சனி, 25 மே, 2019

பாஸ்கா காலம் ஆறாம் வாரம்; Sixth Week of Easter C



பாஸ்கா காலம் ஆறாம் வாரம்;
26,மே,2019
அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்; என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன்.
(யோவான் 14,27)

மி.ஜெகன் குமார் அமதி
சங்கமம்
அமதிகள் ஆன்மீக மையம்,
கோப்பாய் தெற்கு,
யாழ்ப்பாணம்.


முதல் வாசகம்: திருத்தூதர் பணிகள் 15,1-2.22-29.
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 67.
இரண்டாம் வாசகம்: திருவெளிப்பாடு 21,10-14.22-23.
நற்செய்தி: யோவான் 14,23-29.

திருத்தூதர் பணி 15,1-2.22-29
1யூதேயாவிலிருந்து வந்த சிலர், நீங்கள் மோசேயின் முறைமைப்படி விருத்தசேதனம் செய்து கொள்ளாவிட்டால் மீட்படைய முடியாது' என்று சகோதரர் சகோதரிகளுக்குக் கற்பித்து வந்தனர். 2அவர்களுக்கும் பவுல், பர்னபா ஆகியோருக்குமிடையே பெருங் கருத்து வேறுபாடும் விவாதமும் உண்டாயின. எனவே பவுலும் பர்னபாவும் அவர்களுள் சிலரும் எருசலேமுக்குச் சென்று, திருத்தூதர்களிடமும் மூப்பர்களிடமும் இந்த சிக்கலைக் குறித்துக் கலந்து பேசுமாறு நியமிக்கப்பட்டனர்.

சங்கத்தின் தீர்மானம்
22பின்பு திருத்தூதர்களும் மூப்பர்களும் திருச்சபையார் அனைவரும் தம்முள் சிலரைத் தேர்ந்தெடுத்து அவர்களைப் பவுலோடும் பர்னபாவோடும் அந்தியோக்கியாவுக்கு அனுப்புவது என்று தீர்மானித்தனர். அவ்வாறே அவர்கள் சகோதரர்களிடையே முதன்மை இடம் பெற்றிருந்த பர்சபா என அழைக்கப்பட்ட யூதாவையும் சீலாவையும் தேர்ந்தெடுத்தார்கள். 23பின்பு அவர்கள் ஒரு கடிதத்தை எழுதி அவர்கள் கையில் கொடுத்து அனுப்பினார்கள். அக்கடிதத்தில், 'திருத்தூதரும் மூப்பரும் சகோதரருமாகிய நாங்கள் அந்தியோக்கியா, சிரியா, சிலிசியா ஆகிய இடங்களிலுள்ள பிற இனத்துச் சகோதரர் சகோதரிகளுக்கு வாழ்த்துக் கூறுகின்றோம். 24எங்களுள் சிலர் அங்கு வந்து தங்களுடைய பேச்சால் உங்களது மனத்தைக் குழப்பி உங்களைக் கலக்கமுறச் செய்தனர் என்று கேள்விப்பட்டோம். இவர்களுக்கு நாங்கள் எந்தக் கட்டளையும் கொடுக்கவில்லை. 25எனவே, நாங்கள் ஒருமனத்துடன் கூடிவந்து சிலரைத் தேர்ந்தெடுத்து எம் அன்புக்குரிய பர்னபா, பவுல் ஆகியோரோடு உங்களிடம் அனுப்புவதென்று தீர்மானித்தோம். 26இவர்கள் இருவரும் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுக்காகத் தங்கள் உயிரையும் கொடுக்கத் துணிந்தவர்கள். 27எனவே, நாங்கள் 
யூதாவையும் சீலாவையும் உங்களிடம் அனுப்புகிறோம். அவர்கள் நாங்கள் எழுதுகிற இவற்றைத் தங்கள் வாய்மொழி மூலம் உங்களுக்கு அறிவிப்பார்கள். 28இன்றியமையாதவற்றைத் தவிர அதிகமான வேறு எந்தச் சுமையையும் உங்கள் மேல் சுமத்தக்கூடாது என்று தூய ஆவியாரும் நாங்களும் தீர்மானித்தோம். 29சிலைகளுக்குப் படைக்கப்பட்டவை, இரத்தம், கழுத்து நெரிக்கப்பட்டுச் செத்தவை மற்றும் பரத்தைமை ஆகியவற்றை நீங்கள் தவிர்த்து உங்களைக் காத்துக்கொள்வது நல்லது. வாழ்த்துகள்' என்று எழுதியிருந்தார்கள்.

எருசலேம் பொதுச் சங்கம்
மனிதர்கள் தங்களது மட்டுப்படுத்தப்பட்ட சிந்தனைகளை கடவுளின் உதடுகளில் வைக்கிறபோது சகிப்பின்மை தோன்றுகிறது. இது வரலாற்றில் தோன்றிய பல போர்களுக்கு காரணமாகிறது. இன்றைய முதல் வாசகம் திருச்சபையினுடைய முதலாவது பொதுச் சங்கத்தினைப் பற்றியும் அது தோன்றிய வரலாற்றுத் தேவையைப் பற்றியும் விவரிக்கிறது (காண்க தி. 15,1-29). ஆரம்ப கால திருச்சபையில் முதலில் இணைந்தவர்களும் அனைத்து திருத்தூதர்களும் இஸ்ராயேலராகவே இருந்தனர், அதாவது யூத மதத்திலிருந்து வந்தவர்களாகவோ அல்லது யூத கோட்பாடுகளை கைவிடாதவர்களாகவோ இருந்தனர். திருச்சபை எருசலேமை விட்டு வெளியில் சென்றபோது, முக்கியமாக அந்தியோக்கியாவிற்கும் அத்தோடு பவுலுடைய மறைபரப்பு பணியினால் சின்ன ஆசியாவிற்கும் பரவத்தொடங்கியபோது யூதரல்லாத மற்றைய விசுவாசிகள் திருச்சபையில் இணைந்து கொள்கின்றனர். இந்த வேளையில் யூத கிறிஸ்தவர்களுக்கும், யூதரல்லாத கிறிஸ்தவர்களுக்கும் மோசேயின் சட்டங்களை அடிப்படையில் கொண்ட பல விவாதங்களும் கருத்து முரண்பாடுகளும் தோன்றுகின்றன. அந்தியேக்கியாவில் தோன்றிய இந்த கருத்து முரண்பாடு எருசலேமிலும் வாத-பிரதி வாதங்களை தோற்றுவிக்கின்றது. இந்த சங்கத்தில் யூத கிறிஸ்தவர்கள் விருத்தசேதனத்தை அனைவருக்கும் கட்டாயமாக்க கேட்கின்றனர். பேதுரு தான் கொர்னேலியு வீட்டில் பெற்ற அனுபவத்தைக் கொண்டு யூத சட்டங்கள் அனைவருக்கும் பொருந்தாது என விளக்குகிறார்
பவுலும் பர்ணபாவும் தங்களது மறை பரப்புப் பணி அனுபவத்தை பகிர்கின்றனர். யாக்கோபு 
இறுதியாக விவிலிய சாற்றுகளைக்காட்டி பேதுருவுக்கு சார்பாக பேசுகிறார். இறுதியாக ஒருவரின் சடங்கு முறைகள் மற்றவர்கள் மேல் திணிக்கப்படக்கூடாது என இரண்டு குழுக்களுக்கும் பொதுவான முடிவு எடுக்கப்படுகிறது. மனிதர்கள் குழுவாதத்தை முன்வைத்தபோது தூய ஆவியார் பொதுவாத மனப்பாங்கை முன்வைத்து முடிவெடுக்க சந்தர்பத்தை ஏற்படுத்துகிறார். இதன் விளைவுதான் திருத்தூதர்கள் அந்தியோக்கியாவிற்கு அனுப்பிய மேய்ப்புப் பணி திருமுகம்.  

வவ. 1-2: 
. பிரிவினை வாதம் திருச்சபையின் வரலாற்று பிரச்சனையான அனுபவம். யார் இந்த எருசலேமிலிருந்து வந்தவர்கள்? இவர்கள் யூத கிறிஸ்தவர்களாக இருக்கலாம் அல்லது பரிசேயர் சார்பான கிறிஸ்தவர்களாக இருக்கலாம். இங்கே இவர்களுடைய பிரச்சனை இயேசு ஆண்டவர் அல்ல மாறாக விருத்தசேதனமும், யூத சடங்குகளுமாகும். விருத்தசேதனம் (περιτομή; பெரிடொமே) இஸ்ராயேல் மக்கள் தாங்கள் கடவுளுடன் செய்த உடன்படிக்கையின் அடையாளம். ஆபிரகாம் இதனை முதலில் தன்வீட்டில் தொடங்கிவைத்தார் என காண்கிறோம் (காண் தொ.நூ 17,10). இது எபிரேயத்தில் מוּלָה முலாஹ் என அழைக்கப்படுகிறது. இதனை இஸ்ராயேல் மக்கள் மட்டுல்ல பல செமித்தியர் தங்களது மருத்துவ அல்லது தூய்மை சடங்காக கொண்டிருந்தனர். இதனை இஸ்ராயேல் மக்களுக்கு முன்பே பலர் கடைப்பிடித்திருந்திருக்கின்றனர் என்பது வரலாறு. இயேசுவும் அனைத்து திருத்தூதர்களும் விருத்த சேதனம் செய்யப்பட்டவர்களாகவே இருந்தனர். இயேசு தன் போதனைகளில் இதனை ஒரு பொருட்டாகவே கருதவில்லை (காண்க யோவான் 7,22). 

. பவுலும் பர்னபாவும் நாடுகடந்த யூதர்களாக இருந்தபோதும், யூத சட்டங்களை கடைப்பிடித்தவர்கள். ஆனால் தங்களது சட்டங்களுக்கு மேலாக இயேசுவை நேசித்தபடியால் இங்கே யூதரல்லாத கிறிஸ்தவர்கள் மேல் தங்கள் சட்டங்களை திணிக்காமல் இருக்கிறார்கள். அந்தியோக்கிய திருச்சபை இவர்களை எருசலேம் திருச்சபையுடன் கலந்தாலோசிக்க பணியமர்த்துகிறது

. 22: பலமான வாதங்கள் அனுபவப் பகிர்வுகளுக்குப் பின் யூதாவையும் சீலாவையும், பவுல் பர்னபாவுடன் அந்தியோக்கியாவிற்கு அனுப்புகிறது எருசலேம். இந்த யூதாவும் சீலாவும் பின்னர் முக்கியமான பணியாளர்களாக உருவெடுத்தனர். தெரிந்தெடுத்தலும் அனுப்புதலும் திருச்சபையின் முக்கியமான பணிகளாகும், இவை திருத்தூதர்களை ஆண்டவர் தெரிந்தெடுத்து அனுப்பியதை பின்புலமாகக் கொண்டுள்ளன

. 23: γράφω கிராபோ என்னும் செயற்பாடு எழுதுதலையும் சிலவேளைகளில் கடிதத்தையும் குறிக்கும். ஆரம்ப காலங்களில் முக்கியமான தகவல்கள் இவ்வாறே அறிவிக்கப்பட்டது. சிரிய அந்தியோக்கிய, சிசிலிய, கிறிஸ்தவர்களை பெறுநர்களாகவும், மூப்பர்களையும் திருத்தூதர்களையும் அனுப்புனர்களாகவும் இக்கடிதம் கொண்டுள்ளது. திருச்சபையின் தொடக்க காலத்திலேயே மூப்பர்கள் திருத்தூதர்களுடன் சேர்ந்து பணியாற்றுவதனை இங்கே காணலாம். அவர்கள் வாழ்த்துச் செய்தியை அனுப்புகிறார்கள் (χαίρειν காய்ரெய்ன்- வாழ்த்து). 

வவ. 24-27: நடந்த தவறுகளுக்கு தாய் திருச்சபை பொறுப்பில்லை என்பதையும் அதனை நிவர்த்தி செய்ய தகுந்தவர்களையும் விரும்பியவர்களையும் திருச்சபை அனுப்புவதை அவதானிக்கலாம். பிழைகள் நிவர்த்தி செய்யப்படும்போது மக்களின் உணர்வுகளை மதிப்பதில் திருச்சபை அவதானமாக இருப்பதனை இந்த தெரிவு காட்டுகிறது. கடிதத்தில் உள்ளவற்றை வாய்மொழியில் அறிவிப்பது நேரடி சாட்டியமாக இருப்பதனால் இத்தூதர்களை திருச்சபை நியமித்திருக்கலாம். பவுலும் பர்னபாவும் தல திருச்சபையின் கவலைகளை நேரடியாகவே அறிவித்தனர், அதனைப் போலவே தாய்திருச்சபை தன் அனுசரனைகளை நேரடியாக வெளிப்படுத்துகிறது. இயேசுவிற்காக உயிரையும் கொடுக்க துணிவது ஆரம்ப கால திருச்சபையில் உயர்ந்த தியாகமாக கருதப்பட்டது

. 28: சுமைகள் இல்லாத வாழ்க்கையை ஆண்டவரோ தூய ஆவியானவரோ அல்லது திருச்சபையோ முன்வைக்கவில்லை. என் சுமை எளிது என்று ஆண்டவர் கூறியது நினைவிற்கு வரலாம் (மத் 11,30). (சுமைகள் இல்லாத வாழ்க்கை கானல் வாழ்க்கை). இன்றியமையாத சுமைகள் என்று பின்வருபவை காட்டப்படுகின்றன:

. 29: சிலைகளுக்கு படைக்கப்பட்டவை, இரத்தம், கழுத்து நெரிக்கப்பட்டவை, பரத்தமை: இவை யூத மக்களால் மட்டுமல்ல, பல வளர்ந்த அக்கால நாகரீகங்களால் வெறுக்கப்பட்டவை.
இவற்றிக்கெதிரான வாழ்க்கை நல்ல மனித பொறுப்புணர்சியுள்ள வாழ்;க்கையாக கருதப்பட்டது.

திருப்பாடல்: 67
1கடவுளே! எம்மீது இரங்கி, எமக்கு ஆசி வழங்குவீராக! உம் திருமுக ஒளியை எம்மீது வீசுவீராக! (சேலா
2அப்பொழுது, உலகம் உமது வழியை அறிந்துகொள்ளும்; பிற இனத்தார் அனைவரும் நீர் அருளும் மீட்பை உணர்ந்து கொள்வர். (சேலா
3கடவுளே! மக்களினத்தார் உம்மைப் புகழ்வார்களாக! மக்கள் எல்லாரும் உம்மைப் போற்றுவார்களாக
4வேற்று நாட்டினர் அக்களித்து மகிழ்ச்சியுடன் பாடிடுவராக! ஏனெனில், நீர் மக்களினங்களை நேர்மையுடன் ஆளுகின்றீர்; உலகின் நாடுகளை வழிநடத்துகின்றீர். (சேலா
5கடவுளே! மக்களினத்தார் உம்மைப் புகழ்வார்களாக! மக்கள் எல்லாரும் உம்மைப் போற்றுவார்களாக
6நானிலம் தன் பலனை ஈந்தது நம் கடவுள் நமக்கு ஆசி வழங்கினார்
7கடவுள் நமக்கு ஆசி வழங்குவாராக! உலகின் கடையெல்லைவரை வாழ்வோர் அவருக்கு அஞ்சுவராக!

இந்த திருப்பாடலை அரச மகுடம் சூட்டல் பாடல்களில் ஒன்று என அடையாளப் படுத்துகின்றனர். சிலர் இதனை அறுவடைத் திருவிழாப் பாடல்  எனவும் அழைக்கின்றனர். ஆனால் அறுவடை மக்களை அழைத்தல் என்ற அர்த்தத்தில் வருவதால் இது கட்டாயம் அறுவடைத் திருவிழாப் பாடலாக இருக்க வேண்டிய தேவையில்லை எனலாம் ஆசிர், வாழ்வு தரக்கூடிய-கடவுளைப் பற்றிய மெய்யறிவு போன்ற இரண்டு முக்கியமான பாடற் பொருட்;களை இந்தப் பாடல் கொண்டு வருகிறது. உயிரினங்களின் விருத்தி கடவுளின் ஆசியில்தான் தங்கியுள்ளது என்பதனை இந்த பாடல் ஆசிரியர் நமக்கு நினைவூட்டுகிறார். இஸ்ராயேல் மக்கள் கடவுளின் ஆசிர்வாதத்தில் பெரிதும் நம்பி அதனை முக்கியமான காலங்களில் எதிர்பார்த்தனர். (ஆசீர் בְּרָכָה பெராகாஹ் என்று எபிரேயத்தில் அழைக்கப்படுகிறது). ஆசீர்வாதமே, ஆரோனுடையவும் அவர் குரு மக்களினதும் முக்கியமான தொழிலாக இருந்தது.

இந்த பாடலில் பாவிக்கப்பட்டடுள்ள வார்த்தைகள் மிகவும் அழகான எபிரேய கடவுள் சிந்தனையைக் காட்டுகின்றன

.0: இந்த பாடலின் தலைப்பு இது ஒரு நரம்பிசைக் கருவிகளினால் பாடப்பட்ட பாடல் என்பதைக் காட்டுகிறது. இந்த முன்னுரை பிற்காலத்தில் இணைக்கப்பட்டது என்ற பலமான வாதம் ஒன்றும் இருக்கிறது. இந்த பாடலின் முதலாவது வார்த்தை מְנַצֵּח (மெநட்செஹ்) பாடகர் தலைவரைக் குறிக்கும் வார்த்தையாக இருக்கலாம்

.1: கடவுள் இரக்கம் காட்டுவதும் ஆசீர் வழங்குவதும் ஒத்த செயல்களாக பார்க்கப்படுகிறது. கடவுள் இரக்கம் காட்டினாலொழிய அவர் ஆசீரை பெற முடியாது, அதாவது அவரது ஆசீருக்கு யாரும் இயற்கையாக தகுதியானவர்கள் அல்ல என்பது புலப்படுகிறது. ஆசீர் வழங்குவதற்கு 'உம் திருமுக ஒளியை எமக்கு வீசுவீராக' என்ற அழகான இன்னொரு ஒத்த கருத்து வரி பாவிக்கப்பட்டுள்ளது (יָאֵר פָּנָיו אִתָּנוּ யா'எர் பாநாவ் 'இத்தாநூ). கடவுளுடைய திருமுகம் ஒளி தருகிறது, அந்த ஒளிதான் ஆசீர்வதிக்கிறது என்பது ஒரு நம்பிக்கை.
இந்த வரியின் பின்னர் சேலா (סֶלָה) என்ற வார்த்தை பாவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அர்த்தம் இன்னமும் தெளிவாக அறியப்படவில்லை. இது ஒருவேளை வரிகளை பிரிக்கும் அளவு வார்த்தையாக அல்லது இசையை காட்டும் மாத்திரையாகவும் இருக்கலாம்

.2: ஆண்டவர் இஸ்ராயேல் மக்களை ஆசீர்வதிக்கவேண்டியதன் தேவையையும், அதனால் மற்றவர்களுக்கு கிடைக்கும் நன்மைத்தனத்தை ஆண்டவருக்கே விளங்கப்படுத்த ஆசிரியர் முயல்கின்றார். அதாவது ஆண்டவர் இஸ்ராயேலருக்கு திருமுக ஒளியைக் காட்டுவதனால், உலகம் அவரது வழியை அறிந்து கொள்கிறது (דַעַת בָּאָרֶץ דַּרְכֶּךָ தா'அத் பா'ஆரெட்ஸ் தார்கெகா- உலகில் உள்ளவர்கள் உம் வழியை அறிந்து கொள்வார்கள்). 
இதனை மேலும் விளங்கப்படுத்த, பிற இனத்தார் அனைவரும் ஆண்டவர் அருளும் மீட்பை உணர்ந்து கொள்வர் எனப்படுகின்றனர். இங்கனம் பிறவினத்தார் அனைவரும் ஆண்டவரின் மீட்புக்கு உட்பட்டவர்கள் என்பது தெளிவாகின்றது. இந்த வரியின் பின்னரும் சேலா என்ற வார்த்தை பயன்பட்டுள்ளது

.3: ஆசிரியர், மக்கள் இனத்தார் எல்லாரும் கடவுளை புகழ்ந்து, போற்றுவார்களாக என்று ஆசிக்கிறார். மக்கள் இனத்தார் அனைவரையும் இஸ்ராயேலின் கடவுளை புகழும்படி இவர் கேட்பதன் மூலம் அனைவரும் இந்த இறைவனின் மக்கள் என்பதை அழகாகச் சொல்கிறார். மக்களினங்களைக் குறிக்க பயன்பட்டுள்ள இந்த சொல் עַמִּים (அம்மிம்) வேற்று நாட்டினர் மற்றும் அனைத்து உலக மக்களையும் குறிக்கும் சொல் என்பது அவதானிக்கப்படவேண்டும்

.4: இந்த வரியில் நேரடியாக வேற்று நாட்டினரை எழுவாய்ப் பொருளாக எடுக்கிறார். இந்த வேற்று நாட்டினர் அக்களித்து மகிழ்ச்சியுடன் பாடுவார்கள் என ஒரு இஸ்ராயேலர் விரும்புகிறார். இது இந்த இஸ்ராயேலரின் உண்மைத் தன்மையையும் ஆன்மீக முதிர்ச்சியையும் காட்டுகிறது. வேற்று நாட்டினரை சபிக்கப்பட்டவர்கள், தீட்டுப்பட்டவர்கள் என்று அக்காலத்தில் வஞ்சிக்க, உண்மையில் அவர்களும் ஆண்டவரின் பிள்ளைகள் என்பதை அழகாகக் காட்டுகிறார்.  
இதற்கான காரணத்தையும் ஆசிரியர் முன்வைக்கிறார். அதாவது உலகை ஆளுகிறவர்கள் மனித அரசர்கள் அல்ல, மாறாக அவர் கடவுள். இந்த கடவுள் உலகை நேர்மையுடன் ஆண்டு வழிநடத்துகிறார். இதன் காரணமாக அனைத்து நாடுகளுக்கும் தலைவர் இஸ்ராயேலின் கடவுள் என்பது புலப்படுத்தப்படுகிறது. இந்த வரியின் பின்னரும் சேலா (סֶלָה) என்ற வார்த்தை பாவிக்கப்பட்டுள்ளது

.5: ஏற்கனவே மூன்றாம் வரியில் பாடப்பட்டது, மீண்டுமாக பாடப்படுகிறது. இதிலிருந்து இது ஒரு பதிலுரைகளைக் கொண்ட வழிபாட்டு அல்லது முக்கியமான நிகழ்வுகளில் பாடப்படும் ஒரு குழுப் பாடல் என்ற முடிவிற்கு வரலாம். לְֹאם லெ'ஓம்- மக்கள்.

.6: நானிலம் தன் பலனை ஏன் தருகிறது, இந்த பலன் ஆண்டவரின் ஆசீர்வாதம் என்கிறார்
இயற்கையின் சாதாரண நிகழ்வை சாதாரணம் தாண்டி அதன் பின்புலத்தை ஆய்வு செய்கிறார் இந்த விசுவாச விஞ்ஞானி. இந்த வரியிலிருந்து இவர் இயற்கையை ஆய்ந்து அவதானிக்கிறவர் என்பது புலப்படுகிறது

.7: இறுதியாக பாடுகிறவர்கள் அனைவருக்கும், அல்லது வழிபாட்டில்-நிகழ்வில் இருக்கும் அனைவருக்கும் ஆசி வழங்கப்படுகிறது. இஸ்ராயேல் மக்களுக்கு ஆசி ஆசிக்கப்படும் அதேவேளை அனைவருக்கும் விசுவாசம் ஆசிக்கப்படுகிறது. கடவுளுக்கு அஞ்சுதல் என்பது, கடவுளில் நம்பிக்கை வைத்தல் என்ற அர்த்தத்தை தருகிறது (יִֽירְאוּ யிர்'னூ- பயப்படுவார்களாக). 
அனைத்துலக மக்களைக் குறிக்க, உலகின் கடையெல்லைகள் என்ற சொல் பாவிக்கப்படுகிறது (כָּל־אַפְסֵי־אָֽרֶץ கோல்-'அப்செ-'ரெட்ஸ்- உலகின் அனைத்து முடிவுகளும்). இதன் மூலம் கடவுளின் எல்லைகள் இல்லாத உலகம் காட்டப்படுகிறது


தி.வெளி 21,10-14.22-23
10தூய ஆவி என்னை ஆட்கொள்ளவே, அந்த வானதூதர் ஒரு பெரிய, உயர்ந்த மலைக்கு என்னைக் கொண்டுசென்றார்; திருநகரான எருசலேம் கடவுளிடமிருந்து விண்ணகத்தை விட்டு இறங்கிவருவதை எனக்குக் காட்டினார். 11அதில் கடவுளின் மாட்சி விளங்கிற்று விலையுயர்ந்த கல்போன்றும் படிகக்கல்போன்றும் அதன் ஒளி பளிங்கெனத் துலங்கியது. 12அதைச்சுற்றி பெரிய, உயர்ந்த மதிலும் அதில் பன்னிரண்டு வாயில்களும் இருந்தன. வாயில்களுக்குப் பொறுப்பாய்ப் பன்னிரண்டு வானதூதர்கள் நின்றார்கள். இஸ்ரயேல் மக்களுடைய பன்னிரண்டு குலங்களின் பெயர்களும் அவ்வாயில்களில் பொறிக்கப்பட்டிருந்தன. 13கிழக்கே மூன்றும் வடக்கே மூன்றும் தெற்கே மூன்றும் மேற்கே மூன்றுமாக அவை அமைந்திருந்தன. 14நகரின் மதில் பன்னிரண்டு அடிக்கற்களைக் கொண்டிருந்தது. அவற்றில் ஆட்டுக் குட்டியின் பன்னிரண்டு திருத்தூதர்களின் பெயர்களும் எழுதப்பட்டிருந்தன.

22நகருக்குள் கோவில் காணப்படவில்லை. ஏனெனில் எல்லாம் வல்ல கடவுளாகிய ஆண்டவரும் ஆட்டுக்குட்டியுமே அதன் கோவில். 23அந்நகருக்கு ஒளி கொடுக்கக் கதிரவனோ நிலாவோ தேவைப்படவில்லை. கடவுளின் மாட்சியே அதன் ஒளி; ஆட்டுக்குட்டியே அதன் விளக்கு.

இந்த இருபத்தோராவது அதிகாரம் கடவுளுடைய நகரைப் காட்சிப்படுத்துகிறது. யோவானுடைய காட்சிகளில் முக்கிய காட்சியான கடவுளின் நகரம் என்ற காட்சியையும் புதிய படைப்பையும் யோவான் இங்கு காண்கிறார்

.10: எசேக்கியேலைப் போல யோவானும் தூக்கிச் செல்லப்படுகிறார். முதல் ஏற்பாட்டில் கடவுளின் தூதர்கள் மற்றும் தூய ஆவிக்கிடையிலான வேற்றுமை அவ்வளவு தெளிவாக தென்படாது. இங்கே யோவானை ஆட்கொள்கிறவர் தூய ஆவியானவர் எனவும், தூக்கி செல்பவர் வானதூதர் எனவும் வேறுபடுத்தி காட்டுகிறார் யோவான். பெரிய மற்றும் உயர்ந்த மலை என்பது கடவுளின் இருப்பிடத்தை குறிக்க முதல், மற்றும் புதிய ஏற்பாடுகிலில் அதிகமாக பாவிக்கப்படுகின்ற உருவகங்கள். இதனால்தான் எருசலேமும் மலையில் அமைக்கப்பட்டது அல்லது மலையில் இருந்த நகர் எருசலேமாக தெரிவு செய்யப்பட்டது. இங்கே இறங்கி வருகின்ற எருசலேம் சாதாரன எருசலேம் அல்ல கடவுளின் புதிய நகரான புதிய எருசலேம். இது திருச்சபையை குறிக்கலாம். எசேக்கியல் கண்ட நகருக்கும் யோவானின் நகருக்கும் பொருள் ரீதியில் வித்தியாசம் இருக்கிறது என நினைக்கிறேன் (காண்க எசேக்கியேல் 40,1). எசேக்கியேல் கண்டது புதிய சுதந்திர இஸ்ராயேல் நாட்டையும், சுதந்திர தலைநகர் எருசலேமையும். இங்கே யோவான் காண்பது புதிய எருசலேமான திருச்சபையை என கொள்ளலாம். அன்று எருசலேம் பபிலோனியரால் அழிந்திருந்தது, இங்கே உரோமையரால் அழிந்திருந்தது. ὄρος μέγα  °καὶ ὑψηλόν, ஒரொஸ் மெகா காய் ஹூம்பேலொன்- பெரிய உயரமான மலை

. 11: மீண்டுமாக, எசேக்கியேல் கண்டதனைப்போல், கடவுளின் மாட்சியை யோவானும் காண்கிறார் (காண்க எசேக்.43,4). விலையுயர்ந்த கல் மற்றும் படிக்கல் என்பது தௌ;ளத் தெளிவான வச்சிரக்கல்லைக் குறிக்கும். இது பல நிறங்களில் காணப்பட்ட அக்கால பொக்கிசம். கடவுளுடைய மாட்சியை குறிக்க யோவான் விலையுயர்ந்த கற்களை உருவகத்திற்கு எடுப்பது அழகான முயற்சி. மேசேயும் கடவுளின் பின்புறத்தை கண்டதாக உணர்ந்தபோது இப்படியான உருவகத்தையே பாவிப்பார். இங்கே யோவான் காண்பது கடவுளை அல்ல அவரது மாட்சியை மட்டுமே. அந்த மாட்சியை இந்த புதிய நகரின் அழகாக வர்ணிக்கிறார்

. 12: எருசலேம் நகர் பல வாயில்களால் அமைந்த நகராகவே அன்றும் இன்றும் காணப்படுகிறது. எசேக்கியலும் தன் காட்சியில் பல வாயில்களைக் காண்கிறார். (காண்க எசேக் 48,30-) யோவானும் இந்த புதிய எருசலேமில் பல வாயில்களைக் காண்கிறார். வாயில் மக்களை உள் கொண்டுவருகின்ற முக்கியமான ஊடகம். இங்கே உயர்ந்த மதில் என்பது, கடவுளின் பாதுகாப்பைக் குறிக்கும். பன்னிரண்டு வாயில் என்பது பன்னிரு திருத்தூதர்களைக் குறிக்கலாம். இவர்களின் மீதுதான் புதிய எருசலேம் கட்டப்படுகிறது என்பது யோவானின் காட்சி. பன்னிரண்டு குலங்களின் பெயர்களை இங்கே யோவான் கொண்டுவருவது பன்னிரண்டு திருத்தூதர்களை பன்னிரண்டு குலமுதுவர்களுடன் (யாக்கோபின் புதல்வர்கள்) இணைப்பதர்கான முயற்சி. வாயிலில் நிற்கின்ற வானதூதர்கள் அந்த வாயில்களின் பாதுகாப்பை காட்டுகிறார்கள். பழைய எருசலேமைப் போல இந்த எருசலேமை அழிக்க முடியாது என்கிறார் போல

வவ. 13-14: பன்னிரண்டு 3x4 என்று பிரிக்கப்டுகிறது. மீண்டுமாக நகரின் மதில்களும் அதன் அடித்தளங்களும் பன்னிருவரைக் கொண்டுள்ளது. ஆட்டுக்குட்டி என்பது இங்கே ஆண்டவர் 
இயேசுவைக் குறிக்கும். ஆட்டுக் குட்டியின் பன்னிரு திருத்தூதர்கள் என்னும் வார்த்தைகள், திரு வெளிப்பாட்டில் இங்கு மட்டுமே காணப்படுகிறது. τῶν δώδεκα ἀποστόλων τοῦ ἀρνίου. டோன் தேதெகா அபொஸ்டொலோன் டூ அர்னியூ- ஆட்டுக்குட்டியின் பன்னிரு திருத்தூதர்

வவ. 22: விடப்பட்ட வசனங்களில் யோவான் புதிய எருசலேமினதும் அதன் வாயில் மற்றும் சுவர்களுடைய  நீள-அகல பொருள் அளவுகளை காட்சிப்படுத்துவார் (வவ. 15-21). 
இங்கே காட்சி மாறுகிறது. பழைய எருசலேமின் அழகும் அதன் கௌரவமும் சாலமோன் கட்டிய கோவிலில் தங்கியிருந்தது. இங்கே யோவான் காணும் புதிய எருசலேமில் கோயில் கிடையாது. கடவுளாகிய ஆண்டவரும் ஆட்டுக்குட்டியுமே கோவில் என்பது எத்துனை ஆழமான இறையனுபவம். (உலகம் இன்று பல கோயில்களால் நிறைந்து வழிகிறது, ஆனால் ஆண்டவரைத்தான் காணவில்லை, உள்ளே). ஆரம்ப கால கிறிஸ்தவர்கள், ஆண்டவரின் உயிர்ப்பின் சில வருடங்களின் பின்னர் எருசலேம் தேவாலயத்திற்குள் செல்ல தடுக்கப்பட்டனர். இதன் தாக்கத்தை இந்த வரிகளின் பின் புலத்தில் காணலாம்

. 23: கடவுளின் புதிய நகரை காட்சியில் கண்ட யோவான், இன்னொரு அழகைக் காண்கிறார். கடவுளின் மாட்சி என்பது கதிரவனையும் நிலவையும் விட ஒளி மிகுந்தது என்பது அந்த மெய்யறிவு. உலகிற்கு ஒளி கொடுக்கவே கடவுள் கதிரவனையும் நிலவையும் படைத்ததாக தொடக்க நூல் காட்டுகிறதுஇங்கே புதிய நகருக்கு ஒளியாக, கடவுளின் மாட்சியையும், ஆட்டுக்குட்டியையும் காண்பது விசேட இறையியல் கருத்தாகும். (இன்று உலகு எந்நேரமும் மின்னொளியில் ஒளிர்ந்தாலும்பல உள்ளார்ந்த இருளே உலகை ஆட்சிசெய்வதனை யோவான் அன்றே அறிந்திருக்கிறார்). 


நற்செய்தி: யோவான் 14,23-29
23அதற்கு இயேசு பின்வருமாறு கூறினார்: 'என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம். 24என்மீது அன்பு கொண்டிராதவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பதில்லை. நீங்கள் கேட்கும் வார்த்தைகள் என்னுடையவை அல்ல் அவை என்னை அனுப்பிய தந்தையுடையவை. 25உங்களோடு இருக்கும்போதே இவற்றையெல்லாம் உங்களிடம் சொல்லிவிட்டேன். 26என் பெயரால் தந்தை அனுப்பப்போகிற தூய ஆவியாராம் துணையாளர் உங்களுக்கு அனைத்தையும் கற்றுத் தருவார்; நான் கூறிய அனைத்தையும் உங்களுக்கு நினைவூட்டுவார். 27அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்; என் அமைதியையே உங்களுக்கு அளிக்கிறேன். நான் உங்களுக்குத் தரும் அமைதி உலகம் தரும் அமைதி போன்றது அல்ல. நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம்; மருள வேண்டாம். 28'நான் போகிறேன், பின் உங்களிடம் திரும்பி வருவேன்' என்று நான் உங்களிடம் சொன்னதைக் கேட்டீர்களே! நீங்கள் என்மீது அன்பு கொண்டிருந்தால் நான் தந்தையிடம் செல்வது பற்றி மகிழ்ச்சி அடைவீர்கள். ஏனெனில் தந்தை என்னைவிடப் பெரியவர். 29இவை நிகழும்போது நீங்கள் நம்புமாறு இப்போதே, இவை நிகழுமுன்பே, சொல்லி விட்டேன்.


யோவான் நற்செய்தியில் 13-17 வரையான அதிகாரங்கள் ஆண்டவர் தான் காட்டிக் கொடுக்கப்படுவதற்கு முன்னர், தன் சீடர்களுடன் உரையாடின பல காட்சிகளைக்
கொண்டமைந்துள்ளன. இன்றைய நற்செய்தியில் ஆண்டவர், தன்மீது அன்பு கொள்பவர் செய்யக்கூடிய செயல்களையும், தூய ஆவியாரின் செயற்பாடுகளையும், மற்றும் தன்னுடைய அமைதியைப் பற்றியும் தெளிவூட்டுகிறார்

. இயேசு மீது அன்பு கொண்டுள்ளவர்: (மூல பாடத்தில் ἐάν τις ἀγαπᾷ με என்பது 'என்னை யாராவது அன்புசெய்தால்' அல்லது 'என்னை அன்பு செய்யும் அவர்', என்று பொருள் படும்). இந்த வசனங்களை உச்சரிக்கின்ற வேளையில் ஆண்டவர் பேதுருவின் மறுதலிப்பையும், சீடர்களின் ஒதுங்குதலையும், யூதாசின் காட்டிக்கொடுப்பபையும் நினைத்திருப்பார். யோவான் நற்செய்தியில் இந்த அன்பு கொண்டவர் என்பது திருத்தூதர்களை மட்டுமல்ல அனைத்து கிறிஸ்தவர்களையும் அத்தோடு அனைத்து சீடர்களையும் குறிக்கும்

. துணையாளர்: இவரை கிரேக்க மூல பாடம் παράκλητος பராகிலேடொஸ் ன்று குறிக்கிறது
இதன் பொருளாக சார்பு வழக்கறிஞர்;, பரிந்து பேசுகறவர் எனக் கொள்ளலாம். இது ஒரு நீதித்துறை சட்ட நிலைச் செல். யோவான் நற்செய்தியில், இயேசு இந்த பரிந்து பேசுகிறவர் தூய ஆவியார் எனச் சொல்லுகிறார்

. அமைதி: எபிரேயத்தில், இதற்கு பல ஆழமான அர்த்தங்கள் உள்ளன. தமிழில் அமைதி என்பது கிரேக்க மொழியில் εἰρήνη எய்ரேனெ என்று வழங்குகிறது. ஆண்டவர் அரேமேயத்தில் இதனை שְׁלָם ஷேலாம் என்று பாவித்திருப்பார். இந்த ஷேலாமை எபிரேயம் שָׁלוֹם ஷலோம் என்று அழைக்கிறது. கிரேக்க எய்ரேனெ தேசிய நல்லினக்கத்தையும், போரற்ற நிலையையும் குறிக்கிறது. ஆனால் எபிரேய ஷலோம் நிறைவான வாழ்வையும், பாதுகாப்பையும், ஆரோக்கியத்தையும், வளமையையும், அமைதியையும், சாந்தத்தையும், நிறைவையும், நட்பையும், அமைதியான மரணத்தையும், குறிக்கும்.  

. 23: அன்புகொள்பவர் செய்பவையும், கடவுள் அவருக்கு செய்பவையும் விளக்கப்பட்டுள்ளன
இயேசுவை அன்புசெய்தல், கீழ்படிதலையும் ஆண்டவரின்-குடியிருப்பையும் கொண்டுவருகிறது
இயேசு தந்தையாகிய கடவுளுடன் கொண்டிருந்த குடியிருப்பை இது ஒத்திருக்கும்  என்ற திரித்துவ வார்த்தைகள் இங்கு பாவிக்கப்பட்டுள்ளன. ἀγάπη அகாபே- அன்பு.

. 24: இயேசு, தன்னில் அன்பில்லாமை, சுயநல வாழ்வை கொண்டுவரும் என்கிறார். அத்தோடு தன்னுடைய வார்த்தைகள் தன் தந்தையுடையது என்பதை அறிவிப்பதில் மிகவும் கவனமாக 
இருக்கிறார். இது தன்னுடைய கீழ்படிவை தன் சீடர்களும் பின்பற்ற வேண்டும் என்பதற்காக 
இருக்கலாம். தன்னை அனுப்பியது இறைவனின் திட்டம், ஆகவே கடவுளை விரும்புவோர், தன்னை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும் என்ற உண்மையை இலகுவாக தெளிவூட்டுகிறார்

. 25-26: உங்களோடு இருக்கும் போதே... என்று இயேசு தொடர்ந்து மனிதராக இவ்வுலகில் 
இருக்கப்போதில்லை என கூறுகிறார். 26ம் வசனம் துனையாளரின் செயற்பாடுகளைக் குறிக்கிறது. இயேசுவைப்போலவே இவரும் கடவுளால் அனுப்பப்படுகிறார், அனைத்தையும் கற்றுத்தருவார், அத்தோடு அனைத்தையும் நினைவூட்டுவார். (மனிதர்களுக்கு நினைவு மறதி ஓரு பயங்கர வியாதி என்பதை ஆண்டவர் நன்கு அறிந்திருக்கிறார்). 

. 27: இங்கே எழுவாய் பொருள், அமைதி என மாறுகிறது. வழமையாக பிரியாவிடையில் அமைதியை வாழ்த்துவது வழக்கம். இங்கே இயேசு அமைதியை வாழ்த்தவில்லை மாறாக தருவதாகச் சொல்கிறார். உலக-மாயையான அல்லது அரசியில் மயமான அமைதியல்ல தன்னுடையது என்கிறார். தன்னுடைய அமைதி தன் இதயத்திலிருந்து வருகிறது இதனால் உள்ள மருளளோ கலக்கமோ தேவையில்லை என்கிறார்

. 28: தன்னுடைய பிரியாவிடை ஒரு பிரிவல்ல, மாறாக அது நல்வருகை என்கிறார் ஆண்டவர். நல்ல நட்பு, தேவையான-பிரிதல்களை வரவேற்க வேண்டும் என்கிறார். இங்கே தந்தை தன்னைவிட பெரியவர் என்று சொன்னது பிற்காலத்தில் பல கிறிஸ்தியல் சிக்கல்களை தோற்றுவித்தது. முக்கியமாக 'ஆரிய வாதம்' இதனை கொண்டே இயேசு கடவுள் அல்ல எனவும் அவர் கடவுளுக்கு கீழ்பட்டவர் எனவும் வாதிட்டது. இங்கே இயேசு தன்னுடைய ஆள் தன்மையைப் பற்றி பேசவில்லை மாறாக கடவுள் தன்னிடம் கொடுத்த பணியைப் பற்றியே பேசுகிறார். இயேசு தொடர்ந்து குறிப்பிட்ட சீடர்களுடன் இருப்பதை விட அவர் தன்னுடைய உண்மையான நிலைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தை விளக்குகிறார் என எடுக்கலாம். ஆக தன்னுடைய பிரிவை நினைத்து இவர்கள் வருந்துவதைவிட, தான் போவதை நினைத்து மகிழ்வதே பெரியதாக இருக்கும் என விளக்குகிறார்

. 29: எதிர்காலத்தை நிகழ்காலத்தில் காட்டக்கூடியவர் கடவுள் ஒருவரே என்பதை இங்கே புலப்படுத்துகிறார். νῦν εἴρηκα ὑμῖν πρὶν γενέσθαι நுன் எய்ரேகா ஹூமின் பிரின் கெனெஸ்தாய். இவை நடக்கு முன்பே இப்போது உங்களுக்கு சொல்லிவிட்டேன்

அமைதி
இந்த உலகத்திலே அதிகமாக துஸ்பிரயோகம் செய்யப்பட்ட சொல்.
யார் அமைதியை கொடுக்க முடியும்
அமைதி ஆயுதத்தால் வருமா?
போராட்டம் இல்லாம் அமைதி சாத்தியமா?
மௌனம், பயம் இந்த சொற்களைக் கொண்டு அமைதியை விளக்க முயல்கிறார்கள்.

ஆண்டவரே! உரிமை வாழ்வைத் தரக்கூடிய உண்மையான அமைதியையும்  
வரலாற்றை மறக்காத 
நினைவு சக்தியையும் தாரும். ஆமென்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆண்டின் பொதுக்காலம் முப்பத்திநான்காம் வாரம் கிறிஸ்து அரசர் பெருவிழா:  Our Lord Jesus Christ, King of the Universe 24.11.2024

ஆண்டின் பொதுக்காலம் முப்பத்திநான்காம் வாரம்   கிறிஸ்து அரசர் பெருவிழா :  Our Lord Jesus Christ, King of the Universe 24.11.2024 இய...