தூய திருத்துவ ஞாயிறு (ஆ)
27,05,2018
மி. ஜெகன்குமார் அமதி,
வசந்தகம், யாழ்ப்பாணம்,
Saturday, May 26, 2018
முதல் வாசகம்: இணைச்சட்டம் 4,32-34.39-40
பதிலுரைப்பாடல்: திருப்பாடல் 33
இரண்டாம் வாசகம்: உரோமையர் 8,14-17
நற்செய்தி: மத்தேயு 28,16-20
தூய தமத்திரித்துவம்
தாய் கத்தோலிக்க திருச்சபையின் முக்கியமான விசுவாச படிப்பினைகளில், தமதிரித்துவம் மிக முக்கியமான படிப்பினையாகும். புலன்களுக்கும், மனித அறிவுக்கும் உட்புக முடியாத
இறைவன்,தன்னுடைய இயல்பைப் பற்றி அங்கும் இங்குமாக விவிலியத்தில் வெளிப்படுத்துகிறார்.
இறைவனின்தன்மையையும், சாரத்தையையும் பற்றிய வெளிப்படுத்தல்களை இறைவாக்கினர்,
நீதி தலைவர்கள், அரசர்கள், விவிலிய ஆசிரியர்கள் என்று பலர் வெளிப்படுத்தினாலும், இயேசு ஆண்டவரே இறைவனின் உண்மைகளை நிறைவாக வெளிப்படுத்தினார் என்பது நமது விசுவாசம். அவர் கடவுளாகவும் அந்த சாரத்தையும், தன்மையையும் கொண்டுள்ளவர் என்பதனாலும் இந்த வெளிப்பாடு முக்கியம் பெறுகிறது. திரித்துவத்தின் விளக்கங்கள், 'தோற்றக்கொள்கை'
(modalism) என்ற பேதகத்தின் காரணமாகவே வளர்ச்சியடைந்தது என வரலாற்றில் காணலாம். தோற்றக் கொள்கை, கடவுள் பல தோற்றங்களில் தோன்றினார் அவரில் மூன்று ஆட்கள் இல்லை என்று ஆரம்ப திருச்சபையுடன் வாதிட்டது. திரித்துவம் (Trinitas) என்ற நம்பிக்கை ஆரம்ப கால திருச்சபையில், தந்தை மகன் தூய ஆவியின் உறவை ஒரே கடவுள் விசுவாசத்தில் புரிந்து கொள்ள உருவானது. திருச்சபை தந்தை தெர்த்துல்லியன் இந்த சொல்லை அறிமுகப்படுத்தியதாக நம்பப்படுகிறது. இந்தச் சொல்லை விவிலியத்தில் இவ்வாறே காண இயலாது, ஆனால் இதன் சிந்தனைகளை கத்தோலிக்க விசுவாசத்தின் படி, முதல் மற்றும் புதிய ஏற்பாடுகளில் காணலாம்.
முதல் ஏற்பாடு, கடவுளின் ஆவி, கடவுளின் தூதர், என்றபடி இறைவனில் ஆட்கள் தன்மையை அடையாளம் காட்டுகிறது (தொ.நூ. 1,2: வி.ப. 23,23). அத்தோடு கடவுளுக்கு பன்மை பதங்கள் பாவிக்கப்படுவதும், கடவுளின் வார்த்தையையும், மெய்யறிவையும், ஆட்களாகக் காட்டுவதும் இதற்கான உதாரணங்கள் என சிலர் வாதிடுகின்றனர் (தொ.நூ 11,7:தி.பா 33,6: நீமொ 8,12). முதல் ஏற்பாட்டில் மூன்று மனிதர்கள் ஆபிரகாமை சந்தித்த நிகழ்வு பாரம்பரியமாக முதலாவது திரித்துவ காட்சி என்று நம்பப்படுகிறது (காண் தொ.நூ 18,1-2). ஆனால் நேரடியாக எந்த இடத்திலும் திரித்துவக் காட்சிகளை முதல் ஏற்பாட்டில் காணுவது இலகல்ல. பல கடவுள் சிந்தனைகளைக் கொண்டிருந்த மக்கள் மத்தியில் இஸ்ரயேலர் வாழ்ந்த படியால், ஒரே கடவுள் நம்பிக்கையை விதைப்பது இஸ்ரயேல் சமய தலைவர்களின் முக்கியமான போராட்டமாக இருந்தது (இ.ச 6,4-5). இந்த ஒரே கடவுள் நம்பிக்கையை ஒரு இறைவாக்கு போராட்டமாக இறைவாக்கினர் எலியா முன்னெடுத்தார் என இஸ்ராயேல் பாரம்பரியம் நம்புகிறது, இதனை விவிலியத்திலும் ஆங்காங்கே காணலாம்.
புதிய ஏற்பாட்டில், நேரடியாக திரித்துவ வெளிப்பாட்டைக் காணமுடியாவிடினும், அதன் சிந்தனைகளை கொஞ்சம் திருப்தியாக காணலாம். திரித்துவத்தின் வெளிப்பாட்டை முதலில் அன்னை மரியாவின் மங்களவார்த்தை நிகழ்வில் காணலாம் (காண்க லூக் 1,35). இங்கணம் அன்னை மரியாவிற்குத்தான் திரித்துவம் முதன் முதலில் வெளிப்படுத்தப்பட்டது என்ற ஒரு கத்தோலிக்க வாதமும் இருக்கிறது. இயேசு பலவேளைகளில் தான் தந்தையிடம் இருந்து வந்ததாகவும், அவருடைய கட்டளைகளை மட்டுமே செய்வதாகவும், தானும் தந்தையும் ஒன்று என்றும், பின்னர் தனது துணையாளரை அனுப்புவதாகவும் கூறுகிறார் (காண்க யோவா 14-16). தன்னை மகன் என்று கூறுகின்ற ஆண்டவர், துணையாளரை தனது ஆவி, இறைவனின் ஆவி என்றும் கூறுகிறார். இறுதியான கட்டளையையும் திரித்துவத்தின் பெயரிலேயே ஆண்டவர் கொடுக்கிறார் (காண்க மத் 28,19). பவுலுடைய கடிதங்கள் இந்த திரித்துவ கடவுளின் ஆசீரை மையப்படுத்திய வாழ்த்துக்களை தொடக்கவுரையாகவும் முடிவுரையாகவும் கொண்டிருக்கின்றன (காண்க 2 கொரி 13,14). இந்த வாழ்த்துக்களில் இருந்து ஆரம்ப கால திருச்சபையின் விசுவாச சத்தியங்களை ஊகிக்கலாம். பிற்காலத்தில் நிசேயா பொதுச்சங்க முன்-பின் (கி.பி 325) காலத்தில் இந்த விசுவாச சத்தியம் மிக வளர்ச்சி பெற்றது.
இறைவனின் குழுவாழ்க்கை மற்றும் இறைவனின் ஆட்கள் மத்தியிலான அன்பு, உறவு, புரிந்துணர்வு போன்றவை சாதாரண கிறிஸ்தவ மனித வாழ்க்கைக்கு மிகவும் உதவக்கூடிய உதாரணங்களாகும். மற்ற சமய சகோதரர்களுடனான விட்டுக்கொடுப்பிலும், புரிந்துணர்விலும், இந்த திரித்துவ நம்பிக்கை முக்கியமான அடித்தளாமாக அமையலாம். முக்கியமாக சமகால இந்து மதம் மும்மூர்த்திகள் (பிரம்மன்-விஷ்ணு-சிவன்) நம்பிக்கையை அதிகமாகவே அறிக்கையிடுகிறது.
இணைச்சட்டம் 4,32-34.39-40
32உங்களுக்கு முற்பட்ட பண்டைக் காலத்தைப்பற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். கடவுள், உலகில் மனிதனைப் படைத்த நாள் முதல், வானத்தின் ஒருமுனை முதல் மறுமுனை வரைக்கும் எங்காவது இத்தகைய மாபெரும் செயல் நடந்துண்டோ? அல்லது இதுபோல் கேள்விப்பட்டதுண்டா? 33நெருப்பின் நடுவிலிருந்து பேசிய கடவுளின் குரலொலியைக் கேட்டும், நீங்கள் உயிர்வாழ்ந்ததுபோல் வேறு எந்த மக்களினமாவது வாழ்ந்ததுண்டா? 34அல்லது, உங்கள் கடவுளாகிய ஆண்டவர் எகிப்தில் உங்கள் கண்முன்னே உங்களுக்குச் செய்த அனைத்தையும் போல, சோதனைகள், அடையாளங்கள், அருஞ்செயல்கள், போர், வலிய கரம், ஓங்கிய புயம் மற்றும் அச்சுறுத்தும் நிகழ்ச்சிகள் மூலம் ஓர் இனத்தை வேறொரு நாட்டினின்று தமக்கென உரிமையாக்கிக்கொள்ள முன்வரும் கடவுள் உண்டா?
39'மேலே விண்ணிலும் கீழே மண்ணிலும் ஆண்டவரே கடவுள், அவரைத் தவிர வேறு எவரும் இலர்' என இன்று அறிந்து, உங்கள் உள்ளத்தில் இருத்துங்கள். 40நான் இன்று உங்களுக்குக் கட்டளையிடும் அவரது நியமங்களையும் கட்டளைகளையும் பின்பற்றுங்கள். அப்பொழுது உங்களுக்கும், உங்களுக்குப் பின்வரும் உங்கள் பிள்ளைகளுக்கும் எல்லாம் நலமாகும். மேலும், உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்கு எக்காலத்திற்கும் கொடுக்கும் மண்ணில் நீங்கள் நெடுநாள் வாழ்வீர்கள்.
வ.32 இணைச்சட்ட நூலின் தொகுப்பாசிரியர், பபிலோனிய இடப்பெயர்விற்கு பிற்பட்ட காலத்தவர் என்பது இன்று அதிகமான ஆய்வாளர்களினால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இணைச்சட்ட நூலின் தொகுப்பு ஆசிhயர் அல்லது ஆசிரியர்கள், முதல் ஏற்பாட்டின் வரலாற்று புத்தகங்களின் தொகுப்பிற்கு பின்னால் இருக்கிறார்கள் என்பது ஒரு ஆய்வியல் கண்டுபிடிப்பு, அதற்கான வாய்ப்புக்கள் மிக அதிகமாகவே உள்ளன. இந்த பகுதி சிலைவழிபாடு பற்றிய எச்சரிக்கை பகுதியிலிருந்து எடுக்கப்படுகிறது.
இந்த வரியில் ஆசிரியர் வாசகர்களை தங்களுடைய பண்டைக் காலத்தைப் பற்றி அறிந்து கொள்ளச் சொல்கிறார். அதாவது பண்டைக்காலத்தில் பல விதமாக அறிவியல் கதைகள்
இருந்திருக்கின்றன என்பது தெளிவாகிறது. கடவுள் மனிதனைப் படைத்த நாள் நினைவூட்டப்படுகிறது. மனிதரைக் குறிக்க אָדָם֙ ('ஆதாம்) என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இது முதல் மனிதர் ஆதாமை அல்லது அனைத்து மனித குலத்தையும் குறிக்கலாம். இந்த படைப்பு நாளில் இருந்து வானத்தின் கீழ் உள்ள எந்த பகுதியிலும் இந்த அதிசயம் நடக்கவில்லை என்பது மோசேயின் வாதம். அதனைப் பற்றி யாரும் கேள்விப்பட்டதும் இல்லை என்பதும் இவர் வாதம்.
அது என்ன அதிசயம் என்பதை பின்வரும் வரிகள் காட்டும்.
வ.33: அந்த அதிசயம் என்னவென்பது இந்த வரியில் காட்டப்படுகிறது. அதாவது, நெருப்பின் நடுவிலிருந்து பேசிய கடவுளின் குரலொலியைக் கேட்ட பின்பும், மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.
இதனைத்தான் அவர் அதிசயமாக பார்க்கிறார்.
கடவுளை யாரும் பார்க்கமுடியாது, அவரை தொடவும் முடியாது. அப்படி பார்க்கிறவர்கள் தொடர்ந்து வாழ முடியாது என்பது ஒரு பாரம்பரிய நம்பிக்கை, இதனை கடவுளும் மோசேக்கு ஏற்கனவே சொல்லியிருக்கிறார். மக்களுக்கும் சொல்லியிருக்கிறார். இருந்தும் இந்த மக்கள் சீனாய் மலையடிவாரத்தில், மேகத்தில் கடவுளின் குரலைக் கேட்டனர், இருந்தும் அவர்கள் அழிந்து போகாமல் உயிர் வாழ்கின்றனர்.
வ.34: கடவுள் எகிப்தில் செய்தவை காட்டப்படுகின்றன. கடவுள் எகிப்தில் வியத்தகு செயல்களை மக்களின் கண்முன்னே செய்திருக்கிறார். அவற்றை ஆசிரியர் சோதனை (מַסֹּת֩ மாசோத்), அடையாளங்கள் (אֹתֹת 'ஓதொத்), அருஞ்செயல்கள் (מוֹפְתִים மோப்திம்), போர் (מִלְחָמָה மில்ஹாமாஹ்), வலிய கரம் (יָד חֲזָקָה யாத் ஹட்சாகாஹ்), ஓங்கிய புயம் (זְרוֹעַ נְטוּיָה ட்செரோத் நெதூயாஹ்), மற்றும் அச்சுறுத்தும் நிகழ்ச்சிகள் (מוֹרָאִים גְּדֹלִים மோரா'இம் கெதோலிம்), என்று வகைப்படுத்துகிறார்.
இவற்றைப் பயன்படுத்தி ஒரு கடவுள் தன் மக்களை இன்னொரு நாட்டிலிருந்து கொண்டுவந்த வரலாறு உள்ளதா என்ற கேள்வியை முன்வைக்கிறார். ஆசிரியர் இந்த கேள்வியை பபிலோனில்
இன்னொரு அடிமைத்தனத்திலிருந்து மக்களிடம் கேட்கின்றபோது அது மிக பொருத்தமாக
இருக்கிறது. வேறு கடவுள் உண்டா? என்ற கேள்வி, வேறெந்த கடவுளும் உண்மைக் கடவுள் இல்லை என்ற விடையை மறைமுகமாகத் தருகிறது.
வவ.35-38: இந்த வரிகளில், கடவுளின் செயல்களுடைய நோக்கம் காட்டப்படுகிறது. கடவுள் இந்த மாட்சிக்குரிய செயல்களை செய்ததன் வாயிலாக தான்தான் உண்மைக் கடவுள் என்பதைக் காட்டியுள்;ளார். அதனை இப்போது மக்கள் நம்ப கேட்கப்படுகிறார்கள். இவர்கள் கற்றுக்கொள்ள வேண்டியது:
அ. ஆண்டவரைத் தவிர வேறெவரும் இலர் (יְהוָה הוּא הָאֱלֹהִ֑ים אֵ֥ין עוֹד),
ஆ. அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் (אֶת־קֹלוֹ לְיַסְּרֶךָּ),
இ. அவரது வாக்கை அவர்கள் கேட்டார்கள் (דְבָרָיו שָׁמַעְתָּ),
ஈ. மூதாதையருக்கு கடவுள் அன்பு காட்டினார் (אָהַב אֶת־אֲבֹתֶ֔יךָ),
உ. அவர்களின் வழிமரபை தேர்ந்து கொண்டார் (יִּבְחַר בְּזַרְעוֹ),
ஊ. அவரே அவர்களை எகிப்திலிருந்து கூட்டிவந்தார் (וַיּוֹצִֽאֲךָ מִמִּצְרָיִם׃),
எ. வலியவர்களை துரத்தினார் (הוֹרִ֗ישׁ גּוֹיִ֛ם גְּדֹלִ֧ים),
ஏ. நாட்டை உரிமைச் சொத்தாக தர உங்களைக் கூட்டிவந்தார் (לָתֶת־לְךָ אֶת־אַרְצָם נַחֲלָה)
வ.39: முக்கியமான கட்டளை ஒன்று கொடுக்கப்படுகிறது, அதாவது, மேலே விண்ணிலும் (בַּשָּׁמַיִם מִמַּ֔עַל பெஷாமாயிம்), கீழே மண்ணிலும் (עַל־הָאָרֶץ מִתָּחַת 'அல்-ஹா'ஆரெட்ஸ் மித்தாஹாத்), ஆண்டவரே கடவுள் (יְהוָה הוּא הָאֱלֹהִ֔ים அதோனாய் ஹு ஹ'எலோஹிம்). அவரைத் தவிர வேறெவரும் இலர்.
இதனை அவர்கள் இன்று அறிந்து உள்ளத்தில் ஏற்றுக்கொள்ள வேண்டும்
(וְיָדַעְתָּ֣ הַיּ֗וֹם וַהֲשֵׁבֹתָ אֶל־לְבָבֶךָ֒ வெயாதா'த்தா ஹய்யோம் வாஹஷெவோதா 'எல்- வௌhவெகா) எனக் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
வ.40: இணைச்சட்ட நூலில் மோசேயின் வாயிலிருந்து வரும் மிக முக்கியமாக கட்டளை. இந்த கட்டளை பல இடங்களில் வித்தியாசமான வார்த்தையில் மீண்டும் மீண்டும் சொல்லப்படும்.
மோசே தான் கட்டளையிடும், நியமங்களையும் கட்டளைகளையும் பின்பற்றச் சொல்கிறார் (שָׁמַרְתָּ אֶת־חֻקָּ֣יו וְאֶת־מִצְוֹתָיו ஷாமர்தா 'எத்-ஹுக்காய்வ் வெ 'எத்-மிட்ஸ்வோதாவ்). இதனால் மக்களுக்கும் அவர்கள் மக்களுக்கும் அனைத்தும் நலமாகும் என்பது சொல்லப்படுகிறது
(יִיטַב לְךָ֔ וּלְבָנֶיךָ யிதாவ் லெகா, வுலெவாநொகா). இறுதியாக ஒருவர் இந்த கட்டளைகளை கடைப்பிடிப்பதன் வாயிலாக அவர், கடவுள் கொடுக்கும் நாட்டில் நெடுநாள் வாழ்வார் என்பது உறுதிப்படுத்தப்படுகிறது. இந்த வரிகளை எழுதுகின்றபோது, இவர்கள் பபிலோனியாவில்
இடம்பெயர்ந்து வாழ்ந்திருந்தார்கள், அல்லது அப்போதுதான் நாடுகடந்து வந்திருந்தார்கள்.
இடப்பெயர்விற்கான காரணத்தை இந்த வரியில் ஆசிரியர் அழகாகக் காட்டுகிறார். முற்காலத்தைப் போல, மக்கள் நாட்டிலிருந்து இடம்பெயராமல் இருக்க அவர்கள் கடவுளின் கட்டளைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்பது சொல்லப்படுகிறது.
திருப்பாடல் 33
1நீதிமான்களே, ஆண்டவரில் களிகூருங்கள்; நீதியுள்ளோர் அவரைப் புகழ்வது பொருத்தமானதே. 2யாழிசைத்து ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; பதின் நரம்பு யாழினால் அவரைப் புகழ்ந்து பாடுங்கள்;
3புத்தம்புது பாடல் ஒன்றை அவருக்குப் பாடுங்கள்; திறம்பட இசைத்து மகிழ்ச்சிக்குரல் எழுப்புங்கள். 4ஆண்டவரின் வாக்கு நேர்மையானது அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிக்கைக்கு உரியவை. 5அவர் நீதியையும் நேர்மையையும் விரும்புகின்றார்; அவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது. 6ஆண்டவரது வாக்கினால் வானங்கள் உண்டாயின் அவரது சொல்லின் ஆற்றலால் வான்கோள்கள் எல்லாம் உருவாயின.
7அவர் கடல்நீரைக் குவியல்போல் சேர்த்துவைத்தார்; அந்நீரை ஆழ் நிலவறைகளில் சேமித்துவைத்தார்.
8அனைத்துலகும் ஆண்டவருக்கு அஞ்சுவதாக! உலகில் வாழ்வோர் அனைவைரும் அவருக்கு அஞ்சிநடுங்குவராக!
9அவர் சொல்லி உலகம் உண்டானது அவர் கட்டளையிட, அது நிலை பெற்றது. 10வேற்றினத்தாரின் திட்டங்களை ஆண்டவர் முறியடிக்கின்றார்; மக்களினத்தாரின் எண்ணங்களைக் குலைத்துவிடுகின்றார்.
11ஆண்டவரின் எண்ணங்களோ என்றென்றும் நிலைத்திருக்கும்; அவரது உள்ளத்தின் திட்டங்கள் தலைமுறை தலைமுறையாய் நீடித்திருக்கும்.
12ஆண்டவரைத் தன் கடவுளாகக் கொண்ட இனம் பேறுபெற்றது அவர் தமது உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறுபெற்றோர்.
13வானினின்று ஆண்டவர் பார்க்கின்றார்; மானிடர் அனைவரையும் காண்கின்றார்.
14தாம் வீற்றிருக்கும் இடத்திலிருந்து உலகெங்கும் வாழ்வோரைக் கூர்ந்து நோக்குகின்றார். 15அவர்களின் உள்ளங்களை உருவாக்குகின்றவர் அவரே! அவர்களின் செயல்கள் அனைத்தையும் உற்று நோக்குபவரும் அவரே!
16தன் படைப் பெருக்கத்தால் வெற்றிபெரும் அரசருமில்லை; தன் வலிமையின் மிகுதியால் உயிர் தப்பிய வீரருமில்லை.
17வெற்றி பெறப் போர்க்குதிரையை நம்புவது வீண்; மிகுந்த வலுவுள்ளதாயினும் அது விடுவிக்காது. 18தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன்புக்காகக் காத்திருப்போரையும் ஆண்டவர் கண்ணோக்குகின்றார்.
19அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்; அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார்.
20நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம்; அவரே நமக்குத் துணையும் கேடயமும் ஆவார்.
21நம் உள்ளம் அவரை நினைத்துக் களிகூரும்; ஏனெனில், அவரது திருப்பெயரில் நாம் நம்பிக்கை வைத்துள்ளோம்.
22உம்மையே நாங்கள் நம்பியிருப்பதால், உமது பேரன்பு எங்கள்மீது இருப்பதாக!
திருப்பாடல் 33, புகழ்ச்சிப்பாடலாக கருதப்படுகிறது. இருப்பத்திரண்டு வரிகளைக்கொண்டுள்ள இந்தப் பாடல் அழகாக இரட்டை வரி அமைப்பில் பிரித்து நோக்கப்படுகிறது. தொடக்க மற்றும் முடிவு வரிகள் கடவுளில் மகிழ்வதற்கான அழைப்பை விடுகின்றன. அனேகமான திருப்பாடல்களைப் போல, இந்த திருப்பாடலும் திருப்பிக்கூறல் என்ற எபிரேய கவிநடையில் அமைந்துள்ளது. இந்தப் பாடலுக்கு தலைப்பு வழங்கப்படவில்லை, இதனால் இதனுடன் தொடர்புள்ள விவிலிய பின்புலத்தை அறிவது கடினமாக இருக்கலாம்.
வ.1: இந்த வரி இப்பாடலின் ஆரம்ப அழைப்பாக பணியாற்றுகிறது. நீதிமான்கள் ஆண்டவரில் களிகூரக் கேட்கப்படுகிறார்கள். அதாவது நீதிமான்கள் என்பவர்கள் (צַדִּיקִים ட்சத்திகிம்), ஆண்டவரில் தங்களது திருப்தியை தேடக் கேட்கப்படுகிறார்கள், இச்செயலானது அவரைப் புகழ்வதற்கு பொருத்தமானது என சொல்கிறார் ஆசிரியர்.
வ.2: யாழ், எபிரேய இசைக்கருவிகளில் மிகவும் பிரசித்தமானது, இதனை வாசிப்பதில் தாவீது அரசர் விருப்பமுடையவராய் இருந்தார் என சொல்லப்படுகிறது. இது ஒருவகை நரம்பிசைக் கருவி. நம்முடைய யாழ் நகருக்கும் இதற்கும் தொடர்பிருப்பதாக ஈழ வரலாறு சொல்கிறது. பத்து நரம்பிசைக் கருவி என்றும் இதனை ஒத்த சொல்லில் அழைத்தார்கள். இதனைத்தான் ஆசிரியர் திருப்பிக்கூறும் நடையில் இங்கே பாவிக்கிறார். இதிலிருந்து இந்த திருப்பாடல் ஒரு புகழ்ச்சிப்பாடல் என்பது புலப்படுகிறது. ஆகவே திருப்பாடல்கள் வாசிக்கப்படுவதை விட, பாடப்படவேண்டும் என்பது உண்மையே.
வ.3: ஆண்டவருக்கு புதிய பாடல் பாடப்படவேண்டும் (שִׁיר חָדָשׁ ஷிர் ஹாதாஷ்), அவருக்கான பாடல்கள் திறம்பட இசைக்கப்பட வேண்டும் என்பதில் பல அர்த்தங்கள் இருக்கின்றன. ஆண்டவர் சாதாரண தலைவர்களைப் போல அர்த்தமில்லா உதட்டுப் புகழ்ச்சிக்கு உரியவர் அல்லர், அவர் மேன்மை மிக்கவர், இறைவன். இதனால் அவருக்கான பாடல்கள் எப்போதும் புதியனவாகவும், மகிழ்ச்சி ஒலியுடையதாகவும் இருக்க வேண்டும் என்பது இவர் நம்பிக்கை.
வ.4: வாக்கு என்பது ஒருவரின் அடையாளம். அரசர்களுடைய வாக்கு கட்டளை அல்லது ஆணை போன்றது, அது பொய்க்கக் கூடாது, இதனை விட ஆண்டவருடைய வாக்கு உண்மையானது என்கிறார் ஆசிரியர் (דְּבַר־יְהוָה தெவார் அதோநாய்). ஒருவருடைய வாக்கிற்கும் செயல்களுக்கும்
இடையில் நெருங்கிய தொடர்பிருக்க வேண்டும். தாறுமாறான செயற்பாடுகள் நல்ல வாக்கை பிரதிபலிக்காது. ஆனால் ஆண்டவரைப் பொறுத்த மட்டில் அவர் வாக்கும் செயல்களும் (מַעֲשֶׂה
ம'அசெஹ்) ஒன்றானவை என்கிறார்.
வ.5: ஆண்டவர் எதை விரும்புகிறார். சடங்குகளின் பெருக்கம், ஆண்டவர் சடங்குகளையும், பலிகளையும் மற்றும் இரத்தத்தையும் விரும்புகிறார் என்ற பொய்பிரச்சாரத்தை முன்வைத்தன.
இஸ்ராயேல் இனம் குருத்துவத்தை மையப்படுத்தியபோது, இந்த ஆபத்துக்களை அதிகமாகவே எதிர்கொண்டது. ஆனால் ஆரம்ப காலத்தில் ஆண்டவர் பலிகளையோ அல்லது எரிபலிகளையோ விரும்பியதாக காட்டப்படவில்லை. இந்த பலிகள் அனைத்தும் காலத்தால் பிற்பட்டவை.
இவற்றைவிட ஆண்டவர் உண்மையாக விரும்புவை, நீதியும் நேர்மையும் என்கிறார் இந்த ஆசிரியர் (צְדָקָ֣ה וּמִשְׁפָּט ட்செதாகாஹ் வுமிஷ்பாத்). இயேசு ஆண்டவருடைய படிப்பினைகளில் இந்த சிந்தனை ஆழமாக ஊடுருவி இருந்தது. இதன் காரணமாகத்தான் இந்த முழு பூவுலகுமே அவரது அன்பால் நிறைந்துள்ளது. ஆண்டவருடைய பேரன்பு என்பது முதல் ஏற்பாட்டில் மிக முக்கியமான சொற் பிரயோகம்
வ.6: இந்த வரி ஆண்டவரின் வாக்கின் பலத்தை காட்டி, அத்தோடு பிரபஞ்சத்தின் தொடக்கத்தையும் காட்டி நிற்கின்றன. பிரபஞ்ச படைப்புக்களை தெய்வங்களாக பார்த்த, அக்கால கானானிய மக்கள் நடுவில் வாழ்ந்த இஸ்ராயேலருக்கு, கடவுளின் பெருமையையும், பிரபஞ்ச படைப்புக்களின் சிறுமையையும் காட்ட வேண்டிய தேவை ஆசிரியருக்கு இருந்தது. வானங்களும் (שָׁמַ֣יִם ஷமாயிம்), வான்கோள்களும் (כָּל־צְבָאָֽם கோல் ட்செவாம்), ஒன்றுமில்லை மாறாக கடவுளுடைய படைப்பே என்பது இவர் சிந்தனையில் உள்ள உண்மை.
வ.7: வானங்கள் மட்டுமல்ல அதற்கு இணையாக கீழ் உள்ள நீரை அறிவிக்க வேண்டிய தேவை ஆசிரியருக்கு இருந்தது. கடல், பல விதத்தில் விவிலியத்தில் காட்டப்படுகிறது. சில வேளைகளில் இது நேர்முகமாகவும் பல வேளைகளில் எதிர் மறையாகவும் காட்டப்படுகிறது. இந்த கடலில்தான் தீய சக்திகள் உறைவதாகவும் அக்கால விஞ்ஞானம் கருதியது. ஆனால் கடவுளுக்கு முன்னால் இவையும் சாதாரண படைப்புக்களே. அத்தோடு இவையும் கடவுளின் சிந்தனையால் உருவானவையே என்று பெரிய விஞ்ஞானத்திற்கு, சிறிய ஆனால் ஆழமான முடிவுரையை எழுதுகிறார் ஆசிரியர். இந்தக் கடலை (מֵי הַיָּם மி ஹயாம்), கடவுள் குவியல் போல் குவித்துள்ளார் எனச் சொல்கிறார், இது தொடக்க நூல் (※1,9) சிந்தனையை நினைவூட்டுகிறது எனலாம்.
நிலவறைகளில் சமுத்திர நீரை சேமித்துவைத்துள்ளார் கடவுள் என்கிறார் ஆசிரியர். இதற்க்கு תְּהוֹמֽוֹת தெஹோமோத் என்ற சொல் பாவிக்கப்பட்டுள்ளது. இதனை ஆழ்கடல் நீர்கள் என்று எபிரேயம் காட்டுகின்றது. இது எதனை குறிக்கிறது என்பது தெளிவாக இல்லை. ஒருவேளை இது நிலக்கீழ் நீரைக் குறிக்கலாம். அத்தோடு ஆழமான பாதாளங்கள் நிலத்தின் கீழே உள்ளன என்பதும் இவர்கள் நம்பிக்கையாக இருந்தது. இந்த இடத்திலே கடவுள் நீரை சேமித்து வைத்துள்ளார் என்கிறார் ஆசிரியர்.
(※அப்பொழுது கடவுள், 'விண்ணுலகுக்குக் கீழுள்ள நீர் எல்லாம் ஓரிடத்தில் ஒன்றுசேர உலர்ந்த தரை தோன்றுக!' என்றார். அது அவ்வாறே ஆயிற்று.)
வ.8: ஆண்டவருக்கு அஞ்சுதல் என்பது ஒரு விவிலிய விழுமியம். இக்கால சிந்தனையில் இது மூட நம்பிக்கையாக பார்க்கப்படலாம். ஆனால் இந்த கடவுள் அச்சம் என்பது ஆழமான விசுவாசத்தைக் குறிக்கிறது. இந்த அச்சத்தின் காரணமாக மனிதர் நன்மைத் தனத்தை இறுக்கிப் பிடித்துக்கொண்டனர். இக்கால சிந்தனையில் இதனை மரியாதை கலந்த அன்பு என்று கூடச் சொல்லலாம். இன்று உலகில் உள்ள அவவிசுவாசம் மற்றும் காட்டுச் சுதந்திரத்திரத்திற்கான காரணமாக இந்த இறையச்சம் இன்மையே என்பது பலருடைய எண்ணம்.
வ.9: இந்த உலகத்தின் படைப்பு எப்படி உருவானது, அதனுடைய மூல கர்த்தர் யார் என்பது அக்காலத்திலும் சரி இக்காலத்திலும் சரி முக்கியமான கேள்வியாக உள்ளது. புகழ்ச்சிப்பாடல்களில் பல மெய்யறிவுச் சிந்தனைகள் இருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இதற்கான சான்றை இந்த வரியில் கண்டுகொள்ளலாம். உலகத்தை ஒரு சொல்லால் படைத்தவர் நம் கடவுள் என்ற ஆழமான மெய்யறிவு வாதத்தை முன்வைக்கிறார் ஆசிரியர். 'அவர் சொன்னார் அது உருவானது' என்பது இஸ்ராயேலின் அசைக்க முடியாத நம்பிக்கை (כִּי הוּא אָמַר וַיֶּהִי கி ஹு' 'ஆமர் வய்யெஹி).
இந்த வரியில், உலகம் என்ற எழுவாய் பொருள் எபிரேய விவிலியத்தில் இல்லை, ஆனால் முன்னுள்ள வரியில் அது உள்ளபடியால் தமிழ் விவிலியம் இந்த வரிக்கும் உலகு என்ற சொல்லை பயன்படுத்துகிறது.
வ.10: ஆண்டவர் ஏன் வேற்றினத்தாரின் திட்டங்களை முறியடிக்க வேண்டும், ஏன் வேற்றினத்தார் தோற்க்க வேண்டும் என்பது நம்முடைய கேள்வியாக இருக்கலாம். கடவுள் இஸ்ராயேலின் கடவுள் மட்டுமல்ல, அவர் அனைவரின் கடவுள். இதனைத்தான் இயேசு காட்டினார். ஆனால் இங்கு வேற்றினத்தார் என குறிப்பிடப்படுகிறவர்கள் (גּוֹיִם கோயிம்), அனைத்து மக்களையும் குறிக்கவில்லை, மாறாக இஸ்ராயேலின் வீழ்ச்சியை விரும்பிய ஒரு குறிப்பிட்ட மக்களாக அல்லது அவர்களது தலைமைத்துவமாக இருக்கலாம். இங்கே இவர்களின் எண்ணங்கள் குலைக்கப்படுகிறது என்றால்,
இஸ்ராயேல் காக்கப்படுகிறது என்று பொருள்.
வ.11. தீயவர்களுடைய எண்ணங்கள் தீமையானவை, ஆனால் கடவுளுடைய எண்ணங்கள் அனைவருக்கும் நன்மையானவை. இதனால் இந்த எண்ணங்கள் தலைமுறை தலைமுறையாக நிலைத்திருக்கும் (לְעוֹלָם லெ'ஓலாம்), அவர் இதயத்தின் திட்டங்களும் அனைத்து பரம்பரைக்கும் உறுதியாக இருக்கும். ஆசிரியர் ஆண்டவருக்கும் இதயத்தைக் கொடுத்து மனித வார்த்தைகளில் அவரை வடிக்க முயல்கிறார்.
வ.12: இஸ்ராயேல் இனம் அக்கால சமுதாயத்தில் ஒப்பிடுகின்ற வேளை மிக சிறியதாகவும், மிகவும் மட்டுப்படுத்தப்பட்டதாகவும் இருந்தது. நிலத்தை பொறுத்த மட்டில் பெரிதாக வளமான நிலங்களை கொண்டிருந்தது என்று சொல்வதற்கும் இல்லை. இங்கே 'ஆண்டவரை தம் கடவுளாக கொண்ட இனம்' என்பதை 'யாவேயை கடவுளாக கொண்ட இனம்' (אֲשֶׁר־יְהוָה אֱלֹהָיו 'அஷேர்-அதோனாய் 'ஏலோஹாய்வ்), என்று மொழிபெயர்க்க வேண்டும். இதனால் பலர் கடவுளாக பல தெய்வங்களை கொண்டிருந்த வேளை, இஸ்ராயேல் தங்கள் கடவுளாக ஆண்டவரை (அதோனாய்-யாவே) கொண்டிருப்பதனால் அது பேறுபெற்றது என்கிறார் ஆசிரியர். அதேவேளை ஆண்டவரும்
இஸ்ராயேலை தன் உரிமைச் சொத்தாக எடுத்திருந்தார், இதனால் இஸ்ராயேல் பேறுபெற்றதாகின்றது. உரிமைச் சொத்தாக எடுத்தல் என்பது ஆட்சி அதிகாரம் அல்லது வாரிசு அதிகாரம் போன்றவற்றைக் குறிக்கும். இதனை இஸ்ராயேல் பெற்றுள்ளது என்பது இவர் வாதம்.
வ.13: கடவுள் எங்கிருக்கிறார்? என்ன செய்கிறார்? என்பதற்கு இந்த வரி விளக்கம் கொடுக்கிறது. வானின்று கடவுள் பார்க்கிறார், இதனால் கடவுள் வானில் இருக்கிறார் என்ற இவர்களின் நம்பிக்கை புலப்படுகிறது. ஆதாமின் மக்கள் அனைவரையும் பார்க்கிறார் என்று எபிரேய பாடம் வாசிக்கிறது.
இங்கே ஆதாம் என்பவர் அனைத்து மக்களினங்களையும் குறிக்கிறார் (כָּל־בְּנֵי הָאָדָם கோல்-பெனெ ஹா'ஆதாம்).
வ.14-15: இந்த வரிகளும் பதின்மூன்றாவது வரியை ஒத்ததாக இருக்கின்றன. பார்த்தல் என்ற எபிரேய சொல் רָאָה (ரா'ஹ்), நோக்கல், கண்நோக்கல், அவதானித்தல், உற்றுபார்த்தல், ஆராய்தல் போன்ற அர்த்தத்தைக் கொடுக்கும். கடவுள் மனிதர்களின் உள்ளங்களை உருவாக்குகின்றவர் என்ற படியாலும், மனிதர்களின் செயல்களை உற்று நோக்குவதனாலும் அனைத்தும் அவருக்கு நன்கு தெரிந்திருக்கின்றன.
வ.16-17: மனிதரின் பலம் என்ன? அரசர் தன் படையால் காப்பாற்றப்பட முடியாதவர், படைவீரர் தன்னுடைய அதீத பலத்தாலும் மீட்கப்பட முடியாதவர், என்பது அக்கால இராணுவ அறிவுக்கு எதிரானது. ஏனெனில் சாதாரண அரசர்களும், வீரர்களும், தங்கள் படைபலத்திலும் உடல் வலிமையிலுமே அதிக கவனம் செலுத்தினர். இதனைத்தான், வீண் என்கிறார் ஆசிரியர். அதற்கான காரணத்தையும் வரலாறு இவருக்கு சொல்லிக் கொடுத்திருக்கலாம். இந்த பாடலின் ஆசிரியர் ஒரு அரசராக இருந்தால் இது அவருக்கு நன்கு தெரிந்திருக்கும். இந்த சிந்தனைக்கு மேலும் வலுவூட்ட போர்க் குதிரையை உதாரணமாக எடுக்கிறார் ஆசிரியர் (סּוּס சுஸ் குதிரை). அக்காலத்தில் குதிரையின் வலுவினைக் கொண்டு படைகளின் பலம் கணக்கிடப்பட்டது. இக்காலத்தில் இராணுவ வாகனங்களைப் போல.
வ.18: இது இப்படியிருக்க கடவுள் யாரை காக்கிறார் என்ற கேள்வி எழுகிறது. அதற்கான விடையை, கடவுள் தமக்கு அஞ்சி நடப்போரையும், தம் பேரன்பிற்காக காத்திருப்போரையும் காக்கிறார் என்கிறார் ஆசிரியர். இந்த சிந்தனை ஏற்கனவே முன் வரியில் வந்திருக்கிறது. கடவுளுக்கு அஞ்சுதல் என்பது கடவுளில் நம்பிக்கை வைத்தல் என்பதைக் குறிக்கும். கடவுளின் அன்பிற்காக காத்திருத்தல் என்பதும் (לַמְיַחֲלִים லம்யாஹாலிம்), கடவுளில் நம்பிக்கை வைத்தலையே குறிக்கும்.
வ.19: இவர்களுக்கான உதவி சொல்லப்படுகிறது. கடவுள் இவர்களை சாவினின்று காக்கிறார்
(מִמָּוֶת נַפְשָׁם மிம்மாவெத் நப்ஷாம்), அத்தோடு அவர்களை பஞ்சத்திலும் உயிர்பிக்கின்றார் (לְחַיּוֹתָם בָּרָעָב லெஹய்யோதாம் பாரா'ஆவ்). இந்த வரியும் இராணுவ சிந்தனைகளையே பின்புலமாகக் கொண்டுள்ளது. போர் காலத்தில் பஞ்சமும் சாவும் நிச்சயமானவை, இதனை அரசரின் பலமோ, போர்க்குதிரைகளோ தவிர்க்காது. அதனை தவிர்க்கக்கூடியவர் ஆண்டவர் ஒருவரே.
வ.20-21: இந்த வரிகளில் ஆசிரியர் இஸ்ராயேல் மக்களின் வரைவிலக்கணத்தைக் காட்டுகிறார். அவர்கள் ஆண்டவரை நம்பியிருக்கிறவர்கள், அவர்களின் கேடயமும் துணையும் ஆண்டவர் என்கிறார்;. இதனால் இதயம் களிகூர்வதாகவும், அவரது தூய்மையான பெயரில் நம்பிக்கை வைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. נַפְשֵׁנוּ חִכְּתָה לַיהוָה நப்ஷெனூ ஹிக்தாஹ் லதோனாய் - நம் ஆன்மாக்கள் கடவுளுக்கு காத்திருக்கின்றன.
வ.22: இந்த வரி இறுதியான வரியாக, வேண்டுதலாக வருகிறது. இறுதியாக ஆசிரியர் கடவுளின் பேரன்பிற்காக இரஞ்சுகிறார் (יְהִי־חַסְדְּךָ יְהוָ֣ה עָלֵינוּ யெஹி-ஹஸ்தெகா அதோனாய் 'ஆலெனூ). அதற்கான நியாயமான தங்களுடைய எதிர்நோக்கை காட்ட முயற்சிக்கிறார். இந்த எதிர்நோக்கு (יָחִיל யாஹில்), ஒரு விவிலிய விழுமியமாக இருக்கிறபடியால் இவருடைய வேண்டுதல் சரியான பாதையில் செல்கிறது எனலாம்.
உரோமையர் 8,14-17
14கடவுளின் ஆவியால் இயக்கப்படுகிறவர்களே கடவுளின் மக்கள். 15மீண்டும் அச்சத்திற்கு உள்ளாக்கும் மனப்பான்மையை நீங்கள் பெற்றுக்கொள்ளவில்லை மாறாகக் கடவுளின் பிள்ளைகளுக்குரிய மனப்பான்மையையே பெற்றுக் கொண்டீர்கள். அதனால் நாம், 'அப்பா, தந்தையே' என அழைக்கிறோம். 16நாம் இவ்வாறு அழைக்கும்போது நம் உள்ளத்தோடு சேர்ந்து தூய ஆவியாரும் நாம் கடவுளின் பிள்ளைகள் என்பதற்குச் சான்று பகர்கிறார். 17நாம் பிள்ளைகளாயின், உரிமைப் பேறு உடையவர்களாய் இருக்கிறோம். ஆம், நாம் கடவுளிடமிருந்து உரிமைப் பேறு பெறுபவர்கள், கிறிஸ்துவின் பங்காளிகள். அவருடைய துன்பங்களில் நாம் பங்கு பெற வேண்டும்; அப்போதுதான் அவரோடு மாட்சியிலும் பங்கு பெறுவோம்.
உரோமையர் திருமுகத்தின் எட்டாவது அதிகாரம், தூய ஆவிக்குள் வாழ்வு என்ற தலைப்பில் சிந்திக்க தூண்டுகிறது. ஓருவருக்குள் உள்ள தூய ஆவி அவருக்கு புது வாழ்வையும் அடையாளத்தையும் தருகிறது என்பது பவுலுடைய நம்பிக்கை. இந்த வழியில்தான் கிறிஸ்தவர்களுக்கு புது அடையாளம் கிடைக்கிறது என்று அவர் வாதாடுகிறார்.
வ.14: கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்ட இனத்தில் பிறந்தவர்கள் மட்டும்தான் கடவுளின் மக்கள் என்ற சிந்தனை கோலோச்சிய காலத்தில், அதனை வித்தியாசமாகக் காட்டுகிறார் பவுல். அதாவது கடவுளின் மக்கள் என்பவர்கள், தூய ஆவியால் இயக்கப்படுகிறவர்கள். அவர்கள்
இஸ்ராயேலராகவும் இருக்கலாம், வேறு எவராகவும் இருக்கலாம். ὅσοι γὰρ πνεύματι θεοῦ ἄγονταιஇ οὗτοι ⸉υἱοὶ θεοῦ εἰσιν⸊ ஹொசொய் கார் புனுமாடி தியூ அகுன்டாய், ஹுடொய் ஹுய்யொய் தியூ எய்சின் - தூய ஆவியால் இயக்கப்படுபவர் எவரோ, அவரே கடவுளின் மக்களாய் இருக்கிறார்கள்.
இந்த வரி மூலமாக யாராவது, தூய ஆவியாரால் இயக்கப்படவில்லை என்றால், அவர்கள் கடவுளின் மக்கள் இல்லை என்பதை வெளிப்படையாகவே சொல்லிவிட்டார்.
வ.15: புறவினத்தவர்கள் அச்சத்துக்குரிய மனப்பான்மையை பெற்றிருந்தார்கள் என நம்பப்பட்டது.
புதிய உறவு ஏற்படுகின்றமையால் இனி அப்படியான மனப்பான்மை தேவையில்லை என்கிறார். πάλιν εἰς φόβον பாலின் எய்ஸ் பொபொன்- மீண்டும் அச்சத்திற்கு அல்ல. மாறாக கடவுளின் பிள்ளைக்குரிய மனப்பான்மையை பெற்றுக்கொண்டீர்கள். இதனை 'பிள்ளையாக தத்தெடுத்த மனப்பான்மை' என்று கிரேக்க விவிலியம் காட்டுகிறது (πνεῦμα υἱοθεσίας புனுமா ஹுய்யோதெசியாஸ்). அதாவது, இந்த புதிய மனப்பான்மை ஒரு உணர்வு மட்டுமல்ல, மாறாக அது ஓர் அதிகாரப்பூர்வமான உரிமை என்றாகிறது. உரோமைய-கிரேக்க உலகத்தில் தத்துப் பிள்ளைகள், சொந்த பிள்ளைகளுக்கு சமனானவர்கள்.
இந்த புதிய உறவின் மூலமாக இனி கடவுளை 'அப்பா தந்தையே' (αββα ὁ πατήρ. அப்பா ஹொ பாடேர்) என அழைக்கலாம் என்று வாதிடுகிறார்.
வ.16: இந்த அழைப்பிலே இரண்டு செயற்பாடுகள் நடைபெறுகிறது. ஒன்று ஒருவர் தந்தையை விழித்து அழைக்கிறார், இரண்டாவதாக அவரோடு சேர்ந்து தூய ஆவியாரும் சான்று பகர்கின்றார். இதனால் இந்த அழைப்பு உரிமையுடைய உண்மையான அழைப்பாக மாறுகிறது.
தூய ஆவியாரின் சான்று பொய்க்காது என்ற படியால், இனி யாரும் இவர்களில் குற்றம் சாட்ட முடியாது. அப்பா என்ற உறவு உண்மையான உறவாக மாறுகிறது.
வ.17: தத்தெடுத்தலால் பிள்ளைகளாகிவிட்டவர்களின் உரிமைகள் காட்டப்படுகின்றன: அவர்கள் உரிமைப்பேறு உடையவர்களாக இருக்கிறார்கள் (κληρονόμοι கிலேரொனொமொய்- வாரிசுகள்).
இந்த வாரிசுகளின் சாயலும் சொல்லப்படுகிறது. அவர்கள் கடவுளுடன் வாரிசுகளாக
இருக்கிறார்கள் (κληρονόμοι μὲν θεοῦ கிலேரொனொமொய் மென் தியூ). இறுதியாக இவர்கள் சொந்த மகனான கிறிஸ்துவின் பங்காளிகளாகவும் இருக்கிறார்கள் (συγκληρονόμοι δὲ Χριστοῦ சுன்கிலேரொனொமொய் தெ கிறிஸ்டூ).
உரிமை பெற்றவர்களுக்கு கடமையும் உண்டு என்பது சொல்லப்படுகிறது. அதாவது தத்தெடுத்த பிள்ளைகளும் பங்காளிகளாக இருப்பதனால், அவருடைய துன்பங்களில் பங்கெடுக்க வேண்டும், அப்போதுதான் அவர்களால் அவருடைய மாட்சியில் பங்கெடுக்க முடியும்.
மத்தேயு 28,16-20
யேசு சீடருக்குக் கட்டளை கொடுத்து அனுப்புதல்
(மாற் 16:14 - 18, லூக் 24:36 - 49, யோவா 20:19-23, திப 1:6 - 8)
16பதினொரு சீடர்களும் இயேசு தங்களுக்குப் பணித்தபடியே கலிலேயாவிலுள்ள ஒரு மலைக்குச் சென்றார்கள். 17அங்கே அவரைக் கண்டு பணிந்தார்கள். சிலரோ ஐயமுற்றார்கள். 18இயேசு அவர்களை அணுகி, 'விண்ணுலகிலும் மண்ணுலகிலும் அனைத்து அதிகாரமும் எனக்கு அருளப்பட்டிருக்கிறது. 19எனவே நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். 20நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்' என்று கூறினார்.
இவை மத்தேயு நற்செய்தியின் இறுதியான வரிகள். மத்தேயு தன் நற்செய்தியின் தொடக்கத்தில் இயேசுவை தாவீதின் மகனும் ஆபிரகாமின் மகனும் என அறிமுகப்படுத்தினார் (காண்க மத் 1,1 υἱοῦ Δαυὶδ υἱοῦ Ἀβραάμ). இப்போது அவரை முழு பிரபஞ்சத்தின் தலைவராகவும் ஆண்டவராகவும் முடிவுரை எழுதுகிறார். இந்த காட்சிகளுக்கு முன் இயேசு தான் உயிர்த்ததன் பின்னர், பல காட்சிகளையும் கட்டளைகளையும் சீடர்களுக்கு கொடுத்திருக்கிறார். பின்னர் இறுதியாக அவர் வானுலகம் செல்ல ஆயத்தமாகிறார். இயேசுவின் விண்ணேற்பு, மாற்கு, மத்தேயு மற்றும் லூக்கா நற்செய்திகளிலும் தரப்பட்டுள்ளது. இயேசுவின் விண்ணேற்பும் அவருடைய இறுதியான கட்டளையும் முக்கியமான பல இறையியல் சிந்தனைகளை முன்வைக்கின்றன. இதன் வாயிலாக இயேசு மண்ணுலகை சார்ந்தவர் அல்ல என்பதும், அவர்தான் அனைத்தையும் தீர்மானிக்கிறார் என்பதும், அவருடைய அனுமதியிலேயே அனைத்தும் நடைபெறுகிறது எனவும் காட்டப்படுகின்றன.
வ.16: யூதாசை தவிர்த்து பதினொரு சீடர்கள் இயேசுவோடு இருக்கிறார்கள். இவர்களைத் திருத்தூதர்கள் என எடுக்கலாம். மத்தேயுவின் கிரேக்க விவிலியம் இவர்களை ἕνδεκα μαθηταὶ (பதினொரு சீடர்கள்) என்று சொல்கிறது. இயேசுவிற்கு இன்னும் பல சீடர்கள் இருந்தார்கள், அவருடைய தாய் இருந்தார், அவருடைய பெண் சீடர்கள் இருந்தார்கள், அத்தோடு அவருடைய உறவினர்களும் இருந்தார்கள். இவர்களை விடுத்து, இங்கே மத்தேயு கலிலேயாவிற்கும் அவர் பதினொரு சீடர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறார். இவர்கள் கலிலேயாவில் உள்ள ஒரு பெயரிடப்படாத மலைக்கு செல்கிறார்கள். பல நேரங்களில் திருத்தூதர்களின் பெயர்களை விவரிக்கின்ற மத்தேயு இங்கே அதனை செய்யாமல் விடுகிறார். அவசரம் காட்டுகிறார் அல்லது தன் வாசகர்களுக்கு அது தெரிந்திருக்கும் என நினைக்கிறாரா? என்று தெரியவில்லை. எருசலேம் யூதர்களின் புனித நகராகவும் தலை நகராகவும் இருந்தது, இருப்பினும் இயேசு தான் வளரவும் தன் பணியை தொடக்கவும் கலிலேயாவையே தெரிவு செய்கிறார். கலிலேயா எப்போதுமே அவருக்கு மகிழ்ச்சியான இடமாகவும், ஆறுதலின் இடமாகவும் இருந்திருக்கிறது. இறுதியாக கலிலேயாதான் திருச்சபையின் தொடக்க இடமாகவும், இறுதியான கட்டளையை பெற்ற இடமாகவும் மாற்றம் பெறுகிறது. இவ்வாறு கலிலேயா ஆசீர் வதிக்கப்படுகிறது.
இயேசு தன் சீடர்களை கலிலேயாவில் உள்ள மலையில் சந்திக்கிறார். இவர்களுக்கு முன்னமே இங்கு வந்தார் என எடுக்கலாம். மலை இறைவனின் பிரசன்னத்தைக் குறிக்கும் ஒரு அடையாளம். முதல் ஏற்பாட்டில், அதிகமாக கடவுள் தன்னை மலையிலும் உயரமான இடத்திலும் காட்டுவார், அதனைத்தான் இங்கேயும் மத்தேயு இயேசுவிற்கு கொடுக்கிறார்.
வ.17: இவர்கள் இயேசுவை இங்கே காண்கிறார்கள் (ἰδόντες αὐτὸν). இதனால் இயேசு இவர்களுக்கு முன்பே வந்துவிட்டார் என்பது புலப்படுகிறது. இயேசுவை கண்டவர்களை இரண்டு வகையான சீடர்களாக பிரிக்கிறார் மத்தேயு. ஒருவகை அவரைக் கண்டதும் பணிகிறார்கள் (προσεκύνησαν). இது சாதாரண பணிதல் அல்ல மாறாக முகம் குப்புற விழுதல், இதன் மூலம் இவர்கள் இயேசுவை கடவுளாக காண்கிறார்கள் என்பது காட்டப்டுகிறது. இவர்களின் இந்த முகம்படவிழுதல் வணக்கம், மத்தேயு நற்செய்தியின் தொடக்கத்தில் ஞானிகள் செய்த வணக்கத்தை நினைவூட்டுகிறது (காண்க மத் 2,11). இன்னொரு வகை ஐயம் கொள்கிறது. இவர்கள் ஆரம்ப கால திருச்சபையில் இருந்த நம்பிக்கை குன்றியவர்களை பிரதிநிதித்துவப் படுத்துகிறார்கள் (ἐδίστασαν). இந்த ஐயம் கொள்கிறவர்கள் பதினொரு சீடர்களுக்குள்ளேயே இருந்திருக்கிறார்களா? என்ற கேள்வியும் எழுகிறது.
சில ஆய்வாளர்கள் அனைவரும் முதலில் வணங்கிவிட்டு பின்னர் சந்தேகித்தார்கள் என்ற ஒரு வாதத்தையும் முன்வைக்கிறார்கள். இதற்கு வாய்ப்புக்கள் மிகக் குறைவாகவே உள்ளன. ஆண்டவரோடு இருந்தும், அவரைக் கண்டும், அவரை அனுபவித்தும் இறுதியாக ஐயம் கொள்ள வைக்கிறது என்பது மனிதத்தின் பலவீனத்தைக் காட்டுகிறது.
வ.18: இயேசு இன்னொரு அடியை முன்வைக்கிறார். அவர் அவர்களை அணுகுகிறார் (προσελθὼν ὁ Ἰησοῦς). ஆக இங்கே முதலில் அணுகுகிறவர் இயேசு. அணுகிக் கொண்டு தன்னுடைய அதிகாரத்தின் வரையறையை விளக்குகிறார். சாதாரண உலக தலைவர்களைப்போல் அல்லாமல் தனக்கு விண்ணுலகிலும் மண்ணுலகிலும் சகல அதிகாரங்களும் தரப்பட்டதாக சொல்கிறார்.
இயேசுவின் இந்த அதிகார வரையறை அவரை உண்மையான மெசியா எனக் காட்டுகிறது. இதே அதிகாரத்ததைத்தான் சாத்தான் இயேசுவிற்கு கொடுப்பதாக சொல்லியது (காண்க 4,8-9). சாத்தானின் அதிகாரம் மாயையான அதிகாரம், ஆனால் இப்போது இயேசு கொண்டிருப்பது உண்மையான அதிகாரம். இந்த அதிகாரம் அருளப்பட்டிருக்கிறது, ஆனால் யாரால் என்று சொல்லவில்லை, சூழலியலில் இருந்து பார்க்கின்றபோது கடவுள்தான் அதன் முதலாளி என்பது தெரிகிறது.
வ.19: சீடர்களுக்கு மிக முக்கியமான வரலாற்று கட்டளை கொடுக்கப்படுகிறது. எல்லா மக்களினங்களையும் சீடராக்கச் சொல்லி கட்டளையிடுகிறார் இயேசு (μαθητεύσατε πάντα τὰ ἔθνη). இது மிகவும் வித்தியாசமான கட்டளை. ஆண்டவரின் முதல் சீடர்கள் அனைவரும் யூதர்களாகவோ அல்லது யூத மத கலாச்சாரத்துடன் தொடர்புபட்டவர்களாகவோ இருந்தனர். இப்போதுதான் முதல் தடவையாக அனைத்து இன மக்களும் இந்த சீடர்கள் என்ற தகமையை சுவைக்க முழுமையான கட்டளையை பெற்றுக்கொள்கிறார்கள். இதிலிருந்து, யூதர் அல்லாதவர் முழுமையான சீடர்கள் என்ற அந்தஸ்தை பெறுகிறார்கள், அந்த அந்தஸ்தை கடவுளே கொடுக்கிறார். இந்த சீடத்துவத்தின் அடையாளமாக தந்தை, மகன் தூய ஆவியின் பெயராலான திருமுழுக்கு கொடுக்கப்படுகிறது (τὸ ὄνομα τοῦ πατρὸς καὶ τοῦ υἱοῦ καὶ τοῦ ἁγίου πνεύματος). திருமுழுக்கு சீடத்துவத்தின் அடையாளமாக அக்காலத்திலிருந்தே இருந்திருக்கிறது என இதன் மூலம் அறிந்து கொள்ளலாம். பல வகையான திருமுழுக்குகள் பாவனையில் இருந்தபோது இயேசு இந்த வகையான திருமுழுக்கை அறிமுகம் செய்கிறார்.
திருமுழுக்கில் திரித்துவத்தின் அடையாளத்தை, மூல வரியில் சில ஆய்வாளர்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். இவர்களின் கருத்துப்படி இந்த வரி பிற்கால இணைப்பு என்று வாதிடுகின்றனர். ஆனால் இந்த கருத்தை ஆதரிக்கும்படி எந்த பிரதியும் காணப்படவில்லை. இந்த வரிதான் முதல் தடவையாக திரித்துவத்தை நேரடியாகவே வாசகர்களுக்க அறிமுகம் செய்கிறது.
வ.20: இந்த சீடத்துவத்திற்கு மேலதிகமான கட்டளையொன்றும் கொடுக்கப்படுகிறது. இவர்கள்
இயேசுவின் கட்டளைகள் யாவற்றையும் மற்றைய சீடர்களைப்போல கடைப்பிடிக்க கேட்கப்படுகிறார்கள். சீடர்கள் குருவின் கட்டளைகளை கடைப்பிடிக்கிறவர்கள், இந்த அடையாளம் இவர்களுக்கும் கொடுக்கப்படுகிறது.
ஏற்கனவே தன்னை இம்மானுவேல் என்று அறிமுகம் செய்த இறைவன், இறுதி வசனத்தில் மீண்டுமாக அதனை வலியுறுத்துகிறார். உலகம் முடியும் வரை கடவுள் மக்களோடு இருக்கிறார் என்ற வசனம், துன்பமான வேளையில் கடவுள் தூரத்தில் இருந்து வேடிக்கை பார்க்கிறார் என்ற சிந்தனையை பொய்ப்பிக்கிறது. கடவுள், மனிதரின் நாளாந்த செயற்பாடுகளில் அவர்களோடு பயணிக்கிறார் என்ற கருத்தையும் கொடுக்கிறது. இயேசு பரலோகம் சென்றாலும், அவர் கடவுளாக இருக்கிற படியால் அவருடைய பிரசன்னம், மற்றும் இருப்பு இந்த உலகத்திலேயே தங்கியிருக்கும் என்பது இவ்வாறு வெளிப்படுத்தப்படுகிறது.
திரித்துவம் ஆழம் காணமுடியாத விசுவாச உண்மை,
புனித அகுஸ்தினாராலும் அதனை புரிய முயவில்லை,
இருப்பினும், தூய திரித்துவம், கடவுளின் பன்முகத்தன்மையைக் காட்டுகிறது,
அவருடைய உள்ளார்ந்த ஒற்றுமையைக் காட்டுகிறது,
ஒற்றுமையில்தான் வல்லமை என்பதையும் காட்டுகிறது,
திரித்துவத்தை விளக்குவது இலகுவாக இருக்காது எனினும்,
அதனை வீட்டிலும், சமூகத்திலும் வாழ்வது இலகுவாக இருக்கும்.
திருத்துவ ஆண்டவருக்கு சாட்சியமாகவும் இருக்கும்.
திருத்துவ ஆண்டவரே,
உம்மைப் போல என்னையும் நிறைவுள்ளவனாக்கும், ஆமென்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக