வியாழன், 16 மார்ச், 2017

Third Sunday of Lent (A): தவக்காலம் மூன்றாம் ஞாயிறு (அ)




தவக்காலம் மூன்றாம் ஞாயிறு (அ)
19,03,2017

முதலாம் வாசகம்: விடுதலைப்பயணம் 17,3-7
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 95
இரண்டாம் வாசகம்: உரோமையர் 5,1-2: 5-8
நற்செய்தி: யோவான் 4,5-42

விடுதலைப்பயணம் 17,3-7
3அங்குத் தண்ணீரின்றித் தவித்ததால் மக்கள் மோசேயை எதிர்த்து முறுமுறுத்து, 'நீர் எகிப்திலிருந்து எங்களை வெளியேறச் செய்தது எங்களையும், எங்கள் பிள்ளைகளையும் கால்நடைகளையும் தாகத்தால் சாகடிக்கவா?' என்று கேட்டனர்.
4மோசே ஆண்டவரிடம், 'இந்த மக்களோடு நான் என்ன செய்வேன்? இன்னும் கொஞ்சம் போனால் என்மேல் கல்லெறிவார்களே!' என்று கதறினார்.
5ஆண்டவர் மோசேயிடம், 'இஸ்ரயேல் தலைவர்கள் சிலரை உன்னோடு அழைத்துக்கொண்டு மக்கள் முன் செல்; நைல்நதியை அடித்த உன் கோலையும் கையில் எடுத்துக் கொண்டு போ. 6இதோ நான் அங்கே ஓரேபில் உள்ள பாறையில் உனக்குமுன் நிற்பேன். நீ பாறையை அடி; மக்கள் குடிக்க அதிலிருந்து தண்ணீர் புறப்படும்' என்றார். இஸ்ரயேல் தலைவர்கள் காண மோசே அவ்வாறே செய்தார். 7இஸ்ரயேல் மக்கள் அங்கு வாதாடியதாலும் ஆண்டவர் தம்மோடு இருக்கிறாரா இல்லையா என்று சோதித்ததாலும், அவ்விடம் 'மாசா' என்றும் 'மெரிபா' என்றும் பெயரிட்டழைக்கப்பட்டது.

மாசா மற்றும் மெரிபா (מַסָּה וּמְרִיבָה)
சோதித்தல், போராடுதல் அல்லது பரிசோதித்தல் என்ற வினைச் சொல்லிலிருந்து இந்த சொற்கள் உருவாகின்றன. இவை இஸ்ராயேலர் பாலைவனத்தில் கடந்து வந்த இரண்டு 
இடங்களையும் குறிக்கின்றன. இந்த இடங்கள் அல்லது இந்த நிகழ்வுகளைப்பற்றி மூன்று தனித்துவமான பாரம்பரியங்கள் விவிலியத்தில் காணக்கிடக்கின்றன. வி.ப 17,1-7 இன் படி இஸ்ராயேல் மக்கள் இரபாதிம் என்ற இடத்தில் ஒரு தரிப்பை மேற்கொண்டனர், அங்கே அவர்கள் கடவுளுக்கு எதிராக முணுமுணுத்தனர். இதனை கண்ட கடவுள் இஸ்ராயேல் முதியவர்கள் சிலருடன் சென்று ஓரேபு மலையை அடிக்கச் சொன்னார், இதனால் தண்ணீர் வரும் அதனை அவர்கள் பருக முடியும் என்கிறார். இஸ்ராயேலர்கள் கடவுளுக்கு எதிராக சிணுங்கி முணுமுணுத்ததன் காரணமாக இது மாசா மற்றும் மெரிபா என்று அழைக்கப்படுகிறது (காண்க தி.பா 95,8: இ.ச 6,16: 9,22)
இரண்டாவது பாரம்பரியம், காதோசிக்கு அருகில் உள்ள சின் என்ற இடத்தில் நடந்த நிகழ்வைக் காட்டுகிறது, இங்கே மெரிபா மட்டுமே குறிப்பிடப்படுகிறது. இங்கே கடவுள் மோசே மற்றும் ஆரோனுக்கு கொடுத்த தண்டனை மையப்பொருளாகக் காட்டப்படுகிறது. இந்த இடத்தில், விடுதலைப் பயண பாரம்பரியத்தைப் போல் அல்லாது, பாறையுடன் பேசுமாறு மோசேக்கு கட்டளை விடப்படுகிறது, ஆனால் மோசே பாறையை இரண்டு தடவை அடிக்கிறார். மோசே கடவுளின் மேல் நம்பிக்கை இழந்ததாகவும், அத்தோடு அவருடைய பரிசுத்தத்தை நிலைநாட்ட தவறியதாகவும் காட்டப்படுகிறார். இதனால் இவ்விரு சகோதரர்களும் வாக்களிக்கப்பட்ட நாட்டிற்குள் செல்லமாட்டார்கள் என்ற தண்டனை பெறுகிறார்கள் (காண்க எண் 20,1-13: 27,14: இ.ச 32,51: தி.பா 106,32). மோசே பற்றிய வௌ;வேறு பாரம்பரியங்கள் நம்பிக்கையில் இருந்தன என்பதற்கு இந்த விவிலிய பகுதிகள் நல்ல உதாரணங்கள்.
மூன்றாவது பாரம்பரியம், கடவுள் லேவியர்களை பரிசோதித்ததை காட்டுகிறது. அவர்கள் அந்த சோதனையில் வெற்றி பெற்றதன் வாயிலாக ஊரிம் துமிம் என்ற சேவையை பெறுகிறார்கள் (காண்க இ.ச 33,8-11: தி.பா 81,8)

வ.3: மோசே இஸ்ராயேல் மக்களை எகிப்பதிலிருந்து விடுவித்ததைப் பற்றிய பல பாரம்பரியங்கள் இருந்திருக்கின்றன என்பதை இந்த வரி காட்டுகிறது. இஸ்ராயேல் மக்கள் தங்கள் சொந்த முயற்சியினால் எகிப்திலிருந்து வெளியேறவில்லை, மாறாக இதற்கு காரணமாக இருந்தவர் கடவுளும், அவர் அடியான் மோசே என்பதிலும் ஆசிரியர் கவனமாக இருக்கிறார். தண்ணீரும் தாகமும் செமித்திய மக்களின் அன்றாட பிரச்சனைகளில் ஒன்றாக இருந்தது. இவர்கள் எகிப்பதிலிருந்து வெளியேறியபோது அவர்கள் தங்கள் பிள்ளைகளோடும் மற்றும் தங்கள் கால்நடைகளோடும் வெளியேறினார்கள் என்பதையும் இந்த வரி புலப்படுத்துகிறது. 
இந்த இடத்தில் இவர்கள் கேட்கின்ற கேள்வியும் சினமும் மோசே என்கின்ற தனி மனிதனுக்கு எதிரானது என்பதைவிட அவை கடவுளுக்கு எதிரானது என்பதையும் ஆசிரியர் மையப்படுத்துகிறார். 

வ.4: இந்த வரி மோசேயின் கவலையையும் கோபத்தையும் காட்டுகிறது. மோசே கதறினார் என்று அவருடைய அவல நிலையைக் காட்டுகிறார் ஆசிரியர் (צָעַק). கல்லால் எறிதல் இந்த காலத்தில் மிக முக்கியமான தண்டனையாக இருந்திருக்கிறது என்பதையும் இந்த வரி காட்டுகிறது. பாவிகள் மேல் கற்களை வீசி அதன் மூலமாக பாவத்தை தம் சமூகத்தில் இருந்து விரட்டுகின்ற ஒரு நம்பிக்கை, செமித்திய மக்களிடையே இருந்திருக்கிறது (சில அரேபிய இனங்களிடையே இந்த வழக்கம் இன்று வரை இருக்கிறது). சாதாரணமாக இந்த தண்டனை பாலயத்திற்கு வெளியே கொடுக்கப்பட்டது (காண்க லேவி 24,14: எண் 15,35). இந்த தண்டனை இயேசுவின் காலத்திலும் 
இருந்திருக்கிறது (காண்க யோவா 8,7). ஆரம்ப கால திருச்சபை தந்தையர்கள் சிலரும் இந்த தண்டனையை பெற்றார்கள் (உதாரணம் ஸ்தேவான் தி.பணி 7,58)
விபச்சாரம், நரபலி, குழந்தைகளை பலியிடல் போன்ற வெறுக்கத்தக்க குற்றங்களுக்கு 
இஸ்ராயேல் சமூகம் இந்த தண்டனையை நிறைவேற்றியது. இதனைவிட சகுனம் பார்த்தல், தேவநிந்தனை, ஓய்வுநாளுக்கு எதிரான கலகங்கள், மிருகங்களால் ஏற்படுத்தப்படும் மரணங்கள், பிள்ளைகளின் தான்தோற்றித்தனமான வாழ்வு போன்ற பாவங்களுக்காகவும் இந்த தண்டனை வழங்கப்பட்டது. மோசேயின் பயம், அவருக்கு கிடைக்கவிருந்த தண்டனையைப் பற்றியல்ல, மாறாக அவரை இவர்கள் பாவி என்று கருதிவிடுவார்களோ, என்று நினைக்கலாம். 

வ.6: ஆண்டவர் உடனடியாக  செயலில் இறங்குகின்றார். இஸ்ராயேல் தலைவர்கள் சிலரை உடன் கூட்டிப் போகச் சொல்கிறார். எபிரேய விவிலியம் இவர்களை மூப்பர்கள் அல்லது பெரியவர்கள் (זָקֵן ட்சகென்) என்றழைக்கிறது. இவர்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவர்களாக இருந்தார்கள். இவர்களை மக்கள் அதிகமாக மதித்தார்கள். நம்முடைய ஊர்ப்பெரியவர்கள் என இவர்களைக் கருதலாம். இந்த மூப்பர்களின் வழிமரபில்தான் பின்நாள் ஆயர்கள் மற்றும் ஊர்த்தலைவர்கள் என்ற பணியாளர்கள் உருவானார்கள். இவர்களையும் உடன் கூட்டிச் செல்வதன் மூலம் மோசே செய்யும் செயல் மக்களிடம் உடனடியாக சென்றடைகிறது. அத்தோடு நைல்நதியை அடித்த தடியை கொண்டு போகச் சொல்கிறார் (וּמַטְּךָ֗ אֲשֶׁ֨ר הִכִּ֤יתָ בּוֹ֙ אֶת־הַיְאֹ֔ר). நைல் நதியை அடித்த தடி முக்கியமான தடியாக இஸ்ராயேலரின் பார்வையில் காணப்பட்டது, அது பல அதிசயங்களை செய்யும் ஆண்டவரின் பலமாக மாறியது. இந்த தடியைத்தான் கடவுள் கொண்டுபோகச் சொல்கிறார். இதனால் மோசே தனிமையாக இல்லை அவருடன் கடவுளின் வல்லமை இருக்கிறது என்பது புலப்படுகிறது. ஆண்டவர் சொன்னபடியே அனைவரும் காண மோசே சொல்லப்பட்டதை செய்கிறார்.

வ.7: மாசா மற்றும் மெரிபாவிற்கு அர்த்தம் கொடுக்கப்படுகிறது. மக்களின் செயற்பாடு இடத்தின் பெயராகியதா அல்லது இடத்தின் பெயர், மக்களின் செயற்பாடாகியதா, என்பதிலும் சில கேள்விகள் உள்ளன. எது எவ்வாறெனினும் மாசாவும் மெரிபாவும் வரலாற்றில் முக்கியமான இடமாகின்றன.                                                                                      


திருப்பாடல் 95
1வாருங்கள்; ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; நமது மீட்பின் பாறையைப் போற்றி ஆர்ப்பரியுங்கள். 2நன்றியுடன் அவர் திருமுன் செல்வோம்; புகழ்ப் பாக்களால் அவரைப் போற்றி ஆர்ப்பரிப்போம். 3ஏனெனில், ஆண்டவர் மாண்புமிகு இறைவன்; தெய்வங்கள் அனைத்திற்கும் மேலான பேரரசர். 4பூவுலகின் ஆழ்பகுதிகள் அவர்தம் கையில் உள்ளன் மலைகளின் கொடுமுடிகளும் அவருக்கே உரியன. 
5கடலும் அவருடையதே; அவரே அதைப் படைத்தார்; உலர்ந்த தரையையும் அவருடைய கைகளே உருவாக்கின. 
6வாருங்கள்; தாள்பணிந்து அவரைத் தொழுவோம்; நம்மை உருவாக்கிய ஆண்டவர்முன் முழந்தாளிடுவோம். 
7அவரே நம் கடவுள்; நாமோ அவரது மேய்ச்சலின் மக்கள்; நாம் அவர் பேணிக்காக்கும் ஆடுகள். இன்று நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்! 
8அன்று மெரிபாவிலும், பாலை நிலத்தில் மாசாவிலும் செய்ததுபோல், உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள். 
9அங்கே உங்கள் மூதாதையர் என்னைச் சோதித்தனர்; என் செயல்களைக் கண்டிருந்தும் என்னைச் சோதித்துப் பார்த்தனர். 
10நாற்பது ஆண்டளவாய் அந்தத் தலைமுறை எனக்கு வெறுப்பூட்டியதால், நான் உரைத்தது; 'அவர்கள் உறுதியற்ற உள்ளம் கொண்ட மக்கள்; என் வழிகளை அறியாதவர்கள்'. 
11எனவே, நான் சினமுற்று, 'நான் அளிக்கும் இளைப்பாற்றியின் நாட்டிற்குள் நுழையவே மாட்டார்கள்' என்று ஆணையிட்டுக் கூறினேன்.

திருப்பாடல்கள் எபிரேய கவித்துவத்தில் மிகவும் முக்கியமானவை என்பதற்கு இந்த திருப்பாடல் நல்லதோர் உதாரணம். இந்த பாடல் திருப்பிக்கூறல் முறையிலும் அத்தோடு ஏறுவரிசை அடுக்கிலும் அமைக்கப்பட்டுள்ளன. கடவுளின் புகழ்ச்சி என்பது நம்பிக்கை மற்றும் பணிவு என்பவற்றுடன் தொடர்பு பட்டது என்பதனை இந்த பாடல் அழகாகக் காட்டுகிறது. 

அ.1 (வவ.1-2): மகிழ்வுடன் ஆராதிப்பதற்கான அழைப்பு
ஆ.1 (வவ.3-5): ஆண்டவருடைய பெருமையின் விளக்கம் 
அ.2 (வ.6): மரியாதையுடன் ஆராதிக்க அழைப்பு
ஆ2 (வ.7): நம்முடைய சலுகைகளின் விளக்கம்
அ.3 (வ.7): பணிவிற்கான அழைப்பு
ஆ3 (வவ8-11): அதன் தாக்கங்களின் விளக்கம்

வ.1: ஆண்டவர் மீட்பின் பாறையாக (צוּר יִשְׁעֵנוּ), பாடப்படுகிறார். பாறை இஸ்ராயேல் மக்களுக்கு நன்கு தெரிந்த ஒரு அடையாளம். மழை, வெயில், மற்றும் புயல்க்காற்று போன்ற எந்தவிதமான சக்திகளிளும் எதிர்த்து நிற்க்கக்கூடியது. இதனை கடவுளின் அடையாளமாக இஸ்ராயேலர் கண்டனர். இந்த திருப்பாடல் ஆசிரியர், ஆண்டவரை மீட்பின் பாறை என்று அடையாளப்படுத்துகிறார். பாலைவன பிரதேச மக்களுக்கு இதன் அடையாளம் நன்கு புரியும்.

வ.2: புகழ்ப்பாக்கள் என்பது வேண்டுதல் செய்வதற்கு மேலாக, நன்றி சொல்லுதலாகும் என்ற ஆழமான இறையியலைக் காட்டுகிறார் ஆசிரியர். நன்றி கூறுதல் என்பது முதலில் அவரது பிரசன்னத்திற்குள் செல்வதாகும் என்ற உண்மையும் காட்டப்படுகிறது. ஆண்டவருடைய பிரசன்னத்திற்குள் செல்லாமல் எப்படி அவருக்கு நன்றி சொல்ல முடியும். ஆண்டவரின் பிரசன்னம் (முகம்) என்பது இங்கே அவரது இல்லத்தையோ அல்லது கூடாரத்தையோ குறிக்கலாம். 

வ.3: ஆண்டவர் (இஸ்ராயேலின் கடவுள் - יְהוָה - யாவே) மாண்புமிகு இறைவனாக பாடப்படுகிறார் (אֵל גָּדוֹל). பல கடவுள்கள் இஸ்ராயேலரைச் சுற்றி வணங்கப்பட்ட வேளையில், இஸ்ராயேலின் கடவுள்தான் மாண்புமிக்கவர் அல்லது உண்மையானவர் என்று பாடப்படுகிறார். தெய்வங்கள் என்பதும் இங்கே மற்றய கானானியரின் தெய்வங்களைக் குறிக்கிறது (כָּל־אֱלֹהִים). இந்த தெய்வங்களுக்கு, ஆண்டவர் அரசர் என்று சொல்லப்படுகிறார். ஆசிரியர் மற்ற கடவுள்களின் இருப்பை ஏற்றுக்கொள்கிறாரா என்ற கேள்வி இங்கே எழுகிறது. ஒரு கடவுள் வழிபாடு என்பது பல காலமாக முக்கியமான கேள்வியாக இஸ்ராயேல் மக்கள் மத்தியில் இருந்ததை காட்டுகிறது. பேரரசர் என்பது ஒரு அரசியல் சொல் (מֶ֥לֶךְ גָּ֝ד֗וֹל), பேரரசர் என்பவருக்கு மற்றய அரசர்கள் தங்கள் விசுவாசத்ததையும் மரியாதையையும் செலுத்துவார்கள், அத்தோடு அவருக்கு எதிராக எந்த செயற்பாடுகளையும் மேற்கொள்ளாதிருப்பார்கள், அப்படியான விசுவாசமே இங்கே காட்டப்படுகின்றன. 

வ.4: இந்த பேரரசராகிய கடவுளின் பலம் காட்;டப்படுகிறது. இந்த கடவுளிடம்தான் பூவுலகின் ஆழ் பகுதிகளும் (מֶחְקְרֵי ־אָ֑רֶץ), மலைகளின் கொடுமுடிகளும் (תוֹעֲפוֹת הָרִים) உள்ளன. இந்த இரண்டு பகுதிகளும் ஆச்சரியம் நிறைந்தாகவும், இலகுவில் மனிதர்கள் அடையமுடியாத இடங்களாகவும் கருதப்பட்டிருக்கலாம். ஆண்டவர் இவற்றின் அதிகாரியாக இருப்பது, அவர் வல்லமையுள்ளவர் என்பதை விளக்குகின்றது. 

வ.5: கடல் (יָּם), இஸ்ராயேலர் பார்வையில் இன்னோர் அதிசயம். ஏற்கனவே மலைகள் மற்றும் பூவுலகின் ஆழ்பகுதிகள் ஆண்டவருடைய கட்டுப்பாட்டில் இருக்கின்றன என்றவர் இப்போது கடல்களையும் கடவுளே படைத்ததாக பாடுகிறார். இந்த கடலிலே பயங்கரமான சக்திகளும் அடக்கமுடியாத விலங்குகளும் இருப்பதாக எபிரேய விஞ்ஞானம் கருதியது. கடல் ஒரு அதிசயம் ஆக இந்த அதிசயத்தின் கடவுளாக, ஆண்டவர் இருப்பதனால் அவர் அதிசயத்தின் ஆண்டவராகிறார். அதே வேளை, கடலுக்கு சரி எதிராக உலர்ந்த தரை இருக்கிறது, இதனைக்கூட கடவுள் தான் உருவாக்கினார் என்பது ஆசிரியரின் நம்பிக்கை. கடவுளை ஒரு மனிதர் போல வர்ணித்து அவரது கரங்கள்தான் உலர் தரையை உருவாக்கினார் என்கிறார். 

வ.6: இந்த பாடலின் இரண்டாவது பகுதியாக மீண்டும் ஆண்டவரை தொழவும், பணிந்து வணங்கவும் அழைப்பு விடப்படுகிறது. வணக்கம் செலுத்துதல் மற்றும் பணிந்து வணங்குதல் என்பன வழிபாட்டு அடையாளங்கள், அது கடவுளுக்கு வழங்கப்படுகிறது. இதற்கான காரணத்தை இந்த வரியில் இரண்டாம் பாகம் விவரிக்கின்றது, ஏனெனில் அவர்தான் நம்மை படைத்தவர் என்று அந்த அர்த்தம் விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. 

வ.7: இந்த கடவுளுக்கும் அவர் மக்களுக்கும் இடையிலான உறவு விளங்கப்படுத்தப்பட்டுள்ளன. அவர்தான் நம் கடவுள், என்பது முக்கியமான விசுவாசம். பல தெய்வங்களை உலகம் அறிமுகப்படுத்தினாலும், இஸ்ராயேலின் கடவுள், இவர்கள் முன்னோரின் கடவுள் என்பதில் எந்த விதமான மாற்றமும் இல்லை என்பதைக் காட்டுகிறது (ה֤וּא אֱלֹהֵ֗ינוּ ஹூ எலோஹேனூ அவர் நம் கடவுள்). அடுத்த பகுதி மக்களை விளங்கப்படுத்துகிறது, அவர்கள், இந்த கடவுளின் மேய்ச்சல் மக்கள், அத்தோடு ஆடுகள் (עַם מַרְעִיתוֹ וְצֹאן). இந்த இரண்டு அடையாளங்களும் இஸ்ராயேல் மக்களுக்கு மிக பரிட்சியமானவை. மேய்சல் மக்கள் மற்றும் மந்தைகள் போன்ற உருவகங்கள் வாயிலாக ஆசிரியர் மக்களை ஆடுகளுக்கு ஒப்பிடுகிறார், தரம் குறைக்கவல்ல, மாறாக ஆடுகளின் பண்புகளை சுட்டிக்காட்டி அதன் வழி மக்களின் உறவைக் காட்ட. ஆண்டவரின் குரலுக்கு செவிசாய்த்தல் எத்துணை நலம் என்பது மக்கள் தொன்றுதொட்டு ஆண்டவரின் குரலுக்கு செவிசாய்க்காமல் இருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது. 

வ.8: இந்தப் பாடல் காலத்தால் மிகவும் பிந்தியதாக இருக்க வேண்டும். மாசா மற்றும் மெரிபா அனுபவங்கள் ஏற்கனவே பாலைநிலத்தில் நடந்தேறியிருந்தன, அதனைபற்றி பல படிப்பினைகள் மற்றும் கதைகள் இஸ்ராயேல் மக்கள் மத்தியில் வழக்கிலிருந்தன, அதனைத்தான் இந்தப் பாடல் காட்டுகிறது. இதயத்தை கடினப்படுத்துதல் மனதைக் கடினப்படுத்தலுக்குச் சமனாகும். பழங்; கால எபிரேய சிந்தனை, இதயத்தை முக்கியமாக உணர்வுகளின் இருப்பிடமாகக் கருதியது, இதனால் முக்கிய முடிவுகள் இதயத்தால் எடுக்கப்பட்டன என நம்பியது, அதன் விளைவாகத்தான் இதயம் கடினமானால் அங்கே கீழ்படிவுக்கு இடம் இல்லை என்கிறது (אַל־תַּקְשׁ֣וּ לְ֭בַבְכֶם).

வ.9: மாசாவிலும் மெரிபாவிலும் இவர்கள் என்ன செய்தார்கள் என்பது மேலும் தெளிவூட்டப்படுகிறது. திருப்பாடல்கள் புகழ்ச்சிப்பாடல்களாக இருந்தாலும், இந்த பாடல்கள் மூலம் இஸ்ராயேல் பிள்ளைகளுக்கு வரலாறும் நல்ல படிப்பினைகளும் கொடுக்கப்படுகின்றன. முன்னோர் செய்த தவறுகளை நினைப்பதன் மூலமும், கடவுள் செய்யும் நன்மைத் தனத்தை நினைப்பதன் மூலம், தவறுகள் தொடராமலிருப்பதற்கான வாய்ப்புக்கள் பெருகுகின்றது. இந்த வரியில், ஆண்டவரின் நற் செயல்களை இஸ்ராயேலர் கண்டிருந்தும் அவர்கள் அவரை சோதித்தனர் என்று கடவுள் நேரடியாக பேசுவதனைப்போல காட்டுகிறார் ஆசிரியர். இந்த வரி நிச்சயமாக வாசகர்களின் இதயத்தைத் தொடும் என்பதில் ஐயமில்லை. 

வ.10: எத்தனை வருடங்கள் இஸ்ராயேலர் பாலைவனத்தில் அலைந்தனர், மற்றம் அவர்கள் ஏன் அவ்வளவு காலம் இப்படி அலைந்தனர் என்பதற்கு இந்த வரி விடையளிக்க முயல்கிறது. அவர்கள் நாற்பது ஆண்டுகள் பாலைவனத்தில் அலைந்து திரிந்தனர். அவர்கள் கடவுளுக்கு வெறுப்பூட்டினர் என்கிறார் ஆசிரியர் (אָק֤וּט). இந்த வெறுப்பூட்டல் இரண்டு விதமான முடிவுகளை மக்களுக்கு கொடுக்கிறது, அதாவது அவர்கள் உறுதியற்ற இதயம் கொண்டவர்கள் (עַם תֹּעֵ֣י לֵבָב הֵם), அவர்கள் கடவுளின் பாதைகளை அறியாதவர்கள் (הֵם לֹא־יָדְעוּ דְרָכָי)

வ.11: இதன்காரணமாகத்தான் இவர்கள் வாக்களிக்கப்பட்ட நாட்டிற்குள் நுழையாமற் போனார்கள் என்ற வரலாறு தெளிவாகின்றது. ஆண்டவர் சினமுற்றது காட்டப்படுகிறது. ஆண்டவரின் சினத்தை, ஆண்டவரின் மூக்கு சிவந்தது என்று காட்டுகிறது எபிரேய மொழி (אַפִּי). ஆண்டவர் தான் வாக்களிக்கின்ற நாட்டிற்க்கு அழகான பெயர் ஒன்றை சூட்டுகிறார் 'என்னுடைய ஓய்வு' (מְנוּחָתִֽי). இது ஓர் அழகான உவமானம், வெயிலின் கொடுமையில் ஓடிவருகின்ற ஆடுகளுக்கு ஓய்வளிக்கும் இடம் அதற்கு சொர்க்கம் போல இருக்கும், இதனை இஸ்ராயேல் மக்களுக்கு காட்டுகிறார் ஆசிரியர். அவர்களை மந்தைகளாகவும், களைத்திருப்பவர்களாகவும், இருப்பினும் தாழ்ச்சியின்மையால் இந்த ஓய்விடம் கிடைக்காமல் போகின்றது. 


உரோமையர் 5,1-2: 5-8

1ஆகையால் நாம் கொண்டுள்ள நம்பிக்கையின் மூலம் கடவுளுக்கு ஏற்புடையவர்களாகியுள்ள நாம், நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் வழியாய்க் கடவுளோடு நல்லுறவு கொண்டுள்ளோம். 2நாம் இப்போது அருள்நிலையைப் பெற்றிருக்கிறோம். இந்நிலையை அடையும் உரிமை இயேசு கிறிஸ்துமீது கொண்ட நம்பிக்கையால் தான் அவர் வழியாகவே நமக்குக் கிடைத்தது. கடவுளின் மாட்சியில் பங்குபெறுவோம் என்னும் எதிர்நோக்கில் நாம் பெருமகிழ்வும் கொள்ள முடிகிறது.3அதுமட்டும் அல்ல, துன்பங்களைத் தாங்கிக் கொள்வதிலும் பெருமகிழ்ச்சி கொள்கிறோம். ஏனெனில், துன்பத்தால் மன உறுதியும், 4மன உறுதியால் தகைமையும், தகைமையால் எதிர்நோக்கும் விளையும் என அறிந்திருக்கிறோம். 5அந்த எதிர்நோக்கு ஒருபோதும் ஏமாற்றம் தராது எனெனில் நாம் பெற்றுள்ள தூய ஆவியின் வழியாய்க் கடவுளின் அன்பு நம் உள்ளங்களில் பொழியப்பட்டுள்ளது. 6நாம் இறைப்பற்று இன்றி வலுவற்று இருந்தபோதே, குறித்தகாலம் வந்ததும் கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். 7நேர்மையாளருக்காக ஒருவர் தம் உயிரைக் கொடுத்தலே அரிது. ஒருவேளை நல்லவர் ஒருவருக்காக யாரேனும் தம் உயிரைக் கொடுக்கத் துணியலாம். 8ஆனால், நாம் பாவிகளாய் இருந்தபோதே கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். இவ்வாறு கடவுள் நம்மீது கொண்டுள்ள தம் அன்பை எடுத்துக் காட்டியுள்ளார்.

உரோமையருக்கு எழுதிய இந்த பகுதியில் கடவுளுக்கு ஏற்புடையவராதலால் கிடைக்கும் பயன்களைப் பற்றி பவுல் விளக்குகிறார். கடவுளுக்கு ஓருவர் எப்படி ஏற்புடையவராகுகிறார், இந்த கேள்விக்கு யூதர்களும், யூதரல்லாதவர்களும் வித்தியாசமான விடைகளைக் கொடுத்தனர். ஆனால் பவுலின் நற்செய்தியின் படி, இயேசு கிறிஸ்துவின் மேல் ஒருவர் கொள்ளும் நம்பிக்கைதான் ஒருவரை கடவுளுக்கு ஏற்புடையவராக்குகின்றது. அவர்கள் சட்டத்தைப் பின்பற்றும் யூதரானாலும், மெய்யறிவை பின்பற்றும் கிரேக்க-உரோமையரானாலும், எவருக்கும் நம்பிக்கைதான் முக்கியம் என்பதை தூய பவுல் அழகாகக் காட்டுகிறார். 
வ.1: இந்த வரி பவுலுடை இறையியலை அப்படியே சுருக்கம் செய்கிறது.
அ. நாம் நம்பிக்கையின் வழியாக ஏற்புடையவராகின்றோம் (Δικαιωθέντες οὖν ἐκ πίστεως). 
ஆ. இதனால் கடவுளுடன் சமாதானம் கொள்கின்றோம் (εἰρήνην  ἔχομεν πρὸς τὸν θεὸν). 
இ. இந்த செயற்பாடு கிறிஸ்து இயேசுவின் வழியாக நடைபெறுகிறது (διὰ τοῦ κυρίου ἡμῶν Ἰησοῦ Χριστοῦ).

வ2: கடவுளுக்கு ஏற்புடையவராதலால் நடைபெறும் மாற்றங்கள் மேலும் விளங்கப்படுத்துகின்றன. கிறிஸ்தவர்களுக்கு, பலவிதமான சந்தேகங்கள் இருந்தன, அதில் முக்கியமான சந்தேகம் அருள் நிலையைப் பற்றிய கேள்வி. கிறிஸ்தவர்கள் அருள்நிலைக்கு தகுதியானவர்களா என்ற வாதமும் பிரதிவாதமும் இருந்திருக்கின்றன. இதனை தெளிவு படுத்துகிறார் பவுல். அதாவது கிறிஸ்தவர்கள் அருள்நிலைக்கு (προσαγωγή) தகுதிபெற்றிருக்கிறார்கள், அது விசுவாசத்தில் (πίστις) நடைபெறுகிறது, அத்தோடு அது அருளை நோக்கி (χάρις) நடைபெறுகிறது. இதனைப்பற்றி கிறிஸ்தவர்கள் பெருமை பாராட்டக்கூட முடியும் என்பது பவுலின் வாதம்.

வ.3-4: இந்த வரிகளில் துன்பத்திற்கும் எதிர்நோக்கிற்குமான தொடர்பை விவரிக்கிறார் பவுல். எதிர்நோக்கில் மட்டுமல்ல, கிறிஸ்தவர்கள் பெருமைபாராட்டுவது, அவர்கள் துன்பத்திலும் (θλῖψις) பெருமை பாராட்டுகின்றனர். துன்பம் கிறிஸ்துவின் அருளை அடைவதற்கு ஒரு ஊடகமாக 
இருப்பதனால் இது சாத்தியமாகின்றது. துன்பம், மனவுறுதியை (ὑπομονή) உருவாக்குகின்றது என்பது பவுலுடைய அழகான கண்டுபிடிப்பு. அத்தோடு மனவுறுதி தகமையையும் (δοκιμή), தகமை எதிர்நோக்ககையும் (ἐλπίς) விளைவிக்கிறது, இதனை உரோமையர்கள் அறிந்திருக்கிறார்கள் என்கிறார் பவுல். 

வ.5: நம்முடைய எதிர்நோக்கு, ஏமாற்றம் தந்தால் என்ன செய்வது. இது ஒரு முக்கியமான கேள்வி. இதற்கு விடையளிக்கிறார் பவுல். ஏனெனில் இந்த எதிர்நோக்கு அன்பிலும் தூய ஆவியாலும் பொழியப்பட்டுள்ளது. தூய ஆவியார் ஏமாற்றம் தரகூடயவரல்லர். இந்த வரியிலிருந்து உரோமைக் கிறிஸ்தவர்கள் தூய ஆவியாரின் பண்புகளை ஏற்கனவே நன்கு அறிந்திருந்தனர் என ஊகிக்கலாம். இதனால்தான் தன்னுடைய வாதத்திற்கு தூய ஆவியாரை சாட்சியாக அழைக்கிறார்.

வ.6: பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகம் யூதரல்லாத உரோமையரை அதிகமாக எதிர்நோக்கியது எனலாம். ஏனெனில் அவர்களைத்தான் இங்கே அவர், 'நாம் இறைபற்று இன்றி வலுவற்றோராய் இருந்தோம்' (ἡμῶν ἀσθενῶν) என்கிறார். பவுல் தான் ஒரு யூத கிறிஸ்தவராக 
இருந்தும், தன்னை யூதரல்லாத கிறிஸ்தவர்களுடன் அடையாளப்படுத்துகின்றமை, அவரது மனிதத்தை ஆழமாகக்  காட்டுகின்றது. கிறிஸ்து இந்த இறைபற்று இருந்தவர்களுக்காக
இறந்தார் என்பது, கிறிஸ்துவின் அன்பின் முன்னால் அனைவரும் முக்கியமானவர்கள் என்பது புலப்படுகிறது. 

வ.7: நண்பருக்காக, கொள்கைக்காக, நாட்டிற்காக ஒருவர் உயிரைக் கொடுக்க துணியலாம் என்கிறார் பவுல். இந்த வரியிலிருந்து அக்காலத்திலே இப்படியான தியாகங்கள் நன்கு அறியப்பட்டிருக்கின்றன என்பது புலனாகிறது. நேர்மையாளர் அல்லது நல்லவருக்காக ஒருவர் உயிரை கொடுப்பது நடைபெறுகிறது ஆனால் அதுவும் அரிதாகத்தான் நடைபெறுகிறது என்கிறார் (μόλις மோலிஸ்- அரிது).

வ.8: இந்த வரியில் பவுல் தன்னோடு இணைத்து உரோமைய கிறிஸ்தவர்கள் அல்லது அனைத்து கிறிஸ்தவர்களும் பாவிகளாக இருந்தபோது கிறிஸ்து உயிரைக்கொடுத்தார் என்ற வாதத்தை முன்வைக்கிறார். இந்த ஆண்டவரின் உயிர்தியகத்தினால்தான் கடவுளின் அன்பின் ஆழம் அனைவருக்கும் புலப்பட்டது என்று சொல்கிறார். இயேசுவின் இந்த உயிர்த்தியாகம், பவுலின் கருத்துப்படி ஒரு எடுத்துக்காட்டுதல் (συνίστημι). இங்கே பவுல் யூதரல்லாதவர்களை பாவிகள் என்பது அவர்களை மட்டம் தட்டவல்ல என்பதை கவனிக்க வேண்டும், இங்கே அவர் பாவம் என்று சொல்வது, அவர்களின் சமய நம்பிக்கையை மையப்படுத்தியே ஓழிய, அவர்களின் இனத்தை பாவம் நிறைந்த இனமென்று குறிக்கவல்ல.  

யோவான் 4,5-42
4கலிலேயாவுக்கு அவர் சமாரியா வழியாகச் செல்லவேண்டியிருந்தது. 5அவர் சமாரியாவில் உள்ள சிக்கார் என்னும் ஊருக்கு வந்து சேர்ந்தார். யாக்கோபு தம் மகன் யோசேப்புக்குக் கொடுத்த நிலத்துக்கு அருகே அந்த ஊர் இருந்தது. 6அவ்வூரில் யாக்கோபின் கிணறும் இருந்தது. பயணத்தால் களைப்புற்றிருந்த இயேசு கிணற்று ஓரமாய் அமர்ந்தார். அப்போது ஏறக்குறைய நண்பகல். 7-8அவருடைய சீடர் உணவு வாங்குவதற்காக நகருக்குள் சென்றிருந்தனர். சமாரியப் பெண் ஒருவர் தண்ணீர் மொள்ள வந்தார். இயேசு அவரிடம், 'குடிக்க எனக்குத் தண்ணீர் கொடும்' என்று கேட்டார். 9அச் சமாரியப் பெண் அவரிடம், 'நீர் யூதர்; நானோ சமாரியப் பெண். நீர் என்னிடம் குடிக்கத் தண்ணீர் கேட்பது எப்படி?' என்று கேட்டார். ஏனெனில் யூதர்கள் சமாரியரோடு பழகுவதில்லை. 10இயேசு அவரைப் பார்த்து, 'கடவுளுடைய கொடை எது என்பதையும் 'குடிக்கத் தண்ணீர் கொடும்' எனக் கேட்பவர் யார் என்பதையும் நீர் அறிந்திருந்தால் நீரே அவரிடம் கேட்டிருப்பீர்; அவரும் உமக்கு வாழ்வு தரும் தண்ணீரைக் கொடுத்திருப்பார்' என்றார்.
11அவர் இயேசுவிடம், 'ஐயா, தண்ணீர் மொள்ள உம்மிடம் ஒன்றுமில்லை; கிணறும் ஆழமானது. அப்படியிருக்க வாழ்வு தரும் தண்ணீர் உமக்கு எங்கிருந்து கிடைக்கும்? 12எம் தந்தை யாக்கோபை விட நீர் பெரியவரோ? அவரே எங்களுக்கு இக்கிணற்றை வெட்டித் தந்தார். அவரும் அவருடைய மக்களும் கால்நடைகளும் இதிலிருந்துதான் தண்ணீர் குடிப்பது வழக்கம்' என்றார். 13இயேசு அவரைப் பார்த்து, 'இந்தத் தண்ணீரைக் குடிக்கும் ஒவ்வொருவருக்கும் மீண்டும் தாகம் எடுக்கும். 14நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கும் எவருக்கும் என்றுமே தாகம் எடுக்காது நான் கொடுக்கும் தண்ணீர் அதைக் குடிப்பவருக்குள் பொங்கி எழும் ஊற்றாக மாறி நிலைவாழ்வு அளிக்கும்' என்றார்.15அப்பெண் அவரை நோக்கி, 'ஐயா, அத்தண்ணீரை எனக்குக் கொடும்; அப்போது எனக்குத் தாகமும் எடுக்காது; தண்ணீர் மொள்ள நான் இங்கு வரத்தேவையும் இருக்காது' என்றார். 16இயேசு அவரிடம், 'நீர் போய், உம் கணவரை இங்கே கூட்டிக் கொண்டு வாரும்' என்று கூறினார்.17அப்பெண் அவரைப் பார்த்து, 'எனக்குக் கணவர் இல்லையே' என்றார். இயேசு அவரிடம், ''எனக்குக் கணவர் இல்லை' என நீர் சொல்வது சரியே. 18உமக்கு ஐந்து கணவர்கள் இருந்தார்கள் என்றாலும் இப்போது உம்முடன் இருப்பவர் உம் கணவர் அல்ல. எனவே நீர் கூறியது உண்மையே' என்றார். 19அப்பெண் அவரிடம், 'ஐயா, நீர் ஓர் இறைவாக்கினர் எனக் கண்டுகொண்டேன். 20எங்கள் முன்னோர் இம்மலையில் வழிபட்டுவந்தனர். ஆனால் நீங்கள் எருசலேமில்தான் வழிபட வேண்டும் என்கிறீர்களே' என்றார். 21இயேசு அவரிடம், 'அம்மா, என்னை நம்பும். காலம் வருகிறது. அப்போது நீங்கள் தந்தையை இம்மலையிலோ எருசலேமிலோ வழிபடமாட்டீர்கள். 22யாரை வழிபடுகிறீர்கள் எனத் தெரியாமல் நீங்கள் வழிபடுகிறீர்கள். ஆனால் நாங்கள் தெரிந்து வழிபடுகிறோம். யூதரிடமிருந்தே மீட்பு வருகிறது. 23காலம் வருகிறது ஏன், வந்தேவிட்டது! அப்போது உண்மையாய் வழிபடுவோர் தந்தையை அவரது உண்மை இயல்புக்கேற்ப உள்ளத்தில் வழிபடுவர். தம்மை வழிபடுவோர் இத்தகையோராய் இருக்கவே தந்தை விரும்புகிறார். 24கடவுள் உருவமற்றவர். அவரை வழிபடுவோர் அவரது உண்மை இயல்புக்கு ஏற்ப உள்ளத்தில்தான் வழிபட வேண்டும்' என்றார். 25அப்பெண் அவரிடம், 'கிறிஸ்து எனப்படும் மெசியா வருவார் என எனக்குத் தெரியும். அவர் வரும்போது அனைத்தையும் எங்களுக்கு அறிவிப்பார்' என்றார். 26இயேசு அவரிடம், 'உம்மோடு பேசும் நானே அவர்' என்றார். 27அந்நேரத்தில் இயேசுவின் சீடர் திரும்பி வந்தனர். பெண் ஒருவரிடம் அவர் பேசிக்கொண்டிருப்பதைக் கண்டு அவர்கள் வியப்புற்றனர். எனினும் 'என்ன வேண்டும்?' என்றோ, 'அவரோடு என்ன பேசுகிறீர்?' என்றோ எவரும் கேட்கவில்லை. 28அப்பெண் தம் குடத்தை விட்டுவிட்டு ஊருக்குள் சென்று மக்களிடம், 29'நான் செய்த எல்லாவற்றையும் என்னிடம் சொன்ன மனிதரை வந்து வாருங்கள். அவர் மெசியாவாக இருப்பாரோ!' என்றார். 30அவர்கள் ஊரிலிருந்து புறப்பட்டு இயேசுவிடம் வந்தார்கள்.
31அதற்கிடையில் சீடர், 'ரபி, உண்ணும்' என்று வேண்டினர். 32இயேசு அவர்களிடம், 'நான் உண்பதற்குரிய உணவு ஒன்று உண்டு. அது உங்களுக்குத் தெரியாது' என்றார். 33'யாராவது அவருக்கு உணவு கொடுத்திருப்பார்களோ' என்று சீடர்கள் தங்களிடையே பேசிக்கொண்டார்கள். 34இயேசு அவர்களிடம், 'என்னை அனுப்பியவரின் திருவுளத்தை நிறைவேற்றுவதும் அவர் கொடுத்த வேலையைச் செய்து முடிப்பதுமே என் உணவு. 35'நான்கு மாதங்களுக்குப் பின்தான் அறுவடை' என்னும் கூற்று உங்களிடையே உண்டே! நிமிர்ந்து வயல்வெளிகளைப் பாருங்கள். பயிர் முற்றி அறுவடைக்குத் தயாராய் உள்ளது. 36அறுப்பவர் கூலி பெறுகிறார்; நிலைவாழ்வு பெறுவதற்காக மக்களைக் கூட்டிச் சேர்க்கிறார். இவ்வாறு விதைப்பவரும் அறுப்பவரும் ஒருமிக்க மகிழ்ச்சியடைகின்றனர். 37-38நீங்கள் உழைத்துப் பயிரிடாததை அறுவடை செய்ய நான் உங்களை அனுப்பினேன். மற்றவர்கள் உழைத்தார்கள்; ஆனால் நீங்கள் அந்த உழைப்பின் பயனை அடைந்தீர்கள். இவ்வாறு 'விதைப்பவர் ஒருவர்; அறுவடை செய்பவர் வேறு ஒருவர்' என்னும் கூற்று உண்மையாயிற்று' என்றார். 39'நான் செய்தவை அனைத்தையும் என்னிடம் சொன்னார்' என்று சான்று பகர்ந்த பெண்ணின் வார்த்தையை முன்னிட்டு அவ்வூரிலுள்ள சமாரியர் பலர் இயேசுவிடம் நம்பிக்கை கொண்டனர். 40சமாரியர் அவரிடம் வந்தபோது அவரைத் தங்களோடு தங்குமாறு கேட்டுக்கொண்டனர். அவரும் அங்கு இரண்டு நாள் தங்கினார். 41அவரது வார்த்தையை முன்னிட்டு இன்னும் பலர் அவரை நம்பினர். 42அவர்கள் அப்பெண்ணிடம், 'இப்போது உன் பேச்சைக் கேட்டு நாங்கள் நம்பவில்லை; நாங்களே அவர் பேச்சைக் கேட்டோம். அவர் உண்மையிலே உலகின் மீட்பர் என அறிந்து கொண்டோம்' என்றார்கள்.

யோவான் நற்செய்தி அடையாளங்கள் நிறைந்த நற்செய்தி. இந்த நற்செய்தியில் வருகின்ற பாத்திரங்கள் ஒவ்வொன்றும் அடையாளங்கள் வாயிலாக பேசுகின்றன. இந்த நற்செய்தியிலே வருகின்ற இடங்களான சமாரியா, கிணறு மற்றும் நகர் போன்றவை அவதானிக்கப்படவேண்டியவை. அத்தோடு இரண்டாம் அதிகாரத்தில் நிக்கோதேம் எனப்படும் பரிசேயரை சந்தித்த இயேசு, அவரைப்போல் அல்லாது பகலிலே இந்த சமாரியப் பெண்ணை சந்திக்கிறார். இந்த பகுதியில் நாம் சந்திக்கின்ற பாத்திரங்களான, இயேசு ஆண்டவர், சமாரியப் பெண், சீடர்கள் மற்றும் சமாரியர்கள் போன்றவர்களும் அடையாளங்களாக யோவான் நற்செய்தியாளர் காட்டுகிறார்.

சமாரியா (שֹׁמְרוֹן ஷம்ரோன்):
சமாரியா ஒம்ரி (கி.மு 884) எனப்படும் வடஅரசின் அரசன் ஒருவரால் உருவாக்கப்பட்ட நகர். சமாரியர்கள் தங்களை எபிராயிம் மற்றும் மனாசேயின் (யோசேப்பின் புதல்வர்கள்) வழிமரபினர் என்று கருதுகின்றார்கள். சாலமோனின் மறைவிற்கு பின் இஸ்ராயேல் நாடு வட அரசாகவும் தென்னரசாகவும் பிளவு பட்டது. வட அரசு பத்துக்கோத்திரங்களை ஒன்றிணைத்து எரோபோவாம் தலைமையில் புது அரசானது. தென்னரசு சாலமோனின் மகன் ரெகெபெயாம் தலைமையில் இரண்டு கோத்திரங்களுடன் எருசலேமைத் தலைநகராகக் கொண்டு வாழத்தொடங்கியது. இந்த இரண்டு அரசுகளுக்கும் 
இடையில் அரசியல் போட்டிகளும் காழ்ப்புணர்வுகளும் தொன்றுதொட்டே இருந்துகொண்டு வந்திருக்கிறது. சிலர் இதனை சவுல் தாவீது காலத்திற்கும் எடுத்துச் செல்கின்றனர். 
இஸ்ராயேல் இரண்டு அரசுகளாக பிரிந்ததன் பின்னர் இந்த பிளவு பெரிதாகியது. எரோபோவாம், வட அரசின் மக்களை எருசலேம் செல்லவிடாமல், தான் மற்றும் பெத்தேல் இடங்களில் வழிபடுமாறு கட்டாயப்படுத்தினான். தான் மற்றும் பெத்தேல் இடங்களில் இவ்வாறு வழிபாட்டு முக்கிய இடங்கள்

உருவானது. வட அரசும், தென் அரசும் இரண்டு அரசுகளாக தங்களின் நலன்களையே கருத்தில் கொண்டு நண்பர்களையும் எதிரிகளையும் தேவைக்கேற்றவாரு மாற்றிக் கொண்டார்கள். 
அசிரியருடைய காலத்தில் (கி.மு 722), வட அரசும் அதன் தலைநகரான சமாரியாவும் அசிரியர்களின் படையெடுப்புகாரணமாக மிக பயங்கரமான அழிவை சந்தித்தது. அசிரியர்கள் சமாரியாவைத் தாக்கி அதன் மக்களை அசிரியாவிற்கு கொண்டு சென்றனர். அவர்களுக்கு அதற்கு பின்னர் என்ன நடந்ததென்பது இன்றுவரை அவ்வளவு தெளிவாக இல்லை. அவர்கள் அழிந்து போனார்களா, அல்லது மற்றய இனங்களுடன் கலந்தார்களா என்பதில் பல கேள்விகள் உள்ளன. அசிரியர்கள் வேற்று இன மக்களை கொண்டுவந்து சமாரியாவிலே குடியேற்றினார்கள் என்று யூதர்கள் வாதாடுகின்றனர். இந்த குடியமர்விற்கு பின்னர் எபிரேய அடையாளத்தை சமாரியா இழந்தது என்றும், சமாரியாவில் உள்ளவர்கள் உண்மையான இஸ்ராயேலர் இல்லை என்ற வாதமும் முன்வைக்கப்பட்டது. யூதேய நாடு, பபிலோனிய இடப்பெயர்விற்குப் பின்னர் பல வீழ்ச்சிகளை சந்தித்தது. பபிலோனியாவிலிருந்த யூதர்கள் பாரசீகர்களுடைய காலத்தில் பல காரணங்களுக்காக தங்களுடைய சொந்த நாடாகிய யூதேயாவிற்கு அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் திரும்பி வந்து எருசலேமை கட்டியபோது முதலில் சமாரியர்கள் உதவிசெய்ய முன்வந்தனர், அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டபோது, அவர்கள் யூதர்களுக்கு எதிராக வேலைசெய்ய தொடங்கினர். இந்த பிரச்சினை நெகேமியாவுடைய (கி.மு 538) காலத்தில் மிக உச்சத்தில் இருந்தது. மக்கபேயர்கள் காலத்தில், யூத தலைவர்கள் சமாரியர்களுக்கு எதிராக பல யுத்தங்களை செய்திருக்கிறார்கள். யூதர்கள், சமாரியர்களை குறைவான இஸ்ராயேலர்களாகவும், சமாரியர்கள் யூதர்களை பிடிவாதக்காரர்களாகவும் கணித்தனர். சமாரியர்கள் தங்களுக்கென்று ஒரு ஆலயத்தை கெரிசிம் மலையிலே அமைத்து அங்கே வழிபாடு செய்தனர், எருசலேமிற்கு அவர்கள் வருவதில்லை. அவர்களுடைய விவிலியத்திலே மோசேயின் புத்தகங்களான முதல் ஐந்து நூல்கள் மட்டுமே காணப்பட்டன. யூதர்களின் விவிலியத்தை (நம்முடைய முதல் ஏற்பாடு), அவர்கள் திரிவுபடுத்தப்பட்ட நூற்கள் என கருதினர். சமாரியர்களுடைய மொழிக்கும், இன்றைய எபிரேய மொழிக்கும் குறிப்பிடக்கூடிய பல வித்தியாசங்கள் உள்ளன. வரலாற்றில் இந்த இரண்டு மக்களுக்கும் இடையில் பல கசப்பான நிகழ்வுகள் நடந்ததன் காரணமாக இரண்டு மக்கள் கூட்டங்களும் ஒருவரோடு ஒருவர் பழகுவதில்லை. சமாரியாவை தவிர்க்கவே கலிலேய யூதர்கள் எருசலேம் வருவதற்காக யோர்தான் நதியை சுற்றி வந்தனர். இயேசுவுடைய காலத்திலும் இந்த கசப்புணர்வு கடுமையாக இருந்தது. இன்றைய நவீன இஸ்ராயேலிலும் இந்த பாகுபாடு 
இருக்கிறது, இருப்பினும் அவ்வளவு கடுமையாக இல்லை என்று சொல்லலாம். 
இயேசு தன்னுடைய போதனைகளில் சமாரியருக்கு மிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். லூக்கா நற்செய்தியின் நல்ல சமாரியர் உவமை (காண்க லூக்கா 10,29-37) இதற்கு நல்ல உதாரணம். (மேலும் வாசிக்க லூக்கா 9,52-53: மத்தேயு 10,5-6: லூக்கா 17,11-19: திருத்தூதர் பணிகள் 8).

வ.5: இயேசு யூதர்களின் வழக்கமான பாதையை தவிர்த்து கலிலேயாவிற்கு செல்ல சமாரியா ஊடாக செல்கிறார். அப்போது சமாரியாவின் சிக்கார் ஊர் வழியாக சீடர்களுடன் பயணிக்கிறார். 
இந்த சிக்கார் சிக்கேமிற்கு அருகில் இருந்திருக்க வேண்டும். யோவானின் இயேசு அனைத்தையும் இறை காரணத்தோடே செய்வார். இந்த குறுகிய பாதையும், இறை சித்தமாகவே 
இருக்கிறது. யாக்கோபின் கிணற்றிக்கு வடகிழக்காக இருக்கும் அஸ்கார் என்ற கிராமமாக 
இது இருந்திருக்க வேண்டும் என்று இஸ்ராயேல் புவியியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். 
இந்த இடம் யாக்கோபு தன் மகன் யோசேபிற்கு கொடுத்த நிலம் என்று யோவான் சொல்கிறார். இது ✻ தொ.நூல் 48,22 இல் உள்ள வரலாற்றை நினைவூட்டலாம். 
(✻ 22நான் என் வாளாலும் வில்லாலும் எமோரியரிடமிருந்து கைப்பற்றிய செக்கேம் பகுதியை, உன் சகோதரரை விட உயர்ந்தவன் என்ற முறையில், உனக்கே தருகிறேன்' என்றார்.)

வ.6: யாக்கோபின் கிணறு என்பது யாக்கோபு கட்டிய கிணறாக இருக்கலாம். இந்த கிணறு மிகப் பழமையானதாக இருந்திருக்க வேண்டும். இயேசு பயணத்தால் களைப்புற்றார். யோவானின் இயேசு எப்போதும் கடவுள் என்பதில் கவனமாக இருந்தாலும், அவர் உண்மையான மனிதனாகவும் 
இருந்தார் என்பதற்கு நல்ல உதாரணம் தருகிறார். அத்தோடு அவர் இந்த கிணற்றடியில் அமர்வது அடுத்த கட்டத்திற்கு காரணமாக அமைகிறது. இயேசு அமர்ந்திருந்தது ஆறாவது மணித்தியாலம் என்கிறது கிரேக்க விவிலியம், இது நண்பகலைக் குறிக்கும். 

வவ.7-8: அவருடைய சீடர்கள் உணவுவாங்க நகருக்குள் செல்கிறார்கள். எந்த நகருக்குள் செல்கிறார்கள் என்பது தெளிவாக இல்லை. நிச்சயமாக சமாரியருடைய வாணிபத்திற்கு சென்றிருக்க மாட்டார்கள். இந்த வேளையில் ஒரு பெண் தனியாக வருகிறார். சாதாரணமாக பெண்கள் தனியாக கிணற்றிக்கு வருவதில்லை. இது இந்த பெண், பாதிக்கப்பட்டவர் என்பதை காட்டுவதாக சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர். சீடர்கள் வெளியே சென்றதன் காரணத்தினால் இயேசுவிற்கு தண்ணீர் அள்ள உதவியில்லாமல் இருந்திருக்கலாம், இதனால் அந்த பெண்ணிடம் தண்ணீர் கேட்கிறார் எனலாம். 

வ.9: இயேசுவினுடைய உதவிகோரல், இந்த சமாரியப் பெண்ணிற்கு சதாரண ஆச்சரியத்தைக் கொடுக்கிறது, அதற்கான காரணத்தையும் யோவான் விளக்குகிறார். யூதர்கள் சமாரியரோடு பழகுவதில்லை. இயேசுவின் கேள்வியும், சமாரியப் பெண்ணின் விடையும் இந்த உரையாடல் மீண்டும் தொடங்குவதற்கு காரணமாய் அமைகிறது. இயேசு தண்ணீர் கேட்டது, இந்த யூத மகன் ஒரு சாதாரண மகன் அல்ல மாறாக வித்தியாசமானவர் என்ற தோரணையை அவருக்கு காட்டியிருக்கும், இதனால் அவருடைய தேடல் தொடங்கியிருக்கும். யோவான் தண்ணீரை ஒரு அடையாளமாக பாவிக்கின்றாரோ என்ற ஒரு கேள்வியும் எழுகிறது. இதற்கான வாய்ப்புக்களும் நிறையவே உள்ளன.

வ.10: சமாரியப் பெண்ணின் கேள்வி, மேலும் இயேசுவை பேச வைக்கிறது. முதலாவது, இந்த பெண்ணிற்கு இந்த ஆண் யார் என்று தெரியவில்லை என்கிறார் இயேசு. அத்தோடு அவருக்கு கடவுளின் கொடை என்பதும் தெரியவில்லை என்கிறார். அதனால்தான் இந்த கேள்வி, அத்தோடு சாதாரண தண்ணீரைவிட உயிருள்ள தண்ணீர் (ὕδωρ ζῶν) என்றும் ஒன்று உள்ளது என்று யோவான் அறிமுகப்படுத்துகிறார். 

வ.11: நியாயமான கேள்வி ஒன்று சமாரியப் பெண்ணிடமிருந்து வருகிறது. இயேசுவிடம் பாத்திரம் இல்லை, கிணறும் ஆழம் அப்படியிருக்க எப்படி அள்ள முடியும். அத்தோடு வாழ்வு தரும் தண்ணீர் எப்படி வரும். இயேசு குறிப்பிடும் வாழ்வு தரும் தண்ணீருக்கு இரண்டு அர்த்தங்கள் உள்ளன, ஒன்று அது நீரூற்றைக் குறிக்கும் அல்லது ஆன்மீக நீரைக் குறிக்கும். யூத இராபிக்கள் தோறாவை உயிருள்ள நீரூற்றாகக் கருதினர். 

வ.12: சாதாரணமாக பெண்ணிற்கு இந்த இளைஞர், குலமுதுவர் யாக்கோபைவிட சிறியவராகத்தான் தோன்றுவார். ஏனெனில் அவர் இந்த ஆழமான கிணற்றை வெட்டித்தந்தவர். சமாரியருக்கும், யூதருக்கும் யாக்கோபு என்பவர் மிகப் பெரிய மனிதர். அவருடைய இடத்தை சாதாரண மனிதர்களால் நிரப்புவது கடினம். அதனைத்தான் இந்த பெண்ணும் சாதாரணமாக உணருகிறார்.

வவ.13-14: இயேசு தான் ஏன் யாக்கோபைவிட பெரியவர் என்பதைக் காட்டுகிறார். யாக்கோபின் தண்ணீர், தாகத்தை குறைக்கும் ஆனால் இல்லாமல் ஆக்காது, ஆனால் இயேசுவின் தண்ணீர், சாதாரண தண்ணீரைவிட பெரியது. அது ஒரு சடப்பொருள் அல்ல மாறாக அது தூய ஆவியின் கொடையாகிய உயிருள்ள நீரூற்று. முதல் ஏற்பாட்டிலும் இறைவாக்கினர்கள் தூய ஆவியின் செயற்பாட்டை உயிருள்ள செயற்பாட்டிற்கு ஒப்பிட்டுள்ளனர். (காண்க எசாயா 12,3: எசேக்கியேல் 36,25-27). இயேசுவின் தண்ணீர் நிலைவாழ்வை அளிக்கும் என்பதுதான் யோவானின் செய்தி εἰς ζωὴν αἰώνιον

வ.15: இன்னும் இந்தப் பெண் இயேசுவின் வார்த்தைகளை புரிந்து கொள்ளவில்லை, அவர் நிக்கதேமுவைப்போல மனித கண்ணோட்டத்தோடே மீண்டும் வினவுகிறார். இவர் குறையாத ஆனால் சடப்பொருளான நீரை கனவு காண்கிறார். அவரின் கனவின் படி, கிணற்றிக்கு அடிக்கடி வராமல் ஒரு நீரூற்று கிடைக்கப் போகிறது. 

வவ.16-19: இயேசுவிற்கு தான் யார் என்பதை இப்போது விளக்கவேண்டிய தேவை எழுகிறது. இந்த பெண்ணின் கணவரை சந்திக்கு இழுக்கிறார் இயேசு, இதன் மூலம் இவரின் நிலையை நசூக்காக சொல்கிறார் இயேசு. சட்டத்திற்கு புறம்பாக இவர் பல ஆண்களுடன் வாழ்ந்துள்ளார். இப்போதும் அவர் அதனைத்தான் செய்கிறார். இதனைத்தான் இயேசு உதாரணமாக எடுக்கிறார். அவருடைய வாய்ச்சொல்லைக் கொண்டே, 'நீர் சொல்வது சரியே' (καλῶς εἶπας) என்கிறார். அவர் சரியாகச் சொன்னாலும், அது தவறாகவே இருக்கிறது. 

வவ.19-20: இந்த வரிகள் காட்சிகளை மாற்றுகிறன. அதாவது அவர் இயேசுவை இறைவாக்கினர் எனக் காண்கிறார் (προφήτης), ஆனால் அவர் இங்கே கெரிசிம் மலைக்கும் எருசலேம் மலைக்கும் இடையில் இருக்கும் பிரச்சனையை கொண்டுவருகிறார். இயேசுவை இறைவாக்கினராக கண்டாலும், இந்த பெண் சமாரியர்களின் உணர்வுகளை மறக்கவில்லை. சமாரியர்கள் கெரிசிம் மலையில் ஆலயம் ஒன்றை அமைத்து வழிபாடு செய்தார்கள், இது எருசலேம் தேவாலயத்திற்கு சவாலாக இருக்க, யோவான் ஹிர்கானுஸ் என்ற மக்கபேய தலைவர் அல்லது ஹஸ்மோனிய தலைமைக்குரு அதனை அழித்தார். அதனைத்தான் இந்த பெண் நினைவுகூருகிறார். 

வவ.21-22: இயேசு இந்த இடத்தில் பல படிப்பினைகளை இந்தப் பெண்ணிற்கு சொல்லிக்கொடுக்கிறார். காலம் வருகிறது, அப்போது தந்தையாகிய கடவுள் இடத்தின் பொருட்டு அல்ல, உண்மையின் பொருட்டே வழிபடப்படுவார். அது எருசலேமிலோ அல்லது கெரிசிமிலோ என்பதிலிருக்காது என்பதை இவருக்கு வெளிப்படுத்துகிறார். இந்த செய்தி சமாரியப்பெண்ணுக்கு என்பதை விட யோவான் நற்செய்தியின் ஒவ்வொரு வாசகர்களுக்கும் பொருந்தும். எந்த இடமும் கடவுளை தீர்மானிக்க முடியாது, கடவுள்தான் இடத்தை தீர்மானிக்கிறார், அத்தோடு கடவுளால்தான் இடம் தூய்மையாகிறது. இடம் கடவுளை தூய்மையாக்க முடியாது. இருபத்திரண்டாவது வரியில் யூத மதத்தின் மேன்மையை மறக்காமல் காட்டுகிறார் இந்த யூத மகன். யூதர்கள் கடவுளை தெரிந்து வழிபடுகிறார்கள் அத்தோடு மீட்பு யூதர்களிடமிருந்துதான் வருகிறது. இயேசு தன்னை ஒரு யூதராக அழைப்பதில் வெட்கப்படவில்லை என்பதை இந்த வரிக காட்டுகிறது. இருப்பினும் தெரிந்து வழிபட்டாலும், தெரியாமல் வழிபட்டாலும், மீட்பர் இல்லையென்றால் வழிபாடு வீண் என்பதுதான் இங்Nகு மைய செய்தி.

வவ.23-24: இரண்டு வழிபாடுகளைப் பற்றி காட்டிய இயேசு இந்த வரிகளில் தந்தை விரும்பும் உண்மை வழிபாட்டை சொல்ல முயல்கிறார். அதாவது உண்மை வழிபாடு என்பது உள்ளத்தில் நடைபெறுகிறது. அதனைத்தான் தந்தை விரும்புகிறார். யோவான் நற்செய்தியின் சில படிப்பினைகளை இந்த வரிகளில் காணலாம். அதாவது நேரம் வந்துவிட்டது, அத்தோடு உருவமற்ற கடவுளை ஒருவர் ஆலயத்தில் அல்ல உள்ளத்தில்தான் வழிபட வேண்டும் என்பதாகும். இந்த செய்தி எருசலேம் தேவாலயத்திலிருந்து கிறிஸ்தவர்களை துரத்திவிட்டவர்களுக்கும், தேவாலயம் அழிந்து போனதை நினைத்து வருந்துவோருக்கும் பல செய்திகளைக் கொடுத்திருக்கும்.

வவ.25-26: இந்த வரியில், உரையாடல் மேலும் வளர்ச்சியடைகிறது. இந்தப் பெண் கிறிஸ்துவைப் பற்றி அறிக்கையிடுகிறார். கிறிஸ்துவின் வருகையைப் பற்றியும் அவருடைய செயற்பாடுகளைப் பற்றியும் சமாரியருக்கு நன்கு தெரிந்திருக்கிறது என்பதை இந்த வரி காட்டுகிறது. சமாரியருக்கு தெரிந்திருக்கிறது, ஆனால் யூதர்களுக்கு தெரியவில்லை என்று யோவான் சொல்கிறாரோ என்று கூட ஊகிக்கலாம். இந்த சமாரியப் பெண் இங்கே வாசகர்களுக்கு ஆசிரியராகிறார். இவர் குறிப்பிடும் மெசியா தான் தான் என்கிறார் இயேசு ஆண்டவர். மெசியா என்றால் அபிசேகம் செய்யப்பட்டவர் என்று பொருள் (Μεσσίας மெஸ்சியாஸ்). இயேசு தன்னை மெசியா என்று நேரடியாக ஏற்றுக்கொள்ளும் மிக முக்கியமான வரி இது. மெசியா என்ற சொல்லை சாதாரணமாக சமாரியர்கள் பாவிப்பது கிடையாது, இது யூதர்களின் வார்த்தை பிரயோகம். இதனை இந்த நல்ல சமாரியப் பெண் புரிந்திருக்கிறார். 

வ.27: உணவிற்கு சென்றிருந்து சீடர்கள் திரும்புகின்றார்கள். அவர்களின் வியப்பு சாதாரணமானதே. தனிமையாக இருக்கும் பெண்ணிடம் ஆண்கள் பேசுவது அசாதரணம், அதுவும் தங்களுடைய தலைவர் ஒரு சமாரியப் பெண்ணிடம் பேசுவது இவர்களுக்கு இன்னும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. இருப்பினும் இவர்கள் கேள்வி கேட்க துணியவில்லை. ஒருவேளை இவர்கள் 
இயேசுவின் தூய்மை, தமது சொந்த அனுபவத்தால் கண்டிருப்பதன் விளைவாக இவர்கள் கேள்வி கேட்காமல் இருந்திருக்கலாம். 

வவ.28-30: இப்போது இந்தப் பெண் தமது குடத்தை விட்டுவிட்டு ஊருக்குள் செல்கிறார் (ὑδρία). இது தண்ணீர் அள்ள மிகவும் முக்கியமான பாத்திரம், இது இல்லாமல்தான் இயேசு
இவரிடம் தண்ணீர் கேட்டார். இப்போது சாதரண தண்ணீருக்கான மதிப்பு குறைந்துவிட்டது. அதனைவிட மிக முக்கியமான தண்ணீர் இவருக்கு புலப்பட்டுவிட்டது. அவர் கண்ட மனிதர் மெசியாவாகவே இருப்பார் என்ற நம்பிக்கையை அவர் தன் மக்களோடு பகிர முயல்கிறார்.  

வவ.31-33: இதற்கிடையில் காட்சி மாறுகிறது. உணவு கொண்டுவந்த சீடர்கள், அதனை உண்ணச்சொல்லி கேட்கிறார்கள். இயேசு தன்னுடைய உண்மையான உணவைப் பற்றி சீடர்களுக்கு விளக்குகிறார். தன் தந்தையின் திட்டத்தை நிறைவேற்றுவதே தன்னுடைய உணவு என்பதில் இயேசு கருத்தாயிருக்கிறார். இந்த சமாரியப் பெண்ணின் நிலையைப்போலவே, சீடர்களும் இயேசுவின் உணவை புரிந்து கொள்ள தவறுகின்றனர். இவர்களின் புரிந்துகொள்ளாமையை வைத்துக்கொண்டு இயேசு அடுத்த விளக்கம் கொடுக்கிறார். 

வ.34: இயேசு தன்னுடைய உணவு என்ன என்பதை விளக்குகிறார். தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுவதே தன் உணவு என்கிறார் இயேசு (ἐμὸν βρῶμά ἐστιν ἵνα  ⸀ποιήσω τὸ θέλημα τοῦ πέμψαντός με καὶ τελειώσω αὐτοῦ τὸ ἔργον.). 

வவ.35-38: இந்த வரிகளில் இயேசு இஸ்ராயேல் மக்களிடையே வழக்கிலிருந்து பழமொழிகளை பாவனைக்கு எடுக்கிறார். அறுவடையையும் அறுவடையாளர் பெறும் கூலியும் இவர்களுக்கு நன்கு தெரிந்திருக்கும். இதனை ஆன்மீக பயிரின் அறுவடைக்கு ஒப்பிடுகிறார் (ஒப்பிடுக ஆமோஸ் 9,13). அறுவடை என்பது விதைப்பவருக்கும் அறுப்பவருக்கும் மகிழ்ச்சி கொடுக்கும் செயற்பாடு, இது சீடர்களுக்கு நன்கு தெரிந்திருக்கும். இங்கே சீடர்கள் செய்ய வேண்டிய வேலையை இந்த பெண் செய்கிறார், இதனால் அறுவடை இயேசுவிற்கும் அவர் சீடர்களுக்கும் கிடைக்கிறது. இதனை முன்னிட்டு யாரும் பெருமை பாராட்ட முடியாது என்கிறார் அறுவடையின் ஆண்டவர். 

வவ.39-40: சமாரியப் பெண்ணின் வாக்குமூலம் பல சமாரிய சீடர்களை உருவாக்குகின்றது. யூதர்கள் சமாரியரோடு கதைப்பதே இல்லை, இங்கே இயேசு ஆண்டவரிடம் பல சமாரியர்கள் வருகின்றனர். அத்தோடு இயேசுவும், அவர் சீடர்களும் சமாரியர்களோடு தங்குகின்றனர். இரண்டு நாட்கள் தங்கியதாக யோவான் கூறுகிறார். இயேசுவும் அவரை நம்பும் சீடர்களும் எந்த விதமான இன அடையாளங்களினாலும் மட்டுப்படுத்தப்படாதவர்கள் என்பதை இந்த வரி காட்டுகிறது. (சாதிக்கொரு கோவிலை முன்நிறுத்துபவரும், இயேசுவை தங்களுடைய இனத்தோடு மட்டும் அடையாள்படுத்தும் எந்த நபரும், இயேசுவை மெசியா என்று உணர்ந்து கொள்ள முடியாது என நினைக்கிறேன்).  

வவ.41-42: இயேசுவிடம் பலர் நம்பிக்கை கொள்கின்றனர், அதில் பலர் அந்த பெண்ணின் பேச்சைப்பொருட்டு அல்ல, மாறாக தாங்கள் இயேசுவை நெருக்கமாக கண்டுகொண்டதாக சாட்சியம் சொல்கின்றனர். இயேசுவை உண்மையான உலகின் மீட்பர் என்றும் அறிக்கையிடுகின்றனர் (ὅτι οὗτός ἐστιν ἀληθῶς ὁ σωτὴρ τοῦ κόσμου). பெண்களின் சாட்சியம் அவ்வளவு செல்லாது என்ற அக்கால சிந்தனையை இந்த வரிகளில் காணலாம். இயேசு ஒரு தனிப்பட்ட அனுபவம், மற்றவர் அவைரை நமக்கு கொணரலாம், ஆனால் நாம் அவரை உணரும் போதுதான் அவர் நம்முடையவராகிறார் என்பது இந்த வரியில் புலப்படுகிறது.

அழியக் கூடிய நீரூம் உணவும் இன்றைய மனிதரின் தேடல்கள்,
அழியாத உணவும் நீரூம் இயேசுவின் வடிவில் நம் அருகில் உள்ளன.
இவ்வுலகின் உணவுகள் பசியை தீர்கலாம், ஆனால்
அதனை இல்லாமல் ஆக்க முடியாது. 
இயேசு என்னும் உணவுதான் இல்லாமையை இல்லாமல் ஆக்கும் உணவு.

அன்பு ஆண்டவரே அந்த உணவை புசிக்க உதவி செய்யும், ஆமென்.

மி. ஜெகன்குமார் அமதி
மாதகல், மகாஞானொடுக்கம்
புதன், 15 மார்ச், 2017

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆண்டின் பொதுக்காலம் பதின்மூன்றாம் ஞாயிறு (ஆ) 30.06.2024 (B) 13th Sunday in Ordinary Times B, 2024

ஆண்டின் பொதுக்காலம் பதின்மூன்றாம் ஞாயிறு ( ஆ ) 30.06.2024 (B) M. Jegankumar Coonghe OMI, Shrine of Our Lady of Good Voyage,  Chad...