வெள்ளி, 14 ஜூன், 2019

மூவொரு இறைவன்-ஒரு கத்தோலிக்க விவிலியப் பார்வை: The Feast of Blessed Trinity.



The Feast of Blessed Trinity. 
மூவொரு இறைவன்-ஒரு கத்தோலிக்; விவிலியப் பார்வை
மனிதரை நீர் நினைவில் கொள்வதற்கு அவர்கள் யார்? மனிதப் பிறவிகளை நீர் ஒருபொருட்டாக எண்ணுவதற்கு அவர்கள் எம்மாத்திரம்
(தி.பா 8,4)

மி.ஜெகன்குமார் அமதி,
சங்கமம்
அமதிகள் ஆன்மீக மையம்,
கோப்பாய் தெற்கு, யாழ்ப்பாணம்
Friday, June 14, 2019

முதல் வாசகம்: நீமொ. 8,22-31
திருப்பாடல்: 8
இரண்டாம் வாசகம்: உரோ 5,1-5
நற்செய்தி: யோ 16,12-15

தாய் கத்தோலிக்க திருச்சபையின் முக்கியமான விசுவாச படிப்பினைகளில், தமத்திரித்துவம் மிக முக்கியமான படிப்பினையாகும். புலன்களுக்கும், மனித அறிவுக்கும் உட்புக முடியாத இறைவன் தன்னுடைய இயல்பைப் பற்றி அங்கும் இங்குமாக விவிலியத்தில் வெளிப்படுத்துகிறார். இறைவனின் தன்மையையும், சாரத்தையும் பற்றிய வெளிப்படுத்தல்களை இறைவாக்கினர், நீதி தலைவர்கள், அரசர்கள், விவிலிய ஆசிரியர்கள் என்று பலர் வெளிப்படுத்தினாலும், இயேசு ஆண்டவரே இறைவனின் உண்மைகளை நிறைவாக வெளிப்படுத்தினார் என்பது எமது விசுவாசம். அவர் கடவுளாகவும் அந்த சாரத்தையும், தன்மையையும் கொண்டுள்ளவர் என்பதனாலும் இந்த வெளிப்பாடு முக்கியம் பெறுகிறது. திரித்துவத்தின் விளக்கங்கள், 'தோற்றக்கொள்கை' ((modalism)) என்ற பேதகத்தின் 
காரணமாகவே வளர்ச்சியடைந்தது என வரலாற்றில் காணலாம். தோற்றக் கொள்கை, கடவுள் பல தோற்றங்களில் தோன்றினார் அவரில் மூன்று ஆட்கள் இல்லை என்று ஆரம்ப திருச்சபையுடன் வாதிட்டது. திரித்துவம் (Trinitas) என்ற நம்பிக்கை ஆரம்ப கால திருச்சபையில், தந்தை மகன் தூய ஆவியின் உறவை ஒரே கடவுள் விசுவாசத்தில் புரிந்து கொள்ள உருவானது.; திருச்சபை தந்தை தெர்த்துல்லியன்தான் இந்த சொல்லை அறிமுகப்படுத்தியதாக நம்பப்படுகிறது. இந்தச் சொல்லை விவிலயத்தில் இவ்வாறே காண இயலாது ஆனால் இதன் சிந்தனைகளை கத்தோலிக்க விசுவாசத்தின் படி முதல் மற்றும் புதிய ஏற்பாடுகளில் காணலாம்

முதல் ஏற்பாடு, கடவுளின் ஆவி, கடவுளின் தூதர், என்றபடி இறைவனில் ஆட்கள் தன்மையை அடையாளம் காட்டுகிறது (தொ.நூ. 1,2: வி.. 23,23). அத்தோடு கடவுளுக்கு பன்மை பதங்கள் பாவிக்கப்படுவதும், கடவுளின் வார்த்தையையும், மெய்யறிவையும்,  ஆளாகக் காட்டுவதும் இதற்கான உதாரணங்கள் என சிலர் வாதிடுகின்றனர் (தொ.நூ 11,7:தி.பா 33,6: நீமொ 8,12). முதல் ஏற்பாட்டில் மூன்று மனிதர்கள் ஆபிரகாமை சந்தித்த நிகழ்வு பாரம்பரியமாக முதலாவது திரித்துவ காட்சி என்று நம்பப்படுகிறது (காண் தொ.நூ 18,1-2). ஆனால் நேரடியாக எந்த இடத்திலும் திரித்துவக் காட்சிகளை முதல் ஏற்பாட்டில் காணுவது கடினம். பல கடவுள் சிந்தனைகளைக் கொண்டிருந்த மக்கள் மத்தியில் இஸ்ரயேலர் வாழ்ந்த படியால், ஒரே கடவுள் நம்பிக்கையை விதைப்பது இஸ்ரயேல் சமய தலைவர்களின் முக்கியமான போராட்டமாக இருந்தது (இணைச்சட்டம் 6,4-5).

புதிய ஏற்பாட்டிலும் நேரடியாக திருத்துவ வெளிப்பாட்டை காணமுடியாவிடினும், அதன் சிந்தனைகளை கொஞ்சம் திருப்தியாக காணலாம். திருத்துவத்தின் வெளிப்பாடு முதலில் அன்னை மரியாவின் மங்களவார்த்தை நிகழ்வில் காணலாம் (லூக் 1,35). இயேசு பலவேளைகளில் தான் தந்தையிடம் இருந்து வந்ததாகவும், அவருடைய கட்டளைகளை மட்டுமே செய்வதாகவும், தானும் தந்தையும் ஒன்று என்றும், பின்னர் தனது துணையாளரை அனுப்புவதாகவும் கூறுகிறார் (யோவா 14-16). தன்னை மகன் என்று கூறுகின்ற ஆண்டவர், துணையாளரை தனது ஆவி, இறைவனின் ஆவி என்றும் கூறுகிறார். இறுதியான கட்டளையையும் திருத்துவத்தின் பெயரிலேயே ஆண்டவர் கொடுக்கிறார் (மத் 28,19). பவுலுடைய கடிதங்கள் இந்த திருத்துவ கடவுளின் ஆசீரை மையப்படுத்திய வாழ்த்துக்களைக் கொண்டிருக்கின்றன (2 கொரி 13,14). இந்த வாழ்த்துக்களில் இருந்து ஆரம்ப கால திருச்சபையின் விசுவாச சத்தியங்களை ஊகிக்கலாம். பிற்காலத்தில் நிசேயா முன்-பின் காலத்தில் இந்த விசுவாச சத்தியம் மிக வளர்ச்சி பெற்றது. இறைவனின் குழுவாழ்க்கை மற்றும் இறைவனின் ஆட்கள் மத்தியிலான அன்பு, உறவு, புரிந்துணர்வு போன்றவை சாதாரண கிறிஸ்தவ மனித வாழ்க்கைக்கு மிகவும் உதவக்கூடிய உதாரணங்களாகும். மற்ற சமய சகோதரர்களுடனான விட்டுக்கொடுப்பிலும், புரிந்துணர்விலும், இந்த திரித்துவ நம்பிக்கை முக்கியமான அடித்தளாமாக அமையலாம். முக்கியமாக சமகால இந்து மதம் மும்மூர்த்திகள் (பிரம்மன்-விஷ்ணு-சிவன்) நம்பிக்கையை அதிகமாகவே அறிக்கையிடுகிறது

நீதிமொழிகள் 8,22-31

22ஆண்டவர் தம் படைப்பின் தொடக்கத்திலேயே தொல்பழங்காலத்தில் எதையும் படைக்கும் முன்னரே, என்னைப்படைத்தார். 23தொடக்கத்தில், பூவுலகு உண்டாகுமுன்னே, நானே முதன்முதல் நிலைநிறுத்தப்பெற்றேன். 24கடல்களே இல்லாத காலத்தில் நான் பிறந்தேன்; பொங்கி வழியும் ஊற்றுகளும் அப்போது இல்லை. 25மலைகள் நிலைநாட்டப்படுமுன்னே, குன்றுகள் உண்டாகுமுன்னே நான் பிறந்தேன். 26அவர் பூவுலகையும் பரந்த வெளியையும் உண்டாக்குமுன்னே, உலகின் முதல்மண்துகளை உண்டாக்குமுன்னே நான் பிறந்தேன். 27வானத்தை அவர் நிலைநிறுத்தினபோது, கடல்மீது அடிவானத்தின் எல்லையைக் குறித்தபோது, நான் அங்கே இருந்தேன். 28உலகத்தில் மேகங்களை அவர் அமைத்தபோது, ஆழ்கடலில் ஊற்றுகளை அவர் தோற்றுவித்தபோது, நான் அங்கே இருந்தேன். 29அவர் கடலுக்கு எல்லையை ஏற்படுத்தி, அந்த எல்லையைக் கடல் நீர் கடவாதிருக்கும்படி செய்தபோது, பூவுலகிற்கு அவர் அடித்தளமிட்டபோது, 30நான் அவர் அருகில் அவருடைய சிற்பியாய் இருந்தேன்; நாள்தோறும் அவருக்கு மகிழ்ச்சியூட்டினேன்; எப்போதும் அவர் முன்னிலையில் மகிழ்ந்து செயலாற்றினேன். 31அவரது பூவுலகில் எங்கும் மகிழ்ந்து செயலாற்றினேன்; மனித இனத்தோடு இருப்பதில் மகிழ்ச்சி கண்டேன்

மெய்யறிவு நூல்களில் ஒன்றான நீதிமொழிகளில் இருந்து இன்றைய முதல் வாசகம் எடுக்கப்பட்டுள்ளது. எபிரேய விவிலியம் இதனை ஞான இலக்கியங்களுள் வகைப்படுத்துகிறது. ஒழுக்கங்களையும் சிறந்த பழக்க வழக்கங்களையும் இஸ்ரயேல் பிள்ளைகளுக்கு கற்பிக்க விளையும் இந்த நூலின் முதல் ஒன்பது அதிகாரங்கள் மெய்யறிவின் மேன்மையை எடுத்துரைக்கின்றன. பல காலப் பகுதியில் எழுதப்பட்டு பின்னர் ஒரு நூலாக தோற்றம்பெற்றது என பலர் இந்தப் புத்தக்தை கருதுகின்றனர். எபிரேய விவிலியம் இதனை מִשְׁלֵי שְׁלֹמֹה மெஷ்லே 
ஷெலோமொஹ் என அழைக்கிறது (சாலமோனின் நீதிமொழிகள்). பலவிதமான இலக்கிய நடைகளை இந்த புத்தகம் கையாள்கிறது, பழமொழி உரைகள், நாட்டுப்புற முது மொழிகள், வாய்மொழி காட்சிகள், நீடிக்கப்பட்ட உருவகங்கள், திருப்பாடல்கள், சாதாரண உரைகள் என்று பலவும் பத்தும் இங்கே காணக்கிடக்கிறது. அதிகமானவை, ஆசிரியர் மாணாக்கருக்கு உரைப்பது போல இதன் நடை அமைந்துள்ளது. இதன் ஆசிரியர் சாலமோன் என்பதைவிட, அவருக்கு இது அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என்றுதான் கூறவேண்டும்.

இன்றைய எட்டாம் அதிகாரம், மெய்யறிவு தரும் வாழ்வு அல்லது ஞானத்திற்கு புகழுரை என்ற பகுதியில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. பல வேளைகளில் இந்த மெய்யறிவு, பழைய வழக்கில் ஞானம், கிறிஸ்துவிற்கு ஒப்பிடப்படுகிறது. ஞானம் கடவுளின் சிந்தனையில் இருந்து வருகிற படியால் அதனை திரித்துவத்தின் இரண்டாம் ஆளான மகனாக பார்க்கிறது கிறிஸ்தவ பாரம்பரியம். அத்தோடு இந்த ஞானத்தால்தான் உலகம் உண்டானது என்கிற படியால் அது யோவானின் சிந்தனைகளுடன் ஒத்துப்போகிறது (காண் யோவான் 1). 

. 22: மெய்யறிவின் தொன்மை இங்கே காட்டப்படுகிறது. இந்த வசனம் சற்று ஆழமானது. இங்கே தொடக்கம் என்று சொல்ல பயன்படும் சொல் தொடக்க நூலில் முதலாவது வசனத்தில் முதாலாவது சொல்லாக இருக்கிறது (רֵאשִׁית ரெஷித்- தொடக்கத்தில்). என்னை படைத்தார் என்ற சொல்லின் வினை இரண்டு அர்த்தங்களைக் கொடுக்கிறது. קָנָה கனாஹ் - ) உடைமையாக்கு, ஏற்படுத்து ) படை, உருவாக்கு. இந்த வரியின் அர்த்தங்களும் மொழி பெயர்ப்புக்களும் கொஞ்சம் கடினம், ஆனால் மெய்யறிவு பழங்காலத்திலிருந்தே இருக்கிறது என்பது மட்டும் புலப்படுகிறது

வவ. 23-24: நிலம் தோன்றுவதற்கு முன் என்பது ஆச்சரியமான அறிவியல் செய்தி, இன்று பல புவியியல் விஞ்ஞானிகள் பெரு வெடிப்புக் கொள்கையை நிலத்தின் தோற்றத்திற்கு காரணமாக 
இருக்கலாம் என்கின்றனர். விவிலியம் மெய்யறிவை அதற்கும் மேல் வைக்கிறது. நீரூற்றுக்களும் கடல்களும் இல்லாத காலம் என்பது தொடக்கநூல் படைப்பை விவரிக்கும் காலத்திற்கும் முற்பட்டது. இங்கே ஆசிரியரை புவியியல் விஞ்ஞானியாக பார்க்காமல் நம்பிக்கை மெய்யறிவு வாதியாக பார்க்க வேண்டும். இவர் நமக்கு தொடக்க நூல் படைப்புக்களை நினைவூட்டுகிறார்.

வவ. 25-26: மலைகள், குன்றுகள், சமவெளிகள், மணல்கள் இவைகளை கடவுள் மூன்றாம் நாளில் படைத்தார் என தொடக்க நூல் காட்டுகிறது. மெய்யறிவு இவைகளையும் விட பழமையானது என்கிறார் ஆசிரியர். மெய்யறிவு இந்த பௌதீக துகள்களைவிட பழமையானது என்கிறார் ஆசிரியர் (சாலமோன்).

வவ. 27-29: வானம், கடல், மேகம், நீர்த்திரள், நீர் ஊற்றுக்கள் மிகவும் தொன்மையான அத்தோடு அறிவியலால் இன்னமும் ஆழம் காணாமுடியா படைப்புக்கள். இதனை மெய்யறிவு, தனக்கு முன்னால் சிறுவர்கள், என்பது எத்துணை அழகான உதாரணங்கள். இந்த வரிகளின் மூலம் படைப்புக்களை தெய்வங்களாக வணங்கும் மற்றவர்களுக்கு உண்மைக் கடவுளை உணர்த்த விரும்புகிறார் ஆசிரியர்

வவ. 30-31: 30 வது வசனத்தில் சிற்பி என்பதற்கு அழகான எபிரேய வார்த்தை אָמוֹן ஆமோன் பாவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் இனிமையானது. இதனை சிறிய குழந்தை, தலைமை பணியாளர், கட்டடக் கலைஞர், வளர்ப்புத் தந்தை என்றும் மொழிபெயர்க்கலாம். இதன் பின்புலங்கள் அக்காடிய மற்றும் எகிப்திய படைப்புக் கதைகளை இஸ்ராயேலருக்கு நினைவூட்டி, கடவுளின், அவரின் மெய்யறிவின் மாட்சியை வெளிப்படுத்துகிறது. அத்தோடு இது ஒரே கடவுள் நம்பிக்கைக்கான நல் முயற்சி. 31வது வசனம் மெய்யறிவின் குணத்தைக் காட்டுகிறது. இதுவும் அசீரியர்களின் படைப்புக் கதைகளின் பின்புலத்தை கொண்டுள்ளது. சாதாரணமாக ஓர் கட்டுமானம் மகிழ்ச்சியைக் கொண்டுவருகிறது, இங்கே மெய்யறிவு, கட்டுமானத்தில் அல்ல மாறாக மனித குலத்தோடு இருப்பதில் மகிழ்ச்சி கொள்கிறது. கடவுள் அனைத்தையும் படைத்த பின்னர் நல்லதெனக் கண்டார் என தொடக்க நூல் சொல்வதை இங்கே நினைவுபடுத்தலாம்

திருப்பாடல் 8
1ஆண்டவரே! எங்கள் தலைவரே! உமது பெயர் உலகெங்கும் எவ்வளவு மேன்மையாய் விளங்குகின்றது! உமது மாட்சி வானங்களுக்கு மேலாகவும் உயர்ந்துள்ளது
2பாலகரின் மழலையிலும் குழந்தைகளின் மொழியிலும் வலிமையை உறுதிப்படுத்தி உம் பகைவரை ஒடுக்கினீர்; எதிரியையும் பழிவாங்குவோரையும் அடக்கினீர்
3உமது கைவேலைப்பாடாகிய வானத்தையும் அதில் நீர் பொருத்தியுள்ள நிலாவையும் விண்மீன்களையும் நான் நோக்கும்போது
4மனிதரை நீர் நினைவில் கொள்வதற்கு அவர்கள் யார்? மனிதப் பிறவிகளை நீர் ஒருபொருட்டாக எண்ணுவதற்கு அவர்கள் எம்மாத்திரம்
5ஆயினும், அவர்களைக் கடவுளாகிய உமக்குச் சற்றே சிறியவர் ஆக்கியுள்ளீர்; மாட்சியையும் மேன்மையையும் அவர்களுக்கு முடியாகச் சூட்டியுள்ளீர்
6உமது கை படைத்தவற்றை அவர்கள் ஆளும்படி செய்துள்ளீர்; எல்லாவற்றையும் அவர்கள் பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தியுள்ளீர்.
7ஆடுமாடுகள், எல்லா வகையான காட்டு விலங்குகள்
8வானத்துப் பறவைகள், கடல் மீன்கள், ஆழ்கடலில் நீந்திச் செல்லும் உயிரினங்கள் அனைத்தையும் அவர்களுக்குக் கீழ்படுத்தியுள்ளீர்
9ஆண்டவரே, எங்கள் தலைவரே, உமது பெயர் உலகெங்கும் எவ்வளவு மேன்மையாய் விளங்குகின்றது!

திருப்பாடல்கள் தொகுப்பில் காணப்படும் இந்த முதலாவது புகழ்ச்சிப்பாடல் படைப்புக்களில் மனிதரது இடத்தைக் காட்டுகிறது. இது கித்தித் என்ற ஒருவகைப் பாடலாகும், இதன் அர்த்தம் சரியாக புரிந்துகொள்ளப்படவில்லை, ஒருவகை மெட்டாக இருக்கலாம்

.1: கடவுளைப் புகழவோ அல்லது விளங்கிக்கொள்ளவோ மனிதர்களால் இயலாது, எனவே அவரின் பெயரை புகழவும், பெயரை விளங்கிக்கொள்ளவும் இஸ்ரயேலர் முயற்சிசெய்தனர். கடவுளைக் குறிக்க அவரின் பொதுப் பெயரை பாவிக்க முனைந்தது இஸ்ரயேலரின் தனித்துவம்

.2: ஒருவரைப் புகழ, அவரின் போர் வெற்றிகளை உரைப்பது அக்கால வழக்கம், இங்கே கடவுள் தம் எதிரிகளை ஒடுக்க பாலகரை மட்டுமே பயண்படுத்தினார் என்பது, கடவுளின் மக்களில் சிறியவர்கள் கூட பலசாலிகள் என்பதை எண்பிக்கிறது

வவ. 3-4: கடவுளை தியானிக்க அதிசயங்கள் தேவையில்லை, படைப்புக்களை நோக்கு அது போதும் என்னும் இஸ்ரயேலின் மெய்யறிவை இங்கே காணலாம். மனிதர்கள் கடவுளுக்கு முன்னால் ஒரு பொருட்டே கிடையாது என்பது திருப்பாடல்கள் கற்றுத்தரும் மிக முக்கியமான பாடம். இன்றைய நவீன சுய-சிந்தனை மனிதர்களுக்கு இது சாலப் பொருந்தும். ஆசிரியர் நிலாவையும் விண்மீன்களையும் மனிதர்களுக்கு மேலாக ஒப்பிடுவது, அவரின் விசுவாசத்தையும், தாழ்ச்சியையும் காட்டுகிறது

வவ. 5-7: இருந்த போதும் கடவுள், மனிதர்களுக்கு தமது சாயலைக் கொடுத்துள்ளார் என்பதை ஏற்றுக்கொள்கிறார். மாட்சியும் மேன்மையும் கடவுளுக்குரியது அதனை மனிதர் கொண்டுள்ளமையால் தெய்வீகம் பெறுகின்றனர். கடவுளின் படைப்புக்களை மனிதர் ஆள (מָשַׁל மஷால்) என்ற சொல் பாவிக்கப்பட்டுள்ளது. இது ஆட்சிசெய்தல், பாவித்தல் என்பதைவிட பராமரித்தல், பாதுகாத்தல் என்ற பொருளை தருகிறது ஏனெனில் கடவுள் அதனைத்தான் செய்கிறார். அனைத்து உயிரினங்களையும் உள்வாங்கி அவற்றை ஒரு குடும்பமாக்கி மனிதரை கடவுளின் பிரதிநிதியாக செயல்படக் கேட்கிறார் ஆசிரியர்

. 8: கடவுளின் பெயர் என்பது இங்கே கடவுளையே குறிக்கும். பெயர் என்பது ஒருவரின் அடையாளம், அது அவரின் குணத்தைக் காட்டுகிறது, பெயரின் மாட்சி, அவரின் மாட்சியைக் குறிக்கும்

உரோமையர்: 5,1-5
1ஆகையால் நாம் கொண்டுள்ள நம்பிக்கையின் மூலம் கடவுளுக்கு ஏற்புடையவர்களாகியுள்ள நாம், நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் வழியாய்க் கடவுளோடு நல்லுறவு கொண்டுள்ளோம். 2நாம் இப்போது அருள்நிலையைப் பெற்றிருக்கிறோம். இந்நிலையை அடையும் உரிமை இயேசு கிறிஸ்துமீது கொண்ட நம்பிக்கையால் தான் அவர் வழியாகவே நமக்குக் கிடைத்தது. கடவுளின் மாட்சியில் பங்குபெறுவோம் என்னும் எதிர்நோக்கில் நாம் பெருமகிழ்வும் கொள்ள முடிகிறது. 3அதுமட்டும் அல்ல, துன்பங்களைத் தாங்கிக் கொள்வதிலும் பெருமகிழ்ச்சி கொள்கிறோம். ஏனெனில், துன்பத்தால் மன உறுதியும், 4மன உறுதியால் தகைமையும், தகைமையால் எதிர்நோக்கும் விளையும் என அறிந்திருக்கிறோம். 5அந்த எதிர்நோக்கு ஒருபோதும் ஏமாற்றம் தராது எனெனில் நாம் பெற்றுள்ள தூய ஆவியின் வழியாய்க் கடவுளின் அன்பு நம் உள்ளங்களில் பொழியப்பட்டுள்ளது.

ஒருவர் கிறிஸ்துவோடு இணைந்துள்ளபடியால் புது வாழ்வு பெறுகிறார் இதனால் அவர் ஏற்புடைமை அடைகிறார் என்பதனை இந்த ஐந்தாவது அதிகாரம் தெளிவு படுத்துகிறது. கடவுளால் ஏற்புடைமையாக்கப்பட்டவர், மாட்சிப்படுத்தப்பட்டுள்ளார் எனவே அவர் கடவுளுக்காக அவரின் (அவர் தருகின்ற அல்ல) துன்பத்தை ஏற்று ஆவியில் வாழ வேண்டும் என்று இந்த பகுதி ஆழமாக எடுத்துரைக்கின்றது

.1: இந்த வசனத்தை புரிய, கிரேக்க நம்பிக்கை ஒன்றை ஆராய வேண்டும். கிரேக்கர்கள் மனிதர்களின் துன்பத்திற்கு பல காரணங்களைத் தந்தனர். கடவுளுடனான போர், மனிதர்களின் பாவச் செயல் போன்றவைதான் துன்பத்திற்கு காரணம் என்றும் கண்டனர். இங்கே பவுல் கிறிஸ்துவால் இனி இந்த போராட்டம் கிடையாது என்கிறார். நம்பிக்கை ஒருவருக்கு இந்த புதிய நிலையை தருகிறது என்கிறார். நல்லுறவு என்பதற்கு கிரேக்க மூல பாடம் 'அமைதி' என்ற சொல்லை பாவிக்கிறது. (εἰρήνη எய்ரேனே). ஆக கிறிஸ்துவில் நம்பிக்கை கொண்டால் அது தருவது கடவுளோடு அமைதி, என்றே பொருள்படும்

.2: மிக ஆழமான வரி. முதல் ஏற்பாட்டில் ஆலயம் ஒருவருக்கு கடவுளிடம் செல்ல அல்லது எதாவது சொல்ல, அணுகல் (அணுகல்தன்மை) தந்தது, இங்கே அதனை இயேசுவில் கொள்ளும் நம்பிக்கை நிறைவாக தருகிறது என்கிறார் பவுல். இந்த அணுகல் மகிமைமையைத் தருகிறது
இதனால் நாம் கடவுளுடைய மகிமையில் பங்குகொள்கிறோம் என்ற நம்பிக்கையில் மகிழ்ச்சி கொள்கிறோம் என்கிறார். இந்த மகிழ்வுக்கு உண்மையில் கிரேக்க மூல பாடம் καυχάομαι கௌகோமாய் என்ற சொல்லை பாவிக்கிறது. ஈழத் தழிழில் சொன்னால் 'நாம் புழுகுறோம்' என்று பொருள் படும். நல்ல விடயத்தை புழுகலாம் போல

.3-4: இந்த புழுகுதல் மாட்சிக்காக மட்டுமல்ல இன்னும் பல செயற்பாடுகளுக்காக என்று சொல்லி பல விழுமியங்களை சங்கிலி வரிசைப் படுத்துகிறார். அவை, துன்பம் இதனால் பொறுமை, பொறுமையால் தகமை, தகமையால் எதிர்நோக்கு என்று வரிசைப்படுத்துகிறார். கிறிஸ்தவம் பெருமைக்குரியதுதான் இருந்தபோதும் அது பொழுதுபோக்கு அல்ல என வாதிடுகிறார்θλῖψις திலிப்சிஸ்- துன்பம், ὑπομονή ஹூபொமொனே- பொறுமை, δοκιμή தொகிமே- தகமை, ἐλπίς - எல்பிஸ் - எதிர்நோக்கு, ἀγάπη அகாபே- அன்பு


. 5: எதிர் நோக்கு என்பது, (ἐλπίς எல்பிஸ்); பவுலுடைய இறையியலில் மிக முக்கியமான ஒரு சிந்தனைப் பொருள். கிரேக்க மற்றும் உரோமைய அறிஞர்கள் இச்சொல்லை பாவித்திருக்கின்றனர். கிரேக்க விவிலியத்தில் (புதிய ஏற்பாடு) அதிகமாக இச்சொல் பாவிக்கப்பட்டுள்ளது. இதன் பொருளாக, நன்மைக்கான எதிர்பார்ப்பு, எதிர்நோக்கு, எதிர்கால நம்பிக்கை என்று புரிந்து கொள்ளலாம். எல்பிஸ் திருவெளிப்பாட்டோடும், இறுதிக் கால சிந்தனைகளோடும் தொடர்பு பட்டது. இதற்கு நல்ல வரைவிலக்கனத்ததை எபி 11,1-2 இல் காணலாம் (நம்பிக்கை என்பது நாம் எதிர்நோக்கி இருப்பவை கிடைக்கும் என்னும் உறுதி; கண்ணுக்குப் புலப்படாதவை பற்றிய ஐயமற்ற நிலை.இந்த நம்பிக்கையால்தான் நம் மூதாதையர் நற்சான்று பெற்றனர்). இந்த எதிர்நோக்கு ஏமாற்றம் தராததற்கான காரணம் தூய ஆவி என்கிறார் பவுல். கடவுளின் அன்பை காட்டுபவர் இயேசு என்பதனை நற்செய்தியாளர்கள் காட்டுகின்றனர், இங்கே அந்த பணியை தூய ஆவி செய்வதாக பவுல் கூறுவது இருவருக்கிடையிலான உறவைக் காட்டுகிறது


நற்செய்தி: யோவான் 16,12-15
12'நான் உங்களிடம் சொல்ல வேண்டியவை இன்னும் பல உள்ளன. ஆனால் அவற்றை இப்போது உங்களால் தாங்க இயலாது. 13உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார். அவர் தாமாக எதையும் பேசமாட்டார்; தாம் கேட்பதையே பேசுவார்; வரப்போகிறவற்றை உங்களுக்கு அறிவிப்பார். 14அவர் என்னிடமிருந்து கேட்டு உங்களுக்கு அறிவிப்பார். இவ்வாறு அவர் என்னை மாட்சிப்படுத்துவார். 15தந்தையுடையவை யாவும் என்னுடையவையே. எனவேதான் 'அவர் என்னிடமிருந்து பெற்று உங்களுக்கு அறிவிப்பார்' என்றேன்.

யோவான் நற்செய்தியின் 16ம் அதிகாரத்தின் முதல் பகுதி, தூய ஆவியாரின் செயல்களை விவரிக்கின்றன. தூய ஆவியாரைப் பற்றி யோவான் நற்செய்தியில் ஐந்து முக்கியமான பகுதிகள் உள்ளன அவை 14,16-17: 14,26: 15,26: 16,7-11: மற்றும் 16,12-15. இதற்கு முன் பகுதி தூய ஆவியின் பங்கிலிருந்து, இந்த பகுதி அவரின் செயற் பாட்டை விவரிக்க முயல்கின்றது

.12: எதிர்காலம் எப்போதுமே வியப்புக்குரியது, எதர்காலத்தை எதிர்காலத்தில் சந்திப்பதே மனிதர்களுக்கு சிறந்தது என்பதை ஆண்டவர் பல வேளைகளில் உணர்த்துவார் (மத் 6,34 ஆகையால் நாளைக்காகக் கவலைப்படாதீர்கள். ஏனெனில் நாளையக் கவலையைப் போக்க நாளை வழி பிறக்கும். அந்தந்த நாளுக்கு அன்றன்றுள்ள தொல்லையே போதும்). உங்களால் தாங்க முடியாது என்பதைக் குறிக்க சுமத்தல் என்ற வினைச் சொல் பாவிக்கப்பட்டுள்ளது (βαστάζω பஸ்டாட்ஸோ). இது ஒருவர் பாரச் சுமைகளை ஒருவர் தமது வலிமையால் சுமப்பதைக் குறிக்கும். இயேசு இங்கு சீடத்துவத்தின் சவால்களையும் மனித பலவீனங்களையும் குறிப்பிடுகிறார் என்று அறிஞர்கள் கருதுகின்றனர். ஒரு செயற்பாட்டை தொடங்குமுன் அதனைப் பற்றிய பய உணர்வு நல்லதல்ல என்பதை இயேசு நன்கு அறிந்துள்ளார்

.13: தூய ஆவியார் வந்த பின்னர் சீடத்துவத்தின் சவால்கள் குறையாது ஆனால் அதனைக் கையாளக்கூடிய பக்குவத்தையும் பலத்தையும் சீடர்கள் பெறுவர் எனபதுதான் இங்குள்ள செய்தி. எதிர்காலத்தை சந்திக்க தூய ஆவியானவர், சீடர்களை தனியே விடாமல் தூய ஆவியானவரை துணைக்கு அனுப்புகிறார். உண்மையை நோக்கி வழிநடத்துகின்ற பணியை இயேசு தூய ஆவியானவருக்கு கொடுக்கிறார். உலகம் அறிவைத் தரலாம் ஆனால் உண்மையைத் தரக்கூடியவர் ஆண்டவர் ஒருவரே என்பது யோவானின் முக்கியமான ஒரு சிந்தனை. உண்மை என்பது கிரேகக் மெய்யியலில் வாதிக்கப்பட்ட மிக உன்னதமான ஒரு மறைபொருள். இந்த உண்மையை நோக்கிய தூய ஆவியின் பணி இரண்டு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது:

). உண்மையை நோக்கி வழிநடத்தல்: வழிநடத்தல், தலைவரின் முக்கியமான பண்பாகும், இதனை மெய்யறிவு செய்வதாக காண்கிறோம் (காண் சால ஞா. 9,11: 10,10). எதிர்காலத்தில் இந்த வழிநடத்தல் பணியைச் செய்வது தூய ஆவி என்கிறார் இயேசு. ஏற்கனவே யோவான் நற்செய்தியில் இயேசு, தான் தான் உண்மையான வழியென்றும் சொல்லியிருக்கிறார். (14,6 வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை ).

). தூய ஆவியின் வழிநடத்தலுக்கு உத்தரவாதம் கொடுக்கப்பட்டுள்ளது. கேட்பார்(ἀκούσει), பேசுவார் (λαλήσει), அறிக்கையிடுவார்(ἀναγγελεῖ) என்று தூய ஆவியின் செயற்பாடுகள் எதிர்கால வினையிலே தரப்பட்டுள்ளது. இது தூய ஆவியானவர் இயேசுவில் தங்கியுள்ளதனைக் காட்டுகிறது. அத்தோடு தூய ஆவியார் அறிவிக்க இருப்பது ஏற்கனே அவர் இயேசுவிடம் இருந்து ஃகடவுளிடம் இருந்து கேட்டவையாகும்

.14: மாட்சிப்படுத்தலும் இங்கே விவரிக்கப்படுகிறது. இயேசு தான் இந்த உலகத்திற்கு வந்ததும், தந்தையை மாட்சிப்படுத்தவே என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறார். தான் தந்தையை மாட்சிப்படுத்தியது போல், தந்தையையும் தன்னை மாட்சிப்படுத்தக் கேட்டிருக்கிறார் (காண் யோவான் 17,1.4.10). இங்கே அந்தப் பணியையும் தூய ஆவியானவர் தொடர்வார் என்கிறார். இங்கே ஒரே பணி தொடர்வதனைக் காணலாம். மாட்சிப்படுத்தல் (δοξάζω தொக்ஸாட்ஸோ), கடவுள், இயேசு மற்றும் தூய ஆவியின் பணிமட்டுமல்ல மாறாக மனிதர்களின் படைப்பின் நோக்கம் என்றும் விவிலியம் வாசிக்கும் (காண் தி.பா 23,23). 

.15: இயேசு, தான் யார் என்றும் தனக்கும் தந்தைக்கும் உள்ள உறவைப்பற்றியும் தெரிவிக்கிறார். இங்கே தந்தை, மகன் தூய ஆவியின் சொத்து விவரங்கள் காட்டப்பட்டுள்ளன. 'தந்தையுடையவை யாவும் என்னுடையவை' என்று தனது அதிகாரத்தை விளங்கப்படுத்துகிறார். என்னுடையவை என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, உண்மையில் 'எனக்குரியது' என்று  நான்காம் வேற்றுமையில் (dativus) உள்ளது அதாவது அது இயேசுவின் சொத்துரிமையைக் குறிக்கிறது. இந்த 'அவருக்குரிய' அனைத்தும் இப்போது தூய ஆவிக்கு கொடுக்கப்பட்டு அவர் வழியாக நமக்கு கொடுக்கப்படுகிறதுஇயேசுவில் கொண்டுள்ள நம்பிக்கையும் துணையாளரின் வழிநடத்தலும் கடவுளின் ஆசீர்வாதங்களை நமக்கு தருகின்றன என்பதே மனித குலம் பெறும் பெரிய செல்வம் என்பதை யோவான் அழகாக காட்டுகிறார்

கிறிஸ்தவர்களுக்கும் நல்மனிதர்களுக்கும்
கிறிஸ்து இயேசுவைவிட பெரிய சொத்து எதுவும் இருக்க முடியாது
திரித்துவம் என்னும் மறைபொருள் என்பது
சிந்தையில் வைத்து வணங்கி
அதனைப் பற்றி கட்டுரைகள் எழுதும் இறையியல் அல்ல
அது வாழப்பட வேண்டியது
திரித்துவத்தை பற்றி யாரும் நிறைவாக எழுதவும் முடியாது
ஆனால் திரித்துவத்தை வாழ முடியும்
அதனையே ஆண்டவர் இயேசுவும் எதிர்பார்க்கிறார் என நினைக்கிறேன்.

அன்பான ஆண்டவரே, உம்முடைய திரித்துவத்தின் மறைபொருள் இவ்வுலக சுயநலங்களையும், மடமைகளையும் விட்டு வெளிவர உதவி செய்ய வேண்டுகிறோம். ஆமென்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆண்டின் பொதுக்காலம் முப்பத்திநான்காம் வாரம் கிறிஸ்து அரசர் பெருவிழா:  Our Lord Jesus Christ, King of the Universe 24.11.2024

ஆண்டின் பொதுக்காலம் முப்பத்திநான்காம் வாரம்   கிறிஸ்து அரசர் பெருவிழா :  Our Lord Jesus Christ, King of the Universe 24.11.2024 இய...