புதன், 3 ஆகஸ்ட், 2016

பொதுக்காலத்தின் பத்தொன்பதாம் ஞாயிறு 07,08,2016. The Nineteenth Sunday in Ordinary Times.

பொதுக்காலத்தின் பத்தொன்பதாம் ஞாயிறு
07,08,2016
உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்.

(லூக் 12,48)



முதல் வாசகம்: சாலமோனின் ஞானம்: 18,6-9
பதிலுரைப் பாடல்: திருப்பாடல்: 33
இரண்டாம் வாசகம்: எபிரேயர் 11,1-2.8-19
நற்செய்தி: லூக்கா: 12,32-48



சாலமோனின் ஞானம்: 18,6-9
6தாங்கள் நம்பியிருந்த வாக்குறுதிகளைத் தெளிவாக அறிந்து அவற்றில் மகிழ்ந்திருக்கும்படி அந்த இரவு எங்கள் மூதாதையர்க்கு முன்னறிவிக்கப்பட்டது. 7நீதிமான்களின் மீட்பையும் அவர்களுடைய பகைவர்களின் அழிவையும் உம் மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். 8எங்கள் பகைவர்களை நீர் தண்டித்த அந்த ஒரே செயலால் உம்மிடம் எங்களை அழைத்துப் பெருமைப்படுத்தினீர். 9நல்லவர்களின் தூய மக்கள் மறைவாகப் பலி செலுத்தினார்கள்; நன்மைகளையும் இடர்களையும் ஒன்றுபோலப் பகிர்ந்து கொள்வார்கள் என்னும் இறைச் சட்டத்திற்கு அவர்கள் ஒருமித்து உடன்பட்டார்கள்; மூதாதையர்களின் புகழ்ப்பாக்களை அதே வேளையில் பாடிக் கொண்டிருந்தார்கள். 

சாலமோனின் ஞானப் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ள இந்த பகுதி நம்பிக்கையின் முக்கியத்துவத்தை நினைவூட்டுகிறது. பத்தாம் அதிகாரத்திலிருந்து இறுதிவரை (பதினாறாம் அதிகாரம்) உள்ள பகுதி மீட்பு வரலாற்றில், ஞானத்தின் முக்கியத்துவத்தை காட்டுகிறது. ஞானம் ஆதாமிலிருந்து மோசேவரை எங்கனம் செயற்பட்டது என்பதையும் அது தெளிவூட்டுகிறது. முதல் ஏற்றபாட்டின் சில புத்தகங்களின் வாசகங்கள் நம்மிடையே சில கேள்விகளை ஏழுப்புவது வழமை. இந்த பதினெட்டாம் அதிகாரத்தின் ஐந்தாவது வசனம் கூட அப்படியான பகுதிகளில் ஒன்றுதான் (காண்க 18,5 ✯).
பல காரணங்களுக்காக இந்த வசனத்தை திருச்சபை தந்தையர்கள் இன்றைய வாசக பகுதிகளில் இருந்து நீக்கியிருக்கலாம். எகிப்திய அடிமைத் தலைவர்கள், தீயவர்களாக இருந்தாலும்கூட, எப்படி கடவுள் அவர்களை பயங்கரமாக தண்டிக்கலாம், அதிலும் விசேடமாக எகித்திய அடிமைத் தலைவர்களின் பாவங்களுக்காக எப்படி கடவுள் அவர்களின் பிள்ளைகளைமூழ்கடிக்கலாம்? இந்த கேள்விகள் பல விடைகளுக்காக தவம் கிடக்கின்றன.
(✯எகிப்தியர்கள் உம் தூயவர்களின் குழந்தைகளைக் கொல்லத் திட்டமிட்டிருந்தார்கள். அப்பொழுது ஒரு குழந்தை மட்டும் சாவிலிருந்து காப்பாற்றப்பட்டது. எகிப்தியர்களைத் தண்டிப்பதற்காக அவர்களின் பெருந்தொகையான குழந்தைகளை மாய்ந்துவிட்டீர்; அவர்கள் அனைவரையும் பெரும் வெள்ளத்தில் ஒருசேர மூழ்கடித்தீர்)                                                                                                                                                                                                                                                                                                                                                                                                

வ.6: இங்கே இரவு என்று மையப்படுத்தப்பட்டுள்ளது, கடவுள் எகிப்தியர்களை தண்டித்ததாத இஸ்ராயேலர் நம்பிய இரவைக் குறிக்கிறது. இந்த இரவு எகிப்தியர்களுக்கு பயங்கரமானதாகவும், தண்டனைக்குரியதாகவும் இருந்தாலும், இஸ்ராயேலருக்கு அது நம்பிக்கையின் இரவாக காணப்பட்டது. ஆண்டவர் தங்களுக்கு அறிவித்ததனை நம்புவதற்கு அந்த இரவு ஓர் அடையாளமாக இருந்தது. வழமையாக இரவு இஸ்ராயேல் அடையாளங்களில் அவ்வளவு நல்ல சகுனமாக இருக்காது, ஆனால் இங்கே இந்த இரவு இவர்களுக்கு முக்கியமான இரவாக மாற்றம் பெறுகிறது. (νὺξ நுக்ஸ், இரவு - இந்த சாலமோனின் ஞானப் புத்தகம் கிரேக்க மொழியில் எழுதப்பட்ட இனைத்திருமுறை நூல்களில் ஒன்று). 

வவ.7-8: வரலாறு எப்பொழுதும் ஒரு சாராரின் அழிவையும், இன்னொரு சாராரின் மீட்பையும் வித்தியாசமான பார்வையின் ஆவணப்படுத்தும். இங்கே இஸ்ராயேலருக்கு எகிப்தியரின் அழிவு, மீட்பின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. பகைவர்களான எகிப்தியர்களை தண்டித்த செயல் இஸ்ராயேலருக்கு பெருமையின் அடையாளமாக விளங்குகின்றது. 

வ.9: நல்லவர்களின் தூய மக்கள் என்பது கிரேக்க மூலத்தில், 'நல்லவர்களின் தூய பிள்ளைகள்' என்றே காணப்படுகிறது. இது இஸ்ராயேல் மக்கள் கூட்டத்தினரைக் குறிக்கும். இறை சட்டத்திற்கு உடன்படுதல், நன்மைகளையும், நன்மையில்லா தன்மைகளையும் ஒரே விதத்தில் சந்தித்தல் போன்றவை விசுவாச வாழ்வின் முக்கியமான கூறுகள் என்பதை ஆசிரியர் இங்கே விவரிக்கிறார்.  




திருப்பாடல்: 33
1நீதிமான்களே, ஆண்டவரில் களிகூருங்கள்; நீதியுள்ளோர் அவரைப் புகழ்வது பொருத்தமானதே. 2யாழிசைத்து ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; பதின் நரம்பு யாழினால் அவரைப் புகழ்ந்து பாடுங்கள்; 
3புத்தம்புது பாடல் ஒன்றை அவருக்குப் பாடுங்கள்; திறம்பட இசைத்து மகிழ்ச்சிக்குரல் எழுப்புங்கள். 4ஆண்டவரின் வாக்கு நேர்மையானது; அவருடைய செயல்கள் எல்லாம் நம்பிக்கைக்கு உரியவை. 5அவர் நீதியையும் நேர்மையையும் விரும்புகின்றார்; அவரது பேரன்பால் பூவுலகு நிறைந்துள்ளது. 6ஆண்டவரது வாக்கினால் வானங்கள் உண்டாயின் அவரது சொல்லின் ஆற்றலால் வான்கோள்கள் எல்லாம் உருவாயின. 
7அவர் கடல்நீரைக் குவியல்போல் சேர்த்துவைத்தார்; அந்நீரை ஆழ் நிலவறைகளில் சேமித்துவைத்தார். 
8அனைத்துலகும் ஆண்டவருக்கு அஞ்சுவதாக! உலகில் வாழ்வோர் அனைவைரும் அவருக்கு அஞ்சிநடுங்குவராக! 
9அவர் சொல்லி உலகம் உண்டானது அவர் கட்டளையிட, அது நிலை பெற்றது. 10வேற்றினத்தாரின் திட்டங்களை ஆண்டவர் முறியடிக்கின்றார்; மக்களினத்தாரின் எண்ணங்களைக் குலைத்துவிடுகின்றார். 
11ஆண்டவரின் எண்ணங்களோ என்றென்றும் நிலைத்திருக்கும்; அவரது உள்ளத்தின் திட்டங்கள் தலைமுறை தலைமுறையாய் நீடித்திருக்கும். 
12ஆண்டவரைத் தன் கடவுளாகக் கொண்ட இனம் பேறுபெற்றது; அவர் தமது உரிமைச் சொத்தாகத் தெரிந்தெடுத்த மக்கள் பேறுபெற்றோர். 
13வானினின்று ஆண்டவர் பார்க்கின்றார்; மானிடர் அனைவரையும் காண்கின்றார். 
14தாம் வீற்றிருக்கும் இடத்திலிருந்து உலகெங்கும் வாழ்வோரைக் கூர்ந்து நோக்குகின்றார். 15அவர்களின் உள்ளங்களை உருவாக்குகின்றவர் அவரே! அவர்களின் செயல்கள் அனைத்தையும் உற்று நோக்குபவரும் அவரே! 
16தன் படைப் பெருக்கத்தால் வெற்றிபெரும் அரசருமில்லை; தன் வலிமையின் மிகுதியால் உயிர் தப்பிய வீரருமில்லை. 
17வெற்றி பெறப் போர்க்குதிரையை நம்புவது வீண்; மிகுந்த வலுவுள்ளதாயினும் அது விடுவிக்காது. 18தமக்கு அஞ்சி நடப்போரையும் தம் பேரன்புக்காகக் காத்திருப்போரையும் ஆண்டவர் கண்ணோக்குகின்றார். 
19அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்; அவர்களைப் பஞ்சத்திலும் வாழ்விக்கின்றார். 
20நாம் ஆண்டவரை நம்பியிருக்கின்றோம்; அவரே நமக்குத் துணையும் கேடயமும் ஆவார். 
21நம் உள்ளம் அவரை நினைத்துக் களிகூரும்; ஏனெனில், அவரது திருப்பெயரில் நாம் நம்பிக்கை வைத்துள்ளோம். 
22உம்மையே நாங்கள் நம்பியிருப்பதால், உமது பேரன்பு எங்கள்மீது இருப்பதாக!

திருப்பாடல்களில் உள்ள அழகிய கவிதைகளில் ஒன்றான இந்த திருப்பாடல் மூன்றடுக்கு சரணத்தில் தொடங்கி மூன்றடுக்கு சரணத்தில் முடிவடைகிறது (வவ 1-3: 20-22). இடைப்பட்ட வரிகள் நான்கடுக்கு சரணத்தில் பிரிக்கப்பட்டுள்ளது (வவ. 4-7: 8-11: 12-15: 16-19). தொடக்க மற்றும் முடிவு சரணங்கள் கடவுளில் மகிழ்ச்சி என்ற மையப்பொருளில் பண்ணிசைக்கிறது. 

வவ.1-3: இவை புகழ் பாடலுக்கான அழைப்பு என்று அறியப்படுகின்றன. இந்த வரிகள் நீதிமான்களை மையப்படுத்துகின்றன அதே வேளை, ஆண்டவரை புகழ்வதன் வாயிலாகவே ஒருவர் நீதிமானாக மாறமுடியும் என்ற ஆழமான எபிரேய சிந்தனையையும் இந்த வரிகள் எடுத்தியம்புகின்றன. 

வவ.4-11: இந்த வரிகள் படைப்புக்களில் கடவுளின் செயற்பாடுகளைக் காட்டுகின்றன. 4-5 வரிகள் முக்கியமான விசுவாச பிரமாணத்தை பாடுகின்றன. இந்த உலகில் நம்பிக்கைக்கு உரிய வாக்கு கடவுளுடையது மட்டுமே என்பது ஆசிரியரின் நம்பிக்கை. கடவுள் விரும்புவது நீதியும் நேர்மையும் அத்தோடு இந்த பேருலகு அவரது அன்பால் நிறைந்துள்ளது என்ற நம்பிக்கை, எதிர்மறை நம்பிக்கைகள் நிறைந்திருந்த அக்கால உலகில், இஸ்ராயேலரின் இந்த நேரிய சிந்தனைகள் ஆச்சரியமூட்டுகின்றன. 
வானங்களின் உருவாக்கம், கடல் நீரின் படைப்புக்கள், உலகினரின் மற்றும் உலகின் தோற்றம் போன்றவை படைப்பு கதைகளை மீண்டும் மீண்டும் பாடகர்களுக்கு முக்கியமாக பிள்ளைகளுக்கு இஸ்ராயேலரின் நம்பிக்கையின் வரலாற்றை நினைவூட்டுகின்றன. இந்த வரிகளைக் கொண்டு இப்படியான திருப்பாடல்களை மெய்யறிவு திருப்பாடல் எனவும் சிலர் வகைப்படுத்துகின்றனர். பதினொராவது வரி இன்னொரு முக்கிய விசுவாசத்தை நினைவூட்டுகிறது. 
இஸ்ராயேலர் பின்னடைவுகளை வரலாற்றில் சந்தித்தாலும், வரலாற்றின் அசைவுகள் அனைத்தும் கடவுளால் தீர்மானிக்கப்படுகின்றன என்பதை முழுமையாக நம்பினர் அல்லது நம்ப முயற்சி செய்தனர் எனலாம். ஆண்டவரின் எண்ணங்கள் தலைமுறை தலைமுறையாய் நிலைத்திருக்கும் என்பதன் மூலம் ஆண்டவர் இஸ்ராயேல் மக்களை கைவிட மாட்டார், அல்லது இஸ்ராயேலரை மீட்பதுதான் அவரது எண்ணம் என நம்பிக்கை வரிகளை பாடலாக்குகிறார் இந்த ஆசிரியர். 
வ.12: இங்கே ஆண்டவர் என்பதற்கு, கடவுளின் சொந்தப் பெயர் பாவிக்கப்பட்டுள்ளது. 

אַשְׁרֵי הַגּוֹי אֲשֶׁר־יְהוָה אֱלֹהָיו הָעָם - அந்த மக்களினம் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், அவர்கள் கடவுளை தங்கள் ஆண்டவராக கொண்டவர்கள் இந்த வரி, அக்காலத்தில் பல தெய்வ வழிபாடுகள் காணப்பட்டதையும், ஆசிரியர் இஸ்ராயேல் கடவுளில் மட்டும் நம்பிக்கை கொள்ளச்சொல்லி, அதனை ஒரு பேறாக காட்டுவதனை காணலாம். 

வவ.13-15: இந்த வரிகள் ஆண்டவரின் செயற்பாடுகளை விவரிக்கின்றன. ஆண்டவரின் பார்வையிலிருந்து யாரும் தப்ப முடியாது என்பதும், மனிதர்களின் உள்ளங்களின் எண்ணங்கள்கூட அவர் அறிவிற்குட்பட்டவை, என்பவை ஒருவகையான அச்சத்தை மக்களுக்கு ஊட்ட விளைகின்றன. 
இறையச்சமே அறிவின் தொடக்கம் என்ற சிந்தனையை இவை அடிப்படையாக கொண்டவை. 

வவ.16-17: அக்கால சூழலியலில் அரசர்களும் படைவீரர்களுமே அனைவரின் கவனத்தையும் ஈர்கக்கூடிய கதாநாயர்களாக இருந்தார்கள் (இன்று தமிழ் சினிமாவில் வரும் பூச்சாண்டி கதாநாயர்களைப் போல). இதனலால்தான் அனைத்து மக்களையும் போல் இஸ்ராயேலரும் தங்களுக்கு அரசர் ஒருவர் தேவை என சாமுவேலுடன் சச்சரவு செய்தார்கள் (காண்க 1சாமு 8,5✯). இஸ்ராயேலின் கதாநாயகன் ஒரு மனிதனாக இருக்க முடியாது அவர் எப்போதும் கடவுள் ஒருவரே என்பதும், அரசர்கள் சாதாரன மனிதர்கள் அத்தோடு அவர்கள் பலவீனமானவர்கள், அவர்கள் படைகளும் பலவீனமானவையே என்பது இஸ்ராயேலின் முக்கியமான மெய்யறிவு). 
(✯அவர்கள் அவரிடம், 'இதோ உமக்கு வயது முதிர்ந்துவிட்டது. உம் புதல்வர்கள் உம் வழிமுறையில் நடப்பதில்லை. ஆகவே, அனைத்து வேற்றினங்களிடையே இருப்பது போன்று ஓர் அரசனை நியமித்தருளும்' என்று கேட்டுக் கொண்டார்).

வவ.18-19: கடவுளுடைய கண்ணோக்குதல் என்பது இங்கே 'கடவுளுடைய கண்கள் அவருக்கு அஞ்சுவோருடையது' என்று எபிரேயத்தில் வருகிறது. கடவுளுடைய கண்கள், என்று விவிலியம் கடவுளுடைய அங்கீகாரத்தை நினைவூட்டுகிறது. உயிரை காத்தலும், பஞ்சத்தில் உணவளித்தலும் கடவுளின் பராமரிப்பின் முக்கியமான நினைவுகள். 

வவ.20-22: இந்த வரிகள்தான் இந்த திருப்பாடலின் முக்கியமான வரிகள். ஆண்டவரை கேடயமாக கொண்டிருத்தல் என்பதே இங்கே நேக்கப்படவேண்டியது. ஆண்டவரின் திருப்பெயரில் நம்பிக்கை வைத்தல் என்பது ஆண்டவரில் நம்பிக்கை வைத்தலையே குறிக்கும். 22வது வசனத்தில் ஒரு வேண்டுதலோடு இந்த திருப்பாடல் நிறைவுறுகிறது. 


எபிரேயர் 11,1-2.8-19
1நம்பிக்கை என்பது நாம் எதிர்நோக்கி இருப்பவை கிடைக்கும் என்னும் உறுதி; கண்ணுக்குப் புலப்படாதவை பற்றிய ஐயமற்ற நிலை. 2இந்த நம்பிக்கையால்தான் நம் மூதாதையர் நற்சான்று பெற்றனர்.
8ஆபிரகாம் தாம் அழைக்கப்பட்டபோது கீழ்ப்படிந்து, உரிமைப்பேறாகப் பெறவிருந்த இடத்திற்குச் சென்றதும் நம்பிக்கையினால்தான். தாம் எங்கே போக வேண்டும் என்று தெரியாதிருந்தும் அவர் புறப்பட்டுச் சென்றார். 9வாக்களிக்கப்பட்ட நாட்டில் அவர் குடியேறி ஒர் அன்னியரைப் போல் வாழ்ந்தது நம்பிக்கையினாலேயே. அதே வாக்குறுதிக்கு உடன் உரிமையாளர்களான ஈசாக்குடனும், யாக்கோபுடனும் அவர் கூடாரங்களில் குடியிருந்தார். 10ஏனெனில், அவர் அசையாத அடித்தளமுள்ள ஒரு நகரை எதிர்நோக்கியிருந்தார். அதைத்திட்டமிட்டவரும் கட்டியவரும் கடவுளே.
11ஆபிரகாம் வயது முதியவராயும் சாரா கருவுற இயலாதவராயும் இருந்தபோதிலும், அவர் ஒரு தந்தையாவதற்கான ஆற்றல் பெற்றதும் நம்பிக்கையினால்தான். ஏனெனில் வாக்களித்தவர் நம்பிக்கைக்குரியவர் என அவர் கருதினார். 12இவ்வாறு, உயிரற்றவர் போலிருந்த இந்த ஒருவரிடமிருந்து வானத்திலுள்ள திரளான விண்மீன்களைப் போலவும் கடற்கரையிலுள்ள எண்ணிறந்த மணலைப் போலவும் கணக்கற்ற மக்கள் பிறந்தனர்.
13இவர்கள் எல்லாம் நம்பிக்கை கொண்டவர்களாய் இறந்தார்கள்; வாக்களிக்கப்பட்டவற்றை அவர்கள் பெறவில்லையெனினும், தொலையில் அவற்றைக் கண்டு மகிழ்ந்தார்கள்; இவ்வுலகில் தாங்கள் அன்னியர் என்பதையும் தற்காலிகக் குடிகள் என்பதையும் ஏற்றுக் கொண்டார்கள். 14இவ்வாறு ஏற்றுக் கொள்வோர் தம்முடைய தாய்நாட்டைத் தேடிச் செல்வோர் என்பது தெளிவு. 15தாங்கள் விட்டுவந்த நாட்டை அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கவில்லை. அப்படி நினைத்திருந்தால் திரும்பிச் செல்ல அவர்களுக்கு வாய்ப்புக் கிடைத்திருக்கும். 16ஆனால், அவர்கள் சிறப்பான ஒரு நாட்டை, அதாவது, விண்ணக நாட்டையே நாடுகிறார்கள். அதனால்தான் கடவுளும் தம்மை, 'அவர்களுடைய கடவுள்' என்று அழைத்துக்கொள்ள வெட்கப்படவில்லை. அவர்களுக்கென அவர் ஒருநகரை ஆயத்தப்படுத்தியுள்ளார்.
17-18ஆபிரகாம் சோதிக்கப்பட்டபோது ஈசாக்கைப் பலியிடத் துணிந்தது நம்பிக்கையினால்தான். 'ஈசாக்கின் மூலமே, உன் வழிமரபு விளங்கும்' என்ற வாக்குறுதியை அவர் பெற்றிருந்த போதிலும், அவர் தம் ஒரே மகனைப் பலியிட முன்வந்தார். 19ஏனெனில், இறந்தோரைக் கடவுள் உயிரோடு எழுப்ப வல்லவர் என்பதை அவர் உணர்ந்திருந்தார். எனவே, அவர் தம் மகனை மீண்டும் பெற்றுக் கொண்டார். பின்பு நடக்கவிருந்ததற்கு இது ஓர் அறிகுறி.

முதல் இரண்டு பகுதிகளைப்போலவே இந்த பகுதியும் நம்பிக்கையையே மையப்படுத்துகிறது. எபிரேயர் பதினொன்றாம் மற்றும் பன்னிரண்டாம் அதிகாரங்கள் நம்பிக்கை மற்றும் பொறுமையை மையப்படுத்துகின்றன. எபிரேயர் நூல் முற்காலத்தில் திருமுகங்களில் ஒன்றாக கருதப்பட்டது பின்னர் இதனை ஓர் மறையுறை நூலாக பல ஆய்வாளர்கள் வகைப்படுத்தினர். எபிரேயர் நூல் ஒரு திருமுகமா இல்லையா என்பதில் பல கேள்விகளும் விடைகளும் இருக்கின்றன, எனினும் இதனை பவுல் எழுதியிருக்க முடியாது என்பது இன்று பலருடைய வாதங்கள். பல விதமான முதல் ஏற்பாட்டு உதாரணங்கள் மூலம் இந்த ஆசிரியர் கிறிஸ்துவின் முதன்மைத்தன்மையை மையப்படுத்துகிறார். 

வவ.1-2: இந்த வசனம் புதிய ஏற்பாட்டு இறையியலில் மிக மிக முக்கியமானது. இந்த வசனம்தான் நம்பிக்கை (πίστις பிஸ்டிஸ்- நம்பிக்கை, நம்பகதன்மை) என்றும், ஓர் இறையில் விழுமியத்திற்கு வரைவிலக்கனம் கொடுக்கிறது. இந்த வரைவிலக்கனம் நம்பிக்கையை எதிர்காலத்துடனும், எதிர் கால காட்சிகளுடனும் தொடர்பு படுத்துகிறது. இஸ்ராயேலர் தாங்கள் கடவுளுக்கு ஏற்புடையவர் ஆவதற்கு பல காரணங்களை முன்வைத்தனர் அதில் நம்பிக்கையால் கடவுளுக்கு ஏற்புடையவராதல் முக்கியமான காரணமாக அமைகிறது. 

வவ.3-7: இந்த விடப்பட்ட வரிகளில் ஆபிரகாம், ஆபேல், ஏனோக்கு, நோவா, போன்றவர்களின் விசுவாச வாழ்வு உதாரணமாக காட்டப்படுகிறது. 

வவ.8-12: இந்த வசனங்கள் ஆபிரகாமின் விசுவாச வாழ்வை விவரிக்கின்றன. ஆபிரகாம் என்ற இந்த நபர் யூதர்களுக்கு மட்டுமல்ல கிறிஸ்தவர்களுக்கும் ஆரம்ப காலம் தொட்டே விசுவாசத்தின் அடையாளமாக இருந்திருக்கிறார் என்பதனை இங்கே கண்டுகொள்ளலாம். 

வ.8: ஆபிரகாமின் அழைப்பும், பின்னர் அவர் கடவுளுக்கு கீழ்படிந்ததும் அவரின் நம்பிக்கையின் முதற்கட்ட அடையாளமாக பார்க்கப்படுகிறது.

வ.9: ஆபிரகாமின் கானானில் அன்நியராக தங்கியிருந்ததும் நம்பிக்கையின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. கூடாரங்களில் ஆபிரகாம் குடியிருந்ததன் மூலம், அவர் எப்போதும் பயணத்தில் இருந்தார் என்பது காட்டப்படுகிறது. ஆபிரகாமின் இந்த நம்பிக்கை வாழ்விற்குள் அவர் வாரிசுகளான ஈசாக்கும் அவர் மகன் யாக்கோபும் உள்வாங்கப்படுகின்றனர். 

வ.10: இங்கே வருகின்ற இந்த 'அசையா நகர்' வானுலக கனவு நகரான புதிய எருசலேமை குறிக்கின்றது. மண்ணுலக எருசலேம் போலல்லாது இந்த நகர் கடவுளால் கட்டப்பட்ட படியால் அது அசைவுறாது அல்லது தகர்க்கப்படாது என்பது இந்த எபிரேயர் நூல் ஆசிரியரின் நம்பிக்கை. திருச்சபைத் தந்தை தூய அகுஸ்தினாரின் 'கடவுளின் நகர்' என்ற நூல் இப்படியான சிந்தனையில் இருந்தே தோற்றம் பெறுகிறது. 

வ.11: இந்த வசனம் ஆபிரகாமின் முதிர்ந்த வயதையும், கடவுளின் மேல் அவர்கொண்ட நம்பகத்தன்மையின் ஆழத்தையும் காட்டுகின்றன. ஒருவரின் வயதும் உடலியல் மட்டுப்படுத்தல்களும் நம்பிக்கைக்கு இடைஞ்சலாக இருக்க முடியாது என்பது இந்த ஆசிரியரின் நம்பிக்கை. 

வ.12: தொடக்க நூல் 22,17ல் கடவுள் ஆபிரகாமுக்கு கொடுத்த வாக்குறுதிகள் மீளவும் நினைவுகூறப்படுகின்றன. 
(✯ஆதலால் நான் உன்மீது உண்மையாகவே ஆசி பொழிந்து விண்மீன்களைப் போலவும் கடற்கரை மணலைப் போலவும் உன் வழிமரபைப் பலுகிப் பெருகச் செய்வேன்.)

வ.13: அதிகமாக இந்த வரி இஸ்ராயேல் மக்கள் எகிப்தில் பட்ட துன்பங்களை அல்லது அவர்களின் மூதாதையர்கள் (ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு) கானானில் நாடோடிகளாக அனுபவித்த துன்பங்களை குறிக்கிறது எனலாம். இவர்களுக்கு கடவுள் கொடுத்த வாக்குறுதிகளை அவர்கள் தங்கள் வாழ்நாளில் காணவில்லை மாறாக அதனை அடுத்த வாழ்வில் எதிர்பார்த்தார்கள் என்ற இந்த ஆசிரியரின் சிந்தனை முழுக்க முழுக்க கிறிஸ்தவ சிந்தனை. முதல் ஏற்பாட்டு இஸ்ராயேலர்கள் கடவுளின் வாக்குறுதிகளை வாழ்நாளில் அல்லது இந்த உலகத்தில் எதிர்பார்த்தார்கள் எனலாம். இவ்வுலகில் மக்கள் அன்னியர் மற்றும் தற்காலிகக் குடிகள் என்ற இந்த எபிரேய நூல் ஆசிரியரின் சிந்தனை மிகவும் மெச்சுதலுக்குரியது. இந்த சிந்தனை இரண்டாம் வாழ்வு பற்றிய சிந்தனையை அடிப்படையாக கொண்டது எனலாம். 

வவ.14-16: இங்கே ஆபிரகாம், ஈசாக் மற்றும் யாக்கோபுவின் சில வரலாற்று துளிகள் 
இறையியலாக்கப்படுகிறது.  இங்கே தாய்நாடு என்று விழிக்கப்படுவது விண்ணக எருசலேம் அல்லது புதிய திருச்சபை என்ற கிறிஸ்தவ எண்ணகருவாக இருக்கவேண்டும். அத்தோடு ஆபிரகாம் ஒருகாலும் தான் துன்பங்களை சந்தித்தவேளை தன்னுடைய பழைய மொசோபொத்தோமிய ஊருக்கு திரும்பிச்செல்ல முயலவில்லை என்பதை நம்பிக்கையின் அடையாளமாக காண்கிறார் ஆசிரியர். முதல் ஏற்பாட்டில் பல வேளைகளில் ஆபிரகாம் தன்னை அன்னியன் என்று கானானியருக்கு அறிவித்திருக்கிறார், இந்த வரிகளைக் கொண்டே மோசேயும் பிற்கால இறைவாக்கினர்களும் மற்றைய அன்னிய மக்கள் மேல் இஸ்ராயேலர் இரக்கம் காட்ட வேண்டும் என்ற சட்டங்களை உருவாக்கினர் (காண்க தொ.நூல் 23,4✯)
(✯'நான் உங்களிடையே அன்னியனும் அகதியுமாய் இருக்கிறேன். என் வீட்டில் இறந்தாரை நான் அடக்கம் செய்வதற்கான கல்லறை நிலத்தை உங்களுக்குரிய சொத்திலிருந்து எனக்கு விற்று விடுங்கள்' என்று கேட்டார்.)

வ.16: ஆபிரகாமும் அவருடைய உடனடி வழித்தோன்றல்களும் இவ்வுலகில் ஒரு வாக்களிக்கப்பட்ட நாட்டை தேடவில்லை மாறாக அவர்கள் வின்னுலகிலே ஒரு நாட்டை தேடினார்கள் என்பது இந்த ஆசிரியரின் நம்பிக்கையும் இறையியல் சிந்தனையுமாகும். எபிரேயர் நூல் தன் வாசகர்களின் பிரச்சினைகளுக்கு இந்த இறையியல் மூலமாக நம்பிக்கை அளிக்க முயல்வதை இங்கே காணலாம். 

வவ.17-18: ஆபிரகாம் ஈசாக்கை பலியிட முன்வந்தது விவிலியத்தில் பல வேளைகளில் நம்பிக்கையின் உச்சகட்ட உதாரணமாக பார்க்கப்பட்டது. இந்த உதாரணம் ஆரம்ப கால கிறிஸ்தவர்கள் மத்தியிலும் மு;ன்னிலையில் இருந்ததை இங்கணம் காணலாம். 

வ.19: ஈசாக்கு பலியிடப்படாமல் உயிரோடு காப்பாற்றப்பட்ட நிகழ்வை ஆசிரியர் இயேசுவின் உயிர்ப்புடன் ஒப்பிடுகிறார். அத்தோடு இயேசுவின் உயிர்ப்புதான் முக்கியமாக நிகழ்வு, ஈசாக்கின் மீட்பு ஒரு அடையாளம் மட்டுமே என்கிறார். 



லூக்கா: 12,32-48
32'சிறு மந்தையாகிய நீங்கள் அஞ்ச வேண்டாம்; உங்கள் தந்தை உங்களைத் தம் ஆட்சிக்கு உட்படுத்தத் திருவுளம் கொண்டுள்ளார். 33உங்கள் உடைமைகளை விற்றுத் தர்மம் செய்யுங்கள்; இற்றுப்போகாத பணப்பைகளையும் விண்ணுலகில் குறையாத செல்வத்தையும் தேடிக் கொள்ளுங்கள்; அங்கே திருடன் நெருங்குவதில்லை; பூச்சியும் அரிப்பது இல்லை. 34உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்.

35'உங்கள் இடையை வரிந்துகட்டிக் கொள்ளுங்கள். விளக்குகளும் எரிந்து கொண்டிருக்கட்டும். 36திருமண விருந்துக்குப் போயிருந்த தம் தலைவர் திரும்பி வந்து தட்டும்போது உடனே அவருக்குக் கதவைத் திறக்கக் காத்திருக்கும் பணியாளருக்கு ஒப்பாய் இருங்கள். 37தலைவர் வந்து பார்க்கும்போது விழித்திருக்கும் பணியாளர்கள் பேறு பெற்றவர்கள். அவர் தம் இடையை வரிந்து கட்டிக்கொண்டு அவர்களைப் பந்தியில் அமரச் செய்து, அவர்களிடம் வந்து பணிவிடை செய்வார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். 38தலைவர் இரவின் இரண்டாம் காவல் வேளையில் வந்தாலும் மூன்றாம் காவல் வேளையில் வந்தாலும் அவர்கள் விழிப்பாயிருப்பதைக் காண்பாரானால் அவர்கள் பேறுபெற்றவர்கள். 39எந்த நேரத்தில் திருடன் வருவான் என்று வீட்டு உரிமையாளருக்குத் தெரிந்திருந்தால் அவர் தம் வீட்டில் கன்னமிட விடமாட்டார் என்பதை அறிவீர்கள். 40நீங்களும் ஆயத்தமாய் இருங்கள்; ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிடமகன் வருவார்.'
41அப்பொழுது பேதுரு, 'ஆண்டவரே, நீர் சொல்லும் இந்த உவமை எங்களுக்கா? அல்லது எல்லாருக்குமா?' என்று கேட்டார். 42அதற்கு ஆண்டவர் கூறியது: 'தம் ஊழியருக்கு வேளா வேளை படியளக்கத் தலைவர் அமர்த்திய நம்பிக்கைக்கு உரியவரும் அறிவாளியுமான வீட்டுப்பொறுப்பாளர் யார்? 43தலைவர் வந்து பார்க்கும் போது தம் பணியைச் செய்துகொண்டிருப்பவரே அப்பணியாளர். அவர் பேறுபெற்றவர். 44அவரைத் தம் உடைமைக்கெல்லாம் அதிகாரியாக அவர் அமர்த்துவார் என உண்மையாக உங்களுக்குச் சொல்கிறேன். 45ஆனால் அதே பணியாள் தன் தலைவர் வரக்காலந் தாழ்த்துவார் எனத் தன் உள்ளத்தில் சொல்லிக்கொண்டு ஆண், பெண் பணியாளர்கள் அனைவரையும் அடிக்கவும் மயக்கமுற உண்ணவும் குடிக்கவும் தொடங்கினான் எனில் 46அப்பணியாள் எதிர்பாராத நாளில், அறியாத நேரத்தில் அவனுடைய தலைவர் வந்து அவனைக் கொடுமையாகத் தண்டித்து நம்பிக்கைத் துரோகிகளுக்கு உரிய இடத்திற்குத் தள்ளுவார். 47தன் தலைவரின் விருப்பத்தை அறிந்திருந்தும் ஆயத்தமின்றியும் அவர் விருப்பப்படி செயல்படாமலும் இருக்கும் பணியாள் நன்றாய் அடிபடுவான். 48ஆனால் அவர் விருப்பத்தை அறியாமல் அடிவாங்கவேண்டிய முறையில் செயல்படுபவன் அவரது விருப்பத்தை அறியாமல் செயல்படுவதால் சிறிதே அடிபடுவான். மிகுதியாகக் கொடுக்கப்பட்டவரிடம் மிகுதியாகவே எதிர்பார்க்கப்படும். மிகுதியாக ஒப்படைக்கப்படுபவரிடம் இன்னும் மிகுதியாகக் கேட்கப்படும்.

லூக்கா நற்செய்தியின் 12-13 அதிகாரங்கள் வரவிருக்கும் நெருக்கடிகளுக்கு ஆயத்தமாக இருக்கும் படியான பல சிந்தனைகளை முன்வைக்கிறன. அத்தோடு இந்த அதிகாரத்தில் லூக்கா 'கவலைவேண்டாம்' என்ற தலைப்பில் இயேசுவின் வார்த்தைகளை ஆவணப்படுத்துவதை காணலாம். இந்த வரிகள்; ஆரம்ப கால கிறிஸ்தவர்களுக்கு அவர்களின் துன்பங்களிலும் தோல்விகளிலும் நம்பிக்கையை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டிருந்திருக்கலாம். காட்டுப் பறவைகள், செடிகள், புற்கள் போன்றவற்றின் இருப்பியலை உதாரணமாக காட்டி, தேவையில்லாத கவலை என்பது தன் மக்களுக்கு அவசியமில்லாதது என்று கூறுகிறார் (ஒப்பிடுக வவ.22-31).

வ.32: சிறிய மந்தை என்பது இங்கே பல அர்த்தங்களை முன்வைக்கலாம்.
அ. இது கிறிஸ்தவர்களுக்கான 'செல்லமான' வார்த்தையாக இருக்கலாம்
ஆ. அல்லது இது இவர்கள் அக்காலத்தில் சிறிய எண்ணிக்கையில் இருந்ததை குறிக்கலாம். 

வவ.33-34: இந்த இரண்டு வரிகள் விண்ணரசை மையப்படுத்திய செல்வத்தை போதிக்கின்றன. இவ்வுலக செல்வம் என்பது கடவுளின் ஆசீர்வாதத்தின் அடையாளமாக காணப்பட்டது இந்த சிந்தனையை வித்தியாசமாக பார்க்கிறார் இயேசு. அழிந்துபோகக்கூடிய இவ்வுலக செல்வம் உண்மையான ஆசீராக இருக்க முடியாது என்பது ஆண்டவரின் போதனை. செல்வமும் உள்ளமும் என்ற லூக்காவின் வார்த்தைகள் மிகவும் அழகானவை. அகத்திலிருப்பது முகத்தில் தெரியும் என்ற தமிழ் பழமொழி இந்த சிந்தனையைத்தான் வேறு வரிகளில் முன்வைக்கிறது. ஆரம்ப கால திருச்சபையில் இருந்த பகிர்வும் அதற்கெதிரான போக்குகளையும் மறைமுகமாக லூக்கா சாடுவதனைப்போல் இந்த இயேசுவின் வரிகள் ஒருங்கமைக்கப்பட்டுள்ளன. 

வவ.35-48 'விழிப்பாயிருக்கும் பணியாளர்கள்' என்ற உவமையை சார்ந்துள்ளது. மத்தேயு நற்செய்தி 24,45-51 இலும் இதே உவமையை காண்கின்றோம். இந்த இரண்டு நற்செய்தியிலும் நற்செய்தியாளர்கள் இந்த உவமையை விவரிக்காமல் அதற்கு விரிவுரை கொடுப்பதனை காணலாம். இதிலிருந்து இந்த உவமை அக்கால வாசகர்களுக்கு ஏற்கனவே நன்கு தெரிந்திருந்த உவமைகளில் ஒன்று என கருதலாம். அத்தோடு இயேசுவின் உயிர்ப்பின் பின்னர் திருச்சபை சந்தித்த சிக்கல்களை எப்படி எதிர்நோக்குவது என்பதனை மையமாக இந்த உவமை கொண்டுள்ளதையும் காணலாம். 

வ.35: இடையை வரிந்து கட்டிக் கொள்ளுதலும் விளக்குகள் எரிந்து கொண்டிருத்தலும் அவசர நிலையைக காட்டும் உருவகங்கள். யூதர்களின் நீண்ட ஆடைகள் இடையில் கட்டப்படாவிட்டால் அவசர வேலை செய்வதற்கு இடைஞ்சலாக இருக்கும். விளக்குகள் எரிந்து கொண்டிருத்தல் இங்கே 
இரவிலும் அவர்கள் பகல்போல் வேலைசெய்ய எதிர்பார்க்கப்படுகிறார்கள் என்ற அடையாளத்தை கொடுக்கிறது. 

வவ.36-37: இந்த வரிகள், வெளியில் சென்றிருந்த தலைவரையும் அவரது விழிப்பான பணியாளர்களையும் உருவகிக்கிறது. அக்கால முதலாளி, அடிமை வர்க்க சமுதாய அமைப்பை இந்த வரிகள் நமக்கு நினைவூட்டுகின்றன. பணியாளர்கள் என்பது உண்மையில் இங்கே அடிமைகளைத்தான் குறிக்கிறது. அக்காலத்தில் திருமண விழாக்கள் பல நாட்களாக நடந்தது. கதவை உடனடியாக தலைவருக்காக திறத்தல் என்பது இங்கே இந்த பணியாளர்கள் விழிப்பாய் 
இருந்தார்கள் என்பதனையும் விட அவர்கள் தம் தலைவருக்காக காத்திருந்தார்கள் என்றே பார்க்க வேண்டும். முதலாளிகள் தங்கள் அடிமை பணியாளர்களுக்கு சேவை செய்வது மிக மிக அரிது. இந்த அரிதான உதாரணத்தை இயேசு எடுத்து, விழிப்பான பணியாளர்கள் தங்கள் எஜமானின் பணிவிடையை பெற்றுக்கொள்வார்கள் எனபதன் மூலம், இந்த பணியாளர்கள் ஓர் உன்னதமான பரிசை பெறுவார்கள் என்ற நம்பிக்கையை கொடுக்கிறார். அத்தோடு இது இயேசு தன் சீடர்களுக்கு கால் கழுவிய நிகழ்வையும் இது காட்டுகிறது என சில விரிவுரையாளர்கள் காண்கின்றனர். 

வவ.38: இந்த இரண்டாம் மற்றும் மூன்றாவது காவல் வேளை அக்கால நேர கணிப்பு முறையை மையப்படுத்தியது. இது உரோமையரின் நேர கணிப்பு முறை, இரண்டாம் காவல் அதிகமாக பி.ப 9 மணியாகவும் மூன்றாவது காவல் விடியற்காலை 3 மணியாகவும் இருக்கும். காவல் வீரர்கள் தங்கள் காவற் பணிகளை இவ்வாறு பிரித்தெடுத்து காவற் கோபுரங்களில் பணிசெய்தனர். 

வவ.39-40: இந்த வரிகள் இன்னொரு குறுகிய உவமை. அக்கால இரவுகள் கள்வர்களுக்கு மிகவும் சாதகமாக இருந்ததால் அவர்கள் அதனை திருடுவதற்கு பயன்படுத்தினர். (இக்கால திருடர்களுக்கு திருடுவதற்கு பகலும் இரவும் பெரிய வித்தியாசங்களை கொடுப்பதில்லை). திருடர்கள் வரும்வரை சோம்பேறி பணியாளர்கள் எப்படி ஊகிக்க மாட்டார்களோ அதேபோல் சோம்பேறி விசுவாசிகள் ஆண்டவரின் வருகையை ஊகிக்க மாட்டார்கள் என்பது லூக்காவின் போதனை. 

வ.41: இந்தக் கேள்வி லூக்காவின் தெளிவான சிந்தனையைக் காட்டுகிறது. விழிப்பு மற்றும் ஆண்டவருக்கான எதிர்பார்ப்பு மக்களுக்கு மட்டுமல்ல அனைத்து தலைவர்களுக்கும் பொருந்தும். 

வவ.42-47: இந்த வரிகள் இன்னொரு உவமையை சுருக்கமாக காட்சிப்படுத்துகிறது. மேலாளர்களின் திறமையான நிர்வாகம் அக்காலத்திலும் இக்காலத்திலும் ஒரு நிறுவனத்தின் வளர்ச்சியின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. யார் அறிவாளியான மேளாளர்? என்பது இயேசுவின் காலத்தில் 
இருந்த முக்கியமான கேள்வி. இதனை லூக்கா ஆரம்ப கால திருச்சபைக்கு ஒப்பிடுகிறார். ஆரம்ப கால திருச்சபையின் தலைவர்கள் இந்த மேலாளரைப்போல அறிவுள்ளவர்களாக இருக்க எதிர்பார்கப்பட்டார்கள். அத்தோடு அறிவற்ற மேலாளர்களின் செயற்பாடுகளான, நம்பிக்கையற்றதன்மை, உடன்பணியாளர்களை துன்புறுத்துதல் போன்றவை எச்சரிக்கப்படுகின்றன. அத்தோடு அறிவற்ற நம்பிக்கை துரோக மேலாளர்க்கான தண்டனைகளும் வரிசைப்படுத்தப்படுகின்றன. அவர் தண்டிக்கப்படுவார், மேலாளர் நிலையிலிருந்து நம்பிக்கை துரோகிகளுக்கான இடத்தை அடைவார், மற்றும் நன்றாய் அடிபடுவார். இங்கே தண்டனை பெறுதல் இரண்டு தடவை சொல்லப்படுவதன் வழியாக இப்படியானவர்களுக்கு நிச்சயமாக தண்டனை கிடைக்கும் என்பதை உறுதியாகச் சொல்கிறார். 

வ.48: அறியாமல் தவறு செய்பவர்களுக்கான தண்டனையும் விளக்கப்பட்டுள்ளது. அறியாமை பாராட்டப்படாமல் சிறிய வகை தண்டனை வழங்கப்படுகிறது. இதிலிருந்து கிறிஸ்தவம் என்ற சீடத்துவத்திற்கு அனைவரும் விழிப்பாயிருக்க எதிர்பார்க்கப்படுகிறார்கள். சந்தர்ப்ங்கள் என்பது கடவுள் தரும் பொறுப்புக்களின் அடையாளம் என்ற சிந்தனையை இது காட்டுகிறது. இவ்வுலகில் எதுவும் தற்செயல் அல்ல அனைத்தும் கடவுளின் எதிர்பார்ப்புடன் கொடுக்கப்படுகின்றன அத்தோடு கொடுக்கப்படுகிறவர்களிடமிருந்து அதிகமாக எதிர்பார்கப்படுகின்றன என்ற சிந்தனைகளையும் இங்கே காணலாம். 


நம்பிக்கை என்பது இஸ்ராயேலருக்கு மட்டுமான அடையாளமல்ல, 
அது கிறிஸ்தவர்களுக்கும் அனைவருக்குமான அடையாளம்.
நம்பிக்கைதான் அதிகான வேளைகளில் வாழ்வு கொடுக்கிறது. 
நம்பிக்கையற்றவர்கள் பாதி இறந்தவர்கள் என்பதும் ஒரு விதத்தில் உண்மையே.
கிறிஸ்தவமும் கிறிஸ்துவும் மாய வித்தைகளின் அடையாளம் அல்ல,
மாறாக அவை நம்பிக்கையின் அடையாளங்கள்.
இன்றைய உலகில் முக்கிய பிரச்சனையான வன்முறை என்ற நஞ்சை முறியடிக்கும் மருந்து நம்பிக்கை என்கிறார் ஒரு தென் சூடான் ஆயர். 

அன்பான ஆண்டவர் இயேசுவே, உம்மிடம் இருந்து அதிசயங்களை நாம் எதிர்பார்க்காமல்,
உம்மிலே நம்பிக்கை வைக்க எமக்கு உதவி செய்யும். ஆமென்




மி.ஜெகன் குமார் அமதி
பேசாலை, மன்னார், இலங்கை
வியாழன், 4 ஆகஸ்ட், 2016




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆண்டின் பொதுக்காலம் முப்பத்திநான்காம் வாரம் கிறிஸ்து அரசர் பெருவிழா:  Our Lord Jesus Christ, King of the Universe 24.11.2024

ஆண்டின் பொதுக்காலம் முப்பத்திநான்காம் வாரம்   கிறிஸ்து அரசர் பெருவிழா :  Our Lord Jesus Christ, King of the Universe 24.11.2024 இய...