வெள்ளி, 17 ஆகஸ்ட், 2018

20th Sunday in Ordinary Time (B): ஆண்டின் பொதுக்காலம் இருபதாம் ஞாயிறு (ஆ)



ஆண்டின் பொதுக்காலம் இருபதாம் ஞாயிறு ()
19.08.2018

மி.ஜெகன்குமார் அமதி,
லூர்து அன்னை ஆலயம்,
லுணுகலை, பதுளை
செவ்வாய், 14 ஆகஸ்ட், 2018
முதல் வாசகம்: நீதிமொழிகள் 9,1-6
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 34
இரண்டாம் வாசகம்: எபேசியர் 5,15-20
நற்செய்தி: யோவான் 6,51-58

ஞானம், இதனை புதிய மொழிபெயர்ப்பு, 'மெய்யறிவு' என்று வார்த்தைப் படுத்துகிறது. எபிரேய விவிலியம் ஞானத்திற்கு கொக்மா (חָכְמָה) என்ற சொல்லையும், கிரேக்க விவிலியம் சோபியா (σοφία) என்ற சொல்லையும் பயன்படுத்துகின்றன. ஞானத்திற்கும் அறிவிற்கும் பெரிய வித்தியாசங்கள் உள்ளன. அறிவு என்பது, வாசிப்பு, திறமை, சந்தர்பங்கள் போன்றவற்றால் தீர்மானிக்கப்படுகிறது. ஞானத்திற்கு நிச்சயமாக அறிவு தேவை, ஆனால் ஞானம் அறிவைவிட மேலானது. அது ஆன்மாவுடம் சம்மந்தப்பட்டது, அனுபவத்தாலும் நம்பிக்கையாலும் தீர்மானிக்கப்படுகிறது
நல்லதும், ஆரோக்கியமானதும், முதிர்ச்சியானதுமான தீர்மானங்களை எடுத்தலை, ஞானம் என்று அகராதிகள் வரைவிலக்கணப்படுத்துகின்றன. ஞானிகள், நிகழ்வுகளையும், காரண காரியங்களையும் வித்தியாசமாக பார்க்கிறார்கள்
இஸ்ராயேலின் ஞானிகள், நவீன விஞ்ஞான மற்றும் அறிவியல் கண்டுபிடிப்புக்கள் வளர்ந்திராத காலத்தில் வாழ்ந்தவர்கள், பாரம்பரிய முறைமைகளையே அதிகமாக பின்பற்றியவர்கள். உலகம், இயற்கை, மனிதன், உள்மனம் பற்றிய சிந்தனைகள் மறைபொருளாக மட்டுமே கண்ட காலம் அது. இஸ்ராயேலின் ஞானிகளோடு ஒப்பிடுகையில் தமிழ் ஞானிகள் இன்னும் ஒரு படி மேலாகவே இருந்திருக்க வேண்டும் என எண்ணுகின்றேன். இஸ்ராயேல் ஞானிகள் வாழ்ந்த காலத்தில் கிரேக்க மற்றும் பாரசீக ஞானிகள் பல மடங்கு அறிவியலில் சிறந்து விளங்கியிருக்கிறார்கள்
கடவுளை மையப்படுத்துவதுதான் இஸ்ராயேலின் ஞானத்தின் சிறப்பம்சம். இஸ்ராயேல் ஞான நூல் ஆசிரியர்களும், ஞானியர்களும் ஒரே கடவுள் நம்பிக்கையையும், கடவுளை மையப்படுத்திய அறியவியலையும், தமக்கே உரிய விதத்திலும், அக்கால விஞ்ஞான அறிவுகளையும் சார்ப்பு படுத்தியும் அமைத்தனர்


நீதிமொழிகள் 9,1-6
1ஞானம் தனக்கு ஒரு வீட்டைக் கட்டியிருக்கின்றது அதற்கென ஏழு தூண்களைச் செதுக்கியிருக்கின்றது. 2அது தன் பலிவிலங்குகளைக் கொன்று, திராட்சை இரசத்தில் இன்சுவை சேர்த்து, விருந்து ஒன்றிற்கு ஏற்பாடு செய்தது; 3தன தோழிகளை அனுப்பிவைத்தது; நகரின் உயரமான இடங்களில் நின்று, 4'அறியாப் பிள்ளைகளே, இங்கே வாருங்கள்' என்று அறிவிக்கச் செய்து மதிகேடருக்கு அழைப்பு விடுத்தது 5'வாருங்கள், நான் தரும் உணவை உண்ணுங்கள்; நான் கலந்துவைத்துள்ள திராட்சை இரசத்தைப் பருகுங்கள்; 6பேதைமையை விட்டுவிடுங்கள்; அப்பொழுது வாழ்வீர்கள்; உணர்வை அடையும் வழியில் செல்லுங்கள்' என்றது. 7இகழ்வாரைத் திருத்த முயல்வோர் அடைவது ஏளனமே; பொல்லாரைக் கண்டிப்போர் பெறுவது வசைமொழியே

மெய்யறிவு (ஞான) நூல்களில் ஒன்றான நீதிமொழிகளில் இருந்து இன்றைய முதல் வாசகம் எடுக்கப்பட்டுள்ளது. எபிரேய விவிலியம் இதனை ஞான இலக்கியங்களுள் வகைப்படுத்துகிறது. ஒழுக்கங்களையும் சிறந்த பழக்க வழக்கங்களையும் இஸ்ரயேல் பிள்ளைகளுக்கு கற்பிக்க விளையும் இந்த நூலின் முதல் ஒன்பது அதிகாரங்கள், மெய்யறிவின் மேன்மையை எடுத்துரைக்கின்றன. பல காலப் பகுதியில் எழுதப்பட்டு பின்னர் ஒரு நூலாக தோற்றம் பெற்றது என பலர் இந்தப் புத்தக்தை கருதுகின்றனர். எபிரேய விவிலியம் இதனை מִשְׁלֵי שְׁלֹמֹה மிஷ்லே 
ஷெலோமொஹ் என அழைக்கிறது (சாலமோனின் நீதிமொழிகள்). பலவிதமான இலக்கிய நடைகளை இந்த புத்தகம் கையாள்கிறது, பழமொழி உரைகள், நாட்டுப்புற முது மொழிகள், வாய்மொழி உரைகள், நீடிக்கப்பட்ட உருவகங்கள், திருப்பாடல்கள், சாதாரண உரைகள் என்று பலதும் பத்தும் இங்கே காணக்கிடக்கிறன. இதில் அதிகமானவை, ஆசிரியர் மாணவருக்கு உரைப்பது போல அமைந்துள்ளன. இதன் ஆசிரியர் சாலமோன் என்பதைவிட, அவருக்கு இது அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என்றுதான் கூறவேண்டும். நீதி மொழிகள் புத்தகம் இஸ்ராயேலருடை தனித்துவமான புத்தகமாக இருந்தாலும், இதன் இலக்கிய வகையினுள் அயல் நாட்டவரின் தாக்கங்கள் இருந்திருக்கின்றன 
என்பதை மறுக்கமுடியாது
நீதிமொழிகளின் ஒன்பதாவது அதிகாரம் ஞானத்தையும் மதிகேட்டையும்பற்றி  
இறைவாக்குரைக்கிறது. மதிகேடு விவிலியத்தில் ஞானத்திற்கு எதிர்பதமாகவும், தீயவர்களுக்கான வாழ்க்கைமுறையாகவும் பார்க்கப்படுகிறது. ஞானம் கடவுளின் பண்பாகவும், கடவுளை அடைய எளிய முறையாகவும் அடையாளப்படுத்தப்படுகின்ற போது, மதிகேடு ஒருவரை கடவுளில் இருந்து தூரகொண்டு செல்லும் எதிர்க்காரணியாக பார்க்கப்படுகிறது

.1: ஞானம் வீடு ஒன்றை கட்டியிருப்பதாகவும், அதற்கு ஏழு தூண்களை நிறுவியிருப்பதாகவும் 
இந்த வரி காட்டுகிறது. ஞானம் இங்கே ஒரு பெண்ணாக வர்ணிக்கப்படுகிறது. இந்த பெண், தன்னுடைய வீட்டில் ஏழு தூண்களை செதுக்கியிருக்கிறாள் (חָכְמוֹת בָּנְתָה בֵיתָהּ ஹோக்மோத் பான்தாஹ் வேதாஹ்- ஞானம் தனக்கென்று வீடு ஒன்றை கட்டியிருக்கிறாள்.). חָצְבָה עַמּוּדֶיהָ שִׁבְעָה׃ 'ஹாட்செவாஹ் 'அம்மூதெஹா ஷிவ்'ஆஹ்- ஏழு தூண்களை தனக்கென்று செதுக்கியிருக்கிறாள்
இந்த ஏழு தூண்கள் அக்கால உலகத்தின் அடித்தள நம்பிக்கையை நினைவுகூர்கின்றன. ஒரு வீட்டை நடுநிலைமையாக அமைக்க ஏழு தூண்கள் தேவைப்பட்டன என்ற கட்டவியல் நம்பிக்கையும் அக்காலத்தில் இருந்திருக்கின்றன. அதேவேளை ஏழு என்ற இலக்கம், நிறைவின் மற்றும் புனிதத்தின் அடையாளமாகவும் கருதப்படுகிறது

.2: முழுமையான பலிவிருந்து ஒன்று வர்ணிக்கப்படுகின்றது. ஞானம் தன் பலி விலங்குகளை தயார்படுத்தியதாகவும், அவற்றை திராட்சை இரசத்தில் சேர்த்து, விருந்திற்கு ஏற்பாடு சேர்த்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது
பலி விலங்குகளை கொலை செய்தல், சற்று கடுமையான வார்த்தை பிரயோகங்களாக நோக்கப்படலாம். இதனை விவிலியங்கள் பலி உணவுகளை தயார்ப்படுத்தல் என்ற தோரணையில் காட்டுகின்றன (טָבְחָה טִבְחָהּ தாவ்ஹாஹ் திவ்ஹாஹ்- தன் பலி மிருகங்களை பலியிட்டாள்). இறைச்சி மற்றும் இரசம் போன்றவற்றின் அடையாளங்கள் அக்கால விமரிசையான விருந்துபசாரத்தை காட்டுகின்றன. இந்த அடையாளங்களை பாவித்து, ஞானம் தன்னுடைய படிப்பினைகளில் முதல் தரமான விருந்துகளை ஒத்த பலன்களை தன் சீடர்களுக்கு கொடு;க்கிறது என்ற சிந்தனையை ஆசிரியர் முன்வைக்கிறார். இறைச்சியை இரசத்தில் தோய்த்தல் என்ற முறை அக்கால பதப்படுத்தல் முறையை நினைவூட்டலாம். இறைச்சியை இரசத்தில் தோய்ப்பது, இறைச்சியில் சுவையையும், உணவில் போதையையும் உண்டாக்கும், இந்த அடையாளத்தை பயன்படுத்தி, ஞானம் தன் தகமையால், சீடர்களை வசீகரிக்கும் பண்பு கொண்டது என்பது சொல்லப்படுகிறது

.3: ஞானம் தன் தோழிகளை அனுப்புகிறது, அவர்கள், உயரமான இடத்திற்கு சென்ற அழைப்பு விடுகிறார்கள். שָׁלְחָה נַעֲרֹתֶיהָ תִקְרָ֑א עַל־גַּפֵּ֗י מְרֹמֵי קָרֶת׃ ஷால்ஹாஹ் 'அரோதெஹா திக்ரா' 'அல்-காபெ மெரொமெ காரெத்- தன் தோழிகளை தன் தோழிகளை அனுப்பினாள், கூப்பிடுகிறாள், நகரின் மிகவும் உயரமான இடத்திலிருந்து

.4: வித்தியாசமான அழைப்பு முறை நகரின் பிள்ளைகளான அறியாப்பிள்ளைகளுக்கு கொடுக்கப்படுகிறது. இந்த அறியாப்பிள்ளைகளுக்கு 'மதிகேடர்கள்' என்ற ஒத்த வார்த்தைப் படுத்தப்படுகிறது
ஞானம் எப்போதும் யாரையும் ஒதுக்கி வைப்பதில்லை, அது மதிகேடரைக் கூட அரவனைக்க காத்திருக்கிறது என்பதை இந்த வரி காட்டுகின்றது. அறியாப் பிள்ளைகள், மதிகேடர்களைக் குறிக்க இதயத்தில் வெறுமையானவர்கள் என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது (חֲסַר־לֵ֝ב אָמְרָה ஹெசர்-லெவ் 'ஆம்ராஹ்- இதயத்தில் வெறுமையானவர்களுக்கு சொன்னாள்)

.5: இவர்களுக்கு, தான் தாயரித்து வைத்துள்ள உணவை உண்ணவும், கலந்து வைத்துள்ள திராட்சை இரசத்தை பருகவும் அழைப்புவிடுகிறாள் ஞானம் (לַחֲמוּ בְלַחֲמִ֑י லஹ்மோ பெலாஹமி- என் உணவை உண்ணுங்கள்: שְׁת֗וּ בְּיַיִן ஷெதூ பெயாயின்- என் பாணத்தை பருகுங்கள்). 
ஞானத்தின் வரவேற்பு, விருந்துபசாரம் போல இன்னொருமுறை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த உருவகத்தின் வாயிலாக ஆசிரியர், ஞானத்தின் பயன்பாடுகளை அனுபவிக்க தன் வாசகர்களை அழைக்கிறார்

.6: ஞானம் தன் விருந்திற்கு வரச்சொல்லும், அதேவேளையில் பேதமையை விட்டுவிடச் சொல்கிறது (עִזְבוּ פְתָאיִם 'இட்வூ பெதா'யிம்- அறியாமையை அகற்றுங்கள்). அறியாமையை அகற்றினால், ஒருவர் வாழ்வார் (וִחְיוּ யிஹ்யிவ்), அத்தோடு அவர் படிப்பினைகளின் வழியில் நடப்பார் என்பதும் சொல்லப்படுகிறது (אִשְׁר֗וּ בְּדֶרֶךְ בִּינָה 'இஷ்ரூ பெதாரெக் பின்னாஹ்- புரிந்துணர்வின் வழியில் செல்லுங்கள்). 

.7: இகழ்வார் (לֵ֗ץ லெட்ஸ்), திருத்தப்பட முடியாதவர்கள் என்பதைக் காட்டுகிறது. இவர்களை திருத்துவபர்கள் ஏளனத்தையும், வசைமொழிகளையுமே பெற்றுக்கொள்வார்கள்
இகழ்பவர்கள், தங்களுடைய செயற்பாடுகளிலே உறுதியாக இருக்கிறார்கள், அத்தோடு அவர்கள் அதனை சரியயெனவும் வாதிடுகின்றனர். இதனால்தான் இவர்களை திருத்தி எந்த பிரயோசனமும் இல்லை என்கிறார், ஆசிரியர்

வவ.8-18: ஞானிகளுக்கும் (חָכָ֗ם ஹாகாம்) அறிவிலிகளுக்கும் (לֵץ  லெட்ஸ்) உள்ள வித்தியாசத்தை 
இந்த வரிகள் காட்டுகின்றன
இகழ்வாரை கடிவது, பகைமையை மட்டுமே கொண்டுவரும், ஞானிகளை கடிவது அவர்களிடமிருந்து அன்பைக் கொண்டுவருகிறது. ஞானிகளுக்கு அறிவுரை கூறல், நேர்மையாளருக்கு கற்றுக்கொடுத்தல், போன்றவை நல்ல பயனைக் கொடுக்கிறது. பத்தாவது வரி விவிலியத்தில் மிக முக்கியமான வரிகளில் ஒன்று (תְּחִלַּת חָכְמָה יִרְאַת יְהוָה தெஹிலத் கோக்மாஹ் யிர்'அத் அதேனாய்: דַעַת קְדֹשִׁים בִּינָה தா'ஆத் கெதோஷிம் பினாஹ்- தூயவரைத் அறிவதே மெய்யறவிவு).
ஞானத்தால் வாழ்நாள் கூடுகின்றது, நன்மைத்தனங்கள் பெருகுகின்றன. மதிகேடை கவர்ச்சியான விபச்சாரிக்கு ஒப்பிடுகிறார். விபச்சாரியிடம் செல்கின்ற ஆண்கள் தங்கள் நிம்மதியை இழப்பது போல, மதிகேட்டை நம்பிச் செல்கிறவர்களும் தம் வாழ்நாளை இழக்கிறார்கள் என்பது இவருடைய நம்பிக்கை



திருப்பாடல் 34
கடவுளின் கருணையைப் புகழ்தல்
(தாவீதுக்கு உரியது அவர் அபிமெலக்கின் முன் பித்துப் பிடித்தவர் போலத் தம்மைக் காட்டியபோது அவன் அவரைத்துரத்திவிட, அவர் வெளியேறினார்; அப்போது அவர் பாடியது)
1ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும்
என் நாவில் ஒலிக்கும்.
2நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன்; எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர்.
3என்னுடன் ஆண்டவரை பெருமைப்படுத்துங்கள்; அவரது பெயரை ஒருமிக்க மேன்மைப்படுத்துவோம்.
4துணைவேண்டி நான் ஆண்டவரை மன்றாடினேன்; அவர் எனக்கு மறுமொழி பகர்ந்தார்; எல்லா வகையான அச்சத்தினின்றும் அவர் என்னை விடுவித்தார்.
5அவரை நோக்கிப் பார்த்தோர் மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்; அவர்கள் முகம்
அவமானத்திற்கு உள்ளாகவில்லை.
6இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்; அவர் எல்லா நெருக்கடியினின்றும் அவனை விடுவித்துக் காத்தார்.
7ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வோரை அவர்தம் தூதர் சூழ்ந்துநின்று காத்திடுவர்.
8ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்; அவரிடம் அடைக்கலம் புகுவோர்
பேறுபெற்றோர்.
9ஆண்டவரின் தூயோரே, அவருக்கு அஞ்சுங்கள்; அவருக்கு அஞ்சுவோர்க்கு
எக்குறையும் இராது.
10சிங்கக் குட்டிகள் உணவின்றிப் பட்டினி இருக்க நேரிட்டாலும், ஆண்டவரை நாடுவோர்க்கு
நன்மை ஏதும் குறையாது.
11வாரீர் பிள்ளைகளே! நான் சொல்வதைக் கேளீர்! ஆண்டவருக்கு அஞ்சுவதைப்பற்றி
உங்களுக்குக் கற்பிப்பேன்.
12வாழ்க்கையில் இன்பம் காண விருப்பமா? வாழ்வின் வளத்தைத் துய்க்குமாறு நெடுநாள் வாழ நாட்டமா?
13அப்படியெனில், தீச்சொல்லினின்று உன் நாவைக் காத்திடு; வஞ்சக மொழியை
உன் வாயைவிட்டு விலக்கிடு!
14தீமையைவிட்டு விலகு; நன்மையே செய்; நல்வாழ்வை நாடு; அதை அடைவதிலேயே கருத்தாயிரு.
15ஆண்டவர் கண்கள் நீதிமான்களை நோக்குகின்றன் அவர் செவிகள்
அவர்களது மன்றாட்டைக் கேட்கின்றன.
16ஆண்டவரின் முகமோ தீமைசெய்வோர்க்கு எதிராக இருக்கின்றது; அவர், அவர்களின் நினைவே
உலகில் அற்றுப்போகச் செய்வார்.
17நீதிமான்கள் மன்றாடும்போது, ஆண்டவர் செவிசாய்க்கின்றார்; அவர்களை அனைத்து
இடுக்கண்ணினின்றும் விடுவிக்கின்றார்.
18உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் ஆண்டவர் இருக்கின்றார்; நைந்த நெஞ்சத்தாரை
அவர் காப்பாற்றுகின்றார்.
19நேர்மையாளருக்கு நேரிடும் தீங்குகள் பல் அவை அனைத்தினின்றும் ஆண்டவர் அவர்களை விடுவிக்கின்றார்.
20அவர்களின் எலும்புகளை எல்லாம் அவர் பாதுகாக்கின்றார்; அவற்றுள் ஒன்றும் முறிபடாது.
21தீயோரைத் தீவினையே சாகடிக்கும்; நேர்மையாளரை வெறுப்போர் தண்டனை பெறுவர்.
22ஆண்டவர் தம் ஊழியரின் உயிரை மீட்கின்றார்; அவரிடம் அடைக்கலம் புகும் எவரும் தண்டனை அடையார்.

இந்த முப்பதிநான்காம் திருப்பாடலின் தலையங்க வரி இதற்கு பின்னால் உள்ள வரலாற்றை நினைவுபடுத்துகின்றது. (தாவீதுக்கு உரியது அவர் அபிமெலக்கின் முன் பித்துப் பிடித்தவர்போலத் தம்மைக் காட்டியபோது அவன் அவரைத்துரத்திவிட, அவர் வெளியேறினார்; அப்போது அவர் பாடியது). இந்த பின்னணியை 1சாமு 21,10-14 இல் வாசிக்கலாம். சவுலுக்கும் தாவீதிற்கும் இடையில் நடந்த அதிகாரப் போட்டியில் தாவீது தன் உயிரைக் காக்க அந்நியரான பிலிஸ்திய அரசன் காத்தின் பாதுகாப்பை நாடி அவர் நாட்டில் தங்கினார். காத்தினுடைய தனிப்பட்ட பெயர் ஆகிஷ் ஆனால் இந்த திருப்பாடல் அவரை அபிமெலெக் அல்லது அகிமெலக் என வாசிப்பது வித்தியாசமாக உள்ளது ( אֲבִימֶלֶךְ அவிமெமெலக், Αχιμελεχ அகிமெலெக்). இந்த பிலிஸ்திய அரசன் தாவீதிற்கு அடைக்கலம் கொடுத்த போது சவுலின் பகைமையை மட்டுமே நினைத்திருப்பார், அனால் பிலிஸ்தியருக்கெதிரான தாவீதின் செயல்கள் அவருக்கு நினைவூட்டப்பெற்ற போது அவர் தாவீதை சிறைப்பிடிக்க முயல்கிறார், இதனால் தாவீது மனநோயாளிபோல் நடித்து தப்பிக்கிறார். தாவீது சிறந்த போர் வீரன் மட்டுமல்ல நல்ல தற்பாதுகாப்பு நடிகன் என்பதையும் நிரூபிக்கிறார். ஆகிஷிடம் இருந்து தப்பித்தது, தாவீதுக்கு ஒரு கடவுள் அனுபவத்தைக் கொடுக்கிறது, அந்த கடவுள் அனுபவம் அவரை இந்த பாடலை இயற்றி படிக்க வைத்ததாக எபிரேய வரலாற்று நம்பிக்கை எடுத்துரைக்கிறது

(10பிறகு தாவீது எழுந்து அந்நாளில் தப்பியோடி காத்தின் மன்னன் ஆக்சிடம் சென்றார். 11ஆக்கிசின் அலுவலர்கள் அவரிடம், 'இவன் இஸ்ரயேல் நாட்டு அரசன் தாவீது அன்றோ? 'சவுல் ஆயிரம் பேரைக் கொன்றான். தாவீதோ பதினாயிரம் பேரைக் கொன்றான்' என்று பெண்கள் நடனமாடித் தங்களுக்குள் பாடிக் கொள்ளவில்லையா?' என்றனர். 12தாவீது இவ்வார்த்தைகளைத் தம் மனதில் வைத்துக் கொண்டு, காத்தின் அரசன் ஆக்கிசை முன்னிட்டு மிகவும் அஞ்சினார். 13அதனால் தம் முகத் தோற்றத்தை மாற்றிக் கொண்டு வாயிற் கதவுகளில் கிறுக்கிக் கொண்டு, தாடி வழியே வாயிலிருந்து நுரை ஒழுகச் செய்து அவர்கள் முன்னிலையில் ஒரு பைத்தியக்காரன் போல் நடித்தார். 14அப்போது ஆக்கிசு தன் அலுவலர்களிடம், 'இதோ இம்மனிதனைப் பாருங்கள்; இவன் ஒரு பைத்தியக்காரன்! இவனை ஏன் என்னிடம் அழைத்து வந்தீர்கள்? 15என் முன்னிலையில் பைத்தியக் காரத்தனத்தை காட்ட நம்மிடம் பைத்தியங்கள் குறைவா? இவன் என் வீட்டினுள் நுழையலாமா?' என்று சினமுற்றான்.)

வவ.1-2: இந்த முன்னுரையின் உதவியுடன் இந்த வரிகளை வாசிக்கின்ற போது இந்த வார்த்தைகளின் ஆழத்தை புரிந்து கொள்ள முடிகிறது. ஆண்டவரை புகழ்தல் அல்லது அவரது பெருமைகளை பறைசாற்றுதல் என்பது, ஒரு காலத்திற்கு உட்பட்டதல்ல ஏனெனில் கடவுள் ஒருவர் பலமாக இருக்கும் போது மட்டுமல்ல அவர் பலவீனமாக இருக்கும் போதும் தேவையானவர், என்ற உண்மையை தாவீது பிலிஸ்தியரின் அரண்மனையில் புரிந்துகொண்டார். கடவுளின் பெருமைகளை கேட்டபோது எளியோர் அக்களிப்பர் என்று தாவீது பாடுவது, இஸ்ராயேலரை குறிக்கும் அல்லது தாவீதைச் சார்ந்த இஸ்ராயேலரைக் குறிக்கிறது என்றும் எடுக்கலாம். יִשְׁמְעוּ עֲנָוִים וְיִשְׂמָחוּ யிஷ்மெ' 'ஆனாவிம் வெயிஸ்மாஹு- எளியோர் இதைக் கேட்ப்பார்கள், மகிழ்வார்கள்

.3: தன்னோடு இணைந்து ஆண்டவரை பெருமைப்படுத்தக் கேட்கிறார் ஆசிரியர், அதனை அவர் ஆண்டவரின் பெயரை மேன்மைப் படுத்தல் முயற்ச்சி என்கிறார்
ஆண்டவரை பெருமைப் படுத்தலும், அவரது பெயரை பெருமைப் படுத்தலும் (גַּדְּלוּ לַיהוָה கத்லூ லஅதோனாய்- ஆண்டவரை உயர்த்தல்: נְרוֹמְמָה שְׁמוֹ நெரோம்மாஹ் ஷெமோ- அவர் பெயரை உயர்த்துங்கள்), ஒத்த கருத்து வினைகளாக பார்க்கப்படுகிறது

.4: தான் ஆண்டவரை துணைவேண்டி மன்றாடியதாகவும், அவர் மறுமொழி பகர்ந்ததாகவும், எல்லாவகையான அச்சத்திலிருந்தும் தன்னை விடுவித்ததாகவும் சொல்கிறார்
ஆண்டவர் ஒருவருக்கு மறுமொழி கொடு;த்தல் மற்றும் அனைத்து விதமான அச்சங்களிலிருந்தும் விடுவித்தல் என்ற உணர்வுகள் ஆழமான நம்பிக்கையின் வரிகள். இதனை உரைக்கின்றவர், நிச்சயமாக ஆண்டவரைப் பற்றி பல ஆழமான அனுபவங்களைக் கொண்டவராக இருக்க வேண்டும். இந்த வரியும், தாவீதுதான் இந்த பாடலை எழுதினார் என்பதற்கு இன்னொரு சான்றாக இருக்கிறது. כָּל־מְגוּרוֹתַי கோல்-மெகூரோதாய்- என்னுடைய எல்லாவகையான அச்சங்கள்

.5: ஆண்டவரை நோக்கி பார்த்தோரை இந்த வரி எழுவாய்ப் பொருளாக எடுக்கிறது. ஆண்டவரை மனித பண்புகளோடு வர்ணிப்பது திருப்பாடல்களின் தனித்துவம். ஆண்டவரின் முகம் என்பது அவரது பிரசன்னத்தைக் குறிக்கலாம். ஆண்டவரை பார்த்தல் என்பது அவரது பிரசன்னத்தை உணர்தல் என்ற அர்த்தத்தைக் கொடுக்கும்
மக்கள் மகிழ்ச்சியால் மிளிர்தல் என்பது, அவர்களுடைய உள்ளத்தின் நிறைவைக் காட்டுகின்றது. அவர்களின் முகம் அவமானத்தை சந்திக்கவில்லை என்பது, அவர்கள் தோல்வியை சந்திக்கவில்லை என்ற அர்த்தத்தைக் கொடுக்கிறது

.6: ஆசிரியர் தன்னை 'இந்த ஏழை அழைத்தான்' என்கிறார் (זֶה עָנִי קָרָא ட்செஹ் 'ஆனி காரா'). இவருடைய கூவி அழைத்தலுக்கு, மன்றாட்டு  என்ற அர்த்தமும் கொடுக்கப்படலாம். ஆசிரியர் மிகவும் தாழ்ச்சியுடையவராக இருந்திருக்க வேண்டும், இதனால்தான் தன்னை ஏழை என்கிறார்
செவிசாய்த்தலும், அனைத்து நெருக்கடிகளில் நின்று விடுவித்தலும், ஒத்த கருத்துச் செயற்பாடுகள். மீண்டும் மீண்டும் ஆண்டவரின் செவிசாய்த்தல் என்ற அர்த்தம் இந்த வரிகளில் வருவதைக் காணலாம்

.7: ஆண்டவரின் தூதர், ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வோரை காத்திடுவார் என்று உறுதிப்படுத்துகிறார். ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வோர் என்போர், ஆண்டவரில் மிக நம்பிக்கை உள்ளோரைக் குறிக்கும். ஆண்டவருக்கு அச்சம் என்பது பயத்தை குறிக்காது. ஆண்டவரின் தூதர் ஒருவரைக் காத்தல் என்பதன் மூலம், அந்த நபர் ஆண்டவருக்கு அருகில் இருக்கிறார் என்பது சொல்லப்படுகிறது. מַלְאַךְ־יְהוָ֓ה סָ֘בִ֤יב לִֽירֵאָ֗יו மல்'அக்-அதோனாய் சாவிவ் லிரெ'ஆவ்- ஆண்டவரின் தூதர் அவருக்கஞ்சுவோரை சுழ்ந்திடுவார்

.8: ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப்பார்க்கச் சொல்கிறார். இந்த வரி நற்கருணை ஆண்டவரோடு தொடர்பு படுத்தப்படுகிறது. இந்த வரி திருப்பாடல்கள் புத்தகத்தில் அதிகமாக பயன்படுத்தப்பட்ட வரிகளில் ஒன்று. טַעֲמוּ וּרְאוּ כִּי־טוֹב יְהוָה 'அமூ வுரெ' கி-தோவ் அதோனாய்- சுவையுங்கள் பாருங்கள், ஆண்டவர் நல்லவர் என்று
சுவை என்பது முதல் ஏற்பாட்டில் அனுபவமாகத்தான் இருக்கவேண்டும். இவர்கள் நற்கருணை கொண்டாடத்தில் பங்கெடுக்கவில்லை. அக்காலத்தில் நற்கருணை கொண்டாட்டமும் இருந்திருக்கவில்லை. ஆண்டவரை சுவைத்தலை அவரிடம் அடைக்கலம் புகுதல் என்ற ஒத்த கருத்துச் சொல்லில் இன்னொருமுறை வார்த்தைப் படுத்துகிறார் (יֶחֱסֶה־בּֽוֹ யெஹெசெஹ்-போ அவரில் அடைக்கலம் புகுவோர்). 

.9: ஆண்டவருக்கு அஞ்சுவோரை ஆண்டவரின் தூயவர் என்கிறார் தாவீது. ஆண்டவருக்கு அஞ்சுதல் அதாவது அவரில் நம்பிக்கை கொள்ளல் என்பது தூய்மையான மக்களின் வாழ்வைக் குறிக்கிறது. இவர்களுக்கு எக்குறையும் இருக்காது என்கிறார். இந்த குறைகள் எவை என அவர் சொல்லவில்லை
தாவீது பலவிதமான குறைகளை அனுபவித்தவர், அவர் ஆழமான நம்பிக்கையை கொண்டிருந்தபடியால், அக்குறைகள் அவரை தாக்கவில்லை. அனைத்து குறைகளையும் அவர் தாண்டி வந்திருக்கிறார். அந்த அனுபவம்தான் இங்கே சொல்லப்படுகிறது. קְדֹשָׁיו கெதோஷாவ்- அவர் தூயவர்கள்

.10: அருட் தந்தை பெக்மான்ஸ் (இந்தியா தமிழ்நாடு) இந்த வரிகளைக் கொண்டு அழகான பாடல் வரியை உருவாக்கியுள்ளார்.
சிங்கக்குட்டிகள் உணவின்றி பசியாய் இருக்காது என்பது ஆசிரியரின் நம்பிக்கை போல. சிங்கம் மிகவும் பலமான வேட்டை மிருகம். அதனை நாம் வனத்து அரசன் என்கின்றோம். இதற்கு பல புராண கதைகள் சார்பாக உள்ளன. இஸ்ராயேல் நாட்டில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சிங்கங்கள் அழிந்துவிட்டன. இருப்பினும் இவர்களுக்கு ஆபிரிக்காவில் வாழ்ந்த சிங்கங்களை பற்றி அதிகமாக தெரிந்திருக்க வேண்டும், அத்தோடு சிங்கம் வல்லமையின் அடையாளமாகவும் 
இருந்திருக்கிறது. இதனால்தான் சிங்கக் குட்டிகள் பசியால் வாடாது என நம்பியிருக்கிறார் என எடுக்கலாம். தற்போதை ஆய்வுகளின் படி சிங்கங்கள் உண்மையாக பலமான வேட்டை மிருகங்கள் கிடையாது, சிங்கத்தைவிடவும் பலமான வேட்டை மிருகங்கள் நிலத்திலும் நீருலும் உள்ளன. அத்தோடு சிங்கங்கள் அதிகமான நேரத்தை தூக்கத்திற்கே செலவழிக்கின்றன என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அத்தோடு சிங்கம் காட்டு அரசன் என்பது ஒரு கதைதான் என்பதும் உண்மை. இவை ஆசிரியின் எழுவாய்ப் பொருள் அல்ல
அவருக்கு தெரிந்த சிங்கம் பலமான மிருகம். இப்படி பலமான மிருகத்தின் குட்டிகளே பசியால் வருந்தினாலும், ஆண்டவரை நாடுவோருக்கு என்றுமே குறைவிராது என்கிறார். ஆக ஆண்டவரை நாடுவோர், சிங்கத்தை விட பலசாலியாகவும், பாதுகாப்பாகவும் இருக்கிறார்கள் என்பது காட்டப்படுகிறது. כְּפִירִים கெபிரிம்- குருளைகள்

.11: ஆண்டவருக்கு அஞ்சுதல் என்றால் என்வென்று சொல்லித்தருவதாகச் சொல்கிறார். ஆண்டவருக்கு அஞ்சுதல் என்பது, இஸ்ராயேலர்களின் ஆன்மீகத்தில் மிக முக்கியமான பங்கை வகிக்கிறது. கடவுளுக்கு அஞ்சுதல் என்பது இறைபயத்தை குறிக்காது, அது இறைவனுக்கு மரியாதை கலந்த ஆழமான அன்பு-விசுவாசத்தைக் குறிக்கிறது
இந்த ஆன்மீகம், தலைமுறை தலைமுறையாக கடத்தப்படுகிறது. பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்கப்படுகிறது. இதனை அவர்கள் தங்கள் கலாச்சாராமாகவே பார்த்தார்கள்
לְכוּ־בָנִים שִׁמְעוּ־לִי லெகூ வானிம், ஷிம்மூ-லீ - வாருங்கள் பிள்ளைகளே எனக்கு செவிகொடுங்கள். יִֽרְאַת יְהוָ֗ה אֲלַמֶּדְכֶם׃ யிர்'அத் அதோனாய் 'அலாம்மெத்கெம்- கடவுளுக்கு அஞ்சுதலைக் கற்றுத்தருவேன். 

வவ.12-13: வாழ்க்கையில் இன்பம் காண்பது அனைவருடைய விருப்பம், இதனை அதிகமான நாட்கள் வாழ விருப்பம் என்றும் சொல்லலாம். வாழ்வில் இன்பம் காண அதிக காலம் வாழ மனிதர்கள் விரும்புவார்கள், இந்த விருப்பத்தை அக்கால மனிதர்களும் கொண்டிருந்தார்கள் என்பது இந்த வரியிலிருந்து தெளிவாகிறது. מִי־הָאִישׁ הֶחָפֵץ חַיִּ֑ים மி-ஹாயிஷ் ஹௌhபெட்ஸ் ஹய்யிம்- எந்த மனிதருக்கு வாழ்வில் மகிழ்வுகான விரும்பம்
இதற்கான விடையாக, தீச்சொல்லிலிருந்து நாவைக் காத்திடவும், வஞ்சக மொழியை வாயைவிட்டு விலக்கிவிடுதலையும் காட்டுகிறார். தீச்சொல்லையும், வஞ்சக மொழியையும் ஆசிரியர் ஒத்த கருத்து சொற்களாக பாவிக்கின்றார். (שׁוֹנְךָ מֵרָע ஷோனெகா மெரா'- தீமையிலிருந்து நாவு). நாவும் அதனைச் சார்ந்த தீமையான வார்த்தைப் பிரயோகங்களும்தான் அனைத்து நிம்மதியின்மைகளுக்கும் காரணம் என்பதை இந்த வரிகள் காட்டுகின்றன். முதல் ஏற்பாடும், புதிய ஏற்பாடும் நாவை ஆபத்தான உறுப்பாக வர்ணிப்பதைக் காணலாம்

.14: அழகான கட்டளை கொடுக்கப்படுகிறது. வாழ்வின் இன்பம் காண்பதற்கான இன்னொரு வாழ்கைக் கட்டளை, தீமையை விட்டு விலகுதல் என்பதாகும், அத்தோடு நன்மையை செய்தல், நல்வாழ்வை நாடுதல் மற்றும் அதனை அடைவதில் கருத்தாய் இருந்தல் என்பனவும் காட்டப்படுகின்றன. இந்த நான்கு கட்டளைகளும் ஒன்றோடு ஒன்று தொடர்பு பட்டிருக்கின்றன
நன்மையை செய்ய ஒருவர் தீமையை விட்டுவிட வேண்டும். நன்மையையும் தீமையையும் ஒருவர் ஒருமித்து செய்ய முடியாது. அப்படிச் செய்தால் அவருடைய தீமை மட்டும்தான் நினைவில் கொள்ளப்படும். நன்மை கருத்தில் எடுக்கப்படாது (סוּר מֵרָע וַעֲשֵׂה־טוֹב சூர் மெரா' 'செஹ்-தோவ்- தீமையை விலத்து, அத்தோடு நன்மையைச் செய்). 
சமாதானத்தை தேடுதல் மட்டும் போதாது அதனை தொடர்ச்சியாக பின்பற்ற வேண்டும் என்கிறார் ஆசிரியர். בַּקֵּשׁ שָׁלוֹם וְרָדְפֵהוּ׃ பகெஷ் ஷாலோம் வெராத்பெஹு- சமாதானத்தை தேடு அத்தோடு அதனை தொடர்ச்சியாக தேடு

.15: ஆண்டவரின் கண்கள் நீதிமான்களை நோக்குகின்றன எனவும், அவருடைய செவிகள் அவர்களின் மன்றாட்டை கேட்கின்றன எனவும், ஆசிரியர் தன் நம்பிக்கையை அழகான உருவகங்களில் முன்வைக்கிறார்
இஸ்ராயேலர்களின் நம்பிக்கை, கடவுளை மனிதராகவோ அல்லது உருவகமாகவோ பார்க்கவில்லை. இது கானானிய நம்பிக்கைக்கும் அவர்களுக்கும் இருந்த மிக முக்கியமான வித்தியாசம். இந்த வரிகளில் ஆசிரியர் கடவுளை மனிதராகக் காட்டவில்லை. இங்கே கடவுளின் கண்கள் (עֵינֵי יְהוָה 'எனே அதோனாய்- கடவுளின் கண்கள்) அவருடைய பார்வையையும், அவருடைய செவிகள் (אָזְנָ֗יו 'ஆட்செநாவ்- அவர்காதுகள்) அவருடைய கிரகிக்கும் தன்மையையும் காட்டுகின்றன. கடவுள் நீதிமான்களை பார்க்கிறார், அவர்களது மன்றாட்டை கேட்கிறார் என்ற செய்திதான் இங்கே முக்கியமான செய்தியாகும்.  

.16: முதல் வரிக்கு எதிராக இந்த வரி வருகின்றது. ஆண்டவர் தீவினை செய்பவர்களை என்ன செய்வார் என்பது சொல்லப்படுகிறது. ஆண்டவரின் முகம் தீமை செய்பவர்களுக்கு எதிராக 
இருக்கிறது. ஆண்டவரின் முகம் என்பது இங்கே அவருடைய பிரசன்னத்தைக் குறிக்கிறது. தீமை செய்கிறவர்கள் ஆண்டவரின் பிரசன்னத்தைக் கொண்டிருக்க முடியாது என்பது சொல்லப்படுகிறது. இந்த சிந்தனையை எபிரேய வரியின் வார்த்தைகள் சற்று வித்தியாசமாகக் காட்டுகிறது פְּנֵי יְהוָה בְּעֹשֵׂי רָע பெனே அதோனாய் பெ'ஓசே ரா'- ஆண்டவரின் முகத் தீமை செய்வோருக்கு.
இந்த வரி விளக்கம் இல்லாமல் இருப்பதை இந்த வரியின் இரண்டாவது பிரிவு தெளிவு படுத்துகிறது. அதில், அவர் அவர்களின் நினைவை நிலத்தில் இருந்து வெட்டிவிடுவார் என்று காட்டுகிறது (לְהַכְרִית מֵאֶרֶץ זִכְרָֽם׃ லெஹகெரித் மெ'எரெட்ஸ் ட்சிக்ராம்- நிலத்திலிருந்து அவர்கள் நினைவை வெட்டிவிட). 

வவ.17-20: இந்த வரிகளும் நீதிமான்களுடைய தகமைகளையும் அவர்களுக்கு கடவுள் செய்யும் நன்மைத் தனங்களையும் விளக்க முயல்கின்றன
நீதிமான்கள் மன்றாடும் போது ஆண்டவர் செவிசாய்கின்றார், அவர்களை அனைத்து இடுக்கண்களிலிருந்தும் விடுவிக்கின்றார். இந்த செய்தி மூலமாக, நீதிமான்களும் மன்றாடவேண்டியவர்களே, அத்தோடு அவர்கள் இடுக்கண்களையும் சந்திக்கிறவர்களே. ஆனால் அவர்களுடைய முடிவு வித்தியாசமாக இருக்கும் என்பதே செய்தி (எபிரேய விவிலியத்தில் நீதிமான்கள் என்ற எழுவாய் மறைந்துள்ளது, சூழலியலில் இது நீதிமான்களைக் குறிக்கிறது
צָעֲקוּ וַיהוָה שָׁמֵעַ ட்சா'அகூ வாயாதோனாய் ஷாமெ'- அவர்கள் கூக்கிரடுவர் ஆண்டவர் செவிசாய்ப்பார்). 
உடைந்த உள்ளத்தாரையும் (נִשְׁבְּרֵי־לֵב நிஷ்வெரே-லெவ்- உடைந்த இதயம்) நைந்த நெஞ்சத்தாரையும் (אֶת־דַּכְּאֵי־רוּחַ 'எத்-தக்'-ரூஹா- நொருங்கிய ஆவி) ஒத்த வார்த்தையால் ஒற்றுமைப் படுத்தி பார்கிறார் ஆசிரியர்.
நேர்மையாளருக்கு தீமைகள் பல உண்டாகும் என்பதை ஆசிரியர் ஏற்றுக்கொள்கிறார். தீமைகள் பலவா அல்லது சிலவா என்பதல்ல, மாறாக அப்படியான வேளைகளில் கடவுள் அருகில் 
இருக்கிறாரா என்பதில்தான் அனைத்தும் இருக்கிறது. ஆசிரியரின் கருத்துப்படி நேர்மையாளர்களின் அனைத்து தீமைகளிலிருந்தும் ஆண்டவர் அவர்களை விடுவிக்கிறார் (יַצִּילֶנּוּ יְהוָה யாட்சிலெனூ அதோனாய்- ஆண்டவர் அவர்களை மீட்கிறார்). 
எலும்புகள் மனிதருடைய பலத்தின் அடையாளமாக இருக்கின்றன. எலும்புகளில் உயிர் அணுக்கள் இருந்ததாகவும் நம்பப்பட்டது. இஸ்ராயேல் மக்கள் எலும்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள். இறந்வர்களின் எலும்புகளை சேமித்துவைப்பதையும் ஒரு வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். யோசேப்பின் எலும்புகள் எகிப்பதிலிருந்து கானானிற்கு கொண்டுவரப்பட்டது நினைவுகூறப்பட வேண்டும். இந்த வரி யோவான் நற்செய்தியில் இறந்த இயேசுவின் எலும்புகள் உடைபடாததை நினைவு படுத்துகிறது. அதாவது நீதிமான்கள் துன்பப்பட்டாலும் அவர்களின் எலும்புகள் பாதுகாக்கப்படுகின்றன (காண்க யோவான் 19,31-37) עַצְמוֹתָיו 'ஆட்செமோதாய்வ்- அவர் எலும்புகள்.

வவ.20-21: தீயோரை கடவுள் சாகடிக்க வேண்டிய தேவையில்லை. அவர்கள் தங்கள் தீவினையின் செயல்களாலேயே சாகிறார்கள். அவர்கள் தண்டனை பெறுவதற்கான காரணம், அவர்கள் நல்லோரை வெறுப்பதாகும் என்கிறார் ஆசிரியர். ஆக நேர்மையாளர்களை வெறுத்தல் தீவினைக்கான காரணமாக அமைகிறது. (תְּמוֹתֵת רָשָׁע רָעָה தெமோதெத் ராஷா' ரா'ஆஹ்- தீமை தீயவனைக் கொல்கிறது)
இது தீயவர்களின் நிலையாக இருக்க, நல்லோர் ஆண்டவரினால் காக்கப்படுகிறார்கள். நல்லவர்கள் ஆண்டவரின் ஊழியர்கள் என அடையாளப் படுத்தப்படுகிறார்கள் (יְהוָה נֶפֶשׁ עֲבָדָיו அதோனாய் நெபெஷ் 'அவாதாவ்ய்). ஆண்டவரிடம் அடைக்கலம் புகுகிறவர்கள் தண்டனை அடையாமல் தப்புகிறார்கள். இங்கனம் அடைக்கலம் புகுகிறவர்கள் (הַחֹסִים ஹஹோசிம்), ஆண்டவரின் மக்களாக மாறுகிறார்கள்

எபேசியர் 5,15-20
15ஆகையால் உங்கள் நடத்தையைப் பற்றி மிகவும் கருத்தாய் இருங்கள். ஞானமற்றவர்களாய் வாழாமல் ஞானத்தோடு வாழுங்கள். 16இந்த நாள்கள் பொல்லாதவை. ஆகவே காலத்தை முற்றும் பயன்படுத்துங்கள்; 17ஆகவே அறிவிலிகளாய் இராமல், ஆண்டவருடைய திருவுளம் யாது எனப் புரிந்து கொள்ளுங்கள். 18திராட்சை மது அருந்திக் குடிவெறிக்கு ஆளாகாதீர்கள். இது தாறுமாறான வாழ்வுக்கு வழிகோலும். மாறாக, தூய ஆவியால் ஆட்கொள்ளப்படுங்கள். 19உங்கள் உரையாடல்களில் திருப்பாடல்கள், புகழ்ப்பாக்கள், ஆவிக்குரிய பாடல்கள் ஆகியவை 
இடம்பெறட்டும். உளமார இசை பாடி ஆண்டவரைப் போற்றுங்கள். 20நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பெயரால் எல்லாவற்றிற்காகவும் எப்போதும் தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள்.

ஏற்கனவே கிறிஸ்துவின் மக்கள் அவரைப் போல நறுமணம் வீசும் பலிப்பொருளாக இருக்க வேண்டும் என அறுவுறுத்திய பவுல், அவர்களை ஒளி பெற்றவர்களாக இருக்கவேண்டும் என அழைப்புவிடுகிறார். வீண் வார்த்தைகள், கீழ்ப்படியாமை, போன்றவற்றைக் கொண்டு இருளில் வாழவேண்டாம் என்கிறார். இயேசுவை ஏற்றுக்கொள்ளாத சிலர் மிகவும் அசிங்கமான வாழ்க்கை வாழ்கிறார்கள் என்று சொல்கிறார், இவர்களைப் பற்றிய நேரடியான விளக்கம் தரப்படவில்லை
இவர்கள் திருச்சபைக்கு எதிரானவர்கள் அல்லது திருச்சபையிலிருந்து பிரிந்தவர்களாகவும் 
இருக்கலாம்

.15: எபேசியர்கள் தங்கள் நடத்தையில் கவனமாக இருக்கக் கேட்கப்படுகிறார்கள். இந்த கவனமாய் இருத்தலை ஞானமுள்ள வாழ்க்கை என காட்டுகிறார். ஞானமற்ற வாழ்க்கை இருள் வாழ்க்கை என்ற சிந்தனை இந்தவரியின் பின்னால் இருப்பதைக் காணலாம் (μὴ ὡς ἄσοφοι ἀλλ᾿ ὡς σοφοί, மே ஹோஸ் அசொபொய் அல்ல ஹோஸ் சொபொய்- ஞானமற்றவர்களாய் இருக்காமல் ஞானமுள்ளவர்களாய்). 

.16: தற்காலத்தை பொல்லாத காலம் என்கிறார், ஆக காலத்தை முற்றிலும் பயன்படுத்தக் கேட்கிறார். இதனை பவுல் எழுதி இப்பொழுது 2000 ஆண்டுகள் கடந்துவிட்ட போதும், இந்த வரி நிகழ்காலத்தின் சாவல்களை எதிரொலிப்பதாக இருக்கிறது
இந்த வரியில் நாட்களைக் குறிக்க ஹெமெரா (ἡμέρα) என்ற சொல்லும், தக்க காலத்தைக் குறிக்க காய்ரோஸ் (καιρός) என்ற சொல்லும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதில் முதலாவது சொல் மனித காலக் கணக்கிற்கு உட்பட்டதாகவும், இரண்டாவது சொல் காலக் கணக்கிற்கு உட்படாத சொல்லாகவும் காணப்படுகிறது

.17: காலம் இப்படியிருக்கின்ற படியால் அறிவிலிகளாய் இராமல், ஆண்டவரின் திருவுளத்தை சரியாக புரிந்துகொள்ளக் கேட்கிறார் (θέλημα τοῦ  κυρίου தெலேமா டூ கூரியூ). ஆண்டவரின் திருவுளத்தைச் சாற்றியே அதிகமான பிழைகள் எபேசிய திருச்சபையில் காணப்படுகிறது என்று பவுல் சந்தேகித்திருக்கலாம்
ஆண்டவருடைய திருவுளம் எது என புரிந்துகொள்வது அவ்வளவு இலகுவான விடயம் அல்ல என்பதை பவுல் நன்கு புரிந்துவைத்திருக்கிறார். தவறான மற்றும் ஆபத்தான வழிகளில் செல்பவர்கள் கூட தங்கள் வழிகளை ஆண்டவரின் வழிகள் என நினைப்பது சாத்தியமாகிறது

.18: திராட்சை மது அருந்தி குடிவெறிக்கு ஆளாகவேண்டாம் என்கிறார். உரோமையருடைய காலத்தில் திராட்சை மது மிகவும் சாதாரணமான பானமாக இருந்திருக்கிறது. திராட்சை மதுவை அருந்தாதவர் மிகச் சிலராகவே இருந்திருக்க வேண்டும். சிறுவர்கள் கூட திராட்சை மதுவை அருந்தியதற்கான சான்றுகள் கிடைக்கப் பெறுகின்றன. இதனைப்போலவே யூத உலகிலும் திராட்சை  பானம் சாதாரண பானமாக இருந்திருக்கிறது. இந்த திராட்சை பானத்தில் பல வகைகள் இருந்தன. (οἶνος ஒய்னொஸ்-திராட்சை பானம்). விவிலியத்தில் திராட்சை பானம், மற்றும் திராட்சைக் செடியின் கொடிகள் போன்றவை, அடையாளங்களாக பாவிக்கப்பட்டன
திராட்சை பானம் அளவிற்கு அதிகமான பருகப்பட்டால் அவை மதுவாக மாறுகின்றன. அத்தோடு, இதனை வெறிப் பானமாகவும் மாற்றலாம். திராட்சைப் பானத்தை குடிவெறியாக மாற்றினால், அதனால் வரும் துன்பங்களைப் பற்றி பேசுகிறார் பவுல். அது தாறுமாறான வாழ்விற்கு அடிகோலும் என்கிறார் (ἀσωτία அசோடியா-தாறுமாறான வாழ்க்கை). இதற்கு மாறாக தூய ஆவியினால் ஆட்கொள்ளப்படக் கேட்கிறார் (πληροῦσθε ἐν πνεύματι, பிலேரூஸ்தே என் புனுமாடி- தூய ஆவியில் நிரப்பப்படுங்கள்). மதுவை அருந்துகிறவர்கள் அதற்கு ஆட்கொள்ளப்படுகிறார்கள், தூய ஆவியின் மக்கள் அவரில் ஆட்கொள்ளப்படுகிறார்கள்
(பவுலுடைய இந்த வரி இன்றும் நம்முடைய குடிமக்களுக்கு சாலப்பொருந்தும்).

.19: எபேசியர்களில் உரையாடல்கள் எப்படியிருக்கவேண்டு;ம் என்கிறார் பவுல். உரையாடல்களில் திருப்பாடல்கள் (ψαλμός ப்சால்மொஸ்), புகழ்ப்பாக்கள் (ὕμνος 
ஹம்னொஸ்), ஆவிக்குரிய பாடல்கள் (ᾠδαῖς  πνευματικαῖς ஓதாய்ஸ் புனுமாடிகாய்ஸ்) இடம்பெறக் கேட்கிறார்அத்தோடு உளமாற இசைபாடி ஆண்டவரைப் போற்றக்கேட்கிறார் பவுல்
கிரேக்க உரோமைய உலகில், பலவிதமான பாடல் கச்சேரிகள் இடம்பெற்றிருக்கின்றன
இந்த பாடல்கள் அதிகமானவை களியாட்டங்களாக இருந்திருக்கலாம். இந்த களியாட்டங்கள் முடிவுறும் வேளைகளில் பல அசுத்தமான செயற்பாடுகள் இடம்பெற்றன. இவை இறையரசின் வாழ்விற்கு எதிராக இருந்த படியால், அதனை தூண்டுகின்றன இந்த களியாட்டங்களை வெறுக்கக் கேட்கிறார் பவுல்

.20: கிறிஸ்தவ வாழ்வு, நன்றி செலுத்தும் வாழ்வாக இருக்க வேண்டும் என்பது பவுலின் ஆதங்கம். இதனை அழகான கிரேக்க வரியில் காட்டுகிறார். எல்லாவற்றிக்காகவும் (πάντοτε பான்டொடெ), எப்போதும் (ὑπὲρ πάντων ஹுபெர் பான்டோன்), தந்தையாம் கடவுளுக்கு (τῷ  θεῷ καὶ πατρί டோ தியூ காய் பாட்ரி), நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பெயரில் (ἐν ὀνόματι τοῦ κυρίου ἡμῶν Ἰησοῦ Χριστοῦ என் ஒனொமாடி டூ கூரியூ ஹேமோன் ஈசூ கிறிஸ்டூ), நன்றி சொல்லச் சொல்கிறார்
கடவுளுக்கு நன்றிசெலுத்த முடியும், இருப்பினும் அதன் ஊடகமாக கிறிஸ்துவே இருக்க வேண்டும் என்பதில் பவுல் ஆணித்தரமாக இருக்கிறார்

யோவான் 6,51-58
மானிட மகனின் சதையும் இரத்தமும் உணவாதல்
51'விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன்.'
52'நாம் உண்பதற்கு இவர் தமது சதையை எப்படிக் கொடுக்க இயலும்?' என்ற வாக்குவாதம் அவர்களிடையே எழுந்தது.
53இயேசு அவர்களிடம், 'உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; மானிடமகனுடைய சதையை உண்டு அவருடைய இரத்தத்தைக் குடித்தாலொழிய நீங்கள் வாழ்வு அடையமாட்டீர்கள். 54எனது சதையை உண்டு என் இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளார். நானும் அவரை இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன். 55எனது சதை உண்மையான உணவு. எனது இரத்தம் உண்மையான பானம். 56எனது சதையை உண்டு எனது இரத்தத்தைக் குடிப்போர் என்னோடு இணைந்திருப்பர், நானும் அவர்களோடு இணைந்திருப்பேன். 57வாழும் தந்தை என்னை அனுப்பினார். நானும் அவரால் வாழ்கிறேன். அதுபோல் என்னை உண்போரும் என்னால் வாழ்வர். 58விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு இதுவே இது நம் முன்னோர் உண்ட உணவு போன்றது அல்ல. அதை உண்டவர்கள் இறந்து போனார்கள். இவ்வுணவை உண்போர் என்றும் வாழ்வர்.'

கடந்த இரண்டு வாரங்களாக, இந்த ஆறாம் அதிகாரத்திலிருந்துதான் நற்செய்தி பகுதிகள் எடுக்கப்படுகின்றன
ஏற்கனவே தன்னுடைய சதையையும், இரத்தத்தையும் வானிலிருந்து இறங்கிவருகின்ற உணவாக காட்ட பல உதாரணங்களை முன்வைத்த ஆண்டவர், இந்த வரிகளில் அதனை நேரடியாக தெளிவாகக் கூறிவிடுகிறார். ஆண்டவரும் தன்னுடைய விளக்வுரையை விடுவதாக இல்லை மக்களும் தங்களுடைய பிற்பாங்கான கேள்விகளை விடுவதாகவும் இல்லை

.51: வானிலிருந்து இறங்கிவந்த உயிருள்ள உணவு நானே என்று இன்னெருமுறை தெளிவாக சொல்கிறார் ஆண்டவர் (ἐγώ εἰμι ὁ ἄρτος ὁ ζῶν எகோ எய்மி ஹொ ஆர்டொஸ் ஹொ ட்சோன்- வாழ்வு தரும் உணவு நானே ὁ ἐκ τοῦ οὐρανοῦ καταβάς· ஹொ எக் டூ ஹுரானூ காடாபாஸ்- அத வானில் இருந்து இறங்கிவந்தது). நானே என்ற வார்த்தை பாவனைகளில் இந்த வரியும் இணைந்து கொள்கிறது
வானிலிருந்து இறங்கிய உணவு மன்னாதான் என்பதிலும், அல்லது இயேசுவால் அப்பங்களையும் தரமுடியும் என்பதிலும் மிக உறுதியாக இருக்கிறார்கள் மக்கள். ஆனால் அழியும் உணவிற்காக உழைக்காமல், அழியாத உணவான தன்னையே இவர்கள் தேடவேண்டும் என்பதில் ஆண்டவர் உறுதியாக இருக்கிறார்
தன்னுடைய சதையை உணவாகக் கொடுப்பதாகவும், அதனை உலகு வாழ்வதற்காக கொடுப்பதாகவும் தெளிவாகக் சொல்கிறார் ஆண்டவர் (ἐγὼ δώσω  ἡ σάρξ μού ἐστιν  ὑπὲρ τῆς τοῦ κόσμου ζωῆς எகொ தோசோ ஹே சார்க்ஸ் மூ எஸ்டின் ஹுபெர் டேஸ் டூ கொஸ்மூ ட்சோஏஸ்- என் சதையை உணவாகக் கொடுக்கிறேன் அதனை உலகு வாழ). 
யோவான் நற்செய்தி கிரேக்க இலக்கிய மற்றும் நம்பிக்கை முறைகளை அதிகமாக கொண்டுள்ளதை இந்தப் பகுதியில் அவதானிக்கலாம். கேள்வி-விடை முறையை மிக அழகாக யோவான் பாவிக்கின்றமை தெளிவாகிறது. இங்கே பாவிக்கப்படுகின்ற சில வார்த்தைகளும் கிரேக்க சிந்தனைகளில் பாவனையில் இருந்தவை. முக்கியமான 'உலகம்' κόσμος கொஸ்மொஸ் என்ற சொல் கிரேக்க மெய்யியலில் அதிகமாக பாவிக்கப்பட்ட சொல்

.52: வாக்குவாதம் μάχομαι மாகொமாய், என்ற சொல்லும் கிரேக்க உலகில் மிகவும் அறியப்பட்டச் சொல். இது ஓர் இலக்கிய முறையாகவும் இருந்திருக்கிறது. வாக்குவாதத்தின் மூலமாக அறிஞர்கள் தங்கள் வாதங்களை முன்வைத்து அதில் சரியானதை மக்களுக்கு எடுத்துரைக்க முயல்வர். விவிலியத்தில் வாக்குவாதம் அவ்வளவு நேர்முகமான சொல்லாக அறியப்படவில்லை
இங்கே ஆண்டவரை பின்பற்றியவர்கள் வாக்குவாதத்தில் இறங்குகிறார்கள், அதற்கான காரணமாக இயேசுவுடைய உடல் இருக்கிறது. இயேசு தன்னுடலை எப்படி உணவாகக் கொடுக்க முடியும் என்கிறார்கள் (πῶς δύναται  οὗτος ἡμῖν δοῦναι τὴν σάρκα αὐτοῦ φαγεῖν; போஸ் தூனாடாய் ஹுடொஸ் ஹேமின் தூனாய் டேன் சார்க்கா அவ்டூ பாகெய்ன்- நாம் உன்ன இவர் தன்னுடலை எப்படிக் கொடுக்க முடியும்). இந்த வாக்குவாதத்திற்கு பின்னால், அவநம்பிக்கை இருப்பதை யோவான் நற்செய்தியாளர் அடையாளப்படுத்துகிறார்

.53: இவர்களுடைய வாக்குவாதத்தை அவதானித்தாலும், இயேசு தன்னுடைய வாதத்தில் உறுதியாக இருக்கிறார். தன்னுடைய சதையை உண்டாலொழிய அத்தோடு அவர் இரத்தத்தை குடித்தாலொழிய அவர்களுக்கு வாழ்வில்லை என்கிறார். இந்த வரியில் தன்னை மானிட மகன் 'υἱοῦ τοῦ ἄνθρωπος' என்ற வார்த்தை மூலம் அடையாளப் படுத்துகிறார். நற்செய்திகளில் இந்தச் சொல் மெசியாவை அல்லது இறைமகனை குறிக்கவும் பயன்பட்டுள்ளது. யோவான் நற்செய்தியில் இது மெசியாவைத்தான் குறிக்கிறது
வாழ்வு என்பதும் இன்னொரு மிக முக்கியமான வார்த்தை. வாழ்வைத்தேடி பல கிரேக்க இலக்கியங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதிகமான மெய்யியல் சிந்தனைகளும்
இதனைத்தான் மையப்படுத்துகின்றன. இங்கே யோவான் இயேசுவை 'வாழ்வாக' காட்டுகிறார் (ζωή ட்சோஏ). 

.54: நிலைவாழ்வு என்பது இன்னொரு தேடல். இந்த வார்த்தை பிரயோகத்தை யூதர்கள் அறிந்திருந்தார்கள். நிலைவாழ்வு வேண்டுமா தன்னுடைய உடலை உண்டு இரத்தத்தை குடிக்க வேண்டும் என்கிறார் இயேசு (ἔχει ζωὴν αἰώνιον எகெய் ட்சோஏன் அய்யோனியோன்- நிலை வாழ்வை கொண்டுள்ளார்). 
நிலைவாழ்வோடு உயிர்த்தெழுதல் சம்பந்தப்பட்டுள்ளது. அதனால் தான் நிலைவாழ்வை கொண்டுள்ளவரை தான் இறுதி நாளில் உயிர்தெழச்செய்யவதாக ஆண்டவர் உரைக்கிறார். ἀναστήσω αὐτὸν  τῇ ἐσχάτῃ ἡμέρᾳ.  அனாஸ்டேசோ அவ்டொன் டே எஸ்காடே ஹேமெரா- அவரை இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன்.

.55: உண்மையான உணவைப் பற்றியும் சொல்லப்படுகிறது. தன்னுடைய சதை உண்மையான உணவாகவும், தன்னுடைய இரத்தம் உண்மையான பானமாகவும் காட்டுகிறார் இயேசு. σάρξ μου  ἀληθής ἐστιν βρῶσις, சார்க்ஸ் மூ அலேதேஸ் எஸ்டின் புரோசிஸ்- என் உடல் உண்மையான உணவு. αἷμά μου  ἀληθής ἐστιν πόσις. ஆய்மா மூ அலேதேஸ் எஸ்டின் பொசிஸ்.
அப்பத்தை தேடிய யூதர்கள் மட்டுமல்ல, இந்த உலகில் பலர் உணவைத் தேடித்தான் தங்களது வாழ்வை அமைக்கிறார்கள். உணவின் தரத்தை பொறுத்து அதன் விலையும் ஏறி இறங்குகிறது. இங்கே இது இயேசுவின் உடலாக இருக்கிறபடியால் நிலைவாழ்வின் உணவாகிறது

.56: இணைந்திருத்தல் என்ற இன்னொரு கருத்து இந்த வரியில் முன்வைக்கப்படுகிறது. ஒருவர் இன்னொருவரோடு இணைந்திருத்தல் என்பது, அவருக்கும் மற்றவருக்கும் இடையிலான பிரிக்க முடியாத உறவைக் காட்டுகிறது
யூதர்கள் தங்களை கடவுளோடு இணைந்திருக்கிறவர்கள் எனக் காட்டினார்கள். அதற்கு தங்களின் சட்டங்களையும், விருத்த சேதனத்தையும், யூத பிறப்பையும் உதாரணமாக காட்டினார்கள். இங்கே யோவான், இயேசுவோடு இணைந்திருக்க அவருடைய உடலையும், இரத்தத்தையும் உண்ணுதலைக் காட்டுகிறார். ἐν ἐμοὶ μένει κἀγὼ ἐν αὐτῷ என் எமொய் மெனெய் காகோ என் அவ்டோ- என்னில் அவர் நிலைப்பார், நானும் அவரில்

.57: இந்த விவரிப்பின் இறுதியில் இயேசு தன்னுடைய வார்த்தைகளுக்கு மூலமாக, தந்தையாகிய கடவுளைக் கொண்டு வருகிறார். இது இந்த இடத்தில் மிகவும் தேவையாக இருக்கிறது. தந்தையை வாழும் தந்தை என்கிறார் (ὁ ζῶν πατὴρ ஹொ ட்சோன் பாடேர்), அவர்தான் தன்னை அனுப்பினார் என்கிறார் (ἀπέστειλέν με அபெஸ்டெய்லென் மெ). இந்த இரண்டு விசுவாச சத்தியங்களும் யூதர்களுக்கு நன்கு தெரிந்திருப்பன
கடவுளால் தான் வாழ்வதைப் போல், தன்னை உண்போரும் தன்னால் வாழ்வர் என்கிறார். இந்த இடத்தில் தந்தைக்கும், தனக்கும், தன் உடலை உண்போருக்குமான பிரிக்க முடியாத உறவைக் காட்டுகிறார். அதாவது இயேசுவை விடுத்து தந்தையை அடைய முடியாது என்பதைக் காட்டுகிறார். ζήσει δι᾿ ἐμέ ட்சோசெய் தி எமெ- என்னால் வாழ்வார்.

.58: இயேசு தன்னுடலை மூன்றாம் நபராக விவரிக்கிறார். இந்த வாக்குவாதம் மற்றும் உரையாடல் பாலைவன மன்னா உணவோடு ஆரம்பித்தது. அதனை இந்த உரையாடலின் முடிவில் நினைவில் கொண்டு வருகிறார். விண்ணகத்திலிருந்து இறங்கி வந்து உணவு எது என்பதுதான் இந்த பகுதியின் கேள்வி, அது தான் தான் என்கிறார்
அடுத்ததாக இந்த உணவு, முன்னோர்கள் உண்ட உணவு போன்றது அல்ல என்கிறார்
இந்த இடத்தில் 'நம் முன்னோர்' (ημων ஹேமோன்-எங்கள்) என்கிறார் (தமிழ் விவிலிய மொழிபெயர்ப்பு). கிரேக்க விவிலியம் இதனை 'முன்னோர்' (πατέρες பாடெரெஸ்) என்றுதான் காட்டுகிறது. சில படிவங்கள் இதனை 'உங்கள் முன்னோர்;' (υμων ஹுமோன் - உங்கள்) என்றும் காட்டுகிறது. முன்னோர்கள் இறந்தார்கள் இந்த உணவை உண்போர் இறவார்கள் என்பதுதான் இந்த பகுதியின் மையக் கருத்து (ζήσει εἰς τὸν αἰῶνα. ட்சோசெய் எய்ஸ் டொன் அய்யோனா- நிலைவாழ்விற்கு வாழ்வார்கள்). 

இந்த உலகின் ஞானம், அறிவியலை மட்டுமே நம்பியிருக்கிறது
இந்த உலகின் அறிவியல் கெட்டித்தனத்தை மட்டுமே நிலைநிறுத்துகிறது
ஞானத்தில் நிச்சயமாக அறிவியல் இருக்கவேண்டும், ஆனால் அதுமட்டும் போதாது
ஞானமும் ஒரு வகை உணவுதான்
உணவு நாம் வாழ, தேடப்படுகிறது.
ஞானம் நாம் உண்மையாக வாழ தேடப்படுகிறது
ஏதை உண்கிறோமோ, அதாகிறோம்.
இயேசுவே உணவானால்
நிலைவாழ்வு நம்மைத் தேடி வரும்
இயேசுவை உண்டு, அவராவோம்
நம் ஞானம் உதவட்டும்


அன்பு ஆண்டவரே
உம்மை உணவாக்கி, என்னை மாற்ற உதவும், ஆமென்






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆண்டின் பொதுக்காலம் முப்பத்திநான்காம் வாரம் கிறிஸ்து அரசர் பெருவிழா:  Our Lord Jesus Christ, King of the Universe 24.11.2024

ஆண்டின் பொதுக்காலம் முப்பத்திநான்காம் வாரம்   கிறிஸ்து அரசர் பெருவிழா :  Our Lord Jesus Christ, King of the Universe 24.11.2024 இய...