வியாழன், 25 ஜூலை, 2019

பொதுக்காலத்தின் பதினேழாம் ஞாயிறு Seventeenth Week Ordinary Times.



பொதுக்காலத்தின் பதினேழாம் ஞாயிறு 
Seventeenth Week Ordinary Times.

பொதுக்காலத்தின் பதினேழாம் ஞாயிறு
Thursday, July 25, 2019

தீயோர்களாகிய நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நற்கொடைகள் அளிக்க அறிந்திருக்கிறீர்கள். அப்படியானால் விண்ணகத் தந்தை தம்மிடம் கேட்போருக்குத் தூய ஆவியைக் கொடுப்பது எத்துணை உறுதி!

(லூக் 11,13)

M. Jegankumar OMI,
‘Sangamam,’
Oblate Spiritual Animation Centre,
Kopay South, 
Kopay, Jaffna.

முதல் வாசகம்: தொ.நூல் 18,20-32
திருப்பாடல்: 138
இரண்டாம் வாசகம:; கொலோ 2,12-14
நற்செய்தி: லூக் 11,1-13

தொ.நூல் 18,20-32
20ஆதலால் ஆண்டவர் ஆபிரகாமை நோக்கி, 'சோதோம் கொமோராவுக்கு எதிராகப் பெருங்கண்டனக்குரல் எழும்பியுள்ளது. அவற்றின் பாவம் மிகவும் கொடியது. 21என்னை வந்தடைந்த கண்டனக்குரலின்படி அவர்கள் நடந்து கொண்டார்களா இல்லையா என்று அறிந்து கொள்ள நான் இறங்கிச் சென்று பார்ப்பேன்' என்றார்.
22அப்பொழுது அந்த மனிதர்கள் அவ்விடத்தை விட்டுச் சோதோமை நோக்கிச் சென்றார்கள். ஆபிரகாமோ ஆண்டவர் திருமுன் நின்று கொண்டிருந்தார். 23ஆபிரகாம் அவரை அணுகிக் கூறியதாவது: 'தீயவரோடு நீதிமான்களையும் சேர்த்து அழித்து விடுவீரோ? 24ஒருவேளை நகரில் ஐம்பது நீதிமான்களாவது இருக்கலாம். அப்படியானால் அதிலிருக்கிற ஐம்பது நீதிமான்களை முன்னிட்டாவது அவ்விடத்தைக் காப்பாற்றாமல் அழிப்பீரோ? 25தீயவனோடு நீதிமானையும் அழிப்பது உமக்கு ஏற்றதன்று; நீதிமானையும் தீயவனையும் சமமாக நடத்துவது உமக்கு உகந்ததன்று. அனைத்துலகிற்கும் நீதி வழங்குபவர் நீதியுடன் தீர்ப்பு வழங்க வேண்டாமோ?' என்றார். 26அதற்கு ஆண்டவர், 'நான் சோதோம் நகரில் ஐம்பது நீதிமான்கள் இருப்பதாகக் கண்டால், அவர்களின் பொருட்டு முழுவதையும் காப்பாற்றுவேன்' என்றார். 27அப்பொழுது ஆபிரகாம் மறுமொழியாக, 'தூசியும் சாம்பலுமான நான் என் தலைவரோடு பேசத் துணிந்துவிட்டேன்; 28ஒருவேளை அந்த ஐம்பது நீதிமான்களில் ஐந்து பேர் குறைவாயிருக்கலாம். ஐந்து பேர் குறைவதை முன்னிட்டு நகர் முழுவதையும் அழிப்பீரோ?' என்றார். அதற்கு அவர், 'நான் நாற்பத்தைந்து பேரை அங்கே கண்டால் அழிக்க மாட்டேன்' என்றார். 29மீண்டும் அவர், உரையாடலைத் தொடர்ந்து, 'ஒருவேளை அங்கே நாற்பது பேர் மட்டும் காணப்பட்டால் என்ன செய்வீர்?' என்று கேட்க, ஆண்டவர், 'நாற்பது நீதிமான்களின் பொருட்டு அதனை அழிக்க மாட்டேன்' என்றார், 30அப்பொழுது ஆபிரகாம்; 'என் தலைவரே, நான் இன்னும் பேச வேண்டும்; சினமடைய வேண்டாம். ஒருவேளை அங்கே முப்பது பேரே காணப்பட்டால்?' என, அவரும் 'முப்பது பேர் அங்குக் காணப்பட்டால் அழிக்க மாட்டேன்' என்று பதிலளித்தார். 31அவர், 'என் தலைவரே, உம்மோடு அடியேன் பேசத்துணிந்து விட்டேன். ஒருவேளை அங்கு இருபது பேரே காணப்பட்டால்?' என, அதற்கு அவர், 'இருபது பேரை முன்னிட்டு நான் அழிக்க மாட்டேன்' என்றார். 32அதற்கு அவர், 'என் தலைவரே, சினமடைய வேண்டாம்; இன்னும் ஒரே ஒரு தடவை மட்டும் என்னைப் பேசவிடும். ஒரு வேளை அங்குப் பத்துப் பேர் மட்டும் காணப்பட்டால்?' என, அவர், 'அந்தப் பத்துப் பேரை முன்னிட்டு அழிக்க மாட்டேன்' என்றார்.

 கடந்த வாரத்தின் தொடர்ச்சியாக இந்த பகுதி நமது செவிகளுக்கு வருகிறது. கடவுளுடன் யார் வாதாட முடியும்? கடவுளுடன் யார் சமரசம் பேச முடியும்? விவிலியத்தில் சிலர் கடவுளுடன் வாதாடுபவர்களாகவும் சமரசம் செய்பவர்களாகவும் காட்டப்படுகிறார்கள். உண்மையில் இது ஆசிரியரின் வித்தியாசமான வார்த்தை பிரயோகங்களே அன்றி வேறொன்றுமில்லை. கடவுளுடன் யாரும் உண்மையில் சமரசம் செய்ய வேண்டியதில்லை, யாரும் யாருக்காகவும் பரிந்து பேசவேண்டிய தேவையுமில்லை. அதனை செய்ய வல்லவரும், உரிமையுடையவரும் இயேசு ஆண்டவர் மட்டுமே. அத்தோடு நம்முடைய கடவுள் யாருடைய பரிந்துரையையும் எதிர்பார்த்து நம்மை அன்புசெய்கிறவர் அல்ல. கடவுளுடைய அன்பும், இரக்கமும் அத்தோடு நீதியும் நமது அறிவைக் கடந்தது இருக்கின்றன. தொடக்க நூலில் உள்ள இப்படியான பகுதிகள், அக்கால விசுவாச மூதாதையர்க்கும் கடவுளுக்கும் இருந்த உறவைக் காட்டி இந்த உறவுகள் சாத்தியமானவை என்பதை காட்டுகின்றன. அத்தோடு இஸ்ராயேலின் மூதாதையரான ஆபிரகாம் மற்ற சமூகத்தவர்மேல் எவ்வளவு அக்கறையுள்ளவராக இருந்தார் என்ற மேன்மைமிக்க, அக்கால பிறர் சிநேகத்தையும் காட்டுகிறது

வவ.20-22: இதற்கு முன்னுள்ள பகுதியில் நாம் மூன்று ஆடவர்களை சந்தித்தோம். அந்த காட்சியில் பேசுகிறவர்களாக சில வேளைகளில் இந்த ஆடவர்களையும், சில வேளைகளில் கடவுளையும், ஆசிரியர் காட்டுகிறார். இப்போது இந்த ஆடவர்கள் சோதோம் மற்றும் கோமோராவை நோக்கி நகர, ஆண்டவர் ஆபிரகாமுடன் நிற்கிறார். விவிலியத்தில் பல வேளைகளில் எப்போதெல்லாம் கடவுள் மக்களை ஆசீர்வதிக்கிறாரோ அப்போதெல்லாம் தன் சொந்த கரத்தாலும்: எப்போதெல்லாம் தண்டிக்கிறாரோ அப்போதெல்லாம் தன்னுடைய தூதர்களினாலும் செய்கிறார். இது பல கேள்விகளை எழுப்புகிறது. ஒரு வேளை ஆசிரியர் கடவுளை அன்பின் கடவுளாக காட்டுவதற்கான அடையாளம் என இதனை எடுக்கலாம்கண்டனக் குரல்கள் கடவுளை 
நோக்கி எழும்புவதும், கடவுள் மக்களை பார்க்க இறங்கி வருவதும்
இவ்வுலகிற்கும், கடவுள் உலகிற்கும் இடையிலான அக்கால விரிசல் சிந்தனையைக் காட்கிறதுஇருப்பினும் இவ்வுலகில் நடக்கும் அனைத்து தீமைகளையும் கடவுள் அறிந்திருக்கிறார் என்பதனையும் இது காட்டுகிறது. இவ்வுலக தீமைகள் அனைத்திற்கும் இவ்வுலகினரே பொறுப்பாளிகள், கடவுளோ அல்லது விதியோ அல்ல என்பதனை கவனமாக ஆசிரியர் காட்டுவதை விளங்கிக் கொள்ளவேண்டும். ஆபிரகாம் கடவுளின் முன்நின்றது அவரை கடவுளுக்கு ஏற்புடையவராக காட்டும் ஆசிரியரின் வார்த்தைகள். இங்கு கடவுளை ஓர் ஆளாகவும் அவருடை உடல்-பிரசன்னத்திற்கு முன்னால் ஆபிரகாம் நின்றார் என எடுக்கமுடியாது. கடவுள் இடங்களைக் கடந்தவர் என்பதை பல வேளைகளில் தொடக்க நூல் ஆசிரியர் காட்டுவார்

.23: நீதிமான்கள் தண்டணைக்குள்ளாவது விவிலியத்தில் பல இடங்களில் ஆழமாக விவாதிக்கப்படுகிறதுஇதற்கு பல இடங்களில் தெளிவான விடைகள் தரப்படவில்லை. இங்கே இந்த கேள்வி மூலமாக, கடவுள் நீதிமான்களை தண்டிப்பதோ அல்லது அவர்களுக்கு தண்டணையை அனுமதிப்பதோ கிடையாது என்பதை அழகாக காட்டுகிறார்.

.24: ஐம்பதை விவிலியம் ஹமிஷ்ஷிம் חֲמִשִּׁים என்று விழிக்கிறது. இது ஒரு பலமான எண்ணிக்கையை குறிக்கலாம். ஆரம்ப கால படைவீரர்களில் ஐம்பதின்மர் குழுவும் முக்கியமான ஒரு குழுவாக கருதப்பட்டது

.25: ஆபிரகாமின் வார்த்தைகள் அக்கால மக்களின் நம்பிக்கையை பிரதிபலிக்கின்றன. கடவுள் தீயவர்களோடு நீதிமான்களையும் தண்டிக்கிறார் என்ற எண்ணம் கனானிய மக்களிடையே இருந்தது. அதாவது கடவுளுக்கு கோபம் வருகிறபோது அனைவரும் அழிந்து போவர் என்ற கருத்தை உடைக்கிறார் இந்த ஆசிரியர். இஸ்ராயேலரின் கடவுள் எவ்விதத்திலும் நீதிமான்களை தண்டிக்கிறவர் அல்லர்  என்பதே இந்த வரியின் செய்தி

.26: கடவுளுடைய பதில் ஒரு விடையை தாங்கியுள்ளதுதமிழிலும் மற்றைய மொழி இலக்கணங்களிலும் இந்த 'ஆல்' வாக்கியங்களை நாம் சாத்தியமற்ற வாக்கியங்களாக கருதுகிறோம்எபிரேயத்திலும் இது இதனைத்தான் குறிக்கிறது. (אִם־אֶמְצָא நான் கண்டுபிடித்தால்).

.27: ஆபிரகாம் தன்னை தூசிக்கும் சாம்பலுக்கும் ஒப்பிடுவது, கடவுள் மனிதரை தூசியிலிருந்து படைத்தார் என்ற தொடக்க நூல் நம்பிக்கையை நினைவூட்டுகிறது. தற்கால பௌதீக விஞ்ஞானம் கூட மனிதனுடைய உடலில் அனைத்து பொளதீக கூறுகளும் காணப்படுகின்றன என்பதைக் பரிசோதனைகளில் நிரூபிக்கிறது. 'தூசியும் சாம்பலும்' என்ற இந்த சொல் அணி 20 தடவைகளுக்கு மேலாக விவிலியத்தில் காணப்படுகிறது அத்தோடு இவை, மனிதரின் பெலவீனத்தையும் தாழ்ச்சியையும் காட்டுகின்றன (காண்க யோபு 30,19).
( கடவுள் சேற்றில் என்னை அமிழ்த்தி விட்டார்; புழுதியும் சாம்பலும் போல் ஆனேன்.)

வவ.28-29: ஆபிரகாமின் முக்கியமான எண்ணிக்கை படிப்படியாக
குறைவடைகிறது. இது ஆபிரகாமிற்கு சொதோமைப்பற்றி நன்கு தெரிந்திருந்தது என்பதைக் காட்டுகிறது. உண்மையில் இந்த வரிகளும் கடவுளின் அன்பையும் இரக்கத்தையும்தான் எடுத்துரைக்கின்றன

.30-32: ஆசிரியர் கடவுளை இங்கே மனித எண்ணங்களோடு காட்ட முயல்கிறார். தொடர்ச்சியாக பிரயோசனமில்லா வார்த்தைகளை பேசினால், கேட்பவர் சினமடைவது வழக்கம். இதனையே இங்கேயும் படமாக்குகிறார் ஆசிரியர். ஆனால் இறுதியில் இந்த சினத்திற்கு கடவுள் உட்பட்டவர் அல்ல என காட்டுகிறார். ஐம்பதிலிருந்த நீதிமான்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து பத்து என்ற எண்ணிக்கைக்கு வருகிறது. பத்து என்பது நிறைவில்லாத எண்ணிக்கைகளில் ஒன்று. இது சமூதாயத்தில் நீதிமான்களை விட பாவிகளே நிறைந்திருக்கிறார்கள் என்பதனைப்போல காட்சி அமைக்கிறது. இந்த உரையாடலில் 'அழிப்பேன்' என்பதைவிட 'அழிக்கமாட்டேன்' (לֹ֣א אַשְׁחִ֔ית lo’ ’ašhît)
என்ற வார்த்தையே அதிகமாக கடவுளிடமிருந்து வருவதை அவதானிக்க வேண்டும்இந்த கதையின் சாரம்சமாக கடவுள் நீதிமான்களை காப்பதிலும், தயவுகாட்டுவதிலும் அதிக ஆர்வமுள்ளவராக இருப்பதை காணலாம். அத்தோடு பாவிகள்தாமே தங்களுடைய பாவத்தால் தண்டணையை தேடிக்கொள்கிறார்கள் என்பதனையும் மறைமுகமாக காட்டுகிறார்


திருப்பாடல்: 138
1ஆண்டவரே! என் முழுமனத்துடன் உமக்கு நன்றி செலுத்துவேன்; தெய்வங்கள் முன்னிலையில் உம்மைப் புகழ்வேன்
2உம் திருக்கோவிலை நோக்கித் திரும்பி உம்மைத் தாள் பணிவேன்; உம் பேரன்பையும் உண்மையையும் முன்னிட்டு உமது பெயருக்கு நன்றி செலுத்துவேன்; ஏனெனில், அனைத்திற்கும் மேலாக உம் பெயரையும் உம் வாக்கையும் மேன்மையுறச் செய்துள்ளீர்
3நான் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தீர்; என் மனத்திற்கு வலிமை அளித்தீர்
4ஆண்டவரே! நீர் திருவாய் மலர்ந்த சொற்களைப் பூவுலகின் மன்னர் அனைவரும் கேட்டு உம்மைப் போற்றுவர்
5ஆண்டவரே! உம் வழிகளை அவர்கள் புகழ்ந்து பாடுவர்; ஏனெனில், உமது மாட்சி மிகப்பெரிது! 6ஆண்டவரே! நீர் உன்னதத்தில் உறைபவர்; எனினும் நலிந்தோரைக் கண்ணோக்குகின்றீர்; ஆனால், செருக்குற்றோரைத் தொலையிலிருந்தே அறிந்து கொள்கின்றீர்
7நான் துன்பத்தின் நடுவில் நடந்தாலும், என் உயிரைக் காக்கின்றீர்; என் எதிரிகளின் சினத்துக்கு எதிராக உமது கையை நீட்டுகின்றீர்; உமது வலக்கையால் என்னைக் காப்பாற்றுகின்றீர்
8நீர் வாக்களித்த அனைத்தையும் எனக்கெனச் செய்து முடிப்பீர்; ஆண்டவரே! என்றும் உள்ளது உமது பேரன்பு; உம் கைவினைப் பொருளைக் கைவிடாதேயும்.

 இந்த புகழ்ச்சித் திருப்பாடல், கடவுள் பற்றிய பார்வையில் ஒரு புதிய பார்வையையும், அனுபவத்தையும் கொடுக்க முயல்கிறது. ஒன்று தொடங்கி மூன்று வரையான வரிகள் கடவுளுடைய தன்மையையும், நான்கு தொடங்கி ஆறு வரையான வரிகள் எதிர்காலத்தின் தன்மையையும் விளக்க முயல்கின்றன. கடவுளைப் பற்றிய அனுபவம் ஒவ்வொரு வினாடியிலும் புதுமையானது அத்தோடு விசுவாசிகள் இந்த அனுபவத்தை தங்கள் நம்பிக்கையில் கண்டுகொள்வர் என்பதனையும் இது காட்டுகிறது. தாவீதின் பாடல் என்று தொடங்குகின்ற இந்த பாடலின் ஆசிரியராக சிலர் தாவீதைக் காண்கின்றனர். இதற்கு காரணமாக பிலிஸ்தியரின் ஒரு படையெடுப்பையும் காண்கின்றனர் (ஒப்பிடுக 2சாமு 5,17-21). இந்த பகுதிதான் தாவீது அரசராக பிலிஸ்தியரை தாக்கி வெற்றி கொண்ட முதலாவது சந்தர்ப்பம் என எடுக்கலாம். இந்த தாக்குதல்களின் பின்னர் தாவீதும் அவரின் ஆட்களும் பிலிஸ்தியரின் தெய்வச்சிலைகளை கைப்பற்றினர். தெய்வங்களை கைப்பற்றுவது அக்காலத்தில் அந்த தெய்வங்களின் மக்களை கைப்பற்றுவதற்கு சமனாகும்

.1: மேற்குறிப்பிட்ட முன்னுரை இந்த வரிளை விளங்கிக் கொள்ள உதவியாக அமையலாம். ஒரு-கடவுள் வழிபாடு இஸ்ராயேல் மக்களிடைய வளர்ந்து வந்த ஒரு வழக்கமாகும் என சில விவிலிய ஆய்வாளர்கள் கருதுகின்றனர். பலவேளைகளில் இஸ்ராயேல் மக்கள் தங்களுக்கு அருகில் இருந்த மக்களின் தெய்வங்களை வழிபட்டனர் அல்லது நம்பிக்கைவைத்தனர் என நாம் விவிலியத்தில் காண்கின்றோம். இங்கே தாவீது 'தெய்வங்கள்' என குறிப்பிடுவதை, எபிரேய விவிலியம் எலோகிம் אֱלֹהִים என்று காட்டுகிறது. இதுவும் விவிலியத்திலுள்ள ஆச்சரியமான வார்த்தைகளில் ஒன்று. இந்த சொல், இலக்கணப்படி ஒரு பன்மை பதத்தை குறிக்கிறது. இஸ்ராயேலின் கடவுளுக்கு இந்த வார்த்தையும் பாவிக்கப்படுகிறது ஆனால் அங்கே இது ஒருமை பதத்தை குறிப்பது எமது நம்பிக்கை. (אֵל ஏல்- தெய்வம்: אֱלֹהִים எலோஹிம்- தெய்வங்கள்). ஆசிரியர் ஒரு வேளை தெய்வ மக்களை அதாவது தேவர்களை இங்கே குறிப்பிடுகிறார் என்பது சிலரின் வாதம். உண்மையில் யார் இந்த தெய்வங்கள்? என்று இந்த ஆசிரியரிடம்தான் கேட்டுப்பார்க்க வேண்டும்
 மற்றய தெய்வங்களின் முன்னால் கடவுள்தான் முக்கியமானவர் என்ற சிந்தனைதான் இந்த வரியின் மையக் கருத்து என எடுக்கலாம்.

.2: தாவீது தான் இந்த பாடலை எழுதினார் அல்லது அவருக்காக அவர் காலத்தில் எழுதப்பட்டது என்றால், நிச்சயமாக இங்கே ஆலயம் என்பது எருசலேம் சாலமோன் ஆலயத்தை குறிக்காது. ஒரு வேளை சீலோ ஆண்டவர் கூடாரத்தை குறிக்கலாம். இங்கே ஆசிரியர் கடவுளின் இரண்டு முக்கியமான செயல்களைக் குறிப்பிடுகிறார். கடவுள் தனது பெயரையும் வாக்கையும் அனைத்திற்கும் மேலோக உயர்த்தியிருக்கிறார்
(இக்கால அரசியல்வாதிகள் தங்கள் பெயரை உயர்தியதற்காக தங்கள் தெய்வங்களுக்கு நன்றி செலுத்துகின்றனர்). கடவுளுடைய கூடாரம் அல்லது ஆலயத்தின் பக்கத்திற்கு திரும்பி செபிப்பது ஒரு முக்கியமான அக்கால வழக்கம். இதனை இக்காலத்திலும் காணலாம். இஸ்லாமியரும், யூதர்களும் 
இன்னும் இந்த வழக்கத்தைக் கொண்டுள்ளனர். ஈழத்திலும் மீனவர்கள் கோவில் முகப்பை நோக்கி படகை வட்டமிட வைப்பதும் இந்த வழக்கே ஆகும்

.3: மன்றாடிய நாளில் மன்றாட்டு கேட்கப்படுவது முக்கியமான அனுபவம். அதற்காக ஆசிரியர் கடவுளுக்கு நன்றி செலுத்துகிறார். நிச்சயமாக இந்த பாடலின் பின்னனியில் எதோ வரலாற்று அனுபவம் உள்ளது போல தென்படுகிறது

.4: இந்த வரியில் இருந்து, இந்த பாடல் எழுதப்பட்ட காலத்தில் இஸ்ராயேலைச் சுற்றி மன்னர்கள் ஆட்சி நடைபெற்றன என்ற கருத்துக் கணிப்பிற்கு வரலாம். இஸ்ராயேல் அரசர்கள் தாங்கள் போரிட்ட போது அங்கே தங்கள் கடவுள் தங்களுக்காக போரிடுகிறார் என்ற நம்பிக்கை கொண்டிருந்தனர். ஆக மற்றைய அரசர்களின் காதுகளுக்கு தங்கள் கடவுளின் செய்தி போவது, மற்றைய தெய்வங்களின் காதுகளுக்கு அச் செய்தி செல்வதனை ஒத்தது.

.5: ஒரு தெய்வத்தின் மாட்சி כָבוֹד காவோட், அத்தெய்வத்தின் வலிமையையும் உண்மைத்தன்மையையும் அளவிடுகிறது. இஸ்ராயேல் கடவுளின் மாட்சி மிகப் பெரிதாக இருப்பதுதான் இக் கடவுள் உண்மைக் கடவுள் என்பதற்கான அளவுகோல். இங்கே அவர்கள் என்பது, இந்த சூழலியலின் படி, அரசர்களாக இருக்கலாம் அல்லது அவர்கள் வேற்று தெய்வங்களாக இருக்கலாம்

.6: இந்த வரி கடவுளின் உறைவிடத்தையும் அவரின் செயற்பாடுகளையும் விவரிக்கிறது. கடவுள் மேலுலகில் வாழ்ந்தாலும், கீழுலகில் உள்ள சிக்கல்கள் மற்றும் தேவைகள் அவரது பார்வைக்கு உட்பட்டவையே என்பது இந்த ஆசிரியரின் நம்பிக்கை. இதனைத்தான் நாம் முதலாவது வாசகத்திலும் பார்த்தோம். நலிந்தோரை கண்ணோக்குதலும் செருக்குற்றோரை பார்ப்பதும் கடவுளின் நீதியின் முக்கியமான தன்மைகள்

.7: இந்த வரிதான் இந்த பாடலில் ஆசிரியர் பாடுகின்ற தன் வாழ்வு அனுபவம். உயிரைக் காத்தலும் எதிரிகளுக்கு எதிராக தன் சக்தியை கடவுள் பாவிப்பதும் இங்கே ஆசிரியருக்கு கடவுளின் இருத்தல் அனுபவத்தைக் கொடுக்கிறது. வலது கை இயல்பாக ஓருவரின் சக்தியைக் குறிக்கும்

.8: இந்த வரி, எதிர்கால சிந்தனையில் அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டவரின் பாதுகாப்பு இறந்தகாலம் மற்றும் நிகழ்காலத்திற்கும் மட்டும் உரியதொன்றல்ல மாறாக அது எதிர்காலத்திற்கும் தேவையானது என்பதை ஆசிரியர் இவ்வாறு காட்டுகிறார். மனிதர்களை கடவுளின் கைவினைப்பொருளாக (מַעֲשֵׂי יָדֶיךָ உமது கைகளின் வேலைப்பாடுகள்) ஒப்பிடுவது, விவிலியத்தின் அழகான உருவகங்களில் ஒன்று


கொலோ 2,12-14
12நீங்கள் திருமுழுக்குப் பெற்றபோது அவரோடு அடக்கம் செய்யப்பட்டீர்கள். சாவிலிருந்து அவரை உயிர்த்தெழச் செய்த கடவுளின் ஆற்றல்மீது கொண்டுள்ள நம்பிக்கையால் அவரோடு நீங்களும் உயிர்பெற்று எழுந்துள்ளீர்கள். 13உடலில் விருத்தசேதனம் செய்து கொள்ளாதவர்களாயும் குற்றங்கள் செய்பவர்களாயும் வாழ்ந்ததால் நீங்கள் இறந்தவர்களாய் இருந்தீர்கள். கடவுள் உங்களை அவரோடு உயிர்பெறச் செய்தார். நம் குற்றங்கள் அனைத்தையும் மன்னித்தருளினார். 14நமக்கு எதிரான ஒப்பந்த விதிகள் பல கொண்ட கடன்பத்திரத்தை அவர் அழித்துவிட்டார். அதைச் சிலுவையில் வைத்து ஆணியடித்து அறவே ஒழித்து விட்டார்.

கொலோசேயர் திருமுகத்தில் பல ஆழமான செய்திகளை பவுல் முன்வைப்பதனை கடந்த வாரத்திலும் சந்தித்தோம். முதலாவது அதிகாரம், கிறிஸ்துவின் ஒப்புரவுப் பணிகளைப் பற்றிய செய்திகளைத் தந்தது, இந்த இரண்டாவது அதிகாரம் கிறிஸ்துதான் அனைத்து தவறுகளுக்கும் பதிலான சரியான திருத்தம் அத்தோடு சட்ட எண்ணக்கருத்துகளுக்கு எதிரான உண்மையான சுதந்திரம் என்ற செய்திகளைத் தருகிறது

.12: சாதாரண கழுவுதல் அல்லது தூய்மைச் சடங்கின் அடையாளமான திருமுழுக்கு இங்கே ஒரு சமய சடங்காக மாறியிருப்பதனைக் காணலாம். திருமுழுக்கு βαπτισμός, பப்டிஸ்மொஸ், அதனைப் பெறுபவருக்கு புதிய வாழ்வை கொடுத்தது என அக்கால மக்கள் நம்பினர், அதனை சாதாரன அடையாளத்திற்கு மேலாகவும் பார்த்தனர். இங்கே பவுல் இந்த திருமுழுக்கை கிறிஸ்துவின் சாவிற்கு ஒப்பிடுகிறார். அதாவது திருமுழுக்கு எடுக்கிறவர் தன்னுடைய பாவத்திலிருந்து இறந்துவிட்டார். இனி அவர் இறக்க வேண்டிய தேவையில்லை என்கிறார். கிறிஸ்து இறந்து உயிர்த்தது போல் கிறிஸ்துவில் திருமுழுக்குப் பெற்றவர் அனைவரும் பாவத்தில் இறந்து அருளில் உயிர்க்கின்றனர் என்பதை விளக்குகிறார். இது ஒரு வகை ஒப்புவமை விளக்கம். பாவத்தில் இறத்தல் கிறிஸ்துவிற்கு பொருந்தாது என்பதனை அவதானமாக நோக்க வேண்டும்

.13. உடலில் விருத்தசேதனம் செய்யாதவர்கள் ἀκροβυστίᾳ அக்ரொபுஸ்டியா என்று அழைக்கப்பட்டார்கள். இது கிரேக்கருக்கே தெரியாத கிரேக்கச் சொல் என தாயர் Thayer  கிரேக்க அகராதி குறிப்பிடுகிறது. உடலில் அடையாளம் இடப்படாதவர்கள், யூதரல்லாதவர்கள், விருத்தசேதனம் செய்யாதவர்கள், வீரமுள்ள உறுப்பினர் அல்லாதவர் (membrum virile) என பல அர்த்தங்களைக் கொடுக்கிறது. கிரேக்கர்கள் தங்களை இவ்வாறு அழைக்க மாட்டார்கள், சில யூதர்கள் தான் மற்றவர்களுக்கு இந்த அடையாளத்தை கொடுத்தனர். (சில ஆண்கள், பெண்களை பேதைகள் என அழைப்பது போல). பவுல் முன்னைய கொலோசேயரை விருத்தசேதனம் செய்யாதவர்களாகவும் பாவிகளாவும் கண்டிருக்கிறார். இதனால் வாழ்ந்தும் இறந்தவர்களாக இருந்த இவர்கள், இயேசுவின் மீது கொண்டுள்ள நம்பிக்கையால் மன்னிக்கப்பட்டு முழு மனிதர்களானார்கள் என்று வர்ணிக்கிறார். இங்கே பவுலின் நோக்கம், இந்த மக்களின் மேன்மையை காட்டுவதே அன்றி இவர்களை புண்படுத்துவதற்கல்ல என்பதை கவனமாக நோக்க வேண்டும். பவுலுடைய முழு வாதமும், விருத்தசேதனத்தை பற்றி கொலேசேயில் பரப்பப்பட்ட தேவையில்லாத கருத்துக்களை இடித்துரைப்பதே ஆகும்.  
சுருங்கச் சொல்லின், விருத்தசேதனமோ அல்லது விருத்த சேதனமின்மையோ அல்ல மாறாக கிறிஸ்துவில் கொண்டுள்ள நம்பிக்கையும் அவர் தரும் இலவச அருளுமே ஒருவரை மீட்கும் என்பதே செய்தி

.14. புறவினத்தவருக்கு எதிராக கடவுள் பல தண்டணைகளை முன்வைத்திருக்கிறார் என சில வாதங்கள் இருந்தன: அதவாது அவர்கள் கடவுளின் மக்கள் அல்ல, ஆபிரகாமின் வாக்குறுதிக்குள் உள்வாங்கப்படாதவர்கள் என்ற பல ஒருதரப்பு வாதங்கள் கொலோசெயரை சஞ்ஞலப்படுத்தின. இவர்களுக்கு கடவுள், இயேசு வழியாக கொடுத்த அழகான வாழ்வை பவுல் ஆழமாக விளக்குகிறார். இங்கே கடன் பத்திரம் என χειρόγραφον கெய்ரொக்ராபோன் என்ற வார்த்தை பாவிக்கப்பட்டுள்ளது. இது ஒருவருக்கு இன்னொருவர் கையால் எழுதிய பத்திரத்தை குறிக்கும். அத்தோடு இது ஒருவரின் கடன் பத்திரத்தையும் குறிக்கும். யூதர்கள் சட்டங்களை கடைப்பிடிப்பதாக கடவுளுக்கு எழுதப்பட்டிருக்கிறார்கள். மற்றவர்களும் நன்மையை செய்வதாக தங்கள் மனசாட்சிக்கு எழுதப்பட்டிருக்கிறார்கள் என்பது பவுலின் வாதம். இவை இவர்களுக்கு தங்கள் பாவங்களின் பொருட்டு செய்யப்பட்ட கடன் பத்திரங்கள். இந்த பத்திரங்கள் இனித் தேவையில்லை, ஏனெனில் கிறிஸ்துவின் சிலுவை அனைத்தையும் நீக்கிவிட்டது என்பதே பவுல் சொல்ல வருகின்ற செய்தி. இது பாவ வாழ்விற்கான அனுமதிப்பத்திரம் அல்ல மாறாக நன்மை செய்வதற்கான உரிமை சாசனம்

லூக் 11,1-13
1இயேசு ஓரிடத்தில் இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தார். அது முடிந்ததும் அவருடைய சீடர்களுள் ஒருவர் அவரை நோக்கி, 'ஆண்டவரே, யோவான் தம் சீடருக்கு இறைவனிடம் வேண்டக் கற்றுக் கொடுத்ததுபோல் எங்களுக்கும் கற்றுக்கொடும்' என்றார். 2அவர் அவர்களிடம், 'நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது
இவ்வாறு சொல்லுங்கள்:

'தந்தையே, உமது பெயர் தூயதெனப் போற்றப்பெறுக! உமது ஆட்சி வருக!
3எங்கள் அன்றாட உணவை நாள்தோறும் எங்களுக்குத் தாரும்.
4எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோர் அனைவரையும்
நாங்கள் மன்னிப்பதால் எங்கள் பாவங்களையும் மன்னியும்.
எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும்.
தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும்' என்று கற்பித்தார்

5மேலும் அவர் அவர்களை நோக்கிப் பின்வருமாறு கூறினார்: 'உங்களுள் ஒருவர் தம் நண்பரிடம் நள்ளிரவில் சென்று, 'நண்பா, மூன்று அப்பங்களை எனக்குக் கடனாகக் கொடு. 6என்னுடைய நண்பர் ஒருவர் பயணம் செய்யும் வழியில் என்னிடம் வந்திருக்கிறார். அவருக்குக் கொடுக்க என்னிடம் ஒன்றுமில்லை' என்று சொல்வதாக வைத்துக் கொள்வோம். 7உள்ளே இருப்பவர், 'எனக்குத் தொல்லை கொடுக்காதே ஏற்கெனவே கதவு பூட்டியாயிற்று; என் பிள்ளைகளும் என்னோடு படுத்திருக்கிறார்கள். நான் எழுந்திருந்து உனக்குத் தர முடியாது' என்பார். 8எனினும் அவர் விடாப்பிடியாய்க் கதவைத் தட்டிக் கொண்டேயிருந்தால் அவர் தம் நண்பர் என்பதற்காக எழுந்து கொடுக்காவிட்டாலும், அவரது தொல்லையின் பொருட்டாவது எழுந்து அவருக்குத் தேவையானதைக் கொடுப்பார் என நான் உங்களுக்குச் சொல்கிறேன். 9'மேலும் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள் உங்களுக்குத் திறக்கப்படும். 10ஏனெனில் கேட்போர் எல்லாரும் பெற்றுக்கொள்கின்றனர்; தேடுவோர் கண்டடைகின்றனர்; தட்டுவோருக்குத் திறக்கப்படும். 11பிள்ளை மீனைக் கேட்டால் உங்களுள் எந்தத் தந்தையாவது மீனுக்குப் பதிலாகப் பாம்பைக் கொடுப்பாரா? 12முட்டையைக் கேட்டால் அவர் தேளைக் கொடுப்பாரா? 13தீயோர்களாகிய நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நற்கொடைகள் அளிக்க அறிந்திருக்கிறீர்கள். அப்படியானால் விண்ணகத் தந்தை தம்மிடம் கேட்போருக்குத் தூய ஆவியைக் கொடுப்பது எத்துணை உறுதி!'

  எருசலேம் நோக்கிய நீண்ட பயணத்தின் போது வழங்கிய உரைககளில் இந்த பதினொராம் அதிகாரமும் அடங்கியுள்ளது. முக்கியமாக இந்த
பதினொராம் அதிகாரம் பரிசேயருக்கு எதிரான பல வாதங்களை உள்ளடக்கியதாக இருப்பது இதனுடைய சிறப்பம்சம். இன்றைய வாசகத்தை இரண்டு முக்கியமான பிரிவுகளாக பிரிக்கலாம்
. வவ 1-4: செபம்
. வவ 5-13: அந்த செபத்திற்க்கான ஆன்மீகம்

 மத்தேயு நற்செய்தியில் (6,5-14) இதனை ஒத்த இன்னொரு செபத்தைக் காணலாம். நாம் ஒவ்வொரு நாளும் பல வேளைகளில் பயன்படுத்தும் பரலோக மந்திர செபம் அதிகமாக மத்தேயு நற்செய்தியை தழுவியது எனலாம். லூக்கா நற்செய்தியில் வரும் செபம் சில மாற்றங்களுடன் வேறு சில சிந்தனைகளை மையப்படுத்துகிறது

யூத மக்களிடையே செபம் முக்கியமான பங்கை வகித்ததை வரலாற்றில் காணலாம். இயேசுவின் சிடர்கள் மட்டுமன்றி, பரிசேயர், சதுசேயர், போராளிகள், எசேனியர், மறைவல்லுனர்கள் இன்னும் பல குழுக்கள் தங்களுக்கென்று விசேடமான செப அடையாளங்களைக் கொண்டிருந்தனர். இங்கு இயேசுவின் சீடர்களில் ஒருவர், அவர் யார் என்று லூக்கா சொல்லவில்லை, யோவானுடைய சீடர்களைப்போன்று செபிக்க கற்றுத்தர கேட்கிறார். இது யோவானின் மேல் இயேசுவிற்கும் அவர் சீடர்களுக்குமிருந்த மரியாதையைக் காட்டுகிறது. அத்தோடு யோவானின் சீடர்களில் சிலரும் இயேசுவின் சீடர்களாக மாறியிருந்தனர், ஆக அவர்களுக்கு பல செபங்கள் தெரிந்திருக்கலாம். மத்தேயுவின் செபத்திற்கும், லூக்காவின் செபத்திற்குமான வித்தியாசங்கள் ஆரம்ப கால திருச்சபையில் பல செபங்கள் வழக்கிலிருந்ததை நினைவூட்டலாம்

.2: லூக்கா நேரடி உரையில் இயேசுவின் செபத்தை பதிவுசெய்வதன் வாயிலாக அதன் புனிதத்துவத்தை முக்கியப்படுத்துகிறார் என எடுக்கலாம்.

வவ.3-4: இந்த வரிகள் இயேவின் செபத்திலுள்ள மன்றாட்டுகளை கொண்டமைந்துள்ளன. ஒவ்வொரு மன்றாட்டும், மனித குலத்தின் தேவைகளை அடிப்படையாக கொண்டுள்ளது

. முதலாவது மன்றாட்டு கடவுளுடன் சம்மந்தப்பட்டுள்ளது. இறைவனின் நாமமும், அவர் ஆட்சியும் மையப்படுத்தப்படுகிறது. இவை பத்துக்கட்டளைகளில் முதல் கட்டளைகளை நமக்கு நினைவூட்டலாம். கடவுளுடைய ஆட்சிக்காக பொறுத்திருப்பது ஒவ்வொரு யூத விசுவாசியின் நம்பிக்கை எனக் கொள்ளலாம்

. அன்றாட உணவு என்பதற்கு கிரேக்கத்தில் பாவிக்கப்பட்டுள்ள சொல் கிறிஸ்தவ இலக்கியங்களை தவிர வேறு கிரேக்க இலக்கியங்களில் காணப்படவில்லை என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ἐπιούσιον எபியுசியோன் என்ற கிரேக்கச் சொல், அன்றாட உணவு என்பதைவிட நாளைய உணவு என்ற பொருளையும் தருகிறது. இந்த சொல் மத் 6,11 மற்றும் திதாக்கே என்ற ஆரம்ப கால திருச்சபையின் படிப்பினைகளிலும் (அதிகாரம் 8,2) காணப்படுகிறது

. மத்தேயு நற்செய்தியில் 'எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்தோரை நாங்கள் மன்னித்துள்ளதுபோல்' என வரும் வார்த்தைப் பிரயோகம் இங்கே 'எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோர் அனைவரையும் நாங்கள் மன்னிப்பதால் எங்கள் பாவங்களையும் மன்னியும்.' என்ற சிறிய மாற்று வரிகளுடன் வருகிறது. இந்த
இரண்டின் உள் அர்த்தங்களும் ஒன்று போல தோன்றினாலும் அவற்றின் ஆன்மீகம் வித்தியாசமாக 
இருக்கிறது

. லூக்காவும் மத்தேயும் இறுதியான வேண்டுதலில் ஒன்றுபடுகின்றனர். 'சோதனைகளையும், தீயோனையும்' உள்வாங்குகின்றனர். லூக்காவின் சில முக்கிய கிரேக்க படிவங்களில் தீயோன் என்னும் சொல் இல்லாமல்
இருக்கிறது. தீயோனை 'தீமை' எனவும் மொழி பெயர்க்கலாம்

 மத்தேயு நற்செய்தியை போலன்றி இங்கே இயேசு தன்னுடைய செபத்திற்கு ஒரு விரிவுரையைக் கொடுக்கிறார். இந்த விளக்கவுரை இடைவிடாத செபத்தின் சக்தியை விளக்குவதாக அமைகிறது. அத்தோடு லூக்கா தன்னுடைய வாசகர்களுக்கும் இயேசுவின் வாயிலாக இடைவிடாத செபத்தின் மகிமையை மறைமுகமாக சொல்ல வருகிறார் என எடுக்கலாம்

வவ.5-6: மூன்று அப்பங்கள் என்னும் எண்ணிக்கை நிறைவான தொகையை காட்டுகிறது. செமித்தியர் மற்றும் யூதர்களின் விருந்தோம்பல் மிக பிரசித்தி பெற்றது. அவர்கள் தங்களிடமுள்ள உயர்ந்ததையும், மேன்மையானதையும் தம் விருந்தினர்க்கு கொடுத்தனர். இன்று வரை மத்திய கிழக்கு பாலைவன மக்கள் கூட்டத்தில் இந்த விருந்தோம்பலின் மகிமையைக் காணலாம். இங்கே ஒரு நண்பர் தன் இன்னொரு நண்பருக்காக இரவில் சென்று கடன்கேட்பது இவர்களின் அழகிய கலாச்சாரத்தை காட்டுகிறது. 'நண்பருக்கு கொடுத்தல்' என்பது 'நண்பருக்கு விருந்தளித்தல்' என்ற பொருளிலேயே கிரேக்க மொழியில் உள்ளது.

வவ.7-8: ஒரு வருடமே ஆன குழந்தைகளைக் கூட சுதந்திரம், தனித்துவம் என்ற பெயரில் தனி அறையில் தனிமையில் தூங்க வைக்கும் இந்த விசித்திரமான உலகில் இந்த யூதர்களின் கூட்டு வாழ்க்கை வியப்பை ஏற்படுத்துகிறது. (அதிகமாக இன்றைய நவீன உலகில் வளர்ப்பு மிருகங்கள்தான் வளர்ந்தவர்களுக்கு அருகில் உறங்கி அன்பைப் பெறுகிறார்கள்). இயேசுவின் காலத்தில் நடுத்தர சாதாரன குடும்பத்தில் பிள்ளைகள் அனைவரும் பெற்றோருடன் ஒன்றாக உறங்கி ஒய்வெடுத்திருக்கலாம். இரவில் ஒருவர் எழுந்திருக்கிறபோது அது மற்றவரின் தூக்கத்தை கெடுக்கக்கூடிய சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியது. இந்த வரியில் வரும் தந்தை தன் பிள்ளைகளின் தூக்கத்தை, தன் நண்பரின் தேவையை விட மேலாக கருதுகிறார். இது சரியானதேஆனால் தொடர்ச்சியாக கதவு தட்டப்படுதல் நிச்சயமாக அனைவரின் தூக்கத்தையும் அமைதியையும் கெடுக்கும். இதனால் எழுந்திருக்கிறார்

வவ.9-10: லூக்கா நற்செய்தியில் இந்த வரிகள் மிக முக்கியமானவை. இவற்றை அதிகமான கிறிஸ்தவ இலக்கியங்களில் காணலாம். இந்த வரிகள், மனிதர்கள் தாங்கள் மீட்படைய கடவுளோடு கைகோத்து வேலை செய்ய வேண்டும் என்ற கிறிஸ்தவ ஆன்மீகத்தை கொண்டுவருகிறது. கிறிஸ்துவின் அருள் 
இலவசமானதுதான் ஆனால் சோம்பேறிகளுக்கு கிடையாது என்கிறார் லூக்கா. இந்த இரண்டு வரிகளில் உலகின் அனைத்து தேவைகளையும் உள்ளடக்கியிருக்கிறார் லூக்கா

வவ.11-12: சாதாரனமாக இயற்கையான தந்தையர்கள் தங்கள் பிள்ளைகளை ஏமாற்ற மாட்டார்கள் என்பது நியதி. (இது எல்லா தந்தையர்க்கும் பொருந்தாது). மீனும் பாம்பும், முட்டையும் தேளும் என்ன அர்த்தங்களைக் கொடுக்கின்றன என்பதில் பல வாதங்கள் இருக்கின்றன. சிலர் மீனையும் பாம்பையும் அதாவது கடல் பாம்பையும், நீரில் வாழ்கின்ற உயிரினங்களாக பார்கின்றனர். இதனாலேயே இயேசு இவற்றை ஒப்பிடுகிறார் என பார்க்கின்றனர். மீனிற்க்கு ἰχθύς இக்துஸ் என்ற சொல் பாவிக்கப்பட்டுள்ளது. இன்றைய சிலுவைகளைப் போல் ஆரம்ப காலத்தில் இது கிறிஸ்தவர்களின் அடையாளமாக இருந்தது. பாம்பிற்கு ὄφις ஓபிஸ் என்ற சொல் பாவிக்கப்பட்டுள்ளது. இது கீழுலகில் வாழ்கின்ற தந்திரமான உயிரினமாகவும் பார்க்கப்பட்டது. மீன் நன்மையையும் பாம்பு தீமையயையும் குறிப்பதாக எடுக்கலாம்

 முட்டையும் தேளும் தூரத்தில் ஓரே நீள் வட்ட அமைப்பை தருவதாக இருப்பதனால் இயேசு இதனை உருவகித்திருக்கலாம் எனவும் சில ஆய்வாளர்கள் பார்க்கின்றனர். முட்டைக்கு ὠόν ஓன் என்ற சொல் பாவிக்கப்பட்டுள்ளது. கோழியின் முட்டையாக இருந்தால் இது வென்மையாகவும், உடலுக்கு ஆரோக்கியமானதாகவும் இருக்கும். அக்காலத்தில் இந்த முட்டைகள் முக்கியமான உணவுகளில் ஒன்றாகக் கருதப்பட்டன. தேளுக்கு σκορπίος ஸ்கோர்பியோஸ் என்ற சொல் பாவிக்கப்பட்டுள்ளது. இது ஆபத்தான பூச்சிவகைகளில் முக்கியமானது. இந்த இரண்டின் வேற்றுமையை கண்டு இதனை இயேசு உருவகித்திருப்பார் என எடுக்கலாம்

.13: இந்த வரிதான் ஆண்டவர் சொல்ல வருகின்ற செய்தி. பலவீனமான மனித தந்தையர்களே, தங்கள் பிள்ளைகளுக்கு நன்மைதனத்தை செய்கின்ற போது, வானக தந்தை தம் பிள்ளைகளுக்கு பரிசில்களில் எல்லாம் உயர்ந்த பரிசான தூய ஆவியை தர எப்போதும் தயாராக இருக்கிறார் என்பதுதான் அந்த செய்தி. லூக்காவின் காலத்தில் அதிகமான கிறிஸ்தவர்கள் தூய ஆவியை வேண்டி செபம் செய்திருக்கிறார்கள் என எண்ணத்தோன்றுகிறது. இவர்களுக்கு இந்த உவமை நிச்சயமாக நன்மை அளித்திருக்கும்



இன்றைய உலகில் அதிகமான செபங்கள் சுயநலம் சார்ந்ததாகவும்
குறுகிய மன்ப்பான்மை உடையதாகவும் இருக்கிறது
இயேசுவின் அழகான செபம் காலங்களை கடந்தும் 
செபத்தின் மகிமையைக் காட்டுகிறது
நம் கடவுள், நாம் கேட்பதற்கு முன்னமே 
நம் தேவையை அறிந்தவர் என்கிறார் இயேசு.
பிறர் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானாய் வளரும்,
என்ற அழகு தமிழ் பழமொழியைப் போல்
மற்றவருக்கான செபம்
நம் தேவைகளை ஆண்டவரிம் கொண்டுபோகும் என நம்புவோம்.

ஆன்பான ஆண்டவர் இயேசுவே
எங்கள் வலிகளை உம்மைதவிர வேறு யார் அறிவார்
அதனை சுமக்கக்கூடிய சக்தியை தாரும். ஆமென்.




ஆண்டின் பொதுக்காலம் முப்பத்திநான்காம் வாரம் கிறிஸ்து அரசர் பெருவிழா:  Our Lord Jesus Christ, King of the Universe 24.11.2024

ஆண்டின் பொதுக்காலம் முப்பத்திநான்காம் வாரம்   கிறிஸ்து அரசர் பெருவிழா :  Our Lord Jesus Christ, King of the Universe 24.11.2024 இய...