ஆண்டின் பொதுக்காலம் முப்பத்தோராவது வாரம் (அ)
05,11,2017
முதல் வாசகம்: மலாக்கி 1,14 - 2,2.8-10
பதிலுரைப்பாடல்: திருப்பாடல் 131
இரண்டாம் வாசகம்: 1தெசலோனியர் 2,7-9.13
நற்செய்தி: மத்தேயு 23,1-12
ராபி (ῥαββί ராப்பி):
இது ஒரு மரியாதைக்குரிய பெயராக பார்க்கப்படுகிறது. அரமேயத்தில் இதனை ரபூனி என்று அழைப்பர் (ῥαββουνί). இதனுடைய வேர்ச்சொல்லாக எபிரேய ராப் (רַב) என்பதை அறிஞர்கள் காண்கின்றனர். ராப் என்றால் பெரியது என்று பொருள் கொள்ளும். இயேசுவுடைய காலத்திலே இந்த ராபி என்கின்ற சொல், சாதாரணமாக ஆசிரியர்களுக்கு பயன்பட்டது. பரிசேயர்களும் ஆசிரியர்களாக இருந்த படியால் இந்த மரியாதைச் சொல்லில் பரிசேயர்களும் அழைக்கப்பட்டிருக்கலாம். நான்கு நற்செய்திகளில் மூன்று நற்செய்திகள் இயேசுவை இந்தப் பெயரிலேயே அழைக்கின்றன.
மாற்கு நற்செய்தியில் சீடர்கள் இயேசுவை ராபி என அழைக்கின்றனர், இந்த சொற்பிரயோகம், இயேசு ஒரு புதுமை செய்ததன் பின்னர்தான் பாவிக்கப்படுகிறது (காண்க மாற்கு 9,5: 11,21: 14,45). மத்தேயு நற்செய்தியில் யூதாசு இஸ்கரியோத்து மட்டுமே ஆண்டவரை ராபி என அழைக்கிறார் (காண்க மத் 23,28: 26,25: 26,49). மற்றைய சீடர்கள் இயேசுவை வேறு மரியாதைப் பெயரிலேயே அழைக்கின்றனர். இதன் மூலம் மத்தேயு, யூதாசுக்கும் மற்றைய பதினொருவருக்கும்
இடையிலான வித்தியாசத்தைக் காட்டுகிறார் எனவும் சொல்லலாம். இயேசுவின் போதனையிலிருந்து, இந்த சொல் ஆசிரியர்களுக்குத்தான் பொருந்தும் எனவும் எடுக்கலாம் (காண்க மத் 23,7-8). லூக்காவின் வாசகர்களுக்கும் இந்த சொல் நன்கு தெரிந்திருக்கிறது. இருப்பினும் இதற்கு இணையான எபிஸ்டாடேஸ் (ἐπιστάτης) என்ற சொல்லைத்தான் லூக்கா அதிகமாக பாவிக்கின்றார். இதற்கு தலைவர், பொறுப்பாளர் மற்றும் அதிகாரி என்ற பொருள்களும் உள்ளன (காண்க லூக் 5,5: 8,24.45: 9,33.49: 17,13). யோவான் நற்செய்தியில் இந்தச் சொல் இயேசுவின் சீடர்களாலும் மற்றவர்களாலும் இயேசுவைக் குறிக்க பயன்படுகின்றன (காண்க யோவான் 1,38.49: 3,26: 4,31: 6,25: 9,2: 11,8). அனைவரையும்விட இன்னும் விசேடமாக மகதலேன் மரியா, இயேசுவை ராபூனி என அழைக்கிறார் (காண்க யோவான் 20,16). யோவான் இரண்டு முறை இந்த சொல்லிற்கு ஆசிரியர் என பொருள் தருகிறார் (காண்க யோவான் 1,38: 20,16).
எருசலேம் ஆலயத்தின் அழிவிற்கு பின்னர் அதாவது கி.பி 70களுக்கு பின்னர் இந்த சொல் அதிகாரபூர்வமான ஆசிரியரைக் குறிக்க பயன்பட்டது. எருசலேம் ஆலயத்தின் அழிவின் பின்னர் பரிசேயர்களும், சதுசேயர்களும் அழிந்து போயினர். ராபிக்கள்தான் யூத மறையை பின்னாட்களில் காப்பாற்றினர். இவர்களால், யூத மறை ராபினிக்க யூதமாக மாறியது.
மலாக்கி 1,14 - 2,2.8-10
14தன் மந்தையில் ஊனமற்ற கிடாய் இருக்கையில் ஊனமுற்ற ஒன்றைப் பொருத்தனையாகத் தலைவராகிய ஆண்டவருக்குப் பலியிடும் எத்தன் சபிக்கப்படுவானாக. 'நானே மாவேந்தர்,' என்கிறார் படைகளின் ஆண்டவர்.
1'இப்பொழுது, குருக்களே! உங்களுக்கு நான் தரும் கட்டளை இதுவே: என் பெயருக்கு மாட்சி அளிக்கவேண்டும் என்பதை உங்கள் இதயத்தில் பதித்துக் கொள்ளுங்கள். 2எனக்கு நீங்கள் செவிகொடுக்காவிடில் உங்கள் மேல் சாபத்தை அனுப்புவேன். உங்களுக்குரிய நல்லாசிகளைச் சாபமாக மாற்றுவேன். ஆம், இக்கட்டளைக்கு உங்கள் இதயத்தில் இடமளிக்காததால் ஏற்கனவே அவற்றைச் சாபமாக மாற்றிவிட்டேன்' என்று படைகளின் ஆண்டவர் சொல்கிறார்.
8நீங்களோ நெறி தவறி நடந்தீர்கள். உங்கள் போதனையால் பலரை இடறி விழச்செய்தீர்கள். லேவியோடு நான் செய்த உடன்படிக்கையைப் பாழாக்கிவிட்டீர்கள்.' என்று சொல்கிறார் படைகளின் ஆண்டவர். 9'ஆதலால் நானும் உங்களை மக்கள் அனைவர் முன்னிலையிலும் இழிவுக்கும் தாழ்வுக்கும் ஆளாக்குவேன்; ஏனெனில், நீங்கள் என் வழிகளைப் பின்பற்றி ஒழுகவில்லை; உங்கள் போதனையில் ஓரவஞ்சனை காட்டினீர்கள்.' 10நம் அனைவர்க்கும் தந்தை ஒருவரன்றோ? நம்மைப் படைத்தவர் ஒரே கடவுளன்றோ? பின்னர் ஏன் நாம் ஒருவருக்கொருவர் நம்பிக்கைத் துரோகம் செய்கின்றோம்? நம் மூதாதையரின் உடன்படிக்கையை ஏன் களங்கப்படுத்துகிறோம்?
மலாக்கி என்பது 'என் செய்தியாளர்' என்ற பொருளைத் தருகிறது (מַלְאָכִֽי மல்'ஆகி). மலாக்கியாவுடைய பெயரின் சுருக்கம்தான் மலாக்கி. என்ற வாதமும் இருக்கிறது, இருப்பினும் இந்த இரண்டு அர்த்தங்களிலும் எந்த மாற்றமும் இல்லை. மலாக்கி என்பது இந்த இறைவாக்கினருடைய பெயரா (காண்க மலா 1,1) அல்லது பொதுப்பெயரா என்பதில் பல வாதங்கள் உள்ளன, ஒப்பிடுக (3,1).
மலாக்கி புத்தகம் நெகேமியா புத்தகத்தின் காலத்தை சேர்ந்தது என்று பல அறிஞர்கள் கருதுகின்றனர் (கி.மு 5ம் நூற்றாண்டு). மலாக்கி புத்தகம் எருசலேம் தேவாலயத்தின் இருப்பை பற்றி பேசுகிறது, ஒருவேளை இது மீளக்கட்டப்பட்ட தேவாலயத்தைக் குறிக்கலாம். குருத்துவத்தின் துஸ்பிரயோகம், குற்றங்கள் பற்றிய அட்டவணை, கலப்புத் திருமணங்கள் பற்றிய போதனைகள், எளியோருக்கு எதிரான துஸ்பிரயோகங்கள், மற்றும் ஆலயத்திற்கான பங்களிப்பு போன்ற போதனைகள், இந்த புத்தகம் நெகேமியா, மற்றும் எஸ்ரா காலத்து புத்தகம் என்பதைக் காட்டுகிறது.
மலாக்கி தன்னுடைய பணிவாழ்வை, பபிலோனியா அடிமை வாழ்விற்கு பின்னர், அல்லது சைரசு மன்னருடைய அரசாணைக்கு பின்னர் (கி.மு 538) தொடங்கியிருக்க வேண்டும், இந்த காலத்தில்தான் யூதர்கள் தாய்நாட்டிற்கு திரும்பி தங்கள் தேவாலயத்தைக் கட்டினர். மலாக்கி,
இல்லாத நம்பிக்கைகளைப் பற்றி பேசாமல், மக்கள் சந்திக்கின்ற நாளாந்த பிரச்சினைகளைப் பற்றி பேசுவார். பாரசீகர்கள் யூதர்களுக்கு விடுதலை கொடுத்தாலும், யூதர்கள் உண்மையில் சொந்த நாட்டில் அடிமைகளாகவே இருந்தார்கள். பாரசீக தலைமைத்துவத்தை அவர்கள் விரும்பவில்லை. அத்தோடு யூதேயாவை சுற்றியிருந்தவர்களாலும் அவர் அதிகமான துன்பங்களை சந்தித்தார்கள். எல்லாவற்றிக்கும் மேலாக அவர்களின் ஆளுனராக இருந்தவர், தாவீதின் வழிமரபில் வந்தவரில்லை. இந்த சிந்தனைகளை இக்கால புத்தகங்களில் காணலாம், மலாக்கியிலும் இந்த சிந்தனைகள் அதிகமாக இருக்கின்றன.
ஆண்டவருடைய வருகையின் நாளைப் பற்றி இக்கால புத்தகங்கள் அறிவுறுத்தினாலும், நாளாந்த வாழ்வில் மக்கள் ஆன்மீக வறுமையைத்தான் கண்டனர். அத்தோடு அவர்கள் ஆண்டவரின் அதிசயங்களை அதிகமாக எதிர்பார்த்து, அதனை காணாததால் விரைவாகவே நம்பிக்கை இழந்திருந்தனர். நெகேமியா காலத்து ஆலயம், முன்னைய ஆலயத்தைவிட பலவிதத்தில் குறைவாக இருந்தது, இதுவும் இவர்களின் துன்பத்தின் காரணமாக அமைந்தது.
மலாக்கி, அதன்; காலத்து இறைவாக்கு நூல்களை ஒருமித்த செய்திகளைக் கொடுத்தாலும், தனக்கென்றே தனித்துவமான அடையாளத்தையும், மொழியையும், உள்ளடக்கத்தையும் கொண்டதாக அமைகின்றது. ஆண்டவரின் புதுப்பிக்கப்பட்ட உடன்படிக்கை பற்றிய செய்தியை மலாக்கி புத்தகத்தின் மைய செய்தியாக எடுக்கலாம். ஆய்வாளர்கள் மலாக்கி புத்தகத்தில் ஆறு விவாதங்களை காண்கின்றனர்.
அ. முதலாவது விவாதத்தில் இஸ்ராயேல் கடவுளுடைய தெரிவு செய்யப்பட்ட அன்பு மக்கள் என்பதை மீளவும் வலிறுத்துகிறார் (1,2-5). இதற்கு இவர்கள் தமது உண்மையான அன்பையும் கீழ்ப்படிவையும் தரவேண்டும் என்கிறார். இதனை அவர்கள் தருவதாக தெரியவில்லை என்பதையும் எச்சரிக்கிறார்;.
ஆ. இரண்டாவது விவாதத்தில் மக்களுடைய தவறுகளுக்கு குருக்களே காரணம் என்று சொல்லியும், அவர்கள் ஆண்டவர் லேவியரோடு செய்த உடன்படிக்கையை மீறுகிறார்கள் என அவர்களை எச்சரிக்கிறார் (1,6-2,9).
இ. மூன்றாவது விவாதத்தில் (2,10-16) கலப்புத் திருமணம் கடவுளுக்கு எதிராக இருக்கிறது என்பதாக சாடுகிறார், அதேவேளை பிழையான விவாகரத்துக்கள் திருமண உடன்படிக்கைக்கும் கடவுளுக்கும் எதிரான பாவங்கள் என்றும் போதிக்கிறார். இப்படிச் செய்வதால், இவர்கள் ஆபத்துக்களை தாங்களாகவே, கடவுளுடைய புனிதத்துக்கு எதிராக முன்வைக்கிறார்கள் என்றும் தொடர்கிறார்.
ஈ. நான்காவது விவாதத்தில் (2,17-3,5) ஆண்டவர் நிச்சயமாக தன்னுடைய வாக்குறுதியை நிறைவேற்றியே தீருவார், அவருடைய நீதித் தீர்ப்பு வருகிறது என்பதையும் காட்டுகிறார். இந்த நிகழ்வு ஆண்டவருடைய செய்தியாளர் வருகின்ற நாளில் நடக்கவிருக்கிறது, அத்தோடு அவர் தீயோரை கடுமையாக தண்டிப்பார் என்றும் எச்சரிக்கிறார்.
உ. ஐந்தாவது விவாதத்தில் (3,6-12) முணுமுணுப்பாக காணிக்கை கொடுப்பதன் விளைவை விவாதிக்கின்றார். நல்ல விதத்தில் கொடுக்கப்படும் காணிக்கை உண்மையில் ஆசீர்வாதத்தை கொண்டுவரும் என்கிறார்.
ஊ. ஆறாவது விவாதத்தில் (3,13-4,3), தீமை செய்கிறவர்கள் தப்பிப்பது போன்று தோன்றினாலும் அவர்களின் அழிவு அவர்களை நெருங்குகின்றது என்கிறார். அதேபோல ஆண்டவர் தனக்கு அஞ்சி நல்வழி நடக்கிறவர்களை ஆசிக்கிறார் என்கிறார்.
இறுதியாக மலாக்கி தன்னுடைய இறைவாக்கை சுருக்கச் சொல்கிறார் (4,4-6), அதாவது மக்கள் மோசேயின் கட்டளைகளுக்கு திரும்ப வேண்டும், எலியாவிற்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதி, மற்றும் ஆண்டவரின் வருகையின் நாள் போன்றவற்றை நினைவூட்டுகிறார்.
வ.14: இந்த வரி மிகவும் நகைப்பாய் இருக்கிறது. இக்காலத்தில் சாதாரண மக்கள் நிச்சயமாக நல்ல காணிக்கையைத்தான் கடவுளுக்கு கொடுப்பார்கள். கடவுளுக்கு குறைபாடுள்ள காணிக்கையை ஒருவர் கொடுக்கிறார் என்றால், அவர் நிச்சயமாக கடவுள் நம்பிக்கை இல்லாதவராகத்தான் இருப்பார். அல்லது கடவுளுக்கே டிமிக்கி கொடுக்கும் கில்லாடியாக இருப்பார். இந்த வரியினுடைய முன் வரிகளை ஆராய்கின்ற போது, இது தவறான குருக்களுக்கெதிரான வாக்குகளாகத்தான் இருக்கிறது என்பது புலப்படுகிறது. குருக்கள், புதுப்பிக்கப்பட்ட ஆலயத்தில் பல அருவருக்கத்தக்க செயலை செய்திருக்க வேண்டும், அதற்கு எதிராகத்தான் இந்த வரியும் வருகிறது எனலாம்.
மந்தையில் ஊனமற்ற கிடாய் இருக்கின்றபோது, ஊனமானதை கடவுளுக்கு கொடுப்பது, உண்மையில் அந்த குருக்களுடைய அவநம்பிக்கை மற்றும் குருத்துவத்தை எந்தளவிற்கு அவர்கள் துஸ்பிரயோகம் செய்கிறார்கள் என்பதையும் காட்டுகிறது. அந்நாட்களில் ஊனமானவை கடவுளால் தண்டிக்கப்பட்டதாகவும், சபிக்கப்பட்டதாகவும் கருதப்பட்டன (இது சரியான புரிதல் அல்ல). ஆக இவர் அப்படியான ஒன்றைத்தான் கொடுக்கிறார்கள். இப்படிச் செய்கிறவரை தமிழ் விவிலியம் எத்தன் என்கிறது, இதனை எபிரேயம் אָר֣וּר נוֹכֵ֗ל 'அரூர் நோகெல் (ஏமாத்துகிறவர் சபிக்கபடுவார்).
இந்த வசனத்தின் இறுதியான பிரிவு, ஆண்டவர் 'நானே மாவேந்தர்' என சொல்வது போல அமைக்கப்பட்டுள்ளது. அத்தோடு அவரை படைகளின் ஆண்டவர் என்கிறார் ஆசிரியர்
(כִּי֩ מֶ֨לֶךְ גָּד֜וֹל אָ֗נִי אָמַר֙ יְהוָ֣ה צְבָא֔וֹת கி மெலெக் காதோல் 'அனி 'அமர் அதோனாய் ட்செபா'ஓத்).
2,1: இரண்டாவது அதிகாரத்தின் முதலாவது வரி, இந்த இறைவாக்குகள் குருக்களுக்குத்தான் சொல்லப்படுகிறது என்பதை தெளிவாகக் காட்டுகிறது. இங்கே குருக்களுக்கு பாவிக்கப்பட்டுள்ள சொல், சடங்குகளை நிறைவேற்றுங்கின்ற குருக்களை குறிக்கும் சாதாரண சொல் (כֹּהֲנִֽים கோஹானிம்).
வ.2: இந்த வரி இவர்களுக்கு எச்சரிக்கையாகவும், சாபமாகவும் வருகிறது. குருக்கள் ஆண்டவருக்கு செவிசாய்க்காவிடில், என்ன நடக்கும் என்பதை ஆசிரியர் சொல்கிறார்,
(אִם־לֹ֣א תִשְׁמְע֡וּ 'இம்-லோ' திஷ்மெ'ஊ- நீங்கள் செவிசாய்காவிடில்). இவர்கள் செவிசாய்காவிடில், அது அவர்களுக்கு சாபத்தை கொணரும் என்பதே அந்த எச்சரிக்கை. நல்லாசிகள் சாபமாக மாறும் என்பது இன்னொரு எச்சரிக்கை (וְאָרוֹתִ֖י אֶת־בִּרְכֽוֹתֵיכֶ֑ם வெ'ஆரோதி 'எத்-பிர்கோதெகெம்). வழமையாக குருக்கள் ஆண்டவரின் ஆசிரை வழங்கும் ஊடகமாக இருப்பார்கள். இவர்களுக்கே ஆண்டவரின்
ஆசீர்வாதம் இல்லை என்றால், இவர்கள் எப்படி மற்றவர்களை ஆசீர்வதிப்பார்கள் என்ற கேள்வி எழுகிறது. அத்தோடு கடவுள் ஏற்கனவே, இவர்களுடைய ஆசீரை சாபமாக மாற்றிவிட்டார் என்கிறார்.
மலாக்கியின் குருக்களுக்கு எதிரான இறைவாக்கு அக்காலத்தில் குருக்களுக்கு எதிரான சிந்தனை பலமாக இருந்ததைக் காட்டுகிறது.
வவ.3-7: மலாக்கியின் குருக்களுக்கு எதிரான இறைவாக்கின் ஆதங்கத்தை இந்த வரிகள் காட்டுகின்றன. புதுப்பிக்கப்பட்ட ஆலயத்தில் பல மோசடிகள் நடந்திருக்கலாம். முக்கியமாக பலியிடுதலில் துஸ்பிரயோகம் நடந்திருக்கலாம். ஆண்டவர் இவர்களின் முகத்தில் மிருகத்தின் சாணத்தை வீசியடிப்பதாகச் சொல்கிறார். மிகவும் கடுமையான தண்டனைதான்.
அதேவேளையில் லேவி என்கின்ற, குருக்களின் மூதாதை நினைவுகூறப்படுகிறார். இந்த குலத்திலிருந்துதான் இஸ்ராயேலின் குருத்துவம் உருவானது என்பதை விவிலியம் காட்டுகிறது. இவர் உண்மையான குருவாக இருந்திருக்கிறார். அவர் கடவுளின் உடன்படிக்கைக்கு பிரமாணிக்கமாய் வாழந்திருக்கிறார், மெய்ப் போதனை தருபவராகவும், பேச்சில் உண்மையுள்ளவராகவும், அமைதியான நேர்மையாளராகவும், மெய்யறிவுள்ளவராகவும், அத்தோடு அவர் கடவுளின் உண்மைத் தூதனாகவும் இருந்திருக்கிறார்.
லேவியைப் பற்றிய இந்த விவரிப்பும், மலாக்கி காலத்து குருக்கள், குருத்துவத்திற்கு பொருத்தமான வாழ்க்கையை வாழவில்லை என்பதையே காட்டுகிறது.
வ.8: எட்டாவது வரி, மலாக்கி காலத்து குருக்களை நேரடியாகவே எச்சரிக்கிறது. இவர்கள் நெறி தவறி நடந்து (סַרְתֶּם சர்தெம்- நீங்கள் தவறினீர்கள்), பிழையான போதனைகளால் பலரை
இடறிவிழச் செய்து (הִכְשַׁלְתֶּם ஹிக்ஷல்தெம்- நீங்கள் இடறிவிழச் செய்தீர்கள்), கடவுள் லேவியோடு செய்த உடன்படிக்கையையும் முறித்துவிட்டதாக குற்றம் சாட்டப்படுகின்றனர்.
பிழையான போதனைகளைக் குறிக்க, தோரா என்ற சொல் பாவிக்கப்பட்டுள்ளது. தோரா மற்றும் போதனைகள் என்பன, இரண்டு வகையான சிந்தனைகள். இந்த சொல்லை பாவிப்பதன் மூலமாக இவர்களின் போதனை தோராவாக இருக்கவேண்டும் என்பது ஆசிரியருடைய எடுகோளாக இருக்கிறது என எடுக்கலாம் (תּוֹרָה தோராஹ்-சட்டம்).
வ.9: இந்த பிழைகளின் எதிரொலியாக கடவுள் இவர்களுக்கு செய்யவிருப்பதைக் காட்டுகிறார்.
இவர்கள் மக்கள் முன்னிலையில் இழிவுக்கும் தாழ்விற்கும் ஆளாவார்கள். இந்த தண்டனைக்கான காரணமும் மீண்டும் ஒருமுறை சொல்லப்படுகிறது. அதாவது இவர்கள் கடவுளின் வழியை பின்பற்றவில்லை அத்தோடு தங்கள் போதனைகளில் ஓரவஞ்சனை காட்டியதாகவும் குற்றம் சுமத்தப்படுகிறது. போதனைகளில் ஓரவஞ்சனை என்பது, பிழையான போதனைகளைக் குறிக்கலாம் (וְנֹשְׂאִים פָּנִים בַּתּוֹרָֽה׃ פ வெநிஷ்'மிம் பானிம் பாதோராஹ்- போதனையில் முகம் காட்டுதல்).
திருப்பாடல் 131
பணிவுமிகு மன்றாட்டு
(சீயோன்மலைத் திருப்பயணப் பாடல்; தாவீதுக்கு உரியது)
1ஆண்டவரே! என் உள்ளத்தில் இறுமாப்பு இல்லை என் பார்வையில் செருக்கு இல்லை; எனக்கு மிஞ்சின அரிய, பெரிய, செயல்களில் நான் ஈடுபடுவதில்லை.
2மாறாக, என் நெஞ்சம் நிறைவும் அமைதியும் கொண்டுள்ளது; தாய்மடி தவழும் குழந்தையென என் நெஞ்சம் என்னகத்தே அமைதியாயுள்ளது.
3இஸ்ரயேலே! இப்போதும் எப்போதும் ஆண்டவரையே நம்பியிரு!
திருப்பாடல்கள் 129 தொடக்கம் 131வரையான பாடல்களை ஒரு தொகுப்பாக சில ஆய்வாளர்கள் காண்கின்றனர். இந்த திருப்பாடலை இளைப்பாற்றியின் பாடல் எனவும், சீயோன் மலை திருப்பயணப் பாடல் எனவும் சிலர் வகைப்படுத்துகின்றனர். இன்னும் சற்று வித்தியாசமாக சில திருப்பாடல் ஆய்வாளர்கள், இந்த பாடலை ஒரு பெண் ஆசிரியர்தான் இயற்றியிருக்க வேண்டும் என வாதிடுகின்றனர். திருப்பாடல்கள் சிலவற்றை பெண்களும் இயற்றியிருக்கலாம் என்ற வாதத்திற்கு இது வலுச்சேர்க்கிறது. இருப்பினும் இந்த கூற்றின் உண்மைத்தன்மையை அறிவது அவ்வளவு இலகுவான விடயமாக இருக்காது.
வ.0: இந்த திருப்பாடலின் முன்னிணைப்பு அல்லது முன்னுரை, இதனை 'தாவீதின் ஏறுகின்ற பாடல்' (שִׁיר הַֽמַּֽעֲל֗וֹת לְדָוִד ஷிர் ஹம்ம'அலோத் லெதாவித்) என்று வார்த்தைப்படுத்துகிறது. சீயோன் மலையில் திருப்பயணிகள் திருப்பயணம் செய்கின்றபோது பல திருப்பாடல்களை பாடினர். இந்த கருதுகோளை மனதில் வைத்தும், இதன் முன்னுரையைக் கொண்டும், இந்த பாடலை சீயோன் திருப்பயண பாடல் என வகைப்படுத்தலாம். இருப்பினும் இது ஒருவகையான ஊகம் மட்டுமே. அத்தோடு தாவீதுடையது, அல்லது தாவீதிற்கானது, தாவீதால் என்ற வார்த்தை பிற்காலத்தில் சேர்க்கப்பட்டிருக்கலாம் (לְדָוִד லெதாவித்).
வ.1: முதலாவது வரியில் தான் எப்படிப்பட்டவர் அல்ல, என்பதை ஆசிரியர் எதிர்மறை கூற்றிலே விளக்குகிறார். இதுவும் அக்கால பக்தி இலக்கியங்களில் ஒரு வகைப் பாடல் என்பது புரிகிறது.
இதனை ஒருவர் தன்னுடைய குற்றமற்ற தன்மையை வெளிப்படுத்த உபயோகிப்பர். இந்த வரியில் பலவிதமான குற்றமற்ற தன்மையை ஆசிரியர் வெளிப்படுத்துகிறார்:
அ. என் உள்ளத்தில் இறுமாப்பில்லை (לֹא־גָבַ֣הּ לִ֭בִּי லோ'-காவஹ் லிப்பி, என் இதயத்தில் உயரம் இல்லை). இறுமாப்பு விவிலியத்தில் கடவுளுக்கு எதிரான பாவமாகக் கருதப்பட்டது.
இஸ்ராயேலர் கடவுளுக்கு முன்னால் தாழ்ச்சியுடையவராக வாழ அழைக்கப்பட்டனர். நம்பிக்கையில்லாதவர்கள்தான், இறுமாப்புடன் வாழ்ந்தனர் என்றும் ஆசிரியர்கள் நம்பினர். இறுமாப்பை உளவியல் சிக்கல் என்பதை விட, கடவுளுக்கு எதிரான குற்றமாகவே கருதினர். அரசர்கள் மற்றும் தலைவர்கள் தோல்வியடைவதற்கான காரணம் இறுமாப்பு என நம்பப்பட்டது.
ஆ. என் பார்வையில் செருக்கு இல்லை (לֹא־רָמוּ עֵינַי லோ'-ராமூ 'எனாவ், என் கண்களில் உயர்ச்சியில்லை). முதல் வரியில் இந்தப் பிரிவு, ஏற்கனவே பாடப்பட்டதை திருப்பிச் சொல்கிறது. இது எபிரேய கவிநடையில் மிகவும் முக்கியமான ஒரு அம்சம். பார்வையிலும் செருக்குள்ளதை அக்கால மனிதர்கள் நன்கு அறிந்திருந்தனர். பார்வையின் தன்மையைக் கொண்டே மனதின் எண்ணங்களை அறிய முடியும் என்பதை இக்கால உளவியலாளர்களும் ஏற்றுக்கொள்கின்றனர்.
இ. என் தகமைக்கு மிஞ்சின அரிய பெரிய செயல்களில், நான் என்னை ஈடுபடுத்துவதில்லை (וְלֹֽא־הִלַּ֓כְתִּי ׀ בִּגְדֹל֖וֹת וּבְנִפְלָא֣וֹת מִמֶּֽנִּי׃ வெலோ'-ஹில்லக்தி விகெதோலொத் வுபெநிப்லா'ஓத் மிமெநி). ஒருவர் தன்னைப் பற்றி சரியான புரிதல்களைக் கொண்டிருக்க வேண்டும். இந்த உலகத்தில் தனக்கு முடியாத சில விடயங்களும் உள்ளன என்பது நல்ல அறிவு. என்னால் எல்லாம் முடியும் என்பது, எக்காலத்திற்கும் பொருந்தாது. இது உளவியலில் சரியாக இருக்கலாம், ஆனால் ஆன்மீகத்தில் இது சரியாக இருக்காது.
எனக்கு சில விடயங்கள் நன்றாக வரும், எனக்கு வராதவை மற்றவருக்கு வரும். இந்த சிந்தனைகளை இந்த பாடல் ஆசிரியர் நன்கு அறிந்திருக்கிறார். தன்னுடைய தேவைகள் மற்றும் நிலைமைகளுக்கு அதிகமானவை தனக்கு தேவையில்லை, என்று பாடுகிறார். உண்மையாகவே இவர் தாழ்ச்சியுடையவர் என கொள்ளலாம்.
வ.2: முதலாவது வரியில் தன்னிடம் என்ன இல்லை என்பதையும், தனக்கு எது தேவையில்லை என்பதையும் சொன்னவர், இந்த வரியில் தனக்கு விருப்பமானது எது என்று சொல்கிறார்.
(אִם־לֹ֤א שִׁוִּ֨יתִי ׀ וְדוֹמַ֗מְתִּי נַ֫פְשִׁ֥י இம்-லோ' ஷிவ்விதி வெதோமம்தி நப்ஷி, மாறாக நான் அமைதியானேன், என் உள்ளம் சாந்தமாக உள்ளது.)
அமைதியையும், நிறைவையுமே தன்னுடைய இனிமையாக காண்கிறார். இறுமாப்பு, கர்வம், மற்றும் தேவைக்கதிகமான எதிர்பார்ப்புக்கள் என்பவற்றை விட, இவற்றில்தான் தன் மனம் நிறைவு காண்கிறது என்பது, இந்த ஆசிரியரின் ஆழமான சுய அறிவைக் காட்டுகிறது. இதற்கு அவர் தாயின் மடியில் இருக்கும் குழந்தையை ஒப்பிடுகிறார் (כְּגָמֻל עֲלֵי אִמּ֑וֹ கெகாமூல் 'அலெய் இம்மோ- பால்குடி மகவு தன்தாயிடம் போல). தாய் மடியில்தான் குழந்தை அமைதியாக இருக்கும் என்பதை இவர் நன்கு உணர்ந்திருக்கிறார், இந்த வரியைக் கொண்டுதான் இந்த ஆசிரியர் ஒரு பெண்ணாக இருக்க வேண்டும் என சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
(இக்காலத்திலும் இந்த உருவகம் நன்கு பொருந்துகின்ற ஒன்றாகத்தான் இருப்பினும், சில குழந்தைகள் தாய்மடியை விட கைப்பேசி, அலைபேசி, தொடுதிரைகள், மடிக்கணணிகள், வீடியோ விளையாட்டுக்களைத்தான் அதிகமாக விரும்புகின்றனர். சில தாய்மார்களும் தங்கள் குழந்தைகளைவிட வேறு தேவைகளையும் அதிகமாக விரும்புகிறார்கள் என்பது துன்பமான உண்மை).
வ.3: இந்த திருப்பாடலின் செய்தி இந்த வரியில் சொல்லப்படுகிறது. உலகம் எப்படியிருந்தாலும்,
இஸ்ராயேல் தன் கடவுளில் நம்பியிருக்க வேண்டும் என்பது கட்டளையாக சொல்லப்படுகிறது,
יַחֵ֣ל יִ֭שְׂרָאֵל אֶל־יְהוָ֑ה (யாஹெல் யிஸ்ரா'எல் 'எல்-அதோனாய், இஸ்ராயேலே உன் கடவுளிலே நம்பியிரு).
இந்த வரியணி; இரண்டாவது பாகம், இந்த நம்பிக்கையை எப்போதுமே கொண்டிருக்க வேண்டும் என்ற கட்டளையையும் கொடுக்கிறது.
1தெசலோனியர் 2,7-9.13
7மாறாக, நாங்கள் உங்களிடையே இருந்தபொழுது, தாய் தன் குழந்தைகளைப் பேணி வளர்ப்பதுபோல், கனிவுடன் நடந்து கொண்டோம். 8இவ்வாறு உங்கள் மீது ஏக்கமுள்ளவர்களாய், கடவுளுடைய நற்செய்தியை மட்டுமன்றி, எங்களையே உங்களுக்குக் கொடுத்துவிட ஆவலாய் இருந்தோம்; ஏனெனில் நீங்கள் எங்கள் அன்புக்குரியவர்கள் ஆகிவிட்டீர்கள். 9அன்பர்களே! நாங்கள் எவ்வாறு பாடுபட்டு உழைத்தோம் என்பதை நினைத்துப் பாருங்கள். உங்களுள் எவருக்கும் சுமையாய் இராதபடி, எங்கள் பிழைப்புக்காக இராப் பகலாய் வேலை செய்துகொண்டே, கடவுளுடைய நற்செய்தியை உங்களுக்குப் பறைசாற்றினோம்.
13கடவுளின் வார்த்தையை நீங்கள் எங்களிடமிருந்து கேட்டபோது அதை மனித வார்த்தையாக அல்ல, கடவுளின் வார்த்தையாகவே ஏற்றுக் கொண்டீர்கள். இதற்காக நாங்கள் கடவுளுக்கு இடைவிடாது நன்றி கூறுகிறோம். உண்மையாகவே அது கடவுளுடைய வார்த்தைதான்; அதுவே நம்பிக்கை கொண்ட உங்களில் செயலாற்றுகிறது.
தெசலோனிக்கா, கிரேக்க மசிதோனியாவில், உரோமை பேரரசின் மிக்கியமான முக்கியமான துறைமுக நகர்களில் ஒன்றாக இருந்தது. புவுலும், சீலாவும், திமோத்தேயுவும், பவுலுடைய
இரண்டாவது பயணத்திலே இந்த இடத்தை தரிசித்தனர் (காண்க தி.பணி 16-18). யூதர்களும் கிரேக்கர்களும் இந்த இடத்திலே கிறிஸ்தவர்களாக மாறியிருந்தனர். யூதர்களின் எதிர்ப்பால் பவுல் இந்த இடத்தை விட்டகன்று, எபேசில் தங்கியிருந்தார், அங்கிருந்து திமோத்தேயுவை மீண்டும் இந்த திருச்சபையிடம் அனுப்பினார். அநேகமாக கொரிந்திலிருந்து பவுல் தெசலோனிக்கருக்கு திருமுகத்தை எழுதியிருக்க வேண்டும். தெசலோனிக்கருக்கான முதலாவது திருமுகம் காலத்தால் மிகவும் முந்தியது. புதிய ஏற்பாட்டில் இதனைத்தான் முதலாவது நூல் என்றும் கூட பலர் கருதுகின்றனர். புதிதாக பிறந்;திருந்த திருச்சபைக்கு எழுதப்பட்டதால், இந்த திருமுகமும் இறையியலில் மிகவும் புதிதாகவே இருந்திருக்க வேண்டும்.
தெசலோனிக்க திருச்சபையின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டே பவுல் இந்த திருமுகத்தை எழுதியிருக்க வேண்டும். ஆண்டவருடைய இரண்டாவது வருகை (παρουσία பரூசியா), மற்றும் அதனைப் பற்றிய தப்பான கொள்கைகளின் ஆதிக்கம், போன்றவற்றைப் பற்றியே இந்த திருமுகம் முக்கியமாக பேசுகிறது. பவுலும் தன்னுடைய போதனையில் ஆண்டவருடைய இரண்டாம் வருகையை பற்றி அதிகமாக பேசியிருக்கிற படியால் அதனை சரியாக விளங்கப்படுத்த வேண்டியவராக இருக்கிறார் (காண்க 1,9-10: 2,19: 3,13: 4,13-5,11: 5,23). பவுல்தான் இந்த திருமுகத்தை எழுதினார் என்பதற்கு பல அகச் சான்றுகளும் இதிலே இருக்கின்றன. பவுலுடைய மொழி நடையை இந்த திருமுகம் அதிகமாகவே கொண்டுள்ளது.
அக்கால கடித முறையை பின்பற்றி எழுதுபவர், வாழ்த்து, எழுதப்படுபவர் என்ற தலைப்புக்களை இந்த கடிதம் அழகாகவே பின்பற்றுகிறது. தான் உருவாக்கிய திருச்சபை ஆண்டவரை நோக்கி நேர்த்தியாக பயணிக்கிறது என்பதை பற்றி பவுல் மகிழ்ச்சியாக இருக்கிறார். திருச்சபை பணியாளர்களுக்கு எதிரானவர்கள், அதிகமாக இருந்தாலும், திருச்சபை வலுவாக இருப்பதை இந்த திருமுகம் காட்டுகிறது (காண்க 2,13-16). பவுல் தெசலோனிக்க திருச்சபையை பற்றி அதிகமாக கவலைப்பட்டு திமோத்தேயுவை அனுப்பி, திமோத்தேயு நல்ல செய்தியைக் கொண்டுவந்ததும், அந்த மகிழ்வை இந்த கடிதத்தில் காட்டுகிறார்.
கடித்தின் முதல் பாகத்தில் மகிழ்வைக் காட்டிய திருத்தூதர், இரண்டாம் பாகத்தில் தன்னுடைய கரிசனைகளை வெளிப்படுத்துகிறார். தன் மக்கள் தூய்மையான வாழ்வை தொடர்ந்து வாழவேண்டும் என்பது பவுலுடைய போதனை, முக்கியமாக பாலியல் துன்நடத்தையை பற்றி இந்த திருமுகம் எச்சரிக்கிறது (காண்க 4,1-12). இரண்டாவதாக, ஆண்டவருடைய வருகைக்கு முன் இறந்திருக்கிறவர்களைப் பற்றி தெசலோனிக்கருக்கு இருந்த கவலையை தீர்க்கிறார். அதாவது அவர்களும் உயிரோடு இருக்கிறவர்களுடன் சேர்ந்து ஆண்டவரை காண்பார்கள் என்கிறார் அத்தோடு ஆண்டவருடைய வருகை அதிசயமாக இருக்கும் என்றும் சொல்கிறார் (காண்க 4,13-5,11). இறுதியாக தன்னுடைய அன்பான வார்த்தையாலும், வாழ்த்தாலும் இந்த திருமுகத்தை நிறைவு செய்கிறார்.
வ.7: இந்த பகுதி பவுல், தாங்கள் தெசலோனிக்காவில் இருந்தபோது ஆற்றிய பணியைப் பற்றி மீளக்கூறும் பகுதியாக அமைகிறது. பவுல் தன்னையும் தன் உடன்பணியாளர்களையும், தாயாகவும், திருச்சபையை பிள்ளைகளாகவும் வர்ணிக்கிறார். தாய் தன் பிள்ளைகளை பேணுவதைப் போல தாங்கள் இந்த திருச்சபையை வளர்த்ததாகச் சொல்கிறார் (ὡς ἐὰν τροφὸς θάλπῃ τὰ ἑαυτῆς τέκνα போஸ் எயான் டுரொபொஸ் தால்பே டா எயவுடேஸ் டெக்னா- செவிலி (பாலூட்டும் தாய்) தன் குழந்தையை கவனிப்பதுபோல).
தாங்கள் மென்மையாக இருந்தோம் என்பதைக் குறிக்க, தாங்கள் குழந்தைபோல
இதமாக இருந்தோம், கடுமையாக இருக்கவில்லை என்கிறார் (νήπιοι ἐν μέσῳ ὑμῶν நேபியோய் என் மெசோ ஹுமோன்- உங்கள் மத்தியில் குழந்தை போல). சில முக்கியமில்லாத படிவங்கள் இந்த இடத்தில், 'குழந்தைபோல' என்ற சொல்லை, 'மென்மையாக' (ἤπιοι ஏபியோய்) என்று மாற்றுகிறது.
வ.8: இந்த வரி பவுலுடைய அழகான அன்பைக் காட்டுகிறது. தாங்கள் இவர்கள் மீது ஏக்கமுள்ளவர்களாக (ὁμειρόμενοι ஹொமெய்தெராமெநொய்- விருப்பமுள்ளவர்கள்) இருந்ததாகவும், நற்செய்தியை மட்டுமல்ல (εὐαγγέλιον எவுஅங்கலியொன்- நற்செய்தியை) மாறாக தங்களை கொடுக்கும் அளவிற்கும் ஆயத்தமாக இருந்ததாகவும் சொல்கிறார். நற்செய்தி என்பது இங்கே பெயர்ச் சொல்லாக பயன்படுத்தப்படுவது அவதானிக்கப்படவேண்டும். இக்காலத்தில் நற்செய்தி என்ற சொல் இயேசுவின் வார்த்தைகளைக் குறிக்க பயன்பட தொடங்கிவிட்டது.
தெசலோனிக்க திருச்சபை தங்களுடைய அன்பர்கள் ஆகிவிட்டார்கள் என்று பவுல் மெச்சுவது, இவருக்கும் இத்திருச்சபைக்கும் உள்ள உறவைக் காட்டுகிறது (ἀγαπητοὶ அகாபேடொய்- அன்புக்குரியவர்கள்).
வ.9: தெசலோனிக்காவில் இருந்த காலத்தில், பவுலும் அவர் நண்பர்களும் வேலைசெய்து கொண்டே நற்செய்தியை போதித்திருக்க வேண்டும். இதனைத்தான் இந்த வரியில் குறிப்பிடுகிறார். இது தேவையாக இருந்ததா, அல்லது பவுல் இதனையும் ஒரு போதனையாக செய்தாரா என்ற கேள்வி எழுகிறது. பவுல் ஒரு திட்டத்தோடே இவ்வாறு செய்திருக்க வேண்டும் என்பது புலப்படுகிறது.
கடினமாக உழைத்தார்கள் என்பதை குறிக்க, இரவும் பகலும் வேலை செய்ததாகச் சொல்கிறார் (νυκτὸς καὶ ἡμέρας நுக்டொஸ் காய் ஹேமெராஸ்- இரவும் பகலும்). அத்தோடு தெசலோனிக்கரை, சகோதர சகோதரிகளே என்று இதமாக அழைக்கிறார் (ἀδελφοί அதெல்பொய்- சகோதரரே).
வ.13: இந்த வரி தெசலோனிகரின் நம்பிக்கையைக் காட்டுகிறது. திருத்தூதர்களுடைய வார்த்தையை, இவர்கள் இறைவார்த்தையாக, சரியாக ஏற்றுக்கொண்டனர் என சொல்கிறார். இது தெசலோனிக்கேயருடைய விசுவாச முதிர்ச்சியை காட்டுகிறது. மனித வார்த்தையாக மட்டும் பார்த்திருந்தால், இவர்களால் கடவுளின் வார்த்தையை கண்டிருக்க முடியாமல் போயிருக்கும்.
இதனை பெரும் வெற்றியாக பவுல் காண்கிறார், இவர்களுடைய இந்த ஆழமான விசுவாசத்தின் பொருட்டு தான் கடவுளுக்கு இடைவிடாமல் நன்றி சொல்வதாக பவுல் சொல்கிறார் (εὐχαριστοῦμεν எவுகரிஸ்டூமென், நன்றி சொல்லிக்கொண்டிருக்கின்றோம்.).
மத்தேயு 23,1-12
மறைநூல் அறிஞர், பரிசேயர் கண்டிக்கப்படல்
(மாற் 12:38 - 40; லூக் 11:37 - 52; 20:45 - 47)
1பின்பு இயேசு மக்கள் கூட்டத்தையும் தம் சீடரையும் பார்த்துக் கூறியது: 2'மறைநூல் அறிஞரும் பரிசேயரும் மோசேயின் அதிகாரத்தைக் கொண்டிருக்கின்றனர். 3ஆகவே அவர்கள் என்னென்ன செய்யும்படி உங்களிடம் கூறுகிறார்களோ அவற்றையெல்லாம் கடைப்பிடித்து நடந்து வாருங்கள். ஆனால் அவர்கள் செய்வதுபோல நீங்கள் செய்யாதீர்கள். ஏனெனில் அவர்கள் சொல்வார்கள்; செயலில் காட்ட மாட்டார்கள். 4சுமத்தற்கரிய பளுவான சுமைகளைக் கட்டி மக்களின் தோளில் அவர்கள் வைக்கிறார்கள்; ஆனால் அவர்கள் தங்கள் விரலால் தொட்டு அசைக்கக் கூட முன்வரமாட்டார்கள். 5தாங்கள் செய்வதெல்லாம் மக்கள் பார்க்க வேண்டும் என்றே அவர்கள் செய்கிறார்கள்; தங்கள் மறைநூல் வாசகப் பட்டைகளை அகலமாக்குகிறார்கள்; அங்கியின் குஞ்சங்களைப் பெரிதாக்குகிறார்கள். 6விருந்துகளில் முதன்மையான இடங்களையும் தொழுகைக் கூடங்களில் முதன்மையான இருக்கைகளையும் விரும்புகின்றார்கள்; 7சந்தைவெளிகளில் மக்கள் தங்களுக்கு வணக்கம் செலுத்துவதையும் ரபி என அழைப்பதையும் விரும்புகிறார்கள். 8ஆனால் நீங்கள் 'ரபி' என அழைக்கப்பட வேண்டாம். ஏனெனில் உங்களுக்குப் போதகர் ஒருவரே. நீங்கள் யாவரும் சகோதரர், சகோதரிகள். 9இம்மண்ணுலகில் உள்ள எவரையும் தந்தை என நீங்கள் அழைக்க வேண்டாம். ஏனெனில் உங்கள் தந்தை ஒருவரே. அவர் விண்ணகத்தில் இருக்கிறார். 10நீங்கள் ஆசிரியர் எனவும் அழைக்கப்பட வேண்டாம். ஏனெனில் கிறிஸ்து ஒருவரே உங்கள் ஆசிரியர். 11உங்களுள் பெரியவர் உங்களுக்குத் தொண்டராக இருக்க வேண்டும். 12தம்மைத்தாமே உயர்த்துகிறவர் எவரும் தாழ்த்தப்பெறுவர். தம்மைத்தாமே தாழ்த்துகிறவர் எவரும் உயர்த்தப்பெறுவர்.
மறைநூல் அறிஞர்களும் பரிசேயர்களும், மத்தேயு நற்செய்தியில் நன்றாக வாங்கிக் கட்டிக்கொள்கிறார்கள். இதற்கு ஆரம்கால திருச்சபை சந்தித்த துன்பங்களை காரணமாகவும் சொல்கிறார்கள், சில அறிஞர்கள். இன்றைய நற்செய்தியிலும், மறைநூல் அறிஞர்களும், பரிசேயர்களும் மீண்டும் ஒருமுறை கண்டிக்கப்படுகிறார்கள்.
மத்தேயுவின் 23வது அதிகாரம், ஆண்டவருடைய யூதேய பணிநிகழ்வு, என்ற பகுதியில் அமைந்துள்ளது. இயேசு எருசலேமிற்குள் நுழைந்தவுடன் அங்கே அவரை யூத தலைமைத்துவம் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை இந்த பகுதிகள் காட்டுகின்றன.
வ.1: இந்த பகுதிக்கு முன்னர் இயேசு தாவீதின் மகனைப் பற்றி பரிசேயரிடம் கேள்வி கேட்கிறார் (22,41-46). இவர்களுடைய விடை, தாவீதின் மனித இனத்தில் ஒரு மகன்தான் மெசியாவாக
இருப்பார் என்பது போல இருக்கிறது. ஆனால் இயேசுவின் விளக்கமோ இந்த மெசியா தாவீதின் மனித வாரிசாக இருக்காது என்பதை காட்டுவது போல இருக்கிறது. இயேசுவின் விளக்கத்தை பரிசேயர்களால் எதிர்க்க முடியவில்லை. இந்த வேளையில் இயேசு மக்கள் பக்கம் திரும்பி இதனைக் கூறுகிறார், இந்த இடத்தில் மக்கள் கூட்டமும், அவர் சீடர்களும் ஒருமித்து நோக்கப்படுகிறார்கள் (ὄχλοις καὶ τοῖς μαθηταῖς αὐτοῦ ஒக்லொய்ஸ் காய் டொய்ஸ் மதேடாய்ஸ் அவுடூ- கூட்டத்திற்கும் அவர் சீடர்களுக்கும்).
வ.2: மறைநூல் அறிஞர்களும், பரிசேயர்களும் யார் என்று இயேசு தெளிவுபடுத்துகிறார். அதிகமான பரிசேயர்கள் மறைநூலில் புலமைத்துவம் உள்ளவர்களாகவே இருந்தார்கள். பிற்காலத்து யூத விவிலிய ஆய்வாளர்கள்கூட இந்த வழிமரபில் வந்தவர்கள்தான். இயேசு அனைத்து பரிசேயர்களையும், மறைநூல் அறிஞர்களையும் எப்போதுமே சாடினார் என்பதற்கில்லை. இயேசுவை ஏற்காத அல்லது, ஆரம்ப கால திருச்சபையை துன்புறுத்திய பரிசேய-மறைநூல் அறிஞர்களுக்கே இவை பொருந்தும் என எடுக்கலாம். இயேசுவிற்கு பரிசேயர்களிலும், மறைநூல் அறிஞர்களிலும் நண்பர்கள் அல்லது, ரசிகர்கள் இருந்திருக்கிறார்கள். நிக்கோதேம் இதற்கு ஒரு நல்ல உதாரணம்.
மறைநூல் அறிஞர்களையும், பரிசேயர்களையும் மேசேயின் இடத்திற்கு உயர்த்துகிறார்
இயேசு (Μωϋσέως καθέδρας ἐκάθισαν மோஊசெஓஸ் கதெத்ராஸ் எகாதிஸான்- மேசேயின் கதிரையில் அமர்ந்திருக்கிறார்கள்). இது இவர்களை உயர்த்துவது போல உள்ளது, இதற்கான விடையை அடுத்த வரியில் காணலாம்.
வ.3: அவர்கள் சொல்வதெல்லாம் செய்யுங்கள் என்கிறார் இயேசு, ஏனெனில் அவர்கள் சொல்வது மோசேயுடையது என்பதால், அவற்றை செய்யாவிட்டால் மோசேயின் போதனைக்கு எதிரான குற்றமாக மாறிவிடும் என்பதை இயேசு அறிந்திருக்கிறார். அத்தோடு இயேசு மோசேயின் போதனைக்கோ அல்லது யூத கலாச்சாரத்திற்கோ எதிரானவர் அல்ல என்பதையும் இது காட்டுகிறது. இதனைவிட, இயேசுவை புதிய மோசேயாக மத்தேயு காட்டுகிறார் என்ற வாதமும் பலமாக இருக்கிறது.
மோசேயின் இடத்திற்கு இவர்களை உயர்த்திவிட்டு, அதேவேகத்தில் அவர்களை கீழே தள்ளிவிடுகிறார். இவர்கள் மோசே சொன்னதைப்போல சொல்வார்கள் ஆனால், மோசே செய்ததை செய்யார்கள். இதனால் இவர்கள் உண்மையாகவே மோசேயின் சீடர்கள் அல்ல எனக் காட்டுகிறார் (λέγουσιν γὰρ καὶ οὐ ποιοῦσιν லெகூசின் கார் காய் ஊ பொய்யூசின், சொல்வார்கள் ஆனால் செய்யமாட்டார்கள்). இதன் மூலமாக, தான் சொல்வதிலும் செய்வதிலும் ஒத்த கருத்துடையவர் என்பதைக் காட்டுகிறார் எனலாம்.
வ.4: இவர்களுடைய வெளிவேடத்தனமான மறையுரைகள் கண்டிக்கப்படுகின்றன. மக்களின் மீது பளுவான சுமைகளை வைக்கிறார்கள் என்கிறார் (φορτία βαρέα பொர்டியா பாரெயா, பாரமான சுமை). இந்த பளுவான சுமைகள் எதுவென இந்த வரியில் காட்டவில்லை. ஒருவேளை பரிசேயர்களும், மறைநூல் அறிஞர்களும், அக்காலத்தில் மக்கள்மீது திணித்த சட்டங்களை இயேசு சாடியிருக்கிறார் எனலாம்.
இந்த பாரமான சுமையை இவர்கள் தங்கள் விரலால் தொட்டு அசைகக்கூட முன்வரமாட்டார்கள். இதன் வழியாக இந்த தலைவர்கள் தங்கள் சொல்லளவில் மட்டுமே தலைவர்களாக இருக்கிறார்கள் என்பது புலப்படுகிறது. உரோமையருடைய காலத்தில் யூத தலைமைத்துவம், வெறும் சொல்லளவில் இருந்திருக்கிறது போல தெரிகிறது, அல்லது இவர்கள் கிறிஸ்தவர்கள் மீது காட்டிய வெறுப்பின் கனாகனம் தெரிகிறது எனலாம்.
வ.5: இந்த தலைவர்கள் மக்கள் பார்க்கவேண்டும் என்பதற்காக என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதை விவரிக்கிறார் இயேசு. இந்த விவரணத்திலிருந்து, அக்காலத்தில் யூத தலைமைத்துவம் எப்படி உடுத்தியது என்பதையும் புரிந்துகொள்ளலாம்.
அ. தங்கள் மறைநூல் வாசகப் பட்டகங்களை அகலமாக்குகிறார்கள் (φυλακτήριον புலாக்டேரியோன்). இது சிறியவகை தோற்களால் ஆன வாக பட்டங்கள். இதிலே முதல் ஏற்பாட்டு வாகங்கள் எழுதப்பட்டிருந்தன. இதனை யூதர்கள் தங்கள் நெற்றியிலும், கைகளிலும் அணிந்திருந்தார்கள். இந்த முறையை முதல் ஏற்பாட்டு நூல்களும் விவரிக்கின்றன (காண்க வி.ப 13,9: 16: இ.ச 6,8: 11,18).
ஆ. அங்கியின் குஞ்சங்களை பெரிதாக்குகின்றார்கள் (κράσπεδον கிராஸ்பெதொன்). இது அங்கிகளின் நுனியில் தொங்கவிடப்பட்டது. இந்த அழகு குஞ்சம், மோசேயின் சட்டத்தை நினைவூட்டுகிறது என்ற ஒரு வாதமும் உள்ளது, அத்தோடு இது அங்கிகளின் விலைமதிப்பை உயர்த்துவாதாகவும் அமைகிறது என்ற வாதமும் உள்ளது.
வ.6: உடைகளில் என்ன செய்கிறாhகள் என்பதைக் காட்டிய இயேசு, இவர்கள் நடத்தையில் என்ன செய்கிறார்கள் என்பதையும் காட்டுகிறார். விருந்துகளில் முதன்மையான இடங்களை இவர்கள் நாடுகிறார்கள் எனச் சொல்கிறார் (πρωτοκλίσια புரோடொகிலிசியா- முதல் இடம்). இவர்கள் யூத தலைவர்களாக இருந்த படியால், தங்களுக்கு முதன்மையான இடங்கள், அதுவும் விருந்துகளில் வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். இந்த பண்பு இயேசுவின் தாழ்ச்சிக்கு எதிரான பண்பு. இந்த கௌரவத்தை தேடும் போக்கு, ஆதிகால திருச்சபையின் தலைமைத்துவத்திலும் இருந்திருக்கலாம். இதனை நினைவிற்கொண்டுதான் மத்தேயு இதனை பதிகிறார் என்றும் எண்ணலாம்.
அதேவேளை இவர்கள் செபக்கூடத்திலும் முதன்மையான இருக்கையை விரும்புகிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது. இரண்டாம் தேவாலயத்தின் காலத்தில், செபக்கூடம், யூதர்களின் வழிபாட்டில் முக்கியத்துவம் பிடித்தது. ஒவ்வொரு செபக்கூடத்திலும், மோசேயின் இருக்கை என்று ஒன்று இருந்தது. இது மோசேயின் அதிகாரத்தை காட்டியது. சாதரணமாக செபக்கூட தலைவர் முதன்மையான இடத்தில் அமர்ந்து செபங்களை வழிநடத்துவார். முதன்மையான இருக்கைகள் பரிசேயர்களுக்கும், மறைநூல் அறிஞர்களுக்கும் வழங்கப்பட்டது. இதற்கு இவர்களின் கல்வித் தகமைகளும், பாரம்பரிய தகைமைகளும் காரணமாக இருந்திருக்கலாம் (πρωτοκαθεδρία புரோடொகாதெத்ரியா- முன்மையான கதிரை).
வ.7: பரிசேயர்களும், மறைநூல் அறிஞர்களும், ராபிக்கள் என அழைக்கப்பட்டார்கள். ராபிக்கள் என்றால் ஆசிரியர், போதகர் என்ற அர்த்தத்தைக் கொடுத்ததால், மக்களும் இவர்களை அவ்வாறே அழைத்தார்கள் (இன்று சிறிய வயதானாலும், குருக்களை வயது முதிந்தவர்கள்கூட 'அருட் தந்தையே' என்று அழைப்பதைப் போல). சந்தை வெளி என்பது இங்கே பொதுவான மக்கள் கூடும் இடத்தைக் குறிக்கிறது. ஆக இந்த தலைவர்கள், மக்கள் தங்களுக்கு வணக்கம் செலுத்துவதை விரும்பியிருக்கிறார்கள் எனலாம்.
வ.8: இயேசு இவர்களை ராபி என அழைக்கவேண்டாம் என்கிறார், அதற்கு காரணம், தான் ஒருவரே உண்மையான ராபியாக இருக்கிறேன் என்கிறார். உண்மையான ராபி தான் கற்பிப்பதை வாழவேண்டும், இதனை இவர்கள் செய்யவில்லை, இதனால் இவர்கள் உண்மையான ராபி இல்லை என்பதும், அத்தோடு மனிதர்கள் யாரும் ராபியாக இருக்க முடியாது. ஏனெனில் மனிதர்களில் அனைவரும், சகோதரர்களே என்ற உண்மையையும் விளங்கப்படுத்துகிறார் (ῥαββί ஹராப்பி).
வ.9: மண்ணுலகில் யாரையும் தந்தை எனவும் அழைக்கவேண்டாம் என்றும் சொல்கிறார். மண்ணுலகில் யாரையும், தந்தை என அழைப்பது, விண்ணுலகிலுள்ள உண்மையான தந்தைக்கு எதிராக அமைகிறது என்ற வாதம் தெரிகிறது (πατήρ பாடேர், தந்தை). இந்த வரிகளின் மூலமாக, அக்காலத்தில் மக்கள் சிலரை, மரியாதை மற்றும் தொழிலின் நிமித்தம், தந்தை என அழைத்திருப்பது புரிகிறது. மத்தேயு யூத மறையை நன்கு பின்பற்றிய படியால், விண்ணகத் தந்தையை பற்றி எழுதுகிறார்.
வ.10: இப்போது மக்களைப் பார்த்து அவர்கள் எப்படி அழைக்கப்படக்கூடாது என்கிறார். இவ்வளவு நேரமும் பரிசேயர் மற்றும் யூத தலைமையைப் பற்றி பேசியவர், இந்த வரியில் மக்கள்கூட ஆசிரியர்கள் என அழைக்கப்படக்கூடாது என்கிறார். கிறிஸ்து என்றால், மெசியா அல்லது, அபிசேகம் செய்யப்பட்டவர் என்று பொருள். இந்த சொல்லிற்கு ஆசிரியர் என்ற அர்த்தத்தையும் கொடுக்கிறார் இயேசு.
ஆசிரியர் என்பதற்கு καθηγητὴς (காதேகேடேஸ்) என்ற சொல் பயன்படுகிறது. இது 'சொல்லிக்கொடுப்பவர்' என்ற அர்தத்தைக் கொடுக்கிறது. இது நேரடியாக பரிசேயர்களை தாக்குகின்றது. ஏனெனில் பரிசேயர்கள் மற்றம் மறைநூல் அறிஞர்கள், ஆசிரியர்களாக கருதப்பட்டார்கள். இவர்களை இனி அப்படி அழைக்கவேண்டாம் என்பது, உண்மையில் கடுமையாக பார்கக்ப்பட்டிருக்கும்.
வ.11: பெரியவர் தொண்டராக இருக்கட்டும் என்பது இயேசுவுடையதும், திருச்சபையுடையதுமான அழகான பண்பு. திருச்சபையில் அதிகாரம் கிடையாது, மாறாக பொறுப்புக்களும் சேவைகளுமே உள்ளன என்பதை இந்த வரி நினைவூட்டுகிறது.
தொண்டருக்கு διάκονος (தியாகொனொஸ்), என்ற சொல் பாவிக்கப்பட்டுள்ளது. இந்த சொல் மேசையில் சேவை செய்த பணியாளர்களைக் குறித்தது. பிற்காலத்தில் இதுவும் திருச்சபையின் மிக முக்கியமான பகுதிகளில் ஒன்றாக மாறுகிறது. தியாக்கோன்களாக திருமண முடித்தவர்களும், வயதானவர்களும், பெண்களும் இருந்திருக்கிறார்கள். இன்று இந்த பணி, குருத்துவத்திற்கான ஆரம்ப படியாக பார்க்கப்படுகிறது. இருப்பினும், குருக்களாக வராமல், நித்திய தியாக்கோன்களாக பணியாற்றும் நிலையும் கத்தோலிக்க திருச்சபையில் இருக்கிறது. இந்த வரியில், தியாக்கோன் என்பது சாதாரண பணியாளர்களையே குறிக்கிறது.
வ.12: உயர்த்துகிறவர்களையும், தாழ்த்துகிறவர்களையும் ஒப்பிடுகிறார் இயேசு. தம்மை உயர்த்துகிறவர் தாழ்த்தப்படுவார் எனவும், தாழ்த்துகிறவர் உயர்த்தப்படுவார் எனவும் சொல்லப்படுகிறது. விசுவாசத்திற்கு தாழ்ச்சி மிகவும் முக்கியமான பண்பாகிறது. தாழ்ச்சி இல்லாதவர் விசுவசிக்க மாட்டார். ஆரம்ப கால திருச்சபை கர்வம் என்கின்ற நோயால் அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கும் என தோன்றுகிறது (இன்றும் இந்த நோய்க்கு குறைவில்லை).
ஒருவருடைய போதனை கவர்ச்சியாக இருந்தாலும்,
அவர் வாழ்வு எதிர்மறையாக இருந்தால், யாரும் கவரப்பட மாட்டார்கள்.
ஒருவருடைய வார்த்தை வறுமையாக இருந்தாலும்,
அவர் சாட்சிய வாழ்வு, வளமாக இருந்தால்,
மக்கள் விரைவில் அவரில் நம்பிக்கை வைப்பார்கள்.
வார்த்தையை அல்ல, வாழ்வே சாட்சியம் சொல்லும்.
குருக்களுக்கும், அனைவருக்கும் பொருந்தும்.
அன்பு ஆண்டவரே உம்மை வெற்றுப் பேச்சில் அல்ல,
வாழ்வில் வாழ, வரம் தாரும், ஆமென்.
மி. ஜெகன் குமார் அமதி
வசந்தகம், யாழ்ப்பாணம்.
வியாழன், 2 நவம்பர், 2017
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக