந்தையாகிய கடவுளின் பெயராலும், அருளும் (χάρις காரிஸ்) அமைதியும் (εἰρήνη எய்ரேனெ) ஆசிக்கப்படுகிறது. இது அக்காலத்தில் வழிக்கிலிருந்த ஒரு பிரசித்தி பெற்ற வாழ்த்து. ஆரம்ப கால திருச்சபைக்கு இந்த அமைதியும், ஆசீரும் அதிகமாகவே தேவைப்பட்டன, நமக்கும் இன்னும் அதிகமாக தேவைப்படுகிறன



யோவான் 1,29-34
29மறுநாள் இயேசு தம்மிடம் வருவதைக் கண்ட யோவான், 'இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி! ஆட்டுக்குட்டியாம் இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர். 30எனக்குப்பின் வரும் இவர் என்னைவிட முன்னிடம் பெற்றவர்; ஏனெனில் எனக்கு முன்பே இருந்தார் என்று நான் இவரைப்பற்றியே சொன்னேன். 31இவர் யாரென்று எனக்கும் தெரியாதிருந்தது. ஆனால் இஸ்ரயேல் மக்களுக்கு இவரை வெளிப்படுத்தும் பொருட்டே நான் வந்துள்ளேன்; தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தும் வருகிறேன்' என்றார்.
32தொடர்ந்து யோவான் சான்றாகக் கூறியது: 'தூய ஆவி புறாவைப்போல வானிலிருந்து இறங்கி இவர் மீது இருந்ததைக் கண்டேன். 33இவர் யாரென்று எனக்கும் தெரியாதிருந்தது. ஆனால் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கும்படி என்னை அனுப்பியவர் 'தூய ஆவி இறங்கி யார்மீது இருப்பதைக் காண்பீரோ அவரே தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பவர்' என்று என்னிடம் சொல்லியிருந்தார். 34நானும் கண்டேன்; இவரே இறைமகன் எனச் சான்றும் கூறிவருகிறேன்.'

யோவான் நற்செய்தியில் இயேசுவின் குழந்தைப்பருவம் விவரிக்கப்படவில்லை, அதற்கு மாறாக இயேசுவின் இறை-மூலம் அல்லது தெய்வீக-ஆரம்பம் விவரிக்கப்படுகிறது. இதற்கு பல காரணங்கள் இருந்திருக்கலாம். மத்தேயுவும், லூக்காவும் இயேசுவின் மனித தொடக்கத்தையும், அவரின் குழந்தை பருவத்தையும் நன்கு விவரிப்பதால், யோவான் அதனை தவிர்த்திருக்கலாம். அல்லது இயேசுவின் இறை மூலத்தை பற்றிய தரவுகளை தெரிவிக்க வேண்டிய தேவை யோவானின் திருச்சபைக்கு இருந்திருக்கலாம். அல்லது கிரேக்க வடிவத்தில் இயேசுவை மூலப் பொருளாகக் காட்ட யோவான் முயன்றிருக்கலாம். அல்லது இயேசுவைப் பற்றிய பிழையான தப்பறைகளை நிவர்த்தி செய்ய இவர் இந்த வழிமுறையைக் கையாண்டிருக்கலாம். திருமுழுக்கு யோவானை முன்னிலைப்படுத்திய அவருடைய சீடர்கள் சிலரால் எழுந்த கேள்விகளுக்கு விடைகாண்பது போலவும் யோவான் நற்செய்தியின் முதல் அதிகாரம் இருப்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். யோவான் நற்செய்தியாளர், திருமுழுக்கு யோவானை இயேசுவின் அறிவிப்பாளனாக காட்டினாலும், திருமுழுக்கு யோவானின் மதிப்பிற்கு எந்தவிதமான களங்கத்தையும் ஏற்படுத்தாமல் தனது செய்தியை தெளிவாக சொல்கிறார். இதனால்தான் இந்த பகுதி திருமுழுக்கு யோவானின் சாட்சியம் என்ற தலைப்பில் பல விவிலியங்களில் பதியப்பட்டுள்ளது

.29: இதற்கு முன் இயேசு யோர்தான் நதியில் யோவானின் கரத்தாலே திருமுழுக்கு பெற்றிருந்தார். அத்தோடு யோவான் இயேசுவின் பாதணிகளை அவிழ்க்க தனக்கு தகுதியில்லை என்பதையும் தெரிவித்திருந்தார். இந்த பகுதி மறுநாள் நடப்பதாக யோவான் நற்செய்தியாளர் அறிவிக்கிறார். ஆக இது எங்கே நடந்தது என்பதில் தெளிவில்லாமல் இருக்கிறது. இந்த வரியில் திருமுழுக்கு யோவான் இயேசுவை 'கடவுளின் ஆட்டுக்குட்டி' (ὁ ἀμνὸς τοῦ θεοῦ ho amnos tou deou) என்கிறார். ஆட்டுக்குட்டி, உண்மையில் செம்மறியாட்டுக் குட்டி என்பது, யோவான் நற்செய்தில் ஒரு முக்கியமான அடையாளம். யூதர்களுக்கு செம்மறி ஒரு முக்கியமான பலி-மிருகம், இதனை பல வேளைகளில் பாவத்தை போக்கும் பலியாகவும், ஒப்புரவு பலியாகவும் கடவுளுக்கு ஒப்புக்கொடுத்தனர். தொடக்க நூலில் இப்படியான ஒரு செம்மறியைத்தான் ஆபிரகாம் மலையில் ஒப்புக்கொடுத்தார். மலையில் ஆபிரகாம் ஒப்புக்கொடுத்த செம்மறி, இயேசுவிற்கு முன்னடையாளம் என பலர் பின்னர் விளக்கினர் (காண்க தொ.நூல் 22,8). லேவியர் புத்தகம் இப்படியான செம்மறி ஆட்டுக்குட்டியின் பலியைப் பற்றி பல விளக்கங்களைத் தருகிறது (மேலும் ஒப்பிட லேவி 3,7: 4,32: 5,7: 12,6: 14,10).
  அத்தோடு இந்த ஆட்டுக்குட்டி (இயேசு), உலகின் பாவங்களை போக்குகிறது என்கிறார் திருமுழுக்கு யோவான். பாவத்தை போக்கியது என்றல்லாமல், பாவத்தை போக்குகிறது என்று ஒரு வினையெச்ச பெயர்சொல் பாவிக்கப்படுகிறது (ὁ αἴρων ho airôn ). இப்படியாக பாவத்தை போக்கும் இயேசுவின் செயல் தொடர்ந்து நடைபெறும் செயல் என்றாகிறது
(8அதற்கு ஆபிரகாம், 'எரிபலிக்கான ஆட்டுக் குட்டியைப் பொறுத்த மட்டில், கடவுளே பார்த்துக்கொள்வார் மகனே' என்றார். இருவரும் சேர்ந்து தொடர்ந்து நடந்தனர்.).

.30: தான் ஏற்கனவே இயேசுவைப் பற்றி சொன்னதை மீள நினைவூட்டுகிறார். அதாவது இயேசு திருமுழுக்கு யோவானுக்கு பின் வந்தாலும் அவர்தான் முதன்மையானவர். அவர் தனக்கு முன்னமே இருந்தவர் என்கிறார் (γέγονεν ὅτι πρῶτός μου ἦν gegonen hoti prôtos mou ên). இந்த சொல் இயேசுவை, காலத்தை கடந்த இறைவனாகவும், யோவானை ஒரு சாதாரண மனிதனாகவும் காட்டுகிறதுவிவிலியத்தில் இரண்டாவதாக வருகிற பலர், முதன்மையாவதை முதல் ஏற்பாடு நமக்கு காட்டுகிறது: இஸ்மாயில்-ஈசாக்கு, எசா-யாக்கோபு, பதினொருவர்-யோசேப்பு, ஆரோன்-மோசே, மானாசே-எப்ராயிம், தாவீதின் சகோதரர்கள்-தாவீது, அப்சலோம் மற்றய சகோதரர்கள்-சாலமோன்இன்னும் பல உதாரணங்களை இவ்வாறு காணலாம். இவை வியப்பாக உள்ளது, இருப்பினும் இதில் முக்கியமான செய்தியுள்ளது

.31: இயேசு யார் என்று பலருக்கு தெரியாமல் இருந்தது என்பதை திருமுழுக்கு யோவான் ஏற்றுக்கொள்கிறார். அந்த அறியாமைக்குள் தன்னையும் தாழ்ச்சியோடு உள்வாங்குகிறார். இந்த அறியாமைதான் அவர் வெளிப்படுத்தப்பட காரணமாக அமைந்தது என்று சொல்வது நற்செய்தியாளர் யோவானின் தனித்துவ எழுத்து முறை. இயேசு வெளிப்படுத்தப்பட்டார் என்று ஒரு செயற்பாட்டு வினை பாவிக்கப்பட்டுள்ளது (φανερωθῇ fanerôdê அவர் வெளிப்படுத்தப்பட்டார்). அதாவது இயேசுவை வெளிப்படுத்துவதே தன்னுடைய வருகையின் முக்கியமான மற்றும் ஒரே காரணம் என்கிறார் திருமுழுக்கு யோவான். இந்த பணிதான் தன்னை தண்ணீரால் திருமுழுக்கு கொடுக்கவைக்கிறது என்கிறார். அதாவது அவருடைய திருமுழுக்கு மட்டுப்படுத்தப்பட்ட திருமுழுக்கு, அத்தோடு அது மனிதரின் திருமுழுக்கு. இறுதியாக இந்த வெளிப்பாடு முழு இஸ்ராயேலுக்கும் வெளிப்படுத்தப்படுகிறது

.32: இந்த வரி மிக மிக முக்கியமான வரி. யோவான், இயேசுவின் மீது தூய ஆவியார் புறா வடிவில் இறங்கி இருப்பதைக் கண்டதாக சாட்சியம் சொல்கிறார். இது யோவானுடைய இறைவாக்கு. முதல் நூலில் இந்த ஆவி மெசியாவின் அருட்பொழிவைக் குறிக்கிறது (காண்க எசா 11,2: ❖❖42,1). இப்படியாக முதல் ஏற்பாட்டு மெசியா, இயேசுதான் என்பதை விளக்குகிறார் யோவான். தூய ஆவியை புறாவாக யோவான் சொல்லவில்லை மறாக புறாவைப்போல, என்று ஒப்பிடுகிறார் (ὡς περιστερὰν hôs peristeran). அத்தோடு இந்த புறா வானம் அல்லது பரலேகத்திலிருந்து இறங்கி இயேசு மீது இருந்ததாகவும் காட்டப்படுகிறது. தூய ஆவியாரைப்பற்றிய பல ஆழமான கருத்துக்களை யோவான் முதன்மைப்படுத்துவார். (மேலும் வாசிக்க, யோவான் 3,5: 3,34: 7,38-39: 20,22) 
(2ஆண்டவரின் ஆவி அவர்மேல் தங்கியிருக்கும்; ஞானம், மெய்யுணர்வு, அறிவுரைத்திறன், ஆற்றல், நுண்மதி, ஆண்டவரைப்பற்றிய அச்ச உணர்வுஇவற்றை அந்த ஆவி அவருக்கு அருளும்.)
(❖❖1இதோ! என் ஊழியர்! அவருக்கு நான் ஆதரவு அளிக்கிறேன்; நான் தேர்ந்துகொண்டவர் அவர்; அவரால் என் நெஞ்சம் பூரிப்படைகின்றது; அவருள் என் ஆவி தங்கும்படி செய்தேன்; அவர் மக்களினங்களுக்கு நீதி வழங்குவார்.)

.33: மீண்டுமாக தன்னுடைய அறியாமையை தெரிவிக்கிறார். இயேசு யார்றென்னு தெரிந்து கொள்வது அவ்வளவு இலகுவான விடயமல்ல மாறாக அது அருளப்படவேண்டும் என்பது இங்கனம் புலம்படுகிறது. யோவான் தன்னை அனுப்பியவர் தனக்கு இட்ட கட்டளையை மக்களுக்கு விளக்குகிறார். யார் யோவானை அனுப்பியவர் (πέμψας pempsas). வாசகர்களுக்கு இந்த அனுப்பியவர் கடவுள் என்பது புரியும். இப்படியாக யோவான் தனக்கு கடவுளோடு நெருக்கிய தொடர்பிருந்ததாகவும், தான் செய்வது என்வென்று தனக்கு நன்கு தெரிந்திருந்ததாகவும் சொல்கிறார். யோவானுக்கு கொடுக்கப்பட்ட அடையாளம், தூய ஆவி. இந்த தூய ஆவியை புறா வடிவில் இயேசுவின் தலையில் கண்டதால், யோவான் இயேசுவை மெசியாவாக அடையாளம் காண்கிறார் அத்தோடு அவரை மற்றவருக்கு அடையாளமும் காட்டுகிறார்.

.34: இந்த வரியின் சொற்பிரயோகங்கள் யோவான் புத்தகங்களுக்கு மிக முக்கியமானது. யோவான் தான் இயேசுவைக் இறைமகனாக (ὁ υἱὸς τοῦ θεοῦ ho huios tou deou), கண்டதாகவும் (ἑώρακα eôraka), மற்றும் அறிக்கையிடுவதாகவும் (μεμαρτύρηκα memarturêka) கூறுகிறார். இந்த காணுதலையும் அறிக்கையிடுதலையும், யோவான் நற்செய்தியாளர், ஒவ்வொரு வாசகரிடமும் இருந்து எதிர்பாhக்கிறார். இன்னும் சில இடங்களில் இந்த வார்த்தைகள் காணக்கிடக்கின்றன, -ம் காண்க 1யோவான் 1,2: ❖❖4,14).
(2வெளிப்படுத்தப்பட்ட அந்த வாழ்வை நாங்கள் கண்டோம். அதற்குச் சான்று பகர்கிறோம். தந்தையோடு இருந்ததும் எங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டதுமான அந்த 'நிலைவாழ்வு' பற்றி உங்களுக்கு அறிவிக்கிறோம்.).
(❖❖14தந்தை தம் மகனை உலகிற்கு மீட்பராக அனுப்பினார் என்பதை நாங்களே கண்டறிந்தோம்; சான்றும் பகர்கிறோம்.).

இயேசுவைப் பற்றி அறிக்கையிடுவது இலகு
அவரைப் புகழ்வதும் இலகு, ஆனால் 
இயேசுவை காண்பதும், கண்ட அவரை,
சாட்சியம் பகர்வதும் அவ்வளவு இலகல்ல, ஆனாலும் முடியுமானது.

அன்பு ஆண்டவரே,
உம்மைக் காணவும், சாட்சியம் சொல்லவும் வரம் தாரும். ஆமென்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆண்டின் பொதுக்காலம் முப்பத்திநான்காம் வாரம் கிறிஸ்து அரசர் பெருவிழா:  Our Lord Jesus Christ, King of the Universe 24.11.2024

ஆண்டின் பொதுக்காலம் முப்பத்திநான்காம் வாரம்   கிறிஸ்து அரசர் பெருவிழா :  Our Lord Jesus Christ, King of the Universe 24.11.2024 இய...