ஆண்டின் பொதுக்காலம் இருப்பத்தெட்டாம் வாரம்:
28th Sunday in Ordinary Time
13,10,2019
M. Jegankumar Coonghe OMI,
‘Sangamam-Gnanavazhi,’
Oblate Spiritual Animation Centre, OSAC
Kopay South, Kopay,
Jaffna
முதல் வாசகம்: 2அரச 5,14-17
திருப்பாடல்: 97.
இரண்டாம் வாசகம்: 2திமோ 2,8-13
நற்செய்தி: லூக் 17,11-19
2அரச 5,14-17
14எனவே நாமான் புறப்பட்டுச் சென்று கடவுளின் அடியவரது வாக்கிற்கிணங்க யோர்தானில் ஏழுமுறை மூழ்கியெழ, அவர் நலமடைந்தார். அவரது உடல் சிறுபிள்ளையின் உடலைப்போல் மாறினது. 15பின்பு அவர் தம் பரிவாரம் அனைத்துடன் கடவுளின் அடியவரிடம் திரும்பி வந்து, 'இஸ்ரயேலைத் தவிர வேறு எந்த நாட்டிலும் கடவுள் இல்லையென இப்போது உறுதியாக அறிந்து கொண்டேன். இதோ, உம் அடியான்! எனது அன்பளிப்பை ஏற்றுக் கொள்ளும்' என்றார்.
16அதற்கு எலிசா, 'நான் பணியும் வாழும் ஆண்டவர்மேல் ஆணை! நான் எதையும் ஏற்றுக்கொள்ளேன்' என்றார். நாமான் எவ்வளவோ வற்புறுத்தியும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.
17அப்பொழுது நாமான் அவரை நோக்கி, 'சரி, அப்படியே ஆகட்டும். ஆயினும் ஒரு சிறு வேண்டுகோள்; இரு கழுதைப் பொதி அளவு மண்ணை இங்கிருந்து எடுத்துச் செல்ல உம் அடியானுக்கு அனுமதி தாரும். இனிமேல் உம் அடியானாகிய நான் ஆண்டவரைத் தவிர தெய்வங்களுக்கு எரிபலியோ வேறு பலியோ ஒரு போதும் செலுத்தமாட்டேன்.
எலியாவிற்கு பிறகு மிக முக்கியமானவரும், நீர் சம்மந்தமான அதிசயங்களுக்கு பிரசித்தி பெற்றவருமான இறைவாக்கினர் எலிசா, வட அரசில் முக்கியமான காலகட்டங்களில்
இறைவாக்குரைத்தார். இறைவாக்கினர் என்பதற்கு மேலாக கடவுளின் மனிதர் என்றழைக்கப்படும் இந்த இறைவாக்கினர், மோசேக்கு பிறகு யோசுவா பணியேற்றது போல் எலியாவிற்கு பிறகு இறைவாக்கு பணியை ஏற்றார். எலிசா என்றால் என் கடவுள் மீட்கிறார் என்று பொருள் (אֱלִישָׁע ஏலிஷா). இறைவாக்கினர் என்றல்லாமல் பல வேளைகளில் இவர் கடவுளின் மனிதர் என விழிக்கப்படுவது இவரது முக்கியத்துவத்தைக் காட்டுகிறது (אִישׁ הָאֱלֹהִים இஷ் ஹஏலோஹிம்).
இங்கே எலிசா குணப்படுத்துகிற இந்த மனிதர் சிரியா-ஆராம் நாட்டு படைத்தளபதி, அவருடைய பெயர் நாமான். இந்த நாடு இஸ்ராயேலுடன் அதிகமான காலப்பகுதியில் எதிரி நாடாகவே இருந்தது. ஒரு காலத்தில் இவர்களுடன், வட நாடான இஸ்ராயேல் வைத்த கூட்டணியின் பொருட்டுத்தான் அசிரியர் இஸ்ராயேலை தோற்கடித்து நாடுகடத்தினர். இந்த நாமான் கூட இஸ்ராயேல் மீது போர் தொடுக்க படை நடத்தியவர் என அறிகிறோம். இப்படியான ஒருவரைத்தான் இஸ்ராயேலின் இறைவாக்கினர் குணப்படுத்துகிறார்.
வ.14: இந்த வரிக்கு முன்னர், நாமான் உள்ளத்தால் எலிசாவை கடிந்திருந்தார். எலிசா நாமானை யோர்தானில் மூழ்கி எழச் சொன்னார் ஆனால் நாமானுக்கு சிரியாவின் ஆறுகல் யோர்தானை விட பெரியனவாகவும், முக்கியமானதாகவும் தெரிந்தது. உள்ளளவில் குழப்பமடைந்த நாமானை அவரது பணியாளர்கள் இனங்க வைக்க அவர் யோர்தானில் மூழ்கி எழுகிறார்.
நாமான் யோர்தானில் ஏழு முறை மூழ்கி எழுவது அவர் இஸ்ராயேலின் சம்பிரதாயங்களை ஏற்றுக்கொள்வதைக் காட்டுகிறது. அவர் இவ்வாறு நிறைவாக மூழ்கி எழுந்தார் எனக் கொள்ளலாம். சிறு பிள்ளையின் உடல் போல அவரது உடல் மாறியது என்பது அவர் மீண்டும் உடலியல் தன்மையில் புதுப்பிறப்படைந்துள்ளார் என்பதைக் காட்டுகிறது. சாதாரணமாக குழந்தையின் உடல் நோய்யற்ற புதிய உடலாக காணப்படுகிறது, இங்கே வளர்ந்தவரான நாமானின் உடல் நோய் நீங்கி மீண்டும் பிறந்ததை இந்த நிகழ்வு காட்டுகிறது.
வ.15: இஸ்ராயேலின் கடவுள்தான் உண்மையான கடவுள் என்பதுதான் அரசர்கள் புத்தகங்களின் ஆசிரியரின் மையக் கருத்து. ஆராமியருக்கு தனித்துவமான கடவுள்கள் இருந்தனர், அவர்களின் நம்பிக்கையும் வித்தியாசமாக இருந்தது முக்கியமாக அவர்கள் மத்தியில் சிலை வழிபாடுகள், பல கடவுள் கொள்கைகள், அரச மத வழிபாடுகள் போன்றவை இருந்தன. இப்படிப்பட்ட சூழலைக் கொண்ட படைத்தளபதி தன் அரச பரிவாரங்களுடன் எலிசாவிடம் திரும்பி வந்தது இஸ்ராயேலின் கடவுளின் மகிமையைக் காட்டுகிறது. நாமானுடைய விசுவாச பிரமானம், இஸ்ராயேல் மக்களின் அவவிசுவாசத்தை சாட்டையடிப்பது போல இருக்கிறது. பல வேளைகளில் இஸ்ராயேல் மக்கள் தங்களுக்கு அருகிலிருந்த வேற்று தெய்வங்களின் மேல் நாட்டம் கொண்டனர். இங்கே ஒரு வேற்று நாட்டின் முக்கியமான படைத்தளபதி, இஸ்ராயேலின் கடவுளை ஒரே கடவுளாக ஏற்றுக்கொள்கிறார். அத்தோடு அவர் தன்னை எலிசாவின் அடியானாக அறிக்கையிடுகிறார், இவ்வாறு அவர் இஸ்ராயேல் கடவுளின் அடியானாகிறார்.
வ.16: எலிசாவின் நேர்மைத்தன்மை, அவர் தனது இறைவாக்கு பணியை துஸ்பிரயோகம் செய்யாமலிருப்பதிலிருந்து புலப்படுகிறது. அத்தோடு அவரின் அறிக்கை மறைமுகமாக மற்ற கடவுள்களை ஏளனம் செய்கிறது. எலிசா தன் கடவுளை மட்டும் வாழும் கடவுள் என்கிறார். חַי־יְהוָ֛ה hai-YHWH, living God; நாமான் தன் பணியாளர்களின் வற்புறுத்தலால்தான் யோர்தான் நதியில் குளித்தார் ஆனால் நாமானின் வற்புறுத்தல் எலிசாவின் திட்டத்தில் எந்த மாற்றத்தை ஏற்படுத்தவில்லை.
வ.17: இது மிக முக்கியமான வரி. இரு கழுதைபொதியளவு மண் அனேகமான ஒரு சிறு பீடம் கட்ட போதுமானதாக இருக்கும். இந்த மண் மூலமாக இஸ்ராயேலின் கடவுளின் புனிதத் தன்மை இப்போது ஆராமிற்கு போகிறது. உண்மையில் இஸ்ராயேலின் கடவுள் இஸ்ராயேலின் மண்ணிற்கு கட்டுப்பட்டவர் அல்லர், ஆனால் இஸ்ராயேல் நிலம்தான் தூய நிலம் என்ற சிந்தனையை இது மறைமுகமாக காட்டுவதை இங்கனம் நோக்கலாம். நாமான் ஓரு அரச அதிகாரியாக இருக்கிறபடியால் அவர் நிச்சயமாக ரிம்மோன் (רִמּוֹן rimmōn)எனப்படும் அரேமேய தெய்வத்திற்கு பலி செலுத்த வேண்டும் அதனை அவர் எலிசாவிடமே சொல்கிறார் (காண்க 2அரச 5,18). இருந்தபோதும் இப்போது நாமானின் விசுவாசம் ரிம்மோனிடமிருந்து கடவுளாகிய ஆண்டவர் பக்கம் திரும்புவது, ஆண்டவராகிய கடவுள்தான் உன்னத கடவுள் என்பதைக் காட்டுகிறது.
திருப்பாடல் 98
1ஆண்டவருக்குப் புதியதொரு பாடல் பாடுங்கள்; ஏனெனில், அவர் வியத்தகு செயல்கள் புரிந்துள்ளார். அவருடைய வலக்கரமும் புனிதமிகு புயமும் அவருக்கு வெற்றியை அளித்துள்ளன.
2ஆண்டவர் தம் மீட்பை அறிவித்தார்; பிற இனத்தார் கண்முன்னே தம் நீதியை வெளிப்படுத்தினார்.
3இஸ்ரயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட தமது பேரன்பையும் உறுதிமொழியையும் அவர் நினைவுகூர்ந்தார். உலகெங்குமுள்ள அனைவரும் நம் கடவுள் அருளிய விடுதலையைக் கண்டனர்.
4உலகெங்கும் வாழ்வோரே! அனைவரும் ஆண்டவரை ஆர்ப்பரித்துப் பாடுங்கள்! மகிழ்ச்சியுடன் ஆர்ப்பரித்துப் புகழ்ந்தேத்துங்கள்.
5யாழினை மீட்டி ஆண்டவரைப் புகழ்ந்தேத்துங்கள்; யாழினை மீட்டி இனிய குரலில் அவரை வாழ்த்திப் பாடுங்கள்.
6ஆண்டவராகிய அரசரின் முன்னே எக்காளம் முழங்கி கொம்பினை ஊதி ஆர்ப்பரித்துப் பாடுங்கள்,
7கடலும் அதில் நிறைந்தவையும் உலகும் அதில் உறைபவையும் முழங்கிடுக!
8ஆறுகளே! கைகொட்டுங்கள்; மலைகளே! ஒன்றுகூடுங்கள்;
9ஆண்டவர் முன்னிலையில் மகிழ்ந்து பாடுங்கள்; ஏனெனில், அவர் உலகுக்கு நீதி வழங்க வருகின்றார்; பூவுலகை நீதியுடன் ஆண்டிடுவார்; மக்களினங்களை நேர்மையுடன் ஆட்சி செய்வார்.
இது ஒரு குழு புகழ்சிப்பாடல். மூன்று இடங்களில் வியங்கோள் வாக்கியங்கள் பாவிக்கப்பட்டுள்ளன. பின்னர் அந்த கட்டளைக்கான காரணங்களும் விளக்கப்பட்டுள்ளன.
இஸ்ராயேல் மக்களின் வாழ்வில் புதுமைகள் என்றால் அவை ஆண்டவர் செய்தவை மட்டுமே. ஆண்டவரின் செயல்கள் அனைத்தையும் அவர்கள் புதுமைகளாகவும், ஆச்சரியமூட்டும் செயல்களாகவும் கண்டு பாவித்து அதனை தங்கள் பிள்ளைகளுக்கும் எதிர்கால சந்ததியினருக்கும் கடத்தினர். எந்தக் கடவுள் பெரியவர், அல்லது உண்மையானவர் என்ற வாதம் அக்காலத்தில் மிகவும் முக்கியமான ஆன்மீக போட்டியாக இருந்தது. சில பேரரசுகளில் அரசர்கள் தங்களை கடவுள்களாக பிரகடனப்படுத்திக்கொண்டனர். எகிப்து அசிரியா, பபிலோன், பாரசீகம், கிரேக்கம், உரோமை போன்றவை இதற்கு நல்ல உதாரணங்கள். இப்படியான சுற்றத்தில் இந்த ஆசிரியர் கடவுள் ஒருவரே வியப்புக்குரியவர் அவர் ஒருவரே உன்னதர், மற்றவர்கள் எல்லாரும் சாதாரணமானவர்களே என்ற ஆழமான சிந்தனையை இலகுவான மொழியில் முன்வைக்கிறார்.
வ.1: முதலாவது கட்டளை கொடுக்கப்படுகிறது. புதியதொரு பாடல் பாடக் கேட்கப்படுகிறது. கடவுள் வியத்தகு செயல்கள் புரிவதன் காரணமாக அவருக்கு பழைய பாடல் அல்ல புதிய பாடல் ஒன்று கேட்கப்படுகிறது. ஆண்டவரின் வியத்தகு செயல்கள் என்பன (כִּֽי־נִפְלָאוֹת עָשָׂה ki - niplā’ōt ‘āsāh ஏனெனில் வியப்பான செயல்கள் செய்தார்) படைப்பிலிருந்து இன்று வரை அவர் செய்த எல்லாவற்றையும் உள்வாங்கி வருகிறது. வலக்கரமும் (יְמִינ֗וֹ yemînô - his right hand) வலிமைமிகு புயமும் (זְרוֹעַ dzerō‘a) ஒத்த கருத்துச் சொற்கள் கவி நயத்திற்காக பாவிக்கப்பட்டுள்ளன. கடவுள் தோல்வி காணாதவர், அவருக்கு வெற்றி மட்டுமே உரியது என்பது, கடவுளை மட்டும் தான் மக்கள் நம்ப வேண்டும் என்றுரைக்கிறது.
வ.2: பிறவினத்தார் முன்னே இஸ்ராயேலின் கடவுள் சில வேலைகளை செய்ய வேண்டியவராய்
இருக்கிறார். ஏனெனில் இஸ்ராயேலின் தோல்விகள் பிறவினத்தாரின் ஏளனத்தை உண்டுபண்ணுகின்றன. பிறவினத்தார் கண்முன்னே தன் நீதியை வெளிப்படுத்தினார் என்பது
இஸ்ராயேலுக்காக பிறவினத்தாரை தண்டிப்பது என்ற பொருளையும் கொடுக்கிறது.
வ.3: நிச்சயமாக இந்தப் பாடல் ஏதோ ஒரு இடப்பெயர்வின் பின் பாடப்பட்டதாகவே இருக்கும். பபிலோனிலிருந்து வந்ததன் பின்னர் பாடப்பட்டதாக இருக்க அதிகமான வாய்ப்புக்கள் உள்ளன. எகிப்திலிருந்து வந்ததன் பின் எழுதப்பட்டதாகவும் சிலர் இதனை காண்கின்றனர். அல்லது எகிப்தின் அனுபவங்களை நினைத்து எழுதப்பட்டிருக்கலாம். இஸ்ராயேல் வீட்டாருக்கு வாக்களிக்கப்பட்ட பேரன்பு மற்றும் உறுதி மொழி என்பது பலவற்றை குறிக்கலாம்:
அ. வாக்களிக்கப்பபட்ட நாடு
ஆ. நாடு திரும்புதல்
இ. விசேட ஆசீர்வாதம்
ஈ. விசேட தெரிவு
முழு உலகு என்பது இங்கு அக்கால அரமாயிக்க உலகை மட்டுமே குறிக்கும் என நினைக்கிறேன். இன்றைய எம்முடைய முழு உலகு பற்றிய சிந்தனைகளை இந்த ஆசிரியரின் சிந்தனையுடன் பார்க்க முடியாது.
வ.4: இரண்டாவது வியங்கோள் வாக்கியம் பாடப்படுகிறது. இந்த வியங்கோளில் முழு உலகமும் உள்வாங்கப்படுகிறது (כָּל־הָאָרֶץ kôl-hā’āredz - all the earth). இதனை முழு உலகம் என்பதைவிட, இஸ்ராயேலின் வார்த்தையில் முழு நிலமும் என்று கூட சொல்லலாம். மகிழ்ச்சியாக இருத்தல் மற்றும் பாடல் பாடுதல் என்பன ஒத்த கருத்துள்ள சொற்பிரயோகங்கள்.
வ.5: யாழ், (כִּנּוֹר கிண்ணோர்) இது ஒரு நரம்பிசைக் கருவி சாதாரண இசைக்கும் இறை
இசைக்கும் இந்தக் கருவி பாவிக்கப்பட்டது. இது அக்காலத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு முக்கியிமான இசை வாத்தியமாக காணப்பட்டது. இந்த யாழிற்க்கும் எமது யாழ்ப்பாணத்திற்கும் நெருங்கிய தொடர்புள்ளதாக வடக்கு பாரம்பரிய கதைகள் கூறுகின்றன. தாவீது அரசர் இந்த யாழ்க் கருவியை மீட்டுவதில் ஆர்வமுள்ளவராய் இருந்ததாகவும் இஸ்ராயேல் நாட்டு நம்பிக்கைகள் கூறுகின்றன. கடவுளை புகழ்வதற்கு இனிமையான குரல் கொடுக்கப்படுகிறது. சில ஆலயங்களில் இனிமையான குரல்கள் இல்லாவிட்டாலும், குடும்ப பாரம்பரியங்களை கொண்டு பாடகர் குழாமில் இனிமையான குரல் உள்ளவர்களை இனைக்காமல் விடுவது அல்லது தாங்கள் குரல்களைக் காட்டுவதற்காகவே பாடகர் குழாமை பயண்படுத்துவதை இன்றும் சகித்துக் கொண்டிருக்க வேண்டியதாய் உள்ளது.
வ.6: இங்கே இரண்டு இசைக் கருவிகள் பாவிக்கப்பட்டுள்ளன: எக்காளம் (חֲצֹצְרוֹת hadzōzhrōt), கொம்பு (שׁוֹפָר šōfār) போன்றவை போர்க் காலத்தில் பாவிக்கப்படுகின்ற கருவிகள். ஆண்டவரை புகழ்வதற்கும் அல்லது ஆண்டவரின் பிரசன்னத்தை குறிப்பதற்கும் போர்க்கருவிகள் பயன்படுத்தப்படுவது ஒருவேளை தெய்வ பயத்தை குறிப்பதற்காக இருக்கலாம்.
வவ.7-8: யார் யாரெல்லாம் ஆண்டவரின் இந்த புகழ்ச்சி ஆர்ப்பரிப்பிற்கு உட்படுகின்றனர் என்பதைக் விவரிக்கின்றார்:
அ. கடலும் அதில் நிறைந்துள்ளவையும்: கடல் அறிய முடியாததும், ஆபத்துக்கள் நிறைந்ததுமான
இடமாக கருதப்படுகிறது. கடலும் அதிலுள்ளவையும் ஆண்டவரை புகழுதல், ஆண்டவருக்கு
இவற்றின் மேலுள்ள அதிகாரத்தைக் காட்டுகின்றது. இயேசுவும் கடல் மேல் நடந்த நிகழ்வை இங்கே நினைவுகூற வேண்டும். உலகும் அதிலுரைந்துள்ளவையும் ஆண்டவரைப் புகழ்தல், கடல்களில் மட்டுமல்ல நிலத்திலுள்ளவையும் ஆண்டவரின் அதிகாரத்திற்கு உட்பட்டுள்ளன.
ஆ. ஆசிரியர் ஆறுகளையும் மலைகளையும் ஆட்களாக உருவகிக்கின்றார். இஸ்ராயேல் ஆசிரியர்கள் பௌதீக வளங்களை ஆட்களாக உருவகிப்பது மிகவும் குறைவு. இங்கே இவை கானானிய பல கடவுள் கொள்கைகளை ஞாபகப்படுத்தலாம். ஆனால் இந்த பௌதீக வளங்கள் ஆட்களாக இஸ்ராயேல் கடவுளின் வருகைக்கு காத்திருக்கின்றன இவ்வாறு அவைகள் (அவர்கள்) ஆண்டவராகிய கடவுளை உண்மைக் கடவுளாக ஏற்றுக்கொள்கின்றன என்பது போலக் காட்டுகின்றன.
வ.9: ஆண்டவரின் இறுதிநாள் வருகை இங்கே நினைவூட்டப்படுகிறது. ஆண்டவர் ஓர் அரசராக வருகின்றார் அவரது ஆட்சியில் போர் இல்லை, இரத்தக் களரி இல்லை, நாடு பிடித்தலும் அடிமைத்தனங்களும் இல்லை மாறாக இங்கே நீதியும் (צֶדֶק ட்செடெக் - நீதி), நேர்மையும் (מֵישָׁר
மெஷர்) மட்டுமே இருக்கும்.
2திமோ 2,8-13
8தாவீதின் மரபில் வந்த இயேசு கிறிஸ்து இறந்து உயிர்பெற்று எழுந்தார் என்பதே என் நற்செய்தி. இதனை நினைவில் கொள். 9இந்நற்செய்திக்காகவே நான் குற்றம் செய்தவனைப் போலச் சிறையிடப்பட்டுத் துன்புறுகிறேன். ஆனால் கடவுளின் வார்த்தையைச் சிறைப்படுத்த முடியாது. 10தேர்ந்து கொள்ளப்பட்டவர்கள் மீட்பையும் அதனோடு இணைந்த என்றுமுள்ள மாட்சியையும் கிறிஸ்து இயேசு வழியாக அடையுமாறு அனைத்தையும் பொறுத்துக் கொள்கிறேன். 11பின்வரும் கூற்று நம்பத் தகுந்தது; 'நாம் அவரோடு இறந்தால், அவரோடு வாழ்வோம்; 12அவரோடு நிலைத்திருந்தால், அவரோடு ஆட்சிசெய்வோம்; நாம் அவரை மறுதலித்தால் அவர் நம்மை மறுதலிப்பார். 13நாம் நம்பத்தகாதவரெனினும் அவர் நம்பத்தகுந்தவர். ஏனெனில் தம்மையே மறுதலிக்க அவரால் இயலாது.' இவற்றை நீ அவர்களுக்கு நினைவுறுத்து.
இது திமோத்தேயுவிற்கான விசேட படிப்பினைகளின் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் பகுதியில் பவுல் இயேசுவைப் பற்றிய சுருக்கமான ஆனால் மையமான கருத்துக்களை முன்வைக்கிறார். இந்தப் பகுதியில் மிக முக்கியமான மூன்று படிப்பினைகள் மையப்படுத்தப்படுகின்றன. இந்த மூன்று வாதங்களும் ஏற்கனவே கடவுள் கொடுத்திருந்த வாக்குறுதிகளை உள்வாங்கியிருந்ததனால், அவற்றின் விளக்கங்களும் முக்கியமானதாக அமைகிறது.
அ. இயேசுவே கிறிஸ்து (Ἰησοῦν Χριστὸν ஏசுன் கிறிஸ்டோன்): பலர் தங்களை கிறிஸ்துவாகவோ அல்லது இயேசு, கிறிஸ்துவல்ல என்ற வாதமும் அக்கால திருச்சபையில் பல பிளவுகளை உருவாக்கியிருக்கலாம்.
ஆ. இயேசு சாவிலிருந்து உயிர்த்தெழுந்தார் (ἐγηγερμένον ἐκ νεκρῶν எகெர்மெனொன் எக் நெக்ரோன்): இயேசுவின் உயிர்ப்பைப் பற்றிய சில பிழையான தரவுகளை கிறிஸ்தவத்திற்கு எதிரானவர்கள் பரப்பி வந்தனர், இத் தப்பறைகள் ஆரம்ப கால திருச்சபையை குழப்பிவிடாதவாறு கவனமாக இருக்குமாறு திருச்சபை தலைவர்களை கேட்கிறார்.
இ. இயேசு தாவீதின் வழிமரபிலிருந்து வந்தவர் (ἐκ σπέρματος Δαυίδ எக் செபர்மாடொஸ் தாவித்): இயேசுவின் வழிபரபு ஆரம்ப கால திருச்சபையில் ஒரு முக்கியமான வாதப்பொருளாக
இருந்திருக்கலாம். சிலர் இயேசுவின் தாவீது வழிமரபு உண்மையில்லை என்ற வாதத்தையும் முன்வைத்திருக்கலாம்.
வ.8: பலர் பலவிதமான நற்செய்திகளை முன்வைத்தவேளை பவுல் தன்னுடைய நற்செய்தி கிறிஸ்துவின் உயிர்ப்பில் தங்கியுள்ளதை திமோத்தேயுவிற்கு நினைவூட்டுகிறார். பல வேளைகளில் பவுலுடைய மற்ற கடிதங்களிலும் இந்த உயிர்ப்பின் முக்கியத்துவத்தை பவுல் காட்டுவதனைக் காணலாம்.
வ.9: இந்த வரியில் பவுல் தன்னுடைய எந்த சிறைப்படுத்தலை குறிப்பிடுகிறார் என்று தெரியவில்லை. இங்கு சிறைப்படுத்தல் என்பது அநேகமாக அவர் உரோமையில் சிறையில்
இருந்ததைக் குறிக்கலாம். கடவுளின் வார்த்தையை சிறைப்படுத்த முடியாது என்பது கடவுளின் சக்தியை சிறைப்படுத்த முடியாது என்பதைக் காட்டுகிறது.
வ.10: தேர்ந்து கொள்ளப்பட்டவர்கள் (ἐκλεκτός eklētos) என்பவர்கள் இங்கே இஸ்ராயேலரையும் தாண்டி அனைவரையும் உள்வாங்குகின்றது. அத்தோடு மீட்பும், என்றுமுள்ள மாட்சியும் கிறிஸ்து வழியாகவே வருகிறது என்பதை பவுல் நினைவூட்டுகிறார்.
வவ.11-13: நம்பத்தகுந்த வரிகள், இது பவுலுடைய இறையியலை அப்படியே இந்த வரிகள் சாற்றுகின்றன.
அ. கிறிஸ்துவோடு இறந்தால் - அவரோடு வாழ்வோம்.
ஆ. கிறிஸ்துவோடு நிலைத்தால் - அவரோடு ஆட்சிசெய்வோம்
இ. கிறிஸ்துவை மறுதலித்தால் - அவர் நம்மை மறுதலிப்பார்
வ.13: மனிதர்கள் நம்பத் தகாதவர்கள் என்ற நம்பிக்கை இஸ்ராயேல் மக்களிடையே பலமாக
இருந்தது. இதன் காரணமாகத்தான் பல வேளைகளில் இஸ்ராயேல் மக்கள் தங்களை தாங்களே நொந்து கொண்டார்கள். இயேசு கடவுளாக இருந்ததால், கடவுளால் தன்னை மறுதலிக்க முடியாது என்ற நம்பிக்கையும் இங்கே மறைமுகமாக உள்ளது. பலவேளைகளில் உடண்படிக்கைகள் மீறப்பட்ட போது இந்த நியதியைக்கொண்டே இறைவாக்கினர்கள், மத்தியஸ்தர்கள், தலைவர்கள் மற்றும் ஆன்மீக வழிகாட்டிகள் மக்களுக்காக பரிந்துபேசினர்.
லூக் 17,11-19
11இயேசு எருசலேமுக்குப் போய்க் கொண்டிருந்தபோது கலிலேய, சமாரியப் பகுதிகள் வழியாகச் சென்றார். 12ஓர் ஊருக்குள் வந்தபொழுது, பத்து தொழுநோயாளர்கள் அவருக்கு எதிர்கொண்டு வந்து, தூரத்தில் நின்று கொண்டே, 13'ஐயா! இயேசுவே, எங்களுக்கு இரங்கும்' என்று உரக்கக் குரலெழுப்பி வேண்டினார்கள். 14அவர் அவர்களைப் பார்த்து, 'நீங்கள் போய் உங்களைக் குருக்களிடம் காண்பியுங்கள்' என்றார். அவ்வாறே அவர்கள் புறப்பட்டுப் போகும்போது அவர்கள் நோய் நீங்கிற்று. 15அவர்களுள் ஒருவர் தம் பிணி தீர்ந்திருப்பதைக் கண்டு உரத்த குரலில் கடவுளைப் போற்றிப் புகழ்ந்துகொண்டே இயேசுவிடம் திரும்பி வந்தார்; 16அவருடைய காலில் முகங்குப்புற விழுந்து அவருக்கு நன்றி செலுத்தினார். அவரோ ஒரு சமாரியர். 17இயேசு, அவரைப் பார்த்து, 'பத்துப் பேர்களின் நோயும் நீங்கவில்லையா? மற்ற ஒன்பது பேர் எங்கே? 18கடவுளைப் போற்றிப் புகழ அன்னியராகிய உம்மைத் தவிர வேறு எவரும் திரும்பிவரக் காணோமே!' என்றார். 19பின்பு அவரிடம், 'எழுந்து செல்லும், உமது நம்பிக்கை உமக்கு நலமளித்தது' என்றார்.
லூக்கா நற்செய்தியின் பதினேழாவது அதிகாரம், சீடர்களுக்கான படிப்பினைகள் என்ற பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியும் லூக்கா நற்செய்திக்கான மிகவும் தனித்துவமான பகுதிகளில் ஒன்றாகும். இந்தப் பகுதிக்கு சற்று முன் தான் செல்வரும் லாசரும் என்ற உவமையை இயேசு கற்பித்திருந்தார். கலிலேயாவில் தொடங்கிய் எருசலேம் நோக்கிய
இயேசுவின் பயணம் இன்னும் நிறைவடையவில்லை. இந்த நீண்ட பயணத்தை போலவே ஆண்டவரின் நீண்ட போதனைகளும் இருக்கின்றன.
வ.11: இயேசுவின் பயணம் எருசலேமை நோக்கியதாகவே இருக்கிறது என்பதில் நற்செய்தியாளர் லூக்கா கவனமாக இருக்கிறார். ஆனால் எருசலேம் நோக்கிய ஆண்டவரின் பயணத்தில் சமாரியா விலக்கப்படவில்லை என்பதிலும் இந்த மான்புமிகு வைத்தியர் அக்கறையாக இருக்கிறார். சாமாரியாவிற்கும் யூதர்களுக்கும் இருந்த பழம்கால பகையை பற்றிய அறிவு, மற்றைய வரிகளை புரிந்து கொள்ள வாசகர்களுக்கு உதவியாக அமையும்.
சமாரியர்களை யூதர்கள் உண்மை இஸ்ராயேலராக கருதவில்லை. அவர்கள் அசிரியருடன் கலப்பு செய்யப்பட்டவர்கள் என்றே கருதினர். யூதர்கள் பபிலோனியாவிலிருந்து வந்து ஆலயத்தை மீள் நிர்மாணித்தபோது இந்த புறந்தள்ளப்பட்ட சமாரியர் தாங்களும் தமது பங்களிப்பை செய்ய முற்பட்டனர். ஆனால் அக்கால யூத தலைவாக்ளான எஸ்ரா, நெகேமியா போன்றவர்கள் அதனை ஏற்கவில்லை, இதனால் சமாரியரும் ஒரு கடினமான முடிவை எடுத்து யூதர்களை விலக்கி வைத்தார்கள். கெரசிம் மலையில் தங்களுக்கென்று இவர்கள் ஆலயம் அமைத்துக்கொண்டதும்
இந்த பகைக்கு நல்ல உதாரணம். மக்கபேயர்களின் காலத்தில், மக்கபேய ஆட்சியாளர்கள் மனித எலும்புகளை சமாரியர்களின் தேவாலயத்தில் போட்டு அதனை அசிங்கப்படுத்தினர். யூதர்களின் விவிலியத்தையும் சமாரியர்கள் ஏற்றுக்கொள்வதில்லை, அவர்கள் முதல் ஐந்து நூல்களான சட்ட புத்தகத்தை மட்டுமே தங்கள் விவிலியமாக ஏற்றுக்கொண்டனர். இருவரும் ஒருவரை ஒருவர் விலக்கி வைத்து ஒருவர் மற்றவரை குறைவானவர்களாக கருதினர்.
இது அனேகமாக தமிழரின் அசிங்க வரலாறான சாதியத்தை நினைவூட்டுகிறது. தமிழர்கள் சாதியத்தற்கு முன் சகோதரர்கள், சாதியத்திற்கு பின் நோயாளிகள். ஒரு சாதி தன்னைதானே உயர்ந்தது என்று சொல்லி மற்றவர்களை குறைவாக பார்க்க முயல்கிறது. அதற்கு சார்பாக மூடநம்பிக்கைகள் கொண்ட புராணங்களை ஆதாரமாகக் கொள்கிறது. ஈழத்தில், விடுதலை போராட்ட காலத்தில் இந்த அசிங்கமான நோய் குறைவாக இருந்தது, இப்போது வேறு வேலையில்லாததால் இந்த நோய் தன் அழுக்கான முகத்தை மெதுவாக உயர்த்தப் பார்க்கிறது. சமத்துவத்தை அடிப்படையாக கொண்ட கிறிஸ்தவம், இந்த சாதியத்தை பாராட்டுவது, அல்லது கவனிக்காமல் விடுவது தொழுநோய்க்கு சமன் என நினைக்கிறேன்.
வ.11: தொழுநோயை அக்கால புற்றுநோய் அல்லது எயிட்ஸ் நோய் என்று கூட சொல்லலாம். சிலர் இந்த நோய் அவ்வளவு ஆபத்தான அல்லது மரணத்தை ஏற்படுத்தக்கூடிய நோய் என்று கருதவில்லை. ஆனால் தொழுநோய் வந்தவர்களில் மிக சிலரே இந்த அதிலிருந்து விடுதலையடைந்தனர். இது ஒரு தோல் வியாதி, இது தோல் கலங்களையும், மேல் நரம்புத் தொகுதிகளையும் பாதித்து, கொஞ்சம் கொஞ்சமாக நோயாளியை மரணத்தை நெருங்க வைத்தது. இந்த தொழுநோயும் இக்கால தொழுநோயும் ஒன்றல்ல என்ற ஒரு பலமான வாதமும் இக்கால ஆய்வாளர்கள் மத்தியில் இருக்கிறது. முதல் ஏற்பாட்டு காலத்தில், தொழுநோய் பரவக்கூடிய ஒரு ஆபத்தான நோயாக இருந்தபடியால், இதனால் பாதிக்கப்பட்ட மக்களை தீட்டானவர்கள் என்று முத்திரை குத்தி அவர்களை மக்களின் பாளயத்திற்கு (கூடாரம்) வெளியில் வைத்தனர். மக்கள் நகரமயமனாபோது இந்த தொழுநோயாளர்கள் நகருக்கு வெளியில் வைக்கப்பட்டனர். அதிகமானோர் பாலை நிலங்களிலும், குகைகளிலும் தங்கி, பிச்சையெடுத்தும், வேறு சிறு தொழில்களை செய்தும் தங்கள் வாழ்நாட்களை எண்ணினர். இவர்களில் சிலர் வழிப்பறி கொள்ளைக்காரர்களாகவும் உருவாகினர். நோய் கடவுளின் தண்டனை என்ற முதல் ஏற்பாட்டின் சில இறையியல் கருத்துக்கள் தொழுநோயாளர்களை அதிகமாக பாதித்தது (ஆராய்க லேவியர் 13-14). நாமான் (2அர 5) மற்றும் உசியா (2குறி 26,16-21) போன்ற முக்கியமானவர்களும் இந்த தொழுநோயால் பாதிக்கப்பட்டனர். தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்ன என்ன செய்ய வேண்டும் என்பதை மேற்குறிப்பிட்ட பகுதிகள் விவரனமாக விவரிக்கின்றது. இது இஸ்ராயேலில் மட்டுமல்ல அக்கால உலகில் அதிகமான பகுதிகளில் மிக முக்கியமான பிரச்சினையாக இருந்துள்ளது.
ஆரம்ப கால கிறிஸ்தவம் இந்த லேவியர் சட்டங்களை அப்படியே ஏற்றுக்கொள்வில்லை, உதாரணமாக இயேசு தொழுநோயாளர்களை தொடுவதை புதிய ஏற்பாடு பதிவு செய்கிறது (காண்க ❊மாற்கு 1,40-42). இந்த தொழுநோயாளர்கள் தூரத்தில் நிற்பது அவர்களின் நிலையைக் காட்டுகிறது.
(❊40ஒரு நாள் தொழுநோயாளர் ஒருவர் இயேசுவிடம் வந்து, 'நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்' என்று முழந்தாள் படியிட்டு வேண்டினார்.41இயேசு அவர்மீது பரிவு கொண்டு தமது கையை நீட்டி அவரைத் தொட்டு அவரிடம், 'நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக!' என்றார். 42உடனே தொழுநோய் அவரைவிட்டு நீங்க, அவர் நலமடைந்தார்.)
வ.13: இவர்களுடைய வேண்டுதல்கள் பொருளுக்கான இரங்குதல் அல்ல மாறாக குணமாக்களுக்கான வேண்டுதல் என அதிகமான ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இவர்களுடைய வசனங்கள் நோக்கப்பட வேண்டும் இவர்கள் இயேசுவை ἐπιστάτης எபிஸ்டாடேஸ் அதாவது தலைவர் முதலாளி என்று விழிக்கிறார்கள். அவர்கள் கடவுளே அல்லது ஆண்டவரே என்று விழிக்கவில்லை. அத்தோடு இவர்களுக்கு தங்கள் குணப்படுத்த முடியாத நோயை இந்த நபரால் குணப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையும் இருந்தது.
வ.14: இயேசுவின் இந்த கட்டளை லேவியர் சட்டங்களை நினைவூட்டுகிறது. தொழுநோயாளர் ஒருவர் குணமானாலும், அவர் குருவால் சோதிக்கப்பட வேண்டும், பின்னர்தான் அவர்கள் சமுதாயத்தில் ஏற்றுக்கொள்ளப்படுவர். இங்கே அவர்கள் போகும் வழியிலேயே குணமடைந்து விட்டார்கள், இவ்வாறு இவர்களின் குணமாக்களுக்கு இயேசுவே காரணம், எந்த குருவும் அல்ல என்பதை லூக்கா அழகாக காட்டுகிறார்.
வ.15-16: இந்த நபரின் செயல்கள் பல வடிவங்களைக் கொண்டுள்ளது.
அ. அவர் பிணி தீர்ந்திருப்பதைக் கண்டுகொண்டார்
ஆ. உரத்த குரலில் கடவுளை புகழ்ந்தார்
இ. இயேசுவிடம் திரும்பி வந்தார்
ஈ. இயேசுவின் காலில் முகம் பட விழுந்தார்
உ. அவருக்கு நன்றி செலுத்தினார்
ஊ. அவர் ஒரு சமாரியர்.
இந்த செயல்கள் அனைத்தும் இயேசுவை அப்படியே கடவுளாகக் காட்டுகிறது. அத்தோடு அது சமாரியருக்கு மட்டுமே தெரிகிறது என்பதன் வாயிலாக, லூக்கா மற்றவர்களை சாட்டையால் அடிக்கிறார் அத்தோடு சமாரியர்கள் எவ்விதத்திலும் குறைந்தவர்கள் அல்ல என்பதையும் காட்டுகிறார்.
வ.17-18: இயேசுவின் கேள்விகள் பதிலை கொண்டுள்ளன. மற்ற ஒன்பது பேரும் குணமடைந்தாலும் தொடர்ந்து ஆன்மாவில் நோயாளர்களே என்பதை குறிப்பிடுகிறார். உண்மையான முழு குணமடைந்தவர் இந்த அந்நியர் மட்டுமே, ஆக குணமடைவதற்கு யாரும் எந்த இனத்திலும் விசேடமாக இருக்க வேண்டிய தேவையில்லை மாறாக அவர்கள் ஆண்டவரை அறிந்தால் போதும் என்ற நம்பிக்கை இங்கே வலுப்பெறுகிறது. திரும்பி வருதலின் முக்கியத்துவத்தை லூக்கா அழகாக படம் பிடிக்கிறார்.
வ.19: நம்பிக்கை குணப்படுத்துகிறது என்பது லூக்கா நற்செய்தியின் இன்னொரு முக்கியமான படிப்பினை. இந்த நம்பிக்கை இல்லாவிட்டால் கடவுள் அருகில் இருந்தும் மனிதர் பயன்பெறமாட்டார் என்ற உண்மையை உரைக்கிறது. ஆரம்ப கால திருச்சபைக்கு இந்த நம்பிக்கைதான் மிக முக்கியமாக தேவைப்பட்டது. நற்செய்தியாளர்களின் முக்கியமான பணியான இந்த நம்பிக்கை வளர்த்தலைக் கொள்ளலாம்.
இறைவன் ஓர் இனத்திற்கு சொந்தமானவர் அல்லர்,
அப்படியாயின் அவர் மனிதரைவிட மேலானவராக இருக்க முடியாது.
இயேசு எவருக்கும் மட்டும் சொந்தமானவர் மட்டுமல்ல,
அனைத்தும் அவருக்கு சொந்தமானவை என்பதை முதலில் கிறிஸ்தவர்கள் உணரட்டும்.
ஆண்டவரே உடலியல் தொழு நோய்க்கு மருந்துண்டு,
ஆனால் உளவியல் தொழு நோய்க்கு மருந்து உம்மிடமே உண்டு.
ஆமென்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக