புதன், 26 ஜூன், 2019

பொதுக்காலம் பதிமூன்றாம் ஞாயிறு Thirteen Sunday in Ordinary Times. C



'ஏனெனில், என்னைப் பாதாளத்திடம் ஒப்பவிக்கமாட்டீர்; உம் அன்பனைப் படுகுழியைக் காண விடமாட்டீர்.'
(தி.பா 16,10)

M. Jegankumar OMI,
Sangamam, Oblate Spiritual Animation Centre,
Kopay South, Jaffna. 
Tuesday, June 25, 2019
முதலாம் வாசகம்:1அரசர் 19,16.19-21
பதிலுரைப்பாடல்: திருப்பாடல் 15
இரண்டாம் வாசகம்: கலாத் 5,1.13-18
நற்செய்தி: லூக்கா 9,51-62

1அரசர் 19,16.19-21
16பேல் மெகோலாவைச் சார்ந்த சாபாற்றின் மகன் எலிசாவை உனக்குப் பதிலாக இறைவாக்கினராக அருள்பொழிவு செய். 19எலியா அங்கிருந்து சென்று, சாபாற்றின் மகன் எலிசாவைக் கண்டார். அப்பொழுது அவர் ஏர் பூட்டி உழுதுகொண்டிருந்தார். அவருக்கு முன்னே பதினோர் ஏர்கள் இருந்தன. பன்னிரண்டாம் ஏரைத் தாமே ஓட்டிக் கொண்டிருந்தார். எலியா அவரிடம் சென்று, தம் மேலாடையை அவர் மீது தூக்கிப் போட்டார். 20எலிசா அவரைக் கடந்து செல்கையில் ஏர் மாடுகளை விட்டுவிட்டு எலியாவிடம் ஓடிவந்து, 'நான் என் தாய் தந்தையிடம் விடைபெற்று வர அனுமதி தாரும். அதன்பின் உம்மைப் பின்செல்வேன்' என்றார். அதற்கு அவர், 'சென்று வா, உனக்கு நான் செய்ய வேண்டியதைச் செய்துவிட்டேன்!' என்றார்.
21எலிசா எலியாவை விட்டுத் திரும்பி வந்து, ஏர் மாடுகளைப் பிடித்து, அடித்துத் தாம் உழுத கலப்பைக்கு நெருப்பு மூட்டி, அம்மாட்டு இறைச்சியைச் சமைத்து, மக்களுக்குப் பரிமாற அவர்களும் அதை உண்டனர். பின்பு அவர் புறப்பட்டுப் போய் எலியாவைப் பின்பற்றி அவருக்குப் பணிவிடை செய்யலானார்.

  இஸ்ராயேலின் கடவுள் தான் அனைத்துலகின் கடவுள், அவர்தான் அனைத்து வரலாறுகளையும், அசைவுகளையும் தீர்மானிக்கிறார் என்பதனை இந்த முதலாவது வாசகத்தில் காண்கின்றோம். அரசர்கள் காலத்தில், இறைவாக்கினர்கள் முக்கியமாக எலியாவும், எலிசாவும்; மிக காத்திரமாக ஆட்சியாளர்களையும் அரச வம்சங்களையும் தீர்மானிக்கிறவர்களாக இருந்தததை காணமுடிகிறது. எலியா ஒம்ரியின் வம்சத்தை நேரடியாகவே விமர்சிப்பவராக இருந்தார். இந்த ஒம்ரிதான் சமாரியாவை இஸ்ராயேலுக்கு தலைநகரமாக்கி, வட அரசை தென் அரசைவிட பல வழிகளில் உயர்த்தியவர். விவிலியத்தின் பல புத்தகங்கள் தென்னரசின் செல்வாக்குகளை உயர்த்திப் பேசுகின்றன. இஃது பல வேளைகளில் இந்த ஒம்ரியும் அவர் மகன் அகாபும் தவறானவர்களாக விவிலியத்தில் காட்டப்படுகிறார்கள். ஒம்ரியின் வம்சத்தை சாடி, சபிக்கின்ற எலியா இறைவாக்கினர், இன்னொரு வம்சத்தை இஸ்ராயேலுக்கு பரிந்துரை செய்கிறார். அத்தோடு தனக்கு பின் தன் இறைவாக்கு பணிதொடர இன்னொரு இறைவாக்கினரையும் ஏற்பாடு செய்கிறார்

. 16: எலிசா இறைவாக்கினர் வட அரசில் மிகவும் அறியப்பட்ட இறைவாக்கினருள் ஒருவர், அத்தோடு தன் முன்னோடியான எலியாவைப்போல அதிசயங்களுக்கு பெயர்பெற்றவர். இவருடைய பெயருக்கு (אֱלִישָׁע எலிஷா) இரண்டு அர்த்தங்கள் தரப்படுகின்றன
) 'கடவுளின் மனிதன்
) 'கடவுள் மீட்கிறார்'. 
 யோசுவா மோசேயின் இடத்தை நிரப்பியது போல இவர் எலியாவின் இடத்தை நிரப்புகிறார். எலியா என்றால் 'என் கடவுள் ஆண்டவர்' என்று பொருள். ஆசிரியர் இங்கே எலிஷா, 'கடவுள் மீட்கிறார்' என்ற பொருளில் ஒரு புதிய இறையியலைப்; புகுத்துவதை வாசகர்கள் காணலாம். எலிசாவை பற்றிய கதைகள் தனித்துவமாக வட அரசில் பரவலாக பாவனையில் 
இருந்ததாகவும், வடஅரசின் அழிவின் பின்னர் இவை தென்னரசில் அரசர்கள் புத்தகத்துள் 
இடம்பெற்றிருக்கலாம் என சிலர் வாதாடுகின்றனர். எலிசா இயேசுவைப் போல் ஊர் ஊராக கால்நடையாய் செல்கிறார், புதுமைகள் செய்கிறார், அவருடன் பல சீடர்கள் பயணம் செய்கின்றனர். அவரின் அதிசயங்கள் சில:

). மாசடைந்த நீரூற்றை தூய்மையாக்குதல் (2அரச 2,19-22)
). ஏழைக் கைம்பெண்ணுக்கு உதவிசெய்தல் (2அரச 4,1-7)
). நஞ்சுக் கூழை தூயதாக்குதல் (2அரச 4,38-41)
). இருபது அப்பங்களை நூறுபேருக்கு கொடுத்தல் (2அரச 4,42-43)
). ஆற்றில் விழுந்த கோடரியை மிதக்கச்செய்தல் (2அரச 6,1-7)
). சூனாமிய பெண்ணின் மகனை உயிர்ப்பித்தல் (2அரச 4,-37)
). இறந்த எலிசாவின் எலும்புகள் இறந்த இன்னொருவருக்கு உயிர்தரல் (2அரச 13,20-21)

 எலிசாவின் பல புதுமைக் கதைகள் எலிசாவை மையப்படுத்தியதாகவும், அவரது இறைவாக்கு ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்துவதாகவும் அமைகின்றன. முக்கியமாக சில சிறுவர்கள் எலிசாவை மொட்டை மனிதர் என ஏளனம் செய்ததும் அவர்களை அவர் சபித்து தண்டித்ததும் இந்த பின்புலத்தை மறைமுகமாக காட்டுகின்றது (காண்க 2அரச 2,23-25). அத்தோடு எலியா வானகம் செல்லும் முன் எலிசா எதனைப் பெற்றுக்கொண்டார் என்பதிலும் பல புதிய சிந்தனைகள் முன்வைக்கப்படுகின்றன. எலிசா உண்மையிலே எலியாவின் ஆவியில் இரண்டு மடங்கு கேட்கவில்லை ஏனெனில் ஒரு உண்மையான அன்புச் சீடரால் அதனைக் கேட்க முடியாது, மாறாக எலிசா, எலியாவின் ஆவியில் இரண்டு பங்குகளைத்தான் கேட்டார் என்று எபிரேய பாடம் காட்டுகிறது (காண்க 2அரச 2,9). 

. 20:  எலிசாவின் பன்னிரண்டு நுகங்கள் அவர் ஒரு பணக்காரராக அல்லது சமூதாயத்தில் உயர்ந்தவராக இருந்ததை காட்டுகிறது. அத்தோடு சாதாரண முதலாளிகள் போலல்லாது அவரும் வேலை செய்பவராகவே காட்டப்படுகிறார். எலியா எலிசாமேல் போட்ட சால்வையானது,  
இறைவாக்கினர் பாவிக்கும் ஒரு வகை மிருக முடியினால் ஆன கம்பளித் துனியாகும் என்னும் வாதமும் உண்டு. இது இறைவாக்கு பணியை அடையாளப்படுத்துகிறது. எலிசா தானாக விரும்பி 
இந்த இறைவாக்கு பணியை தெரிந்து கொள்ளவில்லை மாறாக அது அவருக்கு கொடுக்கப்படுகிறது. எலியா மற்றும் எலிசாவின் உரையாடல்கள், அவர்களுள் இருந்த நல்ல புரிந்துணர்வைக் காட்டுகிறன. எலிசா தன் பெற்றோரின் மேல் அக்கறையுள்ளவராக இருக்கிறார். இது ஒரு முக்கியமான யூத அல்லது இஸ்ராயேல் விழுமியம் (காண்க வி. 20,12).

. 21: எலிசாவின் இந்த விருந்தோம்பல் மிகவும் நோக்கப்படவேண்டியது. தன்னுடைய சொத்துக்களையே விருந்தாக்குகிறார். அவர் பன்னிரண்டாவது கலப்பையை மட்டும்தான் எரித்தார் என எடுக்கலாம். இதனால் முழுவதுமாக தன்னை அர்ப்பணிக்கிறார். கலப்பை மற்றும் நுகம் சில வேளைகளில் அடிமைத்தனத்தின் அடையாளங்களாக இருந்தாலும் இங்கே இவை அதிகாரத்தை குறிக்கிறன. எலிசா தன் முதல் அதிகாரத்தை தியாகம் செய்கிறார். விரும்தோம்பல் இஸ்ராயேல் சமூகத்தில் மிக முக்கியமானது இங்கே அது எலிசா தன்னுடைய இறைவாக்குப் பணியை அதிகமாக நேசித்தார், அத்தோடு அவர் நன்பர்கள் மற்றும் உறவினர்கள் அதனை ஏற்றுக்கொண்டனர் என்பவற்றைக் காட்டுகிறது. சில புதிய ஏற்பாட்டு அழைத்தல் காட்சிகளைப் போல இது இருப்பதனை இங்கு நோக்கலாம்

திருப்பாடல் 16
1இறைவா, என்னைக் காத்தருளும்; உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்துள்ளேன்
2நான் ஆண்டவரிடம் 'நீரே என் தலைவர்; உம்மையன்றி வேறு செல்வம் எனக்கு இல்லை' என்று சொன்னேன்
3பூவுலகில் உள்ள தூயோர் எவ்வளவோ உயர்ந்தோர்! அவர்களோடு இருப்பதே எனக்குப் பேரின்பம். 4வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றுவோர் தங்கள் துன்பங்களைப் பெருக்கிக்கொள்வர்; அவற்றுக்குச் செலுத்தப்படும் இரத்தப் பலிகளில் நான் கலந்து கொள்ளேன்; அவற்றின் பெயரைக்கூட நாவினால் உச்சரியேன்
5ஆண்டவர்தாமே என் உரிமைச் சொத்து; அவரே என் கிண்ணம்; எனக்குரிய பங்கைக் காப்பவரும் அவரே 
6இனிமையான நிலங்கள் எனக்குப் பாகமாகக் கிடைத்தன் உண்மையாகவே என் உரிமைச் சொத்து வளமானதே
7எனக்கு அறிவுரை வழங்கும் ஆண்டவரைப் போற்றுகின்றேன்; இரவில்கூட என் மனச்சான்று என்னை எச்சரிக்கின்றது
8ஆண்டவரை எப்போதும் என் கண்முன் வைத்துள்ளேன்; அவர் என் வலப்பக்கம் உள்ளார்; எனவே, நான் அசைவுறேன்
9என் இதயம் அக்களிக்கின்றது; என் உள்ளம் மகிழ்ந்து துள்ளுகின்றது; என் உடலும் பாதுகாப்பில் நிலைத்திருக்கும்
10ஏனெனில், என்னைப் பாதாளத்திடம் ஒப்பவிக்கமாட்டீர்; உம் அன்பனைப் படுகுழியைக் காண விடமாட்டீர்
11வாழ்வின் வழியை நான் அறியச் செய்வீர்; உமது முன்னிலையில் எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு; உமது வலப்பக்கத்தில் எப்போதும் பேரின்பம் உண்டு.

தாவீதின் மிக்டாம் (מִכְתָּם לְדָוִד) என்று இந்தப் பாடல் தொடங்குகின்றது. இந்த மிக்டாமின் அர்த்தம் என்னதென்று தெளிவு படுத்தப்படவில்லை. அதிகமானவர்கள் இந்த பாடலின் ஆசிரியராக தாவீதையே கருதுகின்றனர், அல்லது இது தாவீதுக்கு அழகாக பொருந்துகின்றது. அவர் இதனை தன்னுடைய மரண படுக்கையில் பாடினார் என்றும் சிலர் வாதாடுகின்றனர்

வவ. 1-3:  ஆசிரியர் ஒரு உண்மையான விசுவாசி என்பதை இந்த வரிகள் காட்டுகின்றன. அடைக்கலம் புகுதல், செல்வம் போன்றவை அக்கால நாடோடி மற்றும்  போரியல் வாழ்வில், ஒருவர் தேடுகின்ற முக்கியமான இலக்குகளாக இருந்தன. ஆசிரியர் தனது செல்வமாகவும், அடைக்கலமாகவும் ஆண்டவரைக் காண்பது, அவரின் விசுவாசத்தின் ஆழத்தைக் காட்டுகிறது. ஆண்டவரே என் செல்வம் என்பது எபிரேய மூல மொழியில், 'ஆண்டவரே என் நன்மைத்தனம்' என்றே உள்ளது. இந்த உலகில் தூயவராய் இருப்போரே மேன்மக்கள் என்ற வாதத்தையும் இந்தப் பாடல் முன்வைக்கிறது

. 4: வேற்றுத் தெய்வங்களும் துன்பங்களும் ஒன்றோடோன்று தொடர்பு பட்டுள்ளதாக இந்தப்பாடல் காட்டுகிறது. அந்த காலத்தில் இப்படியான வழிபாடுகளிலும் இஸ்ராயேலர் கலந்தனர் என்பதை இந்த பாடல் மறைமுகமக காட்டிச் சாடுகிறது. ஆசிரியர் இப்படியான தவறுகளை தான் செய்ய மாட்டார் என அறிக்கையிடுகிறார்

. 5-6: இந்த வரிகளை, இந்த திருப்பாடலின் மையக்கருத்தாக எடுக்கலாம். ஐந்தாவது வரியில் ஆசிரியர் ஆண்டவரை தன்னுடைய நிலச் சொத்துக்களைவிட மேலான சொத்தாக ஒப்பிடுகிறார். கிண்ணம் என்பது பல அர்தங்களை இஸ்ராயேலின் ஆன்மீகத்தில் குறிக்கிறது. பொருளாதாரத்தின் பலமான ஸ்திரத்தன்மையையும் அது குறிக்கும். இங்கே கிண்ணம் அந்த அர்த்தத்தில் வருவதுபோலவே இருக்கிறது. அத்தோடு ஆண்டவரை இவர் உடமையாக்கிக் கொண்டுள்ளதால் அந்த அனுபவத்தை இனிமையான நிலத்திற்கும், வளமான எதிர்காலத்திற்கும் ஒப்பிடுகிறார்

வவ. 7-8: 'மனச்சான்று' என்று தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது உண்மையில் சிறுநீரகத்தையை குறிக்கிறது (כִּלְיָה கில்யாஹ்- சிறுநீரகம்). சிறுநீரகம்தான் ஒழுக்கவியலின் சிந்தனையிடம் என்று அக்காலத்தில் கருதப்பட்டது. ஆண்டவரை வலப்பத்தில் வைத்துள்ளது என்பது ஆண்டவரை பலமான இடத்தில் அல்லது பலம் கொடுக்கிற இடத்தில் வைத்துள்ளதை குறிக்கிறது

. 9: இவர் ஆண்டவரை முக்கியமான இடத்தில் வைத்துள்ளதால், தனது இதயமும் உள்ளமும் மகிழ்வதாக உணர்கின்றார். இங்கே உள்ளம் என்பதற்கு 'கவோட்' (כָּבֵד) என்ற சொல் பாவிக்கப்பட்டுள்ளது, இது சாதாரணமாக மாட்சி அல்லது மகிமையைக் குறிக்கும், இங்கே இது ஒருவருடைய ஈரலைக் குறிப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஈரல் உள்ளுணர்வுகள் முக்கியமான சந்தோசம், மகிழ்ச்சி போன்றவற்றின் உரைவிடமாகவும் கருதப்பட்டது

வவ. 10-11: பத்தாவது வசனம் அழகாக திருப்பிக்கூறும் எபிரேய கவி வகையை (chiasmus) பிரதிபலிக்கிறது. 'என்னை' என்பது உயிரை அல்லது ஆன்மாவை குறிக்கிறது, அது பத்தாம் வரியின் இரண்டாவது பகுதியில் 'அன்பன்' என்று வருகிறது. சீயோலும் பாதாளமும் ஒத்தகருத்தாக திருப்பிக் கூறப்பட்டுள்ளன
-ம் என்னைப் - அன்பனைப்
 சீயோல்(பாதாளம்) - படுகுழி
வாழ்வின் வழி என்பது, உருவக அணியில் உயிரை பாதுகாத்தலை பாடும் ஒரு முறை. 'நிறைவான மகிழ்சி' என்பது மிக ஆழமான விவிலிய வார்த்தைகள், ஆண்டவர்தான் உண்மையானதும் நிறைவானதுமான மகிழ்சி என்பது இவருடைய நம்பிக்கையின் முதிர்ச்சியைக் காட்டுகிறது. இந்த திருப்பாடலின் காலத்தில், பலர் பேரின்பத்தை (נָעִים நஇம்- மகிழ்சிகரமான, அழகான, இனிமையான) பல இடங்களில் கண்டனர்: போரில், மெய்யறிவில், சிலைகளில், இயற்கையில் மற்றும் சிற்றின்பத்தில். இந்த ஆசிரியர் அந்த இனிமையை கடவுளின் இருப்பில் காண்கிறார், நம்மையும் அதனை உணரக்கேட்கிறார்

கலாத் 5,1.13-18
1கிறிஸ்து அடிமை நிலையிலிருந்து நம்மை விடுவித்து நமக்கு உரிமை வாழ்வை அளித்துள்ளார்; அதில் நிலைத்திருங்கள். மீண்டும் அடிமைத்தளை என்னும் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொள்ளாதீர்கள்.

13அன்பர்களே, நீங்கள் உரிமை வாழ்வுக்கு அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்; அந்த உரிமை வாழ்வு ஊனியல்பின் செயல்களுக்கு வாய்ப்பாய் இராதபடி பார்த்துக் கொள்ளுங்கள். ஒருவருக்கு ஒருவர் அன்பின் அடிமைகளாய் இருங்கள். 14'உன்மீது நீ அன்புகூர்வது போல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்புகூர்வாயாக' என்னும் இந்த ஒரே கட்டளையில் திருச்சட்டம் முழுவதும் நிறைவு பெறுகிறது. 15ஆனால் நீங்கள் ஒருவரை ஒருவர் கடித்து விழுங்குவதை நிறுத்தாவிட்டால் ஒருவரால் ஒருவர் அழிக்கப்படுவீர்கள். எச்சரிக்கை! 16எனவே நான் சொல்கிறேன்; தூய ஆவியின் தூண்டுதலுக்கேற்ப வாழுங்கள்; அப்போது ஊனியல்பின் இச்சைகளை நிறைவேற்ற மாட்டீர்கள். 17ஊனியல்பின் இச்சை தூய ஆவிக்கு முரணானது
தூய ஆவியின் விருப்பம் ஊனியல்புக்கு முரணானது. இவை ஒன்றுக்கொன்று எதிராய் உள்ளதால் நிங்கள் செய்ய விரும்பவதை உங்களால் செய்ய முடிவதில்லை. 18நீங்கள் தூய ஆவியால் வழிநடத்தப்பட்டால் திருச்சட்டத்திற்கு உட்பட்டவர்களாய் இருக்கமாட்டீர்கள்.

  இன்றைய இரண்டாவது வாசகம் கடந்த வாரங்களைப்போல, கலாத்தியருக்கு பவுல் எழுதிய திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. பவுல் இந்தப் பகுதியிலும் கிறிஸ்தவ அழைப்பின் மகத்துவத்தை தொடர்ந்து வியாபிப்பதை காணலாம். இதற்கு முற் பகுதியில் (5,1-12) விருத்தசேதனத்தைப் பற்றி பேசிய பவுல் இந்தப் பகுதியில் அன்பின் முக்கியத்துவத்தை பற்றி விவாதிக்கிறார். பவுல் இங்கே அன்பிற்கு 'அகாப்பே' ἀγάπη என்ற சொல்லையே பாவிக்கிறார். இது சாதாரண விருப்பம், இஷ்டம், சிநேகம் என்பதனையும் தாண்டி, அழகான தியாக இறையில் இறையன்பை குறிக்கிறது. பவுல் இந்த வார்த்தையை அதிகமாகவே பாவிக்கிறார். இந்த வார்த்தைக்கும் அகாப்பே உணவிற்கும் நெருங்கிய தொடர்பிருக்கிறது. இந்த அகாப்பே உணவு ஆண்டவரின் நற்கருணை கொண்டாட்டத்தின் ஆரம்பத்தில், தொடக்க கிறிஸ்தவர்களால் முதல் நிகழ்வாக கடைப்பிடிக்கப்பட்டது

. 1: பவுலுடைய இந்த வரி அவதானமாக நோக்கப் படவேண்டும். கிரேக்க விவிலியம் 
இதனை இவ்வாறு கொண்டுள்ளது. 'விடுதலைக்காக கிறிஸ்து நம்மை விடுதலையாக்கியுள்ளார், ஆகவே அவதானமாய் இருங்கள். மீண்டும் அடிமைத்தனத்தின் நுகத்தை ஏற்றுக்கொள்ளாதீர்கள' தமிழில் ஐந்தாம் வேற்றுமையுருபு பாவிக்கப்பட்டுள்ளது (ablative case- இருந்து ab). மூல கிரேக்க பாடம் நான்காம் வேற்றுமையுருபை பாவிக்கிறது (dative caseling- ஆக, பொறுட்டு ad). இது, கிறிஸ்து நம்மை விடுதலையாக்கியதன் நோக்கத்தையும் இலக்கையும் தெளிவாக காட்டுகிறது. விடுதலை பெற்றவர்களாய் இருக்கவே நம்மை அவர் விடுதலையாக்கினார் என்ற வரி, கிறிஸ்து தரும் வாழ்வின் சாரம்சத்தைக் காட்டுகிறது. இந்த சுதந்திரம் அல்லது விடுதலை என்பது உரிமை வாழ்வை கிரேக்க உலகில் குறித்துக் காட்டியது. அத்தோடு இதனை மோசேயின் சட்டங்களிடமிருந்து வரும் விடுதலையாகவும் எடுக்கலாம். பவுல் இங்கு இச்சை கலந்த காட்டுச் சுதந்திரத்தை பற்றி வாதிக்கவில்லை என்பதனை அவதானமாக வாசிக்க வேண்டும்

. 13: உரிமை வாழ்வு (விடுதலை) மற்றும் ஊனியல்பின் வாழ்வு போன்றவை கிரேக்க மெய்யியலில் ஆதிக்கம் செலுத்திய கருத்தியல்கள். இந்த விடுதலை அல்லது உரிமை வாழ்வு என்பது அரசியல், அக, புற விடுதலைகளையும் குறித்தது. இந்த பின்புலத்தில் கிறிஸ்து கொண்டுவந்த முழுமையான விடுதலை வாழ்வை பவுல் நினைவூட்டுகிறார். சில வேளைகளில் இந்த விடுதலை தவறான வழியில் கோடிடப்பட்டது. தான்தோன்றித்தனமான வாழ்வுக்கும், எதையும் செய்யும் உரிமையாகவும் இது தவறாக பாவிக்கப்பட்டது. பவுல் இப்படியான தவறான சுதந்திரத்தை இன்னொரு அடிமைத்தனம் என்கிறார். அதாவது உடலிச்சையின் அடிமைத்தனம் என்கிறார். கிறிஸ்து தந்த விடுதலை, அன்பிற்கு சேவை செய்வதற்கே, என்று பவுல் சொல்வது இன்னொரு அழகான பவுலின் வாதத்தை முன்வைக்கிறது. விடுதலை என்பது நல்லதை செய்வதற்கேயன்றி விரும்பியதெல்லாம் செய்வதற்கல்ல என்ற பவுலின் வாதம் மீண்டும் மீண்டும் கலாத்தியர் திருமுகத்தில் மேலோங்குவதைக் காணலாம்

. 14: இந்த அன்புக் கட்டளையை இயேசு ஆண்டவர் லேவியர் 19,18 இல் இருந்து நன்கு அறிந்திருப்பார். இந்தக் கட்டளையில் 'அடுத்திருப்பவர்' என்பவர் யூத சகோதரர் மட்டுமல்ல மாறாக அனைவரும் என்ற விஸ்தரிப்பை இயேசு முன்வைத்து விளக்கினார், இதனையே பவுலும் ஆழப்படுத்துகிறார். இந்த கட்டளையால்தான் திருச்சட்டம் (தோரா) முழுமைபெறுகிறது என்கிறார் பவுல்

. 15: ஒருவரை ஒருவர் கடித்து விழுங்குதல் என்பது மிருகங்கள் வனத்தில் உணவிற்காகவும் 
இருப்பிற்காகவும் செய்கின்ற போராட்ட மனப்பான்பை. இந்த வசனம் கலாத்தியர் திருச்சபையில்
இருந்த பிளவுகளையும் அதன் ஆபத்துக்களையும் நமக்கு நினைவூபடுத்தலாம். (இன்றைய தல திருச்சபைகளில் இருக்கின்ற அசிங்கமான பிளவுகள் திருச்சபையின் ஒருமைப் பாட்டிற்கு ஆபத்தை விளைவிப்பதனை இங்கு நினைவுகூறலாம்). 

வவ. 16-18: தூயஆவிக்கு ஊனியல்பின் இச்சைகளும், தேவையில்லாத திருச்சட்ட அடிமைத்தனங்களும் ஒவ்வாது என்கிறார் பவுல். ஊனியல்பின் இச்சைகளோடு திருச்சட்டத்தை பவுல் ஒப்பிடவில்லை மாறாக தூய ஆவியின் வாழ்விற்கு இவை இடைஞ்சல்களாக இருக்கின்றன என்னும் வாதத்தையே முன்வைக்கிறார். ஊனியல்பு என்று இங்கே வாதடப்படுவது மனிதர்களின் உடல் இச்சைகளை குறிக்கிறது (ἐπιθυμίαν σαρκὸς எபிதுமியான் சார்க்கோஸ் - உடலின் இச்சைகள்).     

லூக்கா 9,51-62
51இயேசு விண்ணேற்றம் அடையும் நாள் நெருங்கி வரவே எருசலேமை நோக்கிச் செல்லத் தீர்மானித்து, 52தமக்கு முன் தூதர்களை அனுப்பினார். அவருக்கு இடம் ஏற்பாடு செய்வதற்காக அவர்கள் சமாரியருடைய ஓர் ஊருக்குப் போய்ச் சேர்ந்தார்கள். 53அவர் எருசலேம் செல்லும் நோக்கமாயிருந்ததால் அவர்கள் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை. 54அவருடைய சீடர்கள் யாக்கோபும் யோவானும் இதைக் கண்டு, 'ஆண்டவரே, வானத்திலிருந்து தீ வந்து இவர்களை அழிக்குமாறு செய்யவா? இது உமக்கு விருப்பமா?' என்று கேட்டார்கள்.
55அவர் அவர்கள் பக்கம் திரும்பி, அவர்களைக் கடிந்து கொண்டார். 56பின்பு அவர்கள் வேறோர் ஊருக்குச் சென்றார்கள்.
57அவர்கள் வழி நடந்தபோது ஒருவர் அவரை நோக்கி, 'நீர் எங்கே சென்றாலும் நானும் உம்மைப் பின்பற்றுவேன்' என்றார். 58இயேசு அவரிடம், 'நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மானிடமகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லை' என்றார். 59இயேசு மற்றொருவரை நோக்கி, 'என்னைப் பின்பற்றிவாரும்' என்றார். அவர், 'முதலில் நான் போய் என் தந்தையை அடக்கம் செய்துவிட்டுவர அனுமதியும்' என்றார். 60இயேசு அவரைப் பார்த்து, 'இறந்தோரைப் பற்றிக் கவலை வேண்டாம். அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள். நீர் போய் இறையாட்சியைப் பற்றி அறிவியும்' என்றார். 61வேறொருவரும், 'ஐயா, உம்மைப் பின்பற்றுவேன்; ஆயினும் முதலில் நான் போய் என் வீட்டில் உள்ளவர்களிடம் விடைபெற்று வர அனுமதியும்' என்றார். 62இயேசு அவரை நோக்கி, 'கலப்பையில் கை வைத்தபின் திரும்பிப் பார்ப்பவர் எவரும் இறையாட்சிக்கு உட்படத் தகுதியுள்ளவர் அல்ல' என்றார்.

தூய லூக்கா, மாண்பு மிகு வைத்தியர் தன்னுடைய நற்செய்தியின் ஒன்பதாவது அதிகாரத்திலே ஆண்டவருடைய விண்ணேற்றத்தை நினைவூட்டுகிறார். ஒன்பதாவது அதிகாரத்திலிருந்து பதினெட்டாவது அதிகாரங்கள் ஆண்டவருடைய எருசலேம் பயணத்தையும் அவ்வழி போதனைகளையும் நினைவூட்டுகின்றன. இன்றைய வாசகப் பகுதி சீடத்துவத்தையும் கேள்விகளையும் அதன் தகுதிகளையும் நினைவூட்டுகின்றன. லூக்கா நற்செய்தி சீடத்துவத்தின் 
இன்னல்களையும் அது சந்திக்கின்ற சவால்களையும் இன்னொரு கோணத்தில் எடுத்தியம்புகிறதுஇயேசு ஆண்டவரே, இந்த சவால் நிறைந்த சீடத்துவத்தின் முன்னடையாளம் மற்றும் உதாரணம் என்பது லூக்காவின் எடுத்துக்காட்டு. இங்கே லூக்கா காட்டுகின்ற பயணம் எருசலேமை நோக்கியதாக இருந்தாலும், ஒரு பயணத்தில் இவையனைத்தும் நடந்ததா என்ற கேள்விக்கு விடைகாண்பது அரிதாகவே இருக்கிறது. சில நிகழ்வுகள் இந்த அதிகாரங்களின்படி கலிலேயாவில் நடந்திருக்கலாம், ஆனால் லூக்கா அவையனைத்தையும் இங்கே எருசலேம் நோக்கிய பயணத்திலே குழுப்படுத்துகிறார். யோவான் நற்செய்திப்படி இயேசு பல சந்தர்பங்களில் எருசலேம் நகருக்கு சென்றிருக்கிறார் ஆகவே அவருடைய போதனைகள் எருசலேமில் பலவாக இருப்பதுஏற்றுக்கொள்ளக்கூடியது. இந்த 'பயணம்' என்கின்ற எண்ணக்கருதுகோள் இஸ்ராயேல் மக்களின்பாலைவன துன்பங்கள் நிறைந்த பயணத்தை நினைவூட்டுகிறது. இந்த பாலைவன பயணத்தைப் போலவே, துன்பங்கள் நிறைந்த ஆனால் வளமான வாழ்வைநோக்கிய பயணமே சீடத்துவம் என்று லூக்கா காட்சி படுத்துவதாக தோன்றுகிறது

சமாரியா-சமாரியர்
வடஅரசில் தலைநகராக இருந்த இஸ்ராயேல் நாட்டின் முக்கியமான நகரம். ஒம்ரி என்னும் வட அரசின் அரசனே இந்த நகரத்தை தன்னரசின் தலைநகராக்கினார். எருசலேமைவிட உயரமானதாகவும் சற்று வளமானதாகவும் இது இருக்கிறது. இந்த சமாரியாவில்தான் பிரசித்த பெற்ற கெரசிம் மலையும் அமைந்துள்ளது. வடஅரசின் வீழ்சியின் பின்னர் இங்கே இருந்த இஸ்ராயேலரை அசிரியர்கள் நாடுகடத்தியிருந்தனர். அங்கே அவர்கள் தங்கள் தனித்துவத்தை இழந்தார்கள் அல்லது சிதைந்து போனார்கள் என்று தென் நாட்டு யூதர்க்ள் இன்றுவரை கருதுகின்றார்கள். இவாக்ளுள் சிலர் தென்நாட்டிற்கும் வந்து குடியேறினார்கள். சிலர் எகிப்து போன்ற வேறு நாடுகளுக்கும் சென்றுவிட்டார்கள் என்ற வாதமும் இருக்கிறது. அசிரியர்கள் தாங்கள் கைப்பற்றி அழித்த சமாரியாவில் வேறு மக்களை கொணர்ந்து குடியேற்றினர் இதனால்; இஸ்ராயேல்தமது தனித்துவத்தை இங்கே இழந்தனர் என்பது பபிலோனியாவில் இருந்த வந்த தென்நாட்டு யூதர்களின் வாதம். இந்த இரண்டு குழுக்களான ஒரே மக்களுக்கு பல யுகங்களாக பகைமை வளர்ந்து கொண்டே வந்தது. யூதர்கள் சமாரியர்களை உண்மை இஸ்ராயேலர்களாக ஏற்பதில்லை, பதிலுக்கு சமாரியர் எருசலேமையோ அத்தோடு யூதர்களின் முழு விவிலியத்தையோ உண்மையானதாக ஏற்பதில்லை
  சமாரியர் தங்களுக்கென்று சமாரிய முதல் ஐந்துநூல்களை (தோரா) வைத்திருக்கிறார்கள் இதுதான் உண்மையான மோசேயின் சட்டம் என்றும் வாதிடுகின்றனர். சமாரியாவில் இஸ்ராயேலரைவிட வேறு மக்களும் வந்து குடியிருந்ததை வரலாற்றில் காணலாம். சமாரியர் பல வழிகளில் யூதர்களை ஒத்திருந்தாலும் சில நம்பிக்கைகளிலும், சம்பிரதாயங்களிலும் அவர்கள் யூதர்களை விட தனித்துவமானவாக்ளாகவே இருந்தார்கள். ஒரே கடவுள், அவர் இணைப்பாளர் மோசே, திருச்சட்டம், மெசியா மற்றும் அவரின் வருகை போன்றவை இவர்களின் விசுவாசத்தின் அடிப்படையாக அமைந்துள்ளது. கெரசிம் மலையில் தங்களுக்கென்று ஒரு கோவிலை கட்டினார்கள். கிரேக்கர் காலத்தில், மக்கபேயரின் கிளர்சியின் பின்னர், யூதர்கள் இந்த மலையில் மனித எலும்புகளை கொட்டி சமாரியர்கனை அசிங்கப்படுத்தினார்கள் என சில வரலாற்று சான்றுகள் கூறுகின்றன. எது எவ்வாறெனிலும் சமாரியாவிற்கும் எருசலேமிற்கும் இடைவெளி இருந்ததனைப் போலவே அவர்கள் உறவிலும் பல விரிசல்கள் இருந்தது. (மேலும் சமாரியவையும் சமாரியரையும் பற்றி அறிய http://www.bible-history.com/geography/ancient-israel/samaria.html)

வவ. 51-52: இயேசு கலிலேயாவில் இருந்து சமாரியா ஊடாக எருசலேம் செல்கிறார். சாதரணமாக யூதர்கள் சமாரியாவை விலத்தி, அதனை சுற்றியே எருசலேமை அடைந்தனர். சமாரியா தீட்டான இடம் என்ற பிழையானதும் திரிவுபடுத்தப்பட்டதுமான வாதம் அவர்களின் சிந்தையில் பலமாக இருந்தது. இயேசு இந்த தீய சிந்தனைக்கு இடம் கொடாமையை இங்கே காணலாம். இயேசு தான் மட்டும் போனது அன்றி தன் சீடர்களையும் இங்கே அதனை செய்ய வைக்கிறார்

வவ. 53-55: இந்த வசனங்கள் மூன்று விதமான எதிர்வினைகளைக் காட்டுகின்றன.

. சமாரியர் வழக்கம் போல யூதர்களை வெறுக்கிறார்கள். இவர்களின் வெறுப்பில் ஒரு சின்ன நியாயம் இருக்கிறது. ஏன் எருசலேமை நோக்கி இயேசுவின் பார்வையிருக்க வேண்டும் என்பது அவர்களின் பிரதேசவாதம் கலந்த கேள்வி

. சமாரியரின் வெறுப்பினைக் கண்ட சீடர்களுக்கு மாற்றுக்கோபம் வருகிறது. யாக்கோபுக்கும் யோவானுக்கும் கோபம் பொங்க, வானிலிருந்து இடியை வரவைக்க ஆண்டவரிடம் அனுமதிகேட்கின்றனர். ஆக அவர்களுக்கு இடிமீது அதிகாரம் இருந்திருக்க வேண்டும் அல்லது தாங்கள் இயேசுவின் சீடர்களாய் இருப்பதனால் அதனை செய்ய முடியும் என்ற நம்பிக்கை 
இருந்திருக்க வேண்டும். சில சிறிய கிரேக்க பாடங்களில் இந்த வசனத்தில் 'எலியா செய்தததைப்போல' என்ற வசனமும் சேர்க்கப்பட்டுள்ளது. இது அரசர்கள் புத்தகத்தில் எலியா வானிலிருந்து நெருப்பை வரவழைத்து படைவீரர்களை தண்டித்ததை நினைவூட்டுகிறது (காண்க 2அர 1,10). யோவானும் யாக்கோபுவும் தங்களது கோபத்திற்கும் மற்றும் ஆசைக்கும் பெயர் பெற்றவர்கள். இவர்கள் தான் ஆண்டவரின் ஆட்சியில் தலைமைப் பொறுப்புக்களை கேட்டவர்கள் (காண்க மாற்கு 10,37). மாற்கு இவர்களைத்தான் 'இடியின் மக்கள்' என பெயரிடுகிறார். இவர்கள் ஆண்டவரிடம் விருப்பம் கேட்பது, ஆண்டவர் எப்போதும் யூதர்கள் பக்கம்தான் இருக்கிறார் என்ற அளவுகடந்த நம்பிக்கை இவர்களிடம் இருந்ததை காட்டுகிறது

. இயேசுவின் எதிர்வினை அவர்களை கடிந்து கொள்கிறது. சீடர்களை தங்களது அர்தமற்ற கோபத்திற்காக கடிந்து கொள்ளும் இயேசு, இன்னொரு ஊரை தெரிவுசெய்வதன் மூலமாக தன் சிறு கோபத்தை வெளிப்படுத்துகிறார். 55வது வசனம் சில வார்த்தைகளை, வேறு கிரேக்க பாடங்களில் மேலதிகமாகக் கொண்டுள்ளது. இவர்களை கடிந்து கொள்கின்ற ஆண்டவர், அவர்களின் உள்ள எண்ணங்களை சோதிக்கிறார், தான் அழிப்பதற்கல்ல மாறாக மீட்கவே வந்துள்ளேன் என்கிறார்.

வவ. 57-61: இந்த பகுதியில் சீடத்துவத்தின் கேள்வியையும் அதன் அழைப்பின் மறைபொருளையும் விளங்கப்படுத்த லூக்கா முயற்சி செய்கிறார். முதலாவது நபர் ஆண்டவரை தான் பின்பற்ற அனுமதி கேட்கிறார் அவருக்கு ஆண்டவர் சீடத்துவத்தின் துன்பங்களை காட்டுகிறார். தன்னை மனுமகனாகவும் மற்றவர்களை நரிகளாகவும் வானத்து பறவைகளாகவும் ஒப்பிட்டு மன்னின் மைந்தர்களுக்கு நிலம் இல்லை, நரிகளான எட்டப்ப ஏரோதுக்களுக்கும், வானத்து பறவைகளான உரோமையருக்கும் நிலம்பிடிப்பாளர்களுக்கும் அதிகமான இடங்கள் இருப்பதாக ஆண்டவர் மறைமுகமாக சாடுகிறார் என்றும் சில விளக்கவுரையாளர்கள் காட்டுகின்றனர். இரண்டாவது நபரை ஆண்டவரே அழைக்கிறார், ஆனால் அவர் இஸ்ராயேலர்களின் முக்கியமான கடமைகளின் ஒன்றான இறந்தோரை அடக்கம் செய்ய அனுமதிகேட்கிறார். இந்த இறந்தோரின் அடக்கத்தைவிட இறையாட்சியின் அறிவிப்பு முக்கியம் என்பதை ஆண்டவர் தெளிவு படுத்துகிறார். இந்த அழைப்பில் இறையாட்சியின் அவசரம் தெரிகிறது. இறப்வை விட வாழ்வின் முக்கியத்துவமும் தெரிகிறது. இவர் பின்னர் ஆண்டவரின் சீடத்துவத்தில் இனைந்துகொண்டாரா என்பது பற்றி லூக்கா விவரிக்கவில்லை, இங்கே இந்த நபரைவிட அவர் மூலமாக லூக்கா சொல்லவருகின்ற செய்தியைத்தான் அவதானிக்க வேண்டும். மூன்றாவது நபர் நிபந்தனை வைக்கிறார். வீட்டில் அனுமதி பெற்றுவர இயேசுவிடம் அனுமதி கேட்கிறார். எலிசா இதனைத்தான் எலியாவிடம் கேட்டார். எலிசாவிற்கு அனுமதி கிடைத்தது, இவருக்கு அனுமதி கிடைக்கவில்லை. ஒருவேளை எலியாவின் சீடத்துவத்தைப் போல் அல்ல இயேசுவின் சீடத்துவம் என லூக்கா சொல்ல வரலாம். இந்த சீடத்துவம் முதல் ஏற்பாட்டுச் சில சட்டங்களையும் மீறி, அதனை தழுவ வேண்டும் என்ற கடினமான உண்மையை காட்டுகிறது.

. 61: இயேசுவின் முதல் சீடர்களில் அதிகமானவர்கள் மீனவர்கள், இப்படியிருக்க தன் சீடத்துவத்திற்கு உதாரணமாக கலப்பையை ஆண்டவர் உதாரணமாக்குவது அதிசயமாயிருக்கிறது. கலப்பை கொழுவில் கைவைக்கும் விவசாயி முன்நோக்கியே பார்க்க வேண்டும் அப்போதுதான் நேர்த்தியாக உழ முடியும். இந்தக் கொழு முதல் ஏற்பாட்டில் உருவகமாக பாவிக்கப்படுகிறது. விவிலிய ஆசிரியர்கள் இதனை அமைதியின் அடையாளமாகவும், இறையாட்சின் அடையாளமாகவும் காட்டியிருக்கிறார்கள். விவசாய நுண்ணறிவு வளராத அக்காலத்தில், இந்தக் கொழுவின் திடமும் கூர்மையும் அந்த தொழிலின் திறனை முடிவுசெய்தது. 'இறையாட்சி' என்பது லூக்கா நற்செய்தியில் முக்கியமான ஒரு இறையியல் எண்ணக்கரு. இந்த இறையாட்சியில் அனைவரும் சீடர்களே என்று அழகாக வாதிடுகிறார் லூக்கா

சீடத்துவம் அதனை கொடுப்பவராலேயே புனிதம் பெறுகிறது
சீடராகிறவர் முதலில் அழைப்பு பெறவேண்டும் 
பின்னர் அந்த அழைப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்
அதிகமானவாக்ள் அழைப்புக்கு ஏங்குகின்ற போதும் 
சிலருக்கே அது கொடுக்கப்படுகிறது
அழைப்பு பெற்றவர்களுள் பலர் 
அந்த அழைப்பை நிராகரிப்பதும் சாதாரணமாகிவிட்டது
சீடர்களுக்கு ஆண்டவரைத் தவிர பெருமைப் பட வேறோன்றும் இருக்க முடியாது
அழைப்பின் மகத்துவமும்
இறையாட்சியின் கௌரவமும் ஆண்டவரில் தங்கியுள்ளதே அன்றி 
சீடரின் பிறப்பிலோ அல்லது அவர்களில் திறமைகளிலோ தங்கியிராது
தேவைப்பட்டால் அவற்றையும் கடவுள் பாவிபபார்.

அழைப்பின் ஆண்டவரான இயேசுவே!
உம்மைபோல உம் சீடர்களையும் அழைப்பின் மகத்துவத்தை உணரப்பண்ணும்.
இறையாட்சிக்காக அழைப்பேயன்றி, அழைப்பிற்காக இறையாட்சி இல்லை என்பதையும் 
தொடர்ந்து காட்டியருளும். ஆமேன்.


ஆண்டின் பொதுக்காலம் முப்பத்திநான்காம் வாரம் கிறிஸ்து அரசர் பெருவிழா:  Our Lord Jesus Christ, King of the Universe 24.11.2024

ஆண்டின் பொதுக்காலம் முப்பத்திநான்காம் வாரம்   கிறிஸ்து அரசர் பெருவிழா :  Our Lord Jesus Christ, King of the Universe 24.11.2024 இய...