04,02,2018
(இலங்கை சோசலிச சனநாயக குடியரசின் சுதந்திர நாள்)
இலங்கை அன்னை, தேசிய பாதுகாவலி, பெருவிழா
மி. ஜெகன்குமார் அமதி,
வசந்தகம், யாழ்ப்பாணம்,
Friday, February 2, 2018
முதலாம் வாசகம்: எசாயா 43,1-5.10-13
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 95
இரண்டாம் வாசகம்: திருத்தூதர் பணிகள் 1,12-13: 2,1-8.11
நற்செய்தி: மத்தேயு 2,1-2.7-12
தேசிய சுதந்திர நாள்:
1942ம் ஆண்டு இடண்டாம் உலக யுத்தம் இலங்கையின் எல்லையையும் வந்தடைந்திருந்தது. பாஸ்கா தினத்தன்று ஜப்பானியர்கள் இலங்கைக்கு தங்களுடைய முதலாவது தாக்குதலை தலைநகர் கொழும்பில் மேற்கொண்டனர். சில நாட்களுக்கு பின்னர் திருகோணமலையும் தாக்குதலுக்கு உள்ளானது. தாக்குதல் சிறியதாக இருந்தாலும், இது மக்கள் மத்தியில் பேரதிர்ச்சியையும் பயத்தையும் உருவாக்கியது. இதனைத்தான் குண்டு வீசியவர்களும் எதிர்பார்த்திருப்பர். இலங்கையின் மக்கள் ஒரே குரலாக மன்றாடத்தொடங்கினர்.
மக்களோடு சேர்ந்து அன்றைய கொழும்பு உயர்மறைமாவட்டத்தின் போராயர் அதி வண. மாசோன் அமதி அவர்கள், தன் நாட்டையும் மக்களையும் பற்றி அதிகம் அக்கறை கொண்டவராக தன் சபையின் பாதுகாவலியான அமல மரி அன்னையிடம் வேண்டுதல் ஒன்றையும் பொருந்தனை ஒன்றையும் முன்வைத்தார், அதாவது அமல மரி அன்னை யப்பானியர்களின் தாக்குதலில்
இருந்து இலங்கையை காப்பாற்றினால், அன்னைக்கு ஒரு பேராலயத்தை தேவத்தையில் நிர்ணயிப்பதாக அவர் வாக்குப்பண்ணினார். அன்னையின் பரிந்துபேசுதலால், இலங்கை யப்பானிய போரின் தாக்கத்திலிருந்து பாதுகாக்கப்பட்டது. 1947 ஆம் ஆண்டு 5ம் ஆண்டு, மாசி மாதம் பெரிய திராள மக்களின் முன்னர், தேவத்தையில் பேராயர் அதி வண். மஸ்சோன் அமதி அன்னை மரியாவை இலங்கையின் அரசியாக பிரகடண்படுத்தினார்: அவருடைய வரிகளில் 'திருத்தந்தை 12ம் பத்திநாதரின் அதிகாரத்தின் படி, அதி பரிசுத்த அமல மரி அன்னையை இன்று நாம் இலங்கைத் தீவின் அரசியாக பிரகடனப்படுத்துகின்றோம், அத்தோடு அவர் இனி இலங்கையின் அன்னை என அழைக்கப்டுவார்.'
நாடு ஜப்பானியரிடமிருந்து மட்டுமல்ல பிரித்தானியரிடமிருந்தும் விடுதலை பெற்றது. 1948ம் ஆண்டு பிரித்தானியர் இலங்கையின் இறைமையை ஏற்றுக்கொண்டனர். மக்கள் தங்கள் சுதந்திரத்தை பெற்றுக்கொண்டனர். நாடு சுதந்திரமடைந்து 70ஆண்டுகளுக்கு மேலாக ஆகியிருக்கிறது. ஆனால் ஒரு சிலர் மட்டுமே இந்த சுதந்திரத்தை அனுபவிக்கிறனர்.
தமிழ்த் தேசிய இனம் தொடர்ச்சியாக ஏமாறற்ப் பட்டுக்கொண்டே இருக்கிறது. காலனித்துவத்தின் இனம் மாறி இருக்கிறதே அன்றி, காலத்துவம் மாறவில்லை. தமிழர் தாயகத்தில் நிலங்கள் தொடர்ச்சியாக சுரண்டப்படுகின்றன. கடல் எல்லைகள் சுருங்கிக் கொண்டேவருகிறது.
இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் தாயகத்தைவிட்டு வெளியேற மறைமுகமாக நிர்பந்திக்கப்டுகிறார்கள். தமிழர்கள் இந்நாட்டின் குடிகள் இல்லை என்று மறைமுகமாக, பிழையான கட்டுக்கதைகளை அடிப்படையாகக் கொண்டு பார்க்கப்படுகிறார்கள். தமிழர்கள் முப்பது வருடங்களுக்கு மேலாக ஆயுதம் ஏந்தி சுதந்திரத்திற்காக போராடியும், இறுதியில் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். தமிழ் இளைஞர்கள் இனிமேலும் ஆயுதம் ஏந்தவோ, உரிமைப்போர் செய்யவோ கூடாது என்பதில் ஆட்சியாளர்கள் கவனமாக இருக்கிறார்கள்.
உரிமைக்காக போராடிய இளைஞர்கள் மெதுவாக தம் அடையாளங்களை இழந்து, மத வாதிகளாகவும், பணவாதிகளாகவும், போதைவஸ்துக்கு அடிமைகளாகவும், உணர்வற்றவர்களாகவும், இந்திய சினிமாவின் பரப்புரையாளர்களாகவும் மாற்றப்படுகிறார்கள்.
தமிழர்கள் இந்நாட்டின் உரிமைக் குடிமக்கள். தமிழர்களின் அடையாளம் இந்நாடும், அவர்கள் பேசும் மொழியுமாகும். இந்நாட்டின் சுதந்திரத்திற்காகவும், இந்நாட்டை விரித்தி செய்யவும், இந்நாட்டை அபிவிருத்தி செய்யவும் தமிழர்கள் பல தியாகங்களை பரம்பரை பரம்பரையாக செய்திருக்கிறார்கள். கட்டுக்கதைகளும், புராணங்களும் தமிழர்களின் வரலாற்றை மாற்றமுடியாது. பிழையான மதநம்பிக்கைகள் தமிழரின் ஒற்றுமையை சிதைக்க விடக்கூடாது. இதுதான் இலங்கை தமிழரின் தாயகம், இதுதான் நம்முன்னோரின் மண், இதுதான் நம் தாய் நாடு. சுதந்திரமும், அபிவிருத்தியும் இந்நாட்டில்தான் ஏற்படவேண்டும்.
சுதந்திரமில்லா மனிதன் உணர்வில்லாத நடமாடும் பிணம். சுதந்திரமில்லா நாடு, அனைத்து செல்வங்களையும் கொண்டிருந்தாலும், அது ஒரு சிறைச்சாலை. தமிழ்க் கிறிஸ்தவர்கள் மற்றையவர்களைப்போல சுதந்திரவாதிகள், அவர்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்து, அடிப்படையில் ஒரு சுதந்திரவாதி. தமிழர்களுக்கு சுதந்திரம் வெளியிலிருந்து வராது, அவர்களுக்கு நண்பர்களோ அல்லது எதிரிகளோ சுதந்திரத்தை தரமுடியாது, ஏனெனில் இரண்டும் மாயையே. தமிழர்கள் முதலில் சுதந்திரத்தை மதிக்க வேண்டும், அதனை எதிர்பார்க்கவேண்டும், அதற்காக தியாகம் செய்ய முன்வர வேண்டும், அந்த சுதந்திரத்தை தங்களுள்ளே வாழவேண்டும்.
சுதந்திரத்தை நோக்கி பயணிக்கும் இந்த தேசிய இனம், முதலில் தாம் யாரென அறிய வேண்டும், மதவாதம், பிரிவினைவாதம், பிரதேசவாதம், மற்றும் சாதிவாதம் போன்ற தமது உள்வீட்டு குப்பைகளை அவர்கள் அகற்றினால் ஒழிய, இவர்களுக்கு சுதந்திரம் கிடையாது. ஒருவேளை சுதந்திரத்தை ஆட்சியாளர்கள் கொடுத்தாலும், அது உதவாது. இலங்கை மாதா அனைத்து இலங்கையருக்கும், முக்கியமாக இலங்கை தமிழருக்காக பரிந்துபேச மன்றாடுவோம்.
எசாயா 43,1-5.10-13
(விடுதலை வரும் என்ற உறுதிமொழி)
1யாக்கோபே, உன்னைப் படைத்தவரும் இஸ்ரயேலே, உன்னை உருவாக்கிய வருமான ஆண்டவர் இப்போது இவ்வாறு கூறுகிறார்: அஞ்சாதே, நான் உன்னை மீட்டுக் கொண்டேன்; உன் பெயரைச் சொல்லி உன்னை அழைத்தேன்; நீ எனக்கு உரியவன். 2நீர்நிலைகள் வழியாக நீ செல்லும்போது நான் உன்னோடு இருப்பேன்; ஆறுகளைக் கடந்து போகும்போது அவை உன்னை மூழ்கடிக்க மாட்டர் தீயில் நடந்தாலும் சுட்டெரிக்கப்பட மாட்டாய்; நெருப்பு உன்மேல் பற்றியெரியாது. 3ஏனெனில் உன் கடவுளாகிய ஆண்டவர் நானே; இஸ்ரயேலின் தூயவரும் உன்னை விடுவிப்பவரும் நானே; உனக்குப் பணயமாக எகிப்தையும், உனக்கு ஈடாக எத்தியோப்பியா, செபா நாடுகளையும் ஒப்புக்கொடுக்கிறேன். 4என் பார்வையில் நீ விலையேறப் பெற்றவன்; மதிப்புமிக்கவன்; நான் உன்மேல் அன்பு கூர்கிறேன், ஆதலால் உனக்குப் பதிலாக மானிடரையும் உன் உயிருக்கு மாற்றாக மக்களினங்களையும் கொடுக்கிறேன். 5அஞ்சாதே, ஏனெனனில் நான் உன்னோடு இருக்கின்றேன்; கிழக்கிலிருந்து உன் வழிமரபை அழைத்து வருவேன்; மேற்கிலிருந்து உன்னை ஒன்று திரட்டுவேன்.
10'நீங்கள் என் சாட்சிகள்' என்கிறார் ஆண்டவர்; 'நான் தேர்ந்தெடுத்த என் ஊழியனும் நீங்களே; என்னை அறிந்து என்மீது நம்பிக்கை வைப்பீர்கள் 'நானே அவர்' என்பதை உணர்ந்து கொள்வீர்கள்; எனக்கு முன் எந்தத் தெய்வமும் உருவாக்கப்படவில்லை; எனக்குப்பின் எதுவும் இருப்பதில்லை. 11நான், ஆம், நானே ஆண்டவர்; என்னையன்றி வேறு மீட்பர் இல்லை. 12அறிவித்தது, விடுதலை அளித்தது, பறைசாற்றியது அனைத்தும் நானே; உங்களிடையே உள்ள வேறு தெய்வமன்று; நீங்களே என் சாட்சிகள், என்கிறார் ஆண்டவர்! 13நானே இறைவன்; எந்நாளும் இருப்பவரும் நானே என் கையிலிருப்பதைப் பறிப்பவர் எவருமில்லை நான் செய்ததை மாற்றியமைப்பவர் எவர்?
இந்த வாசகம் இரண்டாம் எசாயா புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. எசாயாவின்
இரண்டாவது புத்தகம் உறுதிதரும் பல இறைவாக்குகளை உள்ளடக்கியுள்ளது. பபிலோனியாவிலிருந்து நாடு திரும்பிய பின்னர் மக்களுக்கு ஏற்பட்ட பல உளதாக்கங்களை
இந்த இறைவாக்குகள் ஆற்றுப்படுத்துவதாக உள்ளன.
வ.1: இஸ்ராயேல் மக்களுக்கு மிகவும் பிடித்தமான சொல் பாவிக்கப்பட்டுள்ளது. அவர்களை யாக்கோபே (יַעֲקֹב ய'அகோவ்), மற்றும் இஸ்ராயேலே (יִשְׂרָאֵל யிஸ்ரா'ஏல்) என்று விழிக்கிறார்.
இவர்களை தான்தான் படைத்தவரும்(בֹּרַאֲךָ போரா'அகா) அத்தோடு உருவாக்கியவரும் (יֹצֶרְךָ யோட்செர்கா) என்று நினைவூட்டுகிறார் கடவுள்.
கடவுள் இரண்டு விதமான நம்பிக்கைகளை மக்களுக்கு எசாயா வாயிலாக கொடுக்கிறார். அஞ்சவேண்டாம் என்கிறார் (אַל־תִּירָא֙ 'அல்-திரா'), ஏனெனில் அவர்தான் அவர்களை மீட்டவர் என்கிறார். இங்கே எகிப்திய அனுபவம் நினைவூகூறப்படுகிறது எனலாம். அத்தோடு இஸ்ராயேலுக்கு பெயர் வைத்து அழைத்தவர் தாமே என்கிறார் கடவுள் (קָרָאתִי בְשִׁמְךָ காரா'தி வெஷிம்கா), பெயர் வைத்தல் உரிமையாக்குதல் என்ற அர்த்தத்தைக் கொடுக்கும். இறுதியான பகுதி, இஸ்ராயேலை கடவுளுக்கு உரியவர் என அழகாகக் காட்டுகிறது לִי־אָֽתָּה (லி-'அத்தாஹ்- என்னுடையவன் நீ). இந்த வரி நிச்சயமாக அடிமைத்தனத்திலிருந்தவர்க்கு அல்லது அதிலிருந்து தற்போதுதான் மீண்டு வந்தவர்க்கு மிக நம்பிக்கையைக் கொடுத்திருக்கும்.
வ.2: பஞ்ச பூதங்களும் ஆண்டவருடைய மக்களுக்கு ஒரு பொருட்டல்ல என்பதை அழகாக காட்டுகிறார் ஆசிரியர். நீரும் நெருப்பும் மனிதருக்கு தேவையான மிக மிக அத்தியாவசியமான மூலப்பொருட்கள், ஆனால் இவை பெருக்கெடுக்கும் போது பல பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்தும். நீரினாலும், நெருப்பினாலும் ஏற்படும் அழிவுகள் நினைத்துக்கூட பார்க்க முடியாதவை. விஞ்ஞானம் எவ்வளவுதான் வளர்ந்தாலும், மனிதரால் நீர் நெருப்பின் வல்லமையை தாங்கவோ கட்டுப்படுத்தவோ முடியாது. அழிவுகளை முன்கூட்டி கணிக்க முடியும், ஆனால் தடுக்க முடியாது.
இப்படியிருக்க அக்காலத்தின் இதன் தாக்கங்கள் இன்னும் பலமாக இருந்திருக்கும்.
இந்த வரியில், நீரையும் நெருப்பையும் ஒத்த கருத்துச் சொற்களில், காட்டி கடவுள் அவற்றிலிருந்து தன் மக்களை காக்கிறவர், அதாவது இயற்கையின் சக்திகள் அனைத்திற்கும் அவர்தான் கடவுள் என்பதையும் காட்டுகிறார். நீர்நிலைகளும் (מַּיִם֙ மாயிம்) ஆறுகளும் (נְּהָרוֹת நெஹாரோத்) தன் மக்களை மூழ்கடிக்க மாட்டா என்கிறார் அன்பான கடவுள். நெருப்புகூட தன் மக்களை தீண்டாது என்று ஆறுதல் வார்த்தை சொல்கிறார் கடவுள் (אֵשׁ֙ 'எஷ்- நெருப்பு: לֶהָבָה லெஹாவாஹ்- சுவாலை).
வ.3: இஸ்ராயேலின் கடவுள் யார் என்ற கேள்வி அவர்கள் துன்பப்படுகின்றபோது எழுகின்ற கேள்வி. சிலவேளைகளில் இந்த கேள்வியை இஸ்ராயேலின் எதிரிகள் நகைச்சுவையாக கேட்டார்கள். இஸ்ராயேலர்களின் தோல்வி அவர்களுடைய கடவுளின் தோல்வியாகவே பார்க்கப்பட்டது. இந்த பின்புலத்தில், தான், தான் இஸ்ராயேலின் கடவுள் என்றும் (אֲנִי יְהוָה אֱלֹהֶ֔יךָ 'அனி அதோனாய் 'எலோஹெகா- உன்கடவுளாகிய ஆண்டவர் நானே), இஸ்ராயேலின் தூயவரும், அதனை விடுவிப்பவரும் தானே என்கிறார் (קְד֥וֹשׁ יִשְׂרָאֵ֖ל מוֹשִׁיעֶךָ கெதோஷ் யிஸ்ரா'எல் மோஷி' 'எகா- இஸ்ராயேலே உன்னை விடுவிக்கும் தூயவர்.), ஆண்டவராகிய கடவுள்.
அதேவேளை இஸ்ராயேலுக்கு பிணையாக (כֹּפֶר கோபெர்-பிணை) பல நாடுகளை ஆண்டவர் வைப்பதாகவும் சொல்கிறார். இதன் மூலமாக இந்த நாடுகளைவிட இஸ்ராயேலை அவர் அன்பு செய்கிறார் என்பதை சொல்லவருகிறார் ஆசிரியர் எனலாம், அந்த நாடுகள்: எகிப்து (מִצְרַ֔יִם மிட்ஸ்சாயிம்), எத்தியோப்பியா (כּוּשׁ கூஷ்), செபா (סְבָא செவா') போன்றவையாகும்.
வ.4: இஸ்ராயேலர்கள் அதிகமான விரும்புவதும், விவிலியத்தின் மிக அழகான வரிகளிலும் இந்த வரி மிக மிக முக்கியமானது. கடவுளுடைய பார்வையில் இஸ்ராயேல் மக்கள் விலையேறப்பட்டவர்கள் என இந்த வரி மிகவும் இதமாகச் சொல்கிறது. இஸ்ராயேல் மக்கள் கூட்டத்தை ஒருமையில் சொல்கிறது இந்த வரி (יָקַרְתָּ בְעֵינַי யாகர்தா வெ'எனி- என்பார்வையில் விலைமதிப்பற்றவன் நீ). விலைமதிப்பற்றவராக இஸ்ராயேல் இருப்பதனால் கடவுளால் பெருமையடைகிறது என்பதும் சொல்லப்படுகிறது. இந்த சிறப்பு அடையாளத்தின் காரணமாகத்தான் மற்ற மனிதர்களும் மக்களினமும் பிணையாக கொடுக்கப்படுகிறது என்பது விளங்கப்படுத்தப்படுகிறது.
பபிலோனியாவில் பெற்ற துன்பம் இஸ்ராயேலர்களின் சமய நம்பிக்கையை பலமாக தாக்கியிருக்கும். அவர்கள் தங்கள் வேரையே இழக்கும் ஆபத்தில் இருந்திருக்கலாம். இப்படியான வெறுமையான நிலையில் இந்த வரி, கடவுள் அவர்களை மிகவும் அதிகமான அன்பு செய்கிறார் என்பதை காட்ட உதவுகிறது.
வ.5: இஸ்ராயேலர்கள் இனி அஞ்சவேண்டிய தேவையில் இல்லை என்கிறார் ஆண்டவர் (אַל־תִּירָא 'அல்-திரா'), அதற்கு காரணம் தான் அவர்களோடு இருப்பதாகச் சொல்கிறார் (כִּי אִתְּךָ־אָנִי கி 'இத்தெகா-'ஆனி). இந்த காலத்தில் இஸ்ராயேல் மக்கள் (முக்கியமாக தென்நாட்டினர், யூதேயாவினர்) கிழக்கிலும் (பபிலோனியா) மேற்கிலும் (எகிப்திலும்) தப்பி வாழ்ந்தனர்.
இவர்களைத்தான் அழைத்து வரப்போவதாக கடவுள் நம்பிக்கை கொடுக்கிறார்.
வவ.10-13: இந்த வரிகள் இஸ்ராயேலை கடவுளுடைய சாட்சிகளாக காட்டுகிறது. அதாவது கடவுள்தான் உண்மையான கடவுள், இந்த உண்மை நிலைக்கு சாட்சிகளாக இருக்கிறவர்கள் கடவுளின் மக்கள் என்கின்றன இந்த வரிகள்.
ஆண்டவர் இஸ்ராயேலை தன்னுடைய சாட்சிகள் எனவும் (עֵדַי֙ 'எதாய்- என்சாட்சி), தோந்தெடுக்கப்பட்ட ஊழியர்கள் (עַבְדִּי 'அவ்திய்- என் ஊழியன்) என்றும் சொல்கிறார். அவர்கள் கடவுளை அறிந்து அவர்மேல் நம்பிக்கை வைக்கும் (תַאֲמִינוּ לִי தா'அமிநூ லி- என்னில் நம்பிக்கை வைக்கிறவர்கள் நீங்கள்) விசேட மக்கள் என காட்டப்படுகிறார்கள். கடவுள் தனக்கு முன்னோ பின்னோ எந்த கடவுளும் இல்லை என்கிறார். அதாவது உண்மையான கடவுள் ஒன்றுதான் என்பது சொல்லப்படுகிறது.
வ.11: மிகவும் அழகான வரி. கடவுள் தன்னை மட்டும்தான் மீட்பர் என்கிறார். முதல் ஏற்பாட்டில் கடவுள் தன்னை வெளிப்படுத்தும் மிக முக்கியமான வரி இது, (אָנֹכִ֥י אָנֹכִ֖י יְהוָ֑ה 'ஆனோகி 'ஆனோகி அதோனாய்- நானே நானே கடவுள்: וְאֵין מִבַּלְעָדַי מוֹשִׁיעַ׃ வெ'என் மிபால்'ஆதாய் மோஷியா'- என்னை அன்றி வேறு மீட்பர் இல்லை).
வ.12: மக்களுக்கு மீட்பை அறிவித்து, அதனை அளித்து, பின்னர் பறைசாற்றியது அனைத்தும் தான்தான் என்கிறார் கடவுளாகிய ஆண்டவர். ஆக இஸ்ராயேல் மக்களுடைய வாழ்வில் வேறு தெய்வங்கள் இல்லை என்பதை மிக உறுதியாகச் சொல்கிறார் (אֲנִי־אֵל 'அனி-'எல்- நானே தெய்வம்).
வ.13: மேற்சொன்னவற்றையே இந்த வரியும் திரும்பச் சொல்கிறது. கடவுள் முழு சுதந்திரமுள்ளவர், அத்தோடு இறைமையுள்ளவர், அவர் சொன்ன வார்த்தைகள் பலமானவை, அவற்றை யாரும் திருப்ப முடியாது அத்தோடு அவருடைய செயல்களையும் யாரும் திருப்ப முடியாது என்பவை இந்த வரியில் காட்டப்பட்டுள்ளன.
கடவுள் காலங்களுக்கு அப்பாற்பட்டவர், அவருக்கு இறந்த காலமோ அல்லது எதிர்காலமோ கிடையாது, மாறாக நிகழ்காலம் மட்டுமே அவருடையது என்பதை இந்த வரி காட்டுகிறது (מִיּוֹם֙ אֲנִ֣י ה֔וּא மியோம் 'அனி ஹு' - எந்நாளும் இவருப்பவர் அவர் நானே.). யோவான் நற்செய்தியில் வரும் 'நானே' என்ற வார்த்தைகள் இந்த பின்புலத்திலிருந்து பெறப்பட்டிருக்க வேண்டும்.
திருப்பாடல் 95
(புகழ்ச்சிப் பாடல்)
1வாருங்கள்; ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; நமது மீட்பின் பாறையைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்.
2நன்றியுடன் அவர் திருமுன் செல்வோம்; புகழ்ப் பாக்களால் அவரைப் போற்றி ஆர்ப்பரிப்போம்.
3ஏனெனில், ஆண்டவர் மாண்புமிகு இறைவன்; தெய்வங்கள் அனைத்திற்கும் மேலான பேரரசர்.
4பூவுலகின் ஆழ்பகுதிகள் அவர்தம் கையில் உள்ளன் மலைகளின் கொடுமுடிகளும் அவருக்கே உரியன.
5கடலும் அவருடையதே; அவரே அதைப் படைத்தார்; உலர்ந்த தரையையும் அவருடைய கைகளே உருவாக்கின.
6வாருங்கள்; தாள்பணிந்து அவரைத் தொழுவோம்; நம்மை உருவாக்கிய ஆண்டவர்முன்
முழந்தாளிடுவோம்.
7அவரே நம் கடவுள்; நாமோ அவரது மேய்ச்சலின் மக்கள்; நாம் அவர் பேணிக்காக்கும் ஆடுகள்.
இன்று நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்!
8அன்று மெரிபாவிலும், பாலை நிலத்தில் மாசாவிலும் செய்ததுபோல், உங்கள் இதயத்தைக்
கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள்.
9அங்கே உங்கள் மூதாதையர் என்னைச் சோதித்தனர்; என் செயல்களைக் கண்டிருந்தும்
என்னைச் சோதித்துப் பார்த்தனர்.
10நாற்பது ஆண்டளவாய் அந்தத் தலைமுறை எனக்கு வெறுப்பூட்டியதால், நான் உரைத்தது: ‛அவர்கள் உறுதியற்ற உள்ளம் கொண்ட மக்கள்; என் வழிகளை அறியாதவர்கள்'.
11எனவே, நான் சினமுற்று, ‛நான் அளிக்கும் இளைப்பாற்றியின் நாட்டிற்குள்
நுழையவே மாட்டார்கள்' என்று ஆணையிட்டுக் கூறினேன்.
கடவுளை பாறை (צוּר ட்சூர்) என்று விழிக்கும் இந்த திருப்பாடல் மிக முக்கியமான புகழ்ச்சிப் பாடல்களில் ஒன்று. மீட்பின் மகிழ்ச்சியான நற்செய்தி என்றும் இதனை ஆய்வாளர்கள் பெயரிடுகின்றனர். கடவுளுக்கு, பாறை, அரசர், படைத்தவர், உருவாக்கியவர், ஆயன், அத்தோடு கீழ்ப்படிவு கொடுக்கப்படவேண்டியவர், என்ற பெயர்கள் கொடுக்கப்படுகின்றன. இந்த பாடலில் சில இடங்களில் பல கடவுள் வழிபாடுகளை நினைவூட்டுகிற சொற்பதங்கள் காணப்பட்டாலும், இவை ஒரு கடவுள் வழிபாட்டை மையப்படுத்தவே பாவிக்கப்பட்டுள்ளன என்றே எடுக்க வேண்டும். அத்தோடு கடவுளுக்கு பாவிக்கப்படும் சொற்கள் (எலோகிம் אֱלֹהִים) வேற்று தெய்வங்களுக்கு (אֱלִילִ֑ים எலிலிம் தி.பா 96,5) பாவிக்கப்படவில்லை அல்லது தவிர்கப்படுகிறது என்பதை ஆராய வேண்டும். அதற்க்கு பதிலாக வேறு சொற் பதம் பாவிக்கப்பட்டுள்ளது.
தொண்ணூற்றைந்தாவது திருப்பாடல் காரண-காரிய வடிவத்தில், அத்தோடு அதிகமான கவி அடிகள் திருப்பிக்கூறுதல் என்ற எபிரேய கவி நயத்தில் அமைந்துள்ளது, இவ்வாறு:
அ1. (வவ.1-2). மகிழ்வுடன் ஆராதிக்க ஒரு அழைப்பு
ஆ1. (வவ.3-5) ஆண்டவருடைய மாட்சியை பற்றிய விளக்கம்
அ2. (வ.6). வணக்கத்துடன் ஆராதிக்க ஒரு அழைப்பு
ஆ2. (வ.7அ,ஆ,இ) எமது சலுகைகளைப் பற்றிய விளக்கம்
அ3. (7ஈ). பணிவிற்க்கான ஒரு அழைப்பு
ஆ3. (வவ.8-11). அதனுடைய முக்கியமான விளைவுகளைப் பற்றிய விளக்கம்
வவ.1-2: நம் மீட்பின் பாறை (צ֣וּר יִשְׁעֵֽנוּ ட்சூர் யிஷ்'எனூ) என்று ஆண்டவரை விழிப்பது இஸ்ராயேல் கவி வரிகளின் முக்கியமான ஒரு சொற்றொடர். பாலை நிலத்தில் அசையாமல் இருக்கும் கடினமான பாறைகள் கடவுளின் பலத்தையும் மாட்ச்சியையும் மக்களுக்கு நினைவூட்டின. பாறைகளைப்போலவே கடவுளும் அவர் பலத்தை பொறுத்த மட்டில், அசையாதவர் அல்லது அசைக்கமுடியாதவர் என்ற கருத்தை கொண்டுவருகின்றது. 'அவர் திருமுன் செல்வோம்' என்பதற்கு 'அவர் முகத்தின் முன் செல்வோம்' (פָנָיו பானாவ்- அவர் முகங்கள்) என்ற வரிகள் எபிரேயத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
வ.3: முதல் இரண்டு வரிகளுக்கான காரணங்கள் இந்த வரியில் விளக்கப்பட்டுள்ளது. ஆண்டவர் பெரிய இறைவன் என்பதும் (גָּדוֹל יְהוָה காதோல் அதோனாய்), தெய்வங்கள் எல்லாவற்றிக்கும் மோலான பேரரசர் (עַל־כָּל־אֱלֹהִים 'அல்-கோல்- 'எலோஹிம்) என்பதும் இதற்கான காரணங்கள். கடவுளை அரசராகவும், தெய்வங்களை அரசர்களாகவும், பார்க்கின்ற சிந்தனைகள் இந்த காலத்தில் வழக்கிலிருந்தன. இஸ்ராயேல் இறைவாக்கினர்களுக்கு கடவுளை அரசராக காட்டவேண்டிய தேவையிருந்தது. கடவுள்தான் இஸ்ராயேலருக்கு என்றும் அரசர், மனிதர்கள் அவர்களின்; அரசராக இருக்க முடியாது, என்ற சிந்தனையை இது நினைவூட்டுகிறது (ஒப்பிடுக 1சாமு 8:7).
வவ.4-5: கடவுளுடைய படைப்பாற்றல்கள் விவரிக்கப்படுகின்றன. ஆழிகள் (מֶחְקְרֵי־אָרֶץ மெஹ்கெரெ-'ஆரெட்ஸ்- பூவுலகின் ஆழ்பகுதிகள்), மலைகளின் கொடுமுடிகள் (תוֹעֲפוֹת הָרִים
தோ'அபோத் ஹாரிம்- மலைகளின் உச்சிகள்), கடல் (הַיָּם ஹய்யாம்- தண்ணீர்), உலர்ந்த தரை (יַבֶּשֶׁת யாப்பேஷெத்-உலர்தரை) போன்றவை கடவுளாலே படைக்கப்பட்டன என்னும் போது கடவுளின் மாட்சிமை வெளிப்படுத்தப்படுகிறது. எந்த ஒரு அரசனாலும் அல்லது வேறு தெய்வங்களாலும் இவை அனைத்தையும் படைத்திருக்க முடியாது என்ற வாதத்தை ஆசிரியர் சொல்லாமல் சொல்லுகிறார்.
வ.6: இப்படியாக ஆண்டவர் வணக்கத்துக்குரியவராக இருக்கின்ற படியால் அவரை வணங்க ஆசிரியர் அழைப்பு விடுகிறார். முழந்தாள் படியிட்டு வணங்குதலை, அதிகமான வேளைகளில் எபிரேய மொழி வணக்க அடையாளமாக குறிக்கிறது (נִשְׁתַּחֲוֶה நிஷ்த்தாஹவெஹ் வணங்குவோமாக). வணங்குதலும் முழந்தாள் படியிடுதலும் ஒத்த கருத்துச் சொற்களில் பாவிக்கப்பட்டுள்ளன.
கடவுள்தான் மக்களை உருவாக்கியவர் என்ற தொடக்க நூல் விசுவாசக் கோட்பாடும் இங்கே நினைவூட்டப்படுகிறது (יְהוָה עֹשֵׂנוּ அதோனாய் 'ஓஸ்செனூ- நம்மை செய்தவர்).
வ.7: இந்த வரி வித்தியாசமாக கடவுளின் மக்கள் முதலில் யார் என்றும், கடவுள் யார் என்றும் விளங்கப்படுத்தி, பின்னர் கடவுளுக்கு செவிசாய்க்க ஒரு அழைப்பை விடுக்கிறது. ஆடும் ஆயனும் என்ற உருவகங்கள் இஸ்ராயேல் மக்களுக்கு மிகவும் தெரிந்த மற்றும் அந்நியோன்யமான உருவகங்கள்.
அ. அவர் மேய்சலின் மக்கள் (עַם מַרְעִיתוֹ 'அம் மர்'இதோ).
ஆ. அவர் கைகளின் ஆடுகள் (צֹאן יָדוֹ ட்சோ'ன் யாதோ).
வவ.8-10: பணியாதவர்களுக்கு என்ன நடக்கும் என்பதை வரலாற்றின் பாடத்திலிருந்து விளக்க முயல்கிறார் ஆசிரியர். மெரிபாவிலும் மாசாவிலும் இஸ்ராயேல் மக்கள் கடவுளுக்கு செய்த காட்டிக்கொடுப்புக்கள் முக்கியமான படிப்பினைகளாக இஸ்ராயேல் பிள்ளைகளால் தங்கள் மறையறிவின் போது நினைவுகூறப்பட்டது.
அ. மெரிபா (מְרִיבָה மெரிவாஹ்) என்றால் கலவரம் என்று பொருள். இது இரண்டு வித்தியாமான நிகழ்வுகளாக விவிலியத்தில் பதியப்பட்டுள்ளது (ஆராய்க வி.ப 17,1-7 மற்றும் எண் 20,1-13 அத்தோடு தி.பா 81,7: 106,32). இந்த இரண்டு நிகழ்வுகளிலும் தண்ணீரைப் பற்றிய முறைப்பாடு பதியப்பட்டுள்ளது.
ஆ. மாசா (מַסָּה மாஸ்சாஹ்) என்பது சோதித்தலைக் குறிக்கிறது. மெரிபாவைப்போல
இதுவும் இஸ்ராயேலரின் முணுமுணுப்பையும், முறைப்பாடையும் பதிவு செய்த நிகழ்வு. இதுவும் கடவுளுக்கெதிரான ஒரு குற்றச் செயலாக இஸ்ராயேலரிடையே கணிக்கப்பட்டது (காண்க வி.ப 17,1-7: இ.ச 6,16: 9,22: 33,8).
கடவுளை சோதித்தால், மனிதருக்கு கிடைக்கும் விளைவு என்ன என்பதை இங்கே காணலாம். கடவுளை சோதித்ததை கடவுளுக்கு வெறுப்பூட்டியதாக ஆசிரியர் காண்கிறார். சோதித்ததும், வெறுப்பூட்டியதும், கடவுளிடம் இருந்து மனிதருக்கு தூரத்தை அதிகமாக்கியது என்கிறார் ஆசிரியர். அத்தோடு கடவுளின் மக்கள் என்ற புதிய பெயரை பெற்றுக்கொள்கின்றனர்.
அ. அலைகின்ற இதயத்தை கொண்ட மக்கள் (עַם תֹּעֵי לֵבָב הֵם 'அம் தோ'எ லெவாவ் ஹெம்)
ஆ. அவர்கள் கடவுளின் பாதையை அறியாத மக்கள் (הֵ֗ם לֹא־יָדְעוּ דְרָכָי ஹெம் லோ'-யாத் 'வூ தெராகாய்)
வ.11: இறுதியாக இந்த மக்களுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது, அதாவது அவர்கள் பாலைநிலத்திலே மடிந்தார்கள், அவர்கள் வாக்களிக்கப்பட்ட நாட்டிற்கு நுழைய முடியாமல் போனார்கள். வாக்களிக்கப்பட்ட நாட்டிற்கு இங்கே ஒரு புதிய உருவகம் கொடுக்கப்படுகிறது அதாவது அது 'இளைப்பாற்றின் இடமாக' (מְנוּחָתִי மெநூஹாதி - என் இளைப்பாறுதல்) பார்க்கப்படுகிறது.
இஸ்ராயேல் மக்களை மந்தைகளாக பார்க்கும் ஆசிரியர், மந்தைகளுக்கு இளைப்பாறும் இடம் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்து கானானை இளைப்பாறும் இடமாக காண்கின்றார்.
எகிப்பதில் இருந்து வந்த இஸ்ராயேல் மக்களில் அதிகமானவர்கள் பாலைநிலத்திலே மடிந்தார்கள், அதற்கான காரணத்தை இந்த திருப்பாடல் காட்டுகிறது.
திருத்தூதர் பணிகள் 1,12-13: 2,1-8.11
12பின்பு அவர்கள் ஒலிவமலையிலிருந்து எருசலேமுக்குத் திரும்பினார்கள். இம்மலை எருசலேமுக்கு அருகில், ஓய்வுநாளில் செல்லக்கூடிய தொலையில் உள்ளது. 13பேதுரு, யோவான், யாக்கோபு, அந்திரேயா, பிலிப்பு, தோமா, பர்த்தலமேயு, மத்தேயு, அல்பேயுவின் மகன் யாக்கோபு, தீவிரவாதியான சீமோன், யாக்கோபின் மகன் யூதா ஆகியோர் திரும்பி வந்தபின் தாங்கள் தங்கியிருந்த மேல்மாடிக்குச் சென்றார்கள்.
1பெந்தக்கோஸ்து என்னும் நாள் வந்தபோது அவர்கள் எல்லாரும் ஒரே இடத்தில் கூடியிருந்தார்கள்.✠✠ 2திடீரென்று கொடுங்காற்று வீசுவது போன்று ஓர் இரைச்சல் வானத்திலிருந்து உண்டாகி, அவர்கள் அமர்ந்திருந்த வீடு முழுவதும் ஒலித்தது. 3மேலும் நெருப்புப்போன்ற பிளவுற்ற நாவுகள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்ததை அவர்கள் கண்டார்கள். 4அவர்கள் அனைவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டனர். தூய ஆவியின் தூண்டுதலால் அவர்கள் ஒவ்வொருவரும் வௌ;வேறான மொழிகளில் பேசத்தொடங்கினார்கள்.
5அப்பொழுது வானத்தின் கீழுள்ள அனைத்து நாடுகளிலுமிருந்தும் வந்திருந்த இறைப்பற்றுள்ள யூதமக்கள் எருசலேமில் தங்கியிருந்தனர். 6அந்த ஒலியைக்கேட்டுக் கூடிய திரளான மக்களுள் ஒவ்வொருவரும் தம் சொந்த மொழிகளில் அவர்கள் பேசக்கேட்டுக் குழப்பமடைந்தனர். 7எல்லோரும் மலைத்துப்போய், 'இதோ பேசுகின்ற இவர்கள் அனைவரும் கலிலேயர் அல்லவா? 8அவ்வாறிருக்க நம்முடைய தாய்மொழிகளில் இவர்கள் பேசுவதை நாம் ஒவ்வொருவரும் கேட்பதெப்படி?' என வியந்தனர்.
11யூதரும் யூதம் தழுவியோரும் கிரேக்கரும், அரேபியரும் ஆகிய நாம் நம்மொழிகளிலே கடவுளின் மாபெரும் செயல்களை இவர்கள் பேசக்கேட்கிறோமே! 'என்றனர்.
வவ.12-13: ஆண்டவருடைய விண்ணேற்பிக்கு பின்னர் திருத்தூதர்கள் பன்னிருவர் ஒலிவ மலையில் அடிக்கடி கூடியிருக்க வேண்டும். பல தேவைகளுக்காக இந்த இடத்தை அவர்கள் தெரிவு செய்திருக்கலாம். இந்த மாலை எருசலேமிற்கு அருகில் இருந்தது, அத்தோடு அங்கே அவர்கள் ஆண்டவரின் நினைவுகளை மீட்டிப்பார்க்க உதவியாக இருந்திருக்கும்.
இந்த மலையில் இருந்த பன்னிருவரின் பெயர்களையும் தருகிறார் ஆசிரியர் (லூக்கா). அவர்கள் பேதுரு, யோவான், யாக்கோபு, அந்திரேயா, பிலிப்பு, தோமா, பர்த்தலமேயு, மத்தேயு, அல்பேயுவின் மகன் யாக்கோபு, தீவிரவாதியான சீமோன், மற்றும் யாக்கோபின் மகன் யூதா. மத்தியா இன்னமும் தெரிவுசெய்யப்படவில்லை.
வ.1: இந்த விழா, (πεντηκοστή பென்டேகோஸ்டே) பாஸ்காவிற்கு பதினைந்தாம் நாளுக்கு பின்னர் முற்காலத்தில் கொண்டாடப்பட்டது (காண் தோபி 2,1). இஸ்ராயேலரின் மூன்றில் இரண்டாவது முக்கியமான விழாவும் இதுவாகும். ஒவ்வொரு ஆண்டும் இது எருசலேமில் பாஸ்காவின் பின்னர் ஏழாவது வாரத்தில் அறுவடைகளுக்கு நன்றியாக கொண்டாடப்பட்டது. இதனை வாரங்களின் திருநாள் (חַג שָׁבֻעֹת֙ ஹக் ஷவுஓத்) மற்றும் அறுவடையின் திருநாள் (חַג קָּצִיר֙ ஹக் காட்சிர்) என்றும் அழைப்பர். இயேசு யூதனாக இந்த விழாவில் பல முறை பங்குபற்றியிருப்பார். சில யூத குழுக்கள் இந்த திருவிழாவை தாங்கள் மோசேயிடம் இருந்து சட்டங்களை பெற்றுக்கொண்டதை நினைத்து கொண்டாடும் விழாவாகவும் இதனை பார்த்தனர்.
வ.2: தூய ஆவியாரின் வருகை விவரிக்கப்படுகிறது. லூக்கா இங்கே, இஸ்ராயேலர் சீனாய் மலையடிவாரத்தில் பெற்ற இறைக்காட்சி அனுபவத்தை ஒத்ததாக விவரிக்கின்றார் என்கின்றனர் சில ஆய்வாளர்கள். கொடுங்காற்று வீசுவது போல இரைச்சல் (ἦχος ὥσπερ φερομένης πνοῆς βιαίας) என்ற அடையாளம் அசாதாரணமான சூழ்நிலையை விளக்குகின்றது. இங்கே காற்றிற்கு (πνοή புனொஏ) பாவிக்கப்படுகின்ற அதே சொல்லைத்தான் கிரேக்க மொழி தூய ஆவிக்கும் பாவிக்கிறது. இங்கணம் இந்த இரண்டிற்கும் இடையிலான நெருங்கிய தொடர்பைக் காணலாம். இந்த இரைச்சல் வீடு முழுவதும் ஒலித்தது என்று சொல்லி, இது ஒரு தனி மனித அனுபவம் அல்ல மாறாக இது ஒரு வரலாற்று நிகழ்வு என லூக்கா காட்டுகிறார்.
வவ.3-4: தூய ஆவியானவரை காற்றாகவோ அல்லது நெருப்பு நாவாகவோ இங்கே லூக்கா காட்டவில்லை மாறாக தூய ஆவியை இவற்றிக்கு ஒப்பிடுகிறார். நெருப்பு போன்ற நாக்கு என்ற உருவகம் கிரேக்க உரோமைய இலக்கியங்களில் உள்ளாந்த உளவியல் அனுபவங்களையும்,
இறைவாக்கு, அறிவியல், பேச்சு அனுபவங்களையும் காட்டுவனவாக அமைந்திருந்தது. லூக்கா இந்த உருவகங்கள் மூலமாக கடவுள் தனது வல்லமையை காட்டுவதாக உணர்த்துகிறார். முழு வீடு, ஒவ்வொருவரின் தலை, வௌ;வேறான மொழிகள், இவைகள் கடவுளின் நிறைவான அருளையும் அவரின் பல்முகத்தன்மையையும் காட்டுகின்றன. பரவசப்பேச்சு மற்றும் பல மொழிப்பேச்சுக்கள் என்பவை ஒரே பொருளைக் குறிக்காது. பன்மொழி திறமை என்பது அக்காலத்தில் மிக உயர்ந்த நிலையில் இருந்த ஒரு கல்வித் தகமை. பவுல் இப்படியான திறமையுடையவராக இருந்தார். இங்கே இந்த தகமையை பெறுகிறவர்கள் சாதாரண கலிலேயர்கள், இதனால்தான் இந்த நிகழ்வு மிக ஆச்சரியாமானதாகப் பார்க்கப்படுகிறது. இந்த சாதாரண சமானிய கலிலேயர்களுக்கு வேறு நாட்டு மொழிகள் தெரிய வாய்ப்பில்லை இதனால் அவர்கள் ஏதோ ஒரு சக்தியினால் இதனை செய்கிறார்கள் என்பதும் மற்றவருக்கு புலப்படுகிறது.
வவ. 5-8: ஈழத் தமிழர் சமுதாயத்தைப்போல், யூத மக்கள் பல காலங்களாக தாயக மற்றும் புலம் பெயர்ந்த சமூகங்களாக காணப்பட்டனர். இந்த புலம்பெயர்ந்த யூத மக்கள் அந்த நாட்டு மொழிகளையும் அத்தோடு கல்வி மொழியான கிரேக்கத்தையும், அரச மொழியான இலத்தீனையும் கற்றனர். தாயக இஸ்ராயேலில் அதிகமானோர் பாலஸ்தீன அரமேயிக்கத்தை பேசினர். இந்த அறுவடைத் திருநாளுக்காக அனைத்து புலம்பெயர்ந்த இடங்களில் இருந்து வந்தவர்களை லூக்கா இங்கே காட்டுகிறார். இவர்கள் ஒவ்வொருவரும் கலிலேயரின் அரமேயிக்கத்தை அறிந்திருக்க வாய்பில்லை, திருத்தூதர்கள் அனைவருக்கும் கிரேக்கமோ
இலத்தீனோ தெரிந்திருக்கவும் வாய்பில்லை, அல்லது இதனை இந்த யூதர்கள் எதிர்பார்திருக்கவும் மாட்டார்கள். புலம் பெயர்ந்தவர்களுக்கு ஆச்சரியம் காத்திருக்கிறது. தமது புலத்து மொழிகளில் கலிலேயர் பேசுவதைக் கேட்கின்றனர். வழமையாக புலம்பெயர்ந்தவர்கள் வசதி படைத்தவர்களாக இருந்தனர், இதனால் தாயகத்தில் இருந்த வறியவர்களை நக்கல் கண்களோடு பார்த்திருக்கலாம். இதனால் கலிலேயரின் சாகசங்கள் ஆச்சரியத்தை தருகிறது. (இந்த தாயாக-புல ஆச்சரியங்களை நாமும் நல்லூரிலும் மடுவிலும் அடிக்கடி காணலாம்). ஆச்சரியம் தந்தாலும் இவர்களின் கேள்விகள் நியாயமானவை. வானத்தின் கீழுளுள்ள (ἀπὸ παντὸς ἔθνους τῶν ὑπὸ τὸν οὐρανόν) அனைத்து நாடுகள் (வ.5) என்று அன்றைய உரோமைய சாம்ராச்சியத்தையும், அத்தோடு அவர்களுக்கு தெரிந்த நாடுகளையும் லூக்கா குறிப்பிடுகிறார் என்றே எடுக்க வேண்டும். இவை எந்தெந்த நாடுகள் என்று பின்வரும் வரிகள் விளக்குகின்றன. இவர்கள் கலிலேயர்கள் அல்லவா (வ.7: ἅπαντες οὗτοί εἰσιν οἱ λαλοῦντες Γαλιλαῖοι;) என்ற இவர்களின் கேள்வி, கலிலேயர்களை புலம்பெயர்ந்தவர்கள் எப்படி பார்த்தார்கள், அல்லது அக்கால லூக்காவின் வாசகர்கள் எப்படி பார்த்தார்கள் என்பதை நமக்கு காட்டுகிறது. இவர்களின் வியப்பு, மகிழ்ச்சியை அல்ல, மாறாக சந்தேகத்தையே காட்டுகிறது. இங்கே வியப்பிற்கு பாவிக்கப்பட்டுள்ள இந்த கிரேக்க சொல் (ἐθαύμαζον எதௌமாட்சோன், ஆச்சரியப்பட்டனர்) பலவேளைகளில் இயேசு அதிசயங்கள் செய்தபோது மக்கள் சந்தேகப்பட்டு வியந்தார்கள், அதனை குறிக்க நற்செய்திகளில் பாவிக்கப்பட்டுள்ளது.
வவ. 9-10: இவர்கள் எந்தெந்த இடத்தில் வசிக்கிறவர்கள் அல்லது இடத்தவர்கள் என்பதை லூக்கா விவரிக்கிறார். உரோமைய பேரரசு திருத்தூதர் காலத்தில் பரந்து விரிந்திருந்தது. பார்தியா, மேதியா, எலாயமியா, மொசோப்போதோமியா (Πάρθοι καὶ Μῆδοι καὶ Ἐλαμῖται καὶ οἱ κατοικοῦντες τὴν Μεσοποταμίαν) போன்றவை உரோமையரின் ஆட்சிக்கு உட்பட்டிருக்கவில்லை. மற்றைய பகுதிகளான: யூதேயா, கப்பதோக்கியா, போந்து, ஆசியா (சின்ன), பிரிகியா, பம்பலியா, சீரேன் போன்றவை வடகிழக்கு உரோமைய மாகாணங்கள் (தற்போதைய துருக்கி, இஸ்ராயேல், லெபனான், சிரியா, பலஸ்தீனா). எகிப்து லிபியா போன்றவை, தெற்கு உரோமைய மாகாணங்கள் (தற்போதைய எகிப்து, லிபியா, துனிசியா, அல்ஜீரியா, மொறாக்கோ போன்றய நாடுகளின் வடக்கு பிராந்தியாங்கள்). உரோமை என்பது பழைய உரோமை நிலவளவைக் குறிக்கும்.
வ.11: லூக்கா, யூதர்கள் மட்டுமல்ல யூத மதத்தை தழுவியவர்களையும் விவரிக்கின்றார். இவர்கள், கிரேக்கரும், அரேபியருமாவர். உரோமையில் பல யூதர்கள் இருந்தனர், ஆனால் உரோமையர்களில் சிலர் யூத மதத்தை தழுவினார்கள் என்பது சாத்தியமில்லை. இந்த விவரிப்பில் இருந்து அக்காலத்தில் சமய சுதந்திரங்களும், சகிப்புத்தன்மைகளும், தூர புனித இடங்களுக்கான பயணங்களும் வழமையில் இருந்ததை காணலாம். இந்த காலத்தில் அரேபியாவில் இஸ்லாம் என்ற ஒரு மதம் உருவாகியிருக்கவில்லை. அங்கே மத சகிப்புத்தன்மை இருந்திருக்கிறது. இந்த நாட்களில் இஸ்லாமியர் எருசலேமிற்கு வருவதையோ, அல்லது யூதர்கள் இஸ்லாமியரின் தேசங்களுக்கு செல்வதையோ சாதாரணமாக எதிர்பார்க்க முடியாது. இருவரும் தங்களுக்கென்று 'உண்மைகளை' உருவாக்க்கி அதனை நியாயப்படுத்த கதைகளையும், வியாக்கியானங்களையும் உருவாக்குகிறார்கள். (உரோமை பேரரசின் நில வரபடைத்தை காண இங்கே சொடுக்குக: http://www.timemaps.com/civilization/Ancient-Rome)
மத்தேயு 2,1-2.7-12
1ஏரோது அரசன் காலத்தில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தார். அப்போது கிழக்கிலிருந்து ஞானிகள் எருசலேமுக்கு வந்து, 2'யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம்' என்றார்கள்.
7பின்பு ஏரோது யாருக்கும் தெரியாமல் ஞானிகளை அழைத்துக்கொண்டுபோய் விண்மீன் தோன்றிய காலத்தைப் பற்றி விசாரித்து உறுதி செய்து கொண்டான். 8மேலும் அவர்களிடம், 'நீங்கள் சென்று குழந்தையைக் குறித்துத் திட்டவட்டமாய்க் கேட்டு எனக்கு அறிவியுங்கள். அப்பொழுது நானும் சென்று அக்குழந்தையை வணங்குவேன்' என்று கூறி அவர்களைப் பெத்லகேமுக்கு அனுப்பி வைத்தான். 9அரசன் சொன்னதைக் கேட்டு அவர்கள் புறப்பட்டுப் போனார்கள். இதோ! முன்பு எழுந்த விண்மீன் தோன்றிக் குழந்தை இருந்த இடத்திற்குமேல் வந்து நிற்கும்வரை அவர்களுக்கு முன்னே சென்று கொண்டிருந்தது. 10அங்கே நின்ற விண்மீனைக் கண்டதும் அவர்கள் மட்டில்லாப் பெரு மகிழ்ச்சி அடைந்தார்கள். 11வீட்டிற்குள் அவர்கள் போய்க் குழந்தையை அதன் தாய் மரியா வைத்திருப்பதைக் கண்டார்கள்; நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து குழந்தையை வணங்கினார்கள்; தங்கள் பேழைகளைத் திறந்து பொன்னும் சாம்பிராணியும் வெள்ளைப்போளமும் காணிக்கையாகக் கொடுத்தார்கள். 12ஏரோதிடம் திரும்பிப் போக வேண்டாம் என்று கனவில் அவர்கள் எச்சரிக்கப்பட்டதால் வேறு வழியாகத் தங்கள் நாடு திரும்பினார்கள்.
கிறிஸ்து பிறப்புக் காலத்தின் மிக முக்கியமான நிகழ்வுகளில் ஞானிகளின் வருகைத் திருநாள் மிக முக்கியமானது. இலங்கையின் சுதந்திர நாளில் ஒரு விசேட நோக்கத்திற்காக இந்த வாசகம் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
யார் இந்த ஞானிகள், இவர்கள் எத்தனை பேர், இவர்களின் தொழில் என்ன, எங்கிருந்து வந்தவர்கள், ஏன் வந்தார்கள் என்ற கேள்விகள், எம்முடைய குழந்தைகளின் முக்கியமான கேள்விகள். ஞானிகளின் வருகை மத்தேயுவிற்கே மிகவும் தனித்துவமான பகுதியாகும். இதனை வேறு நற்செய்திகளில் காணமுடியாது. ஞானி என்பதை கிரேக்க விவிலிய மொழி (μάγος மாகோஸ்) என்று காட்டுகிறது. இது ஒரு யேர்மானிய-இந்தியச் சொல் என்கிறது ஒர் அகராதி. இவர்கள் கீழைத்தேய அதாவது பபிலோனிய, அராபிய, பாரசீக, இந்திய, மேதிய, வானசாஸ்திரிகளாகவோ, அல்லது ஆசிரியர்களாகவோ இருக்கலாம். இந்த வாசகப் பகுதி முக்கியமானது, இங்கேதான் இயேசு ஆண்டவர் அரசர் என பிறவினத்தவரால் அறிக்கையிடப்படுகிறார். இந்த ஞானிகள் தாங்கள் ஒரு வான் வெள்ளியைக் கண்டதாகக் கூறுகிறார்கள் ஆனால் இந்த வான் வெள்ளியைப் பற்றிய மேலதிக தரவுகளை விவிலியத்தில் காணக் கிடைக்கவில்லை. பிறவினத்தவர் இயற்கையின் அறிவைக்கொண்டே கிறிஸ்துவை அடையக்கூடியவர்கள் என்பதற்கு இந்த பகுதி நல்ல சான்று. முதல் ஏற்பாட்டில் ஏற்கனவே பாலாம், யாக்கோபின் நட்சத்திரம் என்ற இறைவாக்கை உரைத்திருக்கிறார் (காண்க எண் 24,17). மத்தேயு இயேசுவை எதிர்பார்க்கப்பட்ட மெசியாவாகவும், தாவிதின் உண்மையான இறை வாரிசாகவும், புதிய மோசேயாகவும் காட்ட முயல்கிறார் என்று பார்த்திருக்கின்றோம். இந்த ஞானிகளின் வருகை மூலம் மத்தேயு இன்னொரு கருத்தையும் முன்வைக்கிறார். அதாவது ஞானிகள் பிறவினத்தவர், தெரிந்து கொள்ளப்படாதவர்கள், விவிலியத்தை அறியாதவர்கள், வாக்களிப்பிற்கு அப்பாற்பட்டவர்கள் இருப்பினும், அவர்கள் ஞானிகள், விவேகிகள் மற்றும் அறிவாளிகள் இதனால்தான் அவர்கள் மெசியாவை தேடி வந்து கண்டடைகிறார்கள். ஆனால் எருசலேமில் இருக்கும் யூதர்கள், அவர்கள் தலைவர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் மறைவல்லுனர்கள் தங்களின் மெசியாவை காண தவறுகிறார்கள் அத்தோடு அந்த மெசியாவை தொலைக்கவும் முயல்கிறார்கள்.
வ.1: கிழக்கிலிருந்து ஞானிகள்: இந்த மெய்யறிவுவாதிகளைத்தான் நாம் மூவிராசாக்கள் என்று அழைக்கிறோம். இவர்களை அரசர்கள் என்றோ, மூன்று பேர்கள் என்றோ மத்தேயு பதிவு செய்யவில்லை. இவர்களைப்பற்றி பல சுவாரசியமான பாரம்பரியங்களைச் தலத்திருச்சபைகள் கொண்டிருக்கின்றன. இன்னும் விசேடமாக நம்முடைய சில ஈழத்து கதைகள், இதில் கஸ்பார் என்னும் ஒருவர் யாழ்ப்பாணத்திலிருந்து சென்றார் என்றும் சொல்லும் (கதைவிடும்). யேர்மனி பாரம்பரியம் ஒன்று, இவர்கள் யேர்மனி நாட்டில்தான் அடக்கம் செய்யப்பட்டனர் என்கிறது.
இவர்களை மூவர் என்கிறது கிறிஸ்தவ பாரம்பரியம்: கஸ்பார், மெல்கியோர், பல்தசார். உண்மையில், மத்தேயுவின் ஞானிகள் இன்னும் அறியப்படவேண்டியவர்கள். அல்லது மத்தேயு, இவர்களின் அடையாளங்களை விட அவர்கள் மூலமான தன் செய்திக்கே முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம்.
வ.2: இந்த ஞானிகள் கேள்வி கேட்கிறார்கள். சாதாரணமாக அரசன்தான் கேள்வி கேட்பான். இங்கே அவனே கேள்வி கேட்கப்படுகிறான். விவிலியத்தில் வரும் பெரிய ஏரோது அவ்வளவு சாதாரணமானவன் கிடையாது. அவன் இன்னும் உரோமைய வரலாற்றிலே தன்னுடைய வன்முறைக்கும், சந்தேகங்களுக்கும், கட்டடக் கலைக்கும் அறியப்படுகிறான். இவனிடமே வந்து
இஸ்ராயேலின் அரசர் எங்கே என்று கேட்பது, இந்த எரோதுவை கொச்சைப்படுத்தவும், அவனுக்கு நல்ல பாடம் புகட்டவும் செய்யும். அத்தோடு அவர்கள் தாங்கள் அந்த அரசரை வணங்க வந்ததாக கூறுகிறார்கள், ஆக தங்களது வணக்கம் இந்த புதிய அரசருக்குத்தான், ஏரோதுவிற்கு இல்லை என்கிறார்கள் போல.
இந்த ஞானிகள் விண்மீன் என கூறுவதை கிரேக்கத்தில் ἀστήρ அஸ்டேர் என காண்கின்றோம். ஆங்கில ஸ்டார், யேர்மனிய ஸ்டர்ன் போன்றவை இதிலிருந்தே வருகின்றன. இது மாட்சியையும் வான அடையாளத்தையும் குறிக்கிறது.
வ.3: இந்த வரி இங்கணம் இயேசுவை வரவேற்றது என்கிறார் மத்தேயு. எருசலேம் முழுவதும் அரசனோடு சேர்ந்து கலங்கிற்று என்கிறார் (πᾶσα Ἱεροσόλυμα μετ᾿ αὐτοῦ பாசா இயெரொசொலூமா மெத் அவுடூ). இந்த கலக்கத்திற்கு பல காரணங்கள் இருந்திருக்கலாம். ஏரோதிற்கு தன் ஆட்சியைப் பற்றிய கவலை, மக்களுக்கு புதிய ஆட்சியைப் பற்றிய கவலையாக இருக்கலாம். ஒருவேளை கொடிய ஏரோதுவை நினைத்தும் எருசலேம் கலங்கியிருக்கலாம். இருப்பினும் இயேசுவின் வருகை அரசியலுக்கும் சமயத்திற்கும் கலக்கம் கொடுத்தது என்பது மட்டும் புலப்படுகிறது.
வ.4: ஏரோதுவின் விசாரனை காட்சிப்படுத்துகிறது. ஏரோது அனைவரையும் வரவழைக்கிறான். மத்தேயு நற்செய்தியில் தலைமைக் குருக்களும் மறைநூல் அறிஞர்களும் இயேசுவிற்கு எதிரானவர்களாகவே காட்டப்படுகிறார்கள். இங்கே இவர்கள் தங்கள் மெசியாவிற்கு எதிராக முழு இஸ்ராயேலன் அல்லாதவனோடு கூட்டணி வைக்கிறார்கள். ஏரோது மெசியாவென்றே குழந்தையை அழைக்கிறான், ஆக அவனுக்கு மெசியா என்ற அரசரைப் பற்றிய புரிதல்
இருந்திருக்கிறது.
வவ.5-6: இஸ்ராயேல் தலைவர்களுக்கு இறைவார்த்தையில் நல்ல புலமைத்துவம் இருந்தது என்பததைக் காட்டி இருந்தும் அவர்கள் அதனை பாவிக்கவில்லை என்பது போல் காட்டுகிறார் மத்தேயு. இவர்களுக்கு இயேசு பெத்லேகேமில் பிறப்பார் என்று தெரிந்திருந்தது, இது முதலாம் வசனத்தோடு ஒத்திருக்கிறது (ஒப்பிடுக வ.1). அத்தோடு அவர்கள் அதற்கு சான்றாக இறைவாக்கு ஒன்றையும் முன்வைக்கிறார்கள். மத்தேயு இவர்கள் வாயில் வைக்கின்ற இறைவாக்கு மீக்காவினதும் சாமுவேலினதும் இறைவாக்குகளின் தெரிவாகும் (காண்க ✽மீக்கா 5,2.✽✽4 மற்றும் ✽✽✽2சாமு 5,2).
இந்த இறைவாக்கு பல முக்கியமான தரவுகளைத் தருகிறது.
அ. மெசியா பெத்லேகேமில் பிறப்பார்.
ஆ. பெத்லேகேம் ஒரு அறியப்படாத சிறிய நகரம் கிடையாது.
இ. இஸ்ராயேலின் உண்மையான ஆயர் மெசியா.
ஈ. இது ஊகமல்ல மாறாக இறைவாக்கு.
(✽நீயோ, எப்ராத்தா எனப்படும் பெத்லகேமே! யூதாவின் குடும்பங்களுள் மிகச் சிறியதாய் இருக்கின்றாய்! ஆயினும், இஸ்ரயேலை என் சார்பாக ஆளப் போகின்றவர் உன்னிடமிருந்தே தோன்றுவார்; அவர் தோன்றும் வழி மரபோ ஊழி ஊழிக் காலமாய் உள்ளதாகும்.
✽✽அவர் வரும்போது, ஆண்டவரின் வலிமையோடும் தம் கடவுளாகிய ஆண்டவரது பெயரின் மாட்சியோடும் விளங்கித் தம் மந்தையை மேய்ப்பார்; அவர்களும் அச்சமின்றி வாழ்வார்கள்; ஏனெனில், உலகின் இறுதி எல்லைகள்வரை அப்போது அவர் மேன்மை பொருந்தியவராய் விளங்குவார்;
✽✽✽சவுல் எங்கள் மீது ஆட்சி செய்த கடந்த காலத்திலும் கூட நீரே இஸ்ரயேலை நடத்திச் சென்றவர். 'நீயே என் மக்கள் இஸ்ரயேலின் ஆயனாக இருப்பாய்; நீயே இஸ்ரயேலுக்குத் தலைமை தாங்குவாய்' என்று உமக்கே ஆண்டவர் கூறினார்'.)
வ.7: ஏரோதுவிற்கு வான சாஸ்திரமும் தெரிந்திருக்கிறது. இவ்வளவு நேரமும் யூத தலைமையோடு
இருந்தவன் இப்போது தனித்து இயங்குகிறார். ஒருவேளை இவன் யூத தலைமையை நம்பாமல்
இருந்திருக்கலாம். தன் மக்களைவிட அந்நியரை அதிகமாக நம்புகிறான் (நல்ல அரசன் நல்ல மக்கள்). ஏரோது ஞானிகளை தனிமையாக அழைத்து விசாரிப்பதற்கு கிரேக்க விவிலியம் திருட்டு மற்றும் இரகசியம் சம்பந்தமான ஒரு சொல்லை பாவிக்கிறது (λάθρᾳ லாத்ரா). இதனைத்தான் யோசேப்பும் செய்தார் (காண்க ✽மத் 1,19) ஆனால் நல்லதற்கு, இங்கே ஏரோது தீங்கு செய்ய செய்கிறான். ஏரோது விண்மீனைப் பற்றி விசாரித்ததிலிருந்து, விண்மீனைப் பற்றிய அறிவுகள் அக்காலத்தில் வழக்கிலிருந்தன என அறியலாம்.
வ.8: ஏரோது ஞானிகளை பெத்லகேமிற்கு அனுப்பிவைக்கிறான். இன்னும் குழந்தையைப் பற்றி திட்டமாக அறிய விரும்பிய அவன், அதனை தான் வணங்க வேண்டும் என்கிறான். இந்த வணக்கத்திற்கு கிரேக்கம் προσκυνέω (புரொஸ்குநெயோ) என்ற சொல்லைப் பாவிக்கிறது. இது குப்புற விழுந்து, நிலம் மட்டும் தாழ்ந்து வணங்கும் ஒரு செயல் (நம் அரசியல் தலைவர்களுக்கு கைவந்த கலை, ஏரோதுவிற்கும் இவர்களும் நல்ல உறவு போல). இப்படியாக தானும் மெசியாவை அரசராக ஏற்றுக்கொண்டுள்ளதாக ஞானிகளுக்கு பொய் சொல்கிறான்.
(✽19அவர் கணவர் யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார்.)
வ.9: நற்செய்தி மீண்டும் விண்மீனைப் பற்றி சாற்றுகிறது. இந்த வரி பல கேள்விகளை முன்வைக்கிறது. அதாவது விண்மீன் (ἀστήρ) ஏற்கனவே எழுந்திருந்தாலும், இப்போதே இவர்களுக்கு வழிகாட்டுகிறது. இவர்கள் இந்த விண்மீனை பின்தொடர்ந்து எருசலேம் வரவில்லை, மாறாக இவர்கள் எருசலேம் வந்ததால் எழுந்த விண்மீனை சரியான வழிக்கு பாதைகாட்ட கண்டு கொள்கிறார்கள். இந்த விண்மீன் அவர்களுக்கு குழந்தை இருந்த இடம்வரை வழிகாட்டுகிறது.
வ.10: விண்மீன் நின்றதை கண்டதும் இவர்கள் பெருமகிழ்சி கொள்கிறார்கள். இதனை கிரேக்கம் அழகாக ἐχάρησαν χαρὰν (எகாரேசான் காரான்) என்று விவரிக்கின்றது. நற்செய்தியில் இந்த
இடத்தில் மட்டும்தான் பெருமகிழ்ச்சி இப்படியாக விவரிக்கப்பட்டுள்ளது. இந்த மகிழ்ச்சியை இவர்கள் தங்கள் இடத்திலோ அல்லது ஏரோதுவின் மாளிகையிலோ அடையவில்லை.
வ.11: ஞானிகள் குழந்தையையும் அதன் தாயையும் காண்கிறார்கள். இவர்கள் மரியாவையும் கண்டார்கள் என சொல்லி மத்தேயு மரியாவிற்கும் முக்கியத்துவம் கொடுப்பதுபோல தோன்றுகிறது. அல்லது இந்த குழந்தையின் தாய் மரியாதான் என உறுதியாக சொல்வது போல தோன்றுகிறது (τὸ παιδίον μετὰ Μαρίας τῆς μητρὸς αὐτοῦ டொ பாய்தியோன் மெடா மாரியாஸ் டேஸ் மேட்ரொஸ் அவுடூ). இரண்டு முக்கியமான அடையாளங்களை இந்த ஞானிகள் செய்கிறார்கள்.
அ. குழந்தைக்கும் மரியாவிற்கும் முன்னால் முகம் பட விழுகிறார்கள். இயேசுவிற்கு முன்னால் உலக ஞானம் பணிந்து விழுந்து கிடக்கிறது. ஏனெனில் அவர்கள் உண்மையான ஞானத்தை
இங்கேதான் காண்கிறார்கள். மத்தேயு இயேசுவை உண்மையான ஞானமாகக் காட்டுகிறார், அந்த ஞானத்தை வைத்திருப்பவராக மரியாவைக் காட்டுகிறார். இந்த விழுதல் அக்காலத்தில் அரசர்களுக்கும் தெய்வங்களுக்கும் மட்டுமே வழங்கப்பட்டது. ஆக இயேசு கடவுளாகவும், உன்னத அரசராகவும் காட்டப்படுகிறார் (✽ஒப்பிடுக தானி 3,5-6)
(✽5எக்காளம், நாதசுரம், யாழ், கின்னரம், வீணை, பைக்குழல் முதலிய எல்லா வகை இசைக் கருவிகளும் ஒலிக்கத் தொடங்கிய அந்த நொடியில், நீங்கள் தாழவீழ்ந்து நெபுகத்னேசர் அரசன் நிறுவிய பொற்சிலையைப் பணிந்து தொழவேண்டும். 6எவராகிலும் தாழ வீழ்ந்து பணிந்து தொழவில்லையெனில், அவர்கள் அந்நேரமே தீச்சூளையில் தூக்கிப்போடப்படுவார்கள்' என்று கூறி முரசறைந்தான்.)
ஆ. இயேசுவிற்கு பரிசில்களை அல்லது காணிக்கைகளை வழங்குகிறார்கள். இவர்கள் மூன்று பொருட்களை காணிக்கையாக்குகிறார்கள் இதிலிருந்துதான் இந்த ஞானியர் மூவர் என்ற பாரம்பரியம் தொடங்குகிறது. பொன், சாம்பிராணி, வெள்ளைப்போளம் χρυσὸν καὶ λίβανον καὶ σμύρναν: இவை அரசர்களுக்கு கொடுக்கப்படுகின்ற விலையுயர்ந்த பரிசுப்பொருட்கள் (காணிக்கைப்பொருட்கள்). சாலமோனுக்கு கிடைத்தவையும் இவைதான். மத்தேயு இயேசுவை தாவீதின் உண்மையான வாரிசாக காட்டுகிறார் போல. சிலர் ஆண்டவரின் மரணத்தின் பின்னர் நடந்த நிகழ்வுகளைக் காட்ட இப்பொருட்கள் பயன்படுகின்றன என்கின்றனர். இந்த மூன்று பொருட்களுக்கும் அறிஞர்கள் பல விதமான இறையியில் வாதங்களை முன்வைக்கின்றனர். சிலர் இதனை அரச பொருட்களாகவும், சிலர் இதனை தெய்வீக காணிக்கை பொருட்களாகவும் காண்கின்றனர்.
வ.12: எரோதுவிடம் திரும்பிப் போகவேண்டாம் என கனவில் ஞானிகள் எச்சரிக்கப்படுகிறார்கள். யார் இவர்களை கனவில் எச்சரித்தது? கடவுள் அல்லது கடவுளின் தூதராக இருக்கலாம். கனவு (ὄναρ ஓனார்) அக்காலத்தில் இறைவெளிப்பாடின் ஒரு முக்கியமான ஊடகமாக கருதப்பட்டது. யோசேப்புவும் இப்படியான கனவில்தான் வழிகாட்டப்படுகிறார். இவர்கள் ஞானிகள் என்ற படியால் இதனை நன்றாக விளங்கியிருப்பார்கள். இந்த ஞானியர் நாடு திரும்பினார்கள் என்று சொல்லி இந்த கதைக்கு நல்ல முடிவுரை எழுதுகிறார் மத்தேயு.
இது நம்நாடு, இதுதான் நம் முன்னோர்கள் வாழ்ந்த தமிழ்த் தாயகம்.
வளப்படுத்தவேண்டும் இந்நாட்டைத்தான்,
நமக்கு எதிரிகள் இல்லை, நாமும் யாருக்கும் எதிரியில்லை.
வெளிநாடுகளுக்கு சென்று அமைதியாக வாழலாம்,
வழமையில் வாழலாம்,
நிம்மதியாக வாழலாம்,
இருப்பினும் அகதிகளாகவே!
இப்பொழுது தியாகம் செய்து, துன்பத்தை தாங்கி
உரிமையைப் பெற்றால்,
ஒரு நாள் நம்பிள்ளைகள் உரிமை மக்களாக வாழ்வர்.
இல்லையேல், இங்கும் அகதி, எங்கும் அகதி- ஈழத்தமிழர்.
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே - பாரதி.
சுதந்திரம் தாரும் ஆண்டவரே,
அதனை மற்றவருக்கு கொடுக்க என்னை மாற்றும் ஆண்டவரே- ஆமென்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக