வியாழன், 18 ஜூலை, 2019

பொதுக்காலத்தின் பதினாறாம் ஞாயிறு Sixteenth Sunday of the Ordinary Times.



இப்பொழுது, உங்கள் பொருட்டுத் துன்புறுவதில் நான் மகிழ்ச்சி கொள்கிறேன். கிறிஸ்து தம் உடலாகிய திருச்சபைக்காக வேதனையுற்றார். அவர் மேலும் படவேண்டிய வேதனையை என் உடலில் ஏற்று நிறைவு செய்கிறேன்.
(கொலோ 1,24)
M. Jegankumar OMI
‘Sangamam,’ 
Oblate Spiritual Animation Centre, 
South Kopay, Jaffna. 
Thursday, July 18, 2019
முதல் வாசகம்: தொ.நூல் 18,1-10
திருப்பாடல்: 15
இரண்டாம் வாசகம்: கொலோசேயர் 1,24-28
நற்செய்தி: லூக்கா 10,38-42



தொ.நூல் 18,1-10
1பின்பு ஆண்டவர் மம்ரே என்ற இடத்தில் தேவதாரு மரங்களருகே ஆபிரகாமுக்குத் தோன்றினார். பகலில் வெப்பம் மிகுந்த நேரத்தில் ஆபிரகாம் தம் கூடார வாயிலில் அமர்ந்திருக்கையில், 2கண்களை உயர்த்திப் பார்த்தார்; மூன்று மனிதர் தம் அருகில் நிற்கக் கண்டார். அவர்களைக் கண்டவுடன் அவர்களைச் சந்திக்கக் கூடார வாயிலைவிட்டு ஓடினார். அவர்கள்முன் தரைமட்டும் தாழ்ந்து வணங்கி, அவர்களை நோக்கி, 3'என் தலைவரே, உம் கண்களில் எனக்கு அருள் கிடைத்தாயின், நீர் உம் அடியானை விட்டுக் கடந்து போகாதிருப்பீராக! 4இதோ விரைவில் கொஞ்சம் தண்ணீர் கொண்டுவரட்டும். உங்கள் கால்களைக் கழுவியபின், இம் மரத்தடியில் இளைப்பாறுங்கள். 5கொஞ்சம் உணவு கொண்டுவருகிறேன். நீங்கள் புத்துணர்வு பெற்றபின், பயணத்தைத் தொடருங்கள். ஏனெனில் உங்கள் அடியானிடமே வந்திருக்கிறீர்கள்' என்றார். 'நீ சொன்னபடியே செய்' என்று அவர்கள் பதில் அளித்தார்கள்.
6அதைக் கேட்டு ஆபிரகாம் தம் கூடாரத்திற்கு விரைந்து சென்று, சாராவை நோக்கி, 'விரைவாக மூன்று மரக்கால நல்ல மாவைப் பிசைந்து, அப்பங்கள் சுடு' என்றார். 7ஆபிரகாம் மாட்டு மந்தைக்கு ஓடிச்சென்று, ஒரு நல்ல இளங்கன்றைக் கொணர்ந்து வேலைக்காரனிடம் கொடுக்க, அவன் அதனை விரைவில் சமைத்தான். 8பிறகு அவர் வெண்ணெய், பால், சமைத்த இளங்கன்று ஆகியவற்றைக் கொண்டுவந்து அவர்கள் முன் வைத்தார். அவர்கள் உண்ணும்பொழுது அவர்களருகே மரத்தடியில் நின்றுகொண்டிருந்தார். 9பின்பு அவர்கள் அவரை நோக்கி, 'உன் மனைவி சாரா எங்கே?' என்று கேட்க, அவர், 'அதோ கூடாரத்தில் இருக்கிறாள்' என்று பதில் கூறினார். 10அப்பொழுது ஆண்டவர்; 'நான் இளவேனிற் காலத்தில் உறுதியாக மீண்டும் உன்னிடம் வருவேன். அப்பொழுது உன் மனைவி சாராவுக்கு ஒரு மகன் பிறந்திருப்பான்' என்றார். அவருக்குப் பின்புறத்தில் கூடார வாயிலில் சாரா இதைக் கேட்டுக் கொண்டிருந்தார்.

தொடக்க நூலின் ஒவ்வொரு அதிகாரமும் அதன் மறைபொருள் நிறைந்த செய்திகளை தந்துகொண்டே இருக்கிறது. பதினெட்டாவது அதிகாரமும், பத்தொன்பதாவது அதிகாரமும் சொதோம் மற்றும் கோமோராவின் அழிவுகளைப் பற்றியும் அதனோடு சம்மந்தப்பட்ட நிகழ்வுகளைப் பற்றியும் காட்டுகின்றன. இந்த காட்சிகள், ஆண்டவர் ஆபிரகாமின் இனத்தை ஆசீர்வதிப்பதாகவும், அவருடன் நட்பு ரிதீயாக பேசுவதாகவும், ஆனால் சொதோம் மற்றும் கோமோறா மக்களுக்கு அவர்களின் தீவினையின் பொருட்டு தண்டனை வழங்குவதாகவும் விவிலிய ஆசிரியரினால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிறு பகுதி செமித்திய மக்களின் வரவேற்பு உபசாரத்தின் செழுமையை காட்டுகிறது. இன்னும் விசேடமாக கத்தோலிக்க விவிலிய திறனாய்வு இதனை திரித்துவத்தின் முதல் ஏற்பாட்டு  வெளிப்பாடாடுகளில் ஒன்றாக காண்கிறது. ஆபிராமாக இருந்தவர் ஏற்கனவே கடவுளோடு உடன்படிக்கை செய்து ஆபிரகாமாக மாறியிருந்தார் இதனால் இந்த நிகழ்விற்கு முன்னமே ஆபிரகாம் கடவுளை சந்தித்திருக்கிறார் என எடுக்கலாம் (காண்க தொ.நூல் 17). 

வவ. 1: ஆபிரகாமின் காலத்து மக்களை நாடோடி அல்லது மந்தை மேய்ப்புக் கால மக்கள் என்றே எண்ணத்தோன்றுகிறது. இந்த தேவதாரு மரங்களை ஆங்கிலம் oak tree என்று அழைக்கிறது அத்தோடு சில தமிழ் அகராதிகள் இதனை கருவாலி மரங்கள் எனவும் அழைக்கிறது. ஐந்நூறு வருடங்கள் வாழக்கூடிய இந்த மரங்கள் விவிலியத்தில் பல அடையாள அர்த்தங்களையும் கொடுக்கிறது. சில வேளைகளில் இம்மரங்களின் அடியில் தெய்வங்களுக்கு சடங்குகள் நிறைவேற்றப்பட்டன, இறந்தவர்கள் புதைக்கப்பட்டார்கள், இறைவாக்குகள் உரைக்கப்பட்டன, அத்தோடு சகுனங்களும் பார்க்கப்பட்டன. ஆக இப்படியான முக்கியமான மரத்தினடியில் தான், ஆபிரகாம் இவர்களை சந்திக்கிறார்

வவ. 2: ஆபிரகாம் யாரைப் பார்த்தார்: கடவுளின் மனிதர்களையா, அல்லது கடவுளின் தூதர்களையா அல்லது கடவுளைத்தான் பார்த்தாரா? தொடக்க நூலில் பல இடங்களில் 'கடவுள், வானதூதர்கள், கடவுளின் முகம்' என்ற வார்த்தைகள் ஒத்தகருத்துச் சொல்லாகவும், வௌ;வேறு சொற்களாகவும் வருவதைக் காணலாம். இந்த இடத்தில் இவர்களை, 'மூன்று மனிதர்கள்' என்றே விவிலியம் காட்டுகிறது (שְׁלֹשָׁה אֲנָשִׁ֔ים ஷெலோஷெஹ் அனாஷிம்). இவர்களைக் கண்டவுடன் ஆபிரகாமின் செயற்பாடுகள், இந்த மனிதர்கள் சாதாரன மனிதர்கள் மட்டும் அல்ல என்பதை தெளிவாக காட்டுகின்றன.    

வவ. 3: ஆபிரகாமின் இந்த வார்த்தைகள் செமித்திய-நடோடி வரவேற்பு கலாச்சாரத்தில் ஆச்சரியமானதல்ல. ஆனால் ஆபிரகாம் சற்று முன்னர் மூன்று மனிதர்களை கண்டாதாக ஆசிரியர் விவரிக்கின்றார், இப்போது ஆபிரகாம் ஒருவரிடமே பேசுவது போல முன்னிலை ஆள் பதத்தில் வசனங்கள் அமைக்கிறார், ஏன்? (உம் கண்களில், கடந்து போகாதிருப்பீராக).

வவ.4-5: கால்களை கழுவுதல், மரநிழலில் இளைப்பாறுதல், உணவுண்ணுதல், போன்றவை சாதாரணமான களைத்திருக்கின்ற வழிப்போக்கர்கள் விரும்புகின்றவை. இங்கே ஆபிரகாம் இவர்களை பன்மை ஆள் பதத்தில்  அழைத்து நம்மை வியப்பூட்டுகிறார் (உங்கள், இளைப்பாறுங்கள், தொடருங்கள், வந்திருக்கிறீர்கள், அவர்கள் பதில் அளித்தார்கள்). வழிப்போக்கர்களின் பதில், கட்டளைவாக்கியத்தில் அமைந்துள்ளது. இது இவர்கள் ஆபிரகாமின் தயவில் மட்டும் தங்கியிருக்கவில்லை என்பதைக் காட்டுகிறதுஆபிரகாமிற்கு கட்டளையிடுகிறார் என்றால், இவர்கள் சாதாரண வழிப்போக்கர்களாக இருக்க முடியாது என நினைக்கின்றேன்

வவ. 6-7: ஆபிரகாமின் விருந்து விவரிக்கப்படுகிறது. முன்று மரக்கால் மாவு, நிறைவான அப்பங்கள் சுடக்கூடிய மாவின் அளவு என எடுக்கலாம். நல்லதும் இளமையானதுமான கன்றின் தெரிவும் இதனையே காட்டுகிறது. ஆபிரகாம் இவ்வாறு மேன்மையானதையும், சிறந்ததையும் இவர்களுக்கு படைக்கிறார். வெண்ணை, பால், சமைத்த இறைச்சி போன்றவற்றை தந்துவிட்டு அவர்களருகில் ஆபிரகாம் நிற்பது அவரின் நல்ல பண்புகளைக் அப்படியே காட்டுகிறது. அவர்களும் உண்கிறார்கள், இது அந்த மனிதர்கள் ஆபிரகாமின் விருந்தோம்பலை ஏற்றுக்கொண்டார்கள் என்பதனைக் காட்டுகிறது

வவ. 9-10: சாராவை பற்றிய கேள்வியை இந்த விருந்தினர்கள் பன்மை பதத்தில் (அவர்கள்) கேட்கிறார்கள், ஆனால் உடனடியாக காட்சி மாறுகிறது. தமிழ் விவிலியம் இந்த இடத்தில் 'ஆண்டவர்' என்ற எழுவாயை உட்புகுத்துகிறது ஆனால் எபிரேய மூல மொழியில் 'அவர் சொன்னார்என்றே உள்ளது. இந்த அவர், யார்? ஆண்டவராக இருக்கலாம் அல்லது அந்த மூவருள் ஒருவராகவும் இருக்கலாம். சாரா பின்புறத்திலிருந்து இந்த ஆசீரைக் கேட்டுக்கொண்டு இருப்பது, அக்காலத்தில் பெண்கள் வெளி ஆடவர்கான விருந்தோம்பலில் பங்கெடுக்கவில்லை என்பதைக் காட்டுகிறது. இளவேனில் காலம் என இங்கு விவரிக்கப்பட்டுள்ளதை, 'மீண்டும் இந்த காலம் வரும்போது' என்றே எபிரேய விவிலியம் காட்டுகிறது
וַיֹּאמֶר שׁוֹב אָשׁוּב אֵלֶיךָ כָּעֵת חַיָּ֔ה wayyo’mer šôv ‘āšûv ’ēlekha chā’ēt hayyāh mtH nrhd;dhH> epr;rakhf cd;dplk; jf;f fhyj;jpy; jpUk;GNtd;.



 திருப்பாடல்: 15
1ஆண்டவரே, உம் கூடாரத்தில் தங்கிடத் தகுதியுள்ளவர் யார்? உம் திருமலையில் குடியிருப்பவர் யார்
2மாசற்றவராய் நடப்போரே! — இன்னோர் நேரியவற்றைச் செய்வர்; உளமார உண்மை பேசுபவர்
3தம் நாவினால் புறங்கூறார்; தம் தோழருக்குத் தீங்கிழையார்; தம் அடுத்தவரைப் பழித்துரையார். 4நெறிதவறி நடப்போரை இழிவாகக் கருதுவர்; ஆண்டவருக்கு அஞ்சுவோரை உயர்வாக மதிப்பர்; தமக்குத் துன்பம் வந்தாலும், கொடுத்த வாக்குறுதியை மீறார்
5தம் பணத்தை வட்டிக்குக் கொடார்; மாசற்றவருக்கு எதிராகக் கையூட்டுப் பெறார்; — இவ்வாறு நடப்போர் என்றும் நிலைத்திருப்பர்.

தாவீதின் பாடல் (מִזְמ֗וֹר לְדָ֫וִד midzmôr ledāwid) என்று தொடங்கும் இந்த திருப்பாடல் ஒருவகை வரவேற்புப்பாடல் போலவும் அல்லது கேள்வி-பதில் பாடல் போலவும் அமைந்துள்ளது. திருப்பாடல் ஒன்று (1) இதனைப்போலவே 'நற்பேறு பொற்றவர் யார்,' என்ற தொனிப்பொருளில் அமைந்துள்ளது அதனை ஒத்ததாகவே இந்தப்பாடலும் அமைந்துள்ளது. திருப்பாடல் ஒன்று (1), நற்பேறு பெற்றவர்களின் வெளி அடையாளங்களை காட்டும் அதே வேளை, இந்தப்பாடல், இவர்கள் அகத்திலே எப்படியான செயற்பாடுகளைக் கொண்டிருக்கிறார்கள் என்பதனைக் காட்டுகிறது. இந்தப் பாடலிலே கோடிடப்படுகின்ற விழுமியங்களை, ஆசிரியர் இஸ்ராயேல் மக்களிடம் இருந்து எதிர்பார்கிறார் என எடுக்கலாம்

.1: கூடாரம் (בְּאָהֳלֶךָ be’āhõleka), திருமலை (בְּהַר קָדְשֶׁךָ bėhar qādšechā) போன்ற சொற்கள் ஒத்த கருத்தில் எருசலேமை குறிப்பதாக அமையலாம்

வவ.2-5: இந்த வசனங்கள் முதலாவது வரியின் கேள்விக்கு விடையளிக்க முயல்கின்றன. மாசற்றவர் என யார் இருக்கிறார்கள் என்பதனை இங்கே காணலாம்

. நேரிய வழியில் நடக்கிறவர்கள், (הוֹלֵךְ תָּמִים hôlēk tāmim) இதயத்தில் உண்மை பேசுகிறவர்கள் - உண்மை பேசுதல் (דֹבֵר אֱמֶת בִּלְבָבֽוֹ dōvēr ‘’emet bilvāvô) வாயிலிருந்து வந்தாலும் அது இதயத்தின் எண்ணங்களோடு சம்மந்தப்பட்டது என்பதை இங்கே ஆசிரியர் அழகாக காட்டுகிறார்

. நாவினால் புறங்கூறாதவர்கள், அயலவர்களுக்கு தீமைசெய்யாதவர்கள், மற்றவரை ஏளனம் செய்யாதவர்கள் (புறங்கூறுதல் முக்கியமான தீமையாக கருதப்படுவதை நன்கு அவதானிக்க வேண்டும்).

. தீயவர்களை (கடவுளால் சபிக்கப்பட்வர்களை) வெறுப்பவர்கள், ஆனால் கடவுளுக்கு அஞ்சுவோர்களை மதிப்பவர்கள். துன்பம் வரினும் வாக்குகளை மீறாதாவர்கள். (கடவுளால் சபிக்கப்பட்டவர்கள் என ஆசிரியர் இங்கே காட்டுவது, பொல்லாதவர்களை. இவர்களுடன் சகவாசம் வைத்திருப்பது, நல்லவர்களுக்கு ஆபத்தானது என்பதை இங்கே விளங்கிக் கொள்ளலாம்). 

. வட்டிக்கு கொடாதவர்கள், அப்பாவிகளிடம் கையூட்டு வாங்காதவர்கள். வட்டிக்கு கொடுத்தல், விவிலியத்தால் வெறுக்கப்பட்ட மிக மோசமான பழக்கம். அன்றிலிருந்து இதற்கு சார்பாகவும் எதிராகவும் பல வாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. வட்டிக்கு கொடுத்தல் திருச்சபை சட்டங்களுக்கு எதிரானது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்

 இப்படிச் செய்பவர்கள் நித்தியத்திற்கும் அசையாமல் இருப்பார்கள். இங்கே காட்டப்படுகின்ற விழுமியங்கள் மிக ஆழமானவை அத்தோடு அக்காலத்தில் காணப்பட்ட தீய பழக்கவழக்கங்களையும் மறைமுகமாக இவை சாடுகின்றன. இந்த விழுமியங்கள் கிறிஸ்தவரிடையே காணப்பட்டால் அழகான நல்லுலகு ஒன்று செய்யலாம்



கொலோசேயர் 1,24-28
24இப்பொழுது, உங்கள் பொருட்டுத் துன்புறுவதில் நான் மகிழ்ச்சி கொள்கிறேன். கிறிஸ்து தம் உடலாகிய திருச்சபைக்காக வேதனையுற்றார். அவர் மேலும் படவேண்டிய வேதனையை என் உடலில் ஏற்று நிறைவு செய்கிறேன். 25என்மூலம் இறைவார்த்தையை முழுமையாக உங்களுக்கு வழங்கும் பொறுப்பைக் கடவுள் எனக்குக் கொடுத்தார். எனவே நான் திருத்தொண்டன் ஆனேன். 26நான் வழங்கும் இறைவார்த்தை ஊழிஊழியாக, தலைமுறை தலைமுறையாக மறைந்திருந்த இறைத்திட்டத்தைப் பற்றியது. அத்திட்டம் இப்பொழுது இறைமக்களுக்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. 27மக்களினங்களிடையே அது அளவற்ற மாட்சியுடன் செயல்படுகிறது என்பதைத் தம் மக்களுக்குத் தெரிவிக்க கடவுள் திருவுளம் கொண்டார். உங்களுக்குள் இருக்கும் கிறிஸ்துவைப் பற்றியதே அத்திட்டம். மாட்சி பெறுவோம் என்னும் எதிர்நோக்கை அவரே அளிக்கிறார். 28கிறிஸ்துவைப்பற்றியே நாங்கள் அறிவித்து வருகிறோம். கிறிஸ்துவோடு இணைந்து ஒவ்வொருவரும் முதிர்ச்சிநிலை பெறுமாறு ஒவ்வொருவருக்கும் அறிவுரை கூறி முழு ஞானத்தோடு கற்பித்து வருகிறோம்.

கடந்த வாரத்தின் தொடர்ச்சியாக இந்த வார இரண்டாம் வாசகம் அதே கொலோசேயர் திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த வரிகள் பவுல் தன்னுடைய பணிமேல் வைத்திருந்த ஆர்வத்தையும், அத்தோடு அவரின் தனிப்பட்ட கரிசனையும் வெளிப்படுத்துகின்றன. துன்பங்களுக்கு புதிய ஏற்பாடு பல இறையியல் விடைகளை தர முயற்சிக்கிறது. இந்த திரு மடலில் பவுல் இன்னொரு முக்கியமான விடையை, அக்காலத்தில் திருச்சபையை வாட்டிய சோதனைகளுக்கும் துன்பங்களுக்கும் தர விளைகிறார்

. 24: கிறிஸ்துவின் பொருட்டும், அவர் உடலாகிய திருச்சபையின் பொருட்டும் (இங்கே கொலோசே) பவுல் துன்புறுவதில் மகிழ்ச்சி கொள்கிறார். யூத மக்கள் இப்படியான பல துன்பங்களை தங்களின் நம்பிக்கையின் பொருட்டு பல வேளைகளில் சந்தித்தார்கள், அதனை தாங்கிக் கொண்டார்கள். கடவுளின் மெசியாவின் வருகையின் முன்னர் இப்படியான துன்பங்கள் வரும் என்பதும் யூத மக்களின் நம்பிக்கையாக இருந்தது. கிறிஸ்தவர்களுக்கு இக்காலத்தில் நேரிடும் துன்பங்களையும் பவுல் இக்கண்ணோட்டத்தில் நோக்குவது போல இங்கே தெரிகிறது. பல வேளைகளில் இப்படியான துன்பங்களை தாங்கிக் கொள்ள கிறிஸ்துவும் அறிவுறுத்துவதை புதிய ஏற்பாடு நூல்களில் காணலாம் (காண்: மாற்கு 8,34❄︎: திரு.பணி 14,22❄︎❄︎). கிறிஸ்துவின் வேதனைகளில் இன்னும் பல நிறைவுசெய்யப்படாமல் இருப்பதாகவும், அதனை தான் செய்வது தன் பணி என்று பவுல் நிரூபிப்பது அழகாக அர்த்தம் தருகிறது. பவுல் இந்த துன்பங்களை (πάθημα பதேமா), திருச்சபையின் பணியோடு ஒப்பிடலாம்
(❄︎பின்பு அவர் மக்கள் கூட்டத்தையும் சீடரையும் தம்மிடம் வரவழைத்து, 'என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும்...')
(❄︎❄︎ அங்குள்ள சீடர்களின் உள்ளத்தை அவர்கள் உறுதிப்படுத்தி, 'நாம் பலவேதனைகள் வழியாகவே இறையாட்சிக்கு உட்பட வேண்டும்' என்று கூறி நம்பிக்கையில் நிலைத்திருக்கும்படி அவர்களை ஊக்குவித்தார்கள்).

. 25: பவுல் தன்னை வழமையாக திருத்தூதர் என்றே அழைப்பார் இங்கே தன்னை திருத்தொண்டர் என விழிக்கிறார் (διάκονος தியாகொனொஸ்). தியாக்கோன்மார்களின் மிக முக்கியமான பணி இறைவார்த்தையை அறிவிப்பது என இங்கனம் அறியலாம்

. 26: கிறிஸ்தவர்களில் செய்தியைப் பற்றிய பல தப்பான அபிப்பிரயங்கள் அக்காலத்தில் முன்னெடுக்கப்பட்டு கிறிஸ்தவர்கள் இஸ்ராயேலரின் விசுவாசத்திற்கு எதிரானவர்கள் என்ற மாயையும் உருவாக்கப்பட்டது. இங்கே பவுல், கிறிஸ்தவர்களின் விசுவாசத்திற்கும், முதல் ஏற்பாட்டு விசுவாசத்திற்கும் வேறுபாடு இல்லையெனவும் மாறாக அந்த முதல் ஏற்பாட்டு விசுவாச உண்மைதான் இங்கே அனைத்து மக்களுக்கும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்பதனை அழகாக பவுல் முன்வைக்கிறார்

. 27: இங்கே பவுலுடைய வார்த்தைகள் அவரின் இறையியல் முதிர்சியை எடுத்துரைக்கின்றன. கடவுள் மறைபொருளை அனைத்து மக்களுக்கும் கிறிஸ்து வாயிலாக வெளிப்படுத்துகிறார் என்பதன் மூலம் அனைவரும் கடவுளின் பிள்ளைகள் என்பதை ஆணித்தரமாக சொல்கிறார் இந்த புறவின திருத்தூதர் (μυστήριον முஸ்தேரியொன்- மறைபொருள்). இந்த மறைபொருள் கிறிஸ்துவை பற்றியதன்றி வேறொன்றும் இல்லை என்பது பவுலின் வரைவிலக்கணம். அத்தோடு, கிறிஸ்து ஏற்கனவே அனைத்து மக்களுள்ளும் இருக்கிறார் அதுதான் மகிமையின் நம்பிக்கை என்பது அழகான வாதம் (ὅ ἐστιν Χριστὸς ἐν ὑμῖν ἡ ἐλπὶς τῆς δόξης ho estin Christos en humin hē elpis tēs dodzēs). இந்த வரியில் தமிழ் மொழிபெயர்ப்பு தெளிவிற்காக சற்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

. 28: பவுல் தாங்கள் (பணியாளர்கள்) செய்பவற்றை விளக்குகிறார். கிறிஸ்துவைப் பற்றி அறிவிப்பது, கிறிஸ்துவில் முதிர்ச்சி நிலை பெறுமாறு அறிவுரை கூறி கற்பிப்பது. கிறிஸ்துவைப் பற்றிய அறிவு ஒரு நிலையல்ல மாறாக அது ஒரு தொடர் ஓட்டம் என்பதை இங்கே பவுல் வழியாக காணலாம். இந்த முதிர்ச்சி நிலைக்கு அனைவரும் தொடர்ந்து உழைக்க வேண்டிய தேவையை பவுல் காட்டுகிறார்

லூக்கா 10,38-42
38அவர்கள் தொடர்ந்து சென்று கொண்டிருந்தார்கள். அப்போது இயேசு ஓர் ஊரை அடைந்தார். அங்கே பெண் ஒருவர் அவரைத் தம் வீட்டில் வரவேற்றார். அவர் பெயர் மார்த்தா. 39அவருக்கு மரியா என்னும் சகோதரி ஒருவர் இருந்தார். மரியா ஆண்டவருடைய காலடி அருகில் அமர்ந்து அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தார். 40ஆனால் மார்த்தா பற்பல பணிகள் புரிவதில் பரபரப்பாகி இயேசுவிடம் வந்து, 'ஆண்டவரே, நான் பணிவிடை செய்ய என் சகோதரி என்னைத் தனியே விட்டு விட்டாளே, உமக்குக் கவலையில்லையா? எனக்கு உதவி புரியும்படி அவளிடம் சொல்லும்' என்றார். 41ஆண்டவர் அவரைப் பார்த்து, 'மார்த்தா, மார்த்தா! நீ பலவற்றைப் பற்றிக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். 42ஆனால் தேவையானது ஒன்றே. மரியாவோ நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்துக்கொண்டாள்; அது அவளிடமிருந்து எடுக்கப்படாது' என்றார்

திருச்சபையில் உள்ளார்ந்த விசுவாசத்திற்கும், வெளிச் சேவைகளுக்குமான போராட்டம் அன்றிலிருந்து இன்றுவரை நடந்துகொண்டேயிருக்கிறது. விசுவாசமா அல்லது சேவையா என்பதற்கான தெளிவை அந்தந்த சூழலியலிலே கவனமாக நோக்க வேண்டும் என நினைக்கிறேன். மார்த்தா-மரியா கதை இப்படியான சிக்கல்களை இயேசு ஆண்டவர் எப்படி லாவகமாக கையாள்கிறார் என்பதனைக் காட்டுகிறது. வரலாற்றில் நடந்த இந்த சம்பவத்தை லூக்கா எடுத்து அதனை ஆரம்ப கால திருச்சபையில் இருந்த சில சிக்கல்களுக்கு விடையளிக்க முயல்கிறார் என்பதனைப்போல இது தோன்றுகிறது. உண்மையில் மரியாவும் மார்த்தாவும் இயேசுவின் நண்பர்களாக இருந்திருக்கிறார்கள் அத்தோடு அவரின் நன்மையிலும் துன்பங்களிலும் பயணம் செய்திருக்கிறார்கள். இந்தக் குடும்பமும் இயேசுவிற்கு நெருங்கிய குடும்பங்களில் ஒன்று என்று எடுக்கலாம். யோவான் நற்செய்தி இவர்களின் சகோதரர் லாசர் எனக் காட்டுகிறது (யோவான் 11,5❄︎). ஒருவேளை லாசரின் உயிர்பிற்கு பிறது இந் நிகழ்வு நடந்திருந்தால், இங்கே இவர்களின் அன்பான வரவேற்பு மற்றும் இயேசுவின் நெருக்கமான வார்த்தைகள் மிக இயற்கையானதாகவே இருந்திருக்கும்
(❄︎மார்த்தாவிடமும் அவருடைய சகோதரியான மரியாவிடமும் இலாசரிடமும் இயேசு அன்பு கொண்டிருந்தார்.) 

இயேசு மரியாவோடு ஒப்பிட்டு மார்த்தாவை செல்லமாக கண்டிக்காமல், மாறாக அவரின் அளவிற்கு அதிகமான வேலைகளை ஒப்பிட்டே கடிந்தார் என ஒரு புதிய திறணாய்வு ஒன்று இந்த நற்செய்தியை விளக்க முயற்சி செய்கிறது. அதாவது இயேசு மார்த்தாவை ஓய்வெடுத்து வேலைசெய்ய சொல்கிறார் என்கின்றனர். இந்த பகுதியில் வரும் மரியாவை அதிகமானவர்கள் பெத்தானியா மரியா என்று அடையாளப்படுத்துகின்றனர். யோவானின் கணிப்பின்படி இவர்தான்
இயேசுவின் பாதங்களை கழுவினார், அதுவும் அவர் இயேசுவின் பாதங்களை தன்வீட்டிலேயே கழுவினார் (காண்க யோவான் 12,1-8). லூக்கா இந்த மரியாவையோ அல்லது மார்த்தாவையோ லாசருடனும் பெத்தானியாவுடனும் ஒப்பிடாமை வித்தியாசமாக உள்ளது. மரியா மார்த்தா என்ற பெயரில் பலர் இயேசுவின் சீடர்களாக இருந்திருக்கலாம் என்பது சில ஊகங்களில் ஒன்று

. 38: நல்ல சமாரியர் உவமை மூலம் இரக்கத்தின் செயல்களை போதித்த ஆண்டவர் இப்போது ஆண்டவர் குரலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இன்னொரு பண்பை போதிக்கிறார்லூக்கா இந்த ஊருக்கு பெயரிடவில்லை. ஒருவேளை இதனை அவர் எதோ ஒரு நோக்கோடு செய்திருக்கலாம்இந்த பெயர் தெரியாத ஊருக்குள் வந்த ஆண்டவரை, பெயர் கொண்ட ஒரு பெண்மணி வரவேற்கிறார். ஆண்டவரை வரவேற்பது மார்த்தா, இதிலிருந்து இந்த சிறு பகுதியின் கதாநாயகி மார்த்தாதான் என்பது புலப்படுகிறது

. 39: காலடியில் அமர்வது சீடத்துவத்தை குறிக்கலாம். உபநிசாத் என்ற வட இந்திய தத்துவமும் இதனைத்தான் குறிக்கிறது அதாவது, ஆசிரியரின் கால்களில் அமர்ந்து அவர் மெய்யறிவை கேட்பதாகும். சாதாரனமாக பெண்கள் சீடர்களாக ஆசிரியர்களின் கால்களில் அமர்ந்து அவர்கள் சொல்வதைக் கேட்பது மிக அரிதாகவே விவிலியத்தில் காணப்படுகிறது. இராபானிக்க சீடத்துவம் ஆண்களை மையப்படுத்தியதாகவே அதிகமாக வரலாற்றில் பார்க்கின்றோம். ஆனால் இங்கே இயேசு ஒன்றும் புதிதாக செய்யவில்லை, மாறாக அவர் படைப்பில் பெண்களுக்கு கொடுத்த அதே அதிகாரத்தை இப்பொழுதும் கொடுக்கிறார். பெண் சீடத்தியருக்கு இங்கே நீதி கிடைக்கிறது

. 40: மார்த்தாவின் முறைப்பாடு இரண்டுவகையானவை: 'என் சகோதரி என்னை தனியே விட்டுவிட்டார்', 'உமக்கு கவலையில்லையா?'. இங்கே மார்த்தாவின் பரபரப்பு அவரை கோபமுறச் செய்கிறது. கிரேக்க மூல மொழி இந்த பரபரப்பை  περισπάω பெரிஸ்பாவோ என்று கொண்டுள்ளது. இது அவர் திசைதிருப்பப்பட்டார் என்ற அர்த்தத்தைக் கொடுக்கிறது. அவருடைய திசை இயேசுவாக இருந்திருக்க வேண்டும், ஆனால் அவர் இயேசுவிற்கு பணிசெய்ய நினைத்து அந்த பணிகளாலேயே திசைதிருப்பப்படுகிறார். அந்த பணிகள் அவர் மனநிலையை மாற்றி கோபமடைய வைக்கிறது. அத்தோடு மார்த்தாதான் இயேசுவை வீட்டிற்குள் அழைத்தவர், இப்போது அவரே அவரிடம் ஒரு கட்டளையையும் முன்வைக்கிறார். வீட்டிற்குள் உள்ள விருந்தாளியை தனியே விட்டுவிட்டு அவருக்கு விருப்பமில்லாத உணவை சமைக்க பல மணிநேரம் சமையல் அறையில் இருந்து என்ன பலன் என்று லூக்கா நம்மிடம் கேட்பது போல இருக்கிறது இந்த காட்சி

வவ. 41-42: இங்கே ஆண்டவரின் பதில் மார்த்தாவைவிட நமக்கே சரியாக பொருந்துகிறது. நாம் எதனைப் பற்றி கலங்குகிறோம் என்பதை லூக்கா வெளிச்சமாக்குறார். மரியா நல்ல பங்கை தெரிந்து கொண்டார் என்று இயேசு கூறுவது, தெரிவு எவ்வளவு முக்கியம் என்பதனைக் காட்டுகிறதுஇயேசு இவரை வேலைசெய்ய வேண்டாம் என்றோ அல்லது வேலை செய்வது தேவையற்றது என்றோ சொல்லவில்லை, மாறாக இப்போது எது தேவையோ அதனையே மரியா தெரிந்தார் அந்த தெரிவை கடவுள் மாற்ற மாட்டார் என்கிறார். இந்தக் கதையின் பின்னர் மார்த்தா ஆண்டவரின் காலடியில் நிச்சயமாக அமர்ந்திருப்பார் பின்னர் இரண்டு சகோதரிகளும் ஆண்டவருக்கு பணிவிடை செய்திருப்பர், அத்தோடு ஆண்டவர் கூட அவர்களுக்கு உதவி செய்திருப்பார். இதனை லூக்கா விவரிக்கவில்லை, ஏனெனில் அவர் வாசகர்களுக்கு சொல்ல வந்ததை சொல்லி விட்டார்




கடவுளுக்கு சேவைசெய்வதா அல்லது அவர் சொல்வதைக் கேட்பதா என்ற கேள்வி 
நம்மை குழப்பமடையச் செய்கிறது
உண்மையில் ஆண்டவருக்கு சேவை செய்ய
அவர் என்ன சொல்கிறார் என்பதை முதலில் கேட்க வேண்டும்
பின்னர் அதனை அப்படியே விடாமல்செய்ய வேண்டும்
இந்த உலகில், இந்த இரண்டு விழுமியங்களும் ஒன்றோடுறொன்று தொடர்பில்லாமல் அல்லது சமச்சீராக இல்லாமல் இருப்பதே பல சிக்கல்களுக்கு காரணமாகும்
ஆண்டவர் வரவு நிச்சயமாக இருக்கிறது
ஆனால் நாம் ஆண்டவருக்கு அருகில் இருக்கிறோமா அல்லது 
எமது தேவையில்லாத வேலைகளால் அவருக்கு தொலைவில் இருக்கிறோமா 
என்பதைத்தான் அவதானமாக பார்க்க வேண்டும்

பெண்களின் உரிமைகளை அவர்கள் அனுபவிக்க விடுவோம்,
பெண்கள் எதிர்காலத்தை அவர்கள் தீர்மானிக்கட்டும்
பெண்களுக்கெதிரான வன்முறைகளை நிறுத்தாமல்
இந்த உலகம் உய்யாது

எங்கள் வீட்டினுள் வந்து வாசம் செய்யும் ஆண்டவரே!
உம் காலடியில் அமர்ந்து உமக்கு செவிகொடுத்து 
பின்னர் உம் பணியாற்றிட வரம் தாரும். ஆமென்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தவக்காலம் மூன்றாம் வாரம் (இ),  3rd Sunday of Lent 2025 C Sunday, 23 March 2025

  தவக்காலம் மூன்றாம் வாரம் ( இ ),  3rd Sunday of Lent 2025 C Sunday, 23 March 2025 முதல் வாசகம் : விடுதலைப் பயணம் 3,1-8.13-15...