வெள்ளி, 29 நவம்பர், 2019

திருவருகைக் காலம் முதலாம் ஆண்டு (அ) 2019 முதலாம் ஞாயிறு 1,12,2019 1st Sunday of Advent








திருவருகைக் காலம் முதலாம் ஆண்டு () 2019
முதலாம் ஞாயிறு
01,12,2019 1st Sunday of Advent 

M. Jegankumar Coonghe OMI,
‘Sangamam,’
Oblate Spiritual Animation Centre,
Kopay South, Kopay,
Jaffna. 
Wednesday, November 27, 2019
முதல் வாசகம்: எசாயா 2,1-5
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 122
இரண்டாம் வாசகம்: உரோமையர் 13,11-14
நற்செய்தி: மத்தேயு 24,37-44            

திருவருகைக் காலம் 
  ஒவ்வொரு திருச்சபைகளிலும் திருவருகைக் காலம் தனித்துவமான முறையில் கொண்டாடப்படுகிறது. கத்தோலிக்க திருச்சபையில் கி.பி. 480ம் ஆண்டுகளிலிருந்து இந்த வழிபாட்டு முறை நடைமுறையில் உள்ளது. சிலர் இதனை பேதுருவின் காலத்துடனும் இணைக்கப் பார்க்கின்றனர், இஅதற்கு வாய்மொழிப் பாரம்பரியம் மட்டுமே சாட்சியமாக உள்ளது. 'திருவருகை' என்ற சொல் கிரேக்க παρουσία பருசியா என்ற மூலச் சொல்லிலிருந்து வருகிறது. இதன்இலத்தின் வடிவமாக அத்வென்துஸ் adventus என்ற சொல் இருக்கிறது, இதிலிருந்துதான்ஆங்கில advent அட்வென்ட் என்ற தற்போதைய சொல் உருவாகியிருக்கிறது
 பரூசியா என்பது ஆரம்ப கால கிரேக்க நம்பிக்கையில் மனிதர்களின் கூட்டத்திற்கு எதிர்பார்க்கப்பட்ட தெய்வத்தின் வருகையைக் குறித்தது. பின்னர் கிரேக்க-உரோமையர்கள் காலத்தில் இது ஆட்சியாளர்களின் வருகையைக் குறிக்க பயன்பட்டது. சீசர்கள், அரசர்கள், ஆட்சியாளர்கள், தங்கள் மக்களை சந்திக்க, அவர்கள் இடங்களுக்கு எப்போதாவது வருவது வழமை, அவர்களின் வருகைக்காக மக்கள் காத்திருப்பர். இந்த நிகழ்வு அக்காலத்தில் வழக்கிலிருந்த ஒரு சாதாரண அரசியல் நிகழ்வு
  கிறிஸ்தவம் வளர்ந்ததன் பின்னர், இயேசுவின் இரண்டாம் வருகையை நினைவூட்டும் விதமாக இந்த பரூசியா என்ற சொல் கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்காக பயன்படுத்தப்பட தொடங்கியது. இது இரண்டு விதமான வருகைகளை கிறிஸ்தவர்களுக்கு நினைவூட்டுகிறது. முதலாவது வருகை மெசியாவின் பிறப்பிற்காக காத்திருந்த வருகையாகவும், இரண்டாவது வருகை இந்த மெசியா இரண்டாவது தடவையாக வருவதற்கான காத்திருத்தலாகவும் இருக்கின்றன. திருவருகைக் காலம் உரோமன் கத்தோலிக்க திருச்சபையில் ஒரு வழிபாட்டு ஆண்டை ஆரம்பித்து வைக்கிறது, இவ்வாறு இந்த ஆண்டு (-மத்தேயு) ஆண்டாக இன்றிலிருந்து ஆரம்பிக்கின்றது. இந்த காலத்தில் நத்தார் மலர்-வலயம், நத்தார் இசைப் பாடல்கள், நத்தார் கால அட்டவணை, நத்தார் சோடினைகள், மற்றும் நத்தார் கொண்டாட்டங்கள் என நம் வீடுகளையும் ஆலயங்களையும் அலங்கரிக்கும். கீழைத்தேய கிறிஸ்தவர்கள் இந்த காலத்தில் நத்தார் உணவுத்தவிர்ப்பு என்ற நிகழ்வை 40 நாட்களுக்கு தவமாக மேற்கொள்கின்றனர், இந்த மரபு பல காலங்களுக்கு முன்பு கத்தோலிக்க திருச்சபையின் வழகிலிருந்து எடுக்கப்பட்டுவிட்டது.
 இந்த நாட்களின் வழிபாட்டு வாசகங்களின் கருப்பொருளாக இயேசுவின் இரண்டாம் வருகையும் அத்தோடு அவரின் வரலாற்று பிறப்பு நிகழ்வும் திகழ்கின்றன. கத்தோலிக்க திருச்சபை இந்த நான்கு வாரங்களை இரண்டாக பிரித்து, முதலாவது பகுதியாக, திருவருகைக் கால முதல் ஞாயிறிலிருந்து டிசம்பர் 16ம் திகதிவரை உள்ளதை, இயேசுவின் இரண்டாம் வருகைக்கான ஆயத்தமாகவும் (பரூசியா): இரண்டாவதாக, 17ம் திகதியிருந்து 24ம் திகதிவரையான நாட்களை இயேசுவின் முதலாவது வருகையான அவரது வரலாற்று பிறப்பு மகிழ்சியை நினைவு கூருவதாகவும் (நத்தார்) அமைத்துள்ளது. இந்த காலம் ஒர் ஆயத்த காலமாக இருப்பதனால், தபசு காலத்தைப்போல் ஊதா நிற ஆடைகள் வழிபாட்டில் அணியப்படுகின்றன. ஐரோப்பிய திருச்சபையிலும் மற்றும் அனைத்துலக திருச்சபையிலும் இந்த காலத்திற்கென்று பல தனித்துவமான கிறிஸ்து பிறப்பு பாடல்கள் இன்னும் அழியாமல் பாவனையில் உள்ளன. வட ஐரோப்பிய நாடுகளில் பல விதமான அத்வென்துஸ் பாரம்பரிய நிகழ்வுகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. இந்த நாட்களில் வரும் நான்கு வாரங்களில் முதலாவது வாரத்திற்கு நம்பிக்கையின் மெழுகுவர்த்தியும், இரண்டாவது வாரத்திற்கு பெத்லேகேம் மெழுகுவர்த்தியும், மகிழ்ச்சியை குறிக்கும் (Gaudete) எனும் மூன்றாவது வாரத்திற்கு ரோசா வண்ண மெழுவர்த்தியும்
இறுதியாக வானவர்களின் மகிழ்ச்சி செய்தியைக் குறிக்கும் விதமான நான்காவது மெழுகுவர்த்தியாக வானதூதர் மெழுகுவர்த்தியும் (வெள்ளை) ஏற்றப்படுகின்றன. இருபத்திநான்காம் நாள் மாலைப் பொழுதில் ஆண்டவரின் பிறப்பை குறிக்கும் விதமாக ஐந்தாவது மெழுகுதிரி ஒன்றும் ஏற்றப்படுகின்றது. கிறிஸ்து பிறப்புக் காலம் பல பரிசில்களையும், மகிழ்வான தருணங்களையும் நினைவுபடுத்துவதால் இதனை குழந்தைகளின் காலம் என்றும் அழைக்கின்றனர். ஒவ்வொரு கிறிஸ்தவருக்கும் நத்தார் பல குழந்தை பருவ நிகழ்வுகளை நினைவூட்டிக்கொண்டே இருக்கும்.  

எசாயா 2,1-5
1யூதாவையும் எருசலேமையும் குறித்து ஆமோட்சியின் மகன் எசாயா கண்ட காட்சி: 2இறுதி நாள்களில் ஆண்டவரின் கோவில் அமைந்துள்ள மலை எல்லா மலைகளுக்குள்ளும் உயர்ந்ததாய் நிலை நிறுத்தப்படும்; எல்லாக் குன்றுகளுக்குள்ளும் மேலாய் உயர்த்தப்படும்; மக்களினங்கள் அதைநோக்கிச் சாரை சாரையாய் வருவார்கள். 3வேற்றினத்தார் பலர் அங்கு வந்து சேர்ந்து 'புறப்படுங்கள் ஆண்டவரின் மலைக்குச் செல்வோம்; யாக்கோபின் கடவுளின் கோவிலுக்குப் போவோம். அவர் தம் வழிகளை நமக்குக் கற்பிப்பார்; நாமும் அவர் நெறிகளில் நடப்போம்' என்பார்கள். ஏனெனில், சீயோனிலிருந்தே திருச்சட்டம் வெளிவரும்; எருசலேமிலிருந்தே ஆண்டவரின் திருவாக்கு புறப்படும். 4அவர் வேற்றினத்தாரிடையே உள்ள வழக்குகளைத் தீர்த்து வைப்பார்; பல இன மக்களுக்கும் தீர்ப்பளிப்பார்; அவர்கள் தங்கள் வாள்களைக் கலப்பைக் கொழுக்களாகவும் தங்கள் ஈட்டிகளைக் கருக்கரிவாள்களாகவும் அடித்துக் கொள்வார்கள், ஓர் இனத்திற்கு எதிராக மற்றோர் இனம் வாள் எடுக்காது; அவர்கள் இனி ஒருபோதும் போர்ப்பயிற்சி பெற மாட்டார்கள். 5யாக்கோபின் குடும்பத்தாரே, வாருங்கள் நாம் ஆண்டவரின் ஒளியில் நடப்போம்

எசாயா தென்நாட்டின் முக்கியமான அரசியல் காலத்தில் தென் அரசவையில் பணியாற்றிய ஒரு பெரிய இறைவாக்கினராக அறியப்படுகிறார். கிமு. ஏழாம் நூற்றாண்டில் பணியாற்றிய இவரது காலத்தின் பின்பகுதியில் வட நாடான இஸ்ராயேல் அசிரியரிடம் வீழ்ந்து அழிந்தது. சகோதர நடானான, வட அரசு-இஸ்ராயேலும், நட்பு நடான சீரியாவும் அசிரியாவை எதிர்க்க தங்கள் அணியில் யூதாவையும் சேருமாறு வற்ப்புறுத்தினர். இந்த அணியில் சேரவேண்டாம் என எசாயா யூதா அரசனை எச்சரித்தார், அவனும் பணியவே, அந்த கூட்டணி முதலில் யூதேயா மீது படையெடுத்தனர். இந்த போரை யூத-எபிராயிம் போர் என வரலாற்று ஆசிரியர்கள் கணிக்கின்றனர். இந்த சிக்கலான காலப்பகுதியில் யூதேயா அரசன் கடவுளை நம்பாமல் அசீரியாவை நம்பினான் இதனால் கடவுளால் புறக்கணிக்கப்பட்டான். அவன் யாரை நம்பினானோ அவர்களே பிற்காலத்தில் யூதேயா மீது படையெடுத்தனர். அவர்கள் யூதேயாவின் வட நகர்களையும் கைப்பற்றினர். இந்த அரசனின் (ஆகாஸ்) தவறான அரசியல் நகர்வு, தங்கள் சகோதர நாட்டை (இஸ்ராயேலை) இல்லாமல் ஆக்கியது அத்தோடு தங்கள் சொந்த சுதந்திரத்தையும் இழக்கவைத்தது. இப்படியான காலகட்டத்திலே எசாயா இறைவாக்குறைக்கிறார்.   இறைவாக்கினர் புத்தக குழுவிலே எசாயா புத்தகம் மிக பெரிய புத்தகமாக இருக்கிறது. இந்த புத்தகம் மொத்தமாக அறுபத்தாறு அதிகாரங்களைக் கொண்டுள்ளது. தற்கால எசாயா ஆய்வாளர்கள் இந்த 66 அதிகாரங்களையும் ஒரு இறைவாக்கினர்தான் எழுதினார் என்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். இந்த அதிகாரங்களை மூன்றாக பிரித்து அவற்றை முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது எசாயா என்று காண்கின்றனர். அத்தோடு அவற்றை முறையே இடப்பெயர்வுக்கு முன் (பபிலோனிய), 
இடப்பெயர்வின் போது, மற்றும் இடப்பெயர்வின் பின் என்று பிரிக்கின்றனர். மெசியா பற்றிய இறைவாக்கு, சமூக நீதி, நீதிமான் வாழ்க்கைமுறை, வல்லமை, நம்பிக்கைபோன்ற இறைவாக்குகளால் இன்றும் எபிரேய இறைவாக்குகளில் மங்காத நட்சத்திரமாக இது துலங்குகின்றதுஇன்றைய வாசகம் முதலாவது எசாயா புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த பகுதி கடவுள் தரும் முடிவில்லை அமைதியைப் பற்றி இறைவாக்குறைக்கிறது. அத்தோடு இது கடவுளின் நகரைப்பற்றி ஆய்வு செய்கிறது

.1: இந்த வரி இறைவாக்கினர் எசாயாவை நமக்கு அறிமுகப்படுத்துகிறது. ஏற்கனவே முதல் அதிகாரம் முதலாம் வசனத்தில் எசாயா அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறார், இருப்பினும் இங்கு மீண்டும் எருசலேம், யூதாவுடன் இணைக்கப்பட்டு எசாயா அறிமுகப்படுத்தப்படுகிறார். எசாயா ஆமோட்சின் மகன் எனப்படுகிறார் (יְשַׁעְיָהוּ בֶּן־אָמוֹץ yëša‘yahû ben-‘āmôdz). பின்வரும் வரிகள் எசாயாவின் காட்சிகள் என ஆசிரியரால் முன்வைக்கப்படுகின்றன

.2: இந்த வரி எருசலேமைப் பற்றிய இறைவாக்குகளில் மிக முக்கியமானது. எருசலேம் ஒரு மலையில் அமைந்துள்ளது. அதனை ஒரு குன்று என்று கூடச் சொல்லலாம். தாவீது, சீயோன் குன்றின்மீது தன் நகரை அமைத்தார், ஆனால் சாலமோன் அதன் வடக்கு மலையையும் இணைத்து எருசலேமை பெரிய நகராக்கினார். இந்த பெரிய மலையில்தான் எருசலேம் தேவாலயம் அமைந்தது. ஆக எசாயாவின் இந்த இறைவாக்கு அனைத்து எருசலேம் மலைக் குன்றையும் குறிக்கும் அல்லது முழு நகரையும் குறிக்கிறது என எடுக்கலாம். எசாயா முதலாவதாக இறுதி நாட்களைப் பற்றி குறிப்பிடுகிறார். எருசலேம் எதிரிகளிடம் விழப்போகிறது என்பதை நன்கு அறிந்திருக்கிறார் போல. இந்த இறைவாக்கின் ஒளியில், எருசலேம் இன்னும் அனைத்து மலைகள் மற்றும் குன்றுகளின் முதன்மையானதாக இல்லை என்பது புலப்படுகிறது. மக்களினங்கள் எருசலேமை நோக்கி சாரை சாரையாக வருவர் என்கிறார் எசாயா. எபிரேய விவிலியம் மக்கள் வெள்ளமாக திரண்டு வருவர் என்றே கூறுகிறது (נָהֲרוּ  אֵלָיו כָּל־הַגּוֹיִם׃ nāharû ’ēlāyw côl-haggôyim). யார் இந்த மக்களினம் என்பதில் பல கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. இது யூதர்களை மட்டுமல்லாது அனைத்து மக்களையும் குறிப்பது போல உள்ளது, அனைத்து மக்களையும் குறிக்க பயன்படும் சொல்தான் இங்கே பயன்படுத்தப்பட்டுள்ளது. (גּוֹיִֽם கொய்யிம்).

.3: இரண்டாவது வசனத்திலிருந்த மயக்கத்தை இந்த மூன்றாவது வசனம் தெளிவுபடுத்துகிறது. வேற்றின மக்கள் என்படுவபர் யூதரல்லாதவரைக் குறிக்கிறது. வேற்றின மக்கள் என தமிழ் விவிலியம் குறிப்பிடுபவர்களை, எபிரேய விவிலியம் 'அனைத்து மக்களினங்கள்' என்றே குறிப்பிடுகின்றது (עַמִּים רַבִּים ‘ammîm rammîm). எருசலேமிற்கு, கடவுளின் மலை (הַר־יְהוָה ஹார் அதோனாய்) மற்றும் யாக்கோபின் கடவுளின் இல்லம் 
(בֵּית אֱלֹהֵי יַעֲקֹב பேத் எலோஹாய் யாகோவ்) என்ற பெயர்களைக் கொடுக்கின்றனர். அத்தோடு அங்கு கடவுள் தமக்கு ஆசிரியரைப்போல் கற்பிப்பார் எனவும், தாங்களும் கற்பிக்கப்பட ஆயத்தமாயிருப்போம் எனவும் மக்கள் ஏற்றுக்கொள்கின்றனர். கடவுள் கற்பிக்கிறார் ஆனால் நாம்தான் படிக்க ஆயத்தமாயிருக்க வேண்டும் என்பது அழகான சிந்தனை

 திருச்சட்டமும் (תוֹרָה tôrāh), திருவாக்கும் (דְבַר־יְהוָה dëvar-YHWH) சீயோனிலிருந்தே புறப்படும் என்பது இஸ்ராயேலர்களின் முக்கியமாக தென்நாட்டவரின் (யூதேயா) அசைக்க முடியாத நம்பிக்கை. இந்த நம்பிக்கை பலகாலமாக இருந்ததை சமாரியப் பெண்ணின் இயேசுவுடனான உரையாடல் காட்டுகின்றன. அங்கே இன்னோர் அர்த்தத்தில் இயேசு அந்த சமாரியப் பெண்ணுடன் உரையாடுகிறார், அத்தோடு உண்மை வழிபாடு எருசலேமில் அல்ல மாறாக உள்ளத்தில் ஆவியிலே என்று இன்னோர் அத்தியாயத்திற்கு இயேசு நம்மை அழைக்கிறார் (காண்க யோவான் 4,20-26). 

.4: ஆண்டவரின் குணாதிசியங்களை இந்த வரி அழகாகவும் ஆழமாகவும் படம்பிடிக்கிறது
. ஆண்டவர் வேற்றினத்தாரின் வழக்குகளை தீர்க்கிறார்
. மக்களுக்கு தீர்ப்பளிக்கிறார் 
 (இந்த இரண்டு பண்புகளும் கடவுளை குறைவுபடாத அரசராகக் காட்டுகின்றன)
. வாள்கள், கலப்பைக் கொளுக்களாகவும்: ஈட்டிகள், கருக்கரிவாள்களாகவும் மாறும்ஆரம்பத்திலிருந்தவை கலப்பைகளும் அரிவாள்களுமே ஆனால் மனிதரின் பேராசை ஈட்டிகளையும், வாள்களையும் கண்டுபிடித்தது. முன்னயவை வாழ்வு தரக்கூடியவை, பின்னயவை சாவை வருவிப்பபது. ஆண்டவர் சாவையல்ல மாறாக வாழ்வைத் தருவார் என்கிறார் எசாயா

. போர்ப்பயிற்சி தேவையில்லை: போர்பயிற்சி போர்வருவதற்கான ஆயத்தமாகும், அத்தோடு அது மற்றய மனிதர்களில் நம்பிக்கையில்லாத தன்மையைக் காட்டுகிறது. இங்கே போர்ப்பயிற்சி தேவையில்லை என்பது, மற்றவர் மேல் இனி சந்தேகம் தேவையில்லை என்பதைக் காட்டுகிறது
 எசாயா கண்ட அமைதியான அரசில் சாயல்கள் சிலநாடுகளில் ஏற்கனவே வந்துவிட்டது, ஆனால் இன்னும் பல நாடுகளில் அரிவாள்கள் மற்றும் கலப்பைக் கொளுக்களைவிட பல நூறு மடங்கு ஆயுதங்கள்தான் உற்பத்தி செய்யப்படுகின்றன.  

திருப்பாடல் 122
எருசலேமே நீ வாழி!
(சீயோன்மலைத் திருப்பயணப் பாடல்; தாவீதுக்கு உரியது)

1'ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்', என்ற அழைப்பை நான் கேட்டபோது அகமகிழ்ந்தேன். 2எருசலேமே! இதோ, நாங்கள் அடியெடுத்து வைத்து உன் வாயில்களில் நிற்கின்றோம்
3எருசலேம் செம்மையாக ஒன்றிணைத்துக்கட்டப்பட்ட நகர் ஆகும்
4ஆண்டவரின் திருக்குலத்தார் அங்கே செல்கின்றனர்; இஸ்ரயேல் மக்களுக்கு இட்ட கட்டளைக்களுக்கிணங்க ஆண்டவரது பெயருக்கு அவர்கள் நன்றி செலுத்தச் செல்வார்கள்
5அங்கே நீதி வழங்க அரியணைகள் இருக்கின்றன. அவை தாவீது வீட்டாரின் அரியணைகள். 6எருசலேமில் சமாதானம் நிலைத்திருக்கும்படி வேண்டிக்கொள்ளுங்கள்; 'உன்னை விரும்புவோர் வளமுடன் வாழ்வார்களாக
7உன் கோட்டைகளுக்குள் அமைதி நிலவுவதாக! உம் மாளிகைகளில் நல்வாழ்வு இருப்பதாக! 8உன்னுள் சமாதானம் நிலவுவதாக!' என்று நான் என் சகோதரர் சார்பிலும் என் நண்பர் சார்பிலும் உன்னை வாழ்த்துகின்றேன்
9நம் கடவுளாகிய ஆண்டவரின் இல்லம் இங்கே இருப்பதால், உன்னில் நலம் பெருகும்படி நான் மன்றாடுவேன்.

  எருசலேம் மலையை நோக்கி, அல்லது அங்கே அமைந்திருந்த சாலமோனின் ஆலயத்தை நோக்கி இஸ்ராயேல் விசுவாசிகள் கால்நடையாகவும், விலங்குகளிலும் வருவது வழக்கம், அப்போது அவர்கள் பல பிரயாணப் பாடல்களைப் பாடுவார்கள். அவற்றில் இந்த திருப்பாடல் 122ம் ஒன்றாக இருந்திருக்க வேண்டும். இந்தப் பாடல் கடவுளின் பிரசன்னத்தையும், எருசலேமின் புகழையும், தாவீது வீட்டாரின் அரியணையையும், மற்றும் எருசலேமின் சமாதானத்தைப் பற்றியும் பாடுகிறது. இந்த பாடல் பிற்காலத்தில் எழுதப்பட்டிருந்தால், இந்தப் பாடல் வாயிலாக இஸ்ராயேல் பிள்ளைகள், முக்கியமாக எருசலேமை காணாதவர்கள், அதன் அழகையும் முக்கியத்துவத்தையும் உணர இது நல்ல வாய்ப்பாக இருந்திருக்கும்

.1: இந்த பாடலின் முன்னுரை குறிப்பாக, தாவீதின் எருசலேம் மலையேறு பாடல் என்றிருக்கிறது שִׁיר הַֽמַּעֲלוֹת šîr hamma‘mlôtஇஸ்ராயேலருக்கு மகிழ்ச்சியைக் கொடுப்பது எந்த விதமான செல்வமுமல்ல மாறாக எருசலேமிற்கு போவதற்கான வாய்பே ஆகும் என்று பாடுகிறார் ஆசிரியர். இந்த வரியிலிருந்து, இவர்கள் எருசலேமிற்கு பல காரணங்களுக்காக குழுக்களாகச் செல்கின்றனர் என்பது புரிகிறது. எருசலேமிற்கு இன்னொரு பெயரான கடவுளின் இல்லம் 
(בֵּית יְהוָה bêt YHWH) கொடுக்கப்படுகிறது

.2-3: எருசலேமின் வாயிலில் நிற்பதை மகிழ்வாகக் காண்கிறார் ஆசிரியர். ஒருவேளை இதன் வாயிலிற்கு வருவதற்கு முன் அவர்கள் சந்தித்த சவால்கள் மற்றும் ஆபத்துக்களை நினைவுகூருகிறார் போலஎருசலேம் என்ற சொல்லின் அர்த்தமாக (יְרוּשָׁלַםִ ஜெருஷலாயிம்) பலவற்றை ஆய்வாளர்கள் முன்வைக்கின்றனர். இவற்றில், சமாதானம், நிறைவு போன்றவை முக்கியம் பெறுகிறது. அத்தோடு கானானியரான எபூசியரின் நகர் எனவும் இதற்கு இன்னொரு பொருளுண்டு. தாவீது எபூசியரிமிருந்து இந்த நகரை கைப்பற்றியதாக விவிலியம் சாற்றுகின்றது. தாவீது தொடங்கி பின்னர் தென்நாட்டு தலைநகராக இருந்த இந்நகர் பல வெளிநாட்டு ஆக்கிரமிப்பாளர்களால் (இஸ்ராயேலர் உட்பட) கட்டப்பட்டு அழிக்கப்பட்டது. எபூசியர், இஸ்ராயேலர், யூதர்கள், பபிலோனியர், பாரசீகர், கிரேக்கர், உரோமையர், அரபிய இஸ்லாமியர், ஐரோப்பிய கிறிஸ்தவர், பாலஸ்தினர் என்ற பலவிதமான மக்களின் கரங்களில் இது மாறி மாறி இருந்திருக்கின்றது. சிலர் இதனை அழகு படுத்தினர் பலர் இதன் அர்த்தமான சமாதானத்தையே (அமைதி) இல்லாமலாக்கினர். இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் பிரித்தானியரிடமிருந்து இது சர்வதேச தனி அலகான நகராக மாறினாலும் இன்று வரை நவீன இஸ்ராயேல் நாட்டின் கனவு தலைநகராக ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கிறது
  இந்த நகர், புதிய எருசலேம், பழைய எருசலேம் மற்றும் தாவீதின் நகர் என முக்கியமான மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் பழைய மற்றும் தாவீதின் நகர் எருசலேம்தான் விவிலியத்தில் அறியப்பட்ட எருசலேம். இந்த சிறிய நிலப்பகுதி மதத்தாலும், மொழியாலும், இனத்தாலும் பிரிக்கப்பட்டுள்ளது. அமைதி என்ற இதன் அர்த்தத்தை கடவுள் மட்டும்தான் இந்த இடத்திற்கு கொடுக்க முடியும். இருப்பினும் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இது பல மக்களின் விசுவாசத்திற்கு சான்றாக இருந்தது என்ற காரணத்தைக் கொண்டே இதன் மாட்சியை புரிந்து கொள்ள முடியும். ஏன் இறைவாக்கினர்களும் இயேசுவும் எருசலேமை நினைத்து கண்ணீர் விட்டார்கள் என்பதை இங்கே செல்லும் ஒவ்வொருவரும் கண்டுகொள்ளவர்.ஆசிரியர் எருசலேமை ஒற்றிணைக்கப்பட்ட நகர் என்பது அதன் உட்கட்டமைப்பை அல்லது வெளிச் சுவரைக் குறிக்கும். இருப்பினும், இங்கே பலர் ஒன்றாக கூடுவதனால் ஆசிரியர் இதனை 
இவ்வாறு அழைக்கிறார் என்றும் வாதாடுகின்றனர்

.4: இந்த வரி திருப்பிக் கூறல் என்ற எபிரேய கவிநடையில் அமைந்துள்ளது. திருக்கூட்டத்தார் என்பது இங்கே இஸ்ராயேலின் அனைத்து குலங்களையும் குறிக்கிறது. அவர்கள் அங்கே கடவுளின் பெயருக்காக அதாவது கடவுளுக்காக செல்கின்றனர் என நினைவூட்டுகிறார். உண்மையில் கடவுளுக்காக அங்கே மக்கள் சென்றால் நலமாக இருக்கும், மாறாக பலர் தங்களது மாறுபட்ட, திரிக்கப்பட்ட சமய நம்பிக்கைகளுக்காக அங்கே செல்வதால்தான் மற்றய மதத்தாருடன் சண்டை போடுகிறார்கள் என நினைக்கிறேன்

.5: இந்த வரியில் ஆசிரியர் முக்கியமான ஒரு வரலாற்று நம்பிக்கையை பாடுகிறார். அதாவது இங்கேதான் தாவீதின் அரியனை இருக்கிறது என்கிறார். இதனை எந்த காலத்தில் இவர் பாடுகிறார் என்பதில் மயக்கம் இருக்கிறது. இவர், பழைய தாவீதின் அரியணையை பாடுகிறார் அல்லது தற்போதும் இருக்கிற அரியணையை பாடுகிறாரா என்று கண்டுபிடிப்பது கடினம். எபிரேய வினைச் சொற்களின் கால குறிப்பை கணிப்பது அவ்வளவு இலகல்ல

.6: எருசலேமின் சமாதானத்திற்காக மன்றாடுங்கள் என்றே எபிரேயத்தில் இருக்கிறது
(אֲלוּ שְׁלוֹם יְרוּשָׁלָם ’alû šëlôm yërûšālām) இது ஓருவேளை அங்கே சமாதானம் இல்லை அதற்காக மன்றாடுகள் என்பது போலவும் தோன்றலாம். அத்தோடு எருசலேமை அன்புசெய்வோர் ஆசீர்வதிக்கப்படுவார்கள் என்ற ஆசீரும் 
இங்கே வழங்கப்படுகிறது

.7: எருசலேமின் கோட்டை என்பது அதன் காவல் அரண்களைக் குறிப்பது போல தோன்றினாலும் அது எருசலேமைத்தான் குறிக்கிறது. இந்த அமைதிதான் நிலைவாழ்வை தரும் என்பது மிகவும் ஆழமான எபிரேயச் சிந்தனை

.8: எருசலேமிற்கான பயணம் ஒரு சமூக பயணம் என்பதை அழகாக இந்த வரி காட்டுகிறது. சமாதனாம் ஒரு உள்ளார்ந்த அனுபவம் மட்டுமல்ல மாறாக ஒரு சமூக ஆவல் என்பதும் காட்டப்படுகிறதுשָׁלוֹם בָּךְ׃ šālôm bāk - உனக்குள் அமைதி

.9: எருசலேம் புகழப்படுவதற்கான காரணம் தாவீதல்ல மாறாக கடவுளும் அவரின் இல்லமுமாகும் என்பது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய நிதர்சனம். எருசலேமை கடவுளின் இல்லம் என்றழைத்து தொடங்கிய இந்தப் பாடல் அவ்வாறு மீண்டும் அழைத்து முடிவுறுகிறது.  לְמַעַן בֵּית־יְהוָ֣ה אֱלֹהֵ֑ינוּ  lëma‘an bêt-YHWH ’elôhênû - நம் கடவுளாகிய ஆண்டவரின் இல்லத்தின் பொருட்டு,
אֲבַקְשָׁה טוֹב לָךְ׃ ’avaqšāh tôv lāk - cd;Ds; ed;ikiaj; NjLNtd;




உரோமையர் 13,11-14
11இறுதிக்காலம் இதுவே என அறிந்து கொள்ளுங்கள்; உறக்கத்தினின்று விழித்தெழும் நேரம் ஏற்கெனவே வந்துவிட்டது. நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கை கொண்டபோது இருந்ததை விட மீட்பு இப்பொழுது மிக அண்மையில் உள்ளது. 12இரவு முடியப்போகிறது; பகல் நெருங்கி உள்ளது. ஆகவே இருளின் ஆட்சிக்குரிய செயல்களைக் களைந்து விட்டு, ஒளியின் ஆட்சிக்குரிய படைக்கலங்களை அணிந்து கொள்வோமாக! 13பகலில் நடப்பதுபோல மதிப்போடு நடந்து கொள்வோமாக! களியாட்டம், குடிவெறி, கூடா ஒழுக்கம், காமவெறி, சண்டைச்சச்சரவு, ஆகியவற்றைத் தவிர்ப்போமாக! 14தீய இச்சைகளைத் தூண்டும் ஊனியல்பின் நாட்டங்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம். இயேசு கிறிஸ்துவை அணிந்து கொள்ளுங்கள்.

 உரோமையர் திருமுகத்தின் 11வது அதிகாரம் மூன்று முக்கியமான கருத்துக்களை முன்வைக்கிறது. அவை
. அதிகாரிகளுக்கு கீழ்பப்படிதல்
. ஒருவருக்கொருவர் அன்பு செய்தல், மற்றும் 
. இறுதிக் காலம் நெருங்குதல் என்பவை
 இவை இந்த திருமுக ஆசிரியர், அக்கால உரோமைய திருச்சபையில் இருந்த மிக முக்கியமான சிக்கல்களை கலந்துரையாடுவதைப் போல இருக்கிறது. அதிகமான புதிய ஏற்பாட்டு நூல்கள் இயேசுவின் இரண்டாம் வருகை அருகில் இருப்பதனை நினைவூட்டுவதாக அமைகின்றன. இது புதிய ஏற்பாட்டு ஆசிரியர்களின் முக்கியமான நம்பிக்கைகளில் ஒன்று. இந்த நம்பிக்கை சில இடங்களில் நேரான பாதிப்புக்களையும், சில இடங்களில் எதிர்மறையான பாதிப்புக்களையும் கொண்டு வந்தது. உரோமைய திருச்சபையில், ஆண்டவரின் இரண்டாம் வருகை காலம் தாழ்த்துகிறது என்ற ஒரு வாதம் முன்வைக்கப்பட்டு சில நடைமுறைச் சிக்கல்களையும் உண்டு பண்ணியது. அல்லது ஆரம்ப திருச்சபை சந்தித்த கலாபனைகள் பல கேள்விகளை ஆரம்ப கால திருச்சபையில் உருவாக்கியது. அந்த வேளைகளில் துன்பங்களைத் தாங்கிக் கொள்ள இயேசுவின் இரண்டாம் வருகை மற்றும் அதனுடைய நெருங்கிவரும் காலத்தை பற்றிய அறிவு மிக முக்கியமான ஒன்றாக கருதப்பட்டிருக்க வேண்டும்

.11: அவசரமான தொனியில் இந்த வார்த்தைகளை பவுல் அறிவுறுத்துவதைப்போல உள்ளது. கிறிஸ்துவின் இரண்டாம் வருகையைப்பற்றிய விவாதங்களும், சிலர் இரண்டாம் வருகையை மனித கணிப்பில் கணக்கிட முயன்றதன் காரணமாகவும், பல மாறுபட்ட சிந்தனைகளை முன்வைக்க முயன்றனர். இங்கே பவுல் இறுதிக் காலத்தில்தான் நாம் இருக்கின்றோம் என மீளவும் நினைவூட்டுகிறார். உறக்கம் என்று அவர் இங்கே குறிப்பிடுவதை உலகியல் ஈடுபாட்டைக் குறிக்கிறது (ὕπνος ஹஉப்னோஸ் நித்திரை, உறங்குநிலை). மீட்பு முன்னைய நாட்களை விட மிக அருகில் இருக்கிறது என்ற வார்த்தையின் ஊடாக, யாரும் மனந்தளர்ந்து போக வேண்டாம் அத்தோடு இரண்டாம் வருகை மிக அருகில் இருக்கிறது என்கிறார்

.12: இரவையும் பகலையும் உருவக அணிகளாக பயன்படுத்துகிறார். νύξ நுக்ட்ஸ் இரவு என்பது சூரிய வெளிச்சம் இல்லாத காலத்தைக் குறிக்கும். இதனை உருவகமாக பயன்படுத்தி இந்த
இருட்டான காலம்தான், இயேசு இல்லாத, இந்த உலகின் ஆட்சி நிறைந்த காலம் எனக் காட்டுகிறார். இரவு அனைவருக்கும் தெரிந்திருக்கிற ஒரு நாளாந்த யதார்த்தம் என்ற படியால் இந்த செய்தி வாசகர்களை இலகுவாக சென்றடையும். பகல் என்பதற்கு கிரேக்கம் 'நாள்' என்ற சொல்லை (ἡμέρα ஹேமெறா- நாள்) பயன்படுத்துகிறது. எவ்வளவுதான் இரவு முக்கியமான சந்தர்ப்பமாக இருந்தாலும், எப்போது விடியல்வரும் அல்லது எப்படி இரவை ஒளியாக்கலாம் என்றே அனைவரும் விரும்புவர். இந்த உவமானம் மூலமாண கிறிஸ்துவில் வாழ்வே பகலைப்போன்றது என விளக்குகிறார் ஆசிரியர்
அத்தோடு இருளின் ஆட்சிக்குரிய செயல்கள் என்று பவுல் குறிப்பிடுபவற்றுள் பல அடங்கும். நம்பிக்கையில்லாதன்மை, வீண் குழப்பங்கள், சண்டைகள், சச்சரவுகள், இவ்வுலக இன்பங்கள் போன்றவை அடங்கும். ஒளியின் ஆட்சிக்குரிய படைக்கலங்களை அணியவும் கேட்கிறார். ஒளி (φῶς போஸ்- விடியல், வெளிச்சம், ஒளி, தூய்மை), புதிய ஏற்பாட்டில் கிறிஸ்துவை குறிக்கும் முக்கியமான ஒரு அடையாளம். ஒளியின் படைக்கலங்கள் என்பது ஒளியை அதாவது கிறிஸ்துவை சார்ந்த செயல்களைக் குறிக்கும்

வவ. 13-14: பகலின் செயல்களையும் இரவின் செயல்களையும் விளக்குகிறார். பகலின் நடந்தை மதிப்பான நடத்தைக்கு ஒப்பிடப்படுகிறது. பகலில் மனிதர்கள் தாங்கள் அவதானிக்கப்படுவர் என்ற காரணத்தால் நமது நடத்தையில் கவனமாக இருப்பர், இதனை மாண்புக்குரிய நடத்தை என்கிறார் பவுல். இதற்கு ஒவ்வாத நடத்தைகளாக சில தரப்படுகின்றன:

. களியாட்டம் (κῶμος கோமோஸ்)- கிரேக்க உரோமையருடைய காலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சிற்றின்ப வகையில் மிக முக்கியமானது. அறைகுறை ஆடையுடன், குடிமயக்கத்தில் நடந்து, நடனமாடி, பாடி நேரத்தை களிக்கும் ஒரு வகை இன்பம். (இன்று வடக்கில் தமிழ் கலாச்சாரத்தை அழிக்க பாவிகளாலும் எதிரிகளாலும் முன்னெடுக்கப்படும் இரவுக் களியாட்டங்களைப் போன்றது). இது இதில் பங்கேற்பவர்களுக்கு ஒரு போதையையும் மயக்கத்தையும் கொடுக்கும். ஐரோப்பாவில் பல இளைஞர்களும் முதியவர்களும் விரும்பி போகின்ற இரவு விடுதிக் களியாட்ட வகைகள் இதிலிருந்தே வளர்ந்தன

. குடிவெறி (μέθη மேதே) மனிதரை தொடக்க காலமுதல் அடிமைப்படுத்தும் மதுப்பழக்கம். குடிவெறிக்கு ஆயுள் மிக அதிகம். உலகில் எல்லா மூலைகளையும் இது ஆட்கொள்கிறது. சிலர் சந்தர்ப்பத்திற்காக குடிக்க பலர் குடிப்பதற்காகவே சந்தர்ப்பத்தை தேடுகின்றனர். இந்த மதுபானங்களில் உள்ள போதைக் குணங்கள் மனிதரின் மூளையை மந்தப்படுத்தி இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். சிந்திக்கும் ஆற்றலைத் தடுக்கும், இதனால் ஒரு வகை மயக்கமும் மோகமும் உண்டாகும். நம்மவர்கள் இதற்கு பல அர்த்தங்களைக் கொடுக்க முயன்றாலும் அனைத்தும் அழிவிற்கே என்பது இவர்களால் பாதிக்கப்படுபவர்களுக்கு நன்கு தெரியும். குடிப்பவர்கள் பெரியவர்கள், கதாநாயகர்கள் என்ற சிந்தனை மாறும் நாள் மட்டும், இந்த முழு உலகும் வெறியில்தான் இருக்கும். இந்த சிக்கல் உரோமைய உலகில் அதிகமான தாக்கத்தை உண்டுபண்ணியது. உரோமையர் மது-இரச பிரியர்கள். இந்த பழக்கம் இயேசுவை பற்றி சிந்திக் நல்ல வாய்ப்பை தராது என்பது பவுலின் மயக்கமற்ற சிந்தனை

. கூடாஒழுக்கம் (κοίτη கொய்டே) என்ற இந்த கூடாத பழக்கம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சமூக தீய காரணிகளில் ஒன்றாக இருந்திருக்கின்றது. இந்த கொய்டே கலாச்சாரத்திற்கும் இயற்கைக்கும் ஒவ்வாத உடலுறவுகளைக் குறிக்கும். இப்படியான பழக்கங்கள் கிரேக்க-உரோமைய உலகத்திற்கு தெரியாத அல்லது புதிதான ஒன்றல்ல. பெண்கள் பெண்களுடனான பாலியல் உறவு, ஆண்கள் ஆண்களுடனான உறவு, மனிதர் விலங்களுடனான உறவு, இரத்த உறவுகளுடனான உறவு, சுயஇன்பங்கள் என்றவாறு வகைப்படுத்தப்படுகிறது. அன்று அசிங்கமாகவும் தவறாகவும் கணிக்கப்பட்டது இன்று மனிதர்களின் 'புத்திக்கூர்மையான' அறிவினால் வியாக்கியானம் செய்யப்பட்டு சாதாரணமானதாக மாற்றப்பட்டிருக்கிறது. கூடாவொழுக்கம் எக்காலத்திலும் கூடாவொழுக்கமே 
(வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உநற்பும்
தெய்வத்துள் வைக்கப் படும்- குறள் 50) 
. காமவெறி (ἀσέλγεια அசெல்கெய்யா) மனிதர்கள் தாங்கள் மிருகங்களின் குலம் என்பதை அவர்களின் கட்டுப்படுத்த முடியாத காம இச்சைகளிலிருந்து அறிந்துகொள்ளலாம். காம 
இச்சைகளை கட்டுப்படுத்தக் கூடாது அவற்றை அவற்றின் வழியில் கையாளவேண்டும் என்ற ஒரு மருத்துவ நம்பிக்கையும் அன்றைய கிரேக்க உரோமைய உலகத்தில் இருந்தது. இங்கே பவுல் சாடுவது பாலியல் ஈடுபாடுகளையல்ல மாறாக கட்டுப்படுத்த முடியாத காம இச்சைகளை

. வாக்கு வாதங்கள் (ἔρις ஏரிஸ்). உரோமைய கிரேக்க உலகில் வாத முறை பேச்சுக் கலையின் முக்கியமான ஒரு வடிவமாக கருதப்பட்டது. பெரிய தத்துவ ஞானிகள் தங்களது பேச்சு வாதத்திறனின் வல்லமையால் உண்மையில்லாத வாதங்களைக்கூட நிரூபித்தனர். இங்கு அவர்கள் வாதிக்கும் திறனுக்கும் அவர்களின் வாதித்கும் முறைக்குமே முக்கியத்துவம் கொடுத்தனர், வாய்மைக்கல்ல. இந்த கலை சிலவேளைகளில் பயங்கரமான கோபத்தை வெளிகாட்டக்கூடிய வாய்ச்சண்டையாக மாறியது (எமது அரசியல் கூடங்களில் நடப்பது போல்). இதனைத்தான் தேவையில்லாத வாதங்களாகக் காண்கிறார் பவுல்

. பொறாமை (ζῆλος ட்சேலொஸ்). இதற்கு பல அர்த்தங்கள் இருந்தாலும், இந்த பகுதியில் இது சுயவிருப்பத்தை மட்டும் உள்ளடக்கிய பொறாமையையும் வஞ்சகத்தையும் குறிக்கிறது. இந்த தீய பண்பை கிறிஸ்தவத்திற்கு ஒவ்வாத பண்பாக பவுல் காண்கின்றார். கிறிஸ்தவ தியாக அன்பிற்கு நேரடி எதிர் பதமாக இந்த சுயநலமே அமைகிறது

மத்தேயு 24,37-44
மானிடமகன் வரும் நாளும் வேளையும்
36'அந்த நாளையும் வேளையையும்பற்றித் தந்தை ஒருவருக்குத் தவிர வேறு எவருக்கும் தெரியாது. விண்ணகத் தூதருக்கோ மகனுக்கோகூடத் தெரியாது. 37நோவாவின் காலத்தில் இருந்தது போலவே மானிட மகன் வருகையின்போதும் இருக்கும். 38வெள்ளப் பெருக்குக்கு முந்தைய காலத்தில், நோவா பேழைக்குள் சென்ற நாள்வரை எல்லாரும் திருமணம் செய்து கொண்டும் உண்டும் குடித்தும் வந்தார்கள். 39வெள்ளப்பெருக்கு வந்து அனைவரையும் அடித்துச் செல்லும்வரை அவர்கள் எதையும் அறியாதிருந்தார்கள். அப்படியே மானிடமகன் வருகையின்போதும் இருக்கும். 40இருவர் வயலில் இருப்பர். ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார்; மற்றவர் விட்டு விடப்படுவார். 41இருவர் திரிகையில் மாவரைத்துக்கொண்டிருப்பர். ஒருவர் எடுத்துக் கொள்ளப்படுவார்; மற்றவர் விட்டுவிடப்படுவார். 42விழிப்பாயிருங்கள்; ஏனெனில் உங்கள் ஆண்டவர் எந்த நாளில் வருவார் என உங்களுக்குத் தெரியாது. 43இரவில் எந்தக் காவல் வேளையில் திருடன் வருவான் என்று வீட்டு உரிமையாளருக்குத் தெரிந்திருந்தால் அவர் விழித்திருந்து தம் வீட்டில் கன்னமிடவிடமாட்டார் என்பதை அறிவீர்கள். 44எனவே நீங்களும் ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிட மகன் வருவார்.


மத்தேயு நற்செய்தி அறிமுகம்
  இந்த ஆண்டில் நாம் மத்தேயு நற்செய்தியில் இருந்து வாசிக்கவிருக்கிறோம். மத்தேயு நற்செய்தியை நாம் வருகின்ற வாரங்களில் தொடர்சியாக அதன் அறிமுகம், ஆசிரியத்துவம், காலம், நோக்கம், மற்றும் இறையியல் என்ற தலைப்புக்களில் நோக்குவோம். யூத இலக்கிய அழகில் ஒரு கிறிஸ்தவ நற்செய்திதான் மத்தேயு என காலம் காலமாக நம்பப்பபட்டு வருகிறது. இதன் அளவை கணக்கில் கொண்டு நற்செய்திகளுக்குள் இது முதலாவதாக புதிய ஏற்பாட்டில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ளதுமத்தேயு நற்செய்தியை அதன் படிப்பினைகளையும் மற்றும் படிப்பிக்கும் திறனையும் கொண்டு அதனை 'ஆசிரியரின் நற்செய்தி' என்று அழைக்கின்றனர். மற்றைய நற்செய்திகளைப் போலல்லாது ஒரு ஆசிரியருக்கே உள்ள தோரனையில் இயேசுவின் வாழ்க்கை முறையை தொடர்ச்சியான பாதையில் மத்தேயு அழகாக தொடுத்துள்ளார். பல மத்தேயு நற்செய்தி அறிஞர்கள், இந்த நற்செய்தியை ஐந்து தொகுப்புக்களின் வடிவமாகக் காண்கின்றனர். ஒவ்வொரு தொகுப்பும் 'இதன் பிறகு இயேசு...' என்ற வடிவில் தொடங்குகின்றது. இதனை ஐந்து தொகுப்புக்களின் அதிகாரங்களாக 5-7, 10, 13, 18 மற்றும் 24-25 என்று வகைப்படுத்துகின்றனர். ஒவ்வொரு தொகுப்பும் இயேசுவின் உரைகளை உள்ளடக்கியதாக அமைக்கப்பட்டுள்ளது. அத்தோடு ஒவ்வொரு தொகுப்பும், ஒரு தலைப்பை மையமாகக் கொண்டு அமைந்துள்ளது. இதனைவைத்து நோக்குமிடத்து, மத்தேயு கவனமாக ஐந்து தலைப்புக்களில் தனது புத்தகத்தை, முதல் ஏற்பாட்டு முதல் ஐந்து நூல்களான தோறாவை ஒட்டி அமைத்துள்ளார் போல் தோன்றுகின்றது என சிலர் வாதாடுகின்றனர். இந்த பிரிவுகளுக்குள்ளும் மனப்பாடம் செய்யும் வகையில் இன்னும் சிறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளதாகவும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர் -ம்: இயேசுவின் பரம்பரை அட்டவணை 1,1-17: மலைப்பொழிவு 5,3-10: நேர்மாற்று உரைகள் 5,21-48. அத்தோடு பெரிய பிரிவுகளும் ஒரு கருப்பொருளை மையமாக கொண்டு நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளன என்ற வாதமும் இருக்கிறது
மாற்கு நற்செய்தியைப்போல கதைசொல்லும் ஆற்றலை மத்தேயு கொண்டிருக்காவிடினும், தன்னுடைய கதைக்கு மத்தேயு கொண்டிருக்கும் தரவுகளின் தெரிவுகள், மாற்குவைவிட அதிகமாகும். மத்தேயு இயேசுவை மையமாகக் கொள்ளாத தரவுகளை தெரிந்தே விட்டுவிடுகிறார்மத்தேயு நற்செய்தியின் 24ம் 25ம் அதிகாரங்கள் ஐந்தாவது சொற்பொழிவுக் கூட்டம் என அறியப்டுகிறது. இந்த அதிகாரங்களில் இயேசு இறுதித் தீர்ப்பை பற்றி போதித்த படிப்பினைகள் ஆராயப்பட்டுள்ளன. எருசலேம் ஆலயத்தின் அழிவு, வரப்போகும் கேடு, வரப்போகும் பெரும் துன்பம், மானிடமகனின் வருகை, அத்தி மர உவமை, மானிட மகனின் வருகையும், நேரமும், மற்றும் நம்பிக்கைக்குரிய பணியாளர் என்று அனைத்தும் ஆண்டவரின் இறுதி நாளை நினைவுபடுத்துவதாக அமைந்துள்ளது

.46: யாருக்கு ஆண்டவரின் இறுதி நாளைப்பற்றிய அறிவு இருக்கிறது என்ற கேள்விக்கு மத்தேயு அழகாக விடையளிக்கிறார். ஆரம்ப கால திருச்சபையின் மிக முக்கியமான கேள்விகளுள், எப்போது இயேசுவின் இரண்டாம் வருகை வரும் என்ற கேள்வி மிக முக்கியமானதாக இருந்தது. இந்த கேள்விக்கு ஆசிரியர் இயேசுவைக் கொண்டே பதிலளிக்கிறார். அதாவது கடவுளின் நாளைப்பற்றி வானக வாசிகளான வானதூதர்களுக்கோ (ἄγγελοι ஆன்கலோய்), மானிட மகனுக்கே தெரியாது மாறாக கடவுள்கு மட்டுமே தெரியும். இதிலிருந்து கடவளின் நாளைப் பற்றிய புரிதலை சாதாரண மனிதர் அறிய முற்படுவது அபத்தம் என்று கூறுகிறார்

.37-39: நோவாவின் காலம் ஒப்பிடப்படுகிறது (ἡμέραι τοῦ Νῶε hêmerai tou Nôe). இதிலிருந்து ஆசிரியருக்கு இஸ்ராயேலின் பழங்கால கதைகள் மற்றும் முதல் ஏற்பாட்டைப் பற்றிய நல்ல அறிவு இருந்தது என்பது புலப்படுகிறது. நோவாவினுடைய காலத்தில் நோவாவை சுற்றியிருந்தவர்களுக்கு வெள்ளப்பெருக்கைப் பற்றிய அறிவு தெரிந்திருக்கவில்லை. இதனால் அவர்கள் தங்களுடைய ஆபத்தினை அறியாமலே அழிந்து போயினர் என்பதை ஆசிரியர் நினைவூட்டுகிறார். நோவா காலத்து வெள்ளப் பெருக்கை பற்றி அறிய காண்க தொ.நூல் 6,5-8,22. 
 திருமணம் செய்துகொள்ளுதல், உண்ணுதல் மற்றும் குடித்தல் செயற்பாடுகளை ஆசிரியர் 
இறுதி நாட்களைப்பற்றி அறியாதவர் செய்கிற வேலைகளாக காண்கிறார். இவற்றை அவர் பாவம் அல்லது குற்றம் என்று சொல்கிறார் என எடுக்கமுடியாது மாறாக அவற்றை அவர் இறுதி நாட்களுக்கு காத்திருப்போர் செய்கிற வேலைகளில் ஒன்றாக கருதமுடியாது என்றே சொல்கிறார். இவர்கள் இவற்றில் கவனம் செலுத்திய படியால்தான் வெள்ளத்தின் அழிவைப்பற்றி முன்கூட்டியே அறியாதிருந்தனர் என்கிறார். மானிட மகனின் வருகையையும் இந்த வெள்ளத்திற்கு மத்தேயு ஒப்பிடுகிறார். வெள்ளம் புரிய முடியாத இயற்கையின் வல்லமைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. கடவுளைத் தவிர வேறெவர்க்கும் இந்த வெள்ளத்தின் மீது அதிகாரம் இல்லை என்பதையும் பலவிதத்தில் இயேசு மத்தேயு நற்செய்தியில் எண்பிப்பார்

.40-41: இந்த வரிகளில் இறுதிநாட்களின் அவசரம் அல்லது ஆபத்து எப்படியிருக்கும் என்பது புலப்படுத்தப்படுகிறது

. வயலில் வேலைசெய்பவர்கள்: ஒருவர் எடுத்துக்கொள்ளப்பட இன்னொருவர் விடப்படுகிறார். வயல் வேலை ஒரு நாட்பொழுதின் முக்கியமான நேரத்தில் செய்யப்படுகிற சாதாரண வேலை. இந்த வேலையின் போது அனைவரும் சுறுசுறுப்பாக இருப்பர், அவர்கள் அக்கறையில்லாமல் 
இருப்பதற்கான வாய்ப்பு குறைவாகவே இருக்கும். இப்படியான வேலையிலும் மானிட மகனின் வருகையை மக்கள் புரிந்து கொள்ளார்

. திரிகையில் மாவரைக்கும் ஒருவர் விடப்பட இன்னொருவர் எடுத்துக்கொள்ளப்படுவர்: இந்த திரிகையில் மாவரைத்தல் செயற்பாடு சாதாரணமாக இரண்டு பெண்களால் கைகளால் செய்யப்படும் வேலை. இந்த வேளையில் இவர்கள் உரையாடிக்கொண்டேயிருப்பர் அத்தோடு அங்கே தூங்குவதற்கான வாய்ப்பு மிக குறைவாகவே இருக்கும். இப்படி முக்கியமான வேளையிலும் கூட ஒருவர் விடப்படும் அளவிற்கு மானிட மகனின் வருகை அசாதாரணமானதாக இருக்கும் என்கிறார் ஆசிரியரான மத்தேயு

வவ.42-43: மானிடமகனின் வருகை திருடனின் வருகையைப்போல் ஆபத்தானதாகவும், எதிர்பாராத விதமானதாகவும் இருக்கும் என்று மீண்டும் உதாரணப்படுத்துகிறார். திருடர்கள் எந்த காவல் வேளையில் வருவர் என்பது காவல் வீரர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. காவல் வேளை என்பது உரோமைய காவலர்கள் இரவை பிரித்த விதத்தின் ஒரு அலகு ஆகும். மாலை ஆறுமணி தொடக்கம் காலை ஆறு மணிவரையான பன்னிரண்டு மணித்தியாளங்களும் காவல் கடமைகளுக்காக பல காவல் வேளைகளாக பிரிக்கப்பட்டிருந்தது. இதனைத்தான் அன்றைய உரோயைர்கள் காவல் வேளைகள் என்றழைத்தனர். அந்தகால திருடர்கள் கதவை உடைத்து திருடுவதை மட்டுமல்லாது மண்களால் ஆன சுவரையும் உடைத்து திருடும் அளவிற்கு தைரியம் படைத்திருந்தனர். இதனைத்தான் சுவரில் கன்னம் வைத்தல் என்கிறார் ஆசிரியர்.

.44: இந்த வசனம்தான் மத்தேயு தன்வாசகர்களுக்கு கொடுக்கிற செய்தி. அதாவது கிறிஸ்தவர்கள் ஆயத்தமாக இருக்க கேட்கப்படுகிறார்கள். அத்தோடு மானிட மகனின் வருகை நினையாத நேரத்தில் நிச்சயமாக இருக்கும் என்பதும் அறிவிக்கப்படுகிறது. மானிட மகன் என்ற வார்த்தை (υἱὸς τοῦ ἀνθρώπου huios tou anthrôpou) மத்தேயு நற்செய்தியில் இயேசுவை குறிக்க பயன்படுகின்ற முக்கியமான வார்த்தைகளில் ஒன்று. இது முதல் ஏற்பாட்டின் திருவெளிப்பாடுகளில் வருகின்ற மானிட மகனை நமக்கு நினைவூட்டுகிறது (காண்க தானியேல் 7,13). இயேசுவிற்கு மானிட மகன் என்ற பெயரை மத்தேயு கொடுப்பதற்கான பல காரணங்களை ஆய்வாளர்கள் முன்வைக்கிறார்கள், அவற்றுள் இறுதிநாள் அடையாளமும் ஒன்றாக இருக்கிறது
(இரவில் நான் கண்ட காட்சியாவது வானத்தின் மேகங்களின் மீது மானிட மகனைப் போன்ற ஒருவர் தோன்றினார்; இதோ! தொன்மை வாய்ந்தவர் அருகில் அவர் வந்தார்; அவர் திருமுன் கொண்டு வரப்பட்டார்.)

மானிட மகனின் வருகை எப்போதுதென்று மானிட மகனுக்கே தெரியாமல் இருக்கிறபோது 
அதனை அறிய மனிதர் முயல்வதில் பயனென்ன இருக்கபோகிறது. ஆனால் விழிப்பாய் இருப்பதே நல்லது என மத்தேயு சொல்வதை கவனத்தில் எடுக்கவேண்டும்

ஆண்டவரே! வழிகள் விழித்திருந்தும், உள்ளங்கள் தூங்கிக்கொண்டிருக்கும் 
இந்த உலகில் உண்மையான விழிப்பைத் தாரும். ஆமென்

இன்று மாவீரர் நாள்
27,11,2019
மண்ணுக்காய், மக்களுக்காய், உயிர்நீத்த வீரர்களை நினைக்கின்றோம்
தமிழர் தாயகம் வந்து இறந்துபோன தென்னவர்களையும் நினைக்கின்றோம்
போர் வேண்டாம், அடக்குமுறையும் வேண்டாம்
வாழ்க எதிர்நோக்கு, வாழ்க சுதந்திர தாகம்!


ஆண்டின் பொதுக்காலம் முப்பத்திநான்காம் வாரம் கிறிஸ்து அரசர் பெருவிழா:  Our Lord Jesus Christ, King of the Universe 24.11.2024

ஆண்டின் பொதுக்காலம் முப்பத்திநான்காம் வாரம்   கிறிஸ்து அரசர் பெருவிழா :  Our Lord Jesus Christ, King of the Universe 24.11.2024 இய...