ஆண்டின் பொதுக்காலம் பத்தொன்பதாம் ஞாயிறு (அ)
13,08,2017
முதாலம் வாசகம்: 1அரசர் 19,9-13
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 85
இரண்டாம் வாசகம்: உரோமையர் 9,1-5
நற்செய்தி: மத்தேயு 14,22-33
1அரசர் 19,9-13
9அவர் அங்கிருந்த குகைக்கு வந்து, அதில் இரவைக் கழித்தார். அப்போது ஆண்டவரது வாக்கு அவருக்கு வந்தது. அவர் 'எலியா! நீ இங்கே என்ன செய்கிறாய்?' என்று வினவினார்.
10அதற்கு அவர், 'படைகளின் கடவுளாகிய ஆண்டவர் மீது நான் பேரார்வம் கொண்டவனாய் இருந்து வருகிறேன். ஆனால் இஸ்ரயேல் மக்கள் உமது உடன்படிக்கையை உதறிவிட்டனர். உம் பலிபீடங்களைத் தகர்த்து விட்டனர். உம் இறைவாக்கினரை வாளால் கொன்றுவிட்டனர். நான் ஒருவன் மட்டுமே எஞ்சியிருக்க, என் உயிரையும் பறிக்கத் தேடுகின்றனர்' என்றார். 11அப்போது ஆண்டவர், 'வெளியே வர் மலைமேல் என் திருமுன் வந்து நில். இதோ! ஆண்டவராகிய நான் கடந்து செல்லவிருக்கிறேன்' என்றார். உடனே ஆண்டவர் திருமுன் பெரும் சுழற்காற்று எழுந்து மலைகளைப் பிளந்து பாறைகளைச் சிதறடித்தது. ஆனால் ஆண்டவர் அந்தக் காற்றில் இல்லை. காற்றுக்குப் பின் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்திலும் ஆண்டவர்
இருக்கவில்லை. 12நிலநடுக்கத்திற்குப் பின் தீ கிளம்பிற்று. தீயிலும் ஆண்டவர் இருக்கவில்லை. தீக்குப்பின் அடக்கமான மெல்லிய ஒலி கேட்டது. 13அதை எலியா கேட்டவுடன் போர்வையினால் தம் முகத்தை மூடிக்கொண்டு வெளியே வந்து குகையின் வாயிலில் நின்றார். அப்பொழுது, 'எலியா, நீ இங்கே என்ன செய்கிறாய்?' என்று ஒரு குரல் கேட்டது.
எலியா இறைவாக்கினர் இஸ்ராயேல் நாட்டில் 'ஒரு' கடவுள் வழிபாட்டுக்கு மிகவும் ஈடுபாட்டோடு உழைத்தவர். இஸ்ராயேல் இனம், வரலாற்றில் கண்ட இறைவாக்கினர் பலருக்குள் மிகவும் பிரசித்தி பெற்றவராக விளங்குகிறார். எலியா என்றால் 'என் கடவுள் அதோனாய்' (אֵלִיָּהוּ 'எலிய்யாஹு) என்று பொருள். இவருடைய காலத்தில் வடநாடு 'பல' கடவுள் வழிபாட்டால் முக்கியமாக 'பால்' என்ற தெய்வ வழிபாட்டால் அதிகமாக பாதிக்கப்பட்டிருந்தது. எலியாவைப் பற்றிய வரலாறுகள் அரசர்கள் புத்தகங்கள் தோற்றம் பெறுவதற்கு முன்னமே, வழக்கிலும் வாய்மொழிப் பாரம்பரியத்திலும் இருந்தன, பின்னர் அரசர்கள் புத்தகங்களுள் உள்வாங்கப்பட்டன என்று பல ஆய்வாளர்களால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.
கிறிஸ்துவிற்கு முன் ஒன்பதாம் (கி.மு 9) நூற்றாண்டில் வடநாட்டில் ஆட்சி செய்த ஆகாப் என்ற பிரசித்தி பெற்ற அரசன் காலத்தில், எசாயா பணியாற்றியிருக்கிறார். ஆகாபுடைய காலத்தில் 'பல' கடவுள் வழிபாடு இஸ்ராயேல் நாட்டில் சகிக்கப்பட்டிருந்தது. அதற்கு அவருடைய மனைவி ஜெசபேல் ஒரு காரணமாக இருந்தார். ஜெசெபெல் ஒரு தீர் நாட்டு இளவரசி. இவர் தீர் நாட்டின் கடவுளான பாலின் விசுவாசியாக இருந்தார். தன் மனைவியை திருப்பதிப்படுத்த, ஆகாப் சமாரியாவில் பாலுக்கு கோவில் ஒன்றைக் கட்டுவித்தான். அத்தோடு பாலின் பல
இறைவாக்கினர்களும் இங்கு பணிக்கு அமர்த்தப்பட்டனர், இவர்கள் இஸ்ராயேலில் மதப் புரட்சி செய்ய முனைந்து, இஸ்ராயேல் கடவுளுக்கு பதிலாக, பாகாலையும் அஸ்தரேத்தையும் முன்னிலைப்படுத்தினர் (காண்க 1அரசர்18,19). ஆகாப் இந்த தெய்வங்களை வணங்கினாலும், இஸ்ராயேலின் கடவுளை புறக்கணித்தார் எனச் சொல்வதற்கில்லை. ஆகாபுடைய பிள்ளைகளுக்கு இஸ்ராயேலின் கடவுளோடு சம்பந்தப்பட்ட பெயர்களே வைக்கப்பட்டன. ஆகாப் சாலமோனைப் போல, தன்னுடைய மனைவிக்கு மத சுதந்திரம் கொடுக்க முனைந்து பிற கடவுள் வழிபாடுகளை அனுசரித்தார். இந்த பிற கடவுள் சகிப்புத்தன்மை இஸ்ராயேல் கலாச்சாரத்தினால்
ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒன்று. இதனால் இறைவாக்கினர்களின் எதிர்ப்பை ஆகாப் பலமாக சந்தித்தார். இது வன்முறையாக மாற, இஸ்ராயேல் கடவுளின் பல இறைவாக்கினர்களும், வழபாட்டு இடங்களும் அழிக்கப்பட்டன. இப்படியான காலப்பகுதியில்தான் எலியா இறைவாக்கினர் ஆகாபின் அரண்மனைக்கு எதிராக, இடியான பிரச்சாரங்களை முன்னெடுக்கிறார். ஆகாபிற்கு பல சவால்களையும் சாபங்களையும் கொடுக்கும் எலியா ஒரு இடத்ததில் பாகாலின் இறைவாக்கினர்களோடு போட்டி போட்டு, அதிலே அவர்கள் தோற்க, அவர்களை அங்கே கொலை செய்கிறார். இதனால் ஜெசெபேலின் சினத்திற்கு ஆளாகும் எலியா தன்னுயிரை காத்துக்கொள்ள தப்பி ஓடவேண்டியவராகின்றார் (காண்க 1அரசர் 19,1-2).
நாற்பது பகலும் இரவும் பயணம் செய்யும் எலியா, ஒரேப் மலையை அடைந்து அங்கே ஆண்டவரின் தரிசனத்திற்காக காத்திருக்கிறார்.
வவ.1-8: ஆகாப் ஜெசெபேலுக்கு, எலியா பால் தெய்வத்தின் இறைவாக்கினர்களுக்கு செய்தவற்றை அறிவிக்க, ஜெசெபேல் மிகவும் சினம் கொள்கிறாள். எலியாவை கொலை செய்வதாக சபதம் எடுக்கிறாள். இதனால் எலியா தன்னுயிரை காத்துக்கொள்ள தூர இடத்திற்கு ஓடி தன்னுயிரை கடவுள் எடுக்க வேண்டும் என மன்றாடுகிறார். இந்த கலக்கமான வேளையில் கடவுளின் வானதூதர் தோன்றி எலியாவை தேற்றுகிறார். வானதூதர் எலியாவிற்கு அப்பமும் தண்ணீரும் கொடுத்து அவருடைய பசியை போக்குகிறார். வானதூதரின் உணவால் பலமடைந்த எலியா, நாற்பது நாள் பயணம் மேற்கொள்கிறார், இந்த நாற்பது நாட்கள், நீண்ட நாட்களை குறிக்கும் ஒரு இலக்கம். இறுதியாக எலியா கடவுளின் மலையான ஒரேபு மலையை அடைகிறார் (הַר הָאֱלֹהִים חֹרֵֽב ஹர் ஹா'எலோஹிம் ஹொரெவ்).
வ.9: எலியா ஒரேபு மலையில் ஒரு குகையில் தங்குகிறார். இஸ்ராயேல் நாட்டு மலைகள் அதிகமான சுண்ண பாறைகளினாலான குகைகளைக் கொண்டிருக்கும். இப்படியான ஒரு குகையினுள் எலியா ஓய்வெடுக்கும் வேளையில் கடவுளின் குரலை அவர் அவதானிக்கிறார். குகை, மற்றும் நித்திரை போன்றவை, கடவுளுடைய காட்சியை விவரிக்க ஆசிரியரால் பயன்படுத்தப்படுகின்றன. ஆண்டவருடைய கேள்வி நகைப்பாக இருக்கிறது מַה־לְּךָ פֹה אֵלִיָּהוּ என்ன உனக்கு இங்கே எலியா? (மாஹ்-லெகா போஹ் 'எலிய்யாஹு). கடவுளுக்கு ஏதோ நடப்பவை தெரியாது போல காட்டப்படுகறது, ஆனால் ஆசிரியர் இந்த கேள்வியை உட்படுத்துவதன் மூலம், எலியாவை பேச வைக்கிறார், இதனால் வாசகர்களுடைய பல கேள்விகளுக்கு விடை கிடைக்கிறது.
வ.10: இந்த வசனம் மிக முக்கியமான விடைகளை அல்லது விளக்கங்களை வாசகர்களுக் கொடுக்கின்றது.
அ. எலியா படைகளின் ஆண்டவராகிய கடவுள் மேல் பேரார்வம் கொண்டவர். கடவுளுக்கு படைகளின் ஆண்டவர் என்ற பெயர் கொடுக்கப்படுகிறது (אֱלֹהֵ֣י צְבָאוֹת 'எலோஹெ ட்செவாஓத்). இந்தப் பெயர் விவிலியத்தில் அதிகமாக கடவுளுக்கு பயன்படுத்தப்படும் ஒரு முக்கியமான பெயர்ச் சொல். பேரார்வத்தைக் குறிக்க கன்னோ' (קַנֹּא) என்ற எபிரேய சொல் பாவிக்கப்பட்டுள்ளது. இது சுயநலம் அல்லது மிகுந்த ஈடுபாடு என்ற அர்த்தத்தையும் கொடுக்கும்.
ஆ. இஸ்ராயேலர் கடவுளின் உடன்படிக்கையை மீறிவிட்டனர் (עָזְבוּ בְרִֽיתְךָ בְּנֵ֣י יִשְׂרָאֵל). இந்த வரியின் மூலமாக ஒரே கடவுள் வழிபாடு ஒரு கடைப்பிடிக்கப்பட வேண்டிய உடன்படிக்கை என்பது தெளிவாகின்றது.
இ. இவர்கள் ஆண்டவருடைய பலிப்பீடங்களை தகர்த்துவிட்டனர் (אֶת־מִזְבְּחֹתֶ֣יךָ הָרָ֔סוּ). யூதேயாவின் எருசலேம் தேவாலயத்தைப் போன்று, வட அரசில் பல பலிப்பீடங்கள் கடவுளுக்கு
இருந்திருக்கின்றன. இவற்றை வேற்று நாட்டவர்கள் தகர்த்தார்கள் என்பதைத் தாண்டி சொந்த மக்களே அதனை தகர்த்திருக்கிறார்கள் என்பது, இவர்கள் வேற்று தெய்வங்களுக்கு பலி செலுத்த தயாராகிவிட்டார்கள் என்பதைக் காட்டுகிறது.
ஈ. அத்தோடு இவர்கள் ஆண்டவருடைய இறைவாக்கினர்களை வாளால் கொலை செய்துவிட்டார்கள் (אֶת־נְבִיאֶיךָ הָרְגוּ בֶחָרֶב). கொலை மற்றும் வாள் வன்முறையின் அடையாளம். கடவுளுடைய இறைவாக்கினர்களுக்கு எதிரான இந்த வன்முறை கடவுளுக்கு எதிரான பாரதூரமான வன்முறையாகவே காட்டப்படுகிறது. எலியாவினுடைய காலத்தில் பல இறைவாக்கு குழுக்கள் இருந்திருக்கிறார்கள், இவர்களும் இறைவாக்கினர்கள் என்றே அழைக்கப்பட்டார்கள். யார் யாரெல்லாம் கொலை செய்யப்பட்டார்கள் என்று சொல்லப்படவில்லை.
உ. எலியா மட்டுமே எஞ்சியிருக்க அவரையும் கொலை செய்ய தேடுகிறார்கள். ஜெசெபெல்தான் எலியாவை கொலை செய்ய தேடுகிறாள். ஆனால் இந்த அனைத்து பாதக செயல்களுக்கும் முழு இஸ்ராயேலர்களும் பொறுப்பு என்கிறார் ஆசிரியர். அரசன் எவ்வழியோ அவ்வழி குடி, என்பது போல.
வ.11: எலியாவின் நீண்ட குற்றச்சாட்டுகளைக் கேட்டு, அவரின் வேதனையை அறிந்த ஆண்டவர் தரிசனம் கொடுக்க முயல்கிறார். எலியாவிற்கு ஆண்டவரின் முன்னால் வரும் பாக்கியம் கிடைக்கிறது. இப்படியான பாக்கியம் முதல் ஏற்பாட்டில் பலருக்கு கிடைக்கவில்லை. மோசே ஆண்டவருடைய பிரசன்னத்தை ஒரு வகையில் கண்டவர். அதே சந்தர்ப்பம் இங்கே எலியாவிற்கு கிடைக்கிறது. அதிகமான ஆண்டவருடைய பிரசன்னங்கள், மலையிலேதான் கிடைக்கின்றன. மலை உயரமாக இருப்பதனால் அவை விண்ணகத்திற்கு அருகில் இருப்பதாக கருதப்பட்டது. அத்தோடு அவை தூய்மையான இடமாகவும் கருதப்பட்டது. ஒரேபு மலைமேல் எலியாவை ஆண்டவர் வரச்சொல்லி, ஒரேபு மலையில் தன்னுடைய பிரசன்னம் இருக்கிறது என காட்டுகிறார். இதனால்தான் ஆசிரியர் இந்த மலையை கடவுளின் மலை என்று சொல்கிறார் எனலாம்.
பின்னர் பெரும் காற்று சுழன்றடிக்கிறது, அந்தக் காற்று மலைகளை பிளக்கின்றது. ஆக அது ஒரு புயல்போன்ற பெரும் காற்று எனலாம். இதனை எபிரேயம் ר֣וּחַ גְּדוֹלָה ரூஹா கெதோலாஹ் (பெரிய மூச்சு) என்று வர்ணிக்கின்றது. இந்த காற்று எலியாவிற்கு பயத்தை உண்டு பண்ணியிருக்கும் இருந்தும் அதில் கடவுள் இல்லை. பெரும் காற்றில் கடவுள் இல்லை என்று ஆசிரியர் சொல்வதிலிருந்து, கடவுள், காற்றுக்கடவுள் இல்லை என்பது புலப்படுகிறது. காற்றுக் கடவுள் நம்பிக்கை, இஸ்ராயேல் மக்களின் அருகிலிருந்தவர்கள் மத்தியில் நம்பிக்கையில்
இருந்திருக்கலாம்.
காற்றிற்கு பின் நிலநடுக்கம் (הָרוּחַ רַעַשׁ ஹாரூஹா ரா'அஷ்) ஏற்படுகிறது அதிலும் கடவுள்
இல்லை. இந்த நிலநடுக்கத்திற்கும் ஆவி அல்லது மூச்சே காரணமாக இருக்கும் படியாக ரூவா என்ற சொல் பாவிக்கப்பட்டுள்ளது நோக்கப்பட வேண்டும்.
வ.12: நிலநடுக்கத்தின் பின்னர் தீ ஏற்படுகிறது (אֵ֔שׁ 'எஷ்), தீயிலும் ஆண்டவர் இல்லை என்கிறார் ஆசிரியர். மேற்குறிப்பிட்ட நிலநடுக்கம், புயல், தீ போன்றவை தெய்வங்களின் அடையாளமாக பார்க்கப்பட்டவை. இஸ்ராயேலின் கடவுளுக்கும் இந்த பௌதீக சக்திகளுக்கும் தொடர்பிருக்கிறது என்ற வாதமும் சில ஆய்வாளர்களால் முன்வைக்கப்படுகின்றன.
இந்த மூன்று அடையாளங்களுக்கு பின்னர் மெல்லிய ஒலி ஒன்று கேட்கிறது. இதனை அமைதியான மெல்லிய ஒலி (קוֹל דְּמָמָה דַקָּה கோல் தெமாமாஹ் தக்காஹ்) என்று எபிரேய விவிலியம் காட்டுகிறது. இதனை சில விவிலியங்கள் தென்றல் என்று வார்த்தைப்படுத்துகின்றன.
வ.13: இந்த மெல்லிய ஒலியை கேட்டவுடன் எலியா போர்வையால் தன் முகத்தை மூடுகிறார். எதற்காக போர்வையால் தன் முகத்தை மூடுகிறார் என்பது தெளிவில்லை ஒருவேளை தன்னுடைய விசுவாசத்தையும், கடவுளுடைய தூய்மையையும் வெளிக்காட்ட இப்படிச் செய்திருக்கலாம். எலியா இப்போதுதான் குகைக்கு வெளியே வருகிறார், மீண்டுமாக கடவுள் எலியாவிடம் அதே கேள்வியை கேட்கிறார் (ஒப்பிடுக வ.9). מַה־לְּךָ פֹה אֵלִיָּהוּ.
திருப்பாடல் 85
நாட்டின் நலனுக்காக மன்றாடல்
(பாடகர் தலைவர்க்கு: கோராகியரின் புகழ்ப்பா)
1ஆண்டவரே! உமது நாட்டின்மீது அருள் கூர்ந்தீர்; யாக்கோபினரை முன்னைய நன்னிலைக்குக் கொணர்ந்தீர்.
2உமது மக்களின் குற்றத்தை மன்னித்தீர்; அவர்களின் பாவங்கள் அனைத்தையும் மறைத்துவிட்டீர். (சேலா)
3உம் சினம் முழுவதையும் அடக்கிக் கொண்டீர்; கடும் சீற்றம் கொள்வதை விலக்கிக் கொண்டீர். 4எம் மீட்பராம் கடவுளே! எங்களை முன்னைய நன்னிலைக்குக் கொணர்ந்தருளும்; எங்கள்மீது உமக்குள்ள சினத்தை அகற்றிக் கொள்ளும்.
5என்றென்றுமா எங்கள்மேல் நீர் சினம் கொள்வீர்? தலைமுறைதோறுமா உமது கோபம் நீடிக்கும்? 6உம் மக்கள் உம்மில் மகிழ்வுறுமாறு, எங்களுக்குப் புத்துயிர் அளிக்கமாட்டீரோ?
7ஆண்டவரே, உமது பேரன்பை எங்களுக்குக் காட்டியருளும்; உமது மீட்பையும் எங்களுக்குத் தந்தருளும்.
8ஆண்டவராம் இறைவன் உரைப்பதைக் கேட்பேன்; தம் மக்களுக்கு, தம் பற்றுமிகு அடியார்க்கு நிறைவாழ்வை அவர் வாக்களிக்கின்றார்; அவர்களோ மடமைக்குத் திரும்பிச் செல்லலாகாது. 9அவருக்கு அஞ்சி நடப்போர்க்கு அவரது மீட்பு அண்மையில் உள்ளது என்பது உறுதி; நம் நாட்டில் அவரது மாட்சி குடிகொள்ளும்.
10பேரன்பும் உண்மையும் ஒன்றையொன்று சந்திக்கும்; நீதியும் நிறைவாழ்வும் ஒன்றையொன்று முத்தமிடும்.
11மண்ணினின்று உண்மை முளைத்தெழும்; விண்ணினின்று நீதி கீழ்நோக்கும். 12நல்லதையே ஆண்டவர் அருள்வார்; நல்விளைவை நம்நாடு நல்கும். 13நீதி அவர்முன் செல்லும்; அவர்தம் அடிச்சுவடுகளுக்கு வழி வகுக்கும்.
வாழ்வின் துன்பங்கள், கடவுளுடைய மறைவை பற்றியல்ல, மாறாக நம்முடைய வாழ்வின் நிலையைப் பற்றித்தான் சிந்திக்க அழைப்புவிடுகிறது. ஆண்டவருடைய நன்மைத்தனங்கள் வரலாற்றில் இருக்கிறது, ஆனால் நிகழ்காலத்தில் பல துன்பங்கள் வழக்கிலிருக்கின்றன. இப்படியான வேளையில் என்ன செய்வது என்ற கேள்வி எழுகிறது. இறைவாக்கினர் அபகூக்குவைப் போல இந்த திருப்பாடலின் ஆசிரியர், வாசகர்களை, ஒரு கணம் அமைதியாயிருந்து தம் வாழ்வை ஆராய்ந்து பார்க்கும் படியாக அழைப்பு விடுகிறார். ஆய்வாளர்கள் இந்த 85வது திருப்பாடலை ஒரு குழு புலபல் பாடல் என விவரிக்கின்றனர்.
வ.0: இந்தப் பாடலின் முன்னுரை, இதனை கோராகியரின் புகழ்பாடல் என்று அடையாளப் படுத்துகிறது. கோரா (קֹרַח) என பெயர் பெற்றவர்களில் நான்கு வகையான குழுக்கள் விவிலியத்தில் காட்டப்படுகின்றனர். இவர்கள் எதோமியர்களாக இருந்திருக்கிறார்கள். அதாவது இவர்கள் எசாவின் வழிமரபில் வந்தவர்கள். இவர்கள் லேவிய குருக்களின் ஒரு வகையினர் என்றும் அவர்கள் ஆலயத்தின் வாயிற் காப்பாளர்களாகவும், பாடகர் குழாமாகவும் இருந்திருக்கிறார்கள். எண்ணிக்கை நூல் கோராகியரை கடவுளுக்கு மோசேக்கும் எதிராக புரட்சி செய்தவர்களாக காட்டுகிறது.
வ.1: இஸ்ராயேலின் முக்கிய பழைய அனுபவம் ஒன்று நினைவுகூறப்படுகிறது. நாடு 'உமது நாடு' என்று நினைவுகூறப்பட்டு அது கடவுளுக்குரியதாகின்றது (אַרְצֶךָ 'அர்ட்செகா- உமது நிலம்). நாட்டின் மீது அருள் கூறுவதும் யாக்கோபை முன்னைய நிலைக்கு கொண்டு வருவதும் ஒத்த கருத்தாகப் பார்க்கப்படுகிறது. இது எகிப்திய விடுதலை அனுபவமாக இருக்கலாம்.
வ.2: இந்த நினைவுகூறுதலும், நன்னிலைக்கு கொணர்தலும் மேலுமாக விளங்கப்படுத்தப்படுகிறது. அதாவது இவர்களின் குற்றங்கள் மன்னிக்கப்படுகின்றன, அத்தோடு பாவங்கள் மறைக்கப்படுகின்றன. பாவங்களை மன்னித்தல் 'அவர்கள் குற்றங்களை நீர்தூக்கிவிட்டீர்' என எபிரேயத்தில் சொல்லப்படுகிறது (נָשָׂאתָ עֲוֹן நாசா'தா 'அயோன்). தூக்கிவிடுதல் என்பது இல்லாமல் செய்தலைக் குறிக்கிறது. இதற்கு ஒத்த கருத்து பதமாக 'அவர்கள் பாவங்கள் அனைத்தையும் நீர் மறைத்துவிட்டீர்' எனவும் திருப்பிக்கூறப்படுகிறது (כִּסִּיתָ כָל־חַטָּאתָם கிசிதா கோல்-ஹத்தா'தாம்).
வ.3: ஆண்டவர் தன்னுடைய சினத்தை அடக்கிக் கொள்கிறவர், இலகுவில் கோபம் கொள்கிறவர் அல்ல என்பது இஸ்ராயேலருடைய நம்பிக்கைகளுள் முக்கியமானது. இதனைத்தான் இந்த வரி நினைவூட்டுகிறது. மக்கள் இன்னமும் ஆண்டவரின் நன்மைத்தனத்தில் இருப்பதற்க்கு காரணம் மக்களுடைய புனிதமான வாழ்வு என்பதைவிட, ஆண்டவருடைய மன்னிப்பும் அன்பும் என்பது ஓர் ஆழமான இறையியல் சிந்தனை.
வ.4: முதல் மூன்று வரிகளில் இஸ்ராயேல் மூதாதையர்கள் தங்களுக்கு சொன்ன வரலாற்றை நினைவுகூர்ந்த ஆசிரியர், இப்போது அதனையே சமகால நிகழ்வுகளுடன் ஒப்பிட்டு ஆண்டவர் கருணை காட்ட வேண்டும் என மன்றாடுகிறார். இந்த வரியிலிருந்து நோக்குகின்றபோது, நாடு அல்லது ஆசிரியருடைய தனிப்பட்ட வாழ்வு ஏதோ முக்கியமான ஆபத்தில் இருக்கிறது என்பது புலப்படுகிறது. ஆண்டவரை மீட்பராக வர்ணிப்பது முதல் ஏற்பாட்டின் முக்கியமான சொற்பிரயங்களில் ஒன்று (יִשְׁעֵנוּ யிஷ்'எனூ- எம் மீட்பர்).
வ.5: இந்த கேள்வி ஆசிரியருடைய துன்பத்தைக் படம்பிடிக்கிறது. இந்த வரியில், தான் அல்லது தன் மக்கள் சுத்தவாளிகள் என்று அவர் வாதாடாமல், ஆண்டவரின் தொடர் சினத்தில் நியாமில்லை என்பதுபோல காட்டப்படுகிறது. ஆண்டவருடைய சினமும் (אַף 'அப்) கோபமும் ஒரு கட்டத்தில் நிறுத்தப்படவேண்டும் என்பதை ஆண்டவருக்கு காட்ட விளைகிறார். இந்த வரிகளுக்கு பின்னால் மனிதர்கள் பலவீனமானவர்கள், அவர்கள் பாவம் செய்யக்கூடியவர்கள் இருந்தும் தலைமுறைதோறும் அவர்களை தண்டிப்பது கடவுளுக்கு உகந்தது அல்ல என்பது போல வாதாடப்படுகிறது.
வ.6: கடவுளில் மகிழ்தல் என்பது, உச்ச கட்ட சந்தோசத்தை இஸ்ராயேல் மக்களுக்கு தருகிறது.
இதனையே இவர் புத்துயிர் என்றும் சொல்கிறார். நேர்மையாளர்கள் கடவுளில் மகிழ்வார்கள் (יִשְׂמְחוּ־בָֽךְ யிஷ்மெஹு-பாக் - உம்மில் அவர்கள் மகிழ்வார்கள்) என்பது விவிலியத்தின் படிப்பினை. இஸ்ராயேலை சுற்றியிருந்த மக்கள் பலவற்றில் மகிழ்கின்ற வேளை தன் மக்கள் கடவுளில் மகிழவேண்டும், அதுதான் அவர்களுக்கு புத்துயிர் அளிக்கும் என்கிறார்.
வ.7: ஆண்டவரினல் மகிழ்ந்து புத்துயிர் பெறவேண்டும் என்றால், ஆண்டவர் மக்களுக்கு தன்னுடைய பேரன்பையும் (חַסְדֶּךָ ஹஸ்தெகா- உம் பேரன்பு), மீட்பையும் (יֶשְׁעֲךָ֗ யெஷ்'எகா- உமது மீட்பு) தரவேண்டும் என்கிறார். புலம்பல் பாடல்களில் மன்றாட்டு முக்கியமான விடயமாக வருவதை இங்கே அவதானிக்கலாம்.
வ.8: புலம்பல் பாடல்களில் ஞான வாக்கியங்களும் அடங்கியிருக்கும். இந்த வரி, ஆண்டவர் உரைப்பதை அனைவரும் கேட்க வேண்டும் என்றும், அதாவது அவர் தம் மக்களாகிய அவர் அடியார்களுக்கு நிறைவாழ்வை அளிக்கிறார், இதனால் அவர்கள் மடமைக்கு திருப்பிச் செல்லலாகாது என்கிறார்.
வ.9: ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் என்பவர் ஆண்டவரின் நியமங்களை கடைப்பிடிக்கும் விசுவாசிகளைக் குறிக்கிறது (לִירֵאָיו லிரெ'அவ்- அவருக்கு அஞ்சுவோர்). இவர்கள் ஆண்டவரின் கட்டளைகளைக் கடைப்பிடிப்பது பயத்தினால் அல்ல, மாறாக மரியாதை கலந்த விசுவாசத்தைக் வெளிக்காட்டுகிறது. இவர்கள் ஆண்டவரின் மீட்பிற்கு அருகில் இருக்கிறார்கள். ஆண்டவரின் மாட்சி (כָּבוֹד காவோத்) என்பது முதல் ஏற்பாட்டில் அதிகமாக கையாளப்படும் ஒரு சொல். இது ஆண்டவருடைய பாதுகாப்பு, பிரசன்னம், ஆசீர்வாதம் போன்றவற்றைக் குறிக்கும். ஆண்டவரின் மாட்சி இஸ்ராயேல் நாட்டில் குடிகொள்ளும் என்பது ஆண்டவர் இஸ்ராயேல் நாட்டில் குடிகொள்வதைக் குறிக்கும்.
வ.10: இந்த திருப்பாடலிலே மிகவும் அழகான வரி இதுதான்.
பேரன்பும் உண்மையும் ஒன்றை ஒன்று சந்திக்கிறது,
(חֶֽסֶד־וֶאֱמֶ֥ת נִפְגָּשׁוּ ஹெசெத்-வெ'எமெத் நிப்காஷூ).
நீதியும் அமைதியும் ஒன்றையொன்று முத்தமிடுகிறது
(צֶדֶק וְשָׁלוֹם נָשָׁקוּ ட்செதெக் வெஷாலோம் நாஷாகூ).
இந்த வரியின் எதுகை மோனை மற்றும் சொல்லாடல் போன்றவற்றிலிருந்து, விவிலிய எபிரேயம் எவ்வளவு செம்மையானது என்பதைப் புரிந்து கொள்ளலாம். மொழியில் மட்டுமல்ல
இறையியல் மற்றும் மனிதத்திலும் இந்த சொற்கள் மிகவும் வரவேற்கப்படவேண்டியவை. உண்மையில்லா பேரன்பும், நீதியில்லா அமைதியும், பிரயோசனம் அற்றது என்பதை மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த திருப்பாடல் ஆசிரியர் அழகாக அறிந்து, வாழ்ந்திருக்கிறார்.
வ.11: மண்ணினின்று உண்மையும் (אֱמֶת מֵאֶ֣רֶץ 'எமெத் மெ'எரெட்ஸ்), விண்ணினின்று நீதியும்
(צֶדֶק מִשָּׁמַיִם ட்செதெத் மிஷாமாயிம்) வெளிவருகின்றன என்கிறார். பூவுலகம் உண்மையுளள்தாக இருக்க வேண்டும், அதேவேளை இந்த பூவுலகை ஆண்டவரின் மேலுகம் நீதி செலுத்த வேண்டும் என்பது சொல்லப்படுகிறது. பூவுலகும் மேலுலகும் ஒன்றையொன்ற சார்ந்து இருக்க வேண்டும் அல்லது தொடர்பு பட்டிருக்க வேண்டும் என்பது ஆசிரியரின் அவாவாக இருக்கிறது.
வ.12: ஆண்டவர் அருளுவது நல்லவையே, என்பதுதான் முழு விவிலியத்தின் செய்தியாகும். இதன் அடையாளம்தான், நிலம் அருளுகின்ற நல்விளைச்சல் என்பது இந்த ஆசிரியரின் ஞானம். நிலம் இயற்கையாக நல்லதை தரவல்லது, இந்த நல்விளைச்சலை ஆண்டவருடைய ஆசீர்வாதமாக பார்க்கிறார் ஆசிரியர். ஆண்டவர் நல்லது செய்கிறவர் என்பது இஸ்ராயேலின் தனித்துவமான நம்பிக்ககை (גַּם־יְ֭הוָה יִתֵּ֣ן הַטּוֹב கம்-அதோனாய் யித்தென் ஹதோவ்).
வ.13: ஆண்டவர் நீதியின் கடவுள். நீதிதான் ஆண்டவர் முன்னால் செல்லும். நீதிதான் ஆண்டவருடைய அடிச்சுவடு. அதவாது அவர் மக்கள் நீதியுள்ளவர்களாக இருக்க கேட்கப்படுகிறார்கள். அதேவேளை அவர்கள் நீதிக்காக போராடுபவர்களாகவும் இருக்க வேண்டியவர்கள்.
உரோமையர் 9,1-5
1கிறிஸ்துவைச் சார்ந்த நான் சொல்வது உண்மை, பொய்யல்ல. தூய ஆவியால் தூண்டப்படும் என் மனச்சான்றே நான் சொல்வதற்குச் சாட்சி. 2உள்ளத்தில் உனக்குப் பெருந்துயரமும் இடைவிடாத வேதனையும் உண்டு. 3என் சொந்த இனத்தைச் சேர்ந்த என் சகோதரர் சகோதரிகளுக்கு மீட்பு கிடைப்பதற்காக நான் கிறிஸ்துவைப் பிரிந்து சாபத்துக்கு உள்ளாகக்கூட விரும்பியிருப்பேன். 4அவர்கள்தாம் இஸ்ரயேல் மக்கள்; அவர்களையே கடவுள் தம் மக்களாக ஏற்றுக் கொண்டார். அவர்கள் நடுவில்தான் கடவுள் தம் மாட்சியை விளங்கச் செய்தார். உடன்படிக்கைகளும் திருச்சட்டமும் திருவழிபாடும் வாக்குறுதிகளும் அவர்களிடமே ஒப்படைக்கப்பட்டன. 5குலமுதல்வர்களின் வழிவந்தவர்கள் அவர்கள்; மனிதர் என்னும் முறையில் கிறிஸ்துவும் அவர்களிடமிருந்தே தோன்றினார். இவரே எல்லாவற்றுக்கும் மேலான கடவுள்; என்றென்றும் போற்றுதற்குரியவர். ஆமென்.
பவுல் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களில் மிக முக்கியமானது, அவர் யூத வெறுப்புக் கொள்கையை கொண்டிருந்தார் என்பதாகும். இதனை பவுல் பல இடங்களில் தெளிவுபடுத்த முயன்றிருப்பார். உரோமைத் திருச்சபை யூதர்கள் மற்றும் யூதரல்லாதவர்களை கொண்டமைந்த திருச்சபை. இந்த திருச்சபை உரோமையருக்கு எதிரான திருச்சபை என்று சொல்வதற்கில்லை. உரோமைய திருச்சபை, பவுல் யூதர்கள் மீது எப்படியான அபிப்பிராயத்தைக் கொண்டிருந்தார் என்பதை அறிய ஆவலாக இருந்திருக்கலாம். ஆரம்ப கால திருச்சபையில் அப்பாவி யூதர்களுக்கு எதிராக கிறிஸ்தவர்களின் பிழையான கண்ணோட்டங்கள் இருக்கக்கூடாது என்பதிலும் பவுல் கவனமாக இருக்கிறார் என்பதையும் இங்கே நினைவில் எடுக்கலாம்.
எட்டாவது அதிகாரத்தில் தூய ஆவி அருளும் வாழ்வு, வரப்போகும் மாட்சி மற்றும் கடவுளின் அன்பு போன்றவற்றை விளக்கியிருக்கிறார். இந்த வேளையில் அவர் இஸ்ராயேல் மக்கள் தேர்ந்தெடு;க்கப்பட்ட இனம் என்ற வகையிலே அவர்களின் நிலை என்பதை தெளிவுபடுத்த வே;ணடியவராக இருக்கிறார். இதனைத்தான் இந்த ஒன்பதாவது அதிகாரம் விவரிக்கின்றது.
வ.1: தன்னை யூதன் என்று அறிமுகம் செய்யாமல் கிறிஸ்துவை சார்ந்தவன் என்று சொல்கிறார். இந்த வரியை கிரேக்க மூல வரிகள் சற்று வித்தியாசமாக காட்டுகின்றன. Ἀλήθειαν λέγω ἐν Χριστῷ அலேதெய்யான் லெகோ என் கிறிஸ்தோ - கிறிஸ்துவில் நான் உண்மை சொல்கிறேன். இதற்கு சாட்சியாக பவுல் அழைப்பது தூய ஆவியாரை. தூய ஆவியாரை பற்றிய படிப்பினைகளை உரோமைய திருச்சபை நன்கு அறிந்திருந்ததால் இது நிச்சயமாக பவுலுக்கு நல்லதொரு உந்து சக்தியாக இருந்திருக்கும். தன்னுடைய மனச்சான்றை தூய ஆவியார் தூண்டுவதாகவும் விளக்குகிறார்.
வ.2: தமிழ் விவிலியம் இந்த வசனத்தை இரண்டாம் ஆள் ஒருமையில் (நீ, உன்) மொழிபெயர்க, மூல கிரேக்க விவிலியம் இதனை முதலாம் ஆள் ஒருமையிலேயே (நான், என்) கொண்டிருக்கிறது.
தமிழ்: உள்ளத்தில் உனக்குப் பெருந்துயரமும் இடைவிடாத வேதனையும் உண்டு
கிரேக்கம்: ὅτι λύπη μοί ἐστιν μεγάλη καὶ ἀδιάλειπτος ὀδύνη τῇ καρδίᾳ μου. - அதாவது பெருந்துயரமும், குறையாத வேதனையும் என் இதயத்தில் உள்ளது.
மொழி விளக்கத்திற்காக தமிழ்த் தந்தையர்கள் இப்படியாக மொழிபெயர்த்திருக்கலாம்.
வ.3: இந்த வரியில் தன்னுடைய வேதனையை விளக்குகிறார். அதாவது தன்னுடைய சொந்த உடன் பிறப்புக்கள், அதாவது யூதர்கள் நன்மையடைவார்களாக இருந்திருந்தால், தான், தன் ஆண்டவராகிய கிறிஸ்துவைக் கூட பிரிய முயன்றிருப்பேன் என வித்தியாசமாக வாதாடுகிறார். ஏற்கனவே 8,35 இல் கிறிஸ்துவின் அன்பிலிருந்து தன்னை ஒன்றும் பிரிக்க முடியாது என்று சொன்னவர், இங்கே தன்னுடைய உடன் யூதர்களின் மீட்பு தனக்கு முக்கியமானது என்கிறார்.
இந்த வாக்கியம் எதிர்கால மறையான விருப்பு வாக்கியத்திலே அமைந்திருக்கிறது.
இதனுடைய அர்த்தங்கள் அனேகமாக எதிர்மறையாகவே இருக்கும். இது கிரேக்க மொழியில்
இருக்கும் மிக சாதாரணமாக ஒரு வழக்கு.
உ-ம்: இப்படியிருந்திருந்தால் - அதாவது அப்படியல்ல என்று பொருள்.
இந்த வரியில் பவுல் தன் உடன் யூதர்களை, தன் உடலைச் சார்ந்த சகோதர சகோதரிகள் என்று அன்பான வார்த்தையால் வர்ணிக்கிறார் (τῶν ἀδελφῶν μου τῶν συγγενῶν μου κατὰ σάρκα டோன் அதெல்போன் மூ டோன் சுன்கெனோன் மூ காடா சார்க்கா)
வ.4: இந்த இஸ்ராயேல் மக்களின் பெருமைகளை அழகாக சுருக்கம் செய்கிறார். இவர்கள்தான் அந்த இஸ்ராயேல் மக்கள் (Ἰσραηλῖται இஸ்ராயேலிடாய்), தத்தெடுத்தலும் (υἱοθεσία), மாட்சியும் (δόξα), உடன்படிக்கைகளும் (διαθῆκαι), சட்டங்களும் (νομοθεσία), வழிபாடும் (λατρεία), வாக்குறுதிகளும் (ἐπαγγελίαι) அவர்களுக்கு உரியன என்கிறார்.
இந்த வரியின் மூலமாக ஆண்டவருடைய தெரிவில் பிழையில்லை என்பதும்,
இவர்களைத்தான் ஆண்டவர் விசேடமாக அழைத்தார் என்பதை தான் ஏற்றுக்கொண்டதாக அறிக்கையிடுகிறார்.
வ.5: இந்த வரியிலும் இஸ்ராயேல் இனத்தின் பெருமை சொல்லப்படுகிறது. இஸ்ராயேல் மக்கள் குலமுதுவர்களின் வழிவந்தவர்கள் என சாற்றப்படுகிறார்கள். இதனை 'இவர்களுடையவர்கள் தந்தையர்கள்' (πατέρες பாடெரெஸ்) என கிரேக்க விவிலியம் சொல்கிறது. உடல் ரீதியாக கிறிஸ்துவும் இவர்களின் வழிவந்தவர்தான் என்பதையும் நினைவூட்டுகிறார் (Χριστὸς τὸ κατὰ σάρκα).
யூதர்களை பற்றிய சில பிழையான வாதத்திற்கும், யூதர்கள், தங்களைப் பற்றி பவுல் பிழையான வாதத்தை முன்வைக்கிறார் என்ற குற்றச்சாட்டுகளுக்கும், இந்த இரண்டு வரிகளும் நல்ல விளக்கதை;தைக் கொடுக்கின்றன.
இறுதியாக கிறிஸ்துதான் அந்தக் கடவுள், அத்தோடு அவர்தான் என்றென்றைக்கும் போற்றுதற்குரியவர் என்பதையும் சொல்கிறார். இங்கே தந்தையாகிய கடவுள் அல்ல எழுவாய்ப் பொருள், மாறாக சுதனாகிய கிறிஸ்துவே எழுவாய்ப் பொருள், என்பதை நோக்க வேண்டும். தமிழ் விவிலியம் இந்த பகுதியை அழகாக மொழிபெயர்க்கிறது.
மத்தேயு 14,22-33
கடல்மீது நடத்தல்
(மாற் 6:45 - 52; யோவா 6:5 - 21)
22இயேசு கூட்டத்தினரை அவ்விடத்திலிருந்து அனுப்பிக் கொண்டிருந்தார். அப்பொழுது சீடரையும் உடனே படகேறித் தமக்குமுன் அக்கரைக்குச் செல்லுமாறு அவர் கட்டாயப் படுத்தினார். 23மக்களை அனுப்பிவிட்டு, அவர் தனியே இறைவனிடம் வேண்டுவதற்காக ஒரு மலையின்மேல் ஏறினார். பொழுது சாய்ந்தபிறகும் அங்கே அவர் தனியே இருந்தார். 24அதற்குள் படகு கரையிலிருந்து நெடுந்தொலை சென்றுவிட்டது. மேலும் எதிர்க்காற்று அடித்துக்கொண்டிருந்ததால் அலைகளால் படகு அலைக்கழிக்கப்பட்டது. 25இரவின் நான்காம் காவல்வேளையில்
25.இயேசு அவர்களை நோக்கிக் கடல்மீது நடந்து வந்தார். 26அவர் கடல்மீது நடப்பதைக் கண்ட சீடர் கலங்கி, 'ஐயோ, பேய்' என அச்சத்தினால் அலறினர். 27உடனே இயேசு அவர்களிடம் பேசினார். 'துணிவோடிருங்கள்: நான்தான், அஞ்சாதீர்கள்' என்றார்.
28பேதுரு அவருக்கு மறுமொழியாக, 'ஆண்டவரே நீர்தாம் என்றால் நானும் கடல்மீது நடந்து உம்மிடம் வர ஆணையிடும்' என்றார். 29அவர், 'வா' என்றார். பேதுருவும் படகிலிருந்து இறங்கி இயேசுவை நோக்கிக் கடல்மீது நடந்து சென்றார். 30அப்பொழுது பெருங்காற்று வீசியதைக் கண்டு அஞ்சி அவர் மூழ்கும்போது, 'ஆண்டவரே, என்னைக் காப்பாற்றும்' என்று கத்தினார். 31இயேசு உடனே தம் கையை நீட்டி அவரைப் பிடித்து, 'நம்பிக்கை குன்றியவனே, ஏன் ஐயம் கொண்டாய்?' என்றார். 32அவர்கள் படகில் ஏறியதும் காற்று அடங்கியது. 33படகில் இருந்தோர் இயேசுவைப் பணிந்து, 'உண்மையாகவே நீர் இறைமகன்' என்றனர்.
கடல், இஸ்ராயேல் மக்களுக்கு பல ஆச்சரியங்களை காட்டிய ஒரு பௌதீக வளம். நீர் நிலைகள் மற்றும் ஆறுகளை குறைவாக கொண்ட கானான் நாடு அல்லது பாலஸ்தீன பிரதேசம், நீரை கடவுளுடைய அடையாளமாகக் கண்டது. விவிலிய சிந்தனைப் படி, கடல் அல்லது பெரிய ஏரிகளான கெனசேரேத்து (கலிலேயா ஏரி) மற்றும் சாக்கடல் போன்றவை தீய சக்திகளின் உறைவிடமாகவே பார்க்கப்பட்டது. இதற்கு மெசப்தேமிய புராணக்கதைகள் மற்றும் எகிப்திய சிந்தனைகளும் காரணமாக இருந்திருக்கலாம். தொடக்கத்தில் கடவுளின் ஆவி நீர்த்திரள் மேல் அசைவாடியதையும் (தொ.நூல் 1,1-10), நோவா காலத்து பெரு வெள்ளம் (தொ.நூல் 7), செங்கடலை கடத்தல் (வி.ப 14) போன்றவை இவர்களுக்கு வித்தியாசமான நம்பிக்கையைக் கொடுத்தது. இயேசுவுடைய காலத்தில் இஸ்ராயேலர் கலிலேயா ஏரியை கடலாகவே கண்டனர். இதன் நீர் உப்புத்தன்மையற்றதாக இருந்தாலும், இதன் சில குணாதிசியங்களின் பொருட்டு அது கடலாகவே பார்க்கப்பட்டது.
எபிரேயத்தில் இந்த ஏரி கெனசரேத்து (யாம் கின்னேராத் - கின்னேராக் கடல் - யாழ்வடிவ கடல்) என்று அழைக்கப்பட்டது. உரோமையர்கள் திபேரியா ஏரி, என இதனை அழைத்தார்கள். கலிலேயாவில் இந்த ஏரி இருந்ததால் இதனை கலிலேயாக் கடல் எனவும் அழைத்தார்கள்.
இதனைச் சுற்றி பல மீனவர்கள் வாழ்ந்தார்கள். இயேசுவுடைய ஆரம்ப கால சீடர்களான பேதுரு, அந்திரயா, யோவான், யாக்கோபு போன்ற பலர் இந்த கலிலேய மீனவர்களே. இந்த ஏரிக்கு யோர்தான் நதி வடக்கு மலையான எர்மோனிலிருந்து நீரைக் கொண்டு வருகிறது. 15கி.மீ நீளத்தையும் 8கி.மீ அகலத்தையும் இந்த ஏரி கொண்டுள்ளது. நில நடுக்கத்தால் ஏற்பட்ட ஒரு பாரிய குழியினாலே இந்த ஏரி உருவானதாக நம்பப்படுகிறது. இது கடல் மட்டத்திலிருந்து 700 அடி இறக்கத்தைக் கொண்டுள்ளதாகவும் சொல்லப்டுகிறது. இதன் அதிகூடிய ஆளமாக 833 அடியை குறிப்பிடுகின்றனர். இருபத்தைந்து வகையான மீன்களும், கடல் உயிரினங்களும் இந்த ஏரியினுள் வாழ்கின்றன. இதிலிருந்து பெறப்படும் கருவாடுகள் அல்லது தயிரில் பதப்படுத்தப்பட்ட மீன்கள் உரோமை மாநாகர் வரை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. கலிலேயா ஏரிக்கும், நைல் நதிக்கும் நிலத்தின் கீழ் தொடர்பு இருக்கிறது என்றும் நம்பப்படுகிறது. இந்த இரண்டு நீர் நிலைகளிலும் ஒரே வைகயான கறுத்த விலாங்கு மீன் வகை காணப்படுகிறது.
ஆண்டவர் இயேசு இந்த கலிலேய கடலில் அருகில் இருந்த நகரான கப்பர்நாகூமில் அதிகமாக பணியாற்றினார். இந்த கடலிலும் அவர் பயணம் செய்திருக்கிறார். இந்தக் கடலின் கடற்கரையிலும், தண்ணீரிலும் இருந்து கொண்டு பிரசங்கம் செய்திருக்கின்றார். இன்றைய வாசகம் இந்த கடலில் நடந்த ஒரு நிகழ்வையே நமக்கு காட்டுகின்றன.
வ. 22: இந்த நிகழ்விற்கு முன் இயேசு ஐயாயிரம் பேருக்கு உணவளித்ததை மத்தேயு பதிவு செய்கிறார். இந்த புதுமை பல மக்கள் கூட்டத்தை இயேசுபால் ஈர்க்க, இயேசு தனிமையை வேண்டி மலை உச்சிக்கு செல்கிறார். பின்னர் தன்னுடைய சீடர்களை தனக்கு முன் ஏரியின் மறுகரைக்கு போகச் சொல்கிறார்.
இயேசு புதுமைகளை செய்தாலும், இந்த புதுமைகளை அவர் மந்திரமாக செய்வதையோ அல்லது புதுமைகளின் பொருட்டு மட்டும், மக்கள் தன்னை நம்ப வேண்டும் என்பதை நிராக்கரிக்கிறார். நம்பிக்கையின் அடையாளமாக அல்லது நம்பிக்கையின் முடிவாக புதுமைகள் வருகிறதே அன்றி, புதுமைகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டு உண்மையான நம்பிக்கையை நற்செய்தியாளர்கள் காட்டவில்லை. இதன் காரணமாகத்தான் ஐயாயிரம் பேர் உணவுண்ட அந்த அனுபவத்திலிருந்து மக்களையும் தன் சீடர்களையும் இயேசு அனுப்பினார் என எடுக்கலாம்.
அக்கரைக்கு செல்லுதல், வாழ்வின் அடுத்த நியதியை அறிந்துகௌ;ளுதல் என்ற இறையியல்
விளக்கத்தை தருவதாகவும் சிலர் காண்கின்றனர் (πέραν பேரான்- மறுகரை).
வ.23: மத்தேயு நற்செய்தியிலும் மற்றைய நற்செய்தியிலும் இந்த வரி மிக அவதானமாக நோக்கப்பட வேண்டும். இயேசு மிக முக்கியமான நேரத்திலும் அல்லது பெரிய நிகழ்வுகளின் பின்னரும், தனிமையான இடத்தைதேடி செபிக்க செல்கிறார். இதன் மூலம் ஆசிரியர் வாசகர்களுக்கு செபத்தின் முக்கியத்துவத்தை சொல்கிறார் எனவும் எடுக்கலாம் (ἀνέβη εἰς τὸ ὄρος κατ᾿ ἰδίαν προσεύξασθαι. அநெபே எய்ஸ் டொ ஹொரெஸ் காட் இதியான் புரொசெயுட்ஸ்சாதாய்- தனிமையாக செபிக்க ஒரு மலையில் ஏறினார்.). ஆண்டவர் இந்த மலையில், மாலைவரை செபத்தில் இருந்தார் எனவும் சொல்லப்படுகிறது. இயேசுவுடைய கனமான செப வாழ்வு இப்படியாக காட்டப்படுகிறது.
வ.24: இயேசு மலையில் தனியே இருக்க, மறுபக்கத்தில் சீடர்கள் கடலில் இயேசு இல்லாத வாழ்வில் தனியே பயணம் செய்கிறார்கள். இங்கே, கடல், தனிமை, இரவு, இயேசு இல்லாத பயணம் நெடுந் தொலைவு போன்றவை நோக்கப்பட வேண்டும். இந்த நிலையில் படகு அலைகளால் அலைக்கழிக்கப்படுகிறது.
இயேசு இல்லாத வாழ்வின் நிலைகளை இந்த காட்சி அழகாகக் காட்டுகிறது. ஆரம்ப காலத்தில் திருச்சபை ஒரு படகாகவும், உலகம் கடலாகவும் பார்க்கப்பட்டதையும் நினைவில் கொள்வோம்.
வ.25: இரவின் நான்காம் காவல் வேளையில் இயேசு அவர்களை நோக்கி நடந்து வருகிறார். உரோமையர்கள் இரவை வீரர்களின் காவல் அட்டவணையை மையமாக வைத்து பிரித்தார்கள். நான்காம் காவல் வேளை என்பது ஏறக்குறைய அதிகாலை 3-6 மணியாக இருக்கும்.
இங்கே இரண்டு முக்கியமான பண்புகள் நோக்கப்படவேண்டும். இயேசு இவர்களின் நிலையைக் கண்டு அவர்களிடம் தானாகவே வருகிறார். ஆக முதலில் கடவுள்தான் முயற்சி எடுக்கிறவர் என்பது தெளிவாகிறது. இரண்டாவதாக அவர் கடல்மீது நடந்து வருகிறார். கடவுளுக்கு இந்த விசித்திரமான கடல் மற்றும் அதன் சக்திகள் ஒரு பொருட்டே அல்ல என்பது தெளிவாகிறது.
வ.26: சீடர்கள் இயேசுவின் நடையைக் கண்டு பேய் என் அலறுகிறார்கள். எந்த சீடர் இப்படி அலறினார் என்று மத்தேயு விவரிக்கவில்லை. இந்த அலறல், ஆரம்ப கால திருச்சபையின் அவவிசுவாசத்தை பிரதிபலிப்பதாகவும் இருந்திருக்கலாம். ஆக இந்த அலறலுக்கு அனைத்து சீடர்களும் உரிமையாளர் ஆகிரார்கள்.
வ.27: இயேசு அலருகின்ற தன் சீடர்களை ஆறுதல் படுத்துகிறார். இயேசுவின் வார்த்தைகள் கவனிக்கப்ட வேண்டியவை. முதலிலே அவர்களை துணிவோடு இருக்கச் சொல்கிறார். துணிவில்லாமல் இருப்பதுதான் அதிகமான பயத்திற்கும் அதனால் ஏற்படும் அலறலுக்கும் காரணமாகிறது. θαρσεῖτε (தார்செய்டெ) என்ற கிரேக்கச் சொல், இதயத்தில் பெலமாக இருங்கள் என்ற சிந்தனையை கொடுக்கிறது. அதேவேளை இயேசு 'நான்தான்' (ἐγώ εἰμι எகோ எய்மி) என்கிறார். இது முதல் ஏற்பாட்டில் கடவுள் தன்னை வெளிப்படுத்துகின்ற வார்த்தைகளை நினைவூட்டுகின்றது.
வ.28: பேதுரு ஆண்டவருக்கே சோதனை வைக்கிறார். பேதுரு இப்படியான வாதங்களை முன்வைக்கிறதில் வல்லவர். எதற்காக இந்த சோதனையை வைக்கிறார் என்பது பல சந்தேகங்களை எழுப்புகிறது. உண்மையாக அங்கே இருப்பது பேயாக இருந்திருந்தால், பேதுருவின் நிலை மோசமாக இருந்திருக்கும். அங்கே இருப்பது இயேசுவாக அவருக்கு தெரிந்திருந்தால், அவர் இந்த சோதனையை வைத்திருக்க மாட்டார். ஆக, பேதுருவிற்கு அங்கே இருப்பது பேயா அல்லது ஆண்டவரா? என்ற சந்தேகம் வருகிறது. இங்கே பேதுரு உண்மையில் தனக்கு தானே சோதனை வைக்கிறார். இருந்தும் கட்டளையிடும் அதிகாரம் ஆண்டவருக்குத்தான் இருக்கிறது என்பதை ஏற்றும் கொள்கிறார். இறுதி முடிவை எடுக்கும் அதிகாரத்தை ஆண்டவரிடமே விட்டு விடுகிறார்.
வ.29: ஆண்டவர் தன் கட்டளையை சொல்கிறார், வா என்கிறார். ஆண்டவருடைய வா, என்ற வார்த்தை பேதுருவை கடல் மீது நடக்க வைக்கிறது. பேதுரு ஆண்டவரை நோக்கியே செல்கிறார் என்று அழகாக படம்பிடிக்கிறார் மத்தேயு.
வ.30: உற்சாகமாக படகிலிருந்து இறங்கியவர் மூழ்கப் பார்க்கிறார். இவருடைய இந்த மூழ்குதலுக்கான காரணத்தை மத்தேயு, 'பெருங்காற்றின் வீசுதல்' என்கிறார். மாற்கும் யோவானும் பேதுரு கடலில் இறங்கி நடந்தகை விவரிக்காமல் விட்டுவிடுகிறார்கள் (ஒப்பிடுக மாற்கு 6,45-51: யோவான் 6,16-20). பெரும் காற்று இங்கே சீடர்கள் தம் வாழ்வியலில் சந்திக்கின்ற துன்பங்களை காட்டலாம். ஆண்டவரை நோக்கி உற்சாகத்தோடு பயணிக்கின்ற சீடர்கள், பெரும் காற்று போன்ற துன்பங்களைக் கண்டவுடன், தமது பார்வையை சிதறவிடுவதால் பயப்பிடுகிறார்கள். பேதுரு மூழக்கப்போனாலும், ஆண்டவரே காப்பாற்றும் என்று மற்றைய சீடர்களுக்கு முன்மாதிரி காட்டுகிறார். பேதுருவின் இந்த கத்தலும், ஆரம்ப கால திருச்சபையின் கதறலைக் குறிக்கின்றது (κύριε σῶσόν με. கூரிஏ சோசொன் மே).
வ.31: இயேசு உடனே தன்கையை நீட்டி பேதுருவை பிடிக்கிறார். துன்பமான வேளையில் ஆண்டவர் உடனடியாக தன் கரத்தை நீட்டுகிறார் என்ற செய்தி இங்கே தரப்படுகிறது. பேதுரு தன்னுடைய சோதனையில் தோற்றுப்போகிறார், வழமைபோல. நம்பிக்கை குன்றியவனே என்ற பெயரையும் பெறுகிறார். சீடர்களின் தலைவராகியவருக்கே இந்த சான்றிதழ்தான் தரப்படுகிறது. நம்பிக்கை குன்றுதல் மற்றும் ஐயம் கொள்ளல் போன்றவை மிக ஆபத்தானதாக அமையலாம் என்ற செய்தியும் தரப்படுகிறது.
வவ.33-34: இயேசு படகில் ஏறியதும் காற்று அடங்குகிறது. இங்கே இயேசு, காற்றின் மீது அதிகாரம் கொண்டவராக காட்டப்படுகிறார் (ἐκόπασεν ὁ ἄνεμος. எகொபாசென் ஹொ அனெமொஸ்). படகில் இருந்தவர்கள் தங்களது விசுவாச அறிக்கையை வெளிப்படுத்துகிறார்கள். இங்கே இன்னொரு கேள்வி எழுகிறது. ஏன் இவர்களுக்கு இதற்கு முன் ஆண்டவர் இறைமகன் என்பது தெரியாதா? இதற்கு முந்தின நாள்தான் ஆண்டவர் அப்பத்தை பெருக்கியதை இவர்கள் கண்டிருந்தார்கள். இருந்தும் விசுவாசம் மீண்டுமாக அறிக்கையிடப்படுகிறது.
இயேசு இறைமகன் என்பது அனைத்து நற்செய்தியாளர்களுடைய சாரம்சம், அதனைத்தான் மத்தேயுவும் இறுதியாக, உறுதியாகச் சொல்கிறார் (ἀληθῶς θεοῦ υἱὸς εἶ அலேதோஸ் தியூ ஹுய்யோஸ் எய்- அவர் உறுதியாக இறைமகனாக இருக்கிறார்).
ஆண்டவர் எங்கிருக்கிறார் என்பது இலகுவான தேடல் அல்ல,
சில வேளைகளில் நாம் எலியாவைப் போன்று அல்லது
பேதுருவைப் போன்று தவிக்கலாம்.
இருந்தும் ஆண்டவர் அருகில்தான் இருக்கிறார்.
அத்தோடு அவர் அமைதியாகவும் இருக்கிறார்.
துன்பங்கள் பெரும் காற்றாக வரலாம்,
வாழ்கை கடலில் படகாக தத்தளிக்கலம்,
இருந்தும் ஆண்டவரின் நீட்டப்பட்ட கரம், என்றும் பலமாக இருக்கிறது,
உடனே நம்மை தூக்கிவிட.
ஆண்டவரே உம் கரம் பற்ற
வரம் தாரும், ஆமென்.
மி. ஜெகன்குமார் அமதி
வசந்தகம், யாழ்ப்பாணம்,
வியாழன், 10 ஆகஸ்ட், 2017
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக