வெள்ளி, 19 ஜனவரி, 2018

Third Sunday in Ordinary Times (B):ஆண்டின் பொதுக்காலம் மூன்றாம் வாரம் (ஆ)



ஆண்டின் பொதுக்காலம் மூன்றாம் வாரம் ()
21,01,2018
மி. ஜெகன் குமார் அமதி
வசந்தகம், யாழப்பாணம்,
Tuesday, January 16, 2018
முதலாம் வாசகம்: யோனா 3,1-5.10 
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 25
இரண்டாம் வாசகம்: 1கொரிந்தியர் 7,29-31
நற்செய்தி: மாற்கு 1,14-20


யோனா 3,1-5.10 
நினிவேயில் யோனா
1இரண்டாம் முறையாக யோனாவுக்கு ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது. 2அவர்இ 'நீ புறப்பட்டு நினிவே மாநகருக்குப் போய்இ நான் உன்னிடம் சொல்லும் செய்தியை அங்குள்ளோருக்கு அறிவி' என்றார். 3அவ்வாறே யோனா புறப்பட்டு ஆண்டவரது கட்டளைப்படி நினிவேக்குச் சென்றார். நினிவே ஒரு மாபெரும் நகர். அதைக் கடக்க மூன்றுநாள் ஆகும். 4யோனா நகருக்குள் சென்றுஇ ஒரு நாள் முழுதும் நடந்தபின்இ உரத்த குரலில்இ 'இன்னும் நாற்பது நாளில் நினிவே அழிக்கப்படும்' என்று அறிவித்தார்.
5நினிவே நகர மக்கள் கடவுளின் செய்தியை நம்பிஇ எல்லாரும் நோன்பிருக்க முடிவு செய்தார்கள். பெரியோர் சிறியோர் அனைவரும் சாக்கு உடை உடுத்திக் கொண்டனர்.
6இந்தச் செய்தி நினிவே அரசனுக்கு எட்டியது. அவன் தன் அரியணையை விட்டிறங்கி, அரச உடையைக் களைந்துவிட்டு, சாக்கு உடை உடுத்திக்கொண்டு, சாம்பல் மீது உட்கார்ந்தான். 7மேலும் அவன் ஓர் ஆணை பிறப்பித்து அதை நினிவே முழுதும் பறைசாற்றச் செய்தான். 'இதனால் அரசரும் அரச அவையினரும் மக்கள் அனைவருக்கும் அறிவிப்பதாவது: எந்த மனிதரும் உணவைச் சுவைத்துக்கூடப் பார்க்கக் கூடாது. ஆடு, மாடு முதலிய விலங்குகளும் தீனி தின்னவோ தண்ணீர் குடிக்கவோ கூடாது. 8மனிதரும் விலங்குகளும் சாக்கு உடை உடுத்திக் கொண்டிருக்க வேண்டும். ஒவ்வொருவரும் கடவுளை நோக்கி மன்றாட வேண்டும்; தம் தீய வழிகளையும், தாம் செய்துவரும் கொடுஞ்செயல்களையும் விட்டொழிக்க வேண்டும். 9இவ்வாறு செய்தால், கடவுள் ஒருவேளை தம் மனத்தை மாற்றிக் கொள்வார்; அவரது கடுஞ்சினமும் தணியும்; நமக்கு அழிவு வராது.'10கடவுள் அவர்கள் செய்தது அனைத்தையும் பார்த்தார். அவர்கள் தீய வழிகளினின்று விலகியதை அவர் கண்டு, தம் மனத்தை மாற்றிக் கொண்டார்; தாம் அவர்கள் மீது அனுப்புவதாகச் சொல்லியிருந்த தண்டனையை அனுப்பவில்லை.

விவிலியத்தில் தனித்துவமான சிந்தனைகளை தாங்கி வரும் புத்தகங்களில் யோனா புத்தகம் மிக முக்கியமானது. இந்த புத்தகம் இஸ்ராயேலர்களுடைய பாரம்பரிய சிந்தனையை கேள்வி கேட்கிறது. எதிரிகளை கடவுள் மன்னிப்பாரா, மன்னித்தாலும் அவர்கள் திருந்தி வாழ நினைப்பாரா
இந்த கேள்விகளுக்கு நேர் முகமாக விடையளிக்கிறது யோனா புத்தகம். கடவுள் யோனாவை நினிவேயிற்கு இறைவாக்குரைக்க அனுப்பியபோது அதனை அவர் மறுக்கிறார். இதற்கு பல காரணங்கள் உள்ளன. மிக முக்கியமான காரணம், நினிவே அசிரியாவின் தலைநகராக விளங்கியமை, இந்த அசிரியாதான் இஸ்ராயேலின் மிக முக்கியமான எதிரி நாடு. வடநாடான 
இஸ்ராயேலை அழித்து அந்த மக்களை அசிரியர் நினிவேக்கு கொண்டு சென்றனர். பின்னர் இந்த வடநாட்டார்களான, பத்து கோத்திரத்தை சேர்ந்தவர்களுக்கு என்ன நடந்தது என்றும் அதிகமாக தெரியாமல் போனது. அசிரியா முழு இஸ்ராயேல் நாட்டிற்குமே வாழ்நாள் எதிரியாக 
இருந்திருக்கிறது (இன்றும் கூட). 
தன் சொந்த மக்களை அழித்த, தங்கள் நாட்டை சுடு காடாக்கிய ஒரு நாட்டிற்கு கடவுளின் மன்னிப்பை எடுத்துரைப்பது அவ்வளவு இலகுவாக யோனாவிற்கு இருந்திருக்காது. யோனா தன்னை 
இறைவாக்கினர் என்று மறந்து, ஒரு சாதராண இஸ்ராயேலனாக பார்ப்பதுதான் அவருடைய வெறுப்பிற்கு காரணமாக இருந்தது எனலாம். யோனா ஒரு தேசியவாதியாக தன் எதிரிகள் அழிவதை விரும்பியிருக்கலாம்
ஆனால் ஆண்டவரின் திட்டம் வேறாக இருக்கிறது. அவர் தன் சொந்த மக்களுக்கும், அவர்களுடைய எல்லைகளுக்கும் மட்டும் உட்பட்டவர் அல்ல என்பதை இந்த புத்தகம் காட்டுகிறது. யார் யாரெல்லாம் கடவுளுடைய அன்பையும் இரக்கத்தையும் பெறவேண்டும் என்பதை கடவுள்தான் தீர்மானிக்கிறார் என்பதும், எதிரிகளுக்கும் கடவுளின் அன்பு நிச்சயமாக கிடைக்கும் என்பதையும் இந்த புத்தகம் காட்டுகிறது
உலக மக்கள் அனைவரும் கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள் என்ற சிந்தனையை 
இந்த புத்தகம் காட்டுவதாக தெரியவில்லை மாறாக, உலக மக்கள் அனைவரும் ஏதோவிதத்தில் கடவுளின் அன்பை பெறுவார்கள் என்பதைக் காட்டுகிறது. அத்தோடு கடவுளின் அன்பும் அருளும் அனைவருக்கும் பொதுவானது, அது நம்பிக்கை அற்றவர்களுக்கும் கிடைக்கும் என்பதையும் காட்டுகிறது. இயேசு ஆண்டவர் போதித்த புதிய உடண்படிக்கை மற்றும், இறையரசின் முழுமை போன்றவற்றை இந்த புத்தகம் ஏற்கனவே தொட்டுச்செல்கிறது என்றும் சில இறையியலாளர்கள் வாதிடுகின்றனர்
யோனா நினிவே மக்களை யூத மத்திற்கு மாற்றினார் என்ற சிந்தனையும் ஏற்றுக்கொள்ள முடியாது, அல்லது நினிவேயர் தங்கள் மதத்தைவிட்டு இஸ்ராயேல் கடவுளை நம்பினர் என்பதும் தெளிவாக இல்லை, மாறாக அவர்கள் தங்கள் பாவத்தைவிட்டு கடவுளிடம் வந்தனர் என்ற செய்தியே சொல்லப்படுகிறது
யோனாவின் கதை வரலாற்று நிகழ்வா என்பதில் பலமான கேள்விகள் இருக்கிறது. யோனா புத்தகத்தை தவிர விவிலியத்தில் இன்னொர் இடத்திலும் இவர் பெயர் காட்டப்பட்டுள்ளது (காண்க 2அரசர்கள் 14,25). யோனா இயேசுவைப் போல் கலிலேயா பகுதியிலிருந்து வந்த ஓர் 
இறைவாக்கினர். இயேசுவும் இரண்டு தடவை யோனாவை உதாரணத்திற்கு எடுத்திருக்கிறார் (காண்க மத் 12,38-41: லூக் 11,29-32). யோனா என்றால் புறா என்று எபிரேயத்தில் பொருள், இருப்பினும் 
இதற்கு அடையாள அர்த்தம் இருப்பதாக தெரியவில்லை. இஸ்ராயேல் மக்கள் பலர் இந்த பெயரை வைத்திருந்திருக்கிறார்கள். யோனாவின் குடு;ம்பத்தைப் பற்றிய தரவுகளும் அதிகமாக கிடைக்கப்பெறவில்லை. மற்றைய இறைவாக்கினர்களைப் போலவே இவரும் ஒரு கவிஞராக பார்க்கப்படுகிறார். அக்கால மக்களைப்போல, தெய்வங்கள் தங்கள் இடங்களில் மட்டும்தான் செயல்படுகிறார்கள் என்பதை யோனா நம்பியிருந்திருக்கலாம், இதனால்தான் அவர் இஸ்ராயேலின் கடவுளின் பிரசன்னத்தைவிட்டு தொலைவிற்கு ஓடுகிறார் போல. யோனாவின் செயல்களை கண்டும், கடவுள் அவரைத்தான் மீளவும் நினிவேயிற்கு அனுப்புகிறார்
யோனா புத்தகம், யோனாவைப் பற்றியே கடுமையாக இருந்தாலும், இது, அவர்தான் இதனை எழுதினார் என்பதற்கு தடையாக இல்லை. இந்த புத்தகம் எப்போது எழுதப்பட்டது என்பதில் தரவுகள் பலமாக இல்லை. இதனுடைய எபிரேயம், இதன் காலத்தை காட்டவில்லை என்று மொழியியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். சிலர் இதனை வட அரசின் இறுதிக்கால புத்தகமாக காண்கின்றனர், அதாவது கி.மு 7ம் நூற்றாண்டின் இறுதி நாட்கள்

.1: இந்த வசனம், யோனா இரண்டாவது முறையாக கடவுளால் அழைக்கப்பட்டார் என்பதைக் காட்டுகிறது. இந்த வரி மூலமாக, யோனா பேசுவது உண்மையில் கடவுளின் வார்த்தைதான் என்பது காட்டப்படுகிறது (דְבַר־יְהוָה தெவர்-அதோனாய்- கடவுளின் வாக்கு). 

.2: கடவுளின் யோனாவை நினிவே மாநாகருக்கு போய் அவர்தம் செய்தியை அறிவிக்கக் கேட்கிறார். எபிரேய விவிலியம் நினிவேயை, நினிவே மாநகரம் என்கிறது (נִינְוֵה הָעִיר הַגְּדוֹלָה நினிவெஹ் ஹா'யிர் ஹக்கெதோலாஹ்). ஆண்டவர் யோனாவை தான் அறிவிக்கும் செய்தியை மட்டும்தான் சொல்லச் சொல்கிறார்
நினிவேயை இன்றைய ஈராக்கின் மோசூல் நகருக்கு அருகில் அடையாளப்படுத்துகின்றார்கள் ஆய்வாளர்கள். இது அசிரியாவின் மிக முக்கியமான நகர்களில் முதன்மையானதாக 
இருந்திருக்கிறது. ஆறுகள் அருகிலிருந்ததாலும், விவசாயம் பெருகியதாலும், சாலைகள் இதன் ஊடாக சென்றதாலும் இது செல்வம் கொழிக்கும் நகராக விளங்கியது. அமெரிக்க, பிரித்தானிய, மற்றும் ஈராக்கிய ஆய்வாளர்கள் இங்கே பல ஆய்வுகளைச் செய்திருக்கின்றனர். இஸ்லாமியர் யூனிஸ் என அழைக்கும், யோனா இறைவாக்கினருக்கு இங்கே ஒரு புராதண பள்ளிவாசல் 
இருந்திருக்கிறது. இது அராபியர் காலத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் (கி.பி 7ம் நூற்றாண்டிற்குப் பின்). விவிலியத்தின் படி நோவாவின் பேரன் நிம்ரோட் நினிவேயை உருவாக்கினார் (காண்க தொ.நூல் 10,11)
கி.மு இரண்டாம் மில்லேனியத்திற்கு முன் நினிவே இருந்திருக்கிறது, இருப்பினும் அதன் வரலாறு புராணங்களாகவே சொல்லப்படுகிறது. இரண்டாம் மில்லேனியத்தின் நடுப்பகுதியில் நினிவே மித்தானிய அரசால் ஆளப்பட்டிருக்கிறது. கி.பி முதலாம் நூற்றாண்டில் அசூர் (அசீரிய) அரசர்களின் வரவால் நினிவே மிக பிரசித்தி பெற்றது. சென்னாச்செரிப் நினிவேயை அசிரியர்களின் தலைநகர் ஆக்கினார் (கி.மு 704-681). சென்னாச்செரிப் இங்கே மிக மிக பிரமான்டமான அரண்மனையை கட்டினார், இது ஏறக்குறைய மூன்று கிலோமீட்டர் நீளமானது எனச் சொல்லப்படுகிறது. இதனைச் சுற்றி 80 கிலோமீட்டருக்கு அரண்மனை வளாகங்களையும் உருவாக்கினார் எனவும் சொல்லப்படுகிறது. மலையிலிருந்து இந்நகருக்கு தண்ணீர் கொண்டுவர, வாய்கால்களையும் வெட்டினார். உலக அதிசியமான 'தொங்கு தோட்டம்' இங்குதான் இருந்தது என்றும் சொல்லப்படுகிறது. செனாச்செரிப்பின் பேரன் அசூர்பனிப்பாலும் இந்த நகரை விரிவு படுத்தியிருக்கின்றார். இவர் ஒரு பிரமாண்டமான கல்வெட்டு நூலகத்தை உருவாக்கினார் என்றும் நம்பப்படுகிறது
பபிலோனியரும், மேதியரும் நினிவேயின் முக்கியத்துவத்தை இல்லாமல் ஆக்கினர். பிற்காலத்தில் கிரேக்கரும், பார்த்தியரும் மீளவும் நினிவேயை உருவாக்கினர். இன்றும் நினிவே மோசூல் என்ற பெயரில் மிக முக்கியமான ஈராக்கிய நகராக விளங்குகின்றது. விவிலிய ஆசிரியர்கள் முக்கியமாக யோனாவும், செப்பானியாவும், நினிவேயைப் பற்றிய சரியான தரவுகளை தெரிந்திருந்தார்களா என்பதிலும் பல சந்தேகங்கள் உள்ளன

.3: இந்த முறை யோனா உடணடியாக நினிவேயிற்கு செல்கிறார் அத்தோடு கடவுள் சொன்ன வார்த்தைகளையும் அறிவிக்கிறார். மீண்டும் ஒருமுறை ஆசிரியர் நினிவேயை பிரமாண்டமான நகர் என்று சொல்கிறார். இதற்கு அவர் பாவிக்கும் சொற்கள்: עִיר־גְּדוֹלָה לֵאלֹהִים 'இர்-கெதோலாஹ் லெ'லோஹிம். இதற்கு வேறு அர்த்தங்களையும் ஆய்வாளர்கள் முன்மொழிகின்றனர். இந்த சொற்களின் மூலமாக பல தெய்வங்களின் தேவாலயங்களை கொண்டமைந்த பெரிய நகர் என்றும் இதனை காண்கின்றனர்
இந்த நகரை நடந்து கடக்க மூன்று நாட்டகள் (מַהֲלַךְ שְׁלֹשֶׁת יָמִים׃ மஹ்லாக் ஷெலோஷித் யாமிம்) தேவைப்படும் என்பதிலிருந்து இதன் பிரமாண்டம் புரியும்

.4: யோனா நகருக்குள் சென்று ஒரு நாள் முழுவதும் நடந்திருக்கிறார், ஆக அவர் நகரின் நடுவிற்கு வந்திருக்கிறார். அத்தோடு நகரின் நடுவில் நின்றுகொண்டு, நாற்பது நாட்களில் நினிவே அழிக்கப்படும் என்கிறார்
ஒரு இஸ்ராயேல் இறைவாக்கினரால் எப்படி இது முடிந்தது. நினிவே மிக பிரமாண்டமான நகர், அதன் அரசனும் நிச்சயமாக பலசாலியாகவே இருந்திருப்பான். யோனாவின் குரல் பயமின்றி இருக்கிறது என்றால், அவர்களுக்கு யோனா யார் என்று தெரிந்திருக்க வேண்டும், அத்தோடு அவர்கள் யோனாவின் உண்மைக் கடவுளைப் பற்றியும் தெரிந்திருக்க வேண்டும். இது ஆசிரியரின் ஊகமாக இருக்கிறது. (அல்லது ஆசிரியர் இங்கே வேறுவிதமான சிந்திக்கிறார் என்று எடுக்கலாம்).
நாற்பது நாட்கள் (אַרְבָּעִים יוֹם 'அர்பா'யிம் யோம்), இஸ்ராயேல் மக்களின் நாற்பது ஆண்டுகால பயனத்தையும், மோசேயின் நாற்பது நாள் மலைவாசத்தையும், எலியாவின் நாற்பது நாள் பயனத்தையும், இயேசுவின் நாற்பது நாள் பாலைவன தியானத்தையும் நினைவூட்டலாம்.

.5: நினிவே நகரவாசிகளின் செவிகொடுத்தலும், கீழ்படிவும் அழகாகக் காட்டப்டுகின்றன. இந்த விவிரிப்பு மூலமாக யோனா ஆசிரியர், இஸ்ராயேல் மக்களை மறைமுகமாக சாடுகிறார் என்று எடுக்கலாம். நினிவேயில் கடவுளின் செய்தியை அனைவரும் நம்பி நோன்பிருந்தனர் எனவும், அவர்கள் சிறியோர் முதல் பெரியோர் என்று காட்டுகிறார்
இவர்களுடைய நோன்பினை, சாக்குடை தரித்து நோன்பிருத்தல் என்று ஆசிரியர் காட்டுகிறார், (יִּלְבְּשׁוּ שַׂקִּים யில்பேஷு சாக்கிம்). சாக்குடை ஒருவருடைய வெறுமையையும் தாழ்ச்சியையும் காட்டுகிறது. விலையுயர்ந்த ஆடைகளையும் ஆபரணங்களையும் விரும்பும் மக்கள் சாக்குடை தரிப்பது, அவர்களுடைய மனமாற்றத்தின் அடையாளமாக விவிலியத்தில் பாhக்கப்படுகிறது

வவ.6-9: இந்த வரிகள் அரசனுடைய மனமாற்றத்தைக் காட்டுகிறது. இந்த விவரணம் இஸ்ராயேல் அரசர்களை சாடுவதாக உள்ளது. இஸ்ராயேல் அரசர்கள் மனமாறாத போது, அன்னிய அரசர் தன் நாடு முழுவதையும் மனமாற்றச் செய்வது பாராட்டப்படுகிறது. அவர் செய்தவை:

. அரியணையை விட்டு இறங்குகிறார் - அதிகாரதில் இருந்து மனமாற்றம்
. அரச உடையை கழைகிறார் - ஆடம்பரத்தில் இருந்து மனமாற்றம்
. சாக்குடை தரிக்கிறார் - எளிமையாகிறார்
. சாம்பலில் உட்காருகிறார் - ஒருத்தல் செய்கிறார்
. அரச ஆணை பிறப்பிக்கிறார் - தன்னுடைய மனமாற்றத்தை அவர் சட்டமாக்குகிறார்
. மனிதர் தொடங்கி விலங்குகள் வரை உணவை ஒருக்கின்றனர் - தவம் செய்கின்றனர்.
. மனிதர்களும் விலங்குகளும் கூட சாக்குடை உடுத்துகின்றனர் - தீமையை ஒழிக்கின்றனர்
. கடவுள் ஒருவேளை தன் மனதை மாற்றலாம் என அரசர் நம்புகிறார் - அரசர் உண்மையில் நம்புகிறார்
இந்த செயல்களை அனைத்தும் இஸ்ராயேல் அரசர்களும், பெரியவர்களும் எப்படி கடவுளின் வார்த்தைக்கு செவிகொடுக்க வேண்டும் என்பதைக் காட்டுகிறது, அல்லது இவற்றை அவர்கள் செய்யவில்லை என்பதைக் காட்டுகிறது எனலாம்.  

.10: கடவுளின் அன்பை ஆசிரியர் இந்த வரியில் காட்டுகிறார். மக்களின் மனமாற்றம் கடவுளின் கோபத்தை தனிய வைக்கிறது. இதன் மூலமான, கடவுள் தன் மக்களை தண்டிப்பதில் ஆர்வம் காட்டுகிறவர் அல்ல மாறாக அவர்களின் மனமாற்றத்தை விரும்புகிறார் என்பது காட்டப்படுகிறது. கடவுள் தான் அனுப்புவதாக சொன்ன தண்டனையை அனுப்பவில்லை என்கிறார் ஆசிரியர்.  
திருப்பாடல் 25
வழிகாட்டிப் பாதுகாக்குமாறு வேண்டல்
(தாவீதின் புகழ்ப்பா)
1ஆண்டவரே, உம்மை நோக்கி,என் உள்ளத்தை உயர்த்துகிறேன்.
2என் கடவுளே,உம்மில் நம்பிக்கை கொள்கின்றேன் நான் வெட்கமுற விடாதேயும்;
என் பகைவர் என்னைக் கண்டுநகைக்க விடாதேயும்.
3உண்மையிலேயே, உம்மை நம்பும் எவரும் வெட்கமுறுவதில்லை; காரணமின்றித் துரோகம் செய்பவரோ வெட்கத்திற்கு உள்ளாவர்.
4ஆண்டவரே, உம் பாதைகளை நான் அறியச்செய்தருளும்; உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும்.
5உமது உண்மை நெறியில் என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும்; ஏனெனில், நீரே என் மீட்பராம் கடவுள்; உம்மையே நான் நாள் முழுதும் நம்பியிருக்கின்றேன்;
6ஆண்டவரே, உமது இரக்கத்தையும், உமது பேரன்பையும் நினைந்தருளும்; ஏனெனில், அவை
தொடக்கமுதல் உள்ளவையே.
7என் இளமைப் பருவத்தின் பாவங்களையும், என் குற்றங்களையும் நினையாதேயும், உமது பேரன்பிற்கேற்ப என்னை நினைத்தருளும்; ஏனெனில், ஆண்டவரே நீரே நல்லவர்.
8ஆண்டவர் நல்லவர்; நேர்மையுள்ளவர்; ஆகையால், அவர் பாவிகளுக்கு நல்வழியைக் கற்பிக்கின்றார்.
9எளியோரை நேரிய வழியில் அவர் நடத்துகின்றார்; எளியோருக்குத் தமது வழியைக் கற்பிக்கின்றார்.
10ஆண்டவரது உடன்படிக்கையையும் ஒழுங்குமுறையையும் கடைப்பிடிப்போர்க்கு, அவருடைய பாதைகளெல்லாம் பேரன்பும் உண்மையும் உள்ளனவாய் விளங்கும்.
11ஆண்டவரே, உமது பெயரின் பொருட்டு என் குற்றத்தை மன்னித்தருளும்; ஏனெனில், என் குற்றம் மிகப் பெரியது.
12ஆண்டவருக்கு அஞ்சி நடப்பவர் எவரோ அவருக்குத் தாம் தேர்ந்துகொள்ளும் வழியை அவர் கற்பிப்பார்.
13அவர் நலமுடன் வாழ்வார்; அவருடைய மரபினர் நாட்டைச் சொந்தமாக்கிக்கொள்வர்.
14ஆண்டவரின் அன்புறவு அவருக்கு அஞ்சி நடப்போருக்கே உரித்தாகும்; அவர் அவர்களுக்கு தமது
உடன்படிக்கையை வெளிப்படுத்துவார்;
15என் கண்கள் எப்போதும் ஆண்டவரை நோக்கியிருக்கின்றன் அவரே என் கால்களை
வலையிலிருந்து விடுவிப்பார்.
16என்னை நோக்கித் திரும்பி என் மீது இரங்கும்; ஏனெனில், நான் துணையற்றவன்; துயருறுபவன்.
17என் வேதனைகள் பெருகிவிட்டன் என் துன்பத்தினின்று என்னை விடுவித்தருளும்.
18என் சிறுமையையும் வருத்தத்தையும் பாரும்; என் பாவங்கள் அனைத்தையும் மன்னித்தருளும்.
19என் எதிரிகள் பெருகிவிட்டதைப் பாரும். அவர்கள் எத்துணைக் கொடுமையாய் என்னை வெறுக்கின்றனர்!
20என் உயிரைக் காப்பாற்றும்; என்னை விடுவித்தருளும்; உம்மிடம் அடைக்கலம் புகுந்துள்ள
என்னை வெட்கமுற விடாதேயும்.
21வாய்மையும் நேர்மையும் எனக்கு அரணாய் இருக்கட்டும்; ஏனெனில், நான் உம்மையே
நம்பியிருக்கின்றேன்.
22கடவுளே, இஸ்ரயேலரை அவர்கள் படும் துன்பங்கள் அனைத்தினின்றும் மீட்டருளும்.

திருப்பாடல்கள் புத்தகத்தை ஐந்து பிரிவுகளாக பிரிக்கும் பிரிவினுள், இந்த 25வது பாடல், முதலாவது பிரிவினுள் உள்ளடக்கப்பட்டுள்ளது. ஆய்வாளர்கள் இந்த திருப்பாடலை ஒரு தனி மனித புலம்பல் பாடல் என வகைப்படுத்தியுள்ளனர். அத்தோடு இதனை முழுமையில்லாத அகரவரிசைப் பாடல் எனவும் வாதிடுகின்றனர். எபிரேய அகரவரிசையில் சில எழுத்துக்கள் இந்த பாடலிலே தவறவிடப்பட்டிருக்கின்றன. இந்தப் பாடலின் முன்னுரை இதனை தாவீதிற்குரிய பாடல் எனக் காட்டுகிறது (לְדָוִד லெதாவித்- தாவீதிற்குரியது). 

.1: அலெப்- எபிரேய அரிச்சுவடியின் முதல் எழுத்து): முதலாவது எழுத்தில் தொடங்கும் இந்த வரியில், ஆசிரியர் தான் ஆண்டவரை நோக்கி தன் ஆன்மாவை அல்லது உள்ளத்தை உயர்த்துவதாகச் சொல்கிறார் (נַפְשִׁי אֶשָּׂא நப்ஷி 'எஸ்ஸா'). இது ஒரு தனிநபர் புலம்பல் பாடலாக இருக்கின்ற படியால், இங்கே ஆண்டவரை நோக்கி உள்ளத்தை உயர்த்துவது, அவரது துன்பமான நிலையைக் காட்டுகிறது என எடுக்கலாம்

.2: இந்த வரியும் முதலாவது எழுத்துடனேயே தொடங்குகின்றது. தான் ஆண்டவரில் நம்பிக்கை வைத்திருப்பதால், தன்னை அவமானம் அடையவிடவேண்டாம் என்கிறார் (אַל־אֵבוֹשָׁה 'அல்-'எவோஷாஹ்- நான் அவமானம் அடையாதிருப்பேனாக). அதுவும் தான் தன்னுடைய எதிரிகளிடம் அவமானம் அடையவிடவேண்டாம் என்கிறார். என் எதிரிகள் என்னில் மகிழ்சி அடையாதிருப்பார்களாக என்று எபிரேய விவிலியம் காட்டுகிறது (אַל־יַעַלְצוּ אֹיְבַי לִי׃ 'அல்-'ல்ட்சூ 'யெவாய் லி)
தான் அவமானம் அடைந்தால் அதுவும் கடவுளுடைய அனுமதியோடே நடைபெறுகிறது. அதாவது அனைத்தும் ஆண்டவரின் கைகளிலேயே உள்ளது, எனவே அவர் நினைத்தால் அதனை தடுக்கலாம் என்பதால் ஆண்டவரிடம் மன்றாடுகிறார் ஆசிரியர்

.3: கிமெல்- எபிரேயத்தின் மூன்றாவது எழுத்து). இந்த வரி மூன்றாவது எழுத்தில் ஆரம்பிக்கிறது. ஆண்டவரை நம்புவோர் வெட்கம் அடைவதில்லை என்பது இஸ்ராயேலரின் நம்பிக்கை அதனை தானும் கொண்டிருக்கிறார்.
அதேவேளை துரோகம் இழைக்கிறவர்கள் நிச்சயமாக அவமானம் அடைவார்கள் அதில் மாற்றம் இல்லை என்பதையும் அவர் அறிந்திருக்கிறார். இவர்களை குறிக்க הַבּוֹגְדִים רֵיקָֽם ஹபோக்திம் ரெகாம் என்ற சொல் பாவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தமாக தேவையில்லாமல் துரோகம் 
இழைப்பவர்கள் அல்லது பிரையோசனமில்லாமல் துரோகம் இழைப்பவர்கள் என்ற அர்த்தங்கள் வருகின்றன

.4: தலெத்- நான்காவது எழுத்து). எபிரேயத்தின் நான்காவது எழுத்தில் இந்த வரி தொடங்குகின்றது. திருப்பிக் கூறுதல் முறையில், உமது பாதைகளை (דְּרָכֶיךָ தெராகெகா) மற்றும் உமது வழிகளை (אֹרְחוֹתֶיךָ 'ஓர்ஹோதெகா) என்ற ஒத்த கருத்துச் சொற்கள் பாவிக்கப்பட்டுள்ளன.
ஆண்டவரின் பாதைகளையும் அவர் வழிகளையும் விட்டு தங்களை அகலவிட வேண்டாம் என்ற வேண்டுதலை முன்வைக்கிறார்

.5: ஹெ- ஐந்தாவது எழுத்து). ஆசிரியர் கடவுளை தன்னுடைய மீட்பராம் கடவுளாக ஏற்றுக்கொள்வதால் (אֱלֹהֵי יִשְׁעִי 'எலோஹே யிஷ்'), உண்மை நெறியில் தன்னை நடத்தி கற்பிக்க கேட்கிறார். ஆண்டவரை மீட்பின் கடவுளாக காண்பது இஸ்ராயேலர்களின் நம்பிக்கைகளில் மிக முக்கியமானது. இந்த கடவுளையே இவர் நாள் முழுவதும் நம்பியிருப்பதாகவும் சொல்கிறார். இதிலிருந்து சிலர், சில வேளைகளில் கடவுளையும் வேறு வேளைகளில் பொய்த் தெய்வங்களையும் நம்பியிருக்கிறார் என்ற குற்றச்சாட்டையும் முன்வைப்பது போல தெரிகிறது

.6: ட்ஸயின்- எழாவது எழுத்து). ஆறாவது எழுத்து தவறவிடப்பட்டுள்ளது. இந்த வரி ஏழாவது வரியில் தொடங்குகின்றது. ஆறாவது வரி தவறியதற்கான காரணம் அறியப்படவில்லை. ஆண்டவருக்கு, அவர் தன்னுடைய இரக்கத்தையும் (רַחֲמֶיךָ ரஹாமெகா), பேரன்பையும் (וַחֲסָדֶ֑יךָ வஹாசாதேகா) நினைக்கவேண்டும் என சொல்லப்படுகிறது
மனிதர்கள் கடவுளுக்கு எப்படி நினைவூட்டலாம் என்ற கேள்வியை இந்த வரி தரலாம். ஆனால் திருப்பாடல் ஆசிரியர் தன்னுடைய ஆழமான உறவின் பொருட்டும், தான் கடவுளிடம் கொண்டுள்ள நெருக்கத்தின் பொருட்டும் இப்படிச் சொல்கிறார் என எடுக்கலாம். இதுவும் ஒரு வகையான மன்றாட்டே. அதேவேளை இந்த இரக்கமும் பேரன்பும் தொடக்கமுதல் உள்ளவை என்பதையும் ஆசிரியர் தெளிவு படுத்துகிறார்

.7:ஹேத்- எட்டாவது எழுத்து). இளமைப் பருவத்தின் பாவங்களும் குற்றங்களும் இங்கே எழுவாய் பொருளாக எடுக்கப்படுகின்றன. இளமைப் பருவத்தில் பாவங்களும் குற்றங்களும் நடைபெறுவதற்கான வாய்ப்புக்கள் அதிமாக உள்ளன என்பதை இவர் காட்டுகிறார் போல. ஆண்டவர் நல்லவராக 
இருக்கிறபடியால், அவரது பேரன்பிற்கேற்ப தன்னை மன்னிக்கும் படி கேட்கிறார்

.8: தெத்- ஒன்பதாவது எழுத்து). ஆண்டவர் நல்லவர், மற்றும் நேர்மையுள்ளவர் என்று விழிக்கப்படுகிறார் (טוֹב־וְיָשָׁר יְהוָה தோவ்-வெயாஷார் அதோனாய்). இதன் காரணமாகத்தான் அவர் பாவிகளுக்கு நல்வழியைக் காட்டுகிறார் என்று நம்புகிறார் ஆசிரியர். ஆசிரியர் தன்னையும் பாவியாக ஒப்புவித்து மன்னிப்பு கேட்பது போல வரிகள் அமைக்கப்பட்டுள்ளதை நோக்குவோம்

.9: யோத்- பத்தாவது எழுத்து). பாவிகளைப் பற்றி பேசிய ஆசிரியர் இந்த வரியில் எளியோர்களைப் பற்றி பேசுகிறார். ஆண்டவர் எளியோருக்கு நேரிய வழியைக் காட்டி, அதில் வாழச் செய்கிறார் என்கிறார். இங்கே எளியோர்களை குறிக்க עֲנָוִים ('அனாயிம்) என்ற சொல் பாவிக்கப்பட்டுள்ளது. அது வழக்கமாக தாழ்த்தப்பட்டவர்களை அல்லது வறியவர்களை குறிக்கின்ற சொல், ஆனால் இங்கே இது மனத்தாழ்மை உடையவர்களை குறிப்பதாக ஆய்வாளர்களால் நோக்கப்படுகிறது.  

.10: (כּ கப்- பதினோராவது எழுத்து). இந்த வரி இஸ்ராயேல் ஞானிகளுடைய இன்னொரு நம்பிக்கையைக் காட்டுகிறது. ஆண்டவருடைய உடன்படிக்கையும் (בְּרִית பெரித்), அவருடைய ஒழுங்குமுறையும் (עֵדוּת 'எதூத்) மிக முக்கியமானவை. அதை அனைவரும் கடைப்படிக்க கட்டளையிடப்பட்டார்கள்
இவற்றை கடைப்பிடிப்போருக்கு ஆண்டவருடைய பாதைகள் எல்லாம் பேரன்பு உள்ளதாகவும், உண்மையுள்ளதாகவும் விளங்குமாம்

.11: லமெத்- பன்னிரண்டாவது எழுத்து). இந்த எழுத்தில் ஆசிரியர் தன்னை நேரடியாகவே, பாவி என்று அழைக்கிறார் (לַעֲוֹנִי லா'அயோனி- என் குற்றத்தை). தன்னுடைய குற்றத்தை மன்னிக்க கேட்கும் அவர், அதனை ஆண்டவர் தனது பெயரின் பொருட்டு செய்ய வேண்டும் என்ற வாதத்தை முன்வைக்கிறார் (לְמַֽעַן־שִׁמְךָ֥ லெமா'அன்-ஷிம்கா). ஆண்டவருடைய பெயர் புனிதமானது, ஆக இந்த புனிதத்துவத்தை கொண்டுள்ள ஆண்டவர் தன் மக்களின் பாவத்தை மன்னிக்க வேண்டியவராக இருக்கிறார் என்பதே ஆசிரியரின் வாதம். அதேவேளையில் தன்னுடைய குற்றங்களும் அதிகமாக உள்ளன என்றும் அறிக்கையிடுகிறார் (רַב־הוּא ராவ்-ஹு'). 

.12: ,מ மெம்- பதின்மூன்றாவது எழுத்து). ஆண்டவர் யாருக்கு தன் வழியை கற்பிக்கிறார் என்பதை இந்த வரி காட்டுகிறது. ஆண்டவருக்கு அஞ்சிநடப்பவர்கள் என்பவர்கள், ஆண்டவரில் நம்பிக்கை கொண்டவர்களைக் குறிக்கிறது, இவர்களுக்குத்தான் ஆண்டவர் தன் வழியை கற்பிக்கிறார். ஆக ஞானிகளுக்கல்ல மாறாக ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழியில் நடப்பவர்கள்தான் ஆண்டவரின் சீடர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்
(מִי־זֶה הָאִישׁ יְרֵא יְהוָה மி-ட்செஹ் ஹா'இஷ் யெரெ' அதோனாய்- யார் இந்த மனிதன், அவன் கடவுளுக்கு அஞ்சுபவன்).

.13: ן நுன்- பதினாங்காம் எழுத்து). கடவுளுக்கு அஞ்சுபவருக்கு இந்த உலகத்தில் நடப்பது என்னவென்று சொல்லப்படுகிறது. முதலில் இவர்கள் நலமுடன் வாழ்வார்கள். இதனை எபிரேய விவிலியம் 'அவருடைய ஆன்மா நன்மையில் வாழும்' என்கிறது (נַפְשׁוֹ בְּטוֹב תָּלִין நப்ஷோ பெதோவ் தாலின்;). அதேவேளை ஆண்டவருடைய ஆசீர் அவரின் வழிமரபையும் ஆசீர்வதிக்கிறது அதாவது அவர் வழிமரபினர் நாட்டை உரிமையாக்குவர் என்பதும் சொல்லப்படுகிறது (יִרַשׁ אָֽרֶץ யிராஷ் 'ஆரெட்ஸ்). 

.14: (ס சாமெக்- பதினைந்தாவது எழுத்து). ஆண்டவரின் நட்புறவு யாருக்குரியது என்பதை இந்த வரி காட்டுகிறது. வழமையாக ஆண்டவருடைய நட்புறவைப் பற்றி விவிலியம் அதிகமாக பேசுவதில்லை, அது ஆண்டவருடைய இறைதன்மையை குறைத்துவிடும் என்பதால் அப்படி இருக்கலாம். ஆனால் திருவிவிலியத்தின், ஞான ஆசிரியர்கள் மற்றும் கவிஞர்கள் இந்த சட்டங்களை தாண்டியவர்கள் என்பதால் இந்த கருத்தை அவர் பயமின்றி முன்னெடுக்கிறார்
(סוֹד יְהוָה சோத் அதோனாய்- ஆண்டவரின் நட்பு). 
இப்படியாக ஆண்டவரின் நட்புறவை பெற்றவர்கள் அதாவது அவர் நண்பர்கள் என்போர் ஆண்டவருக்கு அஞ்சிநடக்கிறவர்கள், இவர்களுக்குத்தான் ஆண்டவர் தன்னுடைய உடன்படிக்கையை வெளிப்படுத்துகிறார்

.15: அயின்- பதினாறாவது எழுத்து). மீண்டுமாக தன்னுடைய நம்பிக்கையின் உணர்வுகளை தன் அங்க உறுப்புக்களை பாவித்து விளக்குகிறார். தன்னுடைய கண்கள் எப்போதும் ஆண்டவரையே நோக்கியிருக்கின்றன என்கிறார். கண்கள் என்பது இங்கே பார்வை, விருப்பம், நோக்கம் மற்றும் சிந்தை போன்றவற்றை குறிக்கின்றன (עֵינַי תָּמִיד אֶל־יְהוָה 'எனாய் தாமித் 'எல்-அதோனாய்: என் கண்கள் எப்போதும் ஆண்டவரிலே). 
கண்களைப் போலவே தன் கால்களையும், ஆண்டவர் வலையிலிருந்து மீட்பார் என்கிறார் (רֶגֶל ரெகெல்- கால்). கால்கள் இங்கே ஒருவருடைய சுயத்தைக் காட்டுகின்றன. அவர் தன்னை கண்ணியில் சிக்கிய கால்களுடன் ஒப்பிடுகிறார்.   

.16: (פּ , ף பே- பதினேழாவது எழுத்து). ஆசிரியர் தன்னுடைய வேதனையை மேலும் வலுப்படுத்துகிறார். கடவுளை தன்னைநோக்கி திரும்பி, அவர் மீது இரங்குமாறு கேட்கிறார். ஆண்டவரை திரும்பச் சொல்வது மனிதர்களை திரும்பச் சொல்வது போல இருக்கலாம். ஆனால் இங்கே ஆண்டவரை திரும்பச் சொல்வதன் வாயிலாக ஆசிரியர் ஆண்டவரின் கவனத்தை பெறவேண்டும் என்றே நினைக்கிறார். அதற்கான காரணத்தையும் முன்வைக்கிறார். அதாவது அவர் தனிமையாக இருப்பதாகவும், அவர் துணையற்று இருப்பதாகவும் சொல்கிறார் (כִּֽי־יָחִ֖יד וְעָנִ֣י אָֽנִי கி-யாஹித் வெ'ஆனி 'ஆனி).  

.17: (צ, ץ, ட்சாதே- பதினெட்டாவது எழுத்து). தன்னுடைய வேதனைகள் பெருகிவிட்டதாகவும், தன்துயரங்களிலிருந்து தன்னை மீட்டருளும் என்றும் இரஞ்சுகிறார். இந்த திருப்பாடல் ஒரு தனி மனிதனுடைய வரலாற்று அனுபவமாக இருப்பதற்கு பல வாய்ப்புக்கள் உள்ளது என்பதை இந்த வரி நிரூபிக்கிறது
இந்த வரி எபிரேய விவிலியத்தில் வித்தியாசமாக உள்ளது
צָרוֹת לְבָבִי הִרְחִיבוּ ட்சாரோத் லெவாவி ஹிர்ஹிவூ- என் இதயத்தின் துன்பங்கள் பெருக்கப்பட்டுள்ளன - பெருக்குகிறார்கள்

குறிப்பு:
(எபிரேய வினைச் சொல்லின் அர்த்தத்தில் இந்த இறுதி சொல்லின் தன்மைக்கு பல விளக்ங்கள் கொடுக்கப்படுகின்றன. சிலர் இதனை ஹிபில் மூன்றாம் ஆள் வினைமுற்று என காண்கின்றனர். அப்படியாயின் இதன் அர்த்தமாக 'அவர்கள் என் இதயத்தின் வேதனையை பெருக்குகிறார்கள்' என்று வரும் - הִרְחִיבוּ ஹிர்ஹிவூ: இன்னும் சிலர் இந்த சொல்லை எபிரேய வினைச் சொல்லின் இன்னொரு வகையான ஹிபில் வியங்கோள் சொல்லாக பார்க்கின்றனர்
இப்படியாயின் இதன் அர்த்தமாக 'என் இதயத்தின் வேதனைகளில், என் உறைவிடத்தை பெரிதாக்கும்' என்று வரும் - הַרְחֵיב ஹர்ஹெவ். எபிரேய விவிலியம் ஆரம்ப காலத்தில் மெய்யெழுத்துக்களை மட்டுமே கொண்டு பரம்பரையாக வாசிக்கப்பட்டன. பிற்காலத்தில் மசரோட்டியர் என்ற மொழிவல்லுனர்கள்தான் இந்த விவிலியத்திற்கு உயிர் எழுத்து அடையாளங்களை வழங்கினர். இதனால் எபிரேய விவிலியம் பல இடத்தில் பல வித்தியாசமான விளக்கங்களை கொடுப்பது போன்று தோன்றுகிறது). 
מִמְּצֽוּקוֹתַי הוֹצִיאֵנִי׃ மிம்மேட்சுகோதாய் ஹோட்சி'எனி- என்னுடைய துன்பத்திலிருந்து என்னை எடுத்தருளும். 

.18: ரெஷ்- இருபதாவது எழுத்து). பதினொன்பதாவது எழுத்தும் இங்கே விடப்பட்டிருக்கிறது
இது காலப்போக்கில் தவறவிடப்பட்டதா என்று தெரியவில்லை. இந்த வரியும் ஒரு செபமாக அல்லது வேண்டுதல் வாக்கியமாகவே வருகிறது. ஆசிரியர் தன்னுடைய சிறுமையையும் (עָנִי 'அனி), தன்னுடைய துன்பங்களையும் (עָמַל 'ஆமல்) பார்க்கச் சொல்லிக் கேட்கிறார். அதேவேளை தன்னுடைய அனைத்து பாவங்களையும் மன்னிக்குமாறும் கேட்கிறார். இந்த இடத்திலும் ஆசிரியர் தன்னை பாவியென்று வெளிப்படையாகவே ஏற்றுக்கொள்கிறார்

.19: மீண்டும் ஒருமுறை எபிரேய அரிச்சுவடியின் இருபதாவது எழுத்து ר ரெஷ்- பாவிக்கப்படுகிறது. இதற்கான காரணம் புரியவில்லை. தன்னுடைய எதிரிகள் பெருகிவிட்டார்கள் என ஆண்டவரிடம் முறையிடுகிறார் (אוֹיְבַי כִּי־רָבּוּ 'ஓயெவாய் கி-ராவூ). இந்த பாடலின் ஆசிரியர் யார் என்று தெரியாமையினால், இவர் எதிரிகள் யார் என்றும் கண்டுபிடிக்க முடியாமல் உள்ளது. அவர்கள் கொடுமையோடு தனக்கு கொடுமை செய்கிறார்கள் என்கிறார்

.20: (שׁ ஷின்- இருபத்திதோராவது எழுத்து). இந்த வரி இறுதியான மன்றாட்டாக இருக்கிறது. மூன்றுவிதமான மன்றாட்டுக்களை அவர் முன்வைக்கிறார்
. என்னுயிரைக் காப்பாற்றும் - שָׁמְרָה נַפְשִׁי ஷாம்ராஹ் நப்ஷி  
. என்னை விடுவித்தருளும் - הַצִּילֵנִי ஹட்சிலெனி
. என்னை வெட்கமுறவிடாதேயும் - אַל-אֵ֝בוֹשׁ 'அல்-'எவோஷ்
இதற்கு காரணமாக தான் ஆண்டவரிடம் அடைக்கலம் புகுந்துள்ளவன் என்பதைக் காட்டுகிறார்

.21: தௌ- இருபத்திரண்டாவது எழுத்து, இது இறுதியான எழுத்து). கடவுளுடைய விழுமியங்களை ஆசிரியர் நன்கு புரிந்துவைத்திருக்கிறார் எனலாம். தன்னுடைய பாதுகாப்பு அரணாக வாய்மையையும் (תֹּם தோம்), நேர்மையையும் (יָשַׁר யாஷர்) காட்டுகிறார். தான் கடவுளையே நம்பியிருப்பதாக இந்த வரியிலும் காட்டுகிறார். இந்த வரி ஆசிரியரின் ஆழமான ஆன்மீகத்தைக் காட்டுகிறது

.22: - பதினேழாவது எழுத்து). ஏன் பதினேழாவது எழுத்தோடு இந்த பாடல் முடிவடைகிறது என்று புரியவில்லை. அத்தோடு ஏற்கனவே பதினேழாவது எழுத்து பாவிக்கப்பட்டுவிட்டது, மேலும் சில எழுத்துக்கள் பாவிக்கப்படவும் இல்லை. இப்படியிருக்க ஏன் இரண்டாவது தடவையாக פ பே என்ற எழுத்து பாவிக்கப்படுகிறது என்ற கேள்வி எழும்புகிறது.
இவ்வளவு நேரமும் தனிமனித புலம்பல் போல பாட்டிசைத்தவர் இந்த இறுதியான வரியில் முழு இஸ்ராயேலரையும் எழுவாய்ப் பொருளாக எடுக்கிறார். இப்படி பாடல் முடிவது வழக்கமாக 
இருந்தாலும், இங்கே இந்த வரி சற்று வித்தியாசமாகத்தான் இருக்கிறது. சில வேளைகளில் குழு புலம்பல் பாடல்கள் தனிமனித பாடல்களாகவும், தனிமனித புலம்பல்கள் குழுப்பாடல்களாக வருவதும் திருப்பாடல்களின் காணப்படுகின்றன. திருச்சபையின் செபங்கள் மற்றும் சடங்குகளிலும் இப்படி நடப்பதுண்டு. முழு இஸ்ராயேலையும் உள்வாங்கி அனைவருக்கும் கடவுளின் இரக்கமும் மன்னிப்பும் தேவை என்று சொல்லி, அவர்களை துன்பங்களிலிருந்து மீட்கச்சொல்லி பாடலை நிறைவு செய்கிறார் ஆசிரியர்






1கொரிந்தியர் 7,29-31
29அன்பர்களே, நான் சொல்வது இதுவே; இனியுள்ள காலம் குறுகியதே. இனி மனைவி உள்ளவரும் மனைவி இல்லாதவர் போல இருக்கட்டும். 30அழுபவர் அழாதவர் போலவும், மகிழ்ச்சியுறுவோர் மகிழ்ச்சியற்றவர் போலவும், பொருள்களை வாங்குவோர் அவை இல்லாதவர் போலவும் இருக்கட்டும். 31உலகச் செல்வத்தைப் பயன்படுத்துவோர் அவற்றில் முழுமையாக ஈடுபடாதவர் போல் இருக்கட்டும். இவ்வுலகு இப்போது இருப்பது போல் நெடுநாள் இராது.

பல விதமான ஒழுக்கவியல் மற்றம் நடைமுறை கேள்விகளைக் கொண்டமைந்த கொரிந்திய திருச்சபைக்கு பவுலுடைய திருமுகங்கள் பல கோணங்களைக் கொண்ட போதனைகளைக் தாங்கி வருகின்றன. (கொரிந்தியர் திருமுகத்திற்கான முன்னுரையை வாசிக்க, 109வது இடுகையை ஒப்பிடுக: ஆண்டின் பொதுக்காலம் முப்பத்திநான்காம் வாரம் () கிறிஸ்து அரசர் பெருவிழா 26,11,2017). 
திருமணம் என்ற பவுலுடைய சிந்தனையை அக்கால பின்புலம், கொரிந்திய திருச்சபைக்கு அன்று தேவைபட்ட திருமணம் பற்றிய போதனைகள், மற்றும் இயேசுவின் இரண்டாம் வருகை மிக அருகில் இருக்கிறது என்று அவர்கள் நம்பியது, போன்றவற்றிலிருந்தே வாசிக்க வேண்டும். திருமணம் தமிழர்களுக்கு போல, யூதர்களுக்கும் மிக முக்கியமான ஒரு நிகழ்வு. திருமணங்களே குடும்பங்களை உருவாக்கியபடியால், திருமணத்தின் புனிதத்தன்மையில் யூதர்கள் மிக கரிசனை காட்டினார்கள். ஆனால் உரோமைய மற்றும் கிரேக்க உலகத்தில் திருமணம் வித்தியாசமாக நோக்கப்பட்டது. உயர் குடியினர் என்று தங்களை அழைத்தவர்கள், திருமணத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள், இருப்பினும் அவர்கள் திருமணத்திற்கு வெளியிலும், பல உறவுகளை வைத்திருந்தார்கள். பலவின மக்கள் வாழ்ந்த நகர்களில், கொரிந்துபோன்ற நகர்களில், திருமணத்தின் புனிதத்திற்கு ஒவ்வாத பல பிழையான உறவுகள் வழக்கிலிருந்திருக்கின்றன. (திருமணங்கள் குடும்பங்களை உருவாக்கிய காலம்போய், குடும்பமாக வாழ்வது, திருமணத்தை உருவாக்க முயலும் காலம் நம் நாட்டில் வர எத்தனிக்கிறது). 
யூதர்கள், குடும்பங்கள் மற்றும் திருமணத்திற்கு மிக முக்கியத்துவம் கொடுத்ததும், யூதரல்லாதவர்களில் சிலர் குடும்பங்கள் மற்றும் திருமணத்தை பற்றி பிழையான வாதங்களை கொண்டிருந்ததும் பவுலுக்கு இந்த சிந்தனையை சொல்ல வாய்ப்பை உருவாக்கியது. ஏழாவது அதிகாரத்தில் பவுல் திருமண உறவுகளைப் பற்றி பல முக்கியமான படிப்பினைகளை முன்வைக்கிறார். பவுல் திருமணமானவர் என்பதற்கு பல உள்ளக சான்றுகள் இருக்கின்றன. பவுல் திருமணத்திற்கு எதிரானவர் என்பது சரியாக அமையாது. பவுல் திருமணமாகி தன் மனைவியை விட்டுவிட்டாரா அல்லது அவருடைய மனைவி இறந்திருந்தாரா என்ற வாதங்களும் உள்ளன (காணக் 1கொரிந் 7,8). பவுல் திருமணமானவர்களை பிரிந்திருக்கச் சொல்லவில்லை, மாறாக திருமண உறவைவிட ஆண்டவர் இயேசுவிற்கு முக்கியத்துவம் கொடுக்கச் சொல்கிறார். அதேவேளை ஆண்டவர் இயேசுவுடைய இரண்டாம் வருகை மிக அருகில் இருக்கிறார் என்று நம்பியதால், மணமாகாதவர்கள் அப்படியே இருப்பது நல்லதென்று பரிந்துரைக்கிறார். திருமணம் செய்யாமல் பாவம் செய்யச்சொல்லி பவுல் சொல்லவில்லை (காண்க 1கொரிந் 7,9). 
இன்றைய வாசகம், மணமாகாதவர்களுக்கும், கைம்பெண்களுக்கும் அவர் சொல்லிய அறிவுரையிலிருந்து எடுக்கப்படுகிறது

.29: முன்னைய வரிகளில் பவுல் திருமணம் செய்யாமல் இயேசுவிற்காக வாழச் சொல்கிறார். இந்த வரிகளையும் அக்கால பின்புலத்திலேயே வாசிக்க வேண்டும். துன்பங்களும், காட்டிக்கொடுப்புக்களும், சித்திரவதைகளும் கிறிஸ்தவர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட அக்காலத்தில் பவுல் இதனை சொல்கிறார். திருமணம் ஒரு முக்கியமான உடண்படிக்கை, அதனை செய்கிறவர் அந்த உடண்படிக்கைக்கு பிரமாணிக்கமாக இருக்க வேண்டும், இந்த உடண்படிக்கை செய்யாதவர், ஆண்டவருக்கு நேரம் ஒதுக்க இலகுவாக இருக்கிறது என்பது அவர் வாதம். இருப்பினும் அவர் திருமணம் செய்ய வேண்டாம் என யாருக்கும் கட்டளை கொடுக்கவில்லை, அதேவேளை திருமணத்தின் புனிதத்தையும் அவர் கேள்விக்குட்படுத்தவில்லை
ஆண்டவரின் இரண்டாம் வருகை அருகில் இருக்கிறது என்பதை நம்பிய பவுல், இனிவரும் காலம் மிக குறுகியது என்கிறார் (ὁ καιρὸς συνεσταλμένος ஹொ காய்ரொஸ் சுனெஸ்டால்மெனொஸ்- காலம் குறுகியதாக உள்ளது). இதனால் திருமணமானவர்களும், அதாவது மனைவி உள்ளவர்கள் மனைவி இல்லாதவர்கள் போல வாழவேண்டும் என்கிறார். மோசேயின் சட்டப்படி திருமணமானவர்கள் தங்கள் மனைவிக்கு மிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். சில வேளைகளில், திருமணமானவர்களுக்கு பல முக்கியமான பணிகளிலிருந்து விதிவிலக்கு கொடுக்கப்பட்டது. ஆனால், ஆண்டவரின் வருகை அருகில் இருப்பதால், இந்த திருமண சட்டங்களை விட்டுவிட்டு அனைவரும் ஆண்டவரின் வருகைக்கு முக்கியத்துவம் கொடுக்கச் சொல்கிறார் இந்த புறவின திருத்தூதர் (γυνή கூனே- மனைவி, பெண்). பவுலுடைய இந்த வாதத்தில் மையசெய்தி மனைவி பற்றியதல்ல, மாறாக ஆண்டவருக்கு முக்கியத்துவம் கொடுத்தல் என்பதாகும்

.30: உணர்வுகள் மற்றும் நடைமுறை நிகழ்வுகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கச் சொல்கிறார். அழுகிறவர்களை (κλαίοντες கிலாய்யொன்டெஸ்- துன்புறுகிறவர்கள்) அழாதவர் போல இருக்கச் சொல்கிறார். மகிழ்பவர்களையும் மகிழாதவர் போல இருக்கச் சொல்கிறார் (χαίροντες காய்ரொன்டெஸ்- மகிழ்பவர்கள்). அத்தோடு பொருள் வாங்குவோருக்கும் செய்தி சொல்லப்படுகிறது. அவர்கள் பொருள் வாங்காதவர்கள் போல இருக்க வேண்டும் எனச் சொல்லப்படுகிறார்கள் (ἀγοράζοντες அகொராட்சொன்டெஸ்- பொருள் வாங்குவோர்). பொருள் வாங்குதல் இங்கே வானிபம் செய்தலைக் குறிக்கலாம்

.31: உலக செல்வத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் என்கிறார் பவுல், அதற்கு காரணத்தையும சொல்கிறார். உலகம் நெடுநாள் இருக்கப் போவது கிடையாது, ஆகவே, உலக செல்வம் அழிந்து போகப் போகிறது. இதனால், அழியாத செல்வமாகிய கடவுளுக்கு முக்கியத்துவம் கொடுக்கச் சொல்கிறார் பவுல். இங்கே செல்வத்தை குறிக்க உலகம் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது (κόσμος கொஸ்மொஸ்), இதிலிருந்து உலகத்தையும் உலக செல்வங்களையும் பவுல், ஒரே பொருளாக கருதியிருக்கிறார் என்பது புலப்படுகிறது



மாற்கு 1,14-20
இயேசுவும் மக்கள் கூட்டமும்
கலிலேயாவில் இயேசு பணி தொடங்குதல்
(மத் 4:12-17 லூக் 4:14-15)

14யோவான் கைதுசெய்யப்பட்டபின், கடவுளின் நற்செய்தியைப் பறைசாற்றிக் கொண்டே இயேசு கலிலேயாவிற்கு வந்தார். 15'காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்து விட்டது மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்' என்று அவர் கூறினார்.

முதல் சீடர்களை அழைத்தல்
(மத் 4:18-22 லூக் 5:1-11)

16அவர் கலிலேயக் கடலோரமாய்ச் சென்றபோது சீமோனையும் அவர் சகோதரரான அந்திரேயாவையும் கண்டார். மீனவர்களான அவர்கள் கடலில் வலை வீசிக்கொண்டிருந்தார்கள். 17இயேசு அவர்களைப் பார்த்து, 'என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்' என்றார். 18உடனே அவர்கள் வலைகளை விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள். 19பின்னர், சற்று அப்பால் சென்றபோது செபதேயுவின் மகன் யாக்கோபையும் அவர் சகோதரரான யோவானையும் இயேசு கண்டார். அவர்கள் படகில் வலைகளைப் பழுது பார்த்துக் கொண்டிருந்தார்கள். 20உடனே இயேசு அவர்களையும் அழைத்தார். அவர்களும் தங்கள் தந்தை செபதேயுவைக் கூலியாள்களோடு படகில் விட்டுவிட்டு அவர் பின் சென்றார்கள்.




மாற்கு நற்செய்தி அறிமுகம், தொடர்ச்சி: மாற்கு நற்செய்தி முதலாவது நற்செய்தியாக,
மாற்கு நற்செய்திதான் முதலாவது நற்செய்தியாக இருக்கவேண்டும் என்பது தற்போது அதிகமானவர்களின் நம்பிக்கை. மாற்குதான் முதன் முதலில் இந்த நற்செய்தி என்ற ஒரு இலக்கியவiகையை கிரேக்க உலகத்திற்கு அறிமுகப்படுத்தியிருக்க வேண்டும். மற்றைய நற்செய்தியாளர்கள் மாற்கு நற்செய்தியை பற்றி ஏற்கனவே அறிந்திருக்க வேண்டும், அல்லது முக்கியமாக மத்தேயுவும், லூக்காவும் மாற்கு நற்செய்தியை பாவித்திருக்க வேண்டும். நற்செய்தி எழுதப்படுவதற்கு முன் பலகாலமாக வாய்மொழியாக கடத்தப்பட்டிருக்க வேண்டும், அவை இயேசு ஆண்டவர் செய்ததைப் பற்றியதும், அவர் போதித்ததைப் பற்றியதுமான சிறு உரைகளாக இருந்தன. இவை மாற்கு நற்செய்திக்கு மூலமாக இருந்திருக்கலாம்
இயேசுவுடைய இறுதி நாட்கள், மற்றும் பாடுகளைப் பற்றிய தரவுகள் இவற்றுள் மிக முக்கியமானவையாக இருந்திருக்கலாம். மாற்குதான் முதன் முதலில், இயேசுவைப் பற்றிய போதனைகளையும், நிகழ்வுகளையும், இயேசுவின் உரைகளையும் உள்ளடக்கி ஒரு புத்தகமாக எழுதியிருக்கிறார், இதனால்தான் மாற்கு நற்செய்தி சற்று கரடுமுரடாக இருக்கிறது என்கின்றனர் சில ஆய்வாளர்கள். சிலர் இந்த வாதத்தை ஏற்கவில்லை மாறாக, மாற்கு  உண்மையான தரவுகளை அப்படியே, தொகுப்பு செய்யாமல் கொடுத்திருக்கிறார், அதாவது அந்த தரவுகளின் மூலத்தை அவர் அப்படியே தந்திருக்கிறார், இதனால்தான் மாற்கு நற்செய்தி சுருக்கமாகவும், சற்று கடினமாகவும் உள்ளது என்கின்றனர்
இன்றைய பகுதி, மாற்கு நற்செய்தியின் ஆரம்ப அதிகாரத்திலிருந்து எடுக்கப்படுகிறது
இயேசு திருமுழுக்கு பெற்று, பின்னர் சோதிக்கப்படுகிறார். அதன் பின்னர் அவர் உடனடியாக தன் சீடர்களை அழைக்கிறார். மாற்கு அவசரம் காட்டுகிறார்

.14: இயேசுயோவான் கைது செய்யப்பட்ட பின்னர்தான் தன் பணியை மாற்குவில் தொடங்குகிறார். இது யோவானின் பணி முடிவடைந்து விட்டது என்பதைக் காட்டலாம். இயேசு பறைசாற்றியது கடவுளின் நற்செய்தி என்பதை மாற்கு கவனமாக எழுதுகிறார் (εὐαγγέλιον  τοῦ θεοῦ எவான்கலியோன் டூ தியூ- கடவுளின் நற்செய்தியை). 

.15: இந்த வசனம் மாற்கு நற்செய்தியின் சாரம்சத்தையும், தண்மையையும் காட்டும் நல்ல உதாரணம். மாற்கு நற்செய்தி சொல்லவந்ததை அபபடியே நேரடியாக சொல்லும், அதனை சுருக்கமாகவும் சொல்லும்
காலம் நிறைவேறிவிட்டது (πεπλήρωται ὁ καιρὸς பெப்லேரோடாய் ஹொ காய்ரொஸ்), இறையாட்சி நெருங்கிவந்துவிட்டது (ἤγγικεν ἡ βασιλεία τοῦ θεοῦ ஏக்கிகென் ஹே பாசிலெய்யா டூ தியூ), மனம் மாறி (μετανοεῖτε மெடாநொய்யெய்டெ), நற்செய்தியை நம்பச் சொல்கிறார் (πιστεύετε பிஸ்டெயுஎடெ) ஆண்டவர். மாற்கு நற்செய்தி மனமாற்றத்தையும்
இறையாட்சியையும் பற்றி அதிகமாக பேசுகிறது

.16: கலிலேயாவில் தன்னுடைய பணியை தொடங்கிய ஆண்டவர், தன் சீடர்களை தெரிவு செய்ய கலிலேயக் கடல் ஓரமாக செல்கிறார். கலிலேயக் கடல், கலிலேய பகுதியின் மிக முக்கியமான தொழில் வாய்ப்பாக இருந்த படியால், பல சாதாரண மக்கள் அங்கேயே மையமிட்டிருப்பர். இதனை விட சீடத்துவத்தை மையப்படுத்த இயேசு மீனவர்களை தெரிவு செய்திருக்கலாம் என்ற வாதமும் உள்ளது.  
இயேசு ஏன் மீனவர்களை முதலில் சீடர்களாக்குகிறார் என்பதற்கு பல வாதங்கள் 
இருக்கின்றன. மீனவர்களின் எளிமையான வாழ்கை முறையும், அவர்களின் போராடும் குணமும், அவர்களுடைய ஆழமான அன்பும் அதற்கு காரணமாக இருந்திருக்கலாம். கலிலேயர்கள் பலர் மீனவர்களாக இருந்ததும், இதற்கு இன்னொரு காரணமாக இருந்திருக்கலாம்
இயேசு மீனவர்களான சீமோனையும், அந்திரேயாவையும் காண்கிறார், அவர்கள் கடலில் வலை வீசிக்கொண்டிருக்கின்றனர். அதாவது அவர்கள் தங்கள் தொழிலில் கவனமாக 
இருக்கிறார்கள். மற்ற நற்செய்தியைப் போல இவர்கள் சகோதரர்கள் என்பதும் காட்டப்படுகிறது. மாற்கு நற்செய்தியில் இவர்கள் இருவரும் ஒரே நேரத்தில் அழைக்கப்படுகிறார்கள்.

.17: இயேசுவிற்கு இவர்கள் முன்பின் அறிமுகமானவர்களா, என்பதைப் பற்றி மாற்கு எதுவும் சொல்லவில்லை. ஒருவேளை இவர்கள் கலிலேயர்கள் என்பதனால், இயேசுவைப் பற்றி கேள்விப்பட்டிருக்கலாம். இவர்களைக் கண்ட உடனே, தன்பின்னே வரச்சொல்லி கேட்கிறார். இது ஆச்சரியமாக இருக்கிறது. எப்படி ஒரு புதியவர், மற்றவர்களை தன்பின் வரச்சொல்லி கேட்கலாம். இந்த செயலே இயேசு சாதாரணமானவர் அல்ல என்பதை காட்டியிருந்திருக்கும்
இயேசு இவர்களை மனிதர்களை பிடிப்பவர் ஆக்குவேன் என்கிறார் (ἁλιεῖς ἀνθρώπων அலியெய்ஸ் அந்த்ரோபோன்). 'அலெய்ஸ்' என்ற சொல், 'பிடிப்பவர்களைக்' குறிக்கிறது. சீமோனும் அந்திரேயாவும், திருமுழுக்கு யோவானை அறிந்தவர்களாக இருந்திருக்கலாம். இதனால்தான் 
இவர்களுகளுக்கு இயேசுவின் வார்த்தைப் பிரயோகம் சரியாக புரிகிறது.  

.18: அவர்கள் உடணடியாக வலைகளை விட்டுவிட்டு இயேசுவை பின்பற்றுகிறார்கள், அதாவது தங்கள் வேலைகளை விட்டுவிட்டார்கள், புதிய வேலையை இப்போது இவர்கள் தெரிவு செய்கிறார்கள். முதலில் இவர்கள் இயேசுவை பின்பற்றினார்கள். இதுவே சீடர்களின் முதலாவது வேலை என்பதை சுருக்கமாகவும், நேர்த்தியாகவும் காட்டுகிறார் மாற்கு. உடணடியாக இவர்கள் தங்கள் வலைகளை விடுவதும் நோக்கப்படவேண்டும். இவர்கள் எந்தவிதமான சலனமும் இன்றி இயேசுவை பின்பற்றினார்கள் 
என்று மாற்கு காட்டுகிறார். மாற்குவின் வாசகர்களுக்கு பேதுரு ஒரு நல்ல உதாரணமாக இருந்திருக்க வேண்டும் என்ற வாதம் ஒன்றும் இருக்கிறது

.19: சற்று அப்பால் இயேசு இன்னும் இரண்டு சகோதரர்களை அழைக்கிறார். அவர்கள் யோவானும், அவர் சகோதரர் யாக்கோபும் ஆவர்கள். இவர்களை செபதேயுவின் மக்கள் என்கிறார் மாற்கு. இயேசு ஏன் சகோதரர்களை தெரிவதில் முதலில் ஆர்வம் காட்டுகிறார் என்பது உடணடியாக தெரியவில்லை. இவர்களும் மீனவர்களாகவே இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் வலைகளை பழுதுபார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதாவது இவர்களும் தங்கள் வேலையில் கவனமாக 
இருந்தார்கள் என்பதை மாற்கு காட்டுகிறார்

.20: இயேசு இவர்களை அழைக்க அவர்களும் உடனடியாக இயேசுவை பின்பற்றுகிறார்கள். பேதுரு-அந்திரேயா சகோதரர்கள் தங்கள் வலைகளைத்தான் விட்டார்கள், இவர்கள் தங்கள் தகப்பனையே விட்டுவிட்டு இயேசுவை பின்பற்றுகிறார். இருப்பினும் அவர்கள் செபதேயுவை தங்கள் வேலைக்காரருடன்தான் விடு;கிறார்கள். இவர்களின் இந்த விடுதலும், பின்பற்றுதலும் இயேசுபை கவர்ந்திருக்க வேண்டும். இவர்களில் ஒருவர்தான் இயேசுவின் அன்புச் சீடராக உருவாகி அவர் மார்பில் சாய்ந்தவர் என்பது நோக்கப்பட வேண்டும் (ἀπῆλθον ὀπίσω αὐτοῦ அபேல்தொன் ஒபிஸ்சோ அவுடூ- அவரை பின்பற்றினார்கள்).  
இந்த வரிகளில் இரண்டு செயற்பாடுகள் நோக்கப்பட வேண்டும். அதாவது அவர்கள் தங்கள் உடமைகள் மற்றும் உறவுகளை விடுகிறார்கள், பின்னர் உடனடியாக இயேசுவை பின்பற்றுகிறார்கள். இந்த சகோதரர்களும் திருமுழுக்கு யோவானின் சீடர்களாக இருந்திருக்கலாம், அத்தோடு அவர்களுக்கு இயேசுவைப் பற்றியும் தெரிந்திருக்கலாம். இந்த அழைப்பு நிகழ்சிகளை மற்றைய நற்செய்திகள் வித்தியாசமாக காட்டுகின்றன

ஆண்டவர் யாரை அழைப்பார்
அவர்களை எங்கு அனுப்புவார் என்பது
ஆண்டவருக்கு மட்டும்தான் தெரியும்போல
அழைக்கப்படுகிறவர்களுக்கு தனித்துவமான தகுதியிருப்பது போல தெரியவில்லை
அழைப்பவர்தான், அழைக்கப்படுகிறவர்களின் தகுதி.
கடவுளின் அழைப்பு
உடமைகளையும், உறவுகளையும் தாண்டி
அழைப்பவருக்கு முக்கியம் கொடுக்கச் சொல்கிறது

அன்பு ஆண்டவரே
ஆம் சொல்லியும், பின்பற்றாமல் இருக்கும்
அழைத்தல்களைக் காப்பாற்றும். ஆமென்.   








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆண்டின் பொதுக்காலம் முப்பத்திநான்காம் வாரம் கிறிஸ்து அரசர் பெருவிழா:  Our Lord Jesus Christ, King of the Universe 24.11.2024

ஆண்டின் பொதுக்காலம் முப்பத்திநான்காம் வாரம்   கிறிஸ்து அரசர் பெருவிழா :  Our Lord Jesus Christ, King of the Universe 24.11.2024 இய...