வியாழன், 31 மார்ச், 2016

பாஸ்கா காலம் இரண்டாம் வாரம் 03,சித்திரை, 2016: Second Sunday of the Pascha!


பாஸ்கா காலம் இரண்டாம் வாரம்
03,சித்திரை, 2016
'நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்'

முதல் வாசகம்: தி.பணி 5,12-16
திருப்பாடல்: 118
திருவெளிப்பாடு 1,9-13.17-19
யோவான் 20,19-31  

முதல் வாசகம்: தி.பணி 5,12-16

12மக்களிடையே பல அரும் அடையாளங்களும் அருஞ்செயல்களும் திருத்தூதர் வழியாய்ச் செய்யப்பட்டன. அனைவரும் சாலமோன் மண்டபத்தில் ஒருமனத்தவராய்க் கூடி வந்தனர். 13மற்றவர் யாரும் இவர்களோடு சேர்ந்துகொள்ளத் துணியவில்லை. ஆயினும் மக்கள் இவர்களைப் பற்றிப் பெருமையாகப் பேசினர். 14ஆண்டவரிடம் நம்பிக்கை கொண்ட திரளான ஆண்களும் பெண்களும் இவர்களோடு சேர்க்கப்பட்டார்கள். 15பேதுரு நடந்து செல்லும்போது அவர் நிழல் சிலர் மேலாவது படுமாறு மக்கள் உடல்நலமற்றோரைக் கட்டில்களிலும் படுக்கைகளிலும் கிடத்திச் சுமந்துகொண்டுவந்து வீதிகளில் வைத்தார்கள்; 16எருசலேமைச் சுற்றியிருந்த நகரங்களிலிருந்து மக்கள் உடல்நலமற்றோரையும், தீய ஆவிகளால் இன்னலுற்றோரையும் சுமந்து கொண்டு திரளாகக் கூடிவந்தார்கள். அவர்கள் அனைவரும் நலம் பெற்றனர்.

இந்த பகுதி திருத்தூதர்கள், ஆண்டவரின் விண்ணேற்றத்தின் பின், எருசலேமில் ஆற்றிய மறைபரப்பு பணியைப் பற்றி விவரிக்கின்றது. ஏற்கனவே பேதுருவும், மற்றையவர்களும் மக்கள் மத்தியில் பிரசித்தமாய் காணப்பட்டனர். சில அரும் அடையாளங்களையும் அவர்கள் இயேசுவின் பெயரால் செய்யத்தொடங்கியிருந்தனர். அனனியா மற்றும் சப்பிராவின் நிகழ்வும் இந்தவேளையில் தான் நடைபெற்றிருந்தது. இதனால் மக்கள் இவர்கள் சொல்வதைக் கேட்கவும், பல நோய்களை குணபடுத்திக்கொள்ளவும் திருத்தூதர்களின் பின்னால் குவியத்தொடங்கினர். இப்படியான ஒரு வேளையிலேதான் இந்தக் காட்சி நடைபெறுகிறது. 

வ. 12: இந்த காலப்பகுதியில் பலர் மாயவித்தைகளையும் வினோதங்களையும் செய்திருக்கலாம், ஆனால் திருத்தூதர்கள் இயேசுவின் பெயரால் அரும் அடையாளங்களைச் செய்ததை லூக்கா வித்தியாசமாகக் காட்டுகிறார். இவை மக்களின் பார்வையையும் திருத்தூதர்களின் பால் ஈர்த்தது. 

சாலமோன் மண்டபம், எருசலேம் கோவிலின் கிழக்குப் பகுதியில் அமைந்திருந்தது. பாரிய தூண்களால் ஏற்படுத்தப்பட்டிருந்த இந்த மண்டபம், நண்பர்களும் யூதர்களும் சந்திக்கும் இடமாக இருந்தது. பழைய சாலமோன் ஆலயத்தின் எச்சம் எனவும் இதனை சில ஆய்வாளர்கள் காண்கின்றனர். ஏரோது இதனை பெருப்பித்திருந்தான். இயேசு ஆண்டவர் அதிகமான வேளைகளில் மக்களையும் சீடர்களையும் சந்திக்கும் இடமாகவும் இது இருந்தது. அதனைப் போலவே தொடக்க திருச்சபையும் இந்த இடத்தில் அதிகமாக கூடியது. மக்கள் ஆலயத்தினுள் செல்வதற்கு முன் இந்த இடத்தில் கூடி ஆன்மீக காரியங்களைப் பற்றியும் விவாதித்தனர். உரோமையர் எருசலேமை அழித்தபோது இந்த மண்டபமும் முழுவதுமாக அழிந்து போனது. (மேலும் வாசிக்க http://www.bible-history.com/jerusalem/firstcenturyjerusalem_royal_porticoes.html

வ. 13: மற்றவர் எவரும் என, லூக்கா யூதர்களை குறிக்கிறார் எனக் கொள்ளலாம். அவர்கள் இந்தத் கூட்டத்தில் சேராவிடினும், இந்தக் கூட்டத்தின் மீது கொண்டிருந்த அபிப்பிராயத்தைக் இது காட்டுகிறது. இக்காலத்தில் சாதாரன யூதர்கள் கிறிஸ்தவர்களின் மேல்  மிக மரியாதை வைத்திருந்ததை இவ்வாறு நோக்கலாம். 

வ. 14: நம்பிக்கைக் கொண்டிருந்தவர்கள் என்ற ஒரு எச்சவினை பாவிக்கப்பட்டுள்ளது (πιστεύοντες) இது ஆரம்பகால கிறிஸ்தவர்களைக் குறிக்கலாம். ஆண்களையும் பெண்களையும் சரிவர குறிப்பிட்டிருப்பது, ஆரம்ப கால திருச்சபையில் பாலினம் ஒரு பிரச்சனையாக இல்லாதிருந்ததை காணலாம். 

வ. 15: பேதுருவின் நிழலாவது நோயாளிகளில் விழாதா என எண்ணுமளவிற்கு பேதுரு புனிதராக உருவெருத்திருந்தார். 

வ. 16: எருசலேமில் மட்டுமல்ல, புற நகர்ப்பகுதியிலிருந்தும் நோயாளர்கள் திருத்தூதர்களின் தொடுகைக்காக கொண்டுவரப்பட்டிருந்தனர். அனைவரும் நலமடைந்தனர் என்பது, ஆண்டவரின் தரிசனம் அங்கே அதிகமாக உணரப்பட்டதாக காட்டுகிறார் லூக்கா. லூக்கா இந்தப் பகுதியை ஒரு முன்னுரை போலவே காட்சிப்படுத்துகிறார், பின்னர் வருகிற பகுதிகள் எவ்வாறு திருத்தூதர்கள் துன்புறுத்தப்பட்டார்கள் என்பதை காட்டும். 
திருப்பாடல்: 118
நன்றிப் புகழ் மாலை

1ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு. 2'என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு' என் இஸ்ரயேல் மக்கள் சாற்றுவார்களாக! 
3'என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு' என ஆரோனின் குடும்பத்தார் சாற்றுவார்களாக! 
4'என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு' என ஆண்டவருக்கு அஞ்சுவோர் அனைவரும் சாற்றுவார்களாக! 5நெருக்கடியான வேளையில் நான் ஆண்டவரை நோக்கி மன்றாடினேன்; ஆண்டவரும் எனக்குச் செவி கொடுத்து என்னை விடுவித்தார். 
6ஆண்டவர் என் பக்கம் இருக்க நான் ஏன் அஞ்ச வேண்டும்? மனிதர் எனக்கு எதிராக என்ன செய்ய முடியும்?✠ 7எனக்குத் துணை செய்யும் ஆண்டவர் என் பக்கம் உள்ளார்; என்னை வெறுப்போர்க்கு நேர்வதைக் கண்ணாரக் காண்பேன். 
8மனிதர்மீது நம்பிக்கை வைப்பதைவிட ஆண்டவரிடம் தஞ்சம் புகுவதே நலம்! 
9உயர்குடியினர் மீது நம்பிக்கை வைப்பதைவிட, ஆண்டவரிடம் அடைக்கலம் புகுவதே நலம்! 
10வேற்றினத்தார் அனைவரும் என்னைச் சூழ்ந்து கொண்டனர்; ஆண்டவர் பெயரால் அவர்களை அழித்துவிட்டேன். 11எப்பக்கமும் அவர்கள் என்னைச் சுற்றி வளைத்துக்கொண்டனர்; ஆண்டவர் பெயரால் அவர்களை அழித்து விட்டேன். 
12தேனீக்களைப்போல் அவர்கள் என்னைச் சூழ்ந்து கொண்டனர்; நெருப்பிலிட்ட முட்களைப்போல் அவர்கள் சாம்பலாயினர்; ஆண்டவரின் பெயரால் அவர்களை அழித்துவிட்டேன். 
13அவர்கள் என்னை வலுவுடன் தள்ளி வீழ்த்த முயன்றனர்; ஆனால், ஆண்டவர் எனக்குத் துணை நின்றார். 14ஆண்டவரே என் ஆற்றல்; என் பாடல்; என் மீட்பும் அவரே. 
15நீதிமான்களின் கூடாரங்களில் வெற்றியின் மகிழ்ச்சிக்குரல் ஒலிக்கின்றது; ஆண்டவரது வலக்கை வலிமையாய்ச் செயலாற்றியுள்ளது. 
16ஆண்டவரது வலக்கை உயர்ந்தோங்கி உள்ளது; ஆண்டவரது வலக்கை வலிமையாய்ச் செயலாற்றியுள்ளது. 17நான் இறந்தொழியேன்; உயிர் வாழ்வேன்; ஆண்டவரின் செயல்களை விரித்துரைப்பேன்; 
18கண்டித்தார், ஆண்டவர் என்னைக் கண்டித்தார்; ஆனால் சாவுக்கு என்னைக் கையளிக்கவில்லை. 
19நீதிமான்கள் செல்லும் வாயில்களை எனக்குத் திறந்து விடுங்கள்; அவற்றினுள் நுழைந்து நான் ஆண்டவருக்கு நன்றி செலுத்துவேன். 
20ஆண்டவரது வாயில் இதுவே! இது வழியாய் நீதிமான்களே நுழைவர். 
21என் மன்றாட்டை நீர் கேட்டதால், எனக்கு நீர் வெற்றி அளித்ததால், உமக்கு நான் நன்றி செலுத்துகின்றேன். 22கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்று! 
23ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது! நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று! 
24ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம். 
25ஆண்டவரே! மீட்டருளும்! ஆண்டவரே! வெற்றிதாரும்! 
26ஆண்டவரின் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர்! ஆண்டவரது இல்லத்தினின்று உங்களுக்கு ஆசி கூறுகிறோம். 27ஆண்டவரே இறைவன்; அவர் நம்மீது ஒளிர்ந்துள்ளார்; கிளைகளைக் கையிலேந்தி விழாவினைத் தொடங்குங்கள்; பீடத்தின் கொம்புகள்வரை பவனியாகச் செல்லுங்கள். 
28என் இறைவன் நீரே! உமக்கு நான் நன்றி செலுத்துகின்றேன்; என் கடவுளே! உம்மைப் புகழ்ந்தேத்துகின்றேன். 29ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; ஏனெனில், அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.

ஆண்டவர் என் பக்கம் இருக்க நான் ஏன் அஞ்ச வேண்டும் என்ற ஆழமான விசுவாசத்தை மையப்பொருளாக வைத்து இந்த 118வது புகழ்சித்திருப்பாடல் வருகின்றது. 

இந்த திருப்பாடலை இவ்வாறு பிரிக்கலாம்:

அ). வவ.1-4: ஒரு குழு புகழ்ச்சிக்கான அழைப்பு. 
இந்த வரிகள் ஊடாக ஆசிரியர் மக்களை புகழ்சிக்கு அழைக்கிறார். முதலில் மக்களையும் பின்னர் குருக்களையும் அழைப்பது, கடவுளை புகழ்வது அனைவரின் கடமையென அழகாகவும் ஆழமாகவும் காட்டுகிறார். ஆண்டவரின் பேரன்பு என்பது உண்மையில் எபிரேயத்தில் ஆண்டவரின் இரக்கத்தையே குறிக்கிறது (חַסְדּוֹ இחֶסֶד ஹெசட்- இரக்கம்). ஆண்டவருக்கு அஞசுவோர் என்று எபிரேய கோட்பாடுகளை பின்பற்றுவோர் குறிப்பிடப்பட்டுள்ளனர். 

ஆ). வவ.5-13: அரசரின் சாட்சியம்.
இங்கே இன்னொரு புதிய குரல் ஒலிக்கிறது அது அரசரின் குரல். அரசர் தன்னுடைய இராணுவ துன்பங்களின் போது எவ்வாறு கடவுள் கைகொடுத்தார் என்பதை சாட்சிசொல்கிறார். இதனை மக்கள் தங்களுக்கும் படிப்பினையாக எடுக்க வேண்டுமென்பதே அரசரின் விருப்பம். மனிதர் மீது நம்பிக்கை வைப்பதைவிட ஆண்டவர் மீது நம்பிக்கை வைப்பதே மேல் என்று அரசர் தன்னுடைய நேச படைகளைவிட ஆண்டவர் தரும் பாதுகாப்பே உன்னதமானது என்கிறார்.



இ). வவ.14-19: புதுப்பிக்கப்பட்ட அரச சாட்சியம்.
வ.14, ஆண்டவரே என் ஆற்றலும் பாடலும் என்று மொழி பெயர்க்ப்பட்டுள்ளது. பாடல், என்பதை பலம் என்றும் மொழிபெயர்கலாம் (זִמְרָה ட்சிம்ராஹ்- இசை, பாடல், பலம்). ஆண்டவர் தன்னை கண்டித்தார் என்று சொல்லி கடவுளின் கண்டிக்கும் உரிமையை ஏற்றுக்கொள்கிறார் அரசர்.
உ). வவ.20-28: ஓரு நன்றி வழிபாடு.
இந்த வரிகள் பாடலாக மட்டுமன்று நன்றி வழிபாடாகவும் உருவகப் படுத்தப்பட்டுள்ளது. இது ஆண்டவரின் வாயில், இவ்வழியாக நீதிமான்கள் நுளைவர் என்பது இந்த வழிபாட்டைக் குறிக்கிறது. 22வது வசனத்தை புதிய ஏற்பாட்டு ஆசிரியர்கள் அதிகமாக இயேசுவிற்கு பாவிக்கின்றனர்- கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல் ஆயிற்து. 26வது வசனம், ஆண்டவரின் பெயரால் வருகிறவர் ஆசிர்வாதங்களைக் கொண்டுவருகிறார் என்பது, பின்நாளில் குறிப்பிட்ட நபர்களை குறித்து வாசிக்கப்பட்டது, நமக்கு இது இயேசுவைக் குறிக்கிறது. 27வது வசனம், கிளைகளை கையிலேந்தி ஆண்டவரை புகழக் கேட்கிறது, இது ஒருவகை ஆர்ப்பரிப்பைக் குறிக்கலாம். இயேசு எருசலேமுள் நுழைந்தபோது இவ்வகையான ஒரு செயலை கூட்டம் செய்தமை நினைவுக்கு வரலாம். 

ஊ). வ.29: குழு புகழ்ச்சிக்கான இறுதி அழைப்பு.
இங்கே குருவின் குரல் மீண்டும் ஒலிக்கிறது. அரசரைப் போல மக்கள் கூட்டம் அனைவரையும் நன்றி செலுத்தி ஆண்டவரைப் புகழக் கேட்கிறார்.  


இரண்டாம் வாசகம்
திருவெளிப்பாடு 1,9-13.17-19

9உங்கள் சகோதரனும், இயேசுவோடு இணைந்த நிலையில் உங்கள் வேதனையிலும் ஆட்சியுரிமையிலும் மனவுறுதியிலும் பங்குகொள்பவனுமான யோவான் என்னும் நான் கடவுளின் வாக்கை அறிவித்து இயேசுவுக்குச் சான்று பகர்ந்ததால் பத்மு தீவுக்கு வர நேர்ந்தது. 10ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று தூயஆவி என்னை ஆட்கொள்ளவே எனக்குப் பின்னால் பெரும்குரல் ஒன்று எக்காளம்போல முழங்கக் கேட்டேன். 11'நீ காண்பதை ஒரு சுருளேட்டில் எழுதி, எபேசு, சிமிர்னா, பெர்காம், தியத்திரா, சர்தை, பிலதெல்பியா, இலவோதிக்கேயா ஆகிய ஏழு இடங்களிலும் உள்ள திருச்சபைகளுக்கு அதை அனுப்பி வை' என்று அக்குரல் கூறியது.

12என்னோடு பேசியவர் யார் என்று பார்க்கத் திரும்பினேன். அப்பொழுது ஏழு பொன் விளக்குத்தண்டுகளைக் கண்டேன். 13அவற்றின் நடுவே மானிடமகனைப் போன்ற ஒருவரைப் பார்த்தேன். அவர் நீண்ட அங்கியும் மார்பில் பொன் பட்டையும் அணிந்திருந்தார்

17நான் அவரைக் கண்டபொழுது செத்தவனைப்போல் அவரது காலில் விழுந்தேன். அவர் தமது வலக் கையை என்மீது வைத்துச் சொன்னது; 'அஞ்சாதே! முதலும் முடிவும் நானே. 18வாழ்பவரும் நானே. இறந்தேன்; ஆயினும் இதோ என்றென்றும் வாழ்கின்றேன். சாவின் மீதும் பாதாளத்தின் மீதும் எனக்கு அதிகாரம் உண்டு. 19எனவே நீ காண்பவற்றை, அதாவது இப்பொழுது நிகழ்கின்றவற்றையும் இனி நிகழவிருப்பவற்றையும் எழுதிவை.


அ. விவிலியத்தில் அதிகமாக ஆய்வுசெய்யப்பட்ட நூல்களில் திருவெளிப்பாடு ஒரு முக்கியமானதெனக் கொள்ளலாம். இது ஒரு வகை வெளிப்பாட்டு ஆரம்ப யூத இலக்கியவகையைச் சார்ந்தது. இதன் காலத்தை இரண்டாம் நூற்றாண்டு எனக் கணிக்கின்றனர். 1-2 ஏனோக்கு, 2-3 பாருக்கு, 4 எஸ்ரா போன்றவையும் இவ்வகையை சார்ந்தவையே. ஆரம்ப காலத்தில் இது ஒரு திருமடலாகவே கருதப்பட்டது. அதிகமான காட்சிகள், உருவகங்கள், அடையாளங்கள், இலக்கங்கள், என மிகவும் குறியீட்டு மொழிகளைக் கொண்டமைந்துள்ள இந்தப் புத்தகத்தை அவதானமாகவும், அதன் மூல சூழ்நிலை தேவைகளிலும்
வாசிக்க வேண்டும். இது இறைவார்த்தை என்றபடியால் எமது இன்றைய தேவைகளுக்கும் சிக்கல்களுக்கும் இது பதிலளிக்கக் கூடியது, ஆனால் இலகுவில் தவறாக பாவிக்கப்படக்கூடிய ஆபத்தையும் இதன் வாசகர்கள் எதிர்நோக்குவர். திருவெளிப்பாட்டு இலக்கிய வகை நூல்கள், தன்மையை (முதன் நபர்) பேசுபொருளாகவே கொண்டிருக்கின்றன. அவ்வப்போது கதையின் தலைவர்க்கு சிலர் தோன்றி வெளிப்பாடுகளை விளங்கப்படுத்துவதைக் காணலாம். இதனுடைய செய்தியாக, அறிவிற்கப்பாற்பட்ட செய்திகளை விவரிக்கப்படுவதை எடுக்கலாம். இதனுடைய நோக்கமாக, வாசகர்கள் தங்களது வாழ்வில் வரும் துன்பங்களையும், அல்லது தாங்கள் இவ்வுலகில் சந்திக்கும் அஞ்ஞானத்தையும் எதிர்கால கண்கள் கொண்டு பார்க்கவும் இதனால் புத்துணர்ச்சியடையவும் எழுதப்பட்டது என எடுக்கலாம். நான்கு தடவைகள் யோவான் என்றொருவர் குறிப்பிடப்பட்டுள்ளமையால் இதன் ஆசிரியராக திருச்சபை, திருத்தூதர் யோவனை முன்மொழிகிறது. இக்கருதுகோளுக்கு சார்பாகவும் எதிராகவும் பல வாதங்களும் புதுவாதங்களும் இன்னும் தொடர்கிறது. ஒவ்வொரு தடவையும் இந்நூலை வாசிப்பவர், ஆச்சரியங்களையும், இனிமையையும் உணர்வர். 

ஆ. இதன் ஆசிரியத்துவம், ஆழமான எபிரேத்தையும், அரமெயிக்கத்தையும், அத்தோடு தகுந்த முதல் ஏற்பாட்டு அறிவையும் காண்பிக்கிறது. நிச்சயமாக உரோமையர் கிறிஸ்தவர்களுக்கெதிராக தூண்டிவிட்ட கலாபனைகளுக்கு பதிலளிப்பதாகவும், கிறிஸ்தவர்களை உற்சாகப்படுத்துவதற்காகவும் இந்நூல் எழுதப்பட்டது என நம்பலாம். இருபத்தோரு அதிகாரங்களைக் கொண்டுள்ள இப்புத்தகம், ஏழு திருச்சபைகளுக்கான கடிதங்கள், விண்ணக காட்சிகள், ஏழு முத்திரைகள், ஏழு எக்காளங்கள், திருச்சபைக்கும் தீய சக்திகளுக்குமான போராட்டம், ஏழு துன்பக் கிண்ணங்கள், எதிர்கிறிஸ்துவின் ஆட்சியும்-அழிவும், கிறிஸ்துவின் வெளிப்பாடு-கடவுளின் நகர், இறுதியாக முடிவுரையையும் கொண்டு அமைந்துள்ளது. 

வ.9: பத்மோஸ் (Πάτμος) ஏஜியன் கடலில் அமைந்துள்ள மலைத் தீவு. தனிமையிலுள்ள இந்த எரிமலைத் தீவில்தான் யோவான் ஆண்டவரின் திருவெளிப்பாட்டை தாம் பெற்றுக்கொண்டதாக கூறுகிறார். இன்று இது கிரேக்க நாட்டிற்கு உரியதாகும். யோவானுக்கு முன்னமே உரோமைய வரலாற்று ஆசிரியர்களினால் இந்த தீவு அறியப்பட்டிருந்தது. உரோமையர்கள் தங்கள் சிறைக்கைதிகளை இந்தத் தீவில் அடைத்திருந்தனர். முதல் ஏற்பாட்டு இறைவாக்கினர்களின் அழைப்பினைப்போன்று யோவான் ஒரு முன்னுரை கொடுக்கிறார். இந்த வசனம் முதலாம் நூற்றாண்டு கிறிஸ்தவர்களின் துன்பங்களை அப்படியே வர்ணிக்கிறது. அதாவது வேதனையிலும், மனவுறுதியிலும், ஆட்சியுரிமையிலும் பங்குகொள்ளுதல். யோவான் தன்னை ஒரு உடன் சகோதரனாக இந்த போராட்டத்தில் இணைத்துக்கொள்கிறார், தான் பாத்முவுக்கு கடத்தப்பட்டதன் நோக்கமும் அதுவே என்கிறார். 

வ.10: யோவான் ஆவியால் ஆட்கொள்ளப்பட்டார் அல்லது ஆவி அனுபவத்தில் இருந்தார் என்றும் மொழிபெயர்க்கலாம். ஞாயிற்றுக் கிழமை என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, ஆண்டவரின் நாள் என்று கிரேக்க மூலத்தில் உள்ளது. இது அக்கால வழக்கத்தில் இருந்த சீசரின் நாள் அல்லது அரசரின் நாள் என்ற பின்புலத்தை நினைவூட்டுகிறது. ஓரு எகிப்திய தொலமி அரசன் ஒவ்வொரு 25வது நாளையும் தன்னுடைய நாளாக அறிவித்தான். இந்த பின்புலத்திலே கிறிஸ்தவர்கள் ஆண்டவரின் உயிர்ப்பு நாளை ஆண்டவரின் நாளாக கடைப்பிடிக்கத் தொடங்கினர், இது எபிரேயர்களின் ஓய்வு நாளை அடிப்டையாகவும் கொண்டிருக்கலாம். எக்காளங்கள் இறைசெய்தியை குறிக்கின்ற அறிகுறிகள். 

வ.11: இந்த ஏழு திருச்சபைகளும் எபேசிலிருந்து இலாவோதேகியா செல்லும் பிரதான வீதியை பாதையாக கொண்டு வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஏழு திருச்சபைகளும், ஏழு பிரதான சிறு நகர்களைக் அடிப்படையாகக் கொண்டு அமைந்தருந்தன. யோவானுடைய காலத்தில் அதிகமான கிறிஸ்தவ மக்கள் தொகையையும் இந்த நகர்கள் கொண்டமைந்திருந்தன. சுருள் ஏட்டில் எழுதச் சொன்னது முதல் ஏற்பாட்டில், எசாயா, எரேமியா மற்றும் எசேக்கியல் இறைவாக்கினர்களுக்கு கடவுள் கொடுத்த ஏட்டுச் சுருள்களை நினைவூட்டுகின்றன. 

வ.12: இந்த ஏழு விளக்குத் தண்டுகள் எருசலேம் தேவாலயத்திலிருந்த ஏழு விழக்குத் தண்டுகளை 
நினைவூட்டுகிறது. (מְנוֹרָה மினோரா - ஒர் அடியையும் ஏழு தண்டுகளையும் விளக்குகள்) காண்க வி.ப 25,31. எபிரேயர்களுக்கு நிறைவை குறித்த இந்த விளக்கு தண்டு, இங்கே கிறிஸ்தவர்களுக்கு ஒரே கடவுளையும், ஒரே உயிர்;த்த ஆண்டவரையும் அவரின் திருச்சபைக் கூட்டத்தையும் குறிக்கிறது. 

வ.13: இந்த வசனம் அப்படியே தானியேலை நினைவூட்டுகிறது, தானியேலில், இந்த மானிட மகனுக்கு, பல விளக்கங்கள் இருந்தாலும், யோவான் இந்த மானிட மகனை ஆண்டவர் இயேசுவாகவே தனது கருத்தியலுக்கு ஏற்றவாறு காண்கின்றார் (காண்க: தானி 7,13). நீண்ட அங்கி, இங்கே ஆண்டவரின் நித்தியத்தையும், இறைதன்மையையும், தெய்வீகத்தையும் குறிக்கலாம். பொன்பட்டை அவரது அதிகாரத்தையும் தெய்வீக உரிமையையும் குறிக்கிறது. 

வ.17: காட்சியைக் கண்ட யோவான் தனது நிலைப்பாட்டை ஓர் இறைவாக்கினரைப் போல ஒப்பனை செய்கிறார், ஆண்டவர் தனது பலத்தை கொடுப்பது போல வலக்கையை வைத்து அதிகாரம் கொடுக்கிறார். ஆண்டவர் தன்னை முதலும் முடிவும் என்று சொல்வது எசாயா இறைவாக்கை நினைவூட்டுகிறது (காண்: எசாயா 41,4). நான் இருக்கிறேன், என்று சொல்வதும் (ἐγώ εἰμι எகோ எய்மி) முதல் ஏற்பாட்டு
இறைவெளிப்பாடுகளை நினைவூட்டுகிறது. இதே அர்த்தத்தில் முடிவுரையிலும் பல வசனங்கள் வரும் (ஒப்பிடுக: 21,6: 22,13).

நற்செய்தி
யோவான் 20,19-31

19அன்று வாரத்தின் முதல் நாள். அது மாலை வேளை. யூதர்களுக்கு அஞ்சிச் சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடிவைத்திருந்தார்கள். அப்போது இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று, 'உங்களுக்கு அமைதி உரித்தாகுக!' என்று வாழ்த்தினார்.
20இவ்வாறு சொல்லிய பின் அவர் தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டினார். ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள்.
21இயேசு மீண்டும் அவர்களை நோக்கி, 'உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன்' என்றார். 22இதைச் சொன்ன பின் அவர் அவர்கள்மேல் ஊதி, 'தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள். 23எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா' என்றார். 24பன்னிருவருள் ஒருவரான திதிம் என்னும் தோமா, இயேசு வந்தபோது அவர்களோடு இல்லை. 25மற்றச் சீடர்கள் அவரிடம், 'ஆண்டவரைக் கண்டோம்' என்றார்கள். தோமா அவர்களிடம், 'அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கையை இட்டாலன்றி நான் நம்பமாட்டேன்' என்றார்.
26எட்டு நாள்களுக்குப்பின் அவருடைய சீடர்கள் மீண்டும் உள்ளே கூடியிருந்தார்கள். அன்று தோமாவும் அவர்களோடு இருந்தார். கதவுகள் பூட்டப்பட்டிருந்தும் இயேசு உள்ளே வந்து அவர்கள் நடுவில் நின்று, 'உங்களுக்கு அமைதி உரித்தாகுக!' என்று வாழ்த்தினார்.
27பின்னர் அவர் தோமாவிடம், 'இதோ! என் கைகள். இங்கே உன் விரலை இடு. உன் கையை நீட்டி என் விலாவில் இடு. ஐயம் தவிர்த்து நம்பிக்கைகொள்' என்றார்.
28தோமா அவரைப் பார்த்து, 'நீரே என் ஆண்டவர்! நீரே என் கடவுள்!' என்றார்.
29இயேசு அவரிடம், 'நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்' என்றார். 30வேறு பல அரும் அடையாளங்களையும் இயேசு தம் சீடர்கள் முன்னிலையில் செய்தார். அவையெல்லாம் இந்நூலில் எழுதப்படவில்லை. 31இயேசுவே இறைமகனாகிய மெசியா என நீங்கள் நம்புவதற்காகவும், நம்பி அவர் பெயரால் வாழ்வு பெறுவதற்காகவுமே இந்நூலில் உள்ளவை எழுதப்பெற்றுள்ளன.

இந்தப் பகுதியில் பயத்திலிருந்து நம்பிக்கை மற்றும் மகிழ்ச்சிக்கான ஒரு மாற்றத்தை சீடர்கள் பெற்றதை அவதானிக்கலாம். இந்த பகுதிக்கு முன்னர் இயேசு ஏற்கனவே மகதலா மரியாவிற்க்கு தோன்றியிருந்தார் அத்தோடு தனது திருத்தூதர்களுக்கும் தனது உயிர்ப்பைப் பற்றி அறிவிக்க சொல்லியருந்தார். மரியா ஆண்டவரின் உயிர்ப்பை விட அவர் தன்னை சந்தித்ததையே பற்றி மகிழ்ந்திருந்தார். எனவே யோவான் இங்கே இன்னொரு முக்கியமான செய்தியை பதிவு செய்கிறார். 

வ.19: மாலை நேரம் கதவுகள் மூடியிருப்பது சீடர்களின் பய உணர்வையும் மனச் சிக்கல்ளையும் அழகாக படம்பிடிக்கிறது. ஆண்டவர் இவர்களின் நடுவில் நிற்பதும், அமைதி உண்டாகுக என்று சொல்வதும், கிறிஸ்தவர்களுக்கு முக்கியமான செய்தி. யோவானின் வாசகர்களுக்கும் இது முக்கியமாக தேவைப்பட்டது. அமைதியை தரக்கூடியது ஆண்டவரின் பிரசன்னம் மட்டுமே, அத்தோடு கதவுகள் மூடியிருந்தாலும், மாலையானாலும் ஆண்டவரின் சக்தியை தடுக்க முடியாது என்கிறார். 

வவ.20-21: ஆண்டவர் தனது உடலை காட்டுவதன் மூலமாக தான் ஒரு மாய ஆவி இல்லை என்பதையும், இது ஒரு வகை மனம் சம்பந்தமான அனுபவம் இல்லை என்பதையும் வாசகர்கள் புரிந்துகொள்வர். இங்கே இயேசுவின் அதே பணி, மாற்றங்கள் இன்றி திருத்தூதர்கள் வாயிலாக மீண்டும் தொடர்வதைக் காட்டுகிறது.  இது ஏற்கனவே ஆண்டவர் தான் வாழ்ந்தபோது சொன்ன வார்த்தைகளை நிறைவுசெய்கிறது (காண்: 14,27: 16,33). இரண்டு முறை அமைதி தருவதாகச் சொல்வது, அக்காலத்தில் கிறிஸ்தவர்களுக்கு அமைதி எவ்வளவு தேவையாக இருந்தது என்பதை கோடிடுகிறது. 

வவ.22-23: இங்கே பல செய்திகள் பறிமாறப்படுகின்றன. உண்மையில் திருத்தூதர்கள் ஆவியை நிறைவாக ஆண்டவரின் விண்ணேற்றத்தின் பின்னரே பெற்றுக்கொண்டனர், இந்தப் பகுதி திருத்தூதர்களின் பாவங்கள் மன்னிக்கப்படுதலை காட்டுகிறது என எடுக்கலாம். அத்தோடு தொடக்கநூலில் ஆண்டவர் மனிதனை படைத்து தனது ஆவியை ஊதியே உயிரைக் கொடுத்தார், இங்கே தனது ஆவியை ஊதி மீண்டும் புது பிறப்பு கொடுக்கிறார், என எடுக்கலாம். பாவங்களை மன்னித்து, ஒப்புரவு அருட்சாதனம் ஏற்றபடுத்தப்பட்ட நிகழ்வாகவும் ஆய்வாளர்கள் இந்நிகழ்வைக் காண்கின்றனர். 

வவ.24-25: தோமாவின் பேச்சும் அவரது செயல்களும் ஆரம்ப கால திருச்சபையின் விசுவாச பிரள்வுகளைக் காட்டுகிறது. தோமா ஆண்டவரின் உயிர்ப்பை நம்பவில்லை என்பதைவிட ஆண்டவரின் தரிசனத்தை நம்பவில்லை என்றே தோன்றுகிறது. தோமா மற்றவர்களைவிட விசுவாசத்தில் குறைந்தவர் என்று சொல்வது யோவானின் செய்தியல்ல. இவருடைய பெயர் அரமெயிக்க மொழியில் இருவர் என்ற அர்தத்தைக் கொடுக்கிறது. தோமாதான் ஆண்டவருடன் இறக்கவும் முதன் முதலில் ஆயத்தமாக இருந்தவர் (11,16). அதே வேளை தன்னுடைய வினாக்களை அஞ்சாது ஆண்டவரிடம் கேட்கவும் தயாராக இருந்தவர் (14,5). தோமா நம்பிக்கையின்மையின் அடையாளம் என்பதைவிட ஆரம்பகால திருச்சபையின் மனித முகம் என்றே எடுக்கவேண்டும். ஆண்டவரின் காயங்கள், அவரின் சிலுவை மரணத்தை மீண்டும் நினைவூட்டுகின்றன. 

வவ.26-27: எட்டு நாட்கள் என்பது கிரேக்கர்களின் ஒரு வார அளவைக் குறிக்கும். கதவுகள் மூடியிருந்ததும், இயேசு உள்ளே வந்ததும், சீடர்கள் இன்னும் பயத்திலே இருந்ததையும் குறிக்கிறது. ஆண்டவர் இரண்டு முறை அவர்களுக்கு அமைதி கொடுத்தும் அவர்கள் பயத்திலே இருக்கிறார்கள். ஆக மற்ற சீடர்களுக்கும் தோமாவிற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. ஆண்டவர் தோமாவிற்கு சொல்லும் செய்தி அவருக்கு மட்டுமல்ல அனைவருக்கும் உரியது, அது, அச்சம் விலக்கி நம்பிக்கை கொள்ளுங்கள் என்பதாகும். யோவான் நற்செய்தியின் நோக்கமும் இதுவே. 

வ.28: கிறிஸ்தவ நாகரீகத்தினதும், விசுவாசத்தினதும் முக்கியமான கோட்பாடு இது. இயேசுதான் ஆண்டவர், அவரேதான் கடவுள் (ὁ κύριός μου καὶ ὁ θεός μου - என் ஆண்டவரே சக என் கடவுளே!)

வவ.29-31: யோவான் இவ்வாறு தன் நற்செய்தியின் நோக்கத்தை உறுதிப்படுத்துகிறார். இயேசுவைக் காணாமல் அவரை நம்புதலே இரண்டாம் தலைமுறை கிறிஸ்தவர்களின் விசுவாச வாழ்க்கைக்கு தேவையாக இருந்தது. யோவான், இயேசுவின் அனைத்து செய்ற்பாடுகளையும் நற்செய்தி உள்வாங்கவில்லை என்பதை ஏற்றுக்கொள்கிறார். இங்கனம், நற்செய்திகள் சில குறிப்பிட்ட தேவைகளுக்காவே எழுதப்பட்டது என்பது புலனாகிறது. நற்செய்திகள் உண்மையில் இயேசுவின் அனைத்து வாழ்க்கை நிகழ்வுகளையும் உள்ளடக்கவில்லை என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும். 

நம்பிக்கை என்பது ஒரு கொடை, அது அறிவிலும் புரிதலும் மட்டும் தங்கியிருக்க முடியாது. நம்பிக்கைக்கு அடித்தளம் தாழ்ச்சியும் நன்றியுணர்வுமாகும் என்பதே நற்செய்தியாளர்களின் படிப்பினைகள். 

ஆண்டவரே எங்கள் நம்பிக்கையை உறுதிப்படுத்தும், நம்பிக்கை மூலமாக எங்கள் வாழ்வை ஆழப்படுத்தும். ஆமென்.

மி. ஜெகன்குமார் அமதி

மார்செயி, பிரான்ஸ், 30,03,2016.

சனி, 26 மார்ச், 2016

உயிர்ப்பு ஞாயிறு, Day of Resurrection, Alleluia.


திருத்தூதர் பணி 10,34.37-43
திருப்பாடல் 118
கொலோசேயர் 3,1-4
யோவான் 20,1-9

௧. மரணத்திலிருந்து ஒருவர் மீண்டெழுந்து வருவது உயிர்பு என்று அழைக்கப்படுகிறது. எபிரேய முதல் ஏற்பாட்டில் உடல் உயிர்ப்பை பற்றிய சிந்தனைகள் இல்லை. புதிய ஏற்பாட்டில் இந்த சிந்தனையை குறிக்க (ἀνάστασις அனஸ்டாசிஸ் - உயிர்ப்பு, சாவிலிருந்து எழும்புதல், ) என்ற கிரேக்க சொல் பாவிக்கப்படுகிறது. முதல் ஏற்பாட்டில், கடவுள் எவ்வாறு மனிதனை மண்ணில் இருந்து உருவாக்கினாரோ அவ்வாறே மனிதன் மண்ணுக்கு திரும்புகிறார் என்று நம்பினர். சீயோல் எனப்படும் பாதாளம் இந்த இறந்தவர்களின் இருப்பிடமாக நம்பப்பட்டது.  இந்த சீயோல் ஆதாள-பாதாளமாகவும், இருண்ட இடமாகவும் அறியப்பட்டது, அத்தோடு கைவிடப்பட்ட இடமான இங்கிருந்து எவருக்கும் விடிவு இல்லை எனவும் எண்ணப்பட்டது. இதற்கு வேறு பல பெயர்களும் விவிலியத்தில் உள்ளன (தி.பா 6,5). ஆனால் பல விவிலிய பகுதிகள் கடவுளுக்கு சீயோலின் மீதும் அதிகாரம் உள்ளது என்பதை எண்பிக்கிறது (யோபு 12,22: தி.பா 139,8: ஆமோஸ் 9,2). தனி மனிதனின் உயிர்பை பற்றி முதல் ஏற்பாடு பேசாவிட்டாலும் சில பகுதிகள் தேசிய உயிர்ப்பைப்பற்றி பேசுகின்றன (காண் எசாயா 26,19: எசேக் 37,13-14: ஓசேயா 6,1-2). முதல் ஏற்பாட்டு நூல்களில், மத்திய கிழக்கு பகுதிகளின்  சில சிந்தனைகள் தாக்கத்தை செலுத்தியிருப்பதனைக் காணலாம்.

௨. இணைத்திருமறை நூல்கள் அல்லது அக்கால சிந்தனைகள் உடலின் உயிர்பபைப் பற்றி அதிகமாகவே பேசுகின்றன. இவை கிரேக்க சிந்தனைகளின் தாக்கத்தை கொண்டிருப்பதைக் காணலாம். உதாரணமாக பரிசேயர்கள் உடலின் உயிர்ப்பை அப்படியே நம்பினர். இந்த காலகட்டத்திலும் சில குழுக்கள் உடலின் உயிர்ப்பை நம்பமால் தமது பழைய சிந்தனைகளையே கொண்டிருந்தனர். சில கும்ரான் ஆய்வுகளும், அங்கிருந்தவர்கள் உடலின் உயிர்ப்பை நம்பினர் என சொல்லத் தூண்டுகிறது (4ஞ521 1:12). சீராக்கின் ஞானம், சாலமோனின் ஞானம் போன்ற நூல்களின் இவ்வறிவின் வளர்ச்சியைக் காணலாம். இரண்டாம் மக்கபேயர் புத்தகத்தில் போரில் நாட்டுக்காக மடிந்தவர்களும், கிரேக்க கலாபனைகளின் போது மடிந்தவர்களும்  உயிர்பெறுவர் என சொல்லப்படுவதை வாசிக்கலாம் (காண் 2மக் 7,9: 12,43-45). இன்னும் அதிகமாக, ஏற்றுக்கொள்ளப்படாத இரண்டாம் எஸ்திரா புத்தகம் இந்த சிந்தனையை மேலும் ஆழமாகச் சொல்கிறது. 

௩. உயிர்ப்புத்தான் புதிய ஏற்பாட்டின் மையச் செய்தி. கிறிஸ்துவின் உயிர்ப்பே வரலாற்றின் மையமாகவும் முதல் ஏற்பாட்டின் நிறைவாகவும் கிறிஸ்தவர்களால் பார்க்ப்படுகிறது. அனைத்து புதிய ஏற்பாட்டு புத்தகங்களும் திருமடல்களும் இதனையே அடிப்படையாக கொண்டுள்ளன. இயேசுவினுடைய போதனைகளிலும் இந்த செய்தி முக்கியமான செய்தியாக இறுதிவரைக்கும் பயணிக்கிறது. (யோவான் 11,25) இயேசு தான் இவ்வுலகில் மனிதனாக இருந்த காலத்தில் பலரை உயிர்பித்தாலும், அவரின் உயரிப்புச் செய்தி பொது மரணத்தை தாண்டியதாகவே இருந்தது. இயேசு உயிர்பித்த பலர், அவருக்கு முன்னரோ பின்னரோ இறந்து போயினர். உயிர்ப்பைப் பற்றி சொல்லுகிற அதே வேளை இயேசு நித்திய தண்டனையையும் பற்றி அறிவுறுத்துகிறார் (யோவான் 5,25). வெறுமையான கல்லறையே புதிய ஏற்பாட்டில் உயிர்பிற்கான முதல் அடையாளம். நான்கு நற்செய்தியாளர்களும் இதனை தங்களுக்கே உரித்தான வகையில் விவரிக்கின்றனர். பவுல் அடிகளாரே புதிய ஏற்பாட்டில் உயிர்ப்பினைப் பற்றி ஆழமான போதனைகளை முன்வைக்கிறார் (1கொரி 15). ஆக உயிர்பு இயேசுவிலேயே தங்கியுள்ளது, முதல் ஏற்பாட்;டில் கடவுள் தன் மூச்சை ஊதி உயிர்கொடுத்தர், புதிய ஏற்பாட்டில் கடவுள், தன் உயிரைக் கொடுத்து உயிர்;ப்பு கொடுத்தார். 

திருத்தூதர் பணி 10,34.37-43
34அப்போது பேதுரு பேசத் தொடங்கி, 'கடவுள் ஆள் பார்த்துச் செயல்படுவதில்லை என்பதை நான் உண்மையாகவே உணர்கிறேன்.
37திருமுழுக்குப் பெறுங்கள் என்று யோவான் பறைசாற்றியபின்பு கலிலேயாமுதல் யூதேயா முழுவதிலும் நடந்தது உங்களுக்குத் தெரியும். 38கடவுள் நாசரேத்து இயேசுவின்மேல் தூய ஆவியாரின் வல்லமையைப் பொழிந்தருளினார். கடவுள் அவரோடு இருந்தால் அலகையின் கொடுமைக்கு உட்பட்டிருந்த அனைவரையும் அவர் விடுவித்து எங்கும் நன்மை செய்து கொண்டே சென்றார். 39யூதரின் நாட்டுப் புறங்களிலும் எருசலேம் நகரிலும் அவர் செய்த அனைத்திற்கும் நாங்கள் சாட்சிகள். மக்கள் அவரைச் சிலுவையில் தொங்கவைத்துக் கொன்றார்கள். 40ஆனால் கடவுள் அவரை மூன்றாம் நாள் உயிரோடு எழுப்பிக் காட்சி அளிக்கச் செய்தார். 41ஆயினும் அனைத்து மக்களுக்குமல்ல, சாட்சிகளாகக் கடவுள் முன் தேர்ந்துகொண்டவர்களுக்கு மட்டுமே, அவர் காட்சியளித்தார். இறந்த அவர் உயிர்த்தெழுந்தபின்பு அவரோடு உண்டு, குடித்த நாங்களே இதற்குச் சாட்சிகள். 42மேலும் வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் நடுவராகக் கடவுளால் குறிக்கப்பட்டவர் இயேசுதாம் என்று மக்களுக்குப் பறைசாற்றவும் சான்று பகரவும் அவர் எங்களுக்குக் கட்டளையிட்டார். 43அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் அவரது பெயரால் பாவமன்னிப்புப் பெறுவர் என்று இறைவாக்கினர் அனைவரும் அவரைக்குறித்துச் சான்று பகர்கின்றனர்' என்றார்.

திருத்தூதர் பணிகள் நூல் வைத்தியர் லூக்கா திருச்சபைக்கு விட்டுச்சென்ற இன்னொரு பொக்கிசம். இந்த நூலில் பல போதனைகள் அதாவது மறைபரப்பு மறையுரைகள் இருப்பதனை அவதானிக்கலாம். அதிகமான பவுலின் மறையுரைகளும், ஒரு சில முக்கியமான பேதுருவின் மறையரைகளும் இங்கே அழகாக பதியப்பட்டுள்ளன. இன்றைய முதல் வாசகம் பேதுரு, கொர்ணேலியு என்ற உரோமைய நூற்றுவத்தலைவரின் வீட்டில் வழங்கிய மறையுறையின் சிறு பகுதியாகும். இந்த கொர்ணேலியுவின் வீடு செசாரியா மரித்திமாவில் அமைந்திருந்தது. இவர்தான் திருச்சபையில் உள்வாங்கப்பட்ட முதலாவது யூதரல்லாத நண்பர். இவர் வீட்டில் நடந்தவை பின்னர் திருச்சபையின் முதலாவது பொதுச்சங்கத்தில் பேச்சுப் பொருளானது. கடவுளை நம்ப அவரவர் நல்ல மனப்பக்குவத்தை கொண்டிருந்தால் போதும், ஒருவரின் இனத்திலோ அல்லது பிறப்பிலோ, இயேசுவோ அல்லது கடவுளோ தங்கியிருக்கவில்லை என்பதற்கு இந்த உரோமையர் நல்ல அடையாளம். 

வ.34: இந்த வசனத்திற்கு முன் பேதுரு பிறவினத்தவர்கள் மட்டில் யூத கிறிஸ்தவர்கள் கொண்டிருந்த மனநிலையை தானும் கொண்டிருந்ததை, லூக்கா காட்டுவார் (வவ.1-16). பின்னர் மனம்மாறி கொர்ணேலியுவின் வீட்டிற்கு வந்திருந்தார். இங்கே மனம்மாற்றம் அடைபவர் கொர்ணேலியு அல்ல மாறாக பேதுரு அதாவது யூத கிறிஸ்தவர்கள் என்பதை மறைமுகமாக காட்டுகிறார் லூக்கா. 

வவ. 35-38: இயேசுவின் தன்மைகளைப் பற்றி சுருக்கமாக பேதுரு மறையுறைக்கிறார். அ). அவர் கடவுளால் திருப்பொழிவு பெற்றவர். ஆ). கடவுளின் ஆவியையும் வல்லமையையும் கொண்டவர். இ). அவர் நற்செயல்களையும் குணமாக்கலையும் செய்து வந்தார். 

வவ. 39-40: சாட்சியம் பகர்வது திருத்தூதர்களின் முக்கியமான பணி என்று லூக்கா அடிக்கடி தி.பணி நூலில் வலியுறுத்துவார் (μάρτυς மார்த்துஸ்- சாட்சியம்). பேதுரு இரண்டுவகையான சாட்சியம் சொல்கிறார். இயேசு செய்த நல்லவைகள், மக்கள் இயேசுவிற்கு செய்த தீமை. மூன்றாவதாக கடவுள் இயேசுவை உயிர்ப்பித்ததையும் தாங்கள் சாட்சி பகர்வதாக கூறுகிறார். 

வ. 41: ஆண்டவர் உயிர்த்த பின்பு அவரோடு உண்டு குடித்த தாங்களே விசேட சாட்சிகள் என்கிறார் பேதுரு. உயிர்த்த ஆண்டவருடன் இவர்கள் உண்டு குடித்தது அனைத்து நற்செய்திகளிலும் பதியப்படவில்லை, இங்கு லூக்கா இவ்வாறு எழுதுவதன் மூலம், ஆண்டவரின் உயிர்பின் பின் நடந்த அனைத்து காட்சிகளும் நற்செய்தியில் இல்லை என்பது புலப்படுகிறது. 

வ. 42: இப்போது இந்த உயிர்த்த ஆண்டவரின் கட்டளையை பேதுரு விவரிக்கின்றார். அதாவது இயேசுவே இறந்தோருக்கும் வாழ்வோருக்குமான கடவுளின் நடுவர் என்பதே அந்த கட்டளை. இந்த நடுவத்தன்மை (κριτής கிறிடேஸ்) இயேசுவின் தெய்வீகத்தை வலியுறுத்தும் ஒரு சொல். 

வ. 43: இஸ்ராயேல் மக்கள் ஏற்கனவே பாவமன்னிப்பை பற்றி அறிந்திருந்தனர், ஆனால் இப்போது
இறைவாக்கினர் அறிவித்திருந்த பாவமன்னிப்பிற்கு புது விளக்கம் கொடுக்கப்படுகிறது. அதாவது கிறிஸ்துவின் பெயரில் நம்புவதனால் ஏற்படும் பாவமன்னிப்பே அதுவாகும். 



கொலோசேயர் 3,1-4
1நீங்கள் கிறிஸ்துவோடு உயிர் பெற்று எழுந்தவர்களானால் மேலுலகு சார்ந்தவற்றை நாடுங்கள். அங்குக் கிறிஸ்து கடவுளின் வலப்பக்கத்தில் அமர்ந்திருக்கிறார். 2இவ்வுலகு சார்ந்தவை பற்றி அல்ல, மேலுலகு சார்ந்தவை பற்றியே எண்ணுங்கள். 3ஏனெனில் நீங்கள் கிறிஸ்துவோடு இறந்துவிட்டீர்கள். உங்கள் வாழ்வு அவரோடு இணைந்து கடவுளிடம் மறைந்து இருக்கிறது. 4கிறிஸ்துவே உங்களுக்கு வாழ்வு அளிப்பவர். அவர் தோன்றும் பொழுது நீங்களும் அவரோடு மாட்சி பொருந்தியவராய்த் தோன்றுவீர்கள்.

கொலோசு உரோமையர் காலத்தில் ஒரு முக்கியமில்லாத நகராக அறியப்பட்டது. பவுல் எபேசில் நற்செய்தி அறிவித்த காலத்தில் இங்கும் நற்செய்தி பரவியிருக்க வேண்டும். பவுலுடைய உடன்-பணியாளர்களில் ஒருவர் இங்கே நற்செய்தியை கொண்டுவந்திருக்க வேண்டும். எபாஃபிரஸ் (கொலோ 4,12) என்னும் கொலோசேய நபர் அந்த சீடராயிருக்க வாய்ப்புள்ளது. இக்கடிதத்தின் முகவுரை, செய்தி மற்றும் முடிவுரையிலிருந்து
இதனை பவுலே எழுதினார் என நம்பினால் தவறில்லை. இதற்கு எதிர்கருத்துக்கள் இல்லாமலும் இல்லை. கொலோசேயில் சில தப்பறைகள் இருந்ததாகவும் அதனை களைவதற்கே பவுல் இந்த கடிதத்தை எழுதினார் எனவும் நம்பப்படுகிறது. இது எப்படியான தப்பறைகள் என்பதில் பல கருத்துக்கள் உள்ளன, சில இதனை 
யூத காலஅட்டவனை சார்ந்த பிரச்சனைகளாகவும், சிலர் இதனை பிறமத சிலை வழிபாட்டு பழக்கவழக்கங்கள் எனவும் காண்கின்றனர். இன்றைய வாசகம் சிறிய பகுதியாக இருந்தாலும், முக்கியமான கொலோசேய செய்திகளை தாங்கி வருகின்றது. இந்த பகுதியிலே பவுல் பிழையான மெய்யறிவு-வாதிகளை சாடி, ஏன் மக்கள் கிறிஸ்துவை பின்பற்ற வேண்டும்? என்ற இறையியல் வாதத்தை முன்வைக்கிறார். 

வவ. 1-2: கொலோசேயர் ஏற்கனவே கிறிஸ்துவோடு இணைந்துவிட்டதால் அந்த இணைப்பு அவர்கள் வாழ்வில் மாற்றத்தை காட்ட வேண்டும் என்கிறார் பவுல். அதாவது கிறிஸ்து மேலுலகை சார்ந்தவர் என்பதால், அவரைச் சார்ந்தவர்களும் மேன்மையானவர்களாக இருக்க வேண்டும் என்பது பவுலின் எதிர்பார்ப்பு. மேலுலகு மற்றும் கீழுலகு என்று இரண்டு வகையான வாழ்கை முறையை பவுல் விவாதிப்பதைக் காணலாம். மேலுலகு என்பது விண்ணகம் என்பதைவிட இங்கு நல்ல கிறிஸ்தவ நம்பிக்கை வாழ்வை குறிக்கிறது. கீழுலகு என்பது கொலோசேய அக்கால மெய்யறிவு வாதத்தை குறிக்கலாம். கடவுளின் வலது பக்கத்தில் இருக்கிறார் என்பதன் மூலம், கிறிஸ்துவின் வழியும், அவர் இருக்கும் உலகமும்தான் உண்மையானது என காட்டப்படுகிறது. 

வ. 3: ஏன் இவர்கள் கிறிஸ்துவோடு இணைந்திருக்க வேண்டும் என்பதற்கு விளக்கம் கொடுக்கிறார். கிறிஸ்துவோடு இறந்துள்ளார்கள் என்பது, இவர்களின் திருமுழுக்கையும், உயிர்ப்பையும் குறிக்கும். வாழ்வு மறைந்திருக்கிறது என்பது, இந்த புதிய வாழ்வை யாரும் திருட முடியாது என்று விளக்குகிறது. 

வ. 4: 'கிறிஸ்துவே உங்கள் வாழ்வு' என்றும் சில பாடங்கள் மொழியெர்க்கப்படுகிறது. ஏன் மாட்சி இன்னும் தென்படவில்லை என்ற வாதம் இவர்களிடையே இருந்திருக்கலாம், ஆனால் கிறிஸ்து வரும்போதுதான் அந்த மாட்சி தொன்படும் என்கிறார் பவுல். 



யோவான் 20,1-9
1வாரத்தின் முதல் நாளன்று விடியற் காலையில் இருள் நீங்கும் முன்பே மகதலா மரியா கல்லறைக்குச் சென்றார்; கல்லறை வாயிலில் இருந்த கல் அகற்றப்பட்டிருப்பதைக் கண்டார். 2எனவே அவர் சீமோன் பேதுருவிடமும் இயேசு தனி அன்பு கொண்டிருந்த மற்றச் சீடரிடமும் வந்து, 'ஆண்டவரைக் கல்லறையிலிருந்து யாரோ எடுத்துக் கொண்டு போய் விட்டனர்; அவரை எங்கே வைத்தனரோ, எங்களுக்குத் தெரியவில்லை!' என்றார்.
3இதைக் கேட்ட பேதுருவும் மற்றச் சீடரும் கல்லறைக்குப் புறப்பட்டனர். 4இருவரும் ஒருமித்து ஓடினர். மற்றச் சீடர் பேதுருவை விட விரைவாக ஓடி முதலில் கல்லறையை அடைந்தார். 5அவர் குனிந்து பார்த்தபோது துணிகள் கிடப்பதைக் கண்டார்; ஆனால் உள்ளே நுழையவில்லை. 6அவருக்குப் பின்னாலேயே சீமோன் பேதுருவும் வந்தார். நேரே அவர் கல்லறைக்குள் நுழைந்தார். அங்குத் துணிகளையும், 7இயேசுவின் தலையை மூடியிருந்த துண்டையும் கண்டார். அத்துண்டு மற்றத் துணிகளோடு இல்லாமல் ஓரிடத்தில் தனியாகச் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது. 8பின்னர், கல்லறைக்கு முதலில் வந்து சேர்ந்த மற்றச் சீடரும் உள்ளே சென்றார், கண்டார்; நம்பினார். 9இயேசு இறந்து உயிர்த்தெழ வேண்டும் என்னும் மறைநூல் வாக்கை அவர்கள் அதுவரை புரிந்துகொள்ளவில்லை.


திருவிழிப்பு சனியில் வாசித்த லூக்காவின் பதிவைத்தான் யோவானின் நடையில் இங்கு காண்கின்றோம். ஆண்டவரின் உயிர்பின் பின் நடைபெறும் காட்சிகள் நாடக அரங்கேற்றத்தைப் போல், சிறிய-பெரிய-முக்கிய பாத்திரங்களினூடாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன. 

வவ. 1-2: மகதலா மரியா இங்கே ஒரு சிறிய பாத்திரம், அவர் கண்ட காட்சியிலிருந்து ஆண்டவரின் உயிர்ப்பை நம்பவில்லை மாறாக சாதாரண மனக் குழப்பத்தையே வெளிப்படுத்துகிறார். எப்படி யூத மற்றும் உரோமைய காவலர்களால் பாதுகாக்கப்பட்ட கல்லறையின் வாயில் திறக்கப்பட முடியும்? எப்படி உடலை களவாடி கொண்டு செல்ல முடியும்? வாரத்தின் முதல் நாளே விடியும் முன் (ஞாயிறு விடியல்) கல்லறைக்கு சென்றது அவர் ஆண்டவர்மேல் கொண்ட அன்பை காட்டுகிறது. பேதுருவிடமும் யோவானிடமும் சொன்னது, இவர்களின் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது. யோவான் நற்செய்தியில் இந்த தனி அன்புகொண்டிருந்த சீடர் யார் என்று இலகுவில் அடையாளம் காண முடியாது, அவர் யோவானாக இருப்பதற்கு வாய்ப்புகள் பாரம்பரிய முறைப்படி அதிகமாகவே உள்ளன. எங்களுக்கு தெரியவில்லை, என்று மகதலா மரியா கூறுவதனால், அவருடன் இன்னும் பலர் சென்றிருந்தனர் என ஊகிக்கவைக்கிறது. ஏன் யோவான் மற்றைய பெண்களின் பெயர்களை குறிப்பிடவில்லை? ஒருவேளை மகதலா மரியாவின் பாத்திரத்தை மையப்படுத்தவென நினைக்கலாம். 

வவ. 4-5: இந்த வரிகள் பல கேள்விகளை எற்படுத்துகிறன. ஆசிரியர் பல வேiளைகளில் அன்புச் சீடரை முக்கியமான வேளைகளில் உள்வாங்குவது சாதாரணம், அது வரலாற்று நிகழ்வாக இருக்கலாம், அல்லது அப்படியான தேவை ஒன்று இருந்திருக்கலாம். இங்கு அவர் பேதுருவைவிட வேகமாக ஓடியதன் மூலம், அன்புச் சீடர் அல்லது அன்புச் சீடரின் கிறிஸ்தவ குழு பேதுரு குழுவிற்கு எந்த விதத்திலும், எதிரானதும் அல்லது குறைவானதோ அல்ல எனகாட்டுகிறார் என நிச்சயமாக நம்பலாம். அவர் உள்ளே நுழையவில்லை என்பது, யோவான் பேதுருவுக்காக காத்திருப்பது புலப்படுகிறது. யோவானும் பேதுருவும் இங்கே முக்கியமான பாத்திரங்கள்.

வ. 6: பேதுரு உடனடியாக உள்ளே நுழைவது அவரின் தலைமைத்துவத்தையும் திருச்சபையில் அவருக்கிருந்த பொறுப்பையும், அல்லது இயேசுவின் மீது அவர்கிருந்த அன்பையும் காட்டுகிறது. 

வ. 7: சுருட்டி வைக்கப்பட்டிருந்த துண்டுகளும், வேறு வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்ததும், அதனால் சுற்றப்பட்டிருந்தவர், எழுந்து அதனை அவிழ்த்து வைத்தது போல உள்ளது. யேவான் இவ்வாறு, யாரும் இயேசுவின் உடலை கொண்டுபோய் இருக்கமுடியாது அத்தோடு இந்த பெண்கள் சொல்வது அறியாமையினாலும் அல்லது துன்பத்தினாலும் என்று விவரிக்கின்றார். 

வ. 8: இது முக்கியமான வசனம். (εἶδεν καὶ ἐπίστευσεν· கண்டார் நம்பினார்). யோவான் நற்செய்தியில் நம்புதல் முக்கியமான விழுமியம், யோவான் தனது நற்செய்தியின் நோக்கமாகவும் இதனையே தருகிறார் (யோவான் 20,31).

வவ. 9-10: சீடர்களின் தற்போதைய நிலை விவரிக்கப்படுகிறது. அவர்கள் இன்னும் நிறைவாக புரிந்துகொள்ளவில்லை. 8வது வசனத்தில் அன்புச் சீடர் நம்பினார் என்று சொல்லப்பட்டுள்ளது. ஆக நம்பிக்கையும் புரிந்துகொள்ளுதலும் இரண்டு வேறு விழுமியங்கள் எனலாம். 

ஆண்டவரை புரிந்து கொள்ளுதல் இரண்டாவதாக வரலாம், ஆனால் அவரை நம்புதல் எங்களது வாழ்வின் மையமாக இருக்கவேண்டும். யோவான் ஆண்டவரை நம்பினதற்கு அவர் ஆண்டவரின் மார்பில் இடம் பிடித்துக்கொண்டமையே காரணம்.

அன்பான ஆண்டவரே! உமது உயிர்ப்பு, எங்ளது நாளாந்த வாழ்வில் மாற்றம் ஏற்றபடுத்த உதவிசெய்யும்.
ஆமென்!!! 


மி. ஜெகன்குமார் அமதி
றெஜியோ எமிலியா
25,பங்குனி 2016.



வெள்ளி, 25 மார்ச், 2016

பெரிய சனி, Holy Saturday. 23,பங்குனி,2016












தொடக்க நூல் 1,1-2,2
விடுதலைப் பயணம் 14,15-15,1
எசாயா 54,5-14
எசேக்கியேல் 36,16-17அ,18-28
உரோமையர் 6,3-11
லூக்கா 24,1-12

பெரிய சனி அல்லது பாஸ்கு சனி, அல்லது திருவிழிப்பு சனி என்று பலவாறு இந்த நன்நாள் அழைக்கப்படுகிறது. பண்டைய தமிழ் மக்கள் சனிக்கிழமையை சனி பகவானுடைய நாளாகவும், சனி கிரகத்தினுடைய நாளாகவும் கருதி வழிபட்டனர். யூத மக்கள் சனிக்கிழமையை கடவுளுடைய ஓய்வு நாளாக கடைப்பிடித்து வருகின்றனர். கிரேக்க-உரோமையர் சனிக்கிழமையை, சனி கோளுக்கு அல்லது அதன் தேவைதையோடு ஒப்பிட்டு விவாதித்தனர். நமக்கு, இயேசு ஆண்டவர் இந்த நாளில் ஓய்ந்திருந்தார் அல்லது துயில் கொண்டார் என்பதனால், இந்த நாள் எங்களுக்கு முக்கியமான நாட்களில் ஒன்றாகவும், புனிதமான நாளாகவும் மாறுகிறது. இந்த தூய்மையான நாளைப்பற்றி திருச்சபை பல படிப்பினைகளை முன்வைக்கிறாள் அவற்றைப் பார்ப்போம்:

! ஆண்டவர் இந்த நாளில் துயில் கொண்டார்
! ஆண்டவர் இறந்து பாதளங்களுக்குள் இறங்கி தொலைந்து போனவர்களை தரிசித்தார்
! செபத்தோடும் தபத்தோடும் இந்த நாள் செலவிடப்படுகிறது
! பிரதானமாக திருவருட்சாதனங்கள் இன்று நிறைவேற்றப்படாது
! திருச்சபை உயிர்ப்பு திருவிழிப்பிறக்காக காத்திருக்கிறது
! இரவு வேளையில் இத்திரு விழிப்பு தொடங்குகிறது
! இத்திருவிழிப்பில் கடவுளின் மாட்சிமிகு செய்ல்கள் நினைவூகூறப்பபடுகின்றன
! புது நெருப்பு ஏற்றபடுத்தப்பட்டு ஆசீர்வதிக்கப்படுகிறது
! தியாக்கோன் (திருத்தொண்டர்) பாஸ்கா புகழுரை பாடி கிறிஸ்துவை மாட்சிப்படுத்துவார்
! இன்று இறைவார்த்தைகள் மூலமாக மக்கள் வரலாற்றில் கடவுள் செய்தவற்றை நினைவுகூருவர்
! புதியவர்களுக்கு திரு முழுக்கு தரப்படுகிறது, ஏற்கனவே அதனை பெற்றவர்கள் தங்களை புதுபிப்பர்
! இன்றைய நற்கருணை வழிபாடு ஆண்டின் முக்கிய வழிபாடாக உருப்பெருகிறது. 

தொடக்க நூல் 1,1-2,2

தொடக்க நூல் முதல் 11அதிகாரங்கள் இஸ்ராயேலின் தனி வரலாற்றைப் பற்றி விவரிக்காமையினால் அவை வரலாற்றுக்கு முற்பட்ட காலம் என அழைக்கப்படுகிறது. இந்த படைப்பு காட்சியளினூடாக யாவே மரபு ஆசிரியரும், (மற்றயவர்களும்) இஸ்ராயேலை முழு வரலாற்றினுள் நிலைநிறுத்த முயற்சி செய்கின்றனர். இந்த  முதல் அதிகாரங்களில் யாவே மரபிற்கு, குரு மரபு அசிரியர் தொகுப்புரை வழங்க முயற்சிப்பதனால் இந்த இரண்டு மரபுகளும் மாறி மாறி வருவதனைக் காணலாம், இருந்தபோதிலும் யாவே மரபு தனது தனித்துவத்தோடு வாசகர்களை கவர்கின்றது. படைப்புக்களைப் பற்றி பல கதைகள் மத்திய கிழக்கு மற்றும் எகிப்திய பிரதேசங்களில்
இருந்தன, இவை மனிதனையும், உலகையும் மற்றும் கடவுளையும் பற்றி பல கேள்விகளை மேலதிமாக்கிச் சென்றன. விவிலிய படைப்புக் கதைகளில், ஆசிரியர்கள், படைப்புக்கள் கடவுளால் நடந்தப்பட்ட நல்ல திட்டங்கள் எனவும், மனிதர் தங்களது தீய எண்ணத்தாலும், கீழ்படியாமையினாலும், சுயநலத்தாலும் கடவுளைவிட்டு அகன்று சென்றனர் என விவரிக்கின்றார். 

அ. 1,1-2  : படைப்பின் தொடக்கம்

தொடக்க நூலின் முன்னுரை தனியாக தெரிவதன் மூலம், இது முழு முதல் ஏற்பாட்டிற்கும் தொடக்க உரை  போல தோன்றுகிறது. முதல் இரண்டு சொற்கள் மட்டுமே பல விவிலிய வாதங்களையும் ஆய்வுகளையும் வரலாற்றில் ஏற்படுத்தியிருக்கிறது. முதலாவது வசனத்தில், கடவுள் ஒன்றுமில்லாமையில் இருந்து அனைத்தையும் படைத்ததால் அவர் முழு வல்லமையுடையவர் என காட்டப்படுகிறார். ஆனால் உலகு உருவற்று சாயலற்று இருந்ததால், கடவுள் அதனை எவ்வாறு வடிவமைத்தார் என்று தொடர்கின்ற வசனங்கள் விவரிக்கின்றன. இரண்டாவது வசனத்தில் உலகம் இருளாகவும், கைவிடப்பட்டும், நீரால் மூடப்பட்டும், விசித்திரமான ஆவியால் ஆட்கொள்ளப்பட்டும் இருந்தது என விவரிக்கிறது. இவை உண்மையில் உலகம் எவ்வாறு தொடக்கத்தில் இருந்தது என்பதைவிட, கடவுள் உலகை எவ்வாறு படைத்தார் என்பதையே காட்ட முய்ற்சிக்கிறது. 


ஆ. 1,3-23 : படைப்பு தொடர்கின்றது

வவ. 3-5: ஒளியின் படைப்பு: இருண்ட உலகிற்கு, ஒளி தோன்றுக என்று கடவுள் சொன்னவுடன் ஒளியேற்றப்பட்டது. ஒளி இங்கே ஒரு பெரிய சக்தியாக காட்டப்படுகிறது. நவீன அறிவியலாளரின் பெரு வெடிப்பு கொள்கையும் ஒளியோடே உலகம் தோன்றியது என்று வாதிடுகின்றனர். கடவுள் ஒளிதோன்றியதன் பின்னர் அதனை நல்லதென் கண்டதன் மூலம், படைப்பு நல்லதாகவே உருவெடுக்கிறது. இங்கே பாவிக்கப்படுகின்ற இரவு, பகல், மாலை, காலை போன்றவற்றை எபிரேய நாட்கணிப்பில் விளங்கிக்கொள்ள வேண்டும். வார்த்தைக்கு வார்த்தை இக்கால கணக்கின் படி வாசித்தால் சரியான விளக்கங்களை கண்டுகொள்ள முடியாது. 

வவ. 6-8: நீர்த்திரள் பிரிக்கப்படுகிறது: இவ்வாறு கடவுளுக்கு நீர்திரளின் மீதுள்ள அதிகாரம் காட்டப்படுகிறது. இஸ்ராயேல் மக்கள் நீரை ஒரு வகை சக்தியாக கருதினர். உலகத்தின் கீழும் மேலுமாக நீர்திரள் இருப்பதாகவே கருதினர். கடவுள் ஒர் ஆகாய-விரிப்பினால் அதனை பிரித்துள்ளார் என சிந்தித்தனர்.

வவ. 9-13: நிலங்கள், தாவரங்களின் படைப்புக்கள்: உலர்ந்த தரை, விதவிதமான தவாரங்கள் கடவுளின் ஒழுங்கான படைப்புத்திறனுக்கு உதாரணங்கள்.

வவ. 14-19: சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், போன்றவற்றை அக்கால மக்கள் தெய்வீக சக்திகளாக கருதினர், இங்கே கடவுளே அவற்றை படைக்கின்ற போது, அவரின் பலம் தெரிகிறது. 

வவ. 20-23: பறவைகளும், மீன்களும்: சில கடல் உயிரினங்கள், அக்காலத்தில் புராணக்கதை உருவக உயிரினங்களாக பார்க்கப்பட்டு, பயமுறுத்தும் விலங்கினங்களாக கருதப்பட்டன. இன்று நாம் அறிந்துள்ள டைனோசர்கள் போன்றவற்றை அவர்கள் கடல் உயிரினங்களாகவும், பெயரிடப்படாத உயிரினங்களாகவும் கண்டனர். 

இ. 1,24-31 : மிருகங்களினதும் மனிதரினதும் படைப்பு

வவ. 24-31: மனிதனின் படைப்பு: இதுதான் கடவுளின் உச்ச படைப்பு, பல புராணக் கதைகள், மனிதன் பாவி எனவும், தீயவர் எனவும், கலகக்காரர் எனவும் சொன்னவேளை, தொடக்கநூல் மனிதனை கடவுளின் சாயலும், பாவனையும் என்று சொல்வது, மிகவும் அற்புதமானது. மனிதனிடம் சகல படைப்புக்களும் ஒப்படைக்கப்படுகின்றன. படைப்புக்களை பாதுகாக்க கடவுள் மனிதனை ஏற்படுத்துகிறார். ஆணும் பெண்ணுமான படைத்தார் என்று, யாவே மரபில் கடவுள் மனிதனிடம் பிரிவினையை காணவில்லை எனலாம். கடவுள் அனைத்தையும் நல்லது எனவே கண்டார். 

ஈ. 1,1-3   : தூய ஏழாம் நாள்

கடவுள் எப்படி தான் படைத்தவற்றை விரும்பினாரோ, அவ்வாறே ஏழாவது நாளில் ஓய்வெடுத்தார். கடவுளுடைய நாளை புனிதப்படுத்த வேண்டிய தேவை ஆசிரியருக்கு இருந்தது. அதனை இங்கே அழகாக காட்டுகிறார். கடவுளே ஓய்ந்திருந்தார், எனவே கடவுளுடைய நாள் கடவுளுக்கு உரியது என்பதே இங்கே மையப்படுத்தப்படுகிறது. ஓய்வு நாள் புனிதமானது என்ற சிந்தனை இதிலிருந்தே வருகிறது. 


விடுதலைப் பயணம் 14,15-15,1

இந்த பகுதியிலே ஆசிரியர், எகிப்திய கடவுள் என பார்க்கப்பட்ட பாரவோனுக்கும், இஸ்ராயேலின் கடவுளான ஆண்டவருக்கும், இடையிலான ஓர் போராட்டத்தை காட்டுகிறார். மக்களின் பயம் அவர்களின் நம்பிக்கையின்மையை காட்டுகிறது. கடவுள் மோசேயின் கையைக் கொண்டு கடலை  பிரித்தது, ஆண்டவரின் பணியாளர்களோடு அவர் இருக்கிறார் என்பதைக் காட்டுகிறது. கடல் தீய சக்தியாக இருந்தாலும் அது கடவுளுக்கு கட்டுப்பட்டது என்கிறார் ஆசிரியர். மேகத்தூணும் நெருப்புத்தூணும் கடவுளின் பிரசன்னத்தைக் காட்டுகிறது. இங்கே பார்க்கப்படவேண்டியது கடவுள் எப்படி எகிப்தியரை சாவடித்தார் என்பதைவிட, கடவுள் எப்படி இஸ்ராயேலரை பாதுகாத்தார் என்பதே. உண்மையில் செங்கடல் என்பது எங்கே இருக்கிறது என்பதிலும் இன்று வரை பல புதிர்கள் இருக்கின்றன. செங்கடலை கடந்து வந்த அனுபவம் இஸ்ராயேல் மக்கள் மட்டில் அசைக்க முடியாத நம்பிக்கையை உண்டுபண்ணியதை முழு விவிலியத்திலும் காணலாம். மக்கள் ஆண்டவரிலும் அவர் பணியாளன் மோசேயிலும் நம்பிக்கை கொண்டனர் என்பதே இந்த கதையின் செய்தி. யார் கடவுள் என்ற கேள்விக்கும் இந்த பகுதி விடையளிப்பதாக அமைகிறது, ஆண்டவரா அல்லது பாரவோனா? என்பதே அந்தக் கேள்வி. எகிப்தியர்கள் ஆண்டவரைக் கண்டார்கள் என்பதே அதன் விடை. 


எசாயா 54,5-14

கடவுள் இஸ்ராயேல் மக்கள்பால் கொண்ட அன்பு, என்று மையப் பொருளில் இந்த பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியிலே எசாயா, இஸ்ராயேலை ஒரு தாயாகவும், மனைவியாகவும், ஒப்பிட்டு அழகான வார்த்தைகளால் இந்த பகுதியை நெய்துள்ளார். கடவுளை கணவராக
இஸ்ராயேலுக்கு ஒப்பிடுவது அழகான உருவகம், இது இங்கே அழகாக கையாளப்பட்டுளளது.
இப்போது இஸ்ராயேலின் நிலை கைவிடப்பட்டவள் போல் இருந்தாலும், மீட்பராகிய கடவுள் அதனை மாற்றுவார் என்பது எசாயாவின் இறைவாக்கு. கடவுளின் மன்னிப்பை நோவாவோடு செய்துகொண்ட உடன்படிக்கையையோடு நினைவூட்டி உறுதிப்படுத்துகிறார். மலைகள் சாயினும் கடவுளின் நம்பிக்கை சாயாது என்பது அசைக்க முடியாத நம்பிக்கையை காட்டுகிறது. அடித்தளங்கள், கால்மாடங்கள், வாயில்கள் போன்றவை ஒரு நகருக்கு மிக முக்கியமானவை. இஸ்ராயேலை ஒரு நகராக ஒப்பிட்டு கடவுள் இந்த நகரை இப்போது புதுப்பிக்க இருக்கிறார் என்று எசாயா இறைவாக்குரைக்கிறார். நேர்மையில் நிலைநாட்டப்படுதல் என்பது, நம்பிக்கையிழந்து போயிருந்த மக்களுக்கு மிகவும் நம்பிக்கை தரும் செய்தி. 

எசேக்கியேல் 36,16-17அ,18-28

கடவுள் தன்னுடைய பெயரின் பொருட்டு அதிசயங்கள் செய்வார், புது இதயத்தை தருவார் என்பது எசேக்கியல் இறைவாக்கினரின் தனித்துவமான செய்திகள். எசேக்கியலும் அகதியாக பபிலோனியாவுக்கு நாடுகடத்தப்பட்டவர்களுள் ஒருவர் என்று சில விளக்கவுரையாளர்கள் கருதுகின்றனர். எவ்வாரெனினும், இவருடைய இறைவாக்குகளில் புது இதயம், புதிய உடன்படிக்கை, புதிய சட்டம், புதிய நீதி போன்றவை மிகவும் அழகானதும், மிகவும் ஆழமானவையுமாகும். இன்றைய பகுதி இஸ்ராயேலின் புதிய வாழ்வைப் பற்றி பேசுகிறது. பெண்களின் மாதவிடாய் இரத்தமாக வெளியேறிய படியால் பலர் அன்று அதனை தீட்டாக கருதினர்,  இந்த உதாரணத்தை ஆசிரியர் உவமையாக பாவிக்கிறார். ஆசிரியர் மாதவிடாயைப் பற்றி பேசவில்லை, மாறாக பாவத்தைப் பற்றியே பேசுகிறார். எசேக்கியேல், ஏன் மக்கள் கடவுளை வழிபட்டாலும் வேறு நாட்டுக்கு அகதிகளாக போகவேண்டிய நிலை ஏற்பட்டது என்பதை விவரிக்கின்றார். தீட்டானது இஸ்ராயேலருடைய நாடும் மக்களுமட்டுமல்ல, கடவுளுடைய பெயரும் என்பது எசேக்கியேலுடைய புதிய போதனை. எனவே மக்கள் மட்டில் இல்லாவிடினும், தனது பெயரின் பொருட்டு கடவுள் மக்களை மீட்க வேண்டும் என்பது இவரது வாதம். கடவுள் இரண்டு விதமான மீட்புச் செய்ற்பாடுகளை செய்ய இருக்கிறார், அ). கூட்டிச் சேர்த்தல். ஆ). சொந்த நாட்டிற்கு திரும்பி கொண்டுவருதல். இதனையே இஸ்ராயேல் மக்கள் விரும்பினர். (இதுவே ஈழத்தழிழர்கும் தேவையாக இருக்கிறது.) ஆண்டவரே இவர்கள் விரும்பியவற்றை செய்யப்போகிறார் என அழகாக சொல்கிறார் இந்த புலம்பெயர்ந்த இறைவாக்கினர் எசேக்கியல். 26-28 வரையான வசனங்கள் மிகவும் முக்கியமானவை. பல விசேட அம்சங்கள் இங்கே சொல்லப்படுகின்றன. அ). புதிய இதயம். ஆ). புதிய ஆவி. இ). கல்லுக்கு பதிலான சதையான இதயம். உ). ஆண்டவரின் ஆவி ஊ). ஆண்டவிரின் நியமங்களும் சட்டங்களும். இறுதியாக பழைய உடன்படிக்கை புதிய வார்த்தைகளில் சொல்லப்படுகிறது. அதாவது கடவுள் இவர்களின் ஆண்டவராகவும், மக்கள் ஆண்டவரின் மக்களாகவும் இருப்பார்கள், இதுதான் மோசேயுடன் செய்து கொண்ட உடன்படிக்கை, இங்கே வித்தியாசமாக சொல்லப்படுகிறது. 


உரோமையர் 6,3-11

கிறிஸ்தவ வாழ்வின் மறையுண்மைகளை அழகாக விவரிக்கும் திருமுகங்களில் உரோமையருக்கு எழுதப்பட்ட திருமுகம் மிகவும் முக்கியம் வாய்ந்தது. இந்த பகுதியிலே திருமுழுக்கினால் கிறிஸ்தவர்களுக்கு கிடைக்கும் நன்மை எடுத்துரைக்கப்படுகிறது. திருமுழுக்கு ஒருவருக்கு புதுவாழ்வு அருளுகின்றதென்பது நமது நம்பிக்கை, இதனை மரணம் என்று வர்ணிக்கிறார் பவுல். திருமுழுக்கு இந்த நல்ல மரணத்தை கொண்டுவருகின்ற தென்றும், திருமுழுக்கு ஒருவகை அடக்கச் சடங்கு என்றும் வித்தியாசமான பாவனையில் விளங்கப்படுத்துகிறார். உரோமையர்கள் கிறிஸ்துவோடு உயிர்க்க வேண்டும் என்றால் அவரோடு இறக்க வேண்டும் என்பது கட்டாயம் என்கிறார் பவுல். பவுல் இங்கு உருவகங்களை கையாள்கின்றார் என்பதை அவதானமாக நோக்க வேண்டும். திருமுழுக்கை ஒரு வகையான மாய வித்தையாக தவறாக கண்ட உரோமையருக்கு திருமுழுக்கு ஒரு திருவருட்சாதனம், அது வாழப்படவேண்டும். மாற்றம் இல்லாமல் திருமுழுக்கினால் பயன் இல்லையென்று காட்டமாக சொல்கிறார். 

பாவ வாழ்கை சிலுவையில் அறையப்பட்டிருக்கிறது என்ற உருவகத்தின் வாயிலாக கிறிஸ்தவர்கள் பாவ வாழ்க்கையை வாழ்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்ற வாதத்தை முன்வைக்கிறார்.
இறந்தோர் பாவத்திலிருந்து விடுதலையடைந்துவிட்டனர் என்ற வரிகளின் ஊடாக, பவுல் சிலருக்கு உயிர்ப்பு எற்கனவே கிடைத்துவிட்டது என நம்பினாரா என எண்ணத்தோன்றுகிறது. இவரின் வாதங்களை ஒரு இறையியல் வளர்ச்சியாகவே காணவேண்டும். பாவம் என்பது மரணம், வாழ்வு என்பது உயிர்பு என்ற சிந்தனையே இங்கே நோக்கப்படவேண்டியது. பவுலுடைய உயிர்ப்பு மற்றும் திருமுழுக்கு போன்ற வாதங்களை விளங்கிக்கொள்ள திருமுகங்களை அவற்றின் பின்புலத்திலும், எழுதப்பட்ட காலநிலைகளுக்கும் ஏற்றபடி வாசிகக் வேண்டும். 


லூக்கா 24,1-12

இன்றைய நற்செய்தி நாம் எற்கவே குருத்து ஞாயிறில் வாசிக்கப்பட்டதன் தொடர்ச்சி. இந்த பகுதியிலே மூன்று விதமான நபர்களை சந்திக்கின்றோம். அவர்கள், வானதூதர்கள், பெண்கள், திருத்தூதர்கள். நான்கு நற்செய்தியாளர்களும் இந்த நிகழ்வை வித்தியாசமாகவும் அடிப்படையில் ஒற்றுமையானதாகவும் காண்கின்றனர். (ஒப்பிடுக: மத் 28,1-10: மாற் 16, 1-8: யோவான் 20,1-10). லூக்காவின் நற்செய்தி மற்றைய நற்செய்திகளை வாசித்தவர்களுக்கு பல கேள்விகளை எழுப்பலாம் அவை: 

அ. கல்லறையில் இருந்தது ஒரு மனிதரா, இரண்டு மனிதரா அல்லது வானதூதரா?
ஆ. பேதுரு கல்லறைக்கு தனியாக சென்றாறா அல்லது யோவானும் சென்றாறா?
இ. இயேசு சீடர்களுக்கு கலிலேயாவிலா அல்லது எருசலேமிலா தோன்றினார்?

உண்மையில் இவை மாறுதல்கள் அல்ல மாறாக பல தரவுகளின் தொகுப்புக்கள் என்ற நோக்கப்படவேண்டும். இப்பொழுது லூக்காவின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

வ.1: பெண்கள் வாரத்தின் முதல் நாள் சென்றதிலிருந்து அவர்கள் இந்த நாளுக்காக காத்திருந்தார்கள் என்பது புலப்படுகிறது. முதல் நாள் என்பது எமக்கு ஞாயிறு தினமாகும். 

வ.2: வழமையாக கல்லறையின் வாயிற் கதவுகள் பெரிய கற்களினால் மூடப்பட்டிருக்கும், பெண்களுக்கு அதனை திறப்பது சாதாரனமாக கடினமாக இருக்கும்.

வ.3: விலக்கப்பட்ட வாயிற் கல்லைப்போல, வெறுமையான கல்லறையும், சுற்றப்பட்ட துண்டுகளும் இயேசு ஏற்கனவே உயிர்த்துவிட்டார் என்பததை புலப்படுத்துகின்றன. 

வ.4: வானதூதர்கள் லூக்கா நற்செய்தியில் மிகவும் முக்கியமனவர்கள். இங்கே லூக்கா இவர்களை வானதூதர் என்று சொல்லாமல், வெண்ணாடையணிந்தவர்கள் என்கிறார். (ἄνδρες δύο அந்திரஸ் துவோ - இரண்டு மனிதர்கள்). இவர்களுடைய திடீர் தோற்றமும், வெண்ணாடையும் இவர்கள் சாதாரன மனிதர்கள் இல்லையென்பதை காட்டுகிறது. 

வ.5: இதுதான் லூக்கா வாசகர்களுக்கும் அவரது கிறிஸ்தவர்களுக்கும் சொல்லும் செய்தி: தலைகுனிந்து நிற்காதீர்க்ள், உயிர்த்தவரை கல்லறையில் தேடாதீர்கள்!!!

வ.6-7: ஆண்டவர் உயிரோடு எழுப்பப்பட்டார் என்று செயற்பாட்டு-வினை பாவிக்கப்பட்டுள்ளது (உயிருடன் எழுப்பப்பட்டார்). ஆக கடவுள் இயேசுவை உயிரோடு எழுப்பியுள்;ளார் என்கிறார். ஏற்கனவே கலிலேயாவில் இயேசு சீடர்களுக்கு சொன்ன வற்றை இம்மனிதர்கள் 
நினைவூட்டுகின்றனர். ஆனால் ஏன் லூக்கா இதனை பெண்களுக்கு மட்டும் நினைவூட்டுகிறார்? ஒருவேளை இந்த பெண்கள், ஆண் சீடர்களை விட இயேசுவை அதிகமான நம்பியிருக்கலாம், அல்லது இந்த பெண்கள் லூக்காவின் வாசகர்களை அடையாளப்படுத்தலாம். ஆண்டவர் மூன்றாம் நாள் உயிர்ப்பார் என்பது நினைவுபடுத்தப்படுகிறது. இங்கே செய்வினை (உயிர்ப்பார்) பாவிக்கப்பட்டுள்ளது, ஆக இயேசுவின் உயிர்ப்பிற்கு அவர்தான் காரணம். 

வவ.8-10: இந்த பெண்கள், மகதலா மரியா, யோவன்னா, யாக்கோபின் மரியா போன்றவர்கள் லூக்கா நற்செய்தியில் ஏற்கனவே பரீட்சயமானவர்கள். இவர்கள் இம்மனிதர்களின் செய்தியை நினைவுகூறுகிறார்கள், சென்று திருத்தூதர்களுக்கு அறிக்கையிடுகிறார்கள். லூக்கா மீண்டுமாக பெண்களின் முக்கியத்துவத்தை காட்டுகிறார்.

வவ.11-12: திருத்தூதர்கள் இவர்களின் செய்தியை வெற்று செய்தியாக பார்த்து நம்ப மறுக்கின்றனர்.  பேதுரு கல்லறைக்கு ஓடியது, நம்பாமையினால் என்பதை விட, பெண்கள் சொன்னதை உறுதிப்படுத்த இவ்வாறு செய்தார் என்றும் எண்ணலாம். பயந்து ஒளிந்திருந்தவர், ஆண்டவரை அன்புசெய்த படியால்தான் ஓடிச்செல்கிறார் என்றும் நம்பலாம். ஆனால் பேதுரு இன்னும் ஆண்டவரின் உயிர்பை நம்பவில்லை. வியப்புற்றவராகவே திரும்பிச் செல்கிறார். வியப்பு என்கிற இந்த வார்த்தை (θαυμάζω தௌமாட்சோ - வியப்பு, ஆச்சரியம், புதினம்), லூக்கா நற்செய்தியில் அவ்வளவு நல்ல வார்த்தை கிடையாது. பல வேளைகளில் ஆண்டவரை நம்பாதவர்களே இவ்வாறு வியக்கின்றனர். இஃது லூக்காவின் செய்தி: ஆண்டவர் உயிர்த்துவிட்டார், அவர் கல்லறையில் இல்லை, பெண்கள் நம்பினர் அத்தோடு திருத்தூதர் இன்னும் நம்பவில்லை, பின்னர் நம்புவர். 

படைப்புகள் அன்று தொடங்கி இன்று வரை இறைவனின் அன்பையும் பிரசன்னத்தையும் நமக்கு காட்டும் ஒரு முக்கியமான புத்தகம். படைப்புகள் வாயிலாக பேசிய இறைவன், வரலாற்றின் நிகழ்வுகள் வாயிலாகவும் மக்களோடு பேசியுள்ளார், இறுதியாக எல்லாவற்றிக்கும் மேலாக தனது மகன் வாயிலாக பேசியுள்ளார். 

ஆண்டவரே! அரச மற்றும் குழு பயங்கரவாதத்தால் அழிந்துகொண்டிருக்கும் இந்த உலகை கூட்டிச் சேர்த்து நல் உலகை அமைப்பீராக. ஆமென்

மி. ஜெகன்குமார் அமதி
றெஜியோ எமிலியா
24,பங்குனி 2016.






ஆண்டின் பொதுக்காலம் முப்பத்திநான்காம் வாரம் கிறிஸ்து அரசர் பெருவிழா:  Our Lord Jesus Christ, King of the Universe 24.11.2024

ஆண்டின் பொதுக்காலம் முப்பத்திநான்காம் வாரம்   கிறிஸ்து அரசர் பெருவிழா :  Our Lord Jesus Christ, King of the Universe 24.11.2024 இய...