ஆண்டின் பொதுக்காலம் முப்பத்திநான்காம் வாரம் கிறிஸ்து அரசர் பெருவிழா
(இரக்கத்தின் யூபிலி ஆண்டு நிறைவு)
24,11,2019 - Christ the King
ஆண்டின் பொதுக்காலம் முப்பத்திநான்காம் வாரம்
கிறிஸ்து அரசர் பெருவிழா
24,11,2019
M. Jegankumar Coonghe OMI,
‘Sangamam,’
Oblate Spiritual Animation Centre,
Kopay South,
Kopay, Jaffna, Sri Lanka.
Wednesday, November 20, 2019
முதல் வாசகம்: 2சாமு 5,1-3
பதிலுரைப்பாடல்: திருப்பாடல் 122
இரண்டாம் வாசகம்: கொலோசேயர் 1,12-20
நற்செய்தி: லூக்கா 23,35-43
இயேசு ஆண்டவர் அரசரா? ஆண்டவர் எப்படி அரசராக முடியும்???
எபிரேய மொழி அரசனை (מֶלֶךְ மெலக்) எனவும், கிரேக்க மொழி (βασιλεύς பசிலெயுஸ்) எனவும் அழைக்கின்றன. அரசன், அரசு, அரச குலம் என்பவை முழுக்க முழுக்க மனிதர்கள் உருவாக்கிய ஒருபக்கச் சார்பானதும், ஆபத்தானதுமான கட்டமைப்புக்களே ஆகும். இதற்கு இந்த உலகின் மனித வரலாறே நல்ல சான்று. இந்த வேளையில் சாமுவேலுக்கு கடவுள் சொன்னது ஞாபகத்துக்கு வருகின்றது. காண்க (✳︎1சாமுவேல் 8,7-18). இந்த உலகம் பல அரசர்களை உருவாக்கியிருக்கிறது. பெரிய அரசர்கள் என கொண்டாடுகின்ற யாவரும் மனிதர்களே. அவர்களுள் பலர் தங்களுடைய சிந்தனைகளுக்காகவும், நம்பிக்கைகளுக்காகவும், மதத்திற்காகவும், பெயருக்காகவும், ஆசைகளுக்காகவும்;; இவ்வுலகையே கொள்ளையிட்ட கொள்ளைகாரர்களே, சக மனிதர்க்களையும் விலங்குகளையும் கொலைசெய்த கொலைகார்களே, உலகை அழித்த அழிவுக்காரர்களே. கடவுள் மனிதர்களை தன் சாயலாக மட்டுமே படைத்தார், இவ்வாறிருக்க மனிதர்களே தங்களை தாங்களே ஆண்வாதிகளாகவும், அரசர்களாகவும், சாதிக்காரர்களாகவும், மதக்காரர்களாகவும் மாற்றிக்கொண்டனர்.
இன்று நாம் கொண்டாடும் கிறிஸ்து அரசர் பெருவிழாவிற்கு ஒரு வரலாறு உண்டு. கிறிஸ்து அரசர் என்கின்ற கருப்பொருள், இறைவனின் அரசு என்று இறையியல் சிந்தனையை உள்வாங்கியுள்ளது
(ἡ βασιλεία τοῦ θεοῦ. ஹே பசிலெய்யா து திஉ - இறைவனின் அரசு). யூதர்கள் இயேசுவை தம் அரசராக ஏற்க மறுத்தனர் ஆனால் அவர் உண்மையில் அனைத்து உலகின் அரசர் என்ற மறைமுக வாதம் இங்கே மறைந்துள்ளது. ஐரோப்பாவிலே அதிகமான ஆலயங்கள், பாடசாலைகள், வைத்தியசாலைகள், துறவு மடங்கள், இடங்கள் இந்த பெயரால் அழைக்கப்படுகின்றன. உண்மையில் சொல்லின், கிறிஸ்து அரசர் என்ற பதம் பல விதத்தில் ஒர் ஐரோப்பிய சொல் என்றே பார்க்கப்பட வேண்டும்.
கிரேக்க மொழியில் கிறிஸ்து (Χριστός கிறிஸ்டொஸ்) என்றால் அருள்பொழிவு செய்யப்பட்டவர் என்று பொருள். இதனை எபிரேய மொழி (מַשִׁיחַ மஷியாஹ்)என்றழைக்கிறது. இதற்கு அரசர் என்ற பொருளும் கொடுக்கப்படலாம் ஆனால் இதன் உண்மையான அர்த்தம் அரசர் என்பதில்லை. புதிய ஏற்பாட்டில் இயேசு பல இடங்களில் கிறிஸ்து-மெசியா என்று அழைக்கப்பட்டாலும், கிறிஸ்து அரசர் என்ற பெயரில் அழைக்கப்படவில்லை. புதிய ஏற்பாடு இயேசுவை கிறிஸ்து அல்லது அருட்பொழிவு பெற்றவர் என்று 550 தடவைகளுக்குமேல் அழைக்கின்றபோதெல்லாம் அதன் அர்த்தம் சாதாரண அரசர் என்பதில்லை, அதுக்கும்மேலே... திருத்தந்தை 1925ம் ஆண்டில் முதன்முறையாக 'கிறிஸ்து அரசர்' என்ற பதத்தை முதலாம் உலகப் போரின் பிற் காலத்தில், குவாஸ் பிறிமாஸ் Quas primas என்ற சுற்றுமடலில் பயன்படுத்தினார். அதிலே ஐரோப்பிய தலைவர்கள் தங்கள் பிரிவினைகளையும், போரியல் சிந்தனைகளையும், அதிகார மற்றும் அழிவுக் கலாச்சாரத்தை விடுத்து கிறிஸ்துவின் அரசில் அனைவரையும் மதிக்கும் தலைவர்களாக மாறவேண்டும் என்று அழைப்பு விடுத்தார். கத்தோலிக்க திருச்சபையில் இந்த விழா வருடத்தின் கடைசியில் வரும் பொதுக்கால ஞாயிறு தினத்தில் கொண்டாடப்படுகிறது. பழமைவாத கத்தோலிக்க திருச்சபையின் சில பிரிவுகள் இந்த திருநாளை இன்னொரு நாள் கொண்டாடுகின்றன. இந்த விழாவின் மூலம் அனைவரும் கடவுளின் பிள்ளைகள் என்ற சிந்தனை முன்வைக்கப்படுகிறது. ஆனால் கிறிஸ்து இயேசு நம் ஆண்டவர் அவரை அரசர் என்ற அரசியல் பதத்திற்குள் அடக்க அல்லது இறையியல் பிறழ்வுகளை உருவாக்க முயல்வது அவ்வளவு ஆரோக்கியமானதல்ல.
முதல் ஏற்பாட்டுக் காலத்தில் அரசன் என்ற பதம் ஓரு முக்கியமான பதமாக பார்க்கப்பட்டது. இஸ்ராயேலரை சுற்றியிருந்த காணானியர், மொசப்தேமியர் மற்றும் எகிப்தியர் பலர் தங்களுக்கென்று அரசர்களை கொண்டிருந்தனர். அவர்களின் அரசர்கள் பலர் கடவுளின் மகன்களாக கருதப்பட்டனர், அல்லது கடவுள்களாகவும் கருதப்பட்டனர். இந்த சிந்தனை படிப்படியாக இஸ்ராயேலரிடையே தாக்கத்தை ஏற்படுத்தி ஒரு கட்டத்தில் அவர்களும் தங்களுக்கென்று ஓர் அரசனை கேட்கும் அளவிற்கு வளர்ந்தது. பல இறைவாக்கினர்கள் கடவுள்தான் இஸ்ராயேலின் ஒரே அரசர் என்று இறையியலை பலமாக விவாதிப்பதை முதல் ஏற்பாடு அழகாக் காட்டுகிறது (✳︎✳︎தி.பா 74,12)
(✳︎'மக்கள் குரலையும் அவர்கள் உன்னிடம் கூறுவது அனைத்தையும் கேள். ஏனெனில் அவர்கள் உன்னை புறக்கணிக்கவில்லை. அவர்களை நான் ஆளாதபடி என்னைத் தான் புறக்கணித்துவிட்டனர். அவன் அவர்களை ஆயிரத்தினர் தலைவராகவும் ஐம்பதிமர் தலைவராகவும் தன் நிலத்தை உழுபவராகவும் தன் விளைச்சலை அறுவடை செய்வராகவும் தன் போர்கருவிகளையும் தேர்க் கருவிகளையும் செய்பவராகவும் நியமித்துக் கொள்வான். மேலும் அவன் உங்கள் புதல்வியரைப் பரிமளத் தைலம் செய்கின்றவர்களாகவும் சமைப்பவர்களாகவும் அப்பம் சுடுபவர்களாகவும் வைத்துக்கொள்வான். அவன் உங்கள் வயல்களிலும் திராட்சைத் தோட்டங்களிலும் ஒலிவத் தோப்புகளிலும் சிறந்தவற்றை எடுத்துக் கொண்டு தன் அலுவலர்களுக்கு கொடுப்பான். உங்கள் தானியத்திலும் திராட்சைப் பலனிலும் பத்தில் ஒரு பங்கை எடுத்துக் கொண்டு தன் காரியத் தலைவருக்கும் அலுவலருக்கும் கொடுப்பான். உங்கள் வேலைகாரரையும் வேலைக்காரிகளையும் உங்கள் கால்நடைகளில் சிறந்தவற்றையும் உங்கள் கழுதைகளையும் தன் சொந்த அலுவலுக்காகப் பயன்படுத்துவான். உங்கள் மந்தைகளில் பத்தில் ஒரு பங்கு எடுத்துக் கொள்வான். நீங்கள் அவனுக்கு பணியாளர்களாய் இருப்பீர்கள். அந்நாளில் நீங்களே உங்களுக்காகத் தேர்ந்து கொண்ட அரசனை முன்னிட்டு முறையிடுவீர்கள். அந்நாளில் ஆண்டவர் உங்களுக்கு செவி கொடுக்கமாட்டார்').
(✳︎✳︎12 கடவுளே! முற்காலத்திலிருந்தே நீர் எங்கள் அரசர்; நீரே உலகெங்கும் மீட்புச் செயலைச் செய்து வருகின்றீர்.)
2சாமு 5,1-3
1இஸ்ரயேலின் அனைத்துக் குலங்களும் எபிரோனுக்கு வந்து தாவீதிடம் கூறியது: 'நாங்கள் உம் எலும்பும் சதையுமானவர்கள். 2சவுல் எங்கள் மீது ஆட்சி செய்த கடந்த காலத்திலும் கூட நீரே இஸ்ரயேலை நடத்திச் சென்றவர். 'நீயே என் மக்கள் இஸ்ரயேலின் ஆயனாக இருப்பாய்; நீயே இஸ்ரயேலுக்குத் தலைமை தாங்குவாய்' என்று உமக்கே ஆண்டவர் கூறினார்'.
3இஸ்ரயேலின் பெரியோர்கள் எல்லாரும் அரசரைக் காண எபிரோனுக்கு வந்தனர். அரசர் தாவீது எபிரோனில் ஆண்டவர் திருமுன் அவர்களோடு உடன்படிக்கை செய்து கொண்டார். இஸ்ரயேலின் அரசராக அவர்கள் தாவீதைத் திருப்பொழிவு செய்தனர்.
இஸ்ராயேலின் முதல் அரசரான சவுல் ஏற்கனவே பிலிஸ்தியருடனான போரில் இறந்திருந்தார் அவர் மகன் அப்சலோமும் போரில் இறந்தார். இஸ்ராயேலரின் பாரம்பரிய நம்பிக்கையின் படி, தாவீது சவுலை, அவர் கடவுளால் அபிசேகம் செய்யப்பட்டவர் என்ற படியால், அதிகமாக மரியாதை செய்யாதார் என நம்பப்படுகிறது. அத்தோடு சவுலின் மகன் அப்சலோம் தாவீதின் உயிர் நண்பராக இருந்ததையும் விவிலியம் படம்பிடிக்கிறது. சவுலுடைய மகள் மீக்காள்தான் தாவீதின் மூத்த மனைவியுமாயிருந்தார். இருப்பினும், சவுலுக்கும் தாவீதிற்கும் இடையில் அரசத்துவத்திற்கான ஒரு பலமான போட்டியிருந்தது என சில இன்றைய ஆய்வாளர்கள் வாதிடுகின்றனர். எது எவ்வாறெனினும், சவுலின் மரணத்தின் பின்னர்தான் தாவீது யூதாவின் அரசராகிறார் (ஒப்பிடுக 2சாமு 2). தாவீதை திருப்திப்படுத்த சிலர் எஞ்சியிருந்த சவுலின் மக்களை கொலைசெய்கின்றனர் (ஒப்பிடுக 2சாமு 3-4).
பின்னர் இஸ்ராயேலருக்கும் யூதாகுலத்தாருக்கும் சில உள்நாட்டு பிரச்சனைகள் ஏற்படுகிறதைக் கண்ட இஸ்ராயேலின் முதியவர்கள் தாவீதை முழு இஸ்ராயேலுக்கும் அரசராக இருக்கும் படி கேட்டு கடவுள் அவருக்கு சாமுவேல் வழியாக உரைத்த இறைவாக்கை நினைவுபடுத்துகின்றனர். தாவீது என்னும் இந்த அரசியல் தலைவர், இஸ்ராயேல் இனத்தின் அடையாளத்திற்கு ஆபிரகாம் மற்றும் மோசேக்கு பிறகு மிக மிக முக்கியமானவர். தற்கால ஆய்வுகள் இவரை அரசர் என்பதை விட ஒரு குழுத்தலைவர் என்பதுபோல உறுதியான தொல்பொருளியல் ஆய்வுகளுடன் காண்கின்றன. எனினும் விவிலிய மற்றும் விவிலியத்திற்கு அப்பாற்பட்ட எபிரேய இலக்கியங்கள் தாவிதை ஒரு பேரரசனாகவே காண்கின்றன. தாவீது தன்னுடைய போர்திறனுக்காக மிகவும் அறியப்படுகிறார். இவரது காலத்தில் சுற்றியிருந்த சீரிய, அசிரிய, பபிலோனிய, மற்றும் எகிப்திய அரசுகள் தங்கள் உள்நாட்டு சிக்கல்களில் சிக்குண்டிருந்த படியால் தாவீது பலமாக இருந்தார். போர் வெற்றிகள் தாவீதின் பலமாக இருந்த அதே வேளை அதுவே அவருடைய பலவீனமாகவும் இருந்தது. தாவீதிற்கு பின்னர் இஸ்ராயேலில் இவரைப்போல ஒரு தலைவர் தோன்றியதில்லை. இன்றைய நவீன இஸ்ராயேல் நாடு தாவீதின் நட்சத்திரத்தை தமது தேசிய கொடியில் பறக்கவிடுகின்றது. விவிலியத்தில் போரியலுக்கு அடுத்து எபிரேயரின் இசை ஞானியாகவும், கவிஞராகவும் தாவீது விளங்குகிறார். திருப்பாடல் புத்தகம் தாவீதிற்கே அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
இயேசுவை தாவீதின் மகன் என மத்தேயுவும் ஏனைய நற்செய்தியாளர்களும் காண்கிறார்கள் என்பதிலிருந்து தாவீதின் முக்கியத்துவத்தை விளங்கிக்கொள்ளலாம் (✳︎காண்க மத் 1,1). தாவீது எப்படியிருந்தார் என்று யாருக்கும் தெரியாது, ஆனால் தாவீதின் அடையாளம் இஸ்ராயேலின் தேசிய அடையாளமாகி, இந்த இஸ்ராயேல் தேசியம் இப்படித்தான் இருந்திருக்கவேண்டும் என்று விவிலியம் அழகாக காட்டுகிறது. ராச ராச சோழன் எவ்வளவிற்கு தமிழ் இனத்தின் அடையாளமாக விளங்கினாரோ அதேபோல தாவீது ஒரு சகாப்தம்.
(✳︎தாவீதின் மகனும் ஆபிரகாமின் மகனுமான இயேசு கிறிஸ்துவின் மூதாதையர் பட்டியல்:)
வ.1: எபிரோன் எருசலேமிலிருந்து 37 கிமீ தொலைவில் வடமேற்க்கிலிருக்கிற ஒரு மலைப்பிரதேசம். விவிலியத்தில் முதலாவது இடத்தில் இருக்கும் முக்கியமான ஒரு இடம். இங்கே ஆபிரகாம் தனது கூடாரத்தை அடித்திருக்கிறார். இந்த இடத்திற்கு அருகில்தான் சாராவும் புதைகப்பட்டார். தாவீதின் காலத்தில் எருசலேமிற்கு முதல் இதுதான் யூதாவின் தலைநகராக இருந்தது. பாரம்பரிய கதைகளின் படி ஆதாமும் ஏவாளும் இங்கேதான் ஆபேலுக்காக ஆழுதார்கள் என சொல்லப்படுகிறது. அமெரிக்க மற்றும் இஸ்ராயேல் சுயாதீன தொல்பொருளியல் ஆய்வுகளின் படி, எபிரோனில் செம்புக் காலத்திலிருந்தே (கிமு 3500-1700) மனித குலம் வாழ்ந்திருக்கிறது. அத்தோடு இன்னும் ஆச்சரியமாக எபிரேயர் என்ற சொல்லிற்கும் (עִבְרִי இவ்ரி) எபிரோன் (חֶבְרוֹן ஹெவ்ரேன்) என்ற சொல்லிற்கும் தொடர்பிருப்பதாகவும் சிலர் வாதிடுகின்றனர்.
இங்கே இஸ்ராயேலின் அனைத்து குல பிரதிநிதிகள் தாவீதை சந்தித்தது, அனைவரும் தாவீதை ஏற்றுக்கொள்வதைக் குறிக்கிறது. இவர்களின் அறிக்கை 'நாங்கள் உம் எலும்பும் சதையுமானவர்கள்' (הִנְנוּ עַצְמְךָ֥ וּֽבְשָׂרְךָ֖ אֲנָֽחְנוּ hinnû ‘adzmekā wuvsārkā ’anāhnû) என்பது முழு ஆளையும் குறிக்கிறது, அதாவது தாவீதின் எண்ணங்கள், சிந்தனைகள், உடல், உள்ளம் மற்றும் அனைத்தும் இஸ்ராயேலை சார்ந்திருக்கிறன என்பதைக் குறிக்கிறது.
வ. 2: இங்கே இவர்கள் சவுலை குறைத்து தாவீதைப் புகழ்கிறார்கள். இறந்த அல்லது பதவியிறங்கிய தலைவரை தாழ்த்தி புதியவரை புகழ்வது மனிதர்களின் அரசியல் சாணக்கியம். இது தமிழர்களுக்கு நன்றாக தெரிந்த கலை, எபிரேயர்களும் நமக்கு குறைந்தவர்களில்லை என்பதை இங்கே காட்டுகிறார்கள். இங்கே இவர்கள் தாவீது, சவுலின் தளபதியாக இருந்தபோதே அவர் செய்த வெற்றிகளை நினைவூட்டுகின்றனர்;. அத்தோடு சவுலின் ஆட்சியிலும் கூட தாவீதுதான் உண்மையான தலைவர் என்று தாம் எண்ணியதாக அறிக்கையிடுகின்றனர். இப்படி நடக்கக்கூடாது என்றுதான் சவுலும் அக்காலத்தில் பயந்தார். இந்த வரிகளின் ஊடாக இஸ்ராயேலின் உண்மையான அரசர் தாவீதுதான் என்று ஆசிரியர் விளங்கப்படுத்துகிறார். இந்த வரிகள் பபிலோனிய இடப்பெயர்வில் நாடு, அரசன், ஆலயம் இல்லாமல் இருந்த யூதர்களுக்கு ஒரு முக்கியமான செய்தியாக இருந்திருக்கும்.
வ.3: இந்த வசனம் இஸ்ராயேல் பெரியவர்களுடன் தாவீது செய்த உடன்படிக்கையைக் காட்டுகிறது. ஏற்கனவே முதலாவது வசனத்தில் இஸ்ராயேல் பெரியவர்கள் எபிரோனுக்கு வந்ததாக ஆசிரியர் குறிப்பிட்டு பின்னர் மூன்றாவது வசனத்திலும் அதனை திருப்பிச் சொல்கிறார். ஒருவேளை இங்கே இரண்டு மரபுகள் (பாடங்கள்) இருந்திருக்கலாம். அல்லது அவர்கள் செய்த உடன்படிக்கையை வலியுறுத்த இப்படிச் சொல்லியிருக்கலாம். உடன்படிக்கை செய்தலை எபிரேய மொழி 'உடன்படிக்கை வெட்டுதல்' என்று அழைக்கிறது (וַיִּכְרֹת בְּרִית அவர்கள் உன்டிக்கையை வெட்டினார்கள்). உடன்படிக்கை கற்களில் எழுதப்படுவதால், அதனை வெட்டுதல் என்பது பொருத்தமாக இருக்கும். ஏற்கனவே சாமுவேல் மூலமாக திருப்பொழிவு பெற்றவர் இங்கே முதியவர்கள் வாயிலாக மீண்டும் திருப்பொழிவு பெறுகிறார். இந்த திருப்பொழிவு (מָשַׁח மாஷா) என்பதற்கும் மெசியா என்பதற்கும் நெருங்கிய தொடர்பிருக்கிறது. இப்படியாக தாவீது இஸ்ராயேலின் முழு அரசனாகிறார்.
வவ.4-5: இந்த வரிகள் தாவீதின் ஆட்சிக்காலத்தை கணக்கிடுகிறது. முப்பது வயதில் (இளமையான ஆனாலும் நிறைவான இலக்கம்) அரசாகிறவர், இன்னும் நாற்பது ஆண்டுகள் ஆட்சிசெய்கிறார் என்பது அவர் விவிலிய நிறைந்த அகவையான எழுபது ஆண்டுகள் வாழ்ந்தார் என்பதைக் குறிக்கிறது. இந்த காலக் கணிப்பபை இணைச்சட்ட வரலாற்று ஆசிரியர்களின் காலக்கணிப்பு என்றே இன்று அதிகமானவர்கள் கருதுகின்றனர். இந்த இணைச்சட்ட வரலாற்று ஆசிரியர்கள் என்போர், முதலாவது ஆலயத்தின் அழிவின்பின் பிற்பார்வையில் வரலாற்றை மீளாய்வு செய்தவர்களைக் குறிக்கும். எனினும், தாவீது இஸ்ராயேலின் இறந்தும் வாழ்கின்ற தலைவர், அவர் பெயர் இன்றும் ஓங்கி ஒலிக்கிறது. அவரை ஒரு நீதிமான் என்று விவிலியம் சொல்லவில்லை, மாறாக ஆண்டவரின் இதயத்திற்கு நெருக்கமானவரும் மற்றும் மனந்திரும்பிய கடவுளின் உண்மை மகனாகவும் காட்டுகிறது.
திருப்பாடல் 122
1'ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்', என்ற அழைப்பை நான் கேட்டபோது அகமகிழ்ந்தேன். 2எருசலேமே! இதோ, நாங்கள் அடியெடுத்து வைத்து உன் வாயில்களில் நிற்கின்றோம்.
3எருசலேம் செம்மையாக ஒன்றிணைத்துக்கட்டப்பட்ட நகர் ஆகும்.
4ஆண்டவரின் திருக்குலத்தார் அங்கே செல்கின்றனர்; இஸ்ரயேல் மக்களுக்கு இட்ட கட்டளைக்களுக்கிணங்க ஆண்டவரது பெயருக்கு அவர்கள் நன்றி செலுத்தச் செல்வார்கள்.
5அங்கே நீதி வழங்க அரியணைகள் இருக்கின்றன. அவை தாவீது வீட்டாரின் அரியணைகள். 6எருசலேமில் சமாதானம் நிலைத்திருக்கும்படி வேண்டிக்கொள்ளுங்கள்; 'உன்னை விரும்புவோர் வளமுடன் வாழ்வார்களாக!
7உன் கோட்டைகளுக்குள் அமைதி நிலவுவதாக! உம் மாளிகைகளில் நல்வாழ்வு இருப்பதாக! 8உன்னுள் சமாதானம் நிலவுவதாக!' என்று நான் என் சகோதரர் சார்பிலும் என் நண்பர் சார்பிலும் உன்னை வாழ்த்துகின்றேன்.
9நம் கடவுளாகிய ஆண்டவரின் இல்லம் இங்கே இருப்பதால், உன்னில் நலம் பெருகும்படி நான் மன்றாடுவேன்.
எருசலேம் மலையை நோக்கி, அல்லது அங்கே அமைந்திருந்த சாலமோனின் ஆலயத்தை நோக்கி இஸ்ராயேல் விசுவாசிகள் கால்நடையாகவும், விலங்குகளிலும் வருவது வழக்கம், அப்போது அவர்கள் பல பிரயாணப் பாடல்களைப் பாடுவார்கள். அவற்றில் இந்த திருப்பாடல் 122ம் ஒன்றாக இருந்திருக்க வேண்டும். இந்தப் பாடல் கடவுளின் பிரசன்னத்தையும், எருசலேமின் புகழையும், தாவீது வீட்டாரின் அரியணையையும், மற்றும் எருசலேமின் சமாதானத்தைப் பற்றியும் பாடுகிறது. இந்த பாடல் பிற்காலத்தில் எழுதப்பட்டிருந்தால், இந்தப் பாடல் வாயிலாக இஸ்ராயேல் பிள்ளைகள், முக்கியமாக எருசலேமை காணாதவர்கள், அதன் அழகையும் முக்கியத்துவத்தையும் உணர இது நல்ல வாய்ப்பாக இருந்திருக்கும்.
வ.1: இந்த பாடலின் முன்னுரை குறிப்பாக, தாவீதின் எருசலேம் மலையேறு பாடல் என்றிருக்கிறது. இஸ்ராயேலருக்கு மகிழ்ச்சியைக் கொடுப்பது எந்த விதமான செல்வமுமல்ல மாறாக எருசலேமிற்கு போவதற்கான வாய்பே ஆகும் என்று பாடுகிறார் ஆசிரியர். இந்த வரியிலிருந்து, இவர்கள் எருசலேமிற்கு பல காரணங்களுக்காக குழுக்களாகச் செல்கின்றனர் என்பது புரிகிறது. எருசலேமிற்கு இன்னொரு பெயரான கடவுளின் இல்லம் (בֵּית יְהוָה பேத் அதோனாய்) கொடுக்கப்படுகிறது.
வ.2-3: எருசலேமின் வாயிலில் நிற்பதை மகிழ்வாகக் காண்கிறார் ஆசிரியர். ஒருவேளை இதன் வாயிலிற்கு வருவதற்கு முன் அவர்கள் சந்தித்த சவால்கள் மற்றும் ஆபத்துக்களை நினைவு
கூறுகிறார் போல.
எருசலேம் என்ற சொல்லின் அர்த்தமாக (יְרוּשָׁלַםִ ஜெருஷலாயிம்) பலவற்றை ஆய்வாளர்கள் முன்வைக்கின்றனர். இவற்றில், சமாதானம், நிறைவு போன்றவை முக்கியம் பெறுகிறது. அத்தோடு கானானியரான எபூசியரின் நகர் எனவும் இதற்கு இன்னொரு பொருளுண்டு. தாவீது எபூசியரிமிருந்து இந்த நகரை கைப்பற்றியதாக விவிலியம் சாற்றுகின்றது. தாவீது தொடங்கி பின்னர் தென்நாட்டு தலைநகராக இருந்த இந்நகர் பல வெளிநாட்டு ஆக்கிரமிப்பாளர்களால் (இஸ்ராயேலர் உட்பட) கட்டப்பட்டு அழிக்கப்பட்டது. எபூசியர், இஸ்ராயேலர், யூதர்கள், பபிலோனியர், பாரசீகர், கிரேக்கர், உரோமையர், அரபிய இஸ்லாமியர், ஐரோப்பிய கிறிஸ்தவர், பாலஸ்தினர் என்ற பலவிதமான மக்களின் கரங்களில் இது மாறி மாறி இருந்திருக்கின்றது. சிலர் இதனை அழகு படுத்தினர் பலர் இதன் அர்த்தமான சமாதானத்தையே (அமைதி) இல்லாமலாக்கினர். இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் பிரித்தானியரிடமிருந்து இது சர்வதேச தனி அலகான நகராக மாறினாலும் இன்று வரை நவீன இஸ்ராயேல் நாட்டின் கனவு தலைநகராக ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த நகர், புதிய எருசலேம், பழைய எருசலேம் மற்றும் தாவீதின் நகர் என முக்கியமான மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் பழைய மற்றும் தாவீதின் நகர் எருசலேம்தான் விவிலியத்தில் அறியப்பட்ட எருசலேம். இந்த சிறிய நிலப்பகுதி மதத்தாலும், மொழியாலும்,
இனத்தாலும் பிரிக்கப்பட்டுள்ளது. அமைதி என்ற இதன் அர்த்தத்தை கடவுள் மட்டும்தான்
இந்த இடத்திற்கு கொடுக்க முடியும். இருப்பினும் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இரு பல மக்களின் விசுவாசத்திற்கு சான்றாக இருந்தது என்ற காரணத்தைக் கொண்டே இதன் மாட்சியை புரிந்து கொள்ள முடியும். ஏன் இறைவாக்கினர்களும் இயேசுவும் எருசலேமை நினைத்து கண்ணீர் விட்டார்கள் என்பதை இங்கே செல்லும் ஒவ்வொருவரும் கண்டுகொள்ளவர்.
ஆசிரியர் எருசலேமை ஒற்றிணைக்கப்பட்ட நகர் என்பது அதன் உட்கட்டமைப்பை அல்லது வெளிச் சுவரைக் குறிக்கும். இருப்பினும், இங்கே பலர் ஒன்றாக கூடுவதனால் ஆசிரியர் இதனை
இவ்வாறு அழைக்கிறார் என்றும் வாதாடுகின்றனர்.
வ.4: இந்த வரி திருப்பிக் கூறல் என்ற எபிரேய கவிநடையில் அமைந்துள்ளது. திருக்கூட்டத்தார் என்பது இங்கே இஸ்ராயேலின் அனைத்து குலங்களையும் குறிக்கிறது. அவர்கள் அங்கே கடவுளின் பெயருக்காக அதாவது கடவுளுக்காக செல்கின்றனர் என நினைவூட்டுகிறார். உண்மையில் கடவுளுக்காக அங்கே மக்கள் சென்றால் நலமாக இருக்கும், மாறாக பலர் தங்களது மாறுபட்ட, திரிக்கப்பட்ட சமய நம்பிக்கைகளுக்காக அங்கே செல்வதால்தான் மற்றய மதத்தாருடன் சண்டை போடுகிறார்கள் என நினைக்கிறேன்.
வ.5: இந்த வரியில் ஆசிரியர் முக்கியமான ஒரு வரலாற்று நம்பிக்கையை பாடுகிறார். அதாவது இங்கேதான் தாவீதின் அரியனை இருக்கிறது என்கிறார். இதனை எந்த காலத்தில் இவர் பாடுகிறார் என்பதில் மயக்கம் இருக்கிறது. இவர், பழைய தாவீதின் அரியணையை பாடுகிறாh அல்லது தற்போதும் இருக்கிற அரியணையை பாடுகிறாரா என்று கண்டுபிடிப்பது கடினம். எபிரேய வினைச் சொற்களின் கால குறிப்பை கணிப்பது அவ்வளவு இலகல்ல.
வ.6: எருசலேமின் சமாதானத்திற்காக மன்றாடுங்கள் என்றே எபிரேயத்தில் இருக்கிறது.
(אֲלוּ שְׁלוֹם יְרוּשָׁלָם alû šelôm yerûšālāim) இது ஓருவேளை அங்கே சமாதானம் இல்லை அதற்காக மன்றாடுகள் என்பது போலவும் தோன்றலாம். அத்தோடு எருசலேமை அன்புசெய்வோர் ஆசீர்வதிக்கப்படுவார்கள் என்ற ஆசீரும் இங்கே வழங்கப்படுகிறது.
வ.7: எருசலேமின் கோட்டை என்பது அதன் காவல் அரண்களைக் குறிப்பது போல தோன்றினாலும் அது எருசலேமைத்தான் குறிக்கிறது. இந்த அமைதிதான் நிலைவாழ்வை தரும் என்பது மிகவும் அழமான எபிரேயச் சிந்தனை.
வ.8: எருசலேமிற்கான பயணம் ஒரு சமூக பயணம் என்பதை அழகாக இந்த வரி காட்டுகிறது. சமாதனாம் ஒரு உள்ளார்ந்த அனுபவம் மட்டுமல்ல மாறாக ஒரு சமூக ஆவல் என்பதும் காட்டப்படுகிறது.
வ.9: எருசலேம் புகழப்படுவதற்கான காரணம் தாவீதல்ல மாறாக கடவுளும் அவரின் இல்லமுமாகும் என்பது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய நிதர்சனம். எருசலேமை கடவுளின் இல்லம் என்றழைத்து தொடங்கிய இந்தப் பாடல் அவ்வாறு மீண்டும் அழைத்த முடிவுறுகிறது.
கொலோசேயர் 1,12-20
12தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள். அவர் இறைமக்களுக்கான ஒளிமயமான உரிமைப்பேற்றில் பங்குபெற உங்களைத் தகுதியுள்ளவர்களாக்கியுள்ளார். 13அவரே இருளின் அதிகாரத்திலிருந்து நம்மை விடுவித்துத் தம் அன்பார்ந்த மகனின் ஆட்சிக்குட்படுத்தினார். 14அம்மகனால்தான் நாம் பாவமன்னிப்பாகிய மீட்பைப் பெறுகிறோம்.
கிறிஸ்துவின் மேன்மை
15அவர் கட்புலனாகாத கடவுளது சாயல்; படைப்பனைத்திலும் தலைப்பேறு. 16ஏனெனில் விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை, கட்புலனாகுபவை, கட்புலனாகாதவை, அரியணையில் அமர்வோர், தலைமை தாங்குவோர், ஆட்சியாளர், அதிகாரம் கொண்டோர் ஆகிய அனைவரும் அவரால் படைக்கப்பட்டனர். அனைத்தும் அவர் வழியாய் அவருக்காகப் படைக்கப்பட்டன.✠ 17அனைத்துக்கும் முந்தியவர் அவNர் அனைத்தும் அவரோடிணைந்து நிலைபெறுகின்றன. 18திருச்சபையாகிய உடலுக்குத் தலையும் தொடக்கமும் அவரே. எல்லாவற்றுள்ளும் முதன்மை பெறுமாறு இறந்து உயிர்த்தெழுவோருள் அவர் தலைப்பேறு ஆனார். 19தம் முழுநிறைவும் அவருள் குடிகொள்ளக் கடவுள் திருவுளம் கொண்டார். 20சிலுவையில் இயேசு சிந்திய இரத்தத்தால் அமைதியை நிலைநாட்டவும் விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை அனைத்தையும் அவர் வழி தம்மோடு ஒப்புரவாக்கவும் கடவுள் திருவுளம் கொண்டார்.
கொலோசேயர் திருமுகம் அதன் கிறிஸ்தியல் படிப்பினைகள் காரணமாக மிக முக்கியத்துவம் பெறுகிறது. கொலோசை, உரோமை பேரரசின் முக்கியமான ஆனால் சிறு நகரங்களுள் ஒன்றாக இருந்திருக்கிறது. இங்கே கிறிஸ்தவம் பவுலுடைய எபேசு வருகையால் வந்தது. பவுலின் சீடராகிய எபிபிராஸ் இந்த இடத்தை சார்ந்தவர், இவர் இந்த திருச்சபையை நிறுவ மிக முக்கியமான பங்காற்றினார் (✳︎காண்க கொலோ 1,7). அதிகமாண இந்நகர் கிறிஸ்தவர்கள் யூத பின்புலத்தை கொண்டிராதவர்கள். இந்த கடிதத்தை பவுல்தான் எழுதினார் என்பதற்கு அக மற்றும் புற சான்றுகள் பல இருந்தாலும், மாற்றுக் கருத்துக்களும் பல உள்ளன. யூத மற்றும பிறமத பழைய நம்பிக்கைகள் புதிய கிறிஸ்தவர்களின் நம்பிக்கையை சவாலாக்கிய ஒரு சந்தர்பத்திலே இந்த கடிதம் எழுதப்பட்டிருக்க வேண்டும். கிறிஸ்தியலை மையமாகக் கொண்டு கிறிஸ்துவின் இறைத்தன்மை, இறைசாயல், அவர் மீட்புப் பணி போன்ற பல கொள்கைகளை இந்த கடிதம் வாதாடுகின்றது.
(✳︎எம் அன்பார்ந்த உடன் ஊழியர் எப்பப்பிராவிடமிருந்து அதை நீங்கள் கற்றுக் கொண்டீர்கள். உங்களுக்காக உழைக்கும் அவர் கிறிஸ்துவின் உண்மையான திருத்தொண்டர்.)
வ.12: இறைமக்களுக்கான ஒளிமயமான எதிர்காலம் என்பது இங்கே கொலோசே கிறிஸ்தவர்களுக்கான நம்பிக்கை வாழ்வைக் குறிக்கிறது. முன்னைய நாட்களில் இவர்கள் இருளான வாழ்வைக் கொண்டிருந்தவர்கள், இப்போது கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியால் இவர்களும் ஆபிரகாமின் ஆசீருக்குள் உள்வாங்கப்படுகிறார்கள். கடவுள் தரும் உரிமைப் பேற்றால் இவர்கள் கடவுளின் ஒளிமயமான தூயவர்கள் கூட்டத்தில் சேர்கிறார்கள். இதனை செய்பவர் கடவுள் மட்டுமே என்பதே இந்த வரியின் முக்கிய செய்தி.
வ.13: இந்த கடவுள்தான் தன் மகன் வழியாக இவர்களை இருளின் ஆட்சியிலிருந்து (ἐκ τῆς ἐξουσίας τοῦ σκότους ekdusias tou skotous) மீட்டார் என்கிறார் பவுல். இங்கே பவுல் தன்னையும் இருளின் ஆட்சியிலிருந்தவர்களுள் ஒருவராக சேர்த்து வாதாடுவது அவரது தாழ்ச்சியையும் ஒருமைப்பாட்டையும் காட்டுகிறது.
வ.14: மீட்பு என்பது பாவமன்னிப்பு என்ற இன்னோரு பவுல்-இறையியல் இங்கே வருகிறது. பாவத்திலிருந்து மீட்பு தரக்கூடியவர் இயேசு ஒருவரே, அந்த விடுதலைதான் மீட்பு. இங்கே பாவம் என்பதன் மூலம் எதனைக் குறிக்கிறார் என்று காண முழு திருமுகத்தையும் வாசிக்க வேண்டும். இந்த இயேசு கிறிஸ்துவின் மேன்மையை வருகின்ற வரிகள் விவரிக்கின்றன.
வ. 15: கிறிஸ்து கண்ணுக்கு தெரியாத கடவுளின் கண்ணுக்கு தெரியம் சாயல் மற்றும் அனைத்து படைப்பின் தலைப்பேறு. சாயல் என்பதற்கு எய்கோன் εἰκών என்ற கிரேக்க சொல் பாவிக்கப்பட்டுள்ளது. அய்கன் (icon) என்ற ஆங்கிலச் சொல்லின் மூலமும் இதுதான்.
இயேசுதான் கடவுளின் தெரியக்கூடிய சாயல் என்பது ஆரம்ப கால திருச்சபையின் முக்கியமான கிறிஸ்தியல் கூற்றொன்று. தலைப்பேறு (πρωτότοκος புரோடொடொகொஸ்) என்ற சொல்லை கவனமான கையாள வேண்டும். இது இவர் படைக்கப்பட்டவர்களுள் அடங்குவார் என்ற பொருளைவிட, படைக்கப்பட்டதின் தலைபேறு என்ற பொருளையே வரியில் கொடுக்கிறது (ஆறாம் வேற்றுமை பாவிக்கப்பட்டுள்ளது). குடும்பத்தில் அல்லது அரச பரம்பரையில் தலைச்சான் அல்லது தலைப்பேறுதான் அடுத்த வாரிசாக கருதப்படும் அந்த அர்த்தத்தில்தான் இந்த வரி பாவிக்கப்பட்டுள்ளது.
வ. 16: மிக மிக முக்கியமான வரி. இந்த வரியில் இயேசு கிறிஸ்துவால் படைக்கப்பட்ட முழு பிரபஞ்சமும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. அவை கிறிஸ்துவால் கிறிஸ்துவிற்காக படைக்கப்பட்டுள்ளன. அழகான கிரேக்க எதுகை மோனையில் இந்த வரி ஒரு கவி வரியாக எழுதப்பட்டுள்ளது.
அ. இயேசு கிறிஸ்துவால் படைக்கப்பட்டவை: விண்ணிலுள்ளவை (τοῖς οὐρανοῖς tois houranois), மண்ணிலுள்ளவை (τῆς γῆς tēs gēs), கட்புலனாகுபவை (τὰ ὁρατὰ ta horata), கட்புலனாகாதவை (τὰ ἀόρατα ta haorata), அரியணையில் அமர்வோர் (θρόνοι thronoi), தலைமை தாங்குவோர் (κυριότητες kuriotētes), ஆட்சியாளர் (ἀρχαὶ harchai), மற்றும் அதிகாரம் கொண்டோர் (ἐξουσίαι edzusiai).
ஆ. இவையனைத்தும் இயேசுவால், அவர் வழியாய், அவருக்காக படைக்கப்பட்டுள்ளன (நான்காம் மற்றும் ஆறாம் வேற்றுமைகள் அழகாக பாவிக்கப்பட்டுள்ளன).
வ.17: இயேசுவின் காலமும் முழு உலகின் காலமும் ஒப்பிடப்படுகிறது. இந்த வரியில் ஒரே விதமான ஒலிகளைக் கொண்ட சொற்கள் பாவிக்கப்பட்டுள்ளன, கவியாக்கப்பட்டுள்ளன. கிறிஸ்து, தந்தையாகி கடவுள் மட்டில் காலத்தால் பிந்தியவர் அல்லது ஒரு காலத்தில் அவர் இருந்திருக்கவில்லை என்ற ஒரு பேதகத்தை இந்த வரி நினைவுகூறுகிறது.
வ.18: இயேசுவிற்கும் திருச்சபைக்குமான உறவு விவரிக்கப்படுகிறது: கிரேக்க மெய்யிலாளர்களுக்கு உடல் அதன் பாகங்களைப் பற்றிய நல்ல (அக்காலத்தின் படி) அறிவு இருந்திருக்கிறது. அவர்கள் உடலின் மிக முக்கியமான உறுப்பாக தலையைக் கருதினார்கள். இன்றும் இந்த வாதத்தில் பல உண்மைகள் இருக்கிறது. தலைதான் உடலை இயக்குகிறது என்றும் அவர்கள் நம்பினார்கள்.
இவர்களுக்கு, இவர்களின் மெய்யியலிலேயே பவுல் நற்செய்தி உரைக்கிறார். திருச்சபை (ἐκκλησία எக்கிலேசியா) ஒரு உடலாகவும் (σῶμα சோமா), அதன் தலையாக (κεφαλή கெபாலே) இயேசுயும் உருவகப்படுத்தப்படுகிறார். அதேவேளை பவுல் இறந்தவர்களையும் விடவில்லை அவர்களில் தலைவராகவும் இயேசுவைப் பார்க்கிறார், ஏனெனில் இறப்பவர்களும் வாழ்கிறார்கள் என்பது கிறிஸ்தவ நம்பிக்கை.
வ.19: கடவுள் மனிதர்களுள் இருக்கிறார், ஆனால் நிறைவாக இல்லை. கிறிஸ்து இயேசுவில் கடவுள் நிறைவாக குடிகொண்டுள்ளார்; என்பது கோலோசேய திருமுகத்தின் இன்னொர் இறையியல். குடிகொள்ளுதல் என்ற சொல் அதிகமாக யோவான் நற்செய்தியில் பாவிக்கப்படும் ஒரு சொல். இது ஒருவரில் வாசம் செய்தலைக் குறிக்கும், அல்லது இல்லம் அமைத்தலைக் குறிக்கும்.
வ.20: கிறிஸ்துவின் இரத்தத்தால் கடவுள் அனைத்தையும் ஒப்புரவாக்கினார் என்ற பலிப்பொருள்
இறையியல் விவாதிக்கப்படுகிறது. முதல் ஏற்பாட்டில் பல வேளைகளில் மனிதர்கள் கடவுளோடு மிருக இரத்தத்தின் வாயிலாக ஒப்புரவு செய்ய முயன்று தோற்றனர். இங்கே அந்த ஒப்புரவு கிறிஸ்துவின் இரத்தத்தால், பீடமாகிய சிலுவையில் செய்யப்படுகிறது. அதே வேளை இந்த பலியை செய்பவர் இங்கே மனிதர் அல்ல, மாறாக கடவுளே, எனவே இந்த பலி தோற்காத பலி என்பது பவுலின் ஆழமான இறையியல் வாதம்.
லூக்கா 23,35-43
35மக்கள் இவற்றைப் பார்த்துக் கொண்டு நின்றார்கள். ஆட்சியாளர்கள், 'பிறரை விடுவித்தான்; இவன் கடவுளின் மெசியாவும், தேர்ந்தெடுக்கப்பட்டவனுமானால் தன்னையே விடுவித்துக் கொள்ளட்டும்' என்று கேலிசெய்தார்கள். 36-37படைவீரர் அவரிடம் வந்து புளித்த திராட்சை இரசத்தைக் கொடுத்து, 'நீ யூதர்களின் அரசனானால் உன்னைக் காப்பாற்றிக் கொள்' என்று எள்ளி நகையாடினர்.
38'இவன் யூதரின் அரசன்' என்று அவரது சிலுவையின் மேல் எழுதி வைக்கப்பட்டிருந்தது.
39சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்த குற்றவாளிகளுள் ஒருவன், 'நீ மெசியாதானே! உன்னையும் எங்களையும் காப்பாற்று 'என்று அவரைப் பழித்துரைத்தான்.
40ஆனால் மற்றவன் அவனைக் கடிந்து கொண்டு, 'கடவுளுக்கு நீ அஞ்சுவதில்லையா? நீயும் அதே தீர்ப்புக்குத்தானே உள்ளாகி இருக்கிறாய். 41நாம் தண்டிக்கப்படுவது முறையே. நம் செயல்களுக்கேற்ற தண்டனையை நாம் பெறுகிறோம். இவர் ஒரு குற்றமும் செய்யவில்லையே!' என்று பதிலுரைத்தான். 42பின்பு அவன், 'இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும்' என்றான்.
43அதற்கு இயேசு அவனிடம், 'நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்' என்றார்.
மாண்புமிகு வைத்தியர் லூக்கா தன்னுடைய அழகான வரிகளால் தன் நற்செய்தியின் ஆழத்தை காட்டுவார். இன்றைய வாசகம் இயேசுவின் மரண தண்டனைக் காட்சியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இன்றைய நற்செய்தியில் வரும் இரண்டு குற்றவாளிகளின் காட்சிகள் மூன்று ஒத்தமை நற்செய்திகளிலும் வித்தியாசமாக விவரிக்கப்பட்டுள்ளது. மாற்கு (15,32) மற்றும் மத்தேயுவில் (27,44) இவர்களுக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.
இவர்களும் இயேசுவை இகழந்தவர்கள் கூட்டத்தில் சேர்கப்பட்டிருக்கிறார்கள். லூக்கா இவர்களையும் இயேசுவின் சீடராக்கியிருக்கிறார். இதில் ஒருவர் விண்ணகமும் செல்கிறார். (பார்க்க: சமநோக்கு நற்செய்திகள் ஒப்பீட்டு இலக்கம் 346). லூக்காவின் சீடர்கள் பரப்பளவினுள் இந்த 'நல்ல கள்வரும்' வருவது அவருடைய நற்செய்தியின் பொதுவான இயல்பே. இயேசுவை மெசியா என்று அறிக்கையிட ஒருவருக்கு இறுதிவரை வாய்ப்புள்ளது என்பதற்கு இந்த பகுதி நல்லதோர் உதாரணம்.
வ.35: இயேசுவை இகழ்ந்தோர் கூட்டத்தில் முதலாவது குழு:
அ. பார்த்துக்கொண்டு நின்ற மக்கள்- இவர்கள் தங்களது கையாகாலாத தன்மையால் மௌனமாக நிற்கும் மக்களைக் குறிக்கிறார்கள். இன்று அதிகமான குற்றச்செயல்கள் இந்த 'சும்மா பார்த்துக்கொண்டு நிற்பவர்கள்' உடைய அசமந்தமான போக்கினாலேதான் நடைபெறுகின்றன. ஒருவேளை இவர்கள் தங்கள் உயிருக்கு பயந்து எந்த முயற்ச்சியும் எடுக்காமல் இருந்திருக்கலாம்.
ஆ. ஆட்சியாளர்கள்- நிச்சயமாக இங்கே பிலாத்து இல்லை. ஆக இவர்கள் சதுசேய தலைமைக் குருக்களாகத்தான் இருக்கவேண்டும். இவர்களுடைய முக்கியமான பிரச்சனையே, இயேசு தன்னை கடவுளின் தேர்ந்தெடுக்கப்பட்ட மெசியா என சொன்னதுதான். சதுசேயர்கள் உரோமையர் முன்னிலையில் தங்களை யூதர்களின் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்றவர்கள். அவர்களுக்கு இது கடினமாக இருந்திருக்கும். இந்த ஆட்சியாளர்களுள் பரிசேயரும், மறைநூல் வல்லுநர்களும் அடங்கியிருக்கலாம். மற்றவர்களை கேலி செய்தல் என்ற மனித வரலாற்றின் (முக்கியமாக நமக்கு) அசிங்கத்தை லூக்கா காட்டுகிறார்.
வ.36-38: இரண்டாவது குழு- படைவீரர்கள்: உரோமை படைவீரர்கள் தங்களது வன்முறை செயற்பாட்டால் அதிகம் அறியப்பட்டவர்கள். முக்கியமாக தாங்கள் கைப்பற்றிய உரோமை குடியுரிமையற்றவருக்கு மிக கேவலமான பல தண்டனைகளைக் கொடுத்தார்கள். இவர்கள், இயேசுவிற்கு அதாவது யூதரின் அரசர் (வ.38) என்று அறியப்பட்டவருக்கு, அடிமைகள் குடிக்கின்ற மிகவும் மலிவான, தண்ணீர் கலந்த, வினாகிரி போன்ற திராட்சை இரசத்தைக் கொடுக்கிறார்கள்.
இந்த இரசம் பொஸ்கா (posca) என்று இலத்தினில் அறியப்படுகிறது. அரசருக்கு கீழ்தரமான உணவு கொடுப்பது அவரின் மேன்மையைக் குறைக்கும் செயல். போரில் பிடிபடும் எதிரித் தலைவனை எள்ளி நகையாடுவது போல் இவர்கள் யூதரின் அரசர்க்கு (தாவீதின் மகனுக்கு) செய்கிறார்கள். அரசன் பொதுவாக தன் மக்களை எதிரிகளிடமிருந்து காப்பாற்ற வேண்டியவர், இங்கே உரோமையர்கள் இவரை தன்னையே காப்பாற்றச் சொல்லி கேட்கிறார்கள்.
இவர்களும் லூக்காவின் பார்வையில் இயேசுவை ஏளனம் செய்யும் இன்னொர் மக்கள் கூட்டத்தை பிரதிபலிக்கின்றனர்.
வ.39: மூன்றாவது குழு- குற்றவாளிகளில் ஒருவன்: லூக்கா இவனை தொங்கவிடப்பட்ட குற்றவாளி என சொல்கிறார் அவனின் குற்றத்தை விவரிக்கவில்லை. அது அவருடைய நற்செய்தியின் நோக்கமும் அல்ல. இவனுடைய ஏளனமும் மற்றவர்களுடையதைப் போலவே இருக்கிறது.
இவன் இயேசுவின் மெசியாத்துவத்தை நகைக்கிறான்.
வ.40: நான்காவது குழு- இவரை 'மற்றவர்' என்று லூக்கா குறிப்பிடுகிறார் தீயவர் என்று குறிப்பிடவில்லை. இவர் இயேசுவை இகழாதவர் மாறாக தன் சக குற்றவாளியை இயேசுவிற்காக கடிந்து கொள்கிறார். ஆரம்ப கால திருச்சபையில் இயேசுவிற்காக வாழ்ந்து மனம்மாறிய பல மறைசாட்சிகளை இவர் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். இவர் 'கெட்ட கள்வன்' மீது சுமத்துகின்ற குற்றம், இறைபயமில்லாத தன்மையாகும். இந்த குற்றம் இயேசுவை இகழ்ந்த அனைத்து குழுக்களின் மீதும் போடப்படுகிறது. ஆரம்ப கால திருச்சபையில் இந்த குற்றம் இன்னும் பலரைக் குறித்திருக்கலாம்.
வ.41: இந்த வசனம் நல்ல கள்வருடைய பாவறிக்கை போல தோன்றுகிறது. அத்தோடு குற்றமில்லாதவர்கள் தண்டிக்கப்படுவது இந்த சமுதாயத்தின் அநீதியான சமூக கட்டமபைப்பைக் காட்டுகிறது. இவர் பாவ அறிக்கை செய்வதன் மூலம், பாவியாக இருந்தாலும் லூக்காவின் மறைபரப்பு சீடர்களுள் முக்கியமானவராக மாறுகிறார். சுற்றியிருந்த யூதர்கள் மற்றும் உரோமையர்கள் அனைவரிலும் மேன்மையானவராக இயேசுவின் பார்வையில் இரக்கம் பெறுகிறார்.
வ.42: பாவ அறிக்கை செய்தவர், விசுவாச அறிக்கைசெய்கிறார். இயேசுவை மெசியாவாக ஏற்றுக்கொள்கிறார். இதனையே அனைத்து வாசகர்களும் செய்ய வேண்டும் என லூக்கா எதிர்பார்க்கிறார்.
வ.43: இந்த காட்சியில் இயேசு தீர்ப்பிடப்படுகிறவர் அல்ல, மாறாக அவர்தான் தீர்ப்பிடுகிறவர் என நாசூக்காக லூக்கா காட்டுகிறார். இங்கிருந்த அனைத்து குழுக்களிலும் இந்த திருந்திய கள்வர் மட்டும் வான் வீட்டை உரிமையாக பெற மற்றவர் அனைவரும் அதனை இழந்துவிடுகிறார்கள் என லூக்கா காட்டுகிறார்.
ஆண்டவருக்கு முன்னால் அரசனும் கிடையாது பணியாளனும் கிடையாது,
அனைவரும் அவர் பிள்ளைகளே.
அரச இரத்தம், அரச குலம், அரச இனம் என பேசுகிறவர்கள்
உண்மையை அறியாதவர்கள்.
ஈழத்தமிழர்களுடைய எதிர்காலமும் தலைமைத்துவமும்
திட்டமிட்டு இல்லாமல் ஆக்கப்பட்டுள்ள இவ்வேளையில்,
இயேசு அரசர் பொருவிழாவைக் கொண்டாடுகின்றோம்.
நமக்கு அரசர் நாம்தான், எங்கள் எல்லோருக்கும் அரசர் இறைவனே.
அவர் அரசில் நிலைபெறுவது நீதியும், அன்பும், இரக்கமுமே.
அன்பு ஆண்டவரே, நீரே எங்கள் கடவுள் என நம்ப விசுவாசம் தாரும்.
அரச பெயரில் நடைபெறும் அக்கிரமங்களை காக்க நீதி தாரும். ஆமென்.
மண்ணின் விடிவிற்காக உயிர்நீத்த உறவுகளுக்கும்,
விண்ணக மாட்சிக்காக சாட்சியாக உயிர்நீக்கும் புனிதர்க்கும்,
சமர்ப்பணம்.
போரும், அச்சமும், அடிமைத்தனமும்
ஓர் இனத்தை அழிக்காது,
கோழைத்தனமும், துரோகமும், சோம்பலும் இனத்தை
அழிக்கலாம். நம் கடவுள் நம்மைக் காப்பார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக