வியாழன், 19 செப்டம்பர், 2019

ஆண்டின் பொதுக்காலம் இருபத்தைந்தாம் வாரம் 25th Sunday in Ordinary Time


 முதல் வாசகம்: ஆமோஸ் 8,4-7
திருப்பாடல்: 113
இரண்டாம் வாசகம்: 1திமோத்தேயு 2,1-8
நற்செய்தி: லூக்கா 16,1-13

ஆமோஸ் 8,4-7
4'வறியோரை நசுக்கி, நாட்டில் உள்ள ஒடுக்கப்பட்டோரை அழிக்கின்றவர்களே, இதைக்  கேளுங்கள்; 5'நாம் தானியங்களை விற்பதற்கு அமாவாசை எப்பொழுது முடியும்? கோதுமையை நல்ல விலைக்கு விற்பதற்கு ஓய்வுநாள் எப்பொழுது முடிவுறும்? மரக்காலைச்ழூ சிறியதாக்கி, எடைக்கல்லைக் கனமாக்கி, கள்ளத் தராசினால் மோசடி செய்யலாம்; 6வெள்ளிக்காசுக்கு ஏழைகளையும் இரு காலணிக்கு வறியோரையும் வாங்கலாம்; கோதுமைப் பதர்களையும் விற்கலாம்' என்று நீங்கள் திட்டமிடுகிறீர்கள் அல்லவா?'
7ஆண்டவர் யாக்கோபின் பெருமைமீது ஆணையிட்டுக் கூறுகின்றார்: 'அவர்களுடைய இந்தச் செயல்களுள் ஒன்றையேனும் நான் ஒருபோதும் மறக்கமாட்டேன்.


  சமூக நீதியின் இறைவாக்கினர் என அழைக்கப்படும் இந்த இறைவாக்கினரின் காலப்பகுதியை கணிப்பது கடினமாக இருந்தாலும், இவர் வட அரசில் தென்நாட்டு அரசன் உசியா (கி.மு 767-740) மற்றும் வட நாட்டு அரசன் இரண்டாம் எரோபோவாம் (கி.மு 782–753) காலப்பகுதியில், வடநாட்டில் இறைவாக்கு உரைத்திருக்க வேண்டும். இரண்டாம் எரோபோவாம் காலத்தில் வட நாடு, இஸ்ராயேல், செல்வமுடையதாய் இருந்தது. இந்த காலத்தில் அசிரியா, இஸ்ராயேலின் பல நாள் எதிரியான சிரியாவை (ஆராம்) தோற்கடித்திருந்தது, அத்தோடு அசிரியாவும் உள்நாட்டுச் சிக்கல்களில் சிக்கியிருந்ததுஇது இரண்டாம் 
எரோபோவாமிற்கு தனது எல்லைகளை விரிவு படுத்த உதவியாக இருந்தது. இவ்வாறு வணிக மார்கங்களை கட்டுப்படுத்திய இந்த அரசனின் காலத்தில் முதலாளித்துவ சமூகம் அதி பணக்காரர்களாகவும் சாதாரண மக்கள் மிகவும் ஏழைகளாகவும் காணப்பட்டனர். ஆமோஸ் 
இறைவாக்கினரின் இறைவாக்கு இப்படியான பணக்கார தலைமைத்துவத்திற்கு எதிராக 
இருந்ததாலும் அவர் தென்நாட்டு, யூதாவிலிருந்து வந்த காரணத்தாலும், பலமான எதிர்ப்புக்கு உள்ளானார். ஆமோஸின் இறைவாக்கை கடவுள், தீர்வை, சமூகம், எதிர்நோக்கு, இறைவாக்கு, மற்றும் சமயம் என்ற தலைப்புக்களில் பிரித்து நோக்கலாம். இன்றைய வாசகப் பகுதி 'பழக்கூடை காட்சியை' கடவுள் விவரிப்பதனைப்போல் உள்ளது

.4: இந்த வசனம் பணக்கார முதலாளிகளை அவர்களின் அநியாயங்களில் விளிக்கிறது. நீதியில்லாத, அத்தோடு சம பங்கீடு இல்லாத வியாபார முறைகளால் ஏழைமக்களும், அடிப்பட்ட மட்டத்தில் உள்ள மக்களும் நசுக்கி அழிக்கப்படுகின்றனர் என்பதை ஆமோஸ் நன்கு அறிந்திருக்கிறார். சுதந்தரமான முன்னேற்றம், வளர்ச்சியும் வளமான வாழ்விற்கு அடையாளங்களாகும். ஒருவர் வறுமைக்குள்ளாக்கப்படுதல் என்பது அவரது அசைவையும், நடையையும் கட்டுப்படுத்துவதற்கு சமனாகும்

.5: இந்த அமாவாசை மற்றும் ஓய்வுநாட்களில் ஏழைகள் கொஞ்சம் திருப்தியாக இருந்திருக்க வேண்டும். இந்த நாட்களில் ஏழைகளுக்கு சார்பாக என்ன நடந்தது என்பது தெளிவாக இல்லை ஆனால் இந்த நாட்கள் ஏழை எளியவர்க்கு சார்பான நாட்கள் என்பது மட்டும் புலப்படுகிறது. அமாவாசை நாள் என்பது சந்திர விழா அல்லது புதிய மாத விழா என்றே எபிரேயத்தில் உள்ளது (חֹדֶשׁ֙ ஹோடேஷ், புதிய மாதம், நிலவு). யூதர்களின் நாட்காட்டி சந்திர நாட்காட்டி என்பதையும், ஒரு புதிய மாதற்திற்கும் சந்திரனிற்கும் ஒரே வார்த்தை பாவிக்கப்பட்டதையும் அவதானிக்க வேண்டும். ஆக இந்த புதிய மாத நாள், ஓய்வு நாட்களில் வியாபாரம் தடைசெய்யப்பட்டிருந்தது என்பதை காட்டலாம்
  மரக்காலை சிறயதாக்கி, எடைக்கல்லை கனமாக்கி என்று தமிழில் அழகாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. இங்கே மரக்கால் என்பது, אֵיפָה֙ எபா என்று எபிரேயத்தில் உள்ளது. இந்த எபா என்பது வாங்கப்படும் திண்மப் பொருளின் அளவைக் காட்டியது. இதனை சிறியதாக்குவது வாடிக்கையாளர்களை பாதிக்கும் (இன்று குறைவான பெற்றோல் அளவுளை தெரியாமல் பாவிப்பது போல). எடைக்கல் என்பது שֶׁ֔קֶל ஷெகெல் என்று எபிரேயத்தில் உள்ளது, இது நிறுவையின் அளவைக் குறிக்கும், இதனை பெரியதாக்குவதும் வாடிக்கையாளர்களை அதிகமாக பாதிக்கும் (இதனை கள்ளதராசு படிகள் என்று சொல்லலாம்). இவையனைத்தும் எளியவர்களின் வாழ்வை இன்னும் மோசமாக்கியது



.6: இந்த வசனத்தின் மூலம், அடிமை வியாபாரத்தையும், ஏழைகளின் வறுமை நிலையையும் ஆமோஸ் வெட்ட வெளிச்சமாக்குகிறார். இங்கு மூன்று விதமான குற்றச்சாட்டுக்களை ஆமோஸ் முன்வைக்கிறார்
. வெள்ளிக்கு ஏழைகளை விற்றல்
. இரு காலணிகளுக்கு வறியோரை விற்றல்
. கோதுமைப் பதர்களை விற்றல்

 இவையனைத்தும் மோசேயின் சட்டத்தால் நிறுத்தப்பட்டவை (காண்க வி. 21,2-11: லேவி 25,35-55 .. 15,12-18). அடிமை வியாபாரம் செய்வதும், முக்கியமாக இஸ்ராயேலர்களை இஸ்ராயேலர்கள் அடிமைகளாக விற்பதும் வாங்குவதும் பலவாறு தடைசெய்யப்பட்டன. அடிமைகளாக்கப்பட்டவர்கள் ஆறு ஆண்டுகளின் பின்னர் நல்ல சுதந்திரமடைய பல சட்டங்கள் காணப்பட்டன. சமூதாயத்தில் பணக்காரர்களின் அடாவடி அதிகரிக்கின்றபோது அது ஏழைகளுக்கு மிக ஆபத்தாக அமைவதை இங்கே அவதானிக்கலாம்

.7: இந்த வசனம் மிக முக்கிய வசனம். யாக்கோபின் பெருமை என்பது 'யாக்கோபின் முரட்டுக் கௌரவம்' என்றே விளங்கிக்கொள்ளப்பட வேண்டும் (בִּגְא֣וֹן יַעֲקֹב). இந்த முரட்டுக் கௌரவம்தான் பண்காரர்களை தங்களது செந்த ஏழை சகோதரர்களுக்கு எதிராக அநியாயம் செய்ய வைத்தது. இப்படியான அநியாயங்களை ஆண்டவர் எப்போதும் மறக்கவும் மன்னிக்கவும் மாட்டார் என்கிறார் ஆமோஸ். (இந்த அக்கிரமம் இன்றும் அப்படியே பயங்கரமாக உலகில் தாண்டவம் ஆடுகிறது.) 

திருப்பாடல்: 113
1அல்லேலூயா! ஆண்டவரின் ஊழியர்களே, அவரைப் புகழுங்கள். அவரது பெயரைப் போற்றுங்கள்
2ஆண்டவரது பெயர் வாழ்த்தப் பெறுவதாக! இப்பொழுதும் எப்பொழுதும் வாழ்த்தப் பெறுவதாக
3கீழ்த்திசை முதல் மேற்றிசைவரை ஆண்டவரது பெயர் போற்றப்படுவதாக
4மக்களினங்கள் அனைத்திற்கும் ஆண்டவர் மேலானவர்; வானங்களையும்விட உயர்ந்து அவரது மாட்சி
5நம் கடவுளாகிய ஆண்டவருக்கு நிகர் யார்? அவர்போல வானளாவிய உயரத்தில் வீற்றிருப்பவர் யார்
6அவர் வானத்தையும் வையகத்தையும் குனிந்து பார்க்கின்றார்
7ஏழைகளைத் தூசியிலிருந்து அவர் தூக்கி நிறுத்துகின்றார்; வறியரைக் குப்பை மேட்டிலிருந்து கைதூக்கி விடுகின்றார்
8உயர்குடி மக்களிடையேதம் மக்களுள் உயர்குடி மக்களிடையேஅவர்களை அமரச் செய்கின்றார்
9மலடியை அவள் இல்லத்தில் வாழ வைக்கின்றார்; தாய்மைப்பேறு பெற்று மகிழுமாறு அவளுக்கு அருள்கின்றார். அல்லேலூயா!

  திருப்பாடல்கள் 113-118, எகிப்திய ஹலேல் அல்லது மீட்பின் பாடல்கள் என்று அறியப்படுகின்றன. இந்த பாடல்கள் அனைத்தும் புகழ்ச்சிப்பாடல்களாக ஆண்டவராகிய கடவுளின் (யாவே) பெயரையும் அவரையும் புகழ்வதனையும் நோக்கமாக கொண்டுள்ளன. இந்த பாடல்களில் அதிகமாக, கடவுளை புகழுங்கள் הַלְלוּ יָהּ ஹல்லேலூ யாஹ், கடவுளை பெயர் போற்றப்படுக, יְהִי שֵׁם יְהוָה מְבֹרָךְ  jehi sham YHWH mevorek என்ற வசனங்கள் அழகாக வருவதனைக் காணலாம். இந்தப் பாடல், தொடக்கத்திலும் முடிவிலும் ஹல்லேலூ யாஹ் என்ற புகழ்ச்சி சொல்லை கொண்டுள்ளது இதன் தனித்துவம். அதனைவிட ஐந்து தடவை மற்றைய புகழ்ச்சி சொற்கள் பாவிக்கப்பட்டுள்ளன. தமிழிலும் இந்தப் பாடல் அழகாக எபிரேய கவிநயம் குன்றாமல் தமிழின் இனிமையுடன் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இதிலும் எபிரேய கவிநடையான திருப்பிக் கூறுதலை அவதானிக்கலாம்

.1:
: அவரைப் - புகழுங்கள்  
. அவரின் பெயரைப் - போற்றுங்கள் 
 இங்கே கடவுளின் சேவகர்கள் அல்லது பணியாளர்கள் என்பவர்கள், வானதூதர்களாகவோ அல்லது அவர் மக்களாகவோ இருக்கலாம். ஆண்டவரையும் அவர் பெயரையும் ஒத்து திருப்பிக் கூறி தன் மக்களுக்கு முக்கியமான இஸ்ராயேலரின் நம்பிக்கையை நினைவூட்டுகிறார் ஆசிரியர். கடவுள் எவ்வளவு மேன்மையானவரோ அதனைப்போலவே அவர் பெயரும் மேன்மையானது. இதனால்தான் கடவுளின் பெயரை வீணாக சொல்லாதிருத்தல் ஒரு முக்கியமான கட்டளையாக கருதப்பட்டது (காண்க ❄︎வி. 20,7: ❄︎❄︎.: 5,11).

(❄︎ உன் கடவுளாகிய ஆண்டவரின் பெயரை வீணாகப் பயன்படுத்தாதே ஏனெனில், தம் பெயரை வீணாகப் பயன்படுத்துபவரை ஆண்டவர் தண்டியாது விடார்.
❄︎❄︎ உன் கடவுளாகிய ஆண்டவரின் பெயரை வீணாகப் பயன்படுத்தாதே ஏனெனில், தம் பெயரை வீணாகப் பயன்படுத்துபவரை ஆண்டவர் தண்டியாது விடார்.)

.2: ஆண்டவரின் பெயர், காலங்களை கடந்தும் வாழ்த்தப்பட வேண்டியது என்பதை நினைவூட்டுகிறார் ஆசிரியர்

.3: இந்த வசனம் எபிரேயத்தில், 'சூரியனின் எழுதலிலிருந்து அதன் வருகைவரை, போற்றப்படுக கடவுளின் பெயர்' என்றுள்ளது. இந்த வரியிலிருந்து முதல் ஏற்பாட்டின் வானவியல் அறிவை கண்டுகொள்ளலாம். கீழ்திசையில் கதிரவன் எழுவதாகவும், அது மேற்றிசையில் வருவதாகவும் (மறைதல்) அவர்கள் கண்டனர். இதன் மூலமாக அனைத்து உலக மக்களும், அதாவது சூரியனின் வெளிச்சத்திற்கு உட்பட்ட மக்கள் அனைவரும் கடவுளை புகழவேண்டும் என்ற செய்தியைக் கூறுகிறார்

.4: இஸ்ராயேலர், வானம் (שָּׁמַיִם ஷமாயிம் - வானங்கள்) என்பதை வான்திரைக்கு (רָקִיעַ றகியா - வான் தொடு திரை) மேல்லுள்ள அண்டமாக நம்பினர். வான்திரை என்பது வானத்திற்கும் நிலத்திற்கும் இடையில் ஒரு கவிழ்ந்த பாத்திரம் போல் இருந்துகொண்டு, யன்னல்கள் மூலமாக தண்ணீரை தருகிறது என்றும் நம்பினர். அத்தோடு சூரியனும், சந்திரனும், நட்சத்திரங்களும் இந்த தொடுதிரையிலே இருந்ததாகவும் அறிந்தனர். ஆக வானம் என்பது மிக உயர்ந்தது. இப்படியிருக்க கடவுளின் மாட்சி இந்த வானத்தைவிட உயர்ந்தது என்று ஆசிரியர் சொல்வது அவரின் கடவுளின் மட்டிலான மதிப்பையும் நம்பிக்கையையும் நமக்கு வியப்புடன் அறிக்கையிடுகிறது

.5: இந்த வசனம் இரண்டு கேள்விகளைக் கேட்டு அதனுள் அழகான எதிர்மறை விடைகளைக் கொண்டுள்ளது
. கடவுளுக்கு நிகரானவர் எவரும் இல்லை
. அவர் போல் உயரத்தில் யாரும் இல்லை. இங்கே உயரம் என்பது மேன்மையையும் குறிக்கும்

.6: கடவுளுக்கு நிலம் மட்டுமல்ல அத்தோடு வானமும் கீழேதான் உள்ளது என்று சொல்லி, இஸ்ராயேலின் கடவுளை மற்றவர்களின் தெய்வங்களோடு ஒப்பிட முடியாது என்கிறார் ஆசிரியர்

.7-8: ஏழைகளும் வறியவர்களும் ஒத்தகருத்துச் சொற்களாகவும், தூசியும் குப்பைமேடும் அடுத்த ஒத்த கருத்துச் சொற்களாகவும் பாவிக்கப்பட்டுள்ளன. தூசியும் குப்பைமேடும் மிகவும் அடிமட்ட தகுதியை கொண்ட புவியியல் அடையாளங்கள். இவை மனிதரின் பலவீனத்தையும் இயலாமையையும் இங்கே குறிக்கின்றன. அத்தோடு இந்த எளியவர்கள் உயர்குடி மக்களோடு இருத்தப்படுவார்கள் என்பது, கடவுள்தான் யார் யார் எங்கெங்கு இருக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கிறார் என்பதை நினைவூட்டுகிறது

.9: குழந்தைகள் அற்ற தன்மை விவிலிய முதல் ஏற்பாட்டு உலகில் ஒரு நிறைவின்மையாக கருதப்பட்டது. அத்தோடு குழந்தை பேற்றை வழங்குபவரும் கடவுள் என்றே நம்பினர். அதிகமாக குழந்தைபேறு இல்லாதவர்கள் பலவிதமான துன்பங்களுக்கு ஆழானார்கள். ஒரு சில வேளைகளில் அவர்கள் தங்கள் வீடுகளில் இருந்தும்கூட விரட்டப்பட்டார்கள். ஆனால் கடவுள் தரும் இந்த தாய்மைப்பேறு இவர்களை அவர்களின் சொந்த வீட்டில் தங்க உரிமைதருகிறது

(இன்றும் கூட எமது சமூகம், குழந்தை பேறு இல்லாதவர்களை நசுக்கி அவர்களின் மனநிம்மதியை பறிக்கிறது. கடவுளே அவர்களை ஆசீர்வதிக்கின்றபோது, ஏன் இந்த சமூகத்திற்கு இந்த வேலை?) 

1திமோத்தேயு 2,1-8
1அனைவருக்காகவும் மன்றாடுங்கள்; இறைவனிடம் வேண்டுங்கள்; பரிந்து பேசுங்கள்; நன்றி செலுத்துங்கள். முதன்முதலில் நான் உங்களுக்குத் தரும் அறிவுரை இதுவே. 2இறைப்பற்றும் கண்ணியமும் நிறைந்தவர்களாய், தொல்லையின்றி அமைதியோடு வாழ அரசர்களுக்காகவும், உயர் நிலையிலுள்ள எல்லா மனிதர்களுக்காகவும் மன்றாடுங்கள். 3இதுவே நம் மீட்பராகிய கடவுளின்முன் சிறந்ததும் ஏற்புடையதுமாகும். 4எல்லா மனிதரும் மீட்புப் பெறவும் உண்மையை அறிந்துணரவும் வேண்டுமென அவர் விரும்புகிறார். 5ஏனெனில் கடவுள் ஒருவரே. கடவுளுக்கும் மனிதருக்கும் இடையே இணைப்பாளரும் ஒருவரே. அவரே இயேசு கிறிஸ்து என்னும் மனிதர். 6அனைவரின் மீட்புக்காக அவர் தம்மையே ஈடாகத் தந்தார்; குறித்த காலத்தில் அதற்குச் சான்று பகர்ந்தார்.
7இதற்காகவே நான் நற்செய்தியை அறிவிப்பவனாகவும் திருத்தூதனாகவும் விசுவாசத்தையும் உண்மையையும் பிற இனத்தாருக்குக் கற்பிக்கும் போதனைகனாகவும் ஏற்படுத்தப்பட்டேன். நான் சொல்வது உண்மையே பொய் அல்ல
8எனவே, ஆண்கள் சினமும் சொற்பூசலும் இன்றி எவ்விடத்திலும் தூய உள்ளத்தோடு கைகளை உயர்த்தி இறைவேண்டல் செய்யுமாறு விரும்புகின்றேன். (பின்வரும் வரிகளையும் ஆய்வு செய்க)

  மேய்ப்புப் பணி திருமுகங்களில் ஒன்றான திமோத்தேயுவிற்கு எழுதப்பட்ட இந்த திருமுகம் மிகவும் ஆச்சரியத்திற்குரியது. இந்த திருமுகத்தின் இரண்டாவது அதிகாரம் வழிபாடு மற்றும் பெண்கள் ஒழுக்கத்தைப் பற்றி விளக்குகின்றன. இதில் முக்கியமாக பெண்களின் ஒழுக்கத்தை பற்றிய பவுலின் சிந்தனைகள் கவனமாக ஆராயப்பட வேண்டும் (ஆராய்க 2,9-15). யூத மத சட்டங்கள் மற்றும் உரோமைய கிரேக்க மத சட்டங்கள் பெண்களுக்கு பல வழிபாட்டு முறைகளை முன்வைத்தன, அவை பெண்களின் மத சுதந்திரத்தை ஒரு வழியில் பறித்தன என்றும் சில வாதிடுகின்றனர். இவர்கள் கிறிஸ்தவர்களாக மாறி கிறிஸ்தவத்தின் சுதந்திரத்தை அனுபவித்த போது சிலர் தப்பான சுதந்திரத்திற்குள் வந்து, தங்களின் பழைய நிலையை மறந்து, புதிய கிறிஸ்தவ சுதந்திரத்தை தவறாக விளங்கி தாங்கள் நினைத்ததை எல்லாம் செய்ய முயன்றனர். இதற்கு ஆண்களும் விதி விலக்கல்ல. இப்படியானவர்களையே பவுல் சாடுகிறார்
 பவுல் இங்கே குறிப்பிடும் பெண்கள் ஒரு குறிப்பிடப்பட்ட வகையினர், அனைத்து சாதாரண பெண்களையல்ல. இன்றும் பல பெண்கள் (ஆண்களும்) தங்கள் மத சுதந்திரத்தை தவறாக வியாக்கியானம் செய்து, விரும்பியதெல்லாம் ஆலயத்திலும், வழிபாட்டிடங்களிலும் செய்ய முயல்கின்றனர். இதன் உச்ச கட்டம்தான் திருப்பலி, செபம் மற்றும் ஆராதனை வேளைகளில் பக்குவமின்றி படமெடுத்தல், சத்தமாக கதைத்தல், ஏளனமாக சிரித்தல், பொருத்தமில்லாத உடைகளில் வந்து தர்மசங்கடம் கொடுத்தல் போன்றவை அடங்கும். ஆலயம் காட்டுச் சுதந்திரம் அனுபவிக்கும் இடம் கிடையாது, அது செபம் செய்யும் இல்லம்.   பாரளுமன்றங்கள், அரச அலுவலகங்கள், மற்றும் மதிப்புக்குரிய இடங்களுக்கு கொடுக்கப்படும் மரியாதை படித்தவர்களின் கலாச்சாரத்தை காட்டுகிறது, ஆனால் ஆலயத்திற்கு மட்டும் ஆண்களும் பெண்களும தனி மனித சுதந்திரத்தை பற்றி உண்மையில்லாத வியாக்கியானஙகள் பல செய்து, உள்ளே இருப்பவர்களை மற்றும் செபிப்பவர்களை சிறுமைப்படுத்தி, தங்களை விடுதலை வீரர்களாக காட்டுபவர்களுக்கே இந்த பகுதி நன்கு பொருந்தும்
பவுலின் இந்த கடுமையான வரிகள் அதன் சுற்றிடத்தை விட்டு வெளியில் எடுக்கப்பட்டு, மேற்கோடிடப்பட்டால் தவறான விளக்கத்தையும், பெண்களுக்கெதிரான சிந்தனையையும் கொடுக்கலாம். வரலாற்றில் இது சில வேளைகளில் தவறாகவும் பாவிக்கப்பட்டதை நினைவில் கொள்ளவேண்டும்

.1: பலவிதமான செபமுறைகள் ஆரம்பகால திருச்சபையில் இருந்ததை பலர் இன்று ஆய்வு செய்கின்றனர். இறைவேண்டல் (δέησις தேசிஸ்- தேவைக்காக வேண்டுதல்), செபம் (προσευχή புரொசெயுகே- கடவுளிடம் செபித்தல்), பரிந்துபேசுதல் (ἔντευξις என்டெயுட்சிஸ்- சமரசம் செய்தல்), நன்றிநவிலல் (εὐχαριστία எவுகரிஸ்டியா- நன்றிநினைத்தல்) போன்றவை இவற்றில் மிகமுக்கியமானவை. பவுல் தன் சீடர்களுக்கு பிரச்சினைகளை கையாள தரும் அறிவுரைகளில் முதலாவது இடத்தை இந்த செபங்கள் எடுக்கின்றன. அதாவது எந்த சிக்கல்களும் செபத்தின் மூலம் தீர்க்கப்படும் அல்லது செபிக்காமை பல சிக்கல்களை உருவாக்கும் என்பதை பவுல் விளக்குகிறார்

.2-3: சாந்தமும் அமைதியும் நிறைந்த ஒழுக்கமான வாழ்விற்கு ஆட்சியாளர்கள் எவ்வளவு முக்கியமானவர்கள் என்பதை பவுல் விளக்குகிறார். சில ஆட்சியாளர்கள் தங்கள் அர்பணிப்பு நிறைந்த வாழ்வால் அமைதியை ஏற்படுத்துவர், சிலர் தங்கள் சுயநலங்களால் நாட்டின் அமைதியை கெடுப்பர். இந்த இரண்டு பேருக்காகவும் கிறிஸ்தவர்கள் செபிக்க வேண்டும். ஆரம்ப காலத்தில் திருச்சபை வேற்று ஆட்சியாளர்களை ஆதரித்தது என்பதை விட, கிறிஸ்தவர்கள் அமைதியாக இறைவாழ்வு வாழ செபித்தார்கள் என்றே கொள்ளவேண்டும். இந்த செபமும் விருப்பமும்தான் இயேசுவிற்கு உகந்தது என்கிறார் பவுல்
 இந்த வரிகளில் இயேசுவின் பழைய விசுவாச கோட்பாடு ஒன்று அறிக்கையிடப்படுகிறது. இயேசுவை கடவுளின் மகன், மீட்பர், மெசியா என்றெல்லாம் திருச்சபை ஏற்றுக்கொண்டது. இருந்த போதும் திரித்துவத்தை முன்நிறுத்தி தந்தையையும் இயேசுவையும் இரண்டு ஆட்காளாக படிப்படியாக திருச்சபை புரிந்து கொண்டது. இங்கே கடவுளை மெசியா அல்லது மீட்பர் என்று சொல்வது, ஆரம்ப கால விசுவாச வளர்ச்சியிலிருந்த ஒரு புராதான விசுவாச சொல்லாக காணலாம் (σωτῆρος ἡμῶν θεοῦ மீட்பராகிய எங்கள் கடவுள்). இங்கே இந்த வாழ்த்து யாரைக் குறிக்கிறது? இயேசுவையா அல்லது தந்தையையா? அல்லது இருவரையுமா
பலர் இதனை இயேசுவிற்கான பழைய பெயர்களில் ஒன்று என காண்கின்றனர்

.4: இந்த வரியில் மீட்பரும் கடவுளுமானவரின் விருப்பம் என்று காட்டப்படுகிறது. எல்லா மனிதரும் மீட்படையவும், உண்மையின் அறிவிற்கு வரவும் வேண்டுமென அவர் விரும்புகிறார். இங்கே அனைவரும் என்பவர்கள் அனைத்து மக்கள் கூட்டத்தையும் குறிக்கும், முதல் வரிகளில் வந்த அரசர்கள் மற்றும் அரச மக்கள் போன்றவர்களும் இதனுள் உள்வாங்கப்பட்டுள்ளனர். அதற்கான காரணங்கள் வருகின்ற வரிகளில் விளக்கப்பட்டுள்ளன

வவ.5-6: கடவுள் ஒருவர், அவர் இணைப்பாளரும் ஒருவர். அவர்தான் இயேசு என்கிறார் பவுல். இங்கே இயேசுவை மனிதர் இயேசு என்று ஒரு தேவைக்காக விளிக்கிறார். இயேசு அனைவருக்காகவும் ஈடாக தன்னையே தந்தார் என்பது, முதல் ஏற்பாட்டில் பாவங்களுக்காக விலங்குகள் கழுவாய் ஆக்கப்பட்டதை நினைவூட்டுகிறது

.7: இந்த வரியில் பவுல் தன்னுடைய அப்போஸ்தலிக்க அடையாளங்களை முன்வைக்கிறார்:
. நற்செய்தியை அறிவிப்பவர் κῆρυξ kêrudz
. திருத்தூதர் ἀπόστολος apostolos
. பிறவினத்தாருக்கான போதகர். διδάσκαλος ἐθνῶν didaskalos ethnōn
 இந்த அடையாளங்கள் பவுலை மற்றைய திருத்தூதர்களுக்கு நிகராக நிறுத்துகின்றன. அத்தோடு பவுல் தன்கூற்றுக்கள் உண்மையென சத்தியமிடுவது, அக்காலத்தில் பவுலுக்கெதிரான வாதங்கள் இருந்ததை நினைவூட்டுகிறது

.8: இந்த வசனம் செபவழிபாடு எப்படி இருக்க வேண்டும் என்பதைக் காட்டுகிறது. இங்கே மூன்று முறைகள் காட்டப்படுகின்றன:

. கைகளை உயர்த்துதல்: தூய்மையைக் காட்டுகிறது, அத்தோடு உயரத்தில் இருக்கும் கடவுளை   நோக்கியே செபங்கள் இருக்க வேண்டும் என்பதைக் காட்டுகிறது.

. சினமும் சொற்பூசலும் இல்லாமை: உண்மையான செபத்தில் சொற்பூசல்கள் இருக்க முடியாது

. தூய உள்ளம்: உண்மை செபத்தில் மறைவான மற்றும் எதிரான எண்ணங்கள் இருக்க முடியாது.   தூய்மையான உள்ளம் மட்டுமே உயரத்திலிருக்கும் கடவுளை சென்றடைய முடியயும்

(சடங்குகளையும், சம்பிரதாயங்களையும், அங்க அடையாளங்களையும் எதிர்க்கவேண்டும் என்பதற்காக எதிர்க்கக்கூடாது. அவை எதோ ஒரு தேவைக்காகவே ஏற்படுத்தப்பட்டன. அந்த தேவையும் நோக்கமும் இப்போதும் உள்ளனவா என்று பார்க்க வேண்டும். அதேவேளை அவற்றை அர்த்தமில்லாமல் செய்யமுயல்வதும் உண்மை வழிபாடாக அமையாது). 

லூக்கா 16,1-13
1இயேசு தம் சீடருக்குக் கூறியது: 'செல்வர் ஒருவருக்கு வீட்டுப் பொறுப்பாளர் ஒருவர் இருந்தார். அவர் தம் தலைவரின் உடைமைகளைப் பாழாக்கியதாக அவர்மீது பழி சுமத்தப் பட்டது. 2தலைவர் அவரைக் கூப்பிட்டு, 'உம்மைப்பற்றி நான் கேள்விப்படுவது என்ன? உம் பொறுப்பிலுள்ள கணக்கை ஒப்படையும். நீர் இனி வீட்டுப் பொறுப்பாளராய் இருக்க முடியாது' என்று அவரிடம் கூறினார். 3அந்த வீட்டுப் பொறுப்பாளர், 'நான் என்ன செய்வேன்? வீட்டுப் பொறுப்பிலிருந்து என் தலைவர் என்னை நீக்கி விடப்போகிறாரே! மண்வெட்டவோ என்னால் இயலாது; இரந்து உண்ணவும் வெட்கமாய் இருக்கிறது. 4வீட்டுப் பொறுப்பிலிருந்து என்னை நீக்கிவிடும் போது பிறர் என்னைத் தங்கள் வீடுகளில் ஏற்றுக்கொள்ளும்படி நான் என்ன செய்யவேண்டும் என எனக்குத் தெரியும்' என்று அவர் தமக்குள்ளே சொல்லிக்கொண்டார். 5பின்பு அவர் தம் தலைவரிடம் கடன்பட்டவர்களை ஒவ்வொருவராக வரவழைத்தார். முதலாவது வந்தவரிடம், 'நீர் என் தலைவரிடம் எவ்வளவு கடன்பட்டிருக்கிறீர்?' என்று கேட்டார். 6அதற்கு அவர், 'நூறு குடம் எண்ணெய்' என்றார். வீட்டுப் பொறுப்பாளர் அவரிடம், 'இதோ உம் கடன் சீட்டு; உட்கார்ந்து ஐம்பது என்று உடனே எழுதும்' என்றார். 7பின்பு அடுத்தவரிடம், 'நீர் எவ்வளவு கடன்பட்டிருக்கிறீர்?' என்று கேட்டார். அதற்கு அவர், 'நூறு மூடை கோதுமை' என்றார். அவர், 'இதோ, உம் கடன் சீட்டு; எண்பது என்று எழுதும்' என்றார். 8நேர்மையற்ற அந்த வீட்டுப் பொறுப்பாளர் முன்மதியோடு செயல்பட்டதால், தலைவர் அவரைப் பாராட்டினார். ஏனெனில், ஒளியின் மக்களைவிட இவ்வுலகின் மக்கள் தங்கள் தலைமுறையினரிடத்தில் மிக்க முன்மதியுள்ளவர்களாய் நடந்துகொள்ளுகிறார்கள். 9'ஆகையால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்; நேர்மையற்ற செல்வத்தைக்கொண்டு உங்களுக்கு நண்பர்களைத் தேடிக்கொள்ளுங்கள். அது தீரும்பொழுது அவர்கள் உங்களை நிலையான உறைவிடங்களில் ஏற்றுக் கொள்வார்கள். 10மிகச் சிறியவற்றில் நம்பத் தகுந்தவர் பெரியவற்றிலும் நம்பத் தகுந்தவராய் இருப்பார். மிகச் சிறியவற்றில் நேர்மையற்றவர் பெரியவற்றிலும் நேர்மையற்றவராய் இருப்பார். 11நேர்மையற்ற செல்வத்தைக் கையாளுவதில் நீங்கள் நம்பத்தகாதவராய் இருந்தால் யார் உங்களை நம்பி உண்மைச் செல்வத்தை ஒப்படைப்பார்? 12பிறருக்கு உரியவற்றைக் கையாளுவதில் நீங்கள் நம்பத்தகாதவர்களாய்ப் போனால் உங்களுக்கு உரியவற்றை உங்களுக்குக் கொடுப்பவர் யார்? 13'எந்த வீட்டு வேலையாளும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்யமுடியாது; ஏனெனில், ஒருவரை வெறுத்து மற்றவரிடம் அவர் அன்பு கொள்வார்; அல்லது ஒருவரைச் சார்ந்து கொண்டு மற்றவரைப் புறக்கணிப்பார். நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்யமுடியாது.'

பதினைந்தாவது அதிகாரத்தில் கடவுளின் இரக்கத்தை பற்றி பதித்த லூக்கா, இந்த அதிகாரத்தில் முன்மதி (புத்திகூர்மை) கிறிஸ்தவர்களுக்கு எவ்வளவு முக்கியமானது என்பதைக் காட்டுகிறார். இந்த உவமையிலும் யார் இந்த முன்மதியுள்ள முகாமையாளர் என்பதையும், வீட்டு முதலாளி என்பதையும் கண்டுபிடிப்பது சற்று கடினமாகவே இருக்கும். இந்த அதிகாரத்தில் இயேசு பேராசை மற்றும் செல்வத்தின் ஆபத்துக்களை விளக்க முயல்கிறார். இந்த போதனைகள் நேரடியாக திருத்தூதர்களுக்கும் சீடர்களுக்கும் கொடுக்கப்பட்டவை போல தோன்றுகின்றன. இங்கே வருகின்ற முன்மதியுள்ள முகாமையாளர் உவமை தரும் செய்தி சற்று வித்தியாசமாகவும், பல விவாதங்களை தோற்றுவிக்கிறதாகவும் இருக்கிறது. இங்கே யார் கதாநாயகர்? என்பதிலும் பல வாத பிரதிவாதஙக்ள இருக்கின்றன. அத்தோடு சிலர் இந்த முகாமையாளர் ஒரு நேர்மையாளர், அவர் தவறாக பழி சுமத்தப்பட்டபோதுதான் இப்படியான விவேகமான முடிவை எடுத்தார் என்றும் சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்

. இது நல்ல முகாமையாளர்கள் எப்போதும் தங்களை சுற்றி என்ன நடக்கிறது என்பதை உணர்ந்துகொண்டிருக்கவேண்டும் என்ற பாடத்தை தரலாம்.

. நல்ல முதலாளிகள் தங்கள் சொத்துக்கள் எப்படி முகாமைத்துவம் செய்யப்படுகின்றன என்பதில் அவதானமாக இருக்கவேண்டும் என்ற தத்துவத்தை தரலாம்

. ஒருவர் ஆபத்தான வேளைகளில் அழியக்கூடிய சொத்துக்களையும், நம்பிக்கையில்லா உறவுகளையும் துறந்து அழியாத நல்ல உறவுகளை தேட வேண்டும் என்ற அறநிலை படிப்பைத் தரலாம்

.1: இங்கே வருகின்ற வீட்டு பணியாளர், முதல் ஏற்பாட்டு யோசேப்பை நமக்கு நினைவூட்டுகிறார். இந்த யோசேப்பும், இவர் முதலாளியின் மனைவியால் பொய் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர் (ஒப்பிடுக தொடக்க நூல் 39) யார் இந்த பணியாளர் (முகாமையாளர்) என்பது தெளிவாக காட்டப்படவில்லை. ஒருவேளை அவர் ஒரு அடையாள கதாபாத்திரமாக இருக்கலாம், அல்லது விடுதலையடைந்த அத்தோடு படித்த முன்னால் அடிமையாக இருக்கலாம். அக்கால வழக்கப்படி வீட்டு முகாமையாளர் தன் முதலாளியின் சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்வது கிரேக்க-உரோமைய சட்டப்படி மிகவும் தண்டனைக்குரிய குற்றமாகும். இங்கே இவர் மீது யார் பழி சுமத்துகிறார்கள் என்பது தெரியவில்லை, ஒருவேளை இவருக்கு வேண்டாதவர்களாக இருக்கலாம்

.2: வீட்டு முதலாளியின் வார்த்தைகள் அவர் இந்த முகாமையாளரின் மீது நம்பிக்கையில்லாதிருந்ததைக் காட்டுகிறது. அவர் முகாமையாளரை தண்டிப்பதாக ஏற்கனவே தீர்மானித்துவிட்டார் போல தோன்றுகிறது. அத்தோடு அந்தக் கால முதலாளிகள் தாங்கள் விரும்பியபோதெல்லாம் விசாரணையின்றி தங்கள் பணியாளர்களை வேலையிலிருந்து நீக்கக் கூடியவர்களாக இருந்தனர்

வவ.3-4: வீட்டுப் பணியாளர் தனக்குத்தானே கேள்வி கேட்டுக்கொண்டு விடையையும் ஆயத்தமாக வைத்திருக்கிறார். அத்தோடு அவர் தன் பலத்தையும் பலவீனத்தையும் நன்கு அறிந்திருக்கிறார். தொழிலை இழத்தல் அவருக்கு மிக அருகிலுள்ள ஆபத்தாக தெரிகிறது. மண்வெட்டுதல் (σκάπτω skaptō) அன்றைய நாளில் படிக்காத பாமர விவசாயிகளின் தொழிலாக கருதப்பட்டது, ஒருவேளை இந்த முகாமையாளர் இந்த தொழிலுக்கு தான் வருவதை அவமானமாக கருதியிருக்காலாம். அதேவேளை பிச்சையெடுப்பதும் அக்காலத்தில் கைவிடப்பட்டவர்கள், மற்றும் நோயாளிகளின் தொழிலாகக் கருதப்பட்டது, இது அடிமைகளின் தொழிலைவிட கீழ்மட்டமாக இருந்தது. இதனைதான் அவர் ஆபத்தாக கருதுகிறார். ஒருவரை வீட்டில் ஏற்றுக்கொள்ளுதல் என்பது அவரை அந்த வீட்டில் அங்கத்தவர் போல கருதுதல் என்பதற்கு சமனாகும். இதனைத்தான் இந்த முன்மதியுள்ள முகாமையாளர் செய்ய விளைகிறார்

வவ.5-6: முகாமையாளர்கள் தங்களின் முதலாளிகளின் சொத்துக்களை நேரடியாக தலையிடக்கூடியவர்களாக இருந்தார்கள் என்பதை இந்த வரிகளில் காணலாம்
இவர் தன் முதலாளியின் கடனாளிகளை உடனடியாக அழைக்கக் கூடியவராக இருக்கிறார். கடனாளிகளிடம் இவர் கேள்விகள் கேட்பது, ஒருவேளை இவருக்கு அனைத்து கடனாளிகளையும் தெரியாது இருந்திருக்கலாம், அல்லது அவரின் முதலாளி சந்தேகித்தது போல, கணக்குகளில் தவறுவிட்டிருக்கலாம். நூறு குடம் ஒலிவ எண்ணை என்பது நூறு பாத்துக்கள் (βατος bratos) என்ற குடக் கணக்குகளைக் குறிக்கும்
இவை ஏறக்குறைய 875 கலன்களைக் குறிக்கும் அதாவது கிட்டத்தட்ட 3000 லீட்டர்  ஒலிவ் எண்ணை. இதனை வாங்க 1000 தெனாரியங்கள் தேவைப்படும், இதை உழைக்க ஒரு சாதாரண வேலையாளுக்கு மூன்று ஆண்டுகள் தேவைப்படும். இந்த பெரிய தொகையிலிருந்தே அரைவாசியை அந்த முகாமையாளர் குறைக்கிறார். எதை எழுத வைக்கிறார் என்பது தெளிவாக இல்லை.
. விலையை குறைத்திருக்கலாம்
. வட்டியைக் குறைத்திருக்கலாம்
. தன்னுடைய பங்கை எடுத்திருக்கலாம்
 எது எவ்வாறெனினும், முகாமையாளர் அந்த கடனாளியிடம் நல்ல பெயர் வாங்க முனைகிறார் என்பது மட்டும் புலப்படுகிறது

.7: இரண்டாவது கடனாளி நூறு மூடை கோதுமை கடன்பட்டிருக்கிறார். இங்கே மூடை என்பது, நூறு கோர் (κόρος koros) என்ற எபிரேய உலர் தானிய அளவைக் குறிக்கிறது. ஒரு கோர் கிட்டத்தட்ட 10-12 புசல் அளவுகளைக் குறிக்கும், அதாவது 390 லீட்டர். மொத்தமாக இந்த 100 கோர் தானியம், 100 ஏக்கர் தானிய விளைச்சலைக் குறிக்கும், இது 2500-3000 தெனாரியம் விலைமதிப்புள்ளது. இதனையும் ஒரு சாதாரண கடனாளியால் செலுத்த முடியாது. இந்த கடனிலிருந்து இந்த முன்மதியுள்ள முகாமையாளர் ஒருவருக்கு சிறு விடுதலையளிப்பது நிச்சயமாக அவரை நண்பராக்கும்

.8: எட்டாவது வசனம் நிச்சயமாக வித்தியாசமாக உள்ளது. சாதாரணமாக முதலாளி தன்னுடைய முகாமையாளரில் கோபம் கொள்ள வேண்டும், ஆனால் இங்கே அவர் தன் முகாமையாளரை பாராட்டுகிறார். இது ஆச்சரியமாக இருக்கிறது. இதன் மூலமாக இயேசு எதையோ மறைமுகமாக சொல்கிறார். புத்திக்கூர்மை (முன்மதி) என்ற இந்த சொல் புதிய ஏற்பாட்டில் இங்கு மட்டும்தான் பாவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு இந்த பண்பு நல்ல பண்பாக பாவிக்கப்பட்டதாக தெரியவில்லை. ஏனெனில் ஒளியின் மக்களைவிட இவ்வுலகின் மக்கள் முன்மதியுள்ளவர்களாக இருக்கின்றனர் என்று லூக்கா இவ்வுலகின் ஆபத்துக்களை காட்டுவது போல உள்ளது

.9: முறையற்ற செல்வம் என்பது இங்கு நீதியில்லாத மமோன்களைக் (μαμωνᾶ τῆς ἀδικίας mamōna tēs adikias) குறிக்கிறது. இங்கு பணம் என்பது தீமையாக கருதப்படவில்லை மாறாக நீதியில்லாத பணம் தீயவேலைகளை செய்ய வல்லது என்பதையே குறிக்கிறது (மேலும் அறிய: 1திமோ 6,6-10: 17-19). நேர்மையற்ற செல்வம் நிச்சயமாக தீர்ந்து போகும் ஆனால் நண்பர்கள் நிச்சயமாக நிலைப்பார்கள், அத்தோடு அவர்கள் நிலையான உறைவிடங்களில் ஏற்றுக்கொள்வார்கள் என்னும் கூற்று ஆழமான நட்பினை உணர்த்துகிறது. நிலையான உறைவிடங்கள் என்பது கிரேக்க பாடத்தில் 'நிலையான கூடாரங்கள்' என்றே உள்ளது (αἰωνίους σκηνάς aiōnious skēnas). 

.10: நம்பகத் தன்மை மற்றும் நேர்மை என்னும் பண்புகள் முக்கியமான விவிலிய விழுமியங்கள்
இவற்றைக்கொண்டே ஒருவரின் ஆளுமை அதிகமாக அளவீடு செய்யப்படுகிறது.   Πιστός pistos- faithful.  

வவ.11-12: இந்த வரிகள் பல முக்கியமாக லூக்காவின் இறையியல் சிந்தனைகளை முன்வைக்கின்றன.

. நேர்மைச்செல்வமும், நேர்மையற்ற செல்வமும் ஒன்றல்ல, ஆனால் நேர்மையற்ற செல்வத்தைகூட கையாளத் தெரியாதவரின் நிலை அவரின் ஆளுமை வறட்சியைக் காட்டுகிறது

. பிறர்க்குரியதும் தனக்குரியதும் என்பவை இரண்டு விதமான பொறுப்புக்கள் ஆகும். இந்த உலக கருத்துப்படி அனேகமானவர்கள் தங்கள் சொத்துக்களை நல்லவிதமாக கையாள்வர், பிறருடையதை அநியாயமாக்குவர். ஆனால் லூக்கா இந்த வரிசையை மாற்றி, பிறருடையதை முதன்மைப்படுத்துகிறார். பிறருக்கு நன்மை செய்யாதவர் தனக்கு நன்மைசெய்ய முடியாதவர் என்பது என்பது அழகான லூக்காவின் செய்தி

.13: இந்த வரி லூக்கா நற்செய்தியில் மிகவும் அறியப்பட்டதும் இறையியல் படுத்தப்பட்டதுமான வரி. இரண்டு ஆண்டவர்கள் (κύριος கூரியோஸ்- தலைவர், ஆண்டவர்) என்பது லூக்காவிற்கு, உலக செல்வமும், இயேசு ஆண்டவருமாகும். கிறிஸ்தவத்தில் அன்பும் விசுவாசமும் ஒரு ஆண்டவருக்கு மட்டுமே கொடுக்கப்படவேண்டியவை. இந்த பிரச்சனை ஆரம்ப கால திருச்சபையில் மிக முக்கியமானதாக இருந்தது
இயேசுவிற்கு எதிராக சீசர், மற்றும் வேற்று தெய்வங்கள் காணப்பட்டன. இதனையே லூக்கா இங்கு தெளிவு படுத்துகிறார்


இயேசு சில இடங்களில் எதிர்மறை உதாரணங்களை பயன்படுத்தி நேர்முறை அறநெறிகளை கற்பிக்கின்றார். இந்த இடத்தில் உதாரணம் வேறு, அது சொல்லும் நெறிமுறை வேறு. இதனை கவனமாக வாசிக்க வேண்டும். இந்த இடத்திலும் இயேசுதான் கதாநாயகர், இந்த பாத்திரத்தில் வரும் முன்மதியுள்ள வீட்டு பணியாளர் அல்ல. இயேசு இந்த வீட்டுப் பணியாளருடன் தன்னை அடையாளப்படுத்தவும் இல்லை என்பதையும் அவதானிக்க வேண்டும்


இந்த உலகத்தில் இப்போது இரண்டு தெய்வங்கள்தான் கூடுதலாக உள்ளன
அணி சாராத கொள்கைதான் இன்று விவேகமான கொள்கையாகிப்போனது.. 
அதிகமானவர்கள் நன்மைக்கும் தீமைக்கும் இடையில் வித்தியாசம் தெரியாதவர்களாகவே இருக்கின்றனர்.
இன்று அனைத்தையும் தீர்மானிப்பது அன்பும் விசுவாசமும் அல்ல
மாறாக சுயநலமான விவேகமும், பொருள் லாபமும் ஆகும்
ஆனால் கிறிஸ்தவருக்கு கிறிஸ்துவை தவிர வேறு ஆண்டவர் எப்படி இருக்க முடியும்

அன்பு ஆண்டவர் இயேசுவே
எம் சுயநல சிந்தனையிலிருந்து எம்மை காக்க உம் கரம் நீட்டும்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆண்டின் பொதுக்காலம் முப்பத்திநான்காம் வாரம் கிறிஸ்து அரசர் பெருவிழா:  Our Lord Jesus Christ, King of the Universe 24.11.2024

ஆண்டின் பொதுக்காலம் முப்பத்திநான்காம் வாரம்   கிறிஸ்து அரசர் பெருவிழா :  Our Lord Jesus Christ, King of the Universe 24.11.2024 இய...