வியாழன், 11 ஏப்ரல், 2019

Palm Sunday C: 2019, குருத்தோலை ஞாயிறு (இ)



குருத்தோலை ஞாயிறு ()
14,04,2019

மி. ஜெகன்குமார் அமதி,
சங்கமம்
அமதிகள் ஆன்மீக மையம்
கோப்பாய்,
யாழ்ப்பாணம்.


முதல் வாசகம்: எசாயா 50,4-7
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 21
இரண்டாம் வாசகம்: பிலிப்பியர் 2,6-11
நற்செய்தி: லூக்கா 22,14 - 23,56


குருத்தோலை ஞாயிறு:
இன்றோடு தவக்காலம் முடிவடைகிறது அத்தோடு பரிசுத்த வாரம் ஆரம்பமாகின்றது
இன்றைய நாள், அன்று இயேசு மகிமையுடன் எருசலேம் நகரினுள் நுழைந்ததை நினைவூட்டுகின்றது. இயேசு எருசலேமில் நுழைந்த போது அவரைச் சுற்றியிருந்தவர்களும், அவரோடு வந்தவர்களும் ஆர்பரித்து ஆரவாரம் செய்தார்கள். தங்களுடைய கைகளில் ஒலிவ இலைகளை தாங்கி இருந்தார்கள். ஒலிவ இலைகள், மாட்சியையும் வெற்றியையும் குறிக்கின்ற அடையாளங்கள். சாதாரணமாக போரில் வெற்றி பெற்று வருகின்ற அரசர்கள், படைவீரர்கள் மற்றும் தலைவர்களுக்கு இவ்வாறு ஒலிவ இலைகள் கொடுக்கப்பட்டு வரவேற்கப்பட்டார்கள். இயேசுவை வரவேற்றவர்கள் தங்கள் போர்வைகளை பாதையின் மேல் போட்டு இயேசுவிற்கு செங்கம்பழ வரவேற்பு கொடுக்கிறார்கள். இயேசு கழுதைக் குட்டியின் மீது வருகிறார். இவையனைத்தும் அடையாள மொழிகள். இயேசு, போர்த் தலைவர்களைப் போல் வெண் புரவியில் அல்லாமல், சாதுவான கழுதைக் குட்டியின் மீது அமர்ந்து வருவது அவரது அரசின் வித்தியாசமான சாந்தமான கொள்கையைக் காட்டுகிறது
போருக்கு சென்று நாடு திரும்பும் வெற்றி பெற்ற அரசர், ஒன்றில் தன் வெற்றியைக் கொண்டாடுவார் அல்லது நாட்டிலே புதிய திட்டங்களை அறிமுகப்படுத்துவார். இதனைப்
போலவே இயேசுவுடைய எருசலேம் வருகையும் அமைகிறது. இயேசு எருசலேம் வருவது அவருடைய மனித வாழ்வின் இறுதி நாட்களை அறிவிப்பது போல அமைகிறது. இதனை போருக்காக முன் வரும், வருகை என்றும் கூடச் சொல்லலாம்
குருத்தேலை வருகையை அனைத்து நற்செய்திகளும் காட்டினாலும் (காணக் மத்தேயு 21,1-11: மாற்கு 11,1-10: லூக்கா 19,28-38: யோவான் 12,12-18) யோவான் மட்டுமே ஒலிவ 
இலைகளைப் பற்றி பேசுகிறார் (காண்க யோவான் 12,13). 



(லூக்கா 22, 14 - 23, 56)

லூக்கா எழுதிய படி, பாடுகளின் வரலாறை இவ்வாறு பிரிப்போம்

. விடுதலை தரும் பாஸ்கு உணவு
. உறவின் மேசையில் கலவரம்
. இறைவனின் துயரமும் கைதும்
. தலைமை ஆயர் பேதுருவின் மறுதலிப்பு
. பலமில்லாத யூத சபையின் (சென்ஹட்ரின்) முடிவு
. வெளிநாட்டத்தலைவர்கள் பிலாத்துவினதும் எரோதினதும் அரசியல்
. உயிருக்கு மரண தண்டனை
. மீட்பின் சிலுவைப் பாதை
. தேய்வத்தை சிலுவையில் அறைதலும் மரணமும்
. உயிரின் நல்லடக்கம்


. விடுதலை தரும் பாஸ்கு உணவு (22,7-20), இயேசு புதிய பாஸ்கா உணவாகிறார்.

1. லூக்கா மாற்கு மற்றும் மத்தேயுவைப்போல ஆண்டவரின் இராவுணவை பாஸ்காவுணவாகவே காட்டுகிறார். இயேசு பேதுருவிடமும் யோவானிடமும் அடையாளங்கள் வாயிலாக பாஸ்கா கொண்டாடும் இடத்தைப்பற்றி சொல்லுவது, ஒருவேளை தான் முன்கூட்டியே கைதாகமல் 
இருப்பதற்கு என கருதலாம். வழமையாக பெண்கள் தண்ணீர் குவளைகளை சுமந்து கொண்டு வருகின்ற காலங்களில், ஆண்கள் அதனை சுமப்பது சீடர்களுக்கு நல்ல அடையாளமாக அமைகிறது

2. லூக்கா இயேசுவை உண்மையான பாஸ்கா உணவாக காட்டுகிறார். நான் ஆவலாக இருந்தேன் என்று இயேசு சொல்லுவதன் மூலம், இந்த பாஸ்காவுணவு இயேசுவிற்கு முக்கியம் வாய்ந்ததாக அமைகிறது. இறையாட்சி நிறைவேறும் மட்டும் இனி இந்ந பாஸ்கா உணவை உண்ணமாட்டேன் என்று இயேசு சொல்வது, இறையாட்சி என்பது ஒரு தொடர் பணி அது சாதாரண பாஸ்காiவிட முக்கியமானது, இறையாட்சின் முன் இப்படியான கொண்டாட்டங்கள் இரண்டாம் தரமானவை எனக் காட்டுகிறது

3. வவ 19-20: இந்த வசனங்கள்தான் திருச்சபை ஒவ்வொரு நாளும் திருப்பலியில் பயன்படுத்துகின்ற வசீகர செபங்கள். இந்த செபங்கள் வருடாந்த பாஸ்கா விழாவையும் தாண்டி இப்போது அவை இயேசுவை மையப்படுத்துகின்றன. கடவுளே வரும் போது பூசாரிக்கு என்ன வேலை எனக் கேட்கலாம். பாஸ்கா விழா பல வகையான செபங்கள், ஆசீர்கள், உணவு வகை பரிமாற்றங்களைச் சார்ந்தது, இங்கே இயேசு தன்னை மையப்படுத்தி, அப்பத்திலும் 
இரசத்திலும் தனது செய்தியை கொடுக்கிறார். இது ஒரு புதிய நித்திய உடன்படிக்கையை குறிக்கலாம். நினைவாக செய்யச்சொல்லுவது, இதே போன்ற பலியை மக்கள் தங்கள் வாழ்வில் பின்பற்ற வேண்டும் என்பதைக் காட்டுகிறது. நினைவுகள் வாழ்வதற்கே என்ற தத்துவம் இங்கே திருவருட்சாதனமாக்கப்படுகிறது. நற்கருனை ஏற்படுத்தப்பட்ட கதாம்சம் இரண்டு பாரம்பரியங்களில் நமக்கு வருகின்றன
). மாற்கு-மத்தேயு பாரம்பரியம்
). பவுல் பாரம்பரியம். சாதாரணமாக நான்கு கிண்ண இரசங்கள் பாஸ்காவிழாவிற்கு பயன்பட்டன, இயேசு இரண்டை பாவித்தார் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்

. உறவின் மேசையில் கலவரம்: (22,21-38), பதவி மோகம்.

1. ஆசை யாரையும் விடாது! கடவுள் பக்கத்தில் இருந்தும் கூட, பதவிகளை நாடச்செய்கிறது. லூக்கா இந்த காட்சியை சற்று வித்தியாசமாக பதிவு செய்கிறார். லூக்கா யூதாசின் காட்டிக் கொடுப்பை உதாரணமாக்கி ஒருவரின் பாவ வாழ்க்கைக்கு அவரே பொறுப்பு என்றி சொல்லி, விதி என்று ஏமாற்று வித்தை காட்டவேண்டாம் என்கிறார். யூதாசிற்கும் இந்த பன்னிருவருக்கும் இந்த மேசையில் பெரிய வித்தியாசங்கள் இல்லை. அவன் பணத்தை விரும்பினான், இவர்கள் பதவிகளை விரும்புகின்றனர். யார் பெரியவர் என்ற வாதம் இதனையே குறிக்கிறது

2. யார் பெரியவர் என்ற கேள்வியும் அதற்கான கதையிடங்களும் மாற்குவிலும் மத்தேயுவிலும் (மாற் 10,42-45: மத் 20,25-28) வேறு இடங்களில் அமைகின்றன. இயேசு இறையாட்சிக்கும் அரசியல் ஆட்சிக்கும் வித்தியாசம் காட்டுகிறார். அரசியல் ஆட்சியில் அடிமைத்தனங்களே நன்கொடை என்பதை அழகாக சித்தரிக்கிறார். இயேசு உரோமையரின் ஆட்சியை நன்கு வறுத்தெடுக்கிறார். இறையாட்சியில் அதிகாரம் கிடையாது, தன்னையொட்டி சேவை மட்டுமே உள்ளது என்கிறார். (διακονία தியாகோனியா-சேவை).

3. சேவையின் தன்மைகளைப பற்றி பன்னிருவருக்கு அறிவுறுத்திய பின் இயேசு சீடர்களை 
இஸ்ராயேலரின் குலமுதுவர்களாக நியமிக்கிறார். இப்போது இந்த புதிய இஸ்ராயேலின் முதல் குலமுதுவரை அவருடைய எபிரேய பெயரில் அழைக்கிறார் (சீமோன் - Σίμων). சாத்தான் அனுமதி கேட்கிறான் என்பதன் மூலம், பன்னிருவரை சோதிக்க விசேட அனுமதி தேவை என்கிறார், ஆனால் தனது உடனிருப்பு எப்போதும் உள்ளது என்பதையும் நினைவூட்டுகிறார். பேதுருவின் பலவீனத்தை ஆண்டவர் சொன்ன வேளை பேதுரு தனது பலததை நிரூபிக்கப் பார்கிறார். சேவல் கூவாது என்பது, இங்கே பேதுரு தனது பலவீனத்தை ஏற்றுக்கொள்ளும் வரை அவருக்கு விடியல் இல்லை என்பது போல உள்ளது

4. சீடர்கள் பணிக்கு அனுப்பப்பட்ட நிகழ்வை மீளாய்வு செய்கிறார் இயேசு (9,3). சில மாற்றங்களையும் உண்டு பண்ணுகிறார். அப்போது கடவுளின் தயவை நாடச்சொன்னவர், இப்போது பணப் பையையும், பயணப் பையையும் எடுக்கச் சொல்கிறார். இது ஆரம்ப கால திருச்சபையின் அங்கலாய்பு நிறைந்த நாட்களை படம் பிடிக்கிறது. ஆயுதங்களை எடுக்கச் சொன்னது போருக்கு தயாராக இருக்கச் சொல்லுவது போல உள்ளது. சீடர்கள் அதனை மிக ஆழாக எடுத்து எத்தனை கத்திகள் வேண்டும் என கேட்கின்றனர், இயேசு சொன்னது ஆயத்தங்களை, ஆயுதங்களை அல்ல. இங்கே வாள் என்று லூக்கா எழுதுவது ஒரு வகை பட்டாக்கத்தி (μάχαιρα மகாய்ரா, பட்டாக் கத்தி), அக்காலத்து கைத்துப்பாக்கி எனச் சொல்லலாம், இது தற்பாதுகாப்பிற்கே, போருக்கு உதவாது

. இறைவனின் துயரமும் கைதும் (22,39-53), 
அழுக்காகிப்போன அன்பு முத்தம்.

1. மாற்குவின் கெத்சமெனி காட்சியை லூக்கா சிறியதாக்கியுள்ளார். ஒலிவ மலை லூக்காவிற்கு மிக முக்கியமான இடம். இங்கு இயேசு பல முக்கியமான முடிவுகளை எடுக்கிறார் இதனால்தான் கெஸ்தமெனியை ஒலிவ மலையாக மாற்றுகிறார் லூக்கா, அல்லது ஒலிவ மலையில் கெஸ்தமெனி 
இருந்ததை உறுதிப்படுத்துகிறார்மாற்குவிலும் மத்தேயுவிலும் இயேசுவை மூவர் பின்தொடர்ந்தனர், இங்கு சீடர் என்று பலரை உள்வாங்குகின்றார் லூக்கா. ஆக செபமும், திருவிழி;ப்பும் அனைத்து சீடர்களின் கடமையாகிறது. செபித்தலும் விழித்தலும் அனைவருக்கும் உரியது என்கிறார் போல. சோதனை இயேசுவையும் விடவில்லை ஆனால் அவர் அதனை மேற்கொண்டதை கோடிடுகிறார். கிண்ணம், (ποτήριον-பொடெரியோன்) சாதரணமாக கடவுளுடைய நீதியையும் கோபத்தையும் வெளிப்படுத்தலாம், இங்கு தீர்ப்பை வெளிப்;படுத்துகிறது. வானதூதரின் பங்களிப்பு இயேசு தனியாக இல்லை எனக் காட்டுகிறது. இரத்த வியர்வை இயேசுவின் முழு மனித இயல்பை காட்டும் உருவகம். மறு புறத்தில் சீடர்களின் உறக்கம் மனித பலவீனத்தை காட்ட, அதனை மேற்கொள்ள விழித்திருந்து செபிக்க வேண்டும் என்கிறார் இயேசு. துயரத்தால் அவர்கள் தூங்கினார்கள் என்று இவர்களின் தவறை சிறியவர்களின் தவறாக்குகிறார் லூக்கா

2. யூதாசை பன்னிருவருள் ஒருவன் என்பதன் மூலம் திருத்தூதர்களின் முரண்பாட்டை விளக்குகிறார், இங்கே மாற்கு-மத்தேயுவுடன் சேர்ந்து போகிறார் லூக்கா. காதல், அன்பு, நம்பிக்கை, உறவு, நட்பு போன்றவற்றின் அழகிய அடையாளமான முத்தம் காட்டிக்கொடுக்கும் அசிங்கமான அடையாளமாக மாறுகிறது. பாவியென்று ஆண்களால் அடையாளமிடப்பட்ட பெண்ணொருவர் ஆண்டவரின் பாதங்களை கண்ணீரால் முத்தமிட்டு கழுவினார், இங்கே திருத்தூதரிலே ஒருவர் கன்னத்தை முத்தமிட்டு தீயவர்களிடம் தன் ஆண்டவரையே கையளிக்கிறான். (ஒப்பிடுக 7,38: 22,47). யோவான் நற்செய்திப்படி இயேசுவிற்காக படைவீரரின் காதை துண்டித்தவர் பேதுரு. லூக்கா நற்செய்தியில் மட்டுமே இயேசு காது துண்டிக்கப்பட்டவரை குணப்படுத்துகிறார். லூக்காவிற்கு இயேசு எப்போதுமே குணப்படுத்தும் ஆண்டவர். இருளில் நடக்கும் கைது மனிதர்களின் இருண்ட யுகத்தையும் இருண்ட குணங்களையும் காண்பிக்கிறது. நேரம் என்பது அதிகமாக யோவானில் நேர் பதமாகும், லூக்கா இங்கே இதனை எதிர் மறையாக பாவிக்கின்றார். இருட்டில் இவர்கள் செய்யும் செயல், கள்வர்கள் செய்யும் கொள்ளை செயலாகும் என்று சொல்கிறார் போலும்.

. தலைமை ஆயர் பேதுருவின் மறுதலிப்பு (22,54-65), அபாயமாகிப்பபோன ஆண்டவர்.

1. தலைமைக்குருவின் வீட்டிற்கு இயேசுவை இழுத்துச் செல்வது, ஏற்கனவே இவர்கள் அதனை திட்டமிட்டிருந்தார்கள் என்பதனைக் காட்டுகிறது. மற்றைய நற்செய்திகளைப் போலல்லாது பேதுருவை மையப்படுத்துகிறார் லூக்கா. ஒரு மணித்தியாலத்தில் ஒரு பெண்ணும் இரு ஆண்களுமாக மூன்று பேர் பேதுருவை சோதிக்கின்றனர். ஒரு வேளை பேதுரு சோதனைகளின் போதும் இந்த இடத்தைவிட்டு வெளியேறாமல் இருப்பதனைக் காட்டலாம். ஆண்டவர் பேதுருவை கூர்ந்து நோக்கினார் என்று, எமது காட்டிக்கொடுப்புக்களில் கடவுள் கூர்ந்து நோக்குகிறார் என்கிறார் லூக்கா. மனம்நொந்து அழுதது, இயேசுவிடம் இருந்து ஓடிச்செல்ல அல்ல, மாறாக ஊதாரி மகனைப்போல தந்தையிடம் திரும்பிவரவே என்கிறார் லூக்கா. பேதுரு பாவியானலும் துரோகியல்ல என்பது போல உள்ளது

2. இயேசுவை பரிகாசம் செய்தவர்கள் ஆலய காவலர்கள் என்பது லூக்காவின் எழுத்து. இங்கே மெசியா அல்லது மனுமகன் என்பதைவிட, கடவுளின் உண்மையான இறைவாக்கினர் ஏளனம் செய்யப்படுகிறார் எனக் காட்டுகிறார். இறைவாக்கினரை பழிந்துரைப்பதன் மூலம் ஆலயத்தை காக்கிற இவர்கள், ஆலயத்தின் கடவுளையே பழிந்துரைக்கின்றனர் என்கிறார் லூக்கா

. பலமில்லாத யூத சபையின் (சென்ஹட்ரின்) முடிவு (22,66-71): 
கடவுள் நிந்தனை சட்டம், கடவுளை நிந்திக்கிறது.

1. இயேசுவை இழுத்து வந்தவர்கள் மூப்பர்கள், தலைமைக்குருக்கள், மறைநூல் அறிஞர்கள் என்பதன் மூலம் அனைத்து தலைமைத்துவமும் இயேசுவை முடிவுகட்ட ஒன்றாக வருவதை அழகாக காட்டுகிறார். லூக்கா, இங்கே உரையாடல்களை பதிவு செய்வதன் மூலம், இயேசு சுயநினைவில் இருந்தார் என்பதனை காட்டுகிறார், எனவே இவர்கள் இயேசுவை கொலை செய்ய திட்டமிடுகின்றனர், இயேசு தற்கொலை செய்ய முயற்சிக்கவில்லை என்பதில் மற்றைய நற்செய்தியாளருடன் ஒத்துபோகிறார். மத்தேயு-மாற்குவில் இரவில் நடக்கும் சங்கக் கூட்டம் இங்கே விடியலில் நடக்கிறது. இயேசு இத்தலைவர்களுக்கு பதில் சொல்ல மறுக்கிறார் அத்தோடு தனக்கு கேள்வி கேட்கும் அதிகாரம் இருக்கிறது என்கிறார். தன்னை இங்கே மானிட மகனாக உருவகித்து கடவுளின் வலப்புறம் தன்னுடையது என்கிறார் (காண் தானி.7,13-14). தேவ நிந்தனைச் சட்டம், தேவனையே நிந்திப்பதாக மனிதர்களின் நகைச்சுவையை விவரிக்கிறார் லூக்கா

2. சங்கத்திற்கு மரண தண்டனை கொடுக்கும் அதிகாரம் இல்லாமையால் அதனை தேட வழிதேடுகின்றனர். இயேசுவின் வாயிலிருந்து கேட்டோமே என்று இவர்கள் சொல்வதன் மூலம், கேட்டும் புரிந்து கொள்ளவில்லை என ஊகிக்க வைக்கிறார்

. வெளிநாட்டத்தலைவர்கள் பிலாத்துவினதும் எரோதினதும் அரசியல் (23,1-12)
நரியும் கழுதைப்புலியும்

1. பிலாத்து அன்றைய நாளில் இருந்து உரோமைய பேரரசின் மாகாண பதிலாளி. ஐந்து வருடங்களாக இந்த வேலையை செய்து வந்தான், தன்னுடைய அலுவலகம் செசாரியாவில் இருந்தாலும், பாஸ்கா விழாவில் கலவரம் நடப்பதை எதிர்பார்த்து எருசலேமில் இருந்தான். அரசியல் ரீதியான காரணங்களை தங்களுடைய சகோதரனுக்கு எதிராக ஒர் அன்னிய ஆட்சியாளரிடம் முன்வைக்கின்றனர், இந்த மூத்த சகோதரர்கள். மத ரீதயான காரணங்களை, பல கடவுள் கொள்கைக்காரர்களான உரோமையர் செவிசாயார் என்பதனை உணர்ந்துபுரட்சி, கப்பம், அரச துரோகம் என்ற குற்றங்களை சுமத்துகின்றனர். மாற்குவைப் போல லூக்காவும், பிலாத்துவை அவ்வளவு கெட்டவனாக காட்டாமல், ஆண்டவரை குற்றம் சுமத்தியவர்கள்மேல் வாசகர்களின் பார்வையை இழுக்கிறார். பிலாத்துவுக்கு இயேசு கொடுக்கும் பதில், புதிர் போல உள்ளது.

2. ஏரோது முன்னிலையில் இயேசுவின் காட்சி லூக்காவில் உள்ள சிறப்பம்சம். இந்த இதுமேயனான ஏரோது, ஒரு யூதன் அல்ல, மக்கபேயருடைய காலத்தில் கிரேக்கருடனும், உரோமருடனும் சேர்ந்து, ஹஸ்மோனிய ஆட்சியாளர்களை வஞ்சித்து ஆட்சியை பிடித்தவன்தான் இவன் பாட்டன், பெரிய ஏரோது. வரலாற்றில் பெரியவர்கள் இப்படியானவர்கள்தான். இவனைத்தான் ஆண்டவர் நரி என்று வர்ணிப்பார். பிலாத்துவும் ஏரோதும் ஒருவருக்கொருவர் குறைவில்லாத அரசியல் செய்கின்றார்கள். ஏரோது திருமுழுக்கு யோவானைப் பொருட்டு இயேசுவைக் காணவிரும்பினான். இயேசு இவனுக்கு எந்த பதிலும் சொல்லாதது, அவனுக்கு கிடைக்கும் உச்ச கட்ட தண்டனை. அவர் வார்ததைகளைக் கேட்க இவனின் காதுகளுக்கு தகுதியில்லை எனச் சொல்லாம். அமைதி எவ்வளவு பலமான 
ஆயூதம் என்பதை இங்கு காணலாம்ஆலய படைவீரர்களைப் போல ஏரோதின் கூலிப்படைகளும் ஆண்டவரை ஏளனம் செய்கிறது. தீயவர்கள் நன்பர்கள் ஆகிறார்கள். இயேசுவின் உயிர்பின் பின்னர் இந்த நரியும், பிலாத்துவும் தங்களது தலைவர்களாலேயே தூக்கி வீசப்படுவார்கள். பிலாத்து ஏரோதுவை வைத்து அரசியல் லாபம்செய்யப் பார்கிறான். உரோமையர்கள் தங்களை கழுகு என்பார்கள், இவனுக்கு எந்த கழுகுக் குணமும் இல்லை




. மரண தண்டனை (23,13-25), 
உயிருக்கு மரணதன்டனை.

1. இந்த காட்சி மூன்று செய்திகளை அழகாக வர்ணிக்கிறது
. இயேசுவின் குற்றமின்மை
. கலகக்கும்பலின் தீமைக்கான கொந்தளிப்பு
. பிலாத்துவின் பலவீனம்
பிலாத்து மூன்று முறை அதாவது நிறைவாக, இயேசுவை விடுதலை செய்ய விரும்பியும் அவனால் முடியவில்லை என்று காட்டுவதன் மூலம் இந்த பாவத்திற்கு முழுகாரணமும் இந்த மக்கட் தலைவர்களே என்கின்றார் லூக்கா. பரபாவை இவர்கள் விடுதலை செய்யக் கேட்பதன் ஊடாக எப்படியாவது அல்லது எவரையாவது கொண்டு இயேசுவை முடிக்கவேண்டும் என்பதில் இவர்கள் உறுதியாக இருப்பது புலனாகிறது. .17 லூக்காவின் மூல பிரதியில் இல்லை, மாற்குவிலிருந்து உள்புகுத்தப்பட்டுள்ளது (மாற் 15,6). பிலாத்து இவர்களை கூப்பிட்டு பேச நினைக்கையில் கலகக் கும்பல் திடீரென சிலுவை மரணத்தைக் கேட்டு கத்துகிறது. லூக்கா கிரேக்கத்தில், ஒன்றாக சேர்ந்து கூச்சலிட்டார்கள் (ἀνακράζω அனாகிராட்ஸோ) என்று எழுதுகிறார்

2. ஆட்சியாளின் பலவீனமும், கலகக்காரர்களின் பலமும் எவ்வளவு ஆபத்தானது. அவை 
இயேசுவிற்கு மரசண தண்டனையை கொண்டுவருகின்றன. சிலுவை மரணம் உரோமையருடைய ஆட்சியில், பேரரசிற்கு எதிராக கலகம் அல்லது பாரிய குற்றம் என உரோமையர்கள் நினைத்ததை-செய்தவர்களுக்கு வழங்கப்பட்டது. இது உரோமையர் அல்லாதவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. யூதர்கள் இந்த தண்டனையை கடவுளுடைய சாபமாக கண்டனர் (காண் இனை 21,23: காலா 3,13). இங்கே கடவுளுடைய சாபத்தை கடவுளுக்கு கொடுக்க இவர்கள் முயலுகிறார்கள். பிலாத்துவின் முயற்சி தோற்க்க, கலகக் கும்பலின் கூச்சல் வெற்றியளிக்கிறது. இயேசு இவர்களின் ஆசைக்கு கையளிக்கப்படுகிறார் என்று உணர்வு பூர்வமாக பதிகிறார் லூக்கா

. மீட்பின் சிலுவைப் பாதை
 (23,26-31), பாதையான முதல் பயனம்

1. இந்த பகுதியில் எமது பாரம்பரிய சிலுவைப்பாதையின் சில நிலைகள் வருவதைக் காணலாம். (சீரேனூர் சீமோனும், எருசலேம் மகளீரும்). இந்த சீரேன் ஊர் சீமோன், பின்னாலில் வந்த சீரேனிய கிறிஸ்தவர்களை நினைவூட்கிறார் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். சீமோன் இயேசுவின் சிலுவையை சுமந்ததை மூன்று நற்செய்தியாளர்களும் பதிவுசெய்கின்றனர். சீமோன் நல்ல சீடன் போல இயேசுவிற்கு பின்னால் நடக்கிறார். (காண் 14,27: சிலுவையை சுமந்துகொண்டு என்னை பின்பற்றாதவர் என் சீடராய் இருக்க முடியாது.)

2. பலமில்லாமல் சிலுவையைச் சுமந்தாலும், ஆண்டவராக இருக்கிறார் என்பதை எருசலேம் மகளீருக்கு சொன்ன வார்த்தைகளிலிருந்து எண்பிக்கிறார் லூக்கா. இங்கே ஆழமான பல கருத்துக்களை பதிகிறார் லூக்கா. எருசலேம் மகளீர் என இஸ்ராயேல் இனத்தையே குறிப்பிடுகிறார் லூக்கா. இயேசு ஒசேயா 10,8 வரிகளையே நினைவூட்டுகிறார். லூக்கா 11,27ல் ஒரு பெண் மரியாவுக்கு குழந்தை பிறந்ததை நினைத்து மகிழ்ந்ததற்கு மாறாக இப்போது இவர்கள் பிள்ளைப்பேற்றை நினைந்து அழுவார்கள் என்பது, லூக்கா வாசகர்களுக்கு தரும் கடவுளின் இறுதி நாள் பற்றிய பயங்கர காட்சிகளாகும். பாவம் செய்யாத ஆண்டவருக்கு இந்த தண்டனை கிடைத்தால், பாவத்திறகுரிய எருசலேமின் நிலை என்ன என்று கேட்கிறர் லூக்கா. இந்த கேள்விற்கு விடை கி.பி 70இலும், 150 இலும் கிடைத்தது. ஒசேயா 10,8 நிறைவேறியது, உரோமையரின் இரக்கமற்ற இராணுவ கைகளால்

. சிலுவையில் அறைதலும் மரணமும் (23,32-49).
உயிர்த் தூக்கம்.

1. லூக்கா, கொல்கொதா என்ற அரமேயிக்க சொல்லை பாவிக்கமால் மண்டையோடு என்று கல்வாரி மலையின் உச்சியை குறிக்கும் ஒரு பொதுப் பெயரை பாவிக்கிறார். இயேசு இரண்டு குற்றவாளிகளின் நடுவில் சிலுவையில் அறையப்படுகிறார், இதனை மூன்று நற்செய்தியாளர்களும் பதிவு செய்கின்றனர் (காண் எசா 53,12). 

2. இயேசுவின் மன்னிப்பு வார்த்தைகள் பின்னாலில் கிறிஸ்தவ மறைசாட்சிகளின் மன்னிப்பு வார்த்தைகளானது, ஸ்தேவானும் இதனையே சொன்னார் (காண். தி.பணி 7,60). 

3. இயேசுவின் ஆடைகளை பகிர்ந்து தி.பாடல் 22,19 நிறைவுசெய்கிறார்கள். லூக்கா முழு 
யூத இனத்தையும் குற்றம் சொல்லாமல், அவர்களின் தலைவர்களையே கடுமையாக சாடுகிறார். லூக்கா, வழிப்போக்கர்கள் இயேசுவை கடவுளின் மெசியா என்று சொல்லி கிண்டல் செய்வாதாக குறிப்பிடுகிறார், இது ஆண்டவரின் திருஉரு மாற்றக் காட்சியை நினைவு படுத்துகிறது (காண் 9,35). மற்றைய நற்செய்தியாளர்கள் இந்த இடத்தில் இயேசுவை, யூதர்களின் அரசர் என்று சொல்லி ஏளனம் செய்ததாக எழுதியுள்ளார்கள். படைவீரர்கள் தங்களது இரண்டாம் தர இரசத்தை அரசரான இயேசுவுக்கு கொடுப்பதன் மூலம், தங்களது பகிடிவதையை காண்பிக்கின்றனர்

4. திருந்திய குற்றவாளியின் விசுவாச பிரமாணம், லூக்காவிற்கே உரிய பாணி. அவரின் நற்செய்தியின் மையப் பொருளும் இதுதான். பாவிகளையே தேடி மீட்கிற கடவுள், இங்கேயும் அதனையே செய்கிறார். இவரின் மூலம், ஆண்டவரின் அரசு வருகிறது என்பதையும், அதிலே அரசர், இயேசு என்பதையும், மனந்திருப்பியவர்கள் இன்றே அதை அடைவார்கள் என்பதையும், இயேசுவின் மரணம்தான் புதிய விடுதலைப் பயணம் என்பதையும் அழகாக காட்டுகிறார். இன்று (σήμερον செமெரொன் - இன்று) என்பதன் மூலம், இயேசு காலங்களை நிர்ணயிக்கும் கடவுள் என்று காட்டுகிறார். பேரின்ப வீடு என்பது கிரேக்கத்தில் பரதெய்சொஸ் (παράδεισος) எனப் பொருள் படும். இது ஏதோன் தோட்டத்தை நினைவுபடுத்துகிறது

5. இயேசுவின் மரணத்தில் பல காட்சிகள் நடைபெறுகின்றன. இருள்: தீமையின் நேரம் என உருவகிக்கலாம். திரை கிழிதல்: இயேசுவின் மரணம், கடவுளுக்கும் மனிதருக்கும் இடையிலான திரையை கிழக்கிறது என நினைவூட்டுகிறது. இயேசு, யாராலும் கொலை செய்யப்பட முடியாதவர், அவர் கடவுள், தன் ஆவியை தன்னால் தான் கொடுக்க முடியும் என்று காட்டுகிறார் லூக்கா. சொந்த மக்கள் தம் மெசியாவை புறக்கணிக்க இங்கே ஒரு அன்னியன் அவரை இறைமகனாக அடையாளம் காண்கிறார். மாரடித்து புலம்புவதன் மூலமாக பெண்கள் எப்போதும் லூக்காவில்  முக்கியமான இடத்தை பிடிப்பதைக் காணலாம். லூக்கா, கெஸ்தனமெனியில் சீடர்க்ள் இயேசுவை விட்டு ஓடினார்கள் என்று குறிப்பிடவில்லை, ஆகவே அவர்கள் இங்கே தெலைவில் நின்று அனைத்தையும் பார்திருக்கலாம்

. உயிரின் நல்லடக்கம்
 (23,50-56)

1. அரிமத்தேயா எருசலேமிற்கு வடக்கிலிருந்த ஒரு சிற்றூர். யோசேப்பு இங்கே சக்கரியா, எலிசெபேத்து, சிமியோன், அன்னா போன்ற நீதிமான்களின் வரிசையில் இடம்பெறுகிறார்
இவரும் இறையாட்சிக்கு காத்திருக்கிறார். புதுக் கல்லறை என்கிற இடத்தில் ஆச்சரியாமாக ஒத்தமை நற்செய்தியாளர்களும் யோவானும் ஒத்துப்போகிறார்கள். தெய்வீக மக்கள் அல்லது அரசர்கள் புதிய கல்லறையில் அடக்கம் செய்யப்படுவதை பல வரலாற்று கதைகளில் காணலாம்.

2. பெண்கள் கல்லறையில் இயேசுவை தரிசித்தார்கள் என்று சொல்லி இது வதந்தியல்ல என்கிறார் லூக்கா. ஓய்வு நாளுக்கு எதிராக எவரும் எதனையும் செய்யவில்லை என்பதை அவதானமாக சொல்கிறார் லூக்கா. இது கிறிஸ்துவை பின்பற்றுகிறவர்கள் சட்டங்களுக்கு எதிரானவர்கள் என்ற குற்றச்சாட்டை மறுக்கும் வாதத்தை தருகிறது. நறுமண தைலங்களையும் எண்ணைகளையும் ஆயத்தம் செய்கிறார்களே தவிர, அவற்றைக் கொணர்ந்து இயேசுவிற்கு ஓய்வு நாளில் பூசவில்லை என்கிறார்.


ஆண்டவரின் பாடுகளின் வரலாறு கல்லறையில் முடிவடையவில்லை
அது அவரின் உயிர்பிலே நிறைவடைந்து தொடர்கிறது
எருசலேமிலே அவர் நடந்த பாதைகளில் 
இன்றும் பல ஆயிரம் மக்கள் தினம் தினம் நடக்கிறார்கள்
ஆனால் அழுகையும் ஒப்பாரியும் இன்றும் நின்றபாடில்லை
இயேசு நம்முடைய பாதையும், பயணமும்,
நாம் அடையவேண்டிய இலக்குமாக இருக்கிறார்

இந்த குருத்து ஞாயிறிலே
கழுதைக் குட்டியில் வருகின்ற ஆண்டவர்
எங்களை எமது பாவங்கள், பலவீனங்களில் இருந்து மீட்பாராக. ஆமென்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆண்டின் பொதுக்காலம் முப்பத்திநான்காம் வாரம் கிறிஸ்து அரசர் பெருவிழா:  Our Lord Jesus Christ, King of the Universe 24.11.2024

ஆண்டின் பொதுக்காலம் முப்பத்திநான்காம் வாரம்   கிறிஸ்து அரசர் பெருவிழா :  Our Lord Jesus Christ, King of the Universe 24.11.2024 இய...